Pages

28 December 2009

2009 - வினோத் to அதிஷா - வழி - எழுத்து!





வினோத் என்கிற அடையாளத்தை முழுமையாக இழந்து முழுக்க அதிஷாவாகவே மாறிவிட்டிருக்கிறேன். ஆண்டின் துவக்கத்தில் குமுதம் வெளியிட்ட டாப் டென் வலைப்பூக்கள் பட்டியலில் ஏழாமிடம் கொடுத்திருந்தனர். அட நமக்கும் எழுத வருகிறதோ என்று நினைக்க வைத்த நொடி அதுதான். என்னுள் இருந்த அதிஷாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நிகழ்வும் அதுதான். எனக்குள் இருந்த எழுத்துக்காரனின் அறிமுகத்தோடு துவங்கியது 2009.

சுஜாதாவைப் போல் எழுத முடியவில்லையே என்று இந்த ஆண்டில் கவலைப்பட்டிருக்கிறேன். தேவையில்லை , நான் என்னைப்போல் எழுதினாலே போதும் என்று உணர்ந்த ஆண்டு. எனக்கான எழுத்து நடையை நான் தேடத்துவங்கிய ஆண்டு. என் வாழ்நாளில் இந்த ஆண்டில்தான் அதிகம் வாசித்திருக்கிறேன்.  கிட்டத்தட்ட 40 பெரியசைஸ் புத்தகங்கள். 25 சின்ன புத்தகங்கள். 40க்கும் மேல் குட்டி புத்தகங்கள். எண்ணிக்கையில்லா சிறுகதைகள். கொஞ்சம் இலக்கியம். மற்றபடி எப்போதும் போல நிறைய சினிமா.. மினிமம் 500.

2010ல் நிறைய புத்தகம், குறைந்த சினிமா பார்ப்பது என முடிவெடுத்திருக்கிறேன். ஊர் சுற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மிகச்சில இடங்களையே சுற்ற முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் நிறைய சுற்ற வேண்டும். ஒரு கடுமையான காதல் தோல்வியை சந்தித்தேன். அதிலிருந்து விடுபட ஏதேதோ செய்தாலும் எழுத்து பெருமளவில் உதவியது. நண்பர் கிருஷ்ணனின் மரணமும் , ஈழத்தமிழர் படுகொலைகளும் , முத்துகுமாரின் மரணமும் பெரிதும் பாதித்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் புகைப்பிடிப்பதை விட்டுவிட தீர்மானித்திருந்தேன். பின் அந்த தீர்மானத்தை விட்டு விட்டேன்.அது இந்த ஆண்டும் தொடரும் என்றே நம்புகிறேன். தினமும் புகைக்கும் சிகரட்கள் போல நண்பர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. அதில் யார் நண்பர் யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வளர்ந்திருக்கிறது. முகத்திற்கு முன்னால் சிரித்து பேசிவிட்டு முதுகில் குத்துகிற நண்பர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. நண்பர்கள் என்று சொல்லிக்கொண்ட பலரும் கண் முன்னே என்னை அவமானப்படுத்தியிருந்தனர். என்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத அந்த நண்பர்கள் சகவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நல்லது கெட்டது தெரியாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகும் என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்த ஆண்டு கற்றுக்கொடுத்துள்ளது. வரும் ஆண்டில் அந்த அநண்பர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் விலகியிருக்க எல்லாம் வல்ல இலச்சி மலை ஆத்தா எனக்கு அருள் புரியட்டும்.

கெட்ட நண்பர்கள் எண்ணிக்கை கூடியது போல நல்ல நண்பர்கள் எண்ணிக்கை கூடியதாகத் தெரியவில்லை. ஒற்றை இலக்கங்களில் எண்ணிவிடலாம். லக்கி வீழும் போதும் எழும் போதும் என்னோடு எப்போதும் இருந்த என் நிழல். என் நிழலைப்பற்றி நானே பேசுவது சரியாக இருக்காது. மணிகண்டன்,ஜ்யோவ்ராம் சுந்தர்,பைத்தியக்காரன் சிவராமன் என பலரும் எப்போதும் என் வளர்ச்சியில் மகிழ்ந்தது மனநிறைவை அளித்தது. அவர்களுடைய நெருக்கம் என்னை இன்னும் மேம்படுத்தும்.

பதினைந்து வருடமாக தந்தை இல்லாமல் வாழ்ந்த எனக்கு இந்த ஆண்டு தந்தையைப் போல் ஒருவர் கிடைத்திருக்கிறார். பத்தி பத்தியாக என் எழுத்தை மட்டுமல்ல, என் வாழ்க்கையையும் உயர்த்துகிற அந்த மனிதர் இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த பொக்கிஷம். என் விளையாட்டுத்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் குறைத்து என்னை முழுமையாக மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது பெயரை சொல்லும் அளவுக்கு இந்த ஆண்டில் எனக்கு தகுதி இருப்பதாய் தெரியவில்லை.

எட்டு வருட கடுமையான மார்க்கெட்டிங் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கிறது. இப்போது நான் பத்திரிக்கையாளன். இன்னும் ஓரிரு மாதங்களில் எழுத்தாளன் ஆகிவிடுவேன். அடுத்தவருட இறுதிக்குள் சில புத்தகங்களை நிச்சயம் எழுதிவிட தீர்மானித்திருக்கிறேன். நல்ல பத்திரிக்கையாளன் என்று பேர் எடுக்க வேண்டும். அதற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. சிகரட் பழக்கத்திற்கு ஒப்பான பதிவுப்பழக்கத்தையும் குறைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கிறேன். எழுதத் தெரியும் ஆனால் எங்கே எழுதுவது என்று திக்குத் தெரியாமல் அலைந்தவனுக்கு விளையாடி மகிழ அருமையான இடமாக இருந்தது பதிவுலகம. எந்த வாய்ப்புகளுக்காக ஏங்கினேனோ அத்தகைய வாய்ப்புகள் இப்போது கிடைத்திருக்கின்றன. அதை எனக்குப் பெற்றுத்தந்தது பதிவுலகம்தான். என்னைப்போல் பதிவுலகில் பலருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

அதிரடியான முடிவுகளால் சில மாதங்களில் என் வாழ்க்கை சூழலே மாறிப்போயிருக்கிறது. நிறைய சம்பாத்தியம் , சுகமான வேலை எல்லாவற்றையும் துறந்து எழுத்தை நம்பி என் கேரியரை மாற்றிக்கொண்டிருக்கிறேன். இதனால் என் அம்மாவுக்கு நிறைய வருத்தங்கள் இருந்தாலும், அந்த முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.


இந்த ஆண்டில் எனக்குள் இருந்த எழுத்துக்காரன் வெளிப்பட்டு என்னை மாற்றியது போல அடுத்த ஆண்டு எனக்குள்ளிருந்து எவன் வெளிப்பட்டு என்ன செய்யப்போகிறானோ? என்கிற அச்சமிருந்தாலும் எப்போதும் போல எது நடந்தாலும் நிச்சயம் நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கையோடு 2009ற்கு விடையளிக்கிறேன்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு!

26 December 2009

ஆ... அவதார்!


உங்களுக்கு ராமாயணம்,மகாபாரதம்,விக்ரமாதித்த வேதாளக் கதைகள் இப்போதும் பிடிக்குமா? விட்டாலாச்சார்யாவின் திரைப்படங்கள் பிடிக்குமா? கதை புரியாவிட்டாலும் ஸ்டார் வார்ஸ்? மிரட்டும் டைனோசர்களின் ஜூராசிக் பார்க்? லார்ட் ஆப் தி ரிங்ஸ்? ஹாரிபார்ட்டரின் கதையோ திரைப்படமோ பிடிக்குமா? ஏன்?

மேற்சொன்ன உதாரணங்கள் அனைத்திலுமே தொக்கி நிற்கும் பொதுவான அம்சம் ஒன்றுள்ளது. அனைத்துமே நாம் பார்த்திராத புதிய உலகை நமக்கு அறிமுகப்படுத்துபவை. வெறும் அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அந்த உலகின் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான குணாதிசயங்கள் தொடங்கி இடம் பொருள் இருப்பு பரிமாண பரிணாமங்களின் நீட்சியாய் தொடர்பவை. அப்படிப்பட்ட புதிய உலகினை அச்சு அசலாய் நமக்கு அறிமுகப்படுத்துகிற எந்த படைப்பும் காலத்தால் அழிக்க முடியாதவை. ஒரு படைப்பு நம்முடைய வாழ்வியலோடு இணைந்ததாகவோ அல்லது நமக்கு துளியும் அறிந்திராத உலகை காட்டுபவையாகவோ இருந்தால் அது உலகெங்கும் கொண்டாடப்படும். அது உலகின் எந்த மூலையிலும் இருக்கும் மிகச்சாதாரண மனிதனும் ஏற்றுக்கொள்ளும்,ரசிக்கும்,சிரிக்கும்,சிலிர்க்கும் பிரமாண்டமான உலக சினிமா.

கடவுளுக்கும் படைப்பாளிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெயர்களே காரணங்களைச் சொல்லிவிடும். இதோ இன்னும் ஒரு கடவுள்! அல்லது படைப்பாளி ஹாலிவுட்டிலிருந்து. ஏற்கனவே ஏலியனிலிருந்து டைட்டானிக் வரை வாய்பிழக்க வைத்த அதே ஜேம்ஸ் கேமரூன். 12 ஆண்டுகளுக்கு முன் ‘I am the king of the world’ என ஆஸ்கர் மேடை அதிர கர்வமாய் சப்தமிட்ட அதே கேமரூன். டைட்டானிக் கப்பலை காதலுடன் புரட்டிப்போட்டு உலக சினிமாவை அதிர வைத்தவர் , மீண்டும் ‘அவதார்’ மூலம் மீண்டு வந்திருக்கிறார். 12 ஆண்டுத்தவம்! இறுதியாய் முடிவுக்கு வந்திருக்கிறது.
எந்த ஒரு படைப்பாளியும் தன் வாழ்வின் ஆகச்சிறந்த படைப்பை கொடுத்துவிட்ட பிறகு அதற்கு அடுத்த படைப்பு அதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கால அளவு பிரமிக்க வைக்கிறது. உலகிலேயே ஒரு சாதாரண திரைக்கதையை படமாக்கத் தேவையான தொழில்நுட்பத்திற்காக காத்திருந்து படமாக்கிய இயக்குனர் ஜே.கேமரூனாகத்தான் இருக்கவேண்டும்.

1994ல் தோன்றிய ஐடியா இது. அதை அப்போதே எழுதி வைத்து அது பின்னாளில் இணையத்திலும் உலவியது. ஆனால் அப்போதைய தொழில்நுட்பம் இந்த கதைக்கு ஒத்துவராது எனக்காத்திருந்தார். 2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் தொடர்ந்தும் வெளியான லார்ட் ஆப் தி ரிங்ஸின் ‘கோல்லம்’ என்னும் கதாபாத்திரம் முழுக்க 3டி அனிமேஷனால் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் திரைபடத்தில் வரும் டேவி ஜோன்ஸ் பாத்திரமும் , இப்போது இந்த கதையை சாத்தியமாக்க இயலும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உடனே வேலையில் குதித்து விட்டார் கேமரூன். இந்த படத்திற்கான கரு ‘எட்கர் பரோ என்னும் எழுத்தாளரின் ஜான்கார்டர்’ என்னும் தொடர் கதையிலிருந்து உதித்தது. அதில் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஒரு இனம் அதன் மீது போர் தொடுக்கும் மனிதர்கள் , மனிதர்களில் ஒருவன் அந்த இனத்தைப்போல வேடமிட்டு செல்வது என செல்கிறது அந்த கதைகள். அதையே இப்போதைய தொழில்நுட்பத்துடன் புதிய உலகைப்படைத்து செய்யமுடியுமா என யோசித்தபோது உருவானது அவதாரின் கதை. கதை ரெடி அடுத்து என்ன?

இப்படி ஒரு படம் எடுப்பதாக இருந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்? முதலில் பட்ஜட்டைப்பற்றித்தான் ரூம்போட்டு யோசிப்போம். கேமரூன் அமெரிக்காவின் பெரிய பல்கலைகழகத்தின் மொழிகள் ஆராய்ச்சித்துறைத் தலைவரை பிடித்தார். ‘எனக்கு ஒரு மொழி வேண்டும், உலகில் யாருமே பேசியிருக்காத , அறியப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய வார்த்தைகள் இருக்க வேண்டும், உச்சரிப்பு இருக்க வேண்டும், இலக்கணம், பாடல்கள், பிரார்த்தனைகள், மந்திரங்கள், பெயர்கள் எல்லாமே இருக்க வேண்டும்! அந்த மொழி சார்ந்த அல்லது அவர்கள் பண்பாடு சார்ந்த ஒரு நாகரீகமும் வேண்டும் , ஆறுமாதம்தான் டைம்!’

ஆசிரியரும் இயக்குனரும் ஆராய்ச்சியில் இறங்கினர். நியூசிலாந்தின் பழங்குடியினரின் மொழியில் கொஞ்சம் எத்தியோப்பியாவின் மலைவாழ்மக்களின் மொழிகளில் கொஞ்சம் இரண்டையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு அதிலிருந்து புதிய மொழியை உருவாக்கினர். நவ்வி என்றொரு இனமும் அதற்கென பிரத்யேக மொழியும் , ஒரு மலை சார்ந்த குடிகளின் நாகரீகமும் உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்த மலை எப்படி இருக்கப்போகிறது , அங்கே என்னவெல்லாம் வேண்டும் , அதை எப்படி சாத்தியமாக்குவது , இப்படி ஒரு கிரகம் சாத்தியமா என பலதும் ஆராயத்தொடங்கினார். 4.4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் , (பூமியிலிருந்து மிக அருகில் இருக்கும் பிரபஞ்சம்) ___ கேலக்ஸியில் ஒரு நட்சத்திர கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் சின்ன நிலாதான் இந்த கதைக்கான களம் என முடிவு செய்து கொண்டார். அதற்கான காரணம் அடுத்த நூறு ஆண்டுகளில் மனிதனால் அத்தனை தூரம்தான் பயணிக்கவும் போர் தொடுக்கவும் முடியும் என்பது அவருடைய அனுமானம். இப்படி திரைப்படத்தின் ஒவ்வொரு விசயங்களுக்குமான மெனக்கெடல் நம்மை பிரமிக்க வைக்கிறது.



அந்த மக்களின் நடை உடை பாவனை என மீண்டும் ஆராய்ச்சி , அவர்களுடைய உருவம் அதற்கு ஒரு ஆராய்ச்சி! அதில் சிக்கியவர் நம்முடைய சிவபெருமான். நீல நிறமும் நீண்ட முகமும் சடை முடியும் குட்டியூண்டு உடை அகண்ட விழிகள் என நீளும் அவருடைய முகமும் உடலும் அவதாருக்கு மிகச்சரியான பொருத்தமாக இருந்திருக்கிறது. தூக்கிப்போடு இந்த மூஞ்ச என மொத்த மக்களுக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. அவதார் என்கிற பெயரே இந்துக்கடவுளான கிருஷ்ணரின் பாதிப்பில்தான் உருவாக்கப்பட்டதாக டைம் இதழின் பேட்டிக்கு 2007ல் சொல்லியிருந்தார். அதற்கேற்றாற்போல ஹீரோவுக்கு திருப்பதி ஏழுமலையானைப்போல நடுமண்டையில் காவிநிறத்தில் திருநாமம் போட்டிருக்கிறார்.

கதை? வேற்றுகிரகத்திலிருந்து வரும் விநோத ஜந்துக்கள் மனித குலத்தை அழிக்க நினைக்கும். அதை எதிர்த்து போராடும் அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி கடைசி போர்வீரன் வரை தன் உயிரையும் துட்சமாக மதித்து அந்த ஜந்துக்களை வெற்றிகொள்வான். இதுதான் வேற்று கிரகவாசிகள் குறித்த எல்லா அறிவியல் புனைகதைகளும் சொல்லுகிற செய்தி. அவதார் அப்படியே ஆப்போசிட்!

