Pages

30 January 2009

எம் சகோதரன் முத்துகுமரனுக்கு வீரவணக்கங்கள்




இனவெறி சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராய் , நம் தமிழ் இனத்தின் வாழ்வுக்காய் தன்னுயிர் நீத்த நம் சகோதரர் முத்துகுமரனுக்கு வீரவணக்கங்கள். வீரவணக்கங்கள், வீரவணக்கங்கள்.

மலம்தின்னும் அறிக்கை அரசியல்வாதிகளுக்கு நடுவில் இனியும் நம் தமிழினத்தை காக்க இயலாதோ என தீக்குளித்தாயோ என் சகோதாரா!



*************************

தீக்குளிப்பதற்கு முன் விநியோகித்த முத்துகுமரனின் இறுதி அறிக்கை -

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


*********************


பதிவுலக நண்பர்களுக்கு ,

இந்த அறிக்கையை உங்கள் வலைப்பூவிலும் ஒரு தனிப்பதிவாய் போடலாமே. முத்துக்குமரனின் இறுதி அறிக்கை அனைவரையும் சென்றடைய உதவுவோம்.

வாசக நண்பர்கள் மின்னஞ்சலில் இந்த அறிக்கையை உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு அனுப்புங்கள். சென்றடையட்டும் எட்டுத்திக்கும் எம் சகோதரனின் குரல்.

*********************

29 January 2009

FLASH NEWS - சிங்கள இனவெறி அரசை கண்டித்து பத்திரிக்கையாளர் தீக்குளிப்பு

சிங்கள இனவெறி அரசை எதிர்த்து இன்று சென்னை சாஸ்திரி பவன் எதிரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் ஆர்ப்பாட்டத்தில் திடீரென பத்திரிக்கையாளர் முத்துக்குமரன் தீக்குளித்தார். இவர் பெண்ணே நீ என்னும் மாதப்பத்திரிக்கையில் அச்சுக்கோர்க்கும் பிரிவில் பணியாற்றி வந்தார் . அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

26 January 2009

சிகப்பு விளக்குப்பகுதியும் சில்லரைக்காசுகளும்...




























முன்னாலிருக்கும் இளைஞனை இறுகக்கட்டியணைத்த இளம்பெண்கள் ஒரு இருபது சொச்சமாவது இருக்கவேண்டும். சினிமா போஸ்டர்கள்,அரசியல் ஹோர்ட்டிங்கள் , விளம்பரங்கள் இல்லை. கறுப்பு பட்டை குறுக்கிட, முதுகில் எக்ஸிகியூட்டிவ் பேகுடன் ஒரு பத்து பேர். வெள்ளையும், மஞ்சளும், கறுப்பும், சிவப்புமாய் விதவிதமான எட்டு கார்கள். அதில் பாதிக்கு மேல் குளிரூட்டப்பட்டவை.

அழுக்கடைந்த சில, பளபள பல பேருந்துகள். அழுக்கு பேருந்தில் தொங்கிக்கொண்டு, சாகசம் செய்யும் இளைஞர் கூட்டம். அவர்களை ஓரக்கண்ணால் அளக்கும் ஜன்னலோர இளசுகள். அதைப்பார்த்து ஆற்றாமை கொள்ளும் பெரிசுகள். கூட்ட நெரிசலிலும் அவர்களை தவற விடாத நடைபாதை ஆண்கள். நடந்து போகும் போது எதிரில் மோதி விடுவார்களோ, இந்த வேடிக்கை ஆண்களென தள்ளி நடக்கும் பெண்கள். நாய் பொம்மை, கலர் ரப்பர் பேண்டு, மலிவு விலை ஹெல்மெட்டு என நடை திருப்பும் பிளாட்பாரக்கடைகள்.

அதனூடே நடைபாதையின் ஓரத்தில், கிழிந்து தொங்கும் குடைக்கு கீழே பல முறை கிழிந்து போன ஒரு செருப்பை தைக்கும் ராமு அண்ணன். 'அந்த' செருப்பை தைக்க இன்னும் எத்தனை மணிநேரமாகுமென ராமு அண்ணனையும் தன் கடிகாரத்தையும் பார்த்தபடியே நிற்கும் ஒற்றை செருப்பாதிபதி. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. அனைத்தும் நகரத்துவங்கின.

ராமு அண்ணனுக்கு அருகில், அவள் சோர்வாய் கால்களை ஊன்றி ஒருக்களித்தபடி வந்து அமர்ந்தாள். கையிலிருந்தது மிகவும் கனமாக இருந்திருக்க வேண்டும், இடுப்பை ஆட்டி அதனை சரி செய்துகொண்டாள். அந்த கனத்தை அந்த கணத்தில் சரி செய்கையில் அவளது சேலை விலகியதால் அதனையும் சரிசெய்து கொண்டாள். வெயில் மண்டையை பிளந்திருக்கவேண்டும், தலையில் தனது சேலையால் முக்காடு போட்டிருந்தாள் , அதையும் நெற்றியோடு இறக்கிக் கொண்டாள் . கையிலிருந்த காசை ஒன்றொன்றாய் எண்ணி எண்ணி பார்த்து தன் கிழிந்த சேலைமூட்டைக்குள் திணித்துகொண்டாள்.

செருப்புக்கடைக்கு அல்லது தைக்கும் கடைக்கு அருகில் குத்தவைத்து அமர்ந்திருந்தவள், ஆயாசமாக எழுந்து பக்கத்தில் இருந்த பைக் கண்ணாடியில் முகம் சரிபார்த்துக் கொண்டாள். வியர்வை வழிந்து முகமே மாறிப்போயிருந்தது . இன்று வெயில் அதிகம் . உடல் முழுக்க வேர்வை, கட்டாயம் பிசுபிசுத்திருக்க வேண்டும். இன்னும் தொண்ணூறு விநாடிகளே இருந்தன.

89 ....88......87

சிக்னலில் நின்று கொண்டிருந்த காரை நோக்கி ஓட்டமும், நடையுமாய் ஓடினாள் . வழியில் கிழிந்த பையின் வெள்ளைநிற அல்லது வெளிர் கருப்புநிற நைலான் கயிறு கால்களில் சிக்கி இடற தடுக்கி விழுந்தாள். முழங்கையில் ரத்தம். அதை எச்சிலால் தொட்டு அழுத்திவிட்டு, 'தேவிடியா பசங்க' என்று யாரையோ ஈனமான குரலில் திட்டிக்கொண்டாள். கையிலிருந்த கனம் கீழே விழுந்து கதறி வீல் என்று அழுதது . குழந்தையையும், அவளையும் யாரும் தூக்கிவிடக்கூட முன்வரவில்லை. அவளாகவே எழுந்துகொண்டாள். குழந்தையும் ஒரு ஓரத்தில் குப்புற கிடந்து அலறியது. குழந்தையின் உடலில் ஒட்டுத்துணியில்லை , வெயிலில் தார் ரோடு பழுக்க காய்ச்சிய இரும்பு தகடு போல் இருந்தது.

அழுக்குக் குழந்தைகளை யாருக்கும் பிடிப்பதில்லை போல, யாரும் அதை தூக்க முன் வரவில்லை. அவள் அங்கே அக்குழந்தையை , எழுத இயலாத மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி அதை தூக்கி அதன் பிருஷ்டத்தில் இருந்த தூசியை மட்டும் தட்டிவிட்டாள். கால் அனிச்சையாக ஆடிக் கொண்டிருந்தது. எலும்பு விலகியிருக்க வேண்டும். இன்னும் அழுது கொண்டுதானிருந்தது. அதனலறல் சிக்னல் வண்டிகளின் இரைச்சலுக்கிடையே ஒரு மேற்கத்திய இசைபோல கேட்டது. வாகன ஓட்டிகள் திரும்பி பார்த்தனர். சிலர் ஹெல்மெட் கண்ணாடியை உயர்த்திப்பார்த்தனர். மீண்டும் சிக்னலை பார்த்தனர். ஹெல்மெட் கண்ணாடியை சிலர் மூடிவிட்டனர். சிலரது ஹெல்மெட்டில் கண்ணாடி இல்லை.

''சார்..சார்...சார்.. பசில குழந்தை அழுது சார்... ஏதாவது குடுங்க சார்.....'' எல்லாரிடமும்..

''சில்லரை இல்லம்மா'' பல்சர்காரன்.

''அண்ணா அண்ணா ''

''போம்மா போம்மா'' பாக்ஸர்காரன்.

''ஐயா ஐயா ''

''ச்சீ போ '' ஆக்டிவாகாரன்.

''மேடம் மேடம்''

''டார்ச்சர் பண்ணாதம்ம'' கைனடிக் பெண்மணி .

''அண்ணே அண்ணே... புள்ள பாலுக்கு அழுதுண்ணே''

''இந்தா...நிக்காத போ இங்கருந்து'' பின்னாலிருந்த காதலிக்காக ஒரு ரூபாய் குடுத்த ஹீரோஹோண்டா. கார் கதவுகளை தட்டினாள்..

'' சாமி சாமி '' ''இந்தா.. '' ஐந்து ரூபாய் கொடுத்தார்(ன்) ஐயப்பசாமி...

''ஐயா ஐயா''

''போம்மா போம்மா... வரவர உங்க தொல்ல தாங்க முடியல... போய்
தொலைங்க.''

'' சார், சார் ''

''இவங்களையெல்லாம் ரோட்டிலேயே வச்சு சுடணும்யா''

''அம்மா அம்மா ''

''இவங்களாலதான் இந்தியாவுக்கு அசிங்கம்''

''பாய் சாப் பாய் சாப் ''

''இங்கேவா இந்தா... '' பத்து ரூபாய் கொடுத்து புண்ணியம் வாங்கினான் இந்திக்காரன் .

பச்சை எரிந்தது. எல்லாம் விலகியது. இரண்டரை நிமிட எசமான்கள் முறுக்கிக் கொண்டு நகரத்துவங்கினர். சோர்ந்து போய் ராமு அண்ணனுக்கு அருகில் அமர்ந்தாள். குழந்தை இன்னும் அழுது கொண்டுதானிருந்தது. அதனை அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........ என்று உயிரே போவது போல ஒரு விபரீத ஒலி. அவளோ அமைதியாக கையிலிருந்த சில்லரைகளை எண்ணிக்கொண்டிருந்தாள். குழந்தை அழுவதை சட்டை செய்ததாய் தெரியவில்லை.

''எவன் புள்ளையோ பாவம் அழுதுட்டுருக்கு பாரு எருமக்கடா மாதிரி எவ்ளோ தெனாவெட்டா உக்காந்து காசென்றானு, இவளுங்களுக்குலாம் காசே போடக்கூடாது சார் ''

''ம்ம்''

''குழந்தைய எங்கயாவது வாடகைக்கு எடுக்கறது , சிக்னல்ல பிச்சை எடுக்கறது , பாவம் யார் பெத்த புள்ளையோ எப்படி அழுது பாருங்கோ, இவாளுக்கும் பகவான் படியளக்கறானே ''

இரண்டு பேர் , யாரோ , அவளை பார்த்து பேசியபடியே பிளாட்பாரத்தில் நடக்கையில் இவர்களைப் பார்த்து பேசியபடியே சென்றனர். குழந்தை இன்னும் அழுதுகொண்டுதானிருந்தது.

ராமு அண்ணன் பதறிப்போய் அவசரமாக எழுந்து போய் குழந்தையை தூக்கினார். அதன் கால்களில் எலும்பு விலகியிருந்தது. குழந்தையின் கால்களைத் தொட்டுப்பார்த்தார். வீக்கமாகியிருந்தது. ''மணி.. கொயந்திக்கு அடி பலமாக்கீதுமா.. நீ வேணா, இந்தா.......... இந்த பக்கத்தில இக்கிற ஆஸ்பத்திரியாண்ட இட்டுனு போயேன், பாவம் புள்ள இன்னாமேரி அழுதுனு பாரேன் ''

அவளோ அதை சிறிதும் காதில் வாங்காமல் காசை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தாள். பதிமூணு....... பதினாலு....... பதினைஞ்சு ....... ''மணி............ இன்னா மணி, பாரு....... மணி......... இவன் எப்படி அழுவறானு.. கொஞ்சம் பாரேன் '' நிமிர்ந்து கூட பார்க்காமல் அப்படியே காசை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ராமு அண்ணனுக்கு கோபம் வந்தது.

