Pages

31 March 2014

சந்தோஷ் சிவனின் ‘இனம்’இரண்டு இனங்களுக்குள் நடந்த சண்டையை(!) நடுநிலையோடு பாதுக்காப்பான ஒரு குன்றில் ஏறி நின்றுகொண்டு பறவைப்பார்வையில் திரைப்படமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். அவருடைய பார்வையில் இது போர் அல்ல சண்டை அல்லது கலவரம்தான். அதில் ஒரு இனம் தமிழினம். இன்னொரு இனம் என்ன என்றுகூட சொல்ல இயக்குனருக்கு திராணியில்லை.

உலகில் நடுநிலை என்பதைவிட ஒரு டூபாகூர் நிலைப்பாடு வேறெதுவும் இருக்க முடியாது. சயின்டிபிகலி பிலாசபிகலி மற்றும் இன்னபிற எல்லா கலிகளிலும் அது சாத்தியமேயில்லாதது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஏதோ ஒன்றின்மேல் தன்னுடைய சார்புத்தன்மையை வெளிகாட்டிக்கொள்ள தைரியமில்லாத கோழைகள், மறைமுறைமுகமாக அதை பாதுகாக்க முனையும் போலித்தனம்தான் நடுநிலைவாதம்.

நடுநிலையாக இருப்பதாகக் காட்டிக்கொள்வது ரொம்பவும் சிக்கலானது. ஆபத்தானது. கொஞ்சம் மிஸ்ஸானாலும் நம்முடைய நடுநிலைநாடகமே நம்மை அம்பலமாக்கி நிர்வாணமாக்கி நடுரோட்டில் நிறுத்திவிடும். அந்த நடுநிலைவண்டியில்தான் சந்தோஷ்சிவன் இப்படத்தை ஓட்டமுற்படுகிறார். ஆனால் அவருடைய நடுநிலைத்தராசில் சிங்கள ஆதரவு கொஞ்சம் கூடி போய்விட்டது என்பதுதான் சிக்கலே!

இனம் குணம் மணம் மற்றும் மாங்காய்களையெல்லாம் தூக்கி ஒரமாக வைத்துவிட்டு இப்படத்தை வெறும் படமாக மட்டுமே விமர்சித்தால் இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடலாம். இது சரியான மொக்கைப்படம். கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் எடுக்கப்பட்ட ரொம்ப சுமாரான படைப்பு. உலக சினிமாவும் இல்லை உள்ளூர் சினிமாவும் இல்லை.

தொழில்நுட்ப ரீதியிலும் செய்நேர்த்தியிலும் திரைக்கதை அமைப்பிலும் புதுமையுமில்லை மண்ணாங்கட்டியும்மில்லை. ஒழுங்கில்லாத திரைக்கதை, மிக மோசமான படமாக்கல், என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் எதைபற்றி என்பதில் தெளிவின்மை என ஏனோதானோ என்று எடுக்கப்படும் பி கிரேடு படங்களை விட சுமாரான படம். படத்தில் எங்குமே நம்மால் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் வலியையோ வேதனையையோ போரின் கொடுமையையோ அரைடீஸ்பூன் அளவுக்கு கூட உணரமுடியாது. படத்தின் இறுதியில் 2009போரில் மாண்டுபோன மக்களுக்கு சமர்பணம் பண்ணுகிறார்கள். எந்த போர் என்று அங்கேயும் குறிப்பிட வக்கில்லை.

போர்காட்சிகளை இதைவிட கேவலமாக யாருமே படமாக்க முடியாது. ஏதோ நம்ம வீட்டு கொல்லைப்புறத்தில் நடக்கிற அடிதடி சண்டையைப்போல அவை காட்டப்படுகின்றன. சில போக்கிரிகளுக்கு இடையே நடக்கிற துப்பாக்கி சண்டையைப்போல அது படம் பிடிக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் சண்டையெல்லாம் சிரிப்பு ரகம்!

படத்தில் போராளிகளாக காட்டப்படுபவர்கள் எல்லோருமே குழந்தைகளாக அல்லது பதின்பருவ இளைஞர்களாக அமைந்தது தற்செயலானதாக தெரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும்தான் கொஞ்சம் வயதான போராளியாக வருகிறார். மற்ற எல்லா காட்சிகளிலும் குழந்தை போராளிகள் மயம்தான்! படத்தில் போர், சிங்களம், சிங்களவர் , இலங்கை போன்ற வார்த்தைகள் பாதுகாப்புக்காக தவிர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்தது இனக்கலவரமாம்! படத்தில் வருகிற சிங்கள இராணுவத்தினரும் ஆங்கிலத்திலேதான் உரையாடுகிறார்கள்.

தமிழ் போராளிகள் திடீரென பள்ளிகளில் நுழைந்து போர்காட்சிகளை தமிழ்க்குழந்தைகளுக்கு காட்ட அவர்கள் உணர்வெழுச்சியில் இயக்கத்தில் இணைகிறார்கள்! நீரை மட்டும் வடிகட்டிவிட்டு மீனை ஆற்றில் திருப்பிவிடும் அளவுக்கு அன்புள்ளம் கொண்ட நல்ல புத்த பிட்சு ஒருவர் அநாதையாக வருகிற சிறார்களுக்கு மாதுளம் பழம் தருகிறார். சிங்கள ராணுவத்தினரிலும் நல்லவர்கள் இருப்பதாக காட்டப்படுகிறது. இப்படி ஈழத்தமிழர் ஆதரவாளர்களை சூடாக்குகிற காட்சிகள் ஏராளம் இருந்தாலும், சிங்களர்களுக்கு எதிரான காட்சிகளும் படத்தில் இருக்கவே செய்தன.

சிங்கள ராணுவத்தினரின் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அப்படியே படமாக்கப்பட்டிருப்பது பாரட்டுதலுக்குரியது. இந்த ஒன்றைத்தவிர சிங்கள ராணுவம் செய்த தவறாக வேறென்ன காட்டினார்கள் என்று நினைவில்லை.பெரும்பாலான நேரங்களில் சிங்கள ராணுவத்தினர் பொதுமக்களை காப்பாற்றுவதாகத்தான் காட்சிகள் வருகின்றன.

பள்ளியில் பிள்ளைகளுக்கு படமெடுத்துக்கொண்டிருக்கிற கருணாஸ் ‘’உலகில் ஆதியில் மொழிகளே இல்லை. மனிதன் பேச ஆரம்பித்த பிறகுதான் மொழிகள் பிறந்தன. பிறந்த குழந்தைக்கு மொழி கிடையாது. எனவே நாமெல்லாம் நிறைய மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்பது மாதிரி (கிட்டத்தட்ட) ஒரு வசனம் பேசுவார்! மொழியால் பிரிந்து நிற்கிற இனங்களை பற்றிய படத்தில் எவ்வளவு நுட்பமாக வசனம் வைத்திருக்கிறார் பாருங்கள் நம்ம சந்தோஷ்சிவன்! ஒரு அகதிப்பெண் ராமேஸ்வரத்தில் உள்ள தமிழ்நாட்டு அதிகாரியிடம் விவரிப்பதாகவே கதை நகர்கிறது. அப்பெண்ணின் கதையை கேட்டு தமிழ்நாட்டு ஆபீசர் அந்தப்பெண்ணை விடுவித்துவிடுகிறாராம். தமிழ்நாட்டில் இப்படியெல்லாமா நடக்குது?

தியேட்டரில் என்னோடு சேர்த்து மொத்தமாக பத்து பேர்தான் பார்த்தோம். அதில் ஆறு பேர் இன்டர்வெல்லுக்கு சற்றுமுன்பே கிளம்பிவிட , நான்குபேருக்காகத்தான் ஆயிரம் சீட்டு கொள்ளளவுள்ள வுட்லேன்ட்ஸ் தியேட்டரில் படம் ஓடியது! மற்ற மூன்றுபேருக்கும் படம் என்ன சொல்கிறது என்பதே புரியவில்லை என்று வருதப்பட்டார்கள்.

இதுமாதிரி படங்களை சும்மா விட்டிருந்தாலே முதலிரண்டு நாட்களிலேயே தியேட்டர்காரர்களே பார்க்க ஆளில்லாமல் படத்தை தூக்கியிருப்பார்கள். இப்போது தடை அது இது என்று ஏதோ பரபரப்பு நிலவுகிறது. இப்போதுதான் ஆளாளுக்கு படம் எங்கே ஓடுது வான்டூ சீ இமிடியெட்லி என அலப்பறையை கொடுக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்தோஷ் சிவா! இதுதான் வாய்ப்பென்று லிங்குசாமியும் படத்தை வாபஸ் பெற்று தன்னை உத்தம பத்தினி கற்புக்கரசன் என்று நிரூபித்துவிட்டார்.

இப்படத்திற்கு தடைகோரி யார் போராட்டம் பண்ணினார்கள் என்று தெரியவில்லை. படத்தினை விமர்சித்து பல்வேறு அறிக்கைகள் வந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அம்பத்தூர் ராக்கி தியேட்டர் வளாகத்தில் ஐந்தாறுபேர் கறுப்புகொடி காட்டி ஆர்பாட்டம் செய்ததாக தினத்தந்தியில் ஒரு பெட்டிச்செய்தி வந்திருந்தது. சத்யம் திரையரங்கிலும் மிகச்சிலர் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். வேறெங்கும் ஆர்பாட்டமோ தியேட்டர்கள் மீது தாக்குதலோ கூட நடந்ததாக தெரியவில்லை. விஸ்வரூபம் விவகாரம் போல யாரும் படத்தை தடை செய்யவெல்லாம் கோரியதாக தெரியவில்லை. ஆனால் வான்டடாக இவர்களாகவே படத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுவிட்டு இப்போது கருத்துரிமை காட்டெருமை என்றெல்லாம் பிதற்றுவது லூசுத்தனமாக இருக்கிறது.

26 March 2014

தண்டரையில் ஓர் இருளர் பெண்

ரோமுலஸ் விட்டேக்கரை பற்றித் தெரியுமா? தெரியவில்லையென்றாலும் குற்றமில்லை. அவரால் உருவாக்கப்பட்ட கிண்டி பாம்புப்பண்ணையையும் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிற முதலைப்பண்ணையையும் நம்மில் பலரும் அறிந்திருப்போம். இந்தியாவின் மிகமுக்கியமான HERPETALOGY (ஊர்வன மற்றும் நகவர்வன இயல்) ஆய்வாளர் ரோமுலஸ் விட்டேக்கர். அவர் எழுதிய "இந்திய பாம்புகள்" என்கிற நூல் சுற்றுசூழல் ஆர்வமுள்ள பாம்புகள் குறித்து அறியவிரும்புகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.(தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு).

தன்னுடைய வாழ்க்கையை முழுக்கவும் சுற்றுசூழல் மற்றும் அது சார்ந்த முன்னேற்றத்திற்காக அர்பணித்துக்கொண்ட அமெரிக்கர் இவர்! சென்னையிலிருந்து பணியாற்றிவருகிறார். சென்னை முதலை மற்றும் பாம்புப்பணைகள் அல்லாது கர்நாடக மாநிலம் அகும்பேவில் ராஜநாகங்களை காப்பதெற்கென அகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளார். தற்போது கரியல்(GHARIAL) என்கிற அழிந்துவருகிற முதலை இனத்தினை காக்கும் முயற்சிகளில் இருக்கிறார்.

27ஆண்டுகளுக்கு ரோமுலஸும் அவருடைய சகோதரி நினாவும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் உருவாக்கப்பட்டது ITWWS என்கிற இருளர் பழங்குடி பெண்கள் அமைப்பு. பாம்பு பிடித்தல் சட்ட விரோதமாக்கப்பட்டபோது இருளர் இனத்தைசேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர். அதுவரை வயல்களில் வீடுகளில் புகுந்துவிடுகிற பாம்புகளை எலிகளை பிடிப்பதை மட்டுமே தொழிலாக வைத்திருந்தவர்கள் இவர்கள். அவர்களுடைய மறுவாழ்வுக்காக கிண்டி பாம்புகள் ஆராய்ச்சி பண்ணையையும் செங்கல்பட்டு அருகேயிருக்கிற தண்டரை என்கிற கிராமத்தில் இருளர் பழங்குடி பெண்களின் மேம்பாட்டிற்காக ஒரு அமைப்பையும் உருவாக்கியுள்ளார்.

