Pages

24 June 2010

வெள்ளிங்கிரி - 3



புழு,பூச்சி,அட்டை,டைனோசர் கொசு ஒன்றுவிடாமல் கடிக்க வாய்ப்பிருக்கிற மலை வெள்ளிங்கிரி. அதனால் இரவில் மலையேறுபவர்கள் டார்ச் லைட்டை கையில் பிடித்தபடி ஏறுவார்கள். நகரங்களிலிருந்து வரும் எங்களைப்போன்றவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்கிற இருமாப்பு! ஆணவம்! அதனால் இருட்டிலேயே அநாயாசமாக நடப்போம். கையில் கம்பு கூட வைத்துக்கொள்வதில்லை. கம்பு வைத்துக்கொள்ள ஆசை பட்டாலும் காசிருக்காது. அதனால் மலையேறும் போதே யாருக்காவது கம்பு தேவைப்பட்டால் மரங்களிலிருந்து வாகான ஒரு கிளையை உடைத்துக்கொள்வோம்.

மரத்தில் கம்பு உடைப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. பச்சை மரத்திலிருக்கும் கிளை அவ்வளவு சுலபமாக உடைந்து கையோடு குபுக் என வந்துவிடாது. மலையேறும் போது அரிவாள் கத்தியெல்லாம் வைத்துக்கொள்ளவும் முடியாது. வைத்துக்கொண்டாலும் தவறில்லை. நாங்கள் கையால்தான் உடைப்போம். அதனால் பொறுமையாக ஒரளவு வெளிச்சமான பகுதியில் எங்கு வளைத்தால் உடையுமோ அங்கே உடைக்க வேண்டும். அல்லது கிளையை லேசாக அதன் அடிமட்டத்தில் உடைத்து , அதன் கீழ் முனையைப் பிடித்து நாலு சுழற்று சுழற்றினாலும் கிளை கையோடு வந்துவிடும்.

நீங்கள் கம்பு உடைக்க மரத்தை உலுக்கும்போது தேனீக்கள் கூட்டை கலைத்துவிடும் அபாயம் உண்டு. அல்லது வவ்வால்கள் கூட்டமாய் படையெடுத்து உங்கள் மீது தாறுமாறாக மோதிவிட நேரிடலாம். பூச்சிகள் அல்லது அட்டைகள் சட்டையில் அமர்ந்து கொள்ளலாம். நிற்குமிடத்திற்கு கீழேயிருக்கும் ராட்சத எறும்புகள் காலில் ஏறி விடவும் வாய்ப்புள்ளது. அதனால் பொறுமை மிக முக்கியம். நண்பர்கள் சீக்கிரன்டா போலான்டா என்று உங்களை உசுப்பேற்றுவார்கள். அவசரமில்லாமல் எருமை போல் இருப்பதே நல்லது. உங்களுக்கு அத்தனை லாவகமோ திறமையோ இல்லையென்று நினைத்தால் பத்து ரூபாய்க்கு மலையடிவாரத்திலேயே நல்ல வழுவழு கம்புகள் அடிபாகம் மழுங்கடித்து தரப்படும், அதை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் காசு கொடுத்து கம்பு வாங்குவதை விடவும் கையால் ஒடிப்பதில்தான் கிக் அதிகம்.

முதல் மலையிலிருக்கும் சோடாக்கடையில் மற்றவர்கள் தம்மடிக்க, நானும் கமலும் இரண்டாவது மலை ஏறத்தொடங்கிவிட்டோம். கையில் டார்ச் இல்லை. கும்மிருட்டு. முதல்மலை ஓரளவு வெளிச்சமாக இருந்தாலும் , இரண்டாவது மலையில் மரங்களின் அடர்த்தி தாறுமாறாக இருக்கும். பாதையும் கூட மண் பாதைதான். பார்த்துப் பார்த்து அடிஅடியாய் இடித்தபடி இருவர் மட்டும் கையில் சிகரட்டோடு நடக்கத்தொடங்கினோம். ஓரிடத்தில் கமல் மாம்ஸ் நில்லு என்றான்.

‘என்னடா?’