''ஏண்டி நீ பெத்த புள்ள இப்டி அழுவுதே, அது காலப் பாரு எப்டி ஆய்க்கீதுனு, ஒனக்கு கொஞ்சமாது பீலிங்ஸ் இக்குதா!! , நாளிக்கு அதுக்கு காலு வெளங்காம பூடுச்சின்னா இன்னாவறது, அப்பால அவனும் உன்னாட்டம் பிச்சத்தான் எடுக்கனும் , நாளைக்கு அவன்தான்டி ஒனக்கு கஞ்சி ஊத்தப்போறான் ''

''இன்னா நான் சொல்லிக்கினேக்கிறேன் நீ பூலா போச்சினு, அங்க ஆட்டிகினு உக்காந்திருக்க '' வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் குழந்தை முன்னைவிட இப்போது அதிகமாய் அழுதுகொண்டிருந்தது. கால்வீக்கம் அதிகரித்திருக்க வேண்டும் . சிகப்பு விளக்கு எரிந்தது. அவள் ராமு அண்ணனின் கையிலிருந்த குழந்தையை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஓட்டமும் நடையுமாய் ஓடினாள். சூரியன் உச்சியில் உக்கார்ந்திருந்தான். வெப்பம் தலையில் இறங்கியது . குழந்தையின் காலை துணியாலாவது மறைத்திருக்கலாம். உஷ்ணத்தில் வலி அதிகமாகியிருக்க வேண்டும்.

''சார் சார் '' ''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

ஐந்து ரூபாய்

''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

ஐந்தரை ரூபாய்

''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

ஏழரை ரூபாய்

''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

'' போமா அந்தாண்டை '' போலீஸ்காரன் விரட்டினான்.

பச்சை எரிந்தது.

மீண்டும் நடைபாதைக்கே வந்தாள் இப்போது குழந்தை அழவில்லை. மயக்கமாகியிருந்தது.

குழந்தையின் முகத்தின் அழுக்குக்கு நடுவே கண்ணீர் , வரைபடத்தில் ஆறு போல ஓடியும் கடல்போல் தேங்கியும் கரையாகி இருந்தது. கரும்திட்டுக்கள். தூங்கியிருந்தான் அல்லது மயங்கியிருந்தான் அல்லது மூர்ச்சையாகியிருந்தான்.

ராமு அண்ணன் அவளை பார்க்காதது போல அமர்ந்திருந்தார்.

''அண்ணே.. ''

''அண்ணே , இங்க ஒருக்கா பாருங்கண்ணே ''

''அண்ணே எங்கிட்ட பேசமாட்டிங்களாண்ணே ''

ராமு அண்ணன் விரைப்பாய் அமர்ந்திருந்தார். முகத்தை திருப்பாமல் கையிலிருந்த பிய்ந்து போன செருப்பை தலைகுப்புறப் போட்டு ஒரு கட்டையால் தட்டிக்கொண்டிருந்தார்.

''அண்ணே, எல்லாம் என்நேரம்ண்ணே, ஊர்லருந்து ஓடி வந்தப்ப நீங்கதான கல்யாணம் பண்ணி வச்சீய, அந்த மயிரான் ஓடி போனதுக்கப்புறம் , ஏதோ உங்க பாதுகாப்புலதான் இருக்கேன் , நீங்களே என்னை வெறுத்துப்போயி இப்படி வஞ்சா நான் ஆருகிட்டண்ணே போறது ''

ராமு அண்ணன் இன்னும் கோபம் குறையாமல் காதை மட்டும் அவளுக்கும் கண்ணை அந்த பிய்ந்த செருப்புக்கும் கொடுத்திருந்தார். அறுந்து போயிருந்த செருப்பினுள்ளே தைக்கும் ஊசியில் நூலின்றி வெடுக்கு வெடுக்கு என தைப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தார்.

''அண்ணே இன்னைக்கு மொத தேதிண்ணே, எல்லாருக்கும் சம்பளம் வந்திருக்கும். நமக்கு இன்னைக்கு வாங்கினாத்தாண்ணே உண்டு, அப்புறம் வர்றதெல்லாம் வயித்துக்கும் கஞ்சிக்குமே போயிருமேண்ணே''

'' நீங்க இந்த புள்ளைய பத்தி கவலப்படுறீய, எனக்கு மூத்தவள பத்திதாண்ணே கவல , இதா இவன பாத்துக்க நாம இருக்கோம், அது இப்போ எங்க எப்படி இருக்கோ, எம்புருஷன் அந்த பொட்டபுள்ளய அடமானம் வச்சிட்டு போயிட்டான், இப்போ நான் நாலு காசு சேத்துதானண்ணே அத மூட்ட முடியும் இப்போ இவன் அழுதகாட்டியும்தான், இன்னைக்கு கொஞ்ச ரூவா சேந்துருக்கு, இன்னும் ஆயிரம் ரூவாதான் அதையும் சேத்திட்டா, அந்த புள்ளய மூட்டுடுவ்வேண்ணே, அதுக்குள அவ கண்ண நோண்டிட்டாளோ இல்ல கால உடைச்சிட்டாலோ எம்புட்டு சிரமண்ணே, இந்த பயல நாம ரவைக்கு கூட ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போலாண்ணே........ எம்புள்ள அது பொட்டபுள்ளண்ணே..... என்ன நீங்க கூட புரிஞ்சுக்கலையேண்ணே ''

உடைந்துபோய் கதறி அழுதாள்.

தொண்டை வலித்தது. ராமு அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள் அவர் அவள் அருகில் எப்போதும் போல ஆறுதலாய்.

குழந்தை இன்னும் மூர்ச்சையாய் மடியில் கிடந்தது . மீண்டும் சிகப்பு விளக்கு எரிந்தது. வண்டிகள் நின்றன. குழந்தையின் மார்பில் தட்டி தட்டி எழுப்பினாள். குழந்தை எழுந்தது. ஆனால் அழவில்லை. கால்களைத் தடவினாள் கத்தி அழத்துவங்கியது. சிக்னலை நோக்கி வேகமாய் ஓடினாள். இன்னும் 60 விநாடிகள்தான் இருந்தன.

59...58...57

***********************

23 January 2009

சென்னைப்பதிவர் சந்திப்புக்கு வந்த சோதனை..!

நேற்றைய பதிவில் சென்னைப்பதிவர் சந்திப்பு குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகியிருந்தது . அச்சந்திப்பு சென்னை மெரினா கடற்கரையில் நடப்பதாக இருந்தது . ஆனால் 60வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடற்கரை முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பார்க்கிங் மற்றும் கூட்டமாய் அமர்ந்து பேசுவதும் பிரச்சனையாக இருக்கும் என பல பதிவர்களும் வாசகர்களும் நேற்று தொலைப்பேசியில் அழைத்து தெரிவித்தனர். அங்கே நேரில் சென்று பார்த்த போது பிரச்சனை ஒருமாதிரியாக புரிந்தது.

திடீரென இப்படி ஒரு சிக்கலை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. நடேசன் பார்க்கில் கொசுக்கடி பிரச்சனை இருப்பதால் புதிதாக ஒரு இடம் தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.

அதனால் கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடியில் சந்திப்பை நடத்தலாம் என முடிவாகி அப்பதிப்பகத்தை அணுகினோம். அவர்களும் பெருந்தன்மையோடு அவர்களது மொட்டைமாடியில் நமது பதிவர்சந்திப்பை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கினர்.

எனவே இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடியில் நம் ஏற்கனவே திட்டமிட்டபடி நமது பதிவர்சந்திப்பு நடைபெறும்.


புதிய இடம் மற்றும் நேரம் -

இடம் - கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடி

நேரம் - 5.30 முதல் சந்திப்பு முடியும் வரை ( apprx 7.30 வரை)

கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )

மேலதிக விபரங்களுக்கு -

எனது முந்தைய பதிவு - http://www.athishaonline.com/2009/01/chennai-bloggers-meet-25-01-09.html


அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

முரளிக்கண்ணன் -9444884964

நர்சிம் -9940666868

கோவிக்கண்ணன் - 90477 44151


*******************************

தீடீரென உருவான இந்த பிரச்சனையால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். அனைத்து வாசகர்களும் , பதிவர்களும் கட்டாயம் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

நன்றி

22 January 2009

சென்னையில் பதிவர் சந்திப்பு - 25-01-2009













ஹாய் மச்சான்ஸ் அண்டு மச்சிஸ்.....

(என்னது நமீதா சொன்னாதான் புடிக்குமா... )

எப்படி இருக்கீங்க... நீங்க பண்ண , பண்ற புண்ணியத்துக்கு நல்லாத்தான் இருப்பீங்க.... விசயம் அதில்ல... அதாவது என்னன்னா.....

சமீபத்தில........... புத்தாண்டு முடிஞ்சிருக்கு , பொங்கல் முடிஞ்சிருக்கு , சென்னை சங்கமம் முடிஞ்சிருக்கு , மிக முக்கியமான விசயம் நம்ம புத்தகக்கண்காட்சி முடிஞ்சிருக்கு , நிறைய திருவிழாக்கள் முடிஞ்சிருக்கறதால நம்ம மக்கள்லாம் அந்த அனுபவங்களை பத்தி சகபதிவர்கள் கிட்ட பகிர்ந்துக்கணும்னு ஆசைப்படறதா முந்தாநாள் பாத்த கிளிஜோசியர் ஒருத்தர் சொன்னாரு , அதனால இந்த வாரக்கடைசில ஒரு பதிவர் சந்திப்பு வச்சு குசலசுபயோகங்களையும் அப்புறம் புத்தககண்காட்சி பத்தியும் பேசிக்கலாம்னு ஒரு யோசனை.

இதுக்கு நடுவுல நம்ம கோவி.க(அ)ண்ணனும் நம்ம பின்னூட்ட புயல் விஜய் ஆனந்தும் சிங்கப்பூர்லருந்து வராங்களாம் நம்மளையெல்லாம் சந்திச்சு குசலம் விசாரிக்க... சோ... இந்த வாரம் ஞாயித்துக்கிழமை பதிவர் சந்திப்பு வச்சிரலாம்னு சிலபல முக்கியபதிவர்கள்ல்லாம் ( நான் இல்லபா ) சேர்ந்து முடிவுபண்ணிருக்காங்களாம்.

அதனால மக்களே , பதிவர்களே , பின்னூட்ட நண்பர்களே , வாசகச்செல்வங்களே அனைவரும்

ஞாயித்துக்கிழமை சாயங்காலம் நம்ம

மெரினா பீச்சு காந்திசிலையாண்டை வந்துருங்கோ ... அங்க மீட் பண்ணலாம்...

சந்திப்பு தேதி - 25-1-2009

இடம் - மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறமுள்ள நீரில்லா குட்டை

நேரம் - மாலை 5.30 முதல் 8.00 வரை

மக்களே சந்திப்பு முடிஞ்சதும் அனைவருக்கும் தேநீர் விருந்து உண்டு கட்டாயம் கலந்துகிட்டு தேநீர் பருகவும்...

அதே மாதிரி இது பதிவர்களுக்கு மட்டுமான சந்திப்பு கிடையாது , யார் வேணாலும் கலந்துகிட்டு கலக்கலாம்.. கலந்துரையாடலாம்...

வாங்க மச்சான்ஸ் அண்டு மச்சீஸ் மெரினா அலறட்டும்....


இதுக்கு மேல உங்களுக்கு இன்னா டவுட்டு வந்தாலும்..

என்னோட dhoniv@gmail.com ங்கற மெயல்ஐடிக்கு ஒரு மெயிலனுப்புங்க

இல்லாட்டி இந்த நம்பருக்குலாம் கூப்புட்டு கேளுங்கோ.. ஓகேவா..

அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

முரளிக்கண்ணன் -9444884964

நர்சிம் -9940666868

ஒகேவா...


கடைசியாக கிடைத்த தகவல் படி அண்ணன் கோவி அவர்கள்

90477 44151

என்ற எண்ணில் சனிக்கிழமையிலிருந்து கிடைப்பார்.. அவரிடமும் அளவலவாலாம்.. ( ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரி).....



