Pages

29 November 2013

ஒரு சாலையும் சில மனிதர்களும்




உலகில் மோசமான மனிதர்கள் என்று யாருமே கிடையாது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லதும் தீயதும் ரத்தமும் சதையுமாக பிணைந்திருக்கிறது. அவரவர் சூழலே எதை வெளிப்படுத்துவதென்பதற்கான கருவியாக உள்ளது. நம் கண் எதிரே புலப்படுகிற நாமாக புரிந்துகொண்ட ஒரு மனிதன் அடுத்த நொடி எப்படியும் மாறலாம்.

ஓர் புல்லாங்குழலின் இசையால் எப்படிப்பட்ட மனிதரையும் அழ வைத்துவிட முடியும். ஒரு குழந்தையின் புன்னகை எந்த மனிதனின் நெஞ்சத்தையும் நெகிழவைத்துவிடும். ஒரு மிகச்சிறிய இழப்பு கூட யாரையும் கொலைகாரனாக்கூடும். ஓர் எதிர்பாராத அவமானம் நம்மை எளிதில் கொன்றுவிடக்கூடும். ஒரு பயணம் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடலாம். அப்படி ஒரு பயணம்தான் ‘’ தி குட் ரோட்’’ என்கிற குஜராத்தி திரைப்படம் முன்வைப்பது. ஒரு நெடுஞ்சாலையில் தன்னையே கண்டடைகிற சில மனிதர்களின் வாழ்க்கையை ஆர்பாட்டமில்லாமல் சொல்கிறது.

நீண்டுகொண்டே செல்லும் குஜராத்தின் நீண்ட நெடுஞ்சாலையில் பயணிக்கிற மூன்று பேருடைய வாழ்க்கைதான் படம் நெடுக சொல்லப்படுகிறது. தன்னுடைய லாரியை வேண்டுமென்ற விபத்துக்குள்ளாக்கி அதன்மூலமாக இன்சூரன்ஸ் பணத்தினை பெற்று அதை வைத்து வறுமையில் வாடும் தன் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கிற ஒரு லாரி டிரைவர், சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தொலைந்துபோய் நெடுஞ்சாலையில் தனித்துவிடப்படும் ஒரு சிறுவன். மோசமான ஒரு சூழலிலிருந்து மும்பையிலிருந்து தப்பித்து தன் சொந்த ஊருக்கு திரும்பி படிப்பு,பாட்டி,விளையாட்டு,மகிழ்ச்சி என வாழ்க்கையை தொடங்க நினைக்கிற ஒரு சிறுமி. இந்த மூவருடைய வாழ்க்கை பயணத்தில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தை கொடுக்கிறது அந்த நெடுஞ்சாலை.

எப்போதும் தன் தொலைந்துபோன வாழ்க்கையை பற்றியும் இருளாய் தென்படும் எதிர்காலம் பற்றியும் கவலையில் ஆழ்ந்திருக்கிற லாரி டிரைவர், ஒரு சிறுவனின் பாடலில் லயித்து தொலைந்துபோகிறான். தன்னுடைய பால்யத்தை மீட்டெடுக்கிறான். தன்னையும் குழந்தையாக பாவிக்கிறான். அதிலே கரைந்து உண்மையான மகிழ்ச்சி இங்கே இப்போது என்பதை உணர்கிறான். எல்லாவற்றையுமே வெறுப்போடும் எரிச்சலோடும் அணுகுகிற பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு விபச்சார விடுதியில் தனக்கான அன்பை கண்டடைகிறாள். எப்படிப்பட்ட சூழலிலும் அடுத்தவருக்கு உதவுகிற உள்ளம் அவளுக்குள் பிறக்கிறது. நகரச்சூழல் தரும் படோடோபமான வாழ்க்கையில் திளைக்கிற பெற்றோர் தன் மகனை தொலைத்துவிட்டு தேடும்போது தங்களுக்கு வெளியே இருக்கிற உலகை கண்டுதெளிகிறார்கள்.

படத்தில் யாருக்கும் நீளநீளமான வசனங்களோ அதிரடியான காட்சிகளோ ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கிற வாழ்க்கையோ இல்லை. படம் நெடுக நிறைந்திருக்கிற மிகையில்லாத யதார்த்தமான காட்சிகள் மட்டுமே ஒட்டுமொத்தமான உணர்வுகளை நமக்குள் கடத்துகின்றன. அதிலும் அந்த லாரிடிரைவரும் சிறுமியும் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இப்படம் குஜராத்தின் வறுமையை காட்டுகிறது, நெடுஞ்சாலையில் நடக்கிற குழந்தைகளை வைத்து நடத்தப்படும் விபச்சாரத்தை காட்சிப்படுத்துகிறது என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியாவின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் இவ்வகை பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய நெடுஞ்சாலைகளைப்போல மோசமான இடங்களை பார்க்கவே முடியாது. எல்லாவிதமான குற்றங்களும் அரங்கேறும் இடங்களாக அவை மாறிப்போய் பல ஆண்டுகளாகின்றன.

ஆனால் இப்படம் முன்வைப்பது அக்குற்றங்களை அல்ல, அக்குற்றங்களை தாண்டி அங்கே நடமாடும் மனிதர்களின் அன்பை காட்சிப்படுத்துகிறது. அவர்களுடைய நேயத்தை நமக்குள் கடத்துகிறது. அதுதான் இப்படத்தினை நம்முடைய மரபார்ந்த பாணி சினிமாவிலிருந்து வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது.

படத்தில் மிகமிக பொறுமையாக நத்தையை விட மெதுவாக நகரும் காட்சிகள் எப்படிப்பட்ட மனிதனையும் சோதிக்கவல்லவை. அவார்ட் படங்களுக்கே உரிய அம்சமாக இது இருக்கிறது! இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறது. விருது கிடைக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நிறைய பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம். நல்ல ப்ரிண்ட் டிவிடி சப்டைட்டிலோடு கிடைக்கிறது.

இப்படத்தின் முக்கிய பாத்திரமொன்றில் நடத்திருக்கிற சோனாலி குல்கர்னியை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று இணையத்தில் தேடினால்.. மே மாதம் படத்தில் நடித்தவர் என்கிறது விக்கிபீடியா! அட!

26 November 2013

ஓர் இந்திய கிராமத்தின் கதை




படிக்கும்போது ‘’அட இதெல்லாம் இன்னமும் மாறாம அப்படியே இருக்கே பாஸ்’’ என ஆச்சர்யப்பட வைக்கிறது ‘’ஓர் இந்திய கிராமத்தின் கதை’’ என்கிற நூல். 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கிராமத்தின் வாழ்க்கையை அதன் மக்களை பதிவுசெய்திருக்கிறது இந்த மொழிபெயர்ப்பு நூல்.

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை என்பவரால் 1888ஆம் ஆண்டு தொடங்கி சென்னை கிறித்தவ கல்லூரி ஆங்கில மாத இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு ‘’LIFE OF AN INDIAN VILLAGE’’ என்ற தலைப்பில் 1911ஆம் ஆண்டு புத்தகமாக வெளியானது. அந்த ஆங்கில நூலை இப்போது தமிழில் ச.சரவணன் மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்நூல் இந்தியாவுக்கு ஆட்சிசெய்ய இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய மக்களையும் அதன் கிராமங்களையும் அதன் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்டுள்ளது. இதில் நம்முடைய தமிழக கிராமங்களின் வாழ்க்கையை ‘கேளம்பாக்கம்’ என்கிற சிறிய கிராமத்தினை உருவாக்கிக்கொண்டு அதன் மூலமாக விளக்குகிறார் ராமகிருஷ்ணபிள்ளை.
175 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக கிராமமான ‘’கேளம்பாக்கம்’’ மகாபலிபுரத்திற்கும் காஞ்சிபுரத்திற்க்கும் மத்தியில் பாலாற்றங்கரையில் இருக்கிறது. நிஜமாகவே அப்படி ஒரு ஊர் தற்போதைய சென்னையில் இருக்கிறது. அங்கேதான் ரஜினி,அஜித்,சரத்குமாரெல்லாம் வசிக்கிறார்கள்! ஆனால் அந்த கேளம்பாக்கம்தானா இது என்று உறுதிப்படுத்தும் தகவலொன்றும் நூலில் இல்லை.

கோதண்டராமசாமி கோயில் ஒன்று கேளம்பாக்கத்தில் இருந்ததாக நூலில் குறிப்பிடப்படுகிறது. இப்போதைய கேளம்பாக்கத்தில் அக்கோயில் இன்னமும் இருக்கிறதா?

நூலில் குறிப்பிடப்படுகிற இந்த கேளம்பாக்கம் என்னும் இடத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே போர் நடந்ததாகவும் ,போரில் வீழ்ந்தவர்களை வெற்றிபெற்றவர்கள் கொண்டவந்து இங்கே வைத்துதான் யானைகளை வைத்து மிதிக்க வைத்து கொல்லுமிடமாகவும் இருந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 11ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் என்பவனின் மகன் ஆதொன்டைதான் இரண்டு அரச வம்சங்களிடையே இருந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காஞ்சிபுரத்தை தலைமையாக்கிக்கொண்ட பின்தான் கேளம்பாக்கத்துக்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது!

ஆதொன்டையின் உத்தரவின் பேரில் துளுவ நாட்டை சேர்ந்த பத்து குடும்பங்கள் இங்கே குடியேற.. பின்னாளில் அவர்களே துளுவ வேளாளர்கள் என அழைக்கப்பட்டு ஊரின் மிகமுக்கிய குடும்பங்களாக மாறியதாக குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் இவர்கள் சைவ சமயத்தை பின்ப்பற்றியவர்களாக இருந்து பின் ராமானுஜர் காலத்தில் வைணவத்தை தழுவினார்கள் என்கிறார்.
கிராமத்தை கட்டிமேய்க்கிற கிராம முன்சீப் கோதண்ட ராம முதலியை பற்றி அறிமுகத்தோடு நாமும் கிராமத்துக்குள் நுழைய, கணக்குபோடுவதில் கறாரான கர்ணம்(கணக்கர்) கிராமத்து போலீஸ் ஆபீசர் ராமசாமிபிள்ளை என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி அவரைப்பற்றிய சம்பத்தோடு அவருடைய குணங்களையும் விளக்குகிறார்.

தலையாரி முத்து நாயக்கர், புரோகிதர் ராமானுஜ ஆச்சாரியார், வரதய்யங்கார், அப்பளாச்சாரி, பள்ளி ஆசிரியர் நல்லாபிள்ளை, வைத்தியர் அப்பாசாமி, கலப்பைகள் செய்யும் சுப்பராய ஆசாரி, கொல்லர் சண்முகம், இடையர் கோபால பிள்ளை, வண்ணான் முனியன், குயவர் குப்புசாமி, நாவிதர் கைலாசம், அம்மன்கோயில் பூசாரி அங்கமுத்து, பணிசிவா கந்தன், ஷைலார்க் முத்துசாமி செட்டியார், பறைச்சேரி தலைவர் மாயாண்டி.. என இந்த கேரக்டர்கள் பட்டியில் மிகநீளம். ஆனால் ஒவ்வொருவருக்கும் இருக்கிற குணாதிசயங்கள் அவர்களுடைய நம்பிக்கைகள் அந்த சாதி மக்களின் வாழ்க்கை தொழில் என ஒரு கதையைப்போல நூல் விரிகிறது.