‘இருடா , ஏதோ சத்தம் கேட்குது’

எனக்கு அடிவயிற்றில் உருளை உருளத்தொடங்கிவிட்டது. எனக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை. ஆனால் அவனோ ஏதோ உருமுவது மாதிரி இருக்கு என்றான். இப்போது எனக்கும் கூட ஏதோ உருமுவது மாதிரிதான் இருந்தது. உருமாத மாதிரியும் இருந்தது. சப்தம் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும் பயம் உறுதியாக இருந்தது. முன்னால் ஒரு அடி எடுத்துவைக்கவும் தைரியமில்லை. பின்னால் நடக்கவும் பயம். கமல் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். என்ன நினைத்தானோ திபுதிபுவென பின்னோக்கி ஓடத்தொடங்கினான்.. நானும்.. திபுதிபுதிபுதிபு..

ஒடத்தொடங்கிய கால்கள் சோடாக்கடைக்கு அருகிலிருக்கும் வெள்ளைப்பிள்ளையார் காலடியில்தான் நின்றது. வெள்ளைப்பிள்ளையார் எப்போதும் போல விபூதி கொட்டி வெள்ளையாக காட்சியளித்தார். முதல் மலை ஏறுபவர்கள் ஏறிமுடித்ததும் வெள்ளை பிள்ளையார் கோவிலில் கையளவு விபூதி வாங்கி நெற்றியில் , உடலில் பூசிக்கொண்டு நடக்க வேண்டும் என்பார் மாமா. அதற்கு அறிவியல் ரீதியான காரணமும் சொல்லுவார். விபூதியை உடலில் பூசிக்கொண்டால் பூச்சிகள் நம்மை கடிக்காதாம்.. எனக்கு பல முறை கடித்திருக்கிறது. அந்த விபூதி சித்தனாதன் விபூதி போல மாவு மாதிரி இருக்கும். சாம்பல் குறைவாகவும் சுண்ணாம்பு அதிகமாகவும் கலந்ததாக இருக்கலாம். யாரும் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அதுவும் இரவில் எந்த விலங்கும் பாதைக்கு அருகில் கூட வராதாம்.

அடர்த்தியான காடுகள் அடங்கியது முதல் மலை. ஏறத்துவங்கும்போதே வியர்வையில் வெளியாடை உள்ளாடையெல்லாம் நனைந்து போகும். ஏனோ கடுமையான வெப்பத்தை உணர முடியும். படிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு செட்டு படிகளும் யாராவது கவுண்டர்கள்,செட்டியார்கள்,பிள்ளைமார்,நாயக்கர்கள் உபயத்தில் என்று ஏதாவது ஒரு படியில் கல்வெட்டியிருப்பார்கள். ராஜகவுண்டர்,சின்னய்யா கவுண்டர்,முத்துராமகவண்டர்,சொக்கலிங்க செட்டியார் என சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளும் காணப்படும்.. இந்த பெயர்களுக்குப் பின்னால் பெருங்கதைகள் பல உண்டு.. அது பின்னால்...

வெள்ளிங்கிரி மலையில் பெண்கள் ஏறக்கூடாது என்பது ஐதீகமாம். என்ன கருமாந்திரமோ.. எனக்குத்தெரிந்த அம்மாக்களும்,பாட்டிகளும் மட்டும் பகல் நேரத்தில் முதல் மலை மாத்திரம் ஏறுவார்கள் , பிள்ளையார் கோவிலில் பூஜை முடித்துவிட்டு திரும்பி விடுவர். அடிவாரத்திற்கு வந்தபின் உடன் வந்திருக்கும் பெண்களிடம் முதல் மலை ஏறின கதையை நாள்முழுக்க சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

வெள்ளிங்கிரி மலையில் மட்டுமல்ல , அடிவாரத்தை ஒட்டியும் பல நூறு ஏக்கர்களுக்கு அடர்த்தி மிக அதிகமான காடுகள்தான். கொஞ்சமும் கேப் விடமால் நாலாபக்கமும் பசுமை. சுற்றிச்சுற்றி மூலிகைகள். எங்கும் சின்னசின்ன காட்டுவிலங்குகள். முதலில் அங்கே இயேசு வந்தார் , பாதி காடு காலி! பின் சிவபெருமான் வந்தார் மீதி காடும் காலி!

- தொடரும்

முந்தைய இரண்டு பாகங்கள்

பாகம் - 1

பாகம் - 2


படம் உதவி -  karthicks.net