**************************
நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு -
மெரினாவில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு போலீஸின் கெடுபிடி அதிகமிருப்பதால் , பதிவர் சந்திப்பு இடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய இடம் மற்றும் நேரம் -
இடம் - கிழக்குப்பதிப்பகத்தின் மொட்டைமாடி
நேரம் - 5.30 முதல் சந்திப்பு முடியும் வரை ( apprx 7.30 வரை)
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது . (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )
சிரமத்திற்கு மன்னிக்கவும்.

19 January 2009

வில்லு - விவ'கார'மான விமர்சனம்


''ஐயோ............ அப்பா... உங்கள கொன்னவங்கள நான் பயிக்கு பயி வாங்காம விதமாத்தேன் '' அந்தக் கால எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெரும்பாலான படங்களில் இப்படி ஒரு வசனம் கட்டாயம் இருக்கலாம். அது சமயங்களில் அம்மாவாகவும் தங்கையாகவும் இருக்கும். ஆனால் எது எப்படி இருந்தாலும் அது எப்படி நடந்தாலும் இருப்பத்தைந்து வருடங்களுக்கு பின்தான் நடக்கும்.


எம்.ஜி.ஆருக்கு பிறகும் எழுபதுகளின் கடைசியிலும் எம்பதுகளின் துவக்கத்திலும் வெளியான பெரும்பாலான படங்களின் கதை இதுவாகத்தான் இருக்கும். எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய பக்தரான என் தந்தைக்கு (கோவையில் இன்றும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர் வாசலில் என் தந்தை பங்குபெறும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேரவையின் போஸ்டர்களை காண முடியும்) எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான். அவராலேயே அதற்கான காரணத்தை கூற இயலுவதில்லை. விஜய்க்கு எம்.ஜி.ஆர் ஆகவேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் ''பம்பிருந்தா பயிப்பு இல்ல பயிப்பிருந்தா பம்பில்ல '' என்று எம்.ஜி.ஆரைப்போல வசனம் பேசினாலும் சொல்வதற்கில்லை. போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு என்று எண்ணத்தோன்றுகிறது.


விஜயின் கட்சிக் கொடி அல்லது மன்றக் கொடி மகா கேவலமாக இருக்கிறது . மாற்றினால் தேவலை. அந்த கொடியோடுதான் வில்லுத்திரைப்படமும் துவங்குகிறது . படமும் கொடியைப்போலவே மகா கொடுமையாக இருக்கிறது.


வீரமான தந்தை , அவரை விவேகமாய் வெல்லும் அல்லது கொல்லும் வில்லன்கள் ( விவேகமாய் இருந்தால் வில்லன்களாம்) . 25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன். நடுவில் வடிவேலு,விவேக்,சந்தானம் வகையறாக்களின் கா(ம)டி , தொப்புள் என்னும் பிரதேசத்துக்கு கூட ரோஸ்பவுடருடன் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு வந்து நான்கு பாடல்களுக்கு ஆடும் அற்புத ஹீரோயினுடன் காதல் . பாடல்களுக்காக காதலா காதலித்ததால் பாடலா? .அதில் மூன்று குத்துப்பாடல் , ஒரு மெலடி , ஒரு டிஸ்கோ அல்லது பாப் , ராப் இப்படி ஏதாவது ஒன்று .


காசு நிறைய இருந்தால் ஹிரோயினோடு பாரினில் போடலாம் குத்தாட்டம் . காசில்லாவிட்டால் லோக்கல் செட்டிலும் போடலாம் (குத்தாட்டம்தான்). ஐந்து அனல் பறக்கும் சண்டைகள். 50க்கும் மேற்ப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். இதற்கு மேல் விஜய் படத்தில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும் அல்லது சொல்லி விட முடியும். அவ்வளவுதான் வில்லு. படம் முடிவதற்குள் நம் செல்லு,பல்லு எல்லாம் உடைந்துவிடுகிறது.


அஜித்தின் பில்லா வெற்றி விஜயை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். படம் மேக்கிங் பில்லா சாயல். ஹாலிவுட்தரத்தில் படமெடுக்கிறேன் பேர்வழி என்று பாதி படம் முழுக்க கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு படத்தில் பாதிபேர் கொல்லுகிறார்கள். விக்ரமன் படங்களில் பொதுவாகவே பணக்காரர்களை காட்டுவதற்கு கோட்டுசூட்டை உபயோகிப்பார். இப்போதெல்லாம் அன்டர்கிரவுண்ட் தாதாக்களை காட்டும் போதும் அதே போன்றதொரு யுக்தியை கடைபிடிக்கின்றனர். என்ன கொடுமை விக்ரமன் இது.


வில்லுத்திரைப்படத்திற்கு சமீபகாலமாய் எல்லா தொ.காட்சிகளிலும் பிரபுதேவாவும் விஜயும் மாறி மாறி விளம்பரம் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல(?) நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். செய்திகளில் மட்டும்தான் விளம்பரம் வரவில்லை( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).


படத்தின் கதையை முதல் பத்தியில் சொல்லிவிட்டபடியால், படம் குறித்து என்னத்த சொல்ல! . படத்தின் முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் துள்ளலும் எள்ளலும் இரண்டாம் பாதியில் மொத்தமாய் மிஸ்ஸிங். அதுவும் விஜயை இராணுவ கெட்டப்பிலெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜை வேறு மாதிரி நடிக்க சொல்லலாம் அலுப்பு தட்டிவிட்டது. விஜய்க்கு இன்னும் போக்கிரிமேனியா மாறவில்லை போல அதே மாதிரி நடிக்கிறார்(?) . ஒரு வேளை பிரபுதேவாவின் வழிகாட்டுதலாய் இருக்க கூடும். நயன்தாராவால் இதற்கு மேல் தமிழ்திரைப்படங்களில் காட்ட இயலாது . இதற்கு மேல் காட்டினால் வில்லுத் திரைப்படத்தை ஜோதி தியேட்டர் காலைகாட்சிகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும் ( ஆனால் தற்செயலாக படம் ஜோதியில்தான் ரிலீஸாகியிருக்கிறதாம்) .


வடிவேலு அடிவாங்குவதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது , மாட்டுடனெல்லாம் சண்டை போட்டு அடிவாங்குகிறார் (கிராபிக்ஸ்க்கு நன்றி) . வெகு நாட்களுக்கு பிறகு ரஞ்சிதா 80களில் பார்த்த அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து நம் கண்களை குளமாக்கவெல்லாம் இல்லை , மெகாசீரியல் அம்மா ரேஞ்சில் நடித்திருக்கிறார். (விஜயை விட ரஞ்சிதா உயரமானவராம் உண்மையா தெரியவில்லை).


மற்றபடி படத்தின் பிளஸ் - பாடல்கள் , நடனம் , கேமரா , காமெடி , முதல் பாதி , விஜயின் துள்ளல் , சண்டைக்காட்சிகள்


மைனஸ் - மற்ற எல்லாமே


பிரபுதேவாவின் தெலுங்குப்படமான நுவொஸ்தானன்டே... படம் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன் என்று. இந்த படத்தை பார்க்கும் போது அவரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.




Statutory warning -


Sometimes Watching Vijay movies can be injurious to your mental and physical health - be careful


18 January 2009

பொதுஇடங்களில் புகைபிடிக்கலாம் வாங்க!



பொதுஇடங்களில் புகைபிடிக்க சில மாதங்களுக்கு முன் தடைவிதித்து இந்திய அரசு சட்டம் நிறைவேற்றியது அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலருக்கும் மறந்தும் போயிருக்க வாய்ப்புண்டு.


அது முதலில் காட்டுத்தீ போல பரவி பின் அணைந்து புகைந்து மண்ணாய் போனது அனைவருக்கும் நினைவிருக்கும். இருந்தாலும் நம் மக்களுக்கு பொது இடத்தில் புகைப்பிடிக்கையில் இருந்த தயக்கத்தையும் போலீஸ் வசூலின் மீதான அச்சத்தையும் போக்கும் வகையில் சென்னை பீடி சிகரெட் விற்பனையாளர்கள் சங்கத்தினர் சென்னை முழுவதும் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். முதலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை பார்த்துவிடுவோம் .






இந்த வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பார்த்தால் எங்கு வேண்டுமானாலும் புகைப்பிடிக்க அனுமதி உள்ளதாகத்தான் தெரிகிறது. அரசுதரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராத சூழலில் தன்னிச்சையாக அந்த சங்கத்தினர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை. அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகள் சென்னையின் எல்லா இடங்களிலிலும் புற்றீசல் போல பரவியிருக்க கூடிய ஒன்று. வண்டிகள் நிறுத்துமிடங்கள் பொதுஇடமில்லையா? . தெருக்கள் மற்றும் சாலைகள் பொது இடமில்லையா? அமைச்சர் அன்புமணி இது குறித்து அறிவாரா? இச்சங்கத்தினர் இதற்காக அரசிடம் அனுமதி பெற்றனரா?


பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் முக்கியமான காரணம் , PASSIVE SMOKING எனப்படும் சிகரட் பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அடையும் பாதிப்புதான். இந்தியாவில் புற்றுநோய் பரவ மிக முக்கிய காரணமாக இருப்பது இந்த பாஸிவ் ஸ்மோக்கிங். ஆனால் இந்த அறிவிப்பு அந்த காரணத்தையும் அதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் கேலியாக்குகிறதே!


பொது இடத்தில் புகைப்பிடிக்க தடைச்சட்டம் கொண்டு வந்த போது அதை ஆதரித்துப் பேசிய பலரும் இப்போது எங்கே போயினர். அதை அமலாக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கோவில்களில் ஆடு மாடு வெட்ட தடைச்சட்டம் போல ஒரு சட்டத்தை கொண்டுவந்து விட்டு , பின் அதை அமலாக்க இயலாமல் பரிதவிக்கும் நிலையே உள்ளது.


இன்று பெரும்பாலான பொதுஇடங்களில் புகைப்பிடிக்கத்தடை என்கிற பலகை மட்டுமே உள்ளது , அதை யாரும் மதிப்பதில்லை என்பதுமே நிதர்சனமான உண்மை.


எந்த ஒரு சட்டமும் மக்களின் ஆதரவால் மட்டுமே செயல்வடிவம் பெறும். தனது விளம்பரத்திற்காக நடைமுறை சிக்கல்கள் குறித்து ஆராயாமல் கொண்டுவரப்படும் எந்த சட்டமும் நிலைக்காது. அது பொதுஇடபுகைப்பிடிக்க தடைச்சட்டம் போல புகைந்துதான் போகும்.


இனிமேலாவது இது போன்ற சட்டங்களை நிறைவேற்றும் முன் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து , அதை எப்படி சரியான முறையில் செயல்படுத்த இயலும் என்பதையும் ஆராய்ந்து நிறைவேற்றினால் நல்லது.
சிலபலநாட்களாக மிக அமைதியாக இருக்கும் அன்புமணிராமதாசு இது குறித்து அறிந்துகொண்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டால் மிக நல்லது.



15 January 2009

திருமங்கலம் - அசத்திய திமுகவும் அலறிய அதிமுகவும்!


இதோ திருமங்கலம் தேர்தல் அடாவடியாய் அல்லது அதிரிபுதிரியாய் முடிந்தேவிட்டது. திமுகவும் இமாலய வெற்றியைப் பெற்றும் விட்டது. திமுகவே எதிர்பார்த்திராத வெற்றி அது. தமிழ்நாட்டின் எந்த திமுக தொண்டரும் இப்படி ஒரு வெற்றியை அக்கட்சி பெறும் என எதிர்பார்த்திருக்கவில்லை. அவ்வெற்றித் தந்த உற்சாகம் அக்கட்சியனரின் முகத்தில் ஜொலிப்பதற்கு வலையுல திமுக தொண்டர்களின் முகமலர்ச்சியே சாட்சி.

