Pages

14 February 2009

நான் நமீதா. - அகம் டிரம்மாஸ்மி ( Strictly 18+)



கோடம்பாக்கம் - தென்மாநிலம்

''ஐயா இங்க , மிஸ்டர்.குஞ்சுமணி வீடு இதானுங்களே'' வயசான வயசுக்கு வந்த பெரியவரும் வயசாகாத வயசுக்கு வராத அவரு பையனும் கேட்டார்கள்.

''ஆமா இதான்..நான்தான் குஞ்சுமணி , சார்ட்டா குஞ்சினு கூப்பிடுவா.. சொல்லுங்கோ உங்களுக்கு என்ன வேணும்''


''இந்த ஊர்ல என் பொண்ண பத்து வருஷத்துக்கு முன்னால காணாம போக வச்சுட்டேன் , அவள தேடிக்கண்டுபுடிக்கணும் ''


''இதென்னயா புதுசா இருக்கு காணாம போக வைக்கறது ''


''எங்க ஊர்ல ஒரு கஞ்சா சாமியாரு அவள கோடம்பாக்கத்துல 10 வருஷம் விட்டா பெரிய நடிகையாகி அதுக்கடுத்த பத்து வருஷத்தில முதலமைச்சர் ஆகிடுவான்னாங்க அதான்... ''


''அடப்பாவிங்களா இங்க பத்துவருஷம் ஒரு குட்டிய 10 வயசுல தனியாவிட்டா அவ பெரிய நடிகையாவானா சொன்னானுங்க.. நல்லா கேட்டியா ? , சரி விடுங்க குஞ்சுமணிகிட்ட வந்துட்டீங்கள்ல, இனிமே டோண்ட் வொரி.. உங்க பொண்ண இந்த குஞ்சு மணி கட்டாயம் கண்டுபுடிச்சிருவான்.. ''


''அவள கடைசியா விஜயவாகினி ஸ்டுடியோ வாசல்ல விட்டேன் ''


''அடடா அந்த ஸ்டுடியோவ மூடிட்டாய்ங்களே..இப்போதைக்கு இருக்கறது இரண்டுதான், ம்ம் (விரலால் காற்றில் ஓவியம் வரைகிறார் )


சரி வாங்க நாம கோடம்பாக்கத்துல இறங்கி தேடுவோம் உங்க பொண்ண.. இந்நேரம் என்ன கதி ஆகிருக்கோ..


(பாடல் ஸ்டார்ட்டிங் )


ஜாம்........ பட்டர்ஜாம்

ஜாம்........ பட்டர்ஜாம்

இஷ்டமான பட்டர்ஜாம்

பாம்......... பஜ்ஜீபாம்

பாம்......... பஜ்ஜீபாம்

குஷ்பு போட்டா பஜ்ஜீபாம்
அனுஷ்கா......... லிப்ஸாய
குஷ்பு......... முதுகாய
பூஜா........... இடுப்பாயகா..

குஜிலி......... விக்ஸாய

குட்டி........... புஷ்க்காய

கும்மி........... அடிச்சாயடா

ஜம்போ ஜம்போ நயன்தாரா....

காபி............ குடிச்சாய
தம்மு அடிச்சாய

ஐட்டம் பார்த்தாயடா

காசு இல்லாட்டி

பிச்சை எடுத்தாலும்

கஞ்சா அடிச்சாயடா

................. பாடல் திடீரென இதோடு நிற்கிறது , சில காட்சிகள் விரிகிறது


விஜயகாந்த் '' ஓனக்கு தில்லிருந்தா தனியா நின்னு பாரு........ இல்லாட்டி ஒதுங்கி நில்லு '' என வீரமாய் வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் . கேமரா மேன் வெறிபிடித்து ஓடுகிறார். விஜயும் அஜித்தும் டீக்கடையில் தம்மடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஷங்கரும் ரஜினியும் கோடம்பாக்கம் பார்க்கின் பின்னால் ஓதுக்குப்புறத்தில் ஓன்றாக ஓன்னுக்கு அடிக்கிறார்கள் , பக்கத்தில் ரோபோவும் ஓன்னுக்குபையிங். நயனும் விஷாலும் பைக்கில் ஒன்றாக கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி ஏறி விளையாடுகிறார்கள். சிம்பு பேக்கரியில் நின்று கொண்டு பன்னு தின்னுகிறார். தனுஷ் கோடாம்பாக்கம் ஜிம்மில் பஸ்கியை விஸ்கி விஸ்கி எடுக்கிறார். மூச்சு முட்ட அவர் முகத்தில் இருந்து சொட்டு சொட்டாக வேர்வைத்துளிகள் விழுகிறது . (இதுக்கு மேல கோடம்பாக்கத்த வேற மாதிரி காட்ட முடியாதுங்க )


ஹீரோயின் நமிதா தலைகீழாக நிற்கிறார்... ( நான்கடவுளில் ஆர்யா போட்ட அதே காஸ்ட்யூம்தான் சந்தோசமா இருங்க , என்ன தாடி மீசையோட ஓகேவா.. )


காமிரா அவரது தலைகீழான அகண்ட பிரமாண்ட உடலை சுற்றி மூன்று முறை சுற்றி சுற்றி கிரிவலம் வருகிறது. மீண்டும் பாடல் கன்டினியூஸ்...


குஜிலி விக்ஸாய
குட்டி புஷ்பாய
கும்மி அடிச்சாயடா

காபி குடிச்சாய
தம்மு அடிச்சாய
ஐட்டம் பார்த்தாயடா

காசு இல்லாட்டி
பிச்சை எடுத்தாலும்
கஞ்சா அடிச்சாயடா



ஜம்போ ஜம்போ.. நயன்தாரா


அடடடே ஜாம் ஜபாம்பா ..


பாடல் முடிகிறது..





நமீதா ஒரு ஸ்டுடியோவில் தீவிரமா காட்டிக்கொண்டிருந்தார்.. நடித்து. டைரக்டர் பார்த்துக்கொண்டே இருந்தார். குனிந்து நிமிர்ந்து வேலையில் மும்முரமாக இருந்தார் நமீதா.


அந்த வழியாக ஏதேச்சையாக வயசான பெரியவரும் குஞ்சுமணியும் வந்தார்கள்.


அங்கே நயன்தாரா,நமீதா,திரிஷா,ஷகிலா,சிந்து,மரியா, (ரேஷ்மா இல்லை)இன்னும் பல நடிகைகளும் கேமராவிற்கு முன்னால் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.


ஒரு ஒரு நடிகையாக பார்த்துக்கொண்டே வருகிறார்கள். நமீதாவை பார்த்ததும் கப்புனு வயசானவர் நமீமீமீமீமீமீமீமீதா... என்று கத்திக்கொண்டே மயங்கி விழுகிறார்.


''ஆஹா நமீதாவ பாத்து அதிர்ச்சில செத்துட்டானா.. காசுகிடைக்காதேய்யா '' என்ற படி அவரை தாவாக்கட்டையில் தட்டி எழுப்பினான் குஞ்சுமணி.


''என் பொண்ணு , என் பொண்ணு , சார் இதான் சார் என் பொண்ணு ''


''யோ அது நடிகை நமீதாய்யா , ஏன்யா பத்து வயசில உட்ட பொண்ண அதுக்குள்ள கண்டுபுடிச்சிட்டியா...''


''என் பொண்ண எனக்கு அடையாளம் தெரியாதா? , பாருங்க அவ பத்து வயசுல போட்டிருந்த அதே டிரஸ்ஸோட நிக்கிறா !! ஐயா என் பொண்ண என்னோட சேத்துவைங்கய்யயா...'


அந்த பெரியவர் நமீதாவைப்பார்த்து கண்ணீர் விட்டுக்கதற.. நமீதா காட்டிக்கொண்டே இருந்தார்...நடித்து.


காட்சி இதோடு முடிகிறது.


******************************************************
அந்த திரைப்படத்தின் இயக்குனர்கிட்ட அனுமதி கேக்க பவ்யமா பெரியவரும் குஞ்சுவும் நிக்கிறாங்க.


''நமீதா.. நமீதா.. '' டைரக்டர் அழைக்கிறார். நமீதா துள்ளி குதித்து ஓடி வருவதை சுலோ மோசனில் காட்டலாம்.


''து இவங்ககூட ஜாவ்.. து மனுஷ்ய நகி.. து பால் பீரோவ்.. து இவங்களோட ஜாவி அவங்கள நல்லா ஒரு காட்டு காட்டிட்டு வா , ஹமாரா வெயிட்டிங் ''


பெரியவரும் குஞ்சுமணியும் பேந்த பேந்த முழிக்கிறார்கள்.


''போ போய் உங்க ஊர்மேல ஒரு காட்டு காட்டிட்டு வா... பாக்கத்தெரியாதவனுக்கு நீ காட்டுற காட்டு தண்டனை , பாக்க முடியாதவனுக்கு நீ காட்டுறகாட்டு வரம்... அகம் ட்ரம்மாஸ்மி... ''


''அகம் டிரம்மாஸ்மி.. அகம டிரம்மாஸ்மி.. '' நமீதா அதையே மூணு வாட்டி சொல்லிவிட்டு டைரக்டருக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு கிளம்புகிறார்.


அந்த பிளையிங் கிஸ் பார்த்ததும் பெரியவருக்கு பழசு ஞாயபகம் வருகிறது . சின்ன வயசில இப்படித்தான்..( அதெல்லாம் படத்தில் காட்டினால் இன்னும் அரை மணிநேரம் சேர்ந்துரும் ஓகேவா.. )


''ஓகே ஜி.. மே அபி கிளம்பறேன்.. '' என்றதும் துள்ளிகுதித்து ஓட(சுலோ மோசனில்) காட்சி கட்டாகிறுது.. டைரக்டர் நமீதாவை நீச்சல் குளத்தில் மூன்று முறை முக்கி முக்கி எடுக்கிறார். கட்.


*********************************


இந்திக்காரன்ப்பட்டி - வட மாநிலம். ( இந்தி எதிர்ப்பு காரணமாக இந்தி வசனங்கள் தமிழில்)


டிரெயினில் இந்திக்காரன்பட்டிக்கு வ.வ பெரியவரும் வ.வ சின்னபையனும் வ.வ நமிதாவை அழைத்துக்கொண்டு செல்கின்றனர்.


நமீதா ஒரு குட்டியூண்டு மிடியும் (அது மைக்ரோமிடிலாம் கிடையாது நேநோ மிடினு சொல்லலாம் அவ்ளோ சின்னூண்டு ) மேல ஒரு குட்டியூண்டு கர்சீப் மாதிரி ஒன்னும் போட்டுக்கொண்டு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டின் அப்பர் பெர்த்தில் பப்பரப்பா என்று அமர்ந்து கொண்டு வருகிறார். டிரெயினின் டிரைவர் முதல் டிடிஆர் வரை அனைவரும் விலகி நின்று நமீதாவை தரிசிக்கின்றனர். நமீதாவோ தி ஏ பார் ஆப்பிள் ஆங்கில நாவல் படிக்கிறார். எல்லாரும் நமீதாவை அன்னாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்கின்றனர். நமீதாவின் காலடியில் நின்று நிமிர்ந்து பார்த்து பெருமூச்சு விடுகின்றனர்.நமீதா அனைவரையும் பார்த்து கட்டைக்குரலில் ஹாய் மச்சான்ஸ் என்று கூற....


நமீதா காட்டிய காட்டில் அனைவரும் அலருகின்றனர்.


அனைவரும் அகம் ட்ரம்மாஸ்மி அகம் ட்ரம்மாஸ்மி என கத்திக்கொண்டு ஓட ..


பதிவின் நீளம் கருதி இத்தோடு படம் முடிக்கப் படுகிறது.


***************************************************
இக்கதையில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் கற்பனையே. இப்பாத்திரங்கள் தற்காலத்தில் உயிரோடிருக்கும் யாரையும் குறிப்பிடுபவை அல்ல. அப்படி உங்களுக்கு தெரிந்தால் அந்த பாத்திரங்கள் சரவணா ஸ்டோர்ஸில் கிடைக்கலாம் . நடிகை நமீதாவுக்கும் இக்கதையில் வரும் நமீதாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

நான் கடவுள் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ எனது பார்வையோ இக்கதை அல்ல.


எனது நான் கடவுள் விமர்சனம் இங்கே


********************************************


கடித்தாலும் , பிராண்டினாலும் அவள் என் காதலி!!




எங்க ஊருக்கு அவ வந்த புதுசுல யாருக்குமே அவள புடிக்கலை.. அப்போ அவ பாக்க ஒல்லியா , வயிறு ஒட்டிப்போயி நெஞ்செலும்புலாம் தெரியற அளவுக்கு இளைச்சு போயிருப்பா.. அவள வீதிக்குள்ள விடாம நாங்க ஒரு பத்து பதினைஞ்சு பேரு கத்தி கத்தி குரைப்போம்.. ஆனாலும் அவ விடாப்பிடியா உள்ள வர பல நாள் முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருந்தா!!..


ஒரு நாள் எங்களோட இருக்கற கருப்பன் கொஞ்சம் முரடன் அவ கால கடிச்சிட்டான். வீல் வீல் னு அலறிட்டு எங்க ஏரியாவவிட்டு ஓடினவதான் அதுக்கப்பறம் பல மாசமா வருஷமா அவ எங்க வீதி பக்கம் வரவே இல்லை. அதுக்குப்புறம் அவள யாருமே நினைக்கல.. நான் மட்டும் நினைச்சுகிட்டு கிடந்தேன்.. அவ முகம் மட்டும் மனசுக்குள்ளயே இருந்துச்சு...


அவளோட அழகான கருப்பும் சிவப்பும் கலந்த காது , சிவந்து தொங்குற நாக்கு , சோகமான பார்வை , நாலுநாள் நக்கின எலும்பு நிறத்தில பல்லு , அழகா சுருண்டு வளர்ந்த வாலு அதுல அங்கங்க மாமிவீட்டு கோலம் மாதிரி புள்ளிங்க , அவ என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சிருக்கணும்... ஆனா எனக்கு அவ எங்களோட இருந்தப்பவும் எங்க வீதிக்கு வந்தப்பவும் அப்படி தோணலை.. அவ நெனப்பு என் நெஞ்சுக்குள்ள மூட்டை பூச்சு மாதிரி கடிச்சி அரிச்சிகிட்டே இருந்துச்சு.. நானும் என் நாக்கால அத நக்கிக்கிட்டேதான் இருந்தேன். பல வருஷமா..

