Pages

26 September 2009

சிக்கன் கறியும் சீதபேதியும்..!எனக்கு மிக நெருக்கமான அந்த தோழர். ஒரு அரை மாமிச பட்சினி. அதாவது நான் வெஜ் என்றால் பிடிக்கும் ஆனால் சாப்பிட பயப்படுவார். அவரோடு அண்ணா நகரின் பிரதான சாலையில் சுற்றிக்கொண்டிருந்த போதுதான் அந்த யோசனை குபீர் என குதித்த்து. அப்படி ஒரு ஐடியாவை நான் சொல்லியிருக்க கூடாது என்பதை இந்த கதையின் கடைசி வரியில் தான் உணர்ந்தேன். என்ன செய்ய விதிவலியது. இருந்தாலும் எடுத்துக்கொண்ட திட்டத்தில் சற்றும் மனம் தளராது, அவரையும் என்னோடு சேர்த்து அந்த படுபாதக செயலில் ஈடுபடுத்தினேன்.
வீட்டிலிருந்து அலுவலகம் போகும் போதும் வரும்போதும் அந்த கடை எப்போதும் கண்ணை உறுத்தும். ஒன்று அங்கே விறகப்படும் சிக்கன்கள். மற்றொன்று அங்கே அதை தின்ன வரும் ‘சிக்’கண்கள். அந்த சிக்கனில் சிக்கிக்கொண்ட என் அடிமனது ஆசையை நிறைவேற்ற நண்பரைவிடவும் சிறந்த யாருமே இல்லை. அதற்கான காரணம் பரம ரகசியம்.

‘’யோவ் லூசு மாசக்கடைசிய்யா.. வேணாம்யா சொன்னாக்கேளு.. எங்கயாச்சும் லோக்கலா பாத்துக்கலாம்’’

‘’பாஸ் வொய் டென்சன்.. பைசாதான நான் பாத்துக்கறேன்..’’

‘’இதுக்குப்பேருதான் சூத்துக்கொழுப்புய்யா. பணத்திமிரு’’

‘’பாஸ் என்னா பாஸ்.. எதெதுக்கோ செலவு பண்றோம் சப்பை மேட்டரு..ஆசைப்பட்டுட்டா அனுபவிச்சரணும் பாஸ் ‘’

ஒருவழியாக தோழரை திட்டத்திற்கு தயார் செய்து கொண்டு அண்ணா நகரின் அந்த பிரபல சிக்கன் கடைக்குள் நுழைந்தோம். கேஎப்சி அதுதான் அதன் பெயர். அந்த சிக்கனின் பெயரும் கடையின் பெயரும். முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் குறியீடு அந்த கடைதான் என அடிக்கடி செஞ்சட்டை தோழர் ஒருவர் கூறுவார். எனக்கு ஏகாதிபத்தியம் என்றாலே கூடவே நிலப்பிரபு ஞாபகத்துக்கு வருவார். பிரபு என்றதும் என்ன கொடுமை சார் ஞாபகத்திற்கு வரும். அதெல்லாம் கதைக்கு தேவை இல்லாதது. கேஎப்சி சிக்கன் பற்றியதல்லவா இந்த கதை. ஆனால் கடைக்குள் நுழைந்தால் கடையெங்கும் செஞ்சட்டை தோழர்கள். செந்தொப்பியோடு வரவேற்றார்கள்.

கடை வாசலில் சில படித்த இளைஞர்கள் கையில் கேஎப்சிஐ தடை செய் என்னும் தட்டியுடன் நின்று கொண்டிருந்தனர். லெவிஸ் ஜீன்ஸ் ரீபாக் சூ ரேபான் கண்ணாடி என சர்வமாய் அமெரிக்கன் அவுட்ஃபிட் இளைஞர்கள். இவர்களை போன்றவர்களை இந்திய முதலாளித்துவ ஆதிக்கவாத பணக்கார வர்க்க இளைஞர்கள் என்பார் செஞ்சட்டைத்தோழர். ஆனால் இவர்கள் எதற்கு அவர்கள் ஜாதிக்காரன் கடைவாசலில் போராடுகிறார்கள் என்கிற ஆர்வம் மனதிற்குள் மேலோங்கியது. அது குறித்து அறியும் ஆவலோடு அவர்களிடம் நெருங்க எத்தனித்தவனை. ‘’பாஸ் டைம் மூன்றரை.. முதல்ல சாப்பிட்டு வந்துருவோம் அப்புறம் கேப்போம் ஏன் போராட்டம் பண்றாங்கன்னு’’ என்றார். எனக்கும் பசி குடலை உறிஞ்சிக்கொண்டிருந்தது.

வாசலில் இருந்த செக்யூரிட்டி. எங்களது காமாசோமா உடையை பார்த்து ஏதோ பினாயில் விற்க வந்த இளைஞர்கள் என நினைத்தாரோ என்னவோ முகத்தை திருப்பிக்கொண்டார். ‘’ச்சே என்ன அவமானம்.. வாங்க பாஸ் போகலாம்’’ என சொல்லிக்கொண்டிருக்கிறேன் தோழரை காணவில்லை. அவர் ஏற்கனவே உள்ளே நுளைந்திருந்தார். நானும் நானாக கதவை திறந்து உள்ளே நுழைந்தேன்.

ஓஓஓஓஓஓஓஓஓஓ என்று ஒரே சத்தம்.. அய்ய்யோ யாரோ நாம யாரு தெரிஞ்சு விரட்டறாங்கடோய் என வெளிய வர தயாரானால் .. தோழர் கையை பிடித்து நிறுத்தி ‘’பாஸ் அவங்க ,,, ஹாய் சார்.. வெல்கம்னு எல்லாம் சேர்ந்து கத்துரானுங்க... பாரின் கல்ச்சராம்’’.

‘’நான்கூட பயந்துட்டேன்ங்க..’’

உள்ளே நுழைஞ்சாச்சு.. நாமதான் வேண்டியதை கவண்டரில் போய் வாங்கிக்கொள்ள வேண்டுமாம். கவண்டரில் இருந்தவன் நம்ம ஜாதிக்கரான் போல் இருந்தான். நம்ம பாக்கட்ல இருக்கற நூறு ரூபாய்க்கு என்னத்த போய் கேக்கறது.. அவனிடம் மெனுவை கேட்போம் என..

‘’சார் , மெனு கார்டு இருக்குங்களா’’

‘’வாட்டுஃஉஃபனுஏஐ ஆஸ்க்ட்’’

‘’என்ன சார் சொன்னீங்க’’

‘’என்ன கேட்டீங்க’’

‘’ம்ம்ம்ம் மெனு’’

வேண்டாய் வெறுப்பாய் ஒரு மெனுவை நீட்டிவிட்டு.. மீண்டும் ஓஓஓஓ வென கத்தினான் அந்த கவண்டர் இளைஞன். யாரோ புது கஸ்டமர் நுழைந்திருப்பார் போல.
மெனுவை பார்த்தால் தலை சுற்றியது. இரண்டு துண்டு சிக்கன் நூறு ரூவா. ஒரு துண்டுலாம் தரமாட்டாங்களாம். பக்கட்ல சிக்கன் முன்னூறு ரூவா. அரிசி சோறோட சிக்கன் இருநூறு ரூவா. பாக்கட்டில் நூறுதான் இருந்தது. தோழர் பராக் பார்த்துக்கொண்டிருந்த தோழரை பார்த்தேன்.

நான் அப்பவே சொன்னேன்ல என்பதை அவர் கண்கள் சொன்னது. இருந்தாலும் கவண்டரில் இருந்த பெண் அழகாக இருந்ததாலும் அந்த பெண்ணை தோழர் இத்தனை நேரமும் சைட் அடித்துக்கொண்டிருந்த்தாலும் வேறு வழியில்லாமல் பெட்ரோலுக்கு வைத்திருந்த நூறை தந்தார். ஆளுக்கு இரண்டு பீஸ் சிக்கனும் அரைகப்பு சோறும் இருநூற்றி அறுபது ரூவா.. காம்போ ஆஃபர்.

‘’வித்தின்இஃபமதெப்திஎ ஒன்மினிட் சார்’’ சொய்ய்ய்ங் என ஆங்கிலத்தில் சொன்னான் அந்த கவண்டர் பையன்.