விலை உயர்ந்த எரிபொருளுக்காக இன்னொரு கிரகத்தில் வாழும் நவி இன மக்களின் மீது போர் தொடுக்கும் மனிதர்கள். அதற்கென பிரயோகிக்கும் இத்யாதிகள்.. மேலதிக இத்யாதிகள் என கதை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்ககூடும். அதில் ஒரு காதல். அனல் பறக்கும் சேஸிங் மற்றும் ஆக்சன், கொஞ்சமே கொஞ்சம் சென்டிமென்ட் , மனிதர்களின் வில்லத்தனம், நிறைய அறிவியல், என படத்தின் கதைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் நமக்கு ஏனோ அம்புலிமாமாவில் படித்த கதை போலவே ஃபீலிங்ஸ். லேசாக தூக்கமும்!

ஆனால் அந்த கதைக்கு பின்னாலிருக்கும் அரசியலும் , அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான எதிர்ப்பும் நுண்ணரசியலாக அல்ல , வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் பெட்ரோல் மீதான அமெரிக்காவின் கவனம், அதைத்தொடர்ந்த போர்கள் எத்தனை அப்பாவி மக்களின் சாவுகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சீரழிவுக்கும் காரணமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். வளர்ந்த நாடுகளின் சுற்றுசூழல் கொள்கைகள் எப்படி நம்முடைய புவியை நாசாமாக்குகின்றன என்பதும் நமக்குத்தெரியும். அந்த பிரச்சனைகளை மிக தைரியமாக ஆனால் சாதுரியமாக முன்வைக்கிறது அவதார். எப்போது வல்லரசுகள் சிறிய நாடுகளின் மீது போர் தொடுத்தாலும் அல்லது எங்கு போர் முற்றினாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என்னும் கருத்தை கடுமையாக முன்மொழிகிறது இத்திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் முதன் முறையாக மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தியுள்ளார். அனிமேஷன் திரைப்படங்களில் நிஜ நடிகர்கள் உடலில் வயர்களுடன் நடிப்பார்கள். பின் அவர்களுடைய அசைவுகள் அனிமேசன் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படும். ஆனால் கேமரூனின் தொழில்நுட்பம் வயர்களோடு நடிக்கும்போதே மானிட்டரில் கதாபாத்திரம் எப்படியெல்லாம் அசைகிறது எப்படியெல்லாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது என்பதை பார்த்துவிட முடியும். இது சினிமாவின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தொழில்நுட்பம் என்கின்றனர் வல்லுனர்கள். இது தவிர வால்யூம் என்கிற இன்னொரு தொழில்நுட்பமும் உண்டு. இது நடிகர்களின் முகபாவனைகளை (அனிமேஷனுக்கு நடிப்பவர்கள்) உடனுக்குடன் அவர்களுடைய முகத்தோடு பொறுத்தப்பட்ட சிறிய கேமராக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். இது அனிமேஷன் பாத்திரங்களின் அசைவுகள் மற்றும் உணர்ச்சிகளை தெள்ளத்தெளிவாக காட்டக்கூடியது. படத்தின் நடித்தவர்களில் பாதி பேர் நிஜ நடிகர்கள் மீதி எல்லோருமே அனிமேஷனால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் படத்தினை பார்க்கும் போது அந்த வேறுபாடுகள் தெரியவில்லை என்பதே உண்மை. இதில் 40% நிஜம் 60% கணினியில் வரைந்த புனைவு என்றால் யாருமே நம்ப மறுப்பார்கள்.

படத்தின் இசை மிரளவைக்கிறது. படம் முழுக்க சில பாடல்கள் வருகிறது. அவை அனைத்துமே நவ்வி மொழியில் பாடப்பட்டதாம்! படம் முழுக்க ஏதோ வித்யாசமான இசை வருகிறதே என அதுகுறித்து ஆராய்ந்தால் அதற்காக எத்னோமியுசிக்காலஜி என இசையில் ஒரு துறை இருக்கிறதாம் அதில் ஆராய்ச்சி செய்து பழங்குடியினரின் இசைக்கருவிகள் மற்றும் இசையை உருவாக்கியுள்ளனர்.

இப்படி கடுமையான உழைப்பு , அற்புதமான தொழில்நுட்பம், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் என எல்லாமிருந்தும் , படம் நம் மனதோடு ஒட்ட மறுக்கிறது. டெர்மினேட்டர் கொடுத்த விறுவிறுப்போ அல்லது டைட்டானிக் கொடுத்த பாதிப்போ இல்லாமல் மொத்தமாக சமயங்களில் கொட்டாவி விட வைக்கிறது. நம்மூர் பாலா எடுத்த நான்கடவுளுக்கு சற்றும் சளைக்காமல் ஒவராய் உழைத்து , எல்லாமே ஓவராய் போயிருக்கிறது. கேமரூன் படங்களுக்கே உண்டான கிரிஸ்ப்னஸ் இல்லை.

படத்தில் பெரிய குறை என்னதான் விறுவிறுப்பு இருந்தாலும் ஏதோ குறைகிறது.. அது படத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகள் குறைந்த காதலா? நமக்கு ஏற்கனவே பரிச்சயமான மசாலா கதையா? அல்லது வேறு ஏதாவது ஒன்றா? எனத்தெரியவில்லை. மற்றபடி குறைச்சலே இல்லாமல் வெறும் அமோக விளைச்சல்தான். டூ மச் அறிவியல் கூட சமயத்தில் கதையின் ஓட்டத்தை பாதிக்குமோ என்னவோ!

இது ஹாலிவுட் சினிமாவின் சரித்திரத்தில் மிகமுக்கிய இடம் வகிக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து அதன் தொழில்நுட்பங்களுக்காக போற்றப்படலாம். ஆனால் படம் – பப்படம். தமிழகத்தில் 2012 அடைந்த வெற்றியைக்கூட எட்டமுடியாது என்றே நினைக்கிறேன்.

சுஜாதா எப்போதோ கற்றதும் பெற்றதுமில் எழுதியது போல் அடுத்த இருபது ஆண்டுகளில் நடிகர்களுக்கான தேவை இருக்காது என்றுதான் தோன்றுகிறது. நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு அடேங்கப்பா என வாய்பிழக்க வைக்கும் படத்தினை எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் உண்டாக்குகிறது. வலுவான கதையாக இருந்திருந்தால் நிஜமாகவே அவதார் சினிமாவை மாற்றக்கூடிய அவதாரமாக இருந்திருக்கும்.

23 December 2009

ஆறுமாதம் சிறை! ஆயிரம் ரூபாய் அபராதம்!






ருச்சிகாவை நீங்கள் மறந்திருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம். 1990ல் ஹரியானாவின் ஒரு டென்னிஸ் பயிற்சிக்கூடத்தில் துவங்கியது அவளுடைய கதை. அப்போது அவளுக்கு 14 வயது. குழந்தைப்பருவத்தின் எல்லையில் இருந்தவள். டென்னிஸ் விளையாட்டில் வளர்ந்து வரும் நட்சத்திரம். அங்கேதான் நிகழ்த்தப்பட்டது அந்த கொடூரம். தனது தோழியுடன் விளையாடி முடித்துவிட்டு கிளம்பியவளை ராதோர் தன்னுடைய அறையை திறந்து உள்ளே வரச்சொல்லி, அவளுடைய தோழியை வேறு காரணத்திற்காக வெளியே அனுப்பிவிட்டு தவறாக நடந்திருக்கிறான் .அழுதபடி வீட்டிற்கு திரும்பினாள் ருச்சிகா. இதை விசாரித்த அவளுடைய அப்பாவும் வக்கீலான அம்மாவும் நேராக காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.அந்த பொறுக்கி ராதோர் காவல்துறையின் மிகபெரிய பொறுப்பில்(டிஜிபி) இருந்து ஓய்வு பெற்றவன்.. ஹரியானா லான் டென்னிஸ் அமைப்பின் தலைவராக இருப்பவன். அவனை எதிர்த்து புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ருச்சிகா டென்னிஸ் சங்கத்திலிருந்து காரணமின்றி நீக்கப்பட்டாள். பள்ளியிலிருந்தும் நிறுத்தப்பட்டாள்.
இத்தனைக்கும் காரணம்? மறுக்கப்பட்டது. வழக்கை திரும்ப பெறக்கோரி அடுக்கடுக்காய் தொடர்ந்து ருச்சிகாவின் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள். இதில் கார் திருடினான் என ருச்சிகாவின் சகோதரன் ஆசுவை கைது செய்துள்ளனர். வெற்று காகிதங்களில் கையெழுத்திடக்கோரி அவனை துன்புறுத்தினர். தொடர்ச்சியான தாக்குதல்கள். காவல்துறையினர் விடாமல் துரத்தினர். ருச்சிகாவின் தந்தை தன்னுடைய வீட்டை விற்றுவிட்டு இடம் பெயர்ந்தார். ஆனாலும் தொல்லைகள் தொடர்ந்தது. தன்னால் தன் குடும்பத்தினருக்கு எத்தனை பிரச்சனைகள் என நினைத்த ருச்சிகா 1993ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. ருச்சிகாவின் தந்தையால் தொடர்ந்து வழக்கை சந்திக்க இயலவில்லை. ருச்சிகாவின் தோழி ஒருவர் முன்னின்று வழக்கை தொடர்ந்தார்.
19ஆண்டுகள் கடந்து விட்டன. அந்த பொறுக்கி ரதோர் இன்றைக்கு காவல்துறையின் மிகப்பெரிய பொறுப்பிலிருக்கிறான். அவன் மீது தொடுக்கப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்குப்பின் முடிவுக்கு வந்திருக்கிறது. ஒரு குழந்தை மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதிற்காகவும், அந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு தொல்லைகள் கொடுத்ததற்காகவும் அவருக்கு ஆறு மாத சிறையும் ஆயிரம் ரூபாய்கள் அபாரதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வருகிறான் அந்த பொறுக்கி , தண்டனை கிடைத்த பத்து நிமிடத்தில் பெயிலும் கிடைத்துவிட்டது. 19 ஆண்டுகள் போராடியதற்கு பலன் ஆறுமாதமும் ஆயிரம் ரூபாயும்!
இது போன்ற வன்புணர்ச்சி சார்ந்த வழக்குகளில் குறைந்த பட்ச தண்டனையே இரண்டு ஆண்டுகள் , அதிகபட்சம் 10 ஆண்டுகள். கருணை அடிப்படையில் ஏழு. ஆனால் இந்த பொறுக்கி செய்தது உறுதியாக நிரூபிக்கப்பட்ட பின்னும் அவனுக்கு ஆயிரம் ரூபாய் தண்டனை கொடுத்திருப்பது நீதித்துறையின் எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்.
வன்புணர்ச்சிக்கு ஆளானவர் பெண்ணாக இருந்தாலே தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற மக்கள் வாழும் நாட்டில், பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு குழந்தை. இன்றைக்கு நாட்டையே உலுக்கும் பிரச்சனைகளில் பிரதானமான ஒன்று குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை. அண்மையில் கூட வெளிநாட்டுக்கார பொறுக்கி ஒருவன் குழந்தைகளுக்கு வீடியோ கேம்ஸ் கொடுத்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும் அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கும். இப்படி அன்றாடம் பள்ளிக்கும் மைதானங்களுக்கும் விளையாடவும் சுதந்திரமாக வெளியே செல்லும் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த குழந்தையையும் பலாத்காரம் செய்ய இயலும் என்கிறதா நமது நீதி. இனி அட்வான்ஸ் புக்கிங்கில் குழந்தைகளிடம் வன்புணர்ச்சியில் ஈடுபடலாம் போலிருக்கிறதே! இது போன்ற பொறுக்கிகளை , அதிலும் காவல்துறையில் இருந்து கொண்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அது மற்றவருக்கு பாடமாக இருந்திருக்க வேண்டாமா? என்ன செய்கின்றன நீதி மன்றங்கள்.
ரதோர் ஒரு அப்பாவி! அவர் புகழைக்குலைக்க வேண்டுமென்ற ருச்சிகாவின் குடும்பத்தினரும் , மீடியாவும் கற்பனையான ஒரு கட்டுக்கதையை உலகிற்கு சொல்கின்றன என்று கதறுகிறார் ரதோரின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. ராம்ஜெத்மலானியைப்பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை.எவ்வளவு வெட்கக்கேடான செயல். இவரைப்போன்ற ஆட்கள் இருக்கும் உலகில் நம் குழந்தைகளுக்கு என்னதான் பாதுகாப்பு.
இன்றைக்கு பல நாடுகளிலும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தட்டிக்கேட்க CHILD PROTECTION UNIT கள் உண்டு. எந்த ஒரு குழந்தைகள் சார்ந்த வழக்காக இருந்தாலும் அவைகளே அது குறித்து விசாரணைகள் மேற்கொள்கின்றன. அது போன்ற அமைப்புகள் இந்தியாவிலும் அவசியம். நம் நாட்டில் விலங்குகளை பாதுகாக்கவும் பறவைகள் பாதுகாப்பிற்கும் கூட அரசு சார்ந்த அமைப்புகள் உண்டு (அவை எந்த இலட்சணத்தில் பணியாற்றுகின்றன என்பது யாருக்கும் தெரியாது) . குழந்தைகளுக்கான பாதுக்காப்பு அமைப்புகள் அவசியம் என்பதை இந்த வழக்கு நமக்கு உணர்த்துகிறது.
19 ஆண்டுகள் குற்றம் புரிந்தவன் சௌகரியமாக அதுவும் அரசு வேலையில் இருந்திருக்கிறான். அவனுக்கு தண்டனை வழங்க அவனுடைய வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு கால அவகாசம் ஆகியிருக்கிறது. இனி அவனுக்கு தண்டனை கொடுத்து என்ன ஆகிவிடப்போகிறது , எப்படியும் இன்னும் சில நாட்களில் செத்து விடுவான். தண்டனைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டாமா? அதிலும் இதுபோன்ற பெருகி வரும் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனைகள் மட்டுமே போதாது , உடனடி தீர்வுகளும் அவசியம்.
நம் நீதித்துறை கொட்டாவி விட்டபடி ஆறு மாத சிறையும் ஆயிரம் ரூபாய் தண்டனைகளும் வழங்கி ஆணி பிடுங்கும் வரை லட்சம் ரதோர்கள் தினமும் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு குழந்தையின் எதிர்காலத்தை....






22 December 2009

ராஜிவ் கொலையும் சில மனிதர்களும்!







