Pages

29 April 2010

சபாபதி - 1941
தமிழில் வெளியான முதல் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் சபாபதியாகத்தான் இருக்க வேண்டும். அதற்குமுன் வெளியான திரைப்படங்களை இதுவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அப்படி எந்தப்படமும் டிவிடியாக விற்பதாகவும் தெரியவில்லை. மேல் விபரங்களும் கிடைக்கவில்லை. நண்பர்கள் உதவலாம்.


1941ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது (நன்றி wiki). படத்தின் நாயகன் 'முட்டைக்கண்' டி.ஆர்.ராமச்சந்திரன் , 15 வயது பையனைப்போல் இருக்கிறார் ( வயது 12-13 இருக்கலாம்). படத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனாக நடித்துள்ளார். இவர் அன்பே வா படத்தில் சரோஜாதேவிக்கு தந்தையாக நடித்திருப்பார். இவர் இந்த படம் வெளியான காலத்தில் மிகபெரிய நடிகராம். அப்போதெல்லாம் அதிகம் அறியப்படாத எம்.ஜி.ஆர் , டிஆர் ராமசந்திரனுக்காக தன் பெயரை எம்.ஜி.ராமச்சந்தர் என்றே அழைக்கவும் டைட்டிலில் போடவும் சொல்வராம்!


படத்தின் நாயகி ‘லக்ஸ் ஸோப்’ பத்மா (அந்தகாலத்து லக்ஸ் விளம்பரமாடல் போல!). அவருக்கும் 12 அல்லது 13 வயதுதான் இருக்க வேண்டும். தமிழ்சினிமாவின் மிகமிக இளம் நாயகி. பாலர் பள்ளியிலிருந்து பிடித்துவந்திருப்பார் போலிருக்கு! இவர் 1940களின் துவக்கத்தில் வெளியான பல படங்களில் நடித்தவராம்.


படத்தின் பெரும்பகுதியை நாயகனும் அவனோடு இருக்கும் துணை நாயகனுமே பகிர்ந்து கொள்கின்றனர். அண்மையில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் 35 வயது விஜய் பிளஸ்டூ படிப்பதாய் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதற்கே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த திரைப்படத்தின் நாயகன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். நம்புங்கள் சத்தியமாக ஆறாம் வகுப்பு. அவரோடு படிக்கும் சக மாணவனுக்கோ திருமணமாகி மூன்று குழந்தைகள். அவர்கள் இருவரைத்தவிர மற்றவரெல்லாம் நிஜமான ஆறாம்வகுப்பு மாணவர்களைப் போல சின்னதாக உள்ளனர்.


வாத்தியார் இல்லாத நேரத்தில் அவரை கார்ட்டூன் போல வரைந்து வைத்து கலாய்க்கும் இதுவரை தமிழில் வெளியான பல ஆயிரக்கணக்கான படங்களுக்கு இந்த படம் அரிச்சுவடி. முதல் காட்சியே அதுதான். வாத்தியாருக்கு மீசை வரைதல் , புத்தகத்தின் பக்கங்களை கிழித்து வைத்து விளையாடுவது மாதிரியே நிறைய சேட்டைகள் பிளஸ் குறும்புத்தனங்களுடன் ஹீரோ ஓப்பனிங். ஓப்பனிங் சாங் கூட உண்டு. (எந்த கலர் தமிழன்களுக்கு எந்த மெசேஜூம் இல்லை )


படத்தின் இரண்டாவது நாயகன் இன்னொரு சபாபதியாக வரும் காளி.என்.ரத்தினம். படுபயங்கர சேட்டை படம் முழுக்க. அதிலும் பெயர் குழப்பம் கூடுதல் சேட்டை. அவருடைய முகம் ஒவ்வொரு காட்சியிலும் அஷ்டகோணலாக மாறும் போதும் ஏதாவது சில்வண்டித்தனமான வேலைகள் செய்யப்போகிறார் என்பது புரிந்து விடுகிறது. அதற்கு பின் வரும் காட்சிகளில் வெடிச்சிரிப்பு உத்திரவாதம். அவருக்கு ஜோடியாக வரும் பெண்ணும் (டி.பி.ராஜகாந்தம்) , இருவருக்குமிடையேயான காதலும் கனக்கச்சிதமான காமெடி கலக்கல். பிற்காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம் ஜோடிக்கு இணையாக பேசப்பட்ட ஜோடியாக காளிரத்னம்-ராஜகாந்தம் ஜோடி இருந்துள்ளது.


நாயகன் சபாபதிக்கு (டி.ஆர்.ராமச்சந்திரன்) பள்ளியில் படிக்கும் போதே திருமணம். பின் பாஸானால்தான் சோபனம்!(முதலிரவு) என கன்டிஷன் போட்டுவிடுகிறார் தந்தை. பெண்ணை அவரது தாயார் வீட்டில் விட்டுவிட்டு சோபனம் பண்ணாத சோகத்தில் அலையும் நாயகன். அவன் தீபாவளிக்கு மாமியார் வீட்டிற்கு செல்ல அங்கே நடக்கும் கூத்துகள்.. அவன் கடைசியில் பாஸாகி அப்பாவின் ஆசையை தீர்த்தானா? அல்லது பாஸாகமலேயே சோபனம் பண்ணி மகிழ்ச்சியாக வாழ்ந்தானா என்பதை சின்னத்திரையில் காசு கொடுத்து டிவிடி வாங்கி காண்க!


படத்தில் தமிழாசிரியாக கே.சாரங்கபாணி. அந்த காலகட்டத்தில் தமிழாசிரியர்கள் நடத்தப்பட்ட விதமும், அவர்கள் எப்படி ஒரு கோமாளியாக சித்தரிக்கப்பட்டனர் என்பதும் கதையோட்டத்திலிருந்து தெரிகிறது. ஆங்கிலம் படிப்பதும் பேசுவதுமே உயர்சிந்தனை என்கிற சமூக மாற்றம் தமிழகத்தில் வேரூன்றிய காலகட்டமாக இருக்க வேண்டும்.
படத்தில் எழுபது வருடத்திற்கு முந்தை நகரத்து பணக்காரர்களின் வாழ்க்கைமுறை பதிவாகியிருக்கிறது. படத்தின் நாயகன் சபாபதியை சபாபதி முதலியார் என்கிறார் அவருடைய ஆசிரியர். 12 வயது சபாபதி முதலியாரை மரியாதையோடு அப்பா என்றழைக்கிறார் , அவனோ வீட்டு வேலைக்காரனான சபாபதியை டேய் இங்க வாடா.. என்று அதட்டுவதும் அவனை அடிப்பதுமாக.. பணக்காரர்களின் வெட்டிபந்தா, ஓவர் சீன் என பல காட்சிகளும் வயிறை புண்ணாக்குகிறது. மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் முன் வெட்டிப்பந்தா பண்ண அந்த அமெரிக்கனோ இந்தியானோ என்சைக்கிளோபீடியாவை எடுத்துவா என்று அதட்டும் காமெடி விவேக்கை நினைவூட்டியது.


அந்த காலத்தில் பிராமணர்களுக்கென தனியாக ஹோட்டல்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது. அதைவைத்து காமெடி செய்திருப்பார்கள். நமக்கு தகவல். இப்படி படம் முழுக்க 1941ஆம் ஆண்டு குறித்த சின்ன சின்ன தகவல்கள் கசிகின்றன.


அந்த காலத்தில் தேர்தலில் போட்டியிடுபவருக்கு யார் வேண்டுமானாலும் ஓட்டுப்போடமுடியாது. பட்டம் படித்தவர்களும் பணக்காரர்களும்தான். தேர்தலில் போட்டியிடும் சபாபதியின் தந்தையார் அவனுடைய வாத்தியாரிடம் ஓட்டு போட சொல்லி பணம் கொடுக்கிறார். அவரோ ஓட்டுக்கு பணமா என்று முதலில் மறுத்தாலும் , பையனோட டியூசன் பீசா நினைச்சுக்கோங்க என்றதும் மனைவியின் அதட்டலுக்கு பயந்து வாங்கிக்கொள்கிறார். இது தரும் தேர்தல் தகவலை நீங்களாக புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் அதட்டலுக்கு பயப்படுவது 1941லிருந்தே இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
படத்தின் கதை தமிழ்நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார். அந்தக்காலத்திலேயே முதலிரவை மையப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார். இது அவருடைய மேடை நாடகத்தின் திரைவடிவமாகும்.


இசை யாரென்று தெரியவில்லை, குத்துப்பாட்டு கிடையாது, ஆனால் நாதஸ்வரம்,கர்நாடக இசை முதலான தத்தரீனாவுக்கு கியாரண்டி! நகைச்சுவை படங்களுக்கே உரிய டொய்யாங் டொய்யாங் படம் முழுக்க! சரஸ்வதி வாத்ய கோஷ்டிக்கு ஒரு ஷோட்டு! படத்தில் பல பாடல்கள் எண்ணிக்கை நினைவில்லை. காமெடி பாடல்களும் உண்டு.. கூர்ந்து கேட்டால் தமிழறிவு பெருகும்.. சுத்ததமிழில் காமெடி பண்ணலாம்!


படத்தின் சில காட்சிகளில் அந்தக்கால சென்னை வருகிறது. அதிக கட்டிடங்கள் இல்லாத ஓரளவு சுத்தமான சென்னை. இப்படி பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தால்தான் உண்டு.


ஏவிஎம் தயாரித்த இப்படத்தை இயக்கியவர்கள் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மற்றும் ஏ.டி.கிருஷ்ணசாமி. படத்தை இயக்கியதும் திரைக்கதை எழுதியதும் முழுக்க முழுக்க ஏ.டி.கிருஷ்ணசாமிதான் என்றும் சொல்லப்படுகிறது. (இவர் அறிவாளி,மனம் ஒரு குரங்கு, வித்யாபதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர்)


படத்தின் பல இடங்களில் உலகப்போர் குறித்த வசனங்கள் இடம் பெறுகிறது. ஆனால் போரின் ஆரம்பகட்டம் என்பதால் அதன் தாக்கம் தமிழ்நாட்டை அடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப்படத்தின் மொத்த பட்ஜட் 40000! ஹீரோவின் சம்பளம் மாதத்திற்கு ரூ.35! ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் இந்தப்படம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.


அந்தகாலத்து நகைச்சுவைக் காட்சிகளுக்கு சில இடங்களில் சிரிக்க முடியவில்லை என்றாலும் , பல காட்சிகள் நமக்கு ரொம்ப ரொம்பப் புதுசு. இன்றைய படங்களின் புதிய மொந்தையில் வரும் பழைய கள் படம் முழுக்க! அதற்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம்.

27 April 2010

சூப்பர் தாத்தா - 99

சூப்பர் தாத்தா 99


-அதிஷா


வயது அதிகமானால் உடல் பலம் குறையும் என்கிறது மருத்துவம். ஃபவ்ஜா சிங்குக்கோ அது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. 89 வயதில் மாரத்தான் பந்தயங்களில் கலந்து கொள்ளத் துவங்கியவர் , தன் வயது ஏற ஏற பல சாதனைகளை வரிசையாய் முறியடித்துக்கொண்டே வருகிறார். விளையாட்டு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது எவ்வளவு கடினமானதாகவே இருக்கட்டும். முயற்சி மட்டுமே போதும் , சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை. உதாரணம் , இந்த ‘98’ வயது துறுதுறு இளைஞர்.