14ஏக்கர் பரப்பளவுள்ள காலி நிலத்தை செப்பனிட்டு அதில் மரங்களை வளர்த்து பண்ணைகளை உருவாக்கி இன்று ஒரு அற்புதமான சமூக காட்டினை கட்டமைத்திருக்கிறார்கள் இருளர் பெண்கள். இந்த இடத்தில் மிகப்பெரிய மூலிகைப்பண்ணையையும் உருவாக்கியுள்ளனர். இன்று ஆறாயிரத்திற்கும் அதிகமான இருளர் பெண்கள் இவ்வமைப்போடு இணைந்து செயல்படுகிறார்கள். மூலிகை ஆராய்ச்சிகளுக்கென மிகப்பெரிய மூலிகை பண்ணையை இந்த அமைப்பிலுள்ள பெண்களே நிர்வகிக்கிறார்கள். கடந்த 27ஆண்டுகளாக இருளர் இன மக்களின் வாழ்வுரிமைக்காகவும் அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது இந்த அமைப்பு.

****இந்த அமைப்பு குறித்து முன்பே அறிந்திருந்தாலும் அங்கே செல்கிற வாய்ப்பு ஒரு முறை கூட அமையவில்லை. அப்படிப்பட்ட இடத்தில்தான் ‘’கதை பேசுவோம்’’ என்கிற ஒரு நாள் இலக்கிய முகாமினை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் நண்பர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஏற்பாடு செய்திருந்தார். அறிவிப்பு வந்ததுமே எனக்கொரு சீட் புக் பண்ணி வைத்துக்கொண்டேன்! (200ரூபாய் கட்டணம்தான் என்றாலும் இலக்கியத்துக்கு இலக்கியமும் ஆச்சு… இடத்தையும் பார்த்துக்கலாம் என்பது என் திட்டம்)

செங்கல்பட்டிலிருந்து நிறைய ரியல் எஸ்டேட் வயல்களை கடந்து நென்மேலி தாண்டினால் இடதுபக்கம் திரும்புகிற மிகச்சிறிய சாலையில் ஒன்றரை கிலோமீட்டரில் தண்டரை கிராமம். மிக அழகான ரம்மியமான மலைப்பகுதி. கோடைகாலத்திலும் வெப்பங்குறைவாக இருந்தது. ஆள்நடமாட்டம் அதிகமில்லை என்று சொல்லமுடியாது. ஆளே இல்லை.

தன்னந்தனியாக குட்டி குட்டி மலையாக சிலவற்றை கடக்கும்போதே மலை அடிவாரத்தில் சிலர் குத்தவைத்து உட்கார்ந்து எதையோடு குடித்துக்கொண்டிருந்தனர். பைக்கை ஓரமாக நிறுத்திவைத்துவிட்டு அருகில் சென்று பார்த்தால்… அருமையான ‘’பனங்கள்’’. எவ்வளவு செலவானாலும் பரவால்ல வாங்கி இரண்டு மடக்கு குடிச்சிடலாம் என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டாலும் போகப்போவது இலக்கிய முகாம்… அதுவும் எஸ்ராவின் இலக்கிய முகாம் என்பதால் ஆசையை சீட்கவரில் வைத்து மூடிவிட்டு பைக்கை கிளப்பினேன்!

நான் உள்ளே செல்ல கூட்டத்திற்கு ஏற்பாட்டாளர்கள் கூட வந்திருக்கவில்லை. அந்த அமைப்பைச்சேர்ந்த ஒரு இளம் பெண் வாசல் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருந்தார். மஞ்சள் சேலையும் மஞ்சள் முகமுமாக மங்களகரமான இதுமாதிரி பெண்களை சென்னையில் எங்கே பார்க்கமுடிகிறது என்று விசனித்தபடி அவரிடம் கூட்டம் இங்கதான் நடக்குதுங்களா என்று விசாரித்தேன். அவருக்கு எஸ்ராவையும் தெரியவில்லை இலக்கியமும் தெரியவில்லை. ஆனால் புத்தக விழா என்பதாக புரிந்திருந்தார். ஒரே ஒரு இலக்கிய வாசகர் மட்டும் வேலூரிலிருந்து கிளம்பிவந்திருந்தார். நானும் அவருமாக அந்தப்பகுதியை சுற்றினோம்.

இந்த அமைப்பினால் உருவாக்கப்பட்டிருக்கிற இந்த காட்டில் பல அரியவகை மரங்களும் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மரத்திற்குமான பெயரையும் அதன் பலனையும் எழுதிவைத்திருக்கிறார்கள். நெய்சட்டி என்கிற மரம் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுகிறதாம். டென்னிஸ்பால் மரம் என்று ஒன்றைப்பார்த்தேன். அதன் காய்கள் டென்னிஸ்பால் போல இருக்குமாம். விசாரித்ததில் அந்த காய் எதற்கும் உதவாது என்றார்கள். ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே.. அந்த இலுப்பை மரம் கூட இங்கே வளர்க்கப்படுகிறது. சோகம் என்னவென்றால் அந்த மரத்தில் ஒரு பூ கூட இல்லை!

திருவோட்டுக்காய் மரம் என்றும் ஒரு மரம் இருக்கிறதுது. அவ்வகை மரங்கள் தமிழ்நாட்டில் கிடையாது. அந்தமானிலிருந்து வரவழைத்து இங்கே வளர்க்கிறார்கள். இம்மரத்திலிருந்து கிடைக்கிற காய்களின் ஓட்டில்தான் சாமியார்கள் திருவோடு தயார்செய்கிறார்கள்! இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கே வந்து திருவோட்டுக்காய் வாங்கிச்செல்வார்களாம் சாமியார்கள்! அம்மரத்தில் ஒரே ஒரு காய்மட்டும் கரும் பச்சைநிறத்தில் இரண்டு திருவோடுகளை ஒட்டிவைத்ததுபோல அல்லது ரக்பி பந்துபோல ஒட்டிக்கொண்டிருந்தது. தட்டிப்பார்த்தேன். ஸ்ட்ராங்காக இருந்தது. பறிக்கலாம் என்று இழுத்தேன்..வரவில்லை. மரம் மட்டும் நெடுநெடுவென தேக்கைப்போல ஓங்குதாங்காக இருந்தது.

மரங்களை கடந்து உள்ளே நுழைய சின்ன கட்டிடங்கள் கட்டியிருக்கிறார்கள். அலுவலகமாகவும் தங்குமிடங்களாகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. ஆராயச்சி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பறவை பார்த்தலுக்காக வருகிறவர்கள் இங்கே தங்கியிருந்துவிட்டு செல்ல வசதியாக அறைகளும் கட்டப்பட்டுள்ளன. மிகக்குறைவான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. முன்பே சொல்லிவைத்துவிட்டால் உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்துவிடுகிறார்கள். எழுத்தாளர்கள் சினிமாக்காரர்கள் பலரும் இங்கே வந்திருந்து தங்கி எழுதுவார்களாம்! நிறைய விழாக்களும் கூட இங்கே நடத்தப்படுகின்றன. குடிப்பது புகைப்பிடிப்பது மற்றும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இங்கே மூலிகைக்காவும் மருத்துவ ஆலோசனைக்காகவும் வருகிறவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்குமாம். காரணம் இங்கே பழங்கால முறைகளில் தயாரித்துக்கொடுக்கிப்படுகிற அசல் மூலிகை மருந்துகள். இங்கேயே மூலிகைகள் தயாரிக்கவும் மருந்துகள் கொடுக்கவும் இருளர் இனத்தைசேர்ந்த ஒரு இளம் வைத்தியரை வைத்திருக்கிறார்கள். அவருடைய பரம்பரையே பாம்புக்கடிக்கும் பிற நோய்களுக்கும் வைத்தியம் பார்த்துவந்தவர்களாம். வழிவழியாக பின்பற்றுகிற முறைகளிலேயே இங்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன என்று சுற்றிக்காட்டினார். இங்கே மூலிகை மசாஜ் மற்றும் மூலிகை குளியலும் கூட உண்டு! 800ரூபாயாம் கட்டணம்.மூலிகைப்பண்ணையில் வெவ்வேறு விதமான மூலிகைகள் மற்றும் அவற்றின் பயன்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். பூனைமீசை என்கிற மூலிகை சிறுநீரக கற்களிருந்தால் நல்ல மருந்தாக இருக்குமாம்! எலும்பொட்டி,கல்முளையான்,வெப்பாலை என விதவிதமான மூலிகை செடிகள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். நண்பர்கள் வாங்கிக்கொண்டனர். மரக்கன்றுகளும் கூட கிடைக்கின்றன. மூலிகை சூரணங்களும் கிடைக்கின்றன. நேரில் வந்து வாங்க வசதியில்லையென்றால் போனில் சொன்னால்கூட கொரியர் செய்துவிடுவார்களாம். இந்தியாவின் பலபகுதிகளுக்கும் மூலிகை சப்ளை இங்கிருந்துதானாம்!

மின்ட் என்றால் இத்தனை நாளும் துளசி அல்லது புதினா என்பதாகவே நானாக நினைத்திருந்தேன். உள்ளே மின்ட் செடி என்றே ஒன்று வைத்திருந்தனர். அதில் ஒரு இலையை பிடுங்கி வாயில் போட்டால்... ஹால்ஸ் மாதிரி தொண்டையில் குளுகுளு...

இலக்கிய கூட்டத்தில் மதியம் ஏதாவது மூலிகை உணவு கொடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் சாதாரண ஃபுல் வெஜ் மீல்ஸ்தான் பரிமாறப்பட்டது. அதுவும் நன்றாகவே சுவையாக இருந்தது. காலையில் துளசி டீயும், மதியம் செம்பருத்தி டீயும் கொடுத்தார்கள். புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. இந்த தூள் கிடைக்குமா என்று விசாரித்தேன். செம்பருத்தி டீ தயாரிக்கவென காயவைத்த செம்பருத்திபூவை அப்படியே தருகிறார்கள். இதை நீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு அந்த நீரை வடிகட்டி அதோடு பனங்கற்கண்டு சுக்கு அல்லது இஞ்சியோடு இஷ்டபட்டால் ஏலக்காயும் போட்டு கலக்கி இறக்கினால் டீ ரெடி என்றார்கள்! துளசி டீக்கும் அதே ரெசிபிதான். செம்பருத்தி மட்டும் கொஞ்சமாக வாங்கிக்கொண்டேன் டேஸ்ட்டு பாக்கவென!

வாரத்தின் ஏழு நாட்களும் இங்கு யார்வேண்டுமானாலும் வரலாமாம். சுற்றிபார்க்க கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. அந்த சூழலும் மரங்களும் பச்சை வாசனையும் அற்புதமாக இருந்தது. விதவிதமான சின்ன சின்ன பறவைகளையும் நிறைய பார்க்க முடிந்தது. நான், இயக்குனர் சசி மற்றும் எஸ்ரா மூவருமாக மூலிகைப்பண்ணையில் சுற்றிக்கொண்டிருந்தோம்.

தலைக்கு மேலே இருந்த கொடுக்கபுளி மரத்தில் கொண்டை வைத்த குருவி ஒன்று அமர்ந்திருந்தது. வால் மட்டும் கருப்பு நிறத்தில். தலையில் மஞ்சளும் சாம்பலுமாக கொண்டை. என்ன குருவிங்க இது என்று பேசிக்கொண்டிருக்க ‘’அது கொண்டாலத்தி என்றார் எஸ்ரா. இன்னும் கூட இதுமாதிரி எண்ணற்ற குட்டிப்பறவைகளை கண்டோம். ஆனால் அவற்றின் பெயர்கள் தெரியவில்லை. ஆனால் நிறைய புகைப்பட கலைஞர்கள் கைகளில் ராக்கெட் லாஞ்சர் போல நீளமான லென்ஸ் கொண்ட கேமராவோடு சுற்றிக்கொண்டும் வெயிட்டிங்கிலும் இருந்தனர்.

இந்த காட்டுப்பகுதிக்கு மிக அருகிலேயே சின்ன சின்ன மலைகள் இருக்கின்றன. இங்கே ட்ரெக்கிங் அழைத்துசெல்லுகிற வசதிகளும் இந்த அமைப்பினர் செய்து தருகிறார்களாம். அடுத்த முறை ஒரு நான்கு நாட்கள் தங்கியிருந்து ட்ரெக்கிங்கெல்லாம் போகலாம் என நண்பர்களும் நானும் முடிவு செய்திருக்கிறோம். நேரம் ஒத்துவரவேண்டும்.

இவ்வமைப்பு குறித்த விபரங்களுக்கு - http://www.itwwsindia.com/
 

***எப்போதும் டொக்கு வைத்து பொறுமையாக ஆடுகிற ராகுல் ட்ராவிட் திடீரென பாலுக்கு பால் சிக்ஸராக அடித்து வெளுவெளுவென்று வெளுத்தால் அதிர்ச்சிகலந்து ஆனந்தமாக இருக்குமில்லையா. அப்படித்தான் இருந்தது எஸ்ராவின் பேச்சு. சிரிப்பதை பற்றிப்பேசினாலும் சீரியஸாகவே பேசக்கூடியவர் இலக்கிய முகாமின் ஒவ்வொரு நொடியிலும் சிரிக்க சிரிக்க அவ்வளவு நகைச்சுவையாகப் பேசினார். மணிக்கணக்கில் சலிக்காமல் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது அவருடைய பேச்சு.

தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள் என்கிற கருத்தில் தமிழின் மிகமுக்கியமான ஐந்து சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அதை ஒட்டி தமிழில் இதுவரை என்னமாதிரியான சிறுகதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை விளக்கினார். நகுலன் மற்றும் ஜிநாகராஜன் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் அவருடைய பேச்சுக்கு சுவாரஸ்யம் கூட்டின. மதியத்திற்கு மேல் உலக இலக்கியத்தில் சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பின் அவசியம் குறித்தும் பேசினார். ஒருநொடிகூட போர் அடிக்காமல் எப்படித்தான் பேசமுடிகிறதோ. அதைவிட ஒவ்வொரு கதையையும் எப்படித்தான் இப்படி நினைவில் வைத்து அதன் சாரத்தையும் அதன் நுட்பத்தையும் விளக்குகிறாரோ என வியந்துகொண்டேயிருந்தேன். ப்ரில்லியன்ட் தலைவா!

கூட்டத்திற்கு 160சொச்சம் பேர் வந்திருந்தனர். வந்த எல்லோருமே ஒவ்வொரு நொடியையும் ரசித்தனர் என்று எந்த கோயிலுக்கும் வந்து சத்தியம் செய்வேன். அவ்வளவு சிறந்த கூட்டமாக இது இருந்தது. ''எஸ்ரா வாசகர் வட்டம் ஆரம்பிக்கலாமா?'' என்று அப்போதிருந்தே ஒரு யோசனை. ஆனால் அவரோ எனக்கு எந்த "அரசியல் வேணாம்ம்ம்'' என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருப்பதால்.. (சூப்பர் ஸ்டாரின் நண்பர்தானே இவரு) முகாமிலேயே எஸ்ரா தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலும் வெளியிடப்பட்டது.

நான் காலையில் தண்டரையில் நுழைந்த போது மஞ்சள் சேலை அணிந்த ஒரு இளம் பெண் வாசல் தெளித்து கோலமிட்டுக்கொண்டிருந்தாரே… அவர் எஸ்ராவின் பேச்சை ரொம்பவும் ரசித்துக்கேட்டுக்கொண்டிருந்தார். கிளம்பும்போதுதான் கவனித்தேன்.

அவரிடம் ‘’என்னங்க உங்களுக்கு எஸ்ராவை முன்னாலயே தெரியுமா, அவருடைய புத்தகம் எதாச்சும் படிச்சிருக்கீங்களா’’ என்று விசாரித்தேன். ‘’இல்லைங்க’’ என்று புன்னகைத்தார். ‘’டிவில பார்த்திருக்கீங்களோ’’ மேலும் தொடர்ந்தேன்.

‘’அதெல்லாம் இல்லைங்க இப்பதான் பஸ்ட் டைம் இவரை பாக்குறேன்… அவர் பேசுறதை காலைலருந்து கேட்கறேன் ரொம்ப நல்லா பேசுறார்ல.. ரொம்ப பிடிச்சிருந்துச்சுங்க,, அதான் ஒரு புக் உடனே வாங்கிட்டேன்’’ என்று தன் கையிலிருந்து புத்தகப்பையை என்னிடம் நீட்டினார். அது எஸ்ராவின் சிறுகதை தொகுப்பு.
24 March 2014

எழுத்தாளர் கமலஹாசன்
கமலஹாசனின் ஆளவந்தான் படம் வெளியான சமயத்தில் அப்படத்தை பத்துக்கும் அதிகமான தடவைகள் தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறேன். ஒரு முழு தீபாவளியை முழுங்கிய திரைப்படம். அது வணிகரீதியில் தோல்வியடைந்த படம்தான் என்றாலும் ஏனோ அக்காலகட்டத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. படம் வெளியான நேர பரபரப்பில் இது கமலஹாசன் எழுதிய தாயம் என்கிற சிறுகதையைத்தான் படமாக எடுத்திருப்பதாக அப்போதைய குமுதமோ விகடனோ எதிலோ படித்த நினைவு.

அப்போதிருந்தே தாயம் கதையை படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலும் அக்கதை எங்குமே கிடைக்கவில்லை. பலநேரங்களில் எழுத்துலகில் ஒரு கவிஞராக மட்டுமே அறியப்படும் கமலஹாசன் எழுதிய ஒரே கதை இதுதான் என்று நினைக்கிறேன். வேறுகதைகளும் எழுதியிருக்கலாம்.

நண்பர் கிங்விஸ்வா என்கிற காமிக்ஸ் விஸ்வா பழைய நூல்களை தேடிப்பிடித்து வாங்கி சேர்ப்பதில் கில்லாடி. கமலஹாசனிடமே கூட இல்லாத இக்கதையின் பிரதியை எங்கோ பழைய புத்தக கடையில் வலைவீசி பிடித்துவிட்டார். எந்த இடம் என்கிற கம்பெனி ரகசியத்தை எவ்வளவு அடித்துக்கேட்டும் கடைசிவரை சொல்ல மறுத்துவிட்டார். (முன்பு ஜெயலலிதா எழுதிய நாவல் கூட அவரிடம் இருக்கிறது!)

யாரோ தொகுத்திருந்த இந்த தொடர்கதை பைண்டிங்கை கண்டதும் உடனே எனக்கும் தெரிவித்தார். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணிநேரத்தில் டகால் என முடிந்துவிட்டது. நிறைய ஆச்சர்யங்கள். சில அதிர்ச்சிகள். ஒப்பீடுகள் என சுவாரஸ்யமான வாசிப்பனுபவம்.
முதலில் தாயம் குறித்த சில தகவல்கள்.

*தாயம் என்பது சிறுகதை என்றே முதலில் நினைத்திருந்தேன், அது சிறுகதை அல்ல தொடர்கதை.

*இதயம்பேசுகிறது இதழில் 3-7-1983 தொடங்கி வெளியானது

*மொத்தம் 37 வாரங்கள் இக்கதை பிரசுரமாகியிருக்கிறது

முப்பதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையை (இது வெளியானபோது எனக்கு வயது 3மாதங்கள்!) இத்தனை காலத்திற்கு பிறகு வாசிப்பதே அலாதியான அனுபவமாக இருந்தது. கதை என்னவோ ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் படிக்கும்போது ஆளவந்தான் படத்தின் கதையோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு படித்துக்கொண்டிருந்தேன்.

கடகடவென ஒரு பல்ப் ஃபிக்சன் நாவலைப்போல (அதானோ?) ஒரே மூச்சில் இரண்டு மணிநேரத்தில் படித்துமுடித்துவிட்டேன். எந்த இடத்திலும் போர் அடிக்காத தட்டாத வழவழ எழுத்து நடை. (கதையை இதயம்பேசுகிறது ஆசிரியர் மணியன் எடிட் செய்திருக்கலாம்). வாரம் ஒரு ட்விஸ்ட்டெல்லாம் வைக்காமல் எழுதியதும் பிடித்திருந்தது.

கமல் முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இன்டலெக்சுவல்தான் என்பதால் அப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றாற் போல சித்தர் பாடல்கள், ஹிந்து MYTHOLOGY மாதிரி விஷயங்களை பேசுகிறார். சுஜாதா சூப்பர்ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை இது என்பதால் 99சதவீத சுஜாதா பாதிப்பு கதை முழுக்க. அழகான பெண்கள் குறித்த வர்ணனையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுவது, விவரிப்புகளில் அதிகமாக இழு இழுவென்று நீட்டி முழக்கமால் கச்சிதமாக வெட்டிச்செல்வது என எங்கும் சுஜாதா ட்ச். (வசனங்களாலேயே பெரும்பாலும் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நூலில் வருகிற எல்லோருமே அறிவுஜீவியைப்போலவே பேசுவது கூட சூப்பர்தான்!)

தொடர்கதைக்கு ஓவியம் வரைந்திருப்பவர் ஜெயராஜ். அவருடைய ஒவியங்களில் வருகிற ஆண்கள் கமலஹாசன் போலவேதான் இருப்பார்கள். இதில் எந்த தயக்கமும் இல்லாமல் கதை நாயகன் நந்து மற்றும் விஜயை கமலஹாசனாகவே வரைந்து தள்ளியிருக்கிறார். ஆனால் ஹீரோயினுக்கு அடையாளமின்றி வரைந்துவிட்டிருக்கிறார். ஆளவந்தான் படத்தில்வருவதைப்போல நந்து முதலிலிருந்து மொட்டையாக இல்லாமல் நன்றாக முடியுடன் அழகாகவே இருக்கிறான். கிளைமாக்ஸில்தான் மொட்டைபோட்டுக்கொள்கிறான். டபுள் ஆக்சன் வேறுபாட்டுக்கு என்ன செய்வது? எனவே நந்துவுக்கு மீசைமட்டும் கிடையாது.

படத்தை பார்த்துவிட்டதால் அதோடு ஒப்பிடாமல் எப்படி வாசிப்பது. இது லோபட்ஜெட்டில் எழுதப்பட்ட கதை. பின்னாளில் மிக அதிக பட்ஜெட்டில் படமாக்கியிருக்கிறார்கள். கதையில் ஊட்டியில்தான் கதை முழுக்கவே நகர்கிறது. நாயகன் விஜய் கோவையில்தான் போலீஸ் ஆபீசராக வருகிறான்! நாயகி நியூஸெல்லாம் வாசிக்கவில்லை. ஆனால் விதவை. படத்தில் இதுமாற்றப்பட்டிருக்கும். இதுபோல நிறையவே விஷயங்களை மாற்றியிருந்தாலும் அடிப்படையான மேட்டரில் கைவைக்கவில்லை. அதே சித்திகொடுமை, அதே மென்டல் ஆஸ்பிட்டல், தப்பித்தல் எல்லாம் இதிலும் உண்டு. கிளைமாக்ஸ் கூட அதிக பிரமாண்டங்கள் இல்லாமல் எளிமையாக முடிகிறது! கதை முழுக்கவே இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கில்மா காட்சிகள் வருகிறமாதிரி பார்த்துக்கொள்கிறார் கமலஹாசன். இக்கதையை எழுதுவதற்காக மனநல மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்தாராம் கமல்.

வாசகர்களும் வாராவாரம் ஆரவாரமான வரவேற்பை இத்தொடருக்கு வழங்கியுள்ளனர். நடுவில் இரண்டுவாரம் வெளிநாட்டுக்கு சூட்டிங் போய்விட தொடர் வரவில்லை என கொந்ததளித்திருக்கிறார்கள் கமலின் வாசகர்கள்! அதற்காக அடுத்த வாரமே கமல் வருத்தப்பட்டு என்னாச்சி என்று விளக்கி தன்னிலை விளக்க கடிதமெல்லாம் எழுதி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இந்த அரிய நாவலை கமலின் அனுமதியோடு மீண்டும் பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறார் நண்பர். மீண்டும் இந்நாவல் வெளியானால் நிச்சயம் பெரிய அளவில் விற்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும்.
***


இந்த இதயம்பேசுகிறது இதழில் சில்க் ஸ்மிதா தோன்றிய ஒரு ப்ரா விளம்பரம் மிகவும் கவர்ந்தது. இந்த கட்டுரைக்கு இலவச இணைப்பாக அந்த அரிய விளம்பரம். சில்க்ஸ்மிதா தோன்றும் ப்ராவிளம்பரத்தை உங்கள் அபிமான தியேட்டர்களில் கண்டுரசியுங்கள் என ரசிக்கவைத்திருக்கிறார்கள்.
***

18 March 2014

அறுபத்து மூவர் விழாவிலிருந்து...

சென்னைக்கு வந்து பத்து ப்ளஸ் ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஒருமுறைகூட இந்த அறுப்பது மூவர் விழாவிற்கு சென்றதில்லை. மைலாப்பூர் என்றாலே ஏனோ ஒவ்வாமை. அது அய்யமாருங்க திருவிழா தோழர்! அதுக்கு போய் எவனாவது போவானா என்கிற முற்போக்கு மென்டாலிட்டியாகக் கூட இருக்கலாம். இந்த முறைதான் நண்பர் சக்ஸ் விழா துவங்கியதிலிருந்தே வற்புறுத்தி அழைத்த்துக்கொண்டிருந்தார். அவருக்காகவே இம்முறை அறுபத்துமூவரை தரிசிக்க கிளம்பினேன். மூன்றுமணிநேரம் சுற்றியதில் இது ஐயருங்களுக்கான திருவிழா இல்லை என்பதுமட்டும் புரிந்தது!