அவ்வெற்றி திமுகவின் ஆட்சிக்குளறுபடிகளால் சரிந்திருந்த செல்வாக்கை மக்களிடையே அதிகமாக்கியிருப்பதாய் கட்சிதலைமையிலிருந்து போஸ்டர் ஒட்டும் முத்துராமன்,முருகன் வரை எண்ணுகின்றனர். அழகிரி இந்த வெற்றியை ஏற்கனவே முதல்வருக்கு சமர்பித்தும் விட்டார். இம்முறை ஜெயிக்காத ஜெவும் தன் பங்கிற்கு தேர்தல் குளறுபடி , அடாவடி, ரவுடி ,லொட்டு லொசுக்கு என்று சாக்கு போக்கு சொல்லி மக்களுக்கு அறிக்கை வெளியிட்டுவிட்டார். விஜயகாந்தும் எப்போதும் போல பணம் விளையாடிவிட்டது , அதிகாரம் ஜெயித்துவிட்டது என ரமணா பாணியில் பேசிவிட்டார். சமக தலைவர் சரத்குமாரை மக்களே பேச விடாமல் காயடித்த காளையைப் போல அடக்கிவிட்டனர். வைகோ வோ இதற்காக வரலாற்று உதாரணங்களில் எதைக்குறிப்பிடலாமென கன்னிமாரா லைப்ரரியில் அடைக்கலாமாகிவிட்டதாகவும் தெரிகிறது.

வெற்றியடைந்த திமுக அதன் வெற்றிக்கான காரணங்களையும் தேடி வருகிறார்கள் . ஆனால் தோற்றுப்போன அதிமுக கூட அதையே செய்கிறது. அதற்கான காரணம் திமுகவின் இம்மிகப்பெரியவெற்றி. யாருமே இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. அதிமுகவின் வாக்குவங்கியை தேமுதிக பகிர்ந்து கொண்டது எனச்சொல்லுபவர்கள் கூட வாயடைத்துப்போய்தான் இருக்கின்றனர். வலையுலகில் பிரபலமான காங்கிரஸ் தொண்ரான ஒரு பதிவர் கூட எதிர்கால கூட்டணியை கருதி அவர் சார்ந்த கட்சியைப் போலவே (இந்த தேர்தல் கூட்டணியை மறந்து ) அதிமுகதான் வெற்றிபெறும் என கூறிவந்தார். இந்த தேர்தல் பாரளுமன்ற தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம் என நேற்று வரை கூவி வந்த பத்திரிக்கை கும்பல்கள் கூட குழம்பிப்போய் விஜய்யின் வில்லையும் நயன்தாராவின் பல்லையும் படம் பிடிக்க கிளம்பி விட்டன.

திருமங்கலத்தில் அப்படி என்னதான் நடந்தது? , எப்படி கிடைத்தது இம்மாம் பெரிய வெற்றி?. மக்களுக்கு கலைஞர் ஆட்சி மகிழ்ச்சியளித்துவிட்டதா ? மாறன்-அழகிரி சகோதரர்களின் இணைப்பு திமுகவின் இழந்த செல்வாக்கை மீட்டுக்கொடுத்ததா(சன்டிவி மூலமாக) ?சென்ற தேர்தலைவிடவும் குறைந்த அளவு வாக்குகளையே விஜயகாந்த் பெற்றிருப்பது அவரது செல்வாக்கின் சரிவைக்காட்டுகிறதா? சரத்குமார் பெற்ற 841 ஓட்டுகள் யார் போட்டது என அக்கட்சி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமா? ஜெயலலிதாவின் எதிர்காலமும் அதிமுகவின் எதிர்காலமும் ( அப்படி ஒன்று இருக்கிறதா?) இனி கேள்விக்குறிதானா? இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா? அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழகத்தின் அதிக சீட்டுகள் கிடைக்குமா? பல நாட்களாக பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போன்று மூலையில் கிடக்கும் பாமக பாரளுமன்ற தேர்தலில் என்ன கூட்டணி கொள்கையை எடுக்கும் ? இப்படி ஆதிசேஷன் வாலைப்போல ஆயிரமாயிரம் கேள்விகள். எனவே இத்தோடு வாலை ஒட்ட நறுக்கிவிட்டு , அக்கேள்விகளுக்கான விடைகளை ஆராய முற்படலாம் .

திருமங்கலத்தில் திமுக , வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுகிறது . ஆனால் உண்மை என்னவென்றால் அங்கே போட்டியிட்ட எல்லா கட்சிகளுமே பணம் கொடுத்திருக்கின்றன. முறையே ஓட்டுக்கு தலா 5000,2500,1500,500 என்று . கேட்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது . இந்தியா ஏழை நாடென்று யார் சொன்னது. மக்களின் வாக்குக்கு மரியாதை இல்லை என்றும் யார் சொன்னது. பாருங்கடா பிச்சைக்கார நாடுகளா என் இந்தியாவை என்று கத்தி கூச்சலிட தோன்றுகிறது.

ஆனால் இந்த பணத்தைவிடவும் மிக அதிக அளவில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தியது சமீபத்தில் தரப்பட்ட வெள்ள நிவாரண நிதி . வீட்டுக்கு 2000 ரூ. வெள்ளம் வந்து வீடே இழந்தவனுக்கும் அதே , ஓரு துளிகூட வீட்டிற்குள் தண்ணீர்வராமல் காலையும் வாலையும் ஆட்டிக்கொண்டிருந்தவனுக்கும் அதே (என்னே சமத்துவம்) . எனக்குத்தெரிந்த வலையுல பிரபலம் அவர் , அவர் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வெள்ள நிவாரணம் பெற்ற செய்தியெல்லாம் கேட்கும் போது வயிறு பற்றி எரிகிறது(அவர் வீட்டில் மொத்தமாய் பத்துபேராம்) . அது தவிர அவர் தான் பெற்றுக்கொண்ட தொகையில் ஒரு பகுதியை வலையுலகில் திமுக ஆதரவோடு செயல்படும் சில பதிவர்களுக்கு பகிர்ந்தளித்ததாகவும் கேள்வி ( ஒரு அமெரிக்கப்பதிவருக்கு இங்கிருந்து மணியார்டரெல்லாம் செய்ய முயன்றாராம் அந்த திமுக தொண்டர்) . அதேபோல வலையுலகில் திமுகவை சாராமாரியாய் எதிர்க்கும் பலரும் 2000 ரூபாய் என்றதும் நம்மவா காசதான நமக்கே கொடுக்கறா என்று மிக நீண்ட க்யூவில் நின்றதாய் ஒரு மடிப்பாக்கம் திமுக தொண்டர் தகவல் தெரிவித்தார் .

இந்த வெள்ளநிவாரணத் தொகை திமுகவால் இத்தேர்தலில் மிகச்சரியான ஆயுதமாக திருமங்கலத்தின் ஒவ்வோர் வீட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கலைஞர் பெயரைச் சொல்லி சொல்லி மண்டையில் ஏற்றி அந்த பணம் தரப்பட்டுள்ளது. அதே போல அழகிரியின் தலைமையில் கட்சியின் அடிமட்ட தலைமைகளின் கட்டமைப்பும் , அவர்களது செயல்பாடுகளும் முழுவீச்சில் முடுக்கிவிட்டப்பட்டதும். இது வரை இருந்துவந்த திமுக கோஷ்டி மோதல்களை அதன் தொண்டர்கள் கைவிடும் வண்ணம் அழகிரியும் ஸ்டாலினும் இத்தேர்தலில் இணைந்து செயலாற்றியதும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மின்வெட்டு,விலைவாசி உயர்வு என்று அனுதினமும் இந்த ஆட்சியால் நம் மக்கள் அடிவாங்கினாலும் திருமங்கலத்தில் உண்டான திடீர் பணப்புழக்கம் அதையெல்லாம் மக்களை மறக்கடிக்க செய்திருக்க வேணும். பசி வந்தால் மட்டுமல்ல பணம் வந்தாலும் பத்தும் பறந்து போகும் போலிருக்கிறது. நம் மக்களுக்கும் இத்தனை ஞாபக மறதி கூடாது.

அழகிரியின் செயல்பாடுகள் இந்த தேர்தலில் எப்படிப்பட்டதாய் இருந்திருக்க முடியும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதிகம் பேசினால் ஆட்டோவும் அது நிறைய ஆட்களும் அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகளும் வரக்கூடும் .

அதேபோல சன்டிவியின் ஆமைவேக திமுக ஆதரவு பல்டியும் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்திருக்க கூடும். அதுவே விஜயகாந்த் மற்றும் சமகவின் வாக்கு வங்கியை(?) தகர்க்க உதவியிருக்கலாம். திமுக ஆதரவு அலையை மிக அற்புதமாக நடுநிலை என்ற பெயரில் நாசூக்காக பரப்பும் வேலையை சன்டிவி செய்தது குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்டுகளின் அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பாதகமாய் போய்விட்டதாகவும் ஒரு திருமங்கலைத்தைச் சேர்ந்த வலையுலக நண்பர் தெரிவித்தார். உத்தபுரம் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் அங்கிருந்த பெரும்பான்மை பிள்ளைமார்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டதாகவே அச்சமூகத்தினர் கருதி வருகின்றனர். திருமங்கலத்தில் ஒரு பகுதி பெரும்பான்மை பிள்ளைமார்கள் வாக்குகளைக் கொண்டதென்றும் அதனால் கம்யூனிஸ்ட் எதிர்ப்பலை அதிமுகவிற்கு எதிராய் திரும்பியிருக்க வாய்ப்புண்டு என்றும் கூறினார் . அதே போல மதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட்டது அக்கட்சியின் செல்வாக்கை குறைத்திருக்க கூடும் எனவும் தெரிவித்தார். அதில் உண்மையிருப்பதாகவே நானும் கருதுகிறேன்.

அதிமுக இனிமேலாவது அடுத்தவரை குற்றம் சாட்டும் அரசியலை கைவிட்டு உருப்படியாக எதையாவது செய்யலாம். இனிமேலும் எம்ஜிஆர் படத்தையே காட்டி ஓட்டுவாங்கும் அரசியல் இங்கே வேலைக்கு ஆகாது என்பதற்கு இந்த தோல்வி நல்ல உதாரணம். திமுகவின் வெற்றிக்கு காரணங்கள் தேடாமல் , தங்களது தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அதை களைந்து மக்கள் ஆதரவை பெற முயற்சிக்கலாம் ( ?) . அதற்கான வாய்ப்புகள் அக்கட்சியில் மிகக்குறைவே!. தலைமையை மாற்றலாம். அது உதவும்.

சென்ற தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் மிகக்குறைந்த சதவீத வாக்குகளையே பெற்ற விஜயகாந்தின் தேமுதிகவை இந்த ஒரு தொகுதியை வைத்து கணக்கிட இயலாது , அக்கட்சிபெற்ற 13000 வாக்குகள் நிச்சயம் அதிமுகவிற்கு விழவேண்டியவை. அதை அவர் உடைத்திருக்கிறார் என்பது நிதர்சனம். ஆனால் அவரால் திமுகவின் வாக்கு வங்கியில் கணிசமாக ஓட்டுக்கள் பெற இயலாமல் போயிருக்கலாம். தேமுதிகவும் வளர்ந்து வருகிறது என்பதற்கு இந்த தேர்தலில் அக்கட்சி பெற்றிருக்கும் இந்த ஓட்டுக்கள் நல்ல உதாரணம். இப்போதிருக்கும் நிலையை அடுத்த தேர்தல் வரைக்கும் அப்படியே எடுத்துச்சென்றால் இன்னும் அதிக சதவீத பங்கு வாக்குகள் பெறலாம் . விஜயகாந்தின் பின்னங்கால்கள் திமுகவின் வாக்குவங்கியையும் உடைத்தெறியக்கூடும்

தனித்துப்போட்டியிட்ட சமக பெற்ற 841 வாக்குகள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அவரது கட்சியில் இது வரை அவரும் அவரது மனைவி மட்டுமே உறுப்பினர்கள் என எண்ணி வந்த தமிழ்மக்களுக்கு தன் கட்சிக்கும் நிறைய தொண்டர்கள் இருக்கிறார்கள் என நிரூபித்திருக்கிறார் நாட்டாமை. அடுத்த தேர்தல் வரைக்கும் அவர் கட்சி உயிரோடிருந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்து விடுவார்கள்.

பாமக திருமங்கலம் வெற்றியால் மிகவும் அதிர்ந்து போயிருப்பதாகவே தெரிகிறது. பாமகவால் தனித்து போட்டியிடும் அளவுக்கு ஆண்மை கிடையாது. அதனால் அடுத்த தேர்தலிலும் திமுகவுடனேயே காலை கையை பிடித்தாவது தற்போதைய கூட்டணியில் தொடர முயற்சிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

ஆனால் இந்த வெற்றி எந்த அளவிற்கு பாரளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக பாரளுமன்ற கூட்டணிகளுக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். ஆனால் அந்த தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு எந்த அளவுக்கு உதவுமென்று தெரியவில்லை.