மாரத்தானில் ஓடுவதற்கு கடுமையான பயிற்சிகள் வேண்டும். தினமும் பத்திலிருந்து பதினைந்து மைல்கள் எங்கேயும் நிற்காமல் ஓட வேண்டும். அதோடு சில மைல்கள் நடைப்பயிற்சி. நிறைய உடற்பயிற்சி. இதெல்லாம் இருந்தால் மட்டுமே மரத்தான் ஓட்டப்பந்தய தூரமான 42.195 கிலோ மீட்டர் தொலைவை சூப்பர் ஸ்பீடில் கடந்து சாதிக்க முடியும். மேலே சொன்ன பயிற்சியில் பாதியாவது இருந்தால்தான் அந்த போட்டிகளில் கலந்து கொள்ளவாவது முடியும். மாரத்தானுக்குகாக பயிற்சி பெறுவது அத்தனை எளிதல்ல.


ஃபவ்ஜா சிங் காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். தன் பேரனை துணைக்கு வைத்துக்கொண்டு ஓடத்துவங்குவார். அவர் வசிக்கும் பகுதியின் இளைஞர்களும் அவரோடு இணைந்து கொள்வர். அவரோடு ஓடும் அனைவருக்கும் மூச்சு வாங்கும். கால்கள் வலிக்கும். அவர்களுக்கெல்லாம் வயது 40க்கும் கீழே!


தாத்தா மட்டும் தனியாக ஓடுவார். அவர் ஓடுவதை பார்க்கும் இளைஞர்களுக்கே மலைப்பாக இருக்கும். ஒரு நாளைக்கு 10மைல் . ஒரு வாரத்திற்குள் 100 மைல் இலக்கு. அதை எப்படியும் நெருங்கி விடுவார். தற்போதைய நிலையில் உலகில் அதிக வயதில் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.
‘’இவர் எப்படி ஓடுகிறார் என்றே தெரியவில்லை. பொதுவாக மாரத்தான் பந்தயங்களில் பயிற்சி மற்றும் உடல்நலமில்லாத யாரும் கலந்து கொள்ள கூடாது , அதிலும் குறிப்பாக வயதானவர்கள்.. அவர்களுக்கு எப்போதுமே கட்டாயம் நோ தான். போதுமான அளவு பயிற்சி மற்றும் சரியான உடல்நிலை இருந்தால் மட்டுமே அதில் கலந்து கொள்ளலாம் , 16 வயதாகவே இருந்தாலும் கடுமையான பயிற்சி அவசியம், ஃபவ்ஜா சிங்கை பொறுத்தவரை இவருடைய உணவு பழக்க வழக்கங்களும் விடாத பயிற்சியும், தன்னம்பிக்கையும் இவரை ஓடவைக்கிறது என்றே நினைக்கிறேன்’’ என்கிறார் ஸ்டீவன் காரல். இவர் உலகின் தலைசிறந்த விளையாட்டுத்துறை மருத்துவர்.


இவருடைய ஒல்லியான கால்களையும் , மெலிந்த தேகத்தையும் பார்த்தால் யாருமே நம்ப மாட்டார்கள். இவரும் மற்றுமொரு தாத்தாவே என்று நினைக்கவைக்கும் உருவம். ஆனால் அவை வெறும் எலும்புகள் மட்டுமே அடங்கிய கால்கள் அல்ல அது, மன உறுதியாலும் தன்னம்பிக்கையாலும் நிரப்ப்ப் பட்டது. தரையில் கால் பட்டவுடன் ஓடத்துவங்கி விடுகிறது. அதுதான் ஐரோப்பிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 12 உலக சாதனைகளை படைக்க உதவியது. அவருடைய வயதுக்கான அத்தனை உலக சாதனைகளையும் முறியடித்துவிட்டார்.


தன் 89 வயதிலிருந்து இன்றுவரை எண்ணிலடங்காத மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். 2004 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடரை இங்கிலாந்து சார்பாக ஏந்தி சென்றார். 2005 ஜனவரியில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அவரை அழைத்து லாகூர் மாரத்தான் போட்டிகளை துவங்கி வைக்கச் சொல்லி கௌரவப்படுத்தினார். அதே ஆண்டில் நியுயார்க்கில் நடைபெற்ற உலக மாரத்தான் போட்டிகளை துவக்கி வைத்தார். 2006ல் ஃபவ்ஜா சிங்கிற்கு இங்கிலாந்து ராணி ‘’LIVING LEGEND” என்கிற விருது வழங்கினார். இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் போட்டிகளை இங்கிலாந்தில் துவக்கி வைத்தபோது கௌரவிக்கப்பட்டார். இப்படி அடுக்கடுக்காக அவருடைய சாதனைப்பட்டியல் நீள்கிறது.


சாதனைப்பட்டியலோடு அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கையும் கணிசமான எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. 2005ல் உலகின் பெரிய விளையாட்டு உபகரண நிறுவனமான அடிடாஸ் சில கோடி ரூபாய்களில் இவரோடு விளம்பர ஒப்பந்தம் செய்தது. உலகின் நம்பர் ஒன் விளையாட்டு வீரர்களான லைலா அலி (குத்துசண்டைவீரர் முகம்மது அலியின் மகள்) , டேவிட் பெக்காம்,சச்சின் தெண்டுல்கர் மாதிரியானவர்களை மட்டுமே தன்னுடைய விளம்பரங்களுக்கு பயன்படுத்துகிற நிறுவனம். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமுடன் ஃபவ்ஜா சிங் அடிடாஸின் விளம்பரங்களில் இடம்பிடித்தார்.
டேவிட் பெக்காம் குறித்தும் அடிடாஸ் விளம்பரம் குறித்தும் அவரிடம் கேட்டபோது ‘’ என் பேரன்தான் சொன்னான் , அந்த பையன் ரொம்ப புகழ்பெற்ற ஆளாமே! ஃபுட்பால் கூட நல்லா விளையாடுவாராமே ,அங்க போனதுக்கப்பறம்தான் தெரிஞ்சது. எனக்குதான் எதுவும் புரியல , பெரிய மைதானத்துக்கு அழைச்சிட்டு போனாங்க , அங்க என்னை ஓடசொல்லி நிறைய போட்டோ எடுத்தாங்க , அப்புறம் இதோ இந்த ஷூ இரண்டு குடுத்தாங்க’’ என்று ஒரு குழந்தையைப் போல் தன் பேண்டை உயர்த்தி காலணிகளை காட்டுகிறார். இதன் தொடர்ச்சியாக அடிடாஸ் நிறுவனம் அவருடைய பெயரிலேயே ஒரு ஷூ வகையை அறிமுகப்படுத்தியுள்ளது.


இன்று உலகெங்கிலும் உள்ள அத்லெடிக் வீரர்களுக்கு உற்சாகம் தரும் இவருடைய வாழ்க்கை விவசாயத்தில்தான் துவங்கியது. பஞ்சாப் ஜலந்தருக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் பியாஸ் பிந்த். பிறந்து வளர்ந்ததெல்லாமே அங்குதான். முழுநேர கரும்பு விவசாயி. பஞ்சாபியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது. பஞ்சாபைத்தவிர வேறெந்த ஊருக்கும் சென்றதில்லை. ஆறு மகன்கள் , மனைவி, பதி மூன்று பேரன்கள் மற்றும் பேத்திகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு பேரதிர்ச்சியாக அவருடைய மூத்தமகன் எதிர்பாராத விபத்தில் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து மனைவியும். அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட நாட்கள் அவை. இளைய மகன் லண்டனில் வசிக்க பஞ்சாபில் தனிமையில் ஃபவ்ஜா சிங் கடுமையான மன உளைச்சலோடு தனது இறுதி காலத்தில் இருந்தார். சீக்கிரம் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவர் , ஏனோ திடீரென்று ஒரு மாற்றத்திற்காக தன் மகன் வசிக்கும் இங்கிலாந்துக்கு பயணமானார்.


சொந்த ஊரில் இருந்தாலாவது நண்பர்களோடு உரையாடலாம் , ஆங்கிலம் பேசும் முதியவர்களோடு பூங்காக்களில் மாலைப்பொழுதுகள் ,வெறும் மௌனத்தோடு அமைதியாகக் கழிந்தன. பெரும்பாலும் டிவி அல்லது பூங்கா. மனைவி மற்றும் மகனை இழந்த சோகம் தொடர்ந்து மனதை உருக்கிக்கொண்டிருக்க அதிலிருந்து மீள ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு கட்டினார். சிறுவயதிலிருந்தே அவருக்கு ஓடுவது மிகப்பிடித்திருந்தது. தினமும் ஜாகிங்கை தொடங்கினார். டிவியில் ஒருமுறை மாரத்தான் போட்டி ஒன்று ஒளிப்பரப்பாக அதை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு நாமும் ஏன் ஓடக்கூடாது என்ற பொறி தட்டியது. ஓடத்துவங்கினார். 89 வயதில் இதெல்லாம் எதுக்குப்பா என்று அனைவரும் தடை சொல்ல தன் அந்த தடைகளை தன் சாதனைகளால் தகர்த்துக் காட்டினார்.


ஆனால் மாரத்தானில் ஓட நிறைய பயிற்சிகள் வேண்டும். அதுவும் இவருடைய வயதுக்கு பாதுகாப்பான பயிற்சிகள் அவசியம். கரணம் தப்பினால் மரணம். அவருடைய வயது அப்படி!. பயிற்சி? பூங்காவில் ஓய்வுக்கு வருவார் ஹர்மந்தர்சிங். 1980 ஒலிம்பிக்கில் இங்கிலாந்துக்காக தடகள போட்டிகளில் கலந்து கொண்டவர். பல மாரத்தான் வீரர்களுக்கு பயிற்சியளித்து வருபவர். ஃபவ்ஜா சிங்கின் திறமையை பார்த்து வியந்துபோனார். தாத்தாவுக்கு பயிற்சிகள் ஆரம்பமானது.


தன் 89வது வயதில் லண்டனில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மாரத்தான் போட்டிகளில் களமிறங்கினார் ஃபவ்ஜா. ஆறு மணிநேரம் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருந்தார். (சாதாரணமாக இளம் வீரர்கள் உலக அரங்கில் இரண்டரை மணிநேரத்தில் மாரத்தான் தூரத்தை கடக்கின்றனர்). அந்த நிகழ்ச்சி குறித்து பேசும் போது ‘’நான் ஓடிக்கொண்டேயிருந்தேன், எனக்கு எதுவும் வித்தியாசமாகத்தெரியவில்லை, மற்றவர்களோடு மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டேயிருந்தேன், ஓடும் போது கடவுளோடு பேசுவதை போன்று இருந்தது, கடவுளிடம் பேசுவது யாருக்குத்தான் பிடிக்காது , எனக்கு இன்னும் ஓடவேண்டும் போலிருந்தது’’ என்று மகிழ்ச்சியோடு விவரிக்கிறார்.
அதன்பிறகு அவர் கலந்து கொண்ட போட்டிகள் வெறும் ஓடுவதோடும் , பயண தூரத்தை கடப்பதோடு மட்டுமே என்றில்லாமல் சாதனைகளை நோக்கியதாய் இருந்தது. லண்டனில் நடந்த அடுத்த ஐந்து மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டார். ஐந்தாவது முறை ஆறு மணிநேரம் என்பது ஐந்தாக குறைந்தது, அது அவர் வயது கொண்டவர்கள் பிரிவில் உலக சாதனை. உலகின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. அதன் பின் எல்லாமே ஜெயம்தான்.


