Pages

20 April 2015

8 Points - ஓ காதல் கண்மணி1 - மணிரத்னத்தின் ‘’தாலி’’ ட்ரையாலஜியில் இது கடைசி படம் போல! அவ்வரிசையில் முதல் படம் மௌனராகம், தாலிகட்டிக்கொண்டு ஒரே வீட்டில் பிரிந்து வாழ்பவர்களின் கதை. அடுத்து அலைபாயுதே தாலிகட்டிக்கொண்டு தனித்தனி வீட்டில் வாழ்பவர்களின் கதை. ஓகா கண்மணி தாலிகட்டிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்பவர்களின் கதை! மற்ற படங்களை போலவே இதிலும் கடைசியில் இருவரும் ஹேப்பி எவர் ஆப்டராக வாழவே செய்கிறார்கள். இப்படத்திலும் கடைசியில் தாலியே வெல்கிறது.

2 - படம் ஓடும் போது யாருமே கைத்தட்டவில்லை. ஆனால் திடீர் திடீர் என்று ஊ….. ஏ…. ஓ…. என்று விதவிதமாக கத்திக்கொண்டேயிருந்தார்கள். நமக்கோ அச்சத்தில் நெஞ்சை கவ்வுகிறது. இந்த கூச்சலுக்கான காரணங்களையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் படத்தில் அப்படி கத்தி கூப்பாடு போடுகிற அளவுக்கு காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் முப்பான் முருகன் வழிவந்த தமிழர்கள் கத்தி ஆர்பரிக்கிற லிப்டூலிப் முத்தக்காட்சி கூட இல்லாத சுத்தமான மயிலாப்பூர் மாமிமெஸ் படம் இது. ஆனால் வெளியே இணையத்தில் இது கலச்சாரத்திற்கு எதிரானது, ஆபாசம் அது இது என்று ஏதோ செக்ஸு பட ரேஞ்சில் பில்டப் மட்டும் ஓவராக இருக்கிறது. நவநாகரீக இளைஞிகள் படத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் விடாமல் ‘’உற்சாகமாக’’ கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

3 - படத்தில் பிரகாஷ்ராஜ் கதையை மட்டுமே தனியாக படமாக எடுத்து ஹாலிவுட்டுக்கு அனுப்பியிருந்தால் ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆஸ்கருக்கும் அல்சைமர் மாதிரியான வினோத வியாதியஸ்தர்களின் காதல்,உறவு தொடர்பான படங்கள் என்றால் விருதை அப்படியே தூக்கி கொடுத்துவிடுகிற வழக்கமுண்டு. லீலாதாம்சனின் வசனங்களும் அவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் இதுமாதிரியான ஒரு பாத்திரம் வரும் (நாயகி ஜமுனாவின் அம்மா) அது எந்நேரமும் இப்படி அடிக்கடி மறந்து மறந்து போய் எதேதோ நடுநடுவே பேசிக்கொண்டிருக்கும்.

4 - கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு கட்டிப்பிடித்த படி பேசுவது, பழைய பாணி கட்டடங்களில் மரகட்டிலில் மேற்படி சமாச்சாரங்கள் பண்ணுவது, பைக்கில் கூலர்ஸ் போட்டுக்கொண்டு காதலியோடு வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவது, கடற்கரையையொட்டி கத்திக்கொண்டே ஜீப்பில் செல்வது என மணிரத்னம் தன் முந்தைய படங்களிலிருந்தே நிறைய ரொமான்டிக் ஐடியாக்களை பிடித்திருக்கிறார். அட நாயகனும் நாயகியும் ஒரு லாட்ஜில் தங்கினாலும் அங்கேயும் மரக்கட்டில்தான் போட்டிருக்கிறார்கள் என்பதும், நாயகியின் ஹாஸ்டலிலும் மரகட்டில்தான் என்பதும் வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ்!! படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் பத்துநாட்கள் ஜாலியாக சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள், அடுத்த பத்து நிமிடங்களுக்கு ய்யய்யா யிய்யய்யா உய்யயா கொய்யா என ரோடுகளில் கத்திக்கொண்டே அலைகிறார்கள். சந்தோஷமா இருக்காய்ங்களாம்!

5 - திரையரங்கில் எங்கெங்கு காணினும் இளம்பெண்கள். கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக குவிந்திருந்தார்கள், எங்கு பார்த்தாலும் லட்டுலட்டாக குமரிகள் கூட்டம். எல்லோருமே பள்ளி-கல்லூரி மாணவிகள்தான். தாராளமாக படத்தின் போஸ்டர்களில் ‘’தாய்மார்களின் பேராதரவுடன்’’ என்று போட்டுக்கொள்ளலாம்! துல்கர் சல்மான் பெயர் போடும் போதும் அவரை காட்டும்போதும் பெண்கள் அலறி குலுங்கி துடியாய் துடிக்கிறார்கள். அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன்! ஆபாசம். அலைபாயுதே காலத்தில் மாதவனுக்குதான் கடைசியாக இப்படி பிள்ளைகள் துடித்தது. அதற்குபிறகு மீண்டும் துடிதுடிக்கவைக்க மணிசார்தான் இன்னொரு படமெடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் காலத்தின் கோலம். துல்கருக்கு அப்படியே மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் குரல்.

