Pages

25 May 2015

இளையராஜா எனும் BRAND

‘’வியாபார நோக்கில் தன்னுடைய பெயரை, புகைப்படத்தை’’ தன்னுடைய அனுமதியில்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் அறிவித்துள்ளார் இளையராஜா. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இளையராஜாவின் இந்த அறிவிப்பை அடுத்து இணையத்தில் ஆளாளுக்கு அவரை போட்டு சுட்டு பொசுக்கி சுக்கா வறுவலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இளையராஜாவின் இந்த அறிவிப்பு நேர்மையானது. எந்த ஒரு படைப்பாளிக்கும் உரிய நியாயமான உரிமையையே இளையராஜா கோருகிறார்.

இளையராஜா யாரோ ரயிலில் பிச்சை எடுக்கிற ஒருவர் தன்னுடைய பாடலை பாடக்கூடாது என்று கூறவில்லை. தேனி பக்கம் இருக்கிற சிறிய டீக்கடையில் தன்னுடைய பாடலை ஓடவிடுவதை குற்றஞ்சொல்லவில்லை. பெரிய ஊடக நிறுவனங்களை ‘’என்னை வைத்து சம்பாதிப்பதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு செய்’’ என்கிறார்! அவ்வளவுதான். தன்னுடைய பெயரை இசையை பயன்படுத்தி கோடிக்கணக்கில் காசு சம்பாதிப்பவர்கள் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டு வியாபரம் செய்துகொள்ளட்டும் என்கிறார்.

இன்றைய தேதியில் 'இளையராஜா' என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு BRAND. தமிழகத்தின் பல கோடி மக்களிடையே நன்கு விற்கவல்ல ஒரு பிராண்ட். அவருடைய பெயரை பயன்படுத்தி விளம்பரதாரர்களை ஈர்க்க முடியும். கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அதனாலேயே பெப்ஸி, மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் போல… அப்பெயரையும் புகைப்படத்தையும் யாரும் இஷ்டப்படி வியாபார நோக்கங்ளுக்காக பயன்படுத்த கூடாது என்கிறார் ராஜா. தன்னுடைய பெயரால் பரப்பப்படுகிற வியாபாரசந்தையை கட்டுபடுத்த விளைகிறார்! (கடந்த ஆண்டுகளில் அவர் இசையமைத்த படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவிய போதும் அவர் இசையமைத்த பழைய பாடல்களுக்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது)

நடிகர் ரஜினிகாந்த் இதை கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்துவருகிறார். அவருடைய படத்தை, குரலை, அவரைப்போன்ற உருவத்தை, பெயரை வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக இருந்தால் அவருடைய குடும்பத்தாரிடமிருந்து உரிய அனுமதி பெறவேண்டும். இல்லையென்றால் சட்டப்படி எப்படிப்பட்ட படைப்புக்கும் எப்படிப்பட்ட நிறுவனத்திற்கும் தடைதான்! மே ஹூன் ரஜினிகாந்த் என்கிற படத்திற்கு தடை வாங்கியதும் இவ்வகையில்தான். டண்டனக்கா பாடலுக்காக டிஆர் கோர்ட்டு படி ஏறியதும் இவ்வகையில்தான். அதைதான் இப்போது இளையராஜாவும் செய்திருக்கிறார்.

பக்திப்பாடல்கள், தனியான இசைத் தொகுப்புக்கள் இல்லாமல், திரைப்பாடல்களாக 4500 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ஆனால் அவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அளவிற்குப் பொருளாதரப் பலன்கள் கிடைக்கவில்லை, ஒரு படைப்பின் மீது ஒரு படைப்பாளிக்கு உள்ள படைப்புரிமையை மதிக்காமல் பலரும் ஆற்றுத் தண்ணீரை அள்ளிக்கொள்வது போல அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் இலவசமாக அள்ளிச் சென்று கொண்டிருந்தனர். அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு தான் இசையமைத்த பாடல்களை சில நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் ஒலிப்பதிவு செய்யவோ, (குறுந்தகடுகளாகவோ, இணையத்திலோ) வெளியிடவோ கூடாது என்று தடை பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

‘’எனக்கு கிடைக்கவேண்டிய ராயல்டி மட்டும் ஒழுங்காக கிடைத்திருந்தால் இந்நேரம் நான் பில்கேட்ஸ் ஆகியிருப்பேன்’’ என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் இளையராஜா. ‘’அகி ம்யூசிக், கிரி ட்ரேடிங், எகோ ரெகார்டிங், மற்றும் யூனிசிஸ்’’ உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தது இந்தக்கோபத்தில்தான். இதுவிஷயமாக இளையராஜாவின் வழக்குகளை கவனித்துவரும் வழக்கறிஞர் ஒருவரோடு பேசியபோது அவர் இவ்விவகாரத்தின் வேர்களை சொன்னார்,

‘’நான்கு ஆடியோ நிறுவனங்களும் பழைய ஒப்பந்தங்களை வைத்துக்கொண்டு இளையராஜாவின் எண்ணற்ற பாடல்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வந்தன. சட்டப்படி எல்லா ஒப்பந்தங்களும் ஐந்தாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்படி தயாரிக்கப்பட்டவை, ஆனால் அந்த ஐந்தாண்டுகள் முடிந்தபின்னும் அந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்க படவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தப்பாடல்களையும் அதற்கான உரிமைகளையும் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளன, இசையமைப்பாளருக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ எவ்வித ராயல்டியும் தராமல் இருந்துள்ளன. இப்படங்களை தயாரித்த பல தயாரிப்பாளர்களும் இப்போது மிகவும் வறுமையான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ராயல்டி தொகையை பெற்றுத்தரவும், இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைகளை மீட்கவுமே இவ்வழக்கு தொடரப்பட்டது. இனி குறிப்பிட்ட அந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து உரிமை பெறப்பட்ட பாடல்களின் வழி கிடைக்கும் ராயல்டி தொகை தயாரிப்பாளருக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படும்’’ என்றார் .

