Pages

31 August 2010

கதவைத்திற கடவுள் வரட்டும்!





பக்திமான்

நம்ம சாமியார் நதிக்கரையோரம் , ஒரு பெரிய மரத்தடியில் ஆழ்ந்த தியானத்துல இருந்தாரு. அப்போ அந்தப்பக்கமா பையன் ஒருத்தன் வந்தான். கொஞ்ச நேரம் சாமியாரையே உத்து உத்து பார்த்துகிட்டு இருந்தவனுக்கு என்ன தோணுச்சோ , அவரை புடிச்சு உலுக்கு உலுக்குனு உலக்க ஆரம்பிச்சான். பாவம் சாமி அதிர்ச்சில அப்படியே ஷாக் ஆகிட்டாரு.

‘’யார்டா ராஜா நீ.. என்னாத்துக்குடா என்னைப்போட்டு இந்த ஆட்டு ஆட்டுற’’ என்று அப்பாவியா கேட்டாரு.

‘’சாமி நீங்க தியானத்துல இருந்தீங்களா உங்கள பார்த்ததும், எனக்கு அப்படியே ஆன்மீகத்து மேல ஈடுபாடு வந்திருச்சு.. எப்படியாச்சும் உங்கள மாதிரி பெரிய சாமியார் ஆகி ஆன்மீக கடல்ல குதிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன், அதான் உங்க கிட்ட சிஷ்யனா சேரலாம்னு’’ என்று மண்டைய சொரிஞ்சான்.

சாமிக்கு ஒன்னும் புரியல.. யார்ரா நீ.. நானே இப்பதான் லேசா கண்ணசந்தேன்.. அதுக்குள்ள என்று மனதில் நினைச்சுகிட்டே ‘’ ஏன்டா ராஜா ஒனக்கு எதுக்கு இந்தமேரி ஆசைலாம்.. எதாச்சும் ஃபிகர பார்த்தமா ரூப்போட்டமானு , ஜாலியா இருந்தமானு இருக்கலாம்ல’’ என்றார்.

‘’அட நீங்க வேற சாமி, எனக்கு கடவுள் மட்டுமே போதும்.. சோறு கூட வேண்டாம்.. அவ்ளோ பக்திமான் சாமீ நானு’’ என்று அடுத்த குண்டைத்தூக்கிப்போட்டான்.

ஆஹா நாம போலி சாமியார்னு நினைச்சிட்டானோ என்று நினைத்தவர் , டபால்னு குதிச்சு அவன் கழுத்தை புடிச்சு தரதரனு இழுத்துகிட்டே போய் அவன ஆத்துல பொட்டு முக்கு முக்குனு முக்க ஆரம்பிச்சிட்டாரு! பாவம் அந்த பையன் ஆவ் ஊவ் ஆவ் ஊவ் னு கத்திகிட்டு, கையையும் காலையும் உதைக்க ஆரம்பிச்சிட்டான்.. நம்ம சாமியார் இப்பதான் சாமியார்.. இதுக்குமுன்னால பெரிய ரவுடியா இருந்தவரு.. பலசாலி.. வச்சு நல்லா தண்ணிக்குள்ளேயே அமுக்கிட்டாரு.. கொஞ்ச நேரம் கழிச்சு அவனை தூக்கி நிறுத்தினாரு.. ஆஆ.. ஊஊ..ம்ம் னு விதவிதமா மூச்சு விட்டான்.

அவன் ஆசுவாசமாக கொஞ்ச நேரமாச்சு. அவன் ரொம்ப டென்சனாகி ‘’ என்ன சாமி இப்படி பண்ணீட்டீங்க.. செத்தே போயிப்பேன்’’ என்ற திட்ட ஆரம்பித்தான்.

சாமியார் கேட்டாரு ‘’ராஜா தண்ணிக்குள்ள முக்கினேனே.. அப்போ உனக்கு எது ரொம்ப ரொம்ப அவசியமா இருந்துச்சு’’

கொஞ்ச நேரம் சாமியாரை அடித்துவிடுவதைப்போல முறைச்சுகிட்டே ‘’ ம்ம்.. காத்துதான்’’ என்றான் சிடுசிடுப்போட..

சாமியார் சிரிச்சாரு ‘’ உனக்கு என்னைக்கு காற்றை விட கடவுள் முக்கியமா இருக்காரோ அப்போ வா.. உன்னை சிஷ்யனா சேத்துக்கறேன்.. அதுவரைக்கு இந்த ஏரியா பக்கம் வந்த மவனே தண்ணிக்குள்ள அமுக்கியே கொன்னுருவேன் ஓடிப்போயிரு’’ என்றார்.


**********

ஞானம் டீ ஸ்டால்!

நம்ம சாமியார் எப்பவும் சிஷ்யர்கள் கிட்ட ஞானம் பத்தி பேசுறப்பவும், ஒரு டீ மாஸ்டர் பத்தி பேசிட்டே இருப்பாரு. அந்த டீ மாஸ்டருக்கு தன்னை விடவும் ஞானம் அதிகம்னும் சொல்லுவாரு.

அந்த டீ மாஸ்டர் சென்ட்ரல் ஸ்டேஷன் கிட்ட டீக்கடை வச்சிருந்தாரு. சிஷ்யங்களுக்கு செம காண்டாகிருச்சு. என்னங்கடா இது ஒரு சாதாரண டீ மாஸ்டருக்கு நம்ம சூப்பர் சாமியார விட ஞானம் ஜாஸ்தியா அப்படி என்னதான் அந்தாளுகிட்ட இருக்குனு பார்த்துட வேண்டியதுதானு முடிவு பண்ணி டிரெயின் ஏறி போய் சென்ட்ரல் ஸ்டேஷன் போனாங்க!

டீக்கடைக்கு போனவங்க , கடைக்காரர் வாங்க வாங்கனு வரவேற்று , டீ போட்டு குடுத்தாரு. இவனுங்க டீயக்குடிக்காம , ஆமா நீங்க பெரிய ஞானியாமே , உங்களுக்கு எப்படி ஞானம் கிடைச்சுது, உங்க குரு யாரு.. இப்படி நையி நையினு எதையாச்சும் கேட்டு பிணாத்திகிட்டே இருந்தானுங்க.. மாஸ்டர் கடுப்பாகி.. அவனுங்க கையிலருந்த டீ கிளாஸ புடிங்கிட்டு.. டேய் லூசுங்களா மரியாதையா ஓடிருங்க , இந்த ஏரியாப்பக்கம் உங்கள பார்த்தேன்.. மவனே கொன்னுருவேன் என்று அடித்து விரட்டி விட்டார்.

சிஷ்யப்புள்ளைங்கதான் பேஜாரான பசங்களாச்சே! விடுவானுங்களா மாறுவேஷத்துல போனானுங்க , அப்பவும் அந்தாளு கண்டுபுடிச்சு அடிபின்னு பின்னுனு பின்னி , ரத்தகளறியாக்கி திருப்பி அனுப்பினாரு.. சிஷ்யனுங்க நொந்து போயி.. அடப்போங்கடா நீங்களும் உங்க ஞானுமும்னு நம்ம சாமியார்கிட்டயே திரும்பி வந்தானுங்க!
சாமியார் கேட்டாரு ’’என்னப்பா , ஞானம் கிடைச்சுதா’’

‘’இன்னா சாமி கிண்டலா! நாங்களே அடிவாங்கி மூக்கு மொகரையெல்லாம் பேந்து போய் வந்திருக்கோம்’’ என்றனர் கோரஸாக!

‘’ஏன்ம்பா என்னாச்சு?’’ என்றார் சாமியார். நடந்ததையெல்லாம் சொன்னாங்க சிஷ்யனுங்க!

‘’என் பேர சொன்னீங்களா?’’

‘’சாமி! அதுவரைக்கும் பேசிட்டுதான் இருந்தான் அந்தாளு.. உங்க பேர சொன்னதுக்கப்பறம்தான் அடிபின்னிட்டான்.. நாங்க இப்போ கொஞ்சம் வீக்கா இருக்கோம் , உடம்பு சரியாகட்டும் முதல்ல உங்களுக்கு அப்புறம் அந்த டீமாஸ்டருக்கு’’ என்று கொதித்தனர்.

‘’அப்படீனா அந்த கடைல நீங்க டீயே குடிக்கலையா’’ என்றார் சாமியார்.

27 August 2010

வெள்ளிங்கிரி - 4


வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சாப்பாட்டுக்கு பிரச்சனையே கிடையாது. கையில் அஞ்சுரூவா கூட இல்லாமல் ஒரு மாதம் வரைக்கும் கூட அடிவாரத்திலேயே வசதியாக வாழமுடியும். மாசி முதல் சித்திரை வரைக்கும்தான் இந்த வசதி.  அடிவாரத்தை ஒட்டி ஒன்றிரண்டு ஹோட்டல்கள் இருந்தாலும், யாராவது சற்றே அதிகமான மானம்,ரோசம் உள்ளவர்கள் மட்டுமே அங்கே சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.. எங்களுக்கு எப்போதும் அன்னதானம்தான் மூன்று வேளையும். அதனாலேயே மலையேறி இறங்கியபின்னும் விடாப்பிடியாக இரண்டு மூணு நாட்கள் இருந்து சாப்பிட்டு அடிவாரத்தைசுற்றியே புரண்ட பின்பு செல்வது வழக்கம். மூன்று நாளும் கோவிலை சுற்றியுள்ள எந்த இடத்திலும் படுத்து உறங்கலாம். அருகிலிருக்கும் சின்ன சின்ன சுனைகளில் குளித்து புண்ணியம் தேடலாம்.

அடிவாரத்தில் காலையிலிருந்து இரவு வரைக்கும் தொடர்ந்து அன்னதானங்கள் நடந்து கொண்டே இருக்கும். அடிவாரத்தில் பத்திரச் செட்டியார் மடம், தேவர் மடம், புரவிப்பாளையம் மடம், சுக்கிரப்ப கவுண்டர் மடம், பட்டிபோயன் மடம், ஓக்கலிகர் மடம் என்று வரிசையாக பல மடஜாதிகளும் பந்தி போடுவார்கள். சித்திரை மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட அன்னதானக்குழுக்கள் இங்கே ஓசிசோறு போடுவது தனிச்சிறப்பு. ராஜஸ்தானிலிருந்து கோவையில் முன்னெப்போதோ இடம்பெயர்ந்த ஒரு குழு உண்டு. பிரத்யேகமான சாப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். மூன்று நாள் அவர்களுடைய குழுவிலிருந்து வேளைக்கு பத்து குடும்பமாக விமரிசையான ஸ்பெசல் அன்னதானம் போடுவார்கள். அவர்களுடைய அன்னதானத்திற்குதான் கடுமையான அடிதடியெல்லாம் நடக்கும். பிச்சைக்காரர்களுக்கும் எங்கள் குழுவுக்குமிடையே கடுமையான தள்ளுமுள்ளும் மோதலும் நிறைந்திருக்கும். முதல் இரண்டு பந்திகளில் உட்கார்ந்தால்தால்தான் எல்லா ஐட்டங்களும் கிடைக்கும். மூன்று நான்கென்றால் வெறும் இலையை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். நாங்கள்தான் எப்போதும் அவர்களை வென்றிருக்கிறோம். சிலமுறை அவர்களுடைய நீண்ட கம்பினால் அடிவாங்கியதும் உண்டு. எங்கள் அளவிற்கு அந்த நீண்ட வெள்ளைதாடி பிச்சைகார சித்தர் சாமிகளுக்கு  டேலன்ட் பத்தாது.

வெள்ளிங்கிரி மலை பிச்சைகாரர்களை, பிச்சை எடுப்பவர்கள் என்று சொன்னால் விபூதியை வீசி சாபமிட்டுவிடுவார்கள். ஒரு முறை என்னை அடுத்த ஜென்மத்தில் எலியாக பிறந்து பூனையின் வாய்க்கு உணவாவாய் என்று ஒரு சித்தர் சாமி சாபம் கொடுத்துவிட.. ரெண்டு நாள் கனவெல்லாம் பூனை! விதவிதமான சாபங்கள் கொடுத்தாலும் எங்கிருந்துதான் கஞ்சாவை கவர்ந்துவருவார்களோ தெரியாது.. ஒருவேளை மலையிலேயே எங்காவது பதியம் போட்டு வளர்த்து காயவைத்து புகைக்கிறார்களோ என்னவோ.. இந்தியாவிலேயே மிகச்சிறந்த கஞ்சா காசிக்குப் பிறகு வெள்ளிங்கிரியில்தான் கிடைக்கிறது என்பார் சித்தர் ஒருவர். அருகில் போய் சாமீஈஈஈஈ... ஒரு இழுப்பு... என்று மண்டையை சொரிந்தால் அள்ளித்தருவதில் வல்லவர்கள். கொழந்தப்பசங்களா.. இந்தாங்கடா என்று ஒரு முழுப்பொட்டலத்தையும் கூடவே ஒரு சிகரட்டையும் இனாமைத்தருவதில் பிச்சைக்கார வள்ளல்கள் இந்த சித்தர்கள்.

ஆனால் அடுத்த வேளை அன்னதானத்தில் அவர்களுக்கு நல்ல சௌகரியமான இடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். மூன்று ஆள் உணவை ஒரே ஆள் சாப்பிடுவதைப்பார்த்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதியை அள்ளிப்பூசிக்கொண்டு கபாலத்தோடு கட்டாந்தரையில் கவிழ்ந்துவிடுவார். கிங்ஸ் மட்டுமே புகைக்கும் சித்தர்கள் கூட உண்டு. வில்ஸ் அடித்தால் பனிபெய்றதாலே தொண்டை கமறும் என்பார். அப்போ பீடிலாம் என்றால்? அதெல்லாம் சாதாரண மானிடர்கள் அடிக்கறதப்பா என்று சீன்போடும் சித்தர்கள் ஏராளம்.

வெள்ளிங்கிரியில் நடைபெறுகிற தொடர் அன்னதானங்களுக்கு பின்னால் ஒரு கதை உண்டு! வெள்ளிங்கிரி மலையில் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் காசியில் 1000 பேருக்கு அன்னதானம் செய்தமைக்கான ஸ்பெசல் அதிரடி ஆஃப்ரை ஆண்டவன் வழங்குவதாக கோவைக்கு அருகிலிருக்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் புராணம் ஒன்று சொல்லுகிறது. அதனால்தான் ஆண்டுதோறும் இந்த அன்னதான மேளா என்கின்றனர் என்னுடைய நண்பரான நீண்ட வெள்ளைதாடி செல்போன் வைத்திருக்கும் சித்தர்.



இந்த பேரூர் புராணம் இதை மட்டும் சொல்லவில்லை.. வெள்ளிங்கிரி மலையின் நான்காவது மலைக்காட்டில் கிடைக்கும் அரிய வகை மூலிகளைகளான மாங்கிசபேதி,அங்கிசபேதி,அயபேதி,அன்னபேதி முதலான மூலிகைகளின் மூலம் எப்பேர்ப்பட்ட வியாதியையும் குணப்படுத்தமுடியும் என்றும் சொல்லுகிறதாம். இதுபோக ஆறாவது மலையின் முக்கிய இடமான ஆண்டிசுனையில் நீராடி அதில் ரெண்டு மடக்கு நீர் குடித்தால் சகலரோகங்களும் நிவர்த்தியாகும் என்கிறது அப்புராணம்.. ஆய் போனால் கழுவவும்.. குளித்துவிட்டு ஜட்டியை துவைக்கவும், சிறுநீர் கழிக்கவுமாக , சுனையை சுற்றியுள்ள பகுதிகளை நாறடித்து வைத்திருந்தாலும்.. அந்த இயற்கையான ஊற்றின் குளிர்ச்சி அதையெல்லாம் மறக்கச்செய்யும். உள்ளே இறங்கினால் உடல் விரைத்துப்போகும். அதில் குளித்து முடித்து வெளியேறினால்.. லிரில் சோப்புப் போட்டு குளித்தால் கிடைக்குமே அதே புத்துணர்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

இத்தனைக்கும் அந்த நீரை அருகிலிருக்கும் லேபில் கொண்டு போய் கொடுத்தால் ஒரு கோடி வைரஸாவது இருக்கும். ஆனால் இதுவரை அதில் குளித்து யாருக்கும் எந்த தீங்கும் நேர்ந்ததாய் தெரியவில்லை.

************
முந்தைய மூன்று பாகங்கள் இங்கே

 பாகம் - 1
 பாகம் - 2
 பாகம் - 3


படம் உதவி நன்றி - http://imsaiilavarasan.blogspot.com , மற்றும் கூகிள்.

25 August 2010

மைன்ட் இட்!




இணைய உடன்பிறப்புகளின் ஒரே விடிவெள்ளி!

23 August 2010

மதில் மேல் காமம்


காதலிப்பது, காதல் வயப்படுவது,காதலில் ஈடுபடுவது என இத்யாதி இத்யாதிகளுக்கும் அத்தியாவசியத்தேவை , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாலினபேதமில்லாமல் ஒரு ஆள்!. காதலை உணர வாய்ப்பே இல்லாமல் இருப்பது உலகிலேயே மிகவும் கொடியது. அது மனம் சார்ந்தது , உடலுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றெல்லாம் டுபாக்கூர் விடமுடியாது. பெண் வாசனையே இல்லாத ஊரில் புடவை கட்டிய பொம்மை , குச்சி , கம்பு எது கிடைத்தாலும் கூட காதலிக்க (கற்பழிக்கவும்) நேரிடலாம். மேன்சன்களில் பார்த்திருக்கிறேன். அங்கே இருக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குள்ளேயும் காமம் எப்போதும் விழிப்போடேயிருக்கும். அதனாலேயோ என்னவோ சிவராஜ் சித்த வைத்தியர் தொடங்கி சகல வைத்தியர்கள் மீதும் அவர்களுக்கு தீராத பயம். கைமாறும் காமக்கதை புத்தகங்களினூடாகவும் , புளூடூத்தில் பரவும் ஆபாச வீடியோவாகவும் எப்போதும் காமம் அவர்களினூடே நிறைந்து இருக்கும்.பசி,தூக்கம்,வறுமை இத்தனையையும் தாண்டி அவர்களுக்கான காமத்தை எப்போதும் அவர்கள் தீவிரமான உயிர்ப்போடு வைத்திருந்தனர்.

அதற்கான காரணத்தை எப்போதும் நான் அறிந்திருக்கவில்லை. எனக்கும் கூட அப்படித்தான் இருந்திருக்கிறது. சேவல்கள் நிரம்பி வழிகிற பண்ணைகளில்தான் கோழிகளுக்கான தேவை அளவுக்கு மீறியே இருக்குமோ என்னவோ!

மேன்சன் நண்பர்கள் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி இருந்தனர். ஒரு சிலருக்கு பல காதலிகள் இருந்தனர். சிலருக்கு காதலன்கள் இருந்தனர். இரவெல்லாம் செல்போன் சூட்டில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். செல்லம் குட்டி புஜ்ஜிமா , என்னடி பொண்டாட்டி மாதிரியான வார்த்தைகள் சகஜமாக காதில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். காதலிகள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிலருக்கும் மட்டுமே வாய்த்திருந்தது. சிலரது காதலிகள் பல நூறு கிலோ மீட்டர் தொலைவிருந்து காதோடு கட்டியணைக்க வேண்டியதாயிருக்கும். பலருக்கு தூரத்துமனைவிகளைக்கூட செல்போனில் அணைத்து முத்தமிடுகிற பாக்கியமேயிருந்தது. பேச்சிலர்களைக்காட்டிலும் இவர்களுடைய நிலை பரிதாபகரமானது.

எங்களோடு புதிதாக இணைந்த அவனுக்கு காதலிகள் யாருமேயில்லை. எங்களை எப்போதும் ஏக்கமாக பார்த்துக்கொண்டேயிருப்பான். எப்போதும் அருகிலிருந்து நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டேயிருப்பான். அவனுக்கான காதலிக்காக அவனால் காத்திருக்க முடியவில்லை. யாராவது பொண்ணுங்க நம்பர் குடு மச்சான் , நான் பேசி கரெக்ட் பண்ணிக்கறேன் என்பான். பாவப்பட்டு ஒரு பெண்ணின் எண்ணை கொடுப்போம். சில நாள் போன பின் திரும்பி வருவான்.. மச்சான் அந்த பொண்ணு பேச மாட்டேங்குது திட்டுதுடா என்பான். இன்னொரு பெண்ணின் செல்போன் எண் தருவோம்.. சில நாட்களுக்கு பின் அதே பதில்தான். தொடர்ச்சியாக நான்கு முறையும் தோல்வி.. ஐந்தாவது முறை கொடுத்த எண் வேலை செய்ய ஆரம்பித்த்து.

தினமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டேயிருப்பான். எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக் கிடப்பான். அவளுடைய அழைப்புக்காக காத்திருப்பான். அவளுடைய போன் பிஸியாக இருந்தால் கடும் கோபமாத்துடன் எங்கள் மீது பாய்வான். பார்க்க பாவமாக இருந்தாலும் கிடைக்காதது கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அவன் திளைப்பதைப் பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கும். அவளை அவன் உயிருக்கு உயிராக காதலிப்பதாக சொன்னான். (அவன் அவளை பார்த்தது கூட இல்லை. பேச்சு மட்டும்தான். அவள் சென்னையை சேர்ந்தவள் என்பது மட்டும்தான் அவனுக்கு தெரியும். வேறேதும் தெரியாது.

மேன்சன்களில் வசிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. சரியான சாப்பாடு கிடைக்காது. சுத்தமான தண்ணீர்கிடையாது. கொசுக்கடிக்கு நடுவில் தூங்கமுடியாது.. மாதம் முழுவதும் காசிருக்காது. சென்னை மேன்சன்களில் மிக நல்ல வசதியான பல மேன்சன்களும் உண்டு. ஆனால் பெரும்பாலானவை நரகமாகத்தான் இருக்கும். இதையெல்லாம் தாண்டியும் எப்போதாவது குடிப்பதுவும், இரவுக்காட்சி சினிமாவுக்கு போவதும், கும்பலாய் அமர்ந்து கொண்டு விஜய்க்கும் அஜித்துக்கும் சண்டை மூட்டி தங்களுடைய மூக்கில் குத்திக்கொள்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்தது. என்னுடைய ஹீரோ மார்க்கெட்டிங் வேலை பார்த்தவன். அவனுடைய எல்லா பிரச்சனைகளையும் மறக்க அவளுடைய செல்போன் அழைப்பு அவனுக்கு பேருதவியாய் இருந்தது.

அந்தப்பெண் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் தெரியாது.. அவனுடையே பேச்சு சமயங்களில் சென்டிமென்ட்களை கடந்ததாகவும், ஆபாசங்களாக அறியப்பட்டவையாகவும் இருக்கும். உன்னை கட்டிபிடிச்சிருக்கேன்.. நீ என் கன்னத்தில் முத்தமிடுகிறாய்.. நான் உன் இதழ்களை கடிக்கிறேன் என்று இரவு முழுக்க பேசித் தீர்ப்பான். அவனுடைய காமத்திற்கான அந்த வடிகால் காதல் என்கிற பெயரோடு அவனுடன் வாழ்ந்தது. அவளை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பான். அவள் ஒரு முறை அவனை சந்திக்க விரும்புவதாய் சொல்ல இவனோ பேண்ட் சட்டையெல்லாம் புதிதாய் மாட்டிக்கொண்டு கிளம்பத்தயாரானவன், ஏனோ போகவில்லை. அவளுக்கு தன்னை பிடிக்காமல் போயிருச்சுனா என்றான். ஆனாலும் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான். பேசிக்கொண்டேயிருந்தவன். திடீரென ஒருநாள் அமைதியானான். அந்தபெண்ணின் எண் உபயோகத்தில் இல்லாமல் போனது. அவளை காணவில்லை. அவள் யாரென்றே தெரியாது. அவளுக்கு என்னாச்சு தெரியாது.. ஆனால் அவளுடைய எண்ணுக்கு அழைத்தால் எப்போதும் ஒரு பெண் இந்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை என்று சொல்லி சொல்லி அவனை நோகடித்தாள்.

வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் நாவலும் இதுமாதிரியான ஒரு கதையை முன்வைக்கிறது. ஒன்றரை ஆண்டுகள் பெண் வாசனையே இல்லாமல் சிறையில் இருக்கும் ஒருவனுக்கும், முகம் தெரியாத பெண்ணுக்குமான(கைதி) காதல்மாதிரியான உணர்வுகளை மிக மிக கச்சிதமாக சொல்ல முனைகிறது இந்நாவல். கேரளாவே இப்போதும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுகிற நாவல்.

காதல்கோட்டை மாதிரியான பார்க்காமலே காதல் , கேட்காமலே காதல், நாக்கை அறுத்த காதல்களுக்கு முன்னோடியானதாக இக்கதையினை கருதலாம். எழுத்துகளால் எழுதப்பட்ட வாசனையை நுகர முடியுமா.. எழுத்துகளின் மூலமாக யாரோ சிந்துகிற கண்ணீரை சுவைக்க முடியுமா? வைக்கம் முகமது பஷீரின் எழுத்துகளுக்கு அந்த சக்தி இருப்பதாக கருதுகிறேன். கதையில் அவர் செடி வளர்த்தால் நாமும் செடி வளர்க்கிறோம். அதில் பூக்கும் ரோஜவை தொட்டு உணர்கிறோம். அவரோடு சேர்ந்து நாமும் சிரிக்கிறோம். நாமும் மணக்கிறோம். நாமும் நுகர்கிறோம். உண்டு உடுத்தி பத்தடிக்கு பத்தடி சிறையறைக்குள் பஷீர் சூடு பண்ணித்தருகிற கட்டஞ்சாயாவோடே வாழ்கிறோம். அவர் உற்சாகமடைகையில் நாமும் உற்சாகமடைகிறோம்.

இக்கதையில் வருகிற சிறைச்சாலையையும் அதன் சூழலையும் சென்னைநகரத்தின் மேன்சன்களோடு என்னால் மிகச்சரியாக பொருத்திப்பார்க்க முடிகிறது. இங்கிருக்கிற மேன்சன்களிலிருந்து மிகச்சிலரே விடுதலையாகி குடும்பமாகின்றனர். குடும்பத்திலிருந்து மேன்சனுக்கு வருகிறவர்கள் கடைசிவரை மேன்சனே மேன்சனாகிவிடுகின்றனர். சிறைச்சாலைகளும் கூட அப்படித்தானோ.. விதவிதமான மனிதர்கள் சிலருக்கு பத்து நாளில் விடுதலை சிலர் சாகும் வரை சிறைதான்..

ஜெயிலில் தனிமையில் வாடும் நாயகன் , சிறை மதிலுக்கு மறுபுறத்திலிருந்து முதன்முதலாக ஒரு பெண்ணின் குரலை கேட்கிறான். அந்தக்காட்சியை பஷீர் சில வசனங்களால் விவரிக்க , புத்தகம் படிக்கும் போதே கஜலில் பிண்ணனி இசை காதில் தானாக வந்து ஓட்டிக்கொள்கிறது. ஒரு காட்சியில் மதிலுக்கு மறுபுறமிருக்கும் காதலி தனக்கு ஒரு ரோஜாசெடி வேண்டும் என்கிறாள். (நாயகன் ஒரு தேர்ந்த தோட்டக்காரன் என்பது ஜெயில் முழுக்க தெரிந்தது). இவன் தன் தோட்டத்திலிருந்து ஒரு ரோஜாச்செடியை வேரோடு பிடுங்கி , அவளுக்கு தர முடிவு செய்கிறான். இருவரும் மதிலின் இரண்டு பக்கமும் நின்றபடிக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். திடீரென இவன் பக்கம் ஒரே அமைதி அவள் கேட்கிறாள்.. ‘’என்ன செய்யறீங்க’’ என்கிறாள். அவன் "இல்லை நான்.. .அப்போது ரோஜாச்செடிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தேன்... ஒவ்வொரு மலரிலும்....ஒவ்வொரு இலையிலும்... மொக்கிலும்". என்கிறான்.

நமக்கும் கூட அந்த இளைஞனின் ஆனந்த சிலிர்ப்பு உண்டாகிறது. பஷீரின் இயல்பான சமூகத்தின் மீதான பகடியும், சுய எள்ளலும் கூடுதல் சிறப்பு. பஷீரின் இயல்பான பகடியையும் எள்ளலையும் ஷோபாசக்தியிடம் பார்க்க முடிகிறது. கேரளாவே இந்நாவலை தூக்கிவைத்துக்கொண்டாட நிச்சயம் காரணமிருக்கிறது. இது சினிமாவாகவும் எடுக்கப்பட்டதாம். வெறும் 33 பக்க குறுநாவலாக இருந்தாலும் நான் இதுவரை படித்ததில் இதுதான் மிகச்சிறந்தது. ஆயிரம் பக்கங்கள் கொடுக்காத உணர்வதிர்வலைகளை எனக்கு பரிசளித்திருக்கிறது.

‘’ நமக்கு பிடித்தவர்கள் இருக்கிற இடத்தை விடவும் சிறந்த இடம் உலகில் வேறென்ன இருக்கிறது.. யாருக்கு வேண்டும் விடுதலை’’ என்கிற கேள்விகளோடு கதை முடிகிறது. "கற்களால் ஆன அந்த உயர்ந்த மதில்கள் வானத்தை முட்டிக் கொண்டிருந்தன. அவை என்னையும் சென்ட்ரல் ஜெயிலையும் வளைத்துக் கொண்டிருந்தன" என்று தொடங்குகிறது இந்நாவல். பஷீரின் பார்வையில் சின்ன சிறைக்கு சிறிய மதில்கள். அதிலிருந்து வெளியே வருபவனுக்கு அவனை சுற்றி மிகப்பெரிய உலக மதில்கள். இங்கே அனைவருக்கும் தேவை விடுதலை. ஆனால் நாம் விரும்பியவர் இல்லாத இடம் சுதந்திரமானதாக இருந்தாலும் மதில்கள் இல்லாத சிறைச்சாலைகள் தான்.

மேன்சன் நண்பனை அடிக்கடி சந்திப்பதுண்டு. திருமணமாகிவிட்டது. சொந்த கார பெண். எனக்கு பிறகு இரண்டு வருடங்கள் அந்த மேன்சனில் தங்கியிருந்தான். என்ன மச்சான் ஆச்சு அந்த செல்போன் பொண்ணு என்று அண்மையில் விசாரித்தேன். சிரித்தான்.. அடிக்கடி போன் பண்ணி பார்ப்பேன்.. என்னைக்காவது அந்த போன் சுவிட்ச் ஆன் ஆகும்னு நம்பிக்கை போக மாட்டேங்குது... நேத்து கூட போன் பண்ணி பார்த்தேன் மச்சான் சுவிட்ஆஃப்னுதான் வருது என்றான் புன்னகையுடன். அவளைப்பற்றி பேசும்போது அவன் கண்ணில்தான் என்ன ஒரு உற்சாகம்..


***

மதில்கள் - வைக்கம் முகமது பஷீர் (தமிழில் சுகுமாரன்)

காலச்சுவடு பதிப்பகம் (ரூ.50)

19 August 2010

க்ளிக்ஸ்-1

இன்று உலக புகைப்பட தினம். அதையொட்டி  என்னுடைய செல்போனில் இதுவரை எடுத்ததில் சில புகைப்படங்கள்.




தனிமை



அழுகை


நட்பு -(OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR)



எதிர்பார்ப்பு



உயிர்

.

தவம்

18 August 2010

எக்ஸ்பென்டபிள்ஸ்



தமிழில் வெளியாகும் தொண்ணூறு சதவீத படங்களும் ஆண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படுபவை. மிகச்சில படங்களே பெண்களுக்கும் குழந்தைகளுக்குமானவை. ஹாலிவுட்டிலும் கூட அப்படிப்பட்ட தரமான ஆண்கள் ஸ்பெசல் படங்கள் அடிக்கடி வெளியாவதுண்டு.

ஆண்களே ஆண்களுக்கான இந்த படங்களில் மைக்ரோபாவடையோ பிகினியோ அணிந்த அறிவில்லாத அழகு பெண்கள், உருண்டு திரண்டு கட்டுமஸ்தான நரம்பு முறுக்கேறிய தேகத்துடன் அலையும் ஹீரோ , கோட் சூட்டோடு அடியாட்களும் துப்பாக்கியுமாக அலையும் வில்லன்கள். ஆயிரம் பேராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரையும் சுட்டு வீழ்த்தி எதிரிகளின் கோட்டையை தகர்க்கும் கிளைமாக்ஸ் , நடுநடுவே தேவையில்லாத புத்திசாலித்தனமான டுவிஸ்ட்டுகள் என முழுக்க முழுக்க கதையே இல்லாமல் ஆக்சன் மசாலாவை அள்ளித்தெளித்தால் ஆண்களுக்கான சூப்பர் ஹிட் படம் ரெடி! இந்த ஃபார்முலாவை 80-90களில் வெளியான பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் காணக்கிடைக்கும்.

அதே உப்புமாவை கொஞ்சம் நெய் ஊற்றி லேசாக டெக்னாலஜி காரம் போட்டுக் கிண்டினால் சில்வஸ்டர் ஸ்டாலனின் ‘எக்பென்டபிள்ஸ்’. ஹாலிவுட்டின் பழைய ஆக்சன் தாத்தாக்களும் புதிய அதிரடி அண்ணன்களும் இணைந்து நடித்துள்ளனர். அதனால் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் படம்! பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பதாலேயே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புடன் சென்றிருந்தேன். ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாமே படம் தொடங்கி அரைமணிநேரத்திலேயே தவிடு பொடியானது. இனிமேல் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பும் படங்களுக்கே போகவேண்டாம் என நினைத்திருக்கிறேன்.

நம்மூரில் விஜயகாந்த்,அர்ஜூன் இருவரும் போட்டிப்போட்டு நடித்த கெட்டவர்களை அழிக்கும் கதைதான் இந்தப்படத்தின் கதையும். அர்ஜூனின் ஜெய்ஹிந்த் படத்தையே கொஞ்சம் தட்டி ஒட்டி டிங்கரிங் செய்து பேரை மாற்றி படமெடுத்திருக்கிறார்களோ என்று சந்தேகமே வந்துவிட்டது. நல்லவேளையாக அப்படியெல்லாம் இல்லை இது கேப்டன் பிரபாகரன் ரீமேக் என்று பக்கத்துசீட்டு தோழர் உறுதியளித்தபின்புதான் நிம்மதி பெருமூச்சு மூக்கில் முட்டியது.

படம் முழுக்க திரையில் தோன்றும் எல்லா பாத்திரங்களுமே புஜபலங்களை காட்டிக்கொண்டே அலைகின்றனர். ஸ்கிரீனில் எங்கு பார்த்தாலும் ஆண்கள் ஆண்கள் ஆண்கள் மட்டுமே! உடலெல்லாம் பச்சை என்கிற டேட்டூ போட்டுக்கொண்டு , அடித்தொண்டையில் கர்கர் சப்தத்துடன் கையில் கத்திகபடாவுடனே டெரராக சுற்றுகின்றனர். படத்தில் இரண்டே இரண்டு பெண்கள்தான்! தமிழ்ப்படங்களில் நடிக்கும் டம்மி பீசு ஹீரோயின்களாக நடித்துள்ளனர்! இரண்டில் பெஸ்டை படத்தின் இயக்குனர் ஸ்டாலன் உஷார் செய்துவிடுகிறார். ஒரே ஒரு காட்சியில் அர்னால்ட் தோன்ற தியேட்டரில் விசில் பறக்கிறது. புரூஸ் வில்லீஸும் ஒரு காட்சியில் வருகிறார்.

சொல்லிக்கொள்ளும்படியோ ரசிக்கும்படியோ ஆக்சன் காட்சிகள் அமையவில்லை. நிறைய குண்டு வெடிப்பதும், டுமீல் டுமீல் என சுடுவதையும் , எங்க ஊர் விஜயகாந்தே இன்னும் சிறப்பாக செய்வார் மிஸ்டர் ஸ்டாலன்! ஓவராக எடிட்டிங் செய்து விட்டார்கள் போல! ஒவ்வொரு சண்டைக்காட்சிகளிலும் கட் பண்ணிபண்ணி கண்ணு வலிக்கிறது. படத்தின் மேக்கிங்கும் கேமராவும் தமிழில் வெளியான பில்லா தரத்தில் அருமையாக இருக்கிறது.

படத்தின் பிளஸ் தமிழ் டப்பிங்தான். படம் முழுக்க பஞ்ச் டயலாக்குகளை கொட்டித் தீர்த்திருக்கின்றனர். படத்தின் ஒரே மகிழ்ச்சி தமிழ் வசனங்களே! அதற்காக வேண்டுமானால் ஒருமுறை திருட்டு டிவிடியில் பார்க்கலாம். மற்றபடி இந்தப்படத்தை பார்க்காமல் தவிர்ப்பது பாக்கெட்டுக்கு நல்லது.

06 August 2010

ஏழாம் உலகம்




பழனிக்கு பாதயாத்திரை போவதென்றால் கேட்கவே வேண்டாம். எங்கள் நண்பர்களுக்கு பஞ்சாமிர்தம் சாப்பிடுவது மாதிரி! கையில் கம்போடு , தோளில் முருகன் படம் போட்ட மஞ்சள் அல்லது காவி தோள்பையோடு கிளம்பிவிடுவோம்.

அரைடிராயரோடு பொள்ளாச்சி-உடுமலைப்பேட்டை வயா பழநி இதுதான் எங்க ரூட்டு!. நடந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். பேருக்கு மாலை! நெற்றியில் பட்டை! ஒவ்வொரு முறை பழனிக்குப் போகும் போதும் எங்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பழனிமலைப் படிக்கட்டு பிச்சைக்காரர்கள். சிலரை வருடந்தோறும் சந்திக்க நேரிடும். மிகமிக சுவாரஸ்யமான மனிதர்கள். அவர்களிடம்தான் கஞ்சா கிடைக்கும். நண்பர்களில் பலரும் அதற்காகவே பாதயாத்திரை வருவதும் உண்டு.

நீளமான தாடி! கண்களில் லேசான போதை , காவி உடை, தரையில் சின்னதட்டு , முகத்தில் எகத்தாளமான பார்வை! இதுதான் பழனிமலை சாமியார்களின் உருவம்! விஷ்ணுவின் ஆனந்த சயனம் போல் படுத்திருக்கும் போஸைப் பார்த்தால் அடடா யாருக்குமே காட்சியளிக்காத சித்தர் பெருமானோ என்று நினைக்க தோன்றும். உண்மையில் அவர்களோடு கஞ்சா அடித்தபடி பேச்சுக்கொடுத்தால் சோகமான காமெடியான அசைபோடக்கூடிய ஆயிரமாயிரம் கதைகள் கிடைக்கும். பழனிமலை அடிவாரத்தில் இவர்களைபோன்ற பிச்சைகாரர்களுக்காவே நோட்டுகொடுத்தால் சில்லரை கொடுக்கும் சில்லரை விற்பனையாளர்களை பார்த்திருக்கிறேன். பத்துகாசுகளை பத்துரூபாய்க்கு நீளமாக அடுக்கி வைத்திருப்பார்கள். எனக்கும்கூட அப்படி ஒருமுறை நிறைய சில்லரை வாங்கி படிக்கொரு பிச்சைகாரருக்கும் காசு போட்டபடி மலையேற ஆசை இருந்தது. நல்ல வேளை காசில்லை.

பல கிலோமீட்டர்கள் நடந்து நடந்து கால்வலியோடு மலையேறாமல் இவர்களோடு அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்போம்! முருகன் எங்கே போய்விடப்போகிறார்! காலை ஐந்து மணிக்கு முன்னால் போனால் ஆள் அரவம் இருக்காது சன்னிதானத்தில்! நான்,முருகன்,ஐயரு அவர்கைல இருக்கும் மணிமட்டும்தான் இருக்கும்.

இந்த சாமியார் பிச்சைகாரர்களின் பேச்சிலும் இறைவனைக்காணலாம். (கஞ்சா உதவியோடு!) ச்சும்மா பேசிக்கொண்டிருக்கும்போதே பல மாதம் குளித்திராத உடலிலிருந்து குமட்டும் துர்நாற்றமெடுக்கும். உடலில் ஏதாவது தீராத காயங்கள் இருந்தால் , துர்நாற்றமும் இருமடங்காகும். அதையும் மீறி அந்த மனிதர்களிடம் ஏதோ ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருந்தது. அவர்களுக்கும் இளைப்பாறவும் எதையோ பகிர்ந்து கொள்ளவும் எங்களைப்போல இரண்டு பேர் தேவையாய் இருந்திருக்கலாம். ‘ அடேய் வினோத்து சின்ன உதவி பண்ணு! அப்படியே கீழால போனியின்னா கடலைமிட்டாய் விப்பான் நாலு வாங்கிக் குடேன் , அப்படியே நாலு பிளேன் சிசரு!’ பதினைந்து வயதில் கிடுகிடுவென வேகம்பிடித்து மலையடிவாரக்கடைக்கு ஓடுவேன். நாற்றமடிக்கும் சில்லரைகாசுகளை எண்ணிஎண்ணி கொடுப்பார் அந்த கிழவர். தப்பித்தவறியும் அதை முகர்ந்து பார்க்க மாட்டேன்!. அவருக்கு துணையாக காலில்லாத கிழவி , ஒருவயதான குழந்தை , உடல்ஊனமுற்ற மேலும் சிலர் என நிறைய நிறைய பேர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அவர்களை கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த வருடந்தோறும் சந்திக்கிற சாமியார் தாத்தாவிடம் கேட்பேன் ‘’ஏஞ்சாமி இவஙனுங்க்கூட உக்காந்திருக்கீங்.. அந்தல்ல போய் உக்காந்துக்கலாம்லோ’’ என்பேன் , அவிங்கதான்டா என் உறவுக்காரய்ங்க.. இதோ அங்கன இருக்கானே கால்சூம்பிப்போனவன் என் மொத மவன்.. இதா இங்கிட்டு கிடக்குல சின்னக்குட்டி இது என் பேத்தி என்று ஒவ்வொருவருக்கும் ஒரு உறவு முறை சொல்வார். நானும் கூட அதை உண்மையென்றே நம்பியிருக்கிறேன். அவர்கள் ஏன் பிச்சை எடுக்க வந்தார்கள் என்கிற கேள்வி மட்டுமே என்னிடம் இருந்தது. இரவில் எங்கே செல்வார்கள், எங்கு தூங்குவார்கள்.. காலில்லாத முடமான கண்தெரியாத இன்னும் இன்னும் எப்படி மேலே வந்தார்கள் தெரியாது! அவர்களுடைய வாழ்க்கை மர்மமானதாகத்தான் இருந்தது. நான் கேட்டதில்லை.

இந்த ஆண்டு ஜனவரி ஒன்று , புத்தாண்டு தினத்தில் பத்திரிகை வேலையாக பழனி செல்ல வேண்டியதாயிருந்தது. புது வருஷமும் அதுவுமா இவ்ளோதூரம் வந்துட்டோம் அப்படியே முருகன தரிசனம் பண்ணுவோம் என்றார் என்னோடு வந்திருந்த இன்னொருவர். கிளம்பினோம். கண்கள் படிகளையே மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு சாமியாரையும் காணவில்லை. கால்முடமான,கண்தெரியாத ம்ஹூம் யாருமேயில்லை. துடைத்து சுத்தமாக இருந்தது. கடைகள் இருந்தது. மற்றபடி யாருமே இல்லை. இது இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த மாற்றம். அந்த பிச்சைகாரர்களும் சாமியார்களும் எங்கே? சிலரிடம் கேட்டபோது பிச்சை எடுக்க முழுத்தடையாம்! அவர்கள் எங்கே?

ஏழாம் உலகம் நாவல் இந்த பிச்சைக்காரர்களின் வாழ்வியலோடு பயணிக்கிறது. குறிப்பாக பழனி திருவிழாக்களுக்காக திரட்டி கொண்டுவந்து பிச்சையெடுக்க வைக்கப்படும் பிச்சைகாரர்கள் என்கிற உருப்படிகளின் வாழ்க்கை. உருப்படிகளான அங்கஹீனமான மனிதர்கள். அவர்களுக்கு ஆன்மா இல்லை... என்று கூறியபடியே அவர்களை வாங்கி விற்று வாடகைக்கு எடுத்து... உபயோகிக்கும் முதலாளி மனிதர்கள். உருப்படிகளை விற்கின்றனர். சிலர் வாங்குகின்றனர். உருப்படிகள் சம்பாத்தியம் தரும் அஃறிணைகளாக உலா வருகின்றன. உருப்படிகள் பிள்ளைப்பெற்றுத் தருகின்றன. உருப்படிகள் போடும் குட்டிகளும் விற்கப்படுகின்றன. மிகப்பெரிய சந்தை இதற்காக நாடுமுழுக்க இயங்குகிறது. உருப்படிகளால் வெளி உலகிற்கு தப்பிக்கவே முடியாத சந்தை! சிக்கிக்கொண்டால் மீளமுடியாத பாதாள உலகம்.

இங்கே நாம் அனைவரும் எதையாவது எப்போதும் விற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்கா சந்தை என்பதெல்லாம் போய் சந்தைக்கு நடுவில்தான் நாம் இருப்பதாக எண்ணுகிறேன். ஜெயமோகனின் இந்தக்கதையிலும் ஒவ்வொரு பாத்திரமும் எதையாவது விற்கிறது. உடல்சார்ந்த விற்பனை தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கிறது. எல்லோருக்குமே ஏதாவது தீராத ஆசை இருக்கிறது. அது கடைசி வரை நிறைவேறுவதேயில்லை. அல்லது நிறைவேறுகிறது. மற்றவர்களுக்கு தவறாக தெரிவது செய்பவருக்கு சரியாகத்தெரிகிறது. அதற்கான தர்க்கமும் இருக்கிறது.

பிச்சைக்காரர்களை வாங்கி விற்பதென்பது நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.. ஆனால் சந்தையில் ஆடுமாடுகள் வாங்கி விற்பதைப்போன்றதொரு வியாபாரமாக , அனிச்சையான செயலாக அது ஒரு சமூகத்தில் குடும்பத்தில் சகஜமாக பேசிக்கொள்கிற சாதாரண விஷயமாக போய்விட்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவருமே ஏழாம் உலகத்தின் பாத்திரங்களைப்போல ஏதாவது ஒரு தவறுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அது தவறென்றே தெரியாமல் வாழப்பழகியிருக்கிறோம். போத்தி வேலு பண்டாரம் என்னதான் உருப்படிகளை விற்றாலும் , அவனுக்கும் குழந்தைகளை கடத்தி வந்து கண்ணைப்பிடுங்கி பிச்சை எடுக்கிற கும்பல் தவறானவர்களாக இருக்கின்றனர்.

