Pages

30 July 2013

அன்னயும் ரசூலும்





அன்னயும் ரசூலும் படத்தின் போஸ்டர்களோ, டிரைலரோ படம் பார்க்கிற ஆர்வத்தை கொஞ்சம்கூட ஏற்படுத்தவேயில்லை. இப்படத்தில் வருகிற ஒருபாடல்தான் இப்படத்தை பார்க்கத்தூண்டியது. ‘’கண்ணு ரெண்டு கண்ணு, கதவின் மறைவில் நின்னு’’ என்று போகிற அந்த பாடல் ரொம்பவே ஈர்த்தது. நம்மூர் கானாபாடல்களை ஒத்த பாடல் இது! இப்பாடலை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்பதை பார்ப்பதற்காகவே இப்படத்தை தேடி பார்த்தேன்.

மலையாள மண்ணின் புது நட்சத்திரம் பஹாத் ஃபாசிலும் , நம்மூர் ஆன்ட்ரியாவும் சேர்ந்து நடித்திருக்கிற இப்படம் மிகமிக எளிமையான கதையினை கொண்டிருக்கிறது. கொச்சினில் கார்டிரைவராக வேலைபார்க்கிற இஸ்லாமிய இளைஞன் பஹாத்துக்கும் , துணிக்கடையில் வேலைபார்க்கிற கிறிஸ்தவ பெண்ணான ஆன்ட்ரியாவுக்குமான காதல்தான் படத்தின் முக்கிய கதை. இவை தவிர சுவாரஸ்யமான தனியாகவே முழு திரைப்படமாக எடுக்கிற அளவுக்கு வலிமையான கிளைக்கதைகளும் படம் நெடுகிலும் அநேகமுண்டு!

சாதிமத வேறுபாடுகள் எல்லா காதலுக்கும் வில்லனாவதைப்போலவே அன்னா,ரசூல் ஜோடிக்கும் வில்லனாகிறது. இறுதியில் காதல் தோற்கிறது. காதலி இறந்துபோகிறாள். காதலன் அநாதையாக காதலின் நினைவுகளை சுமந்துகொண்டு திரிகிறான். அவ்வளவுதான் படத்தின் கதை. எல்லாவிதங்களிலும் கோடி முறை சொல்லப்பட்ட அதே பழைய காதல்தோல்வி கதைதான் என்றாலும் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் இப்படம் ஈர்க்கிறது.

இப்படம் மட்டுமல்ல இதே கதையை இதே காதல் தோல்விகளை இன்னும் எத்தனை முறை அழகாக சொன்னாலும் ஈர்க்கும்தான் போலிருக்கிறது! குறிப்பிட்ட சில விஷயங்கள் கூடிவந்தால் போதுமென்று தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் அன்னயும் ரசூலும்.
படத்தில் மிக குறைந்த பாத்திரங்கள்தான். முக்கிய பாத்திரங்களான அன்னாவும் ரசூலும் நம்முடைய அடுத்த வீட்டு ஆட்களை நினைவூட்டுகிறார்கள். அவர்கள் வாழும் இடமும், சூழலும், அவர்களுடைய நடவடிக்கைகளும் அவர்கள் பேசுகிற வசனங்களும் மிகமிக யதார்த்தம். அதுவே படத்தின் கதைக்கு மிகுந்த நம்பகத்தன்மையை கொடுக்கிறது.

அதோடு காதல் படங்களின் மிக அத்தியாவசியமான கெமிஸ்ட்ரியும் இருவருக்குமிடையே சிறப்பாக வொர்க் அவுட் ஆகியிருப்பது சிறப்பு. (ஃபகாத் பாஸில் ஆன்ட்ரியாவை விட உயரம் கம்மிதான் என்றபோதும்!). கொஞ்சம் வழுக்கையாக இருந்தாலும் ஃபகாத் நாளுக்குநாள் அழகாகிக்கொண்டே போகிறார். படம் முழுக்க பயமும் தயக்கமுமாக திரிகிறார்.

இக்கதை நடக்கிற தளமான கொச்சின் நகரின் குறிப்பிட்ட சில இடங்கள் ஒரு கதாபாத்திரத்தைப்போல படம் முழுக்க நம்மோடு பயணிக்கின்றன. ரசூல் வாழ்கிற இஸ்லாமியர் குடியிருப்பு. வைபினில் இருக்கிற கிறிஸ்தவர் காலனி, வைபினுக்கும் கொச்சின் கோட்டை பகுதிக்குமான படகுபோக்குவரத்து நடக்கிற படகு குழாம், காதலர் பயணிக்கிற அந்த படகு, அந்த படகில் பயணிக்கிற ஆட்கள், ஆன்ட்ரியா வேலைபார்க்கிற துணிக்கடைக்கு அருகேயிருக்கிற அந்த பாலம், கிறிஸ்தவர் காலனி சந்து, ஆன்ட்ரியாவின் எதிர்வீட்டில் வாழும் ஆஸ்லியின் வீட்டு ஜன்னல், ஆஸ்லியின் அறை... ஒரு சிறிய துணியால் அறைகள் பிரிக்கப்பட்டிருக்கிற ரசூலின் வீடு என ஏகப்பட்ட இடங்கள் படம் முடிந்த பின்னும் மனதிலேயே தங்கிவிடுகின்றன. அந்த இடங்களில் நாமும் வாழ்ந்ததை போல ஓர் உணர்வு அந்த அளவுக்கு அவை அதன் இயல்போடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு கொச்சினில் தங்கியிருந்த போது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு... வைபின் என்கிற பகுதியிலிருந்து கொச்சின் கோட்டைக்கு போகிற படகு போக்குவரத்துதான். நம்மூர் மினிபஸ் போல கொச்சினை ஒட்டியுள்ள தீவுப்பகுதிகளுக்குள் செல்கிற படகு போக்குவரத்து இது. மாலை நேரங்களில் நமக்கு பிடித்த அழகான பெண்களை ஏற்றிச்செல்லும் டைட்டானிக் கப்பலாக அது இருந்திருக்கிறது. கல்லூரி மாணவிகளை சைட் அடிக்க ஏற்ற இடம் இது. இங்கே வாழுகிற மக்களுக்கு இந்த போக்குவரத்து அத்தியாவசியமான ஒன்று. வெளியூர் பயணிகளுக்கு புதுமையான அனுபவம்.

இந்த படகுப்போக்குவரத்தும் அது கடக்கிற கழிமுகமும் இப்படத்தில் வருகிற காதலுக்கு சாட்சியாக படம் நெடுக வந்துகொண்டேயிருக்கிறது. அதோடு படகுக்குழாமுக்கு செல்லுகிற சிறிய புற்கள் முளைத்த பாசிபடர்ந்த சுவர்கள் கொண்ட அந்த சந்து வழியும், கோட்டை பகுதியில் இருக்கிற நெருக்கமான சுவர்கள் கொண்ட வீடுகளும், அவ்வீடுகளின் வழியெங்கும் எப்போதும் படர்ந்திருக்கிற ஈரத்தையும் அதன் குளிர்ச்சியையும் படம் பார்க்கும்போது நம்மால் உணர முடிகிறது. ஒளிப்பதிவாளரின் கேமிராவுக்கு நன்றி.

படத்தின் களம் ஒரு பாத்திரமாக இருக்கிறதென்றால், முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியிருக்கிற மற்ற சிறிய கதாபாத்திரங்களின் கதைகள் ஒவ்வொன்றுமே மிகவிரிவாக நமக்கு புரிகிற வகையில் தரப்பட்டுள்ளன. அது சில காட்சிகளே வருகிற அன்னாவின் தந்தையாக இருந்தாலும் , படம்நெடுக கதைசொல்லும் ஆஷ்லியின் கதையாக இருந்தாலும் எல்லாமே நுணுக்கமாக அக்கறையோடு சொல்லப்படுகிறது.

ரசூலின் அண்ணன் ஹைதர் எப்படியாவது இந்த நாட்டிலிருந்து வெளியேறி வளைகுடா நாடுகளுக்கு சென்றுவிட நினைப்பவன். ஆனால் அவனுடைய மதம் அவனுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதற்கான வழிகளுக்கு தடையாக நிற்கிறது. எப்போதோ ஹைதர் 13 வயதில் மட்டன்சேரி கலவரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதற்காக இன்று அவனை தீவிரவாதியை நடத்துவதுபோல நடத்துகிறது காவல்துறை. ஹைதர் வெகுண்டெழுகிறான். ஆனால் அவனுடைய எதிர்வினை மிக சாதாரணமானது. அது அவனுக்கு என்றைக்கும் பாஸ்போர்ட் கிடைக்க முடியாதபடிக்கு ஆக்கிவிடுகிறது.

ஹைதர் குறித்த காவல்துறை காட்சிகள் மிகமிக நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கின்றன. எப்போதும் அவன் இந்நாட்டில் சாதாரண இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளைப்போல நடத்தப்படுவதை விமர்சித்தவண்ணமிருக்கிறான். அவனுடைய காட்சிகள் அனைத்துமே இருளிலேயோ அல்லது இருள்சூழும் காலத்திலேயோ படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராக நடித்திருப்பவர் பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு. சென்ற ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 22 ஃபீமேல் கோட்டயம் படத்தின் இயக்குனர். விக்கிபீடியாவில் பார்த்தபோதுதான் தெரிந்தது.