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பாடகர் ஜேசுதாஸ் தன்னுடைய பாடல்களுக்கான உரிமைகளை இதுபோல் பெற்றுள்ளார். மேடைகளில் இனி என்னுடைய பாடல்களை பாட என் அனுமதி வாங்க வேண்டும் என்று IPRS (INDIAN PERFORMING RIGHTS SOCIETY) வழி போராடினார். இவ்விவகாரம் அக்காலகட்டத்தில் கேரளாவில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

இந்தியத் திரைப்பட பாடகர்கள் சென்ற ஆண்டு ‘’பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு’’ என்கிற அமைப்பை உருவாக்கினர். வியாபார நோக்கத்திற்காக தங்களுடைய பாடல்கள் தொலைகாட்சி, வானொலிகளில் பயன்படுத்தப்படும்போது தங்களுக்கு அதற்கான ராயல்டியை தரவேண்டும் என்று போராடி உரிமைகளை மீட்டுள்ளனர். தற்போது ஊடகங்களை கண்காணித்து அதற்குரிய ராயல்டியை வசூலித்து உரிய பாடகருக்கு கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. பாடகர்களுக்கு இது போன்ற அமைப்பு உள்ளதைப் போல, திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு அமைப்புகள் ஏதுமில்லை. அவர்கள் பெரும்பாலும் திரைப்பட்த் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வழியாகவோ அல்லது தனியாகவோதான் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே இந்த காப்பிரைட் விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கின்றனர். ஒப்பந்தம்போடும்போதே பல விஷயங்களை கவனித்து கையெழுத்துப்போடுகின்றனர். ஆனால் இளையராஜா இந்த விஷயத்தில் ரொம்ப லேட்! 2010ல்தான் அவருக்கு ஞானமே வந்தது. தனக்கான உரிமைகளைக் காத்துக் கொள்வது குறித்து யோசிக்கவே தொடங்கினார்.

2010ம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரோடு சென்னைக் காவலதுறை ஆணையரைச் சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் எகோ ரெகார்டிங் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து தனது திரைப்படப் பாடல்களுக்கான ராயல்டித் தொகை வரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். தனது பாடல்களுக்கும், அந்தப் பாடல்கள் இடம் பெற்றுள்ள படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அந்த நிறுவனம் ராயல்டித் தொகை தர ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த்தாகவும், அந்த ஒப்பந்தம் 1990ல் முடிந்து விட்ட போதிலும் அந்த நிறுவனம் அந்தத் தொகைகளைத் தரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார், அந்த நிறுவனம் தன்னுடைய அனுமதி இன்றி வட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பாடல்களுக்கான உரிமைகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

எகோ ரிகார்டிங் நிறுவனம் வட இந்திய நிறுவனத்திடம் ராஜாவின் பாடல்களுக்கான உரிமையை 25 கோடி ரூபாய்க்கு விற்கப் பேச்சு வார்த்தை நட்த்திக் கொண்டிருக்கிறது என்று வெளியான செய்தியின் அடிப்படையில் ராஜா இந்தப் புகாரைத் தெரிவித்திருந்தார். அந்த நிறுவனம் தனக்குத் தெரியாமல் ஏற்கனவே தன்னுடைய தெலுங்கப்பட பாடல்களுக்கான உரிமைகளையும் அயல்நாட்டிற்கான உரிமையையும் விற்றுவிட்ட்தாகவும், செல்போன் நிறுவன்ங்களுக்கு அழைப்பொலியாக விற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதே சமயத்தில் ராம்கோபால்வர்மா இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘’டிபார்ட்மென்ட்’’ல் அவரது ‘’ஆசைநூறுவகை’’ என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த்தை எதிர்த்து. உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து அப்பாடலுக்கு தடைவாங்கினார் இளையராஜா.

பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் ‘சுப்ரமணியபுரம்’ தொடங்கி வைத்த ட்ரெண்டில் பல படங்களிலும் அவருடைய பின்னணி இசையும் பாடல்களும் எவ்வித அனுமதியுமின்றி பயன்படுத்தப்பட்டன. கடந்த ஜனவரி வரைக்குமே இப்படி இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி உபயோகிப்பது தொடர்ந்து.கொண்டிருந்தது. அதற்கு பிறகே தன்னுடைய பாடல்கள் வெவ்வேறு புதிய ஊடகங்களில் குறிப்பாக மொபைல் போன் சார்ந்த விஷயங்களிலும் எஃப் எம்களிலும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணித்து கட்டுப்படுத்தவும் தொடங்கினார். 2012ல் வெளியான மிஸ் லவ்லி திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாயும்புலி படத்தின் டைட்டில் இசையும் அதே படத்தில் இன்னொரு பாடலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இம்முறை முறையாக அனுமதிபெற்று பயன்படுத்தினர்.

அதற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ‘’கப்பல்’’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஊரு விட்டு ஊரு வந்து என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி அப்பாடலை நீக்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றார் இளையராஜா. ஆனால் அங்கே தயாரிப்பாளர் தரப்பு ‘’நாங்கள் சம்பந்தப்பட்ட பாடலை வெளியிட்ட கேசட் நிறுவனத்திடம் (அகிமியூசிக்) அனுமதி வாங்கிவிட்டோம்’’ என்று கூற அப்பாடல் எத்தடையுமின்றி திரைப்படத்தில் இடம்பெற்றது.