ராஜிவ் கொலையும் சில மனிதர்களும்!
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மரணங்களின் பட்டியல் தயாரானால் அதில் மிக முக்கியமான இடம் ராஜிவ் காந்தியின் கொலைக்கும் இருக்கும். ஒரு கொடூர மரணம். இந்தியாவிற்கே புதிதாய் மனிதவெடிகுண்டு தாக்குதல்! பலியானவர் முன்னாள் பிரதமர். அடுத்தது என்ன? ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருந்தது. அதன் தொடர்ச்சியாய் நூற்றுக்கணக்கில் கதைகள்,கற்பிதங்கள் சில புனைவுகள் கொஞ்சம் உண்மைகள். கொலை முடித்து சில நாட்களுக்குள் செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று அனைவருக்கும் உறுதியாகத் தெரிந்து விட்டது.
ஆனால் ஒற்றை வழக்கு.இந்த கொலையில் அரசியல் உள்நோக்கம் உண்டா? யாரெல்லாம் செய்தார்கள்? எப்படி முடிந்தது? என்ன திட்டம்? எத்தனை நாள்? எத்தனை பேர்? ஸ்காட்லாந்து யார்டுக்கே சவால்விடும் தமிழக காவல்துறையை மீறி எப்படி? ரா அமைப்பு என்ன புடுங்கியது? ஒரு சின்ன தகவல் கூடவா இல்லை? தமிழகம் என்னும் அமைதிப்பூங்காவில் எப்படி சாத்தியமாக்கினர்?
அடுக்கடுக்காய் அலைகளைப் போல் தொடரும் கேள்விகளுக்கு வழக்கு முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதும் ஆளுக்கொரு கண்ணோட்டம், பார்வைகள். நான்கு பேருக்கு தூக்கு பலருக்கு ஆயுள் தண்டனை , சிலர் விடுதலையாகி இருந்தாலும் அந்த அதிர்ச்சி தீராமல் அந்தக் கொலையின் மர்மமான முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் பலருக்கும் புதிராகத்தான் இருக்கிறது. அந்த புதிரின் சில முடிச்சுக்களை ஓரளவு அவிழ்க்கிறது ராஜிவ் கொலை வழக்கு என்னும் நூல்.
ரஹோத்தமன். இந்நூலின் ஆசிரியர். முன்னாள் சிபிஐ அதிகாரி. ராஜிவ் கொலைவழக்கு என்றாலே என் ஊரான கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன்தான் கண்முன் வருவார். அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய இன்னொருவர். இவர் எழுதிய ராஜிவ்காந்தி கொலைவழக்கு புத்தகத்தை சென்ற வாரத்தில் கிழக்குப்பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். இப்போது என்ன அவசியம் இப்படி ஒரு புத்தகத்திற்கு? அதற்கான விடையும் புத்தகத்திலேயே இருக்கிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இல்லை. பிரபாகரன் இல்லை. புலிகள் இல்லை. வழக்கு முற்றிலுமாக முடிந்து விட்டது. இனி தைரியமாகப் பேசலாம். இந்தியாவின் ரா அமைப்பின் மட்டமான செயல்பாடுகள் குறித்துப் பேசலாம். தமிழ்நாடு காவல்துறையின் தவறான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறலாம். இந்திய அரசியல், நாட்டின் மிகமுக்கிய வழக்கில் செய்யக்கூடிய இடையூறுகள் குறித்துப் பேசலாம். புலிகளின் ஒருங்கிணைந்த திட்டமிடப்பட்ட அந்த கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது என்பது குறித்துப் பேசலாம். புலிகளின் உளவு அமைப்பு இந்தியாவின் ரா வைக்காட்டிலும் உயர்ந்தது என சுட்டிக்காட்டலாம்.
பேசியிருக்கிறார் ரஹோத்தமன். புலிகள் ஏன் ராஜிவ்காந்தியைக்கொன்றனர் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். அதைப்பற்றி அதிகம் பேசாமல் கொலைக்குப் பிறகான அரசியல்,விசாரணை என எழுதப்பட்டிருக்கிறது இந்த புத்தகம். ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர்களின் மர்ம நாவல்களுக்கு சற்றும் சளைக்காத புத்தகம். ஒரு விறுவிறுப்பான நாவலைப்போல அத்தனை மனிதர்களுக்குமான குணாதியங்களும் கண் முன்னே! கையிலெடுத்தால் கடைசிவரை வைக்கமுடியாத 225 பக்கங்கள். புத்தகம் முழுக்க ஒரு மென்மையான காதல் இருக்கிறது.  ஆக்சன் சென்டிமென்ட் என எல்லாம் கலந்த வித்தியாசமான புலன்விசாரனை நூல் இது.
ஒரு போட்டோகிராபரின்(ஹரிபாபு) சின்ன கேமராவில் தொடங்கும் விசாரணை பெங்களூருவில் சிவராசன் உட்பட சிலருடைய சைனட் மரணங்கள் வரை நீடிக்கிறது. இந்தக்கொலைக்கு உடந்தையாக இருந்த பலருடைய வாக்குமூலங்களையும் , அவர்கள் தந்த மற்றும் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களையும் கடிதங்களையும் புத்தகம் முழுக்க தந்திருக்கின்றனர். புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. தணுவின் பச்சை சுடிதாரும் தலையிலிருந்த கனகாம்பரமும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதற்கான காரணங்களாக நளினி கொடுத்த வாக்குமூலம் கூட அதிர்ச்சியை உண்டாக்குகிறது. புத்தகம் முழுக்க ஆசிரியர் ஆணித்தரமாக சொல்லும் புலிகளின் அர்ப்பணிப்பு அவர்களுடைய சாதுர்யம் திட்டமிடல் திகைக்க வைக்கிறது. ஆனால் அவர்களுடைய சின்னசின்ன தவறுகள் , விட்டுச்செல்லும் தடயங்கள் பின்னர் எப்படியெல்லாம் அவர்களை சிக்க வைத்தது என்பதை படிக்கும் போது முதுகுத்தண்டில் ஜில்லிர்ப்பு.
வைகோவின் சகோதர்ர் ரவிசந்திரனை புத்தகத்தின் இரண்டு மூன்று இடங்களில் குற்றவாளியாக(சீனிவாசய்யா) சந்தேகிக்கிறார். அந்த வெள்ளைசட்டை-பேண்ட் சீனிவசய்யா யார் என்று வழக்கு முடிந்த பின்னும் தெரியாமல் போயிருக்கிறது. திமுகவையும் கலைஞரையும் கூட விட்டுவைக்கவில்லை. எல்லோர் மேலும் சந்தேகம் இருந்தாலும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் யாரையும் அத்தனை எளிதில் விசாரித்துவிட முடியாது என்கிறார் ஆசிரியர். இந்த விசாரணையின் மூத்த அதிகாரி கார்த்திகேயன் மீதும் தன்னுடைய அதிருப்தியை புத்தகம் முழுக்கவே சூசகமாகவும் நேரடியாகவும் தெரிவிக்கிறார். காதலுக்காக இந்தக் கொலையின் அத்தனை செயல்பாடுகளையும் முன்னிறுத்தி செய்த நளினியின் மீது ஒரு மிதமான பார்வையை , அனுதாபத்தை வாசகனிடம் உண்டுபண்ணுகிறார். நமக்கும் படித்து முடிக்கையில் நளினியின் மீது அனுதாபம் வராமல் இல்லை.
விசாரணையில் பல புலிகள் சயனைட் அருந்தி மரணமடைந்தனர். அதை அப்போது அதிகார மையத்தில் இருந்தவர்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். சிவராசன் தற்கொலையின் போதுகூட அந்த அமைப்புகளின் மெத்தனமே பலருடைய மரணத்திற்கு காரணமாக இருந்தது என குற்றஞ்சாட்டுகிறார். எம்.கே.நாராயணனையும் விட்டு வைக்கவில்லை , மே22 கொலை முடிந்த பின் நடந்த விசாரணை குறித்த கூட்டத்தில் தன்னிடம் கொலை நடந்த போது பதிவான வீடியோ கேசட் ஆதாரம் இருப்பதாக கூறியதாகவும் ஆனால் இதுவரை அதைப்பற்றி பேசக்கூட இல்லை என எழுதியுள்ளார். அந்த கேசட் கிடைத்திருந்தால் இந்த விசாரணை வேறு மாதிரி இருந்திருக்கும் எனவும் அனல் பறக்கிறார்.
இந்த வழக்கில் சந்திராசாமிக்கோ சுப்ரமணியசாமிக்கோ ஒரு வெங்காயத்தொடர்பும் இல்லை என ஆணித்தரமாக மறுக்கிறார். புலிகளின் வீழ்ச்சிக்கு மிகமுக்கிய காரணமான இந்த கொலை குறித்து இது வரை வெளியான அத்தனை புத்தகங்களையும் அத்தனை அறிக்கைகளையும் பார்வைகளையும் மாற்றி போடுகிறது இந்த புத்தகம். இது குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமிருக்கும் அனைவரும் கட்டாயம் படிக்கலாம். இப்படியொரு வேகமான நடையில் நிச்சயம் ரகோத்தமன் இந்த புத்தகத்தை எழுதி கொடுத்திருக்க முடியாது. எழுத்து நடை புத்தகத்தின் சுவாரஸ்யம் கூட்டுகிறது. எழுதியவர் அல்லது எடிட்டியவர் அருமையாக செய்திருக்கிறார்.
புத்தகத்தில் நுண்ணரசியல்கள் எதுவும் தென்படவில்லை. தெரிந்திருந்தால் அதை சுட்டிக்காட்டலாம். மற்றபடி நல்ல புத்தகம் பட் என தொடங்கி சட் என படித்து முடித்து விடலாம். இந்த வருட புத்தக கண்காட்சியில் பரபரப்பை கிளப்ப போகும் புத்தகமாக இது கட்டாயம் இருக்கும்! இதன் விலை – ரூ.100 வெளியீடு – கிழக்கு பதிப்பகம்




19 December 2009

ஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்!

ஓடு ஓடு... வரான் பாரு..வேட்டைக்காரன்!





முதலில் படத்தின் ரிசல்ட்! பின்னர் விமர்சனம்.

படம் மரணமொக்கை!. இப்படி ஒரு படம் தமிழில் எடுக்கப்படுவது இரண்டாயிரத்து இருநூற்றி முப்பத்தைந்தாவது முறையாக இருக்கலாம். திரைப்படம் எத்தனை மொக்கையாக இருந்தாலும் அதை தட்டி ஓட்டி பெண்டு நிமிர்த்தி டிங்கரிங் வேலை பார்த்து முரட்டுத்தனமாக விளம்பரம் செய்து எப்படியாவது ஹிட்டாக்கி காசு பார்த்து விடுவார்கள். இந்த படத்தையும் ஓட வைத்து விடுவார்கள். இந்த படம் ஓடும். வசூலை அள்ளும். சுயூர் சூப்பர் ஹிட் ஆனால் படம் மரணமொக்கை.


சில ஆண்டுகளுக்கு முன் மதுரையின் சினிப்பிரியா தியேட்டரில் ஏதோ ஒரு விஜய் பட ரிலீஸ். பட்டாசுகளும் பிளக்ஸ் பேனர்களும் பேண்டு வாத்தியங்களுமாக அதிரிபுதிரியாக இருந்தது. பிளாக்கில் டிக்கெட் கிடைக்குமா என சுற்றிக் கொண்டிருந்தேன். கேட் வாசலில் பாவமாக சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என்னடா தம்பி டிக்கட் கிடைக்கலயா? என துக்கம் விசாரித்தேன். டிக்கட் கிடைக்காதவன் சோகம் இன்னொரு டிக்கட் கிடைக்காதவனுக்குத்தானே தெரியும், ஆனால் அவனோ அதெல்லாம் ஒன்னுமில்லண்ணே! என்றான். ஏன்டா அப்புறம் ஏன் இப்படி இருக்க என்றேன், எங்க தல படம் இந்த வாட்டி வரல வந்துச்சுன்னா இதைவிட இன்னும் நூறு மடங்கு தூள் பண்ணனும்ண்ணே என்றான்.

இப்படிப்பட்ட இளம் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு வேட்டைக்காரன் அல்ல லட்சம் வேட்டைக்காரர்கள் தமிழ்கூறும் நல் உலகில் அன்றாடம் ரிலீஸ் ஆகிக்கொண்டேதான் இருக்கப்போகின்றனர். அதனால் அதுகுறித்து சமூக அவலக் கவலைகளின்றி திரைப்படம் குறித்து மட்டும் பேசுவோம்.

படத்தின் கதை உய்யாலா உய்யலாலா! சம்பவாமி யுகே யுகேவென ரவுடிகளை அழிக்க அவதாரம் எடுக்கும் ஹீரோ பற்றியதுதான். அதற்காக ஒரு சென்டிமென்ட்.கொஞ்சம் காமெடி. நிறைய மசாலா. நிறைய தலைவலி எல்லாம் சேர்த்து நம் டவுசரை அவிழ்க்கின்றனர். சம்பவாமி யுகே யுகே என்பது நிஜமாக இருந்தால் இப்படி படம் எடுத்து டார்ச்சர் கொடுக்கும் இயக்குனர்களை அழிக்க கிருஷ்ண பகவான் இன்னொரு முறை அவதாரம் எடுக்கலாம். முடியல!

ஹீரோ விஜய். இன்னும் நான்கு படம் இப்படியே நடித்தால் நாட்டு மக்கள்தொகை பெருமளவில் குறைந்து இந்தியா வல்லரசாகிவிடும். தோளை குறுக்கிக்கொண்டு கையை கும்பிடுவது போல் கோர்த்து என்னங்கண்ணா சொல்லுங்கண்ணா என்று மூக்கில் பேசி காமெடி பண்ணுகிறார். தன் சின்னகண்களை அகலமாய் திறக்க முயற்சித்து புருவம் உயர்த்தி ஏய் நேனு எவரு தெலுசா என அடித்தொண்டையில் சவால் விடுகிறார். கெட்டப்பெல்லாம் மாற்றிக்கொண்டு நன்றாக நடனமாடுகிறார். அந்த பிரவுண் ஹேர்ஸ்டைல் சகிக்கலை. படம் முழுக்க பாட்ஷா ரஜினி போலவே நடந்து ‘கொல்’கிறார். படம் முழுக்க பகவதி படத்தில் ஏற்கனவே போட்டிருந்த அதே கோட்டைப்போட்டுக்கொண்டு அதை போல புலிஉறுமுது புலி உறுமுது என நடக்கிறார். சேம் கோட் நமக்கு சேம் பிளட்! சாரி விஜய் பெட்டர் லக் நெக்ஸ்ட் பிலிம்!

ஹீரோயின் அனுஷ்கா , பாதி படம் வரைக்கும் விரைப்பாக அலைகிறார். பின்னர் ஆடுகிறார். ஓடுகிறார். அழுகிறார். இப்போதெல்லாம் நாயகிகள் காமெடி டிராக் போல உபயோகப்படுத்தப்படுகின்றனர். முதல் பாதி காமெடிக்கு யூஸ்ஃபுல்லாக ஏதோ பண்ணியிருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் ஏதோ செய்யப்போகிறார் என மிகவும் எதிர்பார்த்த வில்லன் , விஜயை பயமுறுத்துகிறேன் பேர்வழி என ஏதேதோ செய்கிறார். விஜய் விரைப்பாக அதைபார்த்துக்கொண்டிருக்கிறார். பயம் வரலையாம்! நமக்கு சிரிப்புதான் வருகிறது. வில்லன் கோஷ்டி சீரியஸாக செய்வதெல்லாம் நல்ல காமெடி கலாட்டா! சண்டைக்காட்சிகளிலும் காமெடிக்குப் பஞ்சமில்லை.

படத்தின் ஆங்காங்கே குட்டிகுட்டியாக நல்ல வசனங்கள் வந்து விழுகின்றன. அடிக்கிற சுனாமியில் அல்வாத்துண்டு கிடைத்தால் அனுபவிக்கவா முடியும்! படத்தின் பெரும் பகுதி ஏவிஎம் ஸ்டுடியோவிலேயே செட் போட்டிருப்பார்கள் போல பாட்ஷா காலத்து செட்டு! இன்னும் கொஞ்சம் செலவழித்திருக்கலாம்.

ஏவிஎம் தயாரிப்பாம். ம்ம்!

வில்லுவிற்கும் குருவிக்கும் எவ்வளவோ தேவலாம். க்யூட் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம். மற்ற படி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அப்பாவி ஜனங்களுக்குத்தான் திண்டாட்டம்! சிவ சம்போ!

***

18 December 2009

கோவை மாறிவிட்டது!