பணிசிவா என்கிற நபர் ஊரில் நடக்கிற பிறப்பு,இறப்பு,திருமணம் என எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் அறிவிக்கிறவராகவும், ஈமச்சடங்குகளில் சங்கூதுவது, திருமணங்களின் போது வெற்றிலை பாக்கு வைத்து தொலைவில் இருக்கிற உறவினர்களை அழைப்பது மாதிரியான வேலைகளை ஊருக்காக செய்து வாழ்பவராக அவரைப்பற்றி விளக்கப்படுகிறது. ஊரில் இருக்கிற நாவிதரேதான் அறுவைசிகிச்சையும் செய்கிறார் ஆனால் எந்த அடிப்படையில் செய்கிறார் என்பதுதான் எனக்கே தெரியவில்லை என்று ராமகிருஷ்ணபிள்ளையே குழம்பிப்போய் எழுதுகிறார். அதுபோல அம்மன் கோயில் பூசாரி அங்கமுத்து பேய்பிடித்திருக்கிறது, பிசாசு வேலை குட்டிசாத்தான் ஏவுதல் மாதிரி மக்களை எப்படி ஏமாற்றுகிறார் என்பதும் சம்பவங்களால் விளக்கப்படுகிறது.

நூல் முழுக்க நிறைந்துகிடக்கிற சம்பவங்கள் எல்லாமே வெகுசுவாரஸ்யமானவை. அது இந்த நூலுக்கு ஒரு நாவலின் தன்மையை இயல்பிலேயே வழங்கிவிடுகிறது. ஒரு வராலற்று நாவலை படிக்கிற உணர்வு.

அப்பளாச்சாரி என்கிற பார்ப்பனருக்கு திடீரென பணத்தேவை ஏற்படுகிறது, உடனே நேராக போய் குயவன் குப்புசாமியிடம் அவனுடைய பக்கத்துவீட்டுக்காரனான பணிசிவா கந்தன் எப்படி குயவனின் நிலத்தை வேலிப்போட்டு ஆக்கிரமித்து ஏமாற்றுகிறான் என வத்தி வைக்கிறார். அவன் கோவமாக இருக்கும் நேரம் பார்த்து காசு கேட்கிறார். அவனும் கோபத்தோடு கொடுத்துவிட.. நேராக பணிசிவா கந்தனிடமும் போய் குயவனை பற்றி போட்டுக்கொடுத்து அவனிடமும் காசு கறக்கிறார். இந்த சண்டை முற்றிப்போய் அது கோர்ட்டு வரைக்கும் போகிறது. கோர்ட்டு காரியங்களை கவனிக்கிற அப்பளாச்சாரி அதிலும் லாபம் பார்த்துவிடுவது சிறப்பு!

இன்னொரு சமயம் ஊருக்கு வருகிற கழைக்கூத்தாடிகள் சில வித்தைகளை செய்துகாட்டுகிறார்கள். அதில் ஒரு மாவிதையை எடுத்து மண்ணில் புதைத்து கூடையை மூடி செடியாக வளர்த்து காட்டுகிறார்கள். மீண்டும் மீண்டும் கூடையை மூடி மூடி திறக்க அது வளர்ந்து வளர்ந்து குட்டி மரமாகிவிடுவதாக ராமகிருஷ்ணபிள்ளை ஆச்சர்யத்தோடு மிகவும் நுணுக்கமாக அந்நிகழ்ச்சியை விவரித்து எழுதுகிறார். படிக்கும்போது நமக்கும் அவருக்கு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்ப்பதைப்போன்ற உணர்வு இயல்பாக வந்துவிடுகிறது. அதோடு இப்போ சீசன் இல்லை இருந்திருந்தால் அவன் அந்த மாமரத்தில் மாங்கய் வரவைத்து கொடுத்திருப்பான் என குசும்பு காட்டுகிறார்!

கிராமத்து பெண்கள் பற்றிய கதையும் அவர்களிடையே நடந்த ஒரு கிணற்றடி உரையாடலும் நூலில் உண்டு. அதைப்படிக்கும் போது நம் பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் மெகாசீரியல் குறித்த உரையாடல்களின் ஆதிமூலத்தை அறியமுடிகிறது! தேவதாசி முறை குறித்த குறிப்புகளும் நூலில் உண்டு. ஊரில் இருந்த கோயிலில் இரண்டு தேவதாசிகள் இருக்கிறார்கள். இருவரில் ஒருவரை அப்பளாச்சாரியும், இன்னொருவரை பக்கத்து கிராமத்து ஜமீன்தாரும் தங்களுடைய ஆசைநாயகிகளாக பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி தங்களுக்கு ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் இவர்களை வேறு சிலருக்கு விட்டுக்கொடுக்கவும் செய்கிறார்கள்.

கிராமத்தில் வட்டிக்கு பணம்கொடுக்கிற செட்டியார் எப்படி ஏமாற்றி மக்களை சுரண்டினார், எனவே நமக்கு கிராமிய வங்கிகள் ஏன் அவசியம் குறித்து கவலைகொள்கிறார் நூலாசிரியர்.

இவற்றை தவிர்த்து அந்த கிராமத்தில் நடைபெற்ற விவசாய முறைகள், ஊருக்கு வரும் நாடக கலைஞர்கள் நடத்திய நாடகம். ஆன்மீக சொற்பொழிவாளர் சொன்ன கதை என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. சில விஷயங்கள் இன்றும் மாறாமல் இருப்பதை படிக்கும்போது இதிலென்ன ஆச்சர்யம் என்கிற நம்முடைய எண்ணமே உணர்த்துகிறது. ஏனென்றால் நாம் படிப்பது 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கிராமத்தை பற்றி இல்லையா?

நம் கிராமங்களில் சாதி என்கிற பெயரில் மக்கள் எவ்வாறு அடிமையாக வைக்கப்பட்டிருந்தனர் என்பதை மாயாண்டி என்கிற பறைச்சேரியின் தலைவருடைய வாழ்க்கையின் மூலமாக விளக்கப்படுகிறது. கிராமத்து நீதியும் கூட எப்படி பாரபட்சமாக நடந்துகொண்டது என்பதற்கு சாட்சியாக ஆதிக்க சாதியினர் தவறிழைக்கும் போது அவர்களுக்கு சிறை அல்லது அபாரதமும், அதுவே தலித்துகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது கால்கள் மற்றும் கைகள் மரத்தினாலான ஒரு பெரிய அமைப்பின் இரண்டு துளைகளில் நுழைத்து அதே நிலையில் பல மணிநேரங்கள் இருக்க செய்வார்களாம்!

இந்நூல் எழுதப்பட்டது நம்மை ஆட்சிசெய்த ஆங்கிலேயர்களுக்குதான் என்றாலும் இப்போது படிக்கும்போது அக்கால வாழ்க்கையை மக்களை அவர்களுடைய ரசனையை மகிழ்ச்சியை ஓரளவு புரிந்துகொள்ள உதவுகிறது. தங்களுடைய கிராமம் அதன் மக்கள் விவசாயம் அவ்வப்போது கொஞ்சம் கொண்டாட்டம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எவ்வளவு எளிமையான அழகான வாழ்க்கையை நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது இயல்பாகவே பொறாமையும் வந்துவிடுகிறது.

(இந்நூலை எழுதிய தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளைதான் ஆங்கிலத்தில் தமிழர் வாழ்வை நாவலாக (பத்மினி) எழுதிய இரண்டாவது ஆள் என்கிற தகவலை முன்னுரையில் குறிப்பிடுகிறார் பதிப்பாசிரியர் ரெங்கையா முருகன்)

ஓர் இந்திய கிராமத்தின் கதை
தோட்டக்காடு ராமகிருஷ்ணபிள்ளை
தமிழில் ச.சரவணன்
சந்தியா பதிப்பகம்
விலை – 110

20 November 2013

சச்சின்... சச்சின்...




''பேட்டு உயரம் கூட இல்ல.. இரண்டுவயசுலயே சச்சின் மாதிரி பேட்டுங்கையுமா திரிது பாரு வாண்டு!''

‘’உனக்கு பிடிச்ச விளையாட்டு வீரர் யாரு’’ - ‘’சச்சின்’’

‘’நீ பெரியவனாகி யார் மாதிரி ஆகப்போற’’ , ‘’சச்சின் மாதிரி’’

''டே போன ஆட்டைல நான்தானே ஜெயிச்சேன் அதனால இந்த மொற நான்தான் சச்சின், நீ காம்ப்ளியா இருந்துக்கோ''

‘’அண்ணே எம்ஆர்எஃப் பேட்டுதான் வேணும்… வேற எதுவும் வேணாம்ண்ணே…’’

''பேட்டை புடிச்சிட்டு ஸ்டெடியா நின்னு.. டிக்கிய பின்னால தள்ளி... முட்டியமட்டும் லைட்டா விரிச்சுட்டு ரெடியாகிட்டா.. சச்சின் ஆகிடுவியோ..''

‘’மனசுக்குள்ள பெரிய சச்சின்னு நெனப்பு.. எப்ப பாரு பேட்டும் கையுமா திரியறீயே ஒழுங்கா படிக்கமாட்டியா..’’

‘’சச்சின் ஆடினாதான் இந்தியா ஜெயிக்கும்… சச்சின் அவுட்டாயிட்டான்ல.. அவ்ளோதான்.. இந்தியா தோத்துடும்டா.. டீவிய ஆஃப் பண்ணிட்டு தூங்கு’’

''அப்பா பூஸ்ட் வாங்கிகுடுப்பா..''

''சச்சினுக்கப்பறம் சேவாக்தான் எழுதிவச்சிக்க''

‘’அம்மா இரும்மா.. இன்னும் இரண்டு ரன்னுதான் சச்சின் செஞ்சூரி போட்டுருவான்.. அப்புறம் எதையோ பாத்துக்க‘’

‘’ நாசமா போனவன் காலுக்கு நேரா பாலைப் போட்டு சச்சினை அவுட்டாக்கிட்டான்.. சச்சின் முகம் அப்படி வாடிபோச்சு...பாவமா இருந்துச்சுப்பா’’

‘’சார்...சார்.. சச்சின் ஸ்கோர் என்ன…’’

''ஓ சச்சின் வந்தாரய்யா.. ஓ சச்சின் வந்தாரய்யா''

‘’இன்னைக்கு நான் ஆபீஸ்க்கு போகல.. சச்சின் பேட் பண்றத பாக்கணும்ப்பா லீவு’’

''இதென்னடா மண்டைய இப்படி வெட்டிருக்க.. முன்னால நாலுமுடிவேற தூக்கிட்டு நிக்குது'' ''இது சச்சின் ஸ்டைல்ப்பா.. ஸ்பைக்காம்''

''என்னைய்யா லீவுனா அதுக்குள்ள வந்துட்ட'' ''சச்சின் அவுட்டாகிட்டான்பா.. அப்புறம் என்னத்த மேட்ச்சு பாத்து...''