ரசூலின் இன்னொரு இஸ்லாமிய நண்பன் கொலை கொள்ளை உள்ளிட்ட வெவ்வேறு வேலைகள் பார்க்கிறவன். அவனுக்கு துணையாக நட்புக்காக அவனுடைய காரியங்கள் தெரியாமல் அவ்வப்போது கார் ஓட்டிக்கொண்டு செல்கிறான் ரசூல். அந்த நண்பனுக்கு குழந்தை, அழகான துடுக்குத்தனம் நிறைந்த மனைவி என ஒரு குடும்பமும், எப்போதும் உள்ளே கனன்று கொண்டிருக்கிற கோபமுமாக திரிகிறான். அவனுக்கு நேர்கிற முடிவும் அதைத்தொடர்ந்து வருகிற காட்சிகளும் மிகமிக அழகுணர்ச்சியோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
படத்தின் கதை ரசூலின் பார்வையிலோ அன்னாவின் பார்வையிலோ சொல்லப்படாமல், அவர்களுடைய காதலுக்கு உதவுகிற ஆஷ்லி என்கிற நாயகனின் நண்பனின் வழியே சொல்லப்படுகிறது.

ஆஷ்லியின் கதையும் சிறப்பாக மிகச்சில துண்டு துண்டான காட்சிகளின் வழி காட்டப்படுகிறது. அதுவும்கூட அழகான ஒரு ஒருதலைக்காதல்கதை. காதலித்த பெண்ணிடம் காதலை சொல்ல தாமதிக்கிறான் ஆஷ்லி. ஆனால் காதலியோ வேறொருவரை அதற்குள்ளாக காதலிக்க துவங்கிவிடுகிறாள். அவளுடைய காதல் தோல்வியடைகிறது. காதலி கன்னியாஸ்திரி ஆகிவிடுகிறாள்.
படத்தின் இறுதியில் ரசூலையும் அன்னாவையும் சுற்றியிருக்கிற எல்லோருடைய வாழ்க்கையும் தோல்வியை தழுவ செத்துப்போய்விட்டதாக நினைத்த ஆஷ்லியின் காதல் உயிர்பெற படம் முடிவது சுவாரஸ்யம்.

படத்தில் அதிரடியான திருப்பங்களோ, அதிரவைக்கும் சண்டை காட்சிகளோ, துள்ளலான பாடல்களோ எதுவுமே இல்லை. சமயங்களில் நம் பொறுமையை சோதிக்கிற அளவுக்கு படம் மிகமிக மெதுவாகவே நகர்கிறது.

ஆனால் படம் பார்த்து முடிக்கையில் ஒரு க்ளாசிக் நாவலை படித்து முடித்த திருப்தி மனது முழுக்க நிறைகிறது. அதோடு கொச்சினின் சந்துகளில் ரசூலோடு,அன்னாவோடு,ஆஷ்லியோடு வாழ்ந்த உணர்வையும் விட்டுச்செல்கிறது. அதுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்குமோ என்னவோ. படத்தின் மிகப்பெரிய பலமாக கருதுவது அதன் ஒளிப்பதிவைதான்.

படத்தின் இயக்குனர் ராஜீவ்ரவியே ஒரு ஒளிப்பதிவாளர்தான்.. அதுவும் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருக்கிற அனுராக் காஷ்யபின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் என்கிறது விக்கிபீடியா. ஒளிப்பதிவுக்காக ரொம்பவே புகழப்பட்ட தேவ்டி படத்துக்கும், சமீபத்தில் வெளியான கேங்ஸ் வாசிபூருக்கும் கூட இவர்தான் ஒளிப்பதிவாம்!

அவர் நினைத்திருந்தால் ஹிந்தியிலேயே தன்னுடைய முதல் படத்தை எடுத்திருக்க முடியும் ஆனாலும் தன் முதல் படம் தன் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இப்படத்தை இயக்கினாராம். என்ன ஒரு மொழிப்பற்று! தன் முதல்படத்தில் இவர் ஒளிப்பதிவு பண்ணாமல் மது நீலகண்டன் என்கிற புதுமுகத்துக்கு வாய்ப்புக்கொடுத்திருக்கிறார்.

மதுநீலகண்டன் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கொச்சினின் இரவு காட்சிகளும் ஒளியை பயன்படுத்தியிருக்கிற விதமும் அற்புதம், படத்திற்கு இசையமைத்திருப்பவர் நம்ம மிஷ்கினின் படங்களுக்கு இசையமைத்திருக்கிற கே. மிகச்சில இசைக்கருவிகளின் வழியே சோகத்தையும் அன்பையும் காதலையும் புரியவைக்கிற எளிமையான பின்னணி இசையில் ஈர்க்கிறார். முன்னமே சொன்னதுபோல படம் முடிந்தபின்னும் அந்த கண்ணுரெண்டு கண்ணு பாடல் காதுக்குள் எங்கோ ஒலித்தபடி இருக்கிறது.






23 July 2013

டாலும் ழீயும்!



பெரியவர்களுக்கு எழுதுவதை விட குட்டீஸ்களுக்கு எழுதுவது மிகவும் கஷ்டம். நல்ல நல்ல எளிய ஜாலியான வார்த்தைகளை கோர்க்க வேண்டும். கதையில் லாஜிக் என்பதை மிகச்சரியான விகிதத்தில் கலக்கும் வல்லமை வேண்டும். கதையில் புதுமைகள் வேண்டும். படிக்கும் குழந்தைகள் நான்காவது வரியில் சோர்ந்துபோய் தூங்கிவிடக்கூடாது. வரிக்குவரி ஆச்சர்யங்களை புகுத்த வேண்டும்.

வாக்கியங்களில் எளிமை, சமகால குழந்தைகளின் பேச்சுமொழி ஒரளவாவது பரிச்சயமாகியிருக்க வேண்டும்... குழந்தைகள் எழுத்து குறித்து இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதனாலேயே தமிழில் யாருமே குழந்தைகளுக்கு கதைகள் எழுத தயாராயிருப்பதில்லை. அப்படியே எழுதினாலும் அது அத்தனை சிறப்பாக இருப்பதுமில்லை. என்னதான் வளர்ந்துவிட்டாலும் நானும் ஒரு மீசை வைச்ச குழந்தைதான் என்பதால் குழந்தைகள் கதை புத்தகங்களை தவறவிடவே மாட்டேன். யூமாவாசுகி, இரா நடராசன் தவிர்த்து தமிழில் அனேக குழந்தைகள் கதைகள் ஒரேமாதிரியான ஸ்டீரியோ டைப் நீதிக்கதைகளாகவே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

எதாவது கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே கதைகள் பின்னப்பட்டிருக்கும். சந்தையில் கிடைக்கிற பெரும்பாலான குழந்தைகள் கதைகள் தரமற்ற மொக்கை கதைகளே!

ஏற்கனவே சோட்டாபீமும் ஹட்டோரியும் டோரேமானும் ஆக்கிரமித்துவிட்ட குழந்தைகளின் உலகில் ஒரு புத்தகத்தை நுழைப்பது அத்தனை சுலபமில்லை. புத்தகத்தை கஷ்டபட்டு வாசிக்க குழந்தைகள் தயாராயில்லை. அவர்களுக்கு டிவி பார்ப்பது சுலபமாயிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை ஈர்க்கும்வகையில் கதைகள் எழுதுவது எவ்வளவு சவாலான வேலை!

விழியன் அந்த சவாலை மிக லாகவமாக தன்னுடைய நூல்களில் தாண்டுகிறார். அவர் எழுதிய மூன்று குழந்தைகள் புத்தகங்களை சென்றவாரம் வாசித்தேன். டாலும் ழீயும், பென்சில்களின் அட்டகாசம், அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை என மூன்றுமே டாப்டக்கரான கதைகள் கொண்டவை! மிகமிக எளிமையான கதைகள். இவை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கதைகள் என நினைக்கிறேன். ஒவ்வொருகதையிலும் ஏராளமான தகவல்களும் ஆச்சர்யங்களும் இருக்கின்றன.

கடலில் வாழும் இரண்டு மீன் நண்பர்கள் சேர்ந்து கடலுக்குள் ஒரு கோட்டையை எழுப்புகிறார்கள். இதுதான் டாலும் ழீயும் புத்தகத்தின் கதை. கடல்வாழ் உயிரினங்கள் குறித்த எளிய தகவல்களோடு இக்கதை படிக்க மிக அருமையாக இருந்தது. நிலாவுக்கு செல்லும் ஒரு குட்டிப்பையனின் சாகசங்கள்தான் அந்தரத்தில் நடந்த அபூர்வகதை இக்கதையில் நிலவு குறித்தும் நட்சத்திரங்கள் குறித்தும் தகவல்கள் இருந்தாலும் நல்ல ஃபேன்டஸி கதையாக இருந்தது.

விழியனின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘’பென்சில்களின் அட்டகாசம்’ ’தான். எல்கேஜி வகுப்பு குட்டீஸ்களின் பென்சில்கள் சேர்ந்து சுற்றுலா போகின்றன. அவற்றை ஷார்ப்னர்கள் துரத்துகின்றன. அவை தப்பித்து எப்படியோ பக்கத்தில் இருக்கும் ஆற்றில் இறங்கி ஆட்டம் போடுகின்றன. திரும்பி பள்ளிக்கே வந்து பென்சில்களை காணோம் என தேடிக்கொண்டிருந்த குழந்தைகளை அடைந்தன என்பது கிளைமாக்ஸ்! கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள், அதிர வைக்கும் சேஸிங் அசர வைக்கும் காமெடி என பரபரப்பாக எழுதியிருக்கிறார் விழியன். நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடிக்கும். பெரியவர்களும் வாசிக்கலாம். உங்களுக்குள் இருக்கிற குழந்தைக்கு நல்ல தீனியாக இருக்கும்.