கோவை மாறிவிட்டது!-1

கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொருமுறை கோவைக்குச் செல்லும் போதும் வியப்படைகிறேன். சின்னக் குழந்தையின் வளர்ச்சியைப் போல கண்கூடாக அதைக் காணவும் முடிகிறது. அந்த மாற்றம் எத்தகையது? அந்த வளர்ச்சி எதுமாதிரியானது? என்பதில்தான் சிக்கலே. சில மாற்றங்கள், நகரத்தின் முன்னேற்றத்தைக் காட்டினாலும் பலதும் அந்த குளிர்-நகரம் தன் இயல்பை இழந்து வருகிறதோ என பதற வைக்கின்றன. நல்லது கெட்டது என இரண்டுமாய் கலந்து கட்டிய அந்த வளர்ச்சியை, சில நாட்கள் நகரத்தின் சந்துபொந்துகளிலும் பிரதான சாலைகளிலும் தனியே சுற்றித்திரிகையில் காண முடிந்தது.

கொஞ்சம் விளையாட்டகவே தொடங்குவோம். வ.உ.சி பூங்கா! சிறுவயது முதலே எனக்கும் என் நண்பர்களுக்குமான சரணாலயம். பள்ளி நேரத்தில் கட் அடித்தது தொடங்கி கிரிக்கெட் கற்றுக்கொண்டது, அரை பீரை ஆறு பேர் அடித்து பார்த்தது , சைட் அடித்தது, ஈவ் டீசிங்கில் சிக்கி உதைவாங்கியது, பின் அந்த ஆறு பேரும் பல ஊர்களுக்கும் பிழைக்க செல்லும் முன் லிட்டர் கணக்கில் கண்ணீரோடு விடை பெற்றது வரை அனைத்திற்கும் ஒரே சாட்சி அந்த பூங்காவும் அதன் முன்னாலிருக்கும் பெரிய மண் அடர்ந்த மைதானமும். இன்றைக்கும் ஊரிலிருந்து திரும்பி வரும் வெளிநாட்டு நண்பனை காண தோதான இடம் அந்த மைதானத்தின் கட்டக்கடைசியிலிருக்கும் ஒற்றை மரத்தடிதான்.

அந்த மைதானத்தில் இப்போதும் பலர் கிரிக்கெட் ஆடுவதை காணமுடிந்தது. கார்க் பந்தில் விளையாடுவதே எட்டு ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது. டென்னிஸ் பந்தில் விளையாடுபவர்களை அந்த மைதானத்தில் பார்ப்பது மிக மிக அரிது. ஆக்ரோஷ பவுலர்களின் பந்துவீச்சில் ஸ்டம்புகள் தெரித்து உடையும் , பேயடி அடிக்கும் பேட்ஸ்மேனின் பந்தடித்து ரத்தம் சொட்ட விளையாடும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன். இந்த முறை கார்க் பந்துகளே இல்லாத ஒரு மைதானம். டென்னிஸ் பந்துகளின் ராஜ்யமாய் காட்சியளித்தது. அதிலும் பலர் கலர்கலராய் யுனிபார்மெல்லாம் போட்டுக்கொண்டு காலில் ஸ்போர்ட்ஸ் ஷூவுடன் விளையாடுவதை பார்த்தேன். வெற்று காலுடன் பேட் கட்டிக்கொண்டு ஜீன்ஸ் பேண்ட் முழுக்கை சட்டை என விளையாடியதெல்லாம் மாறிவிட்டது. விசாரித்தேன். யாரோ சிறுவன் கார்க் பால் தலையில் அடித்து இறந்து போனதால் கோவை முழுக்கவே கார்க்கில் விளையாடத் தடையாம். அந்த சிறுவன் எப்போது இறந்தான் யார் அடித்தார்கள், என்ன ஆயிற்று விபரங்கள் இல்லை! எப்போதாவது விளையாடும் பரியல் கிரவுண்டிலும் அதே நிலை. அங்கேதான் பந்து தலையில் பட அதிக வாய்ப்புகள் உண்டு. குனியமுத்தூர் கார்பரேஷன் கிரவுண்டிலும் சேம் கேம்! கார்க் பந்தில் விளையாட வேண்டும் போலிருந்தது , நண்பனின் வீட்டின் தோட்டத்தில் எப்போதோ மறைத்து வைத்த இரண்டு பந்துகள் இன்னும் கிடக்கிறது தூசி படிந்து!

சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சுற்றியிருக்கும் குளங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டு நீர்நிலைகள் நிறைந்து காணப்பட்டது. இம்முறை தலைகீழ். வாலாங்குளம் மற்றும் பெரிய குளத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. சிறுதுளி அமைப்பினரின் முயற்சிகளைக் கண்டு பெரிதும் வியந்திருக்கிறேன். கோவையின் நீர்நிலைகளை காப்பது என்னும் முடிவோடு களமிறங்கிய போது என் பத்து ரூபாயையும் கொஞ்சம் உழைப்புதவிகளையும் செய்திருக்கிறேன். சிறுதுளி அமைப்பு இன்னும் செயல்படுகிறதா? பிரிக்கால் பிரச்சனையில் அந்த அமைப்பும் சேர்ந்து மூழ்கியதா? தெரியவில்லை. விசாரிக்கவும் விருப்பமில்லை.
அவினாசி ரோடு மேம்பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வெறும் கார்களும் பஸ்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாலத்தின் கீழே வழியமைக்கப்பட்டு சென்னை டிராபிக் போல எடக்கு மடக்காக திருப்பி விடுகிறார்கள். ஊருக்குள் டூவிலர்கள் எண்ணிக்கை தாறுமாறாக பெருகியிருக்க வேண்டும். நகர எல்லைக்குள் சைக்கிள் உபயோக்கிப்பவர்களை காண்பது அரிதாக தெரிந்தது. நிறைய மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்களை காண முடிந்தது. அவர்களுடைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அதைப்பற்றி பின்னால் பேசுவோம்.

நான் பார்த்து அதிசயித்த ஒரே விசயம். ரேஸ்கோர்ஸ் ரோடு! இன்னும் அதே பழமையுடனும் வளமையுடனும் , அதை சுற்றி ஓடும் கணவான்களுக்கு இன்னும் கொஞ்சம் அடிப்படை வசதிகளோடு அப்படியே இருக்கிறது. ஒரு மரம் கூட வெட்டப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு மரத்திலும் எங்கள் ஆறு பேர் இன்ஷியலும் இன்னும் இருக்கிறது! எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ரேஸ் கோர்ஸை சுற்றி ஓடி ஓடி களைத்து அமர்ந்து கொண்டு அந்த மரங்கள் ஒவ்வொன்றிலும் செதுக்கிய நினைவுகளோடு!


-நேரமிருந்தால் தொடரலாம்...

08 December 2009

ஓட்டுக்குப்பணம் !







'' அடேய் நீங்கள்ல்லாம் நல்லா இருப்பீங்களா! இப்படி வீட்டுக்கு வீடு கவர்ல காசு வச்சு குடுத்து ஓட்டு வாங்கறீங்களே , உங்களையெல்லாம் தட்டிக்கேட்க யாருமே இல்லைனு நினைச்சீங்களா.. இருங்கடா உங்களையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா! ''

எப்போதும் திண்ணையில் அமர்ந்து கொண்டு தினதந்தி படிக்கும் பெரியவர் அவர். தமிழ் சினிமாவில் ரவுடிகளை தட்டிக்கேட்கும் அப்பாவிகளை ஒத்தவர். பெயர் கோதண்ட ராமன். இன்று அளவுக்கதிகமான கோபத்தோடு கத்திக்கொண்டிருந்தார் . இரண்டு நாட்களாகத்தான் இந்த கோபம்.ஓட்டுக்கு பணம் என்று அசுரவேகத்தில் செயலாற்றிக்கொண்டிருந்தன அந்த ஊரில் போட்டியிடும் இரண்டு பிரதான கட்சிகளும் . அதுவும் அவரது தெருவில் கண்ணெதிரே நடப்பதை பார்த்து மிகவும் மனவருத்தத்தில் இருந்தார் அவர்.

பாமதேக கட்சியின் உறுப்பினர்கள் கையில் கத்தைகத்தையாய் கவருடன் தெனாவெட்டாய் நின்றபடிப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

''என்ன பெரிசு உடம்பு எப்படி இருக்கு ''

''எனக்கு என்னடா என்பத்தஞ்சு வயசிலயும் கல்லுமாதிரிதான் இருக்கு.. உன்னைத்தான் தான் கொல்லைல கொண்டு போகப்போகுது.. பார்த்திட்டே இருங்க.. எல்லாத்தையும் கடவுள் பார்த்துட்டுத்தாண்டா இருக்கான்''

''யோவ் போயா வென்று , ஓவரா பேசின கைய கால வாங்கிருவோம் ஓடிப்போயிரு ''

சுற்றி பொது மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க , தொண்டர் ஒருவன் ''இன்னாமாமா இவன்கிட்ட போய் வாய்லபேசிட்டு '' அவரது சட்டையை பிடித்து அடிக்க பாய்கிறான்.

''மாமா விட்றா..பெரிசுக்கு வேற வேலை இல்ல.. ரெண்டு அடி வச்சா செத்துரும்.. இன்னா பெரிசு பாத்தல்ல பசங்கள ம்னாலே ஆளயே தூக்கிருவானுங்க எப்படியும் ரெண்டு வருஷத்தில செத்துருவ இன்னாத்துக்கு இப்படி அலம்பல் பண்ற மூடிக்கிட்டு பேப்பர் படிச்சிட்டு வீட்டில பில்டர் காபி தருவாங்க அத குடிச்சிட்டு கம்முனு கிடக்கறதுதானே''

''டேய் நீங்கல்லாம் நல்லா இருப்பீங்களா.. விடமாட்டேன்டா நீங்க பணம் குடுத்து ஓட்டு சேக்கறத விடமாட்டேன்டா! இது நான் சுதந்திரம் வாங்கி குடுத்த நாடுடா! ''

''நாங்க இந்த வாட்டியும் ஜெயிச்சு நல்லாத்தான் இருப்போம்.. நீ பொத்திகிட்டு கிட.. ஓவரா பேசினா வாய கிழிச்சிருவோம்!''

தன்னால் ஏதும் செய்ய இயலாத நிலையை நினைத்து கவலையாய் திண்ணையில் வந்து தேமேவென அமர்ந்து கொண்டார்.

பிச்சைக்காரர்கள் போல கட்சித்தொண்டர்கள் ஒரு ஒரு வீடாய் போய் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு கவர் கொடுத்து அவரவர் குலதெய்வங்களிடம் சத்தியம் வாங்கிக்கொண்டிருந்தனர். சிலரிடம் வெற்றிலைப்பாக்கிலும் சிலரிடம் பாலிலும் சிலரிடம் கற்பூரம் அடித்தும் சத்தியம் வாங்கிக்கொண்டிருந்தனர். சத்தியமான ஓட்டுக்கள்.

கோதண்டராமனுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு வாங்கித்தந்த சுதந்திரம் இப்படி கவருக்குள் போகிறதே என்று.

முடிவெடுத்துவிட வேண்டியதுதான். இதற்கு மேலும் காத்திருந்தால் நாட்டையே குட்டிசுவராக்கி விடுவார்கள் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார்.

விடிந்ததும் முதல் வேலையாக போலீஸை பார்க்க வேண்டும் , அவர்களிடம் ஒரு புகார் கைப்பட எழுதித்தர வேண்டும்... இல்லை இல்லை அவர்களும் லஞ்சம் வாங்கிக்கொண்டு விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. பேசாமல் தேர்தல் கமிஷனுக்கு தந்தி கொடுத்துவிட வேண்டியதுதான்.. இல்லாவிட்டால் கலெக்டரிடம் பேசலாமா! .. ஐ.ஜி.. தாசில்தார்.. பஞ்சாயத்து போர்டு தலைவர் .. யாரிடம் இவர்களை குறித்து புகார் செய்வது.. யாரிடம் சொன்னால் வேலை நடக்கும்.. ஆயிரம் ஆயிரம் குழப்பங்களுடன் தூங்கிப் போனார்.

விடிந்தது..

''டேய் மாமா என்னடா இந்தாளு வீடு இப்படி கிடக்கு.. ''

'' தெரிலயே மாமா ''

''இன்னாடா கிழவன் என்னானான் ''

கோதண்டராமனின் பேரன்கள் இருபுறமும் கைத்தாங்கலாக அவரை தூக்கி கொண்டு வெளியே வந்தனர். உயிர் இருந்தது. ஆனால் உடலெங்கும் அடி . முகமெல்லாம் வீங்கி இருந்தது. சட்டையெல்லாம் கிழக்கப்பட்டிருந்ததது.

''இன்னா மாமா கிழவன்னு கூட பாக்காம அடிச்சிருக்கானுங்க.. '' தொண்டன் ஆச்சர்யமாய் கேட்டான்.

''நம்மாளுங்க அடிக்கலயே.. அட்சிருந்தாலும் சொல்ருப்பானுங்க .. யாரா இருக்கும் மச்சி பாக்கவே பாவமா இருக்குடா.. எவன்டா இந்தாள இந்த அடி அடிச்சது.. நம்ம முத்துவுக்கு போன் போடு அவன்தான் நேத்திக்கு ரொம்ப டென்சனான்''






''மாமா நான் ஏற்கனவே கேட்டேன் அவன் இல்லியாம் ''

********

அடுத்த நாள் தினப்பத்திரிக்கையில் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி.

சுதந்திர போராட்ட வீரர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட பொது மக்கள். முன் விரோதம் காரணமா?

டீக்கடையில் இந்த செய்தியை படிக்கும் ஒருவர்.

'' கிழவனுக்கு வேணும்யா.. அவன் கட்சி அவன் கொள்ளையடிச்ச காச மக்களுக்கு குடுக்கறான்.. இவனுக்கு இன்னா வந்துச்சு.. இவன் இன்னாத்துக்கு குடுக்காதனு நடுவுல நிக்கறான்.. எனக்கு வேற மூணு நாளாச்சு இன்னும் கவரு வரல.. போய் ஒரு எட்டு கட்சி ஆபீஸாண்ட பாத்துட்டு வந்துடறேன்.. ''


பாமதேகவும் மாமாபீகவும் மாறி மாறி கவர்கள் கொடுத்தக்கொண்டிருந்தனர்.


**********


**************

இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டி உள்ளதால் மீள்கதை!

04 December 2009

பேரினவாதத்தின் ராஜா

அருள் எழிலன். தமிழ் பத்திரிக்கையுலகில் நான் பெரிதும் மதிக்கும் பத்திரிக்கையாளர்களில் முதன்மையானவர். ரஜினிகாந்தை எனக்குத் தெரியும் அவருக்குத்தான் என்னைத் தெரியாது என்று ஒரு காமெடி உண்டு. அப்படித்தான் எனக்கும் அவருக்குமான உறவு. அதிகம் பழக்கமில்லை. ஆனால் பிரபல வார இதழிலும் இணையத்திலும் அவரது எழுத்தை தூரத்திலிருந்து வாசிக்கும் நேசிக்கும் ஒரு வாசகன். இவரது சமூக அக்கறையுள்ள கட்டுரைகளில் தனக்கென ஒரு தனி பாணியுடன் வலம் வரும் மிகச்சிறந்த எழுத்தாளர். அவருடைய முதல் புத்தகம் இந்த வாரம் வெளியாகிறது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை அதைத்தொடர்ந்த சம்பவங்கள் ராஜபக்சே அரசின் அராஜகப்போக்கு என பல பிரச்சனைகள் குறித்துப்பேசும் தனது ''பேரினவாதத்தின் ராஜா''என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் வரும் ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.

புலம் வெளியீடு.

அனைவரும் வருக!



(படத்தை சொடுக்கியும் விபரங்கள் அறியலாம்!)

03 December 2009

விமர்சனம் எக்ஸ்பிரஸ் - ஆர்யா2 + நான் அவன் இல்லை2



யோகி பார்த்து புண்பட்டிருந்த நெஞ்சுக்கு இதமாக இரண்டு படங்கள் பார்க்க நேரிட்டது. ஒன்று ஆர்யா2 மற்றொன்று நான் அவன் இல்லை 2.