எங்க ஏரியால நாங்க பத்து பேர் எங்கள எங்க ஏரியால இருக்கற மனுசங்களுக்கு ரொம்ப புடிக்கும். நாங்க எப்பவும் கூட்டாமாதான் அலையுவோம் . நைட்டான எங்க வீதிக்குள்ள யாரும் நுழைய சாமானியமா விடமாட்டோம். எங்களுக்கு தலைவன் கருப்பன். அவனுக்கு நல்ல பாடி. பிறவிலயே அவனுக்கு நல்ல உடல்வாகு. அவன் அப்பன் பெரிய பணக்காரன். அவங்கம்மா என்னாட்டம் தெருதெருவா கிடைச்சத திங்கற ஏழை. ரெண்டுபேருக்கும் லவ்வாகிதான் இவன் பொறந்தானாம். ஆனா அவங்கப்பன் வீட்டுல இவன் காதல ஏத்துக்கலயாம். இருந்தாலும் பணக்கார திமிரோடதான் இருப்பான்.
அவன எதுத்துகிட்டு யாரும் எங்க வீதி இருக்க முடியாது. காலைல டிபன் மதியம் லஞ்ச் நைட்டு டின்னர் எல்லாமே எங்க வீதி குப்பைத்தொட்டிலதான். எனக்கு மனுசி ஒன்னு தினமும் பால் சோறு போடுவா.. அது இப்போ எங்கயோ போய்டுச்சு.. குப்பைல கிடக்கறத திங்க எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். அதும் ஆட்டுக்கறி,மாட்டுக்கறினா கடிச்சே வச்சுருவானுங்க.அதனால நான் அதையெல்லாம் திங்கறதில்ல. எனக்கு சண்டனாலே அலர்ஜி. நான் பொறந்து வளர்ந்ததுலாம் இந்த வீதிலதான். இதைத்தாண்டினா என்னனு கூட எனக்கு தெரியாது.

இப்படித்தான் ஒருக்கா பக்கத்துவீதி பயலுக சிலபேரு எங்க வீதிக்குள்ள நுழைய பாத்தாய்ங்க , நம்ம கருப்பன் ஒரு காரியம் பண்ணான் நேரா வீதிமுக்குல இருக்கற மளிகை கடைகிட்ட போயி அந்த ரோட்டையே மறைக்கிற மாதிரி ஒரு கோடு போட்டான் அதோட மூத்திரத்தால. அதே மாதிரி இன்னொரு பக்கம் இருக்கற லாரிகிட்டயும் அதே மாதிரி மூத்திரக்கோடு. அத தாண்டி ஒரு பய வர முடியலயே. அதயும் மீறி ஒரு அரைக்கருப்பன் வந்துட்டான் அவன விரட்டி விரட்டி கடிச்சு அவன் உடம்புல கீறி அவன் ரத்தம் வடிய வடிய ஓடினான்.கருப்பன் உஸ் உஸ்னு விட்ட மூச்சப் பாத்து அன்னைக்கு எங்களுக்கு மட்டுமில்ல எங்க ஏரியா மனுசங்களுக்கு கூட சிலித்துக்கிச்சு. நான் அந்த சண்டைல நல்லா வேடிக்க மட்டும் பாத்தேன். நான் ஒரு பூனையா பொறந்திருக்க வேண்டியவன்.

அவ கொஞ்ச நாளைக்கப்புறம் திரும்பி வந்தா.. புதுசா , பெரிசா, அழகா.. என்னால என் கண்ணையே நம்ப முடியல.. பூனை மாதிரி நடந்தா. இப்போ ஒரு பயலும் அவ வீதிக்குள்ள வரத தடுக்கல. ஆனா எங்க செட்டு பொண்ணுங்களுக்குத்தான் அவள புடிக்காம காய் காய்னு கத்தினாளுங்க.. கருப்பன் அவளுங்க வாய அடக்கிட்டான். கருப்பனுக்கு எப்படித்தான் இதெல்லாம் தெரியுதோ.. பொம்பளைங்க வாயக்கூட அலேக்கா அடச்சிட்றான். சில மனுசங்க கூட புதுசா வந்த சிவப்பிய பாத்து சிரிச்சுது. அவ்ளோ அழகு. அவள இப்படி பாப்பேனு நான் கனவுல கூட நினைச்சதில்ல. அவ்ளோ அழகா சிரிக்கிறா.. குரைக்கிறா.. ஐ லவ் யூ சிகப்பினு சத்தமா குரைக்கனும் போல இருந்துச்சு. ஆனா குரைக்க முடியல ஒரு வாரமா தொண்டல ஏதோ பிரச்சனை.

பகலெல்லாம் அவள நினைச்சுகிட்டு தூங்காம நைட்டெல்லாம் தூங்கினேன். குப்பைத்தொட்டி சோறும் புடிக்கல , மனுசங்க தர சோறும் புடிக்கல . கறியும் புடிக்கல சொறியும் புடிக்கல. காருக்கு பின்னாலயும் டூவிலர் பின்னாலயும் ஓடறதில்ல . என்னோட நார்மல் லைப்பே பாதிச்சிருச்சு. அவளுக்கு எங்க இடத்தில சோறு கிடச்சுது. எல்லா நாயும் அவ பின்னாடீயே மோப்பம் புடிச்சிட்டு அலைஞ்சானுங்க. நான் அவனுங்க கூட சண்ட போட வக்கில்லாம பேசாம அத நாக்க தொங்க போட்டுகிட்டு வாயால மூச்சுவிட்டுகிட்டு கிடந்தேன்.

அதுக்காக எனக்கு லவ் இல்லனு நினைச்சுறாதீங்க.. என்னையும் எங்க ஏரியா கருஞ்சிவப்பியும் , மாடிவீட்டு பப்பியும் லவ்பண்ணிகிட்டுதான் இருந்துச்சு. பின்னால வந்து மோப்பம் புடிச்சிகிட்டுதான் கிடந்துச்சு. ஆனாலும் ஏனோ எனக்கு சிவப்பி மேலதான் ஒரு இது.ஒரு நாள் இப்பிடித்தான் நம்ம பப்பி கார்ல போயிகிட்டு இருந்தப்ப என்னப்பாத்து சிலுப்பிகிச்சு. அடுத்த நாளு அந்த வீட்டு கார மனுசன் அத கூட்டிக்கிட்டு வாக்கிங் வந்தப்ப அந்த மனுசன் கைய விட்டுட்டு என் பின்னால வந்து மோந்துகிட்டு நின்னுச்சு.. நான் என்னடினதுக்கு என்ன எதும் தெரியாத மாதிரி கேக்கறனுச்சு.. நான்தான் வீம்பா போடி இவளேனு போய்ட்டேன்.

அப்படி இருந்த நான் இந்த சிவப்பி மேல இதுவாகி , அவ பின்னாடியும் போக முடியாம என் காதலயும் சொல்லமுடியாம முதுக நக்கிகிட்டு மூலைல கிடந்தேன். கருப்பனுக்கு ஏற்கனவே பல காதலிங்க இவளையும் வளைச்சுப்போட முயற்சிப்பண்ணான். ஆனா சிகப்பி மடியல. நானும் பல நாளு என்னோட காதல அவ கிட்ட சொல்லலாம்னு முயற்சிபண்ணிருக்கேன். எப்பவும் சிங்கம் மாதிரி கர் கர்னு வர கொரலு அவள பாத்ததும் கீ கீ னு கிளிப் பிள்ளையாட்டமா ஆகிருது. நாக்கெல்லாம் வேர்த்துடுது. அவள நினைச்சு உருகினேன்.

வெள்ளைபுள்ளியானுக்குத்தான் கிடச்சுது லக்கி பிரைஸ். அவன் பல நாள் அவ பின்னால மோப்பம் புடிச்சு அலைஞ்சு வித்தைலாம் காட்டி அவள மயக்கிட்டான். அவளும் அவனுக்கு மசிஞ்சுட்டா. ஒரு மார்கழி மாசம் காத்தால ............ விடுங்க நான் அழுதிடுவேன்.

அதிலருந்து வெள்ளைப் புள்ளியான கண்டாலே எனக்கு வயித்தெரிச்சலா இருக்கும். எங்கள புடிக்கற மனுசங்க வண்டி வரும் போது இவன மட்டும் புடிச்சுட்டு போக மாட்டானானுலாம் நினைப்பேன். அவனுக்கு வியாதி வந்து சாகமாட்டானானு ஏங்குவேன். அவன் இருக்க இருக்க நல்லா புஷ்டியாகிட்டேதான் போனான். வயிறெரிஞ்சு நான்தான் முன்ன விட மெலிஞ்சு முக்காவாசி ஆனேன்.

அப்போதான் புதுசா ஒரு வெள்ளையன் எங்க ஏரியாக்கு வந்தான். அவன பாத்து கருப்பனே மிரண்டுட்டான். அவன் அவ்ளோ பெரிசா இருப்பான். அவன்கிட்ட ஒரு நாள் கருப்பன் சண்டை போட்டுத் தோத்துட்டான். எங்கள்ல யாராலயும் அவன தோக்கடிக்க முடியல.. (நான் சண்டை போடல ) அதிலருந்து நாங்கல்லாம் அவன் கட்டுப்பாட்டுக்கு வந்தோம். சிகப்பியும் வெள்ளைப்புள்ளியானும் சேத்துதான்.

இருங்க இருங்க அடுத்து என்னாகிருக்கும்னு யோசிக்காதீங்க... நீங்க நினைச்ச மாதிரியேதான் நடந்துச்சு அவ வெள்ளைப்புள்ளியானுக்கும் அல்வா குடுத்துட்டு அந்த வெள்ளையனோட சேர்ந்துட்டா.. அவ அவன் பின்னால மோப்பம் புடிச்சுகிட்டு அலைஞ்சா.. அவங்க ரெண்டு பேருக்கும் ஆறு குட்டி பொறந்துச்சு.. சிகப்பியோட அழகெல்லாம் போயி ஆரம்பத்தில சொன்னமாதிரி நெஞ்செலும்பு தெரிய வயிறு ஓட்டிப்போய் அசிங்கமா ஆகிட்டா.. அதுக்கப்பறம் ஒரு நாளு நாலஞ்சு மனுசனுங்க சேர்ந்து அவள தூக்கிட்டு போயிட்டாங்க , அவ கழுத்துல மஞ்ச கயிற கட்டிவிட்டுடானுங்க.. அவள வீட்டோட வச்சுக்கிட்டானுங்க.. இப்பலாம் அவ வெளிய வரதே இல்ல.. அந்த மனுசன் அவள என்னலாம் பண்ணுதோ.. பாவம் என் சிகப்பி..

நான் அவள காதலிக்கறேன்.. என் மனசார காதலிக்கறேன்.. சாகர வரைக்கும் காதலிப்பேன். அவள எப்பவாவது பாக்கும்போது அவ கழுத்துல மஞ்ச கயிறு கட்டின மனுசன் அவள அடிச்சுகிட்டு இருக்கும்..என்னால அத பாத்துட்டு ஒன்னும் பண்ண முடியாம கிடந்து தவிப்பேன். மனசு வலிக்கும். என்னைக்காவது அந்த மனுசன் தனியா நடந்து வந்தா கடிக்காம விடமாட்டேன். அதுக்காகதான் காத்துகிட்டே இருக்கேன்.


அது சரி நீ யார்ரானு நீங்க கேக்கறது தெரியுது. என்னை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். தேவதாஸ்னு ஒரு மனுசன் இருக்கே அது கூட பக்கத்திலேயே உக்காந்திருப்பானே ஒரு நாய். அந்த நாய் பொண்ணுனு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க. அது மட்டும் பொண்ணா இருந்திருந்தா.. விடுங்க.. இந்த மனுசங்களே இப்படித்தான். அது நான்தான். என்ன நீங்க தேவதாஸ் நாய்னு கூப்பிடலாம்.

13 February 2009

ரோஜாமலரே ராஜகுமாரி...!


அழகான அறை அது . ஒழுங்கின்மை நிரம்பி வழியும் . குழந்தைகளின் அறை அப்படித்தான் இருக்க வேண்டும் . அது அவர்களது இயல்பை காட்டுவது . ராகுலின் அறை கூட அப்படித்தான் கிடந்தது . ராகுல் பருவ இடைவெளியில் குழந்தை பருவத்தைக் கடந்து கொண்டிருந்தான் . இளம்பிராயத்தின் துடுக்கும், வீச்சும் நிரம்பி வழிந்தது அவனிடம்.

சுவரெங்கும் சின்னதும் பெரிதுமாக காகிதங்களில் சிரிக்கும் சச்சினும் முரட்டு ஜான்சீனாவும் ஆடல் விஜயும் அதிரடி அமீர்கானும் ஆக்கிரமித்திருந்தனர் . படுக்கையெங்கும் சூப்பர்மேன்,ஸ்பைடர் மேன் , ஹல்க் , நைட் ஹாக் என்று பல சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸ்களாய் கை கால்களை தூக்கியபடியும் முகத்தை விரைப்பாயும் வைத்துக்கொண்டு மல்லாக்க கிடந்தனர் .

ப்ளேஸ்டேசன் வீடியோ கேமில் இராணுவ வீரன் ஒருவன் பல ஆயிரம்பேர்களை சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்தான் . ஹெலிகாப்டரில் பறந்து சுட்டான், பீரங்கிகளில் அமர்ந்து சுட்டான், படகில் பாய்ந்து சுட்டான். வீரன் கையில் துப்பாக்கி ராகுல் கையில் ஜாய்ஸ்டிக். டுமீல் டுமீல் என சுடுவதெல்லாம் அந்த காலம் போல, இப்போதெல்லாம் சடசடசடசட என்று ஒரு அழுத்தத்தில் ஆயிரம் குண்டுகளை விளாசித்தள்ளுகிறது.
மனிதாபிமானமின்றி மனிதர்களையும் டைனோசர்களையும் சுட்டுக்கொண்டிருந்தான் . ரத்தம் தெறிக்க நிறைய பேர் செத்து மடிந்தபடியிருந்தனர் . அவர்கள் சாக, சாக இவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. சிரித்தான். அந்த அறை அதிர சிரித்தான். அடுத்த லெவலுக்கு சென்று விடுவானாம். அதில் இன்னும் உயர் ரக துப்பாக்கி கிடைக்கும் அதில் இன்னும் அதிக குண்டுகள் அதிக கொலை .
கொலை மகிழ்ச்சியை கொடுக்குமா!. அவனுக்கு தற்காலிக சுகமும், ஆறுதலும் அதுவாய் ஆகியிருந்தது . தினமும் விதம் விதமாய் விளையாட்டுக்கள் எல்லாமே கொலை செய்வதும், போர் தொடுப்பதும், ஊரை அழிப்பதுமாக. எவ்வளவு கொன்றாலும் சலிக்காது.

மணி 9ஐ தாண்டியிருந்தது. தூக்கம் கண்ணை சுழற்றியது. அப்பாவும் அம்மாவும் இன்னும் வரவில்லை. தனியாகத்தான் இருந்தான். தினமும் தனிமையில்தான் இருக்கிறான். அவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கோவையில் வேலை. இங்கிருந்து 75 கி.மீ தொலைவு. காலை 7மணிக்கே கிளம்பிவிடுவர். மீண்டும் இரவுதான் அது 10 அல்லது 10.30 கூட ஆகலாம். 8ஆம் வகுப்பு படிக்கும் இவன் பள்ளி முடிந்து வீடு வந்தால், காமிக்ஸ் தாய், வீடியோ கேம் தந்தை, ஃபிரிட்ஜில் உணவு.