6 - ஒரு இளம் மங்கையோடு லிவிங்டுகெதரில் இருக்கப்போகிறேன் என்று ஹவுஸ் ஓனரிடம் வந்து சொல்கிறான் நாயகன். ஹவுஸ்ஓனர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள், கெடுபிடி பேர்வழி, ஆச்சாரமான அனுஷ்டாங்கமானவர். அப்படிப்பட்டவர் லிவிங்டுகெதர் என்றால் எப்படி ஒப்புக்கொள்வார்? ஹவுஸ்ஓனர் அதெல்லாம் முடியாது இடத்தை காலிபண்ணுங்கோ என்று திட்டுகிறார், அந்த நேரத்தில் நாயகி பாட ஆரம்பிக்கிறார், ஒரே கர்நாடிக் சங்கீதம்… சசரிரீகமபத நிஸ சரிக சரிக ரிகம ரிகம என்று அவர் பாட ஹவுஸ்ஓனர் அப்படியே மெர்சலாகி லிவிங்டூகெதருக்கு ஒப்புக்கொள்கிறார்! கர்நாடிக் சங்கீதம்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அக்காட்சி நமக்கு விளக்குகிறது. அந்த நொடியில் ''நீங்க வெறும் கணபதியா இல்ல, வடிவேலு அக்காவை பிக்கப் பண்ணின பேக்கரி ஓனர் கணபதி ஐயரா என்கிற கேள்வி படம் பார்க்கிற சராசரி ரசிகனின் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது.

7 - படத்தின் தொடக்கத்தில், பெயர் கூட சரியாக தெரியாத ஒருவனுடன் லாட்ஜில் ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு, தன்னந்தனியாக குடும்பத்தை விட்டு வாழ்கிற தைரியமான பெண்ணாக காட்டப்படுகிறார் நாயகி. ஆனால் படம் செல்ல செல்ல அப்படியே மொக்கையாகி க்ளைமாக்ஸ் நெருங்கும் போது காதலனின் காலில் விழுந்து ‘’ப்ராணநாதா என்னை கைவிடாதீரும்’’ என்று கலங்கி கண்ணீர் வடிக்கிறார். என்னை நல்லா பாத்துப்பீயா பாத்துப்பீயா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் நாயகனும் நாயகியும் ‘’வயசான காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்று கண்டுபிடிக்கிறார்கள். அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை!

8 - லிவிங் டூ கெதர் என்பது கமிட்மென்ட் இல்லாமல் நேரம்காலம் பார்க்காமல் காசு கொடுக்காமல் செய்யக்கூடிய கஜகஜா என்று ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார் மணிசார். அதில் இருக்கிற எந்தவித உட்குழப்பங்களையும், பாசநேசங்களையும், உறவுச்சிக்கல்களையும் பற்றி ஒன்னாரூபா அளவுக்கும்கூட படத்தில் பேசவில்லை. கமிட்மென்ட் இல்லாமல் மேட்டர் பண்ணிக்கொண்டே இருக்கிற இருவருக்கும் எப்போது காதல் வந்தது எப்படி வந்தது என்பதுவும் அது எப்போது தங்களுடைய கொள்கைகளை கைவிட்டு கல்யாணம்வரைக்கும் சிந்திக்க வைத்தது என்பதையும் வலுவாக காட்டியிருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு க்ளைமாக்ஸில் ஞானதோயம் வந்து இந்துதர்மத்தையும் இந்திய பண்பாட்டையும் காக்கும் வகையில் எந்த கஜகஜாவாக இருந்தாலும் தாலி கட்டிட்டு பண்ணட்டும் என்று மேரேஜ் செய்வித்து நமக்கு நன்னெறியையும் போதிக்கிறார்!

15 April 2015

நெட் நியூட்ராலிட்டி - For dummies
நெட்நியூட்ராலிட்டி விவகாரத்தில் ஃப்ளிப்கார்ட் காரன் அடித்திருக்கிற பல்டிக்கு பேர்தான் அந்தர்பல்டி! ஓர் ‘’உலக நடிப்புடா சாமீ’’ மோமன்ட். ப்ளிப்கார்ட் காரன் சொவர் ஏறி குதிச்சு எகிறியடிச்சு ஒடியதை அடுத்து இன்றைக்கு ஏர்டெல்லின் பங்குகள் ஒன்று புள்ளி ஏழோ எட்டோ சதவீதம் சரிந்துவிட்டது. அப்படி ஓர் ஓட்டம்! மவுஸ் புரட்சியாளர்களின் பவர் இன்னுமே கூட ஏர்டெல்லுக்கு புரியவில்லைதான் போல.. ஏர்டெல் இன்னமும் தன்னுடைய ‘’ஏர்டெல் ஜீரோ’’ திட்டம் அற்புதமானது அருமையானது… வின்-வின் சூழலை வழங்கவல்லது என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.

நெட் ந்யூட்ராலிட்டி என்கிற சொற்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. ஆனால் எழுத்தாளர் சாரு அடிக்கடி சிலாகிக்கும் சிலேயில் 2010லேயே இதற்காக போராடி அதற்காக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். அமெரிக்கர்கள் கூட இதில் தாமதம்தான் சென்ற ஆண்டுதான் அங்கே போராட்டங்கள் தொடங்கி மிகசமீபத்தில்தான் ஒரளவு சுமூகமான முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, இந்த பாரபட்சமற்ற இணையத்திற்கான போர்!