முதலில் ஆர்யா. தமிழில் குட்டி என்ற பெயரில் தனுஷ்,ஸ்ரேயா நடிப்பில் உருவாகும் படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷன். அதன் இரண்டாம் பாகம் மிகச்சமீபத்தில் சென்னையில் வெளியாகியுள்ளது. முதல் பாகம் நான் பார்க்கவில்லை. அதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் பார்த்த பின் முதல்பாகம் பார்க்கும் ஆவல் மேலிடாமல் இல்லை. டைட்டில் போடும் போது துவங்கி படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் படத்தின் இயக்குனர் சுகுமாரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் கதை இரண்டு நண்பர்கள் , இருவரும் காதலிக்கும் ஒரு பெண் என கோடி முறை அடிவாங்கிய அதே சொம்பு கதைதான். ஆனால் இதன் கதையாக்கமும் பாத்திரப்படைப்பும் வித்தியாசம். வில்லத்தனமான லூசுத்தனமான குறும்புத்தனமான அக்மார்க் மௌனராகம் கார்த்திக் மாதிரி அமைதிப்படை அமாவாசை போன்றதொரு ஹீரோ , ஜப் வீ மெட், புன்னகைமன்னன் பாணி குறும்புப்பெண் நாயகி, டல்லான நண்பன் என இந்த மூவரைச்சுற்றி கதை செல்கிறது.

முதல்பாகத்தின் ஆர்யா பாத்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கதையமைத்துள்ளதால் , இரண்டாம் பாகம் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். படத்தின் மிகப்பெரிய பலம் சோகமான காட்சியிலும் ஆக்சன் தூள்பறக்கும் காட்சிகளிலும் துள்ளலான காமெடி. இடைவேளை வரை சிரித்து சிரித்து வயிறு நிஜமாகவே வலித்தது. கொஞ்சமும் கேப் விடாமல் அடித்து நொறுக்கும் நகைச்சுவை , அதிலும் பைத்தியக்கார வைத்தியராக வரும் பிரம்மானந்தம் கலக்கல். எனக்கு இலச்சிமலை ஆத்தா சத்தியமாக தெலுங்கு தெரியாது ஆனால் எல்லா வசனங்களும் புரிவது ஆச்சர்யம்!. ஹீரோ அல்லு அர்ஜூன் இரண்டு விதமான நடிப்பை இலகுவாக செய்திருக்கிறார். அவருக்கு ஆந்திராவில் ஸ்டைலிஸ் ஸ்டார் என பட்டம் கொடுத்துள்ளனர் செம ஸ்டைல் மாமே!. அதிலும் நடனம்! ஹாலிவுட் கிளாஸ். நாயகி ஒல்லியாக இருந்தாலும் கில்லி! உடலில் கவர்ச்சி காட்டினாலும் முகம் வசீகரிக்கிறது. நவ்தீப் தென்னிந்திய சினிமாவிற்கு கிடைத்துள்ள அடுத்த நிழல்கள் ரவி! பாவம் படம் முழுக்க கோபமாக அலைந்து கொண்டு கடைசியில் அழுகிறார். படத்தில் பெரிதும் கவர்ந்தது கிராமத்து காதலனாக வரும் அந்த தாடிக்கார நெட்டை இளைஞர் , பெயர் தெரியவில்லை அருமையாக நடித்திருக்கிறார்.

படம் முழுக்க நகைச்சுவை நிரம்பியிருந்தாலும் , அதனூடே வருகிற நாயகனின் நட்பு , சிலிர்க்க வைக்கிறது. நமக்கும் அந்த மாதிரி ஒரு பிரண்டு இருந்தா நல்லாருக்குமே என நினைக்க வைக்கிறது. படத்தின் இசை தேவிஸ்ரீபிரசாத்தாக இருக்க வேண்டும் , அனைத்தும் துள்ளல். தமிழில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும். படத்தை பரிந்துரைத்த கேபிளாருக்கு நன்றி! முதல் பாகம் பார்க்காதவர்கள் தயங்காமல் போய் பார்க்கலாம்! உள்ளத்தை அள்ளித்தாவிற்கு பிறகு ஒரு விநாடி கூட விடாமல் சிரிக்க வைத்த படம் இது! படத்தின் நீளம் நெருடல். ஆந்திராவே சந்திரசேகரராவ் உண்ணாவிரதமிருந்து ஊரே பற்றியெறிந்தாலும் அதற்கு நடுவில் இந்த படம் சக்கை போடு போடுகிறதாம்..





நான் அவன் இல்லை – 2 , இந்த வாரம் பார்த்த இரண்டு படங்களும் இரண்டாம் பாகப்படங்களாக போனது ஆச்சர்யம். அதிலும் தமிழ்,தெலுங்கு இரண்டிலும் அதிகம் வெளிவராத சீக்வல் படங்கள். பொதுவாக சீக்வல் அல்லது தொடர்ச்சிப் படங்களில் முதல் பாகத்தில் எது மக்களை அதிகம் கவர்ந்த்தோ அதை ஓவர் டோஸில் கொடுத்து கடுப்படிப்பார்கள், இதிலும் அதே பிரச்சனை , ஓவர் கவர்ச்சி , ஓவர் மொக்கை , ஓவர் சீன் , ஓவர் ஹீரோயிசம் என எல்லாமே டூமச். கதை அதேதான். பெண்களை ஏமாற்றும் நல்லவன். ஏமாற்றி பெற்ற பணத்தை நல்ல காரியத்திற்கு செலவழிப்பான். கிளைமாக்ஸில் தப்பித்துவிடுவான். இதிலும் நான்கு கொத்துகுலையுமான கும்ஸான பெண்கள். அனைவருமே ஏதோ ஸ்விட்சர்லாந்திலும் , ஐஸ்லாந்திலும் மைனஸ் டிகிரி குளிரில் காத்தோட்டமாக நேனோ மினி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு அலைகிறார்கள். பார்க்க பாவமாக இருக்கிறது , குளிரும்ல!. அவங்களுக்கு குளிர்னாலும் நமக்கு பயங்கர சூடு!

படத்தில் நிறைய நல்ல ‘சீன்கள்’ இருக்கிறது. பட்டுகோட்டையாரின் நக்கல் நையாண்டி வசனங்கள் இருக்கிறது. ஜீவனின் அசால்ட்டான நடிப்பு இருக்கிறது. படமும் இரண்டு மணிநேரம் நல்ல என்டர்டெயின்மென்ட் , முதல் பாகத்தினை விட நன்றாகவே இருக்கிறது. இசைதான் எடுபடவில்லை. டி.இமான் பாவம்! சங்கீதா மற்றும் அவர் சார்ந்த காட்சிகள் படத்தின் மிகப்பெரிய குறை! அந்த ஈழ சென்டிமென்ட் காட்சிகள் , படத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் ஸ்பார்ன்சராக இருந்திருக்கலாம். இதுபோன்ற படத்தில் ஈழம் குறித்து பேசுவது கழிவறையில் அமர்ந்துகொண்டு ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவது போலிருக்கிறது. மற்றபடி படம் பிட்டு பிட்டாக பார்ப்பவர்களுக்கு அருமையாகவே இருப்பதாகவே தகவல். என்டர்டெயின்மென்ட் கியாரன்டீட்!





29 November 2009

யோகி - வன்முறையின் உச்சம்




உலகிலேயே மிகக்கடுமையான தண்டனை ஒன்று இருக்கிறது. மரண தண்டனை உடனடி பலன்தான் தரும். ஆனால் இதுவோ அணுஅணுவாய் சித்திரவதை செய்து கொல்லும். நம்மில் பலரும் அனுபவித்திருக்கிற ஒன்றுதான். ஒரு குழந்தையை அரைமணிநேரம் அழவிட்டு விடாமல் கேட்டுப்பாருங்கள். மண்டை வெடித்து சிதறிவிடுவதைப் போல கடுமையான எரிச்சலும் கோபமும் சொல்ல முடியாத வேதனையும் அடைய நேரிடுவோம். அதை அனுபவிக்க உங்கள் குழந்தைகளை கிள்ளிவிட்டு அழவைத்து பார்த்து முயற்சிக்க வேண்டாம். யோகி என்றொரு திரைப்படம் வந்திருக்கிறது. ரத்தமில்லாமல் வலியில்லாமல் மின்சாரத்தாக்குதலை தரும் வேதனை, ஒரு குழந்தையோடு! அமீரின் யோகி

நண்பர்கள் டூட்சி படத்தின் காப்பி என்றார்கள். நல்ல வேளையாக அந்த ஆப்பிரிக்க படத்தை நான் பார்த்திருக்கவில்லை. ( 15 ரூபாய்க்கு டிவிடி விற்கும் மணியிடம் ஸ்டாக் இல்லை ). கதை என்னவோ ஏற்கனவே பார்த்திருக்கிற சிட்டி ஆஃப் காட் ( பெரிதாக தாதாயிசம் செய்யத் துடிக்கும் சின்ன லெவல் ரவுடி கும்பல்) , தி கிட் ( எதிர்பாராமல் வந்து சேரும் பணக்கார குழந்தை ) போன்ற படங்களின் கதைகளின் கலவைதான். ஒரு குட்டி ரவுடி கும்பல் , அதன் தலைவன், கொள்ளையடிக்க போன இடத்தில் கிடைக்கும் குழந்தை, குழந்தையோடு காதல் , அதனால் திருந்தி மீண்டும் குழந்தையை ஒப்படைக்க போன இடத்தில் மரணம்! பியூட்டி அண்டு தி பீஸ்ட் வகையறா நான்கு வரி கதைதான். இது மாதிரி கதைகளில் கதாநாயகி மீது வரும் காதலால் ரவுடி திருந்துவான். இதில் குழந்தை மேல் வரும் அன்பால்!.

சுப்ரமணிய சிவா கதை & இயக்கம் , அமீர் திரைக்கதை & வசனம் + நடிப்பு. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே.. ச்சே நம்மாளு உலக சினிமா எடுத்துட்டாய்ங்கடா என்று மார்தட்டிக்கொண்டேன் ( என்னுடைய மார்பை!). இன்டர்வெல்லிலேயே நண்பர் சொல்லிவிட்டார் அடச்சீ இது டூட்சீ என. அமீர் மீது அளவில்லா மரியாதை உண்டு. ஒவ்வொரு படத்திலும் விதவிதமான தளங்களை எடுத்துக்கொண்டு வெற்றியும் பெற்றவர். நம்மூரு லோக்கல் ஹிட்ச்காக் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறேன். ஏனோ இப்படி டுபாக்கூர் வேலை பார்த்திருப்பார் என நம்பமுடியவில்லை. சரி படத்தை பற்றி பேசுவோம்.

மேக்கிங் அட்டகாசம்! அதற்காகவே பார்க்கலாம் படத்தை. அதிலும் ஒளிப்பதிவு பெயர் போடும் போது ஒளிப்பதிவு உதவி என பத்துக்கும் மேற்பட்ட பெயர்களை பார்க்க முடிந்தது , உழைப்பு தெரிகிறது. ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம். குழந்தை அழும் குரலிலிருந்து கத்தி கீசிடும் ஒலி வரை கொரியன் திரைப்படங்களுக்கு இணையான ஒலி ஒளி. திரைக்கதை அமைப்பு ஒரிஜினலில் இருந்து திருடப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் யூகிக்க முடிகிற ஒன்றாகத்தான் இருக்கிறது. அதிலும் வில்லனாக வரும் வின்சன்ட் அசோகனின் பாத்திரம் சப்பை!

அமீர் - நன்றாக நடித்திருக்கிறார். படம் நெடுக செல்லும் ஹீரோயிசத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். திகட்டுகிறது. ஹீரோயிசத்திற்கு அமீர் எதற்கு? அதுக்கு கோடம்பாக்கத்தில்தான் ஒரு பட முதல்வர்கள் நிறைய பேர் இருக்கின்றனரே!. கிளைமாக்ஸில் நீ....ளமான சண்டை , நடுநடுவே பதினைந்து பேரை விரட்டி விரட்டி அடிப்பது மாதிரியான காட்சிகள் உலக திரைப்படவிழாவுக்கு அனுப்பும்போது வெட்டி விடுவார்களோ? பாடலாசிரியர் சினேகன் நிறைய முடியோடு அறிமுகமாகியுள்ளார். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். (ஆனால் அவரது பாத்திரப்படைப்பு சிட்டி ஆஃப் காட் படத்தின் லில் இசட் என்னும் வில்லனை போன்று இருக்கிறது) , மதுமிதா , ஸ்வாதி நடித்திருக்கின்றனர்.

விலங்குகள் வதை தடுப்பு சங்கம் இருப்பது போல குழந்தைகள் வதை தடுப்பு சங்கம் தொடங்கலாம். படத்தில் வரும் குழந்தையை படாதபாடு படுத்தியிருக்கின்றனர். சென்சாரும் அதை அனுமதித்திருக்கிறது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ்தான் ஆனால் வன்முறை தூக்கலாக இருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டையில் புஜபலமெல்லாம் காட்டி ஆவென கத்துகிறார் அமீர் , ம்ம் ஒன்றும் சொல்வதற்கில்லை. படம் முழுக்க பல காட்சிகளில் அமீர் நடக்கிறார் , நடக்கிறார் , நடக்கிறார்.. பில்லா நினைவுக்கு வந்து தொலைத்தது.

படத்தின் இசையைப் பற்றி கட்டாயம் சொல்ல வேண்டும். யுவன் சங்கர் ராஜா. ஆரம்பத்தில் ஒரு பாடல் வருகிறது , நடுநடுவே பாடல்கள் ஒன்றும் மனதில் ஒட்டவில்லை. பிண்ணனி இசை பல இடங்களில் 7ஜி ரெயின்போ காலனி , இளையராஜாவின் பழைய படங்களின் பாதிப்பு. கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். படம் நெடுக வரும் அந்த தீம் மியூசிக் , அழகான லுல்லபி(தாலாட்டு). நன்றாக இருக்கிறது. ஆனாலும் மனதிற்குள் இதை எங்கிருந்து சுட்டுருப்பாய்ங்க என்றொரு கேள்வி எழாமல் இல்லை. காரணம் எங்கேயோ கேட்ட இசை!

படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் சிறுகதை! அருமையான காட்சிகள் அது, பார்ப்பவர் மனதிலறையும் உண்மைகள்.

சண்டைக்காட்சிகள் , தேவையில்லாத ஹீரோயிசம் , கொஞ்சம் வன்முறை என படத்தில் நிறைய குறைத்திருந்தால் தமிழில் வந்த உலகசினிமாவாக இருந்திருக்கும். ஏனோ இரண்டு வருடமாக ஒவராக செதுக்கி செதுக்கி எல்லாமே ஒவராகிவிட்டிருக்கிறது. ஒவரா வெந்த சோறு குழைஞ்சிரும்னு சொல்லிருக்காங்களே! அப்படித்தான் இருக்கு.

அமீர் ஒரு மிகச்சிறந்த கலைஞர். இதைவிட சிறப்பான படமெடுக்கும் திறமையுள்ளவர். இம்முறை தோற்றிருக்கிறார். டூட்சி படத்தின் காப்பியாக இருந்தாலும் நல்ல கதையாக இருப்பதால் சிறப்பாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். படம் முடிந்து வெளியில் வரும் போது ஒரு வித மன சோர்வை கட்டாயம் ஏற்படுத்துகிறது. தமிழில் ஒரு புதிய முயற்சி என்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

யோகி - வன்முறையின் உச்சம் , தலைவலிதான் மிச்சம்!

27 November 2009

காமன்மேன்களின் மரணம்!