விழியன் இதுவரை ஐந்தோ ஆறோ குழந்தைகள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். மூன்றுதான் வாசிக்க கிடைத்தது. ஒரு குழந்தைகளும் நாவலும் எழுதியிருக்கிறார் என்பதை அவருடைய இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ‘’காலப்பயணிகள்/ஒரே ஒரு ஊரிலே" என்கிற இரண்டு கதைகள் கொண்ட சிறுவர் நாவலையும் வாசிக்கும் ஆவல் வந்திருக்கிறது. தேடி வாசிக்க வேண்டும்.


விழியனின் சிறுவர்கதைகள் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கின்றன.

10 July 2013

இது சிங்கம் டான்ஸ்!



போனமுறை ஒருடன் எடையுடன் ஓங்கி அடித்த சிங்கம்.. இம்முறை பதினைந்து டன் எடையுடன் பாய்ந்து அடித்திருக்கிறார்.

லைட்வெய்ட்டிலேயே நம் காதுகள் பஞ்சராகிற அளவுக்கு தொற தொற என தொறக்கிற ‘’தொற சிங்கம்’’ ஹெவிவெயிட்டில் சும்மா விடுவாரா? சேம் ப்ளட்!

இயக்குனர் ஹரி ஒரு படத்துக்கு வசனமெழுத ஆரம்பித்தால் சேஷாயி பேப்பர் மில்லையே லீசுக்கு எடுத்தும் பத்தாமல் பக்கத்து மாநிலத்திடம் கடன் கேட்க வேண்டியிருக்குமோ என்னவோ! படத்தில் அம்புட்டு வசனம். அதில் முக்கால்வாசியை ஓயாமால் சூர்யா மட்டுமே சகலருடனும் பேசிக்கொண்டேயிருக்கிறார். அதுவும் அடித்தொண்டையில் ஹைபிட்ச்சில்...! இய்ய்ய்ய்ய்ய்...

படத்தின் வசனத்தை மட்டும் புத்தகமாக வெளியிட்டால் பத்து விஷ்ணுபுரம் அளவு வரும் என்று தோன்றுகிறது. சூர்யா பேசிக்கொண்டே அடிக்கிறார், பேசிக்கொண்டே சாப்பிடுகிறார், பேசிக்கொண்டே நடக்கிறார், பேசிகொண்டே ஓடுகிறார்.. பேசிக்கொண்டே காதலிக்கிறார் அழுகிறார் தூக்கத்திலும் கூட பேசுவார் போல அதை காட்டவில்லை.

இந்தியாவில் பேசினது போதாதென்று சவுத் ஆப்பிரிக்காவுக்கு டிக்கட் போட்டு போய் இங்கிலீஸில் பேசுகிறார்.இவர் பேசுகிற இங்கிலீஸ் தாங்கமுடியாமல் விட்டா இன்னும் நாலு பக்கத்துக்கு வசனம் பேசுவரோ என்கிற பயமோ என்னவோ ஆப்பிரிக்க அதிகாரி ‘’யெஸ் திஸ் இன்டியன் ஆபீசர் ஈஸ் கரெக்ட்’’ என்று சொல்லிவிடுகிறார்.

ஸ்டூடன்ட்ஸ் எப்படி படிக்கணும். தேசிய கீதத்துக்கு எப்படி மரியாதை கொடுக்கணும், எஸ்எம்எஸ் வச்சு எப்படி குற்றவாளிய கண்டுபிடிக்கணும், அப்பா அம்மா மேல எப்படி மரியாதையா இருக்கணும் என ஒரு டியூசன் மாஸ்டரைப்போல நிறைய கற்றுக்கொடுக்கிறார் சூர்யா.

அதோடு பாஞ்சடிச்சா பதினைஞ்சு டன் வெயிட்டு என பானாக்கு பானா போட்டு ஹரி டயலாக் எழுதின பாவத்துக்காக.. படம் முழுக்க கையை உயர்த்திக்கொண்டு பாஞ்சு பாஞ்சு அடிக்கிறார். அடிக்கும்போது கழுத்து நரம்பெல்லாம் புடைக்கிற புடைப்பில் திரையிலிருந்து குதித்து அடித்துவிடுவாரோ என்கிற அச்சம் பரவலாக நிலவுகிறது.

பராசக்தி கல்யாணிக்கு பிறகு நம்ம சிங்கம் சூர்யாதான் ஒரு படத்தில் அதிகமான தூரம் ஓடியிருப்பார் என்று தோன்றுகிறது. கல்யாணியாச்சும் கடல் இருப்பதால் திரும்பி வந்துவிட்டாள். நம்ம சிங்கமோ கடல் கடந்து ஓடுகிறார். ஆப்பிரிக்காவுக்கே போய் உசைன் போல்ட் போன்ற தோற்றம்கொண்டவரை ரன்னிங் ரேஸில் தோற்கடிக்கிறார். ஓடும்போது சண்டையும் போட்டு பஞ்ச் டயலாக்கும் பேசுகிறார். ஆப்பிரிக்க போலீஸ் ஆச்சர்யத்தில் ‘’வாட் ஈஸ் திஸ்’’ என்கிறார்கள்.

முன்பு விக்ரமுக்கு நேர்ந்தது சூர்யாவுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை படம் பார்க்கும் போது உணர முடிந்தது. வெர்சடைலாக நடித்துக்கொண்டிருந்த மனுஷன் திடீரென ஒரே மாதிரியான நடிப்புக்குள் தன்னை திணித்துக்கொண்டிருக்கிறார். ஒரே மாதிரியான உடல்மொழி, நடை, உடை, பேச்சு, சிரிப்பு, முக்கியமாக குரல்! (ஏழாம் அறிவில் மாற்றானில் பேசிய அதே மாடுலேஷனில் ‘’திருப்பி அடிக்கணும்.. கொல்லணும் என்றெல்லாம் பேசுகிறார்)

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில், சிமென்ட் விளம்பரத்தில் காபி விளம்பரத்தில் கேட்ட அதே குரல். வில்லனிடம் பஞ்ச் டயலாக் பேசும்போது கூடவே ‘’ஏர்டெல் ஆபர் பத்துரூபாக்கு ரீசார்ஜ் பண்ணுங்க.. பதினோரு ரூபாவுக்கு டாக்டைம்’’ என்று ஏதாவது பேசுவிடுவாரோ என்கிற எண்ணத்தோடு படம் பார்க்க வேண்டியிருந்தது. காதில் சூர்யா என்னும் விளம்பரக்காரனின் குரல் எங்கும் ஒலித்து வியாபித்து கிடக்கிறது.

முந்தைய சிங்கத்தில் சூர்யாவின் உயரம் ஒரு பெரிய குறையாக தெரியாது. காரணம் கொஞ்சம் நீண்ட அகலமாக பேண்ட் அணிந்திருப்பார். ஆனால் சமகால ஃபேஷனான ஷார்ட் டைட்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு இப்படத்தில் வருவதால் அவருடைய அரை அடிக்கும் அதிகமாக உயரங்கொண்ட ஷூவும் அவருடைய குட்டையான கால்களும் நன்றாகவே தெரிகிறது. இனி வருங்காலங்களில் சிங்கம் மூன்று நான்கு ஐந்து எடுக்கும்போது இதை தவிர்க்கவும். (ஏதோ நம்மால ஆன நல்ல காரியம்)

படத்தில் தாங்கவே முடியாத ஒன்று உண்டென்றால் அது ஹன்சிகா மோத்வானிதான். ப்ளஸ்டூ படிக்கிற ஸ்டூடென்டாம். மிஸ்டர் ஹரி நாங்க படிக்காதவங்க, எங்களுக்கு ஊர் உலகம் தெரியாது, எங்களை நீங்க ஏமாத்துங்க வேண்டாங்கல.. ஆனா மனசாட்சியோட ஏமாத்துங்க அவ்ளோதான் சொல்லமுடியும்.

நல்ல வேளை அனுஷ்காவுக்கு ஸ்டூடன்ட் வேஷம் குடுக்கலையேனு சந்தோஷபடு மச்சி என்று நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் அனுஷ்காவை பார்க்க.. வேண்டாம். என்ன இருந்தாலும் அடியேனும் ஒரு அனுஷ்கா ரசிகன்தான்.

மொக்கையான காமெடி காட்சிகள், ரொமான்ஸ் என்றபெயரில் ஹன்சிகா பண்ணுகிற அலப்பறைகள், நடுநடுவே குடும்பத்தினர் பண்ணுகிற சென்டிமென்ட் சொரிதல் அக்கிரமங்கள் என சகிக்கவே முடியாத பல விஷயங்கள். இதுபோக டிஎஸ்பி வேறு ஏற்கனவே போட்ட தன் பாடல்களையே ரீமிக்ஸ் பண்ணி கொடுமைப்படுத்துகிறார். அவரே சிங்கம் சிங்கம் என கத்தி கத்தி காதுகிழிக்கிறார். முந்தைய சிங்கத்தில் இருந்த பெப்பி மியூசிக்கும் அனுஷ்காவின் அழகும் முக்கியமாக பிரகாஷ் ராஜூம் இப்படத்தில் இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆப்பிரிக்க வில்லனெல்லாம் சுத்தமாக பயமுறுத்தவில்லை!