இதனால் மிகுந்த மனவருத்தங்களுக்கு ஆளான இளையராஜா இவ்விஷயங்களை கண்காணிக்கத்தொடங்கினார். நான்கு ஆடியோ நிறுவனங்கள் அவருடைய பாடல்களுக்கான உரிமைகளை வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊடகங்களுக்கும் வெவ்வேறு விதமாக அனுமதி கொடுத்து வந்ததை கண்டறிந்தார். கடந்த 2014 செப்டம்பரில் நான்கு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் தொடர்ந்து அத்துமீறல்கள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன.

அதற்கு பிறகு ஒரு நீண்ட போராட்ட்த்திற்குப் பிறகே நீதிமன்றத்தின் வழி தன்னுடைய உரிமைகளை பெற்றுள்ளார் இளையராஜா. இனி இளையராஜாவின் இசையை அவருடைய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தமுடியும். தன்னுடைய பாடல்களின் வழி கிடைக்கும் ராயல்டியில் தயாரிப்பாளர்,பாடலாசிரியர் மற்றும் பாடகருக்கும் உரிய பங்கினை கொடுக்கவிருப்பதாகவும் இளையராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இப்படி தனக்கான உரிமைகளை ஒரு படைப்பாளி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறுவதில் எவ்வித தவறுமில்லை. அவருக்கு வயதாகிவிட்டது, இனிமேல் அவருக்கு எதற்கு பணம் என்கிற விமர்சனம் அவர்மீது வைக்கப்படுகிறது. அவருக்கு வயதாகிவிட்டது என்பதால் அவருக்கு பணத்தின் தேவை இல்லை என்பதால் அவருடைய படைப்புகளை யார் வேண்டுமானாலும் இஷ்டப்படி எடுத்து எங்குவேண்டுமானாலும் போட்டு காசு சம்பாதித்துக்கொள்ளலாமா? வரைமுறை வேண்டாமா?

அனேகமாக அடுத்து இணையத்தில் எல்லை மீறும் காப்பிரைட் உரிமைகளுக்காக இளையராஜா போராடுவார் என்று எதிர்பார்க்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய சவாலாகவும் இருக்கலாம். அவர்மீதுள்ள அன்பின் காரணத்தை முன்னிட்டே அதன் பொருட்டே இங்கு அவருடைய படைப்புகள் இலவசமாக படையல் வைக்கப்படுகின்றன. டாரன்ட் காடுகளில் இளையரஜா இதுவரை இசையமைத்த 2700 பாடல்கள் மொத்த தொகுப்பு இலவசமாக தரவிறக்க கிடைக்கிறது. அப்படிப்பட்ட சூழலை அவரும் அவருடைய நீதி ஆலோசகர்களும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்திந்துருந்தான் பார்க்கவேண்டும்.

இளையராஜாவின் அரசியலில் நமக்கு ஒப்புதல் இல்லாமலிருக்கலாம் (அவருக்கு ஏது அரசியல் என்று கேட்கக்கூடாது). அவருடைய பாடல்கள் நமக்கு பிடிக்காமலிருக்கலாம். அவற்றை விமர்சிக்கலாம். ஒரு படைப்பாளியாக இந்தத்தள்ளாத வயதிலும் தன் படைப்புகளுக்கான நியாயமான உரிமைகளுக்காக போராடும் போது அவர் பக்கமாகத்தான் நாம் நிற்கவேண்டும்.

22 May 2015

மக்கள் முதல்வருக்கு நன்றி
இன்று காலை தூங்கிக்கொண்டிருந்த போது டிவியில் ஏதோ சேனலில் வாசித்துக்கொண்டிருந்த செய்திகள் காதில் விழுந்தன. அச்செய்திகள் கேட்க கேட்க ஆச்சர்யமூட்டின. நான் கேட்பது நிஜத்திலா கனவிலா என்பது விளங்காமல் விழித்துப்பார்த்தேன் நிஜமாகவே டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பெண்மணி மும்முரமாக செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அந்த சேனலில் வாசிக்கப்பட்ட செய்தி இதுதான். (என் காதில் கேட்டவைகளின் தொகுப்பு)

‪#‎நேற்று‬ வெளியான பத்தாம்வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் சாதனைக்கு காரணம் கடந்த நான்காண்டுகளாக மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்கள் மேற்கொண்ட கல்விகொள்கைகளே என்று கூறி மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்களை மனதார வாழ்த்தினர். தேர்வில் வெற்றிபெற்ற பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகள் தேர்ச்சி பெற காரணமாக இருந்த மக்கள் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎வெப்பசலனம்‬ காரணமாக அடுத்த நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் பரவலாக மழைபெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கோடையிலும் குளுமை தரும் இம்மாமழைக்கு காரணமான மக்கள் முதல்வரின் முயற்சிகளை பொதுமக்கள் வாயார வாழ்த்தி பல்வேறு கோயில்களில் அர்ச்சனை அங்கபிரதட்சணம் முதலான வேண்டுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வருணபகவான் தற்போது அனுப்பியிருக்கும் செய்தியில் மக்கள் முதல்வரின் தர்மம்தான் இம்மழைக்கு காரணம் என்று புகழ்ந்துள்ளார்.

‪#‎விலைவாசி‬ உயர்வு, பல்வேறு கட்டுமான பணிகளில் தேக்கம் முதலான அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை மடிப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது அக்கட்சியினர் போராட்டம் நடத்த இடம் தந்த மக்கள் முதல்வருக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎தங்கம்‬ விலை கிராமுக்கு நாற்பத்தைந்து ரூபாய் குறைந்துள்ளது. கடந்த நான்காண்டு ஆட்சியில் தன்னுடைய சீரிய கொள்கைகளால் மக்கள் முதல்வர் புரட்சி தலைவி அவர்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால்தான் இது சாத்தியமானது என்று பொருளாதார ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைந்ததை அடுத்து மக்கள் முதல்வரை பாராட்டி வீதிகள் தோறும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.