சடசடசடசடசட தூக்கத்தை நிறுத்த மீண்டும் சுடத்தொடங்கினான். இன்று மட்டுமே அவன் இலட்சம் பேரையாவது கொன்றிருப்பான். பெற்றோரின் மீதான கோபத்தை விளையாட்டில் காட்டிக்கொண்டிருந்தான். எல்லா லெவலையும் முடித்து விட்டான். எல்லோரையும் கொன்று விட்டான். இனி கொல்ல யாருமில்லை அவன் மட்டும் தான் இருந்தான். வாசலில் வந்து அமர்ந்து கொண்டு ஏக்கத்தோடு சாலையில் கண்வைத்தபடி கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்.

சாலையில் யாருமில்லை, அரை மணிநேரத்தில் ஒரே ஒரு ஆட்டோ மட்டும் பொடபொட வென்று ஆடி அசைந்தபடி சென்றது. அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது. எரிச்சலோடு பக்கத்தில் இருந்த பூத்தொட்டியை தள்ளிவிட்டான், அது கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது.

கோலங்களும், அரசியும் முடிந்து ஊர் உறங்கத்தொடங்கியிருந்தது. இவன் கன்னத்தில் கைவைத்தபடி சாலையையே பார்த்துக்கொண்டிருந்தான். உடைந்து போன பூத்தோட்டியை பார்த்தான். அதைக்காணவில்லை, அதுவென்றால் பூச்செடி. அது அவன் அம்மாவின் பூந்தொட்டி, அவள் ஒரு தாவரவியல் நிபுணர். மரபணு மாற்றுத் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் பட்டம் பெற்றவள்.

இந்த பூந்தொட்டியில் இருந்த ரோஜாச் செடி மரபணு மாற்று முறையில் அதன் ஜீன்களில் மாற்றம் செய்து செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் இனம். குளோனிங்கை போல என்றாலும் , இது குளோனிங்கின் அடுத்த படி. ஒரு உயிரை நமக்கேற்றாற் போல அதன் மரபணு படிமங்களில் மாற்றம் செய்து உருவாக்கும் முறை.

வாசற்படிக்கட்டிலிருந்து இறங்கி மெதுவாக அதை தேடத்துவங்கினான். சுற்றிசுற்றி வந்தான் தென்படவில்லை. புருவம் உயர்த்தி, ஆள்காட்டிவிரலால் தலையை சொறிந்தபடி தேடினான் கிடைக்கவில்லை. அவன் கால்களில் ஏதோ ஊர்வது தெரிந்தது. ஒரு குட்டிப்பாம்பு போன்று இருந்தது. தலை மட்டும் சிவப்பாய். ஓவென குதித்து வாசல் படிகட்டிகளின் மேல் ஏறிக்கொண்டான். அது ஊர்ந்து ஊர்ந்து அவர்களது வீட்டு கேட்டைத்தாண்டி போய்விட்டது. அந்த இரண்டு நிமிடங்களும் அவனுக்கு இரண்டு ஜென்மங்களை கடந்தது போலிருந்தது. அத்தனை படபடப்பு. கைகள் நடுங்கின.

''ராகு ஏன்டா பயப்படறே '' அசரீரியாய் ஒரு குரல் .

சுற்றும் முற்றும் பார்த்தான் , யாருமில்லை. அது அவனது தாயின் குரலை ஒத்திருந்தது. ஆனால் அலை அலையாய் ஒலித்தது. ஆங்கிலப்பட ரோபோக்கள் போல. வீட்டிற்குள் எட்டிப்பார்த்தான் உள்ளே வெளியே இவன் மட்டும்தானிருந்தான்.

''செல்லம் நான் இங்க இருக்கேன்டா ''''ஏய் யாரு, யாரு, வெளிய வாங்க! விளையாடாதீங்க பயமாருக்கு ப்ளீஸ்'' அழத்தொடங்கினான். அந்த உடைந்து போன பூந்தொட்டிக்கு அருகில் இருந்த சுவருக்கு பின்னால் இருந்து தன் வேர்க்கால்களால் இலகுவாக ரோஜாத்தலையை ஆட்டி ஆட்டி ஒய்யாரமாய் தன் இடையை அல்லது கொம்பை ஆட்டி ஆட்டி நடந்து வந்தது அந்த பூச்செடி.

''நான்தான் பேசினேன் '' அவனுக்கு பயம் அதிகமாகியது. வீட்டிற்குள் சென்று வெளி லைட்டை போட்டுக்கொண்டு வந்தான். அவன் காலடியில் வந்து தன் வேர்க்கால்களால் பவ்யமாய் ஒரு அலாவுதீனின் பூதம் போல அலைஅலையாய் மிதந்தபடி நின்றது.

''ப்ளீஸ் போய்டு '

''நான் உன் பிரெண்டுடா ராகுல், ஏன் கோபப்படற ''

''பிளான்ட்ஸ்லாம் பேசாது, போ இங்கிருந்து '' பயத்துடன் கத்தினான் காலை ஒதுக்கிக்கொண்டு.

''நீ படிச்சதில்ல, பிளான்ட்ஸ்க்கும் எல்லா உணர்ச்சியும் இருக்கும்னு , நீ உன் பள்ளியில் படிச்சிருப்பியே, ஜெகதீஷ் சந்திரபோஸ்னு ஒருத்தர் எங்கள வச்சு ஆராய்ச்சிப்பண்ணி எங்களுக்கும் எல்லா உணர்ச்சியும் இருக்குனு நிரூபிச்சிருக்காருனு ''

''ஆமா.. ஆனா நீ பேசறீயே''

'' நான் ஒரு முயூட்டன்ட், என்னால் பேசவும் முடியும், உன் அம்மாவின் படைப்பு நான், இனி இந்த உலகத்தை ஆளப்போகும் படைப்பு, என்னால எல்லா தாவரங்களையும் தொடர்பு கொண்டு பேச முடியும், மற்ற தாவரங்கள் பேசறது உங்களுக்கு கேட்காது அது வெறும் மின்காந்த அலைகள் அவ்ளோதான்,''

''பொய் சொல்லாத, ப்ளீஸ் பக்கத்தில வராத, பயமாருக்கு ''

''ராகுல் , எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்டா , அதான் உங்கிட்டமட்டும் பேசறேன் , ஏன்ன ஒரு விதத்தில நான் உன் அண்ணன் மாதிரி, ஏன்னா உனக்கும் எனக்கும் ஓரே அம்மா ''

''வேண்டாம் , ப்ளீஸ், ஆமா நீ ஏன் என்னோட அம்மா குரல்ல பேசற ''

''எனக்குள் இருந்து வரும் ஓலி, என் உடல் அதிர்வுகளால ஏற்படுது, என்னால எல்லா குரல்லயும் பேசமுடியும், அதைக்கட்டுப்படுத்தும் திறனை நானே உங்க வீட்டு வாசல்ல இருந்து கத்துகிட்டேன், இரவெல்லாம் பேசிட்டே இருப்பேன், உங்கம்மா லேப்ல நிறைய செமினார் குடுப்பாங்க அத நிறைய பாத்து பாத்து கத்துக்கிட்டேன், உன் அம்மாதான் எனக்கு குரு அனா ஆவன்னாலருந்து அரசியல் சட்டம் வரை சொல்லிக்குடுத்துருக்கா, உனக்கு முன்னாலயே பிறந்தவன்டா நான் ''

''.........'' ராகுலுக்கு லேசாக மயக்கம் வந்தது.

'' எங்களுக்கு ஸ்டார்ச் தயாரிக்க தேவையான எதும் இப்பலாம் கிடைக்கறதில்ல, முக்கியமா நிலத்தடிநீர் அப்புறம் கார்பன்டைஆக்ஸைடு ம்ம் முக்கியமா சூரிய ஒளி, நல்ல காத்து இப்படி, அதனால நாங்க நகர ஆரம்பிச்சோம், இப்போ பேசவும் ஆரம்பிச்சிட்டோம், இன்னும் கொஞ்சநாள்ல உங்கள தாக்கவும் தொடங்கிருவோம்"

''ஸோ வாட் '' கொஞ்சூண்டு தைரியத்தோடு கேட்டான்

''உங்க மனித இனத்தாலதான் எங்களுக்கு இப்படி ஒரு நெல வந்துடுச்சு , அதனால உங்க எல்லாரையும் அழிக்க போறோம் ''

''சீசீ லூசாட்டம் பேசாத, உன்னை படைச்சதே நாங்கதான்''

''உனக்குத்தெரியுமா , இந்த பூமி தோன்றினப்போ முதல் முதல் உருவானது நாங்கதான் , எங்களுக்கு அப்புறம்தான் நீங்க , நீங்க எங்களுடைய பரிமாணவளர்ச்சில உருவானங்கதான்''

''அதனால ''

''உங்க இனத்தை அழிச்சு , ஒரு புதிய உலகத்தை படைக்கப்போறோம், முழுக்க முழுக்க பசுமையான உலகம், தாவரங்களின் உலகம், வர டிசம்பர் 31 ஆம் தேதி உலகத்தாவரங்கள் எல்லாம் ஒரு சமிக்ஞை மூலமா தகவல்களை பரிமாறிக்கிட்டு, ஜனங்க மேல தாக்குதல தொடங்குவோம், அடுத்த வருஷம் எங்களுக்கு புதுசா பிறக்கும்''

''அப்படி நடக்க நான் விடமாட்டேன், உலகத்தை காப்பாத்தணும்னா, உன்னை அழிக்கணும் '' ஜெடிக்ஸில் வரும் பவர்ரேஞ்சரைப்போல பேசினான் ராகுல். வெறியோடு அந்த பூச்செடிமீது பாய்ந்தான், அது கண்ணிமைக்கும் நேரத்தில் இருட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டது.

அதைப்பிடிக்க இரண்டுகால்களும் வானில் தெறிக்கப் பாய்ந்தான் ''ஓஓஓ , '' , அது தப்பித்தது.

பக்கத்தில் ஆட்டோ சத்தம் கேட்டது, இவன் வீட்டிற்குள் போய் அமர்ந்து கொண்டான்.

''என்னடா ரகு , சாப்பிட்டியா '' அம்மா அதட்டியபடியே வீட்டிற்குள் நுழைந்தாள், வேர்க்க விறுவிறுக்க தலையை மட்டும் அசைத்தான்.

''டேய் ஏன்டா ஒரு மாதிரி இருக்க, ஸ்கூல்ல ஏதாவது பிராப்ளமா!! , என்ன பண்ணிட்டு இருந்த '' அப்பாவும் அதட்டினார்.

''நத்திங்பா '' சீறினான், அவனால் அந்த ரோஜாச்செடிதந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியவில்லை.

மணி 11 ஆகியிருந்தது. '' டேய் ரூம் போய் தூங்கு இன்னும் என்ன அங்க பண்ற'' மீண்டும் அப்பாவின் அதட்டல், ''என்னங்க ரொம்ப டயர்டா இருக்கு நீங்க சாப்பிட்டு வாங்க நான் போய் படுக்கறேன்'' என்று அவனம்மா அவர்களறைக்கு கிளம்பினாள்.

ரோஜாச்செடி பேசுமா? அது சொன்னதெல்லாம் நிஜமா? எல்லாரையும் பிளான்ட்ஸ் கொல்லபோகுதா? இரவெல்லாம் இப்படி கேள்விகளோடே படுத்திருந்தான். பின்னிரவில் உறங்கினான் .

விடிந்தது, 5மணிக்கே எழுந்துவிட்டான், வெளியே அந்த பூந்தொட்டி மட்டும் கிடந்தது, செடியை காணவில்லை. வாசலிலேயே அமர்ந்து கொண்டான். முதுகில் அவன் அப்பா கைவைத்து ''என்னடா ராகுல் ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கே '' என்றார்.

''இல்லைப்பா நைட்டு நான் ஏதேச்சயா இந்த தொட்டிய தள்ளிவிட்டுட்டேன், அதுலருந்து ஒரு ரோஜாச்செடி வந்து எங்கிட்ட பேசுச்சுப்பா '' என்று அது பேசியவற்றை ஒரு வரி விடாமல் ஒப்பித்தான்.

''என்னடா ராகு , அதெல்லாம் ஒன்னுமில்லடா உடம்பு சரியில்லையா இருக்கும், நாளைக்கு டாக்டர போய் பாக்கலாம் சரியா, வீட்டில தனியா இருக்கல்ல அதான் பயந்துருப்ப! ''

''நான் ஒன்னும் குழந்தை இல்லப்பா, அப்பா அந்த செடிலாம் சேர்ந்து உங்கள என்ன அம்மாவெல்லாம் கொல்ல போகுதுப்பா, நாம அந்த ரோஜாச் செடிய அழிக்கணும்ப்பா''

''இல்லடா அப்படிலாம் ஒன்னுமில்லடா, அதெல்லாம் உன்னோட கற்பனை, நிறைய புக்ஸ் படிக்கற அப்புறம் விக்கீபீடியா, கூகிள், பவர் ரேஞ்சர்ஸ் அதனாலதான் இப்படிலாம் உனக்கு கற்பனை வருது '' என்றபடி மணியை பார்த்தார் 6.30.

'' சரி நாம நைட்டு இது பத்தி பேசுவோம் ''

''அப்பா எனக்கு பயமாருக்குப்பா, இன்னைக்கு வேலைக்கு போகாதீங்க ப்ளீஸ் ''

''அதான் ஒன்னுமில்லனு சொல்றேன்ல, இன்னைக்கு வேலைக்கு போகாட்டி எவ்ளோ லாஸ் ஆப் பே னு தெரியுமா, ஆமா காசோட அருமை உனக்கெங்க தெரியப்போகுது ''

''அப்பா சத்தியமா, என் படிப்பு மேல சத்தியமா நெஜமாத்தான்ப்பா சொல்றேன், பாருங்க அந்த செடிய காணோம் ''

''ஏன்டா தொட்டிய கீழ தள்ளி உடைச்சதும் இல்லாம, பொய்வேற சொல்றியா, நானும் பாத்துகிட்டே இருக்கேன் '' என்று கன்னத்தில் ஒன்று கொடுத்தார். பளீர்!.கன்னம் அந்த ரோஜாவைப்போல சிவந்து பின் வெளிரியது.
''என்னங்க பிரச்சனை '' அம்மா கண்ணைதுடைத்தபடி வெளியே வந்தாள்,
''ஐயோ என் பூத்தொட்டி '' அலறினாள். '' ஒன் மகன் அத உடைச்சிட்டு கதை சொல்றான்டி, என்னையே எதிர்த்து பேசறான்''

''அது என்னோட லைப்டைம் பிராஜக்ட் ரோஜாச்செடி, இப்போ நான் என் டீனுக்கு என்னடா பதில் சொல்வேன் ''

''ஏன் நான் சொல்றத யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க, ஐயோ நான் சொல்றது நிஜம், குளோபல் வார்மிங்லாம் படிச்சதில்லையாப்பா நீங்க''

''பாருடி என்னையே கேள்வி கேக்குது உன் புள்ள , மீசை முளைச்சிருல்ல, இப்படித்தான் ''

''அந்த செடிய என்னடா பண்ண?''

