Pages

27 December 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி.(5) - கண்ணகிகளின் மெரினா பீச்!!என் செல்லக்குட்டிக்கு,

உங்கள் பெயர் எனக்குத் தெரியாது . ஆனால் உங்களை எனக்குத் தெரியும் . பல முறை உங்களை சந்தித்திருக்கிறேன் . பேசியிருக்கிறேன் . உங்களை என்னையும் அறியாமல் காதலிக்க துவங்கிவிட்டேன். நீங்களும் என்னை காதலிப்பதாய் உணர்கிறேன் . இதுவரை என்னை காதலிக்கவில்லை என்றாலும் இனி என்னை கட்டாயம் நீங்கள் என்னை காதலிப்பீர்கள் என நம்புகிறேன்.

நீங்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது , என்னால் எதிலும் கான்சன்ட்ரேட் செய்ய முடியாமல் தவிக்கிறேன். என்னை நீங்கள் காதலிக்கவில்லையென்றால் நான் என்ன செய்வேன் என்று இதுவரை யோசிக்ககூட இல்லை . நிச்சயம் செத்துவிடுவேன்.

ஐ லவ் யூ டா குட்டிமா...
இப்படிக்கு,

தங்கள் மேல் அளவில்லா

காதலுடன்

நித்யா.

(கூவம் ஆற்றங்கரையில் கரையொதுங்கிய ஈரமான காகிதத்தில் எழுதப்பட்டிருந்தவை)


**********************

மெரினா பீச் , ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று .. காணும் பொங்கல் . அவளுக்கு அன்று பீச்சில் டியூட்டி . போலீசுக்கு மட்டும் விழாவும் விடுமுறைகளும் கிடையாது போலும் . கையில் ஒரு லட்டியுடன் மணலை நோண்டி நோண்டி விமலாவுடன் நடந்தபடியிருந்தாள். எதுவுமே பேசாமல் கடலையே பார்த்தபடி கடற்கரை ஓரத்தில் இருவரும் நடந்தபடியிருந்தனர். நித்யா அங்கிருந்த குடும்பங்களை ஏக்கமாக பார்த்தபடி இருந்தாள்.

''நித்து என்னடி , ஒன்னும் பேசாம வர ''

''ஒன்னுமில்லடா , அவன் நியாபகமாவே இருக்கு ''

''அவன் யாருனே தெரியாது , அவன் எங்கருக்கான் , யாரு ஒன்னும் தெரியாது , என்னங்கடி உங்க காதல் , கக்கூஸ் காதல் !! ஏதாவது தெரிஞ்சுக்க முயற்சியாவது பண்ணியா''

''இல்லடா, அவன்கிட்ட என்னோட லவ்வ அடுத்த முறை பாக்கும் போது கட்டாயம் சொல்லிடனும் ''
''ஒரு லெட்டர் எழுதி குடுத்துடு , மூணு நாள் இருக்குல்ல, ஸ்பென்சர் பக்கத்திலதான் திங்க கிழம டியூட்டி , அவன் வர நேரம் அவன்கிட்ட லெட்டர குடுத்துடு ''

''ஐயயோ லெட்டரா, வேண்டான்டா , தப்பா நினைச்சிட்டா , எப்பவும் பசங்கதான் பொண்ணுங்களுக்கு லெட்டர் தருவாங்க , அப்புறம் அவனுக்கு என்ன புடிக்காம போய்ட்டா?''

''அதுக்கென்ன நாம குடுப்போம், பொண்ணுங்களும் இப்பலாம் குடுக்கறாங்களான்டி , உன்னை ஒருத்தனுக்கு புடிக்காம போகுமா.. ஹாஹா , அப்படியே புடிக்காம போச்சுனா , லாக்கப்ல வச்சு பிரிச்சிரலாம்!!! ''

பேசிக்கொண்டிருக்க , கண்ணகி சிலைக்கு கீழே ஏதோ கூட்டம் . மணலில் ஓட்டமும் நடையுமாய் அங்கிருந்து நகரத்துவங்கினர் . கூட்டத்தை விலக்கி விட்டு எட்டிப் பார்க்க , பெண்ணொருத்தி மயங்கிகிடந்தாள் , அவளை ஒரு வயதான அம்மா மடியில் போட்டுக்கொண்டு முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தார்.

