Pages

31 March 2009

இரண்டு வார்த்தை கதைகள் பத்து!




தலைப்பு - 1.முதலிரவு உறவின் மிகச்சிலவிநாடி உச்சத்தில் கணவன்


கதை - வயகரா வாங்கிருக்கலாமோ?


**********************************************************************


2.கள்ளிப்பால் குடிக்கும் குட்டிப்பாப்பாவின் கடைசி நினைவுகள்


கசக்குதே ஏன்?


***********************************************************************


3.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன்


அங்கே கடிக்காதே!


***********************************************************************


4.காலயந்திரத்தில் பின்னோக்கிச் டைனோசர் காலத்திற்கு சென்றவன் துரத்திவரும் டைனோசரிடம் மாட்டிக்கொள்ளும் முன்


பெட்ரோல் கொண்டுவரலையே!


*************************************************************************


5.சத்யவானை வேண்டிநிற்கும் நவீன சாவித்திரியிடம் எமன்


நோப்ராப்ளம் காப்பி-பேஸ்ட் ( நாலுவார்த்தை வந்துருச்சோ ஒன்னு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணி இதையும் வச்சுக்கோங்க)


***************************************************************************


6.அவளை ரசிக்கும் கணவனைக்கண்டு மனம்வெதும்பி அவனை ரசித்தாள் மனைவி


மானாட மயிலாட


****************************************************************************


7.அரைமணிநேரமாய் தேடித்தேடி கண்ட இடமெல்லாம் வெட்டு வெட்டென வெட்டினான்


நரை முடி


*****************************************************************************


8.காதலன் காதலி அரைமணிநேர நெருக்கமான டெலிபோன் பேச்சில் இறுதியாய் முடிவானது


புருஷன கொன்னுடலாம்


*******************************************************************************


9.லட்சரூபாய் சம்பாதிப்பவனுக்கு பெண்தர மறுத்த குடும்பத்தினர்


பையன் ஐ.டியாம்


*********************************************************************************


10.ஆயுள் தண்டனை முடிந்து நாளை விடுதலை-இன்று


மாரடைப்பில் மரணம்


**********************************************************************************

30 March 2009

இன்கமிங் ஃப்ரீ - அவுட்கோயிங் நீ !







சராசரி சாவு வீடுதான் அது. அனைவரும் அழுது கத்தி புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இறந்தவர் தவிர அனைவரும் அழுகின்றனர். இறந்தவருக்கு மிகக்குறைந்த வயதாம். அழுவதில் கூட நம்மவர்கள் அளவுகோல் வைத்திருக்கின்றனர். அதிக வயதானவர்கள் இறந்துபோனால் அழுகை மிகக்குறைவு. மிகக்குறைந்த வயதில் இறந்துபோனால் மிக அதிக அழுகை. அங்கே மிதமான அழுகைதான். இறந்தவருக்கு வயது 55.



எங்கிருந்தோ ஒரு பாடல் கேட்கிறது.''உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே''. ஆமாடா சொல்லுடா என்று அழுது கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி செல்போனை காதில் வைத்துக்கொண்டு கூட்டத்திலிருந்து விலகுகிறாள். அரை மணி நேரமாய் '' காதோடுதான் நான் பேசுவேன் '' என்பதாய் பேசிக்கொண்டே இருக்கிறாள். பின் மீண்டும் கூட்டத்தோடு குழுமி அழுகை ஓவெனும் அழுகை தொடர்கிறது.



இன்று சாவு வீடென இல்லை கோவில் முதல் கோட்டை வரை எங்கும் நிறைந்திருக்கிறது இந்த பாழாய்ப்போன செல்போன்கள்.நகரத்து சாலைகளில் மாதம் தோறும் செல்போனில் பேசிக்கொண்டே சென்று இறந்து போவோரின் எண்ணிக்கை விலைவாசியைப்போல ஏறிக்கொண்டேதான் செல்கிறது. பெரும்பாலும் இது போல அதிகம் ரோட்டில் நடந்துகொண்டே போனில் பேசுவோர்களில் அதிகமானோர் இளம் பெண்களே. யாரிடம் இவர்கள் பேசுகிறார்கள் எதற்கு பேசுகிறார்கள்.. என்ன பேசுகிறார்கள்.. ஏன் இந்த கொலைவெறி.. அல்லாவுக்குத்தான் தெரியும். ஆனால் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.



ஒரு நண்பர் உடல்மொழி அசைவுகள்(BODY LANGUAGE) குறித்து அதிகம் தெரிந்தவர் . அவரிடம் பேசும்போது '' சார் போன்ல பேசுறவங்க எதிர்பக்கம் யார்கிட்ட பேசுறாங்கன்றத அவங்க முக பாவத்தை வச்சே கண்டு புடிச்சிரலாம் சார்'' , ''அது எப்படி ? '' ஆச்சர்யமாய் கேட்டேன்.



''ஒரு உதாரணம் சொல்றேன் நீங்க உங்க புதிய(!) மனைவி , காதலி , அல்லது கள்ளக்காதலி கிட்ட பேசும் போது உங்களையும் அறியாம உங்களுடைய கன்னங்களை உங்க கண்ணை நோக்கி நகர்த்துவீங்கன்னாரு.. சிரிக்கும் போது ஆகுமே அது மாதிரி , கண்ணுக்கு கீழே உப்பலா? , அதுவே உங்க முதலாளி அல்லது மேனஜரா இருந்தா , அப்படி ஆகாது, கண் சிமிட்டல் குறைவா இருக்கும்''



அட இது புதிய விசயாமாக இருக்கிறதே என சில நாட்கள் எங்கள் அலுவலகத்தில் இருக்கும் சிலர் போனில் கதைக்கையில் உற்று நோக்கினேன், பெரும்பாலும் அது சரியாகவே இருந்தது. அலுவலகத்தில் முக்கால்வாசிபேர் காதலியோடோ அல்லது க.காதலியோடுதான் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அலுவலகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் அப்படி பேசுவதில்லை. ( என் அலுவலகத்தில் எந்த பெண்ணுக்குமே இன்னும் திருமணம் ஆகவில்லை , அது வேறு கதை). திருமணமான ஆண்களோ தனது மனைவியுடன் பேசும் போதும் மேனஜரிடம் பேசுகிற அதே முகபாவனை.



சாலைகளில் நடந்து கொண்டே பேசுகிற பெரும்பாலான பெண்களுக்கு இந்த டெக்னிக் சரியாக கில்லி மாதிரி வேலை செய்கிறது. 75% பெண்கள் (இளம்) காதலனோ அல்லது யாரோ ஒரு மிக நெருங்கிய நண்பரிடம்தான் ( பாலியல் முதல் பலதும் பகிர்ந்து கொள்ளும் நண்பர் குழாம்) பேசுகிறார்கள்.



பல பெண்களிடமும் இது குறித்து பேசும் போது அலுவலகம் மற்றும் வீட்டில் சில விசயங்களை ஆண்களிடம் கேட்கவோ அல்லது பேசவோ இயலாது , குறிப்பாக பாலியல் தொடர்பான விசயங்களாகட்டும் , பொதுவெளியில் பேசத்தயங்கும் விடயங்களாகட்டும் அது குறித்துப் பேச சாலையே சிறந்தது என்றும் , சாலைகளில் நடந்து கொண்டே குசுகுசுவென பேசினால் என்ன வேண்டுமானாலும் பேச இயலும் என்கிற சுதந்திரம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.



சாலைகளில் இது போல பேசுவதால் விபத்துக்கள் நேருமே , வீட்டில் தனியாக பேசலாமே என்று கூறினேன். அதற்கு பெரும்பாலானோர் கூறும் பதில் வீட்டில் பேச எஸ்எம்எஸ் பரிமாற்றமே சிறந்தது , பெற்றோருக்கு சந்தேகத்தை எழுப்பாது என்றும் , தனியறையிலோ மொட்டைமாடியிலோ பேசினால் பெற்றோர் சந்தேகப்பட வாய்ப்புண்டு எனவும் தெரிவித்தனர். பெற்றோர்கள் கவனிக்க.



இது குறித்து இன்னும் ஆழமாய் ஆராய்ச்சி செய்ததில் இது போன்ற பெண்கள் பெரும்பாலும் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்பவர்கள் , அதிலும் தோழிகள் இன்றி தனியாக அதிக தூரம் நடந்து செல்கையில் பேச்சுத்துணைக்கு ஒரு ஆள் இருந்தால் பயணக்களைப்பு தெரியாதே , அதிலும் சுவாரஸ்யமான விசயங்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம் , பெண்களுக்கு ஆண்களின் உலகம் எப்போதுமே சுவாரஸ்யம்தானே,அதுவும் ஒரு காரணம். மிக முக்கியமானதும் கூட.



தோழர் ஒருவர் இது குறித்து பேசும் போது மிகவும் வேதனையோடு ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார். பத்து வருடங்களுக்கு முன்னாலெல்லாம் சாலைகளில் செல்லும் இளம்பெண்களில் பத்தில் மூன்று பேராவது சைட் அடிக்கும் ஆண்களை திரும்பி பார்ப்பார்கள். இப்போதோ நிலைமை பத்தில் ஒருவர் கூட ஆண்களை சட்டை செய்வதில்லை என்றார். யோ உனக்கு பத்து வயசு கூடிருச்சுய்யா அதனாலதான் என்றேன் முறைத்தபடி நகர்ந்தார். ஆனால் அவர் கூறியதிலும் உண்மை இருப்பதாகவே உணர்கிறேன். சைட் அடிக்கும் ஆண்களை ஓரக்கண்ணால் அளந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூட குறைந்து விட்டதாகவே தெரிகிறது.



ஆண்களில் அதிகமானோர் சாலைகளில் நடந்தபடி பேசுவதில்லை. கவனித்திருக்கிறீர்களா? . அதற்கான காரணம் தெரியவில்லை.



பெரும்பாலும் இப்பெண்கள் யாருக்கும் போனில் அழைத்து பேசுவதில்லை. வெறும் மிஸ்டு கால் மட்டுமே , ஆண்களே போனில் அழைத்துப்பேசுகின்றனர் என்றார் நண்பர் ஒருவர். இது போன்ற பெண்கள் அதிகமாக பயன்படுத்துவது LIFETIME VALIDITY சிம்கார்டுகள். வாழ்நாள் முழுக்க இன்கமிங் இலவசம்.



ஆண்களும் ஏமாந்தவர்கள் அல்ல. இப்படி ஆண்களுக்கு டேக்கா குடுக்கும் பேசிமயக்கும் பேச்சு சுந்தரிகளின் பேச்சை நாசூக்காய் ரெக்கார்ட் செய்து புழக்கத்தில் விட்டு விடுகின்றனர். அது இணையகாலத்தில் மிக விரைவில் புளுடூத்தில் பரவலாகி விடுகிறது. அதனால் பெண்களும் இந்த விசயத்தில் கொஞ்சம் ஆபத்தை உணர்ந்து யாரிடம் வேண்டுமானாலும் பேசுவதை தவிர்த்து , ஆழம் பார்த்து கால் விடுவது நல்லது. இல்லாவிட்டால் இது போன்ற பேச்சுக்கள் கூட உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் எமனாகலாம்.



அண்மைக்காலங்களில் திருமணமான பெண்களும் இது போன்ற செல்போன் உறவுகளில் ஈடுபடுவது கணிசமாக அதிகரித்து ஏனோ வயிற்றில் புளியை கரைக்கிறது.



இது போன்ற உறவுகள் பலதும் பல நாள் நீடிப்பதாய் தெரியவில்லை. எப்போதாவது அரிதாய் ஒரு சில உறவுகள் திருமணம் வரை நீடிக்கும் வாய்ப்பிருக்கிறது. திருமணமானவர்கள் இடையேயான உறவுகள் கொலை வரை நீடிக்கும் வாய்ப்பிருக்கிறது.



அந்த உறவுகள் குறித்தும் அதனூடே கிழிந்து தொங்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்தும் இன்னொரு சமயம் இதே தலைப்பில் எழுத முயல்கிறேன்.



சமீபத்தில் சகஜமாய் புழங்கும் இது போன்ற காதல்,க.காதல் உரையாடல் ரெக்கார்டிங்குகளை இங்கே இணைக்கலாம். ஆனால் ஏனோ மனசாட்சி உறுத்தி தொலைக்கிறது. இணையத்தில் தேடி நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.



கடைசியாக எழுத்தாளர் வாமுகோமுவின் கவிதை ஒன்றோடு முடித்துக்கொள்வோம்.



உனக்கு போன் செய்வதில்



இப்போது சிக்கல் இருக்கிறது.



உனது கணவன் இரவுப் பணிக்குசென்றிருப்பானா



அல்லதுபகல் நேரப் பணி முடித்துதிரும்பி விட்டானா தெரியவில்லை..



இரு ந்தாலும் இது ஒன்றும்பெரிய பிரச்சினை இல்லைதான்..



உன்னைப்பொருத்தவரை!



ஆமாண்டி,தெரியலடி,ஆவாதடிஎன உனது தோழியிடம்பேசுவதுபோல,



நான் ஒன்றுபேசநீ ஒன்று பேசி வைத்துவிடுவாய்.



உனக்கு போன் செய்வதிலான சிக்கல்



"மனைவியின் கள்ளக்காதலனைவெட்டிக்கொன்ற கணவன் "



என்கிற செய்தியை தினசரி ஒன்றில்படித்ததிலிருந்துதான் !



இதற்க்கெல்லாம் போயா பயம் ?



உள் மனது அவ்வப்போதுதட்டிக்கொடுத்தாலும்



திருட்டு மாங்காய்க்கு ருசிதனிதான் கண்மணி.



எப்படியோ மனதை திடப்படுத்திஉனக்கு ரிங் அடித்தேன்.



"இன்னிக்குத்தான் குளித்தேன்நாலு நாளு போவட்டும் "என்கிறாய் !



போச்சாது போ!



நன்றி - vaamukomu.blogspot.com









********************************

19 March 2009

யாவரும் நலம் - ஆவி வந்த டிவி!


சிறுவயதில் ரங்கராட்டினம் என்றால் எனக்கு சிம்மசொப்பனம். கோடி ரூபாய் குடுத்தாலும் குச்சி ஐஸ் குடுத்தாலும் ஏற மாட்டேன். பலருக்கும் அந்த பயம் இப்போதும் இருக்கும். பால்யத்தில் இருந்த பயம் சற்றே விலகி பருவத்தில் ஒரு முறை பொருட்காட்சியில் இதில் என்னதான் இருக்கிறது என பார்த்துவிடுவோம் என ஏறிவிட்டேன். ஒவ்வொரு முறை ராட்டினம் என் பெட்டியை உச்சிக்கு கொண்டு செல்லும் போதும் பயம் நெஞ்சைக்கவ்வும். பின் கீழிறங்கும் போது குறையும். மீண்டும் மேலேறும் போது பயம் அதிகமாகும். கீழிறங்கும்போது ஈர்ப்பு விசை உடலை இழுக்கும் , மேலேறும் போது அந்த கீழிறங்கப்போகும் அந்த விநாடிகளை நினைத்தே மயிர் கூச்செரியும். சுற்றி வருகையில் மேலே உச்சியில் அந்த ஒரு விநாடி திகைப்பு அதுதான் ரங்கராட்டினத்தின் வெற்றிக்கும் நமது மகிழ்ச்சிக்கும் காரணம். எத்தனை பிளாக்தண்டர் வந்தாலும் தீம்பார்க்குகள் வந்தாலும் பொருட்காட்சி ரங்கராட்டினம் என்றுமே தி பெஸ்ட்டுதான்.