''எங்கடா போட்ட அந்த செடிய!! ''அதட்டினார்.

''அப்பா டிசம்பர் 31, அதுக்குள்ள நாம அந்த ரோஜாச்செடிய கண்டுபிடிச்சு அழிக்கணும் , இல்லாட்டி அது நம்ம ஹியுமானிட்டியையே அழிச்சுடும்பா, ப்ளீஸ்,''

ராகுலின் அம்மா அழத்துவங்கினாள்,

அவன் பெற்றோர் நின்று கொண்டிருக்கும் போதே, அந்த ரோஜாச்செடி அவர்கள் பின்னால் இருந்து எட்டிப்பார்த்தது, இவன் தோட்டத்தில் கிடந்த மண்வெட்டியை தூக்கிக்கொண்டு அதன் பின்னால் ஓடினான்.

''யாராச்சும் நம்புங்களேன், ப்ளீஸ், இன்னைக்கு அதுங்க நம்ம உலகத்தை அழிக்கப் போகுது, ப்ளீஸ், அந்த ரோஜாச்செடிய அழிக்கணும்'' மனதிற்குள் பல நாட்களாக அது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது ராகுலுக்கு. எப்போதும் அதையே கத்திக்கொண்டிருந்தான் அந்த சிறு இளைஞன்.

''இது வெறும் மனபிரமைதான், அதீத மன அழுத்தம், அப்புறம் தனிமை, இதுக்கு நீங்களும்தான் காரணம், அவன் சொல்றதை கேட்டா உங்களுக்கே புரியல, ஒரு ரோஜாச்செடிக்கு எப்படி இத்தனை அறிவு வரும்'' மனோதத்துவ நிபுணர் மேனன் அவர்களை நோக்கி கோபமாக பேசினார். எதிரில் அமர்ந்திருந்த இருவரும் தலைகுனிந்திருந்தனர். ராகுலின் அம்மாவால் ஏதும் பேச முடியவில்லை. அவளால் சில உண்மைகளை சில இடங்களில் கூற இயலாது.

''யாராச்சும் நம்புங்களேன், ப்ளீஸ், இன்னைக்கு அதுங்க நம்ம உலகத்தை அழிக்கப் போகுது, ப்ளீஸ், அந்த ரோஜாச்செடிய அழிக்கணும்''
அந்த மனநலமருத்துவமனையின் பூட்டிய அறையில் விடாமல் பல நாட்களாய் இதையே சொல்லிக்கொண்டிருந்தான் ராகுல். யாராவது அவன் அலறுவதை கேட்டு எப்போதும் லத்தியால் கம்பிகளை தட்டுவார்கள், காலையிலிருந்து யாரும் அப்படி வரவில்லை. காலை உணவும் வரவில்லை. பசித்தது. உதவியாளையும் காணவில்லை.

கம்பிகளுக்கு வெளியே எட்டிப்பார்த்தான். வெளியே மக்கள் அலறும் சத்தம் கோரஸாக ஓஓஓ வென கேட்டது .

கம்பிகளுக்கு வெளியே அந்த ரோஜாச்செடி தன் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தது. அந்த ரோஜாவின் சிரிப்போலி அந்த அறை முழுதும் பரவி அவன் உடலெங்கும் ஒலித்தது. அவன் அதை பார்த்தான். அது சிரித்தது அவனும் சிரித்தான். அந்த அறைக்கதவில் ஓய்யாரமாக சாய்ந்து கொண்டு சிரித்தபடியே பேசத்துவங்கியது.

'' ராகுல் உன்னை கொல்லமாட்டேன்டா நீ என் தம்பிடா!''

ராகுல் பேசாமல் அது அந்த வாயிலில் நடந்து செல்வதை பார்த்துக்கொண்டே
இருந்தான்.

11 February 2009

சிறைக்கம்பிகளுக்கு பின்னால் கடவுளர்கள்!!


ஒரு சிறைச்சாலையில் வரிசையாக சிறையறைகள் அல்லது செல்கள். பலமான இரும்பு கேட்டு அதைவிட வலிமையான துருப்பிடித்த பூட்டு. ஒரு பத்துக்குபத்து அறை அதிலேயே கழிவறை , படுக்கை . தனியொருவன் மட்டுமே தங்க இயலுமதில். சுவற்றில் விநாயகர். அவரும் அவனுடன் சிறைக்கம்பிகளுக்கு பின்னால். அடுத்த செல்லில் சாய்பாபா . அதற்கடுத்ததில் நாராயணன் . அதற்கடுத்ததில் வெங்கடாஜலபதி. அடுத்ததில் இயேசு. இறைவன் சூழ்ந்திருந்தான் அந்த சிறைமுழுக்க... கைதிகளோடு.
''சார் நீங்க ஜெயிலுக்கு போயிருக்கீங்களா'' இப்படி யாராவது கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். இனிமேல் சென்னையில் பாதி பேரின் பதில் ஆம் என்பதாகத்தான் இருக்கும். சென்னை சென்டரல் ரயில்நிலையத்தை ஒட்டியுள்ள சென்ட்ரல் ஜெயில் இந்த வாரம் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த சிறைச்சாலை மூடப்பட்டு அங்கிருந்த கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதன் பின் இதோ இன்னும் பத்து நாட்களில் முழுதும் இடிக்கப்பட இருக்கிறது. சென்னை ரயில்நிலைய விரிவாக்கத்திற்காக அது இடிக்கப்பட உள்ளதாய் அறிய முடிகிறது.

சுமார் முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று அந்த சிறைச்சாலையை சூழ்ந்திருந்தனர். எங்கும் மக்களின் முகத்தில் ஆச்சர்ய ரேகை. டே இங்க பார்ரா இதான்டா கைதிங்க குளிக்கற இடம், அண்ணே இத பாருங்க இதான் கைதிகளுக்கு சமைக்கற இடம் , இங்கப்பார்ரா இங்கதான் கைதிங்க மரவேலை செய்வாங்க போலருக்கு, மகாநதி சினிமால வருமே! இதுதான் பெரும்பாலான மக்களின் பேச்சாக இருந்தது.

தமிழ்சினிமா இயக்குனர்கள் யாருமே சிறைச்சாலையை அதிகம்ப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது அச்சிறையை ஒரு முறை வலம்வந்தபோதுதான் தெரிந்தது. தமிழ்சினிமாவின் மிகச்சில இயக்குனர்களே(மகாநதி,பாய்ஸ்,பிதாமகன்) சிறைச்சாலையை அதன் இயல்போடு காட்டியிருந்தது தெரிந்தது. இதுவரை சிறை என்பது ஏதோ பள்ளிக்கூடத்தைப் போல , மருத்துவமனையைப்போல ஒரு அரசாங்க கட்டிடமாகவே எண்ணி வந்த பலருக்கும் அது கட்டிடத்தையும் தாண்டிய ஒன்று என்பது நிதர்சனம்.

பலவித செல்கள் , ஒவ்வொன்றிக்கும் ஒரு கதை இருந்திருக்கும். ஒவ்வொரு அறையிலும் எத்தனை இரவுகள் தனிமையில் தன் குற்றத்தை நினைத்து வருந்தியிருப்பான். தப்பிக்கலாம் என்று திட்டமிட்டிருப்பான். நாளை விடிந்தால் தூக்கென்று நினைத்து உறங்காமல் விழித்திருந்திருப்பான். தன் குடும்பம் என்னானதோ என்று ஏங்கியிருப்பான். எத்தனை நிரபராதிகளை பார்த்திருக்கும் அந்த சிறையறைகள். அரசியல்வாதி முதல் அரைக்காசு திருடியவன் வரை எத்தனை எத்தனை மனிதர்கள். அங்கிருக்கும் ஒவ்வொரு சிறைக்கதவையும் தொட்டுப்பார்க்கையில் ஏதோ ஒரு ஓலம் காதினூடே ...




பெரும்பாலான சிறைக்கைதிகள்( ஆயுள் தண்டனை, அல்லது சில ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள்) பலரும் மிகுந்த இறைநம்பிக்கையுடையவர்களாய் அறியமுடிந்தது. எல்லா சிறையறைகளிலும் சாய்பாபா , விநாயகர் முதல் இயேசு வரை எல்லா இறைவர்களும் காலண்டரிலும் கரிக்கட்டை ஓவியத்திலும் வீற்றிருந்தனர்.

நேற்று அங்கே பார்வையிட்ட பொதுமக்களில் பலரும் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுப்பதைக்காண நேர்ந்தது. மிக ஆச்சர்யமாக இருந்தது அவர்களது செயல். ஒரு செத்த புலிக்கு பின்னால் நின்று படம் ஒத்த மனநிலை அதுவல்லவா? , நம்மால் இயங்குகிற ஒரு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்க இயலுமா ? நமக்கெல்லாம் புலிகளை சந்திக்கும் வாய்ப்பில்லையோ என்னவோ? நானும் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டு ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.

அங்கே கூடியிருந்த பெரும்பாலான மக்களுக்கு கலைஞரும் ஜெவும் தங்கியிருந்த சிறைச்சாலையை பார்வையிட மிகுந்த ஆவல் இருந்ததாய் தெரிந்தது. இதில் சிறைமேற்பார்வையாளரின் அறையில் யாரோ கரிக்கட்டையால் கருணாநிதி அறை என எழுதிவிட்டு சென்றிருக்க கூட்டம் மொத்தமும் அந்த அறையில். மச்சி இங்க பார்ரா இங்கதான் கலைஞர் ஒன்னுக்கு போயிருப்பாரு, இங்க பார்ரா இங்கதான் கலைஞர் டிவி பார்த்திருப்பாரு , கலைஞர் என்ன டிவிடா பார்த்திருப்பாரு ? . இப்படி இன்னும் சிலபல உரையாடல்கள் காதில் விழுந்தன.

அச்சிறையில் இதற்குமுன்னே கைதியாக இருந்திருந்த பலரையும் காண முடிந்தது. சிலர் தாங்கள் இருந்த சிறையறையை பார்த்து கண்ணீர் சிந்தியது மனதிற்கு மிக இறுக்கமாய் இருந்தது. இன்னும் சிலர் தங்கள் குடும்பத்தினரோடு வந்து சிறைச்சாலையின் பல இடங்களையும் சுற்றிக்காட்டி அந்தந்த இடங்களில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை சொல்லிக்கொண்டிருந்தது அந்த இறுக்கத்தை குறைத்தது.

கல்லூரிகள் பல மூடியிருப்பதால் பல மாணவர்களை காண முடிந்தது. சிலர் சிறைச்சுவர்களில் தங்கள் பெயர்களை கரிக்கட்டைகளால் எழுதிக்கொண்டிருந்தனர். சிறைச்சாலையின் தியான மண்டபத்தை ஒட்டியிருந்த நூற்றாண்டு ஆலமரம் ஒன்றில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு சிறைச்சாலைக்கு இதெல்லாம் மிக புதிதான விடயமாக இருந்திருக்கும். அதேபோல உயரமான மதில் சுவர்களை பார்த்த பலரும் எப்படி ஆட்டோ சங்கர் இதிலிருந்து தப்பினான் என்பதாகவே இருந்தது.

சிறைக்கு வெளியே அமர்ந்திருந்த அச்சிறையில் பணியாற்றிய ஒரு மூத்த அதிகாரியிடம் பேசியபோது அவர் சொன்னது , கலைஞருக்கு ஜெவுக்கு என பிரத்யேக அறையெல்லாம் ஒன்றுமில்லை , அப்போதைய சூழலில் எந்த அறை சுத்தமாக ஓரளவுக்கு நல்லதாக இருக்கிறதோ அதில் தங்கவைப்பதே வாடிக்கை என தெளிவுப்படுத்தினார். அப்போதுதான் உணர முடிந்தது சிறைச்சாலை என்ன கோடை வாசஸ்தலமா விஐபிக்களுக்கு சிறப்பு அறை ஒதுக்கவென்று.

சிறைச்சாலையின் கைதிகளை விட சிறைச்சாலையினுள்ளே வேலை செய்யும் காவலர்களின் நிலையை நினைத்தபோதே கதிகலங்கியது. நம்மால் ஒரு இரண்டு மணிநேரம் கூட அந்த இறுக்கமான சூழலில் இருக்க முடியவில்லை. அதனாலே என்னவோ அங்கே பணிபுரியும் பலரும் மூர்க்கமானவராய் இருந்திருக்கலாம்.

ஒரு இடத்தில் மிக அதிக கூட்டமிருந்தது, அது தூக்கிலிடும் இடம். கூட்டம் அதிகமாய் இருந்ததாலும் சிறைச்சாலையை சுற்றியதால் மனதில் தேவையில்லாத ஒரு அதீத மன இறுக்கமும் அதை வேண்டாம் என தடுத்தது. பார்க்கவில்லை. பார்க்கவும் பிடிக்கவில்லை.

1837ஆம் ஆண்டுமுதலே இயங்கிவரும் இந்த சிறைச்சாலை ஏன் இடிக்கப்படுகிறது என்பது புரியாத புதிர். அச்சிறையை ஒரு அருங்காட்சியகமாகவோ அல்லது சினிமா படப்பிடிப்புக்காகவோ உபயோகித்திருக்கலாம். இது போன்ற நூற்றாண்டு கட்டிடங்களை இடிக்கக்கூடாது என ஒரு சட்டமே இருப்பதாக தோழர் ஒருவர் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது நிச்சயம் ஒரு அருங்காட்சியகமாக நம் வருங்காலம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

இன்னும் பத்துநாட்களில் இடிக்கப்பட இருக்கும் இந்த கட்டிடங்கள் இன்று மட்டும் மக்கள் பார்வைக்கு கடைசியாக..

07 February 2009

நான் கடவுள் - குரங்குத்தவம்!



சில வருடங்களுக்கு முன்னால் கோவையிலிருந்து சென்னைக்கு ஒரு இன்டர்வியூவிற்காக ஸ்பென்சர் பிளாசாவிற்கு வர நேர்ந்தது. மதியவேளையில் எங்கே சாப்பிடுவது எனத்தெரியாமல் ஸ்பென்சருக்கு எதிர்புறமிருக்கும் கையேந்திபவனில் சாப்பிட முடிவெடுத்தேன். இரண்டு பரோட்டாக்களை வாங்கிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்க , ஒரு முடமான பிச்சைக்கார முதியவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் என் அருகில் வந்து பார்த்துக்கொண்டே இருந்தார். எனக்கு ஒரு மாதிரி பரிதாபமாக இருந்ததால் அண்ணே ஏதாவது சாப்பிடறீங்களா என்று கேட்டேன். அத்தனை நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தவர் திடீரென உத்தஸ்தாயியில் கத்த ஆரம்பித்தார் '' தேவிடியா பசங்களா , ங்கோத்தா பாடுங்களா , உங்களாலதாண்டா எங்களுக்கு கஷ்டம் , உன்ன மாதிரி நாதாரிங்கலாம் இங்க சாப்புடறதாலதாண்டா இந்த பு.!@!#@ பரோட்டோ வெலைய ஏத்திட்டான் .. @#%&@$&@% &*&$$*$#* '' என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்துவிட்டார். அப்பொதுதான் புரிந்தது அங்கிருந்த பலரும் பெரிய கம்பேனிகளில் சிறிய வேலையில் இருப்பவர்கள் என்று. அதற்கு மேல் சாப்பிட முடியாமல் அரைபரோட்டாவோடு அங்கிருந்து நகர்ந்தேன். ஆனால் அந்த பிச்சைகார முதியவரின் கதறல் மட்டும் ஒரு வாரத்திற்கும் மேலாக ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த நபரின் ஆற்றாமையை புரிந்து கொள்ள பல இரவுகளின் தூக்கத்தை விலையாய் தரநேர்ந்தது.