#நேற்று சென்னை சேப்பாக்கம் அருகே நடந்த ஒரு மோதலில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் சிலர் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கி அவருடைய மண்டையிலிருந்த மசாலாவை சுரண்டி எடுத்தனர். மக்கள் முதல்வருடைய உண்மை விசுவாசிகளின் இந்நடவடிக்கையை உண்மையான பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர், பத்திரிகையாளர் சங்க தலைவரான திரு கும்பகோணம் கோவாலு இவ்விஷயத்தில் மக்கள் முதல்வரின் ஆணைக்காக காத்திருக்கிறோம் அவர் ஆணைவந்ததும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்து நீதியை நிலைநாட்டியுள்ளார்.

விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்…
சென்னை அமிர்தால படிக்கும்போதே பத்தாயிரம் வரைக்கும் சம்பளம், போன வருடம் நான் அங்க இருந்தேன் இப்போ நான் இங்க இருக்கேன் அதுக்கு காரணம் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள்தான் அவர்களுக்கு நன்றி!
செய்திகள் தொடர்கின்றன.

‪#‎நடந்துவரும்‬ ஐபிஎல் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்களை சிறைக்கு அனுப்பிய பாதகர்களின் அணியான பெங்களூரு அணியை தோற்கடிக்க அம்மாவின் ஆசிகளை வேண்டி அவர்களுடைய போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்திருந்த இந்திய அணி *(பீப்ப்ப்ப்)* மகேந்திர சிங் தோனி மக்கள் முதல்வரின் ஆசிகளை பெற்றுக்கொண்டு அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

‪#‎இன்று‬ மக்கள் முதல்வர் அவர்கள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணவிக்கிறார் என்பதற்காக சென்னையின் சாலைகளெங்கும் விதவிதமான பேனர்கள் அலங்கரிக்கின்றன. சுவர்களெங்கும் மக்கள் முதல்வரை வாழ்த்தும் போஸ்டர்கள் நிறைந்துள்ளன. இது சென்னையின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக பொதுமக்கள் நம்மிடம் தெரிவித்து போஸ்டர் ஒட்டி அம்மாவின் உண்மை விசுவாசிகளுக்கு நன்றி என்று தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎இவ்விழா‬ ஏற்பாடுகளை பார்வையிட்ட மக்களின் முதல்வர்
புரட்சிதலைவி இச்சாதனைகளுக்கு காரணமான மக்களின் முதல்வர் புரட்சிதலைவிக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்!
நன்றி வணக்கம்!

‪#‎முடியல‬-முழிச்சிகிட்டேன், எந்த சேனல்னு கவனிக்கலை.

18 May 2015

8 Points - புறம்போக்கு#தமிழில் PRISON ESCAPE படங்களை தேடினால் மோகன்லால் நடித்த "சிறைச்சாலை" மட்டும்தான் கிடைக்கிறது. அதுகூட மலையாள வாசனை நிறைந்த படம். ஹாலிவுட்டில் ஜெயில் ஜானரில் நூற்றுக்கணக்கில் படங்கள் உண்டு. மரணதண்டனைக்கு எதிரான திரைப்படங்கள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ப்ச்…! நண்பர் ஒருவர் ‘’அரவாண்’’ என்றார். அது மக்களுக்கு தரப்பட்ட மரணதண்டனை இல்லையா... அதனால் நெக்ஸ்ட்டு தேடினேன். கமலஹாசனின் விருமாண்டி மட்டும்தான்! தமிழ்சினிமாவில் மரணதண்டனைக்கெதிரான நடவடிக்கை என்றால் கிளைமாக்ஸில் முக்கிய பாத்திரத்தைத் தூக்கில் போடப்போகும்போது சாட்சியோடு வந்து நிறுத்துங்க என்று தடுத்து நிறுத்துவதுதான்! (உதாரணம் – குருசிஷ்யன், ராஜாதிராஜா). அந்த வகையில் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை அது எடுத்துக்கொண்ட பின்னணியின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது. .

#தியேட்டரில் ஒரளவு கூட்டம்தான். சில வசனங்களுக்கு கைத்தட்டுகள் அள்ளுகிறது! படம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு பின்னால் ஒரு அம்மையார் ‘’படம் ஒகேதான், சில வசனங்கள்தான் புரியல, ஆனா கிளைமாக்ஸ்தான் மொக்கையாருக்கு’’ என்றுவிட்டு சென்றார். படத்தின் பாராட்டத்தக்க அம்சமே அந்த கிளைமாக்ஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

#இப்படத்தை பாரக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த தூக்கிலிடுபவரின் நாட்குறிப்புகள் நூல் நினைவுக்கு வந்தது. உன்னதம் பதிப்பகம் வெளியீடு. மலையாளத்திலிருந்து தமிழில் இரா.முருகவேள். மரண தண்டனை குறித்த மிகமுக்கியமான ஒரு ஆவணம் இது. இந்நூலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றுகிற ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். 117பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றியவர் இவர்! தூக்கிலிடுபவனின் வலி, வேதனை, அன்றாட கடமைகள், சடங்குகள் என்று நூல்முழுக்க பல விஷயங்கள் நிரம்பியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த அந்த நூல் பொறம்போக்கு படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது. நிறைய வாசிக்கிற ஜனநாதன் நிச்சயம் இந்த நூலை வாசித்திருப்பார் என்று நினைக்கிறேன். படத்தில் வருகிற எமலிங்கம் (விஜயசேதுபதி) பாத்திரம் ஜனார்த்தனன் பிள்ளையைப் போலவேதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படமே அந்நூல் தந்த பாதிப்பில் உருவாகியிருக்கலாம்!