இன்று மொபைலிலும் டேப்களிலும் கணினியிலும் விதவிதமான இணையதளங்களையும் சமூகவலைதளங்களையும் பயன்படுத்தி விருப்பப்படி உலவுகிறோம். இணைய சேவை வழங்கும் (ISP) தொலைதொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணையதளங்களை பார்க்க மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த ஒரு இணையதளத்திற்கும் தனியாக அதிக வேகமோ அல்லது குறைந்த வேகமோ வழங்குவதில்லை. சிறப்பு சலுகைகள் கிடையாது. இணையத்தில் எல்லாமே பாகுபாடின்றி ஒரே வேகத்தில் ஒரே கட்டணத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த இணையதளத்தையும் பார்ப்பதையோ உலவுவதையோ கட்டுபடுத்துவதுமில்லை. இதுதான் நெட் நியூட்ராலிட்டி.

நெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போனால், பகாசுர டெலிகாம் கம்பெனிகள் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியாக துட்டு வசூலிக்கும். வாட்ஸ் அப் மட்டும் அதிக வேகத்தில் இயங்க கூடுதலாக பத்து ரூபாய், ஜிமெயிலின் வேகத்தை அதிகரிக்க முப்பது ரூபாய் என்பது மாதிரி. யூடியூபில் எச்டி வீடியோ பார்க்க வேண்டுமா அதற்கு தனிக்கட்டணம். ப்ளிப்கார்ட்டில் ஆபர் போட்டால் முதல் ஆளாக முந்திக்கொண்டு புக் பண்ணவேண்டுமா அந்த இணையதளத்திற்கு மட்டும் சலுகைவிலையில் சூப்பர் ஸ்பீடு! வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக்கட்டணம். வைபருக்கு தனிக்கட்டணம்! மாதாமாதம் போஸ்ட் பெய்ட் கனெக்ஷன் வைத்திருப்பவர்களெல்லாம் இஷ்டப்படி சுருட்டலாம்.

விழாநாட்களில் நம்முடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்ப காசு பிடுங்குகிற அதே பாணி. டிடிஎச்சில் குறிப்பிட்ட சானல்களுக்கு மட்டும் தனிக்கட்டணம் வசூலிக்கிற அதே டெக்னிக். இதை இணையம் வரைக்கும் நீட்டிக்கத்தான் திட்டமிடுகின்றன.
அப்படி ஒன்று நடந்துவிட்டால் அதற்கு பிறகு இணையம் எப்போதும் இலவசமாகவும் பாரபட்சமின்றியும் இருக்காது! நாம் பயன்படுத்துகிற முறையும் அதற்காக செலவழிக்கிற தொகையும் முற்றிலும் வேறமாதிரி ஆகிவிடும். அதனால்தான் இந்தியா முழுக்க இணையவாசிகள் நெட்நியூட்ராலிட்டியை பாதுகாக்க கோரி விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏர்டெல் நிறுவனம் சென்ற வாரத்தில் கொண்டு வந்த ஏர்டெல் ஜீரோ என்கிற புதிய ப்ளானை வெளியிட்டரது. கொதித்தெழுந்தது இணைய சமூகம். இந்த ஏர்டெல் ஜீரோ திட்டத்தில், மிகச்சில தனியார் நிறுவனங்களின் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏர்டெல் வசூலித்துக்கொள்ளும்! இதனால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்! டேட்டா மிச்சமாகும்.

இத்திட்டத்தில் முதலில் இணைந்தது ப்ளிப்கார்ட் காரன். ப்ளிப்கார்ட் இணையதளத்தை அல்லது குறுஞ்செயலியை (APP) நீங்கள் உங்களுடைய மொபைலில் பயன்படுத்தும்போது அதற்காக பணம் தர வேண்டாம். அந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா எல்லாமே ப்ரீதான்! இலவசம் என்றதும் ஒரே குஷியாகி இதுக்கு ஏன் எதிர்ப்பு என்று நினைக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் கூட தங்களுடைய இணைப்பு உள்ளவர்கள் ஃபேஸ்புக் தளத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிந்திருந்தன. இப்போதும் அது செயல்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. உலகில் இலவசமாக ஒன்றை எந்த இழிச்சவாய நிறுவனமும் வாடிக்கையாளருக்கு தூக்கிக்கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட அறிவுப்புகளுக்கு பின்னால் சூழ்ச்சியும் சூதும் நிச்சயமிருக்கும். இதில் என்ன சூது? இப்படி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங்களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்கவெல்லாம் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டார் போடுவார்கள்! வோடபோனின் இலவச ஃபேஸ்புக் அப்படியொரு ஆபர்தான்.

அதாவது இட்லி ஃப்ரீ ஆனால் சட்னிக்கு தனியாக சாம்பாருக்கு தனியாக பொடிக்குதனியாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் ஜீரோ அப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கான முதல் படி. முதலில் இலவசத்தை கொடுத்து பிறகு நாம் அதிகம் பயன்படுத்தும் தளங்களுக்கு தனிக்கட்டணம் விதிப்பது. அதனால்தான் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள்.