பயிற்சியாளர் ஹர்மந்தர் சிங்குக்கு ஃபவ்ஜா சிங்குடைய உடல் இன்றும் கூட மர்மமனாதுதான். ‘’அவர் எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறார் என்று தெரியுமா? ஆனால் அவருக்காக நாங்கள் எந்த உணவையும் பரிந்துரைப்பதில்லை , அவருடைய தின பயிற்சிகளுக்கேற்றாற் போல அவருடைய உடல் பழகிவிட்டது , அதை புதிய உணவுகள் கொடுத்து பாதிப்படைய செய்ய விரும்பவில்லை, நாம் எதையாவது கொடுத்தாலும் அவர் உண்ணமாட்டார்’’ என்று கூறி வியக்கிறார்.


சராசரி இந்திய குடிமகனின் வயதைக்காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான வயதிலும் எப்படி இவரால் ஓட முடிகிறது ? ‘நான் அசைவ உணவு எடுத்துக்கொள்வதில்லை, குடிப்பழக்கமோ புகைப்பழக்கமோ எப்போதும் கிடையாது, காலையில் ஒரு கப் டீயுடன் கொஞ்சம் ரொட்டி, மதியம் ஒரு சப்பாத்தி, கொஞ்சம் காய்கறிகள் , இரவு சப்பாத்தியுடன் இஞ்சிகூட்டு , அவ்ளோதான் என் டயட்!’’ என்று சிரிக்கிறார்.
மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் , விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயையும் முழுவதுமாக பிளிஸ் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக ஏழை நாடுகளில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் மருத்துவத்திற்காக செலவிடுகிறார். இது தவிர பல தொண்டு நிறுவனங்களுக்கும் தன்னுடைய வருவாயை பகிர்ந்தளிக்கிறார். ‘’ இறைவனோடு பேசுவதற்கு தரப்படும் கூலியை அவனிடமே திருப்பி தருவதுதானே சிறந்தது ’’ என்கிறார்.


1976ஆம் ஆண்டு 98 வயதில் கிரீக் நாட்டைச்சேர்ந்த டிமிட்ரான் யோர்டானிஸ் மாரத்தான் போட்டியில் 7 மணிநேரத்தில் ஓடியதே இதுவரை சாதனையாக உள்ளது. இந்த ஆண்டு அந்த சாதனையை தன் 99வயதில் ஃபவ்ஜா முறியடிப்பேன் என்று கூறியுள்ளார். அதற்காக கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார்.


விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பொட்டிலடித்தது போல் ‘’ விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற , நிறைய பயிற்சி தன்னம்பிக்கை , இதற்கெல்லாம் மேல் எது செய்தாலும் அதில் மற்றவருக்கு உதவும் நல்ல மனம் இருந்தால்... அது போதும், வெற்றி நிச்சயம்’’ என்கிறார் இந்த சூப்பர் தாத்தா.


தாத்தாவின் ஃபேஸ்புக் பக்கம் - http://www.facebook.com/home.php?#!/pages/Fauja-Singh/225889357609
நன்றி - புதியதலைமுறை.

24 April 2010

இமயமும் சிகரமும் ரெட்டச்சுழி


‘’டேய் நான் ஸ்டைலுக்கே புள்ளையார் சுழி போட்டவன்டா’’ – இது பாலசந்தர்


‘’என் இனிய தமிழ்மக்களே’’ – இது பாரதிராஜா


அறுபது வயசுக்கு மேலான வயதுடைய ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதும் அதற்கு ரசிகர்கள் விசில் அடிப்பதும் தமிழ்நாட்டிற்கு புதிதில்லை. ஆனால் 30 வயதுடையவர்களாக நடிப்பார்கள். இந்த படத்திலும் இரண்டு ஸ்டார்கள் திரையில் பஞ்சடிக்க தியேட்டரே அதகளமாகிறது. இருவரும் 60 வயது தாத்தாக்கள். தாத்தாக்களாகவே! (நோ கிராபிக்ஸ்)


ஒரு காங்கிரஸ் பெரியவரின் எகத்தாளம் , ஒரு கம்யூனிஸ்ட் பெரியவரின் வரட்டுத்தனமான கொள்கைகள் மற்றும் பிடிவாதம், அதனால் 40 வருடமாய் டூ விட்டுக்கொண்டு திரியும் இரண்டு குடும்பம். அந்த வீட்டின் குழந்தைகளுக்கும் கூட காழ்ப்புணர்ச்சி. கடுப்புடன் திரிகின்றன. ( பூவே உனக்காக கதை போல் இருந்தால் மன்னிக்கவும் இது ரெட்டச்சுழி படத்தின் கதை ) . நீங்கள் எதிர்பார்பத்தது போலவே இரண்டு குடும்பத்திலிருந்தும் தலா ஒரு பெண்ணும் தலா ஒரு பையனும் காதலிக்கின்றனர். (நீங்கள் எதிர்பார்ப்பது போலவே இரண்டு பெரிசுங்களும் முட்டிக்குது). காதலால் கசிந்துருகி வாடும் காதலர்களை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே குழந்தைகள் ஒன்று சேர்க்கின்றனர். கதைய சொல்லிட்டேனோ! எல்லோருக்கும் தெரிந்த கதையை சொல்லி ஸ்பாய்லர்ஸ் போடுவதில் தவறில்லை.


படத்தின் திரைக்கதையும் வசனமும்தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ். குழந்தைகள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றனர். கொஞ்சம் கூட சளைக்காமல் அனைவரையும் கேலி கிண்டல்களால் காலியாக்குகின்றனர். குழந்தைகளின் விளையாட்டையும் சேட்டைகளையும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கு சலிப்பை தருமானால் இது உங்களுக்கான படம் கிடையாது. பாரதிராஜாவுக்கும் பாலசந்தருக்குமான ஏட்டிக்கு போட்டிகள் மிக மிக குறைந்த அளவே படத்தை நிரப்புகிறது. அதை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். படத்தில் அஞ்சலியும் புதுமுக நடிகருக்குமான காதல் காட்சிகள் அவர்களுடைய தமாசான பிளாஸ்பேக்கையும் குறைத்திருக்கலாம்.


இமயமும் சிகரமும் இணைந்து நடித்திருந்தாலும் சிகரத்தை விட இமயம் அந்தர் செய்கிறது. ஸ்கிரீன் பிரசன்ஸில் அள்ளுகிறார் பாரதிராஜா. முதல்மரியாதை சிவாஜியின் உடல்மொழியை நினைவூட்டினாலும் அருமையாக நடித்திருக்கிறார். பாலசந்தருக்கு கௌரவம் ரஜினிகாந்தை காமெடியாக்கும் வேடம். அவருடைய மீசையும் எகத்தாளமும் , 2011 நாமதாண்டா என்கிற ஸ்டைலும் நன்றாக இருக்கிறது. மற்றபடி அஞ்சலி கற்றது தமிழ்,அங்காடித்தெரு படங்களில் நடித்தது போலவே நடிக்கிறார். நோ கவர்ச்சி. அதற்கே சல்யூட் வைக்கலாம்.


குழந்தைகள் எல்லாமே பார்க்க பார்க்க ரசித்துக்கொண்டேயிருக்கலாம். அத்தனையும் முத்துக்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வித பாத்திரப்படைப்பு , இயக்குனர் தாமிரா பிடியுங்கள் பூச்செண்டை. அதிலும் குஷ்பு என்கிற பெயரோடு வரும் குழந்தையின் உடல்மொழியும் அதற்கேற்ப குஷ்பூ வாயமூடு வசனங்களும் தியேட்டர் அதிருகிறது. தோழர் என்கிற வார்த்தையை வைத்து படம் நெடுக செய்யும் காமெடி கலாட்டா கம்யூனிஸ்டுகளுக்கும் சிரிப்பை மூட்டலாம். (கம்யூனிஸ்டுகள் கேலிகிண்டல்களுக்கு பெயர் போனவர்கள் , அவர்களை வைத்தும் அருமையாக காமெடி செய்ய முடியும் என நான் நிரம்ப நம்புபவன், இந்த படத்தில் அந்த பூர்ஷ்வாத்தனம் சாத்தியமாகியிருக்கிறது, பாவம் காம்ரேட்ஸ் , ஆட்சியில் இல்லாவிட்டாலும் குறையாத காங்கிரஸ்த்தனமான எகத்தாளத்தையும் நன்றாக காமெடித்திருக்கிறார்)


மற்றபடி தாத்தா நீ செத்து போயிரு , அவங்க நல்லபடியா வாழட்டும் மாதிரியான குழந்தைகளின் வசனங்களுக்காக (நிறைய வசனங்கள் அப்படித்தான் ) படத்துக்கு ஏ சர்ட்பிகேட் கொடுத்திருக்கலாம். படத்தின் இசை கார்த்திக் ராஜாவாம். லோக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்களில் செம குத்து குத்தியிருக்கிறார். பாடல்கள் சுமார்தான். பிண்ணனி நல்ல வேகம். சில இடங்களில் இளையராஜா! . செழியனின் கேமரா கவிதையாக படம் பிடித்திருக்கிறது.


தவிர்க்க்கூடிய எத்தனையோ படங்களுக்கு நடுவில் ,ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் இரண்டரை மணிநேரம் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் பொழுதுபோக்க ஒரு ஃபீல்குட் படம்.

23 April 2010

ஆயிரம் மரங்களின் நகரம்"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "


-ஒரு செவ்விந்தியப்பாடல்
சார் உங்களுக்கு எந்த ஊரு என யார் கேட்டாலும் கோவை என்று பெருமையாக சொல்வேன். அட கோயம்புத்தூரா! சூப்பர் கிளைமேட்டா இருக்குமே சார், நீங்கள்ல்லாம் குடுத்து வச்சவங்க, நானும் வந்திருக்கேன் அப்படியே குளுகுளுனு இருக்கும் என்கிற பதிலையும் இதுவரை ஆயிரக்கணக்கான முறையாவது கேட்டிருப்பேன். உண்மையிலேயே கோவையில் பிறக்க நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனை வெயிலடித்தாலும் ஏசி அறைக்குள் இருப்பது போன்ற உணர்வை அது ஒரு நாளும் வழங்காமல் இருந்ததில்லை. மொட்டை வெயிலில் கிரிக்கெட் ஆடிய நாட்களிலெல்லாம் தண்ணீர் கூட தேவைப்படாது.. எவ்வளவு நேரம் விளையாடினாலும். அதிகம் வியர்க்காது..


அப்படிப்பட்ட கோவையில் இந்த முறை கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வீட்டிற்குள் உட்கார முடியவில்லை , வீட்டை விட்டு வெளியே வந்தால் மொட்டை வெயில் மூஞ்சை கருக்குகிறது. சென்னையை விட மோசமான வெயில். குளோபல் வார்மிங்கும் இன்னபிற வானிலை மாற்ற காரண சப்பைக்கட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் , கோவையை குளிர்வித்த மரங்கள் தற்போது அதிக அளவில் மிஸ்ஸிங்! அதை கோவையை பல ஆண்டுகள் வலம் வந்த யாரும் உடனடியாக ஒப்புக்கொள்வார்கள். கோவைக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இந்த ஆண்டு வெப்பத்தின் அளவு. இது அவர்களுக்கு மிகமிக புதுசு. சென்னை வாசிகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மண்டைக்குள் துளைபோடும் வெயில் அது.