‘’என்ன சார் சொன்னீங்க?’’

‘’ஒரு நிமிஷத்துல குடுத்துருவோம்னு சொன்னேன்ங்க’’

‘’ஓஓ உங்க இங்கிலீஷ் எங்க ஊரு மாதிரி தெரியல.. கோயம்புத்தூர்ல வேற மாதிரி இங்கிலீஸ் பேசுவோம்.. ஹிஹி’’

கையில் ஒரே பிளேட்டில் மொத்தமாய் சிக்கனையும் சோத்தையும் இலவச பெப்சியையும் வாங்கிக்கொண்டு ஒரு சீட்டைப்பிடித்து உட்கார்ந்து கொண்டோம்.

அந்த சிக்கன் பார்க்க ரொம்ப கொடூரமாக இருந்தது. சொறிபுடிச்ச கோழிய பிரை பண்ணிருப்பானுங்களோ? இது கோழிதானா வேற ஏதாவதா? கோழிக்கு கால் எங்கே? கோழி வாசனையே இல்லையே! இது கோழிதானா? ஒருவேளை அப்படி இருக்குமோ! இப்படி இருக்குமோ! என்றெல்லாம் தோன்றியது. அதனோடு தந்த அரைக்கப்பு சோறு மிக்க்குறைவாக இருந்த்து. முனியான்டி விலாசில் இரண்டு அன்லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிடும் நமக்கு இது பத்தாதே என மனது உறுத்தியது.

பக்கத்தில் அமர்ந்திருந்த தோழர் சிக்கனை பிக்க முடியாமல் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். நான் அதை அப்படியே கையால் எடுத்து மேஜர் சுந்தர் ராஜன் போல டெர்ராக தின்ன துவங்கியிருந்தேன். முதல் கடியில் நல்ல சுவை இருந்தது. கொஞ்சம் தோலை கடித்துவிட்டு பார்த்தால் சிக்கனுக்குள் ரத்தம்! அய்ய்யோ.. என்று கத்த வேண்டும் போல் இருந்தது. தோழர் ஏற்கனவே ஒரு முக்காலே அரைக்கால் தாவர பட்சி... நான் வேறு எதையாவது சொல்லி பயந்து விட்டால்!.

தின்னும் போது பக்கத்து சீட்டில் அல்லது டேபிளில் சில வாண்டூகள் ஆரவரமாய் வந்து சேர்ந்தன. எல்லாருமே கல்லூரி மாணவிகள் போல. பார்த்தாலே தெரிந்தது நல்ல பணக்கார பொண்ணுங்க.

‘’நேக்கு சிக்கன் வேணான்டி.. ஆத்துக்கு சீக்கிரம் போனும் , ஸ்மெல் வரும்...சோ கெட் மீ ஏ வெஜ் பர்கர்’’ என்று பேசுவது காதில் விழுந்த்து..

‘’எக்ஸ்க்யூஸ்மீ தோழர் ஐயமார்லாம் சிக்கன் திங்க ஆரம்பிச்சிட்டாங்களோ!’’

‘’யோ நம்ம சேதுகூடதான் ஐயரு அவன் திங்கல..’’

‘’இல்ல பாஸ் , ஐயர் லேடிஸ்?’’

‘’மூடிட்டு உன் தட்ட பாருயா.. ஆனா ஊனா ஒனக்கு கிளம்பிருமே! ஏதாவது பிகர பாத்தா போதும்.’’

நான் கப்சிப் என ரத்தம் வழிய சிக்கனை கடித்து தின்ன ஆரம்பித்தேன். தோழர் ஒரு சிக்கன்தான் தின்றிருப்பார். அவருக்கு லைட்டாக குமட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும்.

‘’பாஸ் இந்த இன்னொரு பீஸையும் நீங்களே தின்னுருங்க’’. தோழர் தனது கோழியை எனக்கு தாரை வார்த்தார்.

‘’பாஸ் நல்லா சாப்புடுங்க பாஸ்.. ஹைஜீனிக் சிக்கன்’’

‘’யோவ் இங்கல்லாம் கோழிய உயிரோட உரிச்சு அப்படியே பொறிச்சுதான் பிரை பண்ணுவாங்களாம்’’

தோழர் என்னிடம் அதை சொல்லும்போதே தொண்டைக்கு கோழி கூவியது.
கஷ்டப்பட்டு என்னுடைய இரண்டு கோழித்துண்டுகளை தின்றது போதாது என்று தோழரின் கோழியை கடித்தால் அதற்குள் பிசுபிசுவென ஏதோ வந்தது.

‘’சார் இதென்ன இந்த சிக்கனுக்குள்ள பிசுபிசுனு இருக்கு’’

‘’எக்ஸ்யூஸ்மீ.. இஃஉபிதேகபகளூமுபகமெஉஃ ‘’ என்றார் அந்த சிகப்புச்சட்டை பையன். கடையில் வேலை பார்ப்பவன்.

ஒரு மயிறும் புரியவில்லை என்றாலும் ‘’ ஓஹோ தேங்க்யூ என மண்டையை ஆட்டிக்கொண்டேன்.

ஆனாலும் தொண்டைக்குள்ளிருந்து கோழி வெளியே வரத்துடிப்பது போலவே இருந்தது. தோழரும் நானும் ஒருவழியாய் அந்த அரைக்கப்பு சோற்றையும் அதற்கு கொடுக்கப்பட்ட கேவலமான ஒரு சிகப்பு குழம்பையும் ( வெளியே வந்து கேட்டப்பதான் தோழர் சொன்னாரு அதன் பேர் தக்காளி சாஸ்!) பிசைந்து கோழி வெளியே வராமல் தடுப்பு போட்டு தொண்டையை அடைத்தாச்சு.

வெளியே வந்து போராட்டம் செய்து கொண்டிருந்தவர்களிடம் பேசலாம் என்கிற ஆவல் இருந்தது. ஆனால் சிக்கன் தொண்டையை அடைத்தது.

கடைக்கு போய் ஒரு தம்மடிக்கலாம் என முடிவானது. கிங்ஸை வாங்கி ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட.. நான்

‘’உவ்வ்வ்வ்வ்வேவேவேவேவேவே..’’ தோழர் சிரித்தபடி


‘’யோவ் அப்பவே சொன்னேன் கேட்டியா ...உவ்வ்வ்வ்வ்வ்வே’’

கடையில் ஒரு வாட்டர் பாக்கட்டும் , மானிக் சந்தும் வாங்கி ஒன்றாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார் தோழர்.

தூரத்தில் கோழி கூவும் ஓசைக்கேட்டது என்று கதையை முடிக்கத்தான் ஆசை. ஆனால் அப்படியெல்லாம் இல்லை.. முன்னூறு ரூபாய் தண்டம் ஆனது மட்டும்தான் கதையின் கருத்து.

அதனால் தோழர்களே கேஎப்சி சிக்கன் சாப்பிடுவது உடல்நலத்துக்கு கேடு! ( கதைக்கு கருத்து அவசியம்ல! அதான்)

22 September 2009

ராஜபக்சே புரொடக்சன்ஸ்!ராஜபக்சே புரொடக்சன்ஸ்!


கொழும்பு நகரம். அமைதியாய் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சராசரி ( காமன் மேன்! ) எப்போதும் போல காய்கறிகள் வாங்கிக்கொண்டு நகரின் மையத்தில் இருக்கும் பலமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடியில் அமர்ந்து கொள்கிறான். கமிஷனருக்கு போன் போடுகிறான். ஊருக்குள் பல இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் , அதை நீக்க வேண்டுமானால் தமிழ்தீவிரவாதிகளான குட்டி,ஜெகன், தங்கமணி என்னும் மூவரையும் அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த லசந்தே (சிங்களவர்) ஐயும் உடனடியாக தன்வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறான்.

_______________

____________

__________________

கதையின் நடுவில் என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள உன்னைப்போல் ஒருவன் ( கமல் நடித்தது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தி ரிமேக் ஒரு முறை பார்க்கவும் )

ஒரு வழியாக பேச்சுவார்த்தை முடிந்து தமிழ்த்தீவிரவாதிகளும் அவர்களுக்கு உதவிய ஒரு சிங்களவனும் காமன் மேனிடம் ஒப்படைக்க ஆளில்ல விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கூடவே கருணா என்றொரு நல்ல தமிழ் போலீஸும், இன்னொரு நல்ல சிங்கள போலீஸும் உடன் செல்கின்றனர்.