ஏர்டெல் நிறுவனத்தின் சென்ற ஆண்டின் (2014) ஒட்டுமொத்த வருவாயில் 5.5% எஸ்எம்எஸ் சேவை வழியாக கிடைத்தது. ஆனால் இந்த அளவு அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 8% குறைவு! 12.4 சதவீதமாக இருந்த வருவாய் ஒரே வருடத்தில் குறைந்து 5சதவீதமானதற்கு காரணம் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கின் வரவு. விழாக்காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்துக்கொண்டிருந்த டெலிகாம் கம்பெனிகளுக்கு இது சூப்பர் ஆப்பாக அமைந்தது.

இதற்கு பிறகு அதிகரிக்கும் VOIP தொழில்நுட்பம், ஏர்டெல், டாடா முதலான நிறுவனங்களை ரொம்பவும் எரிச்சலூட்டின. சும்மா இருப்பார்களா? தொலைதொடர்பு துறையை கட்டுப்படுத்தும் ட்ராயிடம் ஸ்கைப், லைன் முதலான சேவைகளின் வழி தொலை பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுடைய அழைப்புகளை கண்காணிக்க வேண்டும், எங்களுக்கு இருக்கிற விதிமுறைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தன.

‘’கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாயில் 42சதவீதத்தையும், செல்போன் அழைப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் 19சதவீதத்தையும் இழந்துள்ளன, இதை இப்படியே விட்டால் இந்த OTT தளங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் 24ஆயிரம் கோடிகளை நம்முடைய தொலைதொடர்பு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும்’’ என்று கோபமாக பேசியிருக்கிறார் ராஜன் மேத்யூஸ். இவர் யார் தெரியுமா? செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின் (COAI) இயக்குனர். (OTT தளங்கள் என்பவை over the top players , ஸ்கைப் , வாட்ஸ் அப், வைபர் மாதிரியானவை)

இப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்ட ஜீவிவதத்தில் இருக்கும் இந்த டெலிகாம் கம்பெனிகள் என்ன செய்யும். அதனால்தான் கோடீஸ்வர வாடிக்களையாளர்களின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை லவட்ட பார்க்கின்றன. இப்போது வாட்ஸ்அப் காலிங்கும் வந்துவிட்ட நிலையில் டெலிகாம் கம்பெனிகள் எப்படியாவது நெட்நியூட்ராலிட்டியை காலி பண்ணிவிட துடிக்கின்றன.

இதை தடுக்க என்ன செய்யவேண்டும்?

இவ்விவகாரம் டெலிகாம் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI) வரைக்குமே போய்விட்டது. ட்ராய் இப்போது இவ்விஷயத்தில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக இருபது கேள்விகள் அடங்கிய ஒரு ரிப்போர்ட்டை தந்திருக்கிறது. அதை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை ட்ராயிக்கு தெரிவித்து நெட்நியூட்ராலிட்டியை கட்டிக்காக்கலாம். இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 24. அதற்குள்ளாக கொடுத்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.

இணையவாசிகள் சோம்பேறிகள் என்பது தெரிந்த சகசோம்பேறி ஒருவர் ட்ராயிக்கு லெட்டர் போடவே தனியாக ஒரு இணைய தளத்தை நடத்துகிறார். 20 கேள்விகளை நூறுபக்கத்துக்கு கொடுத்தால் யாரால் படிக்க முடியும் எப்படி பதில் போட முடியும். அதனால் http://www.savetheinternet.in என்கிற இந்த தளத்திற்கு சென்று ஒரு பட்டனை தட்டினால் ட்ராய்க்கு என்ன பதில் அனுப்பவேண்டுமோ அதை மொத்தமாக டைப் செய்து வைத்திருக்கிறார்கள். அதை படித்து பார்த்தோ பார்க்காமலோ காப்பி பேஸ்ட் பண்ணி ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான். 

இதுவரை மூன்று லட்சம் பேருக்கு மேல் ட்ராய்க்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள். நீங்களும் போடுங்கள். 

விபரம் பத்தாதவர்கள் மேலும் தெரிந்துகொள்ள http://www.netneutrality.in/

08 April 2015

கல்பனா அக்கா காளையர் சங்கம்‘’கல்பனா அக்காவை தெரியுமா?’’ என்று நண்பர் கேட்டார். கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாமல் எதையோ சொல்ல முயற்சிக்கிற கமல் போலவே ஆங்… ஆங்…. என்று குரலெழுப்பி முழித்தேன். துவண்டுபோன என்னுடைய ஜெனரல்நாலேஜை புரிந்துகொண்டு ‘’கல்பனா அக்கானு கூகிள்ல போட்டு தேடுங்க கொச கொசனு கொட்டும்’’ என்றார்.

கல்பனா அக்கா என்கிற பேரை கேள்விப்பட்டதுமே இது வாட்ஸ் அப் கசமுசா போல அதனால்தான் நாகரிகம் கருதி இப்படி சுற்றி வளைத்து நெளித்து சுளித்து சொல்கிறார் என்று நினைத்தேன். வாட்ஸ்அப் கசமுசா வீடியோக்களுக்கும் ஆடியோக்களுக்கும் இப்படித்தான் ‘’மஞ்சு ஆன்டி வீடியோ, கிரிஜா பாபி ஆடியோ, சவீதா அண்ணி கம்பிகலி’’ என்று பெயர் வைக்கிறார்கள். கல்பனா அக்காவைத்தேட தொடங்கிய போதுதான் இவர் யாருக்கும் எந்தத் தீங்கும் போங்கும் செய்யாத ஆபாசமற்ற ‘’அப்பாவி ஃபேஸ்புக் புகழ் பிரபல பாடகி’’ என்பது தெரிந்தது. நான் ரொம்ம்ம்ம்ம்ப… லேட்டு போல. (கல்பனா அக்காவை ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு இந்த கட்டுரையே என்னது காந்தி செத்துட்டாரா வகையறாவாக இருக்கலாம்).