***

கடுமையான ட்ராபிக்கால் லேட்டாகி, நான் போகும் போதே அறுபத்து மூவரும் கோயிலை சுற்றி வலம்வந்து முடித்திருந்தனர். இப்போது மற்ற உள்ளூர் தெய்வங்களின் முறைபோல… வரிசையாக ஒவ்வொரு அம்மனாக வலம் வந்துகொண்டிருந்தனர். ‘’திருவள்ளுவர் வாசுகி’’ கூட இந்த வரிசையில் பார்க்க முடிந்தது! அவரையும் கடவுளாக்கி பட்டையும் கொட்டையுமாக அலங்கரித்திருந்தனர்! முண்டக கன்னி அம்மனின் தரிசனம் கிடைத்தது.

***

எங்கு பார்த்தாலும் கிராமத்து தேர்த்திருவிழாவைப்போல தாவணி கட்டிய சின்னப் பெண்கள், தெனாவெட்டாக திரியும் விடலைப்பையன்கள், கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு பட்டுசேலையை தூக்கிப்பிடித்த படி நடக்கிற இளம் தாய்மார்கள், வயசான பெண்கள், கையில் குச்சி ஐஸை சூப்பியபடி திருதிருவென வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிகிற குட்டிகுட்டி குழந்தைகள், தன் மகன் அல்லது மகளின் கைகளை பற்றியபடி நடுங்கிக்கொண்டே நினைவுகளை அசைபோட்ட படி நடக்கிற வயதான தாத்தா பாட்டிகள், தலைக்கு மேல் குழந்தையை உட்காரவைத்துக்கொண்டு அதோ பார் சாமி என காட்டுகிற அப்பாமார்கள், பின்னாலிருந்து நம்மை தள்ளி தள்ளியே நகர்த்துகிற நெரிசல் கூட்டம், நாலடிக்கு ஒருமுறை இலவசமாக கிடைக்கிற நீர்மோர், தூரத்தில் மைக்கில் அலறுகிற பக்தி பாடல், பல்லக்கில் பவனிவரும் சாமிகள், பல்லக்கு வண்டியில் அமர்ந்துகொண்டு விபூதியை தூக்கிவீசும் பூசாரிகள் என எல்லாமே எல்லாமே.. நம்முடைய ஊர் நினைவுகளை தூண்டுகிற ஐட்டங்கள்தான்.

***

ஒருபக்கம் ஒலிப்பெருக்கி வைத்துக்கொண்டு பந்தலுக்கு பந்தல் இஷ்டப்பட்ட பாட்டுகளை ஒலிக்க விட்ட உயிரை வாங்கிக்கொண்டிருந்தால் இன்னொரு பக்கம் பாங் பாங் என ஏதோ வினோதமான வாத்தியத்தை வைத்துக்கொண்டு இளைஞர்கள் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தனர். ஜிகினா பேப்பர் ஒட்டிய அந்த கூம்புக் கருவியிலிருந்து வருகிற ஒலி மிகமிக மோசமாக இருந்தது. ஏதோ லோக்கல் VUVUZELAவாக இருக்குமென்று நினைக்கிறேன். வூவூசிலா சத்தம் சன்னமாக ஒலித்து காதை பஞ்சராக்கும். இது தடியாக ஒலித்து காதை கிழிக்கிறது. இதை தெருவுக்கு தெரு வரிசையாக கோன் ஐஸ் போல அடுக்கிவைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். நானும் ஒன்று வாங்கி ஊதலாம் என்று நினைத்தேன். பேரம் பேசினேன்… நான் கேட்ட விலை அவனுக்கு சுற்றியிருந்த இரைச்சலில் காதில் கேட்கவேயில்லை.. அவன் சொல்கிற விலையும் கேட்க விருப்பமாக இல்லை… கடைசியில் பேரம் படியாமல் வாங்கவில்லை.

***

வழியெங்கும் சின்ன சின்ன பந்தல்கள் வைத்து ஏதேதோ கொடுத்துக்கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் க்யூ.. க்யூவில்லையென்றால் கடும் தள்ளுமுள்ளு.. அடிதடி ரகளைதான். எல்லாமே ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ! ஊரில் தேர்த்திருவிழாவில் நீர்மோர், ஜூஸ் மட்டும் இலவசமாக கொடுப்பதை பார்த்திருக்கிறேன். இந்த மைலாப்பூர் விழாவில் எதுவேண்டுமானாலும் தானமாக கொடுக்கலாம் என்று இருக்கிறது போல. கிடைத்ததையெல்லாம் அவரவர் வசதிக்கு தக்கன எது முடியுமோ அதையெல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தனர். இதையெல்லாம் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு வாங்கும்போது நாமும் ஒரு குட்டிப்பையனாக உணர தொடங்கிவிடுகிறோம்.

***

ஒரு இடத்தில் நோட்புக்கு பேனா பென்சில்கள் கூட கொடுக்கப்பட்டன. குழந்தைகளுக்கு மத்தியில் நானும் போய் கையை நீட்டினேன் பேனா கொடுத்துக்கொண்டிருந்த குட்டிபையன் என் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஏதோ யோசித்துவிட்டு பேனாவை கொடுக்காமல் கையை வேறொரு பக்கமாக நீட்டினான். தம்பீ இங்கே ஓன்னு குடுப்பா என்றேன்.. அண்ணா ஒரு ஆளு ஒருபேனாதான்.. சும்மா சும்மா வராதீங்க என்றான். நான் இன்னும் வாங்கவே இல்லப்பா. என்றேன். பொய் வேற சொல்லாதீங்கண்ணா போங்கண்ணா இவ்ளோ பெரிசா இருந்துகிட்டு என்றான். இதற்குமேலும் பேசினால் அப்படியே லெஃப்டில் போய் மைலாப்பூர் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என கருதி அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டேன்.

ஒரு பந்தலில் ரோஸ்மில்க் கிடைத்தது. பிறகு இன்னொரு பந்தலில் புளிசாதம், அப்புறம் சாம்பார் சாதம், அப்புறம் அருமையான சுவையான வெண்பொங்கல். வெண்பொங்கலுக்குதான் ஏக அடிதடி! என்னால் இலையை கூட வாங்க முடியவில்லை. நண்பர் பாரதிதம்பிதான் அந்த கூட்டத்திலும் முண்டியடித்து தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் வெண்பொங்கலை வாங்கிக்காட்டினார். அதே பந்தலில் ஒரமாக ஒரு பையன் கேட்பவருக்கெல்லாம் ஒரு வாட்டர் பாக்கெட்டை தூக்கி தூக்கி வீசி கொண்டிருந்தான். நான் ஒன்று கேட்டேன்.. நேராக வீசிய வாட்டர்பாக்கெட் நெற்றியில் பட்டு… உடைந்தது. அதைதுடைத்துப்போட்டுவிட்டு சுடச்சுட தரப்பட்ட அந்த சூப்பர் பொங்கலை சுவைத்தோம்! ஆஹா என்ன ருசி. வயிறு நிறைந்திருந்தது. பிரியாணி கூட கொடுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் செல்வதற்குள் முடிந்துவிட்டிருந்தது. வயிற்றிலும் இடமில்லை.

வாழைப்பழம், அப்புறம் தர்பூசணிப்பழம், திராட்சை ஜூஸ். இன்னொரு இடத்தில் ஐஸ்க்ரீம். வேறொரு இடத்தில் க்ரீம் பிஸ்கட். சாலையிலேயே தோசைக்கல் வைத்து கல்தோசைகளை வார்த்து வார்த்து கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அங்கும் கட்டுக்கடங்காத கூட்டம். வயிற்றிலும் இடமில்லை என்பதால் கடந்துவிட்டோம்.
நின்ற இடத்தில் ஒரு மேரி பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஆளுக்கு இரண்டு என்று கூட தானதர்மங்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஏழை மக்கள் வீட்டிலிருந்து வரும்போதே பெரிய பை ஒன்றை எடுத்து வந்து கிடைப்பதையெல்லாம் வாங்கி வாங்கி சேகரித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் மூட்டை அளவுக்கு தேத்தியிருந்தார்கள். நான்கூட ஒரு பை கொண்டுவந்திருக்கலாம் என்று வருந்தினேன்.

***

ஜூன்ஸ் அணிந்த இளைஞர் ஒருவர் டைரி மில்க் சாக்லேட்டுகள் கொடுத்துக்கொண்டிருந்தார். அனேகமாக காதலில் வெற்றியடைந்த இளைஞரின் நேர்த்திகடனாக இருந்திருக்கும்.. நானும் ஒன்னு வாங்கிக்கொண்டு காதலுக்கு மரியாதை செலுத்தினேன்.

***

எங்கு சுற்றினாலும் தொடர்ந்து ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டிருந்த காணாமல் போனவர் பற்றிய அறிவிப்புகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. நான் சுற்றிய இரண்டு மணிநேரத்தில் 500 பேர் பெயராவது அறிவிக்கப்பட்டிருக்கும். அதில் ஐம்பது குழந்தைகளாவது தேறும். சில இடங்களில் சில தாய்மார்கள் குழந்தையை தொலைத்துவிட்டு கதறி கதறி அழுதுகொண்டிருந்ததை பார்க்க பதைக்க வைத்தது. சிலர் கைக்குழந்தையுடன் வந்திருந்து நெரிசலில் அந்தகுழந்தையை வைத்துக்கொள்ளமுடியாமல் அவர்களும் நசுங்கி குழந்தையையும் போட்டு நசுக்கி அது கதறி… அய்யயோ இவனுங்க பக்தில கொள்ளிய வைக்க…

ஆனால் அறிவிக்கப்பட்ட பெயர்களும் அவர்களுடைய ஊர்களையும் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது, சென்னையை சுற்றியுள்ள எண்ணற்ற குட்டி குட்டி கிராமங்களிலிருந்தும் ஆட்கள் திரண்டு வந்திருந்தனர். உள்ளூர் மடிசார் மாமிகள் ஒப்பீட்டளவில் குறைவுதான். வந்திருந்த பலரும் திருவள்ளூர், திருவொற்றியூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துக்கு அந்தப்பக்கம் வசிப்பவர்கள் என்பதை உணர முடிந்தது.

***

திடீர் திடீர் என போலீஸ்காரர்கள் யாராவது பையன்களை சட்டையோடு கொத்தாக பிடித்து இழுத்துச்சென்று அடி வெளுத்துக்கொண்டிருந்தனர். நண்பர் கேமராவோடு வந்திருந்தார், அவர் இப்படி அடித்துக்கொண்டிருந்த போலீஸ்காரரை படமெடுக்க.. போலீஸ்கார் நண்பரை ப்ரஸ் என நினைத்திருப்பாரோ என்னவோ ‘’ஒரு சின்னப்புள்ள மார புடிச்சி அமுக்கிருக்கானுங்க’’ என்று சொல்லிவிட்டு இன்னும் வலுவாக அவனுடைய பொடனியிலேயே ஒன்னு போட்டார். இப்படி பிடித்துக்கொண்டு போன பையன்களில் பலரும் குடித்திருந்தனர் என்பது குறிப்பிடப்படவேண்டியது.

***

சாந்தோம் சர்ச் இப்போது இருக்கிற இடத்தில்தான் மயிலாப்பூர் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துதான் போர்ச்சுகீசியர்கள் சாந்தோம் சர்ச்சை கட்டியதாகவும் , அதனால் நாம் இழந்த பெருமையை மீட்க வேண்டாமா என்ன செய்யப்போகிறோம் என்பது மாதிரி கேள்வி கேட்டு ஒரு துண்டு பிரசுரம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. யார் அடித்தது எந்த அமைப்பு ஒரு விபரமும் இல்லை. ஆனால் அந்த துண்டு பிரசுரத்தின் நோக்கம் சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு மயிலாப்பூர் கோயிலை விரிவுபடுத்த வேண்டும் என்பது.. இது மாதிரி கோயில் இடிப்புகளுக்குப் பேர் போனவர்கள் யார் என்பது நமக்கே தெரியும் என்பதால் பொங்கல் சாப்பிட்ட கையை துடைக்க அதை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டேன்.