எஸ்.வி.சேகரின் ஒரு நாடகம் அதில் அவர் ஒரு ரேடியோவை நடுவீட்டில் கொண்டு வந்து வைத்து அதனிடம் தன் மனைவியுடன் ஆசீர்வாதம் வாங்குவார். மனைவி கேட்பாள் ஏன் என்று, அதற்கு சேகர் , அந்த ரேடியோவில் தான் தன் பாட்டி வாழ்கிறாள் , சிச்சுவேசனுக்கு ஏற்றாற்போல பாட்டு பாடுவாள், இது ஆல் இண்டியா ரேடியோ அல்ல ஆவி வந்த ரேடியோ என்றும் கூறுவார். அந்த நகைச்சுவைக்காட்சி எனக்கு மிகபிடித்தமானவற்றில் ஒன்று. அந்த நாடகத்தின் கதை 1980களின் ஆரம்பத்தில் எழுதியிருக்கக் கூடும் தற்காலமென்றால் கணினியாகவோ டிவியாகவோ இருந்திருக்கும். யாவரும் நலம் திரைப்படத்தின் கருவும் இதுதான். ''ஆவி வந்த டிவி''


மாதவன் நடிப்பில் பிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம்தான் யாவரும் நலம். இந்தி தமிழ் என இரு மொழிகளிலும் தயாரான இப்படத்தை நேற்று காண நேர்ந்தது. இதுவும் ஆவி வந்த ரேடியோ கதைதான். ஆனால் இதில் டிவி . நிறைய ஆவி (ஆவி என்றால் ஆவியேதான் ஆ.வி அல்ல ). எட்டோ ஒன்பதோ சரியாக எண்ணவில்லை. படத்தின் கதை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான GRUDGE,THE RING 1&2 ( இன்னும் எந்த சினிமா சீரியல்களிலிருந்து சுடப்பட்டதோ அந்த ஆவிகளுக்குத்தான் வெளிச்சம் ) படங்களின் சாயல். படத்தின் கலர் உட்பட.


வீட்டில் மெகாசீரியல் பார்க்கும் பெண்களால் ஆண்களுக்கு பைத்தியம் பிடித்து மெர்சலாகி மென்டலாகி இப்படிக்கூட நடந்துவிடும் அபாயம் இருக்கிறதோ என படம் முடியும் போது தோன்றுகிறது. மெகா சீரியல்தான் இந்த படத்தில் பேய் பூச்சாண்டி பூதம் எல்லாமே. அதற்கு ஒரு விளக்கம் வேறு. படம் முடியும் போது பலரும் மெர்சலாகி மென்டாலாகி போனதை காண முடிந்தது. பக்கத்து சீட்டு தோழர் உட்பட.


பி.சி.ஸ்ரீராமின் கேமராவையும் ஒலிப்பதிவாளரின் சவுண்டையும் நம்பியே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். படத்தின் ஹீரோ அவர்கள் இருவரும்தான். சாதாரண கார்கதவு தட்டைலைக்கூட ஆக்ரோசமாய் கேட்கச்செய்கிறார் அந்த ஓலிப்பதிவாளர். (பெயர் தெரியவில்லை பின்னூட்டத்தில் சொன்னால் அப்டேட்டிக்கிறேன்). அதே போல இசைகூட யாரெனத்தெரியவில்லை. அசத்தலாக இசையமைத்திருக்கிறார் ஹாலிவுட்படங்களுக்கு இணையான இசை.(ஆங்கிலப்பட இசை மாதிரியே)


பி.சி.ஸ்ரீராம் கேமராவை ஆட்டுகிறார் ஆட்டுகிறார் படம் முழுக்க ஆட்டிக்கொண்டே இருக்கிறது. பார்க்கும் நமக்கு தலையே வலிக்கும் அளவுக்கு ஆட்டுகிறார். கொஞ்சம் ஆட்டலை குறைத்திருக்கலாம். பேய் படமென்றால் கேமராவை ஆட்டி ஆட்டி ஓட்டி ஓட்டி ஓடி ஓடி படமெடுக்க வேண்டுமென யாரோ தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கலாம். கேமரா கோணங்கள் அருமை. குறையே சொல்ல முடியாது. கலர் கான்டிராஸ்ட்டும் மிக அருமை அதிலும் அந்த பிளாஷ்பேக்கில் வரும் கலர் அப்படியே 1975களின் நிறம். (இது போன்ற நிறமாதிரியை கடைசியாக வந்த இன்டியானா ஜோன்ஸ் படத்தில் காணலாம் அதுவும் அந்த காலகட்டத்தில் நிகழும் கதையே). படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் படமாக்கப்பட்டுள்ளதாம். அழகு.


இதுதவிர படத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் மாதவன். முதலில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க முன்வந்தமைக்கே அவருக்கு ஒரு ஷொட்டு. ஆனால் படம் முழுக்க சீரியஸ் காட்சிகளிலும் அதே பப்ளி முகத்தோடு வருவது சீரியஸ் காட்சிகளையும் 'சிரி'யஸ் காட்சி ஆக்கிவிடுகிறது. அவர் ஆவியிடம் படும்பாட்டைப்பார்த்து நமக்கு கவலை வருவதற்கு பதிலாக சிரிப்பு வந்து தொலைக்கிறது. படத்தின் ஹீரோயின் யாரென தெரிவதில்லை. சிக்கன் 69 பற்றியெல்லாம் பேச வைத்திருக்கிறார்கள். நல்ல நடித்துக்காட்டவேண்டிய பாத்திரம். நடிக்க மட்டுமே செய்திருக்கிறது. படம் பிடிக்காதவர்களுக்காக அட்லீஸ்ட் ரெண்டு பிட்டாவது இணைத்திருக்கலாம்.


படம் நெடுக நிறைய மெகாசீரியல் நடிகர்கள். டிவிசீரியல் பார்க்கும் உணர்வு. படம் முழுக்க லட்சக்கணக்கில் மன்னிக்கவும் கோடிக்கணக்கில் லாஜிக் ஓட்டைகள். நல்ல வேளை சென்றவாரம்தான் முடிவெட்டியிருந்தேன் இல்லாவிட்டால் காதில் பூவைக்க சிரமமாய் இருந்திருக்கும். காதில் பூந்தோட்டமே வைத்து அதுக்கு கேப்டனை காவலுக்கு வைக்கின்றனர்.


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் , பாலையாவிற்கு ஒரு திகில் பட கதை சொல்லுவார். யாராலும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாத காட்சி அது. அந்த கதை கேட்கும் பாலையாவைத்தவிர படம் பார்க்கும் யாருக்குமே அந்த கதையால் பயமோ நடுக்கமோ வராது. நகைப்புதான் வரும். அப்படி ஒரு திரைக்கதை.


படத்தின் நல்லதே இல்லையா? எல்லோரும் படம் அருமை என்கிறார்களே என்று நீங்கள் கேட்கக்கூடும். இருக்கிறது . கடைசியாக வெளியான உருவம் படத்திற்கு பிறகு குடும்பத்தோடு கண்டுரசிக்க(?) ஒரு ''குடும்பப்பேய்படம்'' வரவேயில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் படத்தின் வெற்றிக்கு. அதிலும் சுத்தியலால் ஒரு குடும்பத்தையே அடித்துக்கொல்லும் அற்புதக்காட்சிகள் நிறைந்தபடம். அதுதவிர மைடியர் லிசா,13ஆம் நம்பர் வீடு,நாளைய மனிதன்,உருவம்,ராசாத்தி வரும்நாள், ஈவில் டெட் 12345 ( பலர் டெக்கில் பார்த்திருக்கக்கூடும்), இப்படிப்பட்ட படங்கள் பார்த்த ஒரு தலைமுறைக்கு இப்படிப்பட்ட படங்களே தற்காலத்தில் வருவதில்லையே என்கிற ஏக்கமும் காரணமாய் இருக்கலாம்.

பேய்பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் குடும்பத்தோடு மெகாசீரியல் பார்க்க பிடிக்கும் குடும்பஸ்தர்களுக்கு கட்டாயம் இந்தப் படம் பிடிக்கும். பேய்படங்கள் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதாலும் அந்த GENREல் அதிகம் படங்கள் தமிழில் வெளிவராததாலும் சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை.


மக்களை பயமுருத்துவது என முடிவெடுத்து படம் முழுக்க நிறைய பார்த்து பார்த்து உழைத்திருப்பதும் , திட்டமிடலும் தெரிந்தாலும் , ஏனோ ரங்கராட்டினத்தின் அந்த ஒரு விநாடி சிலிர்ப்பைத் தர தவறிவிட்டதாகவே கருதுகிறேன். மெகாசீரியலாக(?) வந்த மர்மதேசம் தொடர் இதைவிட ஆயிரம் மடங்கு சிலிர்ப்பை உண்டாக்கியதாய் கருதுகிறேன்.

பகுத்தறிவு மற்றும் வியாக்கியானத்தை தவிர்த்து விட்டு ஒரு இரண்டு மணிநேரம் தன்னை மறந்து மகிழ்ச்சியாய் இருக்க நிச்சயம் இந்த படம் உதவும். முதல் முறை மட்டும் யாவருக்கும் நலமாக.


18 March 2009

எ.வீ.ஜ-4 - குல்பிஐஸும் லேசாப்பறந்த மனசும்


மதீனா அக்காவை எனக்கு மிகமிக பிடிக்கும். பண்பானவர்,பாசமுடன் பழகுபவர். ஆறுவயதிலிருந்தே அவரை எனக்குத்தெரியும். கோவை கோட்டைமேட்டில் வந்து பிரியாணி மாஸ்டர் மதீனா யார் எனக் கேட்டால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். என் அம்மாவின் தோழி. அவரோடு பேசுவது ஏனோ எனக்கு விபரம் தெரிந்தவரை யாருக்குமே பிடித்ததில்லை. அதோட சேராத நீயும் அதா மாறிடுவே என்று நண்பர்கள் சிறுவயதில் பயமுறுத்தியது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அவருக்கு 50 வயதிருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. அவர் ஒரு அராவணி அல்லது திருநங்கை என்பது எனக்கு 16-17 வயதில்தான் தெரிந்தது. அது தெரிந்த பின் ஏனோ எனக்கும் அவருக்குமான உறவில் விரிசல் உண்டாகியிருக்கலாம். திருநங்கைகள் குறித்த போதிய அறிவின்மையும் ஒரு காரணம்.

தொ.காட்சியில் ஒரு விளம்பரம் மிகவும் உருப்படியாக இருந்தது. திருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு தரக் கோரும் விளம்பரம் அது. மனசிருந்தால் மார்க்கமுண்டு என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது போல நாம் மனதிறங்கி திருநங்கைகளையும் சகமனிதர்களாய் ஏற்று நடத்தவேண்டும் என்பதாய் அமைந்திருந்தது அந்த விளம்பரம். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சுவாரஸ்யமில்லாத விளம்பரங்களை ஒத்திருந்தாலும் சமூக நல்லுணர்வோடு எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த அமைப்பு மனசு என்கிற பெயரில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு திருநங்கைகளுக்காகவும் , மூன்றாம் பாலினத்தவர் குறித்த பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாலின மாற்றம் தெரிந்தால் அது குறித்த தகவல்கள் பெறவும் ஒரு ஹெல்ப் லைனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஹெல்ப் லைன் அனைவருக்குமானது. திருநங்கைகள் குறித்த சமூகத்தின் தெளிவில்லாத நிலையிலிருந்து அவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. திருநங்கைகளும் சகமனிதர்களே என்பதாக அறிவிக்கும் பல விளம்பரங்களையும் அந்த அமைப்பின் பேனர்களில் காண முடிந்தது. அனைவரும் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டிய எண்களில் ஒன்றாக இது இருக்க வேண்டும் . அந்த எண் 044-25990505 . (பாலபாரதி அவர்களின் பதிவில் ஏற்கனவே இது குறித்து கூறியிருந்தாலும் நல்ல விடயமாகத்தோன்றியதால் இங்கேயும்.)

'' லேசாப்பறக்குது மனசு '' இதுதான் இப்போதைக்கு மிகப்பிடித்தமான பாடலாக இருக்கிறது. ஊரெல்லாம் அதுதான் ஓலிக்கிறதோ? . முதல் முறை கேட்டதிலிருந்தே அந்தப் பாடல் பைக்கில்,வீட்டில்,சாப்பிடும்போது,தூங்கும்போது,எழுதும்போது எப்போதும் லேசாக மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வெண்ணிலா கபடிக் குழு திரைப்பட பாடல் அது. பாடலின் இசைக்கும் அல்லது ராகத்திற்கும்(!) பாடல் வரிகளுக்குமான அழகான தொடர்பு அந்த பாடலில். இப்படி பாடல்வரிகளுக்கும் அதன் ராகத்திற்குமான தொடர்புடைய பாடல் ஒன்று காதோடுதான் நான் பாடுவேன்,கீரவாணி... இன்னும் பல இருக்கிறது.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பார்த்தேன். வெகுநாளைக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. இதற்கு முன் மொழி அப்படி ஒரு திருப்தியை அளித்திருந்தது. முதல் காட்சியில் புதர்களுக்கு நடுவில் ஆய் போய்கொண்டே ஊர்கதை பேசும் காட்சியிலேயே படத்தின் வெற்றி துவங்கிவிட்டது. கறிசோற்றை அள்ளித்தரும் அம்மாவின் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தெனாவெட்டான குசும்பான எகத்தாளமான நண்பர் குழாமும் , திருவிழாவிற்கு திருவிழா காணும் காதலியுமாய்.... அடேங்கப்பா! சூப்பர்யா.. கிழிச்சுட்டாய்ங்க.. பருத்திவீரனைவிட இந்த படத்தில் வரும் கிராமம் இயல்பாய் இருந்ததாய் தோன்றியது.

சென்றவாரம் ரமணியோடு ஸ்பென்சர்ஸ் சென்றிருந்தேன். இப்போதெல்லாம் அவளுக்கு ஏனோ ஸ்பென்சர்ஸ் பிடிப்பதில்லை. அதை ஒரு இரண்டாம்தர ஷாப்பிங் காம்பிலக்ஸாக பார்க்கிறாள். அவளது சாய்ஸ் சிட்டி சென்டர்தான். நமக்கு பட்ஜெட் தாங்காது. பர்ஸ் அது வைக்கும் இடமும் சேர்த்து பழுத்துவிடும் . அதனால் எப்போதும் என் சாய்ஸ் ஸ்பென்சர்தான். ஸ்பென்சர்சஸில் உள்ளே நுழைந்ததும் ஒரு திண்பண்ட கடை இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? அங்கே வெணிலா ஐஸ்கிரீம் மிக அருமையாக இருக்கிறது. குறைந்த விலை நிறைந்த தரம் . 15 ரூபாய் ஒன்று. காசு குறைவாக இருந்தாலும் கடலை போட உதவும்.

