Pages

27 June 2014

ஒரு கோடம்பாக்கம் காப்பி கதை



தன் முதல்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனரின் இரண்டாவது படம். இந்த மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது என்ன காரணமோ அனேகமாக அடுத்த மாதம் ரிலீஸாகலாம். ஏற்கனவே படத்தின் ட்ரைலரும் பாடல்களும் வெளியாகி இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. எல்லோருமே அந்த இரண்டாவது படத்துக்காகத்தான் ஆவலுடன் வெயிட்டிங்.
நேற்று கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனர் ஒருவரோடு டீக்கடையில் காப்பி குடித்துக்கொண்டே ஒரு விவாதம். பேச்சு வடபழனியில் தொடங்கி அமெரிக்கா ஆஸ்திரேலியாவெல்லாம் சுற்றி ஈரான்,எஸ்ரா,ஜெமோ,வித்யூ வித்தவுட் யூவில் யூடர்ன் அடித்து கொரியாவில் வந்து நின்றது.

‘’அண்ணே கொரியாவுக்கும் கோடம்பாக்கத்துக்கும் நடுவுல ஒரு சுரங்கப்பாதை இருக்குண்ணே’’ என்றார். ஜோக்கடிக்கும்போது சிரிக்கமாட்டார். ரசனையான மனிதர். பேச்சு சுற்றி சுற்றி கடைசியில் முத்திரை இயக்குனரின் இரண்டாவது படத்தைப்பற்றி வந்தது. அது ஒரு காப்பி படம்ண்ணே என்றபோது பகீர் என்றிருந்தது. மிகவும் மதிக்கிற இளம் இயக்குனர்களில் அவரும் ஒருவர். ‘’இளம் இயக்குனர்ண்ணா காப்பியடிக்க மாட்டாய்ங்களாண்ணே’’ என்றபோது அது நியாயமாகவும் தெரிந்தது. ‘’காட்பாதரை தேவர்மகனாக்கின மாதிரி இவரு.. இந்த டர்ட்டி கார்னிவல *****வாக்கிட்டாருண்ணே’’

‘’அது ஒரு கொரியன் படத்தோட அச்சு அசல் காப்பிண்ணே… கொரியா மேட்டரை நம்மூர் மதுரை மேட்டரா மாத்திருக்காய்ங்க, காவேரி கார்னர்ல சுத்துற எல்லா பயலுக்கும் இது தெரியும்.. போய் நின்னு சும்மா பேச்சு குடுத்து பாருங்க ஆளாளுக்கு அந்த ஒரிஜினல் படம் பத்திதான் சொல்லுவானுங்க... நீயூஸ்லயே வந்துடுச்சு.. நீ வேஸ்ட்ண்ணே என்ன பத்திரிகையாளனோ’’ என்றார். ஒரிஜினல் கொரியன் படத்தின் டாரன்ட் காப்பியை பென்ட்ரைவில் எனக்கும் ஒன்று கொடுத்தார்.

அந்த தென்கொரிய படத்தின் பெயர் ‘’A DIRTY CARNIVAL”. 2006ல் வெளியான இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. நியோ-நாயர் வகை படம் இது. (கேரள நாயர்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. இது ஒரு GENRE).

இரண்டாவது பட ட்ரைலரை ஏற்கனவே பார்த்திருந்ததால் இந்த படத்தின் கேரக்டர்களுக்கு அந்த முகங்களை பொருத்திக்கொண்டு படம் பார்க்க தொடங்கினேன். உதவி இயக்குனர் சொன்னது கிட்டத்தட்ட உண்மை மாதிரிதான் தோன்றியது. ஆனால் இல்லாத மாதிரியும் தோன்றியது.

படம் வெளியாவதற்கு முன்பே நாம் எந்த முன்முடிவுகளுக்கும் போய்விடக்கூடாது. யாரையும் குற்றவாளியாக்குவது PROFESSIONAL ETHICS ஆகவும் இருக்காது. நமக்கென்று சில தனிமனித விழுமியங்களும் உண்டுதானே… என்பதால் படத்தின் கதையை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன். இதேகதையுள்ள ஏதாவது படத்தை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருந்தாலோ அல்லது இனிமேல் பார்க்க நேரிட்டாலோ தயவு செய்து தகவல் தரவும். நீளமான கதையை வாசிக்க விருப்பமில்லையென்றால் ஸ்கிப் செய்து கடைசிப்பத்திக்கு தாவலாம்!

இனிகதை…

***

கொரியாவின் ஏதோ ஒரு நகரத்தில் இருக்கிற ஒரு கேங்ஸ்டர் தலைவன். அவனுக்காக வேலை பார்க்கிற அவனுடைய கிளை கேங்ஸ்டர்தான் நாயகன். கிளை வைத்திருப்பவன் தனக்கென்று விஸ்வசமாக நான்கு பேரை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருக்கிற தன்னுடைய குடும்பத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறான். அதோடு தன்னுடைய கிளையை தொடர்ந்து நடத்துவதிலும் அவனுக்கு சிரமங்கள் இருக்கிறது. இந்த நிலையில் கேங்ஸ்டர் தலைவனுக்கு வேலைகள் கொடுக்கிற முதலாளிக்கு ஒரு போலீஸ்காரனால் சிக்கல் வருகிறது. அவனைப்போட்டுத்தள்ள கேட்கிறான் முதலாளி. ஆனால் கேங்ஸ்டர் தலைவனோ அது கஷ்டம் என மறுக்கிறான். முதலாளி ஹீரோவை அழைத்து எத்தனை நாளைக்குதான் இப்படி காசில்லாம கஷ்டபடுவ சீக்கிரமா ஒரு நல்ல முதலாளியை பிடிச்சி வாழ்க்கைல முன்னேறப்பாரு என அட்வைஸ் பண்ணுகிறான்.