***

மைலாப்பூர் கோயிலை ஒட்டி பாரம்பரியமிக்க ஒரு சிட்பண்ட் இருக்கிறது. கூட்டத்தில் அந்த பக்கமாக ஒதுங்கினோம். மாதம் இரண்டாயிரம், ஐந்தாயிரம் என சீட்டு பிடிக்கிறார்கள் போல… போஸ்டர் ஒன்று கண்ணில் பட்டது. அதை பார்த்துவிட்டு அந்த அலுவலக வாசலில் கடைபோட்டிருந்த ஒரு தாத்தாவிடம் என்ன தாத்தா இங்க சீட்டு போட்டா பணம் வருமா என்று விசாரித்தார் நண்பர். அந்த தாத்தா ஏற இறங்க ஒரு பார்வையை வீசிவிட்டு… வரும் ஆனா வராது என்றார்! என்ன தாத்தா 60 வருஷ பாரம்பரியம் அது இதுனு போட்டிருக்கே என்றோம். மீண்டும் பார்த்துவிட்டு நான் சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம் என்றார். அதற்குள் எங்களுடைய பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் வந்து… ‘’சார் உங்க பணத்தை கொண்டு போய் மைலாப்பூர் குளத்துல போடுங்க , ஆனா இங்க மட்டும் வேண்டாம்’’ என்றார்.. என்னங்கடா சும்மா விசாரிச்சதுக்கே திகில் படத்துல வர வாட்ச்மேன் மாதிரி இப்படி பயமுறுத்தறீங்க.. என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்க.. அந்த பக்கமாக ஏதோ பெருமாள் போல.. ஆளாளுக்கு கோயிந்தா கோயிந்தா என்று குரல் கொடுக்க…

14 March 2014

நட்பில் கலக்கும் நஞ்சு
நட்பில் கலக்கும் நஞ்சு...

‘’இப்பல்லாம் அவனை கண்டாலே பேசவே பிடிக்கறதில்லைங்க, ஏன்னே தெரியல. ஃபேஸ்புக்ல அவன் பேரை பார்த்தாலே கடுப்பாகுது, நேத்து கூட ஃபேஸ்புக் சாட்டிங்ல வந்து ஹாய் மச்சான் ஊய் மச்சான்றான்.. நான் அப்படியே கண்டுக்காம இருந்துட்டேன், அப்புறம் வாட்ஸ் அப்ல வந்தான்… ஓத்தா போடானு நெனச்சிகிட்டு ஒரு வார்த்தை கூட பதில் சொல்லலீயே… சாவட்டும் சனியன்’’ என்று வெறுப்போடு பேசினார் அந்த நண்பர்.

‘’என்னங்க விஷயம், அவர் உங்க ரொம்பவருஷத்து ஃபிரண்டு. ஸ்கூல்ல ஒன்னா படிச்சவர், அவர் எதும் உங்கள்ட்ட கடன் கிடன் வாங்கிட்டு ஏமாத்திட்டாரா, இல்ல தண்ணிய போட்டுட்டு திட்டிட்டாரா’’ என்று விசாரித்தேன்.

‘’நான்தான்ங்க அவன்கிட்ட காசு வாங்கிட்டு இன்னும் திருப்பிகுடுக்கல.. அவன் காசு விஷயத்துல ரொம்ப நல்லவன்.. குடுத்த காசை ஒரு நாளும் கேட்டதில்லை.. தண்ணி அடிச்சாதான் அவனுக்கு என் மேல பாசமே வரும்.. பிரச்சனை அதில்லைங்க இது வேற’’ என்றார் அந்த நல்லவர்.

‘’என்ன பிராப்ளம்’’

‘’நான் தினமும் பாக்குறேன்.. அந்த **** பயலுக்கு லைக்கு போடறதும், அவனோட கொஞ்சி கொஞ்சி கமென்ட்டு பண்றதும் என்னங்க இது.. அந்த *** நாயி என்னை பத்தி என்னல்லாம் முன்ன எழுதினான். என்னை பத்தி எழுதிருந்தா கூட பரவால்ல என் பர்சனல்விஷயத்தை பத்தி எப்படிலாம் எழுதி அசிங்கப்படுத்தினான் அவனோட இவனுக்கென்ன உறவு… எனக்கு நடந்ததெல்லாம் அவனுக்கு தெரியாதா, அவன் எவ்ளோ கேவலமானவன்னு சொல்லிதான் தெரியணுமா.. அவன்ட்ட பேசினா நான் கோவப்படுவேனு கொஞ்சமாச்சும் தெரியவேணாமா’’ என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார்.

‘’புரியுதுங்க.. ஆனா அந்த *** இப்போ மோடி எதிர்ப்பு அதுமாதிரி ஏதோ நிறைய எழுதறாப்ல, அவருடம் முன்னமாதிரி இல்ல.. நிறைய திருந்திட்டாரு போலருக்கே.. உங்க நண்பரும் மோடி எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு உள்ளவர்தானே அதனால லைக்கு போட்டு கமென்ட்ல ஆதரவு தெரிவிக்கிறாரா இருக்கும்.. அதுக்கொசரம் அவர்மேல கோவப்பட்டா என்னங்க அர்த்தம்’’ என்று சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் கோபம் குறைவதாக இல்லை.

‘’உங்களுக்கு தெரியாதுங்க… அவன் நான் கோவப்படணும்னு வேணும்னே பண்றான்… கல்லூளிமங்கன்’’ என்று பொரிந்துதள்ளினார்.

‘’ஏன்ங்க லைக்கு கமென்ட் போட்டதுக்கெல்லாமா நண்பரை வெறுப்பாங்க.. என்னதான் அவிங்களுக்கு லைக்கு கமென்ட்டுலாம் போட்டாலும் நீங்கதான் அவருக்கு முக்கியமானவரா இருப்பீங்கனு கூடவா உங்களுக்கு புரியல…’’

‘’இல்லைங்க அவன் என்னை வெறுப்பேத்தனும்னுதான் செய்றான்’’ என்று சொன்னதையே சொன்னார்.

‘’இதப்பாருங்க… இந்த ஃபேஸ்புக் லைக் கமென்ட்லாம் அடுத்த ஸ்டேடஸ் போடறவரைதான் தாக்குபிடிக்கும்! உங்க நட்பு எத்தன வருஷத்து நட்பு, இந்த மொக்கை மேட்டருக்கு போய் என்னங்க நீங்க’’ என்று மேலும் தொடர்ந்தேன். ஆனால் அவர் காதுகொடுப்பதாக இல்லை.
அந்த நண்பரின் மீது இப்போதும் காழ்ப்புணர்ச்சியோடுதான் இருக்கிறார். நண்பரின் நண்பரும் அந்த ****ருக்கு நிறைய லைக்கும் கமென்டுமாக உற்சாகமாக இருக்கிறார். இவர் எப்போது என்னிடம் பேசினாலும் அந்த நண்பரைப்பற்றி ரொம்பவும் கேவலமாக திட்ட ஆரம்பித்துவிடுவார்.

ஒரு நல்ல நட்பு கண்ணுக்கு முன்னால் உடைந்துபோவதை பார்க்க சகிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை. சமூக வலைதளங்கள் நமக்கு கொடுத்திருகிற அற்புதமான பரிசுகளில் இதுவும் ஒன்று. சமூக வலைதளங்கள் நமக்கு நிறையவே புதிய நண்பர்களை கொடுத்திருக்கிறது தனிமையை விரட்டுகிறது நிறைய புதிய தகவல்களை கொடுக்கிறது மாதிரியான ஜாலி ஜல்லிகளை தூக்கி ஓரமாக வைத்துவிடுவோம். அதன் ஆபத்தான பின்விளைவாகவே மேற்சொன்ன விஷயத்தை பார்க்கிறேன்.

நம்முடைய மெய்யுலக நண்பர்களை கொஞ்ச கொஞ்சமாக நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து பிரிக்கவல்ல பிரச்சனை இது. நிஜவாழ்க்கையில் நம்முடைய அன்புக்கு பாத்திரமானவர்களை இந்த ஃபேஸ்புக் நம்மிடமிருந்து மெதுமெதுவாக அந்நியமாக்குவதை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் எப்போதும் எனக்கு ஏற்படுவதுண்டு. அதில் ஒரு துளிதான் மேலே என்னோடு உரையாடிய நண்பரின் பிரச்சனை.

இன்றைக்கு கிட்டத்தட்ட நம்முடைய மாமன் மச்சானில் தொடங்கி நம்மோடு தொடர்புள்ள சகலரும் சமூகவலைதளங்களுக்கு வந்துவிட்டனர். சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் வைத்திருப்பதன் மகத்துவம் குறித்து கலைஞரே சிலாகித்து எழுதுகிறார். இன்று மெய்யுலகில் நம்மோடு நண்பராக இருக்கிறவர் இங்கே மெய்நிகர் உலகிலும் நண்பராகவே இருக்கிறார். இதுதான் இப்பிரச்சனையின் முதல்புள்ளி. இங்கிருந்துதான் நம்முடைய நீண்டகால நண்பர்களை இழக்க ஆரம்பித்திருக்கிறோம்.

இந்த ஆபத்தான சின்ட்ரோமுக்கு என்னுடைய சக நண்பர்களும் நானுமே கூட பலியாவதையும் பலியாகிக்கொண்டிருப்பதையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் இதை தடுக்கவே முடியாத கையறுநிலைதான் இப்போதும் நீடிக்கிறது. சொல்லப்போனால் நாளுக்கு நாள் அது எல்லோரிடமும் அதிகமாக பரவுவதையும் காண்கிறேன்.

ஃபேஸ்புக்கில் நமக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் நண்பர்கள் எதிரிகள் என சகலரும் நம்முடைய நட்பு பட்டியலில் இருக்கிறார்கள். நமக்கு ஆகாதவர்களை நாம் நட்பு பட்டியலில் இருந்து நீக்கிவிடாலம்தான் என்றாலும் அவர்களுடைய ஸ்டேடஸ்களும் நடவடிக்கைகளும் கூட டைம்லைனில் எப்போதும் கண்ணில் படுகிறது. அதை அப்படியே கண்டும் காணாதது போல கடந்துவிடலாம்.டிவிட்டரில் இந்த சிக்கலில்லை. ஃபாலோ பண்ணினால்தான் பார்க்க முடியும். துஷ்டனை கண்டால் தூர விலகு!

ஆனால் சிக்கல் என்ன தெரியுமா? நிஜவாழ்வில் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறவர்கள் இந்த துஷ்டர்களின் ஸ்டேடஸ்களுக்கு லைக்கு போட்டாலோ கமென்ட்டு பண்ணினாலோ அதையும் குறிப்பிட்டு காட்டித்தொலைத்தும் விடுகிறது ஃபேஸ்புக். இன்னார் இன்னார் ஸ்டேடஸை லைக் பண்ணியிருக்கிறார்.. கமென்டு பண்ணியிருக்கிறார் என்பது மாதிரி எதையாவது போட்டு நம்முடைய கோபத்தை தூண்டிவிடுகிறது. ஃபேஸ்புக்கில் மட்டுமில்லை ட்விட்டரிலும் நமக்கு ஆகாதவருடன் நம்முடைய நண்பர் உரையாடிக்கொண்டிருந்தால் அதுவும் நம்முடைய டைம்லைனில் தெரிந்துதொலையும்.

இதன் தாக்கம் அந்த நண்பரை நேரில் சந்திக்கும்போது வெளிப்படுகிறது. அல்லது அவர் மீது நமக்கே தெரியாமல் உள்ளுக்குள் ஒரு கோபத்தை அல்லது வெறுப்பை உருவாக்கிக்கொள்ள நேரிடுகிறது! அந்த நபர் மேல் இயல்பாகவே ஒரு எரிச்சலும் கடுப்பும் வந்துவிடுகிறது. நானும் இதை கட்டுப்படுத்தவேண்டும் என பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் தொடர்ந்து லைக்கிட்டவர்கள் பட்டியலில் முதலில் நமக்கு வேண்டப்பட்ட அந்த மெய்யுலக நண்பர் பெயர் தெரிந்துகொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் அது நம்முடைய ஆழ்மனதில் அந்த நண்பர் மீதான வெறுப்பை நிச்சயமாக அதிகமாக்கும்.

அந்த நண்பரும் விடாமல் நம்முடைய எதிரியுடன் கொஞ்சி குலவுவார்... நமக்கு செம்ம காண்டாவும்! இதை அந்த நண்பர்கள் தெரிந்து செய்வதில்லை. நம்மாலும் அவரிடம் நேரடியாக சென்று எனக்கு இவனை பிடிக்கவில்லை அவனுக்கு லைக்கு போடாதே ஏன் கமென்ட் போடுகிறாய் என்று சொல்வதும் கேட்பதும் கூட சரியாக இருக்காது. நாமென்ன நர்சரி ஸ்கூல் குழந்தைகளா? இணையத்தில் யார் யாரோடு பேசுவது யாரோடு உறவாடுவது என்கிற சுதந்திரம் நம்மைப்போலவே அந்த நண்பருக்கும் உண்டல்லவா?