செல்லும் வழியில் கருணாவிடம் ஜெகன், ‘நம்ம இனம் எப்படிலாம் அழிஞ்சுருச்சு.. இனப்படுகொலை பண்றாங்க. இதுவரைக்கு இரண்டு லட்சம் பேர் செத்துட்டாங்க. நம்ம இனத்த அழிச்ச சிங்களவனோட சேர்ந்து எங்கள காட்டிக்குடுத்துட்டியே’’ என்றெல்லாம் வீரவசனம் பேசுகிறார். அமைதியாய் அமர்ந்திருக்கிறான் கருணா. முகம் மட்டும் கடுமையாய் இருக்கிறது.

‘’ஞாபகம் இருக்கா 1983 யூலைப்படுகொலை.. ‘’ என்று தொடர்கிறான் ஜெகன்.

‘’யோவ் அதையே எத்தனை வருஷத்துக்கு சொல்லிட்டு அலைவீங்க வேற ஏதாவது புதுசா சொல்லுங்க ‘’ என்று நக்கலடிக்கிறார் பின்னால் அமர்ந்திருக்கும் காமெடி சிங்களவர். (இந்த இடத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும் , தியேட்டரில் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.)

கருணா எதுவும் பேசாமல் வருகிறான். கருணா மூவரை காமன்மேன் சொல்லும் வேனில் ஏற்றிவிட்டு ஜெகனை மட்டும் பிடித்து கொள்கிறான். மூவரும் வேன் வெடித்து சாகின்றனர்.
மீதி ஒரு தமிழ்தீவிரவாதி மட்டும் எஞ்சி நிற்கிறான். அவனையும் கொல்லச்சொல்லுகிறான் காமன்மேன்!, அவனை தமிழ் போலீஸே மனமார மகிழ்ச்சியோடு கொல்லுகிறான்.

‘’1992ல நடந்த குண்டுவெடிப்புல ஒரு குழந்தை செத்துருச்சு அதனாலதான் இவங்களை கொல்லணும்னு சீட்டுகுலுக்கிபோட்டு முடிவு பண்ணேன், இது தமிழன் சிங்களவன்ற பிரச்சனை இல்ல தீவிரவாதம்ங்கற பிரச்சனை.. சிங்களவன் பண்ணாலும் தமிழன் பண்ணாலும் கொலை கொலைதான்’’ என்கிறான் காமன்மேன்.

தியேட்டரே அதிர கைத்தட்டுகிறது. பார்த்துக்கொண்டிருந்த இரண்டே இரண்டு தமிழனைத்தவிர!

************

அதனால் தீவிரவாதம் ஓழிக!

19 September 2009

உன்னைப்போல் ஒருவன் - உட்டாலக்கடி தமிழன்
அநியாயமும் அக்கிரமும் எங்கெல்லாம் அதிகமாகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றி அதை அழிப்பேன். அதாவது சம்பவாமி யுகே யுகே! கிருஸ்ன பகவான் தெரியாம சொல்லிட்டு போயிட்டாரு ! எங்கயாச்சும் பிரச்சனை உண்டாச்சுனா அவரு வராரோ இல்லையோ சினிமா ஹீரோக்கள்லாம் கரெக்டா வந்து காப்பாத்துவாங்க! அதைதான் பல வருஷமா சூப்பர்மேன் தொடங்கி லேட்டஸ்ட் கந்தசாமிவரைக்கும் செஞ்சுகிட்டு இருக்காங்க. அதைதான் கமலும் இந்த படத்தில செய்யறாரு!

மூணு முஸ்லீம் திவிரவாதிகள் ஒரு இந்து தீவிரவாதி. மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதாச்சாரப்படி சீட்டுக்குலுக்கி போட்டுப்பார்த்து கிருஷ்ண பரமாத்மாவா மாறி துவம்சம் செய்யறாரு. அதுக்கு தீவிரவாதம்னு ஒரு காரணம். மோடி குஜராத்னு ஒரு சப்பைக்கட்டு. ஆனாலும் தீவிரவாதிங்க முஸ்லீம்தான்..! எங்கேயோ இடிக்குது.. அறிவுஜீவிங்க மெல்றதுக்கு கமலஹாசன் நல்ல நொருக்குத்தீனியா வச்சிருக்காரு.. அதை அவிங்க நொருக்குவாங்க. ?( ஐ மீன் கமலஹாசனின் இந்துத்துவா பார்வை அது இது லொட்டு லொசுக்கு நுண்ணரசியல் பிரச்சனைகள்.. நமக்கு அது அவசியமில்லை .. நாம் அறிவுஜீவியும் இல்லை )

படத்தோட கதை சப்பையான சம்பவாமி யுகே யுகேதான். ஆனா திரைக்கதை வித்தியாசம். "SAW" "PHONE BOOTH" பாணி திரைக்கதைதான் என்றாலும் தமிழுக்கு புதுசு. தமிழில் இப்போதைக்கு இது மாதிரி வித்தியாசமான திரைக்கதைகளுக்குத்தான் மவுசு என்பதை கமல் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

படம் முழுக்க கமல் ஒரு மொட்டைமாடியில் அமர்ந்திருக்கிறார். கரகர குரலில் போனில் பேசுகிறார். ( ஒரே ஆங்கில வாடை! ஹாலிவுட் மயக்கம்..) . மொட்டை மாடி ஓரமாய் நின்று கொண்டு ஊரைப்பார்க்கிறார். இவ்ளோதான் கமலின் பங்கு. ஆனால் மனுசன் நிஜமாவே ஒரு மேதை. வெறும் முகபாவனையிலும் குரலிலுமே நடித்து தள்ளுகிறார். நடக்கும் போதுதான் பைல்ஸ் வந்தது போல் இருக்கிறது மற்றபடி நடிப்பு அபாராம். அதிலும் அவரது உருவம் ஏதோ விஜய் மல்லையா வீட்டு பக்கத்துவீட்டுக்காரர் மாதிரி இருக்கு.. அவரப்போய் எப்படிங்க சாதாரண ஆளுனு நினைக்கறது.

மோகன்லால். அச்சு அசல் எர்ணாகுளத்திலிருந்து டிரான்ஸ்பர் ஆன போலீஸ்காரரை கண்முன் நிறுத்துகிறார். இயல்பான நடிப்பு. படத்தின் பல இடங்களில் கமலை மிஞ்சுகிறார்.

படத்தில் மொத்தமா இரண்டே பாத்திரங்கள்தான் மனதில் நிற்கின்றன. லட்சுமி , சந்தான பாரதி, சிவாஜி என மிகச்சிலரே தெரிந்த முகங்கள். மற்றவரெல்லாம் புதுசு. புதுமுகங்களை கொஞ்சம் நேட்டிவிட்டியோடு போட்டிருக்கலாம். பல இடங்களில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வு.. வடநாட்டு முகங்கள் தமிழ்பேசுவது கூட ஏதோ அந்நியமாக தோன்றுகிறது.

இசை ஸ்ருதிஹாசன்! பாஸ்மார்க் போடலாம். ஏ.ஆர்.ஆர் ஐப்போல முதல் படத்திலேயே சென்டம் எல்லாம் கிடையாது. ஏதோ அவரால் முடிந்தது முழுமையாய் செய்திருக்கிறார்.

வசனம் இரா.முருகன். இந்துத்துவா ஆட்களுடன் 'மோதி'ப்பார்த்திருக்கிறார்.அதன் பின்விளைவு பின்னால் தெரியும்.

கேமராமேனுக்கும் கலை இயக்குனருக்கும் எடிட்டிங் செய்தவருக்கும் கட்டாயம் ஒரு ஆளுயர மாலை போட வேண்டும். படம் முழுக்க ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது அத்தனையும்.

படம் குறித்து சொல்ல அதிகமில்லை. கமலுக்காகவும் திரைக்கதை அமைப்பிற்க்காகவும் அது தரும் பரபரப்பு அனுபவத்திற்காகவும் ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம். ஹிந்தியில் பார்த்திருந்தால் கட்டாம் இந்த படம் உங்களுக்கு பிடிக்காது.