உடனே நம்ம ஹீரோ போலீஸ்காரனை போட்டுத்தள்ளும் அசைன்மென்ட்டை முடித்துக்கொடுக்கிறான். இதற்கு நடுவில் தன்னுடைய பள்ளிகால நண்பனை சந்திக்கிறான் ஹீரோ. அவன் ஒரு கேங்ஸ்டர் படமெடுக்க திரைக்கதை அமைப்பதற்காக களவிபரங்கள் சேகரிக்கிறான். ஹீரோ கேங்ஸ்டர் என்பது தெரிந்து அவனுடன் மீண்டும் பழைய நட்பை புதுப்பித்து கொண்டு ஜிகிரிதோஸ்தாக மாறுகிறான். அதோடு பள்ளிக்கால தோழியை (ஹீரோயின்) ஹீரோ மீண்டும் சந்திக்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறான். பள்ளிக்கால தோழியை கண்டதும் காதலில் விழுகிறான் ஹீரோ. அவளை அவள் வேலைபார்க்கும் இடத்தில் சந்திக்கிறான். ஆனால் அவளோ இவன் ஒரு ரவுடி என்பது தெரிந்து அவனிடம் நெருக்கம் காட்ட மறுக்கிறாள். ஒருநாள் தனிமையில் சந்திக்கும்போது அவளோடு அவளுடைய முன்னாள் காதலன் தகராறு செய்துகொண்டிருப்பதை பார்த்து அந்த மு.கா வை நாயகியின் முன்னாலேயே வைத்து நைய புடைத்துவிடுகிறான். இதனால் கோபமாகும் நாயகி என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள்.

ஹீரோ போலீஸ்காரனை கொன்று முதலாளிக்கு நெருக்கமானதை அறிந்து கொள்ளும் கேங்ஸ்டர் தலைவன் கோபமாகிறான். ஆனால் ஹீரோவிடம் அதை காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு ஒரு வேலை கொடுக்கிறான். ஆனால் அந்த வேலையை தன்னுடைய தங்கை திருமணவிழா முடிந்த பின் செய்துகொள்ளலாம் என்றும் முடிவாகிறது. தலைவனுக்கு மேட்டர் தெரிஞ்சிடுச்சு என்று உஷாராகும் ஹீரோ தலைவனை போட்டுத்தள்ள ப்ளான் போடுகிறான். தலைவன் தங்கை திருமண விழாவிலேயே தலைவனை சதக் சதக்.. இஸ்ஸ் என காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்கள்.

ஹீரோ தலைவனாக தலையெடுக்கிறான்.. முதலாளிக்காக மோசமான காரியங்களை மகிழ்ச்சியோடு செய்கிறான். மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்றுக்காக நிறைய கொலைகள் செய்யத்தொடங்குகிறான். நடுவில் காதலியை பிரிந்த சோகத்தில் நிறைய குடித்துவிட்டு டைரக்டருக்கு போன் பண்ண அவன் தன்னுடைய அறைக்கு அழைத்துச்செல்ல.. அங்கே தான் செய்த கொலைகளை பற்றி உளறிவிட.. அவனோ அதை திரைக்கதையாக எழுதி படமெடுக்கிற வாய்ப்பை பெறுகிறான். நடுவில் காதலியை சந்தித்து மன்னிப்புக்கேட்டு மீண்டும் காதலை புதுப்பிக்கிறான் ஹீரோ.

டைரக்டர் நண்பனின் படம் வெளியாகி மெகாஹிட் ஆகிறது. படத்தில் ஹீரோ முதன்முதலில் போலீஸ்காரனை கொன்றதும், அதற்குபிறகு தலைவனை கொன்றதும் அப்படியே காட்சியாக வந்திருக்க.. அதை பார்த்து முதலாளி அஞ்சுகிறான். டைரக்டரை போட்டுத்தள்ள சொல்கிறான். ஆனால் நட்புக்காக டைரக்டரை மிரட்டிவிட்டு விட்டுவிடுகிறான் ஹீரோ. ஆனால் டைரக்டர் அவமானத்தால் கோபமாகி போலீஸிடம் ஹீரோவை போட்டுக்கொடுத்துவிட… காதலியிடம் கல்யாணத்துக்கு ப்ரபோஸ் பண்ணுகிற ஒரு நாளில் போலீஸ் அவனை சுற்றிவளைக்க போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகிறான் ஹீரோ. முதலாளியிடம் மன்னிப்புக்கேட்டு உங்கள் பெயர் வெளியே வராது என்று சொல்லிவிட்டு.. டைரக்டரை போட்டுத்தள்ள கிளம்ப.. க்ளைமாக்ஸில்.. நிறைய ட்விஸ்டுகளுக்கு பிறகு ஹீரோவின் அஸிஸ்டென்டே ஹீரோவை போட்டுத்தள்ளிவிட்டு புதிய தலைவனாகிறான்!

கதை முடிந்தது.

****

தமிழ்சினிமாவில் ஏற்கனவே பலமுறை நாம் பார்த்த கதைதான் என்றாலும் படத்தின் மிகசிறந்த மேக்கிங். அருமையான நடிப்பு என எல்லா வகையிலும் ரொம்பவும் ஈர்த்தது. அதிலும் ஹீரோவாக நடித்திருக்கும் ஜோ இன் சுங்கின் நடிப்பு அபாரமானது. சிறந்த நடிகர் விருதுகளை பெற்றும் கொடுத்திருக்கிறது. இயக்குனரும் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த படத்தைதான் இப்போது தமிழில் சுட்டு படமாக எடுத்திருக்கிறார்களாம். எடுக்காமலுமிருக்கலாம். என்னிடம் சொன்ன உதவி இயக்குனருக்கு அந்த இரண்டாவது பட இயக்குனரின் மேல் காண்டாக கூட இருக்கலாம். அவரை காலி பண்ணுவதற்காக கூட இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லியிருக்கலாம். ''ப்ரோ எனக்கு இந்த கதைய சுட்டுருப்பாங்கனு தோணலை ப்ரோ'' என்றேன். ''படம் வரட்டும் அப்புறம் சொல்லுங்க'' என்றார் விரைப்பாக. கோவக்காரர்.

