Pages

31 July 2010

எந்திரன் - கார்ட்டூன்


எப்போதாவது கையில் கிறுக்குவதுண்டு.. முதன்முதலாக முழுக்க முழுக்க கணினியில் கிறுக்கியது!  - நன்றி எம்எஸ் பெயின்ட் மற்றும் எந்திரன்

27 July 2010

உலக குடிகாரர்களே...


அண்மையில் லத்தீன் அமெரிக்க தமிழ் எழுத்தாளர் (குடிகாரர்தான்!) டெல்லியில் குடித்த வோட்காவைப்பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். அப்படியே தேன் மாதிரி.. இளநீர் மாதிரி.. தண்ணிகலக்காம குடிச்சேன்.. அப்படியே சொர்ர்ர்ர்னு இறங்குச்சுப்பா, சும்மா கிருகிருனு ஏறிச்சுப்பா என்று சொன்னதுமே, அதைக்கேட்டுக்கொண்டிருந்த மற்ற நண்பர்களுக்கும் நட்டுகிச்சு! சென்னையின் எல்லா டாஸ்மாக்குகளிலும் வோட்காவைத் தேடினர்.. ம்ஹூம் நல்ல வோட்கா கிடைக்கவேயில்லை! ஆம் , எங்குமே நல்ல சரக்கு கிடைக்கவில்லை.. என்ன நடக்கிறது டாஸ்மாக்குகளில் ?

குடி குடியை கெடுக்கும்.. எந்த குடி யார் குடியை கெடுக்கும் என்பது குடிமகன்களுக்கே(மகள்களுக்கும்) தெரியும். குடும்பமான குடியிருந்தால் குடிப்பதற்கோ வழியில்லை! குடிப்பதற்கு மனமிருந்தால் பத்துமணிக்குமேல் கடையில்லை! அய்யகோ ஆயிரமாண்டு குடிகண்ட தமிழினமே பார் உன் பரிதாப நிலையை!
மைனாரிட்டி திமுகவின் ஆட்சியிலே வீதிகள் தோறும் டாஸ்மாக்குகள் பல்கி பெருகினாலும் , அங்கே கிடைக்கிற சரக்குகளில் தரமில்லை. ரெகுலர் கஸ்டமர்களுக்கு அக்கவுண்ட் வைத்துக்கொள்ளும் வசதியில்லை. குவாட்டர் அடித்தாலும் போதையில்லை. குவாட்டருக்கு மேலடிக்க உழைக்கும் தோழர்களிடமோ காசில்லை. அந்தோ பரிதாபம்! கண்களில் பீர் கசிகிறது

ஆஃபாயிலில் பெப்பர் இல்லை. ஏசிபாரில் தம்மடிக்க வசதியில்லை! வாட்டர் பாக்கட்டில் நல்ல வாட்டரில்லை.. சோடாவில் கேஸில்லை! அய்யோ..அம்மா... வயிறு பற்றி எரிகிறது.. மது குடிப்பதே கவலையை மறக்கத்தான்! இன்றோ ஆங்கே மதுகுடித்தால் கவலை! பத்து மணிக்குள் கடை மூடிவிடுவானே என்று போட்டது போட்டபடி கிடக்க ஓட வேண்டிய நிலைமை! செம்மொழி மாநாட்டுக்காக பல கோடி செலவழித்ததில் சில கோடிகளை போட்டு அரசே ஒரு மது தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தால், வேலைவாய்ப்பும்,தரமான சரக்கும் கிடைக்குமே!

சிந்தித்துப்பாருங்கள் தோழர்களே! டாஸ்மாக்குகள் வருவதற்கு முன் எப்படியெல்லாம் குடித்து மகிழ்ந்தோம்! போதை தலைக்கேறி உருண்டு புரண்டோம்! சால்னா கடையில் மிளகாய் பஜ்ஜியோடு சரக்கடித்தோம்! குடல் வேகாமல் இருக்க குடல்கறி (போட்டி) தின்றோமே! சாக்கடைதோறும் வாந்தி எடுத்தோம்! சாலைதோறும் ‘பார்’ , காலையில் எழுந்தால் ஹேங்ஓவரில் தலையை பிடித்தபடி அலைந்தோமே! ஆறு மணிக்கே கதவு தட்டி கட்டிங் அடித்தோமே! இன்றோ அய்யகோ , எல்லாமே தலைகீழ்.
எவ்வளவு குடித்தாலும் போதை ஏறுவதில்லை என்கிற குற்றச்சாட்டை இன்றும் நேற்றும் முச்சூடும் கேட்டபடி இருக்கிறோம்! காரணம் என்ன , ஆல்கஹாலின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மைனாரிட்டி திமுக அரசின் சதியால் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. நம்மை கூடுதலாக குடிக்க வைத்து , விற்பனையை அதிகரிக்கும் சதித்திட்டம் தோழர்களே!

டாஸ்மாக் பீரை குடிப்பதற்கு பதிலாக இரண்டு வாட்டர் பாக்கெட்டை வாங்கி குடிக்கலாம். அதிலே கூட ஓரளவு போதை கிடைக்கிறது! பாண்டிச்சேரியில் போய்ப்பாருங்கள் பீரென்றால் என்னவென்று அப்போதுதான் தெரியும்.. பீராம் பீரு!

பாரிலே வாந்தி எடுத்தால் அதிலேயே உருண்டு புரளுகிற பரிதாப நிலையை அல்லவா இந்த அரசு நமக்கு கொடுத்திருக்கிறது. எந்த டாஸ்மாக்கிலாவது எம்.ஆர்.பிவிலையில் சரக்கு கிடைக்கிறதா! அட நியாயவிலையில் சைடிஷ்தான் கிடைக்கிறதா? குடிப்பவர்கள் புகைத்து மகிழ சரியான விலையில் சிகரட்டும்தான் கிடைக்கிறதா? குடிப்பவர்கள் வசதியாக அமர நல்ல இருக்கைகள்தான் இருக்கிறதா? சொன்னால் சொன்ன நேரத்துக்கு குவாட்டர்தான் கிடைக்கிறதா?

சக குடிகாரர்களுக்கிடையே நிலவி வந்த நட்பு இன்று இருக்கிறதா? நாமுண்டு நம் குடியுண்டு என்றல்லவா வாழப் பழகியிருக்கிறோம். குடித்ததும் எல்லாவற்றையும் குளோஷிக்கொண்டு வீட்டை நோக்கி நடைபோட தொடங்கியிருக்கிறோம்.. ஒரு சண்டை உண்டா? வம்புண்டா? எத்தனை ஆண்டுகள் எத்தனை ஒயின்ஷாப் சண்டைகள், வம்புகள், நட்புகள்! அந்த காலமெல்லாம் போச்சே.. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இந்த கொடுகோன்மை நிலை நீடிக்கும்.

நான் கேட்கிறேன் ஏனய்யா ஆட்சியாளர்களே.. நீங்களெல்லாம் குடிக்கவே மாட்டீர்களா? உங்களுக்கெல்லாம் குடலே இல்லையா? உங்களுக்கெல்லாம் போதையே ஏறாதா? குடிகாரர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக்கொட்டாதீர்கள்.. குடல் வெந்துதான் சாவீர்கள்..
இந்த நிலை மாற , மைனாரிட்டி திமுகவின் சர்வாதிகார ஆட்சி ஒழிய , குடிகாரர்களின் உரிமைக்காக போராடுவோம் , மீண்டும் போதை தலைக்கேற குடித்து மகிழ புயலென திரண்டு வாருங்கள் தோழர்களே..

(இப்படிலாம் பதிவு போடுவதால் நீங்கள் என்னையும் உலக மகா குடிகாரன் என்று எண்ணக்கூடும் , குடிகாரர்களுக்காக குரல் கொடுக்க குடிகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை தோழர்களே!)

மற்றபடி இந்த பதிவை எழுத உத்வேகமாக இருந்த போஸ்டர்! மெயிலில் அனுப்பிய சக குடிகார நண்பருக்கு நன்றி! படத்தை சொடுக்கி பெரிதாய் பார்க்கலாம்! அதிலிருக்கும் கோரிக்கைகளை தயைகூர்ந்து படிக்கவும்.. அத்தனையும் பொக்கிஷங்கள்!கூட்டத்தில் கலந்து கொள்வது அவரவர் பாடு!

போஸ்டர்!