பிச்சைக்காரர்களின் வாழ்க்கை ரகசியமானது , அவர்களைப் பற்றி யாருக்குமே அதிகமாய் தெரிந்திருக்காது. உங்கள் வீடிருக்கும் தெருமுனை பிச்சைக்காரன் எந்த ஊர் , அவனது இருப்பிடம் எது அவனுக்கு பிச்சையாய் வரும் பணம் எங்கே போகிறது யாருக்கும் தெரியாது. அவர்களது வாழ்க்கையிலும் சுவாரஸ்யம் , மகிழ்ச்சி கண்ணீர் புனைவு , நகைச்சுவை எல்லாமும் இருக்கும் . ஆனால் அவர்களை புரிந்து கொள்வது மிகக்கடினமான ஒன்று. கடைநிலைமனிதர்களின் உலகம் நாம் அறிந்திராதது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அது அன்னியமாக தெரிந்தாலும் அவர்களோடு அருகில் இருந்து பழகினால்தான் தெரியும் அவன் தெருவில் பிச்சை எடுப்பதும் நாம் தெருவைத்தவிர மற்ற எல்லா இடங்களிலும் பிச்சை எடுப்பதும். அவன் காசுக்கு மட்டும்தான் பிச்சை எடுப்பவன்.


உங்கள் வீட்டுக்கதவையோ கேட்டையோ தட்டும் கண்ணில்லா பிச்சைகாரரை உங்களுக்கு பிடிக்குமா ? , உக்கிரமான வெயிலில் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் போது கையில் தட்டோடு உங்களை நோண்டி நோண்டி பிச்சை எடுக்கும் காலில்லா முதியவருக்கு போட கையில் 2 ரூபாய் சில்லரை இல்லாமலிருந்தால் அவரை எப்படி அணுகுவீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யும் கடையில் வியாபாரமில்லாமல் இருக்கையில் தெருத்தெருவாய் கடைகேட்கும் திருநங்கைகள் வாசலில் நின்று காசு கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? நான் கடவுள் திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது அப்படி ஒரு மனநிலைதான் இருந்தது.

ஸ்ஸ்ப்பாடா ஒரு வழியாக வெளிவந்துவிட்டது நான்கடவுள் திரைப்படம். பாலாவும் பல வருடங்களாக ஆர்யாவைப்போல ஊடகங்களில் பெயர்வராத ஆயிரமாயிரம் பேரின் நொங்கை பிதுக்கி வேலை வாங்கி ஒரு தவம் போல ஒரு சிற்பியைப்போல செதுக்கி செதுக்கி படமெடுத்திருக்கிறார். பாலாவின் பல வருடத்தவம் நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. திரைப்படம் திரையரங்குகளில்.


பாலா படங்கள் பொதுவாகவே விளிம்புநிலை மனிதர்களையும் , சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்வியலையும் சார்ந்து அதைக்குறித்த சமூகத்தினை சுற்றி நிகழுபவையாக இருக்கும். அவரது எல்லா திரைப்படங்களிலும் இருவேறு பரிமாணங்களில் இயங்கும் இரண்டு கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைக்கதையாக்கி தந்திருப்பார். இந்த படத்திலும் இரண்டு கதைகள் , ஒன்று காசியில் அநாதையாக்கப்பட்ட சிறுவன் அகோரி( சாமியார்கள் பலவிதம் அதில் இதுவும் ஒருவிதம்) மாறியிருக்க அவனை மீட்க முயலும் தந்தையும் , தன்னூருக்கே திரும்பி வரும் அவன் சமுதாயத்தை எதிர்கொள்ளுதலும் , இன்னொன்று குருட்டு பிச்சைக்காரியும் அவளுக்கு பின்னால் இயங்கும் ஒரு பிள்ளை பிடிக்கும் கும்பல் அல்லது பிச்சை எடுக்கவைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் மற்றும் அங்கே பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பிச்சைக்காரர்களில் ஒரு சாரரின் (டீம்?) வாழ்க்கை முறை .


ஆயிரம் பக்கங்களில் எழுதவேண்டிய ஒரு புதினத்தை இரண்டைரை மணிநேரத்தில் அடைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் 500 பக்கங்கள் அல்லது அரைக்கிணறுதான் தாண்ட முடிந்திருப்பது வேதனை. இரண்டு கதைகளையும் அதற்கான தளத்தையும் முடிவு செய்துவிட்டு எதற்கு முக்கியத்துவம் தருவது என குழம்பிப்போய் இரண்டையும் சொதப்பியிருக்கிறார் பாலா. காசியில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் படமாக்கியதாய் பேட்டிகளில் அறிய முடிந்திருந்தது. ஆனால் படத்தில் அரைமணிநேரம் கூட அந்த காட்சிகள் வராமல் போனது ஏமாற்றம். காசிக்காட்சிகள் தமிழ்சினிமாவிற்கு மிகவும் புதியது அதை இன்னும் கொஞ்ச நேரம் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ அக்காட்சிகள் முடிந்து தேனீ காட்சிகள் தொடங்கும் போது ஏனோ தோன்றியது. அதேபோல வன்முறைக்காட்சிகள் இதுவரை வெளியான பாலாவின் படங்களில் இது உச்சம். வசன வன்முறை , காட்சி வன்முறை என விதவிதமாய் காட்டுகிறார்.


படத்தின் மிகப்பெரிய பலம் இளையராஜா, ஓம் சிவோவோம் என துவங்கும் அந்த ஆரம்ப பாடலை முன்னால் ஆடியோவாக மட்டும் கேட்ட போது திருவண்ணாமலை கிரிவலப் பாடலைப்போல இருந்தது , ஆனால் காட்சியாய் விரிகையில் அதன் பலம் அடேங்கப்பா!. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ஏற்கனவே பலரது மனதையும் உடைத்து நொறுக்கிக் கொண்டு இருந்தாலும் காட்சியாக பார்க்க முடியவில்லை . என்னால் இன்னொரு முறை அந்த பாடல் காட்சியை டிவியில் கூட பார்க்க இயலுமா தெரியவில்லை. மற்ற பாடல்கள் எதுவும் திரைப்படத்தில் வரவில்லை. நீளம் கருதி வெட்டியிருக்கலாம். பிண்ணனி இசை - மிரட்டல் , அசத்தல் இத்யாதி இத்யாதி . ஆனாலும் இளையராஜா இன்னும் சோகக்காட்சிகளில் ஆதிகாலத்து வயலின் பீஜியத்தையே வாசிப்பது நெருடல் . மற்றபடி பல இடங்களில் நம் உடல் நடுங்கும் அளவுக்கு இசை நம்மை ஆட்கொள்ளுகிறது. இது இளையராஜா இசையமைத்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.


அதுவும் உடுக்கையின் ஒலியும் அதன் நாதமும் படம் முடிந்தும் காதிற்குள் குய் குய் என ரீங்காரமிடுகிறது.


ஆர்யாவின் இரண்டு வருட உழைப்பு , அவரது ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது. படம் முழுக்க நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடக்கிறார் , கட்டைக்குரலில் ஜெய் போலேநாத் என்று கத்துகிறார், கஞ்சா அடிக்கிறார் , விரைப்பாகவே வலம் வருகிறார் , எல்லோரையும் வாய்க்கு வந்த படி திட்டுகிறார் , நான் கடவுள் அகம் பிரம்மாஸ்மி என்று கூவுகிறார் , திடீரென தலைகீழாய் நின்று யோகாசனம் செய்கிறார், சமஸ்கிருதத்தில் பத்தி பத்தியாக (ஜெமோ வலைப்பதிவு போல) யாருக்குமே புரியாதது போல பேசுகிறார். இதெல்லாம் போதாதென்று படம் நெடுக கோவணத்தைக் கட்டிக்கொண்டு விசுக்கு விசுக்கு என்று யாரையோ அடிக்கச் செல்வது போலவே நடக்கிறார். ஆர்யாவை பார்த்தால் பயம் வரவேண்டும் என பாலா நிறைய மெனக்கெட்டிருக்கிறார் . பாவம் ஆர்யா அவரால் முடிந்தவரை முயன்றிருக்கிறார் ... படத்திலும் ஆர்யாவின் காட்சிகளுக்கு அத்தனை முக்கியத்துவம் இருப்பதாய் தெரியவில்லை , ஆங்காங்கே தென்படுகிறார் , இடைஇடையே வந்து மேற்ச்சொன்ன சில உட்டாலக்கடி வேலைகள் செய்கிறார். ஆனால் எதுவும் உபயோகமில்லை ..கடைசியில் மீண்டும் காசிக்கே செல்கிறார்.. தல அஜித்தின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் .


பூஜா பெண்ணே ரோசாப்பூவே என்று கவிதை எழுதலாம் , மிக நேர்த்தியான இயல்பான நடிப்பு . பாலாவிடம் ஒரு பிடி மணலை அள்ளிக்கொடுத்து இதை எப்படியாவது நடிகனாக்குங்கள் என்று சொன்னால் கூட அதையும் நடிக்க வைத்துவிடுவார் போல... பலே ஆள்.

ஏனோ பூஜா பிச்சை எடுக்கும் போது பாடும் காட்சிகளில் பழைய பாடல்களை ஓடாத ரேடியோவில் போட்டது போல பிண்ணனி அமைத்தது மகா கேவலாமாக இருந்தது (இளையராஜாவின் மற்றுமொரு சொதப்பல் ) . ஒரு இயல்பான கதைசொல்லலில் சினிமாத்தனத்தை நுழைத்தது போன்ற உணர்வு. இதற்கு பூஜாவின் குரலிலேயே (படு மோசமான குரலாக இருந்தாலும்!) அப்படியே பதிந்திருக்கலாம் .


இதுதவிர பிச்சைக்கார கம்பெனி நடத்தும் தாண்டவன் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுகம். இத்தனை மோசமான ஒரு வில்லனை தமிழ்சினிமா இதுவரை பார்த்திருக்குமா தெரியவில்லை. அவரது வசன உச்சரிப்பும் உடலசைவு மொழியும் இயல்பின் உச்சம். வில்லன்களுக்கான எல்லா அம்சமும் நிரம்பி வழிகிறது அந்த ஓல்லிக்குச்சி உடம்பில். மறைந்து போன நம்பியார் பி.எஸ்.வீரப்பாவுக்கு பின் குழந்தைகள் பார்த்தால் பயந்து ஓட இன்னொரு பூச்சாண்டி புள்ளபுடிக்கறவன் கிடைத்து விட்டார்.


அதே போல பிச்சைக்கார குழு ஒன்றை சித்திரித்திருக்கிறார் இயக்குனர். அதில் ஒரு சிவன் வேடமிட்ட குள்ளக்கிழவன் , அம்மனாய் ஒரு கூனி , அகோரமான முகம் கொண்ட காளி , எழுந்து நிற்கக்கூட இயலாத துடுக்கு பேச்சு சிறுவன் , இவர்களை கண்கானிக்கும் முருகன் என்னும் அடியாள் , முருகனை காதலிக்கும் இடுப்பொடிக்கப்பட்ட இளம்பெண் , இவர்களுக்கு எடுபிடியாய் ஒரு திருநங்கை , இன்னும் பல பல பாத்திரங்கள் படம் முடிந்தும் மனதிற்குள் நிலைகொள்கின்றன. இவர்களில் பலரும் நடிகர்கள் அல்ல என்றும் பலரும் நிஜபிச்சைக்காரர்கள் என்றும் அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றாலே பரிதாபம் என்னும் வழியிலிருந்து விலகி அவர்களது மகிழ்ச்சியையும் காட்ட முயன்றது பாராட்டுக்குரியது.


பகடிக்கு பெயர் போனவர் ஜெயமோகன் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படத்திற்கு அவர்தான் வசனம். தொப்பி எனும் கட்டுரையால் சினிமாக்காரர்களால் டவுசர் கிழிக்கப்பட்டவர் . அந்த வன்மமோ என்னவோ அதை மனதில் வைத்துக்கொண்டு பல இடங்களிலும் சினிமாவை சகட்டுமேனிக்கு நையாண்டி செய்திருக்கிறார் தன் வசனங்களால். எம்.ஜி.ஆர் வேடமிட்ட ஒருவர் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்னும் பாடலுக்கு நடனமாடுகிறார் . அது முடிந்தது இப்படி வருகிறது வசனம் எம்.ஜி.ஆரே சொல்வதாய்.. '' வெறும் பாட்ட மட்டும் கேட்டுட்டு அத புரிஞ்சுக்காம எனக்கு ஓட்ட மட்டும் போட்டுட்டீங்க '' என்று. அதேபோல தனது ஹிந்துத்துவா கொள்கையிலிருந்தும் விலகாமல் பாலாவின் படமென்பதால் அடக்கி வாசித்து மிக நுணுக்கமாக தான் கொண்ட கொள்கையை பரப்ப முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்தில் சில இடங்களில் எல்லா புகழும் இறைவனுக்கேவும் , ரட்சிப்பும் உபயோகமில்லாதது என்பதனை உணர்த்தியிருக்கிறார் ( படம் பார்த்து புரிந்து கொள்ளுங்க ) . ஜெமோ நாமம் வாழ்க.. அவர் புகழ் வளர்க..

படத்தின் கேமரா , அத்தனை சிறப்பாய் இருக்கிறது , கலர் ஃபுல் ஆனால் இந்த கதைக்கு இத்தனை நிறப்பிரிகைகள் அவசியம்தானா? ( சேதுவில் மனநிலைபாதிப்பு குறித்த காட்சிகளில் ஒரு அழுக்கு பச்சை நிறத்தை உபயோகித்திருப்பார் ) இதற்கு முன் இத்தனை கலர்புல்லாய் சந்திரமுகி பார்த்தது. எடிட்டிங் யாருப்பா? ஜிக் ஜிக் ஜிக் என்று காட்சி மாற்றத்தை கலக்கலாக செய்திருக்கிறார். அதுவும் சண்டை காட்சிகளில் மிதமிஞ்சிய எடிட்டிங்.சபாஷ் ஆர்தர் வில்சன்.