''சச்சினுக்கப்பறம் தோனிதான் எழுதிவச்சிக்க''

‘’பேட்டுதூக்கின எல்லாராலயும் சச்சினா ஆகிடமுடியாது தம்பி.. அதுக்கு ரொம்ப ஹார்ட்வொர்க்கும் ப்ராக்டீசும் முக்கியம்‘’

''சச்சின் செஞ்சுரி போட்டான்ல அவ்ளோதான் இந்தியா ஊத்திக்கும்''

''சச்சினுக்கப்பறம் கோலிதான் எழுதிவச்சிக்க''

‘’எனக்கு கல்யாணம் ஆன வருஷம்தான் சச்சின் வோர்ல்ட் கப் வின்பண்ணாரு’’

''சச்சினே ரிடையர்டாகிட்டாரு.. இனிமே கிரிக்கெட்டே பாக்கப்போறதில்லங்க''

12 November 2013

கிதாரை விற்ற இளைஞன்...






எப்படிங்க ஒரு கிதாரை வித்து பத்து பவுன்ல நகை வாங்கமுடியும்?

மில்லியன் டாலர் கேள்வி இது. விஜய் எப்படி இதை சாதித்துக்காட்டினார்? HOW ப்ரோ HOW என்று கேட்காத ஆளில்லை.

அந்த விளம்பரத்தில் காட்டப்படுவது ஒரு நீண்ட நெடிய வரலாற்றின் கடைசி பக்கங்களைத்தான். அதற்கு ஒரு முன் கதை உண்டு. அக்கதை பல்வேறு சாகசங்களையும் குறியீடுகளையும் காதல் ரொமான்ஸ் அதிரடி ஆக்சன்கள் நிறைந்தது. மூன்று நிமிட விளம்பரத்தில் மிஸ்ஸான அந்த மிச்சக்கதை...

***

இருப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால...

விஜயின் தந்தை ஜெய்ஷங்கர் ஒரு கடமைதவறாத சிபிஐ அதிகாரி.

மிகப்பெரிய கடத்தல்காரர்ரான கோட்டு போட்ட அசோகன் . அவரை பிடிக்க முடியாமல் சர்வதேச காவல்துறையே கையை கசக்கிக்கொண்டிருந்தது. அவரை பிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேண்டிய கடமையை ஏற்றுக்கொண்டார் விஜயின் அப்பாவான சிஐடி ஜெய்ஷங்கர்.

ஆஹ்ஹ்ஹ் என நடுங்கிக்கொண்டே ஹஸ்கி வாய்ஸில் எல்ஆர் ஈஸ்வரி பின்னணி குரல் கொடுக்க குட்டைப்பாவடையோடு ஜெயமாலினி ஆடிக்கொண்டிருந்த குகையில் வைத்து அசோகனை சுட்டுக்கொன்றார் ஜெய்ஷங்கர்.

கூடவே லட்சக்கணக்கான விலைமதிப்புமிக்க வைரங்களையும் , கட்டம் போட்ட காலர் இல்லா டிஷர்ட் மாட்டிக்கொண்டு திரியும் மொட்டைதலை அடியாட்களையும் கைப்பற்றினார் ஜெய்ஷங்கர்.

சாவதற்கு முன்பு அசோகன் ஒரு உண்மையை சொல்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திருவிழாவில் காணாமல் போன ஜெய்ஷங்கரின் அப்பா அசோகன்தான் என்கிற உண்மை தெரியவருகிறது.

தன் குடும்ப கிதாரையும் மகன் ஜெய்ஷங்கருக்கு பரிசாக கொடுத்துவிட்டு செத்துப்போகிறார். அந்த கிதார்தான்...இந்த கிதார். ஆனால் சாகும்போது கிதாருக்குள் இருந்த பல கோடி மதிப்புள்ள வைரங்களை பற்றி சொல்லவே இல்லை.

***

இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு...

பள்ளியில் பத்தாம்ப்பூ படிக்கிறார் விஜய். அவரும் ஃபகத் பாசிலும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கிறார்கள். இருவருமே ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள்.

ஒருநாள் நண்பனின் காதலியைத்தான் தானும் காதலிக்கிறோம் என்று தெரிய வர.. அவர் தன் காதலை தியாகம் செய்கிறார். சோகப்பாட்டு பாடுகிறார். சந்தானத்தோடு டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்து டான்ஸ் ஆடும் வாய்ப்பையும் பெறுகிறார். (பின்னணியில் கானாபாலா குரலில்).

சோகமாக இருக்கிற விஜயிடம் அப்பா ஜெய்ஷங்கர் தன்னோட குடும்ப கிதாரை கொடுத்து ''இதை வச்சி பெரிய ஆளாகுப்பா'' என்று சொல்கிறார்.

விஜய் தெருத்தெருவா போய் கிதார் வாசிச்சி ''வாழும்வரை போராடு'' என்று பாட்டுப்பாடி வளைந்து வளைந்து டான்ஸ்லாம் ஆடி பணம் சேர்க்கிறார். மாபெரும் கோடீஸ்வரனாகிறார். அவரை அமெரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்தெல்லாம் அழைத்து இசை நிகழ்ச்சி பண்ண சொல்கிறார்கள். ''சொல்லி வச்சா இந்த பொன்னத்தா.. அட தள்ளிவச்சா அட ஏன் ஆத்தா..'' என்று அருமையான பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்கிறார். அவருடைய குரல் உலகெங்கும் ஒலிக்கிறது.

***

தினமும் நிறைய புகைபிடிக்கிற அப்பா ஜெய்ஷங்கருக்கு திடீரென கேன்சர் வந்து விடுகிறது. விஜய் கஷ்டப்பட்டு சேர்த்த காசெல்லாம் ட்ரீட்மென்ட்டுக்கே செலவாகி விடுகிறது. மறுபடியும் நடுத்தெருவுக்கு ஒரே ஒரு ரூபாயோடு வந்து விடுகிறார் விஜய்.

மீண்டும் ஏழையாகி பழைய குடிசைக்கே திரும்புகிறார் விஜய். அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கலாமா என்று யோசிக்கிறார். ஆனால் அப்படி யாருமே இல்லையென்பதை அறிந்து மனம் வெதும்புகிறார். இந்த தேடலில் அப்பாவுக்கு மருந்து வாங்க மருந்துக்கடைக்கு போன இடத்தில் திரிஷாவை சந்திக்கிறார். மருந்து வாங்க காசில்லாமல் அவரிடம் கடன்வாங்க அது காதலாகிறது. த்ரிஷா காதலை சொல்ல அமவ்ன்டை திருப்பிக் கொடுக்க முடியாமல் காதலை ஏற்கிறார் விஜய்.

***

அந்தநேரத்தில்தான் ஃபகத் பாசிலின் காதல் ஹீரோயின் வீட்டுக்கு தெரியவருகிறது. பிரச்சனைகள் வருகிறது.

இரு வீட்டார் தரும் குத்துகளையும் வெட்டுகளையும் வாங்கிக்கொண்டு விஜய் சண்டைபோட்டு இரண்டுபேர் காதலையும் வாழவைக்கிறார். இதற்காக எல்ஐடி பில்டிங்கிலிருந்து பாய்ந்து இலங்கைக்கு பறக்கிறார். இலங்கையில் ஓடும் ரயிலிலிருந்து ஜம்ப் பண்ணி மலேசியாவில் விழுந்து உயிர்பிழைக்கிறார்.

இறுதியில் ''ஆனந்தம் ஆனந்தம் பாடும்'' என்று அதே கிதாரை வச்சு பாட்டுபாடி கொண்டே புன்னகைக்கிறார். பாத்ரூம்ல போயி விக்கி விக்கி அழுகிறார். கல்யாணம் முடிகிறது.

**

அதற்கு பிறகு நைக்கி ஷூ லீகூப்பர் பேன்ட் அணிந்துகொண்டு வறுமையில் வாடுகிறார். இந்த இக்கட்டான வேளையில் பகத் பாசிலின் தங்கை கல்யாணத்துக்கு பரிசு கொடுக்கலாம் என முடிவாகுது. டீக்கடை பாக்கியையே குடுக்க காசில்லாத விஜய் என்ன செய்வார்?

இருப்பது இந்த கிதார்தான். அதை வச்சு பாட்டு பாடி சம்பாதிச்சு கிப்ட் வாங்க முடிவெடுக்கறார். ஜாய்ஆலுக்காஸ் கடை வாசலில் நின்று பாட்டு பாடுகிறார். ''இன்னிசை பாடி வரும்... இளங்காற்றுக்கு உருவமில்லை...'' வாட்ச்மேன் அடித்து விரட்டுகிறார். சாலையில் போய் விழுந்தாலும் மூக்கில் ரத்தம் வழிந்தாலும் விஜயின் இசை ஓயவில்லை.

மழை ஊத்து ஊத்தென ஊத்துகிறது. மழையில் அவருடைய கண்ணீரும் கரைகிறது. அவருடைய இசைக்கு வெறும் முப்பது ரூபாய்தான் வசூலாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார். டாஸ்மாக்கில் கட்டிங் கூட கிடைக்காது என்று தெரிந்து கண்ணீர் உகுக்கிறார்.

கிதாரை கொண்டு போய் அடமானம் வைக்க சேட்டு கடைக்கு போகிறார். சேட்டு கிதாரை வாங்கி திருப்பி திருப்பி பார்க்கிறார். ''தும்ம்...'' என்று இழுக்கிறார்.

''தும்ம் ஜெய்ஷங்கர் க்கீ பேட்டாவா'' என்கிறார் சேட்டு. ஆமாம் என்கிறார் விஜய்.

''கைகைகை வக்குறா வக்குறா..ஆஆ... வக்குறா'' என்று சேட்டு ஸ்லோமோசனில் பாட..

''கண்ணால என் மனச தேத்துறா தேத்துறா'' என்று விஜய் ஸ்லோமோசனில் பாட...

''அரே பக்வான்.. தூ மேரா தம்பி ஹை'' என்கிறார் சேட்டு. விஜய் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்.

****

யாருக்குமே தெரியாத தன்னுடைய குடும்ப பாட்டை பாடியதும்தான் விஜய்க்கும் தெரிகிறது. இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால டிரைனில் தண்ணீ பிடிக்க போன தன்னுடைய அண்ணன் ப்ரகாஷ்ராஜ்.

''தூ... இதர்... கைசா... '' என்று விஜய் பேச..

''மே இதர்... '' என்று சேட்டு பேச.. கண்ணீர் பெருக்கெடுக்க..