இதை சமாளிக்க நான் பெரும்பாலான நேரங்களில் ஆகாதவர்களை எதிரிகளை ப்ளாக் செய்துவிடுவேன். அவர்களுக்கு நம்முடைய நண்பர்கள் லைக்கு போட்டாலும் தெரியாது, கமென்ட்டு போட்டாலும் தெரியாது! நமக்கும் டென்சன் கிடையாது. மெய்யுலக நண்பர்களை தக்கவைக்க இதைவிட சிறந்த மாற்று வேறெதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. (சமூக வலைதளங்களை புறக்கணிக்க சொல்வது சரியாக வராது. இன்று கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒன்றாக அது எல்லோருக்குமே மாறிவிட்டது!)

அதைவிட சிறந்த மாற்றுவழி மெய்யுலக நண்பர்களின் நட்பின் அருமையை உணர்ந்திருப்பது. நாளைக்கே நமக்கு ஒன்றென்றால் முன்னால் வந்து நிற்கப்போவது அந்த நபர்தானே தவிர யாரோ எங்கோ லைக்கு போட்டவர்களும் கமென்ட்டிட்டவர்களு அல்ல… நம்முடைய நண்பர்கள் நம்முடைய தனிச்சொத்தல்ல என்கிற புரிதலும் அவசியம். விரும்பியதை தேர்ந்தெடுக்கிற உரிமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு என்று உணரவேண்டும். அந்த புரிதல் இருந்தால் இவ்வகை சிக்கல்களே வரவாய்ப்பில்லை.

முன்பெல்லாம் , அதாவது இணையமில்லாத காலத்தில் இந்த சிக்கல் கிடையாது. நம்முடைய நண்பர்கள் நம்மிடம் நம் எதிரியைப்பற்றி புறம்பேசிவிட்டு அதே எதிரியிடம் நட்பாக இருந்தாலும் அது நமக்கு தெரியவரலாம் வராமல் போகலாம்… அல்லது அப்படியே இருந்துவிடலாம். பெரிய பாதிப்பு இருக்காது.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. யாரும் இங்கே தன்னுடைய செயல்பாடுகளை மறைத்துக்கொள்ள முடியாது. நம்முடைய எல்லாவற்றையும் நிர்வாணமாக்கி வைத்திருக்கிறது இணையம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாகவே இந்த உறவுச்சிக்கல்களை பார்க்கிறேன். இனி இதிலிருந்து தப்ப முடியாது ஆனால் இதைப்பற்றி புரிந்துகொண்டு உறவுகளை நட்பை காப்பாற்றிக்கொள்ளலாம்.

12 March 2014

தி மெசேஜ் - இஸ்லாத்தின் கதை
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பத்து பதினைந்து ஆவணப்படங்களாவது வெளியாகியிருக்கும். அவருடைய வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட ஒரே முழு நீளத் திரைப்படம் என்றால் ‘’தி மெசேஜ் - THE MESSAGE’’ மட்டும்தான். இயக்குனர் முஸ்தபா அக்கட் இயக்கிய இத்திரைப்படம் 1977ல் வெளியானது.

இப்படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு ஸ்லைட் போடுகிறார்கள். ‘’இப்படத்தை தயாரித்தவர்கள் இஸ்லாமிய பண்பாட்டை மதிக்கிறவர்கள், இறைதூதர் நபிகளுக்கு உருவம் கொடுப்பது இஸ்லாத்தின் புனிதமான கோட்பாட்டிற்கு எதிரானது என்பதால் இப்படத்தில் நபிகளின் உருவம் எங்குமே காண்பிக்கப்படவில்லை’’.

இஸ்லாம், நபிகள் நாயகம் என்கிற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இதை ஒரு சாதாரண திரைப்படமாக பார்ப்போம். நாயகனின் உருவத்தை காட்டாமலே ஒரு திரைப்படம் சாத்தியமா? தமிழ்ப்படங்களில் மிகச்சில காட்சிகள் அதுபோல முயற்சிப்பதுண்டு.. முதலில் காலை காட்டி பிறகு நெஞ்சைக்காட்டி பிறகு முகம் காட்டுகிற யுக்திகள், அல்லது படம் முழுக்க நிழலாக காட்டப்படும் வில்லனின் உருவம் இறுதிகாட்சியில் அவிழ்க்கப்படும் என்பது மாதிரி நிறைய உண்டு. ஆனால் ஒரு படம் முழுக்கவே கதாபாத்திரத்தின் அதுவும் கதையின் நாயகனின் உருவத்தை ஒரு ஃப்ரேம் கூட காண்பிக்காமல் எப்படி படமெடுக்க முடியும்?

இதனாலேயே படம் பார்க்கும் போது நபிகள் நாயகம் தோன்றுகிற(?) அக்காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன். என்ன சொல்ல… ப்ரில்லியன்ட். படத்தில் நபிகளை காட்டமட்டுமில்லை. அவருடைய குரலும் கூட வருவதில்லை. உலக சினிமாவில் நாயகனை காட்டாமலேயே எடுக்கப்பட்ட ஒரே படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும்!

அவர் தோன்றுகிற காட்சிகளில் பல நேரங்களில் கேமரா அவருடைய கண்களாக மாறிவிடும். அவருடைய பாய்ன்ட் ஆஃப் வ்யூவிலிருந்து காட்சிகள் சொல்லப்படும். அல்லது அவரை நோக்கி மற்ற பாத்திரங்கள் பேசுவதாகவும், பெரும்பாலான நேரங்களில் நபிகளின் பதில் மௌனமாக வரும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அல்லது அவருடைய பதிலை அவருடைய சீடர்கள் சொல்வதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

படத்தின் ஓரிடத்தில் நபிகளும் அவருடைய சீடர்களும் ஒரு ஊருக்குள் செல்ல அந்த ஊர் சிறுவர்கள் சேர்ந்து அவரை கல்லால் அடிப்பது போல் காட்சி… கும்பலாக அவருடைய சீடர்கள் சேர்ந்து அவரை மறைத்துக்கொள்ள கற்கள் எறியப்படும். அந்தக்காட்சியும் மிகசிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது. ஒரு சில காட்சிகள் தவிர்த்து எங்குமே நபிகள் காட்டப்படவில்லை என்கிற உணர்வே வராதபடி காட்சிப்படுத்தியது நிச்சயம் மிகப்பெரிய சாதனைதான்! பதூர் மற்றும் உகுத் போர்க்கள காட்சிகளின் போது மட்டும் போரை முன்னின்று நடத்துவதாக நபிகளின் உறவினரான ஹம்சாவை காட்டுகிறார்கள். ஆனால் அப்போர்களை முன்னின்று நடத்தியது நபிகள்தான். படத்தில் இதுபோல சில வரலாற்று சலுகைகளையும் இயக்குனர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நபிகளின் முழு வாழ்க்கையையும் இப்படம் காட்சிப்படுத்துவதில்லை. இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களையும் அது எதிர்கொண்ட சவால்களையும் அச்சவால்களை எப்படி நபிகளும் அவருடைய சீடர்களும் எதிர்கொண்டு அரபு நாடுகளில் தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிருவினார் என்பதும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மெக்காவிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு மெதீனாவில் முதல் வழிபாட்டுதலத்தை நிருவி மீண்டும் மெக்காவிற்கே திரும்பி அந்நகரை ஆண்ட அபூ சூஃபியானை சரணடைய செய்வதோடு படம் முடிகிறது.

300க்கும் அதிகமான மதங்களை வழிபாட்டு முறைகளை கொண்ட மெக்காவில் இறைவன் ஒருவனே என்கிற முழக்கத்தோடு வருகிற நபிகளை அந்நகரத்து செல்வந்தர்கள் பரிகசிக்கின்றனர். மெக்கா நகரத்தின் பொருளாதாரம் முழுக்க முழுக்க இந்த 300க்கும் அதிகமான கடவுள்களையும் இந்த கடவுகள்களின் சிலைகளுக்காகவும் வழிபாட்டுக்காகவும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகிற யாத்ரீகர்களையும் நம்பியே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நபிகளின் இந்த வாக்கும் இந்த ஓரிறை கொள்கையை பரப்ப முயலும் நடவடிக்கைகளும் வியாபாரிகளுக்கு எரிச்சலூட்டுகிறது. அடக்குமுறைகளை கையாளுகிறார்கள்.

ஆனால் நபிகளின் சீடர்கள் அமைதியான வழியில் தங்களுக்கான ஆதரவை நபி அவர்களின் வாக்குகளையும் கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி ஆதரவு கோருகிறார்கள். அக்காலகட்டத்தில் அரபு நாடுகளெங்கும் பரவியிருந்த பெண் சிசுக்கொலைக்கெதிரான நபிகளின் கொள்கைகளை முன்வைத்து பேசுகிறார்கள். அது பெண்களை ஈர்க்கிறது. அடிமைகளும் முதலாளிகளும் சமமானவர்கள் என்பது மாதிரி சமத்துவத்தை முன்வைக்கிறார் இது ஏழைகளை ஈர்க்கிறது. இவ்விஷயங்களை பிரச்சாரத்தன்மை இல்லாமல் காட்சிகளாக சொன்னவிதமும் இப்படத்தின் நன்றாக இருந்தது.

படத்தில் நபிகளுக்கு இணையான முக்கியத்துவம் படத்தில் பல பாத்திரங்களுக்கும் தரப்படுகிறது. ஹம்சா, அலி, அம்மர் என அவருடைய சீடர்கள் பலருக்கும் முக்கியத்துவம் உண்டு. இவர்களில் ஆப்பிரிக்க அடிமையான பிலாலின் பாத்திரம் அருமையானது. நபிகளின் முக்கிய சீடர் ஒருவரை பிடித்துவந்து அவரை விசாரணை செய்கிறார்கள். ‘’ஏழை பணக்காரன் அடிமை முதலாளி என்கிற வேற்றுமை இல்லை அனைவரும் சரிசமமானவர்கள் என்று எங்கள் நபிகள் சொல்கிறார்’’ என்கிறார். உடனே ஆத்திரப்படும் அரசரின் ஆட்கள் அங்கே அமைதியாக இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிற அடிமையான பிலாலை அழைத்து சவுக்கை கொடுத்து சீடரை அடிக்க சொல்கிறார்கள்.

அவரோ கண்களில் கண்ணீரோடு நபிகளையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்கிறான். அடுத்த காட்சியில் பிலால் சித்ரவதை செய்யப்படுகிறார். அவர் மீது மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அப்போதும் அவர் அல்லாஹ்வை மறுக்க முடியாதென்கிறான். பிறகு நபிகளின் இன்னொரு சீடரால் பெரிய தொகை பணம் கொடுத்து பிலால் மீட்கப்படுகிறார். அதற்குபிறகு எப்போதும் நபிகளுடனேயே நிரந்தரமாக இருந்துவிடுகிறார்.

நபிகள் மெக்காவிலிருந்து மெதீனாவிற்கு சென்ற பிறகு, மெதீனாவில் தன்னுடைய முதல் மசூதியை சீடர்களின் உதவியோடு கட்டிமுடிக்கிறார். முடித்த பின் மக்களை வழிபாட்டுக்கு அழைக்கும் வழி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வெவ்வேறு யோசனைகளுக்கு பிறகு வாய்வழியாக அறிவிப்பதே சிறந்தது என்கிற முடிவிற்கு வருகிறார்கள். நபிகள் பிலாலை அழைத்து பாங்கு சொல்ல வற்புறுத்துகிறார்…

பிலால் உடலெல்லாம் உற்சாகம் பொங்க மசூதியின் உச்சிக்கு சென்று… ‘’அல்லாஹூ அக்பர்’’ என்று முதன்முதலாக பாங்கு அறிவிக்கிறார். படத்தில் எனக்கு ரொம்பவும் பிடித்த காட்சி இது. படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் அபூ சூஃபியானைவிட அவருடைய மனைவியாக வரும் ஹிந்தின் பாத்திரம் அருமையானது. தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனை போரில் கொன்ற ஹம்சாவை பழிவாங்க துடிக்கும் அவருடைய நடிப்பும் ஆவேசமும் அவ்வளவு கச்சிதமாக இருந்தது.

படத்தின் நாயகனாக நபிகள் இருந்தாலும் முக்கால்வாசி படத்தை தன்னுடைய அபாரமான நடிப்பினால் ஆட்கொள்பவர் இரண்டு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆன்டனி க்வீன். நபிகளின் உறவினரான ஹம்சாவாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படம் வெளியான சமயத்தில் போஸ்டர்களில் இவருடைய படத்தை போட்டுதான் விளம்பரப்படுத்தினார்களாம், இவர்தான் நபிகளாக நடிக்கிறார் என்று நினைத்து இஸ்லாமியர்கள் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று போராட்டமெல்லாம் நடத்தியதாக விக்கிபீடியா சொல்கிறது! அதனாலேயே இப்படத்தின் அமெரிக்க வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாம்.