மற்றபடி இந்த திரைப்படம் சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமா என்றால் கேள்விக்குறிதான். திரைப்படம் பார்த்து சமூக விளிப்புணர்வெல்லாம் வராது என்பது இங்கிருக்கும் சராசரி காமன் மேனுக்கு கட்டாயம் தெரியும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைத்திருக்கும் தயாரிப்பாளர் கமலுக்கு.

படம் முடிந்து வெளியே வரும்போது விடையில்லாத ஒரே ஒரு கேள்விதான் எஞ்சி நிற்கிறது.

''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''

மற்றபடி - உன்னை போல் ஒருவன் - ஒரு முறை பார்க்கலாம்

15 September 2009

ஈரம் - தண்ணில கண்டம்!மழைக்காலத்தில் பார்க்கும் அனைவருமே அழகாக தெரிவதாய் உணர்ந்திருக்கிறேன். எல்லோர் முகத்திலும் மென்மை தெரியும். அல்லது முகத்தில் தண்ணீரால் கழுவியது போலவே இருக்கும். அதை எப்போதும் ரசிப்பேன். ஏன்னா நம்ம முகம் அந்த டயத்திலதான் கொஞ்சமாச்சும் அழகாத்தெரியும். அதே போலத்தான் காதலும் மழைக்காலங்களில் இன்னும் அழகாகிவிடும். காதல் எத்தனை முறை பார்த்தாலும் அழகுதான். காதலியோடு கொட்டும் மழையில் நனைந்த படி கட்டியணைத்து முத்தமிட்டிருக்கிறீர்களா! வாய்ப்பு கிடைத்தவன் கடவுளை பார்த்திருப்பான்!.

ஷங்கர் படம்னாலே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவரு டைரக்சன் பண்ற படம்னு இல்லாம தயாரிக்கற படங்கள் மேலயும் அப்படித்தான் மிதமிஞ்சிய ஆர்வம் தொத்திக்குது. காதல்ல தொடங்கி 23ர்டு புலிகேசி, வெயில்,கல்லூரி இதோ இப்போ ஈரம். பேரு ஈரம்னு வச்சிட்டு டிரெய்லரும் மழையும் இருட்டுமா காட்டினதால என்ன கதையா இருக்கும்னு ஆர்வம் இன்னும் பத்திகிச்சு.

தமிழ்ப்படமே பாக்கறதில்லைங்கற என்னோட சுடுகாட்டு சபதத்த சிகரட் லைட்டர்ல எரிச்சிட்டு எவ்ளோ செலவானாலும் பராவல்ல சத்யம்லதான் ஈரம் பாக்கறதுனு முடிவு பண்ணோம் சங்கத்துல. என்னோட சொத்த முழுசா வித்த பணத்தையும் செலவழிச்சு டிக்கட் வாங்க வேண்டி இருந்துச்சு. ஒரு டிக்கட் 120ரூ. பாப்கார்ன் பெப்சி 100ரூ. தண்ணி பாட்டில் 20ரூ. கொஞ்சம் கூட மனசுல ஈரமே இல்லைங்க தியேட்டர்காரனுக்கு. இவ்ளோ செலவளிச்சு படம் பாக்க போனா இன்டர்வெல்ல தம்மடிக்க டிரைப்பண்ணோம்னு அடிக்கலாம் வரானுங்க! நாகரீகம் இல்லாதவனுங்க! காசு குடுத்து என்னங்க பிரயோசனம் சும்மா சீட்டு மேல கால போட்டுகிட்டு தம்மடிச்சுகிட்டே படம் பாக்கற சுகமே தனி. டிநகர் கிருஷ்ணவேனில 20ரூவாய்க்கு பால்கனி டிக்கட். 5ரூவாக்கு தேங்கா உருண்டை. சுகமே தனி.ம்ம் சத்யம்னு பேர் வச்சுகிட்டு கொள்ளையடிக்கிறானுங்க!

அது கிடக்கட்டும். ஏழைங்க பிரச்சனை. 200ரூவா செலவழிச்சாலும் குடுத்தான் பாருங்க டிக்கட்டு. சூப்பர் டிக்கட்டுங்க எனக்கு பக்கத்து சீட்ல அய்யோ அய்யோ! இரண்டு பேரு அய்யோ அய்யோ! அது பத்தி தனி பதிவா போட்டுக்கறேன். இப்போ !

ஈரம் படம்? படத்தோட கதை என்னமோ ராசாத்தி வரும் நாள். மைடியர்லிசா மாதிரி சப்பை பேய்ப்படக்கதைதான். ஏன் எல்லா பேய்ப்படத்திலயும் பொண்ணுங்களே பேயா வராங்க! ஜகன் மோகினிலருந்து லேட்டஸ்டா வந்த யாவரும் நலம் வரைக்கும். ம்ம் இதுக்கு பின்னால இருக்கற ஆணாதிக்க நுண் அரசியல்லாம் நமக்கெதுக்கு!. நாம படத்தபத்தி பேசுவோம். பேய்ப்படத்தில வராமாதிரியே ஒரு பெரிய வீடு. கெட்ட வாட்ச் மேன். கெட்ட பக்கத்துவ்வீட்டுக்காரி. காமக்கொடூர பக்கத்துவீட்டுக்காரன். சைக்கோவா ஒரு புருஷன். நல்ல காதலன். பாவப்பட்ட பழிவாங்கும் பேய்! எல்லாருக்கும் தண்ணில கண்டம்! இதையெல்லாம் வச்சு சுத்தி சுத்தி வித்தியாசமா ஏற்கனவே பல கதைகள் பண்ணிருந்தாலும் இது புதுசா இருக்கு!

அதற்கான காரணம் படத்தின் மேக்கிங். படம் முழுக்க கார்கல மேகம் சூழ காட்சிகள் நகருது. எல்லா காட்சியுமே ஈரமான பிண்ணனியோட சுத்துது. தண்ணி சொட்டுற மாதிரி நிறைய அருமையான வீடியோக்கள் பாத்திருப்போம். அதேமாதிரி அருமையா தண்ணிய படம் முழுக்க தெளிச்சு விட்டிருக்காங்க. நமக்கு கூட பேண்ட் லைட்டா ஈரமானமாதிரி பீலிங்ஸ் வருது. மேல் பக்கமில்ல கால்பக்கம். அதான் இந்த படத்தோட மிகப்பெரிய வெற்றி.
கேமரா மேன் கண்ணுல தண்ணிய ஊத்திகிட்டு படம் எடுத்துருப்பார் போல! குளிர்ச்சியான பிண்ணனி! இசை யாருனு தெரியல ஒரு சோக மெலடி அப்படியே உருக்கி மனச கரைக்குது. இனிமேதான் டவுன்லோட் பண்ணிகேட்கணும். பிண்ணனி இசை அடங்கொன்னியா அப்படியே இங்கிலீஸ் படரேஞ்சு! ( கவனிக்கவும் ஒன்லி ரேஞசுதான் .. நோ காப்பிபையிங்).

படத்துல ரெண்டு ஹீரோ ஒருத்தரு கொஞ்சம் சிவப்பு விஷாலாட்டம் அழகா இருக்காரு. மிருகம் படத்துல காட்டுத்தனமா நடிச்சவரு இதில சாஃப்டா போலீஸா வராரு. குட். நந்தா ஒரு நல்ல நடிகர். இன்னும் யூஸ் பண்ணிருக்காலம். இல்ல இன்னும் அவர் வேற மாதிரி நடிச்சிருக்கலாம். ஹீரோயின் சிந்துமேனன் பாத்திரத்த சரியா புரிஞ்சுகிட்டு வெளக்கிருக்கார். ஹீரோயின் பக்கத்துவீட்டுப்பொண்ணா ஒரு குட்டி பெரிய பொண்ணு வருது. கண்ணுல செம ஸ்பார்க்.. சூப்பரா நடிச்சிருக்கு. முகம் சுமார்தான்.

மொத்தமா ஒரு நல்ல ஜாலியான பயங்கரமான அட்வெஞ்சரான படகு சவாரி பண்ண உணர்வு வருது படம் பார்க்கும் போது. அதுக்கு மேல என்ன வேணும் படம் ஓடிரும். மொத்தமா பாக்கும் போது ஏதோ இங்கிலீஸ் படத்த ரெண்டாவது வாட்டி பாக்கற மாதிரி இருந்தாலும் தமிழுக்கு புதுசு மாதிரிதான் தெரியுது.!