சிறுவயதில் பால்ஐஸ் என்று ஒன்று விற்கும். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மொழுமொழுவென வெள்ளைவெளேரென இருக்கும். எழுதில் உருகிவிடும் (குல்பியைப்போல ஆனால் வேறு சுவையில்) . கையெல்லாம் வழிந்து புறங்கையில் ஒழுகி ஓடும். அதையும் விடாமல் நக்கி தின்றிருக்கிறேன். 10 பைசாவிற்கு விற்கும் போது சாப்பிட ஆரம்பித்து ஓரு ரூபாய் வரைக்கும் விலை உயர்ந்தது வரை சாப்பிட்டிருக்கிறேன். எனது குடும்பத்தின் நகரம் நோக்கிய பெயர்தலால் அதைப்பற்றிய இப்போதைய நிலை தெரியவில்லை. மறைந்து போயிருக்கலாம். ரோட்டில் விற்றுச்செல்லும் ஐஸ்வண்ட்டிக்காரர்களை பார்க்கும் போதெல்லாம் எப்போதும் கேட்டு வைப்பேன் பால் ஐஸ் இருக்கா என.. அவனும் வெணிலா இருக்கு வேண்டுமா என்பான்.. வேண்டாம் என திரும்பி விடுவேன்.

தூக்கம் வராத பின்னிரவில் அதாவது 2 மணி சுமாருக்கு மொட்டைமாடியில் உலாத்திக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி இரவு நேரத்தில் தூக்கம் வருவதில்லை. ரோட்டில் ஒரு ஐஸ்வண்டிக்காரன் தனியாக சென்று கொண்டிருந்தான். அட நம்ம பாலு அண்ணே என்று நினைத்து 'என்ன அண்ணே இந்த நேரத்தில என்றேன் , பிஸினஸ்டா என்றார். சிட்டில இந்த 2 மணிக்கு கூடவா குல்பி தின்றாங்க என்றேன் ... ''தம்பி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல ஆகட்டும் புரியும்னாரு'', மிட்நைட் குல்பி மற்றும் தூக்கம் வராத காரணம் விளங்கியது. அவர் தனது வண்டியின் முன்பக்கமிருந்த வண்டியின் மணியை ஆட்டியபடியே கிளம்பினார்.

சமீபகாலமாக பல இணையபக்கங்களிலும் அத்வானி ஃபார் பீ.எம் என்னும் விளம்பரம் காணமுடிந்தது. அந்த விளம்பரங்கள் கூகிள் சேவை வழங்குகிறதா? அல்லது தனியார் நிறுவனமோ , பிஜேபீயோ இணைந்து நடத்துகின்றனரா? இதற்கு பணம் கொடுக்கப்படுகிறதா? விபரம் தெரிந்தவர்கள் கூறலாம். என்ன எழவு கருமாந்திரமோ?

மார்ச் 16 பதிவரும் மிகநெருங்கிய நண்பருமான மலேசியாவைச்சேர்ந்த விக்னேஸ்வரன் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துக்கள்.

வாராவாரம் ஜீவியில் பிரபலங்களின் நொங்கை பிதுக்கிக் கொண்டிருக்கிறார். பதிவர் நர்சிம். வாராவாரம் அவருக்கு வாழ்த்து சொல்ல முடியாது... அது உவப்பாக இருக்காது. மனிதர் வயதுக்கு வந்துவிட்டார். ஒரே வாழ்த்து கொஞ்சம் பெரிய நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். செமத்தியாக ஒரு கிக்ஸ்டார்ட் கிடைத்திருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நர்சிம்மைத் தொடர்ந்து மேலும் பல பதிவர்களும் மக்கள் அதிகம் படிக்கும் வார,மாத இதழ்களில் எழுத எல்லாம் வல்ல தமிழ்மணேஸ்வரனை வேண்டுகிறேன்.

தமிழ்மணத்தில் கொஞ்சகாலமாக சூடான இடுகைகளில் எனது பதிவு நெருக்கி அடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்தது. சென்ற பதிவு போட்டதும் சூடாகிவிட்டது. ஒரு வேளை இதுவரை தமிழ்மணம் என் மீது விதித்திருந்த தடையை தளர்த்தியுள்ளதோ என்னவோ? தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி.
(வெனிலாவை - வெண்ணிலா ஐஸ்கீரிம் என தவறாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய கேபிள் சங்கருக்கு நன்றி , மாற்றிவிட்டேன் )

16 March 2009

நிராகரிப்பின் வலி..



அவர் ஒரு பிரபலமான முன்னாள் நடிகர் , எம்.ஜி.ஆரைப்போல வந்திருக்க வேண்டியவர். அரைடிராயர் போட்டுக்கொண்டு தனது முதல் ஹிட்டை கொடுத்தவர். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்தார். அவர் மனைவியும் ஒரு நடிகை. சமீபகாலமாக தொ.காட்சித்தொடர்களில் அதிகம் காணமுடிகின்ற ஒருவர்.இருவருக்கும் காதல் திருமணம். பல ஆண்டுகள் திரையுலகத்திற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தம்பதியினர் அவர்கள். தோல்விகள் தாலாட்டும் காலத்தில் அந்த நடிகருக்கு மேலும் ஒரு தோல்வி. திருமணமுறிவு.


விவாகரத்து கோருகிறார் அந்த நடிகை. விவாகரத்து கிடைக்கிறது. ஜீவனாம்சமாக நடிகர் இத்தனை ஆண்டுகளும் உழைத்துச்சேர்த்த மொத்த சொத்தும் கை மாறுகிறது. நடுத்தெருவில் ஆதரவின்றி ஒரு வேளை சோற்றுக்கே சிரமப்படும் நிலைக்கு ஆளாகிறார் நடிகர். சில வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் ஜனரஞ்சக பத்திரிக்கைகள் சிலவற்றில் அந்த நடிகரின் பரிதாப நிலை என ஒரு வாரச் செய்தியாக வெளியானது பெரும்பாலோருக்கும் தெரிந்திருக்கும். நிராகரிப்பின் வலியை அன்று அந்த நடிகரின் கண்களில் காண முடிந்தது.


உங்கள் உயிருக்கும் மேலாக நீங்கள் காதலிக்கும் காதலியோ மனைவியோ உங்களை முற்றாக நிராகரிக்கிறார். விவாகரத்துக் கோருகிறார். உங்களை நடுத்தெருவில் அநாதையாய் நிற்கவைத்து நீங்கள் கதறி அழும்போது கைகொட்டி சிரிக்கிறார். வெளிநாட்டவரான உங்கள் பாஸ்போர்ட்டை திருடிக்கொள்கிறார். உங்கள் மீது பொய் வழக்குப்போட்டு காவல்துறையிடம் மாட்டிவிடுகிறார். உங்கள் வாழ்க்கையையே சூன்யமாக்குகிறார். என்ன செய்வீர்கள்? இப்படித்தான் துவங்குகிறது WHITE திரைப்படம். போலந்து நாட்டு திரைப்படமான இதை இயக்கியவர் கிறிஸ்போம் கிரிஸ்லோஸ்கி. Three colours என்கிற தொடர் திரைப்படங்களில் இது இரண்டாவது. (முதல் படம் BLUE மூன்றாவது RED)


கோர்ட்டில் துவங்குகிறது திரைப்படம். விவாகரத்து வழக்கு. மணமாகி ஆறுமாதத்திற்குள் . இவன் மறுக்கிறான். அவன் அவளை உயிருக்கும் மேலாய் காதலிப்பதாய் கூறுகிறான். அவளோ நான் அவனை காதலிக்கவில்லை என நீதிபதியிடம் வாதிடுகிறாள். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது. அவனும் அவளும் இணைந்து நடத்திய சலூன்,வங்கிக்கணக்கு,சொந்த வீடு அனைத்தையும் பிடுங்கிக்கொள்கிறாள். சலூனை எரிக்க முயன்றான் என போலிஸில் புகார் செய்வேன் இனி இங்கே வராதே என வீட்டைவிட்டு விரட்டுகிறாள். ரயில்நிலையத்தில் ஒரு பிச்சைக்காரனாய் அமர்ந்திருக்கிறான்.


அவன் போலந்தின் 'வார் சா'(WARSAW) நகரத்தில் வளர்ந்தவன். அந்த ஊரின் மிகப்பிரபலமான சலூனின் முதலாளி. வார்சாவில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்க வந்தவளை காதலித்து அவளுக்காக பாரிஸுக்கு வந்தவன். தனது பாக்கெட்சீப்பில் ஒரு கர்சீப்பை வைத்து வாயினால் மௌத்தார்கனைப்போல வாசித்து ரயில்நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறான். போலந்தின் மிகப்பிரபலமான பாடலை வாசிக்கிறான். அந்த வழியே வரும் ஒரு பெரியவர் அவனுக்கு சில்லரைகளை போடுகிறார். நின்று பார்க்கிறார். இருவரும் சேர்ந்து குடிக்கின்றனர். அவரும் போலந்தை சேர்ந்தவர். அவனை தான் ஊருக்கே அழைத்து செல்வதாய் கூறுகிறார். ஆனால் அங்கே ஒருவரை கொலை செய்யவேண்டும் என்கிறார். இவனது பாஸ்போர்ட்டை அவள் பிடுங்கி தொலைத்துவிட்டிருந்தாள். இவன் தனது மிகப்பெரிய பெட்டியில் மறைந்து கொள்வதாகவும் அதை வைத்துக்கொண்டு விமானத்தில் தப்பிக்கலாம் என்றும் திட்டமிடுகிறான். போலந்தில் பெரியவர் இறங்குகிறார் அவன் இருக்கும் பெட்டியை தேடுகிறார். பெட்டியை வரவில்லை. அவன் அடைந்திருக்கும் பெட்டியை திருடர்கள் சிலர் திருடிக்கொண்டுபோய் திறந்து பார்க்க இவன். அவனை அடித்து உதைத்து கையிலிருக்கும் வாட்சைபிடுங்கிக்கொண்டு விரட்டி விடுகின்றனர்.


மீண்டும் ஊர்திரும்பிய மகிழ்ச்சியில் கடினமாய் உழைக்கிறான். ஒரு பணக்காரனிடம் அடியாளாய் சேருகிறான். பணக்காரனை ஏமாற்றுகிறான். பெரியவரிடம் சென்று கொலைசெய்யத் தயார் என்கிறான். (தற்கொலை செய்துகொள்ள மனமில்லாத வாழ்வில் சலிப்படைந்த ஒருவனை அவன் அனுமதியோடு கொல்வதே திட்டம்) . கொலை செய்ய செல்கிறான் அங்கே அந்த பெரியவர். பாக்கெட்டில் பணமிருக்கிறது என்னை கொன்று அந்த பணத்தை எடுத்துக்கொள் என்கிறார். அவன் அவரை சுடுகிறான். ஆனால் அவர் இறக்கவில்லை. அது போலி குண்டு. அவர் வாழ்வின் அர்த்தம் உணர்கிறார். அதற்கு பரிசாய் பணம் தருகிறார். இவன் அதைக்கொண்டு தொழில் துவங்கி பணக்காரனாகிறான். தன் பணத்தை கொண்டு தன் மனைவியை பழிவாங்க ஒரு பயங்கரமான திட்டத்தை தீட்டுகிறான் . இதற்கு மேல் இந்த படத்தின் கதையை கூறிவிட்டால் படத்திற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகமாய் அது அமைந்து விடக்கூடும்.


1994 ல் வெளியான இத்திரைப்படம் பெர்லின் திரைப்படவிழாவில் வெள்ளிக்கரடி விருதுப்பெற்ற ஒன்றாகும். ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு மிகச்சிறந்த திரைக்கதையின் மூலம் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.


ஒரு காட்சியில் அவனுக்கு உதவும் பெரியவர் உன் காதலி எப்படி இருப்பாள் எனக் கேட்கிறார். இவன் அவள் தேவதையை ஒத்து இருப்பவள் வா காட்டுகிறேன் என அவரை அழைத்துக்கொண்டு அவள் வீட்டு வாசலுக்கு அழைத்து செல்கிறான். ஜன்னலில் அவனது நிழல் தெரிகிறது. பார் அவள்தான் எனக்காட்டுகிறான். சிறிது நேரத்தில் விளக்கு அணைந்து விடுகிறது. அவன் இது அவள் தூங்கும் நேரம் என்கிறான். மீண்டும் விளக்கு எரிகிறது. இப்போது ஒரு ஆணின் நிழல் தெரிகிறது. பெரியவரோ ஆமாம் ஆமாம் இது தூங்கும் நேரம்தான் என்று கிண்டலாக சிரிக்கிறார். இவனோ பைத்தியம் பிடித்தவனாய் தெருவோர டெலிபோன் பூத்துக்கு ஓடுகிறான். அவளுக்கு போன் செய்கிறான் , அவள் போனை எடுத்து சரியான நேரத்தில் அழைத்திருக்கிறாய் எனக் கூறி அவளும் அந்த இன்னொருவனும் சேர்ந்து புணரும் ஓசையையும் கட்டில் கிறீச்சிடும் சத்தமும் அவள் முனகும் சத்தத்தையும் கேட்க வைக்கிறாள். அவன் டெலிபோன் பூத்திலேயே கண்ணீர்மல்க கதறி அழுகிறான். ஹிட்லரின் சித்ரவதை முகாம்கள் குறித்த திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறையை விட ஆயிரம் மடங்கு வன்முறையான காட்சியாகத்தோன்றியது அது. இது போல ஒவ்வொரு காட்சியும் வலிமையானதாய் உருவாக்கப்பட்டிருக்கிறது.


ஆண்களின் காதல்,நிராகரிப்பின் வலி குறித்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதன் வலி சிறிதும் குறையாமல் படம் நெடுக நகைச்சுவையாய் சொல்லிச்செல்லும் இத்திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற பிளாக் காமெடி வகையை சேர்ந்த ஒரு படமாகும். படம் நெடுக கிடைக்கும் நகைச்சுவையான உரையாடல்கள் ஒரு காட்சியில் கூட படத்தின் பாதையை மாற்றாமல் நிராகரிப்பின் வலியிலேயே பயணிக்கிறது. அதை ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.


படத்தின் பெயருக்கேற்றாற் போல் படம் நெடுக நம்மோடு அந்த வெண்மையும் பயணிக்கிறது. பாரிஸின் வீதிகளில் வானம் முழுக்க வெண்மையாகவும் , போலந்தின் வீதிகளில் நிலம் முழுக்க பனிமூடி வெண்மையாகவும் காட்சிகள் அமைத்தது அருமை. அதன் குறியீடுகள் தரும் செய்தியை உணரமுடியவில்லை.


படத்தின் இயக்குனர் கிரிஸ்லோஸ்கி இத்திரைப்பட வரிசை குறித்து ஒரு பேட்டியில் இப்படிக்குறிப்பிட்டார்.'' இத்திரைப்பட வரிசைக்கு ஏன் BLUE,WHITE,RED எனப் பெயரிட்டேன் தெரியுமா? , இப்படங்களின் தயாரிப்பாளர்கள் பிரான்சைச்சேர்ந்தவர்கள், வேறு நாட்டினவராக இருந்திருத்தால் அவர்களுக்கேற்றாற் போல வேறு பெயர்களை தேர்ந்தெடுத்திருப்பேன், ஆனால் படங்கள் இந்த மூன்றாக மட்டுமே இருந்திருக்கும் '' என்றார். கிரிஸ்லோஸ்கி போலந்து நாட்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.