ஃபேஸ்புக்கில் நூற்றுக்கும் அதிகமான ரசிகர் மன்றங்கள் கல்பனா அக்காவிற்கு இயங்குகின்றன. ‘’கல்பனா அக்கா காளையர் மன்றம்’’, ‘’கானக்குயில் கல்பனா அக்கா ரசிகர் படை’’ மாதிரி விதவிதமான பெயர்களில் கல்பனா அக்காவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வராதா வராதா என்று ஹரஹரமகாதேவகியின் புதிய ஆடியோவுக்காக எப்படி வாட்ஸ்அப் வாலிபர்கள் வாயில் வடையோடு வருத்தத்துடன் காத்திருக்கிறார்களோ

அப்படி கல்பனா அக்காவின் பாடல் வீடியோவிற்காகவும் காத்திருக்கிறார்கள் க.அக்காவின் ஃபேஸ்புக் ரசிகவெறியர்கள். கல்பனா அக்கா வீடியோ இறங்கிய அடுத்த நொடியிலிருந்து ஃபேன்ஸ் க்ளப் ரசிகர்கள் விழித்தெழுந்து அந்த வீடியோவை கலாய்க்கும் வீடியோக்களையும் மீம்ஸ்களையும் களமிறக்குகிறார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக பாடக்கூடியவர் கல்பனா அக்கா! (கேவலமாக கலாய்த்தாலும் மரியாதையாக அக்காவெல்லாம் போட்டு கௌரமாக கலாய்க்கிற இந்த உயர்ந்த குணம் தமிழனுக்கு மட்டும்தான் வரும்! )

இந்த இன்னிசை வீடியோக்களில் வாயெல்லாம் லிப்ஸ்டிக்கும் முகமெல்லாம் பவுடருமாக விதவிதமான ஆடைகளில் தோன்றுகிறார் கல்பனா அக்கா. வில்பர் சற்குணராஜின் சொந்தக்கார சகோதரியாக இருப்பாரோ என்னவோ? இணையம் வெவ்வேறு காலகட்டங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை தூக்கிப்பிடித்து கொண்டாடும். இந்த மனிதர்கள் எவ்வித பின்புலமும் இல்லாமல் தங்களுடைய தனித்திறமைகளை மட்டுமே நம்பி களமிறங்குகிறவர்கள். முன்பு சாம் ஆண்டர்சன், பிறகு ஜேகே.ரித்தீஷ், அவரைத்தொடர்ந்து பவர்ஸ்டார் போல அவ்வரிசையில் இடம்பிடித்திருக்கிற முதல் பெண்மணி இவர்தான். இணையத்தில் மிக அதிகமாக கலாய்க்கப்பட்ட பெண் என்கிற பெருமையையும் இவர் பெறுகிறார். முந்தையவர்கள் போல் கோடிக்கணக்கில் செலவழித்து சினிமாவெல்லாம் எடுத்து கஷ்டபடாமல் தன்னுடைய டப்பா போனில் மொக்கை வீடியோக்களை எடுத்து அப்லோட் பண்ணி அசத்துகிறார் இந்த வீரமங்கை. அவருடைய நடன வீடியோ கூட ஒன்றுண்டு. தேடினால் கிடைக்கும்.

இவருடைய சிறப்பே இளையராஜாவின் மிகச்சிறந்த பாடல்களுக்கு தன் இஷ்டப்படி ஒரு ட்யூன் போட்டு அந்த பாட்டை சாவடிப்பதுதான்! அதுவும் ''அழகுமலராட''வையும் ''நானொரு சிந்துவையும்'' கேட்டால் ராஜாசார் கொலைகேஸில் ஜெயிலுக்கு போகும் வாய்ப்பிருக்கிறது. அவருடைய பார்வைக்கு யாராவது இந்த குரலரசியின் வீடியோக்களை எடுத்து செல்ல வேண்டும். ஒருவேளை ராஜாவை பழிவாங்குகிற ரஹ்மான் ரசிகராக இருப்பாரோ என்று நாம் நினைக்கும்போதே ரஹ்மான் பாட்டு ஒன்றையும் நாறடித்து நடுவீதியில் போட்டு நாசம் பண்ணியிருக்கிறார். ரஹ்மான்,ராஜாசார்,டீஜே எல்லாம் முடித்தாகிவிட்டது. இதற்குமேல் பாட்டே இல்லை என்று அவரே பாடல் எழுதி இசையமைத்து நடித்து பாடி ஆடும் வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் பாரதிவேடத்தில் ஒட்டுமீசையெலாம் வைத்துக்கொண்டு ‘’’உயச்சி தால்ச்சி சொல்லல் பாவம்’’ என்று அவர் கதறுகிற வீடியோதான் யூடியூபை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அனேகமாக அடுத்து கம்பர்,வள்ளுவரிடம் வரலாம். ஆனாலும் பாரதியார் பாவமெல்லாம் சும்மாவிடாது. விகடனில் (டைம்பாஸ்) பேட்டியெல்லாம் எடுத்து போட்டிருக்கிறார்கள். இதுமாதிரி ஆசாமிகளை விகடனில் பேட்டியெடுத்துவிட்டால் அடுத்து திரைப்படங்களில் தோன்றுவார்கள் என்பது ஐதீகம்.