படத்தோட பெரிய குறை! ஒன்றரை மணிநேரத்துல சொல்லிறக்கூடிய கதைய எதுக்கு தேவையில்லாம இரண்டரை மணிநேரம் ஒட்டறாங்கனு தெரியல. இன்டர்வெல்லுக்கு அப்புறம் ஒருமணிநேரம் கொட்டாவி!

மத்தபடி ஈரம் – வெரி நைஸ்! ஒன் டைம் மஸ்து வாட்ச்


***********

அந்த பக்கத்து சீட்டு மேட்டர்... விரைவில்

14 September 2009

போலி(ளி)(ழி) என அனைத்திற்கும் ஒரு எளிய அறிமுகம்!
போளி(லி)(ழி) என்றதும் ஏதோ கெட்ட ஐட்டமாக நினைத்து விடாதீர்கள். போளி உடலுக்கு மிகவும் நல்ல ஒரு தீனி. மாலை வேளைகளில் மந்தமாக இருக்கும் போது உடலுக்கு உற்சாகமும் உல்லாசமும் தரும் பண்டம். அந்த பண்டம் உங்கள் ஊரில் யாராவது ஐயமார் ஸ்வீட் ஸ்டாலில் கிடைக்கும். வெளியே மஞ்சள் கலரிலோ அல்லது வெளிர் பிரவுண் நிறத்திலோ இருக்கும். உள்ளே மஞ்சளாக பருப்புகள் அல்லது மாவு போன்ற ஒரு பிசுபிசு வஸ்து இனிப்பு சுவையோடு இருக்கும். உள்ளேதான் அப்படி! ஆனால் வெளியே பார்க்க எண்ணை பிசுபிசுப்பின்றி ரசித்து சுவைக்க உகந்த உணவு இந்த போளி.

இதை சிலர் வெறுக்கக்கூடும். சக்கரை வியாதிக்காரர்களுக்கு பார்ப்பதெல்லாம் விஷம்தான். ஆனால் நம்மைப்போன்ற எதையும் தின்னும் இதயங்களுக்கு போளி ஒரு தெய்வப்பிரசாதம். அதன் சுவையை அனுபவித்தவனால் மட்டுமே உணர முடியும். கலியுகத்தில் நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத இந்த பண்டம் காலப்போக்கில் அழிந்து கொண்டிருக்கின்றது. அதைக்காக்க வேண்டியது நம் கடமையில்லையா?. நாளைய சந்த்தியினருக்கு போளி என்று ஒரு ஐட்டம் இருந்தது. அதன் சுவை அபாரமானது என்பது இணையத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. போளி எனக்குதான் சொந்தம் என யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. இந்த நவீன யுகத்தில் போளிக்கும் தனக்குமான தொடர்பைக்கூட சொல்ல பலரும் வெட்கப்படுகின்றனர் வேதனைப்படுகின்றனர். ஆனால் இவர்களோ அந்த காலத்தில் மூச்சு முட்ட போளியை ருசித்தவர்கள். போளியை உபயோகித்து வாழ்க்கையின் உன்னதங்களை தெரிந்து கொண்டவர்கள். அப்படிப்பட்ட போளிக்குத்தான் இன்று இப்படி ஒரு நிலை.அதனால் வரலாற்று சிறப்பு மிக்க இந்த போளி குறித்து அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.

இந்த போளி எப்படி உருவாகியிருக்கும்? போளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகின்றன. முதலில் வந்த்து சப்பாத்தியா பூரியா என்பது போல! முதலில் வெந்து போவது போண்டாவா! அல்லது உள்ளே இருக்கும் மசாலாவா? என்கிற ஆராய்ச்சிப்போலத்தான் போளியும். பார்க்க சப்பாத்தி போல இருந்தாலும் போளிகளுக்குள் அந்த இனிப்பு எப்படி குடிகொள்கிறது. அது உருவாகும் இடம்தான் எது!. இந்த போளிகளை உருவாக்குவதால் மானிடகுலத்திற்கு கிடைக்கும் பராக்கிரமம்தான் என்ன?. முதலில் ஒரு உருண்டை இனிப்பை எடுத்து உருட்டி அதை மாவிற்குள் வைத்து தினித்து ஒன்றாக்கி சப்பாத்தி போல தேய்த்து , பொறித்து எடுத்தால் போளி தயார்.

போளிகள் தானாக உருவாவதில்லை. நன்றாக வேக வைத்து , சூடாக்கி , அதிலும் அதிக சூட்டில்தான் நல்ல போளிகள் கிடைக்கும். அந்த சூட்டை உருவாக்குவது உங்கள் திறமை. இதற்கான ரெசிப்பிகள் குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் தோழர் ஒருவர் குறிப்புகளை அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் செய்வதாக வாக்களித்திருக்கிறார். பார்ப்போம்.
நேற்று பிரபல எழுத்தாளர் ஒருவர் போளி தயாரிப்பு பட்டறை இணையத்தில் எழுதுபவர்களை வைத்து நடத்தலாம் என அறிவுரை கூறினார். போரடிக்கும் போதெல்லாம் தின்கிற சாதாரண சப்பை உணவா போளி. அதி உன்னதமான உணர்வுகளை உங்களிடமிருந்து கிளர்ந்தெளச்செய்யும் அருமருந்தல்லவா அது!

பட்டறைகளால் போளிகளை உருவாக்கி விட முடியுமா!. அதற்கான பக்குவம் ஒரு சிலருக்குத்தானே வரும். போளிகளை உருவாக்கும் வித்தை தெரிந்தவர்கள் இணையத்தில் மிகச்சிலரே! அவர்களும் இப்போதெல்லாம் அமைதியாகிவிட்டனர். அதனால் இந்த போளி குறித்த மின்னஞ்சல் ஒன்றை நேற்று தோழர் ( போளி என்றால் அவருக்கு உயிர்.. அதெல்லாம் சிறு வயதில் ) அனுப்பியிருந்தார். அது உங்களுக்காக

போளி சுடுவது எப்படி!

1. போளியை ஒரு கம்பியில் குத்தி வைத்து, துணிக்காயப்போடும் கயிற்றில் தொங்கவிட்டு துப்பாக்கி வைத்து சுடலாம்

2. போளியை வடைச்சட்டியில் நிறைய எண்ணை ஊற்றி பூரி போல உப்பலாக சுடலாம்.

3. போளியை உருட்டி திரட்டி போண்டா போல பொரித்து எடுக்கலாம்.

4. போளி மாதிரியே போலியாக( போலி என்றால் டூப்ளிகேட் என்று பொருள் ) சப்பாத்திக்குள் சக்கரை வைத்து சுடலாம்.

5. இதையெல்லாம் முயற்சித்து பார்க்கும் வீரமும் தீரமும் இல்லாத சப்பையான மாந்தர்கள் ஏதோ ஒரு கடையில் அடுக்கி வைத்திருக்கும் போளியை சுட்டுத்தின்னலாம்.

இப்படி போகிறது அந்த மின்னஞ்சல். பாருங்கள் ஒற்றைப்போளி என்னமாதிரியெல்லாம் அவதாரமெடுக்கிறது. இப்போது புரிகிறதா அதன் சக்தி பலம்.. துஷ்மன்..

அதனால் என் பெருங்குடி மக்களே , போளிக்கும் உங்களுக்குமான தொடர்பை துண்டித்துக்கொள்ள விரும்பாதவர்கள் , போளி ரசிகர்கள் , போளிக்கு உதவ விரும்புபவர்கள் அனைவரும் திரளுங்கள். போளி தயாரிப்பு பட்டறை ஒன்றை நடத்துவோம். அதற்கான நிதி தற்சமயம் குறைவாக இருப்பதால் , உங்களால் முடிந்த நிதியுதவியை மின்னஞ்சலில் தெரிவித்தால் இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என்று நமது அகில உலக போளி ரசிகர் மன்றம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

வாழ்க போளி வளர்க அதன் சுவை!