நபிகள் குறித்தும் இஸ்லாத்தைப்பற்றியும் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் இஸ்லாம் தன்னுடைய துவக்க காலத்தில் என்னவாக இருந்தது என்பதை புரிந்துகொள்ளவும் நினைப்பவர்கள் இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். யூடியூபிலேயே முழுப்படமும் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.

11 March 2014

ரஜினி பீட்சாவிளம்பரங்களில் செய்திப்படங்களில் டிவி நிகழ்ச்சிகளில் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை பயன்படுத்துவதாக இருந்தாலோ, அல்லது அவரை பிரதிபலிக்கும் உருவத்தையோ அல்லது குரலையோ உபயோகித்தாலோ ரஜினியை காட்டினாலோ கூட நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்று எத்தனை பேருக்கு தெரியும்.

இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் ‘’ரஜினிகாந்த்’’ ஒரு காஸ்ட்லியான ப்ரான்ட். சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் ரஜினி ப்ராண்டுக்கான சகல காப்பிரைட் அனுமதிகளையும் வைத்திருக்கிறார்கள். விளம்பரப்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் இவ்விஷயம் ரொம்பவும் பிரபலம். பலரையும் கோர்ட்டுக்கு இழுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கெல்லாம் போட்டிருக்கிறார்களாம்!

பெருங்குடியில் இருக்கிற ‘’சூப்பர்ஸ்டார் பீட்சா’’ என்கிற பீட்சா கடையில் உட்கார்ந்து கொண்டு நானும் தோழர் குஜிலியும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். சூப்பர்ஸ்டார் பீட்சா கடை ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட சின்ன பீட்சா கடை. இங்கே ரஜினி படங்கள் வைத்திருப்பதை தவிர்த்து நேரடியாக ரஜினியை வைத்து பிராண்டிங் எதுவும் செய்திருக்கவில்லை.

இக்கடை குறித்து ஃபேஸ்புக் ரஜினி ரசிகர் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். அதை படித்துவிட்டு நானும் தோழரும் ஒரு நார்மல் நாளில் மதிய உணவுக்காக பெருங்குடிக்கு கிளம்பினோம். கடை முகவரியை வைத்து தேட முடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். தோழர் குஜிலி என்னை நோக்கி கையை நீட்டி விரல்களை விரித்து ஸ்டாப் என்பது போல காட்டினார். பாக்கெட்டில் இருந்த ஸ்டைலாக தன்னுடைய ஆன்ட்ராய்ட் போனை எடுத்து டொக்கு டொக்கு என தட்டினார்,, நேவிகேஷனில் மேப்பு பார்த்தார்.

‘’கண்ணா! இங்கருந்து சரியா 150வது மீட்டர்லதான் அந்த கடை இருக்கு… லெப்ட்ல போய் ரைட் கட் பண்ணினா போதும்..’’ என்று தேவையேயில்லாமல் வாயை கோணலாக வைத்தபடி சொன்னார். பார்க்க பாவமாக இருந்தது. அச்சுச்சோ என்னாச்சு ப்ரோ திடீர்னு என்று விசாரித்தேன். ரஜினி மாதிரி மிமிக்ரி பண்ணினாராம்!

வேகாத வெயிலில் வந்துபோய் அக்கடையை தேடி கண்டுபிடித்தோம். ஏதோ ஆந்திரா மெஸ் போன்ற ஹோட்டலுக்கு மேலே முதல் மாடியில் இக்கடை இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையும்போதே.. ‘’வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நாம் செல்லும் பா….தை… சரி என்ன தவறென்ன எவருக்கு எதுவேண்டும் செய்… வோம்…’’ என்று எஸ்பிபி முழங்கிக்கொண்டிருந்தார். கடையில் யாருமே இல்லை. வெயிட்டர்கள் மட்டும் இரண்டு பேர் இருந்தனர். ‘’ப்ரோ நாம வரதை பார்த்து ரஜினி பாட்டு வச்சிருப்பாய்ங்களோ’’ என்று காதை கடித்தார் குஜிலி. ‘’ச்சேச்சே அப்படிலாம் இருக்காதுங்க… இது சூப்பர்ஸ்டார் கடை இங்க எப்பயும் ரஜினிபாட்டேதான் கேப்பாங்க’’ என்றேன்.

ஒரு சுவர் முழுக்க ரஜினியில் வெவ்வேறு காலகட்டத்தில் பிடிக்கப்பட்ட படங்கள் அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. கடையிலேயே ரஜினி குறித்த புத்தகங்களும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். MY DAYS WITH BAASHA என்கிற இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நூலை எடுத்து நான் புரட்டினேன். RAJINIS PUNCHTHANTHRA என்று நினைக்கிறேன். அதை எடுத்து குஜிலியும் படிக்க ஆரம்பித்தார். இங்கிலீஸ் புக்கு என்றால் விரும்பி படிப்பார் குஜிலி.

விட்டால் இவனுங்க ரெண்டுபேரும் வெயில்காலத்துக்கு இதமா ஏசிலயே எதுவும் திங்காம இரண்டு நாள் கூட உக்காந்திருப்பானுங்க என்று எப்படியோ டெலிபதியில் உணர்ந்த கடைகார். மெனுவை நீட்டினார். தோழர்தான் வாங்கி படித்தார். ‘’யோவ் ப்ரோ இதை ஒருக்கா படிச்சிப்பாருங்க செம டக்கராருக்கு’’ என்று மெனுவை நீட்டினார்.

மெனுவில் வகைவகையான பீட்சாகளுக்கு ரஜினி படங்கள் பெயர்களாக சூட்டியிருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், பாட்ஷா, பொல்லாதவன், தில்லுமுல்லு, முள்ளும் மலரும் மாதிரி ஒவ்வொரு பீட்சாவுக்கும் ஒவ்வொரு பெயர். இந்த மெனுவில் எனக்கு பிடித்தது ‘’தளபதி தந்தூரி!’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்!)

சூப்பர்ல! என்றார் தோழர். எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறினேன். ஆனால் என்னதான் பீட்சாவுக்கு ரஜினி பெயர் வைத்தாலும் பீட்சா என்பது பீட்சாதானே.. அதை வாயால்தான் தின்னமுடியும் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணமுடியாது என்பதால் சுதாரித்துக்கொண்டு இருப்பதிலேயே விலைகுறைவான ‘’நினைத்தாலே இனிக்கும்’’ ஒன்னு குடுங்க , அப்புறம் இரண்டு பெப்ஸி என்று ஆர்டர் கொடுத்தேன். என்னுடைய கணக்குப்படி நூத்தம்பது ரூபாதான் டார்கெட். அதற்குமேல் போனால் பீட்சாவுக்கு மாவு பிசையற வேலைதான் செய்ய வேண்டி இருக்கும்.

பேக் டூ தி மெனு. அருணாச்சலம் ஆஃபர் என்று கூட ஒன்று வைத்திருக்கிறார்கள். மெனுவில் உள்ள எதையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாமாம்! ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம்! என்னதான் தின்னாலும் ஒரு மனிதனால் இந்த பீட்சாவை இரண்டு வட்டலுக்கு மேல் தின்ன முடியாது என்பதால் இப்படி ஒரு திட்டமாக இருக்குமோ என்று சந்தேகமாக கேட்டார் தோழர்.(படத்தை க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம்)

‘’அருணாச்சலம் படத்துல அருணாச்சலத்தோட அப்பா சோனாச்சலம் பையன் சுருட்டு புடிக்கறானு ஒரு ரூம் நிறைய சிகரட் வச்சி நைட்டெல்லாம் புடிக்க சொல்லி , அவனை திருத்துவாரே அதுமாதிரி போல ப்ரோ.. 399 ரூபாய குடுத்துட்டு இஷ்டத்துக்கு பீட்சாவா தின்னோம்னா எப்படியும் அடுத்த நாள் புடுங்கிடும் அதுக்கு பிறகு பீட்சா தின்ற ஆசையே நமக்கு வராதுல்ல.. அதுதான் இதோட கான்செப்டா இருக்கும்னு தோணுது’’ என்றேன். கர்ர்ர் என்று துப்புவதற்கு ஆயத்தமாக தொண்டையை செருமினார்.

இதற்கு நடுவில், கடையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ரஜினி பாடல் மாற்றப்பட்டு வேறு ஏதோ ஏஆர் ரஹ்மான் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்ததை கவனித்தேன். தோழர் என்னை பார்த்து ஈஈஈ என்றார். ஜெயிச்சிட்டாராம்! பீட்சா வந்தது.

பீட்சாவில் பைனாப்பிளையும் அந்த பச்சைகலர் புளிப்பு பழத்தையும் (ஜெலபீனோ) வைத்து கொடுத்தார்கள். இனிப்பும் புளிப்புமாக நன்றாகவே இருந்தது. டொமாடா கெட்சப்பை நிறைய ஊற்றி அதற்கு மேலே டாப்பிங்ஸை விட்டு சாப்பிட்டோம். மற்ற பீட்சாக்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாக இருந்தது. ஒரு சுமால் பீட்சாவை ஒன்பைடூ சாப்பிடுகிற ஆட்களாக இருந்தாலும் கடை வெயிட்டர்கள் ரொம்பவும் மரியாதையாக நடத்தினார்கள். சுவைக்கும் தரத்திற்கும் ஒரு குறைச்சலுமில்லை. மற்ற பீட்சா கடைகளை ஒப்பிடும்போது விலைகூட குறைச்ச தான். பெருங்குடியிலேயே இரண்டு கடை இருக்கிறது போல!

பீட்சாவை நல்லவேளையாக நான்காக வெட்டிக்கொடுத்துவிட்டதால் அடித்துக்கொள்ளாமல் ஆளுக்கு இரண்டு என பிரித்து தின்றுவிட்டு பெப்சியை குடித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினோம்.

வெளியே வந்ததும் தோழர் கேட்டார் ‘’ஏன் ப்ரோ இந்த கடைக்கு ரஜினி சைட்லருந்து ஏதும் பிராப்ளம் வராதா?’’ என்றார். ‘’சின்ன கடையாவே இந்த ஆந்திரா மெஸ் மேல இருக்குறவரைக்கும் பிரச்சனைகள் வர வாய்ப்பில்ல ப்ரோ.. ஆனா அப்படியே பத்து பதினைஞ்சு பிராஞ்சஸ் போட்டு பிரபல ஃபுட் செயினா டெவலப் ஆனா நிச்சயம் ஆபத்து இருக்கும்’’ என்றேன்.

தூரத்தில் கடைக்குள்ளிலிருந்து இப்போது ரஜினிபாட்டு ஒலிப்பதை கேட்க முடிந்தது… அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டுவருமே…

10 March 2014

அசுணமா

நண்பர் வேல்கண்ணன் எழுதிய ‘’இசைக்காத இசைக்குறிப்புகள்’’ கவிதை நூல் விமர்சன கூட்டத்துக்கு சென்ற வாரம் சென்றிருந்தேன். கதிர்பாரதி, ஐயப்ப மாதவன் என பலரும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவின் பேச்சு அசத்தலாக இருந்தது. அவருடைய பேச்சில் அசுண பட்சி என்கிற சங்க காலத்துப் பறவையைப்பற்றி சொன்னார். மிகவும் சுவாரஸ்யமான பறவையாக இருந்தது.

இப்பறவை நம்முடைய பழைய இலக்கியங்களில் வருவதாக குறிப்பிட்டார். இந்த அசுணபட்சி. ‘’புகுரி’’ என்கிற புல்லாகுழலை ஒத்த இசைக்கருவியை வாசித்தால் எங்கிருந்தாலும் பறந்துவந்து பக்கத்திலேயே அமர்ந்து கேட்குமாம்! ச்சூச்சூ என விரட்டிவிட்டாலும் போகாதாம்! இந்த புகுரி இசையை அது ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போது எங்காவது ஒரு விநாடி தப்பாக வாசித்துவிட்டால், அந்த இடத்திலேயே தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு அப்படியே விழுந்து செத்துப்போகும் என்று குறிப்பிட்டுச்சொன்னார்.

இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்கிற கேள்விகளை தூக்கி கக்கத்தில் வைத்துவிட்டு , இந்தக்கற்பனையை வெகுவாக ரசித்தேன். சின்ன வயதில் பள்ளியில் அன்னப்பறவை பற்றியும் அது தண்ணீரையும் பாலையும் பிரித்துவிடும் என்றும் படித்ததெலாம் நினைவில் வந்துபோனது! பெரும்பாலான நேரங்களில் அது கழுத்து நீண்ட வெள்ளை வாத்து என்றே கற்பனை பண்ணியிருக்கிறேன். அப்படிதான் நம்முடைய ஆட்கள் எல்லோருமே ஒவியங்களிலும் குறிப்பிட்டிருப்பார்கள்.