‘’அடிக்கிற கட்டதொரைக்கு தெரியாதுய்யா, அடிவாங்குற கைப்புள்ளையின் வலியும் வேதனையும்!’’ என்பார்கள் மூத்தோர்கள் முன்னோர்கள். அதுபோல படமெடுத்த ஹரிக்கு தெரியுமா நம்முடைய காதுவலியும் தலைவலியும்! படத்தின் டிக்கட்டோடு காதடைக்க பஞ்சும் அமிர்தாஞ்சனோட டைகர் பாமோகூட கொடுக்கலாம்!

படத்தில் இப்படி ஏகப்பட்ட குறைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதெல்லாம் படம் முடிந்த பின் ஆற அமர உக்காந்து யோசித்தால்தான் தெளிவாக தெரிகிறது. படத்தின் இயக்குனர் ஹரி என்கிற உள்ளூர் மந்திரவாதிக்கு மக்களை குறிப்பாக ஃபேமிலி மக்களை கட்டிப்போட்டு படங்காட்டும் குரளிவித்தை ஏதோ தெரியும்போல.. பேய் வேகத்தில் நம்மை எதைப்பற்றியும் சிந்திக்கவே விடாமல் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

‘தம்பி எதுவாருந்தாலும் படம் முடிஞ்சப்பறம் முடிவு பண்ணிக்குவோம்’ என்று படம் பார்க்கிறவரோடு அக்ரிமென்ட் போட்டுக்கொள்கிறார். படம் தொய்வடையும்போதெல்லாம் சிலிர்க்க வைக்கிற ஹீரோயிச காட்சி ஒன்றை நுழைக்கிறார்.. உதாரணத்துக்கு மழையில் காத்திருந்து அடிக்கிற நோவெபன் வித் ஃபேமிலி ஃபைட்!

சிங்கம் பார்ட் ஒன்னில் ஒரு காட்சி வரும்.. நிழல்கள் ரவி கோபத்தோடு சூர்யாவை திட்டுவதற்காக ஸ்டேஷனுக்கு வருவார். அவர் பேசுவதற்கு முன்பாகவே சூர்யா பேச ஆரம்பிப்பார். பேசிக்கொண்டேயிருப்பார். நிழல்கள் ரவியை பேசவே விடமாட்டார். நிழல்கள் ரவி கேட்டுக்கொண்டே பின்னோக்கி நடந்துகொண்டேயிருப்பார். திடீரென்று பார்த்தால் ஸ்டேஷனிலிருந்து வெளியேறி சாலையில் நின்றுகொண்டிருப்பார். என்ன நடந்துது, சூர்யா என்ன பேசினார் என்பது புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நிற்பாரே அதுமாதிரி சிங்கம்2 படத்துக்கு டிக்கட் வாங்கி உள்ளே போனதுதான் தெரிகிறது.. படம் முடிந்து வண்டிபார்க்கிங்கில் நிற்கிறோம்.. நடுவில் சூர்யா நிறைய பேசினார் என்பதும் நமக்கு காது வலிக்கிறது என்பதையும் தவிர வேறு என்னாச்சு ஏதாச்சு என்கிற எந்த உணர்வும் இல்லை!



டூ மினிட்ஸ்!



வரவர எந்த மரணமும் நான்கு மணிநேரத்துக்கு மேல் பாதிப்பதில்லை. மேகி பண்ணுகிற நேரத்துக்குள் வெகு எளிதாக மீண்டுவிட முடிகிறது
செய்திகளில் வருகிற மரணங்கள் அரைமணிநேரம் கூட தாக்குபிடிப்பதில்லை இயற்கை பேரழிவு, விபத்து, குண்டுவெடிப்பு , தற்கொலை, கொலை எதுவுமே.

இறந்துபோனவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் செய்தியை கடந்து செல்ல வேண்டியதாகிவிடுகிறது. நிறைய பேர் இறந்துபோனால் ஒரு நீண்ட அய்யயோ.. குறைவான எண்ணிக்கையெனில் ஒரு மினி அடச்சே.. மிக மிக குறைவென்றால் அய்யோ பாவம்..
ஒருவர்தான் என்றால் தாமாகவே தர்ம கணக்கில் சேர்த்துக்கொள்கிற மனது

பெற்றோர்,காதலி,நண்பர்,அண்டைவீட்டுக்காரர்,நாட்டுக்காரர்,தலைவர்கள்,தலைவிகள்,எழுத்தாளர்,நடிகர் என எல்லா மரணங்களுமே அதிகாலைச்செய்தித்தாளைப்போல அடுத்தநாள்
எங்காவது மூலைக்குள் முடங்கிவிடுகிறது.

''இறந்துபோனவர் எவ்வளவுதான் நெருக்கமென்றாலும்
அடுத்தவேளை பசித்துத்தொலைக்கிறது
தின்ன தின்ன மரணமும் துரத்துகிறது''

07 July 2013

வாத்தியார் சாமி




ஊருக்கு நடுவில்தான் பெரியவரின் சிலை இருந்தது. தோளில் துண்டு சாதாரண வேட்டி கதர் சட்டை என சாதாரணமாக காமராஜர் சிலை போல இருந்தாலும் கைகளில் மட்டும் அரிவாளோடு காணப்படும் அந்த சிலைதான் ஊருக்கே அடையாளமாக மத்தியில் நின்றது.

அது வாத்தியார் சாமி சிலை என குழந்தைகள் கூறுவார்கள். அந்த சிலை மீது காசெறிந்தால் நிறைய மார்க்கு கிடைக்கும் என்பதாக ஒரு நம்பிக்கை உலவியது. சிலையை சுற்றி எப்போதும் சில்லரை காசுகள் நிறைந்திருக்கும். அதை பொறுக்குகிற தைரியம் ஊருக்குள் யாருக்குமே கிடையாது. காரணம் பெரியவரின் படுபயங்கரமான ஃபிளாஷ்பேக்.

பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் மாரப்பன் என்கிற இந்த பெரியவர். ஊருக்குள் அவருக்கு அனேக மரியாதைகளும் சலுகைகளும் இருந்தது. அதற்கு காரணம் அவர் மிகப்பெரிய வீரராக மக்கள் மத்தியில் போற்றப்பட்டார்.

அவரை பார்த்தால் எல்லோருமே எழுந்து நின்று வணங்குவார்கள். இவ்வளவுக்கும் அவர் நாட்டாமையோ எஜமானோ சின்னகவுண்டரோ கூட கிடையாது. வயதுக்கு வந்த நாளிலிருந்து வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரிடம் வெட்டி அரட்டை அடிக்கிற தண்டம்தான்.

அவர் சின்ன பிள்ளையாக இருந்தபோது ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் அங்கே செல்லவில்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இன்னேரம் நான்தான்டா ஜில்லா கலெக்டர் என்றும் பீத்திக்கொள்வார்.

இருந்தாலும் ஏன் இவருக்கு இவ்வளவு மரியாதை தெரியுமா? ''ஒருக்கா நம்மூருக்கு எம்ஜிஆர் வந்திருந்தப்ப.. நம்ம பெரிசு எம்ஜிஆரையே கெட்ட வார்த்தைல திட்டிட்டாரு...''

''அச்சசோ அப்புறம்''

''அதுவும் என்ன வார்த்தைல திட்டினாரு தெரியும்ல.. $*&%&$%* பயலேனு!''

''அடேங்கப்பா.. ஏன்ப்பா எம்ஜிஆர் வேற மதர் சென்டிமென்ட் பாக்கற ஆளாச்சேப்பா.. அம்மாவ பத்தி... அய்யயோ... புடிச்சு நறுக்கியுட்டுல்ல அனுப்பிருப்பாரு''

''அதான் இல்ல.. எம்ஜிஆரு கோவமா பார்த்தாராம்.. இவரு எம்ஜிஆரை பார்த்து ஒரு மொறை மொறைச்சதும்.. எம்ஜிஆருக்கே பயமாயி.. துண்டகாணோம் துணியக்காணோம்னு ஓடிட்டாராம்ல.. அப்பதான் இவரோட வீரம் ஊருக்கு தெரிஞ்சது..

அப்பருந்துதான் இவருக்கு மாலைதான் மானாவாரியா மரியாதைதான்.. அவரு பேர பலருக்கும் வச்சாங்க தெரியும்ல.. வாத்தியாரை வென்ற வாத்தியார்னு பட்டம் கூட உண்டுல்லா''

''அவரை எப்படியாச்சும் பழிவாங்கணும்னு எம்ஜிஆர் ரசிகருங்க திரிஞ்சாய்ங்க. அப்பதான் கலைஞரோட சண்ட போட்டுட்டு எம்ஜிஆர் வேற தனிக்கச்சி தொடங்கிருந்தாரு, அதனால பெரிசுக்கு திமுகாரங்க சப்போர்ட்டாருந்தாங்க... ஒருக்கா சீட்டு கூட கொடுக்கறேன்னாங்களாம் வேண்டாம்னுருச்சாம் பெரிசு''

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பெரிசு ஒருமுறை நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தார். அந்த நேரத்தில் அவருக்கு உதவ யாருமேயில்லை. அவருக்கு உதவ சென்ற மருத்துவர் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். அது பெரிசுக்கும் தெரியும். எங்க டாக்டர் எம்ஜிஆரை திட்டினத மனசுல வச்சு நம்மள கொன்னுடுவாரோ என்கிற பயத்தில் ஒரு உண்மையை சொன்னது.