படம் முடிந்ததும் எனக்கு முதலில் தோன்றியது '' ஏன்டா ங்கோத்தா இப்படி படம் எடுக்கறீங்க .. தே... @%@#%$&%@$&$@ '' என்பதே '' அத்தனை பாதிப்பை இந்தப் படம் நம்முள் ஏற்படுத்தித் தொலைக்கிறது. ஆனால் அந்த பாதிப்பு மிக கொடுமையான வன்முறையால் நிகழ்ந்தது என்பது மறக்கவும் மறைக்கவும் முடியாதது. பாலாவின் படங்கள் எல்லாமே உங்களில் இருக்கும் பைத்தியத்தை தட்டி எழுப்பி அதற்க்கு சில மணிநேரங்கள் தீனி போட உதவும் வகைப் படங்கள். இப்படம் அந்த பைத்தியத்தை அழவைத்து ரசிக்கிறது. அவரது முந்தைய படங்கள் அதிகம் பேசப்பட இதுவே காரணமாக இருக்கலாம்.

இந்த படத்தின் பிளஸ் - காசிக்காட்சிகள் , மிகச்சிறந்த கதை , ஜெமோவின் ரேசர் ஷார்ப் வசனங்கள் , எடிட்டிங் , பூஜாவின் நடிப்பு , ஆர்யாவின் உழைப்பு , இளையராஜா , பாலாவின் இயக்கம்

இப்படி பல பிளஸ்கள் இருந்தும் படத்தின் மிகப்பெரிய மைனஸ் திரைக்கதை , மற்ற எல்லா விடயத்திலும் கவனம் செலுத்திய இயக்குனர் இதில்தான் அதிகமாய் கவனம் செலுத்தவேண்டும் என்பதை மறந்து போனதேன் என்று புரியவில்லை.. திரைக்கதையில் அத்தனை ஓட்டைகள் , ஓட்டைகளின் அளவு அதிகமாகி வெறும் சல்லடையாய்தான் போனது திரைக்கதை அமைப்பு. பாலாவின் முந்தைய படங்களில் இருந்த நேர்த்தியான பேலன்ஸ்டு திரைக்கதை வடிவமைப்பு இந்த படத்தில் மிஸஸிங். ரியாலிட்டியோடு ஒரு படம் எடுப்பது என்றுமுடிவான பின் ஏன் பல சினிமாத்தனமான காட்சியமைப்புகள் என்றும் புரியவில்லை.

அடுத்து விளிம்பு நிலை மனிதர்களை இதைவிட கொடுமையாய் யாருமே காட்டியிருக்க முடியாது , அதில் கொஞ்சூண்டு கருணை காட்டியிருக்கலாம். காட்சி வன்முறை கண்ணை மறைக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் , கர்ப்பிணிகள் , பலவீனமான இதயம் கொண்டோர் இந்த படத்தை பார்க்காமல் இருந்துவிடுவது உத்தமம் .

பாலாவின் படங்களில் பொதுவாக படம் முடிந்து வெளியே வரும்போது பேய் பிடித்தது போலிருக்கும். இந்த படத்தில் கடவுள் பிடித்தது போலிருந்தது.

இது தமிழ்சினிமாவின் மைல்கல் பாறாங்கல் கருங்கல் என்றெல்லாம் சொல்ல இயலாது , தமிழ்சினிமாவில் விளம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை படமாக்க முயலும் ஒரு புதிய முயற்சி அவ்வளவே. இதற்குமுன் இதைப்போல பசி,சோறு போன்ற படங்களில் இதே போன்ற மக்களை காட்டியிருந்தாலும் நான் கடவுள் கான்செப்ட் மட்டும் புதுசு.

நீங்கள் கடவுளை ஒரு வேளை காண நேர்ந்தால் உண்டாகும் மிரட்சியும் அதிர்ச்சியும் இந்த படமும் உங்கள் மனதில் உண்டாக்கும் , அதற்கான காரணங்கள் வன்முறையாய் திணிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும்.

06 February 2009

ஈழம் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?




மக்கள் ஆய்வகம் என்னும் நிறுவனம் ஈழத்தமிழர் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஒரு கருத்துக்கணிப்பை அண்மையில் நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. அவை உங்கள் பார்வைக்கு. பிடிஎப் கோப்பாக வந்த கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்திருக்கிறேன். இதில் காணும் அனைத்து விபரங்களும் மக்கள் ஆய்வகத்தின் முடிவுகளே. எனது சொந்த கருத்து ஏதுமில்லை. இக்கட்டுரையை வாசிக்கையில் தமிழர்களின் வித்தியாசமான மனோபாவம் இப்பிரச்சனையில் தொனிப்பதாக அறியமுடிகிறது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை மின்னஞ்சலில் அனுப்பிய பாலபாரதி அவர்களுக்கு நன்றி. (தட்டச்சு பிழைகளுக்கு மன்னிக்கவும்)

*************************************************************************************************




மக்கள் ஆய்வகம் வழங்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த மாநில அளவிலான கள ஆய்வு முடிவுகள்.

ஆய்வகப் பின்னணி

‘மக்களை ஆய்வது மக்களுக்காகவே” என்ற கொள்கையுடன் மக்களை மையப்படுத்திய பல்துறை ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது மக்கள் ஆய்வகம். களஆய்வுகளோடு நின்றுவிடாமல், ஆய்வுமுடிவுகளை அடியொற்றிய செயல்பூர்வமான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. தகவல் அறியும் உரிமை, வாக்குரிமை ஆகியவை குறித்து மாநில அளவிலான பரப்புரைப் பயணங்களையும், இந்தியத் தேர்தல் முறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துத் தேசிய அளவிலான கருத்தரங்கு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களையும், புவி வெப்பமாதல் முதலிய சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்த பயிலரங்குகளையும் கடந்த ஆண்டு நடத்தியுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையில் கலைப்படைப்புக்களை உருவாக்கும் மற்றொரு முயற்சியாக, அரவாணிகளைப் பற்றிய ‘அப்பால்,” இளைஞரைப் பற்றிய ‘வர்ணா” ஆகிய குறுந்திரைப் படங்களையும் தயாரித்துள்ளது.

ஆய்வின் நோக்கம்

கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழர்ப் பிரச்சனை குறித்துத் தமிழக அரசியல் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் பலவகைப்பட்ட செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளன. இந்நிலையில், தமிழக மக்களின் உள்ளார்ந்த உணர்வுகளையும் எண்ணப் போக்குகளையும் ஒரு நடுநிலையான ஆய்வு மூலமாகப் பதிவுசெய்ய வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து, மக்கள் ஆய்வகம் இந்தக் களஆய்வை மேற்கொண்டுள்ளது.

ஆய்வு அணுகுமுறை

இந்திய ஃ தமிழகப் பண்பாட்டு-அரசியல் சூழலுக்கேற்ப, எண்ணியல் (Quantitative) மற்றும் பண்பியல் (Qualitative) கூறுகளை உள்ளடக்கி, பேரா. டாக்டர் . ச. ராஜநாயகம் உருவாக்கியுள்ள சமூக-உளவியல் அணுகுமுறை (Social psychological approach ) இந்த ஆய்விலும் பின்பற்றப்பட்டுள்ளது. எனினும், இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உணர்வுப்பூர்வமான தன்மையைக் கருத்தில்கொண்டு, மக்கள் சுதந்திரமாகத் தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த ஏதுவாக, கலந்துரையாடல் சூழலில், பதிலறு வினாக்கள் (Open ended questions ) மூலம் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. இத்துடன், விடியோ மூலமும் மக்களுடைய கருத்துப் பகிர்வுகள் பதிவுசெய்யப்பட்டன. இதற்கென, மக்கள் ஆய்வகத்தின் சிறப்புப் பயிற்சிபெற்ற தரவுச் சேகரிப்பாளர்கள் (Enumerators) பயன்படுத்தப்பட்டனர்.

பங்கேற்றோர்

பின்னணி பேரா. டாக்டர் ச. ராஜநாயகத்தின் நேரடி வழிநடத்துதலில், 2009 ஜனவரி மாதம் இரு கட்டங்களாக (13-18 மற்றும் 25-31) களஆய்வு நடைபெற்றது. தமிழகமெங்கும் மொத்தம் 3100 பேரிடம் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன (தனிப்பட்ட கலந்துரையாடலில் 2000 பேர், விடியோ பதிவில் 1100 பேர்). களஆய்வில் ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்கேற்றனர். இலங்கையோடு தொடர்புடையதாகத் தமிழக மீனவர் பிரச்சனையும் இருப்பதால், மீனவர் பங்கேற்பிற்குக் கள ஆய்வில் சிறப்பிடம் தரப்பட்டது (1150 பேர், 37%). வயது, கல்வி, தொழில், சாதி முதலிய காரணிகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப் படவில்லை.


களநிலவரம்: சில தூக்கலான அம்சங்கள்


கள ஆய்வின்போது ஆய்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்த அம்சங்களில் கீழ்வருவன குறிப்பிடத் தகுந்தவை:

(1) இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச்சை எடுத்தவுடன், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்துத் தரப்பினாpடமும் முதலில் வெளிப்படும் உணர்வு, பயம் கலந்த தயக்கம்.

(2) ஆண்களை விடப் பெண்கள் இலங்கைத் தமிழர் மீது அதிக மனிதநேய அக்கறையை வெளிப்படுத்தினாலும், இந்தப் பிரச்சனை குறித்துப் போதிய விவரம் தெரியவில்லை.

(3) இலங்கையின் பூர்வீகத் தமிழரையும், (ஆங்கிலேயர் காலத்தில் சென்ற) மலையகத் தமிழரையும் குழப்பி, அங்குள்ள எல்லாத் தமிழருமே ‘பிழைக்கச் சென்றவர்கள்” என்ற எண்ணம் கணிசமாகப் பரவியுள்ளது.

(4) நகர மக்களை விட கிராம மக்கள் அதிக அனுதாபத்தோடும் மனந்திறந்தும் பேசுகிறார்கள்.

(5) தமிழகத்தின் உள்பகுதிகளை விட, கடற்கரையோரக் கிராமங்களில் அதிக உணர்ச்சிப்பூர்வமான பகிர்வு நிகழ்ந்துள்ளது.

(6) அரசியல்ரீதியான நிலைப்பாடுகளுக்கு ஏற்பவே ஊடகங்களில் செய்தி வெளிவருவதாகவும், சரியான, முழுமையான தகவல்களைத் தந்து, கருத்தொருமையை உருவாக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருப்பதாகவும் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போர்க்களச் சூழல்

(1) எத்தகைய போர்:

இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது (86.5),

ராஜபக்ஸே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது (10.5),

விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது (2.0)

ஆகிய கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

(2) உணர்வு வெளிப்பாடு:

இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும் போது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக மிகப் பெரும்பாலோர் (85.0) தெரிவித்துள்ளனர்

மத்திய மாநில அரசுகளின் மீது கோபம் - 44.5

ராஜபக்ஸே அரசின் மீது கோபம் - 25.5

பன்னாட்டுச் சமூகங்கள் மீது கோபம் - 12.0

விடுதலைப் புலிகள் மீது -3.0

பிற பதில்கள்:

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது பாரிதாபம் (11.5),

எதுவும் செய்ய முடியாத இயலாமை (2.5)

ஆகியவை.


(3) உடனடித் தீர்வு:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது ஏகோபித்த கருத்தாக முன்வைக்கப்படுகிறது (90.0).

பிற பதில்களில்:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் மற்றும் நிவாரண உதவி - 6.0,

விடுதலைப் புலிகளை முற்றாக ஒடுக்கும் வரை போரைத் தொடர வேண்டும் - 2.0.

(4) நிரந்தரத் தீர்வு:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக முன்வைக்கப் படுபவற்றுள் முக்கியமானவை:

தனி ஈழம் (68.0)

ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பகுதிகளுக்குச் சுயாட்சி (21.0)

தமிழரைப் பௌத்த-சிங்களருக்குச் சமமாக அங்கீகரித்து இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் (4.5).

(5) பேச்சு வார்த்தை யாரோடு?:

இலங்கையில் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்துவதென்றால், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் அமைப்புகளோடும் பேச்சுவாh;த்தை நடத்த வேண்டும் என்ற கருத்து முதலிடம் பெறுகிறது (56.0).

பிற கருத்துக்கள்:

விடுதலைப் புலிகளோடு மட்டும் (27.0),

விடுதலைப் புலிகள் தவிர்த்த பிற அமைப்புகளோடு (12.0).

புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை:

பன்னாட்டு அழுத்தங்கள் மூலம் போரை நிறுத்தச் செய்வது விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று பெரும்பாலோர் (69.0) எதிர்பார்க்கின்றனர்.

போரைத் தீவிரப்படுத்துவது (20.0)

ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைவது (5.0)

ஆகியவை பிற எதிர்பார்ப்புக்கள். (7)

ஊடகச் சுதந்திரம்:

ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படவிடாமல் இலங்கை அரசு தடைசெய்கிறது என்பது, ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோரின் கருத்து (55.5).

போர்ச் சூழலில் எந்த அரசும் தனக்குச் சாதகமாகச் செய்திகளைத் தணிக்கைசெய்தே வெளியிடும் என்பது மற்றொரு முக்கியக் கருத்து (16.0).

தமிழக அரசியல்களச் சூழல் (8)


இதுவரையிலான முயற்சிகளின் தாக்கம்:

இதுவரை தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் ராஜபக்ஸே அரசின் மீது எந்தவிதச் சிறு தாக்கத்தைக்கூட ஏற்படுத்தவில்லை என்பது ஏகோபித்த கருத்தாக (91.5) வெளிப்படுகிறது.

தமிழகத்தில் இத்தகைய முயற்சிகளின் தாக்கத்தைப் பொருத்த அளவில், இலங்கைத் தமிழருக்கு ஆதரவான எழுச்சியை இங்கு உருவாக்கியுள்ளது (43.0)

மத்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப் படுத்தியுள்ளது (32.5),

மாநில அரசின் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது (14.0),

ஒரு சில கட்சிகள் தம்மைத் தமிழினக் காவலராகக் காட்டிக்கொள்ள உதவியுள்ளது (6.5) ஆகியவை பதிவாகியுள்ளன.


(9) தமிழக அரசின் அணுகுமுறை:

தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசாரித்துப் போகிறது (70.5)

ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறது (22.0),

இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் நிஜமாகவே குழப்பத்தில் உள்ளது (4.0) ஆகியவை.

இலங்கைத் தமிழா; பிரச்சனை குறித்த தமிழக அரசின் அணுகுமுறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. (10)

உண்மையான அக்கறையுள்ள கட்சி: இலங்கைத் தமிழா; நலனில் உண்மையான அக்கறை கொண்டுள்ள தமிழகக் கட்சி எதுவுமில்லை, எல்லாமே தேர்தல் அரசியலே செய்கின்றன எனப் பாதிக்கும் மேற்பட்டோர் (52.0) தெரிவித்துள்ளனர்.

அக்கறையுள்ள குறிப்பிட்ட கட்சிகளைப் பொருத்த வரையில்,

தமிழர் தேசிய இயக்கம் -12.0,

மதிமுக - 9.5,

விடுதலைச் சிறுத்தைகள் - 6.5,

இந்திய கம்யுனிஸ்ட் - 5.0,

திமுக - 4.0,

பாமக - 3.5,

காங்கிரஸ் - 2.5,

அதிமுக - 2.0,

தேமுதிக - 1.0,

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் - 1.0.