#படத்தின் ஆரம்பக்காட்சிகளில் எமலிங்கம் என்கிற அப்பாவியை கொல்ல நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தினர் சிலர் தீர்மானிக்கிறார்கள். கையில் கூரான ஆயுதங்களுடன் எமலிங்கத்தை பின்தொடர்கிறார்கள். ஸ்கெட்ச்சு போடுகிறார்கள். அவனை கொன்றுவிட்டால் நக்சல் தலைவரை தூக்கில் போடமுடியாமல் போகுமாம! என்ன லாஜிக்கோ வெங்காயமோ. அந்த எமலிங்கத்தை கொல்ல கிடைக்கிற சந்தர்ப்பத்தில் கூட அம்மா சென்டிமென்ட் பார்த்து அவனை வேற இடத்துல வச்சு முடிச்சிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். உலகிலேயே அம்மா சென்டிமென்ட் உள்ள போராளிகள் தமிழ்சினிமா போராளிகளாகதான் இருக்கவேண்டும். இப்படி எந்த பாவமும் பண்ணாத தூக்கிடுகிற ஒரு அப்பாவியை கொல்ல துடிக்கிற இந்த கோஷ்டி கானம் குழுவினரின் தலைவர் ஆர்யா படம் முழுக்க மரண தண்டணை ஏன் தவறானது என்று பக்கம் பக்கமாக கிளாஸ் எடுப்பது படத்தின் ஆகப்பெரிய முரண் நகைச்சுவை. ஆச்சர்யமூட்டும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பாலான மரண தண்டனை எதிர்ப்பு போராளிகளுக்கும் இப்படி ஒரு நிலைப்பாடு உண்டு. முருகன்,சாந்தனை தூக்கிலிடக்கூடாது என்று ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் ராஜபக்சேவை தூக்கிலிட துடிப்பார்கள். அஜ்மல் கசாபை தூக்கில் போடும்போது அமைதியாகிவிடுவார்கள்!

#ஒரு பெண் போராளி காட்டப்படுகிறார். இளம் போராளி. மனிதவெடிகுண்டாக மாற தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் இயக்கத்திற்கே ஒப்புக்கொடுத்தவர். விரைவிலேயே வீரமரணம் அடைந்து தியாகியாகப்போகிறவர். அப்படிப்பட்டவரோ எந்நேரமும் வாய்நிறைய லிப்ஸ்டிக்கும், மார்புகள் பிதுங்கும் டிஷர்ட்டும் டைட்டான ஜீன்ஸும் வாயெல்லாம் லிப்ஸ்டிக்குமாக வாழ்வாங்கு வாழ்கிறார். அவருக்கு குயிலி என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தற்கொலை போராளி இந்த குயிலி. அப்படிப்பட்ட பெயரை வக்கனையாக வைத்தவர் அந்த பாத்திரத்தையும் கொஞ்சம் வலிமையாக வடிவமைத்திருக்கலாம். ஆனால் அவரை எல்லாவிதமான சினிமாத்தனங்களோடுதான் அது காட்சிப்படுத்தப்படவேண்டுமா? அதிலும் போராளித்தலைவரோடு பனிமலையில் டான்ஸ் வேறு ஆடுகிறார்! தன்னுடைய முந்தைய படமான ஈயில் ஜனநாதன் ஒரு போராளியை காட்சிப்படுத்தியிருப்பார். பசுபதி நடித்த அந்த பாத்திரம் அச்சு அசலான நக்சல்பாரி போராளியாக வெளிப்பட்டிருக்கும், அப்படி இருந்த ஜனநாதன் பெரிய பட்ஜெட் என்பதால் ரிச்சான போராளிகளாக காட்டிவிட்டார் போல!

#விஜயசேதுபதியை ‘’இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ ஷூட்டிங்கிலிருந்து அப்படியே மேக்கப் கூட கலைக்காமல் அழைத்து வந்து நடிக்கவைத்திருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற இரண்டு நாயகர்களும் சாக்லேட் பையன்களாக இருந்தாலும் ஷாம் பல தெலுங்கு படங்களில் போலீஸாக நடித்து நடித்து நிஜபோலீஸைப்போலவே ஆகிவிட்டார். கடையியாக அவரை ''ரேஸ் குர்ரமில்'' ஐபிஎல் ஆபீசராக பார்த்த நினைவு. ஆர்யாவை பார்த்தால் போராளி போலவே இல்லை. அண்ணன் சீமானையாவது அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்! புரட்சிகரமாக இருந்திருக்கும்.

#தேவையில்லாத காட்சிகள், அலுப்பூட்டும் திரைகதை, லாஜிக் ஓட்டைகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும் நிறைய நல்ல தருணங்களும் உண்டுதான். குழந்தையை கற்பழித்தத்ற்காக ஆயுள்தண்டனை பெற்றவருக்கு பதினெட்டு ஆண்டுகள் கழித்து நிரபராதி என்று விடுதலை கொடுக்கிற அந்த காட்சியும் அவர் நான் வெளியே போகல என்று துடிக்கிற அந்தக்காட்சியும் சிறப்பானது. ஜெயிலில் ஷாம் செய்கிற சீர்திருத்தங்களும் அவர் சிறைத்துறை மீது வைக்கிற விமர்சனங்களும் அபாரமானவை.

#தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லோருக்குமே பழிவாங்குவது அல்லது பலிகொடுப்பதுதான் பிடித்தமானது. அவ்வளவு அரசியல் ஆழ்ந்த அரசியல் அறிவுள்ள ‘’ரமணா விஜயகாந்த்’’ கூட கடைசியில் தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொள்வதுதான் தமிழ்சினிமா பாணி! அப்படியொருசூழலில் இப்படம் ஒரு நல்வரவு. தைரியமாக மரண தண்டனை எதிர்ப்பை பேசியதற்காகவே ஜனநாதனின் இந்தப்படத்தை அதன் எல்லா குறைகளுடனும் சகித்துக்கொள்ளலாம். அக்குறைகளை தவிர்த்திருந்தால் காலத்திற்கும் மனதில் நிற்கவல்ல ஒரு நல்ல ஆக்கமாக வந்திருக்கும்.