மொத்தத்தில் திமுகவின் இந்த திருமங்கல வெற்றி சும்மா கிடைத்துவிடவில்லை. கலைஞர் என்னும் மிகப்பெரிய அரசியல் விஞ்ஞானியின் சக்ஸஸ் பார்முலாவும் , அழகிரி என்னும் தளபதியின் தலைமையிலான படைபலமும் பணபலமும் ஆட்சிஅதிகாரமும் இணைந்து மக்கள் ஆதரவை வலிந்து இழுத்துக்கொண்டு பெற்ற வெற்றியாகவே தெரிகிறது. இதே ஆதரவை பாராளுமன்றத்தேர்தலிலும் திமுக பெறுமா என்பதற்கான விடை மக்களிடம்தான் உள்ளது.

********************************

14 January 2009

மப்பு மன்னார் சரித்திரம்...



தமிழ்வளர்க்கும் கழகம் -எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - இன்று புதிய தமிழ்ப்புத்தாண்டு

************************

மன்னாரு தண்ணியடிச்ச கதை :


இந்த மப்பு மன்னாரு இருக்கானே அவன் ரொம்ப நல்லவன் சார் , அப்படித்தான் ஊருக்குள்ள யாருகிட்ட மன்னாருவ பத்தி கேட்டாலும் சொல்லுவாய்ங்க , ஆனா அவன பத்தி பேச ஆரம்பிச்சி சரியா பதினஞ்சே நிமிஷத்தில வெறி புடிச்ச முள்ளம்பன்னியாட்டம் நம்மளயும் குதறி , பக்கத்தில நிக்கறவங்களையும் பிச்சி பிராண்டி நோண்டி நொங்கெடுத்துருவாய்ங்க , ஏன்னா அதுல பாருங்க.........


மன்னாரு தண்ணியடிக்கற வரைக்கும் சாது , தண்ணியடிச்சிட்டான் பரம சாது (நான் சேதுனு சொல்லுவேன்னு நீங்க நினைச்சிருந்தா அதான் இல்லை , ஏன்னா நம்ம மன்னாருவோட ஸ்பெசலே அதான... )


அட விசயத்துக்கு வாடா என் பொங்கி னு நீங்க திட்றது எனக்கு கேக்குது , அப்படித்தான் பாருங்க ஒருநா ( அட எழவெடுத்தவனே எத்தினி கதைலதான் ஒருநாள் ரெண்டு நாளுனு , மாத்தி சொல்லுனு மனசு தவிக்குது , ஆனா உங்க மேல இருக்கற பாசம் அத தடுக்குது ) டிசம்பர் மாசம் 31ம் தேதி , அந்த டாபரும் நானும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து புத்தாண்ட ப்புல் பாட்டிலோட கொண்டாடலாம்னு முடிவு பண்ணோம் .


மன்னாரு அன்னைக்குனு பாத்து பர்ஸ் எடுத்துட்டு வரலியாம் ( ______ அப்படினு நான் திட்டினேன் அதெல்லாம் இங்க எழுதினா நாளானிக்கு அதே வார்த்தைல நாலு பேரு என்ன திட்டுவாங்க ) அந்த _____ என்னைக்குதான் பர்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு.பாருக்கு போயி பர்ஸ் எடுத்த ஆம்பளையும் காருல போயி கடலைமிட்டாய் வாங்கின பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் குடிமையியல் கூட இல்லையாமே !! ( இது கூட ஒரு நா மன்னாரு மப்புல உளறினதுதான் )மீதி பேருலாம் காசுபோட்டு ஒரு புல் வாங்கிட்டு , வ.உ.சி பார்க்ல இருக்கற அம்மாம் பெரிய மைதானத்தில குந்திகிட்டு அடிக்க ஆரம்பிச்சோம் , சரியா பன்னெண்டு மணிக்கு ஆரம்பிச்சது , ஒன்னேகாலுக்கு முடிஞ்சிருச்சு , ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதேன்னான் நம்ம மன்னாரு , (அந்த டாக் ஒரே ஒரு நைன்ட்டிதான் அடிச்சிருந்துச்சு ) .


நான் வீட்டுக்கு போகணும் அம்மா வையும்னு அழ ஆரம்பிச்சிட்டான் . அந்த அர்த்த ராத்திரில நடந்தே ஊருக்குள்ள சுத்தி வந்து ஒரு பிரியாணி கடைய கண்டுபுடிச்சு வரிசையா உக்காந்தோம் , எலைய போட்டாங்க , அதுல மன்னாரு எலைக்கு வெளிய தண்ணிய தெளிச்சு லேசா டேபிள தொடச்சிவிட்டுக்கிட்டிருந்தான் . கேட்டா மப்புன்னான் ( 90 மப்பு ) .


மாப்பி எனக்கு ஒரு மாதிரி சுத்துதுடா , அதுலாம் ஒன்னுமில்ல ஒரு ஆப் பிரியாணி சாப்ட்டா எல்லாம் சரியாயிடும்ன்னேன் . பிரியாணி வந்திச்சி எல்லாருக்கும் வச்சாங்க , மன்னாரு மட்டும் கண்ண லைட்டா மூடிட்டு உக்காந்திருந்தான் ( 90 மப்பு ) . மன்னாரு மன்னாரு பாருடா உன் இலைல பிரியாணி போட்டாச்சுன்னேன் , சரிடா சாப்பிட்டேறனு கண்ண தொறந்து அத பாத்தவன் என்ன ஆச்சோ , உவ்வவ்வவே


நேரா வாஷ்பேசினுகிட்ட ஓடினான் , கக்கி கக்கி வாந்தி எடுத்தான் , நான் தலைய புடிச்சி வுடட்டானு கேட்டா , அடப்போட ஒன்னுமில்ல ஸைடிஸ் சேரலன்னான் , ( நாங்க ஸைடிஸ் இல்லாமதான தண்ணியடிச்சோம் ) . அவன அங்கிருந்து கூட்டிட்டு வந்து மறுபடியும் சேர்ல உக்கார வச்சு தண்ணி குடிக்க வச்சு , தெளிவாக்கினா , லூசுப்பைய திரும்பி ஓடுறான் பேசினுக்கு , போயிபாத்தா பேதில போறவன் ( ஸாரி வாந்தில போறவன் ) வாஷ்பேசின்ல வாந்தி முழுசா கரைஞ்சு போகலையாம் அதுனால பைப்ப திறந்து விட்டு குச்சி வச்சு குத்திக்கிட்டு நிக்கறான் . எங்களுக்கு செம கடுப்பாயிடுச்சு . அப்புறம் ஒரு மணிநேரத்திக்கு நாங்க அவன் கிட்ட பேசவே இல்லையே .அது ஒரு பெரிய ஓட்டல் அங்க எங்க மானத்த வாங்கிட்டியேனு திட்டினோம் , அப்ப அவன் கூலா கேக்கறான் , மாப்பி ஒரு தம்மு கிடைக்குமானு .


காலைல எல்லாரும் சேர்ந்து கேட்டோம் ஏன்டா நைட்டு அப்படி பண்ணேனு , மச்சி எனக்கு மப்புல ஒன்னுமே தெர்லடான்னான் .அவ்ளோதான்.


**************************


மன்னார் கவிதைப் படலம் ;


இருங்க போயிடாதீங்க அவனுக்கெப்படி மன்னாருனு பேரு வந்திச்சுனு தெரியுமா... அது ஒரு கவித்துவமான நிகழ்வு , அதை பத்தியும் அதிலிருந்த அழகியல பத்தியும் மயஜோகன் கூட அவரோட வலைப்பக்கத்த்துக்கு பக்கத்தில , பக்கத்திலனே ரொம்ப பக்கத்தில கிடையாது பக்கத்தில பக்கத்தில அத எழுதிதான் அவரோட வெப்ஸைட் சுலோ ஆகிருச்சுனு நம்ம வாசகி சுலோ சொல்லிச்சு .


அவனும் நாங்களும் சேர்ந்து ஒரு நா சைட்டு அடிச்சிகிட்டிருந்தோம் அப்போ ஒரு ஆந்திரா பிகரு , ரோட்டில்ல யாருக்கோ வெயிட் பண்ணிருக்கும் போல இவனும் வெறிச்சு பாத்திகிட்டே இருந்தான் , ( ஏதாவது சொறிநாய் நம்மள உர் உர்னு பாத்துகிட்டே இருந்தா நாம அத்த திரும்பி பாக்க மாட்டமா அதே மாதிரி அந்த ஆந்திரா பார்ட்டியும் ஏதேச்சையா பாத்திடுச்சு) , பையனுக்கு உடனே குஷியாகி அவள இந்த நிமிசத்திலருந்து உயிருக்குயிரா காதலிக்கறேன்னுஎங்கிட்ட கவிதை சொல்ல ஆரம்பிச்சான் ( அப்பவும் 90 அடிச்ச மப்புதான் ) ..


மச்சி அவ வசிக்கிறா

ஆந்திரா

என் மனசில

வாசிக்கிறா

தம்புரா...


எல்லாரும் அவன கேவலமா பாத்தோம் அவன் ஓயல , அந்த பொண்ணபாத்து ரொமாண்டிக்கா லுக் விட்டுகிட்டே


அவ என் மேல வீசறா சிறு பார்வைய

என் கவிதைல எதிர்பாக்காத கோர்வைய


எனக்கு கொலைவெறி வந்திச்சு , சரி சின்ன பையன் வயசுக்கோளாறுனு விட்டுட்டோம் ... ஆனாலும் சனியன் விடலையே.......


மச்சிஅவள பாத்தாலே பறக்குது தலை மேல கிளிடா

அவ என் மனசை சுக்குநூறா உடைச்ச உளிடா


அந்த பொண்ணு அப்பப்ப அந்த _______ ( மன்னிக்கனும் இங்கயும் கெட்ட வார்த்தை ) அடிக்கடி பார்த்து அவன சூடாக்கி எங்கள சாவடிச்சிட்டு இருந்தாஅவன் கவிதை சொல்லும் போது அப்படியே முகத்தில தில்லானா மோகானாம்பாள் சிவாஜியாட்டம் எக்ஸ்பிரசன் வேற .... அத பாத்து களுக்குனு ஒரு தடவ சிரிச்சிட்டா வேற ... அந்த எழவெடுத்தவ சிரிச்சா இவன் எங்க தாலியல்ல அறுப்பான் , அது அவளுக்கு தெரியுமா


அவள் பாஷையால மட்டும்தான்டா கொல்ட்டி- அவகற்புக்கு

பங்கம் வந்தா காட்டிருவாசெருப்ப கழட்டி -

அப்படிப்பட்டவிசயத்தில அவ ஒரு தமிழ் சீமாட்டி சீமாட்டி....


அப்ப பாத்து ஒரு கார் அதுல பத்து பதினைஞ்சு ( சரியா எண்ணல நான் கணக்குல வீக் ... அதுக்காக மத்த சப்ஜெக்ட்டுனு கேக்காதீங்க மத்ததில நான் ரொம்ப வீக்கு ) பசங்க..


அவ அவங்கள பாத்ததும் ஏறி எஸ்கேப்பு.. போகும் போது இவன பாத்து சிரிச்சிட்டே போனா...என்ன அவ தோள்ல்ல பக்கத்தில இருந்தவன் கைய போட்டிகிட்டு அவள என்னமோ பண்ணிகிட்டே போனான்....பையன் நொந்துட்டான்... கண்ணெல்லாம் தண்ணி , விசும்பி விசும்பி தேம்பி தேம்பி உருண்டு உருண்டு புரண்டு புரண்டுலாம் அழல சும்மா லைட்டா அழுதான் ..... மச்சி கவிதைய ஏன்டா நிறுத்திட்ட சொல்லுடானு நாங்க கலாய்க்க ... அவன் ரொம்ப சோகமா... ( கிளைமாக்ஸ்ல கேன்சர் வந்து செத்து போற ஹீரோ வாட்டம் முகத்த வச்சுகிட்டு )


பருத்தி உடைஞ்சா வெளிய வரும் பஞ்சு

எதுக்குமே உடையாததுடா என் நெஞ்சு

அவளுக்கு இருக்காலாம் ஆயிரம் பேரு

அவனால்லாம் மண்ணாங்கட்டி சேறு

அவ எப்பவுமே புரிஞ்சிக்கல என் காதல

நான் அவளோட இனிமே போட முடியுமா கடல....(இறுமுகிறான்... )


என் மனசு ஏறி போகுது காருல...