''தம்பி பத்து நிமிஷம் கடைய பாத்துக்கோ'' என்று சொல்லிவிட்டு தம்மடிக்க போகிறார் சேட்டு.

இந்த கேப்பில் கடையிலிருந்த அட்டிகையை ஆட்டையைப்போட்டு அமுக்குகிறார் விஜய். அதை அண்ணன் சேட்டு பார்த்துவிடுகிறார்.

''தம்பி இந்த உயிரே உனக்குதான் எடுத்துக்கோ.. என்னவேணுமோ எடுத்துக்கோ'' என்கிறார்,

இதுதான் சான்ஸ் என்று அப்படீனா இதையும் எடுத்துக்கறேன் என்று இன்னொரு வைர அட்டிகையையும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் விஜய். அந்த அட்டிகைகளில் ஒன்றுதான் விஜய் விளம்பரத்தில் பரிசாக கொடுத்தது. கிதாரும் அப்படித்தான் திரும்பி விஜய்க்கே வந்தது.

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்து அண்ணனோடு ஆனந்தமாக வாழ்கிறார்.

அடகுக்கடையில் அநியாயங்கள் நடக்கிறது. அண்ணன் ப்ரகாஷ்ராஜ் ஒரு மாபெரும் தாதா என்பதும் தெரியவருகிறது. பானிபூரி என்கிற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்களை கடத்துகிறார்.

ஒரு நல்ல நாளில் வில்லன்களை துவம்சம் பண்ணி அண்ணன் ப்ரகாஷ் ராஜையே அரெஸ்ட் பண்ணுகிறார் விஜய். யெஸ் ஆமாம் ஹான்ஜி... கிளைமாக்ஸில்தான் தெரிகிறது தம்பி விஜய் ஒரு போலீஸ் அதிகாரி என்பது. அவரும் தன் தந்தையைப்போல ஒரு கடமைதவறாத காவல் அதிகாரிதான்.

கடைசிவரை கிதாரில் இருக்கிற வைரங்களை பற்றிய உண்மையே தெரியாமல் போகிறது. அண்ணன் ஜெயிலுக்கு போக.. தம்பி விஜய் திரிஷாவை கைபிடிக்கிறார். சுபம்.


**********

(உண்மையில் அந்த நகைக்கடை விளம்பரத்தில் காட்டப்படுகிற கிதார் மிகவும் புகழ்பெற்றது. அது ஜிப்சன் லெஸ் பால் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. மிகவும் காஸ்ட்லியானது. அதை விற்றால் 25பவுன் நகை கூட வாங்கமுடியுமாம்!)

ஊமைஜனங்களும் பாலாவின் பரதேசியும்




1984ல் வெளியான திரைப்படம் ஊமை ஜனங்கள். அண்மையில் ஜெயாமூவீஸ் சேனல் இப்படத்தை ஒளிபரப்பியது. ''முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பாக்யராஜ்'' என்கிற சிறப்பு செய்தியோடுதான் படம் துவங்குகிறது. அதுவே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்தது.

பாக்யராஜ் நடித்த எல்லா படங்களிலுமே அவர் மாறுபட்ட கதாபாத்திரங்களைத்தான் எப்போதுமே செய்திருக்கிறார். மாமூல் ஹீரோவாக அவர் எப்போதும் நடித்ததில்லை (ஓரிரு படங்கள் இருக்கலாம்). பிராமண வேஷமிட்டு அக்ரகாரத்தில் வாழும் தலித்தாக, கிராமத்துக்கு கைக்குழந்தையோடு புதிதாக வருகிற வாத்யாராக, குண்டுபெண்ணை மணந்து மன உளைச்சலுக்காளாகும் காமுகனாக, நண்பர்களோடு சைட் அடிக்கிற வேலைவெட்டியில்லாத ஹீரோவாக (அனேகமாக தமிழின் முதல் வெட்டி ஹீரோ!) , வெட்டி பந்தா கிராமத்து மைனராக என எல்லாமே வித்தியாசம்தான்.

ஆனால் எந்தப்படத்திலும் இப்படியெல்லாம் போட்டுக்கொண்டதில்லை. அதனாலேயே அப்படி என்னதான் இருக்கு பார்ப்போமே என்று பார்க்க ஆரம்பித்தேன். படத்தில் நடித்தவர்களுடைய பெயர்களில் எழுத்தாளர் அறந்தை நாராயணனின் பெயரும் இருந்தது. படத்திற்கு வசனம் பிரபஞ்சன்!

வசனம் மட்டுமல்ல படத்தின் இணை இயக்குனரும் அவர்தான். படத்தில் எக்கச்சக்கமாக இலக்கியவாதிகளின் பங்களிப்பு இருந்திருக்கும் போல.. படத்தை இயக்கியவர் ஜெயபாரதி (குடிசை,நண்பா நண்பா மாதிரி அவார்ட் படங்கள் எடுத்தவர்).

டி.செல்வராஜ் எழுதிய தேனீர் என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதே இது நிச்சயம் அட்டர் ப்ளாப்பான படமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

கம்யூனிச கருத்துகள் அடங்கிய படம் என்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடிந்தது. மிகவும் சுமாராகவே எடுக்கப்பட்ட இப்படத்தில் தேயிலை தோட்டத்தொழிலாளியாக தொழிற்சங்கம் தொடங்கி அதன் போராட்டத்தை முன்னெடுக்கிற தோழராக நடித்திருக்கிறார் பாக்யராஜ். வித்தியாசமான விக் வைத்திருக்கிறார் அதற்குமேல் வித்தியாசமில்லை. அவருடைய குரல்தான் அன்னியமாக இருந்தது.

ஆனால் விஷயம் அதுவல்ல.. சில மாதங்களுக்கு முன்பு வெளியான பரதேசிதான் இப்படத்தை பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. எரியும் பனிக்காடு நாவலை அடிப்படையாக கொண்டு உருவானது என்று சொல்லிக்கொண்டாலும் அப்படத்தில் பல மிகமுக்கியமான அடிப்படை பிரச்சனைகள் சரியாக பேசப்படவில்லை என்கிற குறை பலருக்கும் உண்டு. குறிப்பாக இந்தப்படத்தில் பரதேசியில் சொல்லப்படாத பலவும் இருப்பதை கவனிக்கமுடிந்தது. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் சார்ந்த கொடுமைகளை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம்.

கங்காணிகளாலும் வெள்ளை துரைமார்களாலும் தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த பெண்கள் எவ்விதத்தில் பாதிக்கப்பட்டார்கள் என்பதை எந்த பாசாங்கும் இன்றி நேரடியாக பேசியிருக்கிறது. தேயிலை தோட்டங்களில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்ட கம்யூனிச தொழிற்சங்க நடவடிக்கைகளை குறித்தும் இத்திரைப்படம் பேசுகிறது. அனேகமாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனையை முதன்முதலில் பேசிய தமிழ்ப்படமாக இது இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

மலையிலிருந்து தப்பியோடிவிடுகிற அடிமையை பிடித்துவந்து கட்டிப்போட்டு மயங்கி விழும்வரை சவுக்கால் அடித்து, அவனை தேடிப்பிடித்த செலவையும் அவன் கணக்கில் ஏற்றி மீண்டும் வேலை பார்க்க வைக்கிறார்கள்.

திருமணம் கூட அவனை அல்லது அவளை கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா உழைப்பான் நம்ம கடனும் தீரும் என்பதுமாதிரிதான் அணுகுவதாக கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் அரும்புகிற ஒருகாதலும் கூட படத்தில் உண்டு (ஹீரோ ஹீரோயினுடைய காதல் அல்ல). கங்காணிகளும் அந்த அடிமை வரிசையிலேயே இடம்பெறுகிறார்கள். அவர்களும் எல்லா அடக்குமுறைகளுக்கும் ஆளாகிறார்கள். அதிகாரம் அவரவர் அளவில் இயங்குகிறது. அது துல்லியமாக இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பரதேசி திரைப்படத்தை விடவும் இப்படத்தில் வருகிற தேயிலைதோட்டத்தொழிலாளர்கள் சார்ந்த காட்சிகள் மிகவும் துல்லியமாக பதிவாகியுள்ளதாக தோன்றியது. தேயிலை தோட்டங்களில் மட்டுமல்ல அவற்றை ப்ராசஸ் பண்ணுகிற தொழிற்சாலைகளும் அவற்றில் பணியாற்றுகிறவர்களின் துன்பங்களும் கூட காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முப்பதாண்டுகளுக்கு முன்பே காட்சி ரீதியாக பல விஷயங்களையும் முயற்சி செய்திருக்கிறார் படத்தின் இயக்குனரான ஜெயபாரதி. அவை இன்று பார்க்கும்போது சப்பைமேட்டராக தெரிந்தாலும் அந்த காலகட்டத்திற்கு மிகவும் புதிதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பட்ஜெட் ப்ரச்சனை, காஸ்டிங் குழப்பங்கள் என பலவிஷயங்களில் சிக்கிசீரழிந்துதான் படம் வெளியாகியிருக்கிறதென்பதை பார்க்கும்போதே யூகிக்க முடிகிறது. பாக்யராஜூம் தன் பங்குக்கு ஏதோ குளறுபடிகளை செய்திருக்கிறார் போல தமுஎச தோழர் ஒருவர் இணையதளமொன்றில் புலம்பியிருந்தார்.

இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'தேநீர்'. டி.செல்வராஜின் நாவலை படமாக்க முடிவாகி தமுஎச தோழர்கள் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய இப்படம் துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பட்ஜெட் கைமீறிப்போக முழுவதுமாக பாக்யராஜே படத்தை தன் கையில் எடுத்துக்கொண்டதாகவும் அதற்கு பிறகு பெயர் மாற்றம், சில எக்ஸ்ட்ரா காட்சிகள் என பலதும் சேர்க்கப்பட்டு கடைசியில் படம் எதுமாதிரியும் இல்லாமல் கொடுமையாக வெளியானதாக ஃபேஸ்புக்கில் தோழர் ஒருவர் வந்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். இப்படத்தில் நடித்த நாயகியான ப்ரீதாவையே படத்தின் இயக்குனர் ஜெயபாரதி திருமணம் செய்துகொண்டதுதான் படத்தினால் நடந்த ஒரே பலன் என்று குறிப்பிடுகிறார் ஞாநி.

இணையத்தில் படம் குறித்து ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று தேடினேன் படத்தின் போஸ்டரும் கூட கிடைக்கவில்லை. யமுனா ராஜேந்திரன் மட்டும்தான் இதைப்பற்றி சில கட்டுரைகளில் தொடர்ந்து குறிப்பிட்டு எழுதி வருகிறார்.

மோசமாக எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழில் வெளியான அரசியல் படங்களில் இது மிகமுக்கியமான படமாக தோன்றியது. இப்படத்தை பார்க்க மிகுந்த பொறுமையும் தன்னம்பிக்கையும் வேண்டும். அதோடு எதாவது சேனலில் எப்போதாவது திரையிடப்பட்டால் பார்க்கலாம்.