படத்தின் நாயகனாக நடித்த ஜமோச்வ்ஸ்கி படம் நெடுக தன் அப்பாவி நடிப்பாலும் உடலசைவு மொழியாலும் அசத்தியிருப்பார். நாயகியாய் வரும் ஜீலி டெல்பி , மூன்றாம்பிறை ஸ்ரீதேவியைப்போல கிளைமாக்ஸில் மொத்தமாய் அள்ளிவிடுகிறார். அசத்தலான நடிப்பு.

படம் நெடுக வரும் அமைதியான மெல்லிய இசை படத்தோடு நம்மையும் சேர்ந்து இணைக்கும் பாலமாக இருக்கிறது.
வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.


**********************************************

13 March 2009

டக்வொர்த் லூயிஸ் முறை - உருவானகதையும் எளிய விளக்கமும்


இங்கிலாந்தின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் நகமும் கடிக்கப்பட்டிருக்கும் அன்றைய தினம் . இங்கி. அந்த ஆட்டத்தில் தோற்றால் உலகக்கோப்பையிலிருந்து அந்த அணி வெளியேறிவிடும். கருப்பின பிரச்சனையில் இருந்து மீண்டு தென்னாப்பிரிக்க அணி பல வருடங்களுக்கு பின் ஆடுகிற உ.கோ அது. தென்னாப்பிரிக்கா அந்த உ.கோ ஆரம்ப போட்டிகளில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து தன் இருப்பை ( கிரிக்கெட்) உலகத்திற்கே பறைசாற்றியிருந்தது. முதலில் ஆடிய இங்கி. 45 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய தெ.ஆப்பிரிக்க அணி 42.5 ஒவர்களில் 236/6 என்ற நிலையில் மழைக்குறுக்கிடுகிறது.



13 பந்துகள் 21 ரன்கள் . மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் துவங்குகிறது. அதிர்ச்சி. ஒரே பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என தெ.ஆப்பிரிக்க அணிக்கு இயலாத டார்கெட் வழங்கப்படுகிறது. ஆட்டத்தை இங்கிலாந்து அணி வென்றது. ஒரு வேளை அந்த ஆட்டத்தில் அப்படி ஒரு ஒருதலைபட்சமான டார்கெட் வழங்கப்பட்டிருக்காவிட்டால் அந்த உ.கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றிருக்கலாம்.


அன்றைய காலக்கட்டத்தில் அப்படி ஒரு டார்கெட்டை வழங்க உபயோகித்த முறை மிக மோசமானது. ஒருதலைபட்சமானது. ரன்ரேட் விகிதத்தையும் அதே ஒவரில் எதிர் அணி முதல் இன்னிங்சில் பெற்ற ரன்களையும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுபவை. இரண்டாவது இன்னிங்சில் ஆடும் அணியின் விக்கெட்டுகளும் கணக்கிலெடுக்கப்படாது. பல வருடங்களுக்கு அந்த முறையே வழக்கமாகி இருந்தது. பல மேட்ச்களுக்கும் அதுவே முதலில் பேட் செய்யும் அணிக்கு பல நேரங்களிலும் உதவியாய் இருந்திருக்கிறது.


தமிழ்சினிமாக்களில் ஏழைகளும் வலிமையில்லாதோரும் அடிவாங்கும்போது அவர்களெல்லாம் கதறி அழ ''நம்மள காப்பாத்த யாருமே வரமாட்டாங்களா?'' என சோகமாய் கேட்பார்கள். அப்படித்தான் கிரிக்கெட் அணிகளும் மேட்ச்சுக்கு நடுவே வருகின்ற மழையை விட அதனால் உண்டாக இருக்கும் டார்கெட் பிரச்சனையால் கதறிக் கொண்டிருந்தனர். பல விதவிதமான முறைகளை கையாண்டு தோற்றனர் ஐசிசியும் அகில உலக கிரிக்கெட் ஆர்வலர்களும். ஹீரோக்களைப்போல வந்தனர் இரண்டு பேர்.



பிராங்க் டக்வொர்த் மற்றும் டோனி லூயிஸ் அதுதான் அவர்களது பெயர். பிற்காலத்தில் தங்களது பெயர் கிரிக்கெட் வரலாற்றில் இன்றியமையாத பெயராகப்போகிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 1994ஆம் ஆண்டு மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி மாணவர்கள் அவர்கள். தங்களது பட்டப்படிப்பின் இறுதியாண்டு பிராஜக்ட்டுக்காக புதுமாதிரியான சிந்தனையோடு உருவாக்கிய கணக்கீட்டு முறைதான் இன்று நம்மில் பலரும் மண்டையை குடாய்ந்து சிந்திக்கும் அந்த டி/எல் கணக்கீட்டு முறை.


1995ல் இருவருமாக இம்முறை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும், ஐசிசியிடமும் விளக்கியுள்ளனர். 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து , ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான போட்டியில் இம்முறை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் உலக கிரிக்கெட்டில் இருந்த கணக்கீட்டு முறை PARABOLA எனப்படும் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கிளார்க் என்பவரின் முறையே. டி/எல் முறை அதைவிட நேர்த்தியாகவும் பாரபட்சமற்ற முறையில் இருப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதியது. ஐசிசி உடனடியாக இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்னரே கூடி பேசி முடிவெடுத்தது.


5 வருடங்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் தேதி ஐசிசி இம்முறையை அனைத்து ஒருநாள் போட்டிகளுக்கும் ( முதல்தர ஒரு நாள் போட்டிகளுக்கும்) பொதுவான ஒன்றாக அறிவித்தது. டக்வொர்த் மற்றும் லூயிஸிடம் இந்த முறைக்கான யோசனை எப்படித்தோன்றியது எனக்கேட்ட போது 1992 ஆம் ஆண்டு இங்கி-தென் ஆப்பிரிக்காவின் போட்டியில் ஒரு வேளை அப்போது கையாண்ட முறை இங்கிலாந்துக்கு எதிராக அமைந்திருந்தால் என்கிற கேள்வியே இது போன்ற முயற்சிக்கு விதையாக அமைந்ததாக தெரிவித்தனர்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


இந்த டக்வொர்த் லூயிஸ் முறையில் எப்படி கணக்கிடுகிறார்கள் என்கிற ஐயம் பலருக்கும் உண்டு. புரிந்து கொள்ளும் வரை அது மிகசிக்கலான மற்றும் புரிந்து கொள்ள இயலாத ஒன்றாகவே தெரிந்தது.. அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினால் அது ஒன்றுமே இல்லாத வாய்ப்பாட்டு முறை என்பது நிதர்சனமானக தெரிந்தது.


அதைக்குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வமும் , பொறுமையும் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்.



முதலில் சில அஸ்திவார குறிப்புகள்.


*இரண்டு அணிகளும் குறைந்தது 20 ஓவர்களாவது விளையாடினால் மட்டுமே டி/எல் முறை கணக்கிலெடுக்கப்படும்


* ரிசோசர்சஸ் (Resources ) - இதுதான் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளும் இந்த முறையின் மிகமுக்கியமான காரணி . அதை நாம் சக்தி அல்லது அணியின் பலம் என்று அழைக்கலாம்.


*அதாவது இரண்டு அணிகளுக்கும் சமமான அளவில் 10 விக்கெட்டுகள் மற்றும் ஐம்பது ஓவர்கள் என்பது இங்கே '' பலமாக'' கருதலாம். இரண்டு அணிகளுக்கும் சமமான பலம் (50 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்கள் )


*இந்த ரிசோசர்ஸ்களை அல்லது இரு அணி பலத்தை அடிப்படையாக கொண்டே டார்கெட் முடிவாகிறது. இரண்டு அணிகளின் ரன்கள், ஆடிய மற்றும் ஆட இருக்கும் ஒவர்கள் , எத்தனை விக்கெட்டுகள் இழந்திருக்கிறோம் என்பனவான காரணிகள்.


* இது தவிர டக்வொர்த் மற்றும் லூயிஸ் இணைந்து பல நூறு ,தற்காலத்தில் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டங்களின் போக்கை கருத்தில் கொண்டு உருவாக்கிய ( ரன்ரேட், பிட்ச்,அணி பலம்,ஆட்டத்தின் போக்கு etc ) அட்டவணையைக்கொண்டு மேலே கூறிய ரிசோர்ஸ்களை வைத்து டி/எல் முறையில் டார்கெட்டை கண்டறியலாம்.

இதை ஒரு எளிய எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம்.


A அணியிம் B அணியும் ஆடுகின்றன. A அணி ஆடி முழுமையாக தனது ஆடி முடித்தபின் B அணி பேட்டிங் செய்யும் போது மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் குறைக்கப்படும் , அதே போல ஆடும் நேரமும் குறைக்கப்படும் . இப்படி அவர்களுக்கான ரிசோர்சஸ் (பலம்) குறைக்கப்படும் பட்சத்தில் B அணிக்கு A அணியைவிட குறைந்த டார்கெட் தரப்படும்


A அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடும் போதே மழை குறிக்கிட்டால் , அவர்களது ஓவர்கள் மற்றும் ஆடும் நேரமும் குறைக்கப்படும் இல்லையா.. அதனால் அதனை கருத்தில் கொண்டு B அணிக்கு உயரிய டார்கெட் தரப்படும்.


இதை இப்படியும் விளக்கலாம். A அணி ஆடத்துவங்கும் போது 50 ஓவர்கள் என்றே ஆடத்துவங்கும் ஆனால் 40 ஓவர்களில் மழை வந்துவிடுகிறது. அவர்களது கையில் 7 விக்கெட்டுகள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். மீதியிருக்கும் கடைசி பத்து ஓவர்களில் A அணி ஆடியிருந்தால் நிச்சயம் அவர்களால் 60-75 ரன்கள் வரை சேர்க்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. அவர்கள் ஆடத்துவங்கும் போதும் 40 ஓவரின் போதும் மழையால் இத்தோடு அவர்களது பேட்டிங் முடியப்போகிறது என்பது தெரிந்திருக்காது. அதை கருத்தில் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை 40 ஓவர்கள்தான் ஆடப்போகிறோம் என்று தெரிந்தே ஆட இருக்கும் B அணிக்கு அதிக டார்கெட் வழங்கப்படுகிறது.


ஒரு வேளை A அணி 40 வது ஓவரில் 9 விக்கெட்டுகள் இழந்திருந்தால், அடுத்த பத்து ஓவர்களில் அதிகபட்சம் 25-30 ரன்களே எடுக்க இயலும் . அதற்கேற்றாற் போல் B அணிக்கு டார்கெட் கிடைக்கும்.


இது பொதுவான ஒரு எடுத்துக்காட்டு. நடைமுறையின் ஒரு துளியே.


இப்படி கணக்கிட டக்வொர்த் மற்றும் லூயிஸ் உருவாக்கிய அட்டவணையை காண்போம். படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம், அல்லது படம் இங்கே




இந்த அட்டவணையானது ஒவ்வொரு ஓவரின் பந்தையும் கணக்கிலெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அது மிகப்பெரிய அட்டவணையாக இருப்பதால் அதிலிருந்து முக்கிய பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு சிறிய அட்டவணை உருவாக்குவோம்.







மேலுள்ள சுருக்கப்பட்ட மாதிரி அட்டவணைப்படி எப்படிக்கணக்கிடுவது என காண்போம்.


மூன்று சூழ்நிலைகளில் ஒரு போட்டி தடையாகலாம் அல்லது நிறுத்தப்படலாம்.



1.இரண்டாவது பேட்டிங்கின் போது



2.முதல் பேட்டிங்கின் போது



3.ஆட்டம் தொடங்குதற்கு முன்



1.இரண்டாவது பேட்டிங்கின் போது -



A அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்கிறது. B அணி தொடர்ந்து ஆடும் போது, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 80 ரன்கள் எடுக்கிறது. இப்போது மழை வந்தால் எப்படி கணக்கிடுவது எனப்பார்ப்போம்.



*ஆட்டம் நின்றபோது B அணிக்கு 30 ஓவர்களும் 8 விக்கெட்டுகளும் கையில் இருந்தன. எனவே அவர்களிடம் 67.3% பலம் இருந்தன.



*மழை நின்ற பிறகு ஆட்டம் 40 ஓவர்களாக ஆக்கப்பட்டால் , இதே அட்டவணையில் அவர்களது பலம் 57% சதவீதமாக குறையும்.



*மழையால் அவர்களுக்கான இழப்பு 67.3-57.4=14.9%



*இதனால் A அணியைவிட ( 100% சதவீதம் பலம் உபயோகிக்கப்பட்டுள்ளது) B அணிக்கு 85.1% சதவீத பலம் உள்ளது.



*இப்போது A அணியை விட B அணிக்கு பலம் குறைந்திருப்பதால் இப்படி கணக்கிட வேண்டும்.


A அணியின் ஸ்கோர் x B அணியின் பலம் சதவிகிதத்தில்


250 x 85.1/100 = 212.75



எனவே B அணிக்கான டார்கெட் 40 ஓவர்களில் 213 எடுத்தால் வெற்றி என டி/எல் முறையில் நிர்ணயிக்கப்படும்.



2. முதல் பேட்டிங்கிலேயே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -


A அணி முதலில் பேட்டிங் செய்கிறது, 30 ஓவர்கள் ஆடிய நிலையில் 143ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையிலிருக்கிறது. இப்போது ஆட்டம் இரு அணிகளுக்குமே 40 ஓவர்கள் என பிரிக்கப்படுகிறது. A அணிக்கு 10 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் எஞ்சியுள்ளன. தொடர்ந்து ஆடி 40 ஓவர்களில் 200 ரன்கள் குவிக்கிறது A அணி.


*மழைக்குறிக்கிட்ட போது A அணிக்கு 20 ஓவர்களும் 5 விக்கெட்டுகளும் மீதமிருந்தன. இதைக்கொண்டு அதன் பலத்தை டி.எல் அட்டவணை முறையில் கணக்கிட்டால் அவர்களது பலம் 38.6% இருந்தது.


*மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது ( ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின் ) அவர்களுக்கு 10 ஓவர்களும் 5விக்கெட்டுகளுமே மீதமிருந்தன. அதை கொண்டு அட்டவணையில் பார்த்தால் 26.1%



*மழையால் A அணியில் பலம் 38.6% - 26.1% = 12.5% சதவீதம் B அணியை விட குறைந்துள்ளது. அதாவது 87.5 சதவீதமே பலம்.



*B அணிக்கு தனது டார்கெட்டும் ஆட இருக்கும் ஓவர்களும் பேட்டிங் செய்யும் முன்பே தெரியுமென்பதால் அவர்களுக்கும் 10 ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் 10 விக்கெட்டுகளும் இருப்பதால் அட்டவணைப்படி 89.3% பலம் இருக்கிறது.



*A அணிக்கு ( 89.3% - 87.5% = )1.8% பலம் B அணியை விட குறைவாக இருப்பதால் , B அணிக்கு 1.8% சதவீதம் அதிக டார்கெட் தரப்படும். ஆனால் அது 50 ஓவர்களுக்கு அட்டவணைப்படி கணக்கிடப்பட்டு தரப்படும். அதாவது மழையால் குறைந்த A அணியின் பலம் 12.5% அதைக்கொண்டு கணக்கிட்டால்..



200 x 12.5% = 25 , ஆகவே 200+25 = 225 , இப்போது இந்த ஸ்கோரைக்கொண்டு எத்தனை ரன்கள் B அணிக்கான டார்கெட்டை அதிகமாக்குவதென்று காண்போம்.