இனிமே எப்பவும் நான் டாஸ்மாக் பாருல பாருல பாருல,.....


க்க்க்க் ( இறுமுகிறான் )


அவனுக்கு நேர்ந்த கொடுமைய பாத்து எப்பவுமே காசு கொண்டு வராத மன்னாருகிட்டருந்த காசு வாங்கி நாங்கல்லாம் தண்ணியடிச்சோம் , அவன் எப்பவும் போல நைன்ட்டி அடிச்சு வாந்தியெடுத்தான் .எப்பவும் போல வாஷ்பேசினேயும் குத்திவிட்டான்.... அப்போதாங்க எனக்கும் ஒரு கவிதை தோணிச்சு...


வாஷ்பேசின குத்திவிட்டா

அதோட அடைப்பு நீங்கும்

உன் நெஞ்ச அவ குத்திவிட்டா - உன்

மனசுஎப்படி தாங்கும்......


குச்சி வச்சு குத்திவிட்டாஅடைப்பு நீங்க

உன் மனசென்ன கக்கூஸா...

பாவிப்புள்ள போகும்போது-வெடிக்க

வச்சிட்டாலே

உன்மனசபட்டாசா....


இப்படி ஒரு கவிதைய எங்கிட்ட எதிர்பாக்காத மன்னாரு... வாழ்க்கைல மொத மொத அடுத்தவன் இவன் கவிதையால எவ்ளோ கஷ்டப்படுறானு பீல் பண்ணி நைன்ட்டியோட இன்னொரு பாட்டிபைவ் சேர்த்து அடிச்சு மட்டையானான்.....


*******************************

வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்(கலைஞர்)புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் . இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக்குகள் இயங்குகிறது . குடிப்பழக்கம் நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடாம்.


08 January 2009

சாருநிவேதிதா,அமீர்,பிரபஞ்சன் மற்றும் பலர்



ஓரு ஆச்சர்யம் -



அது ஒரு புத்தகவெளியீட்டுவிழா! மேடையில் பல்துறைப் பிரபலங்கள் . அரங்கு நிறைந்த கூட்டம். பலரும் அரங்கத்தை சுற்றி ஆர்வமிகுதியால் நின்று கொண்டுகூட இருந்தனர். யாருக்கும் கால்வலி கூட தெரியவில்லை போல . எனக்கு கால்கள் வலித்திருக்க வேண்டும். அதனால் அங்கே தரைமட்ட அளவில் இருந்த ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து கொண்டேன். ஜன்னலுக்கு ஒரு புறத்தில் நான் இன்னொரு பக்கம் அவர்கள். அவர்கள் என்றால் உங்களைப்போலவே எனக்கும் அவர்கள் யார் என்று நிச்சயம் தெரியாது. ஏனோ ஒரு விசும்பலும் பேச்சும் அவர்களினூடே ஒலித்தபடியே இருந்தது.



அந்த பெண் அவளருகில் இருந்த ஆடவனின் மிக அருகில் நெருக்கமாக அமர்ந்திருக்கிறாள். அவளது தலை அவனது தோளோடு ஒட்டி இருக்கிறது. இருவரது கைகளும் கோர்த்திருந்தன. அவள் கழுத்திலும் கால்விரலிலும் திருமணமானதற்கான எந்த அறிகுறியும் இல்லை. விரலிலும் மோதிரமில்லை. அவள் கண்களில் கண்ணீராய் இருக்கவேண்டும். அவள் அவரை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறாள் போல. அவரை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே அவளது குறிக்கோள். அவள் வாயிலிருந்து அடிநாதமாய் அல்லது சன்னமாய் அல்லது கிசுகிசுப்பாய் ஓலிக்கிறது அவள் குரல்.



'அவரை பார்க்க முடியுமா!! '



'தெரியலடா ',



'ஒரே ஒருவாட்டி அவரை ரொம்ப பக்கத்தில பாக்கணும்'


'டிரைப்பண்ணலாம்டா , ம்மா உன் கையெல்லாம் ஏன் சில்லுனு இருக்கு'

'தெரியலடா , முதல்தடவ இப்போதான அவரை நேர்ல பாக்கறேன் அதான் ! , நம்ம ரெண்டு பேரும் முத தடவை அது பண்ணோம்ல , அத விட .... இது எப்படி சொல்றதுனு தெரியலடா!! '


அவர் நோபல் பரிசைப்பற்றியும் இலக்கிய உலகம் குறித்தும் நிறைய பேசுகிறார். சுவிஷேச கூட்டங்களில் பேசுபவர் பேசியதையே மீண்டும் மீண்டும் பேசினாலும் அதை கவனிக்காது உணர்ச்சிமேலிட கண்ணீர் வடிக்கும் கூட்டத்தைப்போல அவளும் அவர் பேசுவதை சற்றும் கவனிக்காமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். மேடையில் அந்த பிரபலம் பேசி முடிக்கிறார் . அவருக்கு 10 அடி தூரத்தில் நின்று கொண்டு தயங்கி தயங்கி பேசலாமா வேண்டாமா என்று அந்த இருவரும் காத்திருக்கின்றனர். அவர் பலரையும் பார்க்கிறார் . எல்லாரிடமும் கைகுலுக்குகிறார். அவராகவே எல்லாரிடமும் பேசுகிறார். அவர்களது தயக்கம் நீங்குவதற்குள் கையில் அலைபேசியுடன் அரங்கை விட்டு வெளியேறுகிறார். அந்த இருவரும் அவர் பின்னால் ஓட்டநடையாய் பறக்கின்றனர். அப்பெண்ணின் கண்களில் ஆவல் தீர்ந்து கேவலாக மாறிக்கொண்டிருந்தது. அவருக்காக வெளியே ஒரு கார் காத்திருக்கின்றது. அதிலேறி அவர் பறக்கிறார். வெளியே ஜோரான மழை.



********************************



ஒரு அதிர்ச்சி -


அது ஒரு புத்தகவெளியீட்டு விழா. அவர் ஒரு பிரபல இயக்குனர் . மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதில் இரண்டு மிகப்பெரிய வெற்றியடைந்தவை. தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் அவர் பிரபலமானவர். தற்காலங்களில் புத்தகவெளியீட்டு விழாக்களில் இப்போதெல்லாம் அடிக்கடி அவர் பெயரும் அடிபடுகிறது. அவர் பேசத்துவங்குகிறார்.


தனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமே கிடையாது என்றும் தான் இதற்கு முன் புத்தகங்கள் படித்ததே இல்லை என்றும் , அந்த எழுத்தாளரையையே அவரது தனது படத்தின் விமர்சனம் மூலமாகத்தான் தெரியும் என்றும் பேசுகிறார். தன்னை இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னால் , தன்னை அழைத்து இந்த புத்தகத்தை அந்த ஆசிரியர் கொடுத்தார் நானும் படிக்க முற்பட்டு படிக்க இயலாமல் போய்விட்டதென்றும் பெருமையாய் பேசுகிறார் . கைதட்டல் பலமாக இருக்கிறது .


இப்படிப்பட ஒருவரை விழாக்குழுவினர் எதற்காக அந்த கூட்டத்திற்கு அழைத்தனர் எனபது அவர்களுக்கே வெளிச்சம். அதே போல ஒரு எழுத்தாளரை ஒரு சினிமா பாடல் வெளியீட்டுக்கோ , திரைப்பட நூறாவது நாள் விழாவிற்கோ அழைத்து அவரும் தான் சினிமாவே பார்த்ததில்லை அப்படி பார்த்ததும் ஷகிலா திரைப்படங்கள் மட்டும்தான் , இந்த படத்தின் இயக்குனர் கூட இப்படத்தின் டிவிடியை கொடுத்து பார்க்க சொன்னார் அதைக்கூட எனது சீரிய இலக்கிய பணிக்கு நடுவில் பார்க்க இயலவில்லை , இருந்தாலும் நான் சொல்கிறேன் இந்த இயக்குனர் ஒரு சிறந்த இயக்குனர் என்று பேசினால் தமிழ்கூறும் நல்லுலகம் பொறுத்துக்கொள்ளுமா?


புத்தகவெளியீட்டுக்கு திரைப்படகலைஞர்கள் எதற்கு என்று இனியாவது நம்மவர்கள் கட்டாயம் சிந்திக்கவேண்டும்..! அப்படி அழைக்கும் போது புத்தகங்களை மதிக்கும் சிலரையாவது அது நமீதாவாய் இருந்தாலும் ஷகிலாவாய் இருந்தாலும் கட்டாயம் அழைக்கலாம் . அவனவனுக்கு அவனவன் துறைதான் பெரியது!




**************************



ஒரு அருவெறுப்பு -





அது ஒரு புத்தகவெளியீட்டுவிழா , அவர் ஒரு பிரபல எழுத்தாளர் . அவர் நிறையப்படித்தவர் . வயதிலும் அறிவிலும் நல்ல அனுபவசாலி . பல புத்தகங்கள் எழுதியவர். யாருக்காக அந்த விழா நடக்கிறதோ அவரே தனது குரு அவர்தான் என்று பெருமையடைபவர். அது ஒரு வட்டமான மேசை அதில் ஒரு விருந்து நடக்கிறது . அப்பேர்ப்பட்ட ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் அந்த வட்டமான மேசையில் ஒருவருக்கும் அவரை பேசவைத்து கேட்பதில் மகிழ்ச்சியில்லை. எல்லோரும் எல்லாமும் தெரிந்தது போல பேசிக்கொண்டிருக்க அவர் மட்டும் அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டேயிருந்தார்.





இன்னொரு பிரபல எழுத்தாளர் அவர் , அவரோ உச்சகட்ட போதையிலிருந்தார்! .சுண்டிவிரலால் தள்ளிவிட்டாலே விழுந்து விடும் போதை. அவர் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் மிக உச்சஸ்தாயில் கத்தி கத்தி ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்தார். ஆனால் அவரால் எதையுமே முழுமையாய் பேச இயலவில்லை. பலரது நகைப்புக்கு ஆளாக நேரிட்டது அவர் செய்கைகள். நான் மிகவும் மதிக்கும் சிலரில் ஒருவர் அவர் . அவர் அங்கே கூடியிருந்த பல பிரபலங்களிலைவிடவும் விழாநாயகரைவிடவும் திறமையானவர் என்று எண்ணிவருபவன்.





இன்னும் சிலர் குடித்துவிட்டு மிக மரியாதைக்குறைவாய் மேற்ச்சொன்ன இருவரிடம் மட்டுமல்லாது விழாநாயகரான பிரபல எழுத்தாளரிடமும் கூட பேசியும் நடந்தும் கொண்டிருந்தனர். அதில் பலருக்கும் வயது மிகமிகக்குறைவு . அதில் சிலரிடம் விடிந்தபின் இது குறித்துக் கேட்ட போது அந்த இரவில் அதிகப்பட்ச போதையில் இருந்ததால் அப்படி பேசியிருக்கலாம் என்று கூறினர்.


***************************



ஒரு செய்தி-


கனடாவைச்சேர்ந்த சில குடிகாரர்கள் ஒன்றிணைந்து குடிகார கவிஞர்கள் சங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றனர். இக்கவிஞர்கள் திங்கள்க்கிழமைதோறும் அல்பர்ட்டா மாகாணத்தின் கால்கரி நகரில் இருக்கும் ஒரு பிரபலமான பாரில் கூடி அங்கே இரவு 9-9.30 வரை கூடி கவிதைகளை பகிர்ந்து கொள்கின்றனர். அக்கவிதைகள் இது வரை எங்கும் பிரசுரமாகதவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. இச்சங்கத்தில் நீங்க உறுப்பினராக எந்த கட்டணமும் இல்லை. அதேபோல அந்த பாரில் சங்கம் உங்களுக்கு சரக்கு வாங்கித்தருவதில்லை. நமக்கு நாமே திட்டம்தானாம்.


இதுவரை பல திங்கள்கிழமைகளை வெற்றிகரமாக கடந்த அந்த சங்கத்தில் இது வரை யாருமே போதையில் அதிகமாகி சண்டை சர்ச்சைகளில் ஈடுப்பட்டதில்லையாம். அச்சங்கத்தின் உறுப்பினர் அதற்கு காரணம் அவரவர்க்கு வேண்டிய மதுவை அவரவரே வாங்கிக்கொள்வதே காரணம் என்கிறார்.


அவர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மிக வேடிக்கையாய் சொல்லப்படுபவை. மிக சுவாரசியமானவை. அதில் ஒன்று உங்களுக்காக. LIARS NOSE என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கவிதை , 2 போத்தல் ரம்மை ராவாக அடித்தபின் எழுதிய ஒன்றாம் .







அந்த கவிதை மற்றும் சங்கத்திற்கான சுட்டி இங்கே




************************************




தனது பத்து புத்தகங்களை ஒரே நாளில் வெளியிட்டுள்ள சாரு நிவேதிதாவுக்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.




*************************************

06 January 2009

சேரிவாழ் கோடீஸ்வரன் !



நம்மில் அனைவருக்கும் ஒவ்வொரு தேடல் இருக்கும். சிலருக்கு பணம் , சிலருக்கு புகழ் என அனைவருக்கும் ஒரு தேடல் கட்டாயம் இருக்கும். உங்களுக்கு பல கோடி பணம் அல்லது பல காலமாக நீங்கள் தேடிவரும் உங்கள் முதல் காதலி கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பீர்கள்.
வெற்றி எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. தோல்வியடைந்தவனின் தோல்விக்கு யாரும் காரணங்களை ஆராய்வதில்லை. சமூகத்தின் அடித்தட்டில் வாழும் ஒருவன் யாரும் அடையமுடியா வெற்றியை பெற்றால் அதற்கு ஆயிரம் கற்பிதங்களையும் , அவ்வெற்றியை ஒரு கேள்விக்குறியாக்கவும் முயல்கிறது.


உங்கள் அலுவலகத்தில் தேநீர் பரிமாறும் டீக்கடை சிறுவன், அவனது பெயர் தெரியுமா உங்களுக்கு ? தீடீரென ஒரு நாள் கோடீஸ்வரன் ஆகிவிட்டால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள இயலுமா? . சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய ச.ம.க என்னும் பிரபல கட்சியின் தலைவர் ஏற்று நடத்திய நிகழ்ச்சி கோடீஸ்வரன். அந்நிகழ்ச்சி சன்டிவியில் ஓளிபரப்பாக துவங்கிய நாளில் இருந்தே பட்டித்தொட்டியெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொ.கா. நிகழ்ச்சி. அது போன்ற ஒரு நிகழ்ச்சியில் மும்பையின் சேரியில் வாழும் ஒரு இளைஞன் 2 கோடிகளை வெல்கிறான். அந்நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கே அவனது வெற்றியில் சந்தேகம் . போலீஸ் அவனை சித்ரவதை செய்து ஒரு கேள்வியை முன்வைக்கிறது . அது அந்த 14 கேள்விகளுக்கும் உனக்கு எப்படி பதில் தெரிந்தது எனபதே . அதற்கான விடைகளையும் அவர்களே அளிக்கின்றனர் . அவை நீ ஏமாற்றினாயா ? விடைகள் எழுதித்தரப்பட்டதா ? யாராவது உதவினார்களா? என்பதே. அந்த இளைஞன் அத்தனை சித்ரவதைகளுக்கு பின் ஒரு பதிலைக் கூறுகிறான் . அது '' எனக்கு அக்கேள்விகளுக்கான விடை தெரியும்'' என்பதே .

இப்படித்தான் SLUMDOG MILLIONIORE திரைப்படம் துவங்குகிறது. விகாஸ் சுவரூப் என்னும் இந்திய எழுத்தாளரின் Q & A என்னும் ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இப்படத்தின் இயக்குனர் டானி பாய்ல் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் . அவரது முந்தைய திரைப்படங்களான THE BEACH மற்றும் 24Days Later போன்றவை அவ்வியக்குனரின் வெவ்வேறு தளங்களின் ஆளுமையை நிரூபிப்பதாக இருந்திருக்கிறது. மும்பையின் தாராவி சேரிப்பகுதியை மையமாக வைத்து இதுவரை வந்த படங்களில் காட்டியிருந்த நமது சேரிகளில் இருந்து விலகி இப்படத்தில் மிக புதியதாய் , அவற்றின் உண்மை நிலையை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.



அதேபோல மும்பை கலவரம் குறித்த பார்வையையும் , மும்பை நகர தெருவோர பிச்சைக்கார குழந்தைகளின் வாழ்க்கை குறித்தும் , அவர்களது தேடல் குறித்தும் அக்கறையோடு ஒரு வெளிநாட்டினரின் மனநிலை அல்லது பார்வையில் அல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இது போன்ற கச்சாவான கதையை நமது இயக்குனர்கள் இயக்கியிருந்தால் இப்படி ஒரு திரைப்படம் வந்திருக்குமா எனத்தெரியவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் இந்தியாவில் மிகக்குறைவே.

படத்தின் கதை அந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 14 கேள்விகளையும் அந்த கேள்விகளுனூடே தொடர்புள்ள அவ்விளைஞனனின் வாழ்க்கையிலும் பயணிக்கிறது. அதில் அவன் சிறுவயதில் சந்திக்கும் ஒரு சிறுமி . அவள் மீதான ஈர்ப்பு . அதற்கான தேடல் . அதுவே பிற்காலத்தில் அவனை அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்கிறது என்பதாக கதை நகர்கிறது. படம் முழுக்க விரவியிருக்கும் முக்கிய பாத்திரங்களான ஜமால்,சலீம் மற்றும் லத்திகா என இன்னும் சில பாத்திரங்களின் பின்னால் ஒரு தேடல் இருக்கிறது. ஒருவன் பணத்தை தேடுபவனாகவும், ஒருத்தி வாழ்க்கையை தேடுபவளாகவும் , இன்னொருவன் தனது மீண்ட காதலை தேட்பவனாகவும் கதை நகர்கிறது.

கதையின் முக்கியப்பாத்திரமான (வெற்றி பெறும் இளைஞன் )ஜமீலாக , தேவ் படேல் நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார். காவல்நிலையத்தில் போலீஸிடம் தெனாவெட்டாக பதில் சொல்வதாகட்டும் , தனது இழந்த காதலிக்காக உருகும் காட்சியாகட்டும் அசத்தல். புதுமுகமாம் . நம்ப முடியவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த டிவி நடிகரான இவர் இந்திப்படங்களில் அல்லது இந்தியப்படங்களில் நடிப்பாரா? தெரியவில்லை.

கதையின் இன்னொரு மிகமுக்கியப்பாத்திரம் ஜமீலின் அண்ணனாக வரும் சலீமின் பாத்திரம் . இப்பாத்திரப்படைப்பு சிட்டி ஆஃப் காட்ஸ் திரைப்படத்தின் வில்லன் (அ) ஹீரோ (இரண்டும் ஓன்றுதான்) ஐ ஞாயபகப்படுத்தினாலும் , அந்த குரூரம் மற்றும் தம்பி மீதான அன்பை காட்ட இயலாமல் தவிப்பது . பணம் பணம் என்று தேடும் மனோபாவம் என பன்முகம் காட்டுகிறார்.

இந்தியில் முண்ணனி ஹீரோவோன அனில்கபூரின் பாத்திரம் படத்தில் மிகப்பெரிய பிளஸ். நம்மூரில் இப்படம் எடுக்கப்பட்டால் , அப்பாத்திரத்தில் யாருமே நடிக்க மறுப்பார்கள்.

ஆங்கிலத்திரைப்படமான இப்படத்திற்கு இசை நம்மூர் ஏ.ஆர்.ரஹ்மான். தேவையில்லாத குத்துப்பாடல்கள் , இணைக்கப்பட்ட மெலடி என்று ஏதுமில்லை . ஆனால் அதிரடி அசத்தல் பிண்ணனி மற்றும் பாடல்கள். படத்தில் பாடல்கள் காட்சியினூடே செறுகப்பட்டிருந்தாலும் தனியாக கேட்கவும் அருமையாகவே இருக்கிறது.

படத்தின் திரைக்கதை ஒரு விநாடிகூட தொய்வில்லாமல் நகர்த்தியமைக்காக இயக்குனரை பாராட்டியாகவேண்டும். இப்படி ஒரு கதையை , இப்படிக்கூட படமாக்க இயலுமா என்னும் கேள்வியை நம்மூர் இயக்குனர்கள் முன் வைக்கிறார் இயக்குனர்.

சில காட்சிகளில் இந்திய சினிமாத்தனங்கள் ( பல்லாயிரம் முறை பார்த்துவிட்ட ரயில் நிலையத்தில் காதலியுடன் சேரும் காதலன் , கிளைமாக்ஸில் திருந்தும் வில்லன் ) ஆங்காங்கள தென்பட்டாலும் , மொத்தமாக பார்க்கும் போது படத்தில் அக்குறைகள் பெரிதாக தெரியவில்லை. படத்தின் வேகம் ஒரு பல்ப் பிக்சன் நாவலைப்படிக்கிற உணர்வைத்தந்தாலும், படம் முடிந்த பின் அது தரும் அனுபவம் நிச்சயம் மறக்க இயலாததாக இருக்கும்.
முழுக்க முழுக்க இந்தியாவில் எடுக்கப்பட்டு ஏற்கனவே ரிலீசாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இம்மாதம்தான் இந்தியாவில் ரிலீசாகிறதாம்.

எனக்கு உலகசினிமாவாக இருந்தால் அது நிச்சயம் உலக முழுக்க ஏற்றுக்கொள்ள உகந்த திரைப்படமாகவே இருக்க இயலும் என்பதில் நம்பிக்கையுண்டு . இப்படத்தில் எடுத்துக்கொண்ட ஏழ்மையும் , காதலின் தேடலும் , கடைநிலை மனிதனின் வெற்றியும் அனைவருக்கும் பொதுவானவை. இது நிச்சயம் உலக சினிமாதான்.

இப்படம் பல்வேறு திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்றுவருகிறது . (விருது பெறும் படங்கள் சுவாரசியமாய் இருக்காது என நம்மூர் ஊடகங்கள் தவறான பிரச்சாரம் செய்துவிட்டதோ) .இப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு புத்துணர்வை தருகிறது. அது போன்ற உணர்வைத்தரும் படங்கள் மிகக்குறைவே. (தாரே ஜமீர் பர் இதற்கு முன் இப்படி ஒரு அனுபவம் தந்த படம் )

SLUMDOG MILLIONIRE - உள்ளம் கவர் கள்வன் அல்லது திருடன் - உங்கள் உள்ளம் ஜாக்கிரதை

03 January 2009

கஜினி - அச்சா ஹை.. பொகுத் அச்சா ஹை..!


ஒரு பாக்யராஜ் திரைப்படத்தில் ஒரு ஹிந்தி பண்டிட்டும்(!) ஒரு மாணவனும் இடம் பெறும் காட்சி. அதில் மிகப்பிரபலமான ஒரு வசனம் உண்டு. அது ஏக் காவ் மே ஏக் கிசான் ரகதாத்தா என்று வரும். இன்று வரை அதன் அர்த்தம் கூட என்னவென்று எனக்குத் தெரியாது. அந்த மாணவனைவிட மிக மோசமான இந்தி எதிர்ப்பாளன் நான் ( நமக்கு வராத மொழியை எதிர்ப்பதுதானே முறை ) . அதனாலேயே என்னவோ எனக்கு ஹிந்தி திரைப்படங்கள் என்றாலே அலர்ஜி. அதையும் மீறி டிவிடிகளில் ஹிந்திப்படங்கள் பார்ப்பதுண்டு , போதையில் கூட தியேட்டரில் ஹிந்திப் படங்கள் பார்ப்பதில்லை. டிவிடியில் பார்ப்பதன் சவுகரியம் என்னவென்றால் அதில் ஆங்கிலத்தில் சப்டைட்டில் வந்துவிடும். நமக்கு ஹிந்திதான் பூஜ்யம் என்றாலும் ஆங்கிலம் சூப்பர் இல்லை என்றாலும் சுமார்.