23 July 2010

கனவு வேட்டை

பறவைகளால் தொடர்ந்து துரத்தப்படுவதாய் விடாமல் கொத்தப்படுவதாய் சிறுவயதில் ஒரு கனவு. என்னால் இப்போதும் ஒரு சின்ன பறவையைக்கூட கைகளால் தூக்க முடியாது, கைகள் உதறும். பறவைகள் மீதான பயத்தை ஒரு கனவால் ஏற்படுத்த முடியுமா?

சில நாட்களுக்கு முன் எனக்கு ஓரளவு தெரிந்த உறவினர் ஒருவர் இறந்து போவதாக கனவு. அவர்மேல் எனக்கு எந்த மரியாதையோ அன்போ அதற்கு முன் கிடையாது. ஆனால் அந்த கனவுக்குப்பின் எல்லாமே தலைகீழ். அவர்மீது இனம்புரியாத அன்பு உள்ளே பரவுவதாய் உணர்ந்திருக்கிறேன். கனவால் அன்புகாட்ட வைக்க இயலுமா?

ஆல்பா தியானம் என்று ஒருவகை தியானமுறை உண்டு. வேலைதேடி அலைந்து கொண்டிருந்த போது கற்றுக்கொண்டது. இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட உறங்குவது. பின் வீட்டிலிருந்து இன்டர்வியூவுக்கு செல்வதாகவும், போகும் வழியில் என்ன இருக்கும், என்ன நிறத்தில் உடை? எந்த பேருந்து? டிக்கட் எடுப்பது தொடங்கி , டையை சரி செய்து கொள்வது, இன்டர்வியூவில் வரிசையில் காத்திருப்பது, உள்ளே மேலாளரிடம் பேசுவது,பின் வெற்றிபெறுவது , அந்த மகிழ்ச்சி, வீட்டில் அதை பகிர்ந்து கொள்வது, வெற்றிதரும் களிப்பில் துள்ளி குதிப்பது, என கற்பனையை விரிவாக்கி அரைமயக்கத்தில் வெற்றிக் கனவொன்றை காணவேண்டும். இவ்வளவையும் உங்களால் ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்கு காணமுடியும்! இந்த வகை தியானம் ஒருவகையில் எனக்கு பல வெற்றிகளை தேடித்தந்திருக்கிறது.

சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்த நண்பர் , அது குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். நாள்முழுக்க அதைப்பற்றியே சிந்தனை. அன்றைக்கு இரவே நானும் என் நெருங்கிய நண்பரும் சிறிய படகில் சிங்கப்பூர் செல்வதாக! கையில் காசில்லாத மாதக்கடைசி அது , சிங்கப்பூரில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு பணம் கொடுத்தனர். விதவிதமான அனுபவங்கள். சிறிய படகிலேயே நானும் நண்பரும் கனவு முழுக்க சிங்கப்பூரை சுற்றிக்கொண்டிருந்தோம். கனவு இன்னும் கூட கொஞ்சம் நீளாதா என ஏங்கவைத்தது. இப்போதெல்லாம் என்றைக்காவது காசு சேர்த்து சிங்கப்பூர் போய் விட வேண்டும் என்கிற வேட்கை எப்போதும் மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கிறது. கனவு என்பது வெறும் தொகுக்கப்பட்ட மாயதோற்றங்கள் மட்டுமல்ல , அது ஒரு ஐடியா!

சுவாரஸ்யமான ஐடியாக்களை ஆள்மனம் நினைவிலிருந்து மீட்டெடுத்து நனவாக்கிப் பார்க்க துடித்துக்கொண்டே இருக்கும். அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தால் கனவை நனவாக்கிவிடுகிறது. கிட்டத்தட்ட சுவாரஸ்யமான நினைவுகளை எப்போதும் அசைப்போடுவோமே அதைப்போல! பயங்கரமான கனவுகள் ஆள்மனதில் பாதிப்பை உண்டாக்கலாம். கனவால் ஒரு லட்சியத்தை உருவாக்க முடியும். கனவால் பயத்தை உருவாக்க முடியும். கனவால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே சிதைக்க இயலும். அப்படிப்பட்ட என் கனவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்!

இன்செப்சன் (INCEPTION) திரைப்படமும் அதையே முன்வைக்கிறது. உங்களுக்குள் இருக்கும் ஐடியாவை . அல்லது உங்கள் மனதில் புதைந்திருக்கிற ரகசியத்தை , நான் கணினியில் உருவாக்கியிருக்கும் கனவுலகின் மூலம் , உங்கள் கனவுக்குள் புகுந்து திருட முடிந்தால், அல்லது அந்த ஐடியாவை உருமாற்றி , உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தால்? சொல்வதற்கே மூச்சு வாங்குகிறதே! இப்படி ஒரு மிக மிக சிக்கலான ஒரு கதையை எடுத்துக்கொண்டு யாருமே நினைத்துப்பார்க்க முடியாத , கசாமுசாவென சிக்கிக்கொண்ட இடியாப்பத்தைப் போன்றதொரு திரைக்கதை அமைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன். முன்னதாக வெளியான இவருடைய படமான மெமன்டோவும் கூட இவ்வகை உளவியல் சார்ந்த சிக்கல்களை பேசிய சிக்கலான திரைக்கதையை கொண்ட திரைப்படமே! ஆனால் இன்செப்சன் அதைக்காட்டிலும் இன்னும் ஒரு படிமேலே!

ஜிக்-சா புதிர்களைப் போல ஒன்றுக்கொன்று பிணைந்து , அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிற திரைக்கதையை பார்வையாளனே ஒருங்கிணைத்து ஒட்டவைத்து புரிந்து கொள்ளுகிற வகையில் எடுக்கப்படும் படங்களுக்கு பேர் போனவர் நோலன். கிட்டத்தட்ட ஸ்டான்லி குப்ரிக்கின் புகழ்பெற்ற படங்களில் இதே யுக்தியைக் காணலாம்.. படத்தின் காலக்குழப்பங்களை மிகச்சரியாக பயன்படுத்தியிருப்பது அதைக்காட்டுகிறது. கனவின் நீளம் தற்போதைய கால அளவினை விடவும் நீண்டதாய் இருப்பதை உணர்ந்திருப்போம். அதுவே கனவுக்குள் கனவாக இருந்தால் இன்னும் நீளும். நான்கு கட்ட கனவாக இருந்தால்... எவ்வளவு நீளும்.. கால அளவு நீண்டபடியிருந்தால் புவியீர்ப்பு விசை அதற்கேற்ப குறையுமென்கிறார் (அறிவியலாளர்கள்தான் விளக்கவேண்டும்)

கனவுகளை வேட்டையாடும் நாயகன் , நிர்பந்தத்தால் ஒரு தொழிலதிபரின் கனவுகளை மாற்றியமைக்கத் திட்டமிடுகிறான். அதற்காக ஒரு அணியை உருவாக்கி அதை சாதிக்க எண்ணுகிறான். கிட்டத்தட்ட நான்கு கனவுகளைத் தாண்டி அதை செய்ய முடியும். (கனவிற்குள் கனவிற்குள் கனவிற்குள் கனவு). அப்படி ஒரு முயற்சியில் ஏற்கனவே தன்னுடைய மனைவியை கனவுகளுக்கு தாரை வார்த்தவன். (நிஜ உலகை விட கனவுலகம் அழகாக இருக்கிறதென்று , அங்கேயே தற்கொலை செய்துகொண்டு கனவுலகம் எது நிஜ உலகம் எதுவென்று புரியாமல் கனவுலகிலிருந்து விடுபட நிஜ உலகத்தில் தற்கொலை செய்துகொண்டு சாகிறாள் , கனவுலகம் குறித்த ஐடியாவை அவளுக்குள் விதைத்தவன் நாயகன்) , இறுதியில் அவளுக்காக அவனும் கனவுலகிலேயே மாண்டுபோகிறான்.