பி.கு. சாப்பிடும் போளிக்கு எந்த lee என்பதில் நேர்ந்த குழப்பத்தால் தலைப்பில் எல்லா லீயும்.. புருஸ் லீக்கும் போலீக்கும் கூட தொடர்பு இருக்காமே! இருந்தாலும் இருக்கும் சுண்டெலிக்கு பெருச்சாளிக்கு கூட தொடர்பு இருக்கு..புரூஸ்லீக்கு இருக்காதா!

***********

இந்த பதிவு கூறும் மிகப்பெரிய கருத்து என்னவென்றால்!

அதாகப்பட்டது சிரிப்புதான் சகலரோக நிவாரணி அதனால் சிரித்து சிரித்து மகிழ்ச்சியாக இருப்போம்.

12 September 2009

மதுரைசம்பவத்தில் ஜி.ஐ.ஜோ!

கடைசியாக பார்த்த மதுரை சம்பவம் என் வாழ்க்கையில் மிக மோசமான சம்பவமாய் ஆகிப்போனது. அதுவும் முதல் சீனில் தொடங்கி கடைசிவரைக்கும் விடாம அடிக்கிறாய்ங்க. மதுரைக்காரய்ங்கன்னா யார் தெரியும்ல என்று பஞ்ச் டயலாக் வேறு. ஹீரோ ஹரிக்குமாருக்கு மதுரை ஸ்லாங்கு சுத்தமாய் வரல . அடித்தொண்டைல ஒரு மாதிரி திருநெல்வேலிக்கும் மதுரைக்கும் கிராஸ் கனெக்சன் போல பேசுகிறார். பரவால்ல விட்டுருவோம். ஆனா இடைவேளையோடு முடிஞ்சு போன படத்தை அதுக்கப்புறம் ஒரு மணிநேரம் ஒட்டும் கொடும வேற. இயல்பா படம் எடுக்கறேனு எத்தனை பேர்தான் இன்னும் கிளம்ப போறாங்களோ! அதுவும் மதுரை பேக்ரவுண்ட்ல..

படம் பார்த்ததுக்கு ஒரே பிரயோசனம் ராதாரவி நடிப்பு , அப்புறம் அனுயா இடுப்பு. அனுயா போலீஸாம் ! நாலரை அடிதான் இருக்காங்க!. எவ்ளோ டெரரா பாத்தாலும் குழந்தை மாதிரி உரக்கு முகம். போலீஸ நடுரோட்டில வச்சு ஹீரோ கிஸ்ஸடிப்பாராம். அவங்களும் மயங்கிருவாங்களாம். அனுயாவ கிளைமாக்ஸ்ல சீன்பட நாயகி ரேஞ்சுக்கு காட்டிருக்காங்க! . அதுக்காக ஒருவாட்டி பாக்கலாம்!.

காட்பாதர் படத்த மதுரை பேக்ரவுண்ட்ல இயல்பா எடுக்கறோம்னு NDTV கம்பெனிக்கிட்ட சொல்லி படம் எடுத்துருப்பாங்க போல.. ரொம்ப நாளைக்கப்பறம் ஆனந்த் பாபு . ஆர்வமா ஏதோ பண்ணப்போறாருனு பாத்தா சப்பையா ஒரு கேரக்டர் குடுத்து அசிங்கபடுத்திருக்காங்க.. எவ்ளோ நல்ல டான்சர் அவரு. இசை சுத்தம்.

இந்த படம் பார்த்துட்டு வெளியே வந்து தம்மடிக்கும் போது இரண்டு தீர்மானங்கள் எங்கள் சங்கத்தில் போட்டோம். ஒன்று இனிமேல் மதுரை ஸ்லாங் பேசும் எந்த பிசனாரி படத்தையும் பார்ப்பதில்லை . இன்னொன்று கூட்டணியாக கூட்டாளியோடு இனிமேல் கொஞ்ச நாளைக்கு தமிழ்ப்படங்களுக்கு தடா போட்டிருந்தோம்.

அதையும் மீறி நேற்று வெளியான ஈரம் திரைப்படம் பார்க்கும் ஆவல் கொஞ்சூண்டு துளிர்விட அதை முளையிலேயே கிள்ளி போட்டுவிட்டு, ஆங்கில படமான ஜி.ஐ.ஜோ – தி கோப்ரா கமாண்டர்னு ஆங்கிலப்படத்தின் தமிழ் டப்பிங் பார்க்க முடிவானது.படத்தோடு இயக்குனர் மம்மி புகழ் சோமர்ஸ். ஜி.ஐ ஜோ பொம்மைகள் 90கள்ல ரொம்ப பேமஸ். காமிக்ஸ் கார்ட்டூன் படங்களும் ரொம்ப ரொம்ப பேமஸ். பல நாடுகள்ல அந்த பொம்மைகளுக்கு தடை கூட இருந்தது. குழந்தைகள் மனசில வன்முறைய வளர்க்குதுனு ஒரு குற்றச்சாட்டு இருந்துச்சு.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஆரம்பக்காட்சி. புரட்சித்தலைவர் கையில் ஒரு பெட்டியோடு சில பாரினர்களை மலைப்பாங்கான இடத்திற்கு அழைத்து செல்வார். ஒரு சிகப்பு பெட்டியை எடுத்து அதற்குள் இருந்து இன்னொரு சின்ன பச்சை பெட்டி. அதற்குள் இன்னொரு மஞ்சள் பெட்டி. அதற்கு ஒரு புளு பெட்டி. கடைசியாய் அதற்கு ஒரு குட்டியூண்டு பெட்டி இருக்கும். அதை திறந்தால் பச்சை கலர் மாத்திரை. அதை ஒரு துப்பாக்கியில் போட்டு மலையை பார்த்து சுடுவார். அப்படியே மலையே உதிர்ந்திடும். தட் இஸ் த வெரி டேஞ்சரஸ் வெப்பன் அதாவது அந்த மாத்திரைதான் உலகை அழிக்கும் பயங்கர ஆயுதம். அதை பறிக்க ஒரு வில்லன் கும்பல். அய்யோ அய்யோ!
இந்த கண்றாவி கதை பார்மூலாவ ஏனோ ஹாலிவுட் காரங்க விடவே மாட்டங்க போல! பல வருஷமா நம்ம ஊர்ல ராபின்ஹீட் கதை நான் சிகப்பு மனிதன்லருந்து ஜென்டில்மேன் ரமணா கந்தசாமிவரைக்கும் விடாம புடிச்சிட்டு தொங்கற மாதரி.

அவங்களும் உலகத்த அழிக்கற ஆயுதத்த விட்டொழிக்க மாட்டேன்றாங்க. எப்பவும் போல உலகத்த அழிக்கற சக்தி வாய்ந்த ஆயுதம் அதை கடத்தற சூப்பர் வில்லன் கும்பல் அதை எதிர்க்கற சூப்பர் ஹீரோக்கள். அவ்ளோதான் கதை. அப்புறம் கிராபிக்ஸ், அது நிறைய இருக்கு. விரட்டி விரட்டி விரட்டற சீன்லாம் கிராபிக்ஸ் கலக்கல்தான். ம்ம்மி ஹீரோ ஒரு சீன்ல வராரு.. வில்லன் இரண்டு சீன்ல வராரு அவ்ளோதான். படத்தோட தமிழ் டப்பிங் செம..! நிறைய காட்சிகள் ரசிக்கற மாதிரி வசனம் எழுதிருக்காங்க.. தமிழ்படங்கள்ல கூட இப்பலாம் இப்படி வசனங்கள் பாக்கறது அபூர்வமாகிருச்சு.

மம்மி புகழ் சோமர்ஸ் இந்த படத்தின் இயக்குனர். அவரோட டிரேட்மார்க் அதிரடி சேஸிங் காட்சிகள் சூப்பராக வந்திருக்கு. அதிலயும் பாரிஸ்ல ஈபிள் டவர் சரிஞ்சு விழற காட்சி பிரமாண்டத்தின் உச்சக்கட்டம். வில்லனா கிரிஸ்டோபர்னு ஒருத்தர் வராரு நல்ல அபாரமான நடிப்பு. அப்புறம் ஹீரோயின் செம சூப்பர் அழகோ அழகு. பாதி படம் பூரா வில்லியா வரும்போதே தெரிஞ்சுருது இன்டர்வெல்லுக்கு அப்புறம் திருந்திருவாங்கனு.
மத்தகபடி சின்ன வயசில பார்த்த ஜி.ஐ.ஜோ கார்ட்டூன்,காமிக்ஸ் மாதிரி விருவிருப்பு ஒரளவு நல்லா வந்திருக்கு. வேறென்ன நிறைய செலவு பண்ணி மொக்கையான ஒரு கதையோட விருவிருப்பா கதை சொல்லிருக்காங்க. டைம் போறதே தெரியல. பஸ்ட்லருந்து கடைசிவரைக்கும் படம் மின்னல் வேகத்தில போய்கிட்டே இருக்கு. கிளைமாக்ஸ் கொஞ்சம் சொதப்பல.