14 May 2015

குலக்கல்வி திட்டம் 2015
2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய அளவிலான கணக்கீட்டின்படி இந்தியாவில் மட்டுமே நாற்பது லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (ஐந்து முதல் பதினான்கு வயதுவரை). இதில் ஒருலட்சத்து இருபதாயிரம் பேர் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்! தமிழ்நாட்டில் 70ஆயிரம்!

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் நம்மால் இன்னமும் இந்த எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் குழந்தைத்தொழிலாளர் முறைக்கு முழுமையான தடை இருக்கிறது. இப்பயே இந்த லட்சணத்தில் இயங்கும் நம்முடைய அரசு எந்திரம், இப்போது அந்த தடையிலும் சில விஷயங்களை தளர்த்தி அதிர்ச்சி தந்திருக்கிறது.

விஷயம் இதுதான். கடந்த மே 13ஆம் தேதி ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

* பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

* குடும்பத்தின் குலத்தொழில்களில் (விவசாயம், மண்பாண்டம் செய்தல், மீன்பிடித்தல் முதலான) தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம், அதாவது பள்ளி நேரத்துக்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் பணியாற்றலாம்!

இவைதவிர்த்து தற்போதுள்ள சட்டத்தில் இருக்கிற தண்டனை மற்றும் அபராத அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன (அது வரவேற்கத்தக்க அம்சம்தான்!). இந்த சட்டதிருத்தம் பற்றித்தான் வட இந்திய ஊடகங்கள் இப்போது அதிக அளவில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்திருக்கிறது மோடியின் அரசு.

ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி எந்த குழந்தையையும் 14 வயதிற்குள் எப்படிப்பட்ட பணியிலும் அமர்த்தக்கூடாது என்கிற அறிவிப்பு உள்ளது. 2009ல் கல்வி உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 6 முதல் 14 வயது வரையுள்ள எல்லா குழந்தைகளும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பப்படவேண்டும். இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு இடைநிற்றலால் கல்வியை இழந்த எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள இந்த திருத்தங்களால் ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டமும், கல்வி உரிமை சட்டமும் நீர்த்துப்போகும் அபாயம் உருவாகியுள்ளது. ஆபத்தில்லாத பணிகளில் இக்குழந்தைகளை பணியலமர்த்தலாம் என்கிற சட்டதிருத்தத்தால் அதிக ஆபத்தில்லாதவை என்று கருதப்படும் குழந்தைத்தொழிலாளர்கள் அதிகமும் ஈடுபடுத்தப்படும் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்புத் தொழில், சேலத்தில் கொலுசுப் பட்டறை, பீடி சுற்றும் தொழில்களில் இக்குழந்தைகள் ஈடுபடுத்தப்பட நேருவதும் அடிப்படை கல்வி உரிமையும் பறிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இனி யாரும் குழந்தைகளை பணிக்கமர்த்தி இச்சட்டத்தின் உதவியோடு எனிதில் தப்பிக்கவும் இந்த திருத்தம் உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுடைய குழந்தைகள்தான் அதிகமும் தொழிலாளர்களாக தங்களுடைய குலத்தொழில்களை செய்கிறவர்களாக இருக்கிறார்கள் என்கிறது யுனிசெஃப். இப்போது வந்திருக்கிற இச்சட்டத்திருத்தம் யாருக்கு பாதகமாக இருக்கும் என்பதை சொல்லவும் தேவையில்லை.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதையே கட்டுபடுத்தும் கண்காணிக்கும் அமைப்போ விதிகளோ இல்லாத நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பயன்படுத்தலாம் என்கிற அனுமதி என்னமாதிரியான பின்விளைவுகளை உருவாக்கும்?

போகட்டும். தன்னுடைய குலத்தொழிலை குழந்தைகளை செய்ய அனுமதிக்கிற கற்றுக்கொள்ள வைக்கிற இதே மாதிரியான ஒரு விஷயம் அறுபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

1953ல் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதற்கு பெயர் குலக்கல்வி திட்டம். அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முன்வைக்கப்பட்ட காரணம் அப்போதைய கல்விச்சூழலில் சென்னையின் மாகாணத்தின் கல்வியறிவு 21சதவீதம்தான் என்பதும், அதனால் அப்போதிருந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்க இந்த புதிய திட்டம் அமல்படுத்தபடுகிறது என்றும் சொல்லப்பட்டது. இத்திட்டம் வெளிநான நாளில் இருந்தே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்தது! அதற்கு காரணம் இது நேரடியாக வர்ணாசிரம கொள்கையை முன்னெடுப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் கிராமங்களிலும் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் பட்டியல் சாதியில் பிறந்த குழந்தைகளுக்கும்தான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம் திராவிடர் இயக்கத்தினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

பாஜக முன்வைத்திருக்கிற இந்த சட்டதிருத்த மசோதாவுக்கும் ராஜாஜி கொண்டுவரத்துடித்த குலக்கல்வி திட்டத்திற்கும் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது! ஒரே ஒரு வித்தியாசம்தான் ராஜாஜியை எதிர்க்க அன்றைக்கு வலுவான ஒரு பெரியார் இருந்தார். இன்று அப்படி யாருமேயில்லை. குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பணியாற்றிய கைலேஷ் சத்யாத்ரிக்கு நோபல்பரிசு கொடுத்து ஓராண்டுகூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு விஷயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம்!