கஜினி திரைப்படம் பார்க்க தோழர் ஒருவர் அழைத்தப்போது மேற்கூறிய பத்தியை லகுடபாண்டி லாங்குவேஜில் விவரித்தேன். அவரோ இது ரீமேக் தான் அதனால் உங்களுக்கு முழுதும் புரியவில்லை என்றாலும் முக்கால்வாசி புரிந்துவிடுமென்றார். முக்கால்வாசிக்கும் மேல் புரிந்தது.

தமிழில் வெளியான கஜினி திரைப்படத்தில் சூர்யாவை மட்டும் கிராபிக்ஸில் அழித்துவிட்டு அதற்கு பதிலாய் அமீர்கானின் முகத்தை போட்டிருந்தால் என்ன வரும்? அதுதான் ஹிந்தி கஜினி.

இரண்டு படங்களுக்கும் இடையே குமுதம் பாணியில் ஆறு வித்தியாசங்கள் வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம்.

1.கிளைமாக்ஸில் மாற்றம்.

2.இசையமைப்பாளர் மாற்றம் . அதனால் பாடல் மற்றும் பிண்ணனி இசை

3.அமீர்கானின் நடிப்பு

4.கேமரா அல்லது ஓளிப்பதிவு

5.ஓலிப்பதிவு

6.கலை

மற்ற படி தமிழ் மற்றும் ஹிந்தி இரண்டுமே அச்சு அசலாகத்தான் காண முடிகிறது. அதனால் கதை திரைக்கதை இயக்கம் குறித்த விமர்சனங்களுக்கு தமிழ் கஜினி விமர்சனம் படித்துக்கொள்ளலாம்.

வித்தியாசங்களின் விமர்சனங்களை மட்டும் பார்ப்போம்..!

1.கிளைமாக்ஸ் -

தமிழ் கஜினியோடு ஒப்பிடுகையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் அசத்தல். தமிழில் சேமியாவைப்போல சுற்றி சுற்றி டீலில் விட்டு ரீலை பிடித்திருப்பார்கள். ஹிந்தியில் நங் என மண்டையில் ( ஐயோ கிளைமாக்ஸ சொல்லிட்டேனோ) அடித்த மாதிரி சொல்லப்பட்டிருக்கிறது. அதுக்கு ஒரு சபாஷ்.

2.இசையமைப்பாளரின் மாற்றம் -

ஹாரிஸை விடவும் சிறப்பாக இசையமைக்க வேண்டிய கட்டாயத்தோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார் போலும். எல்லா பாடல்களும் ராக்கிங். அதுவும் அமீர்கானும் அஸினும் இடம்பெறும் அந்த பாலைவனப்பாடல் ( குஜாரீஸ் ) படம் முடிந்து வந்த பின்னும் மனதிற்குள் இரண்டு நாட்களாய் ரீங்காரமிடுகிறது. அதே போல பிண்ணனி இசை காட்சியின் இயல்போடு அதுவும் பயணிக்கிறது. அஸினுடனான மென்மையான காட்சியில் மிருதுவான பஞ்சுபோலவும், மொட்டை அமீரின் ஆக்சன் மற்றும் சேஸிங்கில் நம்மையும் சேர்த்து அவரோடு ஓடவும் சண்டைபோடவும் செய்கிறது. மந்திர பிண்ணனி இசையின் பிண்ணனி புரியவில்லை. ரஹ்மான் ராக்ஸ். அவருக்கு ஒரு சபாஷ்.

3.அமீர்கானின் நடிப்பு -

லகான்,தாரே ஜமீன் பர் , ரங் தே பசந்தி படங்களில் பார்த்த துள்ளல் அமீர் இந்த படத்தில் மிஸ்ஸிங் . அந்த படங்களின் பாதிப்போ என்னவோ அவரை மொட்டை கெட்டப்பில் பார்த்தாலும் டெரராக இல்லை. அமீருக்கு பிஞ்சு மூஞ்சி. புருவத்தை உயர்த்தி , கண்ணை முழித்து முழித்து பார்க்கிறார் , ஆனாலும் அது பயம் காட்டவில்லை. ஆனால் அஸினின் காதலனாக சூர்யாவை தோற்கடிக்கிறார் . அந்த கால காதலன் அமீரை( பாப்பாக்கி தேரே படா நாம் கரேகா காலத்து கிதார் அமீர் ) இத்தனை நாளாய் இழந்திருக்கிறோம். ச்சோ சார்மிங் . அதுவும் அந்த பணக்கார தோரணையும் அஸினிடம் எல்லாவற்றிலும் தானாக தோற்பதை ரசிப்பதும் ... அதுக்கு ஒரு சபாஷ்..

4.கேமரா - ஓளிப்பதிவு -

தமிழில் மேட்ரிக்ஸ் கலரில் சூர்யாவின் அப்பார்ட்மென்ட் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். ஹிந்தியில் அது இல்லாமல் புது கலரில் முயன்றிருக்கிறார் . படம் முழுக்க தெரிக்கும் ரிச்னஸ். சேஸிங் காட்சிகளில் அமீர்கானோடு நாமும் சேர்ந்து ஓடுவதைப்போல ஒரு உணர்வு வருகிறது , அமீரோடு கேமராவும் ஒடுகிறது , அடிக்கிறது , நடிக்கிறது! . அவ்வளவு நேர்த்தி. மொத்தத்தில் கிளாஸ் அண்டு கலர்ஃபுல். அதுக்கு ஒரு சபாஷ்.

5.ஒலிப்பதிவு-

தமிழில் மிகச்சிறந்த ஒலிப்பதிவாக இதுவரை இப்படத்தின் தமிழ் பதிப்பையே நினைத்திருந்தேன். அதைவிட இரண்டு மடங்கு உழைப்பு தெரிகிறது . நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார். கலக்கல். அதுக்கு ஒரு சபாஷ்..

6.கலை -

கலை , ஒரிஜினலை விட அசத்தல்தான். தமிழில் காட்டப்படும் அப்பார்ட்மென்ட் டிடி காலத்து வீட்டு செட்டைப்போல இருக்கும். இந்த படத்தில் நிஜ அப்பார்ட் மென்ட் போல ஒரு உணர்வு, (நிஜமாகவும் இருக்கலாம்) . அதே போல படம் முழுக்க வியாபித்திருக்கும் ரிச்னஸ் , அதன்பின்னால் ஒளிந்திருக்கும் கலை இயக்குனரில் உழைப்பு அசத்தல். அதற்கு ஒரு சபாஷ்..

கஜினி படத்தை தமிழில் பார்த்தவர்களுக்கு இப்படம் எவ்வளவு பிடிக்கும் என்று தெரியவில்லை. மேற்கூறிய சில வித்தியாசங்களைத்தவிர படத்தில் மற்ற எல்லாமே ஒன்றுதான்.

நான் ஏற்கனவே தமிழில் பார்த்திருந்தாலும் , ஹிந்தியில் பார்க்கும் போது அதே விறுவிறுப்பு , அதே சுறுசுறுப்பு. அஸின் மீண்டும் ஒரு முறை மனதை கொள்ளையடிக்கிறார். அமீர்கான் அசத்துகிறார். முருகதாஸ் கொடி ஹிந்தியிலும் பறக்கிறது. ஹிந்தி தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை , படம் முழுக்க புரிகிறது( தமிழ் வசனங்கள் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ) .

மொத்தத்தில் கஜினி அச்சா ஹை..!

புத்தாண்டில் பார்த்த முதல் படம் மொக்கையாகி விடக்கூடாதே என்கிற பயத்தோடு போய் பார்த்த படம். ஏமாற்றவில்லை. ஒரு வாட்டி பாருங்கலே...!


02 January 2009

அப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான்....!



ராமு சுவாமிகளும் , கோமு சுவாமிகளும் தங்களது மாட்டுவண்டியில் வெளியூருக்கு பிரசங்கம் பண்ண சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு கிராமம். அந்த கிராமத்தை கடந்தால்தான் கோவிலுக்குச் செல்ல முடியும். கிராமத்தில் நல்ல மழை . சாலையெங்கும் சேறும் சகதியுமாய் இருந்தது.


அந்த கரடுமுரடான பாதையில் வண்டியில் செல்கையில் வெள்ளம் ஒடும் ஆற்றின் பாலத்தை கடக்க இயலாமல் அழகான பெண்ணொருத்தி கவலையாய் நின்று கொண்டிருந்தாள். ராமு சுவாமிகள் அவளை தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ளுமாரு கூறினார். அவளும் வண்டியில் ஏறிக்கொள்ள வண்டி பாலத்தைக்கடந்தது. கோமுவுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை. முறைத்துக்கொண்டே வந்தான். அவளது இடையைப்பிடித்து வண்டியில் ஏற்றியது கோமுவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

பாலத்தைக்கடந்ததும் பெண் இறங்கிவிட்டாள். மீண்டும் இடையைப்பிடித்து இறக்கிவிட்டான். இவர்களிருவரும் கோவிலை அடைந்தனர்.

கோமு கோபத்தோடு ஆரம்பித்தான்

'' நம்மைப்போன்றவர்கள் பெண்களை நெருங்கக்கூடாது என்று உனக்கு தெரியாதா ?''

ராமு சுவாமி சிரித்தபடியே கூறினான் '' அந்த பெண்ணை அந்த பாலத்திலேயே இறக்கிவிட்டுட்டேனே.. நீ இன்னுமா அவளை சுமந்துட்டு இருக்க...!?''


***************************

அந்த நான்கு சன்யாசிகள் காட்டில் வெகுதூரம் பிராயணம் செய்து கொண்டிருந்தனர். சூரியன் மேற்கில் மறையத் துவங்கியதால் நடுக்காட்டிலேயே தங்கிவிட தீர்மானித்தனர். ஒரு இடத்தில் கூடாரமிட்டு அங்கே நெருப்பு மூட்டி சுற்றியமர்ந்தனர். இரவாகும் வரைப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சன்யாசிகள் தூங்கும் முன் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். நால்வரும் அமைதியாய் தியானத்தில் ஆழ்ந்தனர்.

காற்று பலமாக வீசத்துவங்கியது. அதில் அவர்கள் மூட்டியிருந்த நெருப்பு அணையத்துவங்கியது.

தியானத்தில் இருந்த நால்வரில் ஒருவர் மற்ற மூவரிடம்

''ஐய்யயோ நெருப்பு அணையப்போகிறது '' என்று கூச்சலிட்டான்.

''நாம் மௌனமாக தியானம் செய்ய வேண்டும் என உனக்கு தெரியாதா? '' என இரண்டாமவன் கேட்டான்.

''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன் எரிச்சலடைந்தான்

''ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது சந்நியாசி கூறினான்.

***********************


அந்த பெரிய பணக்காரன் புத்தாண்டுதினத்தில் காட்டில் தனித்து வாழும் சந்நியாசியை தரிசிக்கச் சென்றான் . அவரிடம் ஆசி பெற வேண்டுமென்றான். அவர் அது முடியாதென்றார். அவரிடம் ஒரு பெரிய காகிதத்தைக் கொடுத்து அதில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை காலாகாலத்திற்கும் தரும் வகையில் ஒரு நல்ல வாசகம் எழுதியாவது தருமாறு வேண்டினார்.

சந்நியாசி அந்த காகிதத்தை வாங்கி அதில் '' அப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான் '' என்று எழுதித்தந்தார்.

பணக்காரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ''யோவ் என் குடும்பம் சந்தோசமா இருக்கணும்னு எழுதி குடுய்யான்னா, இப்படி எழுதிக்குடுத்திருக்கியே ''

சந்நியாசி சாந்தமாக '' உனக்கு முன்னால் உன் மகன் இறந்தால் நீயும் உன் குடும்பமும் எவ்வளவு துக்கமடைவீர்கள் , உனக்கும் உன் மகனுக்கும் முன்னால் உன் பேரன் இறந்து போனால் அதைவிட இன்னும் அதிகமாகவல்லவா துக்கமடைவீர்கள் , உனது வம்சம் நான் எழுதிக்கொடுத்த வரிசையில் இறப்பதுதானே இயற்கை , அதுதான் உன்மையான மகிழ்ச்சி சந்தோசம் , நீ கிளம்பு ''

********************