மத்தபடி மொக்கையான தமிழ்படங்கள் பார்த்து காஞ்சு போயிருந்த மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா செம மசாலாவா ஒரு ஹாலிவுட் படம் . திருப்தி! . அதும் வெறும் 40 ரூவாயில. ( பல நூறு கோடி செலவு பண்ணி எடுக்கற படம் அதுவம் தமிழ்ல டப்பிங்லாம் பண்ணி அதுக்கு பால்கனிக்கே 40 ரூவாதான். கந்தசாமிக்குலாம் 100 200னு தண்டம் அழ வேண்டியிருக்கு.. தமிழ்சினிமா பாவம் ஏழைங்க இன்டஸ்ட்ரி)

ஜி.ஐ.ஜோ – இலுப்பைப்பூ சக்கரை!

08 September 2009

நீல நிற இரவுகளில்!கற்புக்கரசிக்கு இரவெல்லாம் தூக்கமில்லை
கணவன் இன்னும் வரவில்லை
கண் விழித்து இமைதுடைத்து
கணினியை மூட்டிவிட்டாள்
நீலநிற ஜன்னல் அது
சாளரம் திறக்க ஏசிக்காற்று
காது நுனியில் குளிர்ந்தது

கூகிளில் தன் பெயரிட்டுத்தேடினாள்
லட்சக்கணக்கில் பக்கங்கள் குவிந்தன
எல்லாமே நீலப்படங்கள்
அதில் ஒன்றை சொடுக்கிப்பார்த்தாள்
நாலுலட்சத்து சொட்சம் பார்வைகள்

தன் சக்களத்தி பெயரிட்டுத் தேடினாள்
குறைந்த பக்கங்கள்தான்
கவர்ச்சிப்படங்களும் நீலப்படங்களுமாய் சிதறியது
அதில் ஒன்றை சொடுக்கிப்பார்த்தாள்
சில ஆயிரம் பேர்கள்தான்
பெருமையில் சிரிப்பு வந்தது

எக்ஸ் குறியை சொடுக்கினாள்
ஜன்னல் மூட காட்சிகள் இருண்டது

இருட்டுக்குள் விழித்தபடி
உடை மாற்றிக்கொண்டிருந்தான்
இரவின் காதலன்

01 September 2009

பஞ்சர் பாண்டியின் பைக் குறிப்புகள்!
செப்டம்பர் - 1 - 2009


''சார் இஞ்சின் செமத்தியா அடி வாங்கிருச்சு இனிமே தாங்காது.. பேசாம வித்துட்டு செகன்ட்ஸ்லயே ஒரு ஸ்பிளென்டர் பிளஸ் வாங்கிக்கோங்க சார்! மூணு மாஸ்த்துக்கு ஒருக்கா ஆயிரம் ஆயிரமா தண்டம் அழுவுறீங்களே.. ''

''இல்ல பாஸ்.. அந்த வண்டிய மட்டும் விக்க முடியாது.. அது எனக்கு லட்சுமி மாதிரி , எனக்கு மட்டுமில்ல எங்க அப்பாவுக்கு கூட.. அந்த பைக்க எங்கப்பா எனக்கு குடுத்தப்பறம்தான்யா எனக்கு வேலை கிடைச்சிது, ஃபிகர் மாட்டிச்சு , அதுமில்லாம அடுத்து வாங்கினா கார்தான்..’’

"அப்படினா ஒரு அஞ்சாயிரம் செலவு பண்ணி வண்டி எஞ்சின் வேலை பாத்துருவோம் சார்..’’

"அஞ்சாயிரமா..ம்ம் யோசிச்சு சொல்றேன்..’’

___________

செப்டம்பர் 10 - 2009


"பாஸ் , எத்தன நாளைக்குள்ள கிடைக்கும்..’’

"இன்னைக்கு வியாழன் திங்கள் கிழமை வாங்கிக்கோங்க..’’

"சனிக்கிழம ஏதும் சான்ஸ் இருக்கா!’’

"இல்ல சார்... வெல்டிங்லாம் பண்ணனும்.. ஞாயித்துகிழம வேலை பாத்தாதான் முடியும்..’’

"ஓகே .. இந்தாங்க சாவி.. பைக் பத்தரம் சார்..’’

"சார் எங்க போறீங்க.. ஏதாவது பணம் குடுத்துட்டு போங்க..’’

"எவ்ளோங்க பாஸ்’’

"நாலாயிரமாவது குடுங்க..’’

"சாவிய குடுங்க.. ஏடிஎம் போய்ட்டு வந்து தரேன்..’’

____________

செப்டம்பர் 12 - 2009

"வினோ சன்டே எங்கயாச்சும் போலாமா..! ‘’

"சாரிடா குட்டி சான்ஸே இல்ல.. வண்டி சர்வீஸ் விட்டுருக்கேன்.. மன்டேதான்’’

"பொய்சொல்லாதே.. எவளோட ஊர் சுத்த போற..’’

"ஏய் பிராமிஸா வண்டி சர்வீஸ் போயிருக்குடா’’

"நான் நம்ப மாட்டேன்.. அந்த மோனியோடதான ஊர் மேயப்போற.. தெரியும்டா நீ இப்படி பண்ணுவேனு.. ‘’

"ஐயோ ப்ளீஸ் நம்புமா.. அப்படிலாம் இல்ல.. மோனிய பாத்தே பல நாள் ஆச்சு..’’

"ச்சே போன வை..’’

_________

செப்டம்பர் 11 - 2009

"டேய் எங்கடா வண்டி’’

"சர்வீஸ் விட்டுருக்கேன்மா..’’

"போனவாரம்தானடா சரிவீஸ் விட்ட’’

"வண்டி இஞ்சின்ல பிரச்சனையாம் அதான்.. திங்கள் கிழமை கிடைச்சிரும்.. ‘’

"டேய் வண்டிய வித்துட்டியா.. எங்கிட்ட ஏன்டா மறைக்கிறா.. அப்பா செத்த்துக்கு அப்புறம் அவர் ஞாபகார்த்தமா இருக்கறது அந்த வண்டிதான்..’’

"ஐயோ அம்மா நம்புமா.. வண்டியெல்லாம் விக்கல.. எனக்கு அப்பா மேல பாசம் இல்லையா..’’

___________

செப்டம்பர் 11 - 2009

"என்ன சார் பதினோறு மணிக்கு வரீங்க..’’

"வண்டி ரிப்பேர் சார் அதான்.. பஸ்ஸ புடிச்சு ஷேர் ஆட்டோ புடிச்சு டைமிங் மிஸ்ஸாகிருச்சு..’’

‘’போங்க உள்ள எம்.ஜி.ஆர் கூப்படறார்..’’

‘’சார் உள்ள வரலாமா..’’

‘’ஏன்யா டைம் என்ன தெரியுமா..’’

‘’சார் வண்டி..’’

‘’ஐ டொண்ட் வான்ட் எனி பிளடி எக்ஸ்பிளனேஷன் பிரம் யூ.. எனக்காக வொர்க் பண்ணாதீங்க உங்க திருப்திக்கு வொர்க் பண்ணுங்க.. மாசமானா சம்பளம் மட்டும் சொலையா வாங்க தெரியுதில்ல.. டைமுக்கு ஆபீஸ் வரணும்னு தெரியாதா.. ஹெல்.. ஐ டோன்ட் வான்ட் யூ ட்டூ .. டூ இட் எகய்ன்’’

‘’சார் நம்புங்க சார் நிஜமாவே வண்டி ரிப்பேர்.. திங்க கிழமை கிடைச்சிரும்..‘’

‘’அப்புறம் எப்படியா கால்ஸ் போவ.. ஒரு சேல்ஸ் ரெப்புக்கு வண்டி எவ்ளோ முக்கியம். இரண்டு நாள் ஆபீஸ்ல உக்காந்துகிட்டு சீட்ட தேப்ப இல்ல...’’