கோவையின் முக்கிய சாலையான அவினாசி ரோட்டில் பல கிலோ மீட்டர்கள் நடந்தே கடந்திருக்கிறேன். சென்ற முறை ஊருக்கு சென்ற போது அரை கிலோமீட்டர் கூட பைக்கில் போக முடியவில்லை. வெயில் வாட்டுகிறது. அதற்கு 233 காரணங்கள் உண்டு. கடந்த வருடம் அவினாசி ரோட்டினை அகலமாக்கும் பணிகளில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 233. அத்தனையும் 60 வயதை கடந்தவை. அவினாசி ரோட்டில் எத்தனை தூரம் சென்றாலும் உணராத வெப்பத்தை அரை கிலோமீட்டரில் இப்போதெல்லாம் உணர முடிகிறது.


இதோ வந்துவிட்டது.. யார் பெருமைக்கோ யார் திருப்திக்கோ யாருடைய மகிழ்ச்சிக்கோ கோவைக்கும் அதன் மக்களுக்கும் துளியும் மகிழ்ச்சியளிக்காத தமிழ் செம்மொழி மாநாடு. அதற்காக கோவையில் நடைபெறும் கூத்துகள் ஆயிரமாயிரம். வளர்ச்சிப்பணிகள் என்கிற பெயரில் அவசரகதியில் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் மண்ணுக்கு நாளொரு பில்டிங் பொழுதொரு ஃப்ளோர் என புதைந்து கொண்டிருக்கிறது. இது மாதிரி சில்வண்டித்தனமான வளர்ச்சிப்பணிகளின் அதிமுக்கியமான ஒன்று மரம் வெட்டும் வைபங்கள். இது வரை இந்த மாநாட்டுக்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? அதிகம் யோசிக்க வேண்டாம்.. ஆயிரம்தான். திருச்சி ரோடு ஹைவேஸுடன் இணையும் பகுதி வரையுமான 6.2 கி.மீ தூர சாலையை அகலமாக்க வெட்டப்பட்ட மரங்கள் 220. அவை முழுமையாக வளர்ந்த 50 வயதுக்கும் மேற்பட்ட மரங்கள்.


அடுத்து ஊட்டிக்கு செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டுள்ளன. எண்ணிக்கை 636. விமான நிலையத்திற்கு வெளியே 20 மரங்கள். என அடுத்த ஜூனுக்குள் கோவை முழுமையாக மொட்டையடிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டு தங்கத்தில் இரண்டு கடுக்கன்களும் குத்தப்படும் என்றே நம்புகிறோம்.


இது குறித்து கோவை கலெக்டர் பி.உமாநாத் என்ன சொல்கிறார் ‘’சாலை அலைன்மென்ட்டுக்கு ஒத்து வந்தா ஒருபக்கத்துல இருக்கற மரத்தை மட்டும் வெட்டுங்கனு சொல்லிருக்கோம்.. இன்னொரு பக்கத்து மரத்தை விட்டுடவும் சொல்லிருக்கோம்’’ . அவரைப்பற்றியோ அவரது அறிக்கைகப்பற்றியோ அதிகமாக பேசமுடியாது.
அரசு அதிகாரி ஒருவரோ ‘’நாங்க வெட்டும் இடத்திலெல்லாம் புதிய மரங்கள் நட உத்தரவிட்டிருக்கிறோம், சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருக்குங்க நகர்ப்புற வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுறது தப்பில்லைனு’’ என்கிறார். ஆனால் புதிதாக இதுவரை ஒரு மரம் கூடநடப்பட வில்லை என்பதே நிதர்சமான உண்மை. வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் ஒன்றும் அவசர கதியில் வளர்க்கப்படும் வெளிநாட்டு மரங்கள் (பெயர்கள் தெரியவில்லை , ஆனால் வைத்து ஒன்றிரண்டு ஆண்டுகளில் பெரிதாகிவிடக்கூடியவை) எந்த வகையில் ஈடுசெய்யமுடியும் என்பதும் தெரியவில்லை..


மக்கள் தொகைப்பெருக்கத்தையும் , நகரத்தின் வளர்ச்சியாலும்தான் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நீங்க நினைத்தால் , நிச்சயமாக இல்லை. செம்மொழி மாநாட்டுக்காகத்தான் இந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. அதைதான் அரசும் அரசு நிறுவனங்களும் சொல்கின்றன. செம்மொழியாம் தமிழுக்காக மட்டுமே!


ஊருக்கு சென்றிருந்த போது நண்பன் வீட்டருகிலிருக்கும் பெரிய வளர்ந்த ஆலமரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள். அதில் எப்போதோ நண்பர்களோடு விளையாடியதெல்லாம் நினைவு வந்தது. ஒரு சில இளைஞர்கள் அந்த மரத்தை வெட்டுவதை எதிர்த்து மரத்தின் மீதேறி நின்று (அவ்வளவு பெரிய மரம்! ) தர்ணா போராட்டம் செய்து கொண்டிருந்தனர். காவல்துறையின் அனுமதியோடு அந்த ஆலமரம் முழுமையாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. பாவம் தனியார் கான்டிராக்டர்கள் அந்த இளைஞர்களோடு எவ்வளவு நேரம்தான் மல்லுக்கட்டுவார்கள்.


இனி கோவை குளிர்ந்திருக்குமாவென்று தெரியவில்லை. இனி கோவையை குளிர்ச்சி நகரம் என மக்களால் அழைக்கப்படுமா தெரியவில்லை. மக்கள் வயிறெரிந்து கிடக்கிறார்கள். செம்மொழி மாநாடு சில நாட்களில் முடிந்து விடும். அந்த சில நாள் கூத்துகளுக்காக மழிக்கப்பட்ட கோவை பல வருடங்கள் வெயிலில் வாடும்.

22 April 2010

ஆலப்புலவாயனார் சிரிதம் - என் கவிதைகளுக்கு காமெடி என்று பெயர் வைஆலப்புலவாயனாரும் தன்னை ஒரு கவிஞனா நிலை நாட்டிக்க ஏதேதோ செஞ்சும் ஒன்னும் பிரயோசனமில்ல. இலக்கிய கூட்டத்துக்கு போனாரு இந்தாள பார்த்தாலே நமட்டுத்தனமா சிரிச்சு குமட்டுல குத்தி விரட்டு விட்டாய்ங்க. சொந்த செலவுல கவிதை தொகுப்பு போட்டு, யாரைப் பார்த்தாலும் அதைக் குடுத்து டார்ச்சர் பண்ணி படிக்க வச்சு இலவசமாக குடும்பக்கட்டுப்பாடு பண்ணி கொலை பண்ணி மக்கள் தொகைய குறைச்சும் பார்த்தாச்சு பலனில்ல.. விகடன் குமுதம்னு எல்லா பத்திரிக்கைலயும் ஆளப்புடிச்சு காலப்புடிச்சு பூ... பூ... பூ மாதிரி தேன் மாதிரி கவிதை எழுதி அனுப்பியும் பார்த்தாச்சு ஒன்னும் நடக்கல.. என்ன காரணம்?

ஏன்னா அவரு நடந்தா அதிரடி எழுதினா சரவெடி எழுதினதுக்கப்பறம் ஒசாமா , ஒபாமா, மன்மோகன்சிங், ராஜபக்சே லெவல்லருந்து நெருக்கடி! தயவு செஞ்சு இனிமே கவிதை எழுதி எங்க ஆயுத மார்க்கெட்ட அழிச்சிராதீங்கனு! அப்படிப்பட்ட நம்ம கவிஞ்சரு கொஞ்ச நாள் அமைதியா ஐஸ்லாந்து எரிமலை 'அயாபியா பிளாயர் குத்துல்' மாதிரி யார் பேச்சுக்கும் போகாம அமைதியாதான் இருந்தாரு! காலைல எழுந்திருச்சு கண்ணாடி பார்த்து கவிதை சொல்லுவாரு.. லைட்டா கேர்ரா இருக்கும்.. யாரோ தூக்கிப்போட்டு மிதிச்ச மாதிரி இருந்தாலும் தாங்கிப்பாரு. இப்படி ஒரு அப்பிராணி வாழ்க்கை வாழ்ந்திட்டு இருந்தவர இந்த பெண்ணாதிக்க சமூகம் சும்மா விட்டுச்சா..

வீட்டுக்கு போனா பொண்டாட்டி தொல்ல , ரோட்டுக்கு போனா லேடி கான்ஸ்டபிள் தொல்ல, ஆபீஸ் போன மேலதிகாரி ( லேடீஸ் ) தொல்ல , எங்க பார்த்தாலும் பெண்கள் ஆதிக்கம்.. ஆட்டோலருந்து விமானம் வரைக்கும் எல்லாமே அவங்கள ஓட்டறாங்க... அட போரடிக்குதேனு தியேட்டருக்குப் போனா அங்கயும் நயன்தாரா நமீதா தொல்ல.. டிவிய போட்டா ஜட்ஜூங்க தொல்ல...

இதையெல்லாம் பார்த்து கடுப்பாகி காண்டாகி ஓடினாரு.. ஓடினாரு.. ஓடினாரு தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி லெஃப் எடுத்து அடுத்த சின்ன சிக்னல் ரைட் எடுத்து ஓடினாரு அங்க ஏற்கனவே வசனம் எழுதுற கவிஞரோட ஆபிஸ் இருந்ததால திரும்பி வந்துட்டாரு.. (பெரியவர் பாவம் பொல்லாதது , இவரு எங்கயாச்சும் கவிதை பாடி அவரு உயிருக்கே உலை வச்சிட்டா , இல்லாட்டி அவரு முரசொலில எதிர்கவித போட்டுட்டா உடன்பிறப்புகளின் உயிருக்கு யார் பொறுப்பு!)

இருந்தாலும் தமிழ்நாடே முன்னால சைட்ல நடுவுல எல்லா திசைலருந்தும் திரும்பிபார்த்தாலும் பின்னால பாக்கற பின்னவீனத்துவ கவிஞரா டெவலப் ஆகணும்னு வெறி வந்துடுச்சு. முன்னவீனத்துவமே முக்குது.. இதுல பின்னவீனத்துவம் ஒரு கேடானு பொண்டாட்டி திட்டினாலும்.. பெண்ணாதிக்கம் நைட்டானா குப்புற போட்டு குமட்டுல மிதிச்சுகிட்டுருந்துச்சே.... அதை எதிர்க்க வேண்டாமா?

இதுமாதிரி இக்கட்டான உடற்கட்டோடதான் ஒரு முடிவுக்கு வந்தாரு ஆ.பு.வாயனார். அந்த முடிவ கேட்டு அவரு வீட்டு மாடு , எருமை, பன்னிக்குட்டி பக்கத்துவீட்டு ஆயா மொதக்கொண்டு தற்கொலை முயற்சி பண்ணிக்கிட்டாங்களாம். ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பி பாக்கறமாதிரி இருந்துச்சு தட் முடிவு? யெஸ் ஆ.பு.வாயனார் இனிமே கோணி , தறி, குலை இல்லாம கவிதை எழுதறதில்லனு முடிவு பண்ணிட்டாரு.. பின்னவீனத்துவ சாகரத்துல குதிச்சிட்டாரு. அதுக்கு முன்னால பின்னவீனத்துவமா வாழணும்னு முடிவுபண்ணாரு. பொங்கி எழுந்தாரு.. சாரி எழுந்ததும் பொங்கினாரு (பின்னவீனத்துவம் டச்)

அதுக்கொசரம் சில எழுத்தாளர்கள் காலைலருந்து சாயங்காலம் வரைக்கும் என்ன பண்றாங்கனு நேரடியா பார்த்து அப்சர்வ் பண்ண முடிவு பண்ணாரு.
(இவரு முடிவு பண்றதுக்கு ஒரு முடிவே கிடையாது மக்களே! ஆனா முடிவு பண்ணிட்டாரு அவரு பேச்ச அவரு வீட்டு பசு மாடு, தெரு நாய் மற்றும் பல உறவினர்கள் மொதக்கொண்டு யாரும் கேக்கமாட்டங்க! இருந்தாலும் நாங்க முடிவெடுப்போம்!).
ஆனா எந்த எழுத்தாளர்கள் வீட்டு பக்கத்துல போனாலும் அடிச்சு விரட்டி விட்டுட்டாய்ங்க.. இவர பத்தின செய்தி பறவை காய்ச்சல் பீதி மாதிரி ஏற்கனவே எழுத்து வட்டாரத்துல ரொம்ப பேமஸ். அதனால அவராவே பின்னவீனத்துவ இதுவா டெவலப் ஆகறதா முடிவு பண்ணாரு..!