அவரைவிடுங்க நீங்கள் இந்தக் கதையை படித்துவிட்டீர்கள்தானே இதே கதையோடு எதாவது படம் வந்தால் பார்த்துவிட்டு கொந்தளிக்கவும். அல்லது அந்நிய நாட்டு விஷயத்தை தமிழுக்கு ஈன்ற தங்கம் எங்கள் இணையற்ற இயக்குனர் என அவரை பாரட்டவும். உங்கள் விருப்பம்.

அப்படி படம் எதுவுமே வரவில்லையென்றால இந்த கொரிய படத்தையாவது தவறவிடாமல் பார்த்துவிடவும். கேங்ஸ்டர் பட ரிசிகர்களுக்கு ஏற்ற சூப்பரான படம். குறையென்று சொல்வதென்றால் கொஞ்சம் நீளம். ஆனால் அற்புதமான மேக்கிங்கிற்காகவும் ஸ்டன்ட்காட்சிகளின் கோரியோக்ராபிக்காகவும் நிச்சயமாக அனைவரும் கட்டாயம் பார்க்கலாம்.

(இரண்டாவது படம் என்றே ஒரு படத்தை எனக்கு பிடித்த இயக்குனரான அமுதன் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த இயக்குனர் அவரில்லை. ஒருவேளை இப்பதிவை படித்து யூகிக்க முடிந்தாலும் படம் வெளியாகும் வரை ரகசியம் காக்கவும்.)



17 June 2014

சினிமாவுக்கான லக்கி டிக்கட்




சென்றவாரம் முண்டாசுப்பட்டி படம் பார்க்க சென்றிருந்தேன். அதே திரையரங்கில் ‘’திருடு போகாத மனசு’’ என்கிற படமும் ஒரு ஷோ ஓடிக்கொண்டிருந்தது. படத்தின் தயாரிப்பாளரான செல்ல.தங்கையாவே நடித்து, இயக்கி, பாட்டெழுதி, இசையமைத்து, எடிட்டிங் பண்ணி…. மிகுந்த பொருட் செலவில் சொந்தகாசில் படமெடுத்து ஒருஷோ ரிலீஸ் பண்ணி.. படத்தில் முழுக்க நாட்டுபுற கலைஞர்களே நடித்திருக்கிறார்கள் என விளம்பரமும் செய்திருந்தனர்.

படத்தின் அறிமுக ஹீரோவான செந்தில்கணேஷ் படத்தின் எல்லா பாடல்களையும் தன் சொந்தக்குரலில் பாடி அசத்தியுள்ளாராம்! ஆனால் போஸ்டரில் ஹீரோயின் படம் மிஸ்ஸிங். நான் போன நேரத்திற்கு ஷோவும் இல்லை. அதனால் படம் பார்க்கும் வாய்ப்பை இழந்தேன்.

‘’திருடுபோகாத மனசு’’ படத்தில் ஒரு புதுமையை புகுத்தியிருக்கிறார் தயாரிப்பாளர். தியேட்டரில் அந்தபடத்தை பார்க்கவரும் ரசிகர்களுக்கு டிக்கட்டோடு ஸ்பெஷல் டோக்கன் ஒன்றும் வழங்கப்படுகிறது. உங்களுக்கு நடிப்பார்வம் இருந்தால் இயக்குனர் செல்ல.தங்கையாவின் அடுத்த படமான ‘’கடலை சேராத நதி’’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்! அதற்கான லக்கி டிக்கட்தான் இந்த டோக்கன். அதை கொண்டுபோய் அவர்களுடைய அலுவலகத்தில் காட்டி ஆடிசனில் கலந்துகொண்டால்…

நான் இந்த போஸ்டரை பராக்கு பார்த்துக்கொண்டிருந்த க்ஷணத்தில் எனக்கு பின்னால் நான்கு பையன்கள் அதே போஸ்டரை பார்த்துக்கொண்டிருந்தனர், அதில் ஒருவன் இன்னொருவனிடம்.. ‘’ நீ ரொம்பநாளா நடிக்கோணும்னு சொல்லிகிட்டிருந்தியல்ல.. இந்த படத்துல ட்ரை பண்ணலாம்லோ’’ என்று பேசிக்கொண்டிந்தனர்.

பையன்கள் பேச்சில் கோவை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் ஊரிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்பதும் தெரிந்தது. ஹோட்டலில் வேலைபார்க்கிற பையன்கள் போல இருந்தனர். எனக்கோ அந்த நடிப்பார்வமிக்க பையனின் பதிலுக்காக காதுகொடுத்து காத்திருந்தேன். அவனோ ரொம்ப நேரம் யோசித்துவிட்டு ‘’இல்ல மச்சான் இதுமாதிரி படத்துல நடிச்சா துண்டு கேரக்டர் குடுத்ருவானுங்க.. நாம டைரக்டா தேடுவோம், ஹீரோவா ட்ரைபண்ணுவோம்டா.. இவனுங்க கிட்னி திருடற கும்பல்மாதிரி இருக்கானுங்க’’ என்று சொல்லிவிட்டு மஞ்சப்பை பார்க்க கிளம்பிவிட்டனர்! நான் முண்டாசுபட்டிக்குள் புகுந்தேன்.

அடுத்த நாட்களில் ''திருடுபோகாத மனசு'' வைப் பார்க்க நினைத்திருந்தேன் அதற்குள் தூக்கிவிட்டார்கள்.

இதுமாதிரி படங்கள் உதயம், கிருஷ்ணவேணி, அண்ணா, சின்ன சாந்தி தியேட்டர்களில் ஒரு ஷோதான் திரையிடப்பட்டு தூக்கப்படும். அதனால் இதையெல்லாம் தவறவிடாமல் பார்ப்பதை பல ஆண்டுகளாக ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். இவை பிட்டுப்படங்கள் அல்ல. அது தனிடிபார்ட்மென்ட். இவை மிகக்குறைந்த பட்ஜெட்டில் தன்னுடைய குடும்பத்தினர் பார்ப்பதற்காக நண்பர்களுக்காக எடுக்கப்படும் ஒருவார ஒருஷோ உள்ளூர் மேக்கிங் பிகிரேடு படங்கள்! இவற்றின் போஸ்டர்களை தினமும் தினத்தந்தியில் யாரும் பார்க்கலாம். சிரிப்புக்கு அளவிலா கேரண்டி கொடுக்கிற படங்கள் இவை.

இப்படித்தான் பவர்ஸ்டார் நடித்த லத்திகாவைகூட முதல்நாள் முதல்ஷோ பார்த்தது. அப்போது தமிழ்நாட்டில் யாருக்குமே பவர்ஸ்டாரை தெரியாது! இவ்வகை படங்களை பார்க்க மிக அதிக சகிப்புத்தன்மையும் பொறுமையும் உள்ளுக்குள் ஒரு விநோத சைக்கோத்தனமும் ரொம்பவே அவசியம். அது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. அதனாலேயே இப்படங்களை பார்க்க துணைக்கு ஆட்கள் சிக்கமாட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நண்பர் ஒருவர் சென்றமாதம் சிக்கினார்.

அவரோடு சாந்திதியேட்டரில் ‘’என் நெஞ்சைத்தொட்டாயே‘’ என்கிற மொக்கைப்படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் இயக்குனர் கே.ஏ.அன்புசெல்வன் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோ கிடையாது, அவர் ஹீரோவுக்கு அப்பா. அதாவது ஹீரோயினுக்கு மாமனார். படம் முழுக்க ஹீரோ டம்மியாகத்தான் வருகிறார். அவருக்கு ஹீரோயினை கட்டிப்பிடிப்பதை தவிர்த்து வேறு வேலைகள் இல்லை.

ஹீரோவின் அப்பாதான் ஹீரோயினோடு பாடுகிறார் ஆடுகிறார், வில்லன்களை வீழ்த்தி சண்டைபோடுகிறார். எமோஷனாகி பர்பார்மென்ஸ் பண்ணுகிறார்! காசுபோட்டு படமெடுத்தவருக்கு அதுக்கு கூட உரிமை இல்லையா? வரதட்சணை வாங்குவதால் ஏற்பாடும் பாதிப்புகளை பற்றி இப்படம் பேசுகிறது.

இப்படியாக நாங்கள் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். இன்டர்வெல்லில் நண்பர் கோன்ஐஸ் தின்றுகொண்டே விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார். அதிலும் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நிறைந்திருந்த இயக்குனரின் நடிப்பாற்றலை சொல்லி சொல்லி சிரித்தார்.

‘’பாஸ் சத்தமா சிரிக்காதீங்க.. படத்தோட படைப்பாளிகள் பொதுவா இந்த தியேட்டருக்குதான் வருவாங்க, படம் இன்னைக்குதான் ரிலீஸ்’’ என்று கட்டுபடுத்தினேன். என்னதான் எடுத்திருப்பது மொக்கைப்படமாக இருந்தாலும் காக்கைக்கும் தன் சுஞ்சு…பொன்சுஞ்சுதானே.. அதனால் அவரை எவ்வளவோ முயற்சி செய்து கட்டுபடுத்த முயன்றேன். ஆனால் நண்பரோ ஹய்யோ ஹய்யோ என படத்தில் வந்த ஒரு கொடூர காட்சியை நினைத்து நினைத்து சொல்லி சொல்லி சிரித்துக்கொண்டேயிருந்தார்.

அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை… ‘’அய்யோ அந்த வெள்ளை சட்டை டைரக்டர்.. பண்ணாருபாருங்க ஆக்சன்..’’ என சிரித்துக்கொண்டே வந்து சீட்டில் அமர்ந்தார். அட கம்முனு இருங்க ப்ரோ அவருக்கு தெரிஞ்சவங்க இருந்தா அடிச்சிருவாங்க என்று அவரை அடக்கினேன். திடீரென்று எங்களுக்கும் முன்னால் அமர்ந்திருந்த ஒரு உருவம் எழுந்தது. எனக்கு பயமாகிவிட்டது.. அந்த உருவம் அவசரமாக வெளியே கிளம்பியது. வாசல் கதவை திறக்க அந்த ஒளியில்தான் தெரிந்தது. அமானுஷ்யம்தான். நம்ப முடியாததுதான். ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும். அது அந்த வெள்ளைசட்டை இயக்குனர்தான்.

எங்களுக்கு மனசே இல்லை. ச்சே என்னடா இது இப்படி ஆகிபோச்சே என நினைத்துக்கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் அவசரமாக திரும்பிவந்து தன் சீட்டில் சத்தமில்லாமல் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். தியேட்டரில் எங்களையும் அவரையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம். நான்காவது ஆள் தூங்கிக்கொண்டிருந்தார்.

***

திருடு போகாத மனசு படத்தின் அந்த போஸ்டர்

16 June 2014

எத்த தண்டி!


அவ்வளவு பெரிய கிழங்கை நான் பார்த்ததேயில்லை. எத்தா தண்டி? ஒருவேளை கிராமத்தில் பிறந்துவளர்ந்தவர்களுக்கு பரிச்சயமாக இருக்கலாம். நல்ல தென்னமர சைஸில் இருந்தது அந்தக் கிழங்கு.

அந்த கிழங்குத்தூணின் ஒரு சிறு பீஸை (அதுவே யானையின் கால்மாதிரி இருந்தது) மட்டும் வெட்டி வைத்து ‘’இயற்கை பூமி சக்கரவள்ளிக்கிழங்கு, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையக்கூடியது எல்லாரும் சாப்பிடலாம்’’ என்கிற பெயர்பலகையோடு ரிச்சி ஸ்ட்ரீட் பக்கம் வண்டியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார் ஒரு ஆள். இப்படி ஒரு விஷயத்தை பார்த்துவிட்டு சும்மா இருக்கவும் முடியுமா? (கொஞ்சம் தலையை வளைத்து... பார்க்க படம்)

என்னங்க இது ருசியாருக்குமா என்று விசாரிக்க.. அட இந்தா புடிங்க என ஒரு சிறுதுண்டு சாம்பிள் கொடுக்க.. அதை பெருந்தயக்கத்தோடு வாயிலிட்டு கடித்துப் பார்க்க.. அது வெள்ளரிப்பழம்போல ஒருமாதிரி ஈரப்பதமாக பச்சை வாசனையோடு சுவையாக இருக்க.. குடுங்க சார் எனக்கு ஒரு துண்டு என ஆர்டரிட்டேன். ஒசூர் தினமலரில் இந்த கிழங்குபற்றி நியூஸெல்லாம் போட்டிருந்தார்கள். மருத்துவர் கு.சிவராமனுக்கு ஒருவார்த்தை போன் அடித்து விசாரித்துவிடவும் யோசித்தேன். ஆனால் சாம்பிள் சுவை அது நிச்சயமாக சர்க்கரை வள்ளிகிழங்கு இல்லை என்பதை மட்டும் சொன்னது. ஏதோ காட்டுகிழங்கு போல என நினைத்துக்கொண்டேன்.

கிழங்குதூணிலிருந்து ஒரு சிறுதுண்டை சிப்ஸுக்கு கட் பண்ணுவதுபோல ஸ்லைஸ் பண்ணி அதில் எலுமிச்சம்பழமும் சுகரும் கலந்து நெய்ரோஸ்ட் போல முக்கோண வடிவில் மடித்துக்கொடுத்தார் ஆள். அப்படியே வாயில் வைத்துக்கடித்தால் நன்றாகவே இருப்பதுபோலத்தான் இருந்தது. என்னோடு வந்திருந்த நண்பர் ஒரு துண்டை முயற்சி செய்தார். இன்னொரு நண்பர் சாம்பிள் சாப்பிட்டே பிடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார்.

தர்பூசணி காயில் எலுமிச்சஞ்சாறறைத் தேய்த்து அதன் மீது சக்கரை தூவினாற் போல இருந்த அந்த சாதனத்தை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும், ஆண்மைக்குறைவு நீங்கும், பைல்ஸுக்கு நல்லது என்று தொடங்கி பல்வேறு மருத்துவகுணங்களை பட்டியலிட்டார் கடைகார். எய்ட்ஸும் கேன்சரும் தவிர்த்து கிட்டத்தட்ட எல்லா நோய்க்கும் அது மருந்தாகும் என்பதாக அவர் சொன்னதாக புரிந்துகொண்டேன். இருபது ரூபா பொருளைவிற்கத்தான் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள்.

நான் அதை ரசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டே ‘’ஏன்ங்க இதுக்கு எப்படி தமிழ்நாட்ல வரவேற்பு, இது எந்த ஊர்ல விளையுது?’’ என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தேன். இது ஓசூர் பக்கமிருக்கிற காடுகளில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கிற அபூர்வமான கிழங்கு என்றும் ரொம்பவும் விலை அதிகம் ‘’இந்த ஒரு துண்டு ஆயிரத்து ஐநூறு ரூவா..’’ என்றார். பொதுவாக கப்சா விடுகிறவர்களிடம் நம்புவதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தால் மேலும் மேலும் கப்சாவிட்டு நன்றாக காமெடி பண்ணுவார்கள்.. இந்த வண்டிக்காரரும்.. பேப்பர்ல பேட்டி எடுத்துருக்காங்க ப்ரதர், நாளைக்கு காலைல நியூஸ் வரும்பாருங்க என்றுவேறு சொன்னார். அந்த ஏழை தள்ளுவண்டிக்காரனின் முகத்தில் இறைவன் தெரிந்தான்!

வண்டிக்காரர் மகிழ்ச்சியோடு துட்டை வாங்கிக்கொண்டு கிளம்ப நாங்கள் அருகிலிருக்கிற நண்பரின் அலுவலகத்திற்கு கிளம்பினோம். சாம்பிள் சாப்பிட்ட நண்பர் லேசாக தலைவலிப்பதாக சொன்னார். ஃபுல்லாக சாப்பிட்ட நண்பருக்கு கிறுகிறுப்பாக இருப்பதாக சொன்னார். எனக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை. அவர்களிருவரும் ஏன்ங்க கண்ட கருமத்தை வாங்கிக்குடுத்து இப்ப பாருங்க ஒருமாதிரி கேரா இருக்கு என்று என்னை பிடித்துக்கொண்டனர். ஃபுல் சாப்பிட்ட நண்பர் ‘’இது ஏதோ போதை மருந்து தயாரிக்கிற கிழங்குபோலருக்குங்க.. தலைய சுத்துது.. ‘’ என்று உட்கார்ந்தே விட்டார். சாம்பிள் தின்றவர் தண்ணீரை வாங்கி முகங்கழுவிக்கொண்டார். ஆனால் எனக்கு எதுவுமே ஆகவில்லை. என்னங்கடா இது என்று சிந்திக்க ஆரம்பித்திருந்தேன்.

‘’ஒருவேளை சிட்ரிக் ஆசிடும், குளுகோஸும் சேர்ந்து ஏதாவது வேதிவினை மாற்றங்கள் பண்ணி சாதா கிழங்கை ஆபத்தான போதைப்பொருளா மாத்திருக்குமோ’’ என்றேன். ஆனால் அவர்கள் இப்போது அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. சில நிமிட தலைசுற்றல்களுக்கு பிறகு அவர்கள் நார்மலாகினர். ஆனால் இந்த கேப்பில் சென்னை நகரத்தின் ஏதோ சந்துகளுக்குள் புகுந்து எஸ்கேப்பாகியிருந்தார்! ஆள் சிக்கவே இல்லை.

ஆனால் எனக்கு அப்போதுதான் லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. எங்காவது உட்கார்ந்தால் தேவலாம் போலிருந்தது. நம்முடைய நியூரான்கள் ட்யூப்லைட்டுகள் போல! ஆனால் ஹெவியான தலைசுற்றல். வாந்திவருவதைப்போலவும் மயக்கமும்.. குழப்பியடிக்க.. அரைமணிநேரம் கதறவிட்டு பிறகுதான் ஓய்ந்தது. ஒருவழியாக எல்லாம் ஓய..

அடுத்தநாட்களில் அவருடைய புகைப்படமும் அபூர்வ கிழங்குகுறித்த சிறுகுறிப்பும் பிரபல நாளிதழில் வெளியாகியிருந்தது. சாம்பிள் தின்றவருக்கு காய்ச்சல் வந்துவிட்டிருந்தது. எனக்கு குடல் பிதுங்கும் அளவுக்கு கலக்கி… இன்னொரு நண்பர் அதற்குபிறகு ஆளையேகாணவில்லை.

09 June 2014

வாழைப்பழ காமெடியின் நுட்பம்





முதலில் ஒரு சின்ன க்விஸ். சமீபத்தில் தான் எழுதிக்கொண்டிருக்கிற ஒரு தொடரில் கீழ்காணும் விஷயத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் யார்?

''கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடி நினைவிருக்கிறதில்லையா? அது வெறும் நகைச்சுவை காட்சி மட்டுமில்லை. ஒரு ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழம் விற்கப்பட்ட காலத்தை அது நினைவுபடுத்துகிறது. வாழைப்பழம் வாங்கவேண்டுமென்றால் பெட்டிகடைக்கு போகவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதோடு அன்றாடம் வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் உள்ளவர்களுக்கு பழம் சாப்பிடாவிட்டால் நிறைவுவராது. அதற்காக உணர்ச்சிவசப்பட்டு சண்டையிடுவார்கள் என்பதையும் அடையாளம் காட்டுகிறது''

***

நேற்று ஞாநியின் கேணிக்கூட்டத்திற்கு ரோகிணி வந்திருந்தார். (ஞாநிகேணிரோகிணி! என்ன ஒரு ரைமிங்.) தன்னுடைய ஆரம்பகால குழந்தை நட்சத்திர வாழ்க்கை தொடங்கி ரகுவரனுடனான அவருடைய சிநேகம் வரைக்குமாக அவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. தற்போது அப்பாவின் மீசை என்கிற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது.

பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் இன்று சமகால தமிழிலக்கிய வாசிப்பினால் தான் முழுமையாக தமிழராக உணர்வதாகவும் சொன்னார். நாம் எந்த மொழியில் சிந்திக்கிறோமோ அதுதானே நம் தாய்மொழியாக இருக்க முடியும் என்னால் தமிழில்தான் சிந்திக்கமுடிகிறது கோபம் வந்தாலும் அழுகைவந்தாலும் தமிழிலில்தான் எதிர்வினையாற்ற முடிகிறது எனவே எனக்கு தமிழ்தான் தாய்மொழி என்றார். சரிதானே!

பேசும்போது சுஜாதா தொடர்பாக ஒரு விஷயத்தை சொன்னார். 2005-06 நேரத்தில் உயிர்மையின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாராம் ரோகிணி. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ரோகிணி ஒரு பாடலை எழுதி அது சூப்பர்ஹிட்டாகியிருந்த நேரம். நூல் வெளியீட்டுவிழாவில் கவிதை நூலை வெளியிட்ட ரோகிணியிடம் ''ஏம்மா உனக்கு தமிழ் வாசிக்க வருமா'' என்று நக்கலாக கேட்டாராம் சுஜாதா. அவருடைய அந்த கேள்வி ரொம்ப வருத்தமுற வைத்ததாக குறிப்பிட்டார் ரோகிணி!

ரகுவரன் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் எப்படி தன்னுடைய ஒவ்வொரு பாத்திரங்களுக்காகவும் மெனக்கெடுவார் என்று விளக்கினார்.

துள்ளிதிரிந்த காலம் படத்தில் வருகிற அந்த ட்ரைன்ட்ரைவர் பாத்திரத்திற்காக பத்து நாட்கள் சென்னையின் கோடையிலும் ஸ்வட்டர் மாட்டிக்கொண்டு சுற்றினாராம் ! இளம் வயதிலேயே சர்க்கரை நோயாலும் அல்சராலும் பாதிக்கப்பட்டிருந்த ரகுவரன், ஒரு காட்சியை படமாக்கி முடிக்கும் வரை சாப்பிடவே மாட்டாராம்! நடுவில் உணவு இடைவேளை வந்தாலும் சாப்பிட்டாமல் காத்திருப்பாராம்.

ஏன்ங்க இப்படி என்று விசாரித்தால் ''சாப்பிட்டா மந்தமாகிடும் அப்புறம் தொடர்ச்சியா முந்தைய நடிப்பையே தொடர முடியாது'' என்று சொல்லிவிட்டு டீயும் சிகரட்டுமாக உட்கார்ந்துவிடுவாராம் இந்த தமிழின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர்.

****

அல்லயன்ஸ் பிரான்சேவில் போனவாரம் ஓசியில் நூல்கள் கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு போகலாம் என்று நினைத்திருந்தேன். நண்பர்களுக்கும் சொல்லியிருந்தேன். சனிக்கிழமை காலை பத்து மணி முதல் அள்ளிக்கலாம் என்று தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தார்கள் அல்லயன்ஸ் பிரான்சேயார்.

யாரும் வருவதற்கு முன் மொத்தமாக அள்ளிவிடலாம் என்கிற திட்டத்தோடு நம்முடைய நண்பர் ஒருவர் காலை ஒன்பதுமணிக்கே போய் கேட் பக்கமாக காத்திருந்து முண்டியடித்து உள்ளே நுழைந்து நூல்களை தேடி பார்த்திருக்கிறார். எல்லாம் பிரெஞ்சு நூல்கள். செம காண்டாகி போனவர் கடைசியில் துக்கப்பட்டு கஷ்டப்பட்டு தேடித்தேடி ''A GLANCE AT FRANCE" என்கிற ஒற்றை ஆங்கில நூலை கண்டுபிடித்து எடுத்து வந்தாராம்! நல்ல வேளை நான் போகவில்லை.

***

ஜே.ஃபிரான்ஸிஸ் கிருபாவின் இந்தக்கவிதை ரொம்பவும் பிடித்தது.

பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே...
பெண்யார்?
பெற்றுக்கொண்டால் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.

***

புதிதாக கொரிய திரைப்படங்கள் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ இணைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் வருகிற க்யூட்டான பொண்ணு படங்களின் பெயர்களை மட்டுமே உதிர்க்காமல் கொஞ்சம் ஜாலியாக படத்தின் கதையை பற்றியும் அதன் வகைமையைப்பற்றியும் அழகாக சிரிக்க சிரிக்க எடுத்துக்கூறுகிறார். கொரிய பெண்ணாக இருந்தாலும் புரியும்படி தெளிவாக ஆங்கிலத்தில் பேசுகிறார். உங்கள் கொரிய படங்களுக்கான ஆர்வத்தை இங்கிருந்து தொடங்கலாம்...




***

மேலே கொடுத்திருந்த பத்தியை எழுதியவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஜூவி உணவுயுத்தம் தொடரிலிருந்து.

02 June 2014

கூரை வேயும் கவிஞன்




ஸ்காட்லாந்திலிருந்து வந்திருந்தார் இளம் கவிஞர் பில்லி என்கிற ‘’வில்லியம் பில்லி லெஃபோர்ட்’’. அவருடைய கவிதை வாசிப்பு நிகழ்வு கேகேநகர் டிஸ்கவரி புக்பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வை கவிஞர் சல்மா ஏற்பாடு செய்திருந்தார். நிறைய சர்வதேச விருதுகள் வென்ற இந்த பில்லியை பார்த்தால் கவிஞரைப்போலவே இல்லை. ஹாலிவுட் படங்களில் வருகிற ஜேப்படி திருடனைப்போல இருக்கிறார். அதற்கேற்க புஜமுனை மடிக்கப்பட்ட அரைக்கை சட்டை, சின்ன மிலிட்டரி கார்கோ டவுசர், கழுத்தில் மோதிரம் மாட்டப்பட்ட ஒரு கறுப்பு கயிறு என ரொம்ப லட்சணமாக ஆறடியில் இருந்தார். அவர் ஊரிலிருந்து வரும்போது தன்னுடைய காதலியையும் அழைத்துவந்திருந்தார். ரொம்ப ஒல்லிக்குச்சி பெண்ணான காதலியின் பெயர் அபிகேர்ளாம்!

வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லா வெள்ளையர்களும் முகத்தில் ஒரு அழகான புன்னகையையும் எடுத்து வருகின்றனர். நிகழ்வு முழுக்க ஒல்லிகுச்சி அபிகேர்ள் புன்னகைத்துக்கொண்டே இருந்தார். அதைவிட தன்னுடைய பாய்ஃபிரண்ட் கவிதை வாசிப்பதை அப்படியே மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தார். ஸ்காட்டிஷ் கலந்த ஆங்கில உச்சரிப்பில் பில்லி படித்த கவிதைகளில் பாதி சொற்களைத்தான் புரிந்துகொள்ளும் படி இருந்தது. நல்ல வேளையாக வாசிக்கப்பட்ட நான்கு கவிதைகளில் மூன்றை கவிஞர் பத்மஜா மொழிபெயர்த்திருந்தார். அதுவும் நிகழ்வில் வாசிக்கப்பட்டது. பில்லியின் கவிதைகளில் தோல்வியின் வலி நிறைந்திருந்ததை உணர முடிந்தது.

பில்லியிடம் கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. உரையாடலின் முடிவில் ஸ்காட்லாந்திலும் எழுத்தாளர்கள் நிலைமை அவ்வளவு சிலாக்கியமாக இல்லை என்பது தெரியவந்தது. இந்த கவிஞர் பல வேலைகள் பார்த்தவராம். கடைசியாக அவர் பார்த்த வேலை ‘’கூரை வேய்வது’’. (ROOFINGகிற்கு நம்மூரில் அதுதானே). இன் ஸ்காட்லான்ட் ரைட்டர்ஸ் ஆர் ஸ்ட்ரகுளிங் என்றார். யெஸ் யெஸ் இன் இந்தியா நோ டிபரென்ஸ் என்று சொன்னேன். ஓ என்று புன்னகைத்தார்.

கவிஞர் சல்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஜெர்மனியில் தான் கவிதை வாசிக்க சென்று ஒரு நிகழ்வைப்பற்றி சொன்னார். பெர்லினிலிருந்து என்று நினைக்கிறேன் கிட்டத்தட்ட முன்றரை மணிநேரம் காரில் அழைத்துச்சென்று ஒரு இடத்தில் கவிதை வாசிக்க சொன்னார்களாம். மொத்தமாக மூன்றுபேர்தான் பார்வையாளர்களாக வந்திருந்தனராம்! நம்மூர் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதுவதை வைத்து நாமாகவே ஊர் உலகத்தில் இலக்கியவாதிகளை கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொள்கிறோம் போல! அதிலும் கவிஞர்கள் நிலைமை உலகெங்கிலும் ஒரே ரகமாக இருப்பது ஆச்சர்யம்தான். பில்லியின் கவிதை வாசிப்பு நிகழ்வுக்கு என்னோடு சேர்த்து பத்து பேர் வந்திருந்தனர். ஊருக்கு போய் இந்தியாவில் கவிதைகளையும் கவிஞர்களையும் கொண்டாடுகிறார்கள் என பில்லி பீத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

பில்லி கவிஞராக முடிவெடுத்ததும் பல்வேறு கவிதை பட்டறைகளில் பங்கேற்று நிறைய கவிதைகளை வாசித்து முடித்துதான் கவிஞராக ஆனாராம்! ஸ்காட்லாந்தில் அப்படிதான் எழுத்தாளர்கள் உருவாவது வழக்கம் போலிருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதினாலும் தன்னுடைய தாய்மொழியான ஸ்காட்டிஷிலும் கவிதைகள் எழுதுகிறார் பில்லி!

பில்லியின் கவிதைகளில் எனக்கு ‘’தயாராக இருத்தல்’’ என்கிற கவிதை மிகவும் பிடித்திருந்தது. அருமையாக மொழிபெயர்த்த கவிஞர் பத்மஜாவுக்கு நன்றி.

தயாராக இருத்தல்

மூன்று டி ஷர்ட்டுகளும்
பின் தலையை மறைக்கும் சட்டையையும்
அணிந்து கொள்ளுங்கள்
அடுக்கு மிகவும் முக்கியம்.
உங்கள் எண்ணெய் வழியும்
சருமத்தை மறந்து விடாதீர்
எப்பொழுதும் எங்கோ
மழை பெய்து கொண்டிருக்கும்.
கழுத்தை சுற்றித் துணி அணிந்துகொள்ளுங்கள் .
குளிர் காற்று கழுத்திலிருந்து
தான் கீழே இறங்கும்.
கையுறை அணிந்து கொள்ளவும்
ஈரமாய் உள்ளவை உபயோகமற்றவை.
இருந்தாலும்,
தப்பான ஆணியை நீங்கள் அடித்தால்
அவை உதவும்
இந்த கணத்தில்
உங்கள் சிந்தனையை செலுத்துங்கள்
நீர் சொட்டுவதையும்
சிலந்தி ஓடுவதையும் கவனியுங்கள் .
ஏணியின் மேல் நின்று
வேலை செய்யும் போது
சிறிது பயமிருக்கட்டும்
எப்படிக் கீழே விழவேண்டும்
என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
வேலியும் சிமிட்டுபாளங்களும்
மன்னிக்கவே மன்னிக்காதவை.
மலர் படுக்கையும்
ஃபிஷா புதர்களும் கொஞ்சம் பரவாயில்லை .
அலறுவதை பயிற்சிஎடுங்கள் .
கீச்சிடாதீர்கள்
சிங்கம்போல் கர்ஜனை செய்யுங்கள் .
வலி குறைந்து அக்கம் பக்கம் பார்க்கும் போது
நான் சொல்வது உங்களுக்குப் புரியும்
நிலவை ஏற்றுக் கொள்ளுங்கள்
அது பூமியில் ஒரு பகுதியாய் இருந்திருக்கிறது.
அதன் தனிமை
உங்களை அழகாய் உணரச்செய்யும்.
தக்க முறையில் மேலேழுங்கள்
ஏனெனில்
பணம் சம்பாதிக்க
உங்கள் முதுகு உங்களுக்குத் தேவைப்படும்!

***

மேலுள்ள கவிதையை நாம் எப்படி வாசிப்போம், முகத்தில் நிறைய சோகம் பூசிக்கொண்டு, உடைந்துபோகிற மாதிரி குரலில் ஒரே டோனில்தானே சொல்வோம். அது ஏன் தமிழ்நாட்டில் எல்லா கவிஞர்களும் தன் கவிதைக்கு ஒரே மாதிரி ராகம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பில்லி தன்னுடைய கவிதைகளை உற்சாகமாக ஒரு கதைசொல்லியைப்போல தாள லயத்தோடு, குரலில் ஏற்ற இறக்கங்களோடு முகத்தில் ஆயிரக்கணக்கான பாவங்களோடு குறிப்பாக கவிதை அதன் தன்மையோடு உணர்ச்சிகரமாக வாசிக்கிறார். தமிழில் இதுமாதிரி கவிதைகள் வாசிக்கிற பழக்கமே இல்லை என்று தோன்றுகிறது. சாம்பிளுக்கு இந்த வீடியோவை பாருங்கள் பில்லி எப்படி கவிதை வாசிக்கிறார் என்பது புரியும். இளம் கவிஞர்கள் யாராவது இதை முயற்சி செய்யலாம். குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதில் பயிற்சிபெற்ற கவிஞர் விஷ்ணுபுரம் சரவணன் கூட முயற்சி செய்யலாம்.