அசுணப்பறவை குறித்து வீட்டிற்கு வந்ததும் தேட ஆரம்பித்தேன். கூகிளிருக்க பயமேன். இப்பறவை பாடப்பெற்றதாக அமிர்தம் சூர்யா குறிப்பிட்ட கம்பராமாயணப்பாடலிலிருந்து ஆராய்ச்சியை தொடங்கினேன்.

‘’துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச்செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ’’

(யாழ் இசையில் மகிழ்ந்து திளைக்கும் அசுணம் எனும் நல்ல விலங்கு, பறையின் வல்லோசை
கேட்டால் உயிர் விட்டுவிடும் என்பர். அதுபோல ‘நற்கவிதைகள்
கேட்டுத் திளைத்த செவிகளில் என் புல்லிய பாவின் ஓசை
வீழ்ந்ததால் கேட்டோர் துன்புறுவர் – என்பது இப்பாடலின் விளக்கம்)

இப்பாடலில் புகுரி வாத்திய கருவி பற்றியும் குறிப்பு எதுவும் இல்லை. பாட்டில் பிழை இருந்தால் செத்துப்போகும் என்பதாகவும் இல்லை. யாழிசைக்கு நடுவில் பறை இசை கேட்டால் அதிர்ச்சியில் இறந்துபோகும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுண நன்மா என்று குறிப்பிட்டிருப்பதால் இது விலங்காகவும் இருக்கலாம் என்று ஒருநண்பர் சந்தேகமாக குறிப்பிட்டார். மா என்பதற்கு விலங்கு என்பதே பொருள் (அகராதியில் பார்த்துட்டேன்!). அதோடு அது பறக்கவல்லது என்பதாக குறிப்புகளும் இல்லை. என்னங்கடா இது இது பறவை இல்லையா என்று மேலும் அதிர்ச்சியாகி கூகிளாண்டவர் உதவியோடு தேடலை இன்னும் நன்றாக முடுக்கினேன்.

அசுணத்தைத் தேடப்போக ‘மாசுணம்’ என்கிற வார்த்தை தமிழில் இருப்பது தெரியவந்தது. மாசுணம் என்பது மிகவும் நீண்ட பாம்புவகையை குறிப்பதாகும் (ராஜநாகமாக இருக்கலாம்!). சிவபெருமானுக்கு மாசுணங்கங்கணன், மாசுணங்கச்சயன் என்கிற பெயர்களும் உண்டாம்! இங்கே கம்பராமாயண பாடலை நோட் பண்ணுங்க ‘’அசுண நன்மா’’ என்று அவர் குறிப்பிடுகிறார்? கன்ப்யூசிங் இல்ல!

மாசுணத்தைதான் ரிவர்ஸில் அசுண நன்மா என்று குறிப்பிடுகிறாரோ என்கிற சந்தேகமும் வர தலை சுற்றியது! ''அசுணமா'' என்பதே அதன் சரியான பெயர் என்பதும் தெரியவர மேலும் கூகிளிட… ஓர் அருமையான இணைப்பு கிடைத்தது.

http://www.gunathamizh.com என்கிற இணையதளத்தில் இந்த அசுணமா பறவையா விலங்கா? என்பது குறித்து ஒரு சின்ன ஆராய்ச்சியை ஏற்கனவே 2008லேயே செய்திருந்தார்கள்.

சங்க இலக்கியத்தில் மலைபாம்பினை மாசுணம் என்றே குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். "களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)என்கிற பாடலையும் இதற்கு உதாரணமாக குறிப்பிடுகிறார்,

‘’ அசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது ‘’ என்பதாக குறிப்பிட்டு அசுணமா என்பது அக்காலத்து பாம்புவகை. அது இசையால் உண்டாகும் அதிர்வினால் வாசிக்கப்படும் இடத்திற்கு வரும் என்றும்.. வந்த இடத்தில் பறை இசை அதிர்வினால் அதிர்ச்சிக்குள்ளாகி மயங்கிவிழும் என்றும் புரிந்துகொள்ளலாம் என்கிறார்!

(விரிவாக இங்கே http://www.gunathamizh.com/2008/05/blog-post_02.html)

"அசுணமா"ங்கறது பாம்பா பறவையான்றதே குழப்பிகிச்சு… ஆனால் பொள்ளாச்சியை சேர்ந்த பாற்கடல் சக்தி என்கிற கவிஞர் அசுணவேட்டை என்கிற கவிதையை எழுதியிருக்கிறார்.

அதில் ''அசுணப்பறவை இசையை பிரித்தரியவல்லது!'' என்பது மாதிரி குறிப்பிட்டுள்ளார். (அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரிக்கிறார்ப்போல!). அனேகமாக கவிஞர்கள் மத்தியில் இந்த அசுண பட்சி மிகவும் புகழ்பெற்ற MYTH ஆக இருக்குமென்று புரிந்தது. எனக்கு அது பறக்கும் பாம்பாக இருந்திருக்குமோ என்றுகூட தோன்றியது! கற்பனைதானே...

அதுசரி அந்த புகுரி என்கிற வாத்தியக்கருவி? அதைப்பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. புகுரி என்ற சொல்லே அகராதியில் இல்லை!(நான் பார்த்த அகராதியில்) ஒருவேளை மகுடிக்குத்தான் அப்படி பெயரோ என்னவோ…

சில கற்பனைகள் அழகானவை அதைப்பற்றி ஆராய்ச்சிகளில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன்மூலம் தெரிந்துகொண்டேன். அசுணமா எனக்கு பட்சியாகவே இருந்திருக்கலாம்.

07 March 2014

பாம்புதாராவும் பறவை பார்த்தலும்க்ரியா பதிப்பகத்தின் நூல்கள் எல்லாமே வாசிக்க இன்பமாக இருக்கிறதோ இல்லையோ, அதன் வடிவ நேர்த்திக்காகவே ஓன்று வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ள தூண்டுகிறவை, அப்படி வாங்கி வைத்த நூல்கள் வீட்டில் ஒன்றிரண்டு தேரும். ஜனவரி புத்தகக் காட்சியில் அப்படி அதன் புத்தக வடிவமைப்பின் அழகுல மயங்கி வாங்கிய நூல் ‘’பறவைகள் – அறிமுக கையேடு’’ என்கிற நூல். சாம்சங் கேலக்ஸி க்ராண்ட் சைஸில் குட்டியா கைக்கடக்கமாக இருக்கிற இந்நூல் முழுக்க கலரில் ப்ரிண்ட் செய்யப்பட்டது. சூழலிலியல் தொடர்பான ஆங்கில புத்தகங்கள் போல நூல் முழுக்க டெக்ஸ்ட் குறைவாகவும் படங்கள் அதிகமாகவும் இருந்ததால் விலை கொஞ்சம் கூடதான் என்றாலும் உடனே ஒன்று வாங்கிவிட்டேன்!

ORNITHOLOGY என்கிற பறவையியல் குறித்த நூல் இது. இதில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நம்மோடு வாழும் எண்ணற்ற பறவைகள் பற்றிய எளிய குறிப்புகள் அடங்கியுள்ளன. நமக்கு குட்டியாய் இருப்பதெல்லாம் குருவி, கருப்பாக இருப்பதெல்லாம் குயில், வெள்ளையாய் இருந்தால் கொக்கு, வேகமாக பறந்தால் புறா, பெரிதாக இருந்தால் கழுகு என பறவைகள் குறித்த பார்வை எப்போதுமே மங்கல்தான்! ஆனால் நம்மை சுற்றி எவ்வளவு குட்டி குட்டி பறவைகள் விதவிதமான உடலமைப்புகளோடு வித்தியாசமான குணாதிசியங்களோடு வாழ்கின்றன என்பதையெல்லாம் இந்நூலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

புறாவிலேயே மணிப்புறா,மாடப்புறா,பஞ்சவர்ணபுறா என எவ்வளவு வெரைட்டி! பருந்துகளில் குருவிகளில் எவ்வளவு வகைகள். கொக்குக்கும் நாரைக்கும் எத்தனை வேறுபாடு. பறவைகளுக்கு எவ்வளவு வித்தியாசமான பெயர்கள். மஞ்சள் திருடி என்கிற கழுகு, கரண்டிவாயன் என்கிற நாரை தைலாங்குருவி,தையல்சிட்டு என்பதுமாதிரி இன்னும் நிறைய நிறைய பறவை பெயர்கள். இந்த பறவைகளுக்கே உரிய பிரத்யேகமான குணாதிசயங்களும் அவை வாழுமிடங்கள் உண்ணும் உணவுகள் முதலான தகவல்களும் உண்டு. 88 பறவைகள் பற்றிய விளக்கங்களும் 166 வண்ணப்படங்களும் கொண்ட இந்நூல் பறவைகள் குறித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு பொக்கிஷம். மிக எளிய மொழியில் அறிவியல் சார்ந்த விஷயங்களை எழுதியுள்ளனர் ஆசையும் ப.ஜெகந்நாதனும்.

பறவைபார்த்தல் (BIRD WATCHING) எப்படி செய்யவேண்டும், குரலை வைத்து, இறகை வைத்து, கூடுகளை வைத்து பறவைகளின் வகைமையை அறிதலும் , பறவை பார்க்க செல்லும்போது செய்ய வேண்டியவை என புதிதாக பறவைபார்த்தலுக்கு தயாராகிறவர்களுக்கான தகவல்களும் நூலில் உண்டு. பறவையியல் குறித்து ப.ஜெகந்நாதன் எழுதிய அருமையான கட்டுரை ஒன்றும் நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளது.

நூலை முழுமையாக வாசிக்க இரண்டு மணிநேரம் போதும். ஆனால் வாசித்து முடித்ததும் மண்டைக்குள் ஒரு தகவல்கூட மிச்சமில்லை. அப்போதுதான் ஒரு ஐடியா தோன்றியது. சரி நாமும் பறவை பார்க்க களமிறங்குவோம் என்று வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ஏரி ஒன்றை தேர்ந்தெடுத்து அங்கே கண்ணில் படுக்கிற பறவைகளை குறித்து வைத்துக்கொண்டேன். முடிந்தவரை அவற்றை என்னுடைய குட்டி கேமராவில் படமெடுத்து வைத்துக்கொண்டேன். பிறகு இந்நூலை ஒரு கைடாக பயன்படுத்தி அது என்ன பறவை என்று தேட ஆரம்பித்தேன்…

நான் பார்த்த ஒரு பறவையின் பெயர் மடையான் ( INDIAN POND HERON) என்று போட்டிருந்தது. அதுதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதன் உடலமைப்பு இறகு, அலகு என சரிபார்த்துக்கொண்டேன் (அப்படிதான் சரிபார்க்க வேண்டும் என்று இந்த நூலிலேயே போட்டிருக்கிறது). அதற்குபிறகு சாம்பல் நிறத்தில் நீண்ட கழுத்துள்ள ஒரு பறவையை கண்டேன். அது பெரிய நீர்காகம் என்று நானாக நினைத்துக்கொண்டேன். ஆனால் பெரிய நீர்காகத்தின் அலகு அமைப்பு அதற்கு இல்லை. நீர்காகத்தின் அலகு வாத்தின் அலகினைப்போல தட்டையாக இருக்கும். ஆனால் இதற்கு கூரான அலகுகள்.

அது பாம்புதாரா என்கிற (ORIENTAL DARTER) என்கிற பறவை என்று நூலில் போட்டிருந்தது. படமும் அதே மாதிரிதான் இருந்தது. நானும் அதுதான் என்று இணையத்தில் வேறு சில படங்கள் மற்றும் தகவல்களை தேடி உறுதி செய்துகொண்டேன். அதற்கு பிறகு இத்தனை நாளும் கொக்கு என்று நினைத்துக்கொண்டிருந்த பறவைக்கு ‘’உண்ணி கொக்கு’’ என்பதே சரியான பெயர் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இன்னும் பறவைகளை நேரம் கிடைக்கும்போது தேடலாம் என்கிற எண்ணமும் உண்டு.

இயற்கை குறித்து பறவைகள் பற்றி சூழலிலியல் தொடர்பாக குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி வைக்க நினைக்கிறவர்கள் இந்த நூலை வாங்கி பரிசளிக்கலாம். பறவை பார்த்தலில் ஆர்வமுள்ளவர்களும் கட்டாயம் வாங்கி வாசிக்கலாம். வாசிப்பதோடு நிற்காமல் கையில் ஒரு கேமரா அல்லது பைனாகுலரோடு களமிறங்கி பறவைகளை தேட ஆரம்பித்தால் நாம் கூட இயற்கையின் ஓர் அங்கம்தான் என்பதை உணரலாம்.

பறவைகள் - அறிமுக கையேடு
க்ரியா பதிப்பகம்
விலை - 250