அந்த காமன்மேன்கள் ஒன்றாகத்தான் பயணித்தனர். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சனைகள். காய்கறி வாங்கவேண்டும். குழந்தைக்கு ஸ்கூல் பீஸு. கிரெடிட் கார்ட் கட்டணம். போனஸில் டிவி. இரவு உணவுக்கு சப்பாத்தியா பூரியா , வீட்டிற்கு ஆட்டோ பிடித்தால் இருபது! நடந்தால் ஃப்ரீ! , மனைவி வந்திருப்பாளா அலுவலகத்திலிருந்து , தனியாக இருக்கும் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கும் இப்படி பலவித கேள்விகளோடும் குட்டிகுட்டி கனவுகளோடும்தான் அந்த ரயிலில் ஒன்றாக பயணித்தனர். இறங்கினர். எவனோ ஒருவன் எங்கிருந்தோ வந்து சரமாரியாக சுடத்துவங்கினான். சிலர் சுடத்துவங்கினர். சிலர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இதெல்லாம் முடிந்து...

ஓராண்டு முடிந்துவிட்டது. போன வருடம் இதே நாள் சிலர் மும்பையின் பிரதானமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் ரயில் நிலையத்திலும் தாக்குதல் நடத்திமுடித்து. அந்த நாட்கள் இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. ஒருபக்கம் கையில் துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை போலீசார். இன்னொரு புறம் அவர்களுக்கு பின்னால் தொலைகாட்சிக்காரர்கள் கையில் கேமராவுடன் பறந்து கொண்டிருந்தனர். போலீசாரின் ஒவ்வொரு நகரலும் நேரடி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் அதிரடி செய்திகள் ''நான் இப்போ கையில் மெஷின் கன்னோட ஹோட்டல் உள்ளே பூனை மாதிரி நுழையற ஒரு கமாண்டோ பின்னால நிக்கறேன்'' என உடனுக்குடன் சுடச்சுட தரப்பட்டன. இதில் போட்டி வேறு தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலில் புகுந்ததை முதன்முதலில் காட்டிய டிவி சேனல் நாங்கள்தான் என மார்த்தட்டிக்கொண்டன. அலசல்கள் , பேட்டிகள் , பிணைக்கைதிகளாக பிடிபட்டிருந்தவர்கள் வெளியில் வரும்போதே மூஞ்சிக்கு முன்னால் மைக்கை நீட்டி HOW DO YOU FEEL ABOUT THIS ATTACK என கடுப்படித்துக்கொண்டிருந்தனர். மும்பையில் நடந்த தாக்குதல் ஏதோ தாஜிலும் ஓபராய் ஹோட்டலிலும் மட்டுமே நடந்தது போல ரயில்நிலையத்தில் ஏதோ தீபாவளிக்கு வெடிவெடித்தது போலவும் நடுநிலையோடு செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தன. நடுவில் வெளியான கார் விளம்பரங்கள் கூட மனதிலிருக்கிறது. எல்லாம் முடிந்து வெளியான பின்னும் செய்தி பஞ்சத்தில் அடிபட்ட ஆண்டிகள் விடாமல் தாஜ் ஹோட்டல் தாத்தாக்கள் ஸ்விம் சூட்டில்! ஒபராய் ஹோட்டல் டீயில் ஈ மிதக்கிறதே! என மாறிமாறி செய்தி வெளியிட்டன. ரயில் நிலைய மரணங்கள் குறித்தோ அல்லது அங்கே நடந்தது என்ன என்பதைப்பற்றியோ இறுதிவரை செய்திகளில் பெட்டிகூட வரவில்லை. சில காவலர்கள் தங்களுடைய இன்னுயிரை இதில் தியாகம் செய்தனர். அமெரிக்காவிற்கு கிடைத்த 9/11 போல இந்தியாவிற்கும் வருடந்தோறும் அஞ்சலி செலுத்தவும் , பேரணி போகவும் , மெழுகுவர்த்தி வியாபாரத்திற்கும் ஒரு காரணம் கிடைத்துவிட்டது!

தேர்தலில் இந்த சம்பவத்தின் அடிப்படையில் ஓட்டுக்கேட்டது பிஜேபி. ஏனோ அந்த பல்டி நம்மூர் பொதுஜனத்திடம் வேலைக்கு ஆகவில்லை. இதையே தேசியத்தின் ஒற்றுமைக்குரலாக ஓங்கி ஒலிக்க வைத்தது காங்கிரஸ். அதன் அரசியல் வியாபாரத்திற்கு இறந்து போன காவலர்களின் உடல்கள் நன்கு பயன்பட்டது. இதோ இன்றோடு ஓராண்டு முடிந்துவிட்டது. இப்போதும் அந்த ரயில்நிலைய மரணங்கள் குறித்தோ அந்த மக்கள் குறித்தோ எந்த செய்தியும் இல்லை. ஆனால் தொலைக்காட்சிகள் மீண்டும் துவங்கி விட்டன பிளாஷ்பேக் காட்சிகள். அந்த மூன்று நாட்கள்! 26ன்கீழ் பதினோன்னு நடந்தது என்ன? என்று நடந்த நிகழ்வுகளின் ஓளிப்படம் மீண்டும் அரங்கேறுகின்றன. மீண்டும் அதே கார் விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இப்போது தஸ் வோல்ஸ்வாகனும் இணைந்துவிட்டிருக்கிறது. ரயில் நிலையத்தில் இறந்த எனக்குத் தெரிந்த அந்த காமன்மேன்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இதோ ஓராண்டு முடிந்துவிட்டது.

24 November 2009

டணால் தங்க விலை!



இந்த இந்தியாக்காரங்களுக்கும் மட்டும் ஏன்தான் தங்கம் மேல இவ்ளோ ஆர்வம்?

இதற்கான காரணத்தை ஆராய வரலாற்றின் பக்கங்களை ‘லைட்டாக’ புரட்டிப்பார்க்க வேண்டும். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் பல நூறு குட்டிகுட்டி ராஜ்ஜியங்கள் தேன்கூடுகள் போல ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான பணம். வித்தியாசமான பொருளாதார கோட்பாடுகள். யாரும் யார் மீதும் படையெடுக்கலாம்.

உதாரணத்திற்கு மடிப்பாக்கம் மன்னருக்கு அந்தப்புரத்தில் சரசமாடி , சோமபானம் அருந்தி வாந்தியெடுத்து போரடிக்கிறது. உடனே மாம்பலம் அரசர் மீது போர் தொடுக்கிறான். மாம்பல மகாராஜாவின் படைகளை துவம்சம் பண்ணி வெற்றியும் காண்கிறான். அடுத்து என்ன? ஊருக்குள் புகுந்து அந்த நாட்டின் கஜானா முதல் ஊரிலிருக்கும் தட்டுமுட்டு சாமான்கள் வரை சகல செல்வங்களும் கொள்ளையடிக்கப்படும். அந்த சூழலில் ராஜாக்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் அப்பாவி மிஸ்டர்.பொதுஜன கோவிஞ்சாமி , தன்னுடைய செல்வங்களை பாதுகாக்க , முடிந்த வரைக்கும் மதிப்பு மிக்க தங்கமாக வாங்கி வைத்துக்கொண்டு போர்க்காலங்களில் வீட்டுத்தோட்டத்திலோ தோப்புகளிலோ புதைத்து வைத்துவிடுவான். இப்படித்தான் தன்னுடைய எதிர்கால பாதுகாப்பிற்காக தங்கத்தை சேர்த்துவைத்துக் கொள்ளும் வழக்கம் நம்மூரில் மட்டுமல்ல உலகெங்கிலும் நம் ஒவ்வொருவருடைய ஜீன்களிலும் பரவியுள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். 2000 வருடங்களுக்கு முன்னால் எகிப்தில் தொடங்கி இன்றுவரை தங்கமோகம் மனிதனுக்குள் இருந்துள்ளது. இன்றும் நம்மூரில் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் குண்டுமணி தங்கத்தில் மூக்குத்தி சைஸிலாவது வாங்கி வைத்துக்கொள்வதை பார்த்திருப்போம். பணத்தட்டுப்பாடு வரும்போதெல்லாம் அதை விற்றோ அடமானத்திற்கோ கொடுத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

இந்த தங்கத்தின் விலை திடீரென ஜெட் வேகத்தில் உயர்வதும் , திடீரென குறைவதும் ஏன்? தங்கத்தின் விலையை யார் தீர்மானிக்கின்றனர்?

முகூர்த்த நாட்கள், விழாக்காலங்கள், போனஸ் நேரம் இப்படி எப்போதெல்லாம் நம் கைகளில் காசு அதிகமாய் புரளுமோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை கூடும்! அந்த நேரத்தில் அதிகம் பேர் தங்கம் வாங்குகின்றனர் அதனால் தங்கம் விலை உயர்கிறது! நம்ம எல்லாருமே இப்படித்தான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மைக்கதை வேறுவிதமாக இருக்கிறதே!


நம் பணப்புழகத்திற்கேற்றாற் போல தங்கத்தின் விலை உயர்ந்தது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. அப்போதெல்லாம் சில ஏஜன்ட்கள் வெளிநாட்டிலிருந்து மொத்தமாக தங்கம் வாங்கி அதை நாடுமுழுதும் இருக்கும் பல ஆயிரம் வியாபாரிகளுக்கு பிரித்து தருவதில் சிக்கல் இருந்தது. எப்போதெல்லாம் வியாபாரிகளுக்கான தேவை அதிகமாகியதோ அப்போதெல்லாம் விலையும் கூடியது.

ஆனால் இன்று ஒற்றை பட்டனை ‘டிக்’ எனத் தட்டினால் அடுத்த நாளே ‘டங்’ என்ற சத்தத்துடன் தங்க்க் கட்டிகள் விமானத்தில் தரையிறங்கிவிடும். இன்ஸ்டன்டாக தங்கத்தை சப்ளை செய்யத் தேவையான வசதிகள் வந்துவிட்டன. கணினியின் பயன்பாட்டால் தங்கத்தினை வாங்குவதும் விற்பதும் எளிதாகியுள்ளது. இது தங்கத்தின் விலை நிர்ணயத்தின் பாணியை மாற்றியுள்ளது. தங்கத்தின் விலை இந்தியர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போதெல்லாம் அதிகமாகிறது என்பதெல்லாம் சுத்த டுபாக்கூர். நம்மூர் மக்களுக்கு எப்போதுமே தங்கத்தின் மீதான மோகம் மிகமிக அதிகம். அது ஒரே நாளில் திடீரென ஊரில் இருக்கும் அத்தனை பேரும் ஜாய் ஆலுக்காஸ் வாசலில் தவம் கிடப்பதெல்லாம் கிடையாது. சென்னையிலிருக்கும் ஒரு பிரபல நகைக்கடையின் தினசரி விற்பனை சராசரியாக ஐம்பது லட்சமாம்!

தங்கத்தின் விலை ரங்கநாதன் தெருவிலோ ராஷ்டிரபதி பவனிலோ தீர்மானிக்கப்படுவதில்லை. எல்லாமே நியூயார்க்கில் . இதை ‘LONDON GOLD FIXING’ என்கின்றனர். ஏன் நியூயார்க்கில் நிர்ணயிக்கப்படும் விலைக்கு லண்டன் கோல்டு பிக்சிங்னு பேரு? ஓவராக யோசிக்க வேண்டாம் , இரண்டாம் உலகப்போருக்கு முன்பு வரை லண்டனில் தீர்மானிக்கப்பட்டு வந்த தங்கத்தின் விலை , அதன்பின் நியூயார்க்கிற்கு இடம் மாறியது , ஆனால் லண்டன் மட்டும் பெவிகால் போல காலாகாலத்திற்கும் ஒட்டிக்கொண்டது.

உலகின் முண்ணனியான ஐந்து தங்க வர்த்தகம் செய்கிற பெரும் நிறுவனங்கள்( இவர்களுக்கு புல்லியன்ஸ் என்று பெயர்) தினமும் ஒன்று கூடி பேசி தங்கத்திற்கான விலையை தீர்மானிக்கின்றனர். இந்த விலை டாலர்களில் மதிப்பிடப்படுகிறது. தற்சமயம் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கத்தின் விலை 1070 டாலர்களுக்கு விற்கிறது. எதை வைத்து இந்த விலையை உலக மார்க்கெட்டில் நிர்ணயிக்கின்றனர்? இவர்கள் யார் தங்கத்தின் விலையை முடிவு செய்ய?

ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டினர் தங்க விற்பனைக்காக இரண்டு முக்கிய கால நிலைகளை வைத்துள்ளனர்..

1.SUMMER DOLRDUMS ( கோடைக்காலம் ) – மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை

2.WINTER EUPHORIA ( குளிர்காலம் ) – டிசம்பர் முதல் பிப்ரவரி பாதி வரைக்கும்

கோடைக்காலத்தில் தங்க வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பலர் தங்களுடைய தங்கத்தினை விற்றுவிட்டு விடுமுறையில் சென்று விடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை மிக அதிக அளவில் குறையும். அதனால் டோல்ட்ரம்ஸ் குறைந்த லாபம் தரக்கூடியது.

குளிர்காலங்களில் தங்க வர்த்தகத்தில் அதிகம் பேர் ஈடுபடுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை அந்த காலங்களில் அதிக அளவில் அதிகரிக்கிறது. குறுகிய கால முதலீடாக தங்கத்தினை வர்த்தகம் செய்பவர்களுக்கு யுப்போரியா அதிக லாபத்தை ஈட்டித்தரும்.
உலகெங்கும் தங்கம் மற்றும் இன்னபிற உணவுப்பொருட்கள் மற்றும் உலோக வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களை SPECULATOR COMMUNITY என்கிறோம். இதில் 95% வர்த்தகம் இன்டர்நெட் வழியாகவே நடைபெறுகிறது. உங்களிடம் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு அதேபோல் பத்துமடங்கு அதாவது ஒரு லட்சத்திற்கு தங்கம் வாங்க முடியும். உடனே உங்கள் கையில் கட்டித்தங்கத்தை வெட்டி எடுத்து தந்து விட மாட்டார்கள். எல்லாமே டாகுமென்ட்டாக இருக்கும். விலை உயரும்போது அதை விற்று லாபம் பார்க்கலாம். இது அதிக அளவிலான குட்டி குட்டி முதலீட்டாளர்களை இந்த வர்த்தகத்தின் பக்கம் இழுத்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக தங்கத்தின் விலை மடமடவென ஜெட்வேகத்தில் உயர்வதற்கான காரணமும் அதுதான். இந்த தங்க விலை ஏற்றம் குறையும் அல்லது இன்னும் அதிகரிக்குமா என்று அனைவருக்கும் பயம் கலந்த ஒரு கேள்வி நிச்சயம் இருக்கும்.

சென்றவாரம் தங்கம் விலை 13000ஐ எட்டியிருக்கிறது. அதுவும் ஒரே நாளில் 1300 ரூபாய் உயர்ந்திருக்கிறது. இந்த மெகா விலை உயர்வு தமாக்கா இந்தியாவிற்கோ உலகத்திற்கோ புதிதல்ல. 1980 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு எவ்வளவு இருந்தது தெரியுமா? 850 டாலர்கள் , ஆனால் அடுத்து இரண்டே ஆண்டுகளில் அந்த விலை குறைந்து வெறும் 250 டாலர்களாக குறைந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்தியா அதில் பெரிதும் பாதிக்கப்படவில்லை. அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு மிகமிக குறைவு. 15 அல்லது 16 ரூபாயாகத்தான் இருந்தது, ஆனால் பொருளாதார வளர்ச்சியில் அது 40முதல் 45ரூபாய் வரைக்கும் உயர்ந்துள்ளது. அதே மாதிரியான ஒரு சூழல்தான் தற்சமயம் நிலவுகிறது, ஆனால் இந்தியாவின் பன்னாட்டுக் கொள்கைகளால் உருவான திடீர் பொருளாதார வளர்ச்சி அதிக பாதிப்பு இருப்பது போல தோற்றமளிக்கிது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் தங்கம் விலை ஓரளவு அதாவது 20% வரை குறையும் என்றே பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உலக அளவில் இது மிகமிக ‘சாதாரணமான நிரந்தரமில்லாத’ விலையேற்றமாகவே கருதப்படுகிறது. குறுகிய கால முதலீடு செய்பவர்கள் வேண்டுமானால் இப்போது தங்கம் வாங்கி அடுத்து மூன்று மாதங்களில் விற்கலாம்! மற்றபடி தங்கத்தின் விலை ஏற்றம் என்பது ஒரு மாயையே , சிறிய அளவில் தங்கம் வாங்குபவர்களுக்கு இந்த விலையேற்றம் எந்தவித பாதிப்பையும் உண்டாக்காது. பெரிய முதலாளிகளுக்குத்தான் பாதிப்பெல்லாம்!