''வைத்தியரே, நான் எம்ஜிஆர திட்டினது நெஜம்தான்.. ஆனா அது அவருக்கு கேக்கல.. நம்மூருக்கு பிரச்சாரத்துக்கு வந்தவரு வேன்ல நின்னு எல்லாருக்கும் கைகாட்டினாரு.. நான் கூட்டத்துல நின்னு டாடா காட்டிகிட்டிருந்தேன். அப்ப எவனோ ஒருத்தன் என் கால மிதிச்சிட்டான். கடுப்பாகி டே %&&%** பயலேனு திட்டினேன்.. அப்பதான் எம்ஜிஆர் எங்க பக்கம் டாட்டா காட்டிகிருந்தாரு.. லைட்டா மழை தூவவும் வண்டிக்குள்ள போயிட்டாரு. உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க, அதனால நான் சொன்னது அவரைதானு என் பக்கத்துல நின்ன பக்கிங்க நினைச்சிகிருச்சி.

அவிங்கதான் ஊருக்குள்ள போயி அண்ணன் எம்ஜிஆரை திட்டினாருனு கெளப்பி விட்டானுங்க.. அத நம்பி ஊர்க்கார பயலுகளும் என்னை வீரன்னு சொல்லிட்டானுக.. நானும் அந்த கெத்தை மெயின்டெயின் பண்ணுவோம்னு அப்படியே சொல்லிகிட்டு திரிஞ்சிட்டேன்.''

''அட நன்னாரி'' என்றார் மருத்துவர்.

''தயவு செஞ்சு இதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க டாக்டர்'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரிசின் மூச்சு நின்று போனது.

மருத்துவர்தான் தப்பான மருந்து கொடுத்து கொன்றுவிட்டார். அவரை கொல்லச்சொன்னதே எம்ஜிஆர்தான் என்று ஊருக்குள் ஒரு கதை பரவியது. அதுவரை வீரனாக மட்டுமே அறியபட்ட அந்தப் பெரிசு அதற்கு பிறகு தியாகியாக மாறியது. பெரிசு செத்துப்போன சில மாதங்களில் எம்ஜிஆரும் செத்துப்போனார்.

''தன்னை கொன்னவன சும்மா விட முடியுமா.. எப்படிபட்ட பரம்பரை வம்சம்.. ஆவியா வந்து எம்ஜியாரை போட்டுச்சுல்ல.. திட்டம போட்டு கொன்னா சும்மா வுடுமா பெரிசு, அதான் ஆத்மா சாந்தியடையாம திரிஞ்சிருக்கு. நேரம் பார்த்து சோலிய முடிச்சிருச்சில்ல.. என்று இன்னொரு கதை பரவியது. இம்முறை பெரிசு போராளியாகியது. அவருடைய சிலை ஊருக்கு மத்தியில் திறக்கப்பட்டது.

முதலில் தூக்கிகட்டின லுங்கி பல்லில் கடித்த அரிவாளோடு டெரராகத்தான் சிலைவைக்க முடிவானது. ஆனால் பெரிசு அப்படி ஒருநாளும் இருந்ததில்லை. அதனால் அவருடைய இயல்பான உடலில் ஒரு அரிவாளை மட்டும் சொருகிவைத்தனர். வாத்தியாரை கொன்ற வாத்தியார் இங்கே உறங்குகிறார் என்று சிலைக்கு கீழே எழுதிவைத்தனர். வாத்தியார் என்பதால் ஸ்கூல் வாத்தியார் என்று பிள்ளைகள் கருதி காசு போட்டு வேண்டுதல் பண்ணத்தொடங்கினர்.

ஒருமுறை ஏதோ உள்ளூர் தகராறில் ஒருவனை வெட்டி சிலைக்கு கீழே தூக்கிப்போட, அவனுடைய ரத்தம் சிலையிலிருந்து அரிவாளில் தெறித்திருக்கவும், அவனுடைய பூத உடல் அன்னாரின் காலடியில் கிடக்கவும் புதுக்கதைக்கான முடிச்சு உருவானது.

பிள்ளைக போட்ட சில்லரையை பொறுக்க வந்தவன வாத்தியார் சாமியே கொன்னுடுச்சுடே என யாரோ சொல்ல.. ஆமா அரிவாள்ல பார்த்தல்ல ரத்தகற.. சும்மாவாய்யா.. என இன்னொருவர் சொல்ல.. இப்படியே பில்டப்பை கூட்டி கூட்டி ஸ்கூலுக்கே போகாத மாரப்பன் வாத்தியார் சாமி ஆனார். அவருடைய சிலைக்கு சில்லரைகாசுகள் குவிந்தன.

03 July 2013

குட்டி இளவரசன்






 ‘’அந்துவான்ந்த செய்ன்த் எக்சூபெரி’’ என்கிற பெயரை படிக்கும் போதே கோமாளியை கண்ட குழந்தையின் குதூகலத்தை அடைய முடிந்தது. அவர்தான் குட்டி இளவரன் என்கிற பிரெஞ்சு நாவலை எழுதிய எழுத்தாளர். 

சிறுவர் இலக்கியம் என்று நண்பர் ஒருவர் சொன்னதை நம்பி குட்டி இளவரசன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அதோடு தலைப்பு வேறு குட்டி இளவரசன் என்பதும் அட்டைப்படத்தில் கார்ட்டூன் போட்டு வைத்திருக்கிறார்கள்... இதற்கு மேல் எப்படி அது குழந்தைகளுக்கான புத்தகம்தான் என்பதை நம்பாமலிருக்க முடியும்.

ஆனால் நாலைந்து பக்கம் படித்து முடிக்கும்போதுதான் உணர்ந்தேன். இது நிச்சயமாக குழந்தைகள் இலக்கிய வெங்காயமெல்லாம் இல்லை, இது பெரியவர்களுக்கான குழந்தைகள் இலக்கியம் என்று. அதையேதான் நூலாசியர் எக்சூபெரியும் குறிப்பிடுகிறார். அவர் இப்புத்தகத்தை பெரியவர்களுக்குள் இருக்கிற அல்லது இல்லாமல் போன குழந்தைகளுக்கே சமர்ப்பிக்கிறார்.

''எல்லா பெரியவர்களும் ஒருகாலத்தில் குழந்தைகளாகத்தான் இருந்தனர். ஆனால் சிலருக்குத்தான் அது நினைவிருக்கிறது'' என்கிற வரிகள் புத்தகத்தில் வருகின்றன. அப்படி தங்களை சிறார்கள் என்று மறந்துபோன பெரிசுகளுக்காவே இப்புத்தகத்தை எழுதியிருக்கிறார் எக்சூபெரி!

ஒரு சுயசரிதையை போல தொடங்குகிறது குட்டி இளவரசன் நாவல். ஒவியனாகவேண்டும் என்பது நாயகனுக்கு ஆசை. ஆனால் ஆறுவயதில் அதற்கு தடைபோடப்பட்டு அவன் வளர்ந்து பைலட் ஆகிறான். ஆனாலும் அவன் ஆறுவயதில் வரைந்த ஒரு ஓவியத்தை கொண்டு மனிதர்களை எடைபோடுகிறார். ஒரு மலைப்பாம்பு யானை விழுங்கிவிட்ட ஓவியம் அது. ஆனால் அதை பார்க்கிற எல்லோருக்குமே அது தொப்பியாகத்தான் தெரிகிறது. எரிச்சலுற்று அந்த பெரியமனுங்களோடு அவன் உலகின் சகல வியாக்கியானங்களையும் பேசத்தொடங்குகிறான்.

ஒருமுறை தனியாக விமானத்தில் பயணிக்கும்போது விமானம் விபத்துக்குள்ளாகி பாலைவனமொன்றில் தனித்து கிடக்கிறான். அங்கே யாருமேயில்லை. திடீரென அங்கே வருகிறான் ஒரு குட்டிப்பையன் அல்லது குட்டி இளவரசன். அவன் வேறொரு கிரகத்திலிருந்து வருவதாக சொல்கிறான். குட்டி இளவரசனின் கிரகத்தில் ஒரு ரோஜா செடி, மூன்று எரிமலைகள் அதில் ஒன்று அணைந்த எரிமலை மற்றும் சில பாப்லோப் மரங்கள் மட்டும்தான் உள்ளன. இவனைத்தவிர யாருமே அங்கு இல்லை.

இவன் அங்கிருக்கிற அந்த ரோஜாவை நேசிக்க ஆரம்பிக்கிறான். அதுவும் இவனை நேசிக்கிறது. ஆனால் அது எப்போதும் முறைத்துக்கொண்டு திரிகிறது. ஒருநாள் தனக்கொரு வேலையை தேடிக்கொண்டு அவன் பக்கத்து கிரங்களுக்கு பயணிக்கிறான் அங்கே ஒரு அரசன், குடிகாரன், பிஸினெஸ்மேன், தெருவிளக்கை ஏற்றுபவன், புவியியலாளன் என பலரையும் சந்திக்கிறான். அவனுக்கு வினோதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. அவர்களை கடந்து இறுதியில் பூமியை அடைகிறான். இங்கே அவனுக்கு ஒரு நரி நண்பனாக கிடைக்கிறது. அந்த நரி இளவரசனக்கு ஒரு ரகசியம் சொல்கிறது. நரியை விட்டு பிரிந்து மேலும் பூமியில் பயணிக்கிறான். வழியில் ஒரு மஞ்சள் பாம்பு அவனோடு நட்பாகிறது. அவனுயை கிரகத்துக்கு திரும்பி செல்ல உதவுவதாக வாக்களிக்கிறது.