கல்பனா அக்காவின் ரசிகர்களும் கூட அவரைப்போலவே வேடமிட்டு அவரைப்போலவே தங்கள் மனதுக்கு பிடித்த பாடல்களை பாடியும் வீடியோக்களை உலகெங்கும் இருந்து அப்லோட் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். நிறையவே கலாய்க்கப்பட்டாலும், எதோ நிறைய தொண்டு காரியங்கள் செய்கிற பணக்கார பெண்மணியாக இருப்பார் போலிருக்கிறது. தன்னுடைய இந்த பிரபல்யத்தை அதற்காக பயன்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது. வீடியோக்களை வைத்து பார்க்கும்போது ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இலங்கைத்தமிழர் இவர். யாழ்ப்பாணம்தான் சொந்த ஊர் போலிருக்கிறது. கிளிநொச்சியில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி திரட்ட தேவாவை அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தி காசெல்லாம் சேர்த்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் ஒரு ''வா.மணிகண்டன்'' என்று நினைத்துக்கொண்டேன்!

கல்பனா அக்காவின் பிரபலமான அந்த பாரதியார் வீடியோ.

06 April 2015

8 Points - கொம்பன்1 - இயக்குனர் முத்தையாவின் முந்தைய படமான குட்டிப்புலியின் சகோதரக்குட்டியாகவே கொம்பனைப் பார்க்கலாம். சாதீய பெருமிதமும், அதை நிலைநாட்டுவதற்காக செய்கிற கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் நியாயம் கற்பிக்கிற அதே முறுக்குமீசை முரட்டுத்தனமான கம்பிக்கரை வேட்டிகளின் ரத்த சரித்திர ஆண்ட பரம்பரை கதைதான்.

2 - படத்தின் ஆரம்ப காட்சியிலேயே வில்லனாக சித்தரிக்கப்பட்டிருக்கிற ‘’குண்டன் ராமசாமி’’ என்பவர் தேவர் அல்லாத சாதியை சேர்ந்தவர் என்பதும் அவர் தொழிலதிபர் என்பதும் அவருக்கான அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. வில்லனுக்கு இல்லாத அடையாளம் நாயகனுக்கு படம் முழுக்க நிரம்பி வழிகிறது. நாயகன் தேவர் சாதி என்பதை படம் பார்க்கிற குழந்தை கூட சொல்லிவிடும். இப்படத்தின் கதை தென்மாவட்டங்களில் நிலவும் தேவர்-நாடார் மோதலை முன்வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதை இப்பின்னணி தெரிந்த யாரும் புரிந்துகொள்ள இயலும். ஆனால் வில்லன் பாத்திரம் ‘’நாடார்’’ என்பதை படத்தில் எங்குமே குறிப்பிடுவதில்லை. அல்லது அதை குறிப்பிடுகிற அல்லது சுட்டுகிற காட்சிகளோ வசனங்களோ நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான போட்டி நடக்கும்போதே தேவர் சாதி ஆள் ஒருவன் கவுண்டமணியின் மிகபிரபலமான ‘’நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கமுடியலடா.. புண்ணாக்கு விக்கறவன் புடலங்கா விக்கறவன்லாம் தொழிலதிபரா’’ என்று கிண்டல் செய்வதிலிருந்துதான் படமே தொடங்குகிறது! இன்னொரு காட்சியில் நாயகன் தீப்பெட்டி தொழிற்சாலைகளை எதிர்த்து கேள்விகேட்கிறார். அங்கே வேலைபார்க்கிறவனை புரட்டி எடுக்கிறார். (மதயானை கூட்டம் படத்திலும் தேவர்சாதி சகோதரர்களுக்குள் குழப்பத்தை உருவாக்கும் வில்லனின் அடையாளம் தரப்படாமல், அவர் ''வேறு சாதி தொழிலதிபர்'' ''அதிகாரத்தை அடைய முயற்சி செய்பவர்'' என்று மட்டும் காட்டியிருப்பார்கள். நமக்குள் இப்படி பகையாக இருந்தால் வேற்றுஆள் உள்ளே நுழைந்து அதிகாரத்தை அடைந்துவிடுவான் என்பதுதான் மதயானைக்கூட்டம் சொல்லும் செய்தியே.)


3 - நாயகனும் அவருடைய ஊர்காரர்களும் தன்னுடைய ஊருக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல் அந்தப்பதவியை ஏலம் விட்டு பதவியை தங்களுக்கு வேண்டப்பட்ட சாதிசனத்திற்கே வழங்குவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதையும் தாண்டி இன்னொரு சாதி ஆள் (மீண்டும் நாடார்) அந்த ஏலத்தில் போட்டி போட்டு அதிக தொகை கொடுக்க முன்வரும்போதும் அவரை ‘’திட்டமிட்டு ஏமாற்றி’’ தேவர் சாதி ஆளையே தலைவராக்குகிறார் நாயகன். என்ன இருந்தாலும் ஆண்ட பரம்பரை இல்லையா, அதிகாரத்தை விட்டுத்தர முடியுமா? ஆனாலும் இப்படி சீட்டிங் செய்ததற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் ‘’அவங்க’’ ஏதேதோ தொழில் செய்து தவறான வழியில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நேர்மையற்றவர்கள், ஊரை கெடுத்துபுடுவார்கள் என்றும் வசனங்களாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி என்ன மோசமான காரியங்கள் செய்கிறார்கள் என்பதை படத்தில் சொல்வதேயில்லை! அநியாய வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாக மட்டும் ஒரு காட்சி வருகிறது.

