Pages

24 December 2012

சென்னையில் ஒரு மழைக்காலம்


சென்னையின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் முதலில் திண்டாடுவது பாவப்பட்ட பேச்சில்ர்கள்தான். அது 2006 ஆம் ஆண்டு. சென்னையில் வரலாறு காணாத மழை. சாலையெல்லாம் வெள்ளம். மூன்று நாட்கள் விடாமல் பெய்த மழை.

என்னோடு சேர்த்து மொத்தமாய் மூன்றுபேர். கோவையிலிருந்து சென்னைக்கு மார்க்கெட்டிங் வேலை பார்த்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். சிட்டிக்கு வெளியே ஒதுக்குபுறமாக வாடகை குறைவாக குடிசைபகுதிகளுக்கு நடுவில் இருந்த ஒற்றை மாடி வீட்டில் முதல்மாடியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். கீழ்வீடு காலியாய் கிடந்தது. அந்த ஏரியாவிலிருந்துதான் அலுவலகத்திற்கு பக்கம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு.

சென்னையில் எங்களுக்கு அதுதான் முதல் ஆண்டு.. முதல் மழை. கோவையில் என்னதான் மழை வானத்தை கிழித்துக்கொண்டு ஊற்றினாலும் வெள்ளம் மாதிரியான விஷயங்கள் அதிகமாயிருக்காது. எங்களுக்கும் இதுவெல்லாம் பழக்கமில்லை.

அருகிலிருந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்து நாசம் செய்திருந்தது. கையில் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு கைக்குழந்தையோடு சில பெண்களும், சைக்கிளை உருட்டிக்கொண்டு கேரியரில் மூட்டையோடு லுங்கிகட்டின குடும்பதலைவர்களும் எங்கோ நகர்ந்துகொண்டிருந்தனர். மழை கொட்டொகொட்டென்று கொட்டிக்கொண்டேயிருந்தது. இவர்கள் எங்கே செல்வார்கள் எப்படி வாழ்வார்கள் என்பதையெல்லாம் சிந்திக்கவேயில்லை..
என்னமோ பண்ணிக்கட்டும்.. நமக்கென்ன..! முதல்ல இதான் சாக்குனு ஆபீஸ்க்கு லீவு சொல்லிட்டு ஜாலியா இருக்கலாம்.. காலைகடன்களை முடிக்கணும்.. கரண்ட் இருக்கு.. போன் சார்ஜ் போடணும்.. காதலிக்கு மெசேஜ் அனுப்பணும் பசி வயிற்றை கிள்ளியது. ஒரு டீ அடித்தால் தேவலை என்று தோன்றியது.

லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு குடைகூட இல்லாமல் ( அறையிலும் குடை இல்லைதான்) தூங்கி எழுந்துவிட்ட இன்னொரு நண்பனோடு சாலையில் இறங்கினேன். மூன்றே விநாடிகளில் தொப்பலாக நனைந்து போயிருந்தோம். தண்ணீர் வேறு இடுப்புவரை.. படகு சவாரிக்கு தோதாக இருந்தது நீரோட்டம். படகுதான் இல்லை. கையை துடுப்பாக்கி உடலை படகாக்கி.. ஏலேலோ ஐலசா என நகர்ந்தோம்.

டீக்கடை வரை எப்படியோ நனைந்து நனைந்து வந்து சேர்ந்தால்... கடைக்குள் நீர் புகுந்திருந்தது. சேட்டன் தலைமறைவாகியிருந்தார். அருகிலேயிருக்கிற அசைவ ஹோட்டலும் பூட்டப்பட்டிருந்தது. பசி வயிற்றுக்குள் கராபுராவென கதறலோடிருந்த்து. எங்களுடைய அறையிலிருந்து பேருந்து நிறுத்தம் நான்கு கிலோமீட்டர். அங்கே ஏதாவது கடைகளிருக்க கூடும் என நினைத்து நீந்தி நீந்தி நடந்தோம். ம்ஹூம். ஒரு கடையுமில்லை. ஒரே ஒரு பொட்டிக்கடை மட்டும் இருந்தது.

மிட்டாயும், சிகரெட்டும், வெற்றிலை பாக்கும் கேன்டிமேன் மிட்டாயும்தான் கடையில் எஞ்சி இருந்தது. கையிலிருந்த காசுக்கு நிறைய கடலை மிட்டாய் வாங்கி வைத்துக்கொண்டேன். ‘’எதுக்குடா’’ என்றான் நண்பன். ‘’இன்னைக்கு ஆபீஸ் லீவு.. ரூம்ல போர் அடிக்கும்ல’’ என்றேன். அவன் சில கேன்டிமேன் சாக்லேட்டுகள் வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் போர் அடிக்கும்ல!

சாப்பாட்டு கடைதேடி அலைந்து திரிந்து கடுப்பாகி.. அறைக்கு திரும்பினோம். இன்னொரு நண்பன் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து மெசேஜ் விடுமுறை என. ஐய்யா ஜாலி என நினைத்துக்கொண்டேன். அறையில் சமைப்பதில்லை. சமைப்பதற்கான எந்த பாத்திரமும் கிடையாது. இருப்பதெல்லாம் நாலு பாய், தலைகாணி, பெட்ஷிட்தான். மீண்டும் பசித்தது!

கடலை மிட்டாய்தான் இருந்தது. இரண்டை மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். நண்பர்களுக்கும் கொடுத்தேன். மதியம் நிச்சயம் மழை நின்றுவிடும் எங்காவது சாப்பிடபோய்விடலாம் என நம்பினோம். மழை நிற்கவேயில்லை. பசியை மறக்க நான்குபேரும் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்தோம். அறைக்குள்ளேயே பேப்பரை சுருட்டி நோட்டுபுத்தகத்தில் கிரிக்கெட் ஆடினோம். சீட்டுக்கட்டை குலுக்கிப்போட்டு விளையாடினோம். சோர்வாகி படுத்தோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் ஆளுக்கொரு கடலை மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டோம். மதியமாக ஆக ஆக பசி அதிகமானது.

மீண்டும் சாப்பாடு வேட்டை. எங்கள் பசியைப்போலவே இப்போது தண்ணீர் இன்னும் இன்னும் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது. சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மழை முன்பைவிட அதிகமாக பெய்ந்துகொண்டிருந்தது. வேறு வழியில்லை. பசிக்கிறது. எங்காவது கடையை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டே ஆகவேண்டும். நண்பன்தான் முதலில் தண்ணீரில் இறங்கினான். மெதுவாக அடியெடுத்து நடக்க.. அவன் காலுக்கு கீழேயிருந்து ஒரு பாம்பு தண்ணீருக்குள்.. அலைகளை எழுப்பியபடி வளைந்து வளைந்து சென்றது.. சென்னைல கூட பாம்பு இருக்குமா? அவ்வளவுதான்.. எங்க படை குலை நடுங்கி அறைக்கே திரும்பியது. ‘’மச்சான் தண்ணீல பாம்பு கடிச்சா கூட தெரியாதுடா.. பக்கத்துல காப்பாத்த ஹாஸ்பிடல் கூட கிடையாது பார்த்துக்க’’..

மாலைக்குள் மழை நின்றுவிடும் என நம்பினோம்.. அதுவரைக்கும் இந்த கடலை மிட்டாயும் கேன்டிமேனும் வைத்து சமாளிக்க நினைத்தோம். ஆளுக்கு சரிபங்காக பிரித்து சாப்பிட்டோம். நான் என்னுடைய பங்கில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டேன்.

ஒருவேளை இரவுக்கும் உணவு கிடைக்காவிட்டால்? நிஜமாகவே கிடைக்கவில்லை. மழை நிற்கவேயில்லை. பாத்திரங்கள் இருந்தாலாவது சமைக்கலாம்.. அதுவும் இல்லை.. பாத்திரங்கள் இருந்தாலும் அரிசி பருப்பு வாங்க இயலாது.. கடைகள் இல்லை.. யாராவது சென்னை நண்பர்கள் நம்மை அழைத்துவிடமாட்டார்களா.. சாப்பாடு கொண்டுவந்து தரமாட்டார்களா.. அட்லீஸ்ட் விசாரிப்பாவது.. ம்ஹூம்.

தொலைகாட்சி செய்தி பார்த்து பயந்துபோய் வீட்டிலிருந்து அழைத்துவிசாரித்தனர்..

‘’என்னய்யா சாப்ட்டீயா.. கடையெல்லாம் திறந்திருக்கா.. அவிங்க தின்னாய்ங்களா’’ அம்மா கேட்டாள்.

‘’திறந்திருக்குமா.. சாப்டேன்ம்மா.. நம்ம சுரேந்தர்தான் போயி சாப்பாடு வாங்கிட்டுவந்தான்.. நீ கவலைப்படாதம்மா.. ஆபீஸ் லீவு’’

‘’இல்லப்பா ரோடெல்லாம் தண்ணி வெள்ளமா ஓடுது.. கடையெல்லாம் மூடிட்டாங்க.. பஸ்லாம் கூட ஓடலைனு நியூஸ்ல சொல்றாங்கப்பா..’’

‘’அம்மா.. நாங்க இருக்கற ஏரியா உயரமான இடம்.. அதனால இங்க நார்மலாதான் இருக்கு. நீ கவலைபடாத மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு உடம்பை பார்த்துக்கோ’’

‘’இல்லப்பா.. எதுனா பிரச்சனைனா சொல்லுப்பா.. முடிஞ்சா ஊருக்கு வாப்பா..’’

‘’ஒன்னுமில்லம்மா..’’

என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தபின்தான் தொடங்கியது. ஓவென கதறி கதறி அழவேண்டும் போல இருந்தது. அம்மாவின் கையால் ஒரு பிடி சாப்பிடவேண்டும் போல இருந்தது. நான்குபேரும் வீட்டில் ஓரே பொய்யை சொன்னோம். பசியைவிட அம்மாவின் குரல் அதிகம் வலித்தது. நிறைய தண்ணீர் குடித்தோம். பசியோ காய்ச்சலோ தனிமையோ அப்போதெல்லாம் பேச்சிலர்களுக்கு அம்மாவின் குரல்தான் அருமருந்து. அதுமட்டும் இல்லையென்றால் தினம் ஒரு பேச்சிலர் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்.

விடியட்டும் எல்லாமே மாறிவிடும். மழை ஓய்ந்துவிடும். கடைகள் திறந்துவிடும்.. வயிறுநிறைய சாப்பிடலாம். வசனம் சொல்லி வயிற்றை தேற்றிக்கொண்டோம். இரவெல்லாம் தூக்கமேயில்லை.. மின்சாரமும் இல்லை. பசி மயக்கத்தில் காதடைத்தபோதும் மழையின் கோரமான ஒலி கேட்டுக்கொண்டேயிருந்த்து. எப்போது விடியும் என காத்திருந்தோம். மழை ஓய்வதைப்போலவும் கடைக்குப்போய் சாப்பிடுவதைப்போலவும் கனவு கண்டேன். சோற்றை அள்ளி அள்ளித் தின்றேன். பசியடங்கவேயில்லை. விடிந்தது. மழை ஓயவேயில்லை. கடலைமிட்டாயும் கேன்டிமேனும்கூட காலியாகிவிட்டிருந்தது. முந்தைய நாளைவிடவும் இப்போது இன்னும் இன்னும் அதிக மழை... அதைவிட அதிகமாய் பசி.. கண் கலங்கி தண்ணீராய் ஊற்றெடுக்கிறது. சாலையில் அதிக வெள்ளம். வீட்டருகிலிருந்து குடிசைகள் மிதந்துகொண்டிருந்தன. இங்கே வசித்தவர்கள் எல்லாம் எங்கே போயிருப்பார்கள்? அதை பற்றி யோசிக்க நேரமில்லை.

மழையாவது வெள்ளமாவது பாம்பாவது.. பச்சோந்தியாவது.. பசிவந்தால் வீரமும் கூடவே வந்துவிடுகிறது. கிளம்பினோம். தண்ணீருக்குள் முங்கி முங்கி.. தெருத்தெருவாக அலைந்தோம். ஒரு கடைகூட இல்லை. டீக்கடைகளும் இல்லை. சாலைகளில் நாங்கள் மட்டும் அநாதைகளைப்போல உணர்ந்தோம். வாடிய முகத்தோடு அறைக்கே திரும்பினோம். மின்சாரமில்லாமல் இருட்டாகிவிட்டிருந்த அறைக்குள் திசைக்கொருவராய் அமர்ந்துகொண்டு.. அமைதியானோம். விளையாட பொழுதுபோக்க தெம்பில்லை. இன்னும் இரண்டு நாள் இப்படியே போனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊருக்கும் போக முடியாது.. உதவிக்கு யாரை அழைப்பது? அழவேண்டும் போல இருந்தது.

அப்படியே உறங்கிப்போனேன். கனவேயில்லை. மதியம் மீண்டும் விழித்தேன். மீண்டும் தேடுதல்.. இரவாகியும் மழை நின்றபாடில்லை. உதவிக்கு யாருமில்லை. அநாதைகளைப்போல உணர்ந்தோம். அடுத்த நாள் அதே மழையோடு விடிந்தது. மூன்றாவது நாள். அன்றைக்கும் மழை நிற்காவிட்டால் நடந்தே தாம்பரமோ செங்கல்பட்டோ எங்காவது போய் கிடைப்பதை சாப்பிட முடிவெடுத்திருந்தோம்.

எங்கிருந்தோ ஒரு சாப்பாட்டு வாசனை.. மழை லேசாக ஓய்ந்திருந்தது.
பசியோடிருப்பவனுக்கு சாப்பாட்டு வாசனைதான் மாபெரும் எதிரி. நான்குபேருக்கும் அந்த வாசனை என்னவோ செய்தது. எங்காவது பக்கத்துவீட்டில் சமைத்தால் போய் பிச்சை எடுத்தாவது சாப்பிடலாமா என்கிற எண்ணம் வேறு. கேட்டுவிடுவோமா என்றேன். கேட்கலாம்தான்.. மற்ற மூவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் தயக்கம். பசி வந்தால் எது பறந்தாலும் மானம் ரோஷத்துக்கு மட்டும் குறைச்சலேயிருக்காது. பேசாமல் அமர்ந்திருந்தோம். நண்பனோ பேசாம பக்கத்துவீடுகள் எங்கயாச்சும் போயி திருடி சாப்பிடுவோமா என்றான். முறைத்தோம்.

இன்னும் ஒரு செஷன் பசியோடு கடத்தினோம். மாலையாகிவிட்டது. ஒரு குவளை சோறு கிடைத்தாலும் உயிரையே கொடுக்க தயாராயிந்தோம். மழையின் ஈரமும்.. அலைந்து திரிந்த சோர்வும் பசியை பன்மடங்கு அதிகமாக்கியிருந்தது.

மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் ஏரியாவே இருளில் மூழ்கி கிடந்தது. அந்த சாப்பாட்டு வாசனை இன்னமும் வந்துகொண்டேயிருந்தது. பசிக்குதான் எவ்வளவு மோப்பசக்தி. வாசனை வன்கொடுமை புரிந்தது. என்னால் ஒரு அடிகூட நகர முடியவில்லை. அப்படியே முடங்கி கிடந்தேன். எங்களில் ஒருவன் ‘’எதாவது வாங்கிட்டு வரேன்டா.. மெடிக்கல்ஷாப்பாச்சும் இருக்கும்.. குளுக்கோஸ் பாக்கெட்டாச்சும் வாங்கிட்டுவரேன்.. ஹார்லிக்ஸ் பாட்டிலாச்சும் கிடைக்கும்.. இவனைபாரு செத்துப்போயிடுவான் போல.. இப்படி கெடக்கறான்..’’ என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.. இரண்டு நாள் சாப்பிடாட்டி யாராச்சும் சாவாங்களா? ஒருவேளை செத்துட்டா.. போஸ்ட் மார்ட்டம் பண்ணுவாங்களா? பிரண்ட்ஸ்மேல கேஸ் போடுவாங்களா? அம்மா அழுவாங்களே.. அது இது என என்னென்னவோ சிந்தனைகள். தனியாக பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசுகிறேன் என்று புரியவில்லை. அந்த வாசனை மட்டும் மூக்கிலேயே இருந்தது. அது இப்போது நெருங்கி நெருங்கி வருவதாக உணர்ந்தேன். நண்பன் என்னை உலுக்கினான். ‘’வாடா சாப்பிடலாம்’’ என்றான். கண் முன்னே சாம்பார் சாதம்.. நாலைந்து பொட்டலங்கள் பிளாஸ்டிக் கவரில் இருந்தன.

‘’மச்சி.. பக்கத்துல ஒரு கல்யாணமண்டபத்துல குடிசைகாரங்கள தங்க வச்சிருக்காங்க.. அவங்களுக்கொசரம் ஏதோ இளைஞர் அமைப்பாம்.. மொத்தமா சமைச்சி போடுறாங்க.. அதான் வாசனை. நானும் போயி நம்ம நெலமைய எடுத்துசொன்னேன்.. பார்சல் பண்ணி குடுத்தாங்க.. நாளைக்கும் மழை பெஞ்சா வாங்க தரோம்னாங்க’’ என்றான். மழை நின்றுவிட்டிருந்தது. நிறைய சாப்பிட்டோம். நிம்மதியாக உறங்கினோம்.(புதியதலைமுறை இதழுக்காக எழுதியது)

18 December 2012

மாலிவுட் டாப்டென் 2012

ஒரு புயலைப்போல புதிய இளைஞர்களின் வரவு மலையாள சினிமாவை மையங்கொண்டிருக்கிறது. 2012 ஆம் ஆண்டு முழுக்கவே ஏகப்பட்ட புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்கள், புதிய சிந்தனைகள், புதிய கதை, புதிய களம், புதிய தொழில்நுட்பங்கள் என எல்லாமே புதிதாக மலையாள சினிமாவின் பக்கங்கள் புத்தம் புதிதாக எழுதப்பட்டது இந்த ஆண்டுதான்.

2012ஆம் ஆண்டில் மட்டும் மலையாளத்தில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி மாலிவுட்டின் போக்கையே மடைமாற்றி காட்டியுள்ளன! தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் ஆதிக்கத்தில் கொஞ்சமல்ல நிறையவே சோர்ந்து போய் சூம்பிப்போயிருந்த மாலிவுட்டுக்கு இந்த இளைஞர்கள் பெற்றுத்தந்திருக்கிற இந்த வெற்றி உற்சாக டானிக்காக அமைந்தது.

வினீத் ஸ்ரீனிவாசன், அஞ்சலி மேனன், அன்வர் ரஷீத், ஃபர்ஹாத் ஃபாசில், ஆசிக் அபு, ஆசிஃப் அலி என நமக்கு அதிகமாய் பரிட்சயமில்லாத புதிய மலையாள இளைஞர்கள் மாலிவுட்டினை மகத்தான் உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். மம்முட்டியின் வாரிசு துல்கீர் சல்மான், ஸ்ரீனிவாசனின் வாரிசு வினீத், ஃபாசிலின் வாரிசு ஃபர்ஹாத் என அந்தக்கால பெரிசுகளின் இந்தக்கால வாரிசுகள் தங்களை நிரூபித்து மலையாள திரையுலகில் கால்பதித்திருக்கும் ஆண்டு 2012.