பிறகுதான் அவன் நம் நாயகனை சந்திக்கிறான். இருவரும் தண்ணீர் தேடி பாலைவனத்தில் அலைய இறுதியில் ஒரு கிணற்றை கண்டுபிடிக்கின்றனர். தண்ணீர் குடிக்கின்றனர். அடுத்த சிலநாட்களில் குட்டி இளவரசன் நாயகனை விட்டு விலகி காணாமல் போகிறான். அவன் பழைய கிரகத்துக்கே சென்றிருக்க கூடும் என நாயகன் நம்புகிறான். அவன் போகும்போது இனி நீ வானத்து நட்சத்திரங்களை பார்க்கும்போது அங்கிருந்து நான் புன்னகைப்பேன் அது உனக்கு மட்டுமே தெரியும் என்பதாக கூறிவிட்டுப்போகிறான். நாயகன் தன்னுடைய விமான என்ஜினை சரிசெய்து ஊருக்கே திரும்புகிறான்.

மேலோட்டமாக படிக்கும்போது மிக எளிமையான குழந்தைகள் கதையைப்போலவே இருந்தாலும் அது திரும்ப திரும்ப ஒரே ஒருவிஷயத்தை வலியுறுத்துகிறது. நம் எல்லோருக்குள்ளேயும் இருந்த குட்டி இளவரசனை பற்றியது. குட்டி இளவரசன் கதை முழுக்க எதையுமே வணிக ரீதியிலோ, அறிவார்ந்தோ, கணக்கிட்டோ , விஞ்ஞானப்பூர்வமாக அலசுவதில்லை. அவனுக்கு எல்லாமே அழகுதான். அவன் தன்னுடைய ஒற்றை ரோஜாவை காதலிக்கிறான். அதை பற்றியே கவலைப்படுகிறான். ஆட்டின் படத்தை நிஜ ஆடாக நம்புகிறான். அவன் மட்டும்தான் நாயகனின் மலைபாம்பு தின்ற யானையின் படத்தின் சூட்சமத்தை சரியாக கூறுகிறான். அணைந்து போன எரிமலை கூட என்றாவது உபயோகப்படும் என்று திரும்ப திரும்ப நம்புகிறான்.

கதையில் மீண்டும் மீண்டும்சொல்லப்படுகிற ஒரு வசனம் எல்லாவற்றையும் மொத்தமாக சொல்லிவிடும்.

‘’தன்னுடைய இதயத்தினால் பார்க்கிறவனால் மட்டுமே ஒன்றை முழுமையாக பார்க்க முடியும்!’’

இது குழந்தைகளுக்கே சாத்தியமான ஒன்று. வரண்டுபோன தொண்டையோடு சுற்றிக்கொண்டிருந்தாலும் குழந்தை உள்ளம் தேடுவது அழகினை மட்டும்தான் என்பது இன்னொரு இடத்தில் அழகாக வெளிப்பட்டிருக்கும். ''இந்த பாலைவனத்துக்கு அழகு தருவது கிணற்றை எங்கேயோ ஒளித்துவைத்திருப்பதுதான்'' என்பான் குட்டி இளவரசன்.

நாம் எங்கோ வழியில் தொலைத்துவிட்ட பால்யம் எனும் குட்டி இளவரசனுக்கான தேடலை இந்நூல் நிச்சயமாக தொடங்கி வைக்கும். மிகச்சிறிய புத்தகமென்பதால் சீக்கிரமே படித்துவிடலாம். ஒருமுறை படித்துவிட்டால் திரும்ப திரும்ப படிக்க வைக்கிற ஒருவித போதையேற்றுகிற தன்மை இப்புத்தகத்திற்கு இருப்பதாக நினைக்கிறேன். இதுவரை மூன்றுமுறை வாசித்துவிட்டேன். மீண்டும் வாசிப்பேன் என்றே நம்புகிறேன்.

(இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழுக்கு மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்துள்ளனர். )

புத்தகம் குறித்த விபரங்களுக்கு - http://www.crea.in/kutti.html

02 July 2013

ஓர் ஆழ்கடல் அனுபவம்




ஆர்ப்பரிக்கும் கடலை கிழித்துக்கொண்டு பாய்கின்றன இரண்டு படகுகள். படகுக்கு எட்டு பேர் என மொத்தமாக பதினாறு பேர். சூரியன் அப்போதுதான் கொட்டாவி விட்டபடி எட்டிப்இபார்க்கிறான். நேரம் காலை ஆறுமணி. இடம் பாண்டிச்சேரி அரிக்கமேடு.

SCUBA DIVING என்கிற ஆழ்கடல் நீச்சலில் முதன்முதலாக ஈடுபடப்போகிற ஆர்வகுறுகுறுப்போடு படகில் அமர்ந்திருந்தேன். ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரும் டெம்பிள் அட்வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அர்விந்திடம் பேட்டி எடுக்கலாம் என்று முடிவானபோது.. ‘’பாஸ் அந்த பேட்டியை ஏன் ஆழ்கடலிலேயே எடுக்க கூடாது’’ என்றார் குறும்புக்கார இளைஞரான அர்விந்த். அந்த யோசனை பிடித்திருந்தது. பாண்டிச்சேரிக்கு புறப்பட்டோம். களத்தில்...ம்ஹும், கடலில் இறங்கினோம்.

ஒருநாள் முழுக்க கடுமையான பயிற்சி. இரவெல்லாம் தூக்கமேயில்லை. முந்தைய நாள் முழுக்க நீச்சல்குளத்தில் தரப்பட்ட ஸ்கூபா டைவிங் குறித்த பயிற்சிகள், அறிவுறுத்தல்கள், மூச்சுப்பயிற்சி, சைகைகள், எப்படி நீந்துவது என எல்லாமே தலைக்குள் அடுக்கடுக்கான தகவல்களை அலை அலையாய் அடித்துக்கொண்டிருந்தது.

இதோ கடலை நோக்கிய பயணம் துவங்கிவிட்டது. கடலுக்கு நடுவே படகு செல்ல செல்ல... பாண்டிச்சேரி நகரின் எழிலான தோற்றமும் நிலப்பகுதிகளும் கொஞ்ச கொஞ்சமாக மறைய தொடங்குகிறது. சுற்றிலும் தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர் மட்டும்தான். எனக்கு லேசாக தலை சுற்றுவதைப்போலவும் வயிற்றை கலக்குவதைப்போலவும் வாந்தி வருவதாகவும் உணர்கிறேன். படகு வேறு அதிவேகமாக மேலும் கீழும் குலுங்கி குலுங்கி அச்சத்தை அதிகமாக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் படகு நிறுத்தப்படுகிறது. நீண்ட மஞ்சள்நிற கயிற்றோடு இணைக்கப்பட்ட ஒரு துருப்பிடித்த நங்கூரம் கடலுக்குள் வீசப்படுகிறது. வீசப்பட்ட இடத்திலிருந்து சற்று தள்ளி போய் படகு ஆடிக்கொண்டே நிற்கிறது. அலைகளின் வேகத்தில் அது நிற்கிறதா அல்லது சென்றபடி இருக்கிறதா என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால் ஆட்டம் ரொம்பவே அதிகம்.
என்னோடு வந்திருந்த பதினாறு பேரும் தங்களுடைய கவசங்களையும் உபகரணங்களையும் எடுத்து வேகவேகமாக அணிந்துகொள்கின்றனர். பதினாறு பேரில் ஆறுபேர் ஆழ்கடல் நீச்சலுக்கான லைசென்ஸ் பெற பரிட்சை எழுதவந்தவர்கள். PRACTICAL எக்ஸாம். கடலின் ஆழத்திற்கு சென்று சில பயிற்சிகளை சரியாக செய்தால் மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள்.

மாணவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு காற்று நிரப்பப்பட்ட அதிக எடைகொண்ட சிலிண்டரை கவசத்தோடு பொருத்துவதற்கு உதவுகிறார். ‘’அதிஷா நீங்களும் ரெடியாகுங்க..’’ என்கிறார் அர்விந்த். அவருடைய குரல் அசரீரியாய் கேட்கிறது. எங்கள் அனைவருக்கும் முன்பாக சகல உபகரணங்களோடு கடலில் குதித்திருந்தார் அர்விந்த்.

நானும் என்னுடைய WET SUIT ஐ எடுத்து அணிந்துகொள்கிறேன். அணிந்ததும் உடலில் வெப்பம் பரவுகிறது. BCD என்கிற காற்று நிரப்பவல்ல உடை கவசம். கண்ணாடியோடு இணைந்த மூக்கை அடைக்கிற முகமூடி. என்னுடைய முதுகிலும் 20கிலோ எடைகொண்ட சிலிண்டர். சிலிண்டரோடு இணைக்கப்பட்ட ரெகுலேட்டரின் ஒருமுனையை வாய்க்குள் விட்டு இணைத்துக்கொள்கிறேன். இனி பேச்சுக்கு தடை.. சைகைகளால் மட்டும்தான் சகல உரையாடலும்.