அதுக்கு முத்தாய்ப்பா ஒரு கவிதை எழுதினாரு.. அந்தக்கவிதைய அவருக்குத் தெரிஞ்ச விகடன் குமுதம் குங்குமம்க்குலாம் அனுப்பியும் வச்சாரு.. எல்லாரும் அதை திருப்பி அனுப்பும் போது கூடவே 500 ரூவா பணமும் வச்சு, கடவுளே இனிமே கவிதை கிவிதைனு எதையாவது எழுதி அனுப்பிராதீங்க நாங்கல்லாம் புள்ளகுட்டி காரங்க என்று கடிதமும் வச்சி அனுப்பினாங்க! நம்ம வாய்க்கால்பட்டி வரதுவும் பெரிய பீனா கனாதான் அவனிடம் யோசனை கேட்டார். அவனோ அட வெளங்காத பயலே அதுக்குத்தான் பிஞ்சு , சிறிசு , உரசுனு நிறைய பத்திரிக்கை இருக்கே அங்கே அனுப்பறதுதான்னான். ‘’அடப்பாவி நான் எழுதிருக்கறது ரொம்ப மோசமான இலக்கியம்’’ ‘’அதனாலதான் நான் அங்க அனுப்ப சொன்னேனு சொன்னான்’’ அடப்பாவி நான் சொன்னது சீரியஸ் லிட்ரேச்சர்டா!
ஒருவழியாக இவனுக்கு ஏற்றமாதிரி ஒரு சிறுபத்திரிக்கையையும் கண்டுகொண்டார். அந்தாளு ஒரு பரம ஏழை. அவரு அந்த பத்திரிக்கை நடத்தறதே ஆ.பு மாதிரி ஆட்களுக்கு ஆப்படிக்கத்தான். ஒரு கவிதைக்கு ஆயிரம் ரூபாய்னு வாங்கிட்டு அவரோட கவிதைய வெளியிட்டாரு. அந்த கவிதை முழுக்க ஒரே கோணி,குலை,தறினு குறிகெட்டுப் போய் இருந்துச்சு..

அவர் ப்ளான் பழிக்க ஆரம்பிச்சதே அப்பருந்துதான்!. எதை நினைச்சு அந்த கவிதைய எழுதுனாரோ அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரியே அகில இந்திய கோணிபையில் குப்பை பொறுக்குவோர் சங்கத்துலருந்து போலீஸ்ல புகார் குடுக்கப்போறாங்கனு எதிர்பார்த்தாரு! நடக்கல. இலக்கிய வட்டாரத்துலயும் அப்படி ஏதும் யாரும் இந்த கவிதைய பத்தி புலங்காகிதப்படறதாவும் தெரியல..

ஆ.பு மனம் தளரல. அவரு கண்ணீர் வடிச்சிகிட்டே இன்னொரு கவிதை எழுதினாரு. இந்த வாட்டி நிறைய கோணி நிறைய தறி நிறைய குலை.. அந்த கவிதையோட சாம்பிள் வரிகள் சில

தறிகள் எல்லாம் கோணிகளை நோக்கி திரும்புவதில்லை
கோணிகளும் தறிகளும் எப்போதும் முட்டிக்கொள்வதுமில்லை
முட்டிக்கொண்டால் ஒன்றொடொன்று சிக்கிக்கொள்கின்றன
விடுவிப்பதற்குள் குலை நடுங்கிவிடும்
கோணிக்குள் தறியோ தறிக்குள் கோணியோ
எதற்குள் எது இருந்தாலும்
குலை நடுங்கிவிடும் சோனிக்கு
கோணிகள் கோணிகளாக இருக்கிறது
தறிகள் தறிகெட்டு திரிகின்றன!

மேலே இருக்குற கவிதைபாதிதான். இப்படி கவிதை எழுதிவிட்டு உக்காந்து கனவு காண ஆரம்பிச்சாரு..

கனவு ஸ்டார்ட்ஸ் ஹியர் ------->

ஒட்டுமொத்தமாக தறிகளையெல்லாம் தறிகெட்டு திரிவதாக எழுதியதால் அகில உலக தறித்திறன் அளவுக்கதிகமாக வேலை செய்வோர் சங்கம் அதனை எதிர்த்தது. தறித்திறன் சங்கமும் கோணிப்பை சங்கமும் ஒரே கவிதையை எதிர்ப்பது உலகத்திற்கே புதுசு.
இதனால் தூங்கி எழுந்தால் கூட்டம் போடும் சங்கம் இந்த இருவரையும் கண்டித்து அல்லது இதில் ஒரு அமைப்பை கண்டித்து கூட்டம் நடத்தியது. இன்பிட்வீன் நம்ம கவிஞரு கடுமையா ஃபேமஸ் ஆகிட்டாரு.. ஆனா பின்னவீனத்துவமா இல்ல.. அது அவருக்கு பெரிய வருத்தம். எல்லாரும் அவரப்பார்த்து நீங்க ஒரு புர்ச்சி கவிஞ்சருனு சொன்னாங்க.. இல்ல இல்ல நான் பெண்ணாதிக்கத்துக்கு எதிரான கவிஞ்சருன்னாரு நம்மாளு..

இப்பிடியாக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அருமையான வேளையிலே ஆ.பு.வாயனாருக்கு பல புத்தகங்கள் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது. பல கூட்டங்களில் தலைமை தாங்க அழைத்தனர். வளர்ச்சி எக்குத்தப்பா போய்கிட்டு இருந்ந்துச்சு.. ஒரு நாள் திடீர்னு பின் கலைஞருக்கு ஆலப்புலவாயனார் சிறப்பு விருது வழங்கப்பட்டது. (விருதை கலைஞர் அவருக்கே அவரே கொடுத்துக்கொண்டார் ). ஆலப்புலவாயனார் வாயை பிழந்து கொண்டு ஆவென பார்த்து கொண்டிருந்தார். கூட்டத்தில் அனைவரும் ஆ.புவை விட்டுவிட்டு கலைஞரை பாராட்டினர்.

கடுப்பான ஆ.பு தனிக்கட்சி தொடங்கினார். வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களை விற்று ஒருவழியாக முதல்வாரானார்.. அதற்கு பிறகு சினிமாவில் நடித்து ஹீரோவாகி சூப்பர் ஸ்டார் ஆனார். (பினா வானா கவிஞர் என்றால் எல்லாம ரிவர்ஸ்தான் )


------------->கனவு என்ட்ஸ் ஹியர்!

இப்படிலாம் கனவு கண்டுகிட்டு காவாலித்தனமாதான் திரிஞ்சுகிட்டிருந்தாரு நம்மாளு.. ஆனா நடந்ததே வேற, இவரு கவிதைக்கு எந்த ரியாக்சனும் இல்ல.. யாருமே கண்டுக்கல.. மனசு வெறுத்துட்டாரு.. பேனாவ தூக்கி வீசிட்டாரு.. மறுபடியும் எரிமலை உறங்க போயிருச்சு.. அவரோட கனவுகள் சிதஞ்சிருச்சு
இத்தோட இந்த கதை முடியுது.. அப்படினு எழுத ஆசதான்.. ஆனா என்ன செய்ய அதுக்கப்பறமும் ஆ.பு .வாவுக்கு வாய்ல கண்டமாச்சே..

அவரெழுதின கவிதைய அவரு பொண்டாட்டி எப்படியோ படிச்சிருச்சு.( அதுப்பின்னால அந்நிய நாட்டு ஐஎஸ்ஐ ஈஎஸ்ஐ புருஸ்லீ சீன உளவாளிகள்னு பல பேர் சதி இருந்திருக்கலாம் )

அப்புறமென்ன ஏன்ங்க இந்த கோணினா என்ன தறினா என்ன குலைனா என்னானு கேட்டுச்சு.. ஆ.பு.வாயனாரு அப்படியே அகமகிழ்ந்து போயி தன் வாயால தனக்கே ஆப்பு வச்சுகிட்டாரு.. இவரு குடுத்த வெளக்கத்தையெல்லாம் கேட்டாங்க அவரு பொண்டாட்டி.. அப்புறமென்ன ஆ.பு.வாயனாருக்கு தீபாவளி.. தீபாவளி.. தீ..பா..வ..ளி.. அதுக்கப்பறம்.. என்னாச்சுன்னா... அது என்னவா வேணா இருக்கட்டும்..

யாராவது பாவப்பட்ட கவிஞர் அடிவாங்கின கதைனா ரொம்ப சந்தோசமா படிப்பீங்களே.. அதுவும் ரசிச்சு ரசிச்சு.. போங்க போங்க புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க..

21 April 2010

கவிஞர் ஆலப்புலவாயனாரும் அரைபாட்டில் விஷமும்!
'' கவிதைனா என்னனு தெரியுமாடே ஒனக்கு.. கவித்துவம்னா தெரியுமா ஒனக்கு.. நீ சிற்றிலக்கியத்துல சாதனை பண்ண கவிஞர் ஏரிவாய்க்கால்பட்டி எருமைதாசன் எழுதின கவிதை தொகுப்பு படிச்சிருக்கியா.. அவருதான்யா ஏரிவாய்க்கால் பட்டி வட்டார மொழிவழக்குக்கு பிதாமகனே... அதுவாவது பரவால்ல ரஷ்யகவிஞர் ரப்னோஸ்கி கிலிலிபோனியோவாவது தெரியுமா.. ரஷ்ய வட்டார வழக்குல பெரிய இவருயா! தம்பி உங்களுக்கு ஆர்வம் இருக்கற அளவுக்கு இலக்கிய அறிவு கிடையாது இன்னும் வளரணும் தம்பீ''

உங்க கவிதைய கொண்டுபோய் அந்தாளுகிட்ட காட்டினா அப்படித்தான் சொல்லுவாரு. ரொம்ப நல்லவரு. கவிதையின் உள்ளடக்கம் பொருளடக்கம் நடு அடக்கம்னு பேச ஆரம்பிச்சாருனா நம்மல அடக்கம் பண்ற அளவுக்கு பேசுவாரு நம்ம பின்னவீன முன்னவீன அதிநவீன கட்டணமுறைக் கவிஞர் ஆலபுலவாயனார். பெயர் காரணம்லாம் கேக்காதீங்க அது ஏற்கனவே சொல்லியாச்சு. பிரபல கவிஞர்கள பத்தி யாராச்சும் பேசினாப் போதும் ஓஓ அவனா நானும் அவனும் ஒரே தட்டுல தின்னு ஒரே பாத்ரூம்ல குளிச்சவங்கன்ற ரேஞ்சுல கும்மியடிப்பாரு. மெய்யாலுமே இந்தாள அந்த கவிஞருக்கு யாருனே தெரியாதாருக்கும். தெரிஞ்சாலும் கெட்ட வார்த்தைலதான் திட்டுவாங்களாருக்கும்.