23 November 2009

பழசிராஜாவின்ட விமர்சனம்!


என்ன கண்ணுகளே சுகம்தன்னே! போன வாரத்தில நானும் நம்மோட கூட்டுகாரரும் சேர்ந்துட்டு ஒரு நல்ல படம் காண வேண்டி முடிவாயிடுச்சு. ஆனா ஏது படம்னு முடிவாயி இல்ல. அப்போ தான அந்த ஐடியா வந்துச்சு. பின்னாடி அந்தாளும் நானும் சேர்ந்துட்டு தமிழ்ல வந்துருக்கிற பழசிராஜா படம் காணலாம்னு முடிவு செய்தோம். பழசிராஜா! மலையாளக் கூட்டுகாரன்கள் ஒரு பாடு கஷ்டப்பட்டு எடுத்தபடம் . பட்ஜெட் முப்பது கோடி!. நம்மோட ஊரில வீரபாண்டிய கட்டபொம்மன்னு ஒரு ஆளு இருந்தாங்கல்ல அவரப் போல பழசிராஜா வெள்ளக்கார தொரமார எதிர்த்த ஒரு ராஜா. அந்த ஆளுட கதைய எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி , ஹரிஹரன் டைரக்ட் சேய்திருக்காங்க.

படத்தோட கத எப்போதும் போல நம்மோட நாட்டுக்கு வந்த வெள்ளக்கார தொர மார நம்மோட ஆளு ஒருத்தர் அடிச்சு விரட்ட டிரை செய்து பின்னாடி தோத்துப்போய் மரணமாகறதுதான். லேட்டஸ்டு டெக்னோலஜியும் ரசூல் பூக்குட்டியோட சவுண்டும் இளையராஜாவோட மியூசிக்கும் படத்தில ஒன்னாங்கிளாஸா உண்டு. கதயும் தெரக்கதயும் ஆவ்வ்வ்வ்வ் என்ட குருவாயூரப்பா! ஒரு பாடு மூனரை மணி நேர படம். லாஸ்டில ஹீரோ மரிச்சுருவாருன்னு அறிஞ்சாலும் அத வளிச்சு வளிச்சு ஆவ்வ்வ்வ்வ் ஒரு பாடு தல வேதனைதான் வளி(லி)ச்சு.

நம்மட நாட்டுக்கார கமல் இந்த படத்திட ஸ்டார்ட்டிங்கில் வாய்ஸ் கொடுத்துருக்கு. பழசிராஜாவோட சரத்குமார் நடிச்சிருக்கு. நம்மோட குட்டி கனிகாவும் உண்டு. அந்த பெண்ணு பாடுற ஒரு பாட்டு ‘’காலப்பாணி’’ , இல்ல... இல்ல... சிறச்சால படத்துல வர செம்பூவே பாட்டு போல உண்டாகி இருந்தாச்சு. பேக்ரவுண்ட் மியூசிக்கில் ராஜாசார் தன்ன ராஜா. அடிபொலி!. படத்தில் சுமனும் உண்டு. ஜெயன் உண்டு. எல்லார் மண்டயிலயும் வல்லிய ஒரு குடுமி உண்டு!. எல்லாருட நடிப்பும் நல்லா இருந்தாச்சு. படத்திட எங்க பார்த்தாலும் ஹீரோயிசம்! பஞ்ச் டயலாக்!, வீரவசனம்! அத்தனையும் வேஸ்ட்.

ஜெயமோகன் டயலோக் எழுதிருக்கு. டிரான்சுலேசன் மாத்ரம் சேய்திருந்தாலும் இந்த விமர்சனத்தினப்போல மலையாளமும் அல்லாத்த தமிழும் இல்லாத்த தழையாளத்தில் வசனம் எழுதிட்டுண்டு. இத்தனை பேசியாச்சு , மம்முட்டி.. இன்னொரு அடிபொலி! சூப்பர் ஆக்டர்!.

நம்மட கமல் மருதநாயகம் படம் எடுக்கான் ஒரு பாடு கஷ்டப்பட்டு! பின்ன ட்ரோப் செய்து , பின்ன மர்மயோகி ஸ்டார்ட் செய்து, பின்ன ட்ரோப் செய்து , பழசிராஜாவின காணும்போது அதானு மைன்ட்ல வந்தாச்சு. நம்மட காலத்தில் சரித்ர படம் எடுக்கானெங்கில் நிறைய பட்ஜெட் வேண்டிட்டு உண்டு. இல்லாட்டி போனா பழசிராஜாவினப்போல தூர்தர்ஷன் டைப் நாடகம் ஆகிடும்.
கமல் பொறுமையாயிருந்து தேவையான நிதி திரட்டிவிட்டு மருதநாயகத்தை எடுக்கலாம். நல்ல சினிமாவிற்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். மற்றபடி மலையாளத்தில் பழசிராஜா ஒரு வித்தியாசமான முயற்சி , வரலாற்றோடு எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும் ஆந்திராவிற்கு அல்லுரி சீதாராம ராஜீவைப்போல , தமிழகத்திற்கு கட்டபொம்மன் மருது சகோதரர்களைப் போல கேரளத்தின் தேசபக்திக்கு ஒரு ஹீரோவாக இந்த பழசிராஜா முன்னிறுத்தப்பட்டுள்ளார். இன்னும் நேர்த்தியாக விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தால் பழசிராஜா மெய்சிலிர்க்க வைத்திருப்பார். ஏனோ வழவழ கொழகொழ காட்சிகளும் புரியாத தமிழ் மொழிபெயர்ப்பு வசனங்களும் பகல் காட்சி பார்ப்பவரையே மெய்மறந்து தூங்க வைக்கின்றன. படத்தின் மலையாள பதிப்பில் நான்கு மணிநேரம் ஓடுகிறதாம் , நல்ல வேளையாக தமிழில் மூன்றரை மணிநேரம்தான்.

முன்னூறு கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்திருந்தால் மெல்ஜிப்சனின் பிரேவ் ஹார்ட் போல வந்திருக்கும். முப்பது கோடிக்கு டிரைலர் மட்டுமே மிரட்டலாக வந்துள்ளது. பிரேவ் ஹார்ட் இருந்தால் ஒரு முறை கஷ்டப்பட்டு பார்க்கலாம்!

20 November 2009

பெலிடா நாசிகண்டர்!




ரித்தீஷ் குமாருக்கு அறிமுகம் தேவையா? ஜே.கே.ஆர் இன்றைய ராமநாதபுரம் நாடாளுமன்றத்தொகுதி எம்.பி. ‘பிரபல’ நடிகர். அகிலாண்ட நாயகன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சென்ற வாரத்தில் கிட்டியது. அவரை கண்ட இடம் பெலிடா நாசிகண்டர்.

சில நேரங்களில் மழைக்காக சென்னையின் பெரிய ஹோட்டல்களுக்குள் ஒதுங்குவதுண்டு. அதில் ஒன்று இந்த பெலிடா நாசிகண்டர். மலேசிய உணவுகள் சாப்பிட விரும்பும் புரவலர்களுக்கும் ஓசியில் யாருடைய பாக்கட்டையாவது காலிசெய்து தின்னும் என்னைப்போன்ற இரவலர்களுக்கும் அற்புதமான இடம் இந்த பெ.நா. டிநகர் தெருக்களில் சுற்றித்திரிகையில் பார்த்ததுண்டு. உள்ளே நுழைந்து விட கால்கள் துடிக்கும் ஆனால் பாக்கட்டில் இருக்கும் பத்துரூபாய் அதை தடுக்கும். நிறைய திரைப்படங்களின் ஷூட்டிங்குகள் அங்கே நடந்திருக்கிறது. ஆனால் படங்களின் பெயர் நினைவிலில்லை. கூட்டத்துடன் நின்று வேடிக்கைப்பார்த்திருக்கிறேன். மழைநேரத்தில் எப்போதும் சாப்பிடுகிற கையேந்தி பவன் விடுமுறை என்பதாலும் சம்பளப்பணம் பாங்கில் கிரடிட் ஆகிவிட்டதென்பதாலும் ஒரு குருட்டு தைரியத்தில் உள்ளே நுழைந்து விட்டேன்.

மலேசிய உணவுகளுக்கென்றே இருக்கும் பிரத்யேக கடை இந்த பெலிடா. இதில் நாசிகண்டர் என்றால் சோறு அல்லது உணவு அல்லது சாப்பாடு என்ற பொருளாக இருக்கவேண்டும். ( மலேசிய நண்பர்கள் உதவலாம் ). ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு மினுமினுப்போடு ஜொலித்தது. இருக்கையில் அமர்ந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தால் பக்கத்து டேபிளில் ரித்தீஷ் குமார். அடடா! என்ன செய்ய அவரைச்சுற்றி பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் (?) நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருந்தார்கள். எந்த வித பந்தாவுமின்றி ஒரு கப் காபி குடித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே சில முறை அவரோடு பேசி அறிமுகம் இருக்கிறதென்றாலும் சுற்றி இருந்தவர்களைப் பார்க்க பயமாக இருந்த்த. எனக்கு வயிறும் பசித்தது மெனுவைப்பார்த்தேன்.

குயில் குடாங்கா,மட்டன் மடாங்கா,சிக்கன் சிக்காங்கோ சின்னாங்கோ என விதவிதமான பெயர்கள். சப்ளை செய்யும் ஆளை அழைத்து. இதெல்லாம் என்ன என்றேன். நம்மூர் சிக்கன் மட்டன் மீன் கடம்பா போன்றவையைத்தான் மலேசிய மொழியில் எழுதியிருக்கின்றனர். சோறு கிடைக்குமா என்றேன். மேலும் கீழுமாக பார்த்துவிட்டு மெனுவில் கையை நீட்டிக்காண்பித்தார். அதில் சிக்கன்+நாசிகண்டார்+வெஜிடெபிள்ஸ் என்று போட்டிருந்தது. நான் குயில்+நாசிக்கண்டார் வேண்டும் என்றேன். குயில் என்றால் கடம்பா மீன்!. விலை ரூ.125+வரிகள்.

பல நிமிடங்களுக்கு முன் வைத்த ஒற்றை கிளாஸ் தண்ணீரையும் , பக்கத்தில் அமர்ந்திருந்த ரித்தீஷ் குமாரையும் பார்த்துக்கொண்டு காத்திருந்தேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அருகில் அமர்ந்து ‘சோறு தின்பது’ மிகமிக பெருமையான விசயம்தான். ஆனால் ஹோட்டலில் என்னைப்பற்றிய எந்த பிரக்ஞையுமே இல்லாமல் சப்ளையர்கள் அலைந்துகொண்டு , பா.உ வை விழுந்து விழுந்து கவனித்தது எரிச்சலாக இருந்தது. சாப்பிட்டதுக்கு நான் வரட்டி தருவது மாதிரியும் அந்தாளு பணம் தருவது மாதிரியுமாய் இருந்தது ‘சப்’ளை. அரை மணிநேரத்திற்கு பின் ஒருதட்டில் வெள்ளையாக சோறும் அருகில் கொஞ்சம் முட்டைகோசு பொறியலும் , ஒரு அப்பளமும் , இரண்டு அரை வெந்த அல்லது பொறித்த முழு வெண்டைக்காயும் கொடுத்தனர். அதை வாங்கி டேபிளில் வைத்துக்கொண்டு இந்த கருமத்த எப்படி தின்றது என நினைத்தபடி அமர்ந்திருந்தேன். காரணம் குழம்பில்லை. அப்போ அந்த குயிலு?




நீங்கள் நினைப்பதைப்போலத்தான் அப்பாவியாக நானும் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் ஒரு தட்டில் குழம்பு வந்தது. அதை ஊற்றி பிசைந்தால் சோறெல்லாம் எண்ணெய். சார் இந்த சாப்பாடுல என்னங்க எண்ணையா இருக்கு என்றேன் , அது மலேசியால சாப்பாடு அப்படித்தான் பண்ணுவாய்ங்க என பதில் கிடைத்தது.
குயில் தனியாக வந்தது. செம டேஸ்ட். கட்டாயம் ஒருமுறை வாய்ப்புகிடைத்தால் முயற்சிக்கலாம். பெலிடா நாசிகண்டர் + பாண்டிபஜார் + குளோபஸ் எதிரில். அதிலும் அரைவெந்த முழுநீள வெண்டைக்காய் தேன்!.

இப்படி ஒரு வழியாக நாசிகண்டருடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க , பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ரித்தீஷ் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரைப்பார்த்து புன்னகைத்தேன். வணக்கம் சார் என்றேன். உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே என்றார். சார் உங்க வீட்ல ஒரு வாட்டி மீட் பண்ணிருக்கேன். அப்புறம் சிக்னல்ல என தொடர்ந்தேன். சட்டென நினைவு வந்தவராய் அட சொல்லுங்க தம்பி என்றார். பேசிக்கொண்டிருக்கும் போதே என்னுடைய சாப்பாடு முடிந்து போயிருந்தது. என்னுடைய புதிய வேலையைப் பற்றியும் அதற்கு அவர் அனுப்பிய கடிதங்கள் , இணையத்தில் அவருடைய பிரதாபம் என பேச்சு நீண்டுகொண்டிருந்தது. அவருடைய புதிய முகமான எம்.பி பதவி பற்றியும் அடுத்த லட்சியங்கள் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். சினிமாவில் பார்ப்பதை விட நேரில் மிகமிக சாந்தமான மனிதர். மலேசிய காபி ஒன்று வாங்கி கொடுத்தார். என்னுடைய பில் வந்தது அதற்கும் தானே பணம் தருவதாக அடம்பிடித்தார். என்னுடைய பணி நிமித்தம் இதுபோன்ற இலவசங்கள் பெறுவது தவறு என நான் சுட்டிக்காட்டினேன் புரிந்துகொண்டார். அவரைச்சுற்றி இருந்தவர்கள் என்னை குறுகுறுவென பார்ப்பது ஒருமாதிரி இருக்க அவரிடம் சரிங்க சார் நாம இன்னொரு முறை சந்திப்போம் என என்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு நகர்ந்தேன்.

பில் வந்தது, கார்டை நீட்டினேன். சில நிமிடங்களில் சப்ளையர் திரும்பிவந்தார். சார் கார்டு வொர்க் ஆகலை. ஏன் சார்! மலேசியாவுலயும் இட்லிலாம் சுடுவீங்களா என்றேன்..

18 November 2009

அலங்கல் - 3





ஊருக்கு புதிதாக வந்திருந்த குரு நேராக அரண்மனைக்குள் நுழைந்த போது யாருமே அவரைத் தடுக்கவில்லை. வீரர்கள் அவரை கைக்கூப்பி வணங்கினர். அவரது முகத்தில் அத்தனை பிரகாசம். இறை உருவாகத் திகழ்ந்தார். நேராக அரண்மனையின் கொலு மண்டபத்திற்குள் நுழைந்தார். இவரைக்கண்ட அரசன் திடுக்கிட்டு செய்வதறியாது எழுந்து நின்றான். அனைவருக்கும் அதிர்ச்சி.

‘’சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்’’ பணிவோடு கேட்டான் அரசன்.

‘’இந்த சத்திரத்தில் தங்க ஒருநாள் அனுமதி வேண்டும்’’ என்றார் குரு.