4 - படம் துவங்கும்போது பொதுக்கூட்டத்தில் கிண்டல் செய்தமைக்காக ஒரு தேவர் சாதி ஆளை இன்னொரு சாதி ஆள் (வில்லன்) திட்டமிட்டு கொல்கிறார். அதனால் அவரை பழிவாங்க தேவர் சாதி ஆள் துடித்துக்கொண்டிருக்கிறார். இறுதிகாட்சியில் அவர் காத்திருந்து இந்த வில்லனை பழிதீர்க்கிறார். அதற்கு நாயகனே உதவி செய்கிறார். அதற்கு முந்தைய காட்சியில் நாயகனையும் அவனுடைய மாமாவையும் சிறையில் வைத்து போட்டுத்தள்ள வில்லன்கள் முடிவெடுக்கும்போது பழிவாங்க துடிக்கிற தேவர்சாதி ஆள் உதவுகிறார். இப்படி மாற்றி மாற்றி… உதவிகள் செய்து… என்ன இருந்தாலும் ஒரே சாதி சனமில்லையா விட்டுக்கொடுக்க முடியுமா?

5 – ஏற்கனவே ஊருக்குள் ஆளாளுக்கு எதையாவது காரணம் சொல்லி குடித்துக்கொண்டிருக்க அதை ஊக்குவிக்கும் வகையில் பெற்ற மகளே தந்தைக்கு ஊற்றிக்கொடுத்து இது மருந்துக்கு என்று சைடிஷ்ஷோடு கொடுப்பதெல்லாம் என்ன மாதிரியான சிந்தனை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. படத்தில் பல இடங்களில் குடிப்பதற்கான நியாயமான காரணங்கள் திரும்ப திரும்ப சொல்லப்படுவதும், அதை ஊக்குவிப்பதும் என்ன மாதிரியான பண்பாட்டு பதிவு என்றும் விளங்கவில்லை. தி இந்து தமிழ் விமர்சனத்தில் படத்தில் பண்பாட்டு பதிவுகள், பண்பாட்டு சித்தரிப்புகள், சொல்லாடல்கள், வட்டார வழக்குகள் நிறைய இருந்ததாக எழுதியிருந்தார்கள். அப்படி எதுவும் கண்களுக்கு தென்படவில்லை. ஒருவேளை இந்த குடி மேட்டர்கள் பற்றிய பதிவுகளாக இருந்திருக்கலாம். நல்லவேளையாக பிட்டுப்படத்தின் இறுதிகாட்சியில் பெண்களெல்லாம் தெய்வமென்று கருத்து சொல்வது போல ராஜ்கிரண் ‘’மனசுவலிக்கு குடிக்க ஆரம்பிச்சா வீட்ல உள்ள பொம்பளைகதான் குடிக்கணும்’’ என்பார்.

6 – இயக்குனர் முத்தையா தன்னுடைய குட்டிபுலியிலேயே தேவர்சாதி பெண்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். அவர்களெல்லாம் தன்னுடைய ரத்த சொந்தங்களுக்காக கழுத்தை அறுத்து கொலை கூட செய்துவிட்டு குலதெய்வமானவர்கள் என்கிற மாதிரி படமெடுத்தவர். இந்தப்படத்திலும் கோவை சரளா ‘’அவங்களையெல்லாம் சும்மாவிடக்கூடாது கொன்னுரனும்’’ என்று மகனை உற்சாகப்படுத்துகிறார். மதயானை கூட்டம் படத்திலும் தேவர்சாதி பெண்கள் கொலை செய்கிறவர்களாக சித்தரித்து காட்சிகள் உண்டு.(அதை இயக்கியவர் வேறொரு இளைஞர்). தங்களுடைய சாதிசனத்திற்காக ஒரு பெண் கொலை கூட செய்வாள் என்று எப்படி தொடர்ந்து தேவர் சாதி பெண்களை கொலைகாரர்களாக இரக்கமற்றவர்களாக காட்டுகிறார்கள்? அதில் என்ன பெருமை வந்து ஆடுகிறது என்று புரியவில்லை.

7 – எப்படி வேல.ராமமூர்த்தி இதுமாதிரி சாதிப்பெருமித படங்களில் தொடர்ந்து நடிக்கிறர் என்பது புதிரான விஷயம். அவராக வலியப்போய் இந்த வண்டிகளில் ஏறுகிறாரா? அல்லது இந்த வண்டிகள் எப்பாடுபட்டாவது அவரை ஏற்றிக்கொள்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். மதயானைக்கூட்டத்தில் நன்றாக நடித்திருந்தாலும் கொம்பனில் அவரை காமெடிபீஸாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள். அனேகமாக அடுத்த படத்தில் அவரை தம்பிராமையாவின் அஸிஸ்டென்டாக்கும் வாய்ப்பிருக்கிறது.