225 x 1.8% = 4.5 ரன்கள்



*இப்போது 40 ஓவர்களில் A அணி எடுத்த 200 ரன்களுடன் 4 ரன்களையும் சேர்த்து 204+1 , 205 ரன்கள் பெற்றால் வெற்றி என அறிவிக்கலாம்.



3.ஆட்டம் துவங்குவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டால் -



காலைநேரப்பனி, அல்லது மழை , வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமாகிறது , அதனால் A அணிக்கு இரு அணிகளுக்கும் 40 ஓவர்கள் நிர்ணயிக்கப்படுகிறது , முதலில் ஆடும் A அணி 38 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழக்கிறது ( ஆல் அவுட்). உணவு இடைவேளையில் மீண்டும் மழை .



B அணிக்கு 30 ஓவர்கள் என நிர்ணயிக்கப்படுகிறது.., இப்போது அந்த அணிக்கு எப்படி டார்கெட் தருவது..



*A அணிக்கு 40 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்ட போது இருந்த பலம்.. அட்டவணைப்படி 89.3% ( 40 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் )



*B அணிக்கு 30 ஓவர்கள் எனக் குறைக்கப்பட்டதும் அவர்களது பலம் அட்டவணைப்படி 75.1% எனக்குறைகிறது. ( 30 ஓவர்கள் மற்றும் 10 விக்கெட்டுகளுடன் )



*எனவே B அணிக்கு A வைவிட குறைந்த பலமே இருப்பதால் , A வை விட குறைந்த பட்ச டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அது இப்படி கணக்கிடப்படுகிறது


* 160 x 75.1/89.3 = 134.56 , எனவே B அணிக்கு 30 ஓவர்களில் 134+1 எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்படுகிறது.



சரி B அணி இந்த டார்க்கெட்டை நோக்கி விளையாடும் போது 25 ஓவரில் மழை வந்து ஆட்டம் கைவிடப்படும் சூழல் வருகிறது. இப்போது என்ன செய்யலாம் . அந்த நேரத்தில் B அணி 120 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்திருக்கிறது.




* இப்போது அந்த அணியின் பலம் , 5 ஓவர்களையும் 8 விக்கெட்டுகளையும் இழந்திருப்பதை வைத்து கணக்கிடப்படவேண்டும். அட்டவணைப்படி அதன் பலம் 9.4% . இந்த 9.4% ஆட்டம் கைவிடப்பட்டதால் B அணிக்கு ஏற்பட்ட இழப்பாக கருதலாம்.



*தனது பேட்டிங்கை B அணி துவங்கும் போது அதற்கு 75.1% பலம் இருந்தது. ஆனால் இப்போது அதில் மேலும் 9.4% இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த அணியின் பலம் 75.1 - 9.4 = 65.7% மட்டுமே. எனவே முன்னால் கூறியதைப்போல இந்த பலத்தை வைத்து டார்கெட்டை கணக்கிடலாம்



* 160x65.7/89.3 = 117.7 , எனவே 25 ஓவர்களில் B அணி 118 ரன்கள் எடுத்திருந்தாலே அது வெற்றிப்பெற்றதாக கருதலாம். அந்த அணியோ 120/8 என்ற முன்னிலையில் இருப்பதால் , B அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்க இயலும்.



எதிர்பார்க்கப் படும் ஸ்கோர் ( PAR SCORE)-




சிலசமயங்களில் கங்குலி அல்லது தோனி விளையாடும் போது பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டோடு விளையாடுவதை பார்த்திருப்போம். அது ஒரு வேளை சேஸிங் செய்யும் அணி இரண்டாவது இன்னிங்ஸில் மழை வரும் என எதிர்பார்க்கையில் டி/எல் முறைப்படி 30வது ஓவரில் மழைவர நேர்ந்தால் எடுத்திருக்க வேண்டிய ஸ்கோர் 35 என்றால் ஒன்று 40 என்றால் ஒன்று என கணக்கிட்டு வைத்துக்கொள்ளுதல். இதை PAR Score என அழைக்கிறார்கள். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு எளிதாக இருக்கும்.



சமீபகாலமாக மென்பொருள் துறையின் எழுச்சியும் வளர்ச்சியும் இம்முறையை ஒரு சிறிய தட்டச்சுகளில் எளிதாக்கியிருக்கிறது.

http://www.duckworth-lewis.com/Calculator/tabid/72/Default.aspx

என்கிற இந்த இணையதளத்தில் யார்வேண்டுமானாலும் கணக்கிடலாம்.

******************************
நன்றி -
இணையம் - Google,Wikipedia.org, Surreydowns.com ,BBC, duckworth-lewis.com , book - a comprehensive Guide to D/L method .

எ.வீ.ஜ-3 - சேவக்கின் சிக்ஸர் மழையும் பில்லுபார்பரும்...




ஒரு குறள் -

பீலி பெய்சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.



பா.ராகவனின் 'எக்ஸலன்ட்' புத்தகம் வாசித்தேன். வான்கோழி,தேனீ,ஆடு போல இது தன்னம்பிக்கை வளர்ப்பு புத்தகம். புத்தகம் எக்ஸலன்ட் என்று சொல்ல இயலாவிட்டாலும் நன்று. புத்தகம் நெடுக உன்னதம் என்கிற வார்த்தையை பயன்படுத்தியிருந்தாலும் ஏனோ ஆங்கிலத்தில் எக்ஸலன்ட் என்று தலைப்பு. இது போன்ற புத்தகங்களில் பல நிஜவாழ்க்கை வெற்றிநாயகர்களின் கதைகள் இடம் பெறும். புத்தகம் முழுக்க வெற்றி நாயகர்களாய் அவர் சித்தரிக்கும் பலருடனும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. அது மிகப்பெரிய பிரச்சனை. அது பிறகு. ஆனால் புத்தகமெங்கும் பாராவின் அடாவடி நடை. எழுத்திலேயே ஹீரோயிசம் காட்டுகிறார். இந்த புத்தகம் மட்டுமல்ல அவருடைய பெரும்பாலான புத்தகங்களில் நான் கவனிக்கின்ற ஒரு விடயமது. தொடை தட்டி மீசை முறுக்கிக் கொண்டு தூள் படத்தில் விக்ரம் பேசுவாரே அது போன்றதொரு தொணியில் எழுதுபவர். சமயங்களில் படிக்கும் நமக்கு ஏக கடுப்பாகிறது. யோவ் போதும்யா நிறுத்துயா என திருப்பி திட்டிவிட தோன்றுகிறது. அவரைப்போலவே அவரது பாணியை பின்பற்றி எழுதும் கிழக்கின் பிற புத்தகங்களிலும் அதே மாதிரியான நடையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அது ஒரு வித சலிப்பை உண்டாக்குகிறதோ என்றே தோன்றுகிறது.



பா.ராகவனின் ' எக்ஸலன்ட்' புத்தகத்தில் இருந்து



''எத்தனை பெரிய வெற்றியாக இருந்தாலும் மனிதகுலத்துக்கு அதனால் உபயோகமில்லாவிட்டால் அது ஒர் உன்னத சாதனையாக கருதப்படாது''



வலையுலகில் அதைப்போன்று அடாவடியாகவும் அதிரடியாகவும் எழுதுபவர் (பின்னூட்டம் உட்பட) கே.ரவிஷங்கர்.பலரது பதிவுகளிலும் பின்னூட்டங்களில் 90 சதவீதம் யாருமே உண்மையான விமர்சனங்களை வைப்பதில்லை என்கிற எண்ணம் எனக்குண்டு. பின்னூட்டங்கள் நட்புக்காகவும் , நம்மை சிலர் கவனிக்கவேண்டும் என்பதாகவுமே பெரும்பாலும் இருந்துவிடுகிறது. பின்னூட்டங்களில் உண்மையான விமர்சனங்களின் பங்கு ஐந்து சதவீதம் கூட இருக்காது. இவரோ யாரையும் விட்டுவைப்பதில்லை. தவறு என்று தெரிந்தால் கட்டாயம் சுட்டிக்காட்டுகிறார். அது சில சமயம் எரிச்சலூட்டுவதாக இருந்தாலும் நிதர்சனம் அதுதானே. அவர் மீதான உண்மையான விமர்சனத்தையும் எதிர்பார்க்கிறார். கவிதை,கதை,கட்டுரை என சிக்ஸரும் ஃபோருமாக அடித்து விளாசும் சுஜாதா தாசரான அவரது வலைப்பூ இங்கே...




வீரேந்திர சேவாக் நியூஸிலாந்து அணியை அடித்து துவைத்துக்கொண்டிருந்தார். அவர் அடிக்கும் சிக்ஸர்களில் வான் பிழந்து மேட்ச்சுக்கு நடுநடுவே மழை பெய்து கொண்டிருந்தது. நாலாவது ஒரு நாள் போட்டி அது. ஒவ்வொரு அடியும் மின்னலாய் விழுந்து கொண்டிருந்தது. மேட்ச் இடைஇடையே மழையால் பாதிக்கப்பட்டு சேவக்கும் காம்பீரும் டிரஸ்ஸிங் ரூமுக்கும் மைதானத்துக்குமாய் நடந்து கொண்டிருந்தனர். ஆனாலும் தங்களது கவனம் சிறிதும் சிதறாமல் நியூஸியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தனர் . ஒரு வழியாக மேட்ச் முடிந்தது. இந்தியா 84ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டது. பலவருடங்களுக்குப் பிறகு நியூஸியில் ஒரு! ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டது. வாழ்த்துக்கள். தோனியின் வெற்றித்தொப்பியில் மேலும் ஒரு இறகு.




தோழர் ஒருவர் போனில் அழைத்து '' யோவ் இந்த டக்வொர்த் லூயிஸ்னா என்ன '' என்று கேட்டார். நானும் '' ஆமா அப்படினா என்ன ? '' திருப்பிக்கேட்டேன்....



அதை என்னிடமே பலவருடமாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பலரும் அதைதான் ஒவ்வொரு முறை இந்தியஅணி டி/எல் முறையில் தோற்கும்போதும் கேட்டுக்கொள்வர். நானெல்லாம் இந்த முறையால் இந்தியஅணி தோற்கும்போதெல்லாம் அந்த டக்வொர்த்தையும் லூயிசையும்(பாவம்!) சபித்திருக்கிறேன். நீங்களும் அதை செய்திருக்கக்கூடும். ஆனால் இந்தியா வெல்லும்போது அவர்களை பாரட்ட ஏனோ மனது வருவதில்லை..(இந்த முறை பாராட்டிக்கொள்வோம்). சரி அது என்ன கம்பசூத்திரம் என டக்வொர்த் முறை குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். மிகசுவாரஸ்யமான கணக்கு அது. கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியதும். ஆராய்ச்சி முடிவுகளின் அளவு மிகுந்து விட்டதால் நாளை தனிப்பதிவாகப் போட உத்தேசம்.



ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பிரானா(piranha)வைப்

பற்றி சில சுவாரஸ்மான தகவல்களை பகிர்ந்துகொண்டார். உங்களுக்கு பார்பர் பிஷ் ஐ தெரியுமா என்றார். என்ன சார் அந்த மீன் முடிலாம் வெட்டிவிடுமா என்றேன். பிரானாவைத்தான் அமேசான் நதிக்கரை பழங்குடிமக்கள் பார்பர் பிஷ் என்று அழைப்பது வழக்கமாம். அந்த மீனின் பல் வரிசை மேலும் கீழுமாக ஒரே வரிசையில் இருக்குமாம். அவை கடிக்கும் போது ஒரு கத்திரிக்கோலின் இயங்குமுறையில் இயங்குவதால் முடிவெட்ட எளிதாக இருக்குமாம். மிஷின் கட்டிங் செய்வதைப்போல.





அதன் மண்டை ஓட்டை கொண்டு முடிவெட்டும் முறை பல நூறு வருடங்களாக அங்கே பழக்கத்தில் உண்டாம். பிரானாவைக் குறித்து ரூஸ்வெல்ட் எழுதும் போது அதை ஒரு கொடிய பயங்கரமான விலங்காகவே அறிமுகம் செய்தாராம். மக்களுக்கும் பல காலம் அவை குறித்த பயம் இருந்ததாம். ஆனால் இயல்பில் அவை சாதுக்களாம். தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே தனது கூரிய பற்களால் எதிரியை வீழ்த்துமே தவிர அவை வேட்டையாடுவதில்லை. சென்றமுறை நண்பர்கூட அங்கேதான் முடிவெட்டிக்கொண்டாராம். ரஜினி மாதிரி எல்லாம் ஸ்டைலாக வெட்ட இயலாதாம் மிலிட்டரி கட்டிங் மட்டும்.


பில்லுபார்பர் என்றொரு இந்தி திரைப்படம். குசேலன் திரைப்படத்தின் தழுவல். இல்லை இல்லை கத பறயும் போல் திரைப்படத்தின் தழுவலாம். சில மாதங்களுக்கு முன்னால் பில்லுபார்பர் படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் குசேலன் பற்றிக்கூறும் போது பி.வாசு ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று வசைமாறி பொழிந்தார். பில்லு பார்பர் படம் பார்க்கும் போது பி.வாசுவிற்கு தேசியவிருதே கொடுக்கலாம் என தோன்றியது. ஷாருக்கான் நடித்த படமென்பதால் அந்த குப்பையைப் பார்த்து தொலைக்க வேண்டியிருந்தது. என் காதலி ஷாருக்கான் பைத்தியம்.



ஒரு மாணவன் பரிட்சை முடிவுகள் பார்க்க கல்லூரிக்கு வருகிறான். நோட்டிஸ் போர்டில் வரிசையாக ஒவ்வொரு பெயராக பார்க்கிறான். அவனது வகுப்பில் பலரும் தேர்ச்சி பெறவில்லை. மிகசோகமாக அவனது பெயரைத்தேடி கையால் ஒரு ஒரு பெயராக கடந்து வருகிறான். அவன் மட்டும் பாஸ். அதிர்ச்சி. அவனால் இருப்பு கொள்ளவில்லை. அதை உடனே கத்தி கதறி ஊரே கேட்க சொல்ல வேண்டும் போல் இருக்கிறது . சுற்றும் முற்றும் பார்க்கிறான். சுற்றிலும் யாரும் இல்லை. அவனால் அந்த மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. யாரிடமாவது சொல்லத் துடிக்கிறான். வோடோவோன் - உலகத்திற்கே சொல்லுங்கள் இப்போது அனைத்து லோக்கல் கால்களும் 30 பைசா மட்டுமே. மிக அருமையான விளம்பரம்.



இரண்டுவருடங்களுக்கு முன்னால்..யாருமில்லா பீச்சில் தனியாக நின்று கொண்டிருக்கும் போது, நான் வெகுநாளாய் ஒருதலையாய் காதலிக்கும் பெண் திடீரென போனில் அழைத்து ஐ லவ் யூ சொல்லிவிட்டு உடனே அழைப்பை துண்டித்துவிட்டாள்.. பீச்சில் யாருமே இல்லை. சமீபத்தில் , அவளுக்கு திருமணமாம் அழைப்பிதழ் வந்தது. வீட்டில் யாருமே இல்லை.