12 May 2015

குழந்தைகள் ஜாக்கிரதை!
Pedophile என்கிற சொல்லை கேள்விப்பட்டதுண்டா? இதுவரை தெரியாதென்றால் இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டிய விஷயம் இது. Phedophilia என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களை பீடோபைல் என்று அழைக்கிறார்கள். இந்த பீடோபைல்கள் ‘’குழந்தைகளின் மீது பாலியல் நாட்டம் கொண்டவர்கள்’’. தினமும் இவர்களை பற்றி எண்ணற்ற செய்திகளை நாம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் செய்கிறவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்.

பதினோறு வயதிற்கும் குறைவான சிறுவர் சிறுமியர் மீது பாலியல் நாட்டம் கொள்ளும் இந்த பீடோபைல்கள் தங்களுடைய வேட்கைக்காக அக்குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கவும் தயங்குவதில்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது அதைக்குறித்து வக்கிரமாக கற்பனைகள் செய்வது தங்களோடு பழகும் குழந்தைகளை அதற்கென பயன்படுத்த முயற்சி செய்வது தன்னைப்போன்ற பீடோபைல்களோடு அதுகுறித்து விவாதிப்பது என இவர்களுடைய வெறுக்கவைக்கும் நடவடிக்கைகள் பட்டியல் நீள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்தும் CHILD SEX ABUSE குறித்தும் அடிக்கடி நிறையவே செய்தித்தாள்களில் படித்திருந்தாலும் இவர்கள் நம்மோடு இருந்தாலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு அனானிமஸாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். குழு அமைத்துக்கொண்டு இதுகுறித்த உரையாடலையும் அனுபவபகிர்தலையும் முன்னெடுக்கிறார்கள்!

சென்றவாரம் ட்விட்டரில் ஒரு நண்பர் ‘’சின்னப்பொண்ணு வெறியர்கள்’’ என்கிற ஃபேஸ்புக் பக்கத்திற்கான இணைப்பை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று பார்த்தால் சில கேடுகெட்ட அயோக்கியர்கள் பச்சிளங்குழந்தைகளின் படங்களை போட்டு அதில் அருவருக்கதக்க பாலியல் கமென்ட்களையும் சேர்த்திருந்தனர். இணையத்தில் இயங்குகிற இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு இணையதளத்தை பார்த்து கைகால் வெலவெலத்துப்போனது இதுதான் முதல் முறை! அந்த பக்கத்தை பார்த்தபிறகு அடுத்த அரைநாளும் மூளைக்குள் நரகவேதனையை உணர்ந்துகொண்டிருந்தேன். நம்மில் பலரும் இதுமாதிரியான மனிதர்களை நம்முடைய பால்யத்தில் கடந்திருப்போம். அந்த நினைவுகளின் மிச்சங்கள் கூட அந்நடுக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

அந்த பக்கத்தில் பகிரப்பட்டிருந்த அத்தனை படங்களும் நாமும் நம்முடைய நண்பர்களும் யதார்த்தமாக பகிர்ந்துகொண்ட நம்வீட்டு சின்னக்குழந்தைகளின் மிகச்சாதாரண படங்கள். இந்த பக்கத்தை நடத்தும் அட்மின் வரிசையாக நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளின் படங்களை பகிர்ந்துகொண்டு ஒவ்வொரு படத்திற்கு கீழும் ‘’இவளை என்ன செய்யலாம்’’ என்பது மாதிரி கேட்கிறான். அடுத்தடுத்த பின்னூட்டங்களில் வந்திருந்த கருத்துகளை இங்கே எழுதமுடியாது. அத்தனை வக்கிரமானது. இந்த அயோக்கியர்களின் கைகளில் ஒரு குழந்தைகிடைத்தால் என்னாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இப்பக்கத்தில் பலரும் குழந்தைகளுடனான பாலியல் அனுபவங்களை ரத்தமும் சதையுமாக பகிர்ந்திருந்தனர். அதை வாசிக்கும்போது மயக்கமே வந்துவிட்டது. என்னால் அடுத்த சில மணிநேரங்களுக்கு எந்த வேலையிலும் ஈடுபடமுடியவில்லை. தலையை சுற்றிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டது.

குழந்தைகளோடு உடலுறவில் ஈடுபடும்போது அவர்கள் வலியால் துடிப்பதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பதையெல்லாம் வார்த்தைகளால் கொட்டி வைத்திருந்தனர். இதில் கமென்ட் செய்திருந்த ஒருவன் பள்ளியொன்றில் ஆசிரியராக பணியாற்றுபவன்! அப்பக்கத்தின் அடுத்தடுத்த படங்களையும் கருத்துகளையும் பார்க்க பார்க்க தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. இதில் உச்சபட்ச வேதனை தந்தது அப்பக்கத்திற்கு வந்திருந்த நான்காயிரம் லைக்குகள்! அத்தனை பேரும் தமிழர்கள்! (இப்பக்கம் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது, எந்த நிர்வாண படமும் இல்லை). அத்தனை பேரும் நம்மோடு தினமும் சமூகவலைதளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது. நான்காயிரம் என்கிற எண்ணிக்கைதான் இப்போதும் அதிர்ச்சியைத்தருவதாக இருக்கிறது. இத்தனை பேர் என்பதைத் தாண்டி இதை பார்க்கிற பதின்பருவ பையன்கள் கூட இதை முயற்சி செய்து பார்க்க நினைக்கலாம். அவர்களுடைய முதிர்ச்சியற்ற பாலியல் வேட்கைக்கு குழந்தைகள் எளிதான வேட்டையாகவும் கூட அமையும் ஆபத்து இதில் இருக்கிறது.