இப்படிப்பட்ட கான்செப்ட்டை யோசிப்பதே மிகவும் கடினம். அதில் ஒவ்வொரு கனவிற்கு நடுவிலும் புவி ஈர்ப்பு, கால அளவு குறித்த சிக்கலான பிரச்சனையை சேர்த்திருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது. ஹோட்டல் அறையில் புவி ஈர்ப்பின்றி மொத்தமாக அனைவரும் மிதக்க கேமரா அப்படியே சுற்றுகிறது. ஸ்டேன்லி குப்ரிக் 2010 ஸ்பேஸ் ஒடிஸி திரைப்படத்தில் இதே மாதிரியான காட்சியை அமைத்திருப்பார். ( நீளமான வராண்டாக்களை காட்டுவது ஸ்டானிலியின் டிரேட்மார்க் )

யாருடைய கனவில் நாம் இருக்கிறோமோ அவருடைய கனவு உலகத்தில் அனைத்துமே கனவு காண்பவரின் உள்ளுணர்வு. மனிதர்கள்,சாலைகள்,மரங்கள்,வாகனங்கள் என.. நாயகனை எப்போதெல்லாம் வில்லன் சந்தேகிக்கிறானோ அப்பொதெல்லாம் அனைத்துமே அவனை நோக்கி திரும்புகின்றன. அவனுடைய சந்தேகம் தற்காப்பாக மாறும்போது மனிதர்கள் கனவுக்குள் நுழைந்தவன் தாக்க தொடங்குகின்றனர். இதை காட்சியாக நோலானால் மட்டுமே திரைக்குக் கொண்டுவர இயலும் என்று நினைக்கிறேன்.
படத்தின் இறுதிகாட்சி மிக முக்கியமானது. கனவின் கனவிற்குள் புதையுண்டு மாண்டு போகும் நாயகன் , மீளமுடியாத நினைவலைகளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் கனவுகளுக்குள்ளேயே வாழ்வதாக படம் முடிந்து போகிறது. கிட்டத்தட்ட கனவில் தற்கொலை செய்துகொண்டால் உண்மையில் கோமாதான். அண்மையில் வெளியான அவதார் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் எப்படி திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லோ கருங்கல்லோ, இத்திரைப்படம் திரைக்கதை அமைப்பில் அதற்கு ஒப்பானது.

படத்தில் கிராபிக்ஸ் கலைநுணுக்கம் மிக அருமையாக கையாளப்பட்டுள்ளது. நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங் கேமரா என எல்லாமே அருமையாக இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்தில் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாமல் போகலாம். நீங்கள் மசாலாப்பட ரசிகராக இருந்தால் கிராபிக்ஸ் கனவில் மூழ்கடிக்கப்படுவீர்கள். சிறந்த ஆக்சன் அட்வென்ச்சராக அது இருக்கும். சினிமா ஆர்வலராக இருந்தால் இப்படி ஒரு திரைக்கதை , உங்களுடைய ஆழமான நுட்பம் சார்ந்த தேடலுக்கு உங்களை அழைத்துச்செல்லும்.

கனவுலகில் சஞ்சாரம் செய்யுகிற தொழில்நுட்பம் வருங்காலத்தில் வரலாம். நம் கனவினை நாமே வடிவமைக்கும் பலமும் நமக்கு கைவரலாம். ஆனால் அதற்காக வருங்காலத்திற்கெல்லாம செல்லவேண்டியதில்லை. இன்செப்சன் , கிரிஸ்டோபர் நோலனே வடிவமைத்த கனவுப் புதிர். அந்தப்புதிரில் தியேட்டரில் படம் பார்க்கும் நூற்றுசொச்சம் பேரையும் இணைத்துவிடுகிறார். நீங்களும் கனவில்தான் இணைக்கப்படுகிறீர்கள். ஆனால் நோலனின் கனவில். அவருடைய ஐடியாவை உங்கள் கனவில் அவர் விதைத்துவிடுகிறார்! ஆழமாக...

21 July 2010

தமிழ்வாய்ப்பாடு
நெல்,மா,பிளவு,குன்றி,மஞ்சாடி,பணவெடை,கழஞ்சு,பலம்... இப்படியே நீள்கிறது அந்த பட்டியல். இவையெல்லாம் மளிகைக்கடை சாமான்கள் அல்ல , இது தமிழில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவீட்டு முறைகளின் பெயர்கள். இவையெல்லாம் இப்போது வழக்கில் இல்லை. எல்லாமே கிலோதான்! யாருக்கும் இவற்றின் பொருளோ அளவோ கூட தெரியாது.

ஈரோட்டில் ஒரு தொழிற்சாலையில் நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார் ராஜேந்திரன். நாற்பதாயிரம் செலவழித்து சின்னதாய் ஒரு புத்தகத்தை இரண்டரை ரூபாய் விலையில் 15000 பிரதிகள் வெளியிட்டுள்ளார். அது தமிழ் எண் சுவடி! அல்லது தமிழ் வாய்ப்பாடு!.

தமிழின் மீது தீராத பற்றும் ஆர்வமும் கொண்டவர். அதுதான் அவரை அப்படி ஒரு புத்தகத்தை தன் சொந்த வருவாயிலிருந்து வெளியிட உந்துதலாய் இருந்திருக்கிறது. ‘’தமிழ் எண் கணித முறை , பிரத்யேகமானது, சிறப்பானது , உலகிற்கே முன்னுதாரணமாய் திகழ்வது , அதைப்பற்றி நம் மக்களிடையே சரியான விழிப்புணர்வில்லை , பள்ளியிலிருந்தே இதுபற்றி நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்’’ என்கிறார்.

36பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் , தமிழ் எண்கள் , அதற்கான குறியீடுகள் , தமிழ் எண்களால் உருவாக்கப்பட்ட வாய்ப்பாடு, தான அடிப்படைகள், அளவீட்டு முறைகள், காசு அளவு, எடையளவு , நாள் அளவு என சின்னச்சின்னதாக நிறைய தகவல்கள் தொகுத்திருக்கிறார் ராஜேந்திரன். இதற்காக பல நூலகங்களுக்கும் சென்று பல நூல்களை ஆராய்ந்து மிகமிக எளிமையாக குழந்தைகளும் அறிந்துகொள்ளும்படி இந்த நூலை உருவாக்கியுள்ளார். குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டாலும் இதிலுள்ள பல தகவல்கள் நமக்கே புதியதாக இருக்கின்றன.

இந்த எண்களையும் குறியீடுகளையும் அளவுகளையும் நாம் தற்போது பயன்படுத்த இயலாதென்றாலும் , தொன்மையான தமிழ்க்கணித முறைகள் பற்றி அறிந்து கொள்ளவும் இது குறித்து வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ளவும் இந்த புத்தகம் பெரிதும் உதவும். பல ஆண்டுகளாக பூஜ்யத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள் என்று பேசிக்கொண்டிருந்தாலும் , உண்மையில் தமிழ் எண் வரிசையில் பூஜ்யமே கிடையாதாம். 10, 100,1000 முதலான பூஜ்யம் வரும் எண்களுக்கு தனிக்குறியீடாம்.

‘’என்னுடைய வருமானத்திற்கு மீறி இதற்காக செலவழித்திருந்தாலும் , இந்த புத்தகத்திற்கும் சரி தமிழ்எண்கள் குறித்த ஆர்வத்திற்கும் சரி, போதிய மரியாதையோ , வரவேற்போ கிடைக்காததுதான் என்னை பெரிதும் பாதித்துள்ளது.. பல நேரங்களில் கேலிப்பேச்சும் கிண்டலையுமே இந்த முயற்சிக்காக பரிசாக பெற்றுள்ளேன். இருந்தாலும் தொடர்ச்சியாக சிறிய பள்ளிகளுக்கு இந்த புத்தகத்தை வழங்கி வருகிறேன் , தமிழ்க்கணித முறைகள் பற்றியும் குறியீடுகள் பற்றியும் அரசு நம்முடைய பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்தால் செம்மொழித் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் , இதற்காக குரல்கொடுக்க தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கிறார் ராஜேந்திரன்.

உண்மையில் இந்த அளவீட்டு முறைகளையும் எண்களையும் வீண் வீம்புக்காகவோ அல்லது இன்ஸ்டன்ட் புகழுக்காகவோ வேண்டுமானால் நம்மால் பயன்படுத்த இயலுமே தவிர , இதனை பயன்பாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படுத்த இயலாது. இருப்பினும் நமக்கே நமக்கான அளவீட்டு முறைகள் என்று ஒன்று இருந்ததையும் , தமிழின் தொன்மையான எண் வடிவங்கள் இருந்ததும் , நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று. நம் குழந்தைகளும் அறிந்திருக்க வேண்டும். அவ்வகையில் இதுமாதிரியான முயற்சிகளை நாமும் ஊக்குவிப்பது நம் வரலாற்றையும் தமிழையும் காக்க சிறிய அளவிலாவது உதவும்.