06 November 2013

சென்னையில் ஒரு மழைக்காலம்






சென்னையில் வரலாறு காணாத மழை. சாலையெல்லாம் வெள்ளம். மூன்று நாட்கள் விடாமல் பெய்து கொண்டேயிருந்தது. அலுவலகங்கள்,கல்லூரிகள்,பள்ளிகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் தண்ணீர் இடுப்புக்கு மேல் ஓடியது. பஸ்கள் ஓடவில்லை. ரயில்கள் கூட ரத்து செய்யப்பட்டன. அடுத்த மூன்று நாட்கள் நரகமாக இருக்கப்போவது தெரியாமல் நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தோம்.

என்னோடு சேர்த்து மொத்தமாய் மூன்றுபேர். கோவையிலிருந்து சென்னைக்கு மார்க்கெட்டிங் வேலை பார்த்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். சிட்டிக்கு வெளியே ஒதுக்குபுறமாக வாடகை குறைவாக குடிசைபகுதிகளுக்கு நடுவில் இருந்த ஒற்றை மாடி வீட்டில் முதல்மாடியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். (கீழ்வீட்டில் ஆளில்லை).

சென்னையில் எங்களுக்கு அதுதான் முதல் ஆண்டு.. முதல் மழை. கோவையில் என்னதான் மழை வானத்தை கிழித்துக்கொண்டு ஊற்றினாலும் வெள்ளம் மாதிரியான விஷயங்கள் அதிகமாயிருக்காது. எங்களுக்கு இதுவெல்லாம் பழக்கமேயில்லை.

பால்கனிக்கு வந்து பார்த்தபோது ஊரே நனைந்துபோயிருந்தது.அருகிலிருந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்து நாசம் செய்திருந்தது. கையில் கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு கைக்குழந்தையோடு சில பெண்களும், சைக்கிளை உருட்டிக்கொண்டு கேரியரில் மூட்டையோடு லுங்கிகட்டின குடும்பதலைவர்களும் எங்கோ நகர்ந்துகொண்டிருந்தனர். மழை கொட்டொகொட்டென்று கொட்டிக்கொண்டேயிருந்தது. இவர்கள் எங்கே செல்வார்கள் எப்படி வாழ்வார்கள் என்பதையெல்லாம் சிந்திக்கவேயில்லை.

என்னமோ பண்ணிக்கட்டும்.. நமக்கென்ன..! முதல்ல இதான் சாக்குனு ஆபீஸ்க்கு லீவு சொல்லிட்டு ஜாலியா இருக்கலாம்.. காலைகடன்களை முடிக்கணும்.. கரண்ட் இருக்கு.. போன் சார்ஜ் போடணும்.. காதலிக்கு மெசேஜ் அனுப்பணும் பசி வயிற்றை கிள்ளியது. ஒரு டீயும் தம்மும் அடித்தால் தேவலை என்று தோன்றியது.

லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு குடைகூட இல்லாமல் ( அறையிலும் குடை இல்லைதான்) தூங்கி எழுந்துவிட்ட இன்னொரு நண்பனோடு சாலையில் இறங்கினேன். மூன்றே விநாடிகளில் தொப்பலாக நனைந்து போயிருந்தோம். தண்ணீர் வேறு இடுப்புவரை.. படகு சவாரிக்கு தோதாக இருந்தது நீரோட்டம். படகுதான் இல்லை. கையை துடுப்பாக்கி உடலை படகாக்கி.. ஏலேலோ ஐலசா என நகர்ந்தோம்.

டீக்கடை வரை எப்படியோ நனைந்து நனைந்து வந்து சேர்ந்தால்... கடைக்குள் நீர் புகுந்திருந்தது. சேட்டன் தலைமறைவாகியிருந்தார். அருகிலேயிருக்கிற அசைவ ஹோட்டலும் பூட்டப்பட்டிருந்தது. பசி வயிற்றுக்குள் கராபுராவென கதறலோடிருந்த்து. எங்களுடைய அறையிலிருந்து பேருந்து நிறுத்தம் நான்கு கிலோமீட்டர். அங்கே ஏதாவது கடைகளிருக்க கூடும் என நினைத்து நீந்தி நீந்தி நடந்தோம். ம்ஹூம். ஒரு கடையுமில்லை. ஒரே ஒரு பொட்டிக்கடை மட்டும் இருந்தது.

மிட்டாயும், சிகரெட்டும், வெற்றிலை பாக்கும் கேன்டிமேன் மிட்டாயும்தான் கடையில் எஞ்சி இருந்தது. கையிலிருந்த காசுக்கு நிறைய கடலை மிட்டாய் வாங்கி வைத்துக்கொண்டேன். ‘’எதுக்குடா’’ என்றான் நண்பன். ‘’இன்னைக்கு ஆபீஸ் லீவு.. ரூம்ல போர் அடிக்கும்ல’’ என்றேன். அவன் சில கேன்டிமேன் சாக்லேட்டுகள் வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்கும் போர் அடிக்கும்ல!

சாப்பாட்டு கடைதேடி அலைந்து திரிந்து கடுப்பாகி.. அறைக்கு திரும்பினோம். இன்னொரு நண்பன் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அலுவலகத்திலிருந்து மெசேஜ் விடுமுறை என. ஐய்யா ஜாலி என நினைத்துக்கொண்டேன். அறையில் சமைப்பதில்லை. சமைப்பதற்கான எந்த பாத்திரமும் கிடையாது. இருப்பதெல்லாம் நாலு பாய், தலைகாணி, பெட்சீட்டும்தான். மீண்டும் பசித்தது!

கடலை மிட்டாய்தான் இருந்தது. இரண்டை மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டேன். நண்பர்களுக்கும் கொடுத்தேன். மதியம் நிச்சயம் மழை நின்றுவிடும் எங்காவது சாப்பிடபோய்விடலாம் என நம்பினோம். மழை நிற்கவேயில்லை. பசியை மறக்க நான்குபேரும் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்தோம்.

அறைக்குள்ளேயே பேப்பரை சுருட்டி நோட்டுபுத்தகத்தில் கிரிக்கெட் ஆடினோம். சீட்டுக்கட்டை குலுக்கிப்போட்டு விளையாடினோம். சோர்வாகி படுத்தோம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மீண்டும் ஆளுக்கொரு கடலை மிட்டாயை வாயில் போட்டுக்கொண்டோம். மதியமாக ஆக ஆக பசி அதிகமானது.

மீண்டும் சாப்பாடு வேட்டை. எங்கள் பசியைப்போலவே இப்போது தண்ணீர் இன்னும் இன்னும் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது. சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மழை முன்பைவிட அதிகமாக பெய்ந்துகொண்டிருந்தது. வேறு வழியில்லை. பசிக்கிறது. எங்காவது கடையை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டே ஆகவேண்டும்.

நண்பன்தான் முதலில் தண்ணீரில் இறங்கினான். மெதுவாக அடியெடுத்து நடக்க.. அவன் காலுக்கு கீழேயிருந்து ஒரு பாம்பு தண்ணீருக்குள்.. அலைகளை எழுப்பியபடி வளைந்து வளைந்து சென்றது.. சென்னைல கூட பாம்பு இருக்குமா? அவ்வளவுதான்.. எங்க படை குலை நடுங்கி அறைக்கே திரும்பியது. ‘’மச்சான் தண்ணீல பாம்பு கடிச்சா கூட தெரியாதுடா.. பக்கத்துல காப்பாத்த ஹாஸ்பிடல் கூட கிடையாது பார்த்துக்க’’..
மாலைக்குள் மழை நின்றுவிடும் என நம்பினோம்.. அதுவரைக்கும் இந்த கடலை மிட்டாயும் கேன்டிமேனும் வைத்து சமாளிக்க நினைத்தோம். ஆளுக்கு சரிபங்காக பிரித்து சாப்பிட்டோம். நான் என்னுடைய பங்கில் கொஞ்சம் எடுத்து வைத்துக்கொண்டேன்.

ஒருவேளை இரவுக்கும் உணவு கிடைக்காவிட்டால்? நிஜமாகவே கிடைக்கவில்லை. மழை நிற்கவேயில்லை. பாத்திரங்கள் இருந்தாலாவது சமைக்கலாம்.. அதுவும் இல்லை.. பாத்திரங்கள் இருந்தாலும் அரிசி பருப்பு வாங்க இயலாது.. கடைகள் இல்லை.. யாராவது சென்னை நண்பர்கள் நம்மை அழைத்துவிடமாட்டார்களா.. சாப்பாடு கொண்டுவந்து தரமாட்டார்களா.. அட்லீஸ்ட் விசாரிப்பாவது.. ம்ஹூம்.

தொலைகாட்சி செய்தி பார்த்து பயந்துபோய் வீட்டிலிருந்து அழைத்துவிசாரித்தனர்.. ‘’என்னய்யா சாப்ட்டீயா.. கடையெல்லாம் திறந்திருக்கா.. அவிங்க தின்னாய்ங்களா’’ அம்மா கேட்டாள்.

‘’திறந்திருக்குமா.. சாப்டேன்ம்மா.. நம்ம சுரேந்தர்தான் போயி சாப்பாடு வாங்கிட்டுவந்தான்.. நீ கவலைப்படாதம்மா.. ஆபீஸ் லீவு’’

‘’இல்லப்பா ரோடெல்லாம் தண்ணி வெள்ளமா ஓடுது.. கடையெல்லாம் மூடிட்டாங்க.. பஸ்லாம் கூட ஓடலைனு நியூஸ்ல சொல்றாங்கப்பா..’’

‘’அம்மா.. நாங்க இருக்கற ஏரியா உயரமான இடம்.. அதனால இங்க நார்மலாதான் இருக்கு. நீ கவலைபடாத மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடு உடம்பை பார்த்துக்கோ’’

‘’இல்லப்பா.. எதுனா பிரச்சனைனா சொல்லுப்பா.. முடிஞ்சா ஊருக்கு கிளம்பி வாப்பா.. மனசே கேக்கல.. சாப்பாடு கிடைக்குதாப்பா.. பிரச்சனையில்லயே’’

‘’ஒன்னுமில்லம்மா..’’

என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தபின்தான் தொடங்கியது. ஓவென கதறி கதறி அழவேண்டும் போல இருந்தது. அம்மாவின் கையால் ஒரு பிடி சாப்பிடவேண்டும் போல இருந்தது.

நான்குபேரும் வீட்டில் ஓரே பொய்யை சொன்னோம். பசியைவிட அம்மாவின் குரல் அதிகம் வலித்தது. நிறைய தண்ணீர் குடித்தோம். பசியோ காய்ச்சலோ தனிமையோ சோகமோ துக்கமோ பேச்சிலர்களுக்கு அம்மாவின் குரல்தான் அருமருந்து. அதுமட்டும் இல்லையென்றால் தினம் ஒரு பேச்சிலர் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்.