எங்க எலக்கிய கூட்டம் நடந்தாலும் மேடையில முன் வரிசைல மொத ஆளா துண்டுப் போட்டு எச்சிதுப்பி எடம் புடிச்சு உக்காந்துக்குவாரு. அங்க வர பெரிய மனுஷாள்கிட்ட பேசற மாதிரி போட்டோ எடுத்துகிட்டு வீட்டில அவரவிட பெரிசா அதை ப்ரேம் போட்டு மாட்டிவச்சுக்குவாரு.

நான்கூட மொதல்ல அந்தாளு ஏதோ பெரிய கவிஞரு போலனு நினைச்சு ஒரு கடைல போய்
'பிரபல' கவிஞர் ஆலப்புலவாயனார் கவிதைத்தொகுப்பு இருக்கானு கேட்டேன். பேந்த பேந்த முழிச்சிட்டு பிம்பிளிக்கி பிளாப்பினு சொல்லி லூசு மாதிரி சிரிச்சான். அடப்பாவிங்களா பேரச்சொன்னதுக்கே இப்படி ஆகிட்டானேனு யோவ் தமிழ்ல சொல்லுய்யான்னா கேட்டா சார் நீங்க என்ன மென்டலானு கேட்டான். அப்ப எனக்கு புரியல அதுக்கான அர்த்தம்.

அப்புறம்தான் தெரிஞ்சுது இந்தாளு பேரச்சொன்னா இலக்கிய வட்டத்துல நம்மள லூசுனு நினைப்பாங்கனு. ஆனாலும் விடாப்பிடியா எங்கயாச்சும் யாராச்சும் இலக்கியம்னு சொல்லி டீக்கடைல கூட்டமா நின்னாக்கூட அதுல கலந்துகிட்டு தன்னோட குஞ்சாணி என்கிற சிறுபத்திரிக்கைல போட்டு , அங்க டீ ல சக்கரை கம்மினு கண்டன தலையங்கம் கூட போடுவாரு. எல்லாமே சொந்த காசு அவரப்பா விவசாயம் பண்ணி சம்பாதிச்ச காசு. ஏன்யா சொந்த காச இப்படி வீணாக்குறீங்கனு கேட்டா... தம்பீ பாரு இன்னும் இருபது வருஷம் கழிச்சு தமிழ் இலக்கியம்னாலே அது ஆ.பு.வாயனார்தானு பேசுவாய்ங்க.. இதெல்லாம் இலக்கியத்துக்கு நாம செய்யற சேவப்பா உன்ன மாதிரி இலக்கியம் தெரியாத பயலுகளுக்குலாம் தெரியாது..

விகடன் குமுதம் கல்கி கல்கண்டு ஆனந்தசினிமா மங்கையர்மலர் மஞ்சள் சிவப்பு கருப்பு புளிப்பு அது இது லொட்டு லொசுக்கு எல்லா பத்திரிக்கைலயும் அண்ணனுக்கு ஆளிருக்கு. என்ன இந்தாள பாத்தாதான் அவன் அவன் டெரராவான். அப்படி இப்படினு பிரபல பத்திரிக்கைல வாராவாரம் வரமாதிரி ஒரு தொடருக்கு வாய்ப்பு வாங்கி நானும் கவிஞன்டானு உலகம் அறிஞ்ச கவிஞ்சர் ஆகிட்டாரு. ஆனாலும் நாளு வாரம் நாளே வாரம்தான்.. தொடர் அறிவிக்கப்படாம நின்னு போச்சு.

ஆனா நம்ம சிங்கம் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலனுதான சொல்லும்.. யாராச்சும் கேட்டா.. ''இலக்கிய பணிகளுக்கு நடுவுல ஜனரஞ்சக பத்திரிக்கைல எழுத ரொம்ப நேரம் செலவாகுது அதுமில்லாம நான் கொஞ்ச நாள் ஓய்வெடுக்கலாம்னு நினைச்சு முடியாதுனுட்டேன் சார்''னு சீன் போடும்.

அப்படி இருக்கும் போது அந்தாளு வாழ்க்கைலயும் வசந்தம் வீசுச்சு. வசந்தா வடிவத்தில. வசந்தா அவரோட வேலைப்பாக்கற பொண்ணு. ரொம்ப அழகா அம்சமா இருக்கும்.அதுக்கு நம்ம ஆலபுல மேல ஒரு கண்ணு. ஒரு நா வந்து சார் ஐ லவ் யூனு சொல்லிருச்சு. உடனே நம்ம ஆலுவுக்கு மூக்குக்கு மேல கோவம் வந்துருச்சு. ஒரு கவிஞன்கிட்ட காதல இப்படித்தான் வாயில சொல்லுவாங்களானு எகிற ஆரம்பிச்சிருச்சு. அந்தம்மா மிரண்டு போய் அந்த கம்பெனிய விட்டுல்ல ஊரே விட்டே ஓடிருச்சு. உடனே ரொம்ப சோகமா இப்படி ஒரு கவிதை எழுதினாரு ஆ.பு.வாயனார். அவருக்கு கானாக்கு கானா புனாக்கு புனானா ரொம்ப புடிக்கும் .

ஒரு சாம்பிள் கவிதை போடலாம்னு ஆசைதான் .. அத படிச்சு உங்களுக்கு வாந்தி , சீதபேதி , கக்குவான் இருமால் இப்படி பல வியாதி வந்து நீங்க செத்துப்போயிட்டா.. சோ நோ கவிதை.

ஒரு கவிதைய எழுதி  இந்த பொண்ணுக்கு ஒரு கவர்ல போட்டு ஊருக்கு கொரியர்ல அனுப்பினாரு. உடனே அந்த பொண்ணு ஊரிலருந்து போலிஸ கூட்டிட்டு வந்து இந்தாளு என்ன கொலை பண்ண முயற்சி பண்றாருனு கேஸ் போட்டிருச்சு. இரண்டு மணிநேரம் இந்தாள லாக்கப்புல வச்சதுக்கே இரண்டு மூணு லாக்கப் மர்டர் ஆகிப்போச்சுனு கேள்வி . அப்புறம் தன்னோட இலக்கிய அந்தஸ்த வச்சு ரிலீஸ் ஆகி வெளிய வந்து ''  சிறையறை கழிவறைகள் ''னு இரண்டாயிரத்து சொச்சம் பக்கத்துல ஒரு நாவல் எழுதி எழுதி எழுதி முடிச்சிட்டாரு.

அந்த நாவல எழுதினதிலருந்து அடுத்த ஜெமோ நான்தான் அடுத்த எஸ்.ரா நான்தான்டானு (அடுத்த சாரு நான்தான்டானு நல்ல வேளை சொல்லல) ஊருக்குலாம் லெட்டர் போட்டு கூவினாரு அவரு. ஆனாலும் யாரும் பெரிசா கண்டுக்கல. அப்பதான் ஒரு நாள் நான் வச்சிருக்கற பூச்சி மருந்து கடைக்கு வந்தாரு.

சார் என்னசார் கவித எழுதறத விட்டுட்டு விவசாயம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டீங்களானு கேட்டேன். அட நீ வேறயா சிறுபத்திரிக்கை நடத்தி பணம் போச்சு , கவிதை எழுதி மானம் போச்சு , நாவல் எழுதினேன் நாசமா போச்சு , எலக்கிய கூட்டத்துக்கு போய் மரியாதை போச்சு , பத்திரிக்கைல எழுதி எல்லாமே போச்சு அதான் விஷம் குடிச்சு சாகலாம்னு வந்தேன்னாரு..

நான் சிரிச்சுகிட்டே சொன்னேன் பிம்பிளிக்கி பிலாப்பினு..

யோவ் என்னய்யா என்ன பாத்தா லூசு மாதிரி இருக்கானு..கேட்டாரு

அட நீங்க வேற சார் இப்பலாம் சாவறதுக்கு விஷம் வேணும்னா யாரும் மருந்து வாங்கறதில்ல நேரா புக் சாப்புக்கு போய் உங்க கவிதை தொகுப்புதான் வாங்குறாய்ங்களான்னேன். விஷம் குடிச்சவன் கூட தப்பிச்சுடறானாம் உங்க கவிதைய படிச்சு இது வரைக்கும் யாரும் பொழச்சதே இல்லையாம்னு சொன்னேன்.

அப்ப என்னை கடுப்பாகி பாத்துட்டு போன மனுசன் அதுக்கப்புறம் உயிரோட இருக்காரா செத்தாரானு தெரியலை ஆனா நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்.

அந்த ஆலபுலவாயனார எங்கயாச்சும் பார்த்தா சொல்லுங்கப்பு.. இல்லாட்டி பாத்த இடத்திலயே கொன்னுருங்க இல்லாட்டி அடுத்த கவிதை தொகுப்ப போட்டு உலகத்த அழிச்சற போறாரு..!


&&&&&&&&&&&&&&

பின் குறிப்பு -  இந்த கதை(?)யில் வரும் பாத்திரங்களும் கரண்டிகளும் ஸ்பூன்களும் இன்ன பிற தட்டுமுட்டு சாமான்கள் யாவும் கற்பனையே.. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி உங்களை அது குறிப்பது போலிருந்தால் அது யதேச்சையானது. :-)

**********

இதன் தொடர்ச்சி அல்லது பார்ட் 2 - டுமாரோ

17 April 2010

உன்மத்தர்களின் உலகிலிருந்து...

மிக பாதுகாப்பான வசதியான சிறைச்சாலையில் எல்லா வசதிகளும் உண்டு. அதில் அடைக்கப்பட்ட கைதிகளான நம்மால் நிரம்பியது இவ்வுலகம். அது கட்டுப்பாடுகள் வரையறைகள் விதிகள் இத்யாதிகளால் எழும்பியது. அதைத் தாண்டி நீங்களும் நானும் சிந்திக்க எத்தனிக்கும் நொடிகளில், நசுக்கப்படுகிறோம். கட்டுப்பாடுகளை உடைத்தெறிய முயல்கிறவன் இங்கே மழுங்கடிக்கப்படுகிறான். புறந்தள்ளப்படுகிறான். எதையும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள வீட்டிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறோம். பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் , வேலைக்கு செல்லும் இடங்களிலும், சமூகக்கூடங்களிலும் கூட என நம்மைச்சுற்றி முழுக்கவே நடைபிணங்களைப்போல விரும்பியதை செய்ய முடியாமல் எதையோ தேடிக்கொண்டு அலையும் மனநிலை பிறழ்ந்தவனைப்போல் அலைகிறது. மாற்று விமர்சனங்களால் இவர்களுக்கு நடுவே முளைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் முற்றாக மண்கொண்டு மூடப்படும் என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் உண்டு.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த மனநல மருத்துவமனை. விதவிதமான நோயாளிகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். சிலர் தாமகவே அங்கே தங்களை இணைத்துக்கொண்டிருந்தனர். சிலர் சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். பயம் , கோபம், ஆத்திரம், அமைதி, வெறுப்பு, சிரிப்பு என உலகின் மனிதர்களுக்கு மட்டுமே உண்டான சகல குணங்களையும் கொண்ட நோயாளிகள் அங்கே நிறைந்திருந்தனர். மெக்மர்பி அன்றாடம் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் செல்பவன். வயது குறைந்த பெண்ணோடு உடலுறவில் ஈடுபட்டதாக கூறி மீண்டும் சிறையில் தள்ளப்படுகிறான். அவனுடைய பழைய குற்றங்களையும் எண்ணி அவனுடைய மனநலம் குறித்து பரிசோதிக்க அந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறான். ஆனால் அவனுக்கு எந்த மனநல குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை.