19 July 2010

மீனவ நண்பன்தமிழர்களே தமிழர்களே
தயவு செய்து
என்னைக் கடலில் தூக்கிப் போட்டுவிடாதீர்கள்..
சிங்கள இராணுவம் 
சுட்டு விடும் 
பின் பிணமாகத்தான் மிதப்பேன்! படம் - அதிஷா

15 July 2010

கலைஞர் கோப்பை கிரிக்கெட் போட்டிஆகா அடித்தாடும் வேங்கைகளே உங்கள் ஆட்டத்தைக்காணும் போது வெல்லப்போவது அண்ணாநகர் தொகுதி திமுகவா? சைதை தொகுதி திமுகவா? என்கிற ஆர்வம் மேலோங்குகிறது. அதோ வந்துவிட்டார் அண்ணாநகர் நந்த குமார் , விஜய்சிசி அணியின் நம்பிக்கை நட்சத்திரம், இவர் களத்திலிருந்தால் அந்த அணிக்கு அசுர பலம்! இல்லாவிட்டால் எதிரணிக்கு நலம். ஆறும் நான்குகளும் இவருக்கு அல்வாவைப்போல! அதிரடி ஆட்டத்தில் அடங்காத காளை! அதிரடி வீராதி வீரர்களே சூராதி சூரர்களே நீங்கள் சிக்ஸரும் ஃபோரும் அடித்தால்தான், ஆங்கே குத்தாட்ட நடனம்! இல்லையென்றால் கிடையாது நடனமும் இசையும்.. திமுகவின் உடன்பிறப்புகளே தமிழ் வாழ அடியுங்கள் ஆறு.. தமிழ்வளர அடியுங்கள் நான்கு! நாளைய சரித்திரம் நம்மோடு!
மேலே குறிப்பிட்டிருக்கும் வசனங்கள் , சென்னை சைதை பஸ் ஸ்டான்டுக்கு பின்புறமுள்ள சாக்கடையை தாண்டி சுவருக்கு பின்னால் இருக்கும் மைதானத்தில் நடைபெற்ற, கலைஞர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் கேட்ட கமென்ட்ரி.(மூச்சு விட்டுக்கொள்ளுங்கள்)

சென்னையை சுற்றியுள்ள 25000 இளைஞர்களை திரட்டி வருடத்திற்கு இரண்டு முறை (கலைஞர் பர்த்டே ஒன்டைம், தளபதி பர்த்டே ஒன்டைம்) நடைபெறும் போட்டிகள் இது. கிட்டத்தட்ட 2000 அணிகள் பங்குபெறுகின்றன. முதல் பரிசாக ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 50000! டென்னிஸ் பந்தில் நடைபெறும் போட்டிகளுக்கு பிளக்ஸ் பேனர்கள் என்னே! சியர் லீடர்ஸ் என்னே! (ஊர்த்திருவிழாவில் குத்தாட்டம் போடும் குஜிலிகள்) , ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்புகள் என்னே! மின்னொளியில் கண்ணைப்பறிக்கும் விளக்குகள் என்னே என்னே! இரண்டு பக்கமும் ஆடும் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பிரமாண்ட(?) திரைகள் என்னே! காசை வாரி இறைத்து கண்ணுக்கு விருந்தளிக்கும் கிரிக்கெட் போட்டிகளை காண கண்கோடி வேண்டும்! பார்க்க இலவசம்தான்!

ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக(?) ஊழல்களின்றி பெட்டிங்குகளின்றி நடைபெறுகிற இந்த போட்டியில் கலந்து கொள்ளுகிற வீரர்களுக்கு கலைஞர் படம் போட்ட டிஷர்ட் முற்றிலும் இலவசம். தளபதி கோப்பையாக இருந்தால் தளபதி படம் போட்ட டிஷர்ட் ஃப்ரீ. இந்த டிஷர்ட்டுக்காகவே கலந்து கொள்ளுகிற உடன்பிறப்பு அணிகளும் உண்டு. கலந்து கொள்ள காசு கொடுக்க வேண்டாம். அரையிறுதி வரை முன்னேறும் அணி வீரர்களுக்கு முழு சீருடை , ஷூ எல்லாமே ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ. திருவான்மியூர் தொடங்கி தாம்பரம் வரைக்கும், அம்பத்தூர் தொடங்கி அந்தப்பக்கம் அடையார் வரைக்கும் இளசுகளும் பெருசுகளும் இந்த போட்டியில் பங்கு பெறுகின்றனர். மைதானத்தை சுற்றிலும் கலைஞரும் ஸ்டாலினும் அழகிரியும் இன்னபிறரும் பல்காட்டி சிரிக்கின்றனர்..

கடைசியாக மார்ச் மாதத்தில் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக நடைபெற்ற தளபதி கோப்பைப்போட்டிகளில் விஜய்சிசி என்றொரு அணி ஒரு லட்சம் வென்றதாம். அதுவும் கடைசி மூன்று பந்துகளில் 14 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது! இந்த முறை கலைஞரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அண்ணாநகர் தொகுதி திமுக அணி வென்றது.

இந்த போட்டிகள் கொஞ்ச காலமாகவே சென்னையில் புகழ்பெற்று வருகிறது. இதை பின்புலமாக வைத்தே சென்னை 60028படம் எடுக்கப்பட்டதாக எண்ணுகிறேன். கல்லி கிரிக்கெட் எனப்படும் இந்த வகை கிரிக்கெட் உண்மையில் கிரிக்கெட்டை அழித்தாலும், வெறும் எட்டே ஒவர்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை! அதிலும் சுத்தமான தமிழ் கமென்ட்ரி , பீர் வந்து பாயுது காதினிலே!

பீரென்றதும்தான் நினைவுக்கு வருகிறது , மைதானத்தின் இரு புறமும் கேலரி, சுற்றிலும் சின்னசின்ன பஜ்ஜி போண்டா கடைகள் , பீடி சிகரட்டு, சுண்டல் என ஒரே மஜாதான். கையில் பீரோடு போனால் இருட்டுக்குள் அமர்ந்து கொண்டு பீரடித்தபடியே சுண்டலோ பஜ்ஜியோ தின்றபடி, ஒரு தம்மை பற்றவைத்துக்கொண்டு ஜாலியாக மேட்ச் பார்க்கிற வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள். இது வெஸ்ண் இன்டீஸ் , நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே சாத்தியம். நிறைய கபாலிகளின் குவாட்டர் பார்ட்டிகள் வாட்டர் பாக்கட்டுகளுடன் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ‘’இன்னா மாமா , த்தா செம லென்த் பாலு! அத வுட்டுட்டான் பார்ரா, அட்ச்சா சும்மா அப்படியே மார்க்கட்ட்டான்ட போவேண்டாம்!’’ மாதிரியான டயலாக்குகளை கேட்டு மகிழலாம்.

உங்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கடிக்கவே பிடிக்குமென்றால் இந்த இடம் அதற்கேற்ற சூழலை நிச்சயமாக வழங்கும் என்பதில் ஐயமில்லை. மைதானத்தைச்சுற்றி எங்கும் சிறுநீர் கழிக்கலாம். மைதனாத்தின் மரத்தடியின் இருண்ட பகுதியில் சிறுவர்கள் சிலர் சிகரட் பிடித்தபடி பீரடித்துக்கொண்டிருந்தனர். சைடிஷாக பிரட்பஜ்ஜி! என்ன காம்பினேஷனோ?ச்சே!

மார்க்கெட்டிங்கில் பல வகை உண்டு. இது மாதிரி யாரும் கலந்து கொள்ளும் ஒபன் சாலஞ்ச் போட்டிகள் நடத்தி மார்க்கெட்டிங் செய்வது ஒரு யுக்தி. அதிக எண்ணிக்கையிலான மக்களை கவர்ந்திழுக்க முடியும். திமுகவின் இந்த மார்க்கெட்டிங் திமுகவையும் கலைஞரையும் ஸ்டாலினையும் மார்க்கெட் செய்ய மிக அருமையாக உதவும் என்றே நினைக்கிறேன். கிட்டத்தட்ட 25000 பேரிடம் திமுகவினை கொண்டு செல்ல முடியும். அதுவும் நாளைய தமிழகத்தின் தூண்களான சென்னையின் இளைஞர் பட்டாளத்திடம். உடன்பிறப்பு ஒருவர் கொடுத்த தகவலின் படி போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள் ஆட்டோமேட்டிக்காக திமுகவில் இணைந்து கொள்கின்றனர். இது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும். தவிர முதல் பத்தியில் கண்ட கமென்ட்ரியில் ஆடுவது விஜய்சிசியோ ராயல்ரேஞ்சர்ஸ் அணியாகவே இருந்தாலும், அழைப்பது என்னவோ சைதை தொகுதி 69வது வட்ட திமுக அணி, வடபழனி டேஷ் டேஷ் வட்ட தொகுதி திமுக அணி என்பதாகவும் இருப்பது நேனோஅரசியல். இன்னும் வரும் ஆண்டுகளிலும் இது தொடருமாம்!