‘’சார் பஸ்ல போய்..’’

‘’கோ ட்டூ ஹெல்.. கெட் அவுட்’’

____________________

செப்டம்பர் 12 - 2009

‘’மச்சான் டைமே சரியில்லடா..’’

‘’ஏன்டா.. பைக் இல்லாட்டி போனா டைம் சரியில்லையா.. ‘’

‘’ஆமான்டா அந்த பைக் இல்லாம எல்லார்கிட்டயும் திட்டு சண்டை எதுவும் சரியில்ல.. கையிலருந்த நாலாயிரம் ரூவா பணத்தையும் குடுத்துட்டேன்.. கைல காசு கூட இல்லடா.. ம்ம்.. மச்சி ஒரு ரெண்டு நாளைக்கு ஒன் பைக் குடுறா.. மன்டே தந்துடறேன்..’’

‘’சாரி மச்சி சன்டே ஒரு மேரேஜ் இருக்கு.. அம்மாவோட போணும்..’’

‘’ச்சே ஹெல்ப்னுதானடா கேக்கறேன்..’’

‘’மச்சி புரிஞ்ச்சிக்கோ எனக்கும் பிரச்சனை இருக்குடா..’’

‘’ச்சே இவ்ளோதானாடா ஒன் பிரன்ட் ஷிப்பு..’’

‘’டேய் ஏன்டா கோவப்படற..’’

‘’ஓஓ நான் கோவப்படறேனா.. உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருப்பேன் ச்சே.. போடா..’’

__________

செப்டம்பர் 14 - 2009

‘’சார் ஏன் மெக்கானிக் கடை பூட்டிருக்கு..’’

‘’சார் காலைலருந்து கடையே திறக்கல.. தன்ராஜிக்கு போன் பண்ணிப்பாருங்க..’’

‘’போன் பண்ணேங்க போன் சுவிட் ஆப்னு வருது..’’

‘’இன்னா சார் வண்டி வுட்ருக்கியா..’’

‘’ஆமா இன்னைக்கு தரேனு சொல்லிருந்தாரு..’’

‘’தெர்லயே சார்.. நீ வேணா , பக்கத்தில டீகடைல கேளேன்’’

‘’பாஸ் இந்த மெக்கானிக்..’’

‘’தெரியலயேங்க.. அவரு டீ குடிக்கதான் கடைபக்கமே வருவாரு வேற எதுவும் தெரியாது’’

‘’பாஸ் அவரு வீடு எங்கருக்குனாவது தெரியுமா..’’

‘’தெரியலைங்க.. பக்கத்துல ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைல கேட்டுப்பாருங்க’’

‘’சார் இந்த மெக்கானிக் தன்ராஜ் வீடு தெரியுங்களா..’’

‘’தெரியலையே சார் அவரு வீடு தேனாம்பேட்டையோ சைதாப்பேட்டையோனு சொன்னாங்க’’


______________

செப்டம்பர் 15 - 2009


‘’சார் இன்னைக்கு கடை திறக்கலையா’’

‘’இல்லைங்களே.. ஒரு அஸிஸ்டென்ட் பையன் வருவான் அவனையும் காணோம்..’’

___________

செப்டம்பர் 16 - 2009

‘’சார் மெக்கானிக்..’’

‘’சார் உங்கள பாத்தா பாவமா இருக்கு.. என்ன சார் ஏதாவது துட்டு குடுக்கணுமா..’’

‘’அதெல்லாம் இல்லைங்க, பைக் சர்வீஸ் விட்டிருக்கேன்.. அத திருப்பி வாங்கணும்..’’

__________

செப்டம்பர் 25 - 2009

‘’வினோ இந்த வாரமாவது வரியாடா’’

‘’குட்டி ப்ளீஸ்மா.. மூனு வாரம் ஆயிருச்சு.. அந்த மெக்கானிக் என்ன ஆனானே தெரியல..’’

‘’ச்சே பொய் பொய் , போன வாரம் என் கொலிக் உன்ன பைக்ல போகும் போது பாத்திருக்கா.. ஏன்டா இவ்ளோ பொய் சொல்ற’’

‘’ப்ளீஸ்மா புரிஞ்சுக்கோ..’’

‘’ச்சே இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத.. உனக்கு நான் சலிச்சு போய்ட்டேன் இல்ல’’

‘’டேய் குட்டி ஏன்டா இப்படிலாம் பேசற’’

‘’ப்ளீஸ் போன கட் பண்ணு இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத’’

______________

செப்டம்பர் 27 -2009

‘’டேய் அது அப்பாவோட பொக்கிஷம்டா.. அதைப்போய் வித்து குடிச்சிட்டியே’’

‘’அம்மா நான் அப்படிலாம் பண்ணலமா..’’

‘’ச்சே என்னைக்கு அப்பாவோட பைக்கயே வித்து குடிச்சி அழிச்சியோ இனிமே ஒரு நிமிசம் கூட நான் இந்த வீட்டில இருக்க மாட்டேன்..’’

‘’அம்மா என்னம்மா இந்த சில்லரை விசயத்துக்கு கோயிச்சிட்டு ஊருக்கு போறேன்ற’’

‘’ஓஓ அப்பாவோட பைக் ஒனக்கு சில்லரை விசயம் ஆகிருச்சில்ல ச்சே நான் செத்தா கூட என் மூஞ்சில முழிச்சிராத’’

____________

செப்டம்பர் 28 - 2009

‘’வாங்க சார்.. உக்காருங்க..’’

‘’சார் பரவால்ல நான் நிக்கறேன்’’

‘’ஏன் சார் ஆபீஸ்லயே உக்காந்து உக்காந்து சீட்டு தேஞ்சு போச்சோ.. மூணு வாரமா ஒரு நாலே நாலு கஸ்டமர் பாத்திருக்கீங்க.. டார்கெட் இரண்டு பர்சென்ட்தான் , என்னையா நினைச்சுகிட்டு இருக்கீங்க மனசில’’

‘’சார் வண்டி பிராப்ளம், மெக்கானிக் எங்கப்போனா......’’

‘’ப்ளீஸ் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் மெக்கானிக் ஸ்டோரி.. வேலை பாக்க இஷ்டமில்லாட்டி வேலைய விட்டுட்டு போக வேண்டியதுதானய்யா’’

‘’சார் சாரி சார்.. ‘’

‘’ஐ டோன்ட் வான்ட் ஏ பர்சன் ரியூனிங் மை டிக்னிட்டி இன் மை கம்பெனி ... வுட் யூ ப்ளீஸ் புட் யுவர் பேப்பர்ஸ் டுமாரோ..’’

‘’சார் இத்தனை நாளா நல்லாதான சார் வேலை பாத்துகிட்டு இருந்தேன் இப்போதான வண்டி இல்லாம..’’

‘’ஹெல் இங்க நான் மேனேஜரா நீ மேனேஜரா.. ஐ ஆம் கோயிங் டூ டெர்மினேட் யூ.. கெட் அவுட்..’’

________________

அக்டோபர் 1 - 2009


‘’ சார் சாரி சார்.. வியாழக்கிழமை வண்டி குடுத்துட்டு போனீங்களா.. உங்க நேரம் பாருங்க.. எனக்கு அம்மை போட்டிருச்சு சார்.. அதான் போன் கூட ஸ்விட் ஆப் பண்ணிட்டேன்.. பெரியம்மை வேற சார்.. ஆடி மாசம் வந்திருக்குனு.. வீட்ல அசைய வுடல..’’

‘’.......................’’

‘’ மூணு நாள்ல , இன்னைக்கு வியாழக்கிழமை அடுத்து வாரம் திங்கள் கிழமை பக்காவா ரெடி பண்ணி குடுத்துடறேன் சார்’’

‘’...........................’’

‘’இன்னா சார் எதுவுமே பேசமாட்டீறீங்க..’’

‘’பாஸ் நிச்சயம் மன்டே குடுத்துருவீங்களா?’’
_____________