(11) கட்சிகள் அடுத்துச் செய்யவேண்டியது:

ஒவ்வொரு கட்சியும் தன்னிச்சையாகச் செயல்படாமல், முதல்வா; தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது ஏகோபித்த (86.0) கருத்து

ஒன்றிணைந்து மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் - 65.0,

பன்னாட்டுச் சமூகங்களின் கவனத்தை ஈர்த்து, இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் - 21.0).

அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு இளைஞர்கள் இந்தப் பிரச்சனையைக் கையிலெடுக்க வேண்டும் என்ற கருத்துக்கும் ஓரளவு (12.0) ஆதரவுள்ளது.

(12) திமுக தலைவர் அடுத்துச் செய்யவேண்டியது:

மூத்த தலைவர் என்ற முறையில், திமுக தலைவா; கருணாநிதி, ஆட்சி பற்றிய பயத்தை விடுத்துத் துணிச்சலாகச் செயல்படவேண்டும் என்ற கருத்தைப் பெரும்பாலோர் (71.0)
தெரிவித்துள்ளனர்.

இதுவரை அவர் செய்துவந்துள்ளபடியே தொடர்ந்தால் போதும் என்பது மற்றொரு முக்கியக் கருத்து (25.0).

ஒருவேளை, தமிழர் பிரச்சனையை முன்னிட்டு திமுக ஆட்சியை இழக்க நேரிட்டால், அடுத்து வரும் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகப் பெரும்பாலோர் (58.5) கருதுகின்றனர்

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - 20.0.


(13) போராட்டக் களத்தில் மாணவர்கள்:

இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குப் பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தாலும், வலுவான எதிர்ப்பும் வெளிப்படுகிறது (ஆதரவு - 46.5, எதிர்ப்பு - 32.5).

(14) ஊடகங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சனை:

இலங்கையில் நடந்துவரும் போரைக் குறித்த செய்திகளில், ஒருதலைச் சார்பு இல்லாமல், உண்மையான கள நிலவரத்தைக் கூறும் வெகுஜன ஊடகம் எதுவுமில்லை என்பதே பெரும்பான்மைக் கருத்து (காண்க: அடுத்த பத்தியில் ஊடகவாரியான முடிவுகள்). பெரும்பாலும் அவை இலங்கை அரசு தரும் தணிக்கை செய்யப்பட்ட செய்திகளையே தருகின்றன என்பதே பெரும்பாலானவர்களின் (68.0) கருத்தாக வெளிப்பட்டுள்ளது.

உண்மையான கள நிலவரத்தைக் கூறும் தொலைக்காட்சிகளில்

சன் டி.வி. முதலிடத்திலும் (24.5),

அதற்கு வெகு அருகில் மக்கள் தொலைக்காட்சியும் (23.0),

மூன்றாமிடத்தில் கலைஞா; தொலைக்காட்சியும் (19.5) வருகின்றன (எதுவுமில்லை - 26.0).

நாளிதழ்களைப் பொருத்த வரை,

தினத்தந்தி முதலிடத்திலும் (23.0),

அதற்கடுத்த இடங்களில் தமிழோசை (21.0), தினகரன் (20.5) ஆகியவையும் வருகின்றன (எதுவுமில்லை - 24.5).


வார மற்றும் வாரமிருமுறை இதழ்களில்,

நக்கீரன் (18.5),

குமுதம் (17.0),

ஜூனியர் விகடன் (14.5) ஆகியவை இடம் பெறுகின்றன (எதுவுமில்லை - 22.0).


நடுவண் அரசியல்களச் சூழல்

இதுவரையான செயல்பாடுகள்:

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக நடுவண் அரசு இதுவரை மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்துக் கடுமையான அதிருப்தியே வெளிப்பட்டுள்ளது. இலங்கை அரசு தொடுத்துள்ள போரை ஆதரிப்பதாகவே நடுவண் அரசின் செயல்பாடுகள் உள்ளதாக மிகப் பெரும்பாலோர் (86.0) கருதுகின்றனர்.

தமிழக அரசின் வற்புறுத்தலுக்காகப் பேருக்கு ஏதோ செய்துள்ளது (6.5),

உண்மையான அக்கறையோடு செயல்பட்டுள்ளது (2.5) ஆகியவை பிற கருத்துக்கள்.

(16) உடனடியாகச் செய்யவேண்டியது:

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியதாகக் கூறப்பட்டுள்ளவற்றில், போர்த் தளவாடங்கள் மற்றும் பயிற்சி வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் (49.0),

போரை நிறுத்த உறுதியான குறுக்கீடு செய்ய வேண்டும் (37.0) ஆகியவை அழுத்தமாகப் பதிவாகியுள்ளன. பிற கருத்துக்கள்: போர்ச்சூழலில் சிக்கியுள்ள அப்பாவி மக்களுக்கு அவசர உதவி (8.0), இலங்கை அரசுக்கு மேலும் போர்த் தளவாட உதவி (2.0), இது இன்னொரு நாட்டின் உள்விவகாரம் என்பதால் அதில் தலையிடாமல் இருப்பது (2.0).

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்

இலங்கைத் தமிழர் பிரச்சனை முக்கிய விஷயமாக இடம்பெறுமா என்பதைப் பொருத்த வரையில் ஏகோபித்த கருத்தாக எதுவும் வெளிப்படவில்லை. எனினும், தமிழகத்தில் நிச்சயம் இந்தப் பிரச்சனை முதலிடம் வகிக்கும் (30.0),

தேர்தல் விஷயமாக இடம்பெறலாம் என்றாலும், உள்நாட்டுப் பிரச்சனைகளே (அடிப்படைத் தேவைகள், விலைவாசி, தீவிரவாதம், மதவாதம் ஆகியவை) அதிக முக்கியத்துவம் பெறும் (30.0) ஆகியவை வலுவாக வெளிப்படுகின்றன.

பணம், சாதி, கூட்டணி முதலியவற்றின் அடிப்படையிலேயே தோ;தல்கள் அமைந்துள்ளதால் இது தேர்தல் பிரச்சனையாக வாய்ப்பில்லை (18.0),

இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது, தேர்தலின் போது நிலவும் சூழலைப் பொருத்து இதன் முக்கியத்துவம் அமையும் (12.0),

எல்லாக் கட்சிகளுமே இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதால் தேர்தல் பிரச்சனையாக வாய்ப்பில்லை (5.0) ஆகியவை பிற கருத்துக்கள்.


(19) எப்படி வெளிப்படும்?:

தமிழகத்தைப் பொருத்த வரை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இடம்பெறும் பட்சத்தில், அதனுடைய வெளிப்பாடு, ஆளும் கட்சிகளுக்கு எதிர்ப்பாக இருக்கும் (68.0),

தமிழின உணர்வை மையப்படுத்திய புதிய கூட்டணியாக இருக்கும் (11.0),

தேர்தல் புறக்கணிப்பாக இருக்கும் (8.0). 5


(20) பாதிப்பு யாருக்கு?:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாமல் நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரும் பட்சத்தில், தமிழகத்தைப் பொருத்த வரை காங்கிரஸூக்கு மிகப் பெரும் பாதிப்பு இருக்கும் என்பது கீழ்வரும் பதில்களை ஒப்புநோக்கும்போது புலப்படுகிறது.

காங்கிரஸூக்குப் பாதிப்பு - 39.0,

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள எல்லாக் கட்சிகளுக்கும் - 24.5,

மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு - 21.0,

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முழுமனதுடன் ஈடுபடாத கட்சிகளுக்கு - 6.5,

எல்லாக் கட்சிகளுக்கும் - 2.5,

யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது - 2.0.



மீனவர் வாழ்க்கைச் சூழல்

மீனவர் பிரச்சனைக்கு மூல காரணம்:

கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது - 46.0,

இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் போர் - 27.0,

இந்தியக் கடல் எல்லைக்குள் போதிய மீன்வளம் இல்லாதது - 18.0,

இயல்பாகவே சிங்களருக்குத் தமிழர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி - 4.5.

(22) மீனவர் பிரச்சனைக்கு நிலையான தீர்வு:

கச்சத்தீவை மீட்பது - 47.0,

லங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் - 30.0,

இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அந்த அரசுடன் நீண்டநாள் ஒப்பந்தம் செய்வது - 14.0,

மீனவர்கள் மாற்றுத் தொழிலைக் கற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்வது - 7.5.


************************************************************************************************

பேரா. டாக்டர் ச. ராஜநாயகம் & குழுவினா
மக்கள் ஆய்வகம்
06.02.2009
சென்னை 600 034


*************************************************************************************************

குறிப்புகள்:

(01) மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பயன்படுத்தியுள்ள எண்கள் அனைத்தும் சதவீதத்தைக் குறிக்கின்றன.

(02) பெரும்பாலான கேள்விகளுக்கு மக்களின் முக்கியமான கருத்துக்கள் மட்டுமே இந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருப்பதால், சதவீதத்தின் கூட்டுத்தொகை 100-ஆக இருக்காது.

(03) ‘மீனவர் வாழ்க்கைச் சூழல்” என்ற தலைப்பின் கீழுள்ள முடிவுகளில், மீனவர் கிராமங்களில் பங்கேற்ற மக்களின் கருத்துக்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

05 February 2009

வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம்..

கடந்த வாரம் சகோதரர் முத்துக்குமரன் அவர்கள் சிங்கள இன வெறி அரசின் தமிழின மக்களுக்கு எதிரான அடக்குமுறை கண்டும் , அதை தடுத்து நிறுத்த வக்கில்லா மலம்தின்னி மத்திய மாநில அரசுகளை கண்டும் மனம் வெதும்பி , தனது உள்ளக்குமுறலையும் அதற்கான தீர்வையும் எழுதிவைத்துவிட்டு சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து மாண்டு போனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது அறிக்கையையும் அது செய்த புரட்சியையும் , அம்மரணத்தை மறந்த அல்லது மறைத்த மீடியாக்களின் பலவீனமான முதுகெலும்பு குறித்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

முத்துக்குமாரின் மரணம் குறித்து பலருக்கும் பல பார்வைகள் , சிலர் இம்மரணத்தை வீரமரணமாக ஏற்றுக்கொண்டு வீரவணக்கம் செய்வதையும் , சிலர் இதை கோழைத்தனம் என்றும் கோமாளித்தனம் என்றும் விமர்சிப்பதையும் வலையுலகிலும் , டுவிட்டர் , ஆர்குட் உள்ளிட்ட பிற தளங்களிலும் காண நேர்ந்தது. இன்னும் சிலர் இம்மரணத்தால் எந்த பிரயோசனமும் இல்லை , இது காலத்தால் மறக்கப்படும் பல்லாயிரம் மரணங்களில் ஒன்று , அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுதான் போராட வேண்டியதில்லை , அறவழியில் போராடி வென்றிருக்கலாம் என்றெல்லாம் பலரும் பல கருத்துக்களை கூறி வந்துள்ளனர். இன்னும் சிலர் அம்மரணத்தை வைத்துக்கொண்டு அதன் பிண்ணனிக்காக புனைவுகள் கூட இயற்ற துவங்கியிருந்தனர். இம்மரணத்தால் முத்துக்குமாருக்கு கிடைக்கும் பாராட்டு அல்லது அம்மரணம் இன்னும் பல இது போன்ற இளைஞர்களின் மரணத்திற்கு வழிவகுத்துவிடுமோ என்கிற அச்சத்தையும் சிலருக்கு தோற்றுவித்திருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் பலருக்கும் சுவாரஸ்யமில்லாத ஈழப்பிரச்சனையை அனைவரிடத்திலும் புழங்க விட்ட மரணமாய் இது இருந்திருக்கிறது. மாணவர்களிடையே ஒரு புது எழுச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. மாநில அரசே மாணக்கர்களின் புது எழுச்சி கண்டு அஞ்சி நடுங்கி கல்லூரிகளை காலவரையின்றி மூடிவிட உத்தரவிட்டிருக்கிறது. கலைஞர் மீது வெறுப்பை உமிழச்செய்திருக்கிறது. ஜெவிற்கும் சில ஆதரவு அலைகள் பெறுக வாய்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. பிரபாகரன் குறித்தும் ஈழத்தமிழரின் வாழ்வுரிமை குறித்தும் மக்கள்(இன்றைய இளம் தலைமுறை) அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் பலருக்கும் மிகத்தேவையான இன்ஸ்டன்ட் ஈழத்தமிழர் ஆதரவை பெருக்கியிருக்கிறது. வைகோ,திருமா போன்ற அரசியல் அப்பரசண்டிகளும் மரணத்தை வைத்து ஆதரவு பெற முயற்ச்சிப்பது எப்படி என கற்றுக்கொடுத்திருக்கிறது. ஈழ ஆதரவென்பது கலைஞர் எதிர்ப்பாய் ஆன ஒரு சிக்கலான பிரச்சனையை திராவிட எதிர்ப்பாய் மாற்ற ஒரு குடுமிவைத்த கும்பல் முயற்சிக்கிறது. அடேங்கப்பா ஒரு சாதாரண DTP ஆபரேட்டரின் மரணம் எப்படி இத்தனை பிரச்சனைகளுக்கு விதையானது. அவனது இறுதி அஞ்சலியில் கடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளமும் அங்கே ஒலித்த முத்துகுமாருக்கு வீரவணக்கம் என்னும் பேரொலியும் மக்களின் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் அத்தனை எளிதில் அடங்கிவிடுமா என்ன?

இதை கோழைத்தனம் என்றும் இம்மரணம் மறக்கப்பட்டுவிடும் என்றும் மார்த்தட்டியவர் முகத்தில் கரிபூசச்செய்த நிகழ்வுகள் அல்லவா மேல் சொன்ன சில உதாரணங்கள்.

அவனது மரணம் ஈழத்தமிழருக்கான புதியதொரு விடியலாய் அமைந்தால் மிக்க மகிழ்ச்சியே. இருப்பினும் வலைப்பதிவர்களாகிய நாம் அதற்கு என்ன செய்து விட முடியும். அந்த இளைஞனின் மரணத்தில் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். இன்றைய நம் இளைஞர்களில் பெரும்பாலோர் தற்கொலை செய்துகொள்வதே ஏதோ காதல் தோல்விக்குத்தான் என்று எண்ணி வரும் நிலையில் , ஒரு இனத்தின் அழிவினைக் கண்டு அதற்காக தன்னுயிரையும் தர தயாரான ஒருவன் நம்மிடையே இருக்கிறான் என்பதே நமக்கு பெருமைதானே. பத்திரிக்கையில் பணியாற்றினாலும் அவன் ஒரு வலைப்பதிவராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவராலும் கவனிக்கப்பட்டிருப்பான். சரி ஒரு பதிவராக அவனுக்கு என்னதான் செய்வது. ஒன்றுமில்லை. அவனுக்காக ஒரு அஞ்சலி கூட்டம் இவ்வாரம் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துங்கள் . அதோடு நிற்காமல் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு அவனது இறுதி அறிக்கையின் நகலை கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள்.(உடன்பாடிருந்தால்!) .