விமலாவும் நித்துவும் கூட்டத்தை கலைக்க முற்ப்பட்டனர் .

''சார் போங்க , போங்க போங்க '' நித்து விரட்டினாள் .

கூட்டத்தில் வினோ தனியாக நின்றுகொண்டு கையில் சோளம் ஒன்றை கொறித்தபடி நின்றிருந்தான் . நித்யாவுக்கு உடல் ஒரு நிமிடம் சிலிர்த்திருக்கவேண்டும். சிலிர்த்தது . கூட்டம் கலைகையில் அவனும் அங்கிருந்து நகர்ந்து போய் ஒரு திட்டில் அமர்ந்து கொண்டான் .

விமலாவிடம் நித்து , அவனது வருகை குறித்து கூறினாள் . விமலாவிற்கு வினோவை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாவே இருந்தது . தூரத்தில் அமர்ந்திருந்தவனை விமலாவிற்கு காட்டினாள்.

''சூப்பரா இல்லாட்டியும் நல்லாத்தான்டி இருக்கான் உன் ஆளு , என்ன மீசை வச்சா இன்னும் அழகா இருப்பான் ''

''ரொம்ப ரசிக்காத அவன் என் ஆளு! ''

''சரித்தா , உங்காள நீங்களே ரசிங்க , வா போய் பேசலாம் ''

'' எனக்கு பயமாருக்குப்பா , நீ ஒன்னு பண்றியா அவரை ஏதாவது சொல்லி காந்தி சிலை பின்னாடி இருக்கற காஞ்சு போன குளம் பக்கம் கூட்டிட்டு வரியா , அங்க பேசிக்கலாம் , இதா இங்க நம்ம பாண்டி அண்ணன்தான் டியூட்டி ஏதாவது வஞ்சுட்டாருன்னா , அங்க நம்ம லதாக்கா இருப்பாங்க பிரச்சனை இல்ல , நான் காந்தி சிலை பின்னால வெயிட் பண்றேன் ''
விமலா அங்கிருந்து வினோவை நோக்கி நடக்க , இவள் பதட்டத்துடன் காந்தி சிலையை நோக்கி நடக்கலானாள்.

''ஹலோ சார், '' , தேமேவென்று சோளம் கொறித்துக்கொண்டு கடலை வெரித்துப்பார்த்து கொண்டிருந்தவனை லத்தியால் முதுகில் தட்டி கூப்பிட்டாள். விமலாவின் உருவம் பிரமாண்டமாய் இருக்கும் , அகண்ட தோள் , கறுத்த உருவம் , கடுமையான முகம் , அதையெல்லாம் பார்த்தும் ஒருவன் பயம் கொள்ளவில்லையென்றால் , அவன் குருடனாகத்தான் இருக்கவேண்டும் . வினோ அவள் முன்னால் ஒரு வெள்ளெலி போல இருப்பான். அவளது கட்டையான குரலும் அதற்கேற்ற ஆஜானுபாகுவான உடலும் வினோவை பயமுறுத்தியது.

'' என்னையா மேடம் , '' பம்மினான்..

''ஆமா மிஸ்டர் , வாங்க , உங்களை எங்க ஏட்டய்யா கூட்டிட்டு வரச்சொன்னாரு '' , அதற்கே வினோவிற்கு வேர்த்துக்கொட்டியது , ஏற்கனவே ஒரு முறை நாயை கொன்றதற்காக சின்ன வயதில் வாங்கிய அடி பெடக்சில் இப்போது வலித்திருக்கவேண்டும். ஒரு மாதிரியாக பாக்யராஜைப்போல முகத்தை வீரமாக வைத்துக்கொண்டு

''நான் என்ன தப்பு பண்ணேன், எதுக்கு என்னை கூப்பிடறீங்கனு தெரிஞ்சுக்கலாமா ?''