மருத்துவமனையில் மெக்மர்பி அனுமதிக்கப்படும் வார்டில் 18 நோயாளிகளும், அமைதியான , அதிக மௌனத்தையும் நோயாளிகளின் மேல் அதே அளவு அதிகாரத்தையும் கொண்ட நர்ஸ் ராட்செட்டும் இருக்கிறாள். மெக்மர்பி நோயாளிகளோடு நட்பு பாராட்டுகிறான். நோயாளிகள் அந்த மருத்துவமனையில் நடத்தப்படும் விதமும், குறிப்பிட்ட வரையறைக்குள் தங்களை வருத்திக்கொண்டு வாழ பழக்கப்படுத்தப்பட்டிருந்தனர். மருத்துவமனைக்கு வெளியே எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

குழுவாக அமர்ந்த நோயாளிகளுக்குத் தரப்படும் கவுன்சிலிங்கிலும் எதிர்த்துப்பேசுபவர்கள் மனதளவில் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். மெக்மர்பி இதையெல்லாம் பார்த்து கோபமடைகிறான். அவர்களோடு சீட்டு விளையாடுகிறான். அதனையும் தடை செய்கிறார் ராட்செட். சிகரட்டுக்காக கதறும் நோயாளி தண்டிக்கப்படுகிறார் . நடைபிணங்களாக அலையும் நோயாளிகளை தன்னுடைய மகிழ்ச்சியான நடவடிக்கைகளால் ஓரளவு வெளி உலகை உணரும் படிக்கு செய்கிறான் மர்பி.

ஒரு நாள் நோயாளிகளோடு ஒரு பள்ளிப்பேருந்தில் தப்பிச்சென்று கடலில் படகுப்பயணம் செய்துவிட்டு மருத்துவமனைக்கே திரும்புகிறான். நோயாளிகளுக்கு அது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அது அவர்களை குணமாக்குகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத ராட்செட் மருத்துவமனையில் பேசி மக்மர்பியோடு இன்னும் சிலருக்கு மின்சார சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக மெக்மர்பி நோயாளிகளோடு இது மாதிரியான சேட்டைகளில் ஈடுப்பட்டே வருகிறான். ஒரு நள்ளிரவில் இரண்டு பெண்களை மருத்துவமனைக்கு திருட்டுத்தனமாக வரவழைத்து நோயாளிகளோடு கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். வார்டு முழுக்கவே கந்தலாக கிடக்கும் காட்சியை காலையில் பணிக்கு வரும் ராட்செட் பார்க்கிறாள். அவளால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபமடைகிறாள். தாழ்வுமனப்பான்மையாலும் திக்கு வாய் பிரச்சனையாலும் பாதிக்கப்பட்ட பில்லி முந்தைய இரவில் மர்பி அழைத்து வந்த பெண்ணோடு ஒரு அறையில் படுத்திருக்கிறான். அவனை அழைத்து பேசுகிறாள் ராட்செட்.

அவன் முதல்முறையாக திக்காமல் பேசுகிறான். தன்னம்பிக்கையோடு பார்க்கிறான். அவனிடம் உன் அம்மாவிற்கு இது தெரிந்தால் அவர் என்ன நினைப்பார், உன் அம்மா என்னுடைய பால்ய சினேகிதி என்பது உனக்கு தெரியமல்லவா என்கிறாள். மீண்டும் திக்குகிறான். அவனால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அருகிலிருக்கும் அறைக்குள் ஓடி கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டு சாகிறான். மக்மர்பி கோபமடைந்து ராட்செட்டின் கழுத்தை நெரித்து கொள்ளப்பார்க்கிறான். ஆனால் அவள் தப்பிவிடுகிறாள். தலையில் தாக்கப்பட்ட மர்பி மயக்கமாகிறான்.

அடுத்த காட்சியில் மர்பி சீட்டு விளையாடுவதைப்போல மற்ற நோயாளிகள் விளையாடுகின்றனர். அதில் ஒருவன் மர்பி தப்பிவிட்டதாக கூறுகிறான். இன்னொருவனோ மர்பி மேல் மாடியில் இருப்பதாக கூறுகிறான். மர்பியின் நெருங்கிய நண்பன் உயரமான சீஃப் என்பவன் அமைதியாக இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறான். அன்றைக்கு இரவு மர்பி மீண்டும் அந்த வார்டிற்கு அழைத்து வரப்படுகிறான். சலனமில்லாமல் நடத்தி அழைத்து வரப்படுபவன் , கட்டிலில் படுக்க வைக்கப்படுகிறான். காவலர்கள் விலகியபின் சீஃப் அவனுக்கு அருகில் வந்து வா தப்பிவிடலாம் என்று அழைக்கிறான். அவன் கண்கள் திறந்தபடி சலனமின்றி சீஃப்ஐ பார்த்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தளும்புகள் இருக்கிறது. சீஃப் மர்பிக்கு லோபோடோமி செய்யப்பட்டதை உணர்கிறான். ( மூளையின் ஒரு பகுதியை செயலிழக்க செய்யும் முறை) அவனால் இனி எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்கிறான். ஒரு தலையணையை எடுத்து அவனது மர்பியின் முகத்தில் அழுத்தி அவனை கொல்கிறான். சீஃப் அங்கிருந்து தப்பி ஓட படம் முடிகிறது..

ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் (ONE FLEW OVER THE COCKOOS NEST) 1975ல் வெளியான அமெரிக்க திரைப்படம். இது அதே பெயரைக் கொண்ட கென் கெஸ்ஸியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சிறந்த படம், நடிகர்,நடிகை உட்பட ஐந்து ஆஸ்கார்களை வென்ற படமாகும்.

படத்தில் மர்பியாக நடித்த ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பை ஏற்கனவே ஸ்டேன்லி குப்ரிக்கின் ஷைனிங்கில் (SHINING) பார்த்து மிரண்டு போய்தான் இந்த படத்தை பார்க்க ஆவலாகினேன். பில்லியை ஒரு பெண்ணோடு அறைக்குள் வலுக்கட்டாயமாக அனுப்பிவிட்டு சோகமாக வந்து அமர்வார். முகத்தில் எந்த உணர்வுமின்றி பார்த்துக்கொண்டேயிருப்பார். பிண்ணனியல் பில்லி உடலுறவில் ஈடுபடுவதாக சப்தம் கேட்கும் , குளோசப்பில் ஜேக்கின் முகம் மார்ஃபிங் செய்ததைப் போல மெதுவாக மாறி அது மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதாக மாறும். ஒவ்வொரு மனநோயாளிகளிடத்திலும் ஒவ்வொருவிதமான அணுகுமுறை அவர்களுடனான நட்பும் புரிதலும் விரிவாக சொல்லப்பட்டிருக்கும்.

அதைப்போலவே ராட்செட்டாக நடித்த லூயிஸ் பிளட்சருடைய நடிப்பும். சர்வாதிகாரிகள் என்றால் எப்போதும் புருவம் உயர்த்தி முறைத்து முறைத்துப் பார்க்க வேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையின்றி வெறுமையாக அமைதியாக இருந்தாலே போதும், அது தரும் கடுமை அபாரமானது. அதை முழுமையாக வெளிகாட்டியமைக்கே அவருக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்.

படத்தின் நீளம் பெரிய குறையாக இருந்தாலும் கூட ஜேக் நிக்கல்ஸனின் நடிப்பு அதையெல்லாம் தூக்கித் தின்று விடுகிறது. மனநோயளிகளின் வாழ்க்கை கொடுமையானதுதான் ஆனால் அந்த துன்பங்களின் பின்னாலிருக்கும் சின்னசின்ன சந்தோசங்களையும்அழகாக சொல்கிறது இந்தப்படம். அதனால் மனச்சோர்வின்றி படத்தை அணுக முடிகிறது. அதிலும் அந்த இறுதிக்காட்சியில் லோபோடமி குறித்த அதிர்ச்சி நிஜமாகவே அதிர வைக்கிறது. (இதே கதைக்கருவை அடிப்படையாக வைத்து மனசுக்குள் மத்தாப்பு என்றொரு படம் தமிழில் வெளியாகியுள்ளது)

சமூகம் சிக்கலானது. அந்த மன நல மருத்துவமனையை ஒத்தது. இங்கும் பலவித மனநோயாளிகள் நிறைந்துள்ளனர். இங்கும் கட்டுப்பாடுகள் உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதிக்கம் உண்டு. அதையெல்லாம் மீறி மகிழ்ச்சியில் திளைக்க எத்தனிக்கும் கோடி மக்மர்பிக்களும் உண்டு. ஆனால் மர்பிக்கு செய்யப்பட்ட லோபோடோமி சிகிச்சை(?)யை இங்கே நமக்கு நாமே செய்து கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் தடம் மாறி எதையும் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமாக ஆகிவிட்டிருக்கிறோம். ஒன்று நாம் செயலிழக்கிறோம் அல்லது படுகிறோம். அதையும் மீறி செயல்படுபவர்கள் இன்னல்களுக்கு ஆளாகி லோபோடோமி செய்யப்பட்டவர்களாக திரிவதையும் காண்கிறோம்.

மனநோயாளிகள் மனநோயாளிகளாகவே சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்,நடத்தப்படுகின்றனர்,மதிக்கப்படுகின்றனர். அவர்களும் சகமனிதர்களே என்பதை உணர்த்துக்கிறது இப்படம். அவர்களுடைய உலகம் நம்முடையதிலிருந்து எந்த விதத்திலும் அன்னியமானதல்ல என்பதையும் விளக்குகிறது. இப்பபடத்தில் காட்டப்படும் சிகிச்சை முறைகளைக் காட்டிலும் மோசமான சிகிச்சைகளும் , மருத்துவர்களும் நம்மூரிலும் இருக்கக்கூடும். ஆனால் அதற்கும் நம்மால் எதையும் செய்துவிட முடியாது (மீண்டும் லோபோடோமி). இந்தப் படம்ப் பார்த்தபின் சக மனநோயளிகளிடத்தில் நம் அணுகுமுறையில் வேண்டுமானால் மாற்றம் நிகழலாம். அதற்காகவேணும் ஒரு முறை பார்க்கலாம்.