கிழக்குப்பதிப்பகம் தனது ஐந்தாம்ஆண்டு நிறைவையொட்டி சென்னையின் பல இடங்களிலும் சிறப்புத்தள்ளபடியுடன் புத்தகக்கண்காட்சியை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட சிலபல புத்தகங்கள் 50% சதவீதத்திற்கும் மேல் தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது. மகிழ்ச்சியான செய்தி. நானும் மயிலாப்பூரில் நடந்தபோது சில்க் ஒரு பெண்ணின் கதை மற்றும் நான்வித்யா புத்தகம் வாங்கினேன்.




சகாயவிலையில் நூல்கள் கிடைக்கும் இந்த புத்தகக்கண்காட்சி ஏனோ மயிலாப்பூர்,மடிப்பாக்கம் இப்போது டிநகர்(மாம்பலம் மிக மிக அருகில் , அடுத்து தி.கேணியாக இருக்கலாம் ) என சென்னையின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நடைபெறுவதை கவனிக்க முடிந்தது. அந்த இடங்களைக் குறித்து நான் அதிகம் சொல்லத்தேவையில்லை. அவாள்கள் சாரி சாரி , அவர்கள் மட்டும்தான் அதிகம் புத்தகம் வாங்குகிறார்களா? அவாளுக்குத்தான் (புத்தகம்) வாங்கும் சக்தி அதிகமிருக்கிறதா? மற்றவர்கள் புத்தகங்கள் வாங்குவதில்லையா? என்னமோ..


நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் நேற்று காலமானார். சுருளிராஜன் மற்றும் கவுண்டமணியோடு இணைந்து அவர் செய்த காமெடிகள் மிக அற்புதமானவை. அவ்வையார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி உட்பட பல மொழிகளிலும் 1500 படங்களுக்கும் மேல் நடித்தவர். ஆங்கிலபடமொன்றிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பதிவர்கள் சார்பாக அஞ்சலிகள்.

12 March 2009

குட்டிக்குட்டியா இரண்டு...........!

உலகசுற்றுலாவும் உத்தமக்காதலும் -



''அப்பா , நாம வேர்ல்ட் டூர் போயிட்டு வந்ததிலிருந்து ஏன் என்னோட சரியாவே பேசமாட்டேன்றீங்க'' கையில் தனது இரவு உணவை முகர்ந்துகொண்டே வினவினாள் அவள்.

''பிடிக்கலைமா.. அங்க போயிட்டுவந்ததிலிருந்து உன் போக்கே எனக்கு பிடிக்கலைமா'' மணிரத்னம் படபாணியில் பதில் சொன்னார் அப்பா தன் நீலக்கண்களை உருட்டியபடி.

''ஏன்ப்பா பிடிக்கலை, அவனுக்கு என்ன குறைச்சல் நல்லா மூக்கும் முளியுமா.. நல்ல கலரா.. உடம்புல எந்த குறைபாடும் இல்லாம நல்லாத்தானே இருக்கான்.. வேற என்ன எதிர்பார்க்கறீங்க''

''அவனும் அவன் பேச்சும் செயலும்... நம் இனம் குறித்த அவன் பார்வையும் சரியே இல்லமா.. நம்ம இனத்தை ரொம்ப கேவலமா நினைக்கிறான்.. அவனும் அவன் காதும் மூக்கும்..சகிக்கல''

''அப்பா இனம் என்னப்பா இனம் நாம எல்லாருக்கும் உயிர் ஒன்னுதானே, வெறும் உடம்பு அழகுதான் முக்கியமா?''

''ஆயிரம்தான் இருந்தாலும் அவன் அந்நியன்மா''

''அப்பா இதுக்கு பேரு காதல்னு அவன் சொன்னான்... அப்படி ஒன்னு இருப்பதையே அவன் சொல்லித்தானே எனக்கு தெரியும் . உண்மையான காதலை எனக்கு உணர்த்தினவன் அவன்தான்ப்பா.. என்னால அவன் இல்லாம வாழவே முடியாதுப்பா''

''காதலாம் காதல்.. அவன் இனத்திற்கு அப்படி ஒன்னு இருக்கறது தெரிஞ்சிருந்தா அழிஞ்சு போயிருக்க மாட்டாங்க''

''சரி விடுங்க நான் எவ்ளோ சொன்னாலும் கேக்கமாட்டீங்க , நான் வாழ்ந்தா அவனோடதான்ப்பா வாழ்வேன்.. இதுதான் என் இறுதி முடிவு''

''உனக்கு நம் இனத்தோட சட்டம் தெரியுமில்லை... அந்நியர்கள காதலிக்கவோ அவர்களோட உறவு வச்சுக்கவோ கூடாதுனு தெரியாதா?, அதுவுமில்லாம அவங்க இடத்தோட சீதோஷ்ண நிலை உனக்கு சரியாவராதுமா.. நீ செத்துடுவம்மா...புரிஞ்சுக்கோ''

''என் உயிரே போனாலும் எனக்கு கவலையில்லப்பா நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் . மனசும் மனசும் ஒன்னு சேர்ந்த பிறகு சட்டம்,வானிலையும் என்ன செஞ்சுடும்''

''வேற இனமா இருந்தாக் கூட நம்ம தலைவர் ஒத்துப்பாரு.. ஆனா அவன் இனம் மிக மோசமானது.. அவங்க கிரகத்தில ஓசோனில் ஓட்டை போட்டவங்க.. நீர்வளத்தை முழுசா வீணாக்கினவங்க.. அவனை நம் கிரகத்தில் கூட அனுமதிக்க முடியாதம்மா... அவர்களது நிலம் வெப்பமடைந்து உச்சமடைந்து விட்டது...இன்னும் கொஞ்சநாள்ல பூமிக்கிரகம் அழிஞ்சிரும்மா.. அது நாளைக்கே கூட நடக்கலாம்...''

''இதுக்கு மேல் ஏதும் பேசாதீங்கப்பா..நான் ஒரு விநாடியேனும் அவரோடு வாழ்ந்து மடிகிறேன்... நான் போகிறேன்''

T-LEXI என்னும் செவ்வாய்கிரகவாசியான அவள் நினைத்தமாத்திரத்தில் நினைத்த இடத்திற்குச் செல்லும் டெலிடிரான்ஸ்போர்ட்டிங்ல் மிப்ளமோ பட்டம் பெற்றவள். உடனடியாக அதை பயன்படுத்தி பூமியில் இருக்கும் வினோவை நோக்கி தன் உடலை செலுத்தினாள்.








************************************************************************************




வெள்ளைக்கொசுவும் அதன் குசுவும்



தடதடதடதடதடதட ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அந்த விண்கலம் தட்டையாகவும் இல்லாமல், வட்டமாகவும் இல்லாமல் ஒரு அகோணமாக அதவாது உருவமென்று சொல்ல இயலாத ஒரு உடைந்து போன கல்லைப்போல சுழன்று கொண்டே தரையில் இறங்கியது. இறங்கும்போதே தன் உடலைச்சுற்றிலும் சிலநூறு கால்களை சிலந்திபோல இறக்கிக்கொண்டே வந்தது.

அந்த விண்கலத்திற்கு முன்பக்கம் என்று ஏதும் இருந்திருக்கவில்லை. ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து ஒரு வெள்ளை நிற ஒளி தகதகவென அடித்து விரட்ட .. அந்த விண்கலம் காரித்துப்பியதைப்போல நாலைந்து குட்டிகுட்டி ஜந்துக்கள் எகிறி குதித்தன.

முதல் பச்சை நிற ஜந்து சொன்னது '' கேட்டீ இந்த கிரகம் ரொம்ப நல்லாருக்கே.. நல்ல மணம் வீசுது.. உயிர்கள் இருக்கறதுக்கான அறிகுறிதான் தெரியல''

''ஆமாம் ஜேட்டீ.. ஆனா ஆக்ஸிஜன் நிறைய இருக்கு.. நீரும் இருக்கு.. ஆனா ஒரு உயிர்கூட காணலையே''

''நம்ம தலைவரோட மகளும் ரீட்டீயும் இந்த கிரகத்துக்குத்தான் ஓடிவந்திருக்காங்க...உடனே தலைவருக்கு செய்தி அனுப்பு ''

டிக் டிக் டிக்... டிகிடிக் டிகிடிக் டிகிடிக்

''அனுப்பிட்டேன் மேட்டீ''

''மேட்டீ நம்ம தலைவர் இந்த அவங்களை என்ன பண்ணுவாரு''

''என்ன பண்ணுவாரு ஏற்கனவே புடிச்ச கிரீட்டீ.ஜீட்டீ...மீட்டோடீ மாதிரி இந்த ரீட்டீயையும் கொன்னுருவாரு... நமக்கு பதவி பட்டம் எல்லாம் உண்டு கவலைப்படாதே.. மறுபடியும் தலைவர் மகள் யாரோடவாவது ஓடிட்டா மறுபடியும் விரட்டனும்.. ம்ம் என்ன காதலோ..''

''ம்ம் இந்த அற்புதமான கிரகத்திற்காவது என்னை தளபதியாக்கனும்.. அப்படிமட்டும் ஆக்கிட்டா நான் என் மனைவிய இங்கயே கூட்டிட்டு வந்து ஜாலியா இருப்பேன்.. தலைவர் மகள விரட்டவேண்டிய வேலை இருக்காது '' மனதிற்குள் அவங்க ஊரு அதிருட்டிஆயியிடம் வேண்டிக்கொண்டிருந்தான் மேட்டீ அவனுக்கு ஏதோ கெட்ட நாற்றம் வருதைப்போல இருந்தது.
அது என்ன நாற்றம் என சுற்றும் முற்றும் பார்ப்பதற்குள் அவர்களை நோக்கி நிறைய விஷதுகள்கள் அடங்கிய பலமான காற்று புயல் வேகத்தில் வீசியது. அதில் அந்த விண்கலம் உட்பட அனைவரும் வெடித்து சிதறினர்.

''எந்த மனுசனோட ரத்தத்தை குடிச்சனோ.. வயிறே சரியில்ல.. இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு..ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...'' என்றபடியே பறந்துசென்றது அந்த வெள்ளைக்கொசு. ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என சத்தமிட்டபடியே...தனது காதலியைத் தேடி பறக்கத்துவங்கியது.

08 March 2009

எ.வீ.ஜ-2 - ஜே.கே.ரித்தீஷ்,கிரிக்கெட்,அப்துல் ஜப்பார் மற்றும் பலர்


எதிர்வீட்டு ஜன்னல்கள் - 2


ஆயிரம் பேர் இருக்கும் சபையிலும் என்னை தனிமையாக உணருகிற ஏதோ ஒரு ஆழ்மன சிக்கல் என் மனதில் விபரம் தெரிந்ததிலிருந்தே இருக்கிறது. அதன் மனவருத்தம் எனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் உச்சம் பெரும். நமக்கு வாழ்த்துக்கூற ஒரு ஜீவன் இல்லையே என்பதாக. இம்முறை அது அப்படியில்லை. என் வலைப்பதிவின் மூலமாக மட்டுமே அறிமுகமான நண்பர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியிருக்கிறது. அதில் 200க்கும் மேல் வெவ்வேறு வடிவங்களில் தன் வாழ்த்தினை தெரிவித்தது மிக மகிழ்ச்சியாய் இருந்தது. '' நான் தனி ஆள் இல்ல'' என்பதை புரியவைத்த மார்ச் 6 இது . மார்ச் 6 என் அல்லது நான் பிறந்தநாள்!

மார்ச் 5 பதிவுலகில் மிகப்பிரபலமான அல்லது பதிவுலகால் பிரபலமான நடிகர் ஜேகே.ரித்திஷின் பிறந்தநாள். நல்லவேளையாக மார்ச் 6 இல்லை. அன்னார் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ அனைத்து பதிவர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்த்துப் போஸ்டர்கள் வடபழனி ஏரியாவையே ஆட்டி ஓட்டி துவட்டி துண்டை கழட்டியது. சில பல போஸ்டர்கள் மிக சுவாரஸ்யமாக இருந்தது. பாஸிட்டிவ் பப்ளிஷிட்டி , நெகட்டிவ் பப்ளிஷிட்டி என்பதையெல்லாம் தாண்டி வித்தியாசமான காமெடி பப்ளிஷிட்டியால் வளர்ந்து வரும் அவர் விரைவில் தமிழக முதல்வராகவோ அல்லது அமெரிக்க அதிபராகவோ ஆகி தமிழரின் துயர் துடைக்கவில்லையென்றாலும் எதையாவது துடைக்க அனைவரும் வாழ்த்தி வணங்குவோம்.

எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து ஸ்டார்கிரிக்கெட் என்பது வெள்ள நிவாரணம், போர்க்கால நிதி , பூகம்ப நிதி என்கிற அளவிலேயே இருந்துவந்தது. கார்கிலுக்காக ஒரு போட்டி நடந்தபோது நேரில் பார்த்திருக்கிறேன். ஸ்டேடியம் முழுக்க மக்கள் வெள்ளம். அதற்கு பின் சென்றவாரம் மார்ச் 7 அன்று எந்த காரணமும் இன்றி முதல்வர் நிவாரணநிதிக்காக(ஜே.கே.ஆர் மற்றும் அதிஷா பிறந்தநாளிற்காகவும்) ஒரு ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஜே.கே.ரித்திஷ்குமார் அவர்களின் (செலவில்?) ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது அதில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். இதில் இதுதாண்டா போலீஸ் ராஜசேகர் தலைமையில் ஆந்திர நடிகர்கள் அணியும் ஜே.கே.ரித்திஷ் தலைமையில் ( எ.கொ.சார் இது! ) தமிழக நடிகர்கள் அணியும் மோதின. இதில் தமிழக அணி அபார வெற்றிபெற்றது. ஸ்கோர் விபரங்கள் தெரியவில்லை. தெரிந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆட்டத்தை மொத்தமாய் 150பேர் பார்த்ததாக தெரிகிறது, என்னையும் சேர்த்து 151. அவர்களது கைகளில் ரித்திஷின் வாழ்த்து போஸ்டர்கள் இருந்ததாகவும் தெரிகிறது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான இப்போட்டியை சின்னிஜெயந்தும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல்ஜப்பாரும் தொகுத்து வழங்கினர்.

சென்னை வானொலியில் இரண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள்(அல்லது வர்ணனையாளர்கள்) பெயர்கள் தமிழகபிரசித்தம். ஒன்று சரோஜ் நாராயணசுவாமி மற்றொன்று அப்துல்ஜப்பார். எனக்கு கிரிக்கெட்டை முதன்முதலில் கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அவர். கீழ்த்தட்டு நடுத்தரவர்க்கத்தினரின் வீடுகளில் வானொலிகளால் நிறைந்திருந்த 1990களின் ஆரம்பத்தில் கிரிக்கெட் தெரியாத ஒரு கிராமத்து சிறுவனுக்கும் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாய் கற்றுக்கொடுத்த குரலது. அவரது கிரிக்கெட் வர்ணனைகளில் தெரித்து ஓடும் தமிழ் இன்னும் பலருக்கும் மறந்திருக்காது. கிரிக்கெட்டின் பல விடயங்களுக்கும் தமிழில் எளியோருக்கும் விளங்கும் வண்ணம் அவர் மொழிபெயர்த்த வார்த்தைகள் எண்ணிலடங்கா.பீல்டிங்கை வியூகம் என வர்ணிக்கும் பாங்கே அதற்கான சாட்சி. அவரை அசிங்கப்படுத்துவது போல ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் சின்னிஜெயந்துடன் ஒப்புக்கு சப்பாணியாக ஒரு லெஜண்டை பேச வைத்தது வருத்தமாக இருந்தது.