அதற்காக பழைய நட்சத்திரங்களான மம்முட்டியும் மோகன்லாலும் தீலிப்பும் ப்ருதிவிராஜூம் குஞ்சாகபோபனும் முடங்கிவிடவில்லை. இளைஞர்களோடு போராடி புத்தம்புது கதை களங்களில் தங்கள் வயதிற்கும் உடலுக்கும் ஏற்ற யதார்த்தமான பாத்திரங்களில் நடித்து சிலபல ஹிட்டுகளை கொடுத்து தங்களுடைய இருப்பினை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டின் மிகச்சிறந்த பத்து படங்களை தேர்ந்தெடுக்க நினைத்து பட்டியலிட்டால் ஒவ்வொரு திரைப்படமும் இன்னொன்றுக்கு கொஞ்சமும் சளைக்காதவையாக இருந்தன. தொழில்நுட்பமாக இருக்கட்டும் கதைக்களனாக நடிப்பாக இருக்கட்டும் பாக்ஸ் ஆபீஸ் வசூலாக இருக்கட்டும் மக்களை கவர்ந்த வகையிலும் கூட ஒவ்வொன்றும் இன்னொன்றை தாண்டுகின்றன. அதனால் ஒன்று இரண்டு என ரேங்கிங்கில் வரிசைப்படுத்தாமல் சிறந்த படங்களின் பட்டியலாக வரிசைபடுத்திவிடுவோம். இவற்றில் ஒருசில படங்களை மட்டுமே பார்த்தாலும் கூட மாலிவுட்டின் வளர்ச்சியை கண்கூடாக பார்த்துவிட முடியும்.

இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ‘’செகன்ட் ஷோ, ஸ்பானிஷ் மசாலா, ஆர்குட் ஒரு ஓர்மகுட், மாஸ்டர்ஸ், கிராண்ட் மாஸ்டர், தப்பண்ணா’’ போன்ற நல்ல படங்களும் இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்றன. காசனோவா மாதிரியான ஹைபட்ஜெட் ஃபிளாப்புகளும் இல்லாமல் இல்லை. இதோ இந்த வாரம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ஆசிக் அபுவின் ‘’டா தடியா’’ வெளியாகவிருக்கிறது. அதுவும் கூட இப்பட்டியலில் இடம்பிடிக்க கூடிய படமாக இருக்கலாம்.

இனி பட்டியல்!1.உஸ்தாத் ஹோட்டல்

மம்முட்டியின் வாரிசான துல்கீர் சல்மானுக்கு சொல்லிக்கொள்ளும்படி அமைந்த முதல் சூப்பர் டூப்பர் ஹிட்.அந்தகாலத்து பூவே பூச்சூடவா டைப் தாத்தா பேரன் சென்டிமென்ட் கதைதான். ஆனால் அது சொல்லப்பட்ட விதமும், அன்பும் காதலும் சிநேகமுமான உறவுகளின் நெருக்கமுமாக பின்னப்பட்ட திரைக்கதையும் நெகிழவைத்தது. மலையாள சினிமாவின் ஒப்பற்ற நடிகனான திலகனின் அலட்டலில்லாத அற்புதமான நடிப்பு இப்படத்தினை மறக்கமுடியாத சிறந்த படமாக மாற்றியது. நம்ம மதுரைக்கார பாசக்கார பயபுள்ளைகளப்போல கேரளாவில் கோழிக்கோடு இஸ்லாமியர்கள். அவர்களுடைய துள்ளலான நக்கலும் நையாண்டியும் நிறைந்த வாழ்வினை மிக சிறப்பாக படமாக்கியிருந்தார் இயக்குனர் அன்வர் ரஷீத். ஏற்கனவே சால்ட் அன் பெப்பர் மூலமாக புகழ் பெற்ற அஞ்சலிமேனன் இப்படத்திற்கான திரைக்கதை வசனத்தினை எழுதியிருந்தார். சமையல் என்கிற விஷயத்தின் மூலமாக மனிதாபிமானத்தை புகட்டிய திரைப்படம். படத்தில் மதுரையை இதுவரை எந்த தமிழ் இயக்குனரும் காட்சிபடுத்தாத வகையில் பிரமாதமாக காட்டியிருப்பார்கள்.. அதற்காகவேணும் அனைவரும் பார்க்கணும்!

2.தட்டத்தின் மறையாத்து

உம்மாச்சி குட்டிய பிரேமிச்ச ஒரு நாயருட கதா! ( முஸ்லீம் பெண்ணை காதலிச்ச ஒரு நாயர் பையனுடைய கதை) என்று டைட்டில் டேக்லைனிலேயே கதையை சொல்லிவிட்டு வெளியான படம் தட்டத்தின் மறையாத்து. கதை பழசுதான் என்றாலும், அதை கதற கதற வன்முறையாக ரத்தமும் கண்ணீருமாக சொல்லாமல் உணர்வூப்பூர்வமாக காதலோடும் நிறைய கிண்டலும் கேலியுமாக சொன்னது கேரளாவையே கொண்டாட வைத்தது.குஷி படத்தினைப்போல ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி படம். கேரள மிடில் கிளாஸ் இளைஞர்களின் வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் எளிமையாக காட்சிபடுத்தியிருந்தார் வினீத். அவருடைய அப்பா ஸ்ரீனிவாசனின் திரைப்படங்களில் கண்ட அதே நக்கலும் நையாண்டியும் அவருடைய வாரிசுக்கும் வாய்த்திருக்கிறது. அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என பேர்வாங்கி கொடுத்ததோடு வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.


3.ஆர்டினரி

சாதாரண மக்களின் வாழ்க்கையில் அசாதாரண பிரச்சனை வருகிறது. அதை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறது இந்த சாதாரணர்களின் படை என்பதை சாதாரண நடிகர்களை வைத்துக்கொண்டு கொஞ்சமும் போர் அடிக்காத திரைக்கதையால் வெற்றிபெற்ற படம். பட்டணம்திட்டாவின் எழிலான பின்னணி படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. சித்திக் படங்களின் பாணியில் முதல்பாதி முழுக்க விலா நோக வைக்கும் காமெடி சரவெடி, இரண்டாம் பாதியில் கண்களை கலங்க வைக்கிற மெலோடிராமா என்று டிரேட் மார்க் மாலிவுட் படம். குஞ்சகபோபன் மற்றும் பிஜூ மேனன் இருவருடைய நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். இப்படம் தமிழிலும் ‘ஜன்னல் ஓரம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. கரு.பழனியப்பன் இயக்கத்தில் பார்த்திபன்,விமல் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.


4.மாயமோகினி

மம்முட்டி,மோகன்லாலுக்கு பிறகு கேரளாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திலீப். அதே பழைய லாஜிக்கில்லா பழிவாங்கும் கதை. அதை முழுக்க முழுக்க காமெடியாக சொன்னவிதத்தில் கவர்ந்தது. படம் முழுக்க அசல் பெண்ணைப்போலவே வேடமிட்டு நடித்திருந்தார் திலீப். ஒரு கவர்ச்சி நடிகை அணிகிற எல்லாவித உடைகளிலும் (டூ பீஸ் பிகினி உட்பட) திலீப் தோன்றினார். அவரை விரட்டி விரட்டி கற்பழிக்க முயலும் வில்லன்களிடமிருந்து (நம்ம கட்டதொர ரியாஸ்கான்தான்) தப்பினார். படம் முழுக்க அவரும் கூட்டாளிகளும் பண்ணுகிற காமெடி அலப்பறைகளுக்கு கேரளாவே விழுந்து விழுந்து சிரித்தது. கதை பழசு ஆனால் ட்ரீட்மென்ட் புதுசு! ஜாலியாக திரைக்கதை பண்ணி ரொம்ப சிரமப்படாமல் சூப்பர் ஹிட் அடித்தது மாயமோகினி! திலீப்தான் மலையாளத்தின் மாஸ் மஹாராஜா என்பதை நிரூபிக்கும் வகையில் படத்தின் வெற்றி அமைந்தது.

5.ரன் பேபி ரன்


ரன் பேபி ரன் என்று பேர் வைச்சாலும் வச்சாங்க.. படம் கேரளாவின் பட்டிதொட்டியெல்லாம் பாக்ஸ் ஆபீஸ் ரெகார்டுகளை உடைத்துக்கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறது. இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த மலையாள படம் இதுதான். செய்தி சேனல்களின் அரசியலை பின்னணியாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். சேனல் ஒன்றின் கேமரா மேனாக மோகன்லால் , ரிப்போர்ட்டராக அமலா பால், அவர்கள் இருவரிடையேயான காதலும் ஊடலும், அதனால் உண்டாகும் தொழில்முனை போட்டிகள், செய்தி சேனல்களுக்கு நடுவே நடக்கிற அரசியல் யுத்தம் என புதிய கதைக்களனை எடுத்துக்கொண்டு ஒரு ஆக்சன் த்ரில்லராக கொடுத்திருந்தார் இயக்குனர் ஜோஷி! சென்ற ஆண்டு ஜோஷி-மோகன்லால் கூட்டணியில் வெளியான ''கிறிஸ்டியன்பிரதர்ஸ்'' மலையாள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை (33கோடி) குவித்த படம்!. அதே கூட்டணியின் தொடர்ச்சியான இரண்டாவது ஹிட்டாக இப்படம் அமைந்தது. இளைஞர்களின் புயலில் தடுமாறாமல் தன் வயதுக்கும் உடலுக்குமேற்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து ஹிட்டடித்தார் சூப்பர்ஸ்டார் மோகன்லால்!

6.மல்லுசிங்


நம்ம ஊர் பாட்ஷா கதைதான். ஆனால் அதையே குப்புறப்போட்டு கதை எழுதினால் எப்படி இருக்கும். ஊரை விட்டு ஓடிப்போன மாணிக்கம், மும்பை போய் பாட்ஷாவாகிறான். மாணிக்கத்தை தேடி அவருடைய தம்பி மும்பை போய் பாட்ஷாவை சந்திக்கிறான். பாட்ஷா நான் மாணிக்கமில்லை என மறுக்கிறான். அவனை மாணிக்கமென ஒப்புக்கொள்ள வைக்க தம்பிபடும் பாடுதான் மல்லுசிங்! ‘’ஆர்டினரி’’ படத்தில் ஏற்கனவே ஹிட்டு கொடுத்திருந்தாலும் அந்த ஆணவமெல்லாம் இல்லாமல் சப்பையான கேரக்டரை எடுத்துக்கொண்டு அதிலும் தன்னுடைய காமெடி முத்திரையை பச்சக் என பதித்திருந்தார். மலையாள சர்தார்ஜி கேரக்டருக்கு ஏற்ற உடல்வாகும் கம்பீரமும் கொண்டிருந்த உன்னி முகுந்தனும் சிறப்பாக நடித்திருந்தார். காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன் என ஜாலியான ஃபேமிலி என்டெர்டெயினராக இத்திரைப்படம் அமைந்தது.

7. 22 ஃபீமேல் கோட்டயம்


ஐ ஸ்பிட் ஆன் யுவர் க்ரேவ், கில்பில், கலைஞர் வசனமெழுதிய தென்றல் சுடும் மாதிரியான படம்தான் இதுவும். வஞ்சகர்களின் வலையில் வீழ்ந்த அப்பாவி பெண் பழிவாங்கும் கதைதான் இத்திரைப்படமும். ஆனால் அதையே ஹாலிவுட் ஸ்டைலில் படம் இயக்கியிருந்தார் ஆசிக் அபு. படம் பார்க்கிற ஒவ்வொரு ஆணையும் உறையவைக்கும் ஒரு அதிரிபுதிரியான க்ளைமாக்ஸ். ''சென்ற ஆண்டு வெளியாகி சக்கைபோடுபோட்ட சால்ட் அன் பெப்பர் மாதிரியான ஜாலியான மென்மையான படமெடுத்த ஆளாய்யா நீயி!'' என்று படம் பார்த்தவர்களெல்லாம் ஆச்சர்யப்பட்டுத்தான் போயிருப்பார்கள். முதல் பாதி முழுக்க மிகமிக அழகான பெப்பியான காதல், இரண்டாம் பாதியில் அதுக்கு நேர்மாறான வன்முறை! இரண்டையும் வித்தியாசப்படுத்துகிற இசை,கேமரா,எடிட்டிங்,லைட்டிங் என எல்லா துறைகளிலுமே புருவமுயர்த்த வைத்த படமாக இது அமைந்தது. படத்தில் நம்மூர் பிரதாப் போத்தன் மிகமுக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பாசிலின் மகனான ஃபர்ஹாத் பாசிலுக்கு சென்ற ஆண்டு வெளியான ‘சப்பகுரிசு’ படத்துக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படி ஒரு வெற்றியையும் மாலிவுட்டில் நல்ல பெயரையும் பெற்றுதந்த படமாக அமைந்தது. இப்படத்தில் நாயகியாக நடித்த ரீமா கல்லிங்கலுக்கு இப்போதே விருதுகள் குவிய ஆரம்பித்திருக்கிறது! நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

8.டயமண்ட் நெக்லஸ்


ஃபர்ஹாத் பாசிலுக்கு தொடர்ச்சியாக கிடைத்த இரண்டாவது வெற்றி. ஆள் பார்க்க சுமாராக இருந்தாலும், ஒரு காதல்மன்னனாகவும் அனைவரையும் கவர்ந்தார். லால்ஜோஸ் இயக்கிய இத்திரைப்படம் முழுக்க முழுக்க துபாயில் படமாக்கப்பட்டிருந்தது. துபாயில் பணிபுரியும் நாயகன் அங்கே அவன் சந்திக்கிற இரண்டு பெண்கள், அவர்களுடனான காதல் , நடுவில் ஊருக்குப்போய் பண்ணிக்கொள்கிற திருமணம் என சிக்கலான கதையை வேவ்வேறு விதமான உணர்வுகளுடன் கொஞ்சமும் போரடிக்காமல் படமாக்கியிருந்தனர். படத்தின் பாடல்களும் இசையும் , கலர்ஃபுல்லான காட்சியமைப்புகளும் அவ்வப்போது அசர வைக்கும் அழகான எளிய வசனங்களும் படத்தினை வெற்றிப்படமாக மாற்றியது. மெட்ரோ சிட்டிகளில் சக்கைபோடு போட்டாலும் பி அன்ட் சியில் சுமாராகவே ஓடியது. மலையாள திரைப்பட உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு திரைப்படத்தில் பிராண்டிங் செய்வதற்காக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும் மேக்ஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனமும் 80 லட்சம் ரூபாய்க்கு இப்படத்தில் ஓப்பந்தம் போட்டது. (இது படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி என்று வைத்துக்கொள்ளலாம்!)

9.ஸ்பிரிட்


என்னதான் மாஸ் மசாலா படங்களில் நடித்தாலும் அவ்வப்போது நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்து நல்லபிள்ளை என பெயர் வாங்கிவிடுவது மலையாள நடிகர்களுக்கு வழக்கம். அதற்கேற்ப இந்த ஆண்டு ரன் பேபி ரன், கிரான்மாஸ்டர்,கேசனோவா மாதிரியான அதிரடி படங்களில் நடித்தாலும் ‘’ஸ்பிரிட்’’ திரைப்படம் மோகன்லால் நடிப்பில் வெளியான படங்களில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தமிழ்நாட்டு குடிகாரர்களை விடவும் குடிப்பழக்கத்தில் முத்தச்சன்கள் கேரளவாழ் குடிமக்கள். அதையே கதையின் பின்புலமாக கொண்டு, குடிநோய்க்கு ஆளான ஒரு திறமையான டிவி ஆன்கராக (நம்ம கோபிநாத் போல) நடித்திருந்தார் மோகன்லால். குடியால் அவர் வாழ்க்கையில் நடக்கிற அசம்பாவிதங்களால் குடியை கைவிட போராடுவதும், அதைத்தொடர்ந்து தன்னுடைய மீடியா பவரை பயன்படுத்தி கேரளாவில் குடிக்கெதிரான பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதுமாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். மோகன்லால் குடிநோயாளியாக பிரமாதப்படுத்தியிருந்தார். எதிர்பாரத விதமாக கேரள குடிமக்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு. இப்படத்தை பார்க்கிற குடிகாரர் யாருக்குமே மனதில் ஒரு சதவீதமாவது குடிப்பழக்கத்தை கைவிடுகிற எண்ணம் தோன்றும். என்னதான் கருத்து சொல்லுகிற படமாக இருந்தாலும் வணிக ரீதியிலும் படம் சூப்பர் ஹிட்டு! டாஸ்மாக் வாழ் தமிழர்களுக்காக இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்தோ கமலஹாசனோ நடித்தால் நன்றாக இருக்கும்..

10.மஞ்சாடிக்குரு


பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக்குவிக்கவில்லை என்றாலும் படம் பார்த்த ஒவ்வொருவரையும் மிகப்பெரிய அளவில் பாதித்த திரைப்படமாக அமைந்தது. இளம் இயக்குனரான அஞ்சலி மேனனின் முதல் திரைப்படம் இது. மலையாளத்தின் இளம் சூப்பர் ஸ்டாரான ப்ருதிவிராஜ் இப்படத்தில் நடித்திருந்தார். எளிமையான கதை, ஆர்பாட்டமில்லாத திரைக்கதை, மிக அழகான காட்சியமைப்புகள், அதைவிட திலகனின் பிரமாதமான நடிப்பு, நட்பு, காதல், அன்பு, நமக்குள் இருக்கிற குழந்தையை தூண்டிவிடும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை, நிறைய நெகிழ வைக்கும் உணர்வுகளின் கலவையாக ஒரு கவிதையைப்போல இயக்கியிருந்தார் அஞ்சலிமேனன். இன்று நாம் இழந்துவிட்ட குடும்ப உறவுகளின் பிணைப்பினை சுவாரஸ்யமாக சொன்னதற்காகவே நிச்சயம் பார்க்கவேண்டிய படங்களின் பட்டியலில் சேர்க்கலாம்.05 December 2012

என்னாச்சி?

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கிற தலைப்பே ஒருமாதிரி பின்னவீனத்துவ இலக்கியத்தரமாக இருந்தாலும், படம் என்னவோ சென்னை வாழ் இளைஞர்களின் இரண்டு நாள் கும்மாங்குத்து! அஞ்சு நிமிஷம் கூட கேப் கொடுக்காமல் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். சில காட்சிகளில் சிரித்து சிரித்து போதும்டா விடுங்கடா முடியல நெஞ்சு வலிக்குது என்று கதறுகிற அளவுக்கு காமெடி அல்லோலகல்லோல படுது.

‘’என்னாச்சி!’’

படம் முழுக்க இந்த வசனம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை வருகிறது. ஒவ்வொருமுறையும் அது சொல்லப்படுகிற போதெல்லாம் சிரிப்பலைகளில் தியேட்டரே குலுங்குது! அது ஒன்றும் அவ்வளவு பிரமாதமான காமெடியான டயலாக்கோ ஹீரோயிசம் நிறைந்த பஞ்ச் டயலாக் கிடையாது. அட ஒரு நண்பேன்டா கூட கிடையாது. வெறும் சாதாரண ‘என்னாச்சி’ மட்டும் தான்.. அதுவும் ஒரே மாடுலேசனில் ஒரே எக்ஸ்பிரசனில் படம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் படத்தின் நாயகன் விஜய் சேதுபதியால் சொல்லப்படுகிறது..

இந்த என்னாச்சிக்கு ஒவ்வொரு முறையும் ஆடியன் சைடிலிருந்து வெவ்வேறுவிதமான ரிசல்ட், முதலில் ஆச்சர்யப்படுகிறார்கள். பிறகு சலித்துக்கொள்கிறார். பிறகு காமெடியாக சிரிக்கிறார்கள். இடைவேளையின் போது அச்சச்சோ என உச்சுக்கொட்டுகிறார்கள். இறுதியில் சஸ்பென்ஸில் நகங்கடிக்கிறார்கள். ஒரே ஒரு ஒத்தை வார்த்தைய வச்சுகிட்டு எவ்வளவு ரியாக்சன்ஸ் வாங்கிருக்காருப்பா இந்த டைரக்டரு என நினைத்துக்கொண்டேன்!