இக்கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சமூகத்தின் குறியீடுகளாகவே உணர்கிறேன். முத்தம்மை பாத்திரம் ஒரு பக்கம் வீங்கியும், ஒருபக்கம் சூம்பியும் போன பெண்! தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கும், வன்முறைக்கும் ஆளாகிறாள். இருந்தும் தொடர்ச்சியாக பிள்ளை பெற்றுக்கொண்டேயிருக்கிறாள். அவளுக்கு ஒரே லட்சியம் முழு உடலும் உடல்நலமும் கொண்டவனோடு ஒருமுறையாவது புணரவேண்டும், முழு ஆரோக்கியத்தோடு பிள்ளை பெற வேண்டும் என்பது! குய்யன் என்றொரு பாத்திரம் அனைத்தையும் கேலிபேசிக்கொண்டேயிருக்கிறது. அவனுக்கு வாழ்க்கையின் ஒரே லட்சியம் நல்ல சோறு தின்பது! விரைவீங்கிப்போன ஒரு அறிவுஜீவி மலையாளி தொடர்ச்சியாக அனைவரையும் மிரட்டி உருட்டி காரியஞ்சாதிக்கிறான். சட்டம் பேசுகிறான்.. போத்திவேலுபண்டாரம் தன்னளவிற்கு நல்லவனாக வாழ முயற்சி செய்கிறான். கதை முழுக்க அவனோடு அவனுடைய சொல்லமுடியாத குற்ற உணர்ச்சியும் பாத்திரங்களாகவும் குறியீடுகளாகவும் வசனங்களாகவும் பயணிக்கிறது. நாம் எல்லோருமே பழக்கப்படுத்திய குற்றங்களை எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்தாலும் தொடர்ச்சியாக நாம் வாழ்க்கை முழுவதுமே குற்ற உணர்வோடு வாழ்வதாகவே உணர்கிறேன்!

ஜெயமோகனின் பாத்திங்கள் ஒவ்வொன்றும் நம் உள்மன உணர்வின் பிரதிபலிப்பாக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற விதவிதமான உணர்வுகளின் உருவங்களாக தெரிகின்றன. கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களுமே!. கதை முழுக்க வன்முறையும், உறைந்து போன ரத்தமும், பிய்ந்து தொங்கும் சதையும் , காயத்தின் மீது செலுத்தப்படும் காய்ச்சிய ஈட்டியினால் உண்டாகும் வலியும் இன்னும் என்னவெல்லாமோ நிரம்ப நிரம்ப.. படிக்கும் நமக்கும் வலிக்கிறது. வலியும் வேதனையும் நிறைந்த புதிய உலகம்! நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வாழ்வியல் , இவ்வளவு கோரமா என்று பதறவைக்கும் சூழல்.

நூலில் ஆங்காங்கே ஜெயமோகனின் சில்மிஷங்களும் சில்வண்டித்தனமான அரசியல் விமர்சனங்களும் கூட இருக்கிறது. மலையாளி ஒருவனிடம் உருப்படியை விற்க வருகிறான் தமிழ் முதலாளி. உருப்படி உருப்படி என்று பேசுகிறான்.. மலையாளியோ அப்படிலாம் சொல்லாத சகாவு என்று சொல்லு என்கிறான்.. சகாவு என்றால் தோழர்!(கம்யூனிசத்தோழர்). பிச்சைகார வியாபாரி ஒரு கம்யூனிஸ்டாகவும்... வாங்கிச்சென்ற கைகால் இல்லாத சாமியாரை வைத்தும் பிழைப்பு நடத்துபவனாகவும் சித்தரிக்கிறார். ஜெயமோகன் வசனங்களால் இந்துத்துவாவும் கம்யூனிசமும் ஒன்றென்கிறார்! இரண்டுமே மனித வியாபாரம் என்கிறார். கதையூனேடே இதுவும் கடந்து செல்கிறது. அதே போல ஊனமுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்கிற மாபெரும் கண்டுபிடிப்பை உலகிற்கு கொடுக்கும் அறிவியலாளர் ஜெமோ! மிக மொன்னையான அவதானிப்பாகவே இதை எண்ணுகிறேன். மருத்துவர்கள் இதுகுறித்து விளக்க வேண்டும்.

நாவலின் மிகப்பெரிய பிரச்சனை அரை மலையாளமும் அரைத்தமிழும் கலந்த கன்னியாகுமரி(?) தமிழ் மட்டும்தான். எனக்கு மலையாள பரிச்சயம் உண்டென்பதால் வேகமாக படித்துவிட முடிகிறது.இரண்டு முறை படித்துவிட்டேன்.

ஜனவரி 1 2010 மீண்டும் பழனியில் என் தேடல் அந்த பிச்சைகாரர்களை நோக்கியே இருந்தது. புலனாய்வு பத்திரிகை நண்பர்களை தொடர்பு கொண்ட போது நான்கடவுள் படம் வெளியான பின் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்ததாக சொன்னார்கள். என்னால் நம்ப முடியவேயில்லை. ஒரு சமூக மாற்றத்திற்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ பேருதவி செய்யுகிற படைப்புகள்.. ஜெயமோகனால் சிலருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

மேலும் துருவியதில்.. பிச்சைகாரர்கள் வேறு வேடம் பூண்டிருந்தனர். இப்போதெல்லாம் பழனியைச்சுற்றி பிளாஸ்டிக் பொம்மைகளும் , பேனாவும், பென்சிலும், இன்னும் சில மலிவான பொருட்களையும் கையில் சுமந்தபடியும் ஆங்காங்கே சுற்றியும்,அமர்ந்த படிக்கும் விற்றுக்கொண்டிருந்தனர். அனைவருமே முன்னால் பிச்சைகாரர்கள். தற்போது வேடம் மாறியிருக்கிறது. நிறைய சின்ன சின்ன குழந்தைகள் பொம்மை விற்றுக்கொண்டிருந்தனர்.

சாமியார் தாத்தாவைத்தேடினேன் அவருடைய நண்பர்தாத்தா மட்டும்தான் சிக்கினார். தாமரைக்குளம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார்! அவரிடம் விசாரித்தப்போது தற்போது சாமி திருப்பதியில் இருக்கிறாராம்.. அவருடைய குடும்பம் என்றேன்.. அவிங்க குருவாயூர்லயும் மதுரையலயும் இருப்பதாக சொன்னார். சாமியார் மட்டும் அவ்வப்போது செல்போனில் அழைத்து பேசுகிறாராம்!

**********
விலை: ரூ.150/- கிழக்கு பதிப்பகம்.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் வாங்க