இவ்வாரம் அதையொட்டி சென்னையில் சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்காக ஒரு அஞ்சலிக்கூட்டம் அல்லது வீரவணக்கக்கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் ஒன்று கூடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இடம் - நடேசன் பார்க் , திநகர் சென்னை.

நாள் - 08-02-2009

நேரம் - மாலை 4 மணி முதல் கூட்டம் முடியும் வரை ( தோராய.. 6மணி)

இந்த இரங்கல்க்கூட்டத்தில் அனைத்து பதிவுலக நண்பர்களும் கலந்துகொள்ளுமாரு அழைக்கிறோம்.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் தொடர்புக்கு...

அதிஷா - 9884881824

ஆழியூரான் - 9840903590

சுகுணாதிவாகர் - 9790948623

லக்கிலுக் - 9841354308

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

********************************

03 February 2009

ஆர்வக்குறுகுறுப்பின் வெற்றி... - THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON


CURIOSITY

Main Entry : cu·ri·os·i·ty

Pronunciation : \ˌkyu̇r-ē-ˈä-s(ə-)tē\

plural - cu·ri·os·i·ties

Date: 14th century

1: desire to know: a: inquisitive interest in others' concerns : nosiness b: interest leading to inquiry

2.archaic : undue nicety or fastidiousness

3 .a: one that arouses interest especially for uncommon or exotic characteristics b: an unusual knickknack : curio c: a curious trait or aspect

தமிழில் - ஆர்வக்குறுகுறுப்பு..

நன்றி - ஆங்கிலம் -வெப்ஸ்டர்ஸ் ஆன்லைன் டிக்சனரி

தமிழ் - ஒரு பிரபல தமிழ்எழுத்தாளர்

************************************************************************************
ஒரு காதலன் முதுமையில் தன் கைகூடாத காதலியை சந்திக்க வாய்ப்பை பெறுகிறான் . அவளைக்காணச் செல்லும்முன் தனது உடலையும் முகத்தையும் கண்ணாடியில் பார்க்கிறான். உடலெங்கும் சுறுக்கம் தலையெல்லாம் நரைத்து முதுகு வளைந்து , அவனே அவனை அன்றுதான் கவனிக்கிறான். காதலிக்கும் போது அவன் இருந்தது போல் இல்லாமல் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தது அவன் உடலும் முகமும். அவளை சந்திக்க மனது தயங்குகிறது. அவளுக்கு தன்னை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என தயங்குகிறான்.தலைக்கு மை பூசுகிறான், முகத்துக்கு பவுடர் பூதுகிறான் , நவநாகரீகமாய் உடை அணிகிறான் , கண்ணாடி அணிந்து கொள்கிறான் , முடிந்த வரை இளமையாய் தோன்ற எல்லாமே செய்கிறான்.அவளை காண ஒரு பூங்காவில் காத்திருக்கிறான். அவளும் வருகிறாள். அவளுக்கும் உடலில் சுறுக்கம் தலையில் நரை.

நாம் ஒவ்வொரு நாளும் இளமையாய் உணரவேண்டும் என பெரியோர் சொல்வதுண்டு. அது மனதளவில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால் உடலளவில் ஒவ்வொரு நாளும் முதுமையை நோக்கிய நம் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவருட பிறந்தநாளும் நமக்கு விட்டுச்செல்லும் செய்தி அதுதானோ.


அனைவருக்குமே இளமையும் குழந்தைப்பருவமும் கடந்தபின் அது மீண்டும் கிடைக்காதா என்கிற ஏக்கம் இருப்பது பொதுவான ஒன்று. ஒரு வேளை உங்கள் வாழ்க்கை அப்படியே ரிவர்ஸ் கியரில் முதுமையிலிருந்து இளமைக்கு திரும்பினால் , நினைத்துப்பார்க்கவே இனிமையாய் இருக்கிறதே! மீண்டும் பள்ளிக்கு சென்றால்! மீண்டும் கல்லூரிக்கு சென்றால்! மீண்டும் பட்டமும் பம்பரமும் விட்டால்!


பிறக்கும்போது முதியவனாய் பிறந்து இறக்கையில் குழந்தையாய் இறந்துபோனால் ? அப்படிப்பட்ட ஒருவனது வாழ்க்கையில் பயணிக்கிறது, THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON திரைப்படம். 1921ல் SCOTT.F.FITZERALD என்பவரால் எழுதப்பட்ட சிறுகதையினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.(சிறுகதை இங்கே இலவசமாக )


ஒரு சிறுகதையை எடுத்துக்கொண்டு அதற்கு இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஒரு படத்திற்கான திரைக்கதை அமைப்பது மிக கடினாமன ஒன்று. நாவலாக இருக்கும் பட்சத்தில் அதை சுருக்குவது எவ்வளவு கடினமோ அது போல சிறுகதையை விரித்து திரைக்கதை ஆக்குவது மிகமிக கடினம். அதை சாத்தியமாக்கியிருக்கிறார் திரைக்கதை அமைப்பாளர்கள் ( எரிக் ரோத் மற்றும் ராபின் ஸ்வார்டு ). அதுவும் இப்படம் சார்ந்த சிறுகதை 1921ல் எழுதப்பட்டது அதை தற்கால சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்தமை அருமை.
படம் பல காலங்களிலும் பயணிக்கிறது. முதலாம் உலகப்போர் காலத்தில் துவங்கும் படம் தற்கால கேத்ரீனா காலத்தில் முடிவடைகிறது. படம் நெடுக அப்புயலையும் ஒரு பாத்திரமாக்கி கதை சொல்லும் அல்லது படிக்கும் தன் அந்திமகாலத்தில் உயிருக்கு போராடும் நாயகியினுடன் பேசவிட்டிருப்பது அபாரம். அதிலும் கிளைமாக்ஸில் புயல் முற்றி கரையைகடக்கும் போது படம் முடிவதும் அவள் அவன் நினைவில் சாவின் முகப்பில் கிடப்பதும் கவிதை.


படம் நெடுக நம்மை அழைத்துச்சென்று பெஞ்சமின் பட்டன் அறிமுகப்படுத்தும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குணாதிசயம். அடாவடியான அன்பின் வளர்ப்புத்தாய் . தள்ளி நின்று அவன் வளர்ச்சியை ரசிக்கும் தந்தை. பியானோ கற்றுத்தரும் முதியோர் இல்லக்கிழவி. தன் உடலை ரசிக்கும் கப்பல் மாலுமி , இனிமேல் வராதே என்னும் விபச்சாரி என பலபல பாத்திரங்கள் அனைவரும் படம் முடிந்தும் விலகாது நம் மனதை சுற்றி சுற்றி வருவது அழகு.


படத்தின் முன்பாதியில் சிறுமியாய் நாயகி சிறுவயதுகிழவனான(!) நாயகனை காதலிப்பதும் , அவள் வளர்ந்து கிழவியாகியிருக்கையில் தன்னை இக்கோலத்தில் அவன் ஏற்றுக்கொள்வானோ என தயங்குகிறாள். இவனோ இளமைத்துள்ளலோடு இளைஞனாய் அப்போதும் தீராத காதலோடு அவளை அணைத்து முத்தமிடுவது கவிதை. மிக சிறந்த முத்தக்காட்சி அது. அவன் தன் கடைசிகாலத்தில் ஒரு குழந்தையாய் மாறிவிட அவனை மடியில் போட்டுக்கொண்டு அவள் அழுவதும் , தன்னிலை மறந்த குழந்தையாய் நாயகன் அவள் முகத்தையே பார்ப்பதும் மிகச்சிறந்த காட்சியமைப்பின் உதாரணங்கள்.


படத்தில் அதிக கவனத்திற்குள்ளானது , நிறம். ஒவ்வொரு காட்சியிலும் காலத்திற்கேற்ற நிறமாறுதலும் , ஒரு காட்சியின் காலத்தை அகாட்சியில் வெளிப்படும் நிறமே நமக்கு உணர்த்துகிறது. இப்படத்தின் சினிமாட்டோகிராபி கிளாடியா மிராண்டோ . இவர் டேவிட் பிளின்ச்சரின் முந்தைய படங்களான செவன் மற்றும் ஜோடியாக்கில் பணியாற்றியவர். இத்திரைப்படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் இது போல முழுக்க முழுக்க பிலிம் இல்லாமல் டிஜிட்டலில் படமாக்கப்படும் முதல் படம் நான்கடவுள் என்பது கூடுதல் தகவல்.( இந்தியாவிலேயே முதல் படமாகவும் அது இருக்கலாம்.. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் இங்கே அப்டேட் செய்கிறேன்)


இப்படத்தின் இயக்குனர் டேவிட் பிளின்ச்சர். அவரது முந்தைய படங்களான தி பைட் கிளப் , ஜோடியாக் , செவன் , பேனிக் ரூம் போன்ற படங்களில் இருந்து முற்றிலும் விலகி , பிராட் பிட் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் துளியும் சம்பந்தமேயில்லாத ஒரு கதையை மிக அழகாய் கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆமை வேகத்தில் நகரக்கூடிய ஒரு கதையை CURIOSITY என்கிற ஒற்றை வார்த்தையில் படுவேகமாய் நகர்த்துகிறார் இயக்குனர். டேவிட் பிளின்ச்சர் அசத்தல் பிளின்ச்சர்.




பிராட்பிட் , டிராயில் பார்த்த அக்காலப் போர்ப்படை வீரனா இவன் , ஓசியன்ஸ் லெவனில் பார்த்த அறிவுஜீவி திருடனா , செவனில் பார்த்த முன்கோப போலீஸ்காரனா இவன் என அதிசயிக்க வைக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது தெரியும் பிராட்பிட் படம் முடிகையில் பெஞ்சமின் பட்டனாய் தெரிகிறார். உடலை வறுத்தி இளைஞர், மத்யவயதினன்,கிழவன் என்று பல படிகளிலும் பலவேறு உடலசைவு மொழிகளை காட்டும் அற்புத நடிகன் ( நம்மூர் சூர்யா ஏனோ மனதிற்குள் வந்து தொலைக்கிறார்.. சூர்யா நீ இங்கே இருக்க வேண்டியவன அல்ல என கத்திவிட தோன்றுகிறது ) . பிராட்பிட்டின் நடிப்பு படத்தின் வேகத்தை கூட்டுகிறது. இங்கேயும் ஆர்வக்குறுகுறுப்பு.


ஆஸ்கருக்கு 13 வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் , இந்தியாவில் மேல்தட்டுமக்களுக்கான திரையரங்குகளில் வெளியாகலாம். பொதுவாகவே பேன்டஸி படங்களாகட்டும் நம் கற்பனைகளாகட்டும் அவை இன்பமயமாகவும் மகிழ்ச்சியின் கடலாவுமே இருக்கும் என்றே நினைத்திருந்தேன் . ஆனால் இப்படம் அதை உடைத்து பேன்டஸியிலும் உண்மையை கூறவிளைகிறது.

THE CURIOUS CASE OF BENJAMIN BUTTON - குயூரியாஸிட்டியின் வெற்றி அல்லது ஆர்வகுறுகுறுப்பின் வெற்றி....

02 February 2009

இரண்டு கோப்பை ஜென்கதை - கொறிக்க ஒரு கவிதை


ஒரு கை ஓசை -




வெகுதொலைவில் இருந்து வந்த ஐந்து மாணவர்கள் , அந்த குருகுலத்திற்கு ஞானம் பெற வந்திருந்தனர். குருவை சந்தித்து தங்களது வரவையும் காரணத்தையும் கூறினர். குரு அவர்களை வரவேற்று ஞானம் பெறுவதற்கு முன் ஒரு சிறிய தேர்வுண்டு அதில் தேர்ந்தால் தான் கற்றுத்தருவதாய் கூறினார்.


அடுத்த நாள் குரு , மாணவர்களை அழைத்தார்.


''ஒரு கை ஓசை கேட்கும் வரை தியானியுங்கள்'' என்று கூறிவிட்டு சென்று விட்டார்.


மாணவர்கள் விடா முயற்சியோடு தியானமிருந்தனர். நாட்கள் கடந்தன. ஒரு கை ஓசை கேட்கவேயில்லை. பல மாதங்கள் கடந்தன . அந்த ஓசை கேட்கவேயில்லை. 3 வருடங்கள் கடந்தது. மாணவர்களால் அந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு மேலும் ஞானம் பெற இயலும் என்கிற நம்பிக்கையை இழந்து குருவிடம் சென்றனர்.


''குருவே எங்களுக்கு நம்பிக்கை இல்லை இந்த தேர்வில் வெற்றி பெற முடியுமென்று அதனால் நாங்கள் எங்கள் ஆசிரமத்திற்கே போகிறோம் ''


''இன்னும் ஒரு மாதம் முயலுங்கள் முடியாவிட்டால் போகலாம்'' புன்னகைத்தபடியே கூறினார் குரு.


ஒரு மாதம் கடந்தது... மீண்டும் தோல்வி.. குரு இந்த முறை ஒரு வாரம் முயற்சி செய்ய சொன்னார்..


மீண்டும் தோல்வி.. குரு அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு கிணற்றிற்கு சென்று..


இன்னும் மூன்று நாட்கள் தருகிறேன் அதற்குள் இத்தேர்வில் வெற்றி பெறாவிட்டால் நீங்கள் வாழ்வதே கேவலம்.. இந்த கிணற்றில் விழுந்து செத்துவிடுங்கள் என்றார்.


அவர்கள் இரண்டு நாட்களிலேயே ஒரு கை ஓசையை கேட்டனர்.


***************************


இச்சைகள் ஆயிரம் :


அந்த மாணவன் தனது குருவிடம் கூறினான் , '' குருவே எனக்கு அடிக்கடி கட்டுபடுத்த முடியாத அளவுக்கு இச்சைகளும் கோபமும் எழுகிறது.. அதை எப்படி சரி செய்வது ''


''உனக்கு மிக வித்யாசமான பிரச்சனை இருக்கிறது , எங்கே காட்டு உனது பிரச்சனையை ''


''அது எப்படி இப்போதே காட்ட இயலும்.. ''


''பின் எப்போது காட்டுவாய்''


''அது வரும் போது காட்டுகிறேன் ''


''அப்படினா அது உன்னோடே பிறந்ததில்லை , உன் பெற்றோரும் தந்ததில்லை. யோச்சித்துப்பார் '' என்றபடி தியானத்தில் மூழ்கினார்.


********************


தனிமையின் இரவு

நள்ளிரவில் தாகம்

நகங்களில் குளுமை

உதட்டில் வெடிப்பு

உயிர்ப்பில் காமம்

இளஞ்சிவப்பு சூரியன்

புதிதாய் யவனம்

மனதில் தீ நீ

இட்ட முத்தங்களின் சுவடு

பின்னிரவு இருள்

வெட்கை பின் வேட்கை

இளமை கலைந்து

பின் கலைத்து

பிணமாய் நான்

அருகில் நீ


***********************