இதுபோக கலந்து கொள்பவர்களுக்கு அந்தந்த ஏரியா திமுக புள்ளிகளின் செல்போன் எண் வழங்கப்பட்டு, பிரச்சனைனா போன் போடு,பார்த்துக்கலாம் என்பதுமாதிரியான வசதிகளும் செய்துகொடுக்கப்படுவதாக தகவல். இது அவர்களை திராவிட இயக்க வரலாற்றில் தம்மை இணைத்துக்கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் திமுகவிற்குள்ளாகவே நடைபெறும் போட்டிகள் என்பதால் வீழ்வது யாராக இருந்தாலும் வெல்வது திமுக வாகத்தான் இருக்கிறது.

போட்டிகளை நடத்துவது தென்சென்னை மாவட்ட திமுக என்று பல போஸ்டர்களைக் கண்டேன். இறுதிப்போட்டியைக்காண தளபதி ஸ்டாலின் வந்திருந்தார். துணைமுதல்வர் மூன்று மணிநேரம் அமர்ந்து போட்டிகளை ரசித்தார். வீரர்களை மட்டுமல்லாது இடை இடையே சைடில் ஆடிக்கொண்டிருந்த சியர் லீடர்ஸையும் உற்சாகமூட்டத் தவறவில்லை. அவர்களும் இவர் பார்வை பட்டதுமே துள்ளி குதித்து குதித்து ஆடியது ஆஹா! சியர் லீடர்களை சுற்றி பெருங்கூட்டம் , நடுவில் ஒரு பெண் சின்ன கவுனும் டைட் டிஷர்ட்டுமாய் ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது. முண்டியடித்து முன்னால் போய் என்னதான் என்று பார்க்க முயன்றாலும் முரட்டு உடன்பிறப்புகள் வழியே விடவில்லை. ச்சே வட போச்சே என்று நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.பின்குறிப்பு -

இது எந்த கட்சியும் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல! இந்த நிகழ்வு குறித்து இதுவரை எழுதப்பட்டதிலேயே அரசியல் இல்லாத நடுநிலையான கட்டுரை இதுமட்டுமே என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

13 July 2010

மதராசப்பட்டினம் (சென்னை)
நாற்றமடிக்கும் கூவம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ஒரே நசநச. சுத்தமான காற்று கிடையாது. தண்ணீர் கிடையாது. வெயில் காலத்தில் வீட்டுக்கு உள்ளே வெளியே எங்குமே இருக்க முடியாது. வேர்வையில் குளிக்கலாம். விலைவாசி வேறு! மழைகாலத்தில் வீட்டுக்குள்ளே பம்பில்லாமல் பாம்போடு தண்ணீர் வரும். குடிநீர் கூட காசுக்குதான் கிடைக்கும். மகிழ்ச்சி என்கிற நம் வரையறையில் ஒரு சதவீதம் கூட திருப்தியை அளிக்காத நகரம் தமிழ்நாட்டிலேயே சென்னை மட்டுமாகத்தான் இருக்கும். இத்தனை குறைகள் இருந்தாலும் அதனையும் மீறி இந்நகரத்தில் ஒரு கோடிபேர் வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேர் குடிபுகுந்த படி உள்ளனர். புகுந்தவன் திரும்பிச்செல்வதேயில்லை. இந்நகரம் தன் வசீகர ஆக்டோபஸ் கரங்களால் அவனை இங்கேயே கட்டி வைத்துவிடுகிறது. காரணம்... குறைகளையெல்லாம் மீறி இங்கே வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிற , இந்த நகரத்தின் மீதான காதல்! இது இளம்பருவக் காதல்களைப்போல சொல்லமுடியாத ஈர்ப்பினால் உண்டாவதாகவும் இருக்கலாம்.

இந்நகரத்தின் மீதான காதலோடு ஒரு வரலாற்று சினிமா! மதராசப்பட்டினம் (சென்னை). 1947க்கும் 2010க்கும் நடுவே ஒரு மென்மையான காதல்கதை. நிறைய டைட்டானிக் கொஞ்சம் லகான் , கடலுக்கு பதிலாக கூவம், கப்பலுக்கு பதிலாக சென்னை, கிரிக்கெட்டுக்கு பதிலாக மல்யுத்தம். கதைக்காக அதிகம் மெனக்கெடவில்லை. ஆனால் படமாக்கத்திற்காக மிகமிக அதிகமாக உழைத்துள்ளனர். 60ஆண்டுக்கு முந்தைய சென்னை. பாலங்கள் கிடையாது, கூவத்தில் சாக்கடை கிடையாது, வயல்கள் , கிராமத்து வீடுகள் , யானைகள் வலம்வரும் மைலாப்பூர்,திருவல்லிக்கேணி,பாரிஸ்,பர்மாபஜார் இல்லாத கடற்கரை சாலை என சென்னையும் ஒரு பாத்திரமாக வலம்வருகிறது. பார்க்க பார்க்க உடல் சிலிர்க்கிறது. பிசிறில்லாத கிராபிக்ஸ். அதிலும் படம் முழுக்க வருகிற சென்ட்ரல் ஸ்டேசனும்,படகுகள் நகரும் கூவம் நதியும் அழகு. பழைய சென்னையின் புகைப்படங்களை மாதிரியாக வைத்துக்கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

காதல் படங்களுக்கு ஆதாரமே நாயக நாயகியரின் அங்கலட்சண சர்வாம்ச பொருத்தம்தான். அலைகள் ஓய்வதில்லை தொடங்கி அண்மையில் வெளியான காதல்,ஜெயம் படம் வரைக்கும் வெற்றிபெற்ற படங்கள் எல்லாவற்றிலும் நாயக நாயகியரின் பொருத்தம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆர்யா , எமி இருவருக்குமே அப்படி ஒரு ரொமான்ஸ். எமி வெளிநாட்டு நடிகையாம். பஞ்சாபி பெண் போல் இருக்கிறார். அழகு! மிக அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார். படமே அவரை சுற்றி அவரால்தான் நகர்கிறது. தமன்னா,ஜெனிலியாவுக்கெல்லாம் நல்ல போட்டி! விஜயின் அடுத்தபடத்தில் ஜோடி சேர நேரிடலாம்.

ஆர்யா நான்கடவுள் படத்தினைக் காட்டிலும் இதில் அருமையாக நடித்திருக்கிறார். கோபக்கார முரட்டு மல்யுத்த வீரனாகவே படம் முழுக்க வலம் வருகிறார். காமெடி,ஆக்சன்,ரொமான்ஸ் என களைகட்டுகிறது அவருடைய நடிப்பு. மல்யுத்தக்காட்சிகளுக்காக நிறைய உழைத்திருப்பார் போல!

படத்தின் இன்னொரு ஹீரோ ஹனீபா. மொழிபெயர்ப்பாளராக அவர் செய்யும் காமெடிகள் விலாநோகவைக்குமளவுக்கு சிரிக்க வைக்கிறது. அதே போல நாசர் அந்தக்கால சென்னைக்காரராக சென்னையின் மொழியை அச்சரம் பிசகாமல் அந்தக்காலத்து பெரிசாக கவர்கிறார். அவர் தவிர்த்து வில்லனாக வருகிற பாரின் காரர்,பாஸ்கர் உள்ளிட்ட சின்ன சின்ன பாத்திரங்களும் நிறைவாக நடித்துள்ளனர். நீரவ்ஷாவின் கேமராவில் வரலாறு,தற்போது என வித்தியாசம் காட்டுகிறார். படத்தின் கலை இயக்குனருக்கு விருதுகள் கிடைக்கலாம் , பேனா,குடை,கார்,கைவண்டி தொடங்கி சென்ட்ரல் ஸ்டேசன் வரை அச்சு அசலாக அந்தகாலத்தை பிரதிபலிப்பது அசத்தல். அதிலும் மல்யுத்த பயிற்சி காட்சியில் அருகிலேயே மல்யுத்த வீரர்கள் பயிற்சி எடுக்கும் மல்லர் கம்பம்! ஹனீபா உடல்நலமில்லாமல் படுத்திருப்பார் அருகிலேயே பழங்காலத்து அமிர்தாஞ்சன் மற்றும் ஆனந்தவிகடன் என பார்த்துப் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருக்கிறார்கள்!