சப்பையான ஒரு கதை.. நான்கு நண்பர்கள் அதில் ஒருவனுக்கு கல்யாணத்துக்கு முதல்நாள் கிரிக்கெட் ஆடும்போது கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு மெடுலா ஆம்லேட்டாவோ என்னவோ அங்கே அடிபட்டு ஷார்ட் டைம் மெமரி லாஸ் வந்துவிடுகிறது. கஜினி சூர்யாவைப்போல ஆகிவிடுகிறான்.

அவனுடைய காதலும் அடுத்தநாள் கல்யாணமுமே மறந்துவிடுகிறது. சிக்கலில் மாட்டிக்கொண்ட மீதி நண்பர்கள் நாயகனை எப்படி சமாளித்து மணமேடை வரைக்கும் அழைத்துச்சென்று திருமணம் செய்துவைத்தார்கள் என்கிற சுமால் ஸ்டோரியை எடுத்துக்கொண்டு பிரமாதமாக திரைக்கதை பின்னியிருக்கிறார் படத்தின் இயக்குனர் பாலாஜி. இந்த ஆண்டில் தமிழுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நம்பிக்கை தரும் இயக்குனராக தெரிகிறார்.

படத்தில் ஆங்காங்கே கொஞ்சமாய் ஹேங்ஓவர் படத்தின் வாடை அடித்தாலும் இது முற்றிலும் வேறு கதை.. வேறு களம். அதுபோக படத்தின் கேமராமேனுடைய உண்மை கதையாம்.. அதனால் நோ காப்பிபேஸ்ட் என்று நம்பலாம். வேறுவழியில்லை.

இயல்பான வசனங்கள், சிக்கலில்லாத யதார்த்தமான காட்சியமைப்புகள், மொத்தமாய் பத்து கதாபாத்திரங்கள், மிக குறைந்த பட்ஜெட், போரடிக்காத ஜாலியாக சொல்லப்பட்ட திரைக்கதை, மூன்றே லொக்கேஷன் என எல்லாமே கச்சிதம். சிரிக்க வைக்க வேண்டுமென்றே சொல்லப்படுகிற சபா நாடகங்களைப்போல இல்லாமல் திரையில் காட்சிகள் மூலமாகவே சிரிக்க வைத்திருப்பதை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். காமெடி வசனங்களே இல்லாமல் ஒரு காமெடிபடம் சாத்தியமாகியிருக்கிறது!

ஒருகட்டத்தில் அந்த நான்கு நண்பர்களுக்குள் நம்மையும் நம்முடைய நண்பர்களையும் கூட கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறோம்.. அவ்வளவு யதார்த்தமான பசங்க! இதே கதையை கண்ணீர் வர சோகமும் வன்முறையுமாக கூட மாற்றி பாலா,அமீர் ஸ்டைலில் சொல்லியிருக்கலாம். நல்லவேளை அப்படியெல்லாம் படமெடுத்து நம்மை பழிவாங்கவில்லை இயக்குனர். அவருக்கு கோடானுகோடி நன்றிகள்.

படத்தின் நாயகன் விஜய் சேதுபதிக்கு தொடர்ச்சியாக இது இரண்டாவது ஹிட்! மனுஷனுக்கு சுக்கிரதசை நடக்குதோ என்னவோ தொட்டதெல்லாம் ஹிட்டாகிறது. பீட்சாவில் கண்ணை உருட்டி உருட்டி பயந்து பயந்து நடித்தவர், இதில் பழசை மறந்து மூளை குழம்பி பித்து பிடித்தவராக ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறார். அதிலும் தன் காதலியையே பார்த்து ‘’ப்ப்பா பேய் மாதிரி இருக்காடா’’ என்று திரும்ப திரும்பப் பேசும்போது இந்த ஒரே ஒரு ரியாக்சனுக்காகவே விஜய் சேதுபதிக்கு ஏதாவது விருது கொடுக்கலாம்.

தொடர்ந்து இதுமாதிரி படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தால் தற்போது ஹிந்தியில் இவரைப்போலவே கலக்கிக்கொண்டிருக்கும் நவாசுதீன் சித்திக்கியைப்போல தமிழிலும் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல தேர்ந்த நடிகராக வலம்வருவார் என நம்பலாம்.
படத்தின் நாயகன் விஜய் சேதுபதிதான் என்றாலும் படம் முழுக்க அவரோடு அல்லாடும் பக்ஸ்,பஜ்ஜி,சரஸ் என்கிற மூன்று நண்பர்களுக்குத்தான் பர்பார்மென்ஸுக்கு நல்ல வாய்ப்பு. மூவருமே கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். புதுமுகங்கள் என்கிற உணர்வே வரவில்லை. இதில் பக்ஸாக நடித்தவர் உண்மைகதையில் நிஜமாகவே இடம்பெற்றவராம்!

படத்தில் ஹீரோயின் திரையில் தோன்றுவதே கிளைமாக்ஸுக்கு முன்னால்தான்.. (முன்னெல்லாம் இதுமாதிரி பாத்திரங்களுக்கு கௌரவ வேடம் அல்லது நட்புக்காக என்று பெயர்போடும்போது போடுவார்கள்.) பார்க்க ப்ளேபாய் படத்தில் நடித்த இளம் ஷகிலா ஜாடையில் இருக்கிறார். அவ்ளோதான்.

படத்தில் எல்லோருமே புதுமுகங்கள்தான் சிலரை நாளைய இயக்குனர் குறும்படங்களில் பார்த்திருக்கலாம். எல்லோருமே நிறைவாக செய்திருக்கிறார்கள். படத்தில் பாடல்களே கிடையாது என்பது இன்னொரு ஆறுதல். இசையமைப்பாளருக்கு கோ.கோ. நன்றி.

படத்தின் ஒரே குறை , படம் மூன்று மணிநேரம் ஓடுகிறது என்பதுதான். அதுபோக குறைவான லொக்கேசன்களில் படமாக்கப்பட்டிருப்பது ஒருவிதமான சீரியல் ஃபீலிங்கை கொடுக்கிறது. அதுபோக படம் முழுக்க ஒவ்வொரு காட்சியும் நிறுத்தி நிதானமாக ஆற அமர சொல்லப்படுவதால் இருபது அல்லது இருப்பத்தைந்து நிமிடங்கள் அடிஷனலாக ஓடுவதைப்போல ஒரு ப்பீலிங். ஆனால் போரடிக்காத மற்றும் சிரிக்கவைக்கிற திரைக்கதையால் அந்தக்குறைகூட பெரிதாக தெரியவில்லை.

படத்தில் வருகிற ஹீரோவைப்போல மண்டைக்குள் இருக்கிற பிரச்சனைகளை மறந்து ஒரு மூன்று மணிநேரம் ஜாலியாக சிரித்து மகிழ ஏற்றபடம். எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரி சினிமா.. ஒரே வார்த்தையில் சொன்னால் ‘அட்டகாசம்!’ டோன்ட் மிஸ் இட்.
28 November 2012

பெற்றதும் இழந்ததும்

முன்பெல்லாம் தீபாவளி வந்துவிட்டால் ஒருமாதத்துக்கு முன்பே மனசு முழுக்க படபடப்பும் த்ரில்லும் நிறைந்துவிடும். பட்டாசு வாங்கணும், புது உடை எடுக்கணும், பட்சணம் செய்யணும் எனப் பரபரப்பாகிவிடுவோம். எங்கள் வீட்டில் பாட்டிக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது.

நடுவீட்டில் வாணலியை வைத்துக்கொண்டு அதிரசம்,ரவாலட்டு,முறுக்கு என பிஸியாகிவிடுவார். குடும்பமே உட்கார்ந்து வாழை இலையில் மாவுதட்டி கொடுக்கும். அருகிலேயே உட்கார்ந்து கொண்டு குழந்தைகள் ருசிபார்க்கும்.

கட்பீஸ் துணிகள் வாங்கி.. டெய்லரிடம் தைக்கக் கொடுத்து அவருடைய தீபாவளி பிகுவை சமாளிக்க வேண்டும். தீபாவளிக்கு முந்தைய நாள் தைத்த துணி கிடைக்குமா கிடைக்காதா எனக் காத்திருந்து சஸ்பென்சாக உடை வாங்கி அணிவோம். உடைக்கு மேட்சான கவரிங் நகைகள் வாங்குவதில் தங்கைகள் கடைவீதிகளின் சந்துபொந்தெல்லாம் வேட்டையாடிவிட்டு வருவார்கள். பட்டாசு கடைக்குச் சென்று லட்சுமி வெடி, நேதாஜிவெடி, குட்டீஸுக்கு குருவி வெடி, சீனிவெடி,கம்பி மத்தாப்பு என பார்த்து பார்த்து வாங்குவோம். புதிய காலணி, புதிய பெல்ட்.. புதிதாக பிறப்போம்.

நான்கு மணிக்கே எழுந்து தலைக்கு எண்ணெய்வைத்துக் குளித்து பட்டாசு வெடித்து.. பட்சணம் தின்று.. முதல்நாள் முதல்ஷோ தலைவர் படமும் பார்த்துவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றினால்தான் தீபாவளி முழுமையடையும். அது ஓர் உற்சாக அனுபவம்.
இன்று தீபாவளி நிறையவே மாறிவிட்டது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும்தான் புத்தாடை என்பது பழைய கதையாகிவிட்டது. நினைத்த போதெல்லாம் உடைகள் வாங்குகிறோம். அதனாலேயே தீபாவளி டிரஸ்ஸுக்கு பெரிய மரியாதை கிடையாது.

ஏதாவது பிரமாண்டமான துணிக்கடையில் ரெடிமேட் உடை ஒன்றை கூட்டநெரிசலில் எடுத்துவந்து அணிகிறோம். நாலுகம்பி மத்தாப்பு, இரண்டு ஊசி வெடி, ஒரு யானைவெடி என பட்டாசுகள் கூட கிப்ட் பேக் கிடைக்கிறது. ஆர்டர் செய்தால் டோர்டெலிவரி செய்கிறார்கள்.

அடையார் ஆனந்தபவனிலோ கிருஷ்ணா ஸ்வீட்ஸிலோ அதிரசம்,முறுக்கு,ரவா லட்டு தீபாவளி பேக்கேஜ் கிடைக்கிறது. நாள்முழுக்க தொலைக்காட்சிகளில் மூழ்கிப்போகிறோம். அதிகாலையில் அருளுரை, பின் பட்டிமன்றம், நடிகைகள் பேட்டி, பின் சினிமா, குட்டித்தூக்கம், மீண்டும் ஒரு சினிமா.. இரவில் இரண்டு கம்பி மத்தாப்பைக் கொளுத்திவிட்டு, ஒரு ராக்கெட்டையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திவிட்டால்.. தீபாவளி முடிந்தது.

இன்று நம்முடைய பண்டிகைகள் இன்னொரு விடுமுறை நாளாகவே கழிகிறது. பழைய உற்சாகமும் த்ரில்லும் நிறையவே மிஸ்ஸிங்! தீபாவளியில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் கூட நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன.

எல்லாமே விரல்நுனியில் வந்துவிட்டது. எதையும் வாங்குவதற்காக சுற்றித் திரியத் தேவையில்லை. அங்கே இங்கே அசையத் தேவையில்லை. பாக்கெட்டில் பணமும் கையில் ஒரு கணினியோ, செல்போனோ இருந்தால் எதுவும் சாத்தியம்.

பீட்சாவும் நியூஸ் பேப்பரும்தான் முன்பெல்லாம் வீடுதேடி வரும். இப்போது வீட்டிலிருந்தபடியே கார் முதல் கணினி வரை எதுவும் வாங்க முடியும். மளிகைச் சாமான்கள் வேண்டுமா? ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். இலக்கியம் படிக்கணுமா, இந்தியச் சுற்றுப்பயணமா? சாமிதரிசனம் கூட இணையத்தில் சாத்தியமாகியிருக்கிறது. பிரசாதம் கொரியரில் வீடுதேடி வந்துவிடும்.

பஸ்,ரயில்,விமானம் எனப் பயணத்துக்காக திட்டமிட்டு ஆன்லைனில் டிக்கட் புக் பண்ணலாம். குப்பைத்தொட்டி டாட் காம் என்கிற இணையதளம் காய்லாங்கடைச் சமாச்சாரங்களைக் கூட வீட்டிற்கே வந்து எடுத்துசெல்கிறது. கோவையில் ஒரு நவீன சுடுகாடு உண்டு. பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும்போது பெற்றோர்கள் இறந்துவிட்டால் இணையம் மூலமாகவே கொள்ளியும் போட முடியும்.

பொறுமையாக நிதானமாக எழுதப்பட்ட கடிதங்கள் வழக்கொழிந்துவிட்டன. போஸ்ட் பாக்ஸுகளில் கடிதங்கள் குறைந்துவிட்டன. எங்கும் ஈமெயில்தான் எஸ்எம்எஸ்தான்! நெருங்கிய உறவுகளோடு கூட சுறுக்கென.. ஹாய் ஹவ் ஆர்யூ.. ஃபைனாக முடிந்துபோகிறது.

ஒருகாலத்தில் வீட்டில் டெலிபோன் இருக்கிறதென்பது மிகப்பெரிய கௌரவம். டெலிபோன் வைத்திருப்பவர்கள் டிவிவைத்திருப்பவர்கள் எல்லாம் நம் ஜம்பமாகச் சுற்றுவார்கள். டிரங்கால் என்பதோ, அதில் ‘’PP கால்” என்கிற ஒன்று இருந்ததோ சமகால சந்ததிகளுக்குத் தெரியாது.

SMS எல்லா மொழிகளையும் நறுக்கியிருக்கின்றன.பெயர்ச் சொல் உயிர்ச் சொல் எல்லாம் பெயரும் உயிரும் இழந்து கைபேசிக்குள் சுருங்கிக்கிடக்கின்றன. 140 கேரக்டர்களுக்குள் எழுதும் குருவி வாசகங்கள் கோர்ட்டுக்கு இழுக்கவும் சிறைக்கு அனுப்பவும் சக்தி கொண்டவையாகிவிட்டன. ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் குடும்ப உறவுகளையே பாதிக்கத்தொடங்கியிருக்கின்றன.

தூர்தர்ஷன் காலத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் இரவாகிவிடும். செய்திகள் முடிந்து உறங்க சென்றுவிடுவோம். இப்போதெல்லாம் நமக்கு இரவே கிடையாது. பிரபல மியூசிக் சேனல் ஒன்றில் அர்த்தராத்தியில் கூட லைவ் ப்ரோகிராம் ஒன்று போகிறது. அதற்கும் இளைஞர்கள் போன்போட்டு எனக்கு அந்த பாட்டு போடுங்க அதை தன்னுடைய பாட்டிக்கு டெடிகேட் பண்ணுகிற கூத்துகளும் நடக்கிறது. நம் குடும்பத்தினர் டிவியோடு வாழ்கிறார்கள், டிவியைப் பற்றியே பேசுகிறார்கள்.நம் வாழ்க்கையின் பல விஷயங்களை, சேமிப்பு, முதலீடு போன்ற முக்கியமான விஷயங்களைக் கூட்த் தீர்மானிக்கின்றன எப்போது டிவியை திறந்தாலும் யாராவது ஒரு சீரியல் பிரபலம் நிலம் விற்கிறார். பிரபல நடிகர் நகை விற்கிறார்.

முன்பைவிட நம்மிடம் இப்போது நிறையவே பணம் புழங்குகிறது. சின்னச் சின்ன வேலை செய்கிறவர்களுக்கும் ஓரளவு கணிசமான ஊதியம் கிடைக்க தொடங்கியிருக்கிறது.
ஆனால் வாங்கிய சம்பளத்தை உடனடியாகச் செலவு செய்கிறோம் அல்லது செய்ய வைக்கப்படுகிறோம். சிறுசேமிப்பு என்பது இன்று வேறொரு அவதாரத்தை எடுத்திருக்கிறது. ம்யூச்சவல் பண்ட்ல போட்டிருக்கேன்.. ஷேர்மார்க்கெட்ல இறக்கிருக்கேன் என சொல்வது ஃபேஷனாகிவிட்டது.

சிக்கனமாக வாழ்ந்து மிச்சம் பிடித்துச் சேர்த்தத் தொகையைக் குருவி போல சிறுகச் சிறுக சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணி வீடுகட்டிக் குடியேறி வாழ்ந்த காலமெல்லாம் போயே போச்சு! இன்று ப்ளாட்தான் வாங்குகிறோம். அதுவும் இருபதாண்டு முப்பதாண்டு வங்கிக் கடனில்!. திருமணமா, படிப்பா, வீடு நிலம் வாங்குவதா.. வங்கிகள் கடன்கொடுக்க க்யூவில் நிற்கின்றன. சாகும் வரை கடன் கட்டிக்கொண்டேயிருக்கிறோம்.

நூறு ரூபாய்க்கு வாங்கின கைக்கடிகாரத்தை முப்பது முறை ரிப்பேர் பண்ணி அணிந்துகொண்டிருந்த கலாச்சாரம் இன்று கிடையாது. இருபதாயிரம் ரூபாய் கலர்டிவி ரிப்பேராகிவிட்டதா.. அதைச் சரிசெய்வதை விட புதிதாக எல்சிடி டிவி வாங்கலாமா எல்ஈடி டிவி வாங்கலாமா எனச் சிந்திக்கிறோம். லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டும் 3டி டிவி ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்கிறது. நாற்பதாயிரம் ரூபாய் ஐ போனை வாங்க க்யூ நிற்கிறது. கடைக்கார்களோ ஐநூறு பேருக்குத்தான் கொடுக்க முடியும் போய்ட்டு அடுத்த வாரம் வாங்க என்கிறார்கள்.

திருமணத்திற்கு அழைப்பவர்கள் மூணு நாள் முன்னாடியே வந்துடுங்க என அழைப்பதுதான் நம் பாரம்பரியம். நாம் கூட ஒருநாள் முன்பாகவே திருமணங்களுக்கு செல்வோம். இன்று முகூர்த்த்துக்கு வராட்டி பரவால்ல ரிசப்சனுக்கு வந்துடுங்க என்று அழைப்பவர்களை அதிகம் பார்க்க முடிகிறது நெருங்கியவர்களது திருமணங்களுக்குக் கூட ஒருநாள்தான் ஒதுக்க முடிகிறது. திருமணத்துக்கு மட்டுமல்ல நெருங்கிய உறவினர்களின் மரணத்திற்கும் கூட அரைநாள்தான் டயம்.

நமக்கு எதற்குமே நேரமில்லை. சாப்பிடக்கூட நேரமில்லாமல் உழைக்கிறோம். இதனால் உடலும் உள்ளமும் பெரிதளவில் பாதிக்கப்படுவதையும் உணர்ந்தேயிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகச் சந்தையில் அதிகம் விற்கிற புத்தகங்கள் மருத்துவம் தொடர்பானதுதான். ஆர்கானிக் உணவுகளை அதிக விலைகொடுத்து உண்கிறோம். யோகா கற்கிறோம். இருந்தும் உடல்நிலை முன்பைவிட மோசமாகத்தான் இருக்கிறது.
நாம் இழந்துவிட்ட உடல் மற்றும் மன நலத்தை புத்தகங்களிலும் டிவியிலும் தேடுகிறோம். இளைஞர்களுக்கு உடல்நலமென்பது சிக்ஸ்பேக்காக ஆகிவிட்டது!

அருகிலிருப்பவர்களோடு குறைவாகவும் எங்கோ இருப்பவர்களோடு மணிக்கணக்கிலும் பேசப்பழகிவிட்டோம்.

யோசித்துப் பார்த்தால், ஒருநாள் நம்மிடம் நிறைய பொருட்களும் பணமும் இருக்கும். ஆனால் மகிழச்சியும் கொண்டாட்டமும் இனிமையான நினைவுகளும் இல்லாமல் போய்விடலாம்.