விடியட்டும் எல்லாமே மாறிவிடும். மழை ஓய்ந்துவிடும். கடைகள் திறந்துவிடும்.. வயிறுநிறைய சாப்பிடலாம். வசனம் சொல்லி வயிற்றை தேற்றிக்கொண்டோம். இரவெல்லாம் தூக்கமேயில்லை.. மின்சாரமும் இல்லை. பசி மயக்கத்தில் காதடைத்தபோதும் மழையின் கோரமான ஒலி கேட்டுக்கொண்டேயிருந்த்து. எப்போது விடியும் என காத்திருந்தோம். மழை ஓய்வதைப்போலவும் கடைக்குப்போய் சாப்பிடுவதைப்போலவும் கனவு கண்டேன். சோற்றை அள்ளி அள்ளித் தின்றேன். பசியடங்கவேயில்லை. விடிந்தது. மழை ஓயவேயில்லை.

கடலைமிட்டாயும் கேன்டிமேனும்கூட காலியாகிவிட்டிருந்தது. முந்தைய நாளைவிடவும் இப்போது இன்னும் இன்னும் அதிக மழை... அதைவிட அதிகமாய் பசி.. கண் கலங்கி தண்ணீராய் ஊற்றெடுக்கிறது. சாலையில் அதிக வெள்ளம். வீட்டருகிலிருந்து குடிசைகள் மிதந்துகொண்டிருந்தன. இங்கே வசித்தவர்கள் எல்லாம் எங்கே போயிருப்பார்கள்? அதை பற்றி யோசிக்க நேரமில்லை.

மழையாவது வெள்ளமாவது பாம்பாவது.. பச்சோந்தியாவது.. பசிவந்தால் வீரமும் கூடவே வந்துவிடுகிறது. கிளம்பினோம். தண்ணீருக்குள் முங்கி முங்கி.. தெருத்தெருவாக அலைந்தோம். ஒரு கடைகூட இல்லை. டீக்கடைகளும் இல்லை. சாலைகளில் நாங்கள் மட்டும் அநாதைகளைப்போல உணர்ந்தோம். வாடிய முகத்தோடு அறைக்கே திரும்பினோம். மின்சாரமில்லாமல் இருட்டாகிவிட்டிருந்த அறைக்குள் திசைக்கொருவராய் அமர்ந்துகொண்டு.. அமைதியானோம். விளையாட பொழுதுபோக்க தெம்பில்லை. இன்னும் இரண்டு நாள் இப்படியே போனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊருக்கும் போக முடியாது.. உதவிக்கு யாரை அழைப்பது? அழவேண்டும் போல இருந்தது.

அப்படியே உறங்கிப்போனேன். கனவேயில்லை. மதியம் மீண்டும் விழித்தேன். மீண்டும் தேடுதல்.. இரவாகியும் மழை நின்றபாடில்லை. உதவிக்கு யாருமில்லை. அநாதைகளைப்போல உணர்ந்தோம். அடுத்த நாள் அதே மழையோடு விடிந்தது. மூன்றாவது நாள். அன்றைக்கும் மழை நிற்காவிட்டால் நடந்தே தாம்பரமோ செங்கல்பட்டோ எங்காவது... எங்காவது போய் கிடைப்பதை சாப்பிட முடிவெடுத்திருந்தோம்.
எங்கிருந்தோ ஒரு சாப்பாட்டு வாசனை.. மழை லேசாக ஓய்ந்திருந்தது.

பசியோடிருப்பவனுக்கு சாப்பாட்டு வாசனைதான் மாபெரும் எதிரி. நான்குபேருக்கும் அந்த வாசனை என்னவோ செய்தது. எங்காவது பக்கத்துவீட்டில் சமைத்தால் போய் பிச்சை எடுத்தாவது சாப்பிடலாமா என்கிற எண்ணம் வேறு. கேட்டுவிடுவோமா என்றேன். கேட்கலாம்தான்.. மற்ற மூவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் தயக்கம்.
பசி வந்தால் எது பறந்தாலும் மானம் ரோஷத்துக்கு மட்டும் குறைச்சலேயிருக்காது. பேசாமல் அமர்ந்திருந்தோம். நண்பனோ பேசாம பக்கத்துவீடுகள் எங்கயாச்சும் போயி திருடி சாப்பிடுவோமா என்றான். புன்னகைத்தான்.

இன்னும் ஒரு செஷன் பசியோடு கடத்தினோம். மாலையாகிவிட்டது. ஒரு குவளை சோறு கிடைத்தாலும் உயிரையே கொடுக்க தயாராயிந்தோம். மழையின் ஈரமும்.. அலைந்து திரிந்த சோர்வும் பசியை பன்மடங்கு அதிகமாக்கியிருந்தது.

மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் ஏரியாவே இருளில் மூழ்கி கிடந்தது. அந்த சாப்பாட்டு வாசனை இன்னமும் வந்துகொண்டேயிருந்தது. பசிக்குதான் எவ்வளவு மோப்பசக்தி. வாசனை வன்கொடுமை புரிந்தது. என்னால் ஒரு அடிகூட நகர முடியவில்லை. அப்படியே முடங்கி கிடந்தேன். எங்களில் ஒருவன் ‘’எதாவது வாங்கிட்டு வரேன்டா.. மெடிக்கல்ஷாப்பாச்சும் இருக்கும்.. குளுக்கோஸ் பாக்கெட்டாச்சும் வாங்கிட்டுவரேன்.. ஹார்லிக்ஸ் பாட்டிலாச்சும் கிடைக்கும்.. இவனைபாரு செத்துப்போயிடுவான் போல.. இப்படி கெடக்கறான்..’’ என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினான்.

எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.. இரண்டு நாள் சாப்பிடாட்டி யாராச்சும் சாவாங்களா? ஒருவேளை செத்துட்டா.. போஸ்ட் மார்ட்டம் பண்ணுவாங்களா? பிரண்ட்ஸ்மேல கேஸ் போடுவாங்களா? அம்மா அழுவாங்களே.. அது இது என என்னென்னவோ சிந்தனைகள். தனியாக பேசிக்கொண்டிருந்தேன். என்ன பேசுகிறேன் என்று புரியவில்லை. அந்த வாசனை மட்டும் மூக்கிலேயே இருந்தது. அது இப்போது நெருங்கி நெருங்கி வருவதாக உணர்ந்தேன். நண்பன் என்னை உலுக்கினான். ‘’வாடா சாப்பிடலாம்’’ என்றான். கண் முன்னே சாம்பார் சாதம்.. நாலைந்து பொட்டலங்கள் பிளாஸ்டிக் கவரில் இருந்தன.

‘’மச்சி.. பக்கத்துல ஒரு கல்யாணமண்டபத்துல சேரி ஆளுங்கள தங்க வச்சிருக்காங்க போல.. அவங்களுக்கொசரம் தல ரசிகர் மன்றமோ இயக்கமோ.. மொத்தமா சமைச்சி போடுறாங்க.. அதான் வாசனை. நானும் போயி நம்ம நெலமைய சொன்னேன்.. பார்சல் பண்ணி குடுத்தாங்க.. நாளைக்கும் மழை பெஞ்சா வாங்க தரோம்னாங்க’’ என்றான்.

மழை நின்றுவிட்டிருந்தது. நிறைய சாப்பிட்டோம். நிம்மதியாக உறங்கினோம். அதற்குபிறகு அப்படியொரு மழை சென்னையில் பெய்யவேயில்லை.


(புதியதலைமுறை வார இதழுக்காக எழுதியது. நன்றி - புதியதலைமுறை)



கும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்




தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகளை விரும்புகிறவராக இருந்தால் தீட்சிதர் கதைகளையும் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். இந்த மூவரின் நவீன வார்ப்புதான் தீட்சிதர். கும்பகோணத்தை சேர்ந்த குப்புசாமி தீட்சிதர் சரியான குறும்புக்கார கிழவர். அவருடைய அங்கதமும் தந்திரமும் கலந்த சேட்டைகள்தான் இந்த எளிய கதைகளின் மையம். சில கதைகள் மேலே குறிப்பிட்ட மூவரின் கதைகளின் சாயலிலேயே எழுதப்பட்டுள்ளது.

இது குழந்தைகள் கதைகள் கிடையாது. பெரியவர்களுக்காக அக்காலத்தில் எழுதப்பட்ட கதைகள். இந்த தீட்சிதர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கிற சுவாராஸ்யமான மனிதர்கள், அல்லது சம்பவங்களை ஒட்டி இக்கதைகளை எழுதியிருக்கிறார் பம்மல் சம்பந்தமுதலியார்.

1936 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இக்கதைகளில் அக்காலகட்டமும் , அதன் நகரத்து மனிதர்களும் அச்சு அசலாக வருகிறார்கள். டிராம் வண்டி,கொடியாட்டினால் ரயில்கள் நிற்கிற ஸ்டேஷன்கள், தமிழகத்திற்கு விஜயம் செய்கிற இங்கிலாந்து சக்கரவர்த்தி, ஆங்கிலேய கலெக்டரோடு தீட்சிதரின் அனுபவம் என இன்னும் நிறைய அதிசயக்கிற விஷயங்கள் உண்டு.

ஒரு கதையில் தீட்சிதர் ஏப்ரல் ஃபூல் பண்ணி விளையாடுகிறார் , 80 ஆண்டுகளுக்கு முன்பே! இன்னொரு கதையில் டிராம் வண்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றுகிறார். இன்னொரு கதையில் பேய் பிடித்ததாக ஏமாற்றும் பெண்ணுக்கு சரியான பாடம் கற்பிக்கிறார். எல்லாகதைகளிலும் மையமாக நகைச்சுவையும் ஆச்சர்யப்படுத்துகிற ட்விஸ்டுகளும் உண்டு.

இன்று நாம் நம்முடைய திரைப்படங்களில் திரும்ப திரும்ப பார்க்கிற சில காமெடிகளின் ஆதிமூலத்தை இக்கதைகளில் காண முடிகிறது. வில்லன்களுக்கு பேதி மாத்திரை கொடுப்பது, டிரைனில் டிக்கட் எடுக்காமல் டிடிஆரை ஏமாற்றுவது, பேய் பிடித்தவரை வைத்து செய்யப்படுகிற நகைச்சுவை, கடன்காரனுக்கு காசு கொடுக்காமல் டபாய்ப்பது, டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் (இவர் காலத்தில் ட்ராம்) பயணித்து தப்பிப்பது என நிறைய இந்நூலில் உண்டு.

ஒரு முறை தீட்சிதர் வீட்டில் திருடன் ஒருவன் நுழைந்து விடுகிறான். அவன் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும் என கொல்லைபுறத்தில் காத்திருக்கிறான். சாப்பிட்டு முடித்து கை கழுவ போன தீட்சிதர் அவனை பார்த்துவிடுகிறார். ஆனால் உடனே எதுவும் செய்யாமல் அமைதியாக அருகில் இருக்கிற அண்டாவில் தண்ணீரை மோந்து வாயில் ஊற்றி ஊற்றி கொப்புளிக்க ஆரம்பிக்கிறார்.