ICC (international cricket council) தனது நூறாவது வருடத்தை இவ்வருடம் கொண்டாடி வருகிறது. 1909ல் imperial cricket council என்கிற பெயரில் ஆஸ்திரேலியா,தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு பின்னால் ஐசிசி ஆக கிரிக்கெட் ஆடும் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து 1965ல் துவக்கப்பட்டது அப்போது அந்த அமைப்பின் பெயர் international cricket conference . 1989ல் அது இப்போதிருக்கும் ஐசிசி ஆக பெயர்பெற்றது குறிப்பிடத்தக்கது. 104 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.

பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அணியின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதில் காயமடைந்த இலங்கை கிரிக்கெட் அணிவீரர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் . அவர்கள் விரைவில் குணமடைந்து மீண்டும் மட்டையையும் பந்தையும் பிடித்து விளையாட ஆண்டவனை வேண்டுகிறோம். அதே வேளையில் இன அழிப்பில் மும்முரமாய் இறங்கி இருக்கும் இலங்கை ராஜபஜ்ஜி அரசால் ஈழத்தில் தமிழின மக்கள் கொத்து கொத்துதாய் செத்து மடிகையில் கொழும்புவில் இந்திய அணியுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்த இலங்கை அணி வீரர்களுக்கு இனியாவது வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் மணமும் துயரமும் தெரியட்டும். தன் சொந்த மண்ணில் செத்து மடியும் சக இலங்கை பிரஜைக்காக இனியாவது கால் டீஸ்பூன் சிந்திக்கட்டும். ( இங்கே இந்திய அணியை நம்மால் விமர்சனம் செய்ய இயலாது.. சொந்த நாட்டினருக்கே இல்லாத அக்கறையை மொழிவாரியாய் அடித்துக்கொண்டு கிடக்கும் இந்தியாவிடம் எதிர்பார்ப்பது மூடத்தனம்... இரண்டாவது தேசியத்திற்கெதிராக பேசினாலோ எழுதினாலோ உடனடியாக இங்கே கைது செய்யப்படும் அபாயம் இருக்கிறது)

சக வலையுலக நண்பரின் திரைப்படவிமர்சனம் ஒன்றிற்க்கு சென்ற வாரம் வந்த பின்னூட்டத்தைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். ''ஈழத்தில் மக்கள் செத்து மடிகிறார்கள் உங்களுக்கு சினிமா விமர்சனம் கேட்கிறதா!! '' என்று அந்த பின்னூட்டத்தில் அனானியாக வந்திருந்தது. அவரிடம் இது குறித்த கேட்டபோது யாரோ பிரான்சிலிருந்து அப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருப்பதாக சொன்னார். அவர் கொண்டைகளை கண்டறிவதில் வல்லவர். அந்த பின்னூட்டத்தின் தர்க்கம் விளங்கவில்லை.

சிலபல பதிவர்களின் அரசியல் பதிவுகளை காணநேர்ந்தது. பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் சமயம் என்பதால் மிகச்சூடான பல பதிவுகளும் அதை ஒட்டி இருந்தன. இது போன்ற பதிவெழுதுபவர்களில் பலரும் வெளிநாட்டினராகவும் வெளிமாநிலத்தில் வசிப்பவராக இருக்கின்றனர். பக்கம் பக்கமாய் தேர்தல் பதிவெழுதி விட்டு தனது வாக்கை வெளிநாட்டில் இருந்துகொண்டு எப்படி பதிவு செய்வார்கள் என்கிற கேள்வி எழுந்தது.. தன் ஓட்டைக்கூட போட முடியாத..... ச்சூ ச்சூ .... அதெல்லாம் நீ ஏன் கேக்கற என்று பிரகாஷ்ராஜ் வாய்ஸ் ஒன்று இப்போதெல்லாம் அடிக்கடி வந்து பயமுறுத்துகிறது...


சமீபத்தில் பதிவெழுதுவதை நிறுத்திவிட்ட ஒரு உடன்பிறப்பிடம் ( லக்கிலுக் அல்ல, இவர் வேறு) யாரோ ஒரு வாசகர் திமுகவின் வலையுலக தூண் தாங்கள்தான் நீங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டால் திமுகவிற்காக யார் எழுதுவார்கள் என்று கண்ணீர்விட்டு கதறியிருக்கிறார். திமுகவில் மிக உயரிய பதவியில் இருக்கும் அவரோ ''யோ போயா வெண்ணை வெறும் 3000 ஓட்டுக்காக நைட்டும் பகலும் உக்காந்து வலைப்பதிவு போடறத விட 30000 கள்ள ஓட்டு போட்டு ஜெயிச்சுக்குறோம்யா '' என்றிருக்கிறார். '' அதோடு விடாமல்.. விஜயகாந்தைப் போல கணக்கும் கூற ஆரம்பித்துவிட்டார். '' தினமும் வலைப்பதிவுகள் படிக்கறவன் 3000 பேர்.. இதுல அரசியல் பதிவு படிக்கிறவன் 2000 பேர்.. இதுல வெளிநாட்டிலருந்து படிக்கறவன் 1000 பேர்.. அதுல பாதி பேரு அதவாது 500 பேரு வெளிநாடு மற்றும் உள்நாட்டு இலங்கைத்தமிழன்.. மீதி 500 பேர்ல 300 பேர்தான் தமிழ்நாட்டில் இருக்கான்.. அந்த 300 பேர் ஓட்டுக்காக ... '' எனக்கு தலைசுற்றியது .


டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஓட்டளிப்பது குறித்த ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை துவங்கியிருப்பதாக தெரிகிறது . அது குறித்த மேலதிக தகவல்கள் தந்தால் அடுத்த வாரங்களில் எழுதுகிறேன்.


இன்று மார்ச் 9 ( பௌர்ணமியாம்) , இன்று காலையிலிருந்து ஈழத்தமிழருக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதாக தெரிகிறது. கடைசித்தகவல் இலங்கைத்தமிழரின் தனிநாடு கோரிக்கையை தான் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளாராம்! . அடடே!!


சுஜாதாவின் 'ஏன் எதற்கு எப்படி'யில் ஒரு கேள்வி-


கே - பெண்களுக்கு ஏன் பின்புறம் ஆண்களைவிட பெரிதாக இருக்கிறது ?



பதில் - அவசியம்தான் , பெண்களில் பயலாஜிக்கல் ரோல் பிள்ளை பெறுவது , அதற்காக அவர்களது பெல்விஸ் பகுதி சற்று அகலமாக இருக்கும்.ஆண்களின் கவனத்தை கவரும் இரண்டாம் பட்ச காரணமும் இருக்கிறது. கமல் ஒரு அறிவியல்ரீதியான காரணத்தை சொன்னார். ஆதிவாசிப்பெண்கள் தொடர்ந்து உணவில்லாமல் இருக்க நேரிடலாம் என்று பின்ப்பக்கத்தில் சதை சேர்த்து வைப்பார்களாம். கொழுப்பு சேர்ந்திருப்பதால் அவர்களால் காந்தியை விட அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருக்க இயலுமாம்.



சமீபத்தில் ஒரு விளம்பரம் மிக மிக எரிச்சலூட்டியது . கேனத்தனமாக இருந்தது. அது தீ படத்தின் டிரெயிலர். அதில் ஹிந்துஸ்தான் பெட்ரால்பங்கில இந்துக்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் போடறாங்களா காதர்பாய் கடைல முஸ்லீம்கள் மட்டும்தான் கறிவாங்குறாங்களா என்பதாக இருந்தது. காறி துப்பியிருப்பேன். டிவி என்னுடையது. இது தவிர அந்த படத்தில் இடம்பெறும் இன்னும் பல காறி துப்ப.. கூடிய வசனங்களும் அடிக்கடி ஒளிபரப்பாவது கண்டு காரி காரி தொண்டை வலிக்கிறது.

காரித்துப்புவதில் உலக அளவில் இதுவரை 100 அடி தூரத்திற்கு துப்பியதே மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது என்று அமெரிக்கன்ஸ்லைப்ரரி.காம் சொல்கிறது. விரைவில் அந்த சாதனை தமிழர்களால் முறியடிக்கப்படலாம்.

சென்றவார எதிர்வீட்டு ஜன்னலைப்படித்த பலரும் ஏன் வாரம் ஒன்று எழுதவேண்டும் வாரமிறுமுறை எழுதலாமே என்று கேட்டுக் கொண்டனர். கம்பேனியில் கம்பியை பழுக்க காய்ச்சி என் மெல்லிய உடலில் துளையிருக்கும் இடமெல்லாம் விட்டு குடைந்து வேலை வாங்கி வருகின்றனர். அதனால் வாரத்திற்கு ஒரு பதிவு போடுவதற்கே தாவூ தீர்ந்து டவுசர் கிழிகிறது. இருந்தாலும் என்னால் முடிந்தவரை வாரம் இரு முறை முயல்கிறேன்.



சமீபத்தில் படித்ததில் மிகவும் பிடித்த பதிவுகள் சில..


டாக்டர் ருத்ரன் அவர்களின் ஆன்மீகசந்தை ( வினவின் தமிழாக்கம்) தொடர்...

www.vinavu.wordpress.com/2009/03/06/gurus/

பாலுணர்வு புணர்ச்சி விதிகள் ( கண்டிப்பாக வயதுவந்தோர்க்கு மட்டும்)

http://tamil-uyir.blogspot.com/2009/03/blog-post_06.html
செந்தழல்ரவியின் அடாவடி பேட்டி - மோகன் கந்தசாமியின் வலைப்பூவில்
http://mohankandasami.blogspot.com/2009/03/blog-post_05.html

**********************************************************************************

பலமுறை சொல்லியும் கேளாமல் அளவுக்கதிகமான அன்போடு தனது நட்சத்திர வாரத்தில் எனக்காக ஒரு பதிவிட்டு வாழ்த்துச்சொன்ன வால்பையனுக்கு - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு . நேரிலும் போனிலும் மின்னஞ்சலிலும் ஆர்குட்டிலும் வால்பையன் பதிவிலும் எனது கடைசி பதிவிலும் எனக்கு வாழ்த்துச்சொல்லிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

05 March 2009

எதிர்வீட்டு ஜன்னல்கள் - 1


ஷகிலா படங்கள் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் சமீபத்தில் முகப்பேர் கோல்டன்ஈகிளில் ' இளமை இளமை ' படம் பார்க்க நேர்ந்தது. அதே ஆண்மையில்லா கிழவனின் மனைவியின் விரகதாபத்தை சொல்லும் கதை. ஏற்கனவே பார்த்த படங்களின் பல காட்சிகள் வெட்டி ஓட்டப்பட்டு ஒரு புதிய படம் போல் ஆக்கியிருந்தனர். இன்டர்வெல்லுக்கு முன்னால் டபுள் எக்ஸ்பிட்டு ஒன்று இடம் பெற்றது. டிக்கெட் விலை 15ரூபாய். கொடுத்தகாசுக்கு காட்டினார்கள். பரங்கி மலை ஜோதி தியேட்டரை பிரமிட் நிறுவனம் கைப்பற்றியதிலிருந்து தியேட்டரில் சாதாரண தமிழ்ப்படங்கள் மட்டுமே இடம் பெறுகிறதாம். கடைசியாக அங்கே பார்த்தபடம் தி அதர் சைட்ஆப் வுமன் , பிட்டே இல்லை.

போன வாரம் இரவு பத்து மணிக்கு தோழரை சந்திக்க டிநகர் வரைக்கும் செல்லவேண்டியிருந்தது. தொடர்ந்து போன் பண்ணிக்கொண்டே இருந்தார் தோழர். அரைமணிநேராமாய் காத்திருக்கிறாராம். நான் அசோக்பில்லரிலிருந்து செல்ல வேண்டாமா? . தோழரைப்பற்றி சொல்லவில்லையே மிக நல்ல மனிதர். வாய் கொஞ்சம் ஜாஸ்தி. வாயைக்கொடுத்து ______ஐ புண்ணாக்கிகொள்வார்.

தோழர் ஒரு முறை டெல்லி சென்றிருந்தபோது ஜிலேபி சாப்பிட ஆசைப்பட்டு தனக்கு தெரியாத இந்தியில் ஜிலேபி பத்து ரூபாய்க்கு என கேட்டிருக்கிறார். அவரும் பத்துரூபாய்க்கும் ஜிலேபி என நினைத்து 20 ஜிலேபிகளை கையிலடைத்துவிட்டாராம். அதற்கு பின் வேறு வழியின்றி தனக்கு பிறந்தநாள் என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி சொல்லி அதை தள்ளிவிட்டாராம். ஹிந்தி தெரியாமல் தான் விழித்தக்கதையைக்கூட சுவாரஸ்யமாய் சொல்பவர். ஆனால் தீவிர திராவிடப்பற்றாளர். இந்தி எதிரிப்புதான் என் உயிர்மூச்சு என்பார்.

சமீபகாலமாக ஒரு பத்திரிக்கையாளராக தன்னை மாற்றிக்கொள்ள அரும்பாடுபடுகிறார். அதனால் அவரது வலைப்பூவில் எழுதுவதில் சுணக்கம் வந்துவிட்டதாம். தோழருக்கு திருமணமாகிவிட்டிருந்தாலும் மனதிற்குள் இன்னும் யூத்து என்கிற நினைப்பு மட்டும் போகவேயில்லை. எனக்காக டிநகரில் காத்திருக்கும் போது எனக்கு அவசரமாக போன் பண்ணினார். ''பாஸ் வருவீங்களா மாட்டீங்களா''
''தோழர் வந்துகிட்டே இருக்கேன் '' என்றேன்


''சீக்கிரம் வாங்க பாஸ்.. ஒரு வயசுப்பையன் தனியா ரோட்டில நின்னா போறவர பொண்ணுங்க ஒருமாதிரி பாக்கறாங்க பாஸ் , எனக்கு வெட்கமா இருக்கு ..அழகா பொறந்துட்டாலே கஷ்டம்தான் பாஸ், உங்களுக்கு இதெல்லாம் புரியாதென்றார் '' என்றார்..

''எனக்கு இது தேவைதான் '' என்றபடி பைக்கின் ஆக்ஸி...முறிக்கினேன்.

டிநகர் சென்று சேறும் போது மணி 10.35.

டிநகரில் அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா. மிக அருமையான உணவகம். கொஞ்சம் காஸ்ட்லி. மாத ஆரம்பத்தில் சம்பளம் வாங்கிய ஜோரில் செல்வதுண்டு. புல் மீல்ஸ் 90 ரூபாய் (சைட்டிஸ் சாப்பிடுவதில்லை) . சமீபகாலமாக அருகில் இருக்கும் டிசிஎஸ் ஸ்ளாஸ்ஸப்போர்ட் போன்ற கம்பெனிகளின் வரவால் மதியவேளைகளில் எப்போதும் கனஜோராக கூட்டம் இருக்கும். நிறைய ஐடி பெண்கள் வருவதுண்டு. சாப்பாட்டைவிட அந்த பெண்களை காணவே அதிகம் அங்கே செல்ல விரும்புவேன்.