06 April 2010

ஒரு... ஏதோ

ஒரு இசை(மின்னஞ்சலில் அனுப்பிய கே.ரவிஷங்கருக்கு நன்றி)

ஒரு கதை

நம்ம சாமியாருக்கு எப்போதும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வெளியூர் போகலாம் என்று சிஷ்யனோடு கிளம்பிவிட்டார். ரயிலில் போவதாக முடிவாயிற்று. எப்போதும் போல வித் அவுட்தான். சிஷ்யனும் ஏறிக்கொண்டான். கடுமையான கூட்டம்.. நிற்கவும் இடமில்லை. குரு கதவோரம் அல்லது கக்கூஸோரம் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார். சிஷ்யனுக்கு கால்வலி. ஏற்கனவே இடம்பிடித்து அமர்ந்திருந்தவர்களிடம் ‘’சார் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி உக்காந்தா நானும் உக்காருவேன் . பாருங்க இவ்ளோ இடமிருக்கு’’ என்றான். போடா மயிரே என்றான் ஒரு மலையாளி. சிஷ்யனக்கு கோபம் வந்தது. நேராக குருவிடம் போய் குருவே என்னை ஒரு திட்டிட்டான் வந்து இன்னானு கேளு என்றான். குரு தன் சட்டையை மடித்துக்கொண்டு யார்ரா என் சிஷ்யன திட்டினது என்றார். நீயார்ரா மயிறு ஒன்னு வுட்டேன் என்று உட்கார்ந்திருந்த மூவர் சட்டையை மடித்தனர். குரு கட்ஷாட்டில் மீண்டும் கக்கூஸோரம் இருந்தார். கதவு வழியாக செல்லும் பாதையை பார்த்துக்கொண்டே வந்தார். மலைகள்,காடுகள் , சூரியன், வயல், பாலை கடந்து சென்றது. சிஷ்யன் விடாப்பிடியாக சண்டையிட்டுக்கொண்டிருந்தான். அவர்களும் விடாமல் போடா மயிரேவை ரிப்பீட்டுக் கொண்டிருந்தனர். குருவிடம் தாறுமாறாக புலம்பிக்கொண்டும் சலம்பிக்கொண்டும் வந்துகொண்டிருந்தான் சிஷ்யன். ரயில் தனது கடைசி ஸ்டேஷனில் நின்று விட்டது. இனி போகாது. அனைவரும் இறங்கிவிட்டனர்.. குரு அமைதியாக க்க்கூஸோரம் நின்று கொண்டிருந்தார். இறங்க சொன்னான். குரு அங்கே காலியாய் கிடந்த நாற்காலிகளை சுட்டிக்காட்டிச் சொன்னார் ‘’ அதான் இடம் காலியிகிருச்சே போய் உட்காரு! ‘’

ஒரு தத்துவம்

ஏதாவது ஒன்றின் தத்துவத்தை அதே மாதிரியான இன்னொன்றால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கோபம்

டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டி ஒன்றில் பார்வையாளர்கள் மது அருந்தியபடியே மேட்ச் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெட்டிங் குட்டியாகவும் பெட்டி பெட்டியாகவும் பெரிய அளவிலும் நடக்கிறது. இனி என்னென்ன கருமாந்திரங்களைப் புகுத்தி இந்த ஐபிஎல் புளுத்திகள் கிரிக்கெட்டை வன்புணரபோகிறார்களோ!


ஒரு கருத்து

எனக்கு உடன்பாடில்லாத பதிவர் சங்கம் பற்றிய கூட்டத்திற்கு நான் போகாமல் இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் அந்த கூட்டத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் சுமூகமாக சங்கம் துவங்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். எது எப்படியோ பதிவர்கள் நமக்கு எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் அளந்துதான் பேசவேண்டும் என்பதை உணர்த்தியது அந்த சந்திப்பு. நன்றி உ.த அண்ணன்.

ஒரு புகைப்படம்

OBJECTS IN THE MIRROR ARE CLOSER THAN THEY APPEAR - FRIENDSHIP

என்னுடைய சோனி எரிக்சன் சி702 போனில் சென்ற ஆண்டில் எடுத்த படம்.

ஒரு குறும்படம்


Kannamoochi
Uploaded by mathavaraj. - Full seasons and entire episodes online.

(எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்களுக்கும் பிடிக்கலாம், படத்தை இயக்கிய திருப்பூர் பதிவர் ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள். http://ravikumartirupur.blogspot.com)


ஒரு கவிதை


உதிர்ந்தவனின் முத்தம்
மயங்கி
தொடைகளுக்குள் முடங்க
முயங்கினாள்..
வல்விரைந்தாய்
விரைந்தேன் விரைத்தேன்
வல்விழந்தாய்
இறந்தேன்

03 April 2010

பையா
மின்னல் மாதிரி! காத்து மாதிரி! தீ மாதிரி! இன்னும் எல்லா மாதிரியும் செம ஸ்பீடா படபடனு பறபறனு ஒரு படம் பார்த்து எத்தனை நாளாச்சு? அயன் படத்துக்கு பின் கமர்ஷியல் ரசிகர்களுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை. யதார்த்த படங்கள் பார்த்து நொந்து போன தமிழ்சினிமா ரசிகர்களின் அந்த தீராத தாகத்துக்கு சரியான சுறு சுறு பைவ் தவ்ஸன்ட் பீர் பேரலாக வந்திருக்கிறது பையா.

ஒரு பொண்ண பைக்ல பின்னாடி உக்காத்தி வச்சிகினு அப்படியே ஈசிஆர் ரோட்டுல வுட்டா , போய்கிட்டே இருக்கலாம்னு தோணும். அவளை திருப்பி வீட்டுக்கு கொண்டு போய் விடற வரைக்கும் பைக் ஓட்டிகிட்டே இருக்கலாமானு இருக்கும். அப்படி ஒரு காதல் கதை , அதுல செமத்தியான சேஸிங் , வில்லன்களோடு அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் என்று மசாலாவை அள்ளி கொட்டி காரசாரமான பிரியாணி படையல் பையா.

பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் காதல். தொடர்ந்து மீண்டும் மீண்டும் அவளை பார்த்தும் மயங்கும் ஹீரோ. அவளுக்காக ஒரு பயணம். இருவரையும் விரட்டும் இரண்டு கும்பல். மீண்டு காதல் கைகூடியதா என்பது மொக்கையான பாகவதர் காலத்து கதை. அதை செம்மா போர்ட் கார் முரட்டு ஹீரோ க்யூட் ஹீரோயின் டெரர் வில்லன்கள் என களேபர திரைக்கதையில் அனல் பறக்கிறது படம்.

முன்வரிசை ரசிகர்கள் கார்த்தி காதலித்தாலும் , கலவரமாய் ஐம்பது பேரை அடித்து உதைத்தாலும் துள்ளி குதிக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் பார்க்கும் நமக்கே நரம்பு புடைக்கிறது யாராவது நாலு பேரை தூக்கி போட்டு தூர்வாற வேண்டும் போலிருக்கிறது. காதல் காட்சிகள் கவிதையாய் வடித்திருக்கிறார் லிங்கு. ஒவ்வொரு பாடல் காட்சியிலும் அவருடைய உழைப்பு அபாரமாய் தெரிகிறது. லிங்குசாமிக்குள் ஒரு கவிஞன் நிச்சயம் இருக்ககூடும். அல்லது அவரது கதை விவாதக்குழுவின் நா.முத்துகுமாரும் இருந்திருக்கலாம்.

இரண்டே பேர் ஒரு கார் என்று பயணிக்கும் கதை , துவக்கத்தில் பொறுமையாக கிளம்பினாலும் போக போக அனல் பறக்கிறது. அதுவும் அந்த இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சி. விசிலடிச்சான் குஞ்சுகள் ஊதி ஊதி வாய் வீங்கிவிடும். படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் அந்த காமடி நடிகர் நல்ல நடிப்பு. வடிவேலு பண்ணியிருந்தால் இன்னும் கலக்கலாய் வந்திக்கும்.

கார்த்தி பேண்ட் போட்ட பருத்திவீரனை போல் வருகிறார். சூர்யாவை நினைவூட்டினாலும் செம பாடி. இன்னா சோல்டர். செம மேன்லி. அவர் ஐம்பது பேரை அடித்தாலும் நம்பும்படிதான் இருக்கிறது. (இது போன்ற படங்களை பார்க்கும் முன் லாஜிக் சட்டைகளை வாசலில் அடமானம் வைத்து தம் அடித்துவிடுவது என்னுடைய வழக்கம்). அவர் காதல் பீலிங்கில் விழும்போதெல்லாம் நமக்கும் அது தொற்றிக்கொள்கிறது. நல்லா பண்ணிருக்கார். தமன்னா – குளிர்ச்சி – ஐஸ்கட்டி - ஐலவ் யூ.

படத்தின் கேமரா மற்றும் பிண்ணனி இசை பற்றி சொல்லவில்லையென்றால் சாமி கண்ணை குத்திவிடக்கூடும். படத்தின் மிகப்பெரிய பலம் என்றெல்லாம் சொல்லமுடியாது. படமே கேமராவும் பிண்ணனி இசையும்தான். மதியின் கேமரா யுவனின் இசை .. அய்யோ உள்ளம் கொள்ளை போகுதே! நா முத்துகுமாரின் வரிகளில் பாடல்கள் ஒவ்வொன்றும் வைரங்கள். அதை படமாக்கிய விதம் அதை விட அருமை.

படம் பார்க்கும் போது லேசாக தெலுங்குப்படம் பார்ப்பது போன்ற உணர்வு உண்டாவதை தடுக்க முடியவில்லை. அதிலும் வில்லன்கள் தெலுங்கு ஹிந்தியெல்லாம் பேசும்போது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் படத்தின் வேகத்தில் எல்லாம் கடந்து போய்விடுகிறது. படம் காட்டுத்தனமாய் பயணிக்கிறது. இப்போதான இவன் ஹீரோயின பஸ்ல பார்த்தான் என்று நினைக்கும் போதே படம் பாதி முடிந்துவிடுகிறது.

நடுநடுவே சண்டைக்கோழியில் கொஞ்சம் , கில்லியில் கொஞ்சம் , ரன்னில் கொஞ்சமாய் சிலபல தெலுங்குப்படங்களில் கொஞ்சமாய் அள்ளித்தெளித்திருப்பது நெருடல். அதிலும் குடையை பிடித்துக்கொண்டு வில்லன்களிடமிருந்து தப்புவது அக்மார்க் தமிழ்ப்படம் மச்சம் காமெடி.. முடியல! படத்தில் காமெடி பஞ்சத்தை போக்கும் காட்சி.

மற்றபடி லிங்குசாமியின் உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. அதிலும் வசனங்கள் செம ஷார்ப். ரன்னுக்கு பின் மீண்டும் லிங்குவை ரசிக்க முழுமையாய் ரசிக்க முடிகிறது.

படம் முடிந்து வெளியில் வந்தால் மனசு பரபரவென பறக்கிறது. துறுதுறுவென துடிக்கிறது. பைக்கை 90களில் விரட்டச்சொல்கிறது. டிராபிக் போலிஸுக்கு சல்யூட் அடிக்கச் சொல்கிறது. லிங்குசாமியின் வெற்றி அதில்தான் இருப்பதாய் எண்ணுகிறேன். இலக்கியதரமான படங்களை விரும்புவர்களுக்கும் லாஜிக் பார்ப்பவர்களுக்கும் படம் நிச்சயமாக பிடிக்காது. கடும் மொக்கையாக இருக்ககூடும். அவர்கள் இரண்டு மண்டலத்துக்கு இது மாதிரி படங்களை தவிர்த்துவிட்டு அ.தெரு மாதிரியான படங்களை பத்துமுறை பார்த்து பயனடையலாம்.

கமர்ஷியல் படங்களை விரும்பிப்பார்க்கும் ரசிகர்களுக்கும் குடும்பத்தோடு கண்டுக்களிக்கவும் சரியான சம்மர் ட்ரீட் பையா!

படம் பார்த்து முடித்த பின் எல்லாமே புதுசா இருக்கு , அப்படியே ரெக்க கட்டி பறக்கற மாதிரி இருக்கு!