கால்களில் ஸ்கூபா பூட்ஸ் அணிந்து அதற்குமேல் FINS எனப்படும் துடுப்புகளைப்போன்ற காலணிகளை மாட்டிக்கொள்கிறேன். கிட்டத்தட்ட ஒரு கடல்கன்னியைப்போல மாறியாகிவிட்டது. இனி கடலில் இறங்கவேண்டியதுதான் பாக்கி.

எனக்கு முன்பே தயாராயிருந்த பத்துபேர் வரிசையாக ஒவ்வொருவராக படகிலிருந்து தலைகீழாக விழத்தொடங்கினர். உடலுக்கு பின்னால் இணைக்கப்பட்டிருக்கிற கவசம் ப்ளஸ் சிலிண்டர் எடையை தாங்குவதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. சும்மாவா முப்பது கிலோ அல்லவா?

‘’என்னது தலைகீழா விழணுமா? நான் மாட்டேன்..’’ பதறிப்போகிறேன். ‘’ஒன்னும் ஆகாதுங்க.. பிசிடி கவசத்துல இருக்கிற அடைக்கப்பட்ட காற்று தலைகுப்புற விழுந்தாலும் உங்களை நேரா மிதக்க வைக்கும் டோன்ட் வொரி, அதோட உங்க உடம்போடு இருக்குற எடை தண்ணீருக்குள் தனியாகத்தான் மிதக்கும். அந்த எடையை நீங்க உணரமாட்டீங்க’’ என்று தைரியம் சொல்லி குதிக்கச்சொல்கிறார் அர்விந்த்.

பயத்தை தூக்கி பக்கெட்டில் போட்டுவிட்டு ஒன்...டூ... த்ரீ.. ஜம்ப் என தலைகீழாக பின்னோக்கி கடலுக்குள் தொபுக்கடீர் என விழுகிறேன். குபுக் குபுக் என்கிற ஒலி மட்டும்தான் சில நொடிகளுக்கு கேட்டது.. வாயில் உப்புக்கரிக்கிறது. உடலெங்கும் ஜில்லென தண்ணீர் பட்டு சிலிர்க்கிறது.

எதையும் பார்க்க முடியவில்லை. சுற்றிலும் தண்ணீர்.. கால்கள் வானத்தை பார்த்திருக்க... தலை கடலுக்குள் மூழ்கியிருக்க..

‘’அவ்ளோதான்டா அதிஷா... நீ காலி’’ என்று மனது படபடக்க... எல்லாமே சில நொடிகள்தான். தானாகவே ஒரு குட்டிக்கரணமும் போட்டு தலைமேலே கால்கீழே என்கிற சகஜநிலைக்கு திரும்பிவிட்டேன். எனக்கு ஒன்னும் ஆகலை என்கிற உற்சாகம் ஒருபக்கம். கடலில் மிதக்கிற த்ரில் இன்னொருபக்கம்.

அர்விந்தும் நானும் கடலில் மிதந்துகொண்டிருந்தோம். அவரும் சகல கவசங்களையும் காற்றடைத்த சிலிண்டரையும் சுமந்துகொண்டிருந்தார்.

‘’ஓக்கே போலாமா’’ என்று சைகையில் கேட்கிறார். சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு... சரி என்பதற்கான கையசைப்பை காட்டினேன்.

நான் அரவிந்தின் கைகளை பற்றிக்கொள்ள, படகோடு இணைக்கப்பட்டிருந்த கயிற்றை பிடித்துக்கொண்டு உலகின் சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு கடலில் மூழ்கினோம்.

மூழ்கியதும் சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. முதலில் இருட்டு.. பிறகு கொஞ்சமாக நீலம்.. கருநீலம்.. அடர்நீலம் மட்டும்தான். உஜாலாவுக்கு மாறிவிட்ட ஒரு நீல உலகில் புகுந்திருப்பதை உணர்கிறேன். ஆனால் மூச்சுவிட முடியவில்லை. மூக்கை அடைத்துக்கொண்டிருக்கிறது முக கவசம். அதை நீக்கிவிட்டால் மூக்குவழியாக தண்ணீர் ஏறிவிடலாம். வாய்வழியாக வேகவேகமாக மூச்சு விடுகிறேன். இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. எதையும் பார்க்க முடியவில்லை சுற்றி என்ன இருக்கிறதென்பதை உணரமுடியவில்லை. அரவிந்தின் கைகளை மட்டுமே உணர்கிறேன்.

திருவிழா கூட்டத்தில் சிக்கிக்கொண்ட குட்டிப்பையன்கள் , திக்குதெரியாமல் தொலைந்து போய்விடுவோமோ என்கிற பயத்தில் அம்மாவின் கைகளை பிடித்துக்கொள்வதுபோல அர்விந்தின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன்.

கடலின் ஓங்காரம் காதுகளை கலவரப்படுத்துகிறது. கண்கள் முழுக்க அதன் நீல நிறம். கஷ்டப்பட்டு உற்றுப்பார்க்கிறேன். இப்போது அருகில் இருக்கிற அர்விந்த் மட்டும் மங்கலாகத் அலை அலையாய் தெரிய ஆரம்பிக்கிறார். அவர் எனக்கு முன்னால் வந்து.. தன் தோளில் இணைக்கப்பட்ட சிறிய அட்டையில் எழுதிய வாசகங்களை காட்டுகிறார். ‘’DON’T PANIC”

நான் சரி என்பதாக தலையை அசைக்கிறேன். கடலில் தலையை அசைத்தெல்லாம் எதையும் சொல்லக்கூடாது. சைகைகளால்தான் சொல்லவேண்டும். அர்விந்த் அதைநினைவூட்டுகிறார்.

மீண்டும் அட்டையை காட்டுகிறார். ‘’BREATH SLOWLY”. பொறுமையாக மூச்சை உள்ளே இழுத்து பொறுமையாக வெளியே விடு என்று கைகளை சிறகுகள் போல விரித்தும் அசைத்தும் சைகை மூலம் சொல்கிறார். வாய் வழியாக பொறுமையாக உள்ளே இழுத்து பொறுமையாக வெளியே விடத்தொடங்குகிறேன். அதையே பலமுறை செய்யச்சொல்கிறார். புத்தர் தன் சீடர்களுக்கு இப்படிதான் மூச்சுப்பயிற்சி கொடுத்திருப்பாராயிருக்கும். அர்விந்த் அதை என்னிடம் சொல்லும்போது முகத்தில் புன்னகையை உணர முடிந்தது.

மூச்சை இழுத்து மிகபொறுமையாக வெளியே விட விட... முதலில் மூளை அமைதியாகிறது. பிறகு உடல். சுற்றிலும் இருந்த அடர் நீலம்.. இப்போது வெளிர் நீலமாக மாறுகிறது. எனக்கு மிக அருகே சின்ன சின்ன நுண்உயிரிகள்.. பிச்சுப்போட்ட பஞ்சுபோல.. மிகமிகச்சிறிய லட்சக்கணக்கான குட்டி குட்டி உயிர்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. அரவிந்த் இப்போது மீண்டும் சைகையில் கேட்கிறார் ‘’என்ன ஓகேவா?’’. நான் சைகையில் ஓகே என்று சொல்ல.. கயிறை பிடித்தபடி ஒவ்வொரு மீட்டராக உள்ளே இறங்க ஆரம்பிக்கிறோம்.

இருமல் வருதைப்போல இருக்கிறது. வாய்க்குள் இருந்து ரெகுலேட்டரை எடுத்துவிட்டெல்லாம் இருமவோ தும்மவோ எச்சில் துப்பவோ முடியாது. ரெகுலேட்டர் வழியாகவேதான் சகலமும் நடக்கவேண்டும். ரெகுலேட்டரில் உள்ளே எதுவுமே நுழையமுடியாதென்பதால் வாய்க்குள் கடல்நீர் செல்ல வழியில்லை. ஆனால் அதன்வழியாக வாய்க்குள்ளிருந்து எதையும் வெளியேற்றும் வசதியுண்டு. இருமுகிறேன். அது காதுக்குள் அடைக்கிறது.

ஒவ்வொரு மீட்டரிலும் காதுகள் அடைத்துக்கொள்ளும். மலைமீது பயணம் செய்யும்போது காதுகள் அடைத்துக்கொள்ளுமே அதுபோல... கடலுக்குள் போகும்போது அழுத்தம்காரணமாக இப்படி ஒவ்வொரு மீட்டரிலும் ஏற்படும். அந்த நேரத்தில் மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக ஒரு மூச்சுவிட்டு காதடைப்பை சரிசெய்துவிட்டு கீழே இறங்கவேண்டும். ஒவ்வொரு மீட்டராக மூக்கடைப்பை சரிசெய்தபடி வாயால் பொறுமையாக காற்றைவெளியேற்றி மீண்டும் உள்ளிழுத்து இறங்கத் தொடங்குகிறேன்.

கீழே இறங்க இறங்க இன்னொரு புதிய உலகம் மௌனமாக விரியத்தொடங்குகிறது. நம்முடைய பரபரப்போ படபடப்போ வேகமோ சப்தங்களோ இல்லாத, எல்லாமே பொறுமையாக நகர்கிற, நீரினால் சூழப்பட்ட ஒரு பேரமைதியான உலகம். அங்கே எந்த உயிரினத்துக்கும் எதற்கும் அவசரமில்லை.