இந்த பக்கத்தை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உடனடியாக ஃபேஸ்புக்கில் அப்பக்கத்தை பகிர்ந்துகொண்டு நண்பர்களை இதுகுறித்து ஃபேஸ்புக்கில் புகார் செய்து பக்கத்தை நீக்குமாறு வலியுறுத்தினேன். பல நண்பர்களை போனிலும் உள்பெட்டி செய்தியிலும் தொடர்புகொண்டு இப்பக்கம் குறித்து நண்பர்களிடம் சொல்லி புகாரளிக்க கூறினேன். நண்பர்கள் சிலரிடம் பேசி சைபர் கிரைமை அணுகுவது குறித்தும் ஆலோசித்துக்கொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான நண்பர்கள் அபக்கம் குறித்து பகிர்ந்துகொண்டு ஃபேஸ்புக்கில் புகார் அளித்தனர். நண்பர் ஒருவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். சைபர்கிரைம் உடனடியாக ஃபேஸ்புக் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு அப்பக்கத்தை நீக்கியது. அதோடு அப்பக்கத்தை நிர்வகித்தவரையும் பிடித்து தண்டிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.

இப்படி அப்பக்கத்தை புகார்கொடுக்க சொல்லி பகிர்ந்துகொண்டபோது அதன் லைக்குகள் எண்ணிக்கை 3800 சில்லரைதான், ஆனால் நான் பகிர்ந்துகொண்ட பிறகு அதன் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து நான்காயிரத்தை எட்டியது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. சில பெண் தோழிகள் என்னை தொடர்புகொண்டு இதையெல்லாம் ஏன் பகிரங்கமா இப்படி பகிர்ந்துகொள்ளணும் அது அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பார்வைக்கு போனால் மிகவும்வருத்தமாக இருக்காதா, இது அவர்களுக்கும் விளம்ரமாக ஆகிவிடாதா என்றனர். ஆனால் இதுமாதிரி கயவர்களை கண்டுங்காணாமல் போனாலோ அல்லது மர்மமாக எதிர்நடவடிக்கைகளில் இறங்கினாலோ எந்தவித பிரயோஜனமும் இருக்காது என்பதனால்தான் அதனை நேரடியாக பகிர்ந்துகொள்ள வேண்டியதாயிருந்தது! அப்படி பகிர்ந்துகொண்டதால்தான் இன்று அப்பக்கம் குறித்துப்பரவலான ஊடக வெளிச்சம் கிடைத்தது.

இதோ இன்று அப்பக்கத்தை நிர்வகிக்கொண்டிருந்த யாதவா மணிகண்டா என்கிறவனை திருப்பதியில் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது சைபர் கிரைம் காவல்துறை! அனேகமாக அவனுடைய குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. இவன் மட்டுமல்ல இன்னும் அப்பக்கத்தில் கமென்ட் போட்டவன், லைக் போட்டவன் என பலரையும் காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இது நிச்சயம் சமூகவலைதள வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கும். சைபர் கிரைமின் இந்த உடனடி நடவடிக்கைகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். இவ்வளவு விரைந்து அப்பக்கத்தை மூடியதும், அதற்குரியவரை கைது செய்திருப்பதும் இணையவாசிகளின் போற்றுதலுக்குரியது. அதற்காகவே அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். இவ்விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் போட்டதுமே பதறிப்போய் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு விஷயத்தை காவல்துறை வரைக்குமே கொண்டு சென்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

சைபர் கிரைம் என்பதே ஏதோ தனிநபர் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிற ஆலமரத்தடி பஞ்சாயத்துகளைப் போலவேதான் இணையத்தில் நமக்கு
நன்குபரிச்சயமான சிலர் முன்பு அதை நாடியதும், சில பர்சனல் பழிவாங்கல்களுக்காக அது பயன்படுத்தப்பட்டதும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சைபர் கிரைம் மாதிரியான அமைப்பினை மக்களாகிய நாம்தான் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையான குற்றங்களென்றால் நிச்சயம் அவர்களிடமிருந்து நல்லவிதமான எதிர்வினை உண்டு என்பதை இந்த பீடோபைல் விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.

***

இன்று ஃபேஸ்புக்கை பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமும் பயன்படுத்துகிறார்கள். எல்லாமே பதினோறு வயதிற்கும் குறைவான குட்டீஸ்கள். இதுமாதிரியான பீடோபைல்கள் அவர்களை எளிதில் நெருங்க முடியும். அதனால் நம் குழந்தைகளின் சோஸியல் மீடியா ஆக்டிவிட்டிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், அங்கே இருக்கிற இதுமாதிரியான கேடுகெட்ட அயோக்கியர்களை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாமும் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*உங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பொதுவில் பகிர்ந்துகொள்ளாதீர்கள். குறிப்பாக குழந்தைகளாகவே இருந்தாலும் உடையில்லா புகைப்படங்கள் வேண்டவே வேண்டாம்.

*2007ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் குழந்தைகளின் மீது பாலியல் வன்முறையை நிகழ்த்துபவர்களில் 50சதவீதம் பேர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதனால் வெளி ஆட்களை விட நமக்கு நெருக்கமானவர்களால்தான் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

*இணையத்தில் உங்கள் குழந்தைகளின் பள்ளி, வசிப்பிடம் மாதிரியான விஷயங்களை தயவு செய்து பகிர்ந்துகொள்ளாதீர்கள். குழந்தைகளை நெருங்க நாமே வாய்ப்புகளை வழங்கக்கூடாது.

*குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் அவர்களிடம் வசிப்பிடங்களை TAG செய்வது கூடாது என்பதையும் STRANGERS இடம் பேசுவதில் இருக்கிற ஆபத்தையும் நேரடியாக உட்கார்ந்து விளக்கவும்.

*இவை தவிர இதுமாதிரியான இணைய குழுக்கள், பக்கங்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கவும்.

சமூகவலைதளங்கள் என்பது நம்முடைய சமூகத்தின் பிரதிபலிப்பே, அதனால் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல இந்தக்கயவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கலாம். அதனால் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதும், குட்-டச் பேட் டச் எது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது! காரணம் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில்!