‘’மன்னியுங்கள்! சுவாமி இது சத்திரமில்லை , என்னுடைய அரண்மனை’’

‘’இல்லை இல்லை இது சத்திரம்தான்’’ என்று வாதாடினார் குரு.

‘’சுவாமி நம்புங்க இது அரண்மனை, பாருங்க எவ்ளோ அலங்காரம் , ஆடம்பரம் , விளக்குகள் , வேலையாட்கள் , பார்த்தா அப்படி தெரியலையா’’ என்றான் மன்னன்.

‘’சரி விடு! இந்த இடத்தில் உனக்கு முன்னால் யாரெல்லாம் இருந்தார்கள்!’’

‘’எங்க அப்பா! ஆனா அவரு செத்துட்டாரே’’

‘’அதுக்கு முன்னால’’

‘’எங்க தாத்தா அவரும் செத்துட்டாரே’’

‘’அதுக்கும் முன்னால’’

‘’எங்க தாத்தாவோட அப்பா, ஏன் சாமி’’

‘’ஏன்டா தம்பி , இங்கதான் யாரு தங்கினாலும் கொஞ்ச நாள்ல காலிபண்ணிட்டு போயிடறாங்களே , அப்ப இது சத்திரம் தானே , நீ என்னடானா இதை சத்திரம் இல்லைன்ற!’’ என்றார் குரு.

*****

வேட்டைக்காரன் திரைப்படப்பாடல்கள் விஜய் பட பாடல்களைப் போல் இல்லாமல் விஜய்ஆன்டனி படத்தினுடையது என்று புரிந்தது. பாதி இரைச்சல் நிறைய கரைச்சல் சேர்ந்தால் வி.ஆ பாடல்கள் என்றில்லாமல் சமீபகாலமாக நல்ல மெலடிகளைக்கூட அவரது இசையில் கேட்க முடிகிறது. (நினைத்தாலே இனிக்கும் அழகாய் பூத்ததே, மாசிலாமணி டோரா டோரா,) . வே.கா வில் ‘என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குது’ பாடல் செம குத்து. அவரது லேட்டஸ்ட் கனகவேல் காக்க திரைப்படப்பாடல்கள் நேற்று கமல் அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாராவது ஓசியில் கேசட்டு கொடுத்தால் கேட்கலாம். சமீபத்தில் கேட்டதில் ரேணிகுண்டா படப்பாடல்கள் வெகுவாக கவர்கிறது. முடிந்தால் கேட்டுப்பார்கலாம்.

****

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் சென்ற வாரம் ஒரு மழைக்காலையில் ரிவால்வர் ரீட்டா என்கிற அருமையான திரைப்படம் ஒளிபரப்பானது. இதற்கு முன் ஒருமுறை சிறு வயதில் எங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் (சிவாலயா என்று நினைக்கிறேன்) பார்த்திருக்கிறேன். அப்போது புரியாத பலதும் இந்த வயதில் புரிவது நன்றாகத்தான் இருந்தது.

விஜயலலிதா ஹீரோயினாக நடித்திருந்தார். ஹீரோ யார் என்று தெரியவில்லை. படம் முழுக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் , காரிலும் பைக்கிலும் விரட்டியபடியே இருந்தனர். நடுநடுவே கிளப்பில் யாராவது ஒரு பெண் ஆங்கில பாடலுக்கு நடனமாடுகிறாள். கதை புரிகிறதோ இல்லையோ ஆக்சனுக்கு உத்திரவாதமான படம். என்ன சிறுவயதில் பார்க்கும் போதிருந்த எக்ஸைட்மென்ட் இடம் மாறி இருந்தது. இரண்டிலும் உடலே பிரதானம்.
ஜீதமிழில் திரையிடப்படும் பல திரைப்படங்கள் நான் சிறுவயதில் போஸ்டரில் மட்டுமே பார்த்த காலைக்காட்சி திரைப்படங்களாக இருப்பதை உணர முடிந்தது.

அதில் ஒன்று ரெட்டைகுழல் துப்பாக்கி. கார்த்திக் நடித்து கர்ணன் இயக்கிய திரைப்படம். பல வருடங்கள் முயன்றும் தியேட்டர்காரர்களின் சதியால் பார்க்க இயலாமல் போன திரைப்படம். அதை காணும் பேறும் ஜீயால் நிகழ்ந்தது. அந்த வரிசையில் சுட்டபழம் மாணவமாணவிகள் கஜா பத்துபத்து என திநகர் கிருஷ்ணவேனி புகழ் படங்கள் பலதும் ஜீதொலைக்காட்சியில் பட்டையை கிளப்புகிறது. இது மாதிரியான மொக்கை திரைப்படங்களின் ரசிகன் என்ற முறையில் அந்த நிறுவனத்திற்கு நன்றி!.

*****

டீலா-நோடீலா நிகழ்ச்சி அட்டகாசமாக இருக்கிறது. பணத்தை வாரி இறைக்கின்றனர். உதயா சேனலிலும் ஜெமினியிலும் சாய்க்குமார் கலக்குகிறார். தமிழில் ரிஷி , புஷி கேட்போல பம்முகிறார். முதலில் புரிந்து கொள்ள மிகக்கடினமாக இருக்கும் போல் இருந்தது. இதில் என்ன சுவாரஸ்யம் என்று கூட தோன்றியது. ஆனால் நிஜமாகவே பதற வைக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பார்த்தால் பணத்திற்கான எந்த அடிப்படைத் தேவையுமில்லாதவர்களாக இருப்பதை உணர முடிந்தது.

எப்போதும் சிகரட் வாங்கும் கடைப்பையன் கையில் மொபைலோடு எஸ்எம்எஸ் அனுப்பிக்கொண்டிருந்தான். என்னடா மேட்டர் என கேட்டபோது டீலா நோடீலாவுக்கு மெசேஜ் அனுப்பறேன் மூனு வாட்டி அனுப்பியும் தப்புனு வருது ஒம்பது ரூவா போச்சு என்றான். தமிழகத்தில் லாட்டரியை ஒழித்துவிட்டார்களே என நினைத்திருந்தது தவறு என புரிந்தது. மூளைக்கு எந்த சிரமமும் இல்லாமல் நடத்துகிற இந்த லாட்டரி பாணி போட்டிக்கு எப்படி அரசு அனுமதி வழங்கியது என்பதே புரியவில்லை. ஆளுங்கட்சி தொலைக்காட்சி என்பதால் இருக்கலாம் நமக்கேன் வம்பு!


*****

சிகரட்டை விட்டுவிட போனா வாரம் முடிவு செய்திருந்தேன். இந்தவாரம் முடிவில் மாற்றம். அடுத்தவாரம் மீண்டும் முடிவெடுக்க முடிவெடுத்திருக்கிறேன். பார்ப்போம். இந்த முடிவில்லா சிகரட் பழக்கத்திற்கு ஒரு முடிவு வராதா என்று!

****

தற்கொலை குறித்த FROZEN என்கிற சீன மொழி ஹாங்காங் திரைப்படம் பார்க்க முடிந்தது. 1998ல் வெளியான இந்த திரைப்படம் PERFORMANCE ARTISTS என்கிற கலைஞர்களின் வாழ்க்கையைப்பற்றியும் , அதில் ஈடுபடும் ஒரு இளைஞனின் தவறான முடிவினைப் பற்றியதுமாக செல்கிறது. தன்னை சுற்றி நடக்கும் சில தவறான விஷயங்கள் தன் சாவினால் மாறிவிடும் என நினைக்கும் ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான் ஆனால் அவனது மரணம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட வில்லை என்று செல்லும் இந்த திரைப்படத்தின் கதை ஏனோ நம்மூர் முத்துக்குமார் என்கிற இளைஞனின் மரணத்தை நினைவூட்டியது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலையோ மரணமோ ஒரு முடிவல்ல என்பதை உணர்த்துகிற இந்த திரைப்படம் சீனாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. இதில் சோப்பு தின்பது , முள்ளில் நடப்பது , பல்பை முழுங்குவது மாதிரியான செயலகளில் ஈடுபடும் நிஜகலைஞர்கள் நடித்துள்ளனர். வாய்ப்புக்கிடைத்தால் ஒரு முறை பார்க்கலாம்.

****

சென்னையிலிருந்து கோவைக்கு சேரன் எக்ஸ்பிரஸின் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டில் செல்வது ஒரு உன்னத அனுபவம். வாழ்க்கையையும் அதன் சாரத்தையும் மிக எளிதில் விளக்கிவிடும் வல்லமை கொண்டது. ஒவ்வொரு நிறுத்த்திலும் புதிதாய் ஏறும் ஆட்கள் , நிரம்பி வழியும் கூட்டம். நான்கு பேர் அமரக்கூடிய சீட்டில் ஆறு பேர் அமர்ந்து கொண்டு ஏழாவதாய் ஒருவர் வழிநெடுக சார் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா நானும் உக்காந்துக்குவேன் என கெஞ்சியபடி வருவதும் , அந்த சீட்டுக்காக சண்டையிடுவதும் , அடித்துக்கொள்வதும் , சீட்டுக்கிடைக்காத சிலர் கழிவறைக்குள் இடம் கிடைத்தால் கூட அங்கேயும் அமர்ந்து கொண்டு வருவதும் என விதவிதமான காட்சிகளை காண முடியும். கோவை வந்து இறங்கியபின் அந்த காலி சீட்டுகளை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் , இரவெல்லாம் எதற்காக அடித்துக்கொண்டோமோ அது காலியாய் கிடக்கும்போது புரிகிறது. நிறைய!

15 November 2009

விமர்சனம் எக்ஸ்பிரஸ் - 2012 + இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்



இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ். பிரபல '' ஹாலிவுட் சாருநிவேதிதா'' குவான்டின் டோரன்டினோவுடைய லேட்டஸ்ட் படம். பிராட் பிட் நடிப்பில் பல நாட்களுக்கு முன் வெளியானது. தேவி தியேட்டரில் ரீரிலிஸ் செய்திருந்தார்கள். மூன்று பேர் மட்டுமே அமர்ந்து கொண்டு படம் பார்க்கத்துவங்கினோம். குவான்டின் படங்களில் வசனம் ரொம்ப ஷார்ப்பாக இருக்கும் என்று தெரியும் ஆனால் இத்தனை ஷார்ப்பாகி நமது கழுத்தையே பதம் பார்க்கும் அளவிற்கு இருக்குமென்று தெரியாது. ஸ்ஸ்ப்பா முடியல! வாய் வலிக்கற வரைக்கும் பேசிகிட்டே இருக்காய்ங்க.

படத்தில் துவக்கத்தில் வருகிற பீத்தோவனுடைய சிம்பொனி மெதுவாக துவங்கி பின் வன்முறையாக ஒலிக்கும் போதே நிமிர வைக்கிறது படம். அதிலும் அந்த ஆரம்ப காட்சியில் வருகிற (வில்லன்) ஹன்ஸ் லன்டாவாக வரும் கிரிஸ்டோ வால்ட்ஸின் நடிப்பு.. ச்சே கிளாஸ்!. இத்தனை கொடூரமான வில்லனை பார்ப்பது இதுதான் முதல் முறை. ரத்தமில்லை. கத்தியில்லை. வெறும் சிரிப்பு சிரிப்பு. புன்னகை. அழகான வில்லன். பிராட் பிட் சொதப்பல் நடிப்பு. காட்பாதர் மர்லன் பிரான்டோவை உல்டா அடித்தது போலிருக்கிறது அவரது கெட்டப் மற்றும் நடிப்பு.

குவான்டின் டோரன்டினோ கொஞ்சம் ஓவரா படத்தை செதுக்கி செதுக்கி படம் லேசா நொறுங்கிருச்சோனு தோணுது. மத்தபடி படத்தோட மேக்கிங்! செம ஸ்டைலு , அந்தக்காலத்து கதையையே இவ்ளோ ஸ்டைலா குவான்டினால மட்டும்தான் எடுக்க முடியும். தலைவன் தலைவன்தான். கலக்கிருக்கான். ஒரு வாட்டி கஷ்டப்பட்டு பார்க்கலாம்

*******

உலகத்தை அழிச்சு அழிச்சு விளையாடறதே இந்த அமெரிக்கா காரங்களுக்கு வேலையா போச்சு! 2012னு ஒரு படம் , படு பயங்கரமான கிராபிக்ஸ். மலை உருளுது புரளுது , எரிமலை வெடிக்குது. வானுயர சுனாமி வருது , பூமி பொழக்குது , மொத்தமா மக்களெல்லாம் செத்துப்போறாங்க.. இழவெடுத்த எமிரிச்சுக்கு நல்லமாதிரியே படம் எடுக்க வராது போல!

தியேட்டரே ஸ்தம்பிச்சு போய் பாக்குது. படம் பூரா கிராபிக்ஸு , அருந்ததி கிராபிக்ஸுக்கே ஆனு வாயப்பொழந்தவனுங்க ஹாலிவுட் கிராபிக்ஸுக்கு என்ன செய்வானுங்க , உலகம் அழிஞ்சு போறத பாத்து விசில்தான் , கைத்தட்டல்தான் , ஆனா நமக்குத்தான் மனசுக்குள்ள லேசா குத்துச்சு .

படத்தோட கதை மொன்னையான கதைதான் , எப்பயும் போல உலகம் அழியுது , அப்ப ஒரு குடும்பம் அதையெல்லாம் தாண்டி தப்பிக்குது. ஸ்பீல்பெர்க்கோட வார் ஆப் தி வோர்ல்ட்ஸ்னு ஒரு படம். அதே கதை. அதே பொண்ட்டாட்டி ஓடிப்போனவன்தான் ஹீரோ. அவனுக்கு பொறந்த குழந்தை. படத்துல வர யாருக்குமே ஒரு புருஷன் ஒரு பொண்டாட்டியே கிடையாது. (அப்புறம் ஏன் உலகம் அழியாது).

கிளைமாக்ஸ்ல ஓடிப்போன பொண்டாட்டியோட சேர்ந்துருவான் ஹீரோ. நடுவுல எல்லாரும் சாவாங்க ஹீரோவும் குழந்தையும் தப்பிச்சுருவாங்க!. அப்புறம் கொஞ்சம் பைபிள் ரிவர்ஸ். நோவாஸ் ஆர்க். மாயன்ஸ். சைன்டிபிக்கா குளோபல் வார்மிங்னு மியாவ் மியாவ் மியாவ்னு ... புல் ஷிட்.

மத்தபடி கிராபிக்ஸ்க்காக வாய பப்பரப்பானு பொழந்துகிட்டு பாக்கலாம். படம் செம மொக்கை!

(ஒரு வேளை இந்த படத்துல வரமாதிரி நிஜமாலுமே உலகம் அழியுதுனு வச்சுக்குவோம் , அதுலருந்து தப்பிக்க பைபிள்ல வரமாதிரி நோவாஸ் ஆர்க் மாதிரி ஒரு கப்பல் ரெடி பண்றாங்கனு நினைச்சுக்கலாம்!

தமிழ்நாட்டுலருந்து யாரு முதல்ல அதுல தப்பிச்சு போவாங்கனு யோசிச்சேன்.. உலகத்தோட பெரும் பணக்காரங்க மட்டுமே போகக்கூடிய கப்பல் அது , அப்படினா யாரு முதல்ல போவா! ஆமா அவரேதான்.. என்ன நம்மூரு பணக்காரரு குடும்பம் கொஞ்சம் பெரிசு..அதனால எண்ணிக்கை அதிகம்னு பாதி வழில இறக்கிவிட்டுருவாங்க.. யாருனு உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் அத நான் வேற சொல்னுமாக்கும்.)


****

இப்படியாகப்பட்டது ஆங்கிலத்திலும் பல மொக்கைப்படங்கள் வருவதால் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஆங்கிலத்தில் வரும் நல்ல படங்களில் விமர்சனங்கள் மட்டுமே வெளியாகி வரும்நிலையில் மொக்கைப்படங்களையும் அடையாளம் காட்டவேண்டியது நம்ம கடமை இல்லையா!