''சார் அதெல்லாம் , அவர்கிட்ட பேசிக்கோங்க , இப்போ வரீங்களா இல்லையா ''

''என்னங்க , இப்படி மிரட்டுறீங்க , எனக்கு மனித உரிமை கழகத்திலலாம் ஆள் இருக்கு ''

''அதுலாம் மனுசங்களுக்கு ,'' மெலிதாக சிரித்துக்கொண்டாள் , '' சார் இப்போ வரமுடியுமா முடியாதா '' முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்டாள் .
''சரி வாங்க போலாம் '' வீரத்தை வரவழைத்துக்கொண்டு கிளம்பினான்.

''நீங்க முன்னால நடங்க நான் பின்னாலயே வரேன், பப்ளீக் பாக்கறாங்கல்ல, ப்ளீஸ் மேடம்''
மெலிதாக சிரித்துக்கொண்டாள் விமலா. அவள் முன்னால் நடக்க , அவன் பின்னாலேயே
நித்யாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. நகம் கடித்துக்கொண்டிருந்தாள் . வியர்த்திருந்ததது . கைகள் குளிர்ந்திருந்தது . அவனிடம் எப்படி பேசுவது என மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்தாள் . அவள் அருகில் இருந்த தண்ணீரில்லாத குளத்தில் காந்தி சிலைக்கு கீழ் பத்து பதினைந்து பேர் பின்னூட்டம் பதிவு என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஏதோ வேற்று கிரகவாசியைப்போல பார்த்துக்கொண்டிருந்தாள்.

நேரம் ஆக ஆக அவளுக்கு பதட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது . பதட்டத்துக்கு நடுவில் அந்த கூட்டத்தின் பேச்சு எரிச்சலாய் இருந்திருக்கவேண்டும்.
''சார் , என்ன சார் உம் னு வரீங்க , உங்க பேர் என்னனு சொல்லவே இல்லையே ''

''.................''

''ஆமா உங்களுக்கு நித்யாவைத் தெரியுமா ''

''ஏன்ங்க இப்படி நொய்நொய்னு ஏதாவது கேட்டுட்டே வரீங்க , ஏங்க எனக்கு எந்த நித்யா வித்யாவும் தெரியாது ''

''இல்லையே தினமும் , காயிதே மில்லத் காலேஜ் பக்கம் , நித்யானு ஒரு லேடி கான்ஸ்டபிள கணக்கு பண்றீங்களாமே , என்ன சார் , லவ்வா? , கிகிகி '' களுக்கென்று நாணத்தோடு ஒரு சிரிப்பு , வித்யாவின் ஆஜானு பாகுவான உருவத்தில் அப்படி ஒரு சிரிப்பை பார்த்து வினோ பயந்துவிட்டிருக்க வேண்டும்.

''.....................''

முன்னால் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தவள் . திரும்பி பார்க்க வினோவை காணவில்லை . கண்ணகி சிலைக்கு அருகில் அவளிடமிருந்து வெகு தூரத்தில் திரும்பிக் கூட பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்தான். வினோவின் ஓட்டம் பார்க்க தமாசாய் இருந்திருக்க வேண்டும். லூஸ்ஃபிட் ஜீன்ஸும் சார்ட் சர்ட்டும் அணிந்திருந்ததால் பிருஷடத்தின் கோடுகள் தெரிந்தது...

விமலாவால் சிரிப்பை அடக்கமுடியாமல் நடுரோட்டில் நின்று கொண்டு ஹாஹாஹாஹாஹா என்று கத்தி சிரித்தாள். வினோ மூச்சிறைக்க ஓடி அங்கே வந்த ஓரு பேருந்தில் ஏறி தப்பினான். காந்தி சிலை அருகே பேருந்து சிக்னலில் நின்றது . ஜன்னல் வழியே காந்திசிலைக்கு பின்னால் பார்த்தான் . நித்யா! . இறங்கிவிடலாமா என்று நினைத்தான் . