Pages

31 October 2011

டிக்கெட்
குடித்துவிட்டு மிட்நைட்டில் வண்டியோட்டுவது சுந்தரேசனுக்கு மிகவும் பிடிக்கும். காதில் இயர்ஃபோனில் இளையராஜா. ''வருது வருது இளங்காற்று..'' எனப்பாடிக்கொண்டே போதையில் பறக்க தொடங்கிவிடுவான்.

அன்றைக்கும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு அப்படித்தான் ஹாயாக கிளம்பினான். லேசான சாரல் வேறு சிலிர்ப்பூட்டியதோடு கிளுகிளுப்பை அதிகப்படுத்தியது. ‘‘இந்த நேரத்துல செமத்தியான ஒரு டிக்கெட் கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்...’’ என பெருமூச்சை உதிர்த்தபடி பைக்கை நகரின் பிரதான சாலையில் ஓட்டிய படி வந்தான்.

சாலையின் ஓரம் தூரத்தில் இரண்டு பேர் நிற்பது நிழலாகத் தெரிந்தது. போலீஸா இருக்குமோ? ட்ரங்க் அன்ட் ட்ரைவ்... இரவெல்லாம் உக்கார வச்சிருவானுங்களே... பதறி வண்டியை ஓரமாக நிறுத்தி வாயில் ஒரு பாக்கெட் குட்காவை அள்ளிக்கொட்டி குதப்பினான். பிறகு வண்டியை ஸ்டார்ட் செய்து அருகில் செல்லச் செல்ல அது போலீஸ் அல்ல... பெண்கள் என்று தெரிந்தது. ஆஹா அடிச்சதுடா ஜாக்பாட்...

அது ஒரு பேருந்து நிறுத்தம். அங்கேதான் அந்த இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களுக்கு கொஞ்சம் தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு நோட்டம் விட்டான். ஒருத்தி வயதானவள். முந்தானையை தலைக்கு முக்காடு போல போட்டிருந்தாள். இன்னொருத்தி இளம்பெண். சுடிதார் அணிந்திருந்தாள்.

இவன் அவர்களுக்கு அருகில் போய் நிற்க அவர்களும் இவனையே பார்ப்பதாக உணர்ந்தான்.

‘நிச்சயமா அந்தமாதிரிதான் இருக்கணும்... ஐட்டம்வேற செம கட்டையா இருக்கே’ பாக்கெட்டை தடவிப்பார்த்தான். 500 ரூபாய்தான் இருந்தது. ‘ரேட்டு ஜாஸ்தி கேட்டா என்ன பண்றது..?’ ஏடிஎம் எதிரில் இருந்தது. பிரச்னையில்லை. இடம்? அவர்கள் பார்த்துக் கொள்வார்களாய் இருக்கும்.

அந்த வயதான பெண் சாலையை பார்ப்பதும் இவனை பார்ப்பதுமாக இருந்தாள். அந்த இளம்பெண் நல்ல அழகு. தொழிலுக்கு புதுசு போல. அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் காலியானது. அவர்களுக்கு கொஞ்சம் அருகில் போய் கையை உயர்த்தி சோம்பல் முறிப்பதுபோல ஆஆஆ வென பாடினான். அந்த வயதான பெண் அவன் அருகில் வந்தாள்.

‘‘தம்பி... தப்பா நினைக்காதீங்க... உங்க செல்போன் கிடைக்குமா? இவ மகனுக்கு ஃபிட்ஸ் வந்துருச்சுனு ஆம்புலன்ஸுக்கு போன்பண்ணிருந்தோம். இன்னும் வரல. எங்க போன்ல பேலன்ஸ் இல்ல. அதான் ஒரு போன் பண்ணிக்கலாம்னு? தப்பா நினைச்சிக்காதீங்க’’ என்றாள்.

சுந்தரேசனுக்கு வியர்த்துக்கொட்டியது. பதட்டமாக போனை எடுத்து நீட்டினான். போதையெல்லாம் ஒரு நொடியில் காலியாகியிருந்தது. அந்த இளம்பெண் அழுது அழுது கண்கள் வீங்க நின்றிருந்தாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வயதான அம்மா போன் செய்துகொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்து நின்றது. தன் செல்போனை வாங்கிக்கொண்டு அவசரமாக வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டு வாசலில் சேலைத் தலைப்பில் முக்காடு போட்டுக் கொண்டு  சுந்தரேசனின் மனைவியும், கன்னத்தில் கைவைத்தபடி ஐந்து வயது குட்டிப்பாப்பாவும் காத்திருந்தனர்.


(நன்றி தினகரன் , வசந்தமில் வெளியான ஒரு பக்க கதை)

28 October 2011

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வைவிஜய.டி.ராஜேந்தர் + கேப்டன் விஜயகாந்த் இருவருமாக கூட்டணி போட்டு ஒரு படம் நடித்தால் அந்தப்படம் தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகமே போற்றிக்காக்கும் பொக்கிஷமாக இருக்குமில்லையா?. அதே சந்தோசத்தை பேரானந்தத்தை விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் நமக்கு தருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

தங்கச்சி சென்டிமென்ட்டையும் பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் இணைத்து படமெடுக்க முன்வந்த இயக்குனர் ராஜாவுக்கு முதலில் பெரிய பூங்கொத்துடன் கூடிய பாராட்டுகள். தீபாவளி ரேஸில் அவர்படம்தான் பஸ்ட்டாம்!

என்னது விஜய்படத்துல பாகிஸ்தான் தீவிரவாதியா ‘ஙே’ என முழிக்க வேண்டாம். யெஸ் பாகிஸ்தான் டெரரிஸ்ட்ஸ்தான். அவர்களைதான் விஜய் பறந்து பறந்து பின்னாங்காலால் சுவற்றை மிதித்து சுழன்று உதைத்து பந்தாடுகிறார். திருப்பாச்சி படத்தில் தங்கச்சிக்காக எப்படி சென்னை ரவுடிகளை அழித்தொழிக்கிறாரோ அதேபோல இதில் தங்கச்சிக்காக தீவிரவாதிகளை அழிக்கிறார்.

யெஸ் தங்கச்சிக்காகத்தான்.. தோளிலும் மாரிலும் தூக்கி வளர்த்த அதே அன்பு தங்கச்சிக்காகதான்! ஆனால் என்ன ஒன்னு.. டீயார் போல தாடி கிடையாது.. நோ அழுவாச்சி!

தங்கச்சியை கொன்ற தீவிரவாதிகளை இளையதளபதி விஜயாக இருப்பதால், அவருடைய லெவலுக்கு குறைந்த பட்ஜெட்டில் சென்னையில் வைத்துதான் அடித்து உதைத்து கொன்று பழிதீர்க்க வேண்டியதாயிருக்கிறது.

இதுவே எங்க தல கேப்டனாக இருந்திருந்தால் பாகிஸ்தானுக்கே போயி ஒண்டிக்கட்டையாக ஒட்டுமொத்த தீவிரவாத சமூகத்தையுமே உதைத்ததழித்திருப்பார். சொல்லப்போனால் உலக மேப்பில் பாகிஸ்தான் என்கிற நாடே இல்லாமல் போயிருக்கும். அன்பார்சுனேட்லி அது நடக்கல! ஆங்! (வீ மிஸ் யூ கேப்டன் சார்)

கிளைமாக்ஸில் சிக்ஸ்பேக் மாதிரி எதையோ காட்டி நம்மையும் தீவிரவாதிகளையும் பழிவாங்குகிறார். விஜயின் அந்த மல்ட்டிப்பிள் சிக்ஸ்பேக்ஸை பார்த்து தியேட்டரில் குழந்தைகளே பயப்படும்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எம்மாத்திரம். இருண்ட ஆப்பிரிக்காவை நோக்கி அலறி ஓடுகிறார்கள்.

தங்கச்சிக்காக டேன்ஸ் ஆடி பாட்டுப்பாடி அழுதுசிரித்து நடித்திருந்தாலும் டீராஜேந்தர் அளவுக்கு அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார், குறைந்தபட்சம் லத்திகா புகழ் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனைகூட தாண்டமுடியவில்லை விஜயால்!. பார்க்கவே பாவமாக இருக்கிறது. அட பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமாவது வீராவேசமாக பேசுகிறாரா என்றால் அதுவும் இல்லை என்ன இருந்தாலும் கேப்டன் கேப்டன்தான்! டீஆர் டீஆர்தான். எத்தனை வேலாயுதம் வந்தாலும் மங்காத்தா வந்தாலும் அவர்களை விஞ்ச அவர்களால் மட்டுமே இயலும்.

அஜித் பில்லா பார்ட் 2 நடிக்கிறார் என்பதை அறிகிறோம். இதுகூட திருப்பாச்சி பார்ட்2 தான். படம் முழுக்க பாட்டாளி வர்க்க மக்களை காப்பாற்றியதுமில்லாமல் உலக வரலாற்றில் முதல் முறையாக இளையதளபதி விஜய் தயாரிப்பாளரையும் ஒரளவு காப்பாற்றியிருக்கிறார். வெற்றியில் சந்தானத்தின் வாய், ஹன்சிகாவின் தொப்புளுக்கும் நிறையவே பங்கிருக்கிறது.

மற்றபடி படத்தில் எனக்கு மிகவும் பிடித்தவசனம் ‘’நான் ஆளுங்கட்சியும் இல்ல எதிர்கட்சியும் இல்ல ஒரே கட்சிதான் அது என் தங்கட்சி!’’ (இந்த வசனத்தை டீயார் சொல்லியிருந்தால் தியேட்டரே விசில் சப்தத்தில் சின்னாபின்னமாகியிருக்கும்!).

படத்தில் விஜயின் காஸ்ட்யூமும் நடிப்பும் அந்தக்காலத்து ராமராஜனை நினைவூட்டியது என்று சொன்னால் அது மிகையல்ல! 2007க்கு பிறகு வெற்றியையே ருசித்திடாத விஜய்க்கு இஞ்சி பச்சடி தொட்டு நக்கடி என கிடைத்திருக்கும் டுமாங்கோலி ஹிட் வேலாயுதம்.


*******

இன்பிட்வீன் ஏழாம் அறிவு என்னும் மகாகாவியத்தையும் காண நேர்ந்தது. படத்தின் இயக்குனர் மாபெரும் புத்திசாலியாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கனவே விஜயகாந்தும் அர்ஜூனும் சேர்ந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அழித்துவிட்டதால் சைனாவிலிருந்து வில்லன்களை இறக்குமதி செய்திருக்கிறார். அதோடு தசாவதாரம் படத்திலிருந்து கிருமிகளையும் சில காட்சிகளையும் காப்பிபேஸ்ட் செய்திருக்கிறார். (தசாவதாரம் கிருமியே இங்கிலீஸ்லருந்து சுட்டது)

படத்தின் வில்லன் ‘டோங் லீ’ செகன்ட்ஷோ டெர்மினேட்டர்2 பார்த்திருப்பான் போல!

படம் முழுக்க சின்ன கண்ணால் முழித்து முழித்து பார்த்தபடி ஆடாமல் அசையாமல் முகத்தில் எந்த ரியாக்சனுமே இல்லாமல் நேர்கோட்டில் ஒரே அச்சில் ஹாரிஜான்டிலாகவும் இல்லாமல் வெர்ட்டிகலாகவும் இல்லாமல் 90டிகிரியில் நடக்கிறார். ஹிப்னாடிசம் பண்ணும் போது மட்டும் மண்டையை முப்பது டிகிரி கோணலாக திருப்புகிறார். டேய் போங்கிரி! நீ ரோபோ இல்ல மனுஷன்டா என யாரோ கமென்ட் அடிக்க.. தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.

படத்தின் முதல் அரைமணிநேரம் ஏதோ டாகுமென்ட்ரி போல ஓடுகிறது. படம் போடுவதற்கு முன்னால் அரசாங்கமே போடுகிற மொக்கை டாகுமென்ட்ரிகளுக்கு இணையான காட்சிகள் அது. அதை ரொம்ப சீரியஸாக படமெடுத்திருப்பதால் அதை சீரியஸாக பார்த்து தொலையுங்கள்.

ஆரிசு செயராசு என்னும் இசையமைப்பாளர் இந்தப்படத்துக்கு இசையமைத்துள்ளார். டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்னும் பாப்பா பாடலையே சீனா மொழியில் இசையமைத்துப் பாடினால் முட்டாள் மரமண்டை தமிழர்களுக்கு தெரியாது ஆகா ஓகோ என கைத்தட்டிவிடுவார்கள் என நினைத்துவிட்டார் போல!

டாக்ஸி டாக்ஸி பாட்டையே ஓரிங்கா ஓரிங்கா என பாடுகிறார்கள்.. ஆரிசு செயராசு அவர்களே.. எங்க நினைவாற்றல் மேலதான் உங்களுக்கு எவ்ளோ நம்பிக்கை.

போதிதர்மருக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறேன் பேர்வழி என பேதிக்கு மருந்துக்கொடுக்கும் பேதிதர்மராக அவரை சிவராஜ் சித்தமருத்துவர் ரேஞ்சுக்கு சித்தரித்திருப்பது காமெடி கும்மி! அவருக்கு எக்ஸ்மேன் திரைப்படத்தில் வருகிற மேக்னீட்டோ,புரொபஸர் எக்ஸ்,வோல்வரீன்,டாக்டர் ஜீன்க்ரே என கிட்டத்தட்ட எல்லாவித முயூட்டன்ட்களுக்கும் இருக்கிற சூப்பர் பவர்களும் இருக்கிறது! நல்ல வேளை அவருக்கு பேண்ட்மாட்டி அதற்குமேல் ஜட்டிமாட்டி குட்டி சூப்பர்மேன் ஆக்காமல் விட்டதற்காக முருகதாஸுக்கு பூங்கொத்து!

பாவம் போதி தருமர் உயிரோட இல்லை.. இந்தப்படத்தை பார்த்திருந்தால் தன்கையிலிருக்கும் நீண்ட கட்டையால முருகதாஸ் மண்டைலயே நாலு சாத்து சாத்தியிருப்பார்.

படம் முழுக்க தமிழர்கள் பெருமையை பேசுகிற சுருதிகமலுக்கு கொஞ்சமாச்சும் தமிழ் கத்துகுடுத்திருக்கலாம். பயபுள்ள பாவம் ரொம்ப்ப்ப்வே டமிலர்கள்க்கு பெர்மை சேர்க்க போர்ராட்து.த்து... .முடியல!

படத்தோட கதைக்கும் பெரிசா சிரமப்படாம அசாசின் க்ரீடுன்ற வீடியோகேம் கதையவே சுட்டு கொஞ்சம் டிங்கரிங் செய்து திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. உலக சினிமாக்களை காப்பியடித்தால் கண்டுபிடித்துவிடும் இணைய விமர்சகர்களுக்கு சரியான சவுக்கடி. வீடியோகேம் விளையாடுகிறவர்கள் எண்ணிக்கை சொற்பம்தான். வீடியோகேமிலிருந்து கதையை உருவி சரியாக பயன்படுத்திய இயக்குனரின் ராஜதந்திரத்துக்கும் பாராட்டுகள்!

‘’காசுக்கு புடிச்ச கேடு இந்த தண்ட கருமாந்திரத்தையெல்லாம் பாத்து தொலைக்க வேண்டியிருக்கிறது’’ என எனக்குள்ளும் தூங்கிக்கொண்டிருந்த பீதி தருமரை தட்டி எழுப்பிய பெருமைக்காக முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!


********

இன்னும் ரா-ஒன் பார்க்கவில்லை. ஆனால் ரஜினி வருகிற காட்சிமட்டும் யூடியுபில் கிடைக்கிறது. ரஜினியை பார்க்க கோமாளி போல மொக்கையாக இருக்கிறார். கேவலமான ஹேர்ஸ்டைல், மொக்கையான மேக்கப் என ஷாருக்கான் ரஜினியை ரொம்பவே அசிங்கப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள் ஷாருக்!

நோட் திஸ் பாய்ன்ட் ரஜினியின் கொலைவெறி படை – நீங்கள் எந்திரனையே இன்னொரு முறை பார்ப்பது கிட்னிக்கு நல்லது.

நானொன்னும் பொய் சொல்லீங் நீங்களே பாத்துக்கோங்க!

18 October 2011

எங்கிட்டே மோதாதே!


முதலில் சில சம்பவங்கள்...

அக்டோபர் 7 : மூணாறு நகர்ப் பகுதியிலும் எஸ்டேட் பகுதியிலும் நுழைந்த காட்டு யானை ஒன்று தாக்கியதில் ஜான்சன் என்பவர் கொல்லப்பட்டார். இதே யானை தாக்கி ஏற்கெனவே 7 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அக்டோபர் 3 : வால்பாறை அருகே தேயிலைத் தோட்டப் பகுதியில் 21 காட்டு யானைகள் புகுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் நடமாட அஞ்சினர்.

ஆகஸ்ட் 10 : கோவை வாழையாறு பகுதி காப்புக் காட்டில் வனக்காவலரான நடேசன், பணியிலிருந்தபோது, காட்டு யானைகள் மிதித்துப் பலியானார்.

ஜூலை 29 : திண்டுக்கல் மாவட்டம் தேக்கம் தோட்டம் பகுதியில் 10 யானைகள் இரவில் நுழைந்து அங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்டன. ஓடுகளை உடைத்தும் வெளியில் நின்றிருந்த கட்டில், மொபெட் ஆகியவற்றையும் தூக்கி வீசின. விடியும் வரை கலாட்டா செய்த அவை விடிகாலையில்தான் கிளம்பின.

ஜூலை 7 : நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரை அடுத்துள்ள கிராமங்களில் காட்டு யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தின. அவற்றுக்குப் பயந்து கொண்டு மக்கள் தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கினர்.

ஜூலை 3 : ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள சில கிராமங்களில் புகுந்த யானைகள் சுமார் 15 நாட்கள் அங்கேயே ‘கேம்ப்’ போட்டு தோட்டங்களில் புகுந்து வாழை, தென்னை, மாக்காச் சோளம் போன்றவற்றைத் தின்று சேதம் விளைவித்தன.

-முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காட்டு யானைகள் மலையோர கிராமங்களுக்குள் நுழைவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது என்ன காரணம்? யார் மீது தவறு? அதைத் புரிந்து கொள்வதற்கு முன் யானைகளைப் பற்றிய சில அடிப்படையான தகவல்களைத் தெரிந்துகொள்வது உதவும் .

சாப்பாடு 300கிலோ

மேற்குத்தொடர்ச்சி மலை, இது யானைகளின் சொர்க்கம். எங்கு பார்த்தாலும் அடர்ந்த காடுகள். இங்கே 6700க்கும் மேற்ப்பட்ட யானைகள் வசிப்பதாக 2005ஆம் ஆண்டு வனத்துறையின் ஆய்வுகள் சொல்கின்றன. அதிலும் நீலகிரி மாவட்டம், ஈரோடு, அந்தியூர், ஆனைமலை, மேட்டுப்பாளையம், முதுமலை, ஆனைகட்டி, சிறுவாணி உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மிக மிக அதிகம். யானைகள் மற்ற எந்த விலங்குகளை போலவும் இல்லாமல் எப்போதும் அலைந்து கொண்டே இருப்பவை. சரியான ‘காடோடி’கள். அதற்குக் காரணம் அவற்றின் உணவுப் பழக்கம்.

ஒருநாளுக்கு 100 முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணுகின்றன இந்த யானைகள். அதோடு 100 முதல் 150 லிட்டர் அளவில் தண்ணீர் குடிக்கின்றன. வறட்சிக் காலங்களில் உணவு தேடி பல நூறு கிலோ மீட்டர்கள் பயணிக்கும். ஒரே ஒரு யானைக்கே இவ்வளவு உணவும் நீரும் தேவையென்றால் குடும்பமாகவே (5லிருந்து 15யானைகள்) வாழக்கூடிய இந்த உயிரினத்திற்கு எவ்வளவு உணவும் தண்ணீரும் தேவைப்படும்! அதனால் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியை முகாமிட்டு அங்கிருக்கிற தாவரங்களை மொத்தமாக உண்டு காலிசெய்த பின்தான் அங்கிருந்து நகரும்.அடுத்து? அடுத்த காடு... அங்கே மொத்தமாக சாப்பிடுவதும்... மீண்டும் அடுத்த காடு... இப்படி ஒரு சுற்று முடித்து, பழைய காட்டிற்கு வந்தால் அங்கே தேவையான தாவரங்கள் மீண்டும் வளர்ந்துவிடும்! இயற்கையாக நடைபெறும் சுழற்சி இது.

காடுவிட்டு காடு தாவும் இந்த யானைகள் தங்களுக்கென்று ஒரு தனிப் பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் மட்டுமே பயணிக்கும் குணம் கொண்டவை. இதை யானைகளின் வழித்தடம் (ELEPHANT CORRIDORS) என்று அழைக்கிறார்கள். ஆறாயிரம் யானைகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் அவை பயன்படுத்துகிற வழித்தடங்கள் 19தான்! அதில் நான்கு பாதைகள் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்கின்றன.
இத்தனை ஆண்டுகளும் இப்படித்தான் யானைகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்!

தங்களுடைய பாதையிலிருந்து விலகி, அவை காடுகளுக்கு அருகாமையிலுள்ள கிராமங்களுக்குச் செல்கின்றன. வீடுகளைத் தாக்குகின்றன. வாழைத்தோட்டங்கள், கரும்புத்தோட்டங்களில் புகுந்து தின்று தீர்க்கின்றன. இதுகுறித்து மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகள் உலவும் பகுதிகளில் சில முக்கியமான பகுதிகளில் ஆய்வு செய்தோம். யானைகள் ஊருக்குள் நுழைவதற்கான காரணங்கள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகின்றன. சில காரணங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.

வால்பாறை


வால்பாறை பகுதி நான்கு பக்கமும் மலைக்காடுகள் சூழ்ந்த பகுதி. ஒருபக்கம் ஆனைமலை புலிகள் சரணாலய காடுகள். இன்னொரு பக்கம் இரவிக்குளம் தேசிய பூங்கா. வால்பாறையின் மேலே பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம், வளச்சல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என நான்கு பக்கமும் காடுகள் சூழ நடுவில் அமைந்திருக்கிறது. இந்த நான்கு காடுகளும் யானைகளின் முக்கிய வாழ்விடங்களாகவும் அவற்றிற்கு தேவையான உணவினை வழங்குபவையாகவும் உள்ளன.

காட்டுயானைகள் இந்தக் காடுகளில் இருந்து மற்ற காட்டிற்குள் செல்வதாக இருந்தால் வால்பாறையின் பிரதான தேயிலைத் தோட்டங்களை கடந்தே செல்ல வேண்டியதாயிருக்கிறது. இதை மனதில் வைத்து 1920களில் வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்களை உருவாக்கும் போதே பிரிட்டிஷ் அரசு ’துண்டுச் சோலைகள்’ எனப்படும் வனப்பகுதிகளை வால்பாறையில் அமைத்தது. துண்டுச் சோலைகள் என்பது தேயிலை தோட்டங்களுக்கு நடுவே பெரிய அளவிலான வனப்பகுதிகளை வனவிலங்குகளுக்காக விட்டுவைப்பது. இதன் மூலம் யானைகள் மட்டுமல்லாது இன்னபிற விலங்குகளும் தன் பாதையிலிருந்து விலகாமல் இந்தத் துண்டுச் சோலைகளின் வழியாக ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு இடையூறின்றிப் பயணிக்கும.

இன்றோ இந்த துண்டுச் சோலைகள் அழிந்து அல்லது அழிக்கப்பட்டு துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சி நிற்கின்றன. என்னதான் மனிதர்கள் வனத்தினை அழித்திருந்தாலும் யானைகள் இப்போதும் அந்தத் துண்டாகிப் போன சோலைகளை பயன்படுத்தியே நகர்கின்றன. அதுவும் மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரங்களில் மட்டுமே. எப்போதாவது பகலில் எஸ்டேட்கள் வழியாக போகும்போதுதான் பிரச்சினையே. இதை காணுகிற மக்கள் கோபம் கொண்டு வெடிவைப்பதும், தாரை தப்பட்டைகள் கொண்டு ஒலி எழுப்பி விரட்டுவதும் தொடர்கிறது. மக்களின் இந்த விநோதப் போக்கினால் எரிச்சலடையும் யானைகள்தான் வன்முறையில் இறங்குகின்றன.

“இங்கே. காட்டு யானைகளைவிட பழக்கப்படுத்தப்பட்ட வளர்ப்பு யானைகள்தான் அதிகம் வளர்க்க முடியாமலும் முதுமையிலும் அவற்றை காட்டில் விட்டுவிடுவதான் பிரச்சினை., வீட்டு உணவை உண்டு வளர்ந்த இவை எஸ்டேட்டுகளுக்குள் புகுந்து அருகாமை வீடுகளையும், சத்துணவு கூடங்களையும் தாக்குகின்றன. தாக்குதல் நடத்துகிற யானைகளில் பலதும் வீட்டின் சமையலறையை குறி வைப்பதை உணரலாம், இதற்கு ஒரே வழி இந்த வளர்ப்பு யானைகளை முகாம்களில் வைத்து பரமாரிப்பதே’’ என்கிறார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வால்பாறையின் தனியார் எஸ்டேட் ஒன்றில் பணிபுரியும் டேவிட்.

மேட்டுப்பாளையம்

வாழைத் தோப்புகளும் தென்னந்தோப்புகளும் அடர்ந்து கிடக்கின்றன மேட்டுப்பாளையத்தில். இங்கு சிறுமுகை தொடங்கி சத்தியமங்கலம் வரை யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள். இந்தக் காடுகளுக்கு நடுவேதான் பல நூறு கிராமங்கள் உள்ளன. இங்கே விவசாயமும் நடைபெற்று வருகின்றன. இதுபோக இந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்த பெருவாரியான மரங்கள் வெட்டப்பட்டு இன்று வெறும் ஃபயர் வுட் எனப்படும் விறகுக்கான முட்செடிவகை மரங்களே நிறைந்துள்ளன. இந்த மரங்களை அடுப்பெரிக்க மனிதர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வெகு தொலைவிலிருந்து பயணித்து வரும் யானைகள் பசியாற இவை ஒரு சதவீதம் கூட உதவாது. பசியோடும் தாகத்தோடும் வருகிற காட்டு யானைகள் காட்டில் உணவு கிடைக்காததால் அருகில் உள்ள வாழைத்தோப்புகளைக் குறிவைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கு இயற்கை விரும்பிகளிடமிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்தப் பள்ளி யானைகளின் வழித்தடத்தினில் இருப்பதால் பிரச்சினை உண்டாகும் எனப் போராடியும் அப்பள்ளி கட்டப்பட்டது. ஆனால் இன்று, யானைகளின் வழித்தடத்தில் பள்ளி இருப்பதால் அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயணித்து அடுத்த காட்டை அடைய வேண்டியதாயிருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்

இதுதவிர மேட்டுப்பாளையத்திலிருந்து சத்தி செல்லும் சாலை முழுக்க வனப்பகுதிக்கு மிக அருகிலேயே ரியல் எஸ்டேட் தொழிலும் கொடிக்கட்டி பறப்பதை காண முடிந்தது.

சிறுவாணி

சிறுவாணி ஆற்றையொட்டியுள்ள மலைக்கிராமங்கள் பலவும் இந்த யானைத் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றன. இங்கே யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மோட்டார்களையும் மின்இணைப்புகளையும் உடைத்து நொறுக்கிவிடுகின்றன. என்ன காரணம் என உள்ளூர் வாசிகளிடம் விசாரித்தால், அண்மைக்கால ஆக்கிரமிப்புகளே காரணம் என்கின்றனர். மேலும் கல்லூரிகள், ஆசிரமங்கள், கோவில்கள், சுற்றுலாப் பயணிகள் என யானைகள் தங்கள் பாதைகளை தொடர்ந்து மாற்றிக் கொள்வதற்கான காரணங்கள் நீளுகின்றன. அதுவும் அண்மைக்காலங்களில் அங்கே உருவாகி வரும் புதிய கட்டிடங்களும் அதற்காக போடப்படும் மின்வேலிகளும் யானைகளின் திசையை மாற்றிவிடுவதால், அவை வயலுக்குள் புகுந்துவிட காரணமாக உள்ளன என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

மேட்டுப்பாளையம் பகுதியைப்போலவே இங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் கொடிக்கட்டி பறக்கிறது. காட்டுப்பகுதிக்கு மிக அருகில் வீட்டுமனைகள் விற்பனை கன ஜோராக நடக்கிறது.

நீலகிரி மாவட்ட கிராமங்கள்

நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர், மசினகுடி, சீகூர், சிங்காரா, கோத்தகிரி, கூடலூர், முதுமலை, கோரக்குந்தா, மோயார் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம். அதிலும் மசினகுடியை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுயானைகளை எங்கும் காணலாம். அப்பகுதியைச் சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதியும் புல்வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காட்டுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பசுக்களும், ஆடுகளும், எருமைகளும் எந்நேரமும் மேய்ந்து கொண்டே இருக்கின்றன. இது வனப்பகுதியிலிருக்கிற புற்களின் அளவினை குறைத்து விடுவதால் அந்தக் காட்டில் வாழும் மான்கள், காட்டெருமைகளோடு புற்களுக்காக யானைகளும் போட்டி போட வேண்டியதாய் இருப்பதாக வனத்துறையினர் கவலைப்படுகின்றனர். அதிக உணவுத் தேவை கொண்ட யானைகள் இதை சமாளிக்க விவசாய பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன என்கின்றனர்.

தோலாம்பாளையம் மற்றும் ஆனைகட்டி

தோலாம்பாளையம் முழுக்க நிறைய வாழைத்தோப்புகளும் கரும்புத்தோட்டங்களையும் பார்க்க முடிந்தது. தோட்டத்தினை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளனர். இதனால், மின்வேலிகளில் சிக்கி யானைகளும் வேறு விலங்குகளும் இறந்து போவதும் உண்டு. இங்கே யானைகள் வர காரணமாக சொல்லப்படுவது யானைக்கு வாழையும், கரும்பும் மிகப்பிடிக்கும். தன் பாதையில் அவை இலவசமாக கிடைத்தால் அது உண்ணத்தான் செய்யும். இது தனியார் தோட்டம் இதை உண்ணக்கூடாது என்று யானைக்கு தெரியுமா எனச் சிரிக்கிறார் ஆனைகட்டி அருகே தோட்டம் வைத்திருக்கும் ராமர்.

இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு காரணங்கள். இவை தவிர மேலும் சில காரணங்களும் உண்டு! காடுகளில் இயற்கையாய் உண்டாகாமல் மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் உண்டாகும் காட்டுத்தீ. காட்டில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விட்டு செல்லுகிற நெருப்பு மிச்சங்களும், தீக்குச்சிகளும், அணைக்காமல் வீசப்படுகிற சிகரெட் துண்டுகளும் பல ஹெக்டேர் அளவு காட்டினை அழித்து யானைகள் மட்டுமல்லாது சிறிய உயிர்களின் வாழ்விடங்களை நாசம் செய்தும் விடுகின்றன.

மனிதர்களைபோலவே விலங்குகளுக்கும் உப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. யானைகளும் உப்புச்சுவைக்கு விதிவிலக்கல்ல.. காட்டில் இயற்கையிலேயே உப்பு மண்ணிலிருந்து கிடைத்து வந்தாலும், பருவநிலை மாற்றங்களால் அது குறைந்து போகிறது.. உப்புக்காகவும் யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாததாய் உள்ளது. அதற்கு நல்ல உதாரணம் வால்பாறை பகுதிகளில் வீடுகளை தாக்கும் யானைகள் முதலில் உண்பது உப்பைதான்!

இதுதவிர யானைகள் குறித்த போதிய அறிவின்றி, அவற்றை துன்புறுத்தி துரத்துவதும் தொடர்கிறது. கற்களால் அடிப்பது. தீப்பந்தங்களை வீசுவது, யானையின் மீதே வெடிகளை வீசுவது எனப் பல டார்ச்சர்கள்.. குட்டிகளோடு வரும் யானைகளை விரட்டுகிறேன் பேர்வழியென அவற்றை கோபப்படுத்துகின்றனர். இதனால், தன் குட்டிகளைப் பாதுகாக்க வேறுவழியின்றி அவை வன்முறையில் ஈடுபடுகின்றன.

“பெரிய நிறுவனங்கள் காடுகளில் தங்கள் கல்லூரிகளைக் கட்டுவது, சிலர் ஆசிரமங்களை நிர்மாணிப்பது, ரிசார்ட்கள் அமைப்பது, வீடுகள் கட்டுவது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள அரியவகை மரங்களை வெட்டுவது முதலான நடவடிக்கைகளை தவிர்த்தாலே யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்க முடியும்” என்கிறார் வனக் காவலர் ஒருவர்.

மசினகுடியிலேயே பிறந்து தினமும் காட்டு யானைகளை பார்த்து வளர்ந்த கணேஷின் கருத்து முக்கியமானதாக இருக்கிறது “எந்தக் காட்டு யானையும் நம் வீட்டிற்கோ நம் நிலத்திற்கோ வருவதில்லை. நாம்தான் யானைகளின் காட்டில், அதனுடைய இருப்பிடத்தில் வசிக்கிறோம், விவசாயம் செய்து சம்பாதிக்கிறோம், சுற்றுலா போகிறோம், வனப்பகுதியை அழிக்கிறோம். இதனை மனிதர்கள் உணரவேண்டும்! காட்டுயானைகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் வாழ்ந்தாலே போதும்.. இந்த பிரச்சினையே இருக்காது.’’ என்கிறார்.
இதனிடையே, யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் தொழில்நுட்பத்தையும் வனத்துறையினர் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளனர். இதன் முதல்கட்டமாக, பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்காணிக்க அவற்றிற்கு ரேடியோ காலர் கருவி பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தீர்வு என்ன?

முகம்மது அலி – யானைகள் குறித்த ஆராய்ச்சியாளர்
“ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வனவிலங்குகள் மட்டுமே வாழத் தேவையான உணவும் நீரும் கிடைக்கும். ஆனால், இன்றோ வனப்பகுதிகளின் அளவு பெருமளவில் குறைந்து, விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது உணவு மற்றும் நீருக்கான தட்டுப்பாட்டினை உருவாக்கியுள்ளது. இதனை தடுக்க இனிமேல் வனப்பகுதிகளில் புதிய கட்டிடங்கள் அமைவதையும் குடியிருப்புகள் உண்டாவதையும் தடுக்க வேண்டும். ரிசர்வ் காடுகளில் உள்ள மக்களையும் பெரிய நிறுவனங்களையும் வேறு இடங்களில் குடியமர்த்தி, அந்த பகுதிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மீண்டும் காடுகளாக மாற்றலாம். இது வனவிலங்குகளுக்கான வாழ்விடத்தின் பரப்பினை அதிகரிக்கும். இது யானைகளும் மற்ற காட்டுவிலங்குகளும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதை பெருமளவில் தடுக்கும் என்பது நிச்சயம்”

லதானந்த் – விருதுபெற்ற வனத்துறை அலுவலர்.

“1992லிருந்து இந்தியா முழுக்க இருக்கிற காட்டுயானைகளின் பாதுகாப்புக்காக ‘பிராஜக்ட் எலிபென்ட்’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் யானைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. காட்டுத்தீயை அணைப்பதற்காக தொடர்ந்து கண்காணிப்பு, அதுகுறித்த தகவல் தருபவர்களுக்கு பரிசு என புதிய முறைகளை கையாண்டு அதனை தடுத்து வருகிறோம். காட்டுக்குள் குடிநீர் ஆதாரங்களை பெருக்குதல், மூட்டை மூட்டையாக உப்பு கொட்டி வைத்தல், யானைகளின் வழித்தடங்கள் குறித்த விழிப்புணர்வை மலைக்கிராம விவசாயிகளிடம் ஏற்படுத்துதல், முக்கியமாக வேட்டையாடுபவர்களையும் வனத்தினை பாழாக்குகிறவர்களையும் தடுத்தல் என தொடர்ந்து வனத்துறை செயல்பட்டுவருகிறது. இவைதவிர காட்டுயானைகளை பிடித்து அதன் கழுத்தில் டிரான்ஸ்மிட்டர்களை இணைத்து காட்டுக்குள் விடுவதன் மூலமாக செயற்கைக்கோள் உதவியுடன் அதன் வழித்தடங்களையும் கண்டறிகிறோம். இது நல்ல பலனையும் அளித்தே வருகிறது.”

ஆனந்த் – நேச்சர் கன்சர்வேஷன் பவுன்டேஷன் – யானைகள் ஆராய்ச்சியாளர்

“வால்பாறைப்பகுதியில் 220 சதுர கி.மீட்டர் அளவுக்கு தேயிலை தோட்டங்கள்தான். பிரிட்டிஷ் காலத்தில் இங்கே 30 சதவிகிதம் துண்டுசோலைகள் இருந்தன. இன்று அது வெகுவாக குறைந்துள்ளது. வனத்துறையும் எஸ்டேட் உரிமையாளர்களும் இணைந்து வால்பாறைக்கு நடுவே பாய்கிற நடுவார் சோலயார் ஆற்றின் இரண்டு பக்கமும் பத்து அல்லது இருபது மீட்டர் அளவுக்கு காடுகளை உருவாக்கினால் கூட போதுமானது. அதற்காக, வனத்துறையும் எஸ்டேட் உரிமையாளர்களும் இணைந்து செயல்பட வேண்டியதாயிருக்கும். தற்போது எங்களுடைய அமைப்பின் மூலமாக யானைகள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம். அதோடு எஸ்எம்எஸ் மூலமாகவும் யானைகள் இருக்கிற பகுதிகளை மக்களிடம் சொல்வதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்த்தும் வருகிறோம்”

காளிதாஸ் – ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு

“விவசாயிகளுடைய அறியாமையே பல நேரங்களில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான பிரச்சினைகளில் முடிகின்றன. அதனால், யானைகள் குறித்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்து அறிவியல் பூர்வமாக அவர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதுதவிர வாழை, கரும்பு தவிர்த்து மாற்றுப் பயிர்களை பயிரிடவும் அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். யானைகள் விவசாயநிலத்தினும் புகுந்துவிட்டால் அவற்றை சமாளிக்கவும் அவர்களை தயார்செய்ய வேண்டும்”ஆதார உயிரினம் யானை (KEY STONE SPECIES)

யானையை வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் ஆதார உயிரினம் என்று அழைக்கின்றனர். தான் வாழுகிற இடத்தினை எந்த ஒரு விலங்கு மாற்றியமைக்கிறதோ அதை அப்படி அழைப்பது வழக்கம். அதாவது அவை மரங்களை உடைத்துப்போட்டும், புதர்களை மிதித்து அழித்தும், பிடுங்கியும் குறிப்பிட்ட சில வனப்பகுதிகளை புல்வெளிகளாக மாற்றுகின்றன. இதனால், பல உயிரினங்களுக்கு உணவோடு வாழ ஏற்ற இடம் உருவாகிறது. இறந்த யானையை அழிந்துவரும் பறவையினமான பிணந்தின்னிக் கழுகுகள், நரி, கழுதைப்புலி, செந்தாய், பூச்சிகள், நுண்ணியிரிகள் உண்கின்றன. இது பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. யானையின் சாணத்தில் ஜீரணிக்கப்படாத உணவு துணுக்குள், விதைகள் அணில், வௌவால், வண்டு, பூச்சிகள் என பல விலங்குகளுக்கும் உணவாகிறது. வறட்சிகாலத்தில் யானைகள் நதிக்கரையோரம் தோண்டுகிற ஊற்றுக்குழிகள் மற்ற விலங்குகளின் தாகத்தை தணிக்கிறது.

போலீஸ் யானை!

முதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி! யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை.

ஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை கும்கியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதாவது, கிராமங்களில் நுழைந்துவிட்ட யானைகளைக் திரும்பவும் விரட்டி காட்டுக்குள் அனுப்பி வைக்கும் டியூட்டி. நம்மூரு போலீஸ் மாதிரி. இந்ததப் போலீஸ் யானைகளுக்குத்தான் கும்கி என்று பெயர். முதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத் தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும். டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான்.

மாவுத்துகள் ‘குக்கா புக்கா’ என்று ஏதோ ஒரு விநோத மொழியில் யானைகளோடு எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கின்றனர். அந்த மொழி குறித்து ஆர்வத்துடன் கேட்டோம்.

“இதுங்களா, உருது, மலையாளம், தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க இது. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக் குடுக்கறோம்’’ என்கின்றனர். யானை தன் பாகன் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்!

“இங்கே இருக்கிற ஒவ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல. அதனால் இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்... பேர் சொல்லிதான் அழைப்போம். உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது!’’ என அடித்துச்சொல்கிறார் வன அலுவலர் மூர்த்தி!
(நன்றி புதியதலைமுறை)

15 October 2011

டிவைன் லவ்வர்ஸ்குருமாவுக்கு உருளைக்கிழங்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல பிட்டுப்படங்களுக்கும் பிட்டு முக்கியம். கில்மா படங்களை திரையிடும் தியேட்டர் ஓனர்களை கோயில்கட்டித்தான் கும்பிடணும். படத்தில் பிட்டிருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் பிட்டில்லாத படங்களை பார்க்கிற வெறிகொண்ட ரசிகர்கள் சீட்டை கிழித்து கதவை உடைத்து ஸ்கீரினையும் நாசமாக்குவதை காணலாம். ஆனாலும் தொடர்ந்து திரையிடும் இந்த தியேட்டர் அதிபர்களின் தைரியம் பாராட்டப்படவேண்டியது. நாமாவது பாராட்டுவோம்.

அப்படி அண்மையில் சென்னை விஜயா தியேட்டரில் பார்த்த ஒரு கில்மா படம் பல நினைவுகளை தட்டி எழுப்பியது. அந்தப்படத்தில் பிட்டும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை. கோபங்கொண்ட ரசிகர்கள் சீட்டை பிராண்டி பிராண்டி அந்த்தியேட்டரின் எந்தசேரிலும் பஞ்சே இல்லை. இதுதான் இன்றைய பிட்டுப்படங்களின் நிலை.

பிட்டுப்படங்களிலும் சில கிளாசிக்குகள் உண்டு. அலெக்ஸான்ட்ரா,பாடி ஆஃப் எவிடன்ஸ்,புளூ லகூன்,ப்ளே கேர்ள்ஸ்(ஷகிலா நடித்த முதல் படம்),ச்சிராக்கோ மாதிரியான படங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள் அவை. ஒவ்வொரு முறையும் புத்தணர்ச்சியும் புது எழுச்சியும் நிச்சயம். இந்த கிளாசிக்குகளை வரிசைப்படுத்தினால் அதில் முதலிடம் டிவைன் லவ்வர்ஸுக்குத்தான். பதினான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் எழுச்சிக்கு காரணமாக அமைந்த முக்கியமான படம்.

கோவை அப்சரா தியேட்டரில் ரிலீஸாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த பிரமாண்டமான சூப்பர் ஹிட் பிட்டுப்படம் அது. கோவை வாசிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் யாருமே அந்த வராது வந்த மாமணியை மறந்துவிடமுடியாது. ஒன்னுரெண்டு பிட்டுக்கே வீங்கித்தவித்த தமிழ்சமூகத்திற்கு ஏகப்பட்ட பிட்டுகளை வாரி வழங்கி விருந்தளித்து தட்டி எழுப்பிய காவியம் டிவைன் லவ்வர்ஸ்.

படம் வெளியான சமயத்தில் மாலைமலரில் விமர்சனம் ஒன்று வெளியாகியிருந்தது. அதில் படத்தில் எந்தெந்த இடத்தில் அருமையான பிட்டுகள் இடம்பெறுகின்றன. எதையெல்லாம் ரசிகர்கள் மிஸ் பண்ணிவிடக்கூடாது என்பதையெல்லாம் பிட்டு பிட்டு வைத்திருந்தனர். அதிலும் அந்த குளியலறை காட்சியும், குகை பிட்டு குறித்தும் எழுதியிருந்ததை தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கிவைக்கலாம். அது தொடர்பான சில ஜாலியான புகைப்படங்களும் கூட வெளியாகியிருந்தது. அப்போது எனக்கு அறியாத வயசு. இப்போதும்தான். ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். அந்த விமர்சனத்தை பார்த்ததுமே இந்தப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என நெஞ்சு துடித்தது. நண்பர்களோடு பேசி காசு சேர்த்து ஒரு நல்லநாளில் அப்சரா தியேட்டரை நோக்கி படையெடுக்க முடிவெடுத்தோம்.

அப்சரா தியேட்டருக்கென்று சில தனிச்சிறப்புகள் உண்டு. காந்திபுரம் மஃப்சல் பேருந்து நிலையத்தின் வாசலிலேயே தியேட்டர் அமைந்திருக்கும். ஹிந்தி படங்களுக்கும் அதிரடி ஆக்சன் மற்றும் அற்புதமான பிட்டுப்படங்களுக்கும் பேர் போனது. நுழைவாயிலில் எந்தப்படம் ஓடினாலும் அந்தப்படத்தின் பெரிய ஓவிய பேனர் வைக்கப்பட்டிருக்கும். பஸ்ஸில் அந்தவழியாக போகிறவர்களெல்லாம் அதை ஒரு நிமிடம் நின்று ரசித்துச்செல்வதை பார்க்கலாம். அப்படி ஒரு அற்புதமான ஓவியம் ‘’டிவைன் லவ்வர்ஸ்’’ படத்திற்கும் வைக்கப்பட்டிருந்தது. சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அரைநிர்வாண அழகியும் (உடல் முழுக்க வெறும் நகைகள்தான்!) தாடிவைத்த கொடூரமான சிற்பியும் என என்றைக்குமே மறக்காத கிளாசிக் ஓவியம் அது. (அதை வரைந்தவர் அண்மையில் தன் திரைச்சீலை புத்தகத்திற்காக தேசியவிருது பெற்ற எழுத்தாளர் ஓவியர் ஜீவா)

எங்கள் நண்பர்கள் குழு தியேட்டரில் நுழைந்து டிக்கட் எடுக்க முயலும்போதே சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டோம். பொடனியில் அடித்து ‘’ஏன்டா இத்துணூன்டுருந்துட்டு இந்தப்படம் கேக்குதா எந்த ஸ்கூல்டா நீங்க, ஓடுங்கடா’’ என எங்களை மிரட்டினர். அப்பாவிகளான நாங்களோ ‘’யாருங்க நீங்க என்ன வேணும் உங்களுக்கு’’ என எகிற.. செம அடி! அநியாயம்! இதுமாதிரி சமூக விரோதிகளைதான் தியேட்டரில் ஊழியர்களாக வைத்திருக்கிறார் அப்சரா தியேட்டர் அதிபர். எங்களை உள்ளே விட மறுத்துவிட.. வாடிய நெஞ்சோடு வீடு திரும்பினோம்.

ஆனாலும் நான் மட்டும் விடாப்பிடியாக இப்படத்தை பார்த்தே தீருவேன் என சபதம் பூண்டேன். அடுத்த வாரமே மீண்டும் தியேட்டருக்கு செல்ல மீண்டும் சட்டையோடு தூக்கி வெளியே போடப்பட்டேன். பரவாயில்லை. மீண்டும் முயலுவோம் என ஒன்பது முறை தியேட்டருக்கு சென்றும் இறுதி வரை அப்படத்தை பார்க்கிற பாக்கியம் கிடைக்கவேயில்லை.
அதற்குள் படம் நூறு நாட்களை கடந்துவிட்டது. படம் வேறு இடங்களில் ரிலீஸாகும்போது அந்த தியேட்டர்களெல்லாம் என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு அருகில் அமைந்தது இன்னொரு கொடுமை. இப்படியாக டிவைன்லவ்வர்ஸின் முதல் ரீலிஸில் பார்க்க இயலாவிட்டாலும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நரசிம்மநாயக்கன் பாளையம் பத்மாலாயா தியேட்டரில்தான் அந்தப்படத்தை பார்க்கும் பாக்கியம் கிட்டியது.

பொதுவாக தமிழில் வெளியான பூர்வஜென்ம படங்கள் ஓடியதாக நினைவில்லை. டிவைன் லவ்வர்ஸும் பூர்வஜென்ம கதைதான். போன ஜென்மத்தில் சேர முடியாத காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருகிறார்கள். வில்லன் தடுக்கிறார் என்கிற கதைதான். ஆனால் சில பல அருமையான பிட்டுகளை தூவிவிட்டு கமகமக்க கொடுத்திருந்தார் படத்தின் இயக்குனர். படம் பார்க்கிற அனைவருக்குமே முழுமையான திருப்தி! எனக்கும்தான். அதற்கு பிறகு சாயிபாபாகாலனியில் இருக்கிற தியேட்டர் ஒன்றில்(பெயர் மறந்துவிட்டது) நாஸ்தியேட்டரில், இருதயாவில், ஜிபியில், டிலைட்டில் என எண்ணிலடங்காத முறைகள் அந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை ரிலீஸ் செய்தாலும் ஹிட்டான ஒரே பிட்டுப்படம் டிவைன் லவ்வர்ஸாகத்தான் இருக்க வேண்டும்.

இந்தப்படத்தின் இயக்குனர் சுபாஷ் இதன் வெற்றியால் உற்சாகமாகி அதற்குபின் டிஸ்கோடான்சர், அட்வென்சர்ஸ் ஆஃப் டார்ஜான் என நிறைய அஜால்குஜால் படங்களை களமிறக்கினாலும் இன்றுவரை அவர்பெயர் சொல்லும் படமாக டிவைன்லவ்வர்ஸ் மட்டுமே திகழ்கிறது.

அதே படத்தின் இரண்டாம் பாகம் பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இதை இரண்டாம்பாகம் என்று சொல்வதை விடவும் ஒரிஜினல் ஆங்கிலப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்று சொன்னால் அது மிகையாகாது. அதை மொக்கையாக தமிழில் டப் வேறு செய்து தொலைத்திருக்கிறார்கள். ஒரிஜினலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத மோசமான ரீமேக். உணர்ச்சியேயில்லாத நடிக நடிகையர். பிட்டே இல்லாத காட்சிகள் என முந்தைய படத்தின் புகழை குலைக்க வந்த பாதகனாகவே இப்படம் அமைந்திருந்தது. படத்தினைப்பற்றி பெரிதாக சொல்ல எதுவுமே இல்லை. பெரிதாக இருப்பது ஹீரோவின் முடியும் வில்லனின் தடியும்தான்!

இந்த இரண்டாம்பாகத்தினையே அண்மையில் கேகேநகர் விஜயாவில் பார்க்க நேர்ந்தது. நீங்கள் டிவைன் லவ்வர்ஸ் படத்தின் ரசிகராக இருந்தால் இந்த இரண்டாம் பாகத்தினை தவிர்த்துவிட்டு பழைய படம் இணையத்தில் கிடைக்கிறது அதையே டவுண்லோடி ரசிப்பதே சாலச்சிறந்தது!

13 October 2011

குட்டீஸ்!

புதுசா போட்டோ எடுத்து பழகும்போது குட்டீஸை படம் எடுக்கறது ரொம்ப நல்லதுணு அலுவலக புகைப்படக்காரர் அட்வைஸ் பண்ணாரு. ஏன்னா எப்படி எடுத்தாலும் போட்டோ அழகாதான் இருக்குமாம். உண்மைதான் போல. அண்மையில் க்ளிக்கிய சில புகைப்படங்களின் தொகுப்பு.

(முடி போச்சே)

(என்னது தமிழனுங்களுக்கு ஹெல்ப் பண்றேனு சொன்னானா நாக்கவெட்டிருவோம்!)(பொத்தி வச்ச மல்லிக மொட்டு!)(வருங்கால இலக்கியவாதி!)


(என்னம்மா கண்ணு சௌக்கியமா)


(உப்பு கொஞ்சம் கம்மி!)(டேய் போதும்டா.. )


(கொஞ்சம் பெரிய குழந்தை, என் பாட்டி!)
போஸ் கொடுத்த குட்டீஸ்  சிட்டு,சிட்டான்,தமிழ்மொழி மற்றும் பத்மா அம்மாவுக்கு நன்றி!

11 October 2011

வாகை சூட வா
எம்.ஜி.ஆர் தொடங்கி ராமராஜன்,பாக்யராஜ்,சத்யராஜெல்லாம் நடித்து சலித்து புளித்துப்போன கிராமத்து வாத்தியாரும் முரட்டு பண்ணையாரும் அப்பாவி மக்களும் கதைதான்! ஆனால் இது ரொம்பவே ஸ்பெஷல். மற்ற சினிமாக்களில் வருவதைப்போலவே இதிலும் கதையின் நாயகி காடு கரையெல்லாம் ஓடி ஓடி விரட்டி விரட்டி நாயகனை காதலிக்கிறார், ஆனால் இதில் வேற மாதிரி!. இதிலும் ஏழைகளை சுரண்டி வாழுகிற ஆண்டைதான் வில்லன். ஆனால் கத்தியின்றி ரத்தமின்றி அவரை விரட்டியடிக்கின்றனர் . போலவே இதிலும் கிராமத்து மனிதர்கள், அழுக்கு சிறுவர்களின் குறும்புகள்,ஆயாக்களின் நக்கல்பேச்சு என வழக்கமான பாரதிராஜா டைப் கிராமம்தான் ஆனால் அதுவும் கொஞ்சம் புதுமாதிரி!

களவாணி படத்தினை எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கே தெரியாது. சரண்யாவும் விமலும் அசத்தியிருப்பார்கள். படம் முழுக்க ஒரு எகத்தாளமும் தெனாவெட்டும் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நிறைந்திருப்பதை காணலாம். அதுதான் அப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கருதுகிறேன். ஆனால் வாகை சூட வா அதற்கு நேர்மாறாக அமைந்திருந்தது ஆச்சர்யம். படம் முழுக்க எங்கும் எப்போதும் வெள்ளந்தித்தனமும் கிராமத்துக்குசும்பும்தான். குட்டிப்பையன்களின் அலும்பு அட்டகாசம்!

செங்கல்சூளைகளில் வேலைபார்க்கிற குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்க்கையை படமாக எடுக்க முன்வந்தமைக்காக தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் முதலில் ஒரு பூங்கொத்து பார்சேல். வசந்தபாலனின் அங்காடித்தெரு பாலாவின் நான்கடவுள் போல இல்லாமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை ரசனையோடு அவர்களின் கொண்டாட்டங்களோடு அழுதுவடியாமல் கண்ணீர்விட்டு கதறாமல் படமாக்கியமைக்கு இன்னொரு பூங்கொத்து. இங்கே வறுமையோ சாதியோ கொத்தடிமைத்தனமோ எதுவாக இருந்தாலும் கல்வியால் மட்டுமே ஒரு சமூக மாற்றத்தை உண்டுபண்ண முடியும் என்கிற செய்தியை நறுக்கென சொன்னதற்காக இன்னொன்று.

நாலு ஃபைட்டு மூணு டூயட்டு கொஞ்சம் காமெடி கலந்து மசாலாவா சொல்லியிருந்தால் இன்னொரு ராமராஜன் படமாகியிருக்கும். நல்ல வேளையாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை அதன் இயல்பு மாறாமல் சொன்னதோடு தமிழ்சினிமாவுக்காக எங்குமே வளைந்துகொடுக்காமல் படமாக்கியமைக்காகவும் இன்னொரு பூங்கொத்து! இப்படி படத்தின் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் பூங்கொத்து கொடுக்க ஆரம்பித்து ஒரு பூந்தோட்டத்தையே பரிசளிக்கலாம். அவ்வளவும் அச்சு அசல் அக்மார்க் அசத்தல்!

வேறு வழியில்லாமல் ஒரு பட்டிக்காட்டுக்கு வாத்தியார் வேலைக்கு வருகிறார் விமல். அங்கோ சிறுபிள்ளைகள் கூட செங்கல்சூளையில் பணிபுரிகின்றனர். அந்த கிராமத்து மக்களை அடக்கி ஆளுகிறார் ஒரு ஆண்டை. இதையெல்லாம் பார்க்கும் நாயகன் அங்கே நடக்கும் அநியாயங்களை கண்டு கொதித்து எழவில்லை. முரட்டு பண்ணையாரோடு சண்டை போடவில்லை. பஞ்ச் டயலாக் பேசவில்லை. படம் முழுக்க குறும்பு பையன்களுக்கு பாடம் நடத்த அல்லாடுகிறார். அவமானப்படுகிறார். குழந்தைகள் கூட அவரை ஓட்டுகின்றனர். காரணம் பட்டிக்காட்டில் பாடம் நடத்தினால் அதன்மூலம் கிடைக்கிற சர்டிபிகேட் சர்க்கார் உத்தியோகம் கிடைக்க வழிபண்ணும் என்கிற சுயநலம் மட்டுமே. நாயகன் லட்சிய வீரனோ, அசகாய சூரனோ கிடையாது. ஒரு காட்சியில் அவரை போட்டு மிதித்து உதைத்து வதைக்கின்றனர் பண்ணையாரின் அடியாட்கள். மக்கள் ஒன்றுகூடி காப்பாற்றுகின்றனர்.

பொதுவாக மக்களை துன்புறுத்தும் வில்லனை தனியாளாக பஞ்ச் பேசி அடித்து உதைப்பார் ஹீரோ. அல்லது அடியாட்களை அடித்து நொறுக்கிவிட்டு நீண்ட நெடிய வசனம் பேசி வில்லனைத் திருத்திவிடுவார். அதுதான் திராவிட சினிமா பண்பாடு. ஆனால் இதிலோ ‘’பணம் குடுக்கறவன்லாம் உங்களுக்கு கடவுளாகிடறான்.. இவனையும் நம்பாதீங்க.. ஏன்னா இவனும் முதலாளிதான்’’ என்பதைத்தவிர வேறெங்கும் நாயகன் அதிகமாக வீரவசனம் பேசுவதேயில்லை.

தமிழ்சினிமாவில் எப்போதுமே மக்கள் ஒன்றுகூடி தங்கள் உரிமைக்காக கல்விக்காக பொருளாதார முன்னேற்றத்திற்காக போராடுவதாக படங்கள் எடுக்கப்படுவதில்லை.(ஒன்றிரண்டு கண்காணாமல் இருக்கலாம்) அதனாலேயே இது ஸ்பெஷலாகிவிடுகிறது. அதிலும் அந்த கிளைமாக்ஸ். வில்லன்களின் சேஸிங்கோ மக்களின் கதறலோ ஹீரோவின் மொக்கை பஞ்ச்களோ இல்லாமல் நச்சுனு வைத்ததற்கே இப்படம் வெற்றியடைய வேண்டும் என நினைக்கிறது மனசு.

படத்தின் நாயகன் விமல் அப்பாவி நடிப்பில் அசத்துகிறார். சில இடங்களில் பாக்யராஜ் சாயல் தெரிந்தாலும் (படத்தில் அவருடைய அப்பா பாக்யராஜ்!) ஓகேதான். படத்தின் இன்னொரு ஆச்சர்யம் படத்தின் நாயகி.. அடடா அந்த பொண்ணு கண்ணு... வாவ்! பார்த்துகிட்டே இருக்கலாம் போல ஒரு ஏக்கம். அவ்வளவு அழகான கண்ணு. ‘’சரசர சாரகாத்து வீசும் போது’’ பாடலில் அவருடைய அபிநயங்கள் அல்லது கண் அசைவுகள் அல்லது முகபாவனைகள் அல்லது நடன அசைவுகள் அய்யய்ய்யோ என்ன அழகு?. பார்த்துகிட்டே இருக்கலாம் அந்த கண்களை. காதல் பொங்கி வழியுதுய்யா! இந்தப்பொண்ணுக்காகவே இன்னொருக்கா படம் பாக்கணும் போல..

நீங்களும் பாருங்களேன்!
படத்தின் கேமராமேன்,இசையமைப்பாளர்,எடிட்டிங்,கலை இயக்குனர் என பலரின் மென்னியை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல.. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். சின்ன சின்ன விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி உழைத்திருக்கிறார்கள். அதிலும் போறாளே போறாளே பாடலில் வருகிற எலி வேட்டை.. சரசர சாரக்காத்து பாடலில் வருகிற வின்டேஜ் ஷாட்டுகள்.. அக்கினி குஞ்சொன்று (அறிவுமதி எழுதியது) பாடலில் செங்கலில் கரையும் ‘அ’ என நேர்த்தியோ நேர்த்தி. அனாவும் ஆவன்னாவும் ஆற்றில் கரையுதே என்கிற அறிவுமதியின் வரிகள் அழகு!

படம் அறுபதுகளில் நடப்பதாக சொல்லப்பட்டாலும் அதை மிகச்சில இடங்களில் மட்டுமே உணர முடிந்தது படத்தின் குறை. இன்னொரு குறை படத்தின் டீடெயிலிங். அதனால் பல இடங்களில் போர் அடிக்கவே செய்கிறது. கதைக்குள் நுழைய எடுத்துக்கொண்ட நேரமும் படம் பார்க்கிறவர்களை கொஞ்சம் சோதிக்கலாம். மற்றபடி தமிழ்சினிமாவின் நிர்பந்தங்களை புறந்தள்ளி இப்படி ஒரு படம் கொடுத்த சற்குணத்திற்கு பாராட்டுகள்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் பேசும்போது ‘’லைட்டா போர் அட்ச்சாலும், ரொம்ப நல்ல படம் சார்’’என்றார். நம் கருத்தும் அதுவே!

07 October 2011

கோமாதா எங்கள் குலமாதா

மாட்டுக்கறி என்றால் எங்களுக்கு அவ்வளவு இஷ்டம். உயிர்! அதற்காக எதையும் செய்யதுணிந்திருக்கிறோம். என்னது மாட்டுக்கறியா... உவ்வ்வ்வ்வே! என்பவர்கள் உடனடியாக விண்டோவை மூடி வைத்துவிட்டு ஓடிடுங்க!

ஆனால் பாருங்க பாஸ்... உவ்வே என்று ஓடுகிற அளவுக்கு மாட்டுக்கறியொன்றும் மோசமான உணவு கிடையாது. சொல்லப்போனால் அசைவ உணவுகளில் சுவை மற்றும் உடல்நலம் முதலிய காரணிகளின் அடிப்படையில் சிறந்தது மாட்டுக்கறிதான். அப்போது எங்களுக்கு வயது ஏழோ எட்டோதான். மாட்டுக்கறியை மென்றுதின்ன சரியாக பற்கள் கூட முளைத்திருக்காது! ஓட்டை பாக்கெட்டில் காசுமிருக்காது.

எங்களுக்கு பிரியாணி என்பதே பெருங்கனவு. அதிலும் சிக்கன் பிரியாணியெல்லாம் கொடுங்கனவு. அந்த சமயத்தில் மாட்டுக்கறி பிரியாணிதான் சீஃப் அன் பெஸ்ட். ஒரு கப்பு வெறும் பத்துரூபாய்தான்! நாங்கள் அதில் அரைக்கப்பு சாப்பிடுவோம். மாட்டுக்கறியுடனான எங்கள் முதல் உறவு அப்படித்தான் தொடங்கியது.

சீஃப் அண்ட் பெஸ்ட் என்ற பெயரிலேயே கோவை கோட்டைமேட்டில் ஒரு புலால் உணவகமிருந்தது. கோட்டைமேட்டில் இருக்கிற மாநாகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு நேர் எதிரில்.. மிக மிக அருகில். இப்போது அந்தக்கடையை மூடிவிட்டனர். பிரியாணிக்கு மசாலா அரைக்கும் போதே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்! பள்ளிக்கோடம் பக்கம் போகும்போதெல்லாம் நாவில் நீர் சொட்டும். அப்படி ஒரு மணம். அதிலும் மாட்டுக்கறியின் வாசமிருக்கிறதே சொல்லவும் வேண்டாம்.. ஆஹா!

கோட்டைமேட்டுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருந்தது. அது மாட்டுக்கறியின் மணம். எங்கும் நிறைந்திருக்கும். மாட்டுக்கறியினை வேகவைக்கும்போது அதிலிருக்கிற அதிகப்படியான கொழுப்பு நீருக்கு மேல் ஒரு படலமாக எண்ணெயைப்போல மிதப்பதை காணலாம். அதன் மணம் வெண்ணையை உருக்கும் போது உண்டாகுமே அதைப்போலவே இருக்கும். ஏனோ அந்த மணம் ஏற்காமல் சைவபட்சினிகள் வாந்தி எடுத்துவிடுவதை பார்த்திருக்கிறேன். வெண்ணை காய்ச்சும்போது வருகிற துர்நாற்றம் இதைவிடவும் மோசமானது!

அஜ்மீர் பிரியாணி ஹோட்டல்தான் பீஃப் பிரியாணிக்கு கோவை ஃபேமஸ். இரவு ஒருமணிக்குப்போய் கேட்டாலும் சுடச்சுட சூடு குறையாமல் பிரியாணி போடுவதை பார்த்திருக்கிறேன். ஒரே குறை அந்தக்கடையில் பீஃப் என்று கேட்டால் கோச்சிப்பாங்க! மட்டன் என்றே கேட்க வேண்டும். அதைப்பின்பற்றி கோவையின் மற்ற பீஃப் கடைகளும் மாட்டுக்கறியை மட்டன் என்றே அழைத்தனர். ஒரு கப் பிரியாணியில் ஐந்தாறு நல்ல பீஸாவது நிச்சயமாக இருக்கும். பீஸ் என்றால் ஏனோ தானோ ச்சவ ச்சவ பீஸ்கள் அல்ல! நல்ல வெந்த மிருதுவான கையால் பிட்டுப்பார்த்தால் அப்படியே கரைகிற அற்புதபீஸ்கள் அவை. மாட்டுக்கறியின் சுவையே அது வேகும் பதத்தில்தான் இருக்கிறது.

சிக்கன் பிரியாணியில் பெரிய பெரிய பீஸ்கள் போட்டு சமைப்பதை பார்த்திருப்போம். மாட்டுக்கறிக்கு அப்படி சமைத்தால் கரக் மொறுக் என ரப்பர் துண்டுகளை போட்டு பிரியாணி சமைத்தது போலவேதான் இருந்துதொலைக்கும். அதனால் சின்ன சின்னத்துண்டுகளாக போட்டு சமைப்பதென்பது பீஃப் பிரியாணி சமையலில் அடிப்படை. மட்டனுக்கும் பன்றிக்கறிக்கும் கூட இது பொருந்தும்.

என் நண்பர்கள் வீடுகளில் மட்டுமே பீஃப் குழம்பு, பீஃப் சுக்காவெல்லாம் கிடைக்கும். கடைகளில் சில்லி பீஃப் என்று ஒன்று கிடைத்தாலும் சுவையேயில்லாத அந்த கொடிய வஸ்துவை குடிக்கும் போது மட்டுமே வேறு வழியின்றி உபயோகிக்கவியலும்.. அதுவும் சென்னையில் சில இடங்களில் கிடைக்கிற பீஃப் ரைஸெல்லாம் மாட்டுக்கறிக்கே அவமானம்.
வார இறுதியில் கிரிக்கெட் ஆடிவிட்டு , களைத்துப்போன எங்களுக்கு ஊக்கமருந்தாக இருந்தது மாட்டுக்கறிதான். போதிய ஊட்டச்சத்தின்றி சோம்பிப்போய் திரிந்த எங்களுக்கு புரத சத்தினை தந்த வள்ளல் அது. அஜ்மீர் பிரியாணி மற்றகடைகளைவிடவும் ஐந்துரூபாய் விலை அதிகம். ஐந்து ரூபாய் புரட்டுவது பெரும்பாடு அதனால் அஜ்மீருக்கு மாற்றாக இன்னொரு கடையை தேடிய போது அகப்பட்டதுதான் முத்துராவுத்தர் கடை. அஜ்மீருக்கு சற்றும் குறையாத அருமையான சூடான பிரியாணி இங்கே இப்போதும் கிடைக்கிறது. மதியம் மூன்று முப்பதுக்குப்போனால் முதல் ஆளாக அப்போதுதான் சமைத்த சூடான பிரியாணி கிடைக்கும். ஒன்றிரண்டு ரப்பர் துண்டுகளிலிருந்தாலும் நல்ல பீஸ்களும் கிடைக்கும். விலையும் மலிவு (ஐந்துரூபா கம்மி).

கோவையைவிட்டு சென்னை வந்த சிலநாட்களிலேயே தெரிந்துவிட்டது. மாட்டுக்கறிக்கும் சென்னை நகருக்கும் ஆகாதென்பது. எங்கு பார்த்தாலும் சிக் சிக்கென்று ஒரே சிக்கன்கறியும் பிரியாணியும். அடச்சே! என்றாகிவிட்டது. நண்பர்கள் இல்லாத மாட்டுக்கறியில்லாத நாட்கள் நரகமாயிருந்தன.

ஆனால் பீஃப் தாகம் மட்டும் தணியவேயில்லை. நண்பர்களோடு இணைந்து சாலைகளெங்கும் அலைந்து திரிந்து மாட்டுக்கறி வாங்கி வந்து வீட்டிலேயே சமைப்போம். வீட்டில் சமைப்பதில் இருக்கிற பெருங்குறை இந்த மாட்டுக்கறியை வேகவைப்பதுதான். அதற்கு கூகிளில் ஆராய்ச்சி செய்து நாங்கள் கண்டுபிடித்த நுணுக்கமான வழி வொய்ன் கலந்து சமைப்பது. அது மாட்டுக்கறியின் சுவையை கூட்டுவதோடல்லாமல் சீக்கிரமே நல்ல பதமாக வேகவும் உதவுகிறது. அதாவது ஒன்றரை மணிநேரம் வேகவேண்டிய கறியினை வெறும் அரைமணிநேரத்தில் வேகவைத்துவிடும்.

முதலில் கறியைவாங்கி சுத்தம் செய்து , நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வொயினில் போட்டு ஊறவைக்க வேண்டும் பிறகு அதை அப்படியே கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்தால் அற்புதமான மணம் காற்றில் பரவும். அருகாமை வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை உங்கள் வீட்டு வாசலுக்கே அழைத்துவரும்.. சாராயம் காய்ச்சறீங்களா? என்று கேட்டிருக்கிறார்கள். இந்த மணத்தின் சுகம் அறியாத வீட்டு ஓனரிடம் ஓத்தாம்பட்டை வாங்கியிருக்கிறோம். இதற்குநடுவே நன்கு வெந்த கறியை தனியாக எடுத்து வைத்துவிட்டு வெங்காயம் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி அதில் மசாலா சேர்த்து கறியையும் போட்டு கிளறி உப்புப்போட்டு தண்ணீரை வேண்டிய அளவு ஊற்றி மூடிவைத்துவிட்டால் அரைமணிநேரத்தில் நல்ல மிருதுவான மாட்டுக்கறி கிரேவி தயாராகிவிடும். அதை தின்பதற்காகவே திண்டிவனத்திலிருந்து நண்பர்கள் கூட்டம் எங்கள் அறையை மொய்க்கும்! ஃபுல்லோடு வரும் புரவலர்களை எப்போதுமே நாங்கள் தடுத்துநிறுத்தியதில்லை.

அண்மையில் கோவை சென்றிருந்த போதும் கூட முத்துராவுத்தர் கடையில்தான் நண்பர்களோடு பீஃப் பிரியாணி சாப்பிட்டேன். சுவையும் மணமும் நான்கில் ஒருபீஸ் சவசவவும் மாறவேயில்லை! விலைமட்டும் கொஞ்சம் உயர்த்தியிருந்தனர். மற்றபடி கோவைமுழுக்க நிறைய பிரான்ச்சுகள் திறந்துள்ளனர். எல்லா கடைகளிலும் நல்ல பீஃப் பிரியாணி கிடைக்கிறது. பீஃப் ரசிகர்கள் மிஸ்ப்பண்ணிவிடக்கூடாத கடைகளில் அஜ்மீர் மற்றும் முத்துராவுத்தர் பிரியாணிகள் முக்கியமானது. கோவையில் சில கடைகளில் பீஃப் பிரியாணியை பீப் பிரியாணி என எழுதிவைத்திருந்தது கோபத்தை வரவழைத்தது. இதை மாற்ற தமிழ் ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

சென்னையில் இவைகளுக்கிணையான பீஃப் பிரியாணிக்கடை எங்குமே கிடையாது. நண்பர்கள் தெரிந்திருந்தால் சொல்லி உதவலாம். உதயம் தியேட்டருக்கு அருகில் ஒரு கடை கண்டுபிடித்து சில நாட்கள் அங்குதான் பீஃப் பிரியாணி சாப்பிட்டுவந்தேன். ரொம்ப சுமார்தான் என்றாலும் சக்கரையில்லாத ஊருக்கு.. என்று வேறு வழியின்று தின்றுவந்தேன். ஏனோ அந்தக்கடை சிலமாதங்களில் மூடப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் பீஃப் சாப்பிட சரியான ஒரு டக்கர் கடையை பர்மா பஜாருக்கு அருகே ஒரு கண்டுபிடித்திருக்கிறோம். அங்கே பீஃப் தந்தூரி கிடைக்கிறது! எனக்குத்தெரிந்து மாட்டுக்கறியில் தந்தூரி பண்ணுகிற ஒரே கடை அதுவாகத்தான் இருக்கும். கடையென்றால் சாலையோர கடை. பர்மா பஜார் சந்துகளுக்குள் புகுந்துசென்றால் ஒரு மசூதி இருக்கும் அதன் வாசலிலேயே இந்த சாலையோர தந்தூரி கடை அமைந்திருக்கிறது. அக்கடைகுறித்து இன்னொரு பதிவில் கடை உரிமையாளரான மெகாசைஸ் தாடிபாயின் பேட்டியோடு எழுதுவோம்.

சிக்கன் தந்தூரி மட்டுமே சாப்பிட்ட எனக்கு இந்த பீஃப் தந்தூரி வித்தியசமான அனுபவத்தினை கொடுக்கிறது. பீஃப் பிரியாணி சாப்பிடமுடியாத ஏக்கத்தினை தந்தூரி தின்று போக்கிக்கொள்கிறேன். நல்ல பீஃப் பிரியாணிக்கான என் தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது. அதுகுறித்து பேசவும் நிறைய இருக்கிறது. இன்னொரு முறை பேசுவோம்.

04 October 2011

சாமியார் மகிமை


‘’நாம ஏன் சாமியார் ஆகிடக் கூடாது...!’’ முடிவெடுத்துவிட்டார் அரங்கசாமி. அவர் முடிவெடுத்தால் எடுத்ததுதான். அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்.

இந்த இன்ஸ்டன்ட் முடிவுக்கு தீர்க்கமான ஒரு காரணம் இருந்தது. அது.. பிரபலசாமியார் டிவிபுகழ், நடிகைகள்புகழ், வார இதழ்கள்புகழ், கோர்ட்டு புகழ், புழல் புகழ்... நடிகைகள் புகழ்.. மூச்சு முட்ட இன்னும் பல புகழ்கள் அடங்கிய ஸ்ரீஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ கம்புஸ்டஸ்ரீ ஜம்புஷ்டஸ்ரீ அற்புதமகா மகாப்ரக்ஞான இன்னும் ஏதேதோ பஜ்ஜிமுகத்தானந்தா.

சாமியாரின் தாடியைப்போல அவருடைய பெயரும் கொஞ்சம் நீளம்.. எப்போது சொன்னாலும் முதல் ஸ்ரீயில் தொடங்கி ஒரு ஸ்ரீயும் விடாமல் மொத்தமாய் சொல்லிவிட்டுத்தான் மூச்சுவிடுவார் அரங்கசாமி. சாமியார் மேலே அத்தனை பக்தி!

அவர் எழுதியதாக சொல்லப்படுகிற அனைத்து புத்தகங்களையும் படித்து அவர் அரைத்தொண்டையில் முக்கால்த்தமிழில் டிவியில் பேசிய பேட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடுவார் அரங்கசாமி. வார இதழ் ஒன்றில் வெளியான ‘’மனசே நீ என்ன மாங்கொட்டையா?’’ தொடரில் வெளியான சாமியாரின் தத்துவங்கள் அனைத்துமே அரங்கசாமிக்கு அத்துப்படி.. எல்லாமே விரல்நுனியில். கண்ணைமூடிக்கொண்டு மனப்பாடமாக ஒப்பிப்பார்.

டிவி நிகழ்ச்சியில் துறவறம் குறித்து எப்போதும்போலவே அன்றைக்கும் பேசிக்கொண்டிருந்தார் சாமியார். ‘’சாமியாராக வேண்டுமா என்னிடம் வாங்க.. தங்குமிடம்,உணவு,கூட்டு பஜனை,அமைதியான சூழல்.. டிவி ஃப்ரிட்ஜ்,ஏசி தொடங்கி அனைத்து வசதிகளும் உண்டு. உங்களுக்காக காத்திருக்கிறேன்! கூட்டாக சேர்ந்து ஆன்மீக ஜோதியில் குதூகலிப்போம், அனைத்தையும் துறந்து என்னிடம் வாருங்கள்.. ஆன்மீகத்துக்கு நான் கியாரண்டி!’’ என்றார்.

சாமியார் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் டிவியில் இதையே சொன்னாலும் இன்றைக்குத்தான் அதைக்கேட்டுக் கொண்டிருந்த அரங்கசாமிக்கு மூளைக்குள் ‘டாங்’ என மணி அடித்தது. குடித்துக்கொண்டிருந்த காஃபியை சுவைக்க சுவைக்க தன்னை போதிசத்துவராக உணரத்தொடங்கி ஞானம் பிறந்து உண்மை உணர்ந்து... காஃபியில் சக்கரை கொஞ்சம் கம்மி என்பதை அறிந்து கோபம் வந்து முடிவெடுத்துவிட்டார். ‘’கமலா சக்கரை!’’ , அதோடு இந்த சக்கரை இல்லா காஃபியை குடிப்பதற்கு சாமியார் ஆகிவிட வேண்டியதுதான்! பெயர் கூட தேர்ந்தெடுத்துவிட்டார் அரங்கானந்தா!

****

இரவு மணி 11.55. புத்தர்கூட இப்படித்தான் ஒரு மிட்நைட்டில்தான் துறவறம் கிளம்பினார் என அரங்கசாமி கடைசியாக படித்த அஞ்சாங்கிளாசில் படித்திருக்கிறார். மிட்நைட்டில் துறவியானால் புத்தரைப் போலவே உலக புகழ் பெற முடியுமென நம்பினார்.

படுக்கையிலிருந்து எழுந்தார். மனைவியை பார்த்தார். கா.....ர்ர்ர்ர்ர் என விண்ணுக்கு செல்லும் ராக்கெட்டைப்போல குறட்டையுடன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். 25வருட பிரச்சனை. இன்றோடு விடுதலை. பாத்ரூமிற்கு சென்றார். முகங்கழுவினார். ‘’ச்சே! முன்னாடியே பிளான் பண்ணி ஷேவ் பண்ணாம விட்டிருந்தா ஓரளவுக்கு தாடியாச்சும் முளைச்சிருக்கும்’’ . ஒரு சாமியாருக்கு தாடிதான் எத்தனை முக்கியமானது!

ஐயப்ப மலைக்கு சிலமுறை மாலை போட்டதுண்டு. அதற்காக வாங்கின துளசி மாலை இரண்டும் கறுப்பு வேட்டி சட்டையும் ஒரு துண்டும் இருந்தது. ச்சே எல்லாமே கருப்பு! காவி வேட்டி வாங்கியிருக்கலாம். யூஸாகிருக்கும்! வெள்ளை வேட்டி சட்டையோடு துளசி மாலையை எடுத்துக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார்.

நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டார். உடல் சிலிர்த்து பக்திமணம் பரவுவதை உணர்ந்தார். துளசி மாலையை மாட்டிக்கொண்டார்.

கழுத்தில் மாலையை போட்டதும் பழக்க தோசத்தில் சாமியே..சரணம்.. என்று அலறத்தொடங்கியவர்..ச்சேச்சே என்று பிரேக்கடித்து நிறுத்தினார். யாராச்சும் முழிச்சிட்டா... வெளியே பூனைபோல நடந்துசெல்ல கண்ணாடியில் ஒரு பயங்கர உருவம் நகர்வதைப்பார்த்து மிரண்டுபோய் திரும்பிப்பார்த்தால்... அது அவரேதான்!
அவருக்கே அவரை பார்த்தால் பக்திவந்துவிடும்போல இருந்தது. டேய் நீ சாமியாராகிட்டடா என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்ளவேண்டும் போல இருந்தது. அரங்கசாமியானந்தா.. அசத்திட்டடா?

மொபைல் போன் எடுத்துக்கொள்ளலாமா? அவசர ஆத்திரத்திற்கு உதவுமே.. பணம்? பர்ஸை எடுத்து வேட்டியில் முடிந்துகொண்டார். மாடிப்படிகளில் இறங்கி பொறுமையாக நடந்தார். மாடிப்படிகளின் கைப்பிடி தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ரொம்ப காஸ்ட்லி! பெருமூச்சு விட்டார். ஷோபா,3டி எல்சிடி டிவி,ஹோம்தியேட்டர் என பார்த்து பார்த்து வாங்கிய எல்லா பர்னிச்சர்களுக்கும் நூறு கோடி ரூபாய் சொத்துக்கும் ஓட்டும்மொத்தமாக சேர்த்து வைத்து தொப்பையிலிருந்து காற்றைதிரட்டி ஒரு பெரிய மூச்சுவிட்டார்.

வாசலில் சுப்ரமணி உறங்கிக்கொண்டிருந்தது. உயர்ந்த ஜாதி நாய்தானே என கேட்டு கன்பார்ம் செய்தபின்தான் வாங்கியது. நாயாக இருந்தாலும் சாதி முக்கியமில்லையா? தன் மனைவியைவிடவும் அரங்கசாமிக்கு அளவில்லா ப்ரியமும் அன்பும் அந்த நாய்மீதிருந்தது.. அவர் நில்லென்றால் நிற்கிற உட்காரென்றால் உட்காருகிற ஒரே ஜீவன் அந்த வீட்டில் அதுமட்டுந்தான். அதைபார்த்து பெருமூச்சு மட்டுமல்ல ஒரு துளி கண்ணீரையும் சிந்தினார்.
சுப்ரமணி என் செல்லமே உன்னை பிரிஞ்சு நான் எப்படீடா இருக்கப்போறேன் என்று அதை கட்டிப்பிடித்து கண்ணீர்வடித்து கதறி அழவேண்டும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டார். துறவியான பின் அழக்கூடாது.. இதுவும் ‘’மனமே நீ என்ன மாங்கொட்டையா’’ தொடரில் சாமியார் சொன்னதுதான்.

தெருவில் இறங்கினார். நடக்கத்தொடங்கினார். தன் மொபைலை எடுத்தார்.. மெசேஜ் வந்திருந்தது. நாளை நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கட்டும் டெல்லி போய்வர ஃபிளைட் டிக்கெட்டும் தயார் என மேனேஜர் மெசேஜ் அனுப்பியிருந்தான். ச்சே இரண்டு நாள் கழிச்சி சாமியாராகிருக்கலாம்.. இப்பயும் ஒன்னும் கெட்டுப்போகல யாரும் பாக்கல வீட்டுக்கே ஓடிரலாமா என நினைத்தாலும்.... சாமிகுத்தமாகிடுச்சின்னா.. அரங்கசாமியானந்தாவாக ஆனதுக்குபிறகு இப்படிலாம் யோசிக்கறதே தப்பு என கன்னத்தில் போட்டுக்கொண்டார்!

*****

நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அரிய வகை மரங்கள் அடர்ந்திருந்த காட்டுப்பகுதியில் பாதியை அழித்து தரைமட்டமாக்கி பஜ்ஜிமுகத்தானந்தா ஆஸ்ரமம் கட்டியிருந்தார். பஸ் வசதி பகலில்தான்.

இந்த நேரத்தில் எப்படி போவது என யோசித்தார் அரங்கசாமி. ‘’ஸ்ரீஸ்ரீ... நிறைய ஸ்ரீ பக்சிமுகத்தானந்தா எனக்கு வாகனம் ஒன்னு ஏற்பாடு செய்யப்பா..’’ என கன்னத்தில் போட்டுக்கொண்டார். தூரத்தில் ஒரு ஆட்டோ வரும் சப்தம் கேட்டது. ஆஹா உன் மகிமையே மகிமை என இன்னொரு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டார். கைகாட்டி நிறுத்தினார்.

தாடி வைத்த ஆட்டோக்காரர் தலையை வெளியே நீட்டி ‘எங்க சார்’ என்றார்.

‘’அஞ்சு மலை போகணும்’’

‘’அவ்ளோ தூரமா.. லேட்நைட்டு.. முடியாது சார்’’ என்றபடி மீண்டும் ஆமை போல தலையை க்விங்க் என ஆட்டோவிற்குள் இழுத்துக்கொண்டான். தன் பர்ஸை திறந்து பார்த்துவிட்டு.. எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கோ.. அர்ஜன்டா அஞ்சுமலை போகணும் என்றார் அரங்கசாமி.

‘’சரி ஏறுசார், செவன் பிப்ட்டி ஆவும் ஓகேவா’’

‘’என்னப்பா ஒரேடியா இவ்ளோ கேக்கற.. எழுநூறு வாங்கிக்கோ..’’

பேரம் பேசிமுடித்து... ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ கிளம்பியது. வண்டி குலுங்கி குலுங்கி செல்ல தனக்கு அருகில் ஏதோ இருப்பதாக உணர்ந்தார்.. அய்ய்ய்யோ அலறினார்.

‘’இன்னா சார் இன்னா சார்’’ ஆட்டோக்காரனும் வண்டியை பிரேக் அடித்து நிறுத்தி அலறினான். அரங்கசாமிக்கு அருகில் அவருடைய சுப்ரமணி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது. வண்டி நின்றது. ஆட்டோக்காரர் திரும்பி பார்த்தார். அரங்கசாமி தன் நாயோடு பேசிக்கொண்டிருந்தார்.

‘’சுப்ரமணி நீ ஏன்டா வந்த? எப்படி வந்த..’’ , அது அவரை நிமிர்ந்து சோகமாக பார்த்தது. அதன் கண்கள் கலங்கியிருந்தன. முகம் வாடியிருந்தது. அந்த ஜாதி நாய்களுக்கு வாய் எப்போதுமே தொங்கிப்போய் சோகமாகத்தான் இருக்கும்.

‘’சுப்ரமணி செல்லம்.... அப்பா.... சாமியாரா போறேன்டா, உன்னை அங்க கூட்டிட்டு போகமுடியாதுடா’’ என்று இழுத்து இழுத்து கஷ்டப்பட்டு சிவாஜிபோல சோகமாக பேச முயற்சித்தார். தெருநாயாக இருந்தால் அவர் இதுபோல பேசியதற்காகவே கடித்துவைத்திருக்கும். சுப்ரமணி க்விங்க் க்விங்க் என்று கத்தியபடி அவர் மேல் பாய்ந்து சோகத்தில் புரண்டது.

‘’இன்னா சார் நாயான்ட பேசிட்டிருக்க.. போலாமா வேண்டாமா, லேட்நைட்டுசார்’’ எரிச்சலில் கத்தினான் ஆட்டோக்காரன்.

‘’இருப்பா’’

‘’சுப்ரமணி கோ.. கோ..’’ அது அப்படியே இருந்தது. ‘’ப்ளீஸ் வீட்டுக்கு போ’’, அந்த தம்த்தூண்டு நாய் அவருடைய மடியிலேயே அமர்ந்துகொண்டு அவரைபார்த்துக்கொண்டேயிருந்தது. அரங்கசாமிக்கு இளகின மனசு. அதை அணைத்துக்கொண்டார். ரெண்டு துளி கண்ணீரோடு ‘’வண்டி எடுப்பா..!’’ என்றார்... ஆட்டோ இர்ர் விட்டு கிளம்பியது.


****

‘’இன்னா சார்.. சாமியாரா நீங்கோ’’

‘’ஆமாம்ப்பா’’ கொஞ்சம் பெருமையும் பெருமிதமும் கலந்த த்வனியில் சொன்னார்.

‘’எங்க பஜ்ஜிமோத்தாதானந்தா ஆஸிரமத்துக்கா போறீங்கோ’’ ஹேன்டில் பாரை பிடித்தபடியே தலையை லேசாக திருப்பி பேசிக்கொண்டே வந்தான்.

‘’அது பஜ்ஜிமோத்தாதானந்தா இல்லப்பா.. ஸ்ரீஸ்ரீ..ஸ்ரீ பக்ஷிமுகத்தானந்தா..அதாவது பறவையைபோன்ற முகம் கொண்டவர்ன்ற மாதிரி அர்த்தம்’’

‘’பஜ்ஜிமோத்தானாந்தாதானே நானும் சொன்னேன்’’

‘’இல்லப்பா அது பக்..சி , பக்...சி பக்சி.. மு...கத்தனாந்தா’’

‘’சார், ஊருல எல்லாருமே அப்பிடித்தான சொல்றாங்கோ’’

மனதுக்குள்ளாகவே அற்பசிறுவன் ஆன்மீகம் அறியாதவன் என நினைத்து சிரித்துக்கொண்டார். லேசாக புன்னகைத்தார். சாமியாராகிட்டோம் இனிமே இப்படித்தான் லைட்டா பல்லு தெரியாம தெய்வீகமா புன்னகைக்க பழகிக்கணும். சுப்ரமணி தூங்குடா குட்டி..!

‘’இன்னா சார் இந்த நேரத்துல ஆஸ்ரமம் போற.. நைட்டு நேரம், அங்க வேற ஒரே சினிமா நடிகைகள் கசமுசா ப்ளூபிலிம்னு மேட்டர் படம் அது இது ன்றாங்கோ’’ சிரித்துக்கொண்டே கேட்டான்.

‘’தம்பி வண்டிய மட்டும் ஓட்டுங்க’’ என்றவர் பல்லைக்கடித்துக்கொண்டு அப்படியே ஆட்டோவின் சைடு கம்பியை இறுக பிடித்து கோபத்தை கட்டுப்படித்தி கொண்டார்.
இருள் அப்பியிருந்த காட்டுப்பகுதியில் காட்டுயானை போல குண்டுங்குழியுமாய் இருந்த ரோட்டில் பின்பக்கத்தை ஆட்டி ஆட்டி நகர்ந்து கொண்டிருந்தது ஆட்டோ. ஆஸ்ரமத்தின் பிரமாண்ட கேட்டுக்கு அருகே ஆட்டோ நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்தை எச்சில் தொட்டு எண்ணி எண்ணிக் கொடுத்தார் அரங்கசாமி.

தன் கையிலிருந்த வாட்ச்சை கழட்டினார், பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்தார், செல்போன்களிலேயே லேட்டஸ்ட் மாடல் விலை உயர்ந்ததாக பார்த்து பார்த்து வாங்கியது, தன் பர்ஸையும் எடுத்தார் , ஆட்டோவை திருப்பிக்கொண்டிருந்தவனை அழைத்தார். தம்பி இங்க வாங்க.. இது இனிமே எனக்கு இது தேவைப்படாது, இதையெல்லாம் நீங்களே வச்சிக்கங்க என்று பெருமிதமாக, கிட்டத்தட்ட தில்லானா மோகனாம்பாள் சிவாஜியைப்போல உதட்டை பிதுக்கி புருவங்களை உயர்த்தி கண்களில் பெருமிதம் பொங்க சோகமாக நாதஸ்வரம் வாசிப்பவர் போலவே கொடுத்தார்.

வாட்சை வாங்கிப்பார்த்தான் ஆட்டோக்காரன். ‘’இன்னாசார் பர்மா பஜாரா? ஷோக்கருக்கே!’’ என்றான். அரங்கசாமிக்கு உள்ளுக்குள் மீண்டும் எரிமலை பொங்கியது. தானம் குடுத்த மாட்டின் எதையோ பிடித்து பார்த்தமாதிரி.. ச்சே..அற்ப சிறுவன் ஆன்மீகம் அறியாதவன். அடேய்..! அடக்கிக்கொண்டார்.

‘’அது டேக்வர்யா..உனக்கு எங்க அதுலாம் தெரியபோவுது.. விடு.. பத்திரமா வச்சிக்கோ’’ என்று உள்ளே கடுப்பும் வெளியே புன்னகையுமாக பேசினார்.. அவருக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகம் எந்த நேரத்திலும் விழித்துக்கொள்ளுகிற வாய்ப்பு இருந்தது. மடியில் சுப்ரமணி வேறு தூங்கிக்கொண்டிருந்தது. எத்தனை கடை ஏறி இறங்கி வாங்கிய வாட்ச்சு.. இந்த ஆட்டோவை விடவும் விலை அதிகமாச்சே!

ஆஹா இப்போது கையில் எதுவுமே இல்லை.. எல்லாத்தையும் துறந்தாச்சி. இனிமே நாமளும் புத்தர் மாதிரி ஆகிடலாம். கேட்டை நோக்கி நடந்தார். பின்னாலேயே அந்த நாயும் நடந்து வந்தது. மொபைல் விளம்பரம் மாதிரியே!

****

ஆஸ்ரமத்தின் அதிபிரமாண்டமான கேட்டின் முகப்பில் இரண்டு செக்யூரிட்டிகள் கையில் மிஷின் கன்னோடு நின்றனர். இவரை பார்த்ததும் ‘’க்யா’’ என்றனர். இருவரும் இரண்டு மாமிச மலைகளை போல் இருந்தனர். ஒருவருக்கு மீசை இல்லை.. பார்க்க கொடூரமாக இருந்தான். இன்னொருவனுக்கு நல்ல வேளையாக பெரிய மீசை இருந்தது, ஆனால் அவன் மற்றவனைவிடவும் மோசமான சைக்கோ கொலைகாரன் போல இருந்தான். லேசாக மனதிற்குள் பயமிருந்தாலும்.. முகத்தை சிரித்தது போலவே வைத்துக்கொண்டார்.

‘’நான் துறவியாகலாம்னு வந்திருக்கேன். மை நேம் இஸ் அரங்கசாமி.. வான்ட்டூ பிக்கம் துறவி ஹியர்’’ என்றார்.

‘’க்யா.. க்யா.. ஹிந்தி மே போலோ’’ என்றது ஒரு மிஷின் கன். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு எவ்வளவு போராடிருக்கேன். எத்தனை அடி வாங்கிருக்கேன்.. ‘’எனக்கே ஹிந்தியா அடேய் ஹிந்திக்காரா’’ என்று பாய்ந்து அவன் தலைமுடியை பிடித்து நாலு ஆட்டு ஆட்டி.. நெஞ்சுலயே நாலு மிதி மிதிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் துறவியாகிட்டாரே அரங்கசாமி..

புன்னகையோடு ‘’மீ அரங்கசாமி.. ஐம் ஹயிர் ட்டூ ஜாய்ன்..சாமியார்.. துறவி’’ என கை ஜாடைகளால் புன்னகையோடு உணர்த்த முயன்றார். ஒழுங்கா படிச்சிருக்கலாம். அவர்களுக்கு புரியவில்லை. அருகில் நின்றுகொண்டிருந்த சுப்ரமணி அவர்களை பார்த்து க்விங்க் க்விங்க் என்றது. அதனை நோக்கி தன் துப்பாக்கியை நீட்டினான் மீசையில்லாத செக்யூரிட்டி. ‘’சாரி சாரி.. திஸ் மை டாக்.. சுப்ரமணி.வெரி குட் டாக்.. .ச்சூ.. குட் டாக்.. சிட்.’’ என்று அதை அதட்டினார்.

அரைமணிநேரம் பேசியும் தான் வந்த காரியத்தை விவரிக்க முடியாத அரங்கசாமி சோர்ந்து போய் கேட்டுக்கு எதிரிலிருந்த ஏதோ ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவர் நடக்க நடக்க அவர்பின்னாலேயே அந்த நாய்க்குட்டியும் சென்றது.

மரத்தடியில் உட்கார்ந்தவர் அப்படியே உறங்கிவிட.. ஓரளவு விடிந்திருந்தது. டைம் என்ன இருக்கும்? கையில் வாட்சை காணோம். தான் துறவியாக கன்வர்ட் ஆனது உடனே புரிந்தது. இன்னும் சூரியன் உதித்திருக்கவில்லை. ஓரளவு வெளிச்சம் இருந்தது. இரண்டு மண்டோதரன்களும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக ஆளுக்கு ஒரு சேர் போட்டு அமர்ந்தபடி இவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். சாவகாசமாக எழுந்து சுப்ரமணியை தேடினார்.. அது அருகிலிருந்த மரத்தில் உச்சாப்போய்க்கொண்டிருந்தது.

கேட்டுக்கு பக்கத்தில் ஒரு தமிழ் செக்யூரிட்டி.. ஆகா சுவாமி உங்கள் மகிமையே மகிமை.. தமிழ் செக்யூரிட்டியிடம் பேசி விளக்கினார். ஆஸிரமத்தின் உள்ளே நுழைந்தார்.

****

அருமையான சந்தன வாசனை வீசியது. ஆஹா..! தெய்வீக மணம். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நாலைந்து சாமியார்களும் அழகான சாமியாரினிகளும் மொட்டையும் ருத்ராட்ச கொட்டையுமாக அலைந்துகொண்டிருந்தனர். நாளைலருந்து நாமளும் இங்கதான்.. என்ன மொட்டையடிச்சிகிட்டா கிளாமர் போயிடும்.. பிரச்சனையில்ல, லேடீஸே மொட்டையாதான் சுத்தறாங்க என மனதை தேற்றிக்கொண்டார்.

ஆசிரமத்தின் பிரதான கட்டிடத்திற்கு நுழைந்தவருக்கு லேசாக கிருகிருத்தது. ஐடி நிறுவனங்களின் அலுவலகம் போல பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த வராண்டாவில் வளைத்துப்போட்டதுபோல ஒரு டேபிள். அதற்குள் அழகான இளம் தேவதை. அந்தப்பெண்ணும் சாமியார்தான்போல, மொட்டையடித்திருக்கவில்லை. என்னா அழகு. ‘’எச்சூஸ்மீ நான் இங்க துறவியாகலாம்னு வந்திருக்கேன், அதுக்கு என்ன பண்ணனும்’’

‘’ப்ளீஸ் வெயிட் , அங்கே உட்காருங்க’’ என்றவர், போனை எடுத்து டிக்டிக் என தட்டி ஏதோ சொல்ல.. அவரும் சுப்ரமணியமும் அருகில் போட்டிருந்த பெரிய சைஸ் ஷோபாவில் அமர்ந்தனர். ‘’சார் கீழே’’ என்று சைகை காட்டி புன்னகைத்தாள் பெண்.
அவர் கிழே இறங்கி உட்கார்ந்துகொள்ள முயன்றார்... ‘’சார் யுவர் டாக்.. கீழே’’ என்றாள் அழகி. ச்சே!

இன்னொரு அழகான வெள்ளையுடை பெண் சாமியார் வந்தார். ‘’எஸ் சார்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ’’ என்றாள் ஆங்கிலத்தில். சாமியாருங்கன்னா வேற மாதிரில பேசுவாங்கன்னு சொன்னாய்ங்க என திருதிருவென விழித்தவர். கொஞ்சம் சுதாரித்து ‘’நான் துறவியாகறதுக்காக வந்திருக்கேன்’’ என்றார்.

‘’குட், எப்போ புக் பண்ணீங்க.., உங்க கிட்ட புக்கிங் நம்பர் இருக்கா? அப்ளிகேஷன் டேட் என்ன?’’

‘’அப்படி ஏதும் நான் பண்ணலீயே’’

‘’சாரி சார், அப்படீனா உங்களுக்கு இப்போதைக்கு துறவறம் கிடைக்காது, இப்ப நீங்க ரிசர்வ் பண்ணினா எப்படியும் இரண்டு வருஷம் ஆகிடும், வீ காட் ஆல்ரெடி எனஃப் அப்ளிகேஷன்ஸ்’’

‘’ஆனா டீவில சுவாமிகள் சொல்றாரே வாங்கோ வாங்கோனு’’

‘’அது பெய்ட் அட்வர்டைஸ்மென்ட் சார்’’

‘’என்ன விளம்பரமா... அது பராவல்லைங்க, ஆனா நான் இப்ப சாமியாராகனும்னு ஆர்வவெறியோட வந்திருக்கேன் இப்போ நான் என்ன பண்றது’’

‘’நோ ப்ராப்ளம், சார்’’ என்றவள், தன்னுடைய ஃபைலிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து முகத்து நேராக நீட்டினாள்.

‘’இந்த அப்ளிகேஷன் ஃபில் பண்ணி, உங்களுக்கு எந்த விதமான துறவியாகணும்னு விருப்பமோ அதுக்கேத்த அளவு பணம் கட்டிடுங்க..’’ , அரங்கசாமிக்கு லேசாக தலைசுற்றியது. ‘’என்னது ரேஞ்ச்சா..?’’

‘’த்ரீஸ்டார்னா.. நார்மல் சாப்பாடு, உங்க ரூம் நீங்கதான் க்ளீன் பண்ணனும், ஃபேன் கிடையாது, சுவாமிகள் உங்களோடலாம் பேசமாட்டார்.. நாங்க எந்த வேலை குடுத்தாலும் பார்க்கணும், ருப்பீஸ் ஃபிப்ட்டி தவ்சன்ட் ஒன்லி.. ஃபார் லைஃப் டைம், டாக்ஸஸ் எக்ஸ்ட்ரா.

ஃபோர் ஸ்டார்னா , டூ டேஸ் ஸ்பெஷல் சாப்பாடு, ரூம் க்ளீனிங் நாங்க பார்த்துப்போம், ஃபேன் உண்டு அதுவும் காலைல பத்துமணிக்கு ஆஃப் பண்ணிடனும்.. தோட்ட வேலை மட்டும் பார்க்கணும், ருப்பீஸ் ஒன்லேக் ஃபார் லைஃப் டைம், டாக்ஸஸ் எக்ஸ்ட்ரா, ஃபைவ் ஸ்டார்னா.. எந்த வேலையும் செய்யத்தேவையில்ல, ஏசி ரூம்ஸ், வாட்டவர் யூ வாண்ட் யூ கேன் ஆஸ்க், யூ கேன் டாக்ட்டூ சுவாமி எனி டைம் , நோ நீட் டூ வொர்க்.. அதுக்கு ரூப்பீஸ் டென் லேக் ஃபார் லைஃப் டைம்’’ என்று மூச்சு திணற திணற சொல்லி முடித்தார். சுப்ரமணி க்விங்க் க்விங்க் என கத்தியது.

‘’பெட் அனிமல்ஸ் வச்சிக்க நாங்க அலோ பண்றதில்ல, நான் வச்சிப்பேனு அடம்பிடிச்சீங்கன்னா, ஃபைவ் ஸ்டார் துறவறம்ல சேர்றதோட, உங்க பெட் அனிமல்க்கும் தனியா அடிஷனலா பே பண்ணனும், அதோட மெயின்டனென்ஸ்க்கு மாசா மாசம் ட்வென்ட்டி தவ்சன்ட் கொடுக்கணும், இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா ஒரு ஸ்பெஷல் அக்ரிமென்ட் இருக்கு.. அதுல சைன் பண்ணனும்’’ என்று சொல்லிக்கொண்டே போனாள் அந்தப்பெண். அரங்கசாமிக்கு கடுப்பு தலைக்கேறியது. வாய்க்குள்ள துப்பாக்கி வச்சிருப்பாளோ!

‘’நான் சாமியார்கிட்ட நேரடியா பேசலாமா.. நான் அவரோட நெடுநாள் பக்தன், அவரு எங்கூருக்கு வந்தப்ப நான்தான் அவருக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினேன்’’, என்றார்.

‘’சாரி சார், சாமியார் சாரை பாக்கணும்னா இரண்டு வாரம் முன்னாடியே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிருக்கணும்..அதுக்கு டென் தவ்சன்ட் பிளஸ் டாக்ஸஸ், அதர்வைஸ் சாமியார் சார் வில் பீ வெரி ஆங்கிரி’’ என்றாள்.

சுற்றிப்பார்த்தார். ஆங்காங்கே வெள்ளையுடை சாமியார்கள் மந்திரித்துவிட்ட கோழிகள் போல மொட்டைத்தலையும் வெள்ளையுடையுமாக அலைந்து கொண்டிருந்தனர். ஒரு மொட்டைத்தலை தரையை சுத்தமாக மாப் போட்டு அழுத்தி தேய்த்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்தது. மொட்டையை பார்க்க பாவமாய் இருந்தது , யார் பெத்த புள்ளையோ சின்ன வயசு என நினைத்தவர், அந்தப்பெண்ணிடம் ‘’ஓகே ரொம்ப நன்றிம்மா, நான் ஒரு ஃபோன் பண்ணிக்கலாமா?’’ என்றார்.

‘’நோ சார், நோ கால்ஸ் ஃபார் விசிட்டர்ஸ்’’ முகத்தில் அடித்தது போல சொன்னாள். நீண்ட மௌனம். அரங்கசாமிக்கு சுறுக் என்று இருந்தது. கண்கள் சிவந்தது.

இதற்குமேலும் அடக்கிக்கொண்டிருக்க முடியாது.. ‘’ஹேய்.. நான் யார் தெரியுமா.. என் ஸ்டேடஸ் என்ன தெரியுமா? ரங்கா இன்டஸ்ட்ரீஸ் முதலாளி அரங்கசாமின்னா ஊரே நடுங்கும்.. இன்னைக்கும் வேட்டிய மடிச்சி கட்டிட்டு ஒத்தையாளா அம்பது பேர சமாளிப்பேன்.. இன்னைக்குதான் நான் தொழிலதிபர் , ஒருகாலத்துல நான் எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா..

என்னோட சொத்து மதிப்பு என்ன தெரியுமா.. ஐந்நூறு கோடி, ஏன்டி ஒரு போன் பண்ணகூடாதா நானு?

நானும் சாமியாராகிட்டமே இனிமே கோவப்படகூடாதேனு அடங்கி அடங்கி போனா என்னங்கடி ஓவரா பேசறீங்க... ஏரோப்ளேன் தெரியுமா ஏரோப்ளேன் இரண்டு இருக்கு.. ஒரு போன்கால்ல்ல உங்க ஆஸ்ரமத்தையே மூடிடுவேன்.. யார்னு நினைச்சீங்க’’ என்று வேட்டியை மடிச்சிகட்டிக்கொண்டு சிங்கம்போல சீறினார். அவருக்கே பெருமையாக இருந்தது.. எனக்குள்ளயும் ஒரு மிருகம் தூங்கிட்டிருந்திருக்கு பாரேன் என நினைத்துக்கொண்டார்.

அந்தப்பெண்ணோ புன்னகை மாறாமல் கோபமேயில்லாமல் அமைதி தவழ.. ‘’சார் கோபப்படாதீங்க! கூல்! எங்க சாமியாரோட கம்பேர் பண்ணும்போது நீங்க பரம ஏழை, அவருக்கு தனியா ஒரு தீவே சொந்தமா இருக்கு, அவர் அமெரிக்கா போனா அமெரிக்கன் பிரசிடென்ட்டே க்யூல நின்னுதான் தரிசனம் செய்வாரு.. மொத்த சொத்தமதிப்பு ஐம்பதாயிரம் கோடிகளை தாண்டும்.. சாமியார் நினைச்சா கவர்மென்ட்டையே மாத்திடுவாரு, நிலவுல கூட அவருக்கு ஏக்கர் கணக்குல நிலம் இருக்கு.. செவ்வாய்க்கு போய் தியானம் பண்ண ஆல்ரெடி நாசால ரெண்டு டிக்கட் புக் பண்ணி வச்சிருக்காரு.. தயவு செஞ்சு இடத்தை காலிபண்றீங்களா ப்ளீஸ்ஸ்’’ என்றாள். பேயறைஞ்சதுபோல இருந்தது அரங்கசாமிக்கு! அவருக்கு பின்னால் அந்த கடோத்கஜன்கள் கையில் கன்னோடு நின்றுகொண்டிருந்தனர்.

அவளிடம் ஏதும் பேசாமல், தொங்கிய தலையோடு ‘’உங்க டாய்லெட்டயாச்சும் யூஸ் பண்ணிக்கலாமா? இல்ல அதுக்கும் துட்டு கேப்பீங்களா’’ என்று பாவமாய் கேட்டார். தன் அழகிய மென்மையான விரலை நீட்டி கழிவறை இருந்த பகுதியை காண்பித்தாள். சுப்ரமணியும் அவர் பின்னாலேயே ஓடியது.

அரங்கசாமியானந்தா அரைமணிநேரத்தில் துறவறம் துறந்து தொழிலதிபர் அரங்கசாமியாகவே மீண்டும் மாறிவிட்டிருந்தார். ‘’மவனுங்களா.. மாட்டமயா போகப்போறீங்க.. அன்னைக்கு இருக்குடா உங்களுக்கு, ஏதோ துப்பாக்கி வச்சிருக்கீங்களேனு சும்மா விடறேன்’’ என வெறியோடு தன் வீட்டை நோக்கி கிளம்பினார்.. ‘’சுப்ரமணி அப்பாவ தப்பா நினைக்காத துப்பாக்கிக்கு தெரியுமா என் வீரம்..என்ன இருந்தாலும் நம்ம கமலா அளவுக்கு வராது!’’ என ஆறுதலாக பேசியபடி நடந்தார். பின்னாலேயே சுப்ரமணியும் க்விங்க் க்விங்க் என குலைத்தபடி சென்றது!

01 October 2011

முரண்
இந்தப்படமும் சுட்டதுதான். ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் ஸ்ட்ரேன்சர்ஸ் ஆன் ஏ டிரெயின் திரைப்படத்தின் கதையை தழுவி அல்லது திருடி எடுக்கப்பட்ட படம்தான். படத்தில் எந்த இடத்திலும் கிரெடிட் கொடுக்கவில்லை. இருந்துவிட்டு போகட்டும். சலிப்பாக இருக்கிறது கிரெடிட் கொடுக்காமல் உலக சினிமாக்களை காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் புதிய டிரெண்டாகி ‘அது ஒன்னும் தப்பில்லே பாஸு’ என்கிற மனநிலையும் உண்டாகி ஒரு மாமாங்கமாகிவிட்டதால் காப்பி பேஸ்ட் கருமாந்திரங்கள் குறித்து கோபம் கொள்ளாமல் ‘’அடப்போங்கப்பா போரடிக்குது’’ என இத்திரைப்படம் குறித்த பார்வையை மட்டுமே எழுதிவிடுவோம்.

எதிர் எதிர் மனோபாவங்கள் கொண்ட இரண்டுபேர் ஒரு பயணத்தில் இணைகின்றனர். இரண்டு பாத்திரங்களுக்காகவும் பெரிதாக மெனக்கெடாமல் மௌனராகம் கார்த்திக், மோகன் இரண்டு பாத்திரங்களின் அச்சினை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர். ஒருவன் எப்போதும் துறுதுறு இன்னொருவன் எப்போதும் அமைதி. இருவருக்கும் இரண்டு விதமான பிரச்சனைகள். ஒருவனுக்கு காதல் மற்றவனுக்கு கல்யாணம் (இதுவும் ஆல்மோஸ்ட் மௌனராகம்தான்). அதை தீர்க்க ஒரே வழிதான். அது கொலை!.

உனக்காக நான் கொலை பண்றேன்..? எனக்காக நீ கொலை பண்றீயா? டீலா நோடீலா என பேரம் பேசுகிறான் துறுதுறு. மற்றவன் மறுக்கிறான். டீல்னா டீல்தான், கொலை பண்ணியே தீருவேன் என அடம்பிடிக்கும் துறுதுறு இளைஞன்.. போடா என மறுத்துவிட்டு போகிறான் இன்னொருவன். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதையெல்லாம் சொன்னால் ஸ்பாய்லர் பாவம் சும்மாவிடாதென்பதால் மீதி கதையை வேறு விமர்சனங்களில் படித்து தெரிந்துகொள்ளவும்.

பிரசன்னாவின் நடிப்புதான் படத்தின் ஒரே பெரிய பலம். பல இடங்களில் கார்த்திக் போலவே நடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். குரலும் சரி உடல்மொழியிலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சேரனும் நிறைவாகவே நடித்திருக்கிறார். கையறு நிலையிலிருப்பவன், அழுமூஞ்சி, உம்மனாமூஞ்சி என்றாலே இனி சேரன்தான். இந்தபடத்தில் அவருடைய பாத்திரத்தில் வேறு யாரையும் இட்டு நிரப்ப முடியுமா தெரியவில்லை.

படம் முழுக்க நிறைய பெண்கள் கலர்கலராக தழுக்கு மொழுக்குவென வந்துபோனாலும் யாருமே மனதில் ஒட்டவில்லை. அதுதான் படத்தின் சறுக்கலோ என்னவோ? எல்லோருமே நுனிநாக்கு தமிழ் பேசுவதும், வெள்ளையடித்த அந்நியமான முகங்களும் சலிப்பூட்டுகிறது. படத்தின் குறையும் அதுதானோ என்னவோ? கவர்ச்சி கும்மிக்கு நிறைய வாய்ப்பிருந்தும்.. அதை தவிர்த்தமைக்காக இயக்குனருக்கு பாராட்டுகள். கேமரா கோணங்களில் சில இடங்கள் நன்றாக இருந்தாலும்.. பல இடங்களில் மிஷ்கின் வாசனை! (ஒன்னு காலு இல்லாட்டி காஞ்சபுல்லு)

படத்தின் இசை, முதல் ஒரு மணிநேரங்களும் இம்சை. தேவையில்லாத இரைச்சல். மோட்டுவளைய பாத்துகினே மூசிக் போட்டுருக்காப்ளயோனு தோணிச்சி.. அதுபோக படத்தின் முதல் ஒருமணிநேரம் தேவையில்லாமல் ஜவ்வாய் இழுத்து நீட்டி முழக்கி சொல்லப்பட்டதாகவே தோன்றியது. பட்டி டிங்கரிங் பார்த்து எடிட் பண்ணியிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும். இரண்டாம் பாதி செம ஸ்பீடு. நிறைய டுவிஸ்டுகள். அவ்வளவு டுவிஸ்டுகள் வைத்துவிட்டு கிளைமாக்ஸ் மட்டும் பக்கத்து சீட்டு குட்டி பாப்பாக்கள் கூட யூகிக்கிற மாதிரி அமைத்திருக்க வேண்டாம். முதல் பாதி இம்சைகளை கஷ்டபட்டு கடந்துவிட்டால் இரண்டாம்பாதி காலில் வெந்நீரை கொட்டியதுபோல ஒரே பதட்டமும் பரபரப்பும்தான்!.

முரண் – முதல் பாதி ஜவ்வு , இரண்டாம் பாதி ஜிவ்வு!