எல்லாமே பொறுமையாக அதேசமயம் உற்சாகமாக வாழ்கின்றன. என்னை
உரசி செல்கிறது குட்டிமீன்களின் கூட்டம். (ஆழ்கடல் நீச்சலில் முதல் விதி... கடலில் எதையும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதே!) அதனால் அசையாமல் அவை நகர்வதற்காக காத்திருக்கிறோம். கீழே கடலின் தரை தெரிகிறது. களங்கமற்ற தரை. அதில் சில கொடிகள் நீண்டும்... சில தாவரங்கள் மண்டியும் கிடக்கின்றன.

நேற்றுவரை டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரபிக் சேனல்களில் பார்த்ததை இப்போது நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தை சொல்லித் தீராது. பொறுமையாக தரையை நோக்கி இறங்குகிறோம். இப்போது முன்பைவிட காது அதிக வேகத்துடனும் எவ்வளவு அழுத்தி மூச்சு விட்டாலும் அடைப்பு நீங்காமல் காதில் லேசான வலியும் உண்டாகிறது.

ஒவ்வொரு மீட்டரிலும் அர்விந்த் பொறுப்பாக என்னிடம் விசாரிக்கிறார். சைகையில் ‘’ஓக்கேவா..’’ சைகையில் ‘’ஒகே’’. மீண்டும் இறங்குகிறோம். தரையில் மண்டியிட்டு அமர்கிறோம். ஸ்கூபா டைவிங்கில் கடல் தரையில் மண்டியிட்டுதான் அமரவேண்டும்.
அழகான வண்ணவண்ண மீன்கள் தரையிலும் மேலும் நீந்தி செல்கின்றன. தாவரங்கள் காற்றில் ஆடுவதைப்போல ஸ்லோமோசனில் ஆடிக்கொண்டே இருக்கின்றன. பிரமாண்டமான மீன்தொட்டிக்குள் உட்கார்ந்திருப்பதைப்போல இருந்தது. ஒரே அலைவரிசையில் ஒரு மிகபிரமாண்டமான ஒலி... காதை நிறைக்கிறது.

அர்விந்த் போகலாமா என்று கேட்கிறார். சரி என்கிறேன். அவரது கையைபிடித்து மீண்டும் மேலெழ... இந்த முறை அப்படியே கடலின் தரைக்குமேல் அரைமீட்டர் உயரத்தில் நீந்த ஆரம்பிக்கிறோம். பொறுமையாக அதேசமயம் சிறகு முளைத்து மெதுவாக பறப்பதைப்போல உணர ஆரம்பிக்கிறேன். மீண்டும் ஆர்வத்தில் வேகவேகமாக கால்களை உதைக்க ஆரம்பித்தேன்.. அர்விந்த் தன்னுடைய அட்டையில் ஏதோ எழுதிக் காட்டுகிறார். நெருங்கிப் பார்க்கிறேன். ‘’SLOWLY”!

பொறுத்தார் பூமி ஆள்வாரோ இல்லையோ, கடலுக்குள் போய்விட்டால் எவ்வளவுக்கெவ்வளவு பொறுமையாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம்மால் கடலில் இயல்பாக அதிக நேரம் இருக்க முடியும். மெதுவாக கால்களில் இணைந்திருந்த ஃபின்ஸை ஆட்டி ஆட்டி நீந்த ஆரம்பிக்கிறோம். பறந்துசெல்வதைப்போலவே இருக்கிறது.

நாங்கள் பிடித்துக்கொண்டிருந்த கயிறை விட்டுவிட்டு தனியாக சில மீட்டர்கள் கடலின் எழிலை கண்டு ரசித்தபடி நீந்த ஆரம்பித்தோம். வழியெங்கும் வண்ண மீன்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாறைகள் என தொலைக்காட்சிகளில் மட்டுமே கண்டுரசித்த ஆழ்கடலின் அதிசயங்கள். கிட்டத்தட்ட கால்மணிநேரமாவது திரிந்திருப்போம். (கடலுக்குள் சென்றபிறகு காலம் குறித்த பிரக்ஞை இல்லாதிருந்ததை வெளியே வந்தபின்தான் உணர முடிந்தது).

சிலநிமிடங்கள் சுற்றியபிறகு... அர்விந்த் மேலே போகலாம் என்பதற்கான சைகையை காட்ட.. மேல்நோக்கி கிளம்பினோம். பொறுமையாக ஒவ்வொரு மீட்டராக கயிறைப்பிடித்து மேலே ஏற ஆரம்பித்தோம். ‘’இங்கேயே நிரந்தரமா இருந்திட முடியாதா’’ என்கிற ஏக்கம் மனதைக் கவ்விக்கொண்டது. மூக்கு மட்டும் மஞ்சளாக உடலெல்லாம் வெள்ளிநிறத்திலிருந்த ஒரு குட்டி மீன் என்னை வழியனுப்புவதுபோல, கயிற்றுக்குப் பக்கத்திலேயே எங்களோடு வந்ததைப் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது.

மேலே ஏறிவந்தோம். பழைய அதே பரபரப்பான உலகம். படகின் எஞ்சின் சப்தம். ‘’வந்தாச்சு’’ என்கிற மற்ற நண்பர்களின் உற்சாக குரல்.
மீண்டும் படகில் ஏறி அமர்ந்தபின்னும் பொறுமையாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தேன். என்னை சுற்றி எல்லாமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க நான்மட்டும் ஆழ்கடல் நினைவில் இன்னமும் பொறுமையாக மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறேன். பொறுமையாக... மெதுவாக.. உள்ளே இழுத்து.. மெதுவாக வெளியே விட்டுக்கொண்டு... ஒரு தியான வகுப்பிலிருந்து வந்ததுபோல...!

இம்முறை படகு கடல் அலைகளால் வேகமாகவே ஆடினாலும் என்னால் அதை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
நிச்சயமாக ஸ்கூபா டைவிங் சாகச விளையாட்டு கிடையாது. அதை, நம் மனதை ஒருநிலைப்படுத்துகிற எத்தனையோ வகை தியானங்களில் ஒன்றாகக் கருதலாம். அதோடு நாம் கொஞ்சமும் அறிந்திடாத முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்திவைக்கும்.

நம்முடைய வாழ்க்கையை விலகி நின்று ஏன் இப்படி ஒரு அசுர வேகத்தில் பயணிக்கிறோம் என்கிற புரிதலையும் உண்டுபண்ணும்.
ஆழ்கடல் நீச்சல் என்பது வெளிப்பார்வையில் கடலுக்குள் நிகழ்த்தப்படும் சாகசம் என்றாலும், அது நம் மனதின் ஆழத்தில் மிகநல்ல அதிர்வலைகளை உண்டாக்க வல்லது. வாழ்க்கையில் ஒருமுறையேனும் நாம் அனைவருமே அனுபவித்துப்பார்க்க வேண்டிய அந்தப் பரவச அனுபவத்திற்கு நீங்கள் தயாரா?

****


******************************************************

சில குறிப்புகள்

*பொழுதுபோக்குக்காக பண்ணுகிற FUN டைவிங்கிற்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

*பத்துவயதுக்கு மேற்பட்ட நல்ல உடல்நிலையில் இருக்கிற யாரும் ஸ்கூபா டைவிங் செய்ய இயலும்.

*உடல்நிலை குறித்த சகல விபரங்களும் பெறப்பட்ட பின்பே டைவிங் செய்ய இயலும், உங்கள் உடல்நிலையில் பயிற்சியாளருக்கு திருப்தியில்லை என்றால் மருத்துவரின் சான்றிதழ் அவசியம்.

*பிப்ரவரி, மார்ச், அக்டோபர் ஆகிய மாதங்கள் ஸ்கூபா டைவிங்குக்கு ஏற்றது என்றாலும், மற்ற மாதங்களிலும் முயற்சி செய்யலாம்.

*நீச்சலின் போது அணிந்துகொள்கிற வெட் சூட் , நியோப்ரீன் என்கிற வேதிப்பொருளால் நெய்யப்பட்டது. கடலின் ஆழத்துக்கு செல்ல செல்ல குளிரத்தொடங்கும் அந்தநேரத்தில் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள இந்த உடை உதவுகிறது.

*OPENWATER DIVING LICENSE க்கு நான்குநாள் பயிற்சி தரப்படுகிறது. இந்த லைசென்ஸ் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் நீங்கள் தனியாகவே பயிற்சியாளர்கள் துணையின்றி டைவிங் பண்ண முடியும். இங்கே லைசென்ஸ்பெற்று அந்தமானிலும் இலங்கையிலும் தாய்லாந்திலும் பலரும் டைவிங் செய்கிறார்கள்.

*டைவிங்கின் போது நாம் பயன்படுத்துகிற சிலிண்டரில் என்ன இருக்கும் தெரியுமா? 21%ஆக்ஸிஜன், 78% நைட்ரஜன், 1%மற்றவை. மிக ஆழமான பகுதிகளில் அதிக நேரம் நீச்சலடிக்க நைட்ராக்ஸ் NITROX என்கிற வாயுக்கலவை உபயோக்கப்படுத்தபடுகிறது. இதில் 36% ஆக்ஸிஜன் இருக்கும்.

*டைவிங்கில் லைசென்ஸ் பெற்றவராகவே இருந்தாலும் 40மீட்டருக்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை. PROFESSIONAL DIVINGகில் தேர்ச்சி பெற்றவர்கள்கூட 60மீ வரைதான் செல்லமுடியும்.


***

விபரங்களுக்கு
http://www.templeadventures.com/
+91-9940-219-449 என்ற எண்ணிலோ
தொடர்பு கொள்ளலாம்.


***

(நன்றி -புதியதலைமுறை)