(புதியதலைமுறை வார இதழ் தீபாவளி மலருக்காக எழுதியது. நன்றி . பு.த)
26 November 2012

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி

ஏழாம் அறிவில் நம்மையெல்லாம் தமிழன் என்று பெருமைப்பட வைத்த ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தில் இந்தியன் என்று மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். விஜயகாந்தோ அர்ஜூனோ நடித்திருந்தால் துவண்டு போயிருக்கும் அவர்களுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்த உதவியிருக்கும். விஜய் நடித்ததால் ஒன்றும் குடிமுழுகி போய்விடவில்லை. அவருடைய மார்க்கெட்டும் சரிந்துகொண்டுதானே இருந்தது.

நம்முடைய நாட்டுக்கு ஆபத்து வரும்போதெல்லாம் சம்பவாமி யுகே யுகே என்று நம்முடைய மல்டிபிள் ஸ்டார்ஸ்களே முன்னால் வருவார்கள். அதுபோலவே துப்பாக்கி படத்திலும் விஜய் குபீரென ராணுவ வீரனாக தோன்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுகிறார்.

மலைப்பகுதியில் தனிவீட்டில் குடும்பத்தோடு வசிக்கும் வில்லன். அவனுக்கு போரடிக்கும்போதெல்லாம் காரணமேயில்லாமல் மும்பையில் குண்டு வைத்து விளையாடுகிறான். அவனுடைய விளையாட்டுக்கு மும்பையில் வசிக்கும் இஸ்லாமிய மிடில்கிளாஸ் மக்கள் உதவுகிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகளை பந்தாடி போர் அடித்து லீவு போட்டுவிட்டு மும்பைக்கு வருகிறார் விஜய்.

வில்லன் வைத்த குண்டை இவர் எடுக்க.. இவர் வைத்த குண்டை அவர் எடுக்க.. இவர் அண்ணனை அவர் சுட்டுக்கொல்ல.. இவர் தங்கச்சியை அவர் கடத்த.. கடைசியில் என்னாகும்ன்னா.. இதையெல்லாம் நான் எழுதிதான் தமிழகம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

யெஸ்.. தர்மம் வென்றது. இந்தியா தலைநிமிர்ந்தது. பாரத்மாதாக்கீ ஜே. ஜெய்ஹிந்த். (டைப்படிக்கும் போது விரலே விரைப்பாக நிற்கிறது!)

ரொம்ப பழைய கதையை எடுத்து பட்டி டிங்கரிங் பார்த்து.. புதிதாக திரைக்கதை அமைத்து ஆங்காங்கே கேட் அன் மௌஸ் மசாலா தூவி ஜாலியாக இயக்கியிருக்கிறார் ஏஆர் முருகதாஸ். சரவெடி போல கடபுடாவென பேய்வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையில் தலா நூற்றிநாற்பதுக்கும் மேல் ஓட்டைகள். இருப்பினும் படத்தில் ஏதோ ஒரு சுவாரஸ்யமிருப்பதாக நாம் நினைப்பதால் அந்த ஓட்டைகள் தெரியவில்லை.

முதல்பாதி அரைமணிநேரமும் இரண்டாம் பாதியில் அரைமணிநேரமும் தொய்வடைந்து கடுப்பேற்றுகிறது. ஆனால் விஜயின் ஸ்கிரீன் பிரசன்ஸும் அலட்டலில்லாத அற்புதமான நடிப்பும் அதையெல்லாம் மறக்கசெய்கிறது.

இளையதளபதியும் வருங்கால முதல்வருமான விஜய், தன்னுடைய அடுத்த அமெரிக்க ஜனாதிபதி கனவையெல்லாம் தூக்கி பரணில் போட்டுவிட்டு நடித்திருப்பது ஆறுதல். படத்தில் ஐயாம் வெயிட்டிங் என்பது மட்டும்தான் விஜய் பேசுகிற ஒரே பஞ்ச் டயலாக். ஒருவேளை இந்தபடம் ஹிட்டானால் மறுபடியும் பஞ்ச் பேசுவேன் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறாரோ என்னவோ!

முக்கால் பேண்ட்டோடு சுவருக்கு சுவர் தாவுவதும், ஸ்டைலாக துப்பாக்கியால் டுமீலுவதாகட்டும், தென்னிந்திய ஜேம்ஸ்பாண்டாக மிளிர்கிறார் விஜய். ஒரே ஒரு துப்பாக்கியோடு உலகத்தை காப்பாற்றும் வேலையாக இருந்தாலும் அதையே ஸ்டைலாக செய்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

காஜல் அகர்வாலுக்கு மேலே கீழே வலது இடது என பல பகுதிகளிலும் நடிக்க வருகிறது. குலுங்க குலுங்க நடித்திருக்கிறார். ஆனால் அவர் படத்தில் எதற்காக என்பது முருகதாஸுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருக்கலாம்.கஜினிக்கு பிறகு இந்தப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் ரொமான்டிக்காக இருக்கிறது. காமெடிதான் சுத்தமாக செல்ஃப் எடுக்கவில்லை. ஜெயராம் என்கிற நல்ல நடிகரை ஏன்தான் இப்படி நாசம் பண்றாங்களோ என்பதை தவிர அவரைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

படத்தின் ஒரே குறை மிகப்பெரிய குறை.. மகா மட்டமாக இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான். கூகிள் கூகிள் பாடலை தவிர மற்ற எல்லாமே கடனுக்கு போட்டு கொடுத்த மெட்டுகளை போலவே இருந்தன. மாற்றானில் போட்ட ஒரு பாட்டை அப்படியே இங்கேயும் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ்.. ரீமிக்ஸ் ஜெயராஜாக மாறிவிட்டார்!

2007ல் வெளியான போக்கிரிக்கு பிறகு அசலான ஒரு விஜய் படம் பார்த்த திருப்தி இந்தபடத்தில் கிடைக்கிறது. விஜய் படங்கள் குடும்பத்தோடு பார்க்க ஏற்றவை. ஆனால் இப்படத்தில் வன்முறை கொஞ்சமல்ல நிறையவே தூக்கலா இருந்தது.

கிளைமாக்ஸில் டெடிகேட்டிங் டூ த மிலிட்டிரி ஆஃப் தி இந்தியா என்றெல்லாம் எதற்கு ஜல்லி அடிக்கவேண்டும் என்று புரியவில்லை. அதை பத்து நிமிடம் ஸ்லோ மோஷனில் காட்டி முடிப்பதற்குள் ஒட்டுமொத்த தியேட்டரும் காலியாகிவிட்டது.

சில படங்கள் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்த்து போய் பார்ப்போம். அது சுமாராக இருந்தாலும் கூட நம் எதிர்பார்ப்பாலேயே அது மொக்கையாக தோன்றும். விஜயின் தொடர் மொக்கை படங்களால் துப்பாக்கி சூரமொக்கையாகதான் இருக்கும் என்கிற உறுதியான எதிர்பார்ப்போடு சென்ற தமிழ் ரசிகர்களுக்கு இந்த சுமாரான படம்கூட சூப்பராக தெரிந்ததில் ஆச்சர்யமில்லைதான்.

துப்பாக்கியை பற்றி இரண்டு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் ‘’இன்ப அதிர்ச்சி!’’.

(http://cinemobita.com/ க்காக எழுதியது. அவர்களுக்கு நன்றி)

09 November 2012

அழுமூஞ்சி ஜேம்ஸ்பாண்ட் தாத்தா!


எவ்வளவோ ஹாலிவுட் படங்கள் வெளியானாலும் ஜாக்கிசான் படமும் ஜேம்ஸ்பாண்ட் படமும் வெளியானால்தான் தமிழ்ரசிகனுக்கு தீபாவளி. குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் படமென்றால் முதல்நாள் முதல்ஷோவே க்யூவில் நிற்பான் தமிழன்.
ஒப்பனிங் சேசிங் சண்டைகள் முடித்து வில்லன்களிடமிருந்து தப்பியோடி கையில் துப்பக்கியோடு கன்பேரலுக்குள் நடந்து வர பபாம்....பபாம் என தீம் மியூசிக் ஆரம்பமாகும்... தலைவா..அரசியலுக்கு வா என்கிற குரல்களில் தியேட்டரே அதிரும். ஒவ்வொரு காட்சியிலும் விசில் பறக்கும்.

நம்மாட்களுக்கு படம் புரிகிறதோ இல்லையோ.. கோட்டு சூட்டு போட்ட ஜேம்ஸ்பாண்டின் ஸ்டைல், அவருடைய அசால்ட்டு பேச்சு, அதிரடி ஆக்சன், வித்தியாசமான கேட்ஜெட்ஸ், பிகினி போட்ட கவர்ச்சிகன்னிகள் என எப்போதுமே ஜேம்ஸ்பாண்ட்தான் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார். தமிழகத்தில் ஜேம்ஸ்பாண்டும் ஜாக்கிசானும் கட்சி ஆரம்பித்தால் கணிசமான வாக்குகள் பெறுவார்கள் என்பது உறுதி.

நம்மை மகிழ்விப்பதற்காகவே சமீபத்திய ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைஃபால்’ (SKYFALL) தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியது. அதில் 50ல் மட்டும்தான் ஆங்கிலத்தில்.. மீதி 250 ப்ளஸ் தியேட்டர்களிலும் தமிழ் டப்பிங்கில்தான் திரையிடப்பட்டுள்ளது. ஒரு ஆங்கிலப்படம் அதுவும் தமிழ் டப்பிங்கில் இத்தனை தியேட்டர்களில் வெளியாவது அவதாருக்கு பிறகு இப்போதுதான். விஜய்,அஜித் படங்களுக்கு இணையான ஓப்பனிங்கும் இப்படத்துக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ் ரசிகனுக்கு ஜேம்ஸ் பாண்ட் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவேதான். அவரால் முடியாதது எதுவுமே இல்லை. அது ஃபிகர் மடிப்பதாக இருந்தாலும் சரி... வில்லன்களை பந்தாடுவதாக இருந்தாலும் சரி. எல்லாமே சுஜூபி. ஒரே ஒரு துப்பாக்கியோடு அதில் குண்டே இல்லாமல் உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று ஒட்டுமொத்த ராணுவத்தையே நிலைகுலைய வைப்பவர் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்.
மூர்க்கமான வில்லன் நிலவுக்கே சென்றாலும் விரட்டி பிடித்து சுளுக்கெடுக்கிற சாகசமும், எந்த ஆபத்தையும் லெப்ட் ஹேண்டில் சமாளிக்கும் திறனும் கொண்டவர் நம்ம ஜேம்சு. வில்லன்களின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து அவன் மனைவியையே உஷார் பண்ணி உல்லாசம் காண்பார்.

உலகின் எந்த விளையாட்டாக இருந்தாலும் அவரோடு போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. வாள்வீச்சு, பனிசருக்கு, சீட்டுக்கட்டு, கில்லி தாண்டு, ஒத்தையா ரெட்டையா, பல்லாங்குழி என எல்லா விளையாட்டிலும் ஜேம்ஸ்பாண்ட்தான் நம்பர் ஒன். வில்லன்களை வெறுப்பேத்த அவர் எப்போதுமே விளையாட்டுகளில்தான் முதலில் ஜெயிப்பார். க்ளைமாக்ஸில் மொத்தமாக ஜெயிப்பார்.

பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த டை அனதர் டே வரைக்கும் கூட ஜேம்ஸ் பாண்ட் ரஜினிகாந்தாகத்தான் இருந்தார். காதல், காமம், சூது என எல்லா விளையாட்டிலும் ஜெயித்தார். அவர் காதலித்த ஃபிகர் செத்துப்போனாலும் ஓ மை காட் என ஒருநிமிடம் அதிர்ச்சியாகிவிட்டு அடுத்த ஃபிகரோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தார். இப்படித்தான் ஜேம்ஸ்பாண்ட் இருந்தார்.

ஒருநாள் பியர்ஸ் ப்ராஸ்னன் ரிடையர்டானார். அந்த பாத்திரத்தில் நடிக்க ஆட்கள் தேடி ஒருவழியாக டேனியல் க்ரைக் என்கிற நடிகரை தேர்ந்தெடுத்தனர். எல்லாமே மாறிப்போனது.
பாட்ஷா ரஜினிபோல ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த ஜேம்ஸை, மகாநதி கமலஹாசன் போல மூலையில் உட்காரவைத்து ஆ.....ங்.... ஆ.... ங் என கதறி கதறி அழவைத்து ரசித்தது அக்கிரமக்கார ஹாலிவுட். வில்லனோடு சண்டையிட்டு தோற்றுப்போனார். வில்லன் கும்பலிடம் சிக்கி மரண அடிவாங்கி ரத்தவழிய தப்பியோடினார்.

தன் காதலியை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் தாடிவளர்த்து தண்ணியடித்தார். எந்த குணங்களுக்காக நாம் ஜேம்ஸை கொண்டாடினோமோ அது அனைத்தையும் இழந்திருந்தார். என்ன எழவுடா இது என காசினோ ராயல் படம் வந்தபோதே தமிழக மக்கள் லைட்டாக முகம் சுளிக்க தொடங்கிவிட்டனர். இந்த படத்துல மட்டும்தான் இப்படிபோல என மனதை தேற்றிக்கொண்டனர். ரஜினிகூட பாபா படத்தில் நடித்து குப்புற விழவில்லையா?
இந்த அக்கிரம அழிச்சாட்டியம் குவாண்டம் ஆஃப் சோலேசில் இன்னும் அதிகமானது.

நிறையவே அடிவாங்கி, நிறையவே தோற்று.. ‘’இருக்க இருக்க இந்த ஜேம்ஸுக்கு என்னலே ஆச்சு.. ஏன் இப்பிடியாகிட்டாப்போல’’ என மக்கள் கடுப்பாக ஆரம்பித்தனர். மக்களின் கடுப்பு இதோ ஸ்கை ஃபாலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. க்ளைமாக்ஸில் படத்தின் இயக்குனரையும் ஜேம்ஸையும் எழுதமுடியாத வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர்.
முதல் காட்சியிலேயே ஒரு மிகபிரமாதமான சேஸிங்.. டிரெயின் மேல் பைக் ஓட்டி வில்லனை துரத்துகிறார். ஆஹா நம்ம ஜேம்ஸு மறுபடியும் ஃபார்முக்கு வந்துடாப்ல.. செம ஜாலியா இருக்கும்போலருக்கே என நிமிர்ந்து உட்கார்ந்தால்.. அவரை சுட்டுவிடுகிறாள் ஒரு சுருள்மண்டை பெண். பல நூறு அடி உயரத்திலிருந்து தொப்பக்கடீர் என தலைகுப்புற விழுகிறார் ஜேம்ஸு..

‘’பாண்ட் செத்துட்டான்’’ என அறிவிக்கிறார்கள். ஙே என தமிழ்ரசிகன் அதிர்ச்சியாகிறான்.
அதற்குபிறகு உளவாளிகள் சங்கத்துக்கே ஆப்படிக்கிறான் ஒரு வில்லன். அவனை அழித்து உளவாளிகள் சங்கத்தை காப்பாற்றுகிறார் ஜேம்ஸ். அதற்குள் அவரை பாடாய்படுத்துகிறார்கள் வில்லன்கும்பலும் உளவாளி கும்பலும்.

‘’உனக்கென்ன பாம் வச்ச பேனா வேணுமாக்கும்’’ என புது க்யூ(வெப்பன் சப்ளையர்) கலாய்க்கிறான். எப்போதும் பளிச் பிளிச் என வருகிற ஜேம்ஸ் இதில் நரைவிழுந்த தாடியோடு சோகமூஞ்சியோடு காட்சியளிக்கிறார். அவரிடம் பெரிய கேட்ஜெட்டுகள் இல்லை. க்ளைமாக்ஸில் குண்டுபல்பையெல்லாம் வைத்து வில்லன்களோடு சண்டைபோட வேண்டிய துர்பாக்கிய நிலை. கடைசியில் உளவாளிகள் சங்கதலைவி எம் செத்துப்போன பிறகு அரங்கம் அதிர அழுது புலம்புகிறார்.. முடியல!

நாம் இப்படியொரு ஜேம்ஸ்பாண்டை இதுவரை பார்த்ததேயில்லை. 80களின் இறுதியில் டிமோதி டால்டன் நடித்த இரண்டு ஜேம்ஸ்பாண்ட் படங்கள் இதேமாதிரிதான் என்றாலும் அவை அந்த அளவுக்கு புகழ்பெறவில்லை. ரொம்ப சுமாரான படங்கள்தான் அவை. அதற்கு பிறகு மீண்டும் அதே பாணியில் டேனியல் க்ரேக்கை வைத்து நம்மை கடுப்பேற்றியிருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்டுக்கு வயதாகிவிட்டது. அதோடு அவருடைய உடல்நிலையும் முன்பு போல இல்லை. கொஞ்ச தூரம் ஓடினாலும் மூச்சு வாங்குகிறது. அவரை சுள்ளான்களெல்லாம் கேலி பேசுகிறார்கள். போனால் போகுதென்று படத்தில் ஒரே ஒரு ஹீரோயின் வைத்திருக்கிறார்கள். அந்த பெண்ணையும் இடைவேளைக்கு முன்பே கொன்று விடுகிறார்கள். படம் முழுக்க பேசி பேசி தமிழ்ரசிகனை கதறவிடுகிறார்கள்.
அதிரடியான சண்டைகாட்சிகள் இல்லை. நெஞ்சம் மகிழ்விக்கிற கில்மா காட்சிகளும் இல்லை. மொத்தத்தில் இதுவரை தமிழ்திரை கண்டிராத யதார்த்தபட ஜேம்ஸ்பாண்டாகவே இருக்கிறார் இந்த புதுபாண்ட்.

இப்படம் உலகெங்கும் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரைக்கும் வந்ததிலேயே இதுதான் தி பெஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் மூவி என அறிவுஜீவிகள் புகழாரம் சூட்டுகிறார்கள். பல ஆயிரம் கோடி வசூலை வாரிக்குவித்திருக்கிறது. அதில் நிச்சயம் உண்மைதான். ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருப்பதும், அதிரடி ஆக்சனை கைவிட்டு பழமைக்கும் (ஜேம்ஸ்) புதுமைக்குமான(தொழில்நுட்பம்) போட்டியாக படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பதும் அருமைதான். கனிணி முன்னால் உட்கார்ந்து கொண்டு சும்மா வெட்டி பேச்சு பேசாதே.. களத்தில் இறங்கினால்தான்டா உங்களுக்கு கஷ்டம் தெரியும் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் ஜேம்ஸ்.

இயான் ஃபிளமிங் கூட தன்னுடைய நாவல்களில் இப்படிப்பட்ட ஜேம்ஸ்பாண்டைதான் உருவாக்கியிருந்தார். அவன் சாதாரண மனிதனாகவே இருந்தான். திரைப்படங்களில்தான் ஜேம்ஸ் அசகாயசூரனாக மாறினார். அந்த இமேஜை மாற்றி இயான் ஃபிளமிங்குக்கு பெருமை சேர்க்கும் வகையில் படமாக்கியிருப்பதையும் பாரட்டலாம்தான்.

அதுபோக என்றைக்கிருந்தாலும் பழசு பழசுதான் பெரிசு பெரிசுதான் என இங்கிலாந்து நாட்டின் பெருமையை ஜேம்ஸ்பாண்ட் உலகுக்கு உணர்த்துவதும் ஓக்கேதான்.
ஆனால் சாதாரண தமிழ்ரசிகன் எதிர்பார்க்கிற மசாலாவே இல்லாத ஜேம்ஸ் பாண்டை எவ்வளவு நேரம்தான் திரையில் சகித்துக்கொண்டு பார்க்க முடியும்.

பத்து நிமிடத்துக்கு ஒரு சேஸிங்கோ சண்டைகாட்சியோ படுக்கையறை கில்மாவோ இல்லையென்றால் தமிழ்ரசிகன் கடுப்பாகமாட்டானா? எந்த நேரத்தில் ‘’பேட்மேனை’’ நம்ம கிறிஸ்டோபர் நோலன் சாதாரண மனிதனாக மாற்றி யதார்த்த சூப்பர் ஹீரோவை உருவாக்கினாரோ அப்போதிருந்து எல்லா சூப்பர் ஹீரோக்களையும் சாதாவாக மாற்றுகிற ட்ரெண்ட் ஹாலிவுட்டில் உருவாகிவிட்டது. (நம்ம முகமூடிகூட அதே பாதிப்பில்தான் வந்தது)

இந்த யதார்த்த பட ஹீரோ வியாதி இப்போது ஜேம்ஸ் பாண்டையும் விட்டுவைக்கவில்லை. இனி வரும் காலங்களிலும் புதுவித கேட்ஜெட்ஸ் இல்லாத, அழுமூஞ்சி, அழுக்குபாண்டை ஜேம்ஸ்பாண்ட் தாத்தவைதான் நாம் திரையில் பார்க்க வேண்டியிருக்குமோ என்னவோ.

ஜேம்ஸை அந்த கர்த்தர்தான் காப்பாத்தணும்!


(சினிமொபிட்டா இணையதளத்திற்காக எழுதியது)

30 October 2012

வெட்டி எறியப்படும் நம் சிறகுகள்!நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.

ஆனால் எதையும் பகுத்தறிந்து ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லுகிற முற்போக்காளர்களாக அறியப்படும் சில எழுத்தாளர்கள் கூட அதே பாணியில் தீர்ப்பு எழுதுவதையும், இதுதான் சாக்கு என நானும் உத்தமன்தான்.. பெண்களை தாயாக மதிக்கிறேன்.. என நிருவ முயல்வதையும் ‘’ பிரபல பாடகி சின்மயி - ஆபாச ட்விட்’’ விவகாரத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. என்னதான் அறிவுஜீவிகள் சொன்னாலும் உண்மை வேறு மாதிரி இருந்தது.

பாடகி சின்மயி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். இந்த ஃபிளாஷ்பேக் துவங்குவது சென்ற ஆண்டு ஜனவரி மாதம்.
இட ஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபனைக்குரிய சில கருத்துகளை சின்மயி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிடுகிறார். அதுபோக தலித்துகளை ‘’சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்’’ என்று வசைமாரி பொழிந்ததோடு, தலித் இயக்க தலைவர்கள் அந்த மக்களை கீழானவர் என சொல்லி சொல்லி ஏமாற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

இதை படித்த சில இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அவரோடு வாக்குவாதம் செய்கின்றனர். இதில் ராஜன் பாதியில் பேச ஆரம்பிக்கிறார். சில ட்விட்டுகளில் மிகவும் மென்மையாக பேசிவிட்டு பிறகு விலகிவிடுகிறார். இதற்கு பிறகும் கூட ராஜனுக்கும் சின்மயிக்கும் இடையே ஒரு சண்டையும் வம்பும் இருந்ததாக தெரியவில்லை.

அதுகுறித்த முழுமையான பேச்சுகள் இந்த இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விவாதத்தை இங்கே காணலாம்.

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

அதற்கு பிறகு அதே ஜனவரியில் இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களை காக்க ட்விட்டரில் ஒரு இயக்கம் தொடங்கப்படுகிறது. அதில் தமிழர்கள் மட்டுமல்லாது வட இந்தியர்களும் ஆர்வத்துடன் இணைந்து மீனவர்களின் உயிருக்காக குரல் கொடுக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு ஆன்லைன் பெட்டிஷனில் கையொப்பமிட எழுத்தாளர் மாமல்லன் சின்மயியிடம் முறையிடுகிறார். ஆனால் அவரோ நாங்கள்லாம் உயிர்களை துன்புறுத்துறவங்க இல்ல.. வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை.. என்று பதில் சொல்கிறார்.

இது எந்த அளவுக்கு அந்த இயக்கத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவரையும் கடுப்பேற்றியிருக்கும் என்பது முக்கியம். அதோடு மீனவர் ஆதரவுட்விட்டுகளை ‘’ஓவர் ஆட்டமாருக்கு’’ என வர்ணிக்கிறார். அதோடு இப்போதும் கூட ஏதோ போக்கிரிகள் சேர்ந்து கொட்டம் அடித்ததை போலவேதான் டிஎன்ஃபிஷர்மேன் டேகில் இணைந்தவர்களை பற்றி சிலாகிக்கிறார். அதை கண்டித்த சிலபல ட்விட்டர்களையும் ப்ளாக் செய்கிறார். கெஞ்சி கெஞ்சி கேட்டவர்களை கேலி செய்து ரசிக்கிறார்.

இதுகுறித்த முழுமையான உரையாடல் இங்கே

http://365ttt.blogspot.in/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html

இந்த இட ஒதுக்கீட்டு களேபரங்களும் மீனவா மீனை கொன்றா ஸ்டேட்மென்ட்களும் அவரை தமிழ் ட்விட்டர்களிடமிருந்து பிரித்துவிட்டது. அதோடு ஒருமுறை ஹிந்துவில் வெளியான செய்தியின் லிங்கையும் கொடுத்து.. ஏழைகள் மின்சாரைத்தை திருடுகிறார்கள் அவர்களை கண்காணிக்கவேண்டும் என்றெல்லாம் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போதும் அவரை தமிழில் எழுதும் ட்விட்டர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

ட்விட்டரில் தன்னை தொடர்பவர்கள் கேள்விகள் கேட்காமல் கூழைக்கும்பிடு போடவேண்டும் என எதிர்பார்த்தவருக்கு இது எரிச்சலை உண்டாக்கியிருக்க வேண்டும். இதனால் தமிழ் ட்விட்டர்கள் யாருமே அவரை சீண்டுவதேயில்லை.

சின்மயி என்று ஒருவர் ட்விட்டரில் இருந்ததையே எல்லோருமே மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் மார்ச் 10 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகிறது. ”தி அதெர் வாய்செஸ்” என்கிற அந்தக் கட்டுரையில் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களிடையே இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள் பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்கிற நிருபர் எழுதியிருந்தார். அதில் பொழுதுபோக்குப் பாட்ஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராஜனையும் குறிப்பிட்டிருந்தார். இதுதான் சின்மயி-ராஜன் இடையேயான கைது விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்று.
அந்த கட்டுரை இங்கே இருக்கிறது

http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

இதில் பிரபல பாடகியான சின்மயிக்கு உடன்பாடில்லை என்பதும், அவர் அந்த பட்டியலை வெளியிட்ட மகேஷ்மூர்த்தி என்பவருக்கு தொல்லை கொடுத்து ராஜனின் பெயரை நீக்க வேண்டும் என்றும் கோரினார். பல விருதுகளைவென்ற பிரபல பாடகியான பல லட்சம் பேர் பின்தொடரும் தன் பெயரோடு ஆஃப்டர் ஆல் 2000 பேர் கூட தொடராத காமன் மேனான ராஜனின் பெயர் எப்படி இடம்பெற முடியும் என மகேஷ்மூர்த்தியிடம் சண்டைபோடுகிறார்.
ஆனால் மகேஷ்மூர்த்தியோ விடாப்பிடியாக நீக்கமுடியாது என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார். ஆனால் சின்மயியோ விடாபிடியாக சண்டையிடுகிறார்.

ஒன்று என் பெயரை நீக்கு அல்லது ராஜன் பெயரை நீக்கு என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் பத்திரிகையாளர்மகேஷ்மூர்த்தியோ என்னால் எதுவும் செய்யமுடியாது.. உன்னால் முடிந்ததை செய்துகொள் என விலகிவிடுகிறார். இது சின்மயிக்கு செம கடுப்பை உண்டாக்கியது. இதுதான் ராஜன் மீதான வன்மத்திற்கான முதல் விதை விழுந்த இடம். ராஜனை பழிவாங்க வேண்டும் என அப்போதே முடிவு செய்திருக்கிறார்.

சின்மயியின் இந்த குடுமிபிடி சண்டையை கவனித்துக்கொண்டிருந்த ராஜனும் அவருடைய நண்பர்களும் சின்மயியின் தோல்வியை பகடி செய்யும் வகையில் அசிங்கப்பட்டாள் சின்மயி என்கிற ஹேஷ்டாகின் கீழ் அவரை கேலி செய்தனர். அதிலும் கூட ராஜனோ அவருடைய கூட்டாளிகளோ வரம்புமீறி எதையும் சொல்லவில்லை. குறிப்பாக ஆபாசமாக எதையும் ட்விட்டவில்லை.

ஆனால் கடுமையான மன உளைச்சலிலும் பழிவாங்கு உணர்ச்சியோடு இருந்த சின்மயியோ இந்த ஹேஷ் டேகில் பேசிய அனைவரையும் ப்ளாக் செய்தார். முன்கதை சுருக்கம் தெரியாமல் சின்மயி போன்ற நல்ல பாடகியை ஏன் கேலி செய்கிறீர்கள் என்று தமிழில் ட்விட்டிய ஒரே காரணத்திற்காக என்னையும் கூட ப்ளாக் செய்தார் இந்த பிரபல பாடகி.
இந்த சமயத்தில்தான் சின்மயி தமிழில் ட்விட்டுபவர்கள் அனைவருமே பொறுக்கிகள் என எழுதி ட்விட் செய்து பின் அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பிறகு சின்மயி தொடர்ச்சியாக ராஜனை சீண்டும் வகையில் ட்விட்டுகள் போடுவதும்.. அதனால் கடுப்பான ராஜனின் நண்பர்கள் சின்மயியை கேலி செய்யும் வகையில் ட்விட்டுகள் போட்டதும் தொடர்ந்தன. ராஜன் இந்த நேரத்திலும் கூட கண்ணியக்குறைவாக எதையும் ட்விட்டவில்லை. ஆனால் கடந்த மார்ச் மாதம் ஒரு கட்டுரை எழுதி அதில் ராஜனை

’பெண்கள் குறித்து வக்கிரமாக எழுதுவதையே பிழைப்பாக் கொண்ட ஒருவனால் ஒரு வருடமாக உளைச்சல் அடைந்து வருகிறேன்’

என்று எழுதுகிறார். இது ராஜனுக்கு பெரிய மன உளைச்சல் உண்டாக்க அவர் அதற்காக ஒரு பதிலை தன்னுடைய வலைப்பதிவில் பகிர்கிறார். அதில் சின்மயியிடம் சில கேள்விகளையும் முன்வைக்கிறார்.
அந்த பதிவை படிக்க

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

ஆனால் எந்தகேள்விக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் கமுக்கமாக அமைதியாகிவிடுகிறார் சின்மயி.

அக்டோபர் மாத துவக்கத்தில் டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகையின் துணை இதழில் சின்மயி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். ட்விட்டரில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் இதை தடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த பத்திரிகை செய்தியும் ஒருதலைபட்சமாக அவருடைய பேட்டியை மட்டுமே வாங்கி போட்டிருந்தது.

அதை படித்த சிலர் சின்மயியை கண்டித்து மீண்டும் ட்விட்டுகளை வெளியிடத்தொடங்கினர். இந்த சமயத்தில் சில விஷமிகள் சின்மயியை தூண்டிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ராஜனும் அவருடைய நண்பர்களும் போட்ட ட்விட்டுகளின் ஸ்கீரின் ஷாட்களையும் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு ப்ளாக் செய்துவிட்ட பின் அவர் என்ன எழுதினாலும் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாது.. அப்படியிருக்க சின்மயிக்கு மட்டும் ராஜன்,சரவணகுமார் ட்விட்டுகள் எப்படி தெரிந்தது என்கிற கேள்விக்கான விடையே மேலே குறிப்பிட்டிருப்பது.
இதுதவிர அவ்வப்போது தான் ஒரு ஐயங்கார் என்பதைக்கூட highயெங்கார் என்கிற மிதப்போடு எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சின்மயி. சாதிய பெருமிதத்தோடு இப்படியெல்லாம் ட்விட்டுவது தவறு என கண்டித்த ஒவ்வொருவரையும் அவர் ப்ளாக் செய்திருக்கிறார்.

டெக்கான் க்ரானிக்கிள் செய்திக்கு கிடைத்த எதிர்வினைகளை கண்டு கோபம் கொண்ட சின்மயியின் தாயார் சின்மயிக்கு எதிராக ட்விட்டும் சிலரை போனில் அழைத்து மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த அலைப்பேசி எண்கள் கூட சின்மயியின் அல்லக்கைகளாகவே மாறிப்போன அந்த விஷமிகள் தேடி வாங்கிக்கொடுத்தவையே! (பிரபல பாடகிக்கு வேறு வேலையே இருக்காதா?)

வலைப்பதிவரான பரிசல்காரனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கே நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். ராஜனும் கூட நான் போட்ட ட்விட்டுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றெல்லாம் சொல்லியும்.. உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன்டா என்கிற வகையில் பேசிவிட்டு தொடர்பை துண்டித்திருக்கிறார்.
அப்படித்தான் சின்மயியின் தாயார் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இன்னொரு நபரான செந்தில் என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரோ உங்கள் மகளை அமைதி காக்க சொல்லுங்கள் எல்லாமேசரியாகிவிடும் என்பதாக பேசியுள்ளார். அதை அவர் ட்விட்டரில் சொல்ல.. சரவணகுமார் மிக மிக சாதாரண அளவில் ‘’கடலைபோடதானே’’ என்கிற வார்த்தையை உபயோகித்து கிண்டல் செய்திருக்கிறார். பொதுவெளியில் இதைவிடவும் மோசமான விமர்சனங்களை பிரபலங்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பிறகு ராஜன் சின்மயி பற்றி எதுவும் பேசாமல் இனி ஜென் நிலையில் இருப்பேன் என அறிவித்துவிட்டு ராஜென் என தன் பெயரை மாற்றிவைத்துவிட்டு அமைதியாகவே இருந்தார். ஆனால் சின்மயியை இவ்விஷயத்தில் சில பார்ப்பன ஆதரவாளர்கள் அதெல்லாம் சும்மா விடக்கூடாது இவர்களை பழிவாங்கவேண்டும் என தூபம் போட்டிருக்கிறார்கள்.

அதோடு அக்டோபர் 5 ஆம் தேதி சரவணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சின்மயி இதற்காக உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என ட்விட்டரிலேயே சபமிட்டுள்ளார். ஆனால் சில மணிநேரங்களில் அந்த ட்விட்டுகள் நீக்கப்பட்டன. அவை மட்டுமல்லாது.. ராஜனை அவதூறாக எழுதிய ட்விட்டுகளும் இட ஒதுக்கீடு , மீனவர்கள் மீன்களை கொல்லுகிறார்கள் மகேஷ்மூர்த்தியிடம் மன்றாடியது என பல ட்விட்டுகளும் அதிரடியாக நீக்கப்பட்டன. (இதற்காக தனிப்படை வேலை பார்த்ததோ என்னவோ!)

ராஜன் ,சரவணன்,செந்தில் உள்ளிட்ட சிலர் போட்டதாக சொல்லபடும் ட்விட்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு புகார் ஒன்றை கமிஷனரிடம் கொடுக்க.. அதிரடியாக ராஜனும் சரவணனும் கைது செய்யப்படுகின்றனர். ஒரு சாதாரண பொதுஜனம் கம்ப்ளைன்ட் கொடுத்தால் நம்முடைய காவல்துறை எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.(சைபர் கிரைமில் பொதுஜனங்கள் கொடுத்த 19 வழக்குகள் பென்டிங்கில் இருப்பதாக கமிஷனரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

இங்கே ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க வெறும் ஸ்கிரீன் ஷாட்டுகள் மட்டுமே போதுமா.. தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் யார்வேண்டுமானாலும் யார் எழுதியது போலவும் ஸ்கிரீன் ஷாட் தயார் செய்ய இயலும். அதைப்பற்றியெல்லாம் கவலையேயில்லாமல் காவல்துறை தன் கடமையை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது.

போகட்டும் இதோ பதினைந்து நாட்கள் இருவரும் சிறையலடைக்கப்பட்டுள்ளனர். அந்த இருவருடைய குடும்பங்களும் சொல்லவொண்ணா துயத்தை சந்தித்துள்ளனர். பிள்ளைகள் தந்தையில்லாமல் வாடிப்போயிருக்கின்றன. தொலைக்காட்சிகள் ஏதோ காமவெறியர்களை போல இருவரையும் சித்தரித்து செய்திகள் வெளியிடுகின்றன.

இருவர் மீதும் சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு என்ன? இருவரும் ஆபாச ட்விட்டுகள் வெளியிட்டதாக சொல்லப்படுவதே. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சின்மயியிடமே கிடையாது. அவர்கள் இருவரும் அப்படி ஏதாவது செய்திருந்தால்தானே ஆதாரங்கள் கிடைப்பதற்கு. தன்னை பற்றி ஆபாச ட்விட்டுகள் இல்லையென்கிற காரணத்தால் உடனடியாக அரசியல் தலைவர்கள் குறித்து ராஜனும் சரவணகுமாரும் ட்விட்டியதையெல்லாம் ஸ்கீரின் ஷாட் எடுத்து ஆதாரம் என நீட்டுகிறார்கள். சின்மயியின் புகார் அவரைப்பற்றி ட்விட்டியதாக சொல்லப்படுவதுதானே..

சின்மயியின் நோக்கம் என்ன? பழைய பகையையும் தமிழில் எழுதும் ட்விட்டர்களின் மீதான தன்னுடைய வன்மத்தையும் தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு பொய்யான புகாரை சின்மயி கொடுத்திருக்கிறார். அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கிறார். சின்மயி அம்மா குறித்து பகடியாக சரவணகுமாரும் செந்திலும் பேசியதை பிடித்துக்கொண்டு அதைவைத்து ஆதரவை திரட்டுகிறார்.

குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராஜனோ சரவணகுமாரோ ட்விட்டரிலோ வேறு தளங்களிலோ சின்மயியின் ஆபாசப்படங்களையோ அல்லது அவரை ஆபாசமாக வர்ணித்தோ எதையுமே எழுதவில்லை. அவரை மின்னஞ்சலில் மிரட்டவில்லை. நேரிலோ தொலைபேசியிலோ கூட பேசியதில்லை. சொல்லப்போனால் இவர்கள் யாருமே சின்மயியை பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க நம்முடைய காவல்துறை இவர்கள் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.

அதிகாரவர்க்கம் பிரபலங்களுக்கு துணைபோவது இன்று நேற்றல்ல எப்போதுமே அப்படித்தான்..

ஏற்கனவே சமூக வலைதளங்களால் பெரிய அளவில் பாதிகப்பட்டிருக்கும் ஆளும் அதிகாரம்.. இதுதாண்டா சான்ஸு இவனுங்களை அடக்குவதற்கு என்கிற ரேஞ்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. நாளையே ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஊழல் ஒழிப்போ, ஈழப்போராட்டமோ, மீனவர் படுகொலையோ, கூடங்குளமோ ஏதோ ஒரு பிரச்சனை.. ஆனால் அதிகாரத்திற்கு எதிரானதாக இருந்தால் எழுதியவரை வெறும் ஸ்கிரீன் ஷாட் உதவியோடு கூட கைது செய்து சிறையிலடைத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதியவன் என முத்திரைகுத்தி தீவிரவாதியாக்கிவிட இயலும்.

இன்று ஊடகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாகவே செயல்படுகின்றன. அப்படியிருக்க மாற்று ஊடகமான இணைய வெளியிலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் முயல்கிறார்களோ என அஞ்சவேண்டியிருக்கிறது. உண்மை எங்கிருந்தாலும் ஊழல் பேர்வழிகளுக்கு உறுத்தலாகத்தானே இருக்கும்.

ட்விட்டர் ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் நவீன திண்ணையை போன்றது. இங்கே உங்களுக்கு ப்ரியமானவர்களோடு சேர்ந்து உரையாடலாம் திட்டலாம் கொஞ்சலாம் குலாவலாம். பிடிக்கவில்லையா ப்ளாக் செய்துவிட்டு போய்விடலாம். அவர் பேசுவது உங்களுக்கு கேட்காது.. நீங்கள் பேசுவதும் அவருக்கு கேட்காது. அதிலும் குறிப்பாக பிரபலங்கள் என்று அறியப்படுபவர்களுக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் இருப்பது கண்கூடு. ட்விட்டரில் இருக்கிற எந்த பிரபலமும் தன்னை தொடர்பவர் தன்னைப்பற்றி கேலி செய்கிறாரா திட்டுகிறாரா என்று பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஆனால் சின்மயி ஒருவரை ப்ளாக் செய்த பின்னும் கொல்லைப்புறமாக உளவு பார்த்து வஞ்சம் தீர்க்க காத்திருந்து பழிவாங்கியிருக்கிறார்.

அவருடைய பழிவாங்கும் உணர்ச்சியை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது அதிகாரவர்க்கம். சமூகவலைதளங்களில் இனி எவனாச்சும் ஏதாச்சும் எழுதிப்பாருங்கடா.. என்று சவால் விடப்பட்டிருக்கிறது. இணையத்தில் இவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்கள் கண்களை உறுத்துகிறது.

முல்லைபெரியார் பிரச்சனையின் போது தமிழர் உரிமைக்காக அறிவியல் ரீதியிலான வாதங்களை முன்னெடுத்தவர் உதவி பேராசிரியர் சரவணகுமார். தொடர்ந்து தலித் மக்களுக்காகவும் ஈழத்தமிருக்காகவும் மீனவர்களுக்காவும் குரல்கொடுத்து வருபவர். சொல்லப்போனால் சின்மயியோடு அவர் உரையாடியது மிக குறைவே. காக்கைசிறகினிலே என்கிற சிற்றிதழையும் முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்திவருகிறார். ராஜன் மிகச்சிறந்த வாசிப்பாளர். தமிழில் எழுதுவதில் மிகச்சிறந்த ஆளுமையை கொண்டிருப்பவர். சின்மயியிடம் அவர் சில கேள்விகளை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் எழுதிய பதிவை படித்தாலே அவரைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். வறுமையோடு போராடி இன்று அரசு வேலையில் இருப்பவர். நம்முடைய சமூகத்தின் மீதான கோபத்தை அவருக்கேயுரிய மொழியில் வெளியிடுகிறார். வழக்கு எண் படம் குறித்து அவர் எழுதி பதிவை வாசித்துப்பாருங்கள். எவ்வளவு சிறப்பாக எழுதக்கூடியவர்.


http://www.rajanleaks.com/2012/05/189.html

நம் மக்களுடைய மொழி எப்போதுமே கள்ளங்கபடமில்லாமல் எதையும் நேர்பட பேசுகிறவையாகவே இருந்திருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மேடைகளில் பேசிடாத ஆபாசத்தினையா ராஜன் பேசிவிட்டார். சரவணகுமாரும் செந்திலும் பேசியது சிறையிலடைத்து தண்டிக்கப்படவேண்டிய குற்றமா? சைபர் போலிஸாரிடம் தரப்பட்ட 19 வழக்குகள் நிலுவையில் இருக்க.. அவசரமாக இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை வரைக்கும் இறங்கவேண்டிய காரணம் என்ன? எந்த விசாரணையும் முடிவடையாத நிலையில் ஊடகங்கள் ஏன் அவசரமாக இருவரையும் காமவெறியர்களாக சித்தரித்து தீர்ப்பெழுதின? என்பதுமாதிரியான கேள்விகள் நம்மிடையே எஞ்சியிருக்கின்றன.

விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறவனே நல்ல கலைஞனாக இருக்க முடியும். சின்மயியை போன்றவர்கள் வெறும் பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்த்து பொதுவெளிக்கு வரும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்புதவறுமாக எதையாவது உளறிகொட்டி சக ரசிகர்களின் கேள்விகளால் திணறுகிறார்கள். சின்மயி கோர்ட்டுக்கு போனதுபோல பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனோ கலைஞர் கருணாநிதியோ கோர்ட்டுக்கு போயிருந்தால் இந்நேரம் சமூகவலைதளங்களை பயன்படுத்துகிற பாதிபேருக்கு ஆயுள்தண்டனையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு இருக்கிற பக்குவமும் ஆளுமையும் கூட பிரபல பாடகி சின்மயிக்கு இல்லையே என்பதுதான் நம்முடைய கவலை.

எந்த நாடாக இருந்தாலும், அரசு இயந்திரங்கள் கருத்து பரிமாறல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயன்றபடி இருக்கும். இணையத்தில் இது மிகவும் கடினம் என்பதால், இங்கே அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. இது மிக மிக மோசமான முன்னுதாரணம். நம்முடைய சிறகுகள் வெட்டி எறியப்படும் முன் இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்.

உதவிய இணையதளங்கள் – www.twitter.com , http://365ttt.blogspot.in , http://www.rajanleaks.com , http://www.chinmayisripada.com , www.google.com , மகேஷ்மூர்த்தியின் ட்விட்டுகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை மற்றும் நண்பர்களின் ட்விட் லாங்கர்  கருத்துகள்.

17 October 2012

மாற்றான் : சூர்யாவுக்கு சிலைவைங்க!


வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு நெஞ்சை விரித்து மூக்கை அடைத்துக்கொண்டு வாய் வழியாக வெளிவருமே ஒரு உற்சாக வாயு.. ஏப்பம் என்பார்கள். அது தருகிற சுகமே அலாதி. அது திருப்தியின் வெளிப்பாடு. நம் வயிற்றின் வசந்தகீதம். அப்படி ஒரு திருப்தி மாற்றான் படம் பார்க்கும்போது நமக்கு உண்டாகிறது. யேஏவ்வ்வ்வ்வ்...

அர்ஜூனும் விஜயகாந்தும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மேற்கிஸ்தான் கிழக்கிஸ்தான் செங்கிஸ்தான் என எல்லா இஸ்லாமிய நாட்டு தீவிரவாதிகளையும் அழித்தொழித்து புதைத்து அந்த இடத்தில் புல்லு பூண்டு வெங்காயமெல்லாம் முளைத்துவிட்டது.

நம்ம கேப்டன் .. முதல்வர் ரேஸிலும், அர்ஜுன் செகன்ட்ஹீரோ மாஸிலும் பிஸியாகி விட்டதால்.. வெரைட்டியான வெளிநாட்டு தீவிரவாதிகளால் அழிவை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்தியாவை காப்பாற்ற நாதியே இல்லாமல் இருந்தது. முகமூடி ஜீவா, தாண்டவம் விக்ரமெல்லாம் முயன்றும் முடியாத காரியத்தை கனகச்சிதமாக முடித்திருக்கிறார் சூர்யா!

ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மரை உசுப்பிவிட்டு டோங்லீயின் சீனாவிடமிருந்து இந்திய நாட்டை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்கிய அனுபவம் இந்தப்படத்திலும் அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

இதோ இப்போது ரஷ்யாவிலிருந்து ஆபத்து வந்திருக்கிறது. யெஸ் ஏ ஆபத்து ஃபரம் ரஷ்யா கம்மிங் டூ இந்தியா இன் தி ஃபார்ம் ஆஃப் தி பேபி பவுடர் வித் டேஞ்சரஸ் பாய்சன் என்கிறார் மேஜர் சுந்தர்ராஜன்!

சும்மா இருப்பாரா சூர்யா! உடனே வீட்டிலிருந்து தயிர்சாதம் புளிசாதம் சகிதம் ப்ளைட்டை பிடித்து கிளம்பிபோய் ஒரு குத்துப்பாட்டுக்கு பாலே டேன்ஸ் ஆடி, தொப்புள் காட்டும் காஜல் அகர்வால் மற்றும் ரஷ்ய ஃபிகர்களோடு ரொமான்ஸ் பண்ணி, ஊக்கமருந்து பயன்படுத்திய விளையாட்டு வீரர்களின் அவலநிலையை பார்த்து கண்ணீர்வடித்து.. அப்பா சென்டிமென்ட் அம்மா சென்டிமென்ட் தம்பி சென்டிமென்ட் என எல்லாவற்றையும் முறியடித்து துப்பாக்கி குண்டுகளுக்கு தப்பி.. வெடிகுண்டுகளுக்கு தப்பி.. ராக்கெட் லாஞ்சருக்கு தப்பி.. ஒரு ஒட்டுமொத்த ராணுவத்துக்கே தண்ணிகாட்டி.. உஃப் எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கிறது.. மிக கடினமான இந்த அசைன்மென்ட்டை கண்ணிமைக்கு நேரத்தில் செய்துமுடித்து இந்தியாவை காப்பாற்றுகிறார் சூப்பர் சூர்யா. நமக்கு அப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.

படத்தின் முடிவில் ரஷ்யாவின் சதியிலிருந்து இந்தியாவை காப்பாற்றிய சூர்யாவின் வீரதீர சாகசத்துக்காக ஜனாதிபதி கையால் விருது வாங்குவதை பாக்கும் போது கண்ணில் தண்ணீர் தளுதளுக்கிறது! தியேட்டரே கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கிறது.

சூர்யா சார் தன்னுடைய அடுத்தப்படத்தில் எந்த நாட்டிடமிருந்து இந்தியாவை காப்பாற்றி ஜனாதிபதி கையால் விருதுவாங்குவார் என்கிற கேள்வியும் நமக்கு முன்னால் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பாய் படபடக்கிறது! யெஸ் ஏ பட்டர்ஃபிளை விங்ஸ் ஷேக்கிங் இன் தி கேஎஃப்சி சிக்கன் என்கிறார் மேஜர்.

ஏழாம் அறவில் போதிதர்மர் சைனாவுக்கு போனதுபோல.. இந்தப்படத்தில் சூர்யாவுங்கப்பா ரஷ்யா போகிறார் என்பது தற்செயலானதாக தெரியவில்லை. அருமை.

ஆமா ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றிய படம்னுல சொன்னாங்க.. என்கிற கேள்வி உங்கள் மனதில் எழலாம். படத்தில் விவேக் வடிவேலு மாதிரி காமெடியன்கள் இல்லையென்பதால் சூர்யாவே காமெடியனாகவும் நடித்திருக்கிறார். சமகால படங்களில் காமெடியன்கள் ஹீரோவோடு ஒட்டிக்கொண்டே அலைவதுபோல இதில் காமெடி கம்யூனிச சூர்யா ஒட்டிக்கொண்டே அலைந்து திரிந்து இடைவேளைக்கு முன்னால் ரசிகர்கள் எமோஷனாகி கண்ணீர் சிந்தவேண்டும் என்பதற்காகவே செத்தும் போகிறார். யாரோ அஜித் விஜய் ரசிகர்கள் அந்த சோக காட்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்.. நான் கேட்கிறேன் ஏனய்யா உங்கள் நெஞ்சுகளில் ஈரமே இல்லையா?

அதிலும் க்ளைமாக்ஸில் சூர்யாவின் அப்பா ’’டேய் நீ ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்லடா.. பத்து பேருக்கு பொறந்தவன்.. ‘’ என்று பேசும்போது என்னமோ ஷகிலா ஷவரில் குளிப்பதை பாத்தாமாதிரி சிரியோசிரியென்று சிரிக்கிறார்கள். டேமிட்.. அதே விஜய் அஜித் ரசிகர்கள்தான்.

இந்தக் காட்சியை தியேட்டரில் நான்மட்டும் கைதட்டி ரசித்தேன். அதோடு ஜனாதிபதி கையால் விருது வாங்கும்போது கண்கள் கலங்க விசிலடித்து சிலிர்த்தேன். இதோடு சேர்த்து இரண்டுமுறையாச்சு!

தமிழ்நாட்டில் அப்துல்கலாமுக்கு அடுத்ததாக நிறைய முறை விஞ்ஞான ரீதியாக நடித்திருக்கும் சூர்யா கூட ஒருவகையில் அணுகுண்டு விஞ்ஞானிதான். அதனால்தான் அவருக்கு உடனடியாக எங்காவது தெருமுனையில் சிலைவைக்க தமிழ்க அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

படத்தின் மிகப்பெரிய பலம் சூர்யாதான். மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். விக்கு வைத்த சூர்யாவுக்கும் விக்கு வைக்காத சூர்யாவுக்கும் எவ்வளவு வேறுபாடு. கண்டே பிடிக்க முடியவில்லை.

தாடிவைத்துக்கொண்டு மாரில் அடித்துக்கொண்டே யோ டூட் வாட்ஸ் அப் என்று பேசும் கேரக்டாகட்டும்... கம்யூனிசம்தெரியுமா பாரதியார் தெரியுமா என மெல்லியகுரலில் பேசும்போதாகட்டும் அடடா!

என்ன.. ஒன்னு.. மெல்லிய குரலில் எதாவது பஞ்ச் டயலாக் பேசும்போதுகூட.. வாங்குங்கள் மலபார் கோல்ட்.. சன்ரைஸ் காஃபிதூள்.. ஏர்செல்.. சரவணாஸ்டோர் சங்குமார்க் ஜட்டிகள் என்று விளம்பர வாசகம் சொல்லிவிடுவாரோ என்கிற அச்சத்தோடேயே படம் பார்க்க வேண்டியதாயிருந்தது. மத்தபடி நடிப்பில் ஹாலிவுட் நடிகர்களான கவுண்டமணி,பால்முனி,டாம்குரூஸ் முதலானவர்களை ஒரே எட்டில் தாண்டிவிடுகிறார்.

படத்தின் இசையமைப்பாளர் படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய பலம். மற்ற இசையமைப்பாளர்களை போல வெளிதேசத்து இசையை காப்பியடித்து மாட்டிக்கொள்ளாமல் தன்னுடைய பாடல்களையே மீண்டும் மீண்டும் வெவ்வேறு மாதிரி இசையமைத்துள்ளார். அதோடு பெண்கள் தியேட்டருக்கு வருவதில்லை என புலம்புவர்களின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோக காட்சிகளில் தென்றல் சீரியலில் நம்ம துளசி அழும்போதெல்லாம் ஒலிக்குமே ஒரு சோக கீதம்.. அதே இசையை உபயோகித்திருக்கிறார் என்பது பாரட்டப்படவேண்டியதில்லையா... இந்த இசைக்காகவே பெண்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என்பதுறுதி!

படத்தின் இயக்குனரான கேவிஆனந்தும் சுபாவும் இருக்கிற திசைபார்த்து வணங்குகிறேன். இருவருமே மாபெரும் மேதைகளாக இருக்க வேண்டும். அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்.. எவ்வளவு சுவாரஸ்யமான திருப்பங்கள். கோ படத்தை மொக்கையென்று ஒருகாட்சியில் சூர்யா திட்டுகிறார். என்ன ஒரு சுய எள்ளல்.. இதுதான் கேவிஆனந்தை ஒரு ஆஸ்கர் இயக்குனராக உயர்த்தியிருக்கிறது.

ஆஸ்கர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பர்ஃபி படத்துக்கு பதிலாக மாற்றானை உடனடியாக ஆஸ்கருக்கு அனுப்பவேண்டும். படத்தில் நம் வாழ்க்கைக்கு தேவையான ஏகப்பட்ட கருத்துகளும் சிந்தனைகளும் நிறைந்துகிடக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப்படத்தை பார்த்தால் நிச்சயம் திருந்திவிடுவார்கள்.

இப்படத்தில் சூர்யா சொல்கிற ஒவ்வொரு கருத்தினையும் தஞ்சாவூர் கல்வெட்டில்.... இல்லை அங்கே முடியாது ஏழாம் அறிவில் சூர்யா சொன்ன கருத்துகளை ஏற்கனவே தஞ்சாவூர் முழுக்க கல்வெட்டாக வெட்டிவைத்துவிட்டதால்.. வேறு இடங்களில் கல்வெட்டாக வெட்டிவைத்துவிட்டு சூர்யாவை அருகிலேயே அமரவைத்துவிட்டால்.. வருங்கால சந்ததிகள் வாழும் என்பது மட்டும் நிச்சயம்!

இப்படி புகழ்ந்து தள்ளுகிறாயே படத்தில் குறையே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது ஒரே ஒரு குறைதான். இது தமிழ்படமேயில்லை முழுக்க முழுக்க ரஷ்யர்களுக்காகவே எடுக்கப்பட்ட ரஷ்யமொழிப்படம். படம் முழுக்க சின்மயிதான் எல்லோருக்கும் டப்பிங் கொடுத்திருக்கிறார். லோ பட்ஜெட் படமோ என்னவோ.. நாலு ஆட்களை பிடித்து விதவிதமாக டப்பிங் கொடுத்திருக்கலாம். ரஷ்யாவில் இப்படத்தை ஏன் ரிலீஸ் செய்யவில்லை என்று தெரியவில்லை. செய்திருந்தால் கோர்பசேவ் விருது சூர்யாவுக்கும் கேவிஆனந்துக்கும் கிடைத்திருக்கும்.

மற்றபடி ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு ரஷ்யனும் பார்த்து பெருமைப்படவேண்டிய காவியம் இந்த மாற்றான். படம் பார்த்து முடிக்கும்போது உங்களுக்குள் இந்தியன் அல்லது ரஷ்யன் என்கிற கர்வம் உண்டாகி அருகில் இருப்பவர்களை கடித்துவைத்துவிடுகிற அளவுக்கு உணர்ச்சி பொங்கும்... அதை மட்டும் கட்டுபடுத்திக்கொண்டால்.. இந்த படம் மட்டுமல்ல சூர்யா நடித்த எந்தபடமும் இனியபடமாக அமையும்.06 October 2012

ENGLISH - விங்கிலிஷ்!

English vinglish is an emotional and one perfect family entertainer. Gauri shinde who dons the direction of the film has done a great job. The way she portray the feelings of every Indian house wife was such a beautifully written poetry.

Every frame and dialogue of the movie was superb. Eng-ving talks about everyday problem of angrezi less men and women. Who were treated ruthlessly in our once Englishmen ruled angreziwalonki society.

The story of the film revolves around shashi who is a small time entrepre…pru.. what is it.. leave it. She is a a super cook, loving mom, And her lack of English linguistic skills, makes her shame in front of her 12year old daughter and husband all the time.

Sashi just wants some hizzath or mariyadhai from her family. That’s it. she gets it in style! With some well written comedy, emotional, sentiment, romantic screenplay and our own sridevi’s acting!

She is such a fantabulous actress. We miss her almost fifteen twenty years or more. And she is back. And this is not just coming back from a long gap and doing an amma role for hrithik roshan or ranbir. This is different.

Yes she is old. Nearly hitting half a century. Wrinkles in her face. And much blah blah.. from movie making to acting everything changed significantly in these years. Not her acting. Not her charisma. She is not just a back bone of the movie. She is English-vinglish. And she is the winner all the way!

It is not just English this film talks about. It may be money or knowledge or efficiency or ability. Whenever someone you love hit your weakness and make fun out of it. That hurts a lot. Like padayappa says take every stopping stone or hurting stone make it your stepping stone! That is what English vinglish teaches you.. :-))).

I never wanted to write in English. I never had that courage to do that. But this films gives you the courage to do what you fear. Why not.. my English may be poor. Not my courage. All my life this is my first article or review or anything in English. Someday I will write better than this piece of writing. This film gives me immense energy to do what I panic, fright, terror, scare, dread blah blah…!


ஸ்ஸ்ப்பா.. முடியல..!

What my final verdict about this film is..

மிக சிறந்தபடம். உங்களுடைய வீட்டிலிருக்கிற ஆயா, அம்மா, தங்கை, மனைவி என அனைவரையும் அழைத்துச்சென்று பாருங்கள். ஒரு உன்னதமான அனுபவத்தினை நிச்சயமாக இப்படம் உங்களுக்கு கொடுக்கும்.

26 September 2012

திருவிளையாடல் - ஓர் அனுபவம்

எச்சகச்ச முறை திருவிளையாடல் படத்தை டிவியில் பார்த்திருக்கிறேன். எண்ணிக்கை தெரியவில்லை. ஒரே ஒருமுறை குட்டிப்பையனாக அறியாத வயசு புரியாத மனசோடு செல்வபுரம் சிவாலயா தியேட்டரில் பார்த்த நினைவு. புகையில் அமர்ந்திருக்கும் சிவாஜியை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. சோமெனி டைம்ஸ் டிவியில் பார்த்தும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் திருவிளையாடல்.

என்னதான் டிவியில் பார்த்தாலும் ஒரு திரைப்படத்தை திரையில் பார்க்கும்போது கிடைக்கிற பரவச நிலை நிச்சயமாக வேறெதிலும் கிடைக்காது. கர்ணன் படம் ஹிட்டடித்த ஜோரில் யாரோ புண்ணியவான் திருவிளையாடல் படத்தையும் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். உட்ரா வண்டிய என உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு அரக்க பரக்க ஓடினோம்.

தியேட்டருக்கு போய்ச்சேரும்போதே மணி ஆறேமுக்கால் கால்மணிநேர படம் முடிந்துவிட்டிருந்தது. அந்த கால்மணிநேரத்தில் கைலாய மலையின் புகை மண்டிய ஓப்பனிங் சீனும், சிவபெருமான் சிவாஜிசாரின் ஓப்பனிங்கும் , நாரதர் ஞானப்பழம்கொண்டு வந்து சிவபெருமான் ஃபேமிலியில் கும்மி அடிப்பதும்.. அதனால் கடுப்பான குன்றேறி குமரன் பட்டையும் கொட்டையுமாக பழனிமலைமேல் ஏறிக்கொள்வதும்.. அவரை இறக்க அவ்வையார் போவதும் மிஸ்ஸாகிவிட்டது.

உள்ளே நுழைந்து சீட் நம்பர் பார்த்து அமரும் போதுதான்.. நாமறிந்த அவ்வையாரான கே.பி.சுந்தராம்பாள் குன்றின் மேல் கோவணத்தோடு நிற்கும் குமரனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது அந்த இருட்டிலும் தெரிந்தது.
பாட்ஷா படத்தில் ரஜினிசார் ‘’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’’ என்று சொன்னதும் ரசிகர்கள் விசிலடித்து சிலிர்த்து கைதட்டி மகிழ்வார்களே அதே போல கேபிசுந்தராம்பாள் ‘’பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா..’’ என பாட ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டதை பார்க்க தமாஷாக இருந்தது. பல்லுப்போன தாத்தா பாட்டிகள் நிறைய பேர் பேரன் பேத்திகளோடு உற்சாகமாக கைத்தட்டி பாடலை தாளம்போட்டு ரசித்துக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க ஏகப்பட்ட சிவாஜி ரசிகர்கள். பக்தர்கள்.

அவ்வையார் முருகனை கூல் பண்ணமுடியாமல் கடுப்பாகி ‘’உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கோ உரிமையுண்டூ...’’ என்றெல்லாம் சொல்லி டிரைப்பண்ணி வேலைக்கு ஆகாமல் பாடிபாடி டயர்டாகி வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். பார்வதி தேவியான சாவித்திரி பச்சை பெயின்டில் வந்து முருகனை சாந்தப்படுத்த உன் அப்பாவின் திருவிளையாடல்களை சொல்கிறேன் கேள் என்று ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார்.

கட் பண்ணினால் மதுரை. தேவிகாவுக்கு ஒரு ஓப்பனிங் சாங்.. ‘’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’’ . செம பாட்டு.. குட் லிரிக்ஸ்.. சூப்பரான கலர்ஸ். தேவிகா அவ்வளவு அழகு. என்னதான் சாமிப்படமாக இருந்தாலும் கமர்ஷியல் காரணங்களுக்காக ஒரு குளியல் குமால்டிங்கான சீனையும் சொருகியிருக்கிறார் இயக்குனர். ம்ம்.. டிவைன். (பல வருடங்களாக தொங்கிப்போயிருந்த பல பெரிசுகளின் துவண்ட நெஞ்சுகள் தேவிகாவை பார்த்ததும் குபுக்கென குமுறியிருக்கும் என்பது மட்டும் உறுதி!..)

பாட்டு முடிந்ததும் பாண்டியமன்னனான முத்துராமன் வருகிறார். கீழோர் மறப்பர் மேலோர் நினைப்பர் என்கிற பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்லு என தேவிகாவிடம் சொல்லி.. அதற்கு ஒரு சூப்பர் விளக்கமும் கொடுக்கிறார். அப்படியே பேச்சுவாக்கில் போகிற போக்கில் உன் கூந்தலுக்கு இயற்கையில் மணமா செயற்கையில் மணமா என சந்தேகத்தை எழுப்பி.. அதுக்கு பரிசுகொடுக்கிறேன் என தண்டோரா போட.. படத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான நாகேஷ் என்ட்ரி!

ஸ்பான்டேனியஸ் என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. நிறைய இங்கிலீஸ் விமர்சனங்களில் படித்திருக்கிறேன், அதை எங்காவது உபயோக்கிக்க வேண்டும் என நினைத்ததுண்டு. நாகேஷ்தான் அந்த வார்த்தைக்கேற்ற நடிகர். அடேங்கப்பா என்ன ஒரு ஆக்டிங். மண்டபத்தில் பாட்டெழுதி கொடுக்கும் சிவபெருமானிடம் அவர் பண்ணுகிற சேட்டைகள்.. ஒரிஜினல் சிவபெருமானே ரசித்து சிரித்திருப்பார். அவ்வளவு ஸ்பான்டேனியஸ்!

ஸ்கிரீன் பிரசென்ஸில் சிவாஜியை அடித்துக்கொள்ள முடியாது.. அவரையே தூக்கி சாப்பிட்டு முழுங்கி ஏப்பம் விடுகிறார் நாகேஷ். என்ன மாதிரியான ஒரு கலைஞன்..

ஆற்றாமையையும் வறுமையையும் இயலாமையையும் ஏழ்மையையும் இன்னும் நிறைய மைகளையும் ஒருங்கே தன்னுடைய முகத்திலும் பாடிலேங்வேஜிலும் காட்டி அசத்துகிறார். சிம்ப்ளி சூப்பர்ப்! அவருடைய அந்த தருமி போர்ஷனுக்காகவே படத்தை பத்துமுறை பார்க்கலாம். நாகேஷுக்கு பிறகு அவருடைய திரைவிழுங்குகிற தன்மை வடிவேலுவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

தருமி கதை முடிந்ததும், தாட்சாயினி கதை தொடங்குகிறது. தட்சனின் யாகத்தில் ஏதோ அவில்பாகம் (அப்படீனா என்ன யாராவது விளக்கலாம்) குடுக்கவில்லையென சிவபெருமான் காண்டாகி தாட்சாயிணியோடு சண்டையிட்டு போரிட்டு வாயிலிருந்து கற்பூரத்தை வரவைத்து தாட்சாயிணியை எரித்து சாம்பலாக்கி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்பாகம் முழுக்க சிவாஜிசாரின் செம பர்பாமென்ஸ்.. அதிலும் தாட்சாயணியை போ போ என விரட்டும்போது அரங்கம் அதிர்கிறது. விசில் பறக்கிறது. சிவாஜி ரசிகர்கள் தெயவ்மே என சிலிர்க்கிறார்கள்.

சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல்சிவமில்லை என்பதை உலகுக்கு உணர்த்த சூப்பரான டான்ஸ் ஒன்றை ஆடுகிறார் சிவன்ஜி! அவருக்கு நடனம் சரியாக வராது என்பது உலகறிந்த செய்தி என்பதால் எடிட்டரும் நடன இயக்குனரும் ஓவர் டைம் பார்த்து அந்த காட்சியை செதுக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஷாட்டுகள்.. ஒவ்வொரு நடன அசைவுக்கு ஒரு ஷாட்.. நடனம் தொங்கலாக இருக்குமிடங்களிலெல்லாம் கேமரா ஆடுகிறது.. சிகப்பு விளக்கு எரிகிறது.. எப்படியோ ஒப்பேற்றி அந்த நடனத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இடைவேளை.

(உச்சா போய்விட்டு வந்து பப்ஸ் வாயோடு தோழரிடம் சிவாஜிசாரை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர் ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார். அடித்துவிடுவாரோ என்றுகூட தோன்றியது. கண்டுக்காமல் சிவாஜிக்கு தொப்பைய பாத்தீங்களா பாஸ்.. சாவித்திரிக்கு அதவிட பெரிய தொப்பை என நக்கல் பண்ணிக்கொண்டிருந்தோம்.. திடீரென அந்த மர்ம நபரின் செல்ஃபோன் ஒலித்தது.. ‘’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..’’ தோழர் அரண்டுபோய்விட்டார். இந்த பாட்டை ரிங்டோனாக வைத்திருப்பவர் நிச்சயம் சிவாஜி வெறியராகத்தான் இருக்கவேண்டும்.. ஓடிடுவோம்.. என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள் நான் என் சீட்டில் இருந்தேன்)

அடுத்தது மீனவர் கதை. இதில் மீனப்பெண்ணாக பிறந்த பார்வதியை மணமுடிக்க எல்லா சேட்டைகளும் செய்கிறார் சிவபெருமான். வயசுப்பொண்ணை கையபுடிச்சு இழுக்கிறார். எல்லாமே ரஜினி ஸ்டைல். நடை,சிரிப்பு,சண்டைபோடும் ஸ்டைல்,ரொமான்ஸ் என எல்லாமே ரஜினிகாந்த் செய்துகிறாரே அச்சு அசல் அதே அதே!. (சந்திரமுகி கிளைமாக்ஸில் வருகிற வேட்டையபுரம் மகாராஜா செய்வதைப்போலவே செம வில்லத்தனம் காட்டுகிறார் சிவாஜி!) ரஜினியின் ஸ்டைலை சிவாஜிசார் நிறையவே பாதித்திருக்கிறார் என்பதை படத்தின் இந்த பாகத்தில் உணரலாம்.

பஸ்ட் ஆஃப் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என்றால் செகன்ட் ஆஃப் மியூசிக்கல். கிட்டத்தட்ட ஆறு பாட்டு! எல்லாமே அற்புதம். பாட்டும் நானே பாவமும் நானே.. தொடங்கி கிளைமாக்ஸ் அவ்வையாரின் ஒன்றானவன் இரண்டானவன் பாடல் வரைக்கும்.. பாடல்களுக்கு நடுவில்தான் காட்சிகள்! முதல் பாதியில் நாகேஷ் என்றால் இரண்டாம் பாதியில் பாலைய்யாவும் டிஆர் மகாலிங்கமும்.. ‘’இஷைத்தமிழ் நீ ஷெய்த அருஞ்ஷாதனை’’ என அவர் பாடத்தொடங்க.. ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கான்செர்ட்டில் தில்சேரே.. என பாடும் போது கரகோஷங்கள் எழுமே அதைவிட அதிகமான கரவொலி. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என ரசிகர்கள் துள்ளுகிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் பழைய ஸ்டைல் ஆக்டிங்கால் டிஆர் மகாலிங்கம் சமகால டிஆர் போல சிரிக்க வைத்துவிடுகிறார் (தட்ஸ் ஓக்கே).

ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை.. நான் அசைந்தால் அசையும் அகிலமெலாமே என பாடி புரியவைக்கிறார் சிவாஜி. பிறகு பாணபத்திரருக்கு காட்சி தந்து ஒருவழியாக ஃபிளாஷ்பேக் முடிந்துவிடுகிறது. மூன்று கதைகளை கேட்டபிறகு நான்காவது கதையை சொல்ல தொடங்கிவிடுவாரோ என்கிற பயத்திலோ என்னவோ முருகன் கூல் டவுன் ஆகிறார். சிவபெருமான் தோன்றி நீ அமர்ந்த இந்த மலை பழம்நீ என்று விளங்கட்டும் என அருள்பாலிக்கிறார். பழனிமலை எப்படி உருவானது என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்று புரிகிறது.

விநாயகர்,சிவபெருமான்,பார்வதி,முருகன் என குடும்பத்தோடு குன்றில் மேல் நிற்க.. அந்த வழியாக வரும் அவ்வையாரை கூப்பிட்டு சிவபெருமான் ஒன்று இரண்டு மூன்று என என்னை வாழ்த்தி பாடு என ஜாலியாக பாடவைத்து மகிழ்கிறார். படம் முடிகிறது!
தமிழ்சினிமாவில் சிவபெருமானாக ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மனோகர் தொடங்கி ஏஎம் ராஜன்,விகே ராமசாமி, கேப்டன் விஜயகாந்த்,ரஜினிகாந்த்,கமலஹாசன் வரைக்கும் பலரும் நடித்த கேரக்டர்தான் என்றாலும்.. மேச்சோவான நடிகராக போற்றப்படும் சிவாஜி அப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது சிவபெருமானுக்கே ஒரு கம்பீரமும் உக்கிரமும் வந்துவிடுகிறது. வெர்சடைலான நடிப்பில் அசத்தும் சிவாஜிசாருக்கு நவரச நடிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படத்தில்.

தருமியில் காமெடி, தாட்சாயிணியிடம் ரஜினிஸ்டைல் ‘’பொம்பளை பொம்பளையா இருக்கணும்’’ ஆண்மைத்திமிர், நக்கீரரிடம் கோபம், மீனவ பெண்ணிடம் ரொமான்ஸ்,ருத்ர தாண்டவ டான்ஸ், பார்த்தா பசுமரம் என குத்துப்பாட்டுக்கு லோக்கல் டான்ஸ், திமிங்கலத்தோடு வீரம் என கலவையான நடிப்பு.. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். பாட்டும் நானே பாடலிலும் அதற்கு முந்தையா பிந்தைய காட்சிகளிலும் சிவாஜிசாரின் நடிப்பை பாராட்ட எனக்கு வயது பத்தாது!

படத்தின் வசனகர்த்தா மாபெரும் தமிழ் இலக்கிய பேராசிரியாக இருக்கவேண்டும். எல்லாமே கிளாசிக். இன்றைக்கும் தமிழகத்தின் எங்காவது மூலையில் யார்வாயிலாவது இப்படத்தின் வசனங்கள் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சிவபெருமானுக்கான டயலாக்குகள் எல்லாமே டாப்டக்கர்.

அன்றைக்கு இருந்த தொழில்நுட்பங்களையும் கிராபிக்ஸ் உத்திகளையும் பயன்படுத்தி எடுத்திருந்தாலும் இறுதியில் சிவாஜி,நாகேஷ்,சாவித்திரி,பாலையா.டிஆர் மகாலிங்கம் மாதிரியான மாபெரும் நடிகர்களின் நடிப்புக்கு முன்னால் சுமாரான கிராபிக்ஸோ, வரைந்து வைத்திருக்கும் அரங்க அமைப்புகளோ ஒரு குறையாகவே தெரியவில்லை. கேவி மகாதேவனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஏற்கனவே சொன்னதுபோல அவருடைய இசைதான் இரண்டாம் பாதி முழுக்க படத்தை காப்பாற்றுகிறது.

என்னதான் பக்திப்படமாகவே இருந்தாலும், காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன்,ரொமான்ஸ்,கவர்ச்சி என எல்லாமே கலந்த கலவையாக ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தியை தருகிறது திருவிளையாடல். டிவியில் பார்க்கும்போது கிடைக்காத ஒரு உற்சாகமும் மனநிறைவும் தியேட்டரில் பார்க்கும் போது தொற்றிக்கொள்கிறது. நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ சிவபெருமான் மேல் நம்பிக்கையிருக்கோ இல்லையோ, சிவாஜி ரசிகரோ இல்லையோ.. நிச்சயம் இப்படம் உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டும் நிச்சயம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் தியேட்டரில் பாருங்க!20 September 2012

பர்ஃபீ!
காதுகேட்காத வாய்பேசமுடியாத ஹீரோவுக்கும் மனவளர்ச்சி குன்றிய நாயகிக்கும் காதல்வந்துவிடுகிறது. இப்படி ஒரு ஒன்லைன் கிடைத்தால் பேனா மையில் கிளிசரினை கலந்து கதற கதற கதை எழுதுவதுதான் இந்திய சினிமா மரபு. அதிலும் குறிப்பாக நாயகனுக்கும் நாயகிக்கும் ஏதாவது உடல்குறைபாடு இருந்துவிட்டால் அதை வைத்தே திரைக்கதை பண்ணி இரண்டரை மணிநேரம் பார்ப்பவர்களின் கல்நெஞ்சத்தை கரைத்துவிடுவார்கள். ஆனால் ‘பர்ஃபீ’ அப்படியில்லை. அன்பும் காதலும் நிறைந்த ஜாலியான ரொமான்டிக் பொழுதுபோக்கு பீ பாஸிட்டிவ் ஃபீல் குட் திரைப்படம்.

அந்தகாலத்து மர்ஃபி ரேடியோவில் வருகிற குழந்தையை பார்த்து மர்ஃபி என்றே நாயகனுக்கு பெயர் சூட்டுகிறார் அப்பா. என்னதான் ரேடியோவின் பெயரை வைத்திருந்தாலும் ஹீரோவால் பேசவும் கேட்கவும் முடியாது! பேசமுடியாத வாயினால் மர்ஃபி என்பதை ‘’பர்ஃபி’’ என்கிறான். அதுவே படத்தின் தலைப்பாகவும் அவனுடைய நிரந்தர பெயருமாக மாறிவிடுகிறது. இந்த பர்ஃபியின் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் நீளுகிற கதைதான் திரைப்படம்.

பர்ஃபியின் கேரக்டருக்காக அதிகம் மெனக்கெடாமல் அப்படியே லபக் என சார்லி சாப்ளினின் டிராம்பை எடுத்துகொண்டிருக்கிறார் இயக்குனர். படம் முழுக்க சார்லிசாப்ளின் செய்கிற எல்லா சேஷ்டைகளையும் செய்கிறார் பர்ஃபி.

சார்லிசாப்ளின் கேரக்டரை எடுத்துக்கொண்டதற்கிணங்க படத்தின் பெரும்பாலான காட்சிகளையும் சார்லிசாப்ளினின் அட்வெஞ்சர்,சிட்டிலைட்ஸ் மாதிரியான படங்களிலிருந்தே சுட்டு எடுத்திருக்கத்தேவையில்லை. படத்தின் இன்னொரு காட்சியில் கோஷிஷ் என்கிற பழைய இந்தி படத்திலிருந்து ஒரு காட்சியை உருவியிருக்கிறார்.

பிரெஞ்சு திரைப்படமான அமேலி படத்தின் இசை குறிப்புகள் படம் நெடுக.. படத்தின் கதை சொல்லும் பாணி ரஷமோனிலிருந்து எடுத்திருக்கிறார். (நான்கு பேர் ஒரு இடத்தில் சந்தித்துக்கொண்டு ஒவ்வொருவரும் பொதுவான ஒரு விஷயம் குறித்து தங்களுடைய பார்வையிலிருந்து கதை சொல்லுகிறார்கள்.). நவீன சார்லி சாப்ளினான மிஸ்டர் பீனிலிருந்தும் சில காட்சிகள் சுடப்பட்டிருக்கின்றன. ப்ரியங்கா சோப்ரா, ரன்பீர் காட்சிகள் பலவும் நம்முடைய மூன்றாம்பிறையை நினைவூட்டுகின்றன. படம் பார்க்கும்போது டாம் ஹேங்க்ஸ் நடித்த ஃபாரஸ்ட் கம்பின் சாயலோ என்னவோ உணரமுடிந்தது.

அனுராக் பாசு நம்மூர் மிஸ்கின் போல ஒரே படத்தில் பலபட டிரிபூட் கொடுக்கிற இயக்குனர் போல! மிஷ்கின் சுட்ட கிகிஜிரோவிலிருந்து கூட ஒரு முழு காட்சி அச்சு அசலாக சுடப்பட்டிருக்கிறது.

நிறைய படங்களிலிருந்து சுடப்பட்ட இந்த சுத்தமான படத்தை இந்தியா முழுக்க விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள். மக்களிடம் வரவேற்பு சுமார்தான். எனக்கும் கூட இந்தப்படம் மிகவும் பிடித்தேயிருந்தது.

காரணம் ரன்பீர் மற்றும் ப்ரியங்கா சோப்ராவின் அசலான நடிப்பு! ராக்ஸ்டாரிலேயே மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்த ரன்பீர் கபூர் இப்படத்திலும் தன்னுடைய முழு உழைப்பையும் கொட்டி நடித்திருக்கிறார். வசனமேயில்லாமல் முகபாவனைகளை கொண்டே ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்க்க வைக்கிறார். இன்னொருபக்கம் ப்ரியங்கா சோப்ரா அமேலி பட ஹீரோயின் போலவே உடை சிகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும் மனவளர்ச்சி குன்றிய பெண்ணாகவே மாறி நம்மை ஆச்சர்ப்படுத்துகிறார்.

இலியானாவின் இடையை மட்டுமே நடிக்க வைத்துக்கொண்டிருந்த திராவிட சினிமா இயக்குனர்களிலிருந்து அவரை காப்பாற்றி ஒரளவு சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் அனுராக் பாசு. படத்தின் கேமராமேனுடைய உழைப்பு சொல்லி முடியாது. கன்னாபின்னா.. பல காட்சிகள் எப்படி படமாக்க பட்டிருக்கும் என்பதையே யூகிக்க முடியவில்லை.

மற்றபடி இப்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்ட ஒரு ஃபீல் குட் திரைப்படம்தான். நிறைய இடங்களிலிருந்து வெட்டி ஓட்டின சட்டையாக இருந்தாலும் அழகான ரசிக்க கூடிய சட்டையே. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான். காப்பிபேஸ்ட் சமாச்சாரங்களை குறைத்திருந்தால் ஆஸ்கருக்கே அனுப்பியிருக்கலாம். இனி அனுப்பினால் காரிதுப்பி திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

கடந்த சில வருடங்களாக தமிழ்சினிமாவில் ஒரு ட்ரென்ட் உருவாகிவருகிறது. டிரிபூட் பண்ணியே பேர்வாங்கும் காப்பிபேஸ்ட் இயக்குனர்கள்தான் தமிழ்சினிமாவின் எதிர்காலமாக மாறிவருகின்றனர். அவர்களைத்தான் தயாரிப்பாளர்களும் கொண்டாடுகின்றனர். கோடிகளில் சம்பளமும் வாங்குகிறார்கள். இந்தி சினிமாவில் காப்பிபேஸ்டுகளுக்கு பெரிய வரவேற்பு கிடையாது. ஆனால் பர்ஃபி படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இந்தியிலும் கூட அப்படி ஒரு ட்ரென்டினை உருவாக்கிவிடுமோ என்கிற அச்சத்தினை உண்டுபண்ணுகிறது!

****

காப்பிபேஸ்ட் குறித்த குறிப்புகளுக்கான உதவி - http://tanqeed.com/

08 September 2012

புலி வாலை பிடித்தது யார்?

புலிகளுக்கான ரிசர்வ் காடுகளில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இது பல்வேறு தரப்புகளில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது

புலிகள் வாழும் காடுகளில் இனி சுற்றுலா கிடையாது’ என அதிரடியாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். கூடவே புலிகள் சரணாலயங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் (TIGHER RESERVES) சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டிடங்கள் போன்றவற்றை நீக்கவும் உத்தரவிட்டது.


இந்த உத்தரவு, புலிகள் சரணாலயங்களுக்கு அருகில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்றும், நம் நாட்டின் இயற்கை வளங்களை சாதாரணப் பொதுமக்கள் பார்க்க முடியாத நிலையை உருவாக்கி விடும் என்றும் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின. புலிகள் சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்களுடன் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாநில அரசுகள் தொடர்ந்து இந்த உத்தரவை நீக்கக் கோரியதையடுத்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டது. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியோ,‘முன்பு 13 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இப்போது 1,200 ஆக குறைந்துள்ளது. வனப்பகுதியில் நடக்கும் வர்த்தக நடவடிக்கைகள் பற்றிதான் கவலைப்படுகிறீர்கள்? புலிகளைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி, தடையை நீட்டித்துள்ளார்.


தமிழ்நாட்டில் தற்போதும் மூன்று புலிகள் சரணாலயங்கள் உள்ளன. முதுமலை, களக்காடு முண்டந்துறை மற்றும் ஆனைமலை என இந்தப் புலிகள் சரணாலயங்களையும் சுற்றி எண்ணற்ற சுற்றுலா தலங்களும், சிறு நகரங்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளன. சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் காடுகளை அழித்து பல்வேறு ரிசார்ட்களும், காடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து சுற்றுகிற தனியார் சுற்றுலா திட்டங்களும் கூட அதிகமாகியிருக்கின்றன.


இதனால் காடுகளின் இயற்கைச் சூழல் வெகுவாகப் பாதித்திருப்பதுடன், இது புலிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்திருப்பதாகவும் அரசு கருதுகிறது. அதற்கான காரணங்களும் உண்டு.


புலிகளைக் காப்பாற்றினால் காடுகளைக் காப்பாற்றலாம் என்கிற கருத்து பல ஆண்டுகளாகவே முன்வைக்கப்படுகிற ஒன்று. புலிகளைக் காப்பாற்றினால் எப்படிக் காடுகளைக் காப்பாற்ற முடியும்? நம்முடைய காடுகளிலுள்ள விலங்குகளில் பலம் வாய்ந்ததுடன் சூழலியல் முக்கோணத்தில் உச்சியில் இருக்கிற விலங்கு என்றால் அது புலியும் சிங்கமும்தான்! தமிழகக் காடுகளில் சிங்கம் கிடையாது என்பதால் புலிகள்தான் டாப்.

புலிகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை. அது தனக்கென ஓர் ஏரியாவை (HOME RANGE) காட்டில் ஒதுக்கிக்கொண்டு, வேட்டையாடி வாழும். இந்த ஹோம் ரேஞ்சில் அதிகபட்சம் மூன்று புலிகளே வசிக்கும். அதுகூட நட்பு அடிப்படையில்தானாம்! ஒருவேளை பெண் புலி ஒன்று இரண்டு குட்டிகள் போடுகிறதென்று வைத்துக்கொள்வோம். இரண்டு ஆண்டுகளில் பெண் புலி தன் குட்டிகளை விரட்டி விடும். தனித்து விடப்படும் இரண்டு புலிகளும் தங்களுக்கான ஹோம் ரேஞ்சை தேர்ந்தெடுக்க காடுகளில் சுற்றித் திரியும்.


புதிய இடத்தைக் கண்டறிந்து அங்கே ஏற்கெனவே வாழும் புலிகளை தாஜா செய்தோ, சண்டையிட்டோ இடத்தைப் பிடித்து வாழத் தொடங்கும் (கஷ்டமான ஜீவிதம்தான்). இது ஒரு பக்கமென்றால் இன்னொரு பக்கம் ஒரு புலி தன்னுடைய ஹோம் ரேஞ்சில் உடல்நலத்தோடு, நல்ல உணவு பலத்தோடு ஓர் ஆண்டு வாழ கிட்டத்தட்ட 500 மான்கள் அல்லது அதற்கு இணையான இரை மிருகங்கள் இருக்க வேண்டியது அவசியம். 500 மான்கள் வாழவேண்டுமென்றால் அந்தக் காட்டில் அத்தனை மான்களுக்கும் தேவையான உணவு இருக்க வேண்டும். நல்ல செழிப்பான தாவரங்கள் இருக்கிற காடுகளில்தான் இந்த நிலைமை சாத்தியம். எந்தெந்தக் காடுகளில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ அந்தக் காடுகள் எல்லாம் நல்ல அடர்த்தியாக, செழுமையாக இருக்கிறதென்று பொருள்.


ஆனால், கடந்த நூறாண்டுகளில் நாற்பதாயிரமாக இருந்த நம் புலிகளின் எண்ணிக்கை, அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி வெறும் 1,706 ஆக குறைந்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை குறைய பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. காடுகளின் பரப்பளவு குறைந்தது, காடுகளில் மனிதர்கள் நடமாட்டம், மருத்துவத்திற்குப் பயன்படும் என்கிற மூடநம்பிக்கையால் தொடர்ந்து வேட்டையாடப்படுவது, புலிகளின் வாழிடங்களில் போதிய உணவு, நீர் இல்லாமை என ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது, புலிகள் வாழும் காட்டினுள் மனித நடமாட்டத்தை வெகுவாகக் குறைப்பதன் மூலம் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது. இதுதான் தற்போதையத் திட்டம்.


ஆனால் வடமாநிலங்களிலும், தமிழகத்திலும் இதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் புலிகள் சரணாலயக் காடுகளைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், வால்பாறை, கூடலூர் மாதிரியான சிறுநகரங்களிலும் வாழ்கிற வணிகர்கள், தொழில்முனைவோர், தொழிலாளர்கள் எனப் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


அண்மையில் கட்சிப் பாகுபாடின்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதோடு ஒரு நாள் முழு அடைப்பு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அதேபோல வால்பாறையில் ஓட்டுநர்கள் சங்கமும் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது.


இந்தப் போராட்டம் குறித்து இதில் பங்கேற்ற கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. திராவிடமணியிடம் பேசினோம். "2006 வன உரிமைச் சட்டத்தின்படி இந்த உத்தரவு தவறானது. சுற்றுலா நடவடிக்கைகளை நிறுத்துவதாக இருந்தாலும், காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் எந்தவித நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அங்கு வாழும் மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கலந்தாலோசித்த பின்பே எந்த முடிவையும் எடுத்திருக்க வேண்டும். இந்த முடிவினால் ஏழை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுகிற சூழல் உருவாகியுள்ளது. கூடலூர் மசினகுடி பகுதி மக்களுக்குச் சுற்றுலா ஒன்றுதான் அடிப்படையான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கே பலரும் வாகன ஓட்டுநர்களாகவும், கைடுகளாகவும், சிறியதும் பெரியதுமாக ஹோட்டல்கள் நடத்துபவர்களாகவும், அங்கே வேலை பார்க்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். சுற்றுலா நிறுத்தப்பட்டால் இவர்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார்.


கூடலூர் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் என்ற பெயரில் கூடலூர் மக்களை ஒன்றுதிரட்டி, இந்த உத்தரவுக்கு எதிராகப் போராடிவரும் வாசு என்பவர் மேலும் சில பிரச்சினைகளை முன்வைத்தார். "இந்த மக்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது, ஆடு மாடுகள் மேய்ப்பதுதான் பிரதானம். அதைவிட்டால் சுற்றுலா. இத்தனை ஆண்டுகளும் இதே புலிகளோடும், யானைகளோடும்தான் அவர்கள் வசிக்கிறார்கள். ஆனால், யாரும் புலிகளை வேட்டையாடுகிறவர்களாகவோ, யானைகளை வெடிவைத்துக் கொல்கிறவர்களாகவோ இருந்ததில்லை. காடுகளின் பாதுகாப்பில் அரசை விடவும் இந்த மக்களுக்கு அதிக அக்கறை உண்டு. வால்பாறையில் ஒருலட்சம் பேர், கூடலூரில் மூன்று லட்சம் பேர் என ஏகப்பட்ட ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை அரசின் ஒரே ஓர் உத்தரவினால் கேள்விக்குறியாகியுள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும், அதற்காகவே போராடுகிறோம்" என்று குமுறினார்.


வனவிலங்குகள் ஆராச்சியாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகமது அலி, அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறார். "அரசின் இந்த நடவடிக்கை நம்முடைய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இன்று ஓரளவுக்காவது சுற்றுச்சூழல் குறித்து நம் மக்களுக்கு அக்கறை வருகிறதென்றால் அதற்குக் காரணம், இந்தக் காட்டுப்பகுதி சுற்றுலாக்கள்தான். அதையும் தடுத்து நிறுத்திவிட்டால், நம் நாட்டின் ஏழை நடுத்தர வர்க்கக்குழந்தைகள் காடுகளை டி.வி.யில் மட்டும்தான் பார்க்க வேண்டியிருக்கும்.


முதலில் நம் ஊரில் வனங்களை நிர்வகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. போதிய வனத்துறை அதிகாரிகள் கிடையாது. பாதுகாப்புக் குளறுபடிகள். வனத்துறை அதிகாரிகளுக்கும், காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும் நல்ல நட்பு கிடையாது. சொல்லப் போனால் அந்த மக்களை மிக மிகக் கேவலமாக நடத்துவதுதான் இங்கே நடக்கிறது. நமக்குப் புலிகளின் எண்ணிக்கையைப் பெருக்கணும். புலிகளின் எண்ணிக்கையை எப்படிப் பெருக்க இயலும்? நம்மிடம் இருப்பதே ஒரு சதுர அடி நிலம்தான் என்றால் அதில் ஓர் ஆள்தானே நிற்க இயலும். இரண்டு பேரை நிற்க வைத்தால் ஆபத்துதான். அதுதான் புலிகள் விஷயத்திலும். நம்மிடம் இருக்கிற காடுகளின் அளவுக்கு ஏற்ற எண்ணிக்கையில்தான் புலிகள் இருக்க வேண்டும். முதலில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கும் வழியைப் பார்க்க வேண்டும். பெரிய முதலாளிகள் கையில் மாட்டிக்கொண்டு ரிசார்ட்களாகவும், கெஸ்ட் ஹவுஸ்களாகவும், ஆசிரமங்களாகவும் மாறியிருக்கிற வனத்துறை நிலங்களை அரசு கையகப்படுத்தி காடுகளின் பரபரப்பளவை அதிகரிக்கலாம்" என்று காரசாரமாகக் கூறினார்.


"இப்பிரச்சினையில் மூன்று விஷயங்கள் பிரதானமாக உள்ளன. ஒன்று, புலிகள் பாதுகாப்பு. இரண்டாவது, பழங்குடியின மக்களின் வாழ்க்கை. மூன்றாவது, சாதாரண மக்களின் சுற்றுலா உரிமை.இவை மூன்றையும் காக்கும் வகையில்தான் அரசின் உத்தரவு அமைந்திருக்கவேண்டும். ஆனால், அரசோ புலிகளின் பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உத்தரவை அறிவித்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டுகளில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. அதையும் இப்பிரச்சினையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதோடு சுற்றுலாநடவடிக்கைகள் தடைசெய்யப் பட்டால் தீவிரவாதிகள், வேட்டைக் காரர்களுக்கு நம் காடுகள் நல்ல பாதுகாப்பான புகலிடமாக அமைந்துவிடுகிற ஆபத்துக்களும் உண்டு" என்கிறார், பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் வனத்துறை அலுவலர் ஒருவர்.


கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஓசை காளிதாசனோ, "உச்சநீதிமன்ற உத்தரவால் பெரிய கேடில்லை. இந்த உத்தரவு நிச்சயம் நம் சுற்றுச்சூழலுக்கு நல்லதுதான் என்றாலும் சில குறைகளோடு இருக்கிறது. இந்த உத்தரவை எதிர்க்கும் பலரும் காடுகளோடு பெரிய தொடர்புகள் இல்லாத வெளியாட்கள்தான்" என்கிறார். மேலும் அவர் பேசுகையில்,


"கூடலூர், வால்பாறை பகுதிகளில்சுற்றுலாத்துறை மூலமாகக் கிடைக்கும் வருவாயை விட தேயிலைத் தோட்டங்கள்தான் ஏழைகளுக்கான வருமானம் தருமிடமாக இருக்கிறது. இந்தப் பகுதிகளில் காலங்காலமாக வசிக்கிற பழங்குடியின மக்கள், யாரோ சிலருடைய ரிசார்ட்களில் கூலிக்கு வேலை பார்க்கிறவர்களாகத்தானே இப்போதும் இருக்கிறார்கள். எந்தப் பழங்குடியினத்தவர் ரிசார்ட், ஹோட்டல் வைத்திருக்கிறார்?. ஒருவரையாவது உங்களால் காட்ட இயலுமா? அரசு அந்த ஏழை பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதோடு காடுகளைப் பாதுகாப்பது குறித்த பிரச்சார இயக்கத்தைத் தொடங்க வேண்டும்.


இன்று குடித்துவிட்டு கூத்தடிக்கும் இடங்களாக நம் காடுகள் மாறிவிட்டன. இன்று நம் காடுகளின், அருவிகளின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் உடைந்த பீர் பாட்டில்களையும், வீணான பிளாஸ்டிக் குப்பைகளையும் காணலாம். இதுமாதிரியான விஷயங்கள் முதலில் தடுத்து நிறுத்தப்படவேண்டும். நகரத்திலிருந்து புறப்பட்டுப் போய் காடுகளுக்குள் கேம்ப் ஃபயர் பண்ணுகிறேன், பட்டாசு வெடித்து பர்த்டே கொண்டாடுகிறேன் என அலம்பல் பண்ணுகிறவர்களைத்தானே இந்த அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்த கேம்ப் ஃபயர் மற்றும் குடிகாரக் கும்பல்களுக்கு இடம் கொடுப்பது யார்? காஸ்ட்லி ரிசார்ட்டுகள்தானே.


கேரளாவில் பரம்பிக்குளம் மாதிரியான புலிகள் சரணாலயப்பகுதிகளில் இருப்பதுபோல ஈகோ டூரிசம் (ECO TOURISM) மாதிரியான விஷயங்களை இங்கேயும் கொண்டுவரலாம். இந்த ஈகோ டூரிசத்தினால் அரசுக்கு கிடைக்கும் வருவாயானது உள்ளூர் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கே பயன்படுத்தப்படும். அதோடு தனியார்களால் கட்டுக்கடங்காமல் போயிருக்கிற காடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யலாம். மேலும் வாகனப் போக்குவரத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகச் சுற்றுலாவுக்குத் தடைவிதிக்காமல், ஈகோ டூரிசம் மாதிரியான விஷயங்களை அரசு ஊக்குவிப்பதே, இப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கமுடியும்" என்கிறார்.


புலிகளைக் காப்பாற்ற வேண்டும் என முனைப்புக் காட்டுகிற அரசு, அங்கே வாழ்கிற மக்களின் நலன் குறித்தும் அக்கறை காட்டவேண்டும் அதோடு அவர்களுடைய வாழ்வாதாரங்களை பாதிக்காத வண்ணம் சுற்றுசூழலையும் பாதுக்காக்க வேண்டும் அதுவே சரியான தீர்வாக இருக்கமுடியுமே தவிர நீதிமன்ற தீர்ப்பு நடவடிக்கைகள் கோமாளித்தனமாகவே முடியும் என்பது நிச்சயம்.

நன்றி - புதியதலைமுறை