8 – படத்தில் ஒரு சிறைச்சாலை காட்சி வருகிறது. அந்த சிறைச்சாலையில் கைதிகள் பார்க்க ‘’ஜில்லா’’ திரைப்படம் போடுகிறார்கள். சிறைச்சாலையில் எப்படியெல்லாம் நம்மை கொடூரமாக கொடுமைப்படுத்துவார்கள் என்பதை இக்காட்சி நமக்கு விளக்குகிறது. படத்தை பார்த்துகொண்டிருக்கிற சிறைக்கைதிகள் திடீரென்று வெறியேறி ஆளாளுக்கு மாறி மாறி அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இதை பார்க்கிற யாருக்குமே இனி தப்பு செய்துவிட்டு சிறைக்கு போகிற எண்ணமே வராது. அந்த வகையில் இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம்.


**********
01 April 2015

அஞ்சுமணி க்ளப்ராபின் ஷர்மா, தன்னம்பிக்கை நூல்கள் எழுதுகிற ஆங்கில எழுத்தாளர். ஆள் பார்க்க மொழுக் என்று மொட்டையாக ஜெட்லியின் சித்தப்பா பையன் போலவே இருப்பார். இவர் ஒரு கார்பரேட் புத்தர். அவருடைய ‘’WHO WILL CRY WHEN YOU DIE”” மற்றும் ‘”THE MONK WHO SOLD HIS FERRARI” என்கிற இரண்டு நூல்களை சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ஊக்கம் தரக்கூடிய விஷயங்களை எளிமையான ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்.

அவர்தான் இந்த ‘’ஃபைவ் ஏஎம் க்ளப்’’ (5AM) க்ளப்ஐ சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார். இந்த ஐந்து மணிக்ளப்பில் யார்வேண்டுமானாலும் இலவசமாக உறுப்பினராகலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐந்து மணிக்கு எழுந்திருப்பது மட்டும்தான். இதைத் தொடர்ந்து 66 நாட்களுக்கு செய்ய வேண்டும்.

விடியற்காலை ஐந்து மணியிலிருந்து எட்டுமணிவரை ஒருநாளின் மிகமுக்கியமான காலம் என்கிறார் ராபின்ஷர்மா. அந்த நேரத்தை புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளவும், உடல் மற்றும் மனது இரண்டையும் பயிற்றுவிக்கவும் அதற்கான பயிற்சிகளுக்கு உட்படுத்தவும் ஏற்றதாக இருக்கும் என்கிறார். காரணம் அந்த நேரத்தில் புறத்தொந்தரவுகள் அதிகமிருக்காது. நாள் முழுக்க வெளி உலகில் நாம் செய்யவிருக்கிற சமருக்கான பயிற்சியை இந்த ஒருமணிநேரத்தில் பெறமுடியுமாம்! எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து விடாமல் 66 நாட்களுக்கு செய்ய ஆரம்பித்தால் நம்முடைய உடலும் மனமும் அதை பழக்கமாக்கிக்கொள்ளும் என்கிறார்.

இதை முயன்று பார்க்க முடிவெடுத்தபோது ஐந்து மணிக்கு எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்விதான் முதலில் வந்தது. ஆனாலும் முயற்சி செய்து பார்த்தேன். இப்போது நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஐந்துமணியானால் தானாகவே விழிப்பு வந்துவிடுகிறது. ஆறுமணிக்கு மேல்தான் மாரத்தான் பயிற்சி என்பதால், ஐந்திலிருந்து ஆறு மணிவரை நூல்கள் படிக்க, திரைப்படங்கள் பார்க்க, உடற்பயிற்சிக்கு, இந்தி கற்றுக்கொள்ள என ஒதுக்க முடிகிறது. ஐந்து மணிக்கே எழுந்துவிடுவதால் இரவு பத்து பதினோரு மணிக்கெல்லாம் டணாலென்று உறக்கம் வந்துவிடுகிறது. நாள் முழுக்க செய்யப்போகிற விஷயங்களை திட்டமிட முடிகிறது.

இந்த ஐந்து மணி பரிசோதனையை தொடங்கிய முதல் பத்து நாட்கள் கடுமையான தலைவலி, பகலிலேயே தூங்கி தூங்கி விழுவது, உடல் சோர்வு, அஜீரணம், இதை பரிந்துரைத்தவன் மேல் கொலைவெறி முதலான பக்கவிளைவுகள் இருக்கவே செய்தன. காரணம் ஆனால் பதினோராவது நாளிலிருந்து இது எதுவுமே இல்லை. இப்போது உடல் ஐந்து மணிக்கு பழகிவிட்டது. காலையில் எந்திரிக்க விடாமல் நம்மை தடுக்கும் அக-சைத்தான்களை வெல்வதுதான் மிகவும் கடினம். இதை படுக்கைப்போர் என்கிறார் ராபின். ஆனால் படுக்கைப்போருக்கு தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் வேறொரு அர்த்தம் கொடுத்து பல ஆண்டுகளாகவிட்டது. நிறைய நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன். பலரும் பார்த்த மாத்திரத்தில் இதை முயன்று பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள்.

எதற்குமே நேரமில்லை என்று எப்போதும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஐந்துமணி கிளப் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ராபின் ஷர்மாவின் ஐந்துமணி கிளப் பற்றி அவர் பேசியிருக்கிற வீடியோ. இதில் எப்படி ஐந்துமணிக்கு எழுந்திருப்பது அதன் பயன்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் முழுமையாக பேசியிருக்கிறார்.

****