அந்த கடையின் உரிமையாளர் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான சமையல்காரராக இருந்தவராம். ஹோட்டலெங்கும் எம்.ஜி.ஆர் படங்கள். மெல்லிய சத்தத்துடன் எம்.ஜி.ஆர் தத்துவப்பாடல்கள். டிநகர் ஜி.என்.செட்டி ரோடிற்கு செல்லும்போது ஒரு முறை முயற்சித்துப்பார்க்கலாம். பர்ஸில் நிறைய பணத்துடன் செல்வது உத்தமம்.

அதேபோல ''ஒரு சோறு'' என்றும் ஒரு கடை இருப்பதாக நண்பர் கென் கூற கேட்டதுண்டு. தற்காலத்தில் அரபுநாட்டு அழகிகளோடு பணிபுரியும் நண்பர் கென் , நான்,கிருஷ்ணா என மூவரும் ஒரு நாள் சாருவை அழைத்துச்செல்ல திட்டமிட்டு சாரு தனது பத்து புத்தக வெளியீட்டில் அந்த சமயத்தில் பிஸியாக இருந்ததால் கைவிடப்பட்டது. சாருவிற்கு அந்த உணவகம் மிக பிடித்த உணவகமாம். சாருவின் சாப்பாட்டுக்கதைகள் உலகப்பிரபலம். அதனால் அவருக்கு பிடித்த உணவகம் நிச்சயம் சிறந்ததாக இருக்கலாம். ஒரு சோறு திட்டம் குறித்து சாரு மறந்திருக்கக் கூடும். ஞாயபகப்படுத்தவேண்டும்.

மார்ச் மாத உயிர்மை இதழ் நேற்றுதான் வீட்டிற்கு வந்தது. எப்போதும் வீட்டிற்கு இதழ்வரும் சமயத்தில் எல்லாம் அம்மா அதை ஒரு நாளும் அதன் மேல் அட்டையை ( பிளாஸ்டிக் கவர் ) பிரித்து பார்த்ததே இல்லை. எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஏன்டா இந்த லூசுக்கருமாந்திரத்தலாம் வாங்குற என்று. காசுக்கு புடிச்ச கேடு.. எடைக்கு போடக்கூட லாயக்கிலை என்றெல்லாம் திட்டுவதுதான் வழக்கம்.
இது மாதம் தோறும் தொடருகிற சமாச்சாரம்தான். ஆனால் இன்று காலை பார்க்கும் போது கவர் பிரிக்கப்பட்டிருந்தது. அம்மாவிடம் கேட்டேன். நான்தான்டா பிரிச்சேன். அட்டைல ஆர்யா படம் இருந்துச்சு அத பார்த்துதான் பிரிச்சேன், நான்கடவுள் விமர்சனம் படிச்சேன். ரொம்ப நல்லாருந்துச்சி. நான் நினைச்ச மாதிரியேதான் போட்டிருக்கு ,என்றார். எனக்கு தலை கிர்ரென இருந்தது. அம்மா எட்டாங்கிளாஸ் பெயிலானவர். ஆனால் நிறைய படிப்பவர். ஆன்மிகமும் சினிமாவும் உயிர் அவருக்கு. இலக்கியம் என்றால் காத தூரம் ஓடுபவர்.கடைசியாக பார்த்தபோது கோணல்ப்பக்கங்கள் படித்துக்கொண்டிருந்தார். சாருவின் விமர்சனத்தை படித்து சிலாகிக்கிப்பதை பார்க்கும் போது நான் இன்னும் வளரவேண்டும் என புரிந்தது.

நானும் சாருவின் நான்கடவுள் விமரிசனம் வாசித்தேன். மிகநேர்மையான விமர்சனம். ஆனால் கொஞ்சம் அளவுக்கதிகமாக புகழ்ந்து விட்டாரோ என்றே தோணியது. முக்கியமாக ஜெமோவையும் பாலாவையும் எப்போதும் திட்டுபவர் இம்முறை இதுவரை திட்டியதற்கெல்லாம் சேர்த்து பாராட்டியது போல் இருந்ததது. படத்தில் வரும் எல்லாபுகழும் இறைவனுக்கேவையும் , மாதாகோவில் குறித்தும் எழுதாதது ஏன் என்று தெரியவில்லை. சாருவின் மிக மோசமான விமர்சனமாகவே அது இருந்தது.எனக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை நான் வளர்ந்துவிட்டதாய் நினைத்துவிட்டேனோ என்னவோ?.

அவரது விமர்சனம் ஒரு நல்ல ஆன்ட்டி கிளைமாக்ஸ் போல் ஆனது பலருக்கும் வருத்தமளித்திருக்கும். எனக்கு அது அம்மா கிளைமாக்ஸ் ஆகிப்போனது.
அவர் அந்த படத்தை திட்டுவார் என்றே பலரும் எதிர்பார்த்திருக்கக்கூடும் என்னைப்போல.

நான்கடவுள் திரைப்படம் குறித்த பல கேள்விகளுக்கும் ஜெமோ தன்வலைப்பூவில் கூறியிருந்த பல பதில்களும் வெறும் சப்பைக்கட்டாக இருந்தது. பல கோடிகள் செலவளித்து எடுக்கப்படும் ஒரு படம் அதன் தயாரிப்பாளருக்கு கோடிகளில் வருமானம் தரவில்லையென்றாலும் கோவணத்தை அவிழ்க்காமல் இருந்தால் நலம். ஆனால் இந்தப்படம் போட்ட காசை எடுத்துவிட்டது என சினிமாவட்டார நண்பர் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை எனத்தெரியவில்லை. மிகச்சில படித்த மெத்த அறிவாளிகளுக்கு படமெடுப்பதென்றால் சொந்த பணத்தில் எடுத்திருக்கலாம்.

அதேபோல நர்சிம்மின் நான்கடவுள் விமர்சனத்தில் பைத்தியக்காரன் கூறிய குறியீட்டு விடயங்களெல்லாம் கவனிக்கும் அளவுக்கு நமக்கு அறிவில்லை. சராசரி ரசிகனாக படம் பார்த்தால் நிச்சயம் இதையெல்லாம் கவனிக்க இயலுமா எனத்தெரியவில்லை. இலக்கியம் தெரிந்தவர்களுக்கும் படித்த மேதாவிகளுக்கும் நான்கடவுள் திரைப்படம் பிடித்திருந்ததாக தெரிகிறது. நான்கடவுள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

நான்கடவுள் குழுவினர்களின்(பிச்சைக்காரர்களாக நடித்தவர்கள்) பேட்டி ஒன்று அடிக்கடி இசையருவி சேனலில் ஒளிபரப்பாகிறது. சினிமா குறித்த பேட்டிகளில் இருந்து இது மிக வித்தியாசமாக இருந்தது. மறுஓளிபரப்பு அடிக்கடி ( மார்க்கெட்டிங்) செய்யப்படுவதால் பார்க்கலாம்.

அடுத்த வாரம் ஞாநி தனது ஓப்பக்கங்களில் கலைஞர் தொலைக்காட்சி பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என எழுத முற்படலாம். அதைக்கண்டித்து லக்கிலுக் தன் வலைப்பூவில் கலைஞரைவைத்து ஞாநி பிழைப்பு நடத்துகிறார் என பதிவெழுதலாம்.

ஏன் அடிக்கடி ஞானி போல ஜென்கதைகள் உங்கள் வலைப்பூவில் போடுகிறீர்கள் என ஒரு வாசகர் சாட்டில் கேட்டிருந்தார். மனது மிக கடுமையாக பாதிக்கப்படும்போதெல்லாம் ஜென்கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதே ஒரு தியானம் போல இருக்கிறது. அதைத்தவிர வேறு ஏதும் காரணங்கள் இல்லை.

இது போல செய்யும் போதெல்லாம் மனது இளகி லேசாகி விடுகிறது. பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. தம்மடிப்பதைப்போல .

வலைப்பதிவதே மனசாந்திக்குத்தானே..

சமீபகாலமாக நமது வலைப்பூவிற்கு பின்னூட்டங்கள் குறைந்துவிட்டதென ஒரு வாசகர் மிகவும் வருத்தத்தோடு சொன்னார். அதற்கு காரணத்தையும் அவரே சொன்னார். நான் யாருக்கும் பின்னூட்டம் போடாததால் யாருமே எனக்கு போடுவதில்லை என்று. பின்னூட்டம் என்றால் என்னவென்று இதுவரைக்கும் எனக்கு புரியவேயில்லை. அது தவிர எனக்கு தற்காலத்தில் கணினி கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது இதில் பதிவை படிக்கவே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பின்னூட்டம் குறித்து விபரம் தெரிந்தவர்கள் தனிமடலில் சொல்லலாம்.

பரிசல்காரன் மற்றும் நர்சிம்மிற்கு வாழ்த்துக்கள். இரட்டைசதம் அடித்தமைக்கும் சதம் அடித்தமைக்கும். இதற்கு முன்னாலேயே சைலன்ட்டாக இந்த சாதனைகள் படைத்த கார்க்கீக்கு கூடுதல் வாழ்த்துக்கள். (அவருக்கு திருமணம் என ஒரு வதந்தி வலையுலகில் சுற்றுகிறது.. அது உண்மையாகின் எனது அனுதாபங்கள்)

கார்க்கி தமிழ்வலையுலகில் நிஜமாகவே ஒரு யூத்து. இளம் குறுத்து. பதிவுகள் மிக அருமையாக இருக்கிறது.அவரது எழுத்தில் அவரது ஆழமான வாசிப்பு தெரிகிறது. கும்மிகளை குறைத்தால் தேவலை.

பரிசல்க்காரன்+நர்சிம்=கார்க்கி ( 200 பதிவுக்கு வாழ்த்துக்கள்)
தாமிராவின் குறும்படம் எடுப்பது எப்படி என்னும் காமெடிப் பதிவை சீரியஸாகப்படித்து அவரிடம் அதுகுறித்து கேட்டு அசிங்கப்பட்ட நிகழ்வுகளையும் , கேபிளாரின் விமர்சனங்கள் குறித்த விமர்சனங்கள் எனக்குண்டு அதை அடுத்த எ.வீ.ஜன்னலில் எழுத உசிதம்

நண்பர் அகிலன் சில மாதங்களுக்கு முன்னே மரணத்தின் வாசனை என்கிற புத்தகத்தை இலவசமாக கொடுத்தார். இலவசமாய் தரும் பொருளின் மதிப்பு ஏனோ தமிழ் மக்களுக்கு தெரியாது போல. எனக்கும். அதைவாங்கியதோடு ( அவரது கையெழுத்தோடு) சரி.

பல நாட்களுக்கு பிறகு கடந்த ஞாயிறன்று தூக்கம் வராத இரவில் படிக்க நேர்ந்தது. தூங்கமுடியவில்லை. கண்களில் கோர்த்திருந்த கண்ணீர் தீர்வதற்குள் அடுத்த துளி கோர்க்க துவங்கிவிடுகிறது. ஈழத்தமிழர் குறித்த அதைக்குறித்து ஒரு புத்தக மதிப்புரை எழுதவேண்டும்.

சமீபத்தில் படித்த பதிவுகளில் மிகவும் பிடித்தப் பதிவுகள் சில -

மணிகண்டனின் -பிரம்மபிரயத்தனம்
thodar.blogspot.com/2009/02/blog-post_23.html

ஜ்யோவ்ராம் சுந்தரின் -சலிப்பு குடி புணர்ச்சி மற்றும் இன்னபிற

jyovramsundar.blogspot.com/2009/02/blog-post_11.html

முரளிக்கண்ணனின்- ஐமேக்ஸ் தமிழ்சினிமாவிற்கு சாத்தியமா? 1,2,3 (அவரது வலைப்பூ எனது கணினியில் ஓப்பன் ஆக நேரமாகிறது அதனால் அவரது பிளாக் லிங்க் மட்டும்)

muralikkannan.blogspot.com


****************************************************


04 March 2009

இன்னும் சாகவில்லையே..!






அமைதியாக அமர்ந்திருந்த துறவியிடம் அரசன் கேட்டான்.

''இறந்தபின் நமது புனிதமான ஆத்மா என்ன ஆகும்?''

''அதை ஏன் என்னிடம் கேட்கிறாய் ''

''நீங்கள் முக்காலமும் உணர்ந்த துறவியாயிற்றே''

''உண்மைதான்.. ஆனால் நான் இன்னும் சாகவில்லையே'' என்றார் துறவி புன்னகையோடு.

***********************************************


திரளான மாணவர்களுக்கு நடுவே துறவி ஜென் குறித்த முதல்நாள் வகுப்பை ஆரம்பித்தார்.


முதல்வரிசை முந்திரிக்கொட்டை மாணவன் ஆவலோடு துறவியை நோக்கி ''ஐயா ஜென் என்றால் என்ன? '' என்று வினவினான்


துறவி மேஜையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதை மெதுவாக தோல்நீக்கி பொறுமையாக உண்ண ஆரம்பித்தார். தின்று முடித்தபின்


''இப்போது புரிந்ததா?'' , துறவியின் செயலால் துடித்துப்போன மாணவன் வெறுப்பில் கத்தினான்..


''இவ்ளோதானா இல்ல இன்னும் இருக்கா? ''.. துறவி அவனை அருகில் அன்போடு அழைத்தார்.


அருகில் வந்தான். கையிலிருந்து வாழைப்பழத்தோலை அவனது முகத்தில் சுளீரென அடித்தார்.


''இப்போது புரிந்ததா ஜென் என்றால் என்னவென்று , இவ்வளவுதான் ஜென்''


அவன் ஏதும் பேசாமல் அவனது இருக்கையில் அமர்ந்துகொண்டான்.


கடைசி இருக்கை நக்கல் மாணவன் '' ஐயா உங்கள் செயல் எனக்கு ஜென்னை விளக்கவில்லை.. தயவு செய்து அதை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா?'' என்றான்.


''அதெற்கென்ன விவரிக்கலாமே.. ஒரு மிகப்பெரிய யானை உன் மூக்கில் அமர்ந்திருக்கும் கொசுவை புணர்வது! அவ்வளவுதானப்பா ஜென் '' என்றார் துறவி.




*********************************************


மிகவயதான அந்த துறவி தினமும் யாருமில்லாத மலை உச்சியில் அமர்ந்து கொண்டு ஒற்றைக்காலில் நின்றுகொண்டு கைகளை வானை நோக்கி கூப்பிக்கொண்டு தவம் செய்வார். அந்த மலை உச்சி மிக ஆபத்தானது யாராலும் செல்ல இயலாத இடம். அவர் ஒருவர் மட்டுமே இருந்தார்.எப்போதும் போல தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு மலையின் உச்சிக்கு சென்று ஒற்றைக்காலில் நின்று கொண்டு தியானத்தை துவங்கினார். நடுவில் மலையின் அடிவாரத்தில் இருந்து ஏதோ ஒரு ஓளி தெரிவதை கவனித்தார். துறவிக்கு தீர்க்கமான கழுகுக்கண்கள். கூர்ந்து பார்த்தார்.. அது ஒரு தங்கத்தாலான வைரமும் மாணிக்கமும் பதித்த மிகப்பெரிய பெட்டி.. துறவி தியானத்தினூடே நினைத்துக்கொண்டே இருந்தார்.


''இந்த பெட்டி யாருதா இருக்கும்... உள்ள என்ன இருக்கும்.. மதியதுக்குள்ள எடுத்துட்டு போயிருவாய்ங்களோ...!''


*******************************************