Pages

30 April 2011

விலைமதிப்பில்லாத புன்னகை




அவசரமாக பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதுதான், திடீரென செல்போனில் அந்த அழைப்பு வரும். வண்டியை ஒரங்கட்டி நிறுத்தி போனை எடுத்தால்.. இனிமை மாதிரியான குரலில் எச்சூஸ்மீ சார் நாங்க ப்ளாப்ளா பாங்கல்ருந்து பேசறோம், ஒரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் இருக்கு அதை பத்தி ஃபைவ் மினிட்ஸ் பேசட்டுமா என ஆரம்பிப்பார். நமக்கு வருகிற வெறியில் கைக்கெட்டும் தூரத்தில் டிராபிக்கை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும் கான்ஸ்டபிளை தூக்கி போட்டு நாலு சாத்து சாத்தவேண்டும் போல இருக்கும். இது கடந்த பத்தாண்டுகளாக பல்கி பெருகி வளர்ந்து கிளைகள் பரப்பி சிறிய நகரங்களில் கூட ஒரு நாளைக்கு இதுமாதிரி பத்து போனாவது வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்தான்.

முன்னெல்லாம் வெறும் கிரெடிட் கார்ட் அல்லது பர்சனல் லோன் கார் லோன் இன்சூரன்ஸ் மாதிரியான விஷயங்களுக்கு மட்டுமே போன் போட்டு மார்க்கெட்டிங் செய்தவர்கள், இப்போதெல்லாம் ‘சார் சென்னைக்கு பக்கத்துல செங்கல்பட்டு தாண்டி நாப்பது கிலோமீட்டர்ல சூப்பரான நிலம் இருக்கு, ரேட் ரொம்பக்கம்மி’ என கூவி கூவி விற்கின்றனர். நாங்க ப்ளாப்ளா டிரஸ்ட்லருந்து பேசறோம் குழந்தைகள் படிப்புக்கு உதவுங்க சார் என்று டொனேஷன் கேட்கின்றனர். ஏதாவது ஒரு மேட்ரிமோனியிலிருந்து அழைத்து உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்கிற அழைப்புகளும் உண்டு. இவர்களுக்காகவாவது இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

இந்த பெண்கள் மேல் எனக்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன் கடும் கோபம் இருந்தது. மார்க்கெட்டிங்கில் பணியாற்றியவன் என்பதால் ஒரு விற்பனையாளன் தன் வாடிக்கையாளரை போனில் அழைத்து பேசும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், அதன் படிநிலையென்ன என்பதையே ஒரு நாள் முழுக்க ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு கற்றுகொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த பெண்களுக்கு அந்த அடிப்படை எதுவுமே தெரியாமல் சுடுகாட்டில் இருந்தாலும் போன் போட்டு நம்நிலை அறியாது கடகடவென பேசி டெலிமார்க்கெட் பண்ணுவது நாராசமானது.

ஒரு நாள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பியது போன். எடுத்து பேசினேன். நிஜமாகவே அழகான குரலொன்று பேசியது. சிட்டி பேங்கிலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு கிரடிட் கார்டு வேண்டுமா என்றும் கேட்டது. தூக்கம் போச்சே என்கிற கோபமிருந்தாலும் போனை எடுத்ததும் பதட்டமான குரலில் நல்ல வேளை போன் பண்ணீங்க.. இல்லாட்டி செத்தே போயிருப்பேன்.. இப்பதான் கடன் தொல்லை தாங்க முடியாம சாகலாம்னு தூக்குல தொங்க போனேன்.. என்று நான் பேச, அந்த பெண் கிக்கீகிக்கீ யென சிரிக்கத்தொடங்கிவிட்டாள்! அவளுக்கு நான் நக்கலடிப்பது எப்படி புரிந்தது என்பது இன்றும் தெரியாத ஒன்று. அந்த சிரிப்பு வசீகரித்தது. அந்த பெண் போனை வைத்துவிட்டாள். இருந்தாலும் அந்த சிரிப்பு புதுமையாக இருந்தது. மார்க்கெட்டிங்கில் இது போல நக்கலடிக்கும் ஜோக்கடிக்கும் வாடிக்கையாளரிடம் அதிகமாக சிரிக்க மாட்டேன்! அது டீலிங்கை கெடுத்துவிடும் , பேமண்ட்டில் விளையாடும் என்பார் முன்னாள் மேனேஜர்.

தொடர்ந்து இது போல வருகிற கால்களுக்கு விதவிதமாக பதில் சொல்லத்தொடங்கினேன். ‘’என்னது சிட்டிபேங்க்லருந்தா கூப்பிடறீங்க.. நான்தான்ம்மா சிட்டிபேங்க் ரிஜனல் மேனேஜர்’’ என்பேன். ‘’ஆமா வினோத்தான் பேசறேன்.. ஆனா நான் செத்துப்போயி நாலு வருஷமாச்சு.. இப்போ ஆவியா சுத்திகிட்டு இருக்கேன், என்ன வேணும் சொல்லுங்க’’ என்பேன். அப்போது தனிமையில் சிறிய அறையில் வசித்த என்னுடைய மொக்கை ஜோக்குகளுக்கும் சிரித்து மகிழ ஆளிருக்கே என நினைப்பேன். சில பெண்கள் நண்பர்களை போல பழகவும் தொடங்கினர். அவர்களோடு நிறைய உரையாடுவேன். அவர்களுடைய அலுவலகத்திற்கே சென்று சந்திப்பேன். அந்த சமயத்தில்தான் இந்த பெண்கள் படும்பாடு புரியத்தொடங்கியது.

நமக்கு வருகிற இந்த மார்க்கெட்டிங் அழைப்புகள் ஏதோ மிகப்பெரிய கால்சென்டரிலிருந்தோ மெத்தப்படித்த பெண்களிடமிருந்தோ வருபவையல்ல. பத்துக்குபத்து அறை, இரண்டு லேன்ட்லைன் போன், இரண்டு பெண்கள், மூன்று மார்க்கெடிங் பையன்கள் இவ்வளவுதான் இந்த மார்க்கெடிங் அலுவலகங்களின் அளவு. அதிலும் இந்த பெண்களெல்லாம் பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது பட்டப்படிப்பு படித்து சரியான வேலைகிடைக்காதவர்கள் வரை இருக்க கூடும். சம்பளமாக பெரிய தொகை கிடையாது அதிமாக கொடுத்தால் ஐந்தாயிரம்தான்! ஐந்தாயிரமே மிகமிக அதிகம். அதற்கு மேல் வாடிக்கையாளரை பிடிப்பதை பொறுத்து வேறுபடும்.

இவர்களெல்லாருக்குமே தினமும் நூறிலிருந்து நூற்றம்பது அழைப்புகளுக்கு மேல் டார்கெட் இருக்கும். அதற்காக எண்களை பெற பெரிய போராட்டமே நடத்துவதை பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் ரேண்டமாக வெவ்வேறு எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லா வாடிக்கையாளருமே ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பவர்கள் ஒரு பக்கமென்றால் இன்னொரு புறமோ ஆபாசமாக பேசுகிறவர்களும் உண்டு. இன்னும் சிலர் ஒரு நாள் வரீயா இன்சூரன்ஸ் போடறேன் என்றெல்லாம் கேட்பார்களாம்! அதை சொல்லும்போதே கதறி அழுகிற நண்பர்கள் எனக்கிருந்தனர். இதில் வாடிக்கையாளர் பெண்களாக இருந்துவிட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்குமாம். தகாத வார்த்தைகளை நாசூக்காக பேசியே கொல்வபவர்கள் உண்டு.

வெளியே போனில் அழைத்து பேசும்போதுதான் இந்த நிலையென்றால் டார்கெட் பிரஷர் அதிகமாகும்போது அறைக்குள் அழைத்து திட்டி தீர்க்கிற டீம் லீடர்களின் அத்துமீறலும் அரங்கேறுமாம். சிலர் சரிம்மா இன்சூரன்ஸ் போட்டுக்கறேன்.. லோன் வாங்கிக்கறேன் என்று கூறுவதோடு எல்லாமே ஓக்கே ஆகி லோனுக்கான விண்ணப்பங்களில் கையெழுத்து போடப்போகும்போது இந்த பெண்களை நேரில் வரச்சொல்லி தவறாக நடந்துகொள்ள முயல்வதும் உண்டு.

இவர்களுக்கு மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. அதற்குபதிலாக போன்ல கூப்பிட்டு பேசும்போது நல்லா இனிக்க இனிக்க பேசுங்க.. உங்களுக்கு கல்யாணமாகிடுச்சானு கேளுங்க , உங்க வாய்ஸ் நல்லாருக்குனு சொல்லுங்க என்பது மாதிரியான மோசமான பாடங்களே உண்டு! இந்த பெண்களில் தொன்னூறு சதவீதம் பேர் வறுமையான சூழலில் பிறந்து வளர்ந்து ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான இதுமாதிரியான வேலைக்கு வருகிறவர்கள். எதையும் சகித்துக்கொள்ளுபவர்களாகவும் , இதையெல்லாம் எதிர்கொண்டு வாழ பழகிக்கொண்டவர்களாகவும் இருப்பதை பார்த்திருக்கிறேன். அது அதிர்ச்சியாக இருந்தாலும்.. ஆச்சர்யம்தான்.

இப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிற இப்பெண்கள் எப்போதாவது சிலர் மொக்கை ஜோக்குகளை பகிர்ந்துகொண்டாலும் ஒரு நன்றியோடு கனிவாக போனை கட் செய்துவிடுவதாலும் புன்னகைப்பதில் ஆச்சர்யம் இல்லை. புன்னகை விலைமதிப்பற்றதல்லவா? இதோ இப்போதும் எனக்கு தினமும் பத்து முதல் பதினைந்துக்கும் மேல் இதுமாதிரியான அழைப்புகள் வருகின்றன. அசௌகர்யமான நேரங்களில் வரும்போது ஒரு நன்றிம்மா இப்போதைக்கு வேணாம்மா என கட் செய்துவிடுவேன். அல்லது ஏதாவது ஒரு மொக்கை ஜோக்கை உதிர்த்து அப்பெண்ணின் சிரிய சிரிப்பொலியோடு போனை கட்செய்வதுமுண்டு. அவர்களும் நம்மைப்போல மனிதர்கள்தானே!

25 April 2011

என் பெயர் லிங்கம்



பெயர் – பத்திரிகைகளில் படித்திருப்பீர்களே? டிவியில் பார்த்திருப்பீர்களே! நிஜம்,குற்றம்..உண்மை உறங்காது என ஏதேதோ நிகழ்ச்சிகளில்.. லிங்கம் லிங்கம் லிங்கம்னு அலறினாங்களே! லிங்கம்தான் என் பெயர். எங்கம்மாவுடைய அப்பா பெயர்! அம்மா ஆசை ஆசையாக வைத்த பெயர்.

முகவரி – இப்போதைக்கு புழல் சிறையில் அறை எண் 209. தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுடுகாடுதான் எந்த சுடுகாடென்பது இன்னும் முடிவாகவில்லை.

வயது – வருகிற மே மாதம் வந்தால் வெற்றிகரமாக 30ஐ கடந்துவிடுவேன்.

பாலினம் – ஆண்

திருமணமாகிவிட்டதா? – ஆம் , ஒரே ஒரு முறை. அவளால்தான் இன்று இந்த சிறைச்சாலையில்..

பிறந்த தேதி – மே மாதம் முதல் நாள். நான் பிறந்த அதே நாளில்தான் அப்பாவும் இறந்தார்.

இறந்த தேதி – ஜனாதிபதியிடம் அப்பீல் செய்திருக்கிறாள் மனைவி. அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன். அவர் மறுத்துவிட்டால் இந்த ஆண்டு மே இரண்டாம்தேதி இறந்துவிடுவேன்.

படிப்பு – எம்எஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ், ஆரக்கிள் புரோகிராமிங், சிஆர்எம்,மைக்ரோசாஃப்ட் சர்ட்டிபிகேஷன் என எல்லாமே அம்மாவின் உழைப்பில்தான். பாவம் அம்மா கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தாள்.

தொழில் – மென்பொருள் நிபுணர், அதாவது சாஃப்ட்வேர் இன்ஜினியர். அதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்புவரைக்கும்தான். இப்போதைக்கு சிறைச்சாலையில் தோட்ட வேலை,மரவேலை,சோப்பு தயாரித்தல்.

அனுபவம் – சில ஆண்டுகள் நிறைய நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறேன். நைட் ஷிஃப்டில் மாட்டைப்போல வேலை பார்த்தாலும் கொஞ்சம் கூட மதிக்காத எத்தனையோ டீம் லீடர்களையும், மேனேஜர்களையும் சிஇஓக்களையும் கழுத்தை அறுத்து, நெஞ்சில் மிதித்தே கொல்ல நினைத்ததுண்டு. ஆனால் ஒரே ஒரு கொலைதான் செய்திருக்கிறேன்.

செய்த குற்றம் – அதை குற்றம்னு சொல்ல முடியாது. அன்னைக்கும் எனக்கு எப்பயும் போல நைட் ஷிப்ட்தான். புராஜக்ட்டை முடிக்க முடியாமல் இரவெல்லாம் ஒரு டீ கூட குடிக்காமல் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பினேன். அந்த டீம் லீடர் என்னை அப்படி திட்டியிருக்க வேண்டாம். எரிச்சலின் உச்சத்தில் இருந்தேன். மனைவியை காணோம். அம்மா மட்டும்தான். இட்லி சமைத்திருந்தாள். வாயில் வைத்தால் உப்பே இல்லை.. என்ன கருமத்தை சமைக்கிற.. என்று எரிச்சலோடு அவள் மீது டேபிளில் எனக்கு பக்கத்தில் இருந்த எதையோ தூக்கி எறிந்தேன். அது கத்தி. தூக்க கலக்கத்தில் கவனிக்கவில்லை. இதயத்தில் பாய்ந்தது. மிகச்சரியாக இதயத்தில் குத்தியிருந்தது. ஓடிப்போய் அம்மா அம்மா என கத்தியை எடுக்க முயன்றேன். அது வரவில்லை. கத்தியை ஆட்டி ஆட்டி வெளியே எடுப்பதற்குள் அவள் இறந்துபோயிருந்தாள். அதை அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த என் மனைவி பார்த்துவிட கொலை கொலை என கத்தி ஊரைக்கூட்ட நான் இப்போது இங்கே!

தண்டனை - தூக்காம்.

பொழுதுபோக்கு – இப்போதைக்கு பக்கத்து செல்லில் இருக்கும் மணியோடு அம்மா பற்றி பேசுவது, (அவனுக்கு அது பிடிக்காதென்பதும் எனக்கு தெரியும், இருந்தாலும் நான் பேசுவேன் அவன் கேட்பான்) சுவற்றில் அம்மாவின் பெயரை கரிக்கட்டையால் ராமஜெயம்போல கிறுக்குவது. ஜெயில் சுவற்றில் அம்மாவை போல படம் வரைவது. அம்மாவை மட்டுமே நினைத்துக்கொண்டு என் சிறை அறைக்கு வெளியே இருக்கும் மரத்தை பார்த்துக் கொண்டிருப்பது. மேலே சொன்னதெல்லாம் பொழுதுபோக்கா தண்டனையா என யோசித்துக்கொண்டிருப்பது. சீக்கிரமே மே இரண்டாம் தேதி வந்துவிட்டால் நல்லது என சதா நினைத்துக்கொண்டிருப்பது.





(நன்றி - தினகரன் வசந்தம் - 24-4-2011)

22 April 2011

பறவைகள் வசித்த மொட்டைமாடி




பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும் கொஞ்சமாக தானியம் கொடுப்பதும் ஒரு குற்றமா? அதைப்போய் யாராச்சும் தடுத்து நிறுத்துவதும்தான் இந்த உலகத்தில் நடுக்குமா?

இந்த கோடையில் வெயிலில் வாடும் சிறிய பறவைகளுக்கும் அதன் குஞ்சுகளுக்கும் தண்ணீர் வைங்க.. சுற்றுசூழலை காத்திடுங்க என்று முறையே [சில மின்னஞ்சலும் பல குறுஞ்செய்தியும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த செய்திகளில் இருந்த ஒரு நேர்மையும் எளிமையும் என்னை வெகுவாக கவர்ந்தன. இயற்கையிடமிருந்து எல்லாவற்றையுமே சுரண்டிவிட்ட இந்த மனிதகுலமாகப்பட்டது அவ்வியற்கைக்கு எதையுமே திருப்பி கொடுப்பதில்லையே! என்று அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறேனே!

இந்த இயற்கையை சுரண்டி தின்னும் நானும் கூட எதையுமே செய்ததில்லை. அப்படி ‘’ஏதாவது செய்யணும் பாஸ்’’ என தோன்றினாலும் நம்முடைய மாத சம்பள வீட்டு வாடகை கடன்கார எட்டுமணிநேர டியூட்டி பார்க்கிற பொருளாதார சமூக கட்டமைப்பு அதை அனுமதிப்பதில்லை. ஆனால் பறவைக்கு தண்ணீர் வைப்பதென்பது மிகவும் எளிதானதும் , அதிக செலவு வைக்காத ஒன்றாகவும் இருந்தது பிடித்திருந்தது. பத்துகாசு செலவழிக்காமல் வாசலைவிட்டு இறங்காமல் செய்யக்கூடிய பயனுள்ள சமூகசேவை திட்டம்.

அதிலும் தனிமையில் பேசுவதற்கு கூட ஆளின்றி மொட்டைமாடியில்  அதிக நேரம் நின்றபடி வெறுமையில் பொழுது போக்கும் எனக்கு வானில் பறக்கும் பறவைகள் தரையிறங்கி என் மொட்டைமாடியில் நீர் குடித்து இளைபாறி என்னை பார்த்து சிரித்துவிட்டு சென்றால் இனிக்காதா என்ன!

இதனை நிறைவேற்றும் வகையில் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் ஒரு சிறிய அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரும் இன்னொரு கிண்ணியில் கொஞ்சம் தானியங்களும் வைக்க தொடங்கினேன். முதலிரண்டு நாட்கள் பறவைகளிடமிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. ஒரு பறவையும் வருவதில்லை. ஆனால் தண்ணியும் தானியமும் மட்டும் மிஸ்ஸிங்! அம்மாவிடம் கேட்டபோது நான்தான்டா தண்ணிய கீழ ஊத்திட்டு தானியத்த வீட்டுக்குள்ள வச்சேன் என்று அதிர்ச்சியூட்டினார். என்னம்மா நீ! பாவம்மா அந்த பறவைங்க என்று பொறுமையாக ஆரம்பித்து கச்சா முச்சா வென சண்டைபோட்டு அம்மாவிடம் அனுமதி வாங்கி பறவைக்கு தண்ணீர் வைக்க தொடங்கினேன். இம்முறை வைத்தது வைத்தபடியே இருந்தது.

எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தாலும்.. ஒரு காக்காவுக்கு கூடவா இந்த தண்ணிய குடிக்கணும்னு தோணலை , ஒருவேளை நான் பாவம் பண்ணிட்டேனோ, நிறைய நான்வெஜ் சாப்பிட்டதால் இருக்கலாம் என்றெல்லாம் நினைத்தேன்.

யாருமே வராத கடையிலும் டீ ஆத்தியே தீருவேன் என அடம்பிடித்து வைத்த தண்ணீருக்கும் தானியத்திற்கும் முதல் வாரம் முடிந்தபின்தான் நல்ல ரெஸ்பான்ஸ். அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் சில காக்கைகள் வரத்தொடங்கின. நாட்கள் செல்ல குருவிகள் எங்கிருந்தோ வந்தன. அதற்குமடுத்த சில நாட்களில் கிளிகள்.. பின் மைனா.. புறா.. அடடா.. சின்ன வேடந்தாங்கலாக மாறிப்போயிருந்தது எங்கள் வீட்டு மொட்டைமாடி! ‘ஏய் நம்ம மொட்டைமண்டையன் வீட்டு மொட்டைமாடில பாருங்கடி எவ்ளோ பேர்ட்ஸ்’ என்று அருகாமை வீட்டு இளம் பெண்களும் ஆன்ட்டிகளும் ஆயாக்களும் குழந்தைகளும் ஆர்வத்தோடு பார்க்கத்தொடங்கினர். என்னோடு பேசத்தொடங்கினர். எல்லோர் வீடுகளிலும் தண்ணீர் வைக்கவும் தொடங்கினர்.

சில பறவைகள் எங்காவது சுற்றித்திரிந்து இரவுகளில் மொட்டைமாடிக்கு திரும்பி அங்கேயே வசிக்கவும் தொடங்கின. இரவெல்லாம் மொட்டைமாடியிலேயே அந்தபறவைகளோடு பேசிக்கொண்டிருப்பேன். அவையும் என்னோடு பேசத்தொடங்கின. ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குணமும் கதையும் இருந்தன. வீட்டில் இருப்பதைவிட மொட்டைமாடியில் இருப்பதையே விரும்பினேன். அவை என் மடியில் அமர்ந்து விளையாடத்தொடங்கின... அம்மாவைக்காட்டிலும் அவை என் மீது அதிக அன்பு வைத்திருப்பதை உணர்ந்தேன்.

இப்படி போய்க்கொண்டிருந்த என்னுடைய சுற்றுசூழல் மேம்பாட்டு புரட்சிக்கு ஒரு தடைக்கல்லாக வில்லனாக என் அம்மாவே மீண்டும் மீண்டும் வருவார் என்று நான் ஒரு போதும் நினைக்கவில்லை. மென்மையான இதயங்கொண்டவர் அம்மா.. அப்பாவே இல்லாமல் போராடி என்னை வளர்த்தவர். 18 ஆண்டுகளாக தனிமையில் வாழ்பவர். குழந்தைகளிடம் அவ்வளவு அன்பாக பழகுபவர். கரப்பான் பூச்சியை கூட கொல்லாமல் வெளியே கொண்டு போய் போட்டுவிடுகிற சாது! அப்படிப்பட்டவரா இதை தடுக்கவேண்டும்.

அறிவுகெட்டவனே மொட்டைமாடில போய் யாராச்சும் தானியங்களை போடுவாங்களா.. அறிவில்ல உனக்கு என்று எங்கள் இருவரிடையேயான அதிபயங்கர சுற்றுசூழல் போர் மூண்டது. அதனால உனக்கென்ன மொட்டைமாடி சும்மாதானே இருக்கு , நான் என்னமோ பண்ணிட்டு போறனே! உன் வேலைய பாரும்மா என்றேன். அதோடு விடாமல் அம்மாவுக்கு பறவைகளுக்கு ஏன் தண்ணீர் வைக்கவேண்டும் என்பதன் காரணங்களை அடுக்கத்தொடங்கினேன்.

நாம சிட்டில இருக்கோம்.. இங்கே நிறைய பில்டிங்ஸ் ஆகிருச்சு. மரங்களை வெட்டிட்டோம். குருவிங்க கூட அழிஞ்சிருச்சுனு பேப்பர்ல போட்டிருக்கான் நகரத்தில் இருந்த நல்ல தண்ணீர் ஆதாரங்களை அழிச்சிட்டோம். கோடைவெயிலில் நமக்கே நாவறண்டு கண்ணை கட்டி டீஹைட்ரேட் ஆகிடுது.. அதுங்க பாவம் வெயிலில் பறந்துட்டே இருக்கே அதுக்கு எப்படி இருக்கும். அதனால இதுமாதிரி சின்னதா உதவி பண்ணினா அதுங்க மனசார நம்ம வாழ்த்தும்ல , பாவம்மா குட்டி பறவைங்க.. பாருங்க எவ்ளோ அழகா இருக்கு அதுங்க என அம்மாவுக்கு பறவைகளை காட்டினேன். அம்மா பறவைகளை பார்ப்பதோடு சுற்றிலும் என்னையும் பறவைகளையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் பார்த்தார். முகம் சிடுசிடுவென ஆகி..

‘’அதுலாம் சரியா வராதுடா, யோசிச்சி பாரு நாம இருக்கறதே குருவிக்கூடு மாதிரி ஒரு சின்ன வீட்டுல.. இங்கே துணி துவைச்சு காயப்போடறது தொடங்கி, வத்தல் வடாம், கோதுமை, அரிசினு எது காயப்போடறதா இருந்தாலும் நமக்கு இருக்கறதே ஒரே ஒரு மொட்டைமாடிதான். அங்கே நீ இப்ப தண்ணி வச்சி தானியம் போட்டு அதுங்களை பழக்கிடுவ.. அதுங்களும் நல்லா தின்னு தின்னு பழகிடும். ஆனா வெயில்காலம் முடிஞ்சதும் நிறுத்திடுவ.. அந்த நேரத்துல நான் கோதுமைய காயப்போட்டா என்னாவும்.. இப்பயே பகல்ல துணிய காயப்போட்ட துணியெல்லாம் ஆய்ப்போய்டுதுங்க.. இரண்டு வாட்டி துவைக்க வேண்டியிருக்கு , நீ பெரிய புரட்சிக்காரன் உன் பாட்டுக்கு காலைல புரட்சி பண்ணிட்டு மயிரா போச்சினு ஆபீஸ் போய்டுவே இங்கே வீட்டுல இருக்கறவ எனக்குதானே தெரியும்.. அதோட பிரச்சனை’’ என்றாள்.

‘’இல்லமா நான் எப்பயுமே அதுக்கு தண்ணி வைக்கிறேன்’’ என்றேன். அம்மா விடாப்பிடியாக இருந்தாள். அம்மா சொன்னதில் நியாயமான காரணங்கள் இருந்தன. என்னுடைய புரட்சிவெறி இவ்வளவு எளிதில் நீர்த்துப்போய் புஸ்வானமாகும் என நினைத்தே பார்க்கவில்லை.

அதிலிருந்து தண்ணீர் வைப்பதும் தானியம் வைப்பதும் நிறுத்தப்பட்டது. பறவைகள் சில நாட்கள் தண்ணீர் தேடி மொட்டைமாடிக்கு வருவதும். பின் வாடிப்போய் திரும்பிச்செல்வதும் தொடர்ந்தது. மனசு கஷ்டப்பட்டாலும் என்ன செய்ய அம்மா சொல்லிட்டாங்களே! அதையும் மீறி தண்ணி வச்சா ம்ஹும் நான் வெளியே கிளம்பினதும் அதை கீழே ஊத்திடுவாங்க.

கொஞ்ச நாட்களில் பறவைகள் வருவது முழுவதுமாக நின்றுபோனது. அவை வந்தாலும் அம்மா நிச்சயம் விரட்டியடித்திருக்கலாம். மொட்டைமாடி காலியாய் கிடக்கிறது. எனக்காக அம்மா மொட்டைமாடியை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து வைத்திருக்கிறாள். எப்போதும்போல இப்போது அம்மா மொட்டைமாடியில் துணிகளை கோதுமைகளை தானியங்களை மகிழ்ச்சியோடு காயப்போட ஆரம்பித்திருக்கிறாள். காக்கைகளைகூட தடி வைத்து விரட்டிக் கொண்டிருக்கிறாள்! நானும் விரட்டுகிறேன். என்ன இருந்தாலும் பறவைகளை விட அம்மாதானே முக்கியம்.

19 April 2011

சமகால பிட்டுப்படங்கள் - சில சிந்தனைகள்



இணையப்புரட்சி உச்சகட்டத்தினை எட்டியிருக்கும் இக்காலத்திலும் பிட்டுப்படங்களை தியேட்டருக்கே சென்று பார்ப்பவர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வரிசையாக வெளியாகும் பிட்டில்லா பிட்டுப்படங்களே அதற்கு சான்றாக நம் கண்முன்னே நிற்கின்றன. அத்தனை பிட்டுப்படங்களினையும் ஒன்றுவிடாமல் எப்பாடுபட்டாவது பார்த்துவிட்டு வெளியே வருகிற சராசரி தமிழ் ரசிகனின் முகத்தை எப்போதாவது பார்த்ததுண்டா? எதையோ இழந்த பெரும் ஏக்கப்பெருமூச்சும், சூம்பித்தொங்கிய தலையும், விரகமெறிய எதையோ தேடுகிற கண்களுமாக மெய்புல உலகின் மீதான தீராக்கோபத்தோடு அரங்கினை விட்டு வெளியேறுகிற துர்பாக்கிய நிலையை காண இயலும். என்ன காரணம். ஏனிந்த ஏக்கம். பிட்டுப்பட ரசிகர்களின் இச்சோகத்திற்கு காரணம்தான் என்ன? பிட்டுப்படங்கள் குறித்த தவறான கருத்தாக்கங்களும் அதற்குபின்னாலிருக்கிற நுண்ணரசியலும்தான் என்ன?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிட்டுப்படவுலகை ஆண்டுகொண்டிருந்த ஏடி ஜோய், ஜெய தேவன் மாதிரியான அதிசிறந்த முற்போக்கு இயக்குனர்களும், ஷகிலா,சிந்து,மரியா,ஷர்மிலி முதலான நடிப்பிற்சிறந்த முற்போக்கு நடிகையரையும் எங்கு தொலைத்தோம். படைப்பூக்கமில்லா சுரணையில்லாத பிட்டுப்படங்களின் காலம்தான் தொடங்கிவிட்டதா என்ன? என்று மெய்யுணர்வினால் எழுகிற தர்க்கரீதியிலான அக்கேள்வி ஒவ்வொரு ரசிகனின் உள்ளத்திலும் எழக்காரணம்தான் என்ன?

கடந்தவாரத்தில் வெளியான தேவதாசியின் கதை என்னும் பிட்டுப்படத்திற்குத்தான் எத்தனை அமர்க்களமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. தினத்தந்தியில் வெளியான மோனிகாபேடியெனும் காரிகையின் புகைப்படம் பிட்டுப்பட ரசிகர்களின் உள்ளத்திளே புகுந்த எறும்பாக மொய்க்கத்தொடங்கியது. ஐபிஎல் தேர்தல் முதலான புறக்காரணிகளால் தமிழ்த்திரையுலகம் நிறையவே சோம்பிப்போய் கடந்து இரண்டு வாரங்களில் மாப்பிள்ளை தவிர்த்து எப்படமும் வெளியிடப்படவில்லை.

காரணம்? இப்புறக்காரணிகளால் ரசிகர்கள் யாருமே தியேட்டருக்கு வரவாய்ப்பில்லாமல் போய்விடுகிற நிலை உண்டாகியிருக்கிறது. ஆனால் கூட தொடர்ந்து வெளியாகும் இப்பிட்டில்லா பிட்டுப்படங்களுக்கு கூட்டம் அம்முவதில் ஆச்சர்யமில்லை. தேவதாசியின் கதை மட்டுமல்ல, சாந்தி அப்புறம் நித்யா, துரோகம், குற்றம் நடந்தது என்ன முதலான பல திரைப்படங்களை உதாரணமாக கூற இயலும்.

இப்போதும் மெய்நிகர் உலகில் தனக்கான மிகச்சரியான பிட்டினை தேடி அலைகிற அதிசிறந்த ரசிகனாகவே நம்மில் பலரும் உலா வருகின்றோம்.

அப்படிப்பட்ட ரசிகனின் எதிர்பார்ப்பை ஈடுசெய்ததா இத்திரைப்படங்கள். இல்லை என்பதே பெரும்பாலானவர்ளின் பதிலாக இருந்துவிடுகிறது. ஆம் என்று சொல்லுபவர்களுக்கு பிட்டுப்படங்கள் குறித்த ரசனையோ இலக்கியரீதியிலான பார்வையோ உள்ளொளி தரிசனமோ இருப்பதில்லை என்பதும் திண்ணம். ‘படத்தின் இறுதிவரை பாருங்கள் இன்பம் நிச்சயம்’ என்றெல்லாம் தினத்தந்தியில் கட்டங்கட்டி காசுகொடுத்து விளம்பரம் செய்த போதாவது நம் மக்கள் அதையுணர்ந்து தப்பித்திருக்கலாம். ஆனால் பிட்டுப்படங்களின் மீதான தீராவெறியும் ஒரு நல்லபிட்டுக் கிடைக்காத என்கிற ஏக்கமும் இவர்களை ஐபிஎல்லினையும் தேர்தலினையும் புறக்கணித்து இப்படங்களை காணசெய்திருக்கிறது. கண்டபின் நோக செய்திருக்கிறது. இது யாருடைய குற்றம். இதுமட்டுமல்ல இதற்கு முன்பு வெளியான அனேக பிட்டுப்படங்களின் நிலையும் இதுவே.

அண்மைக்காலங்களிலே வெளியான படங்களில் துரோகம் என்னும் படம் ஓரளவு நம்மை கவர்ந்தாலும், அதிலே பிட்டுகளின் எண்ணிக்கையை குறைத்ததோடு படம் எதை நோக்கியும் பயணிக்காமல் கட்டவிழ்த்த கழுதையைபோல நகர்ந்தது பெருங்குறை. ஆனால் பழைய திரைப்படங்களோ கதை எதை நோக்கிப்பயணித்தாலும் அதன் இறுதி இலக்கானது பிட்டெனும் ஒன்றை முன்னுறுத்தியே நகருவதை கண்டிருக்கிறோம். அதிலும் ஷகிலா நடித்திருந்தால் படத்தில் இரண்டு பிட்டாவது உறுதி என்கிற மனோதைரியத்தினை அளித்த படங்கள் அவை. பிட்டே இல்லாத படங்களாக இருந்தாலும் தியேட்டர் அதிபர்களின் கருணையினாலே அவை நிகழ்ந்தேறுவதையும் கண்டிருக்கிறோம். நாயகனும் நாயகியும் சந்தித்தாலே அடுத்த காட்சியில் பிட்டு நிச்சயம் என்கிற அந்நம்பிக்கையை கொடுத்ததுதான் எது? ஆனால் இன்றோ இருவருமே ஓன்றாக கட்டிலில் புரண்டாலும் காதுகடித்தாலும்.. பிட்டென்ற ஒன்று வராது என நம்பத்தொடங்கியிருக்கிறான் மெய்நிகர் ரசிகன்.

இதில் யாருக்குமே மாற்று அபிப்பிராயமோ அப்பிரதிகள் மீதான விமர்சனமோ இருக்காதென நம்பலாம். ஷகிலாவின் பெரும்பாலான படங்கள் அனைத்துமே பாலியல் தொடர்பான சிக்கல்களை முன்னிறுத்துபவை. அவை ஒவ்வொரு இளைஞனின் நாடித்துடிப்பையும் அறிந்து உருவாக்கப்பட்டு பெரும் வெற்றிபெற்றவை. ஆனால் இன்று வெளியாகிற படங்களோ அதிவேக பணம் எனும் முதலீட்டிய ஒற்றை மதிப்பீட்டினையே குறியாக வைத்துக்கொண்டு இயங்குகின்றன.

பிட்டுப்படம் பார்க்கிற ஆவலோடு தியேட்டருக்கு வருகிற ரசிகனை ஏமாற்றி அவனுக்கு எதையுமே காட்டாமல் ஏமாற்றும் போக்கு தொடர்கிறது. இது பொதுவெளியில் இயங்குகிற சராசரி ரசிகனையும் அவனுடைய கலாப்பூர்வமான பார்வையையும் சிதைத்து அவனை பிட்டுகளே அறிந்திடாத சுரணையற்றவனாக மாற்றிவிடுகிற நிலையும் உருவாக காரணமாக இருக்கலாம். இதற்கான மாற்றுவழிகளை சிந்தித்து அழிந்துவரும் பிட்டுப்பட ரசனையையும் பாலியல் விழைவூக்க ரசனையையும் மேம்படுத்தும் படங்களையும் பணமெனும் ஒற்றை குறிக்கோளைவிடுத்து அனுதினமும் எடுத்திட சமகால இயக்குனர்கள் பிரக்ஞையோடு முன்வரவேண்டும். அல்லது அக்கால ஷகிலா படங்களை மறுபிரதியாக்கமோ அல்லது மறுதிரையாக்கமோ செய்யலாம்.

ஒவ்வொரு படத்தின் கடைசி காட்சிவரைக்கும் காத்திருந்து இதோ இப்போது பிட்டு வந்துவிடும், அதோ அப்போது பிட்டுவந்துவிடும் என்கிற எதிர்பார்ப்பினோடு காத்திருக்கும் ரசிகர்களின் கண்கள்தான் எவ்வளவு மகத்துவமானவை. அவனை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பாவச்செயல். ஒவ்வொரு காட்சியிலும் மொக்கை ஃபிகர் வந்தாலும்.. பல்லு போன ஆயாவந்தாலும் ஒரு பிட்டுவராதா என்று எதிர்பார்க்கிற துர்பாக்கிய நிலையில் இன்றைய ரசிகன் இருக்கிறான். பாலுக்காக அழுகிற கன்றுக்குட்டிக்கு காளை மாட்டில் பால்குடி என உத்தரவிடுவது எவ்வளவு வன்கொடுமையானது. அதைப்போல இன்றைய ரசிகன் பிட்டுக்காக அலைகிற நிலையுள்ளது. இதனை தடுத்திட உடனடியாக தமிழ் கூறும் பிட்டுத்திரையுலகம் கூர்ந்து கவனித்து , சரியான திட்டங்களோடு முன்வராவிட்டால் , பிட்டென்றால் என்னவென்றே தெரியாத மரபுக்குணங்கொண்ட ஒரு சந்ததியை உருவாகிவிடக்கூடிய  சாத்தியக்கூறுகள் அதிகமாய் தெரிகின்றன.