கொப்புளித்த நீரை மறைந்திருக்கும் திருடன் மீது துப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்து துப்ப நனைந்துகொண்டேயிருந்தாலும் திருடன் பதுங்கியே இருக்கிறான். கைகழுவ போன மனுஷனை காணோமே என தீட்சிதரின் மனைவி வந்து பார்க்க இந்த ஆளோ துப்பிக்கொண்டே இருக்க.. என்னங்க நீங்க என்னாச்சு உங்களுக்கு என கேட்கிறார். தீட்சிதரோ மனைவியின் மீதே இப்போது துப்ப தொடங்கிவிடுகிறார். அதுவும் விடாமல்.. இவருக்கு பித்து பிடிச்சிடுச்சி போலருக்கே என்று பக்கத்து வீடுகளில் போய் சொல்ல.. அவர்கள் சிலர் மொத்தமாக வந்து என்ன ஓய் உங்க ஆத்துகாரி மேல துப்பறேளாமே என்று கேட்க.. தீட்சிதர்..

''கேளுங்கோ முதலியார்... என் ஆத்துக்காரிக்கு நூரு ரூபாவுக்கு நகைநட்டு பட்டுசேலை எல்லாம் வாங்கிகொடுத்திருக்கேன்.. ஆனா நான் ஒருவாட்டி துப்பக்கூடாதா.. என்ன அநியாயம்.. இங்கே கிணத்துக்கு பின்னால ஒரு நல்லவர் இருக்கிறார். அவர் மேல அரைமணிநேரமா துப்பறேன் ஆனா அவர் ஏன் துப்பறீங்கனு ஒரு வார்த்தை கேட்டிருப்பாரா.. எவ்வளவு மரியாதை. அந்த நல்லவருக்கு இருக்கற பொறுமை என் ஆத்துக்காரிக்கு இல்லையே.. '' என்று சொல்ல.. பக்கத்து வீட்டுக்காரர்கள் சேர்ந்து திருடனை பிடிக்கிறார்கள். அதோடு தீட்சிதரின் தந்திரத்தையும் ரசிக்கிறார்கள் என கதை முடிகறிது.

இதேபோல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தீட்சிதர் பண்ணுகிற அலும்புக்கு அளவே இல்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் வெள்ளைக்கார துரையோடு ரயிலில் பயணித்து அவருடைய கர்வத்தை அடக்குகிறார்.

ஒருமுறை கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்து ஜட்கா வண்டி ஒன்றை பிடிக்கிறார். கட்டணம் பேரம் பேசி ரேட் படியாமல் சண்டைபோடுகிறார்கள் தீட்சிதரும் ஜட்காவண்டிக்காரனும்.

இப்போது ஆட்டோவுக்கு மீட்டர் கட்டணம் போல அந்தகாலத்திலும் ஜட்கா வண்டிக்கு கூட அரசே ரேட் நிர்ணயத்திருக்கிறது என்பதை இக்கதையில் பார்க்க முடிகிறது. நிர்ணயித்த தொகைக்கு மேல் கேட்கிற ஜட்காவண்டிக்காரனை தந்திரமாக காவல்துறையிடம் பிடித்துக்கொடுக்கிறார் தீட்சிதர். நூல்முழுக்க குறும்புக்கார தாத்தாவின் கதையோடு அக்காலக்கட்டத்தின் வாழ்க்கைச் சூழலும் சொல்லப்படுகிறது.

தாத்தாவின் இந்த குணத்தைதான் கும்பகோணம் குசும்பு என்று சொல்வார்களோ என்னவோ.. ஆனால் படிக்க செம சுவாரஸ்யம். கூடவே ஒரு நூறு ஆண்டுக்கு முந்தைய காலத்து மனிதர்களையும் சூழல்களையும் கூட அறிந்துகொள்ள முடிகிறது.

28 கதைகள் கொண்ட இந்த குட்டிபுத்தகத்தை ஒரு மணிநேரத்தில் ஏதாவது புத்தகக்கடையிலேயே சும்மா புரட்டுவது போல பாவனை செய்துகொண்டேகூட படித்துமுடித்துவிடலாம். எழுத்து நடையும் எளிமையாகத்தான் இருக்கிறது.

புத்தகமெங்கும் இடம்பெற்றுள்ள கார்டூன் போன்ற ஓவியப்படங்கள் நூலுக்கு மேலும் சுவைசேர்க்கிறது. அவை அக்காலகட்டத்திலேயே வரையப்பட்டதா தெரியவில்லை. அதுபற்றிய குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஆனால் வரைந்தவர் நிச்சயம் சிறப்பாகவே வரைந்துள்ளார். நகைச்சுவை கதைகள் பிடிக்குமென்றால் நிச்சயம் வாசிக்கலாம்.

தீட்சிதர் கதைகள்
சந்தியா பதிப்பகம்
விலை 55

04 November 2013

நவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்






ஜெயமோகன் எழுதி 1995ல் வெளியான நூல் ‘’நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’’. சமகாலத்திற்கேற்ற சில மாற்றங்களோடு 2007ல் உயிர்மையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது (இப்போது நற்றிணைப்பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்). சமீபத்தில்தான் இந்தபுத்தகம் வாசிக்க கிடைத்தது.

இலக்கிய உலகிற்குள் நுழைய விரும்புகிற இளம் வாசகர்களுக்கான கோனார் நோட்ஸ் என்று இந்நூலை பற்றி இரண்டுவரியில் சொல்லலாம். இவ்வளவு எளிமையாகவும் உதாரணங்களோடும் இலக்கியத்தை எந்த எழுத்தாளருமே கற்றுத்தரமாட்டார்கள். ஒன்னாங்கிளாஸ் குழந்தையின் பென்சில் பிடித்த கையை பிடித்து ஸ்லேட்டில் வைத்து அனா ஆவன்னா போட்டு கற்றுத்தருகிற ஸ்கூல் மிஸ்ஸுக்கு இணையாக இலக்கியப்பாடமெடுக்கிறார் ஜெமோ. சிறுகதை என்றால் என்ன? நாவல் எப்படி எழுதப்படுகிறது? கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்பதெல்லாம் கூட இந்நூலில் கற்றுக்கொடுக்கிறார் ஜெயமோகன்.

நவீன தமிழ் இலக்கியம் என்றால் என்ன? எது இலக்கியம்? ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும்? என்பதில் தொடங்குகிறது நூல். அதோடு இலக்கியத்தை வாசிப்பது ஒரு மிகவும் நுணுக்கமான பயிற்சி என்கிறார். ஒரு வாசகன் எப்படி படிப்படியாக இலக்கியதை அடையவேண்டும் என்பதுவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குழந்தையிலக்கியத்தில் தொடங்கி சாகசக்கதைகள் , மெல்லுணர்ச்சிக்கதைகள் வழியாக இலட்சியவாத எழுத்துகளை தாண்டி நல்ல இலக்கியபடைப்புகளை அடைவதே சரியான ரூட் என்கிறார் ஜெமோ.

இலக்கிய உலகிற்குள் புதிதாக நுழைகிற இளம் வாசகன் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை? என்னங்க ஒன்னுமே புரியல என்பதுதான். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை ஏன்படிக்கவேண்டும். புரியாத ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும் என்பதுமாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது நூலின் முதல் பகுதி. இலக்கியத்தின் அடிப்படைகள் என்னென்ன? படைப்புமொழி என்பது என்ன? இலக்கியத்தோடு சமூகமும் அரசியலும் எப்படி தொடர்புகொள்கின்றன என்பதுமாதிரி நிறைய விஷயங்கள் இந்நூலில் உண்டு.

இலக்கிய சூழலில் போலி பாவனைகள் என்கிற பகுதி மிகவும் கவர்ந்தது. இலக்கிய உலகில் உலவுகிற டூபாக்கூர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை இந்தப்பகுதி விளக்குகிறது. ஒரு படைப்பில் படிமம் என்பது என்ன? குறியீடு என்பது என்ன? ஒரு படைப்பு எப்போது செவ்வியல் அந்தஸ்தை பெறுகிறது. நாட்டார் வழக்கிலிருந்து செவ்வியல் தன்மையை அடைந்த படைப்புகள் என்ன என்பது மாதிரியான புரிந்துகொள்ள கடுப்படுக்கிற விஷயங்களையும் எளிமையாக விளக்குகிறார் ஜெமோ.

நூலின் இரண்டாம்பகுதி நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை சொல்கிறது. மணிக்கொடி காலத்தில் தொடங்கும் வரலாறு உயிர்மை காலம் வரைக்கும் நீள்கிறது. அவ்வரலாற்றின் வழியாக தமிழ் இலக்கியத்தில் என்னமாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நம்முடைய முன்னோடிகள் யார்? அவர்கள் எழுதியது என்ன? வணிக எழுத்து சூழலின் சவால்களை எப்படி எதிர்கொண்டனர் என்பதுமாதிரியான சங்கதிகளும் இவ்வரலாற்றின் வழியே சொல்லப்படுகிறது. ஐந்து தலைமுறை எழுத்தாளர்களின் வழியே தமிழ் இலக்கியம் எந்த இடத்தை வந்தடைந்திருக்கிறது என்பதை இப்பகுதி மிகசிறப்பாக சொல்கிறது. அதோடு மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம், விமர்சன இலக்கியம் மாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது.

கடைசி பகுதியில் இலக்கிய இயக்கங்கள்,கோட்பாடுகள் மாதிரியான விஷயங்களை விளக்க முயல்கிறார் ஜெமோ. ஆனால் அவர் எழுதியிருக்கிற விளக்கங்களை படித்து புரிந்துகொள்ள ஏதாவது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிற அளவுக்கு அது சிக்கலான சப்ஜெக்ட்டாக இருக்கிறது. இன்னும் கூட எளிமையாக நிறுத்தி நிதானமாக விளக்கியிருக்கலாம். அவசரமாக எழுதப்பட்ட பக்கங்கள் அவை.

செவ்வியல்,அழகியல்,கற்பனாவாதம்,நவீத்துவம்,பின்நவீனத்துவம்,தலித்திய இலக்கியம்,மீபொருண்மைவாதம்,மாய யதார்த்தவாதம்,சர்ரியலிசம் மாதிரியான பேரைக்கேட்டாலே நமக்கு பேஜாராகிற விஷயங்கள் குறித்த விளக்கங்களும் அதுமாதிரியான தமிழ்படைப்புகள் குறித்த அறிமுகமும் நூலில் இடம்பெற்றுள்ளன. செவ்வியலாக்கம்,நாட்டார்வழக்காற்றியல் மாதிரியான விஷயங்களை பற்றிய விளக்கங்களையும் ஜெயமோகன் எளிய மொழியில் கொடுத்திருக்கிறார். நூல் முழுக்க ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர் இலக்கியம் குறித்த அறிமுகமும் உண்டு.

அதோடு பாரதி,புதுமைபித்தன்,குபரா தொடங்கி கண்மணிகுணசேகரன்,ஷோபாசக்தி,சாருநிவேதிதா,யுவன்சந்திரசேகர் வரை வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களைபற்றியும் அவர்களுடைய படைப்புலகம் குறித்த அறிமுகமும் கூட உண்டு. கு.அழகிரிசாமி மற்றும் பிரபஞ்சன் குறித்து ஒரே கருத்தை முன்வைக்கிறார் ஜெயமோகன். இருவருமே எழுத்தையே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால் அவர்களுடைய எழுத்தில் செறிவில்லை. அதோடு மிக அதிகமாக எழுதி தங்களுடைய எழுத்துதிறனை குறைத்துக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார். சாருநிவேதிதாவை பற்றி குறிப்பிடும்போது இலக்கிய வம்புகளையும் பலவகையான ஊடக செய்திகளையும் பாலியல் மனப்பாய்ச்சல்களையும் கலந்து எழுதியவர் என்கிறார்.

நூலில் ஐந்தாம் தலைமுறை மற்றும் இன்றைய இலக்கியம் இரண்டு பகுதிகளிலும் ஒரே கட்டுரை வெவ்வேறு வகையில் எடிட் செய்யப்பட்டு நாற்பது பக்கங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது. நூலின் கடைசியில் பின்னிணைப்பாக இலக்கிய உலகில் பயன்படுத்தப்படும் சிக்கலான வார்த்தைகள் (விழுமியங்கள்,புறமொழி,நனவிலி,நிகழ்வியல்,படிமம் மாதிரியான எண்ணற்ற சொற்களுக்கான அகராதி ஒன்றும் உள்ளது. படிக்க வேண்டிய நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் பட்டியலும் உண்டு.

நவீன தமிழ் இலக்கியத்திற்குள் வாசகனாகவோ எழுத்தாளனாகவோ நுழைய விரும்புகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய எளிய நூல் இது. அது மட்டுமில்லாமல் நம்முடைய இலக்கி வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும். இது நவீன தமிழ் இலக்கியத்திற்கான ஜன்னலாக இருக்கும்.. இலக்கியம் குறித்த தேடலை உருவாக்கும். அந்த வகையில் இது நிச்சயம் முக்கியமான நூல்.

03 November 2013

தனிமையின் நண்பர்கள்



வீட்டில் எல்லோரும் ஊருக்கு போய்விட்டதால் இந்த ஆண்டு பேச்சிலர் தீபாவளிதான். அதனால் தனிமையில் வீட்டில் ஒத்தக்காச்சி மாதிரி டிவியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டாமே என்று எங்காவது போகலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு அழைத்தார்.

மிக நல்ல நண்பர். போகும்போது நிறையவே உணவும் இனிப்புகளும் பார்சலும் கொடுத்தனுப்பினார். நான் எப்போதும் போல வேண்டாம் என்று சும்மாங்காச்சிக்கும் முதலில் மறுத்தேன். மனதிற்குள் பயம்தான் எங்கே சரிபரவால்லங்க என்று திரும்பி வைத்துக்கொள்வாரோ என்று.. ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. நல்ல நண்பர். நிறையவே உணவும் இனிப்புகளையும் தூக்கமுடியாத அளவுக்கு நிரப்பிக்கொடுத்தார். அப்பாடா நைட்டுக்காச்சு என்று நினைத்தபடி கிளம்பினேன். இல்லையென்றால் மீண்டும் இரவுக்கு அந்த இரண்டுநிமிட மேகியைத்தான் புசிக்க வேண்டியதாயிருக்கும்.

பள்ளிக்கரணையிலிருந்து கிளம்பி முகப்பேர் போவது ஒரு சலிப்பூட்டுகிற பயணம். ஆனால் இன்று தீபாவளி என்பதால் சாலைகளில் அதிக கூட்டமில்லை. புத்தாடை உடுத்தி முகத்தில் புன்னகையோடு கடக்கிற மைனாக்களையும் மயில்களையும் பார்த்தபடி சுகமாக வண்டியோட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். கையில் காசில்லாததை உணர்ந்து சைதாப்பேட்டை பக்கமாக ஒரு ஏடிஎம்மில் நிறுத்தினேன்.

ஏடிஎம்க்கு பாதுகாப்புக்காக ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். விரலால் உந்தித்தள்ளினாலே உதிர்ந்துவிடுகிற உறுதியான தேகமும் முகத்தில் எண்ணெய் வழிய கொஞ்சமாக சோகத்தையும் அப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார். இவருக்கே இரண்டு பேர் பாதுகாப்புக்கு வேணுமே என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

வண்டியை ஓரமாக நிறுத்தி ஏடிஎம் கதவை திறக்க... ''தம்பி ஹெல்மெட்டை கழட்டிடுங்க.. திட்டுவாங்க'' என்றார். யார் திட்டுவார்கள் யாரை திட்டுவார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அவர் திட்டுவாங்கியிருப்பார் என்பதை உணர்ந்து உடனே கழற்றினேன்..

தம்பி அந்த கர்சீப்பையும்..

கழட்டினேன்.

உள்ளே நுழைந்து பணத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேறும்போது, வண்டியை எடுக்க உதவியபடி சல்யூட் அடித்தார். பாக்கெட்டில் சில்லரை தேடினேன்.

உடனடியாக அகப்படாத அந்த இரண்டு ரூபாயைத் தேடிக்கொண்டே அந்த பெரியவரிடம் ''என்ன தாத்தா இங்க உக்காந்திருக்கீங்க தீபாவளியெல்லாம் இல்லையா'' என்று பேச்சுக்கொடுத்தேன். கையில் ஐந்து ரூபாய் அகப்பட்டது கொடுத்தேன். புன்னகையோடு வாங்கிக்கொண்டார்.

''இல்ல தம்பி... ஊருக்கு போனும்.. ஆனா போல'' சொல்லும்போதே முகம் மாறியது.

''மெட்ராஸே காலியாயி கெடக்கு.. எந்த ஊரு... உங்களுக்கு''

''மதுரப்பக்கம்.. ஊர்ல பேரய்ங்க நாலு பேர் இருக்காய்ங்க.. மூனு பசங்க.. பொண்டாட்டி போய்ட்டா.. விவசாயம்தான்.. இப்ப இல்ல.. '' என்று உடைத்து உடைத்து வார்த்தைகளை முழுங்கினார். நான் தலையில் கர்சீப்பை கட்டிக்கொண்டிருந்தேன்.

''இப்ப என்ன.. சும்மா போய்ட்டு வரதுதானே''

''போலாம்தான்.. வெறுங்கையோட எப்படி போறது.. அதுமில்லாம அவிங்க நம்மள மதிக்கறதில்லனுதான் பொழப்புதேடி இங்கவந்து இந்தா இந்தவேல பாக்குறேன்''

''அதுசரி போனஸ் கீனஸ் குடுத்துருப்பாய்ங்கள்ல.. போலாம்ல..''

''இல்லப்பா இன்னும் சம்பளமே போடல.. பேமன்ட் இன்னும் பேங்க்லருந்து வரலனு ஆபீஸ்ல சொல்ட்டாங்க என்ன பண்றதுனு தெரியல... அப்படியே வந்தாலும்.. என்னத்த குடுத்துறப்போறானுங்க.. மூவாயிரத்து ஐநூறு ரூவா தருவாய்ங்க.. அது திங்கறதுக்கும் தங்கறதுக்குமே போயிடும்.. ஊருக்குன்னா துணிமணிகினிமணி வாங்கிட்டு போனாதான மரியாத'' என்றார். எனக்கு அவர் சொல்வதில் பாதி புரிந்தும் புரியாமலுமிருந்தாலும்... உம் கொட்டிக்கொண்டிருந்தேன். ஊரில் விவசாயம் பார்த்தது, சினிமா வாய்ப்புத்தேடி முதல்முறை சென்னை வந்தது, காதலித்து தன் மனைவியை திருமணம் செய்துகொண்டது...

இப்போது ஏடிஎம் வாசலில் இருந்த அவருடைய சீட்டுக்கு அருகில் ஏடிஎம் வாசலில் அமர்ந்துவிட்டிருந்தேன்.

ஊருக்குள் முதன்முறையாக பைக் வாங்கியது, அண்ணன் தம்பி பிரச்சனையில் சொத்து விவகாரம் கோர்ட்டுக்கு போக எல்லாவற்றையும் இழந்தது என நிறையவே பேசிக்கொண்டேயிருந்தார். மகிழ்ச்சியான தருணங்களை சொல்லும்போது எம்ஜிஆராகவும் சோகம் வரும்போது சிவாஜியாகவும் மாறி மாறி அவர் முகம் அபிநயிக்க நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

''என் பொண்டாடி இருந்திருந்தா இப்படிலாம் தனியா கெடந்து...'' என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவர் நிறுத்திக்கொண்டார். அவருடைய குரலும் அவருடைய ஏதோ மோசமான துக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. க்க்க்க் என்று இருமினார். ''உடம்பை பார்த்துக்கங்கோங்க தாத்தா நான் கிளம்பறேன்'' என்று சொல்லிவிட்டு என்னுடைய விசிட்டிங் கார்ட் ஒன்றை கொடுத்து எதுனா உதவி வேணும்னா சொல்லுங்க என்றபடி என் பைக்கை எடுக்க மீண்டும் கிளம்பினேன்.

என்னவோ ஒரு உந்துதல்... திரும்பி அவரிடம் சென்று ''சாப்டீங்களா'' என்றேன். இல்லை என்றார்.

எப்படியும் எங்காவது மெஸ்ஸிலோ அல்லது கையேந்தி பவனிலோதான் சாப்பிடுவாராயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். கையிலிருந்த பார்சலை அவரிடம் கொடுத்தேன். ''நல்லா சாப்டுங்க.. ஸ்வீட்டுருக்கு இரண்டு நாள் வச்சு சாப்டுங்க..'' என்று கொடுத்தேன் வேண்டாம் என்றார். புடிங்க தாத்தா ஹேப்பி தீபாவளி என்று திணித்தேன்.

அவசரமாக ஏடிஎம் உள்ளே போய் ஒரு நூறுரூபாய் எடுத்து அவர் கையில் கொடுத்தேன். வேண்டாம் என்று முதலில் நிறையவே மறுத்தார். கையில் வைத்து ''நான் உங்க பேரன் மாதிரிதான்... வச்சிக்கோங்க.... ஹேப்பி தீபாவளி'' என்று திணித்தேன். வாங்கிக்கொண்டார். போன்பண்ணுங்க என்றேன் தலையசைத்தார். சரிதாத்தா கிளம்பறேன் என்றேன். கையை பற்றிக்கொண்டார். எதுவுமே பேசவில்லை. நான் கிளம்ப அவர் என்னை பார்த்துக்கொண்டேயிருந்தார்.

கிளம்பி வீடுவந்துசேர்ந்த பின்தான் நினைப்பு வந்தது அந்த தாத்தா பேரை கேக்கவே இல்லையே.. அவரும் என் பேரை கேக்கவே இல்லை.