ஜி.வி.பிரகாஷின் இசை முதல் பாதியில் மெல்லிய இறகைப்போல காதை வருடினாலும், இரண்டாம் பாதியில் ஏனோ இரைச்சல். பூக்கள் பூக்கும் பாடல் படத்தில் வரும் காட்சியில் சிலிர்ப்புக்கு கியாரண்டி. காதலில் கரைய வைக்கும் கஜல். ஆரம்பப்பாடலில் எம்.எஸ்.வீயின் குரல் அதே வீரியத்துடன்!

முதல் பாதி படம் மென்மையாய் அழகாய் போய்க்கொண்டிருக்கும் போது, இரண்டாம் பாதி ஜவ்வு மிட்டாயாய் , வழவழகொழகொழ என நீண்டு கொண்டே போவது எரிச்சலூட்டுகிறது. இன்னும் கொஞ்சம் தட்டி டிங்கரிங் செய்திருக்கலாம். அதிலும் தேவையில்லாமல் வருகிற இரண்டாம் பாதி சோகப்பாடல்! க்ரிஸ்ப்பாக வெட்டி ஒட்டியிருந்தால் படம் ஒரு கிளாஸிக்காக வந்திருக்கும். அதிலும் கிளைமாக்ஸ் ஹீரோயிசங்களை குறைத்திருக்கலாம். மற்றபடி நல்ல படம்,வித்தியாசமான முயற்சி , ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்க வேண்டியதும் கூட.

படத்தில் காணும் சென்னை மனதை என்னவோ செய்கிறது. அத்தனை அழகு. படம் முடிந்து வெளியே வரும் போது , வெளியே புதிய சென்னை , அதே டிராபிக்,ஜனநெருக்கடி கூவத்தின் நாற்றத்தோடு , குற்றவுணர்வும் சென்னை எனும் சொர்க்கத்தை அழித்துவிட்ட தவிப்போடும் மனது இறுகிப்போகிறது. இந்நகரத்தின் மீதான எங்களுடைய காதல்தான் இந்நகரத்தின் முதல் எதிரியாகவும் இதன் அழிவுக்கு காரணமாகவும் இருக்கிறது.

12 July 2010

உலக கோப்பையன்!ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் நலனுக்காக இனி விடுமுறை நாட்களிலும் விவாகரத்து வழங்கப்படும் என நம் அரசு அறிவித்துள்ளது. இப்படி ஒரு நல்ல செய்தியோடு உலக கோப்பை குறித்த இந்த கட்டுரையை தொடங்குகிறேன். ஒருவழியாக ஆக்டோபஸின் ஆருடம் பைனலிலும் பலித்துவிட்டது. ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்று சொல்லியிருந்தால் ஜெர்மானியர்கள் ஆக்டோபஸுக்கு கோயில் கட்டியிருப்பார்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகி விடவில்லை ஸ்பெயினில் எட்டு தூண்களோடு பிரமாண்ட கோவில் கட்டலாம். ஸ்பெயின் அரசு மனது வைக்குமா என்பதே நம்மிடம் இருக்கும் முதல் கேள்வி?

இந்த உலகக் கோப்பை தொடங்கியது முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதல் அதிர்ச்சி நானும் உலக கோப்பைப் போட்டிகள் பார்க்கத் தொடங்கிவிட்டேன் என்பது. முழு பந்தில் ஆடினாலும் ஏன் கால்பந்து என்று அழைக்கின்றனர்? என்று கேள்வி கேட்கிற மறத்தமிழன் வம்சத்தில் வந்தவன் நான். நானும் எஸ்சிவி கேபிள்டிவியினரின் சீரிய முயற்சியால் இஎஸ்பிஎன்னில் மேட்ச்களை ரசிக்க முடிந்தது. எங்களூர் கேபிள் தொலைக்காட்சியில் முதல்முறையாக கிரிக்கெட்டுக்கு பதிலாக புட்பாலை ஒளிபரப்பிய கேபிள் அக்கா புவனேஸ்வரிக்கு நன்றி.

அடுத்த அதிர்ச்சி நான் மிகவும் எதிர்பார்த்த இத்தாலி மண்ணைக் கவ்வியது. இத்தாலியோடு பிரான்சும் சேர்ந்து மண்ணு கல்லு சில்லெல்லாம் கவ்வியது . இதைவிட சில அணிகள் லீக் போட்டிகளில் நன்றாக ஆடினாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் போனது. மெஸ்ஸியைப்பற்றி பலரும் மெச்சினாலும் அவர் சுமாராகதான் ஆடினார். டிவில்லா நிறைய கோலடித்தார். ஸ்னைடரும் இன்னும் சிலரும் நன்றாகவே ஆடினர்.

எந்த விளையாட்டாக இருந்தாலும் நாம் ஆடாத போட்டிகளில் வலிமைகுன்றிய அணிக்கு ஆதரவளிப்பதே பொதுவான சுபாவம். அது ஏனென்று தெரியவில்லை. ஜிம்பாப்வேயும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் ஆடினால் மனது ஜிம்பாப்வே ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்து , தானியங்கியாக நம் ஆதரவை ஜிம்பாப்வேய்க்கு வழங்கி விடுகிறது. அதைப்போல இந்த உலக கோப்பையில் ஒவ்வொரு போட்டியின் போதும் கானா,உருகுவே,பாராகுவே,ஜப்பான்,ஐவரி கோஸ்ட் என மற்ற வலிமையான ஐரோப்பிய நாடுகளை காரணமில்லாமல் வெறுக்கவும் சிறிய நாடுகளை ஆதரிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. என் நல்ல நேரம் அந்த நாடுகளும் லீக் போட்டிகளிலும் இரண்டாவது சுற்றிலும் வெற்றிகளை குவித்தது மகிழ்ச்சியளித்தது.

இங்கிலாந்துக்கு உலக கோப்பை கிரிக்கெட்டில்தான் கண்டம் என்றால் கால்பந்திலும் அதே கதைதான் போல! பெவிலியனில்(?) அமர்ந்து கொண்டு ஓய் ஓய் என்று கத்திக்கொண்டிருந்த பெக்காமைப் பார்க்க பாவமாக இருந்தது. அழகான ஹேர் ஸ்டைல் அவருக்கு! இங்கிலாந்து வீரர்கள் எல்லோருமே நட்சத்திரங்களாம் , அய்யோ பாவம் இந்திய கிரிக்கெட் அணியே பரவால்ல! சின்னப்பயலுங்கல்லாம் தூக்கிப்போட்டு தூர்வாரினாங்க இங்கிலாந்த! மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

ஜெர்மனி அணியில் விளையாடுபவர்களைப் பார்க்க குழந்தைப்பசங்க மாதிரி இருக்கானுங்க! மைதானத்தில் இறங்கிவிட்டால் எல்லார் தலையிலும் கொம்பு முளைத்து விடுகிறது. அதிலும் அர்ஜென்டினாவுடனான மேட்ச்சில் ரத்த களறி.. புலியிடம் மாட்டிக்கொண்ட புள்ளிமானாய் அர்ஜென்டினாவை துவைத்து காய்ப்போட்டது என்னைப்போன்ற மரடோனா ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கும். மற்றபடி சின்னப்பயலுக அரையிறுதியில் தோற்றது ஆக்டோபஸ் மகிமை! தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட்டில்தான் கில்லி போல , கால்பந்தில் ரொம்ப ரொம்ப மோசமாக ஆடியது ஆறுதல் அளித்தது.

அர்ஜென்டினா ஜெயித்தால் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று மரடோனா கூறியிருந்தார். உருகுவே ஜெயித்தால் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று ஒரு அழகி கூறியிருந்தார். நல்ல வேளையாக இரண்டு அணிகளும் தோற்றுப்போனது.

ஜப்பான் அணியின் ஹோன்டா, மிட்சுபிசி, கியோட்டா என நிறைய பிளேயர்கள் நன்றாக ஆடினர். ஜப்பான் தயாரிப்புகளை போலவே சின்னதாக இருந்தாலும் சிறுத்த குட்டிகள். கானாவோ கருப்பாக இருந்தாலும் விஜயகாந்தைபோல! இந்த உலக கோப்பையில் என்னை மிகவும் கவர்ந்த அணி கானாதான்!

அடப்போங்கடா என்றபடி பிரசிலை ஆதரித்தால் அந்த அணிக்கும் ஆப்பு காத்திருந்தது. அட பிரேசில் போனா என்ன அகிலம் போற்றும் அண்ணன் மரடோனாவின் அர்ஜென்டினாவை ஆதரித்தேன், அதுவும் அவுட்டு! உருகி உருகி உருகுவேயை ஆதரித்தேன்.. ம்ம்.. ஒன்றும் சொல்வதற்கில்லை. இறுதியாக வேறு வழியின்றி ஆக்டோபஸ் சொல்லும் அணியை ஆதரிக்க முடிவெடுத்து ஸ்பெயினை ஆதரித்தேன். ஸ்பெயின் நெதர்லாந்துடன் மோதி மோதி காலை வாரி , சண்டை போட்டு இனியஸ்டாவின்ட இனிமையான கோலால் வென்றது.. ஆஸ்தல விஸ்டா , விவ லா ஸ்பானல் என்று குத்தாட்டம் போட்டாச்சு..
 

டிவில்லா,குளோஸ்,ஹோன்டா,ஸ்னைடர்,காகா,மெஸ்ஸி என நிறைய பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டு பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப்பற்றி பேசுவதுதான் கொஞ்சம் கடினமானதாக இருந்தது. மற்றபடி கிரிக்கெட்டை விடவும் கால்பந்து மிகமிக சுவாரஸ்யமானது.  போலவே ஷகிராவின் வாக்கா வாக்கா மாதிரியான மேற்கத்திய கொலம்பிய இசையும் குத்தாட்டமும் மிகவும் கவர்ந்தது.

05 July 2010

சின்ன பந்தும் பெரிய பந்த்ம்எங்களுக்கெல்லாம் பந்த் என்பதே ஒரு திருவிழாவைப் போல! பந்த் நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவெல்லாம் கண்களில் கனவுகளோடே உறங்குவோம். பந்த் அன்று பள்ளி விடுமுறையோடு , எங்கள் தெருவும் வெரிச்சோடி இருக்கும். கிரிக்கெட் விளையாட இதைவிட நல்ல இடம் வேறெங்கும் கிடைக்காது. நிறைய வாகனங்கள் வீட்டு வாசல்களில் நிற்கும். பந்தைப்பார்த்து அடிக்க வேண்டும். ஓங்கி அடித்தால் கார் அல்லது மோட்டார் சைக்கிள் எதனுடையா பின்னோ முன்னோ உடைந்து எங்கள் பந்து பிடுங்கப்படும். பந்த் நாளில் பந்து வாங்க முடியாமல் போனால் அன்றைய தினமே வீணாகும் அபாயமிருப்பதால், வாகனங்களில் பந்தை அடித்தால் அவுட் என்கிற விதி எங்களால் கிரிக்கெட் வளர்ச்சிக்காக எழுதப்பட்டது.

எங்கள் அப்பாக்கள் ஞாயிற்றுக்கிழமைகளைப் போல லுங்கி அணிந்துகொண்டு தெருமுக்குகளில் நின்றபடி அரசியல் பற்றி நிறையப் பேசுவர். தொந்தரவில்லாத வரை அவரோ அவருடைய அரசியலோ எங்களுக்கு பிரச்சனையில்லை. அப்பாக்கள் மீதோ மாமாக்கள் மீதோ பந்து படாத வரைக்கும் பிரச்சனையில்லை, பந்தை கையில் வைத்துக்கொண்டு வாடா என்று மிரட்டல் தொனியில் அழைத்து காதை ஒற்றைக்கையால் திருகி , ஏன்டா அறிவில்ல , நீ எக்ஸ் வூட்டு பையன்தான.. இந்த பொறுக்கி பசங்களோட சேர்ந்துட்டு என்ன விளையாட்டு , நாட்டுல எவ்ளோ பெரிய பிரச்சனைனு பந்த் நடத்தினா என்று பந்தை கொடுக்காமல் தேவையில்லாததை பேசுவது எங்கள் மீதான தொடர்ச்சியான அராஜகத்தின் குறியீடு.

எங்கள் ஏரியாவில் சிவப்பு கொடி கட்டிய குடிசையில் கூடிப்பேசும் அண்ணன்கள் , எங்களையும் பந்த் அன்று அவர்களோடு எங்கோ செல்ல அழைப்பதுண்டு. அவர்களோடு போனால் எங்கள் டீமை யார் காப்பாற்றுவது நாங்கள் போகமாட்டோம். ஒரு முறை தெரியாத்தனமாக போய் வெயிலில் ஒழிக ஒழிக என்று கத்திக்கொண்டு கையில் கொடியோடு அலைந்ததாக நினைவு. விலையேறிப்போச்சு , உங்கப்பாவுக்கு கஷ்டம், குடும்ப கஷ்டம், ஆட்சியாளர்கள் தவறு என்று தத்துபித்துவென்று உளறிக்கொட்டும் அண்ணன்களுக்கு எங்கள் கிரிக்கெட்டும் பந்தும் எப்போதும் கசப்புதான். இதில் அவர்களுடைய குடிசைக்குள் வந்து புத்தகங்கள் படிக்கவும் வற்புறுத்தினர். ஞாயிற்றக்கிழமைகளில் டிவிக்காரர் வீட்டு வாசலில் டிவி பார்ப்பதையே நாங்கள் விரும்பினோம். அதிலும் கிரிக்கெட் ஆட்டங்கள் எங்களை பெரிதும் கவர்ந்தன. சிகப்பு அண்ணன்களை எங்களுக்கு பிடித்ததே இல்லை, அவர்களைப்போல் ஒருநாளும் ஆகிவிடக்கூடாது என்று நாங்களும் நினைத்தோம் அப்பாக்களும் அந்த உருப்பாடதவன்களோட பேசறத பார்த்தேன் என்று மிரட்டியது இன்னும் வசதியாக இருந்தது.

எங்கள் தெருவெங்கும் பாரத் பந்த் என்று எழுதப்பட்ட சுவர்களை பார்க்கும் போதெல்லாம் தேதி குறித்துக்கொள்வோம். அப்பொதெல்லாம் தெருவில் டார்னமென்ட் , பெட் மேட்ச்கள் கூட நடத்துவோம். இதற்காக நாளைந்து நாள் உழைத்து தெருதெருவாக அலைந்து மற்ற தெருவோர டீம்களையும் எங்கள் தெருவில் ஆட அழைப்போம். எங்கள் தெரு அளவிலும் அகலத்திலும் சற்றேறக்குறைய மற்றவர்களுடையதை விடவும் பெரியது. பந்த்தெல்லாம் முக்கிய சாலையைக் கடந்து மெயின்ரோட்டில்தான். எங்கள் தெரு டவுன்ஹால் ரோட்டிலிருந்து மிகமிக உள்ளே இருந்தது , போட்டியை எங்கள் தெருவில் நாங்களே ஒருங்கிணைக்க வசதியாக இருந்தது. அங்கே நாங்கள் போவதற்கான வாய்ப்பு பூஜ்யத்திற்கும் குறைவான சதவீதமே.

பந்த் அறிவிக்கிற அரசியல்வாதிகளுக்குக் கூட பந்த் குறித்து இத்தனை ஆர்வமிருக்காது. பள்ளியில் பந்த்க்கு முந்தைய நாள் மாலை , ஆசிரியர் எப்போது நாளைக்கு லீவு என்று சொல்லுவார் என அவருடைய திருவாயைப் பார்த்துக்கொண்டேயிருப்போம். சில நேரங்களில் அவர் அதை சொல்லாமலும் இருப்பதுண்டு. அது மாதிரி நேரங்களில் காலை எழுந்ததும் தெருவிலிருங்கி பார்த்தால் ஆங்காங்கே லுங்கி கட்டிய மாமாக்கள் காதைக்குடைந்தபடி கையில் தினதந்தியோடு இன்னைக்கு பஸ் ஓடாது, ஆட்டோ ஓடாது ஆபீஸ் லீவு பேப்பரைப் பார்த்து சொல்லிக்கொண்டிருப்பதை ஆர்வத்தோடு அருகிலுருந்து பார்ப்போம். அவர்களுடைய திருவாயிலிருந்தாவது ஸ்கூல்லாம் லீவு என்கிற வார்த்தை வராதா என்கிற ஆர்வம் எங்களிடம் தொக்கி நிற்கும். நாங்களும் நிற்போம். ஸ்கூல் லீவென்று சொல்லிவிட்டால் போச்சு.. ஓட்டம்தான்.

ஓட்டம் தெருமுனையில்தான் நிற்கும். அதற்குபின் அனைவருமாய் திட்டமிட்டு காரியத்தில் இறங்குவோம். கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றிபெறவும் யார் முதல் டவுன், முதல் பவுலிங் தொடங்கி பலவும் விவாதிக்கப்படும். வீட்டில் அம்மாவினுடைய கடைக்கு போயிட்டு வா ராஜா தொல்லை இருக்கவே இருக்காது.. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதனால் மகிழ்ச்சியாக இருட்டும் வரை விளையாட்டு.. இருட்டியபின் குட்டிசுவற்றில் அமர்ந்து கொண்டு அதுகுறித்த விவாதம் என எங்களுடைய பந்த் கழியும்.

ஏதாவது பெரிய சிக்கலாக இருந்தால் எங்கள் தெருமுனையில் கையில் கம்போடு நாலைந்து போலீஸ்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். எங்கள் பெற்றோரைப்போலவோ எங்கள் தெருக்காரர்களைப்போலவோ அவர்கள் கெட்டவர்கள் அல்ல. மிகமிக நல்லவர்கள். எங்களுக்கு மூன்றாவது அம்பயராக எப்போதும் செயல்படுவார்கள். எங்கள் கேப்டன்களுக்கு அறிவுரை கூறுகிறவர்களாகவும் இருப்பதுண்டு. ஒருமுறை எங்கள் டோர்னமன்ட் பைனலில் கான்ஸ்டபிள் கொடுத்த ஐடியாவை வைத்துத்தான் அவனை அவுட்டாக்க முடிந்தது. ராகுல் திறமையான பேட்ஸ்மேன், அவனுடைய பெயரான தமிழ்ச்செல்வன் என்பதை திராவிட் மீதிருந்த தீராத ஆர்வத்தால் ராகுல் என மாற்றிக்கொண்டவன். இப்போதும் அந்த கான்ஸ்டபிள்களின் உதவியை மறக்கமுடியாது.

பெப்சி குடிப்பதை போல காலி பெப்சி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, விளையாடும் போது ஸ்டைலாக குடித்து மகிழ்வோம். அது எங்களுக்கு உற்சாகமூட்டியது. அந்த நீரையே பெப்சியாக நினைத்து, குடிக்கும் எங்களை சச்சினாகவும் திராவிடாகவும் கற்பனை செய்து கொண்டோம். எங்கள் எதிரணிக்கு பெப்சி பிடிக்காது எப்போதும் சேவாக்கின் செவன் அப்தான். அதனால் செவன் அப்பின் காலி பாட்டிலில் தண்ணீரோடு வந்துவிடுவார்கள். எங்கள் அணிக்குப் பெயரோ பெப்சி பெருமாள் கோவில் வீதி ராக்கர்ஸ்.. அவர்களுடைய வண்டிக்காரவீதி செவன் அப் கிங்ஸ்!

ஒருமுறை ராகுல் கேட்டான் மச்சி இது மாதிரி வருஷத்துக்கு அஞ்சாரு பந்த் நடத்தினா எவ்ளோ நல்லாருக்கும் என்று. எனக்கும் கூட அது நல்ல யோசனையாகத்தான் இருந்தது. இதோ இப்போது வளர்ந்து விட்டோம். இப்போதும் ஒரு பாரத் பந்த். சுவர்களில் எழுதப்படாத.. தேதி இல்லாத... பாரத் பந்த்.

படம் உதவி - நன்றி உஷா சாந்தாராம் (http://fineartamerica.com)

01 July 2010

பிரபல டுவிட்டர்கள் விகடனில்!தாகத்திற்கு வாட்டர் போரடித்தால் குவாட்டர் என்பது பழமொழி
போதைக்கு குவாட்டர் போரடித்தால் டுவிட்டர் என்பது புதுமொழி!

டுவிட்டர் என்னும் அரியசாதனத்தை எதற்காக கண்டுபிடித்தார்களோ! அதை பயன்படுத்தும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது ஆதிகாலத்தில் ஆலமரத்தடியில் வாய் சிவக்க வெற்றிலையோடு எச்சில் தெறிக்க சில பெரிசுகள் வொவ்வ்வ்வொவ் என்று வெட்டித்தனமாக எதையாது பேசிக்கொண்டும் விவாதித்தும் கொண்டுமிருப்பார்களே. அருகில் சிறுசுகளும் அவர்கள் வாயைப்பார்த்தபடி எதாவது பதில் சொல்லிக்கொண்டிருப்பதுவும் உண்டு. அல்லது அவர்களுக்குள் விவாதிப்பதுவும் நடப்பதுண்டு. டுவிட்டரும் கிட்டத்தட்ட அதன் பரிணாம வளர்ச்சியால் உண்டான நீட்சிதான் என்று சொன்னால் இலக்கியவாதிகளின் இம்சைகளுக்கு ஆளாக நேரிடும்.

டுவிட்டர் ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் விவாதக்களமாகவும , உருப்படியான தகவல்களை பகிர்ந்து கொள்ளுமிடமாகவும் சில நேரங்களில் கடுமையான மொக்கையாகவும் செயல்படுவதுண்டு. பதிவுலகத்திலிருந்து ரிடையர்ட் ஆனவர்களே டுவிட்டரில் செயல்படுவார்கள் என்கிற தவறான கருத்தியலும் அண்மைக்காலமாக உலாவுவதாக ஒரு பேச்சு உண்டு. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ரைட்டர் பேயான் போன்றவர்கள் டுவிட்டரிலிருந்து பதிவுலகுக்கு தாவுகிற செய்திகளும் உண்டு.

இப்பேர்பட்ட டுவிட்டரில் பதிவுலக பிரபலங்கள் பிராபலங்கள் மட்டுமல்ல , எழுத்துலக பிரபலங்களும் , நடிக நடிகையர்களும் சீமான் (இது வேற சீமான்) சீமாட்டிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். அறிவுசார்ந்த எழுத்துக்களுக்கு பாரா,சொக்கன்,லக்கி, அதிஷா,அதிஷா முதலான எழுத்தாளர்களும், கவர்ச்சி சார்ந்த எழுத்துகளை விரும்புகிறவர்களுக்கு நமீதா,ஷெர்லின்,ஸ்ருதி ஹாசன் முதலானவர்களின் டுவிட்டுகளையும் ரசிக்கலாம். அவர்களோடு நேரடியாக அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான உரையாடலையும் நிகழ்த்தலாம். நமீதாவிடம் அதைசெய்துகாட்டுகிற (எதை என்று கேட்கக்கூடாது) தன்மையோடு சக டுவிட்டர் டிபிசிடி திகழ்கிறார். சில பெரிசுகளும் அது நொட்டை இது நொள்ளை என சடைந்து கொள்வதும்.. ஹேய் டியுட் ஹவ் ஆர்யூ என்று செம்மொழி அல்லது தமிழ் அல்லது கருணாநிதி வளர்க்கும் இளசுகளுக்கும் பஞ்சமில்லை. பட் ஸ்டில் வீ ஆர் குரோயிங் டமில் எனிவே!

பேஸ்புக்கைக் காட்டிலும் இது டுவிட்டரின் வேகம் அதிகம்.. உரையாட ஏற்ற உத்தமமான ஆட்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் நான் அதிகம் விரும்புவது டுவிட்டரே! (ஃபேஸ்புக்கிலிருந்து விகடனில் எடுத்துப்போட்டிருந்தால் ஃபேஸ்புக்கே என்று வந்திருக்கும்)

இந்த டுவிட்டரில் அவ்வப்போது தோணுகிற கண்டதையும் கொட்டிவிடுவதுண்டு. 140 எழுத்துகளுக்குள் நம் கருத்தை சொரிவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. அதன் பின்விளைவுகள் சமயத்தில் படுபயங்கரமாக , நாம் எதிர்பார்க்காத அளவுக்கு கொடூரமாக இருக்க நேரிடுவதுமுண்டு. அப்படி செம்மொழி மாநாடு குறித்து  வெறியோடு சொரிந்த  ஒன்றை இந்த வார விகடனில் போட்டிருக்கிறார்கள். விகடனுக்கு நன்றி. அதை தேர்ந்தெடுத்து என் வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வழிவகை செய்திருக்கும் அந்த கட்டுரையாளர்களுக்கும் நன்றி!


மேலுள்ள இந்த ஒரு படத்தைப்போடுவதற்கே அதற்கு மேலுள்ள சுயபுராண பில்டப்பெல்லாம். மற்றபடி படத்தை கிளிக்கி இடதுபுறம் காலைதூக்கி நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டிருக்கும் கறுப்பு உடைபெண்ணுக்கு மேல என்னுடைய டிவிட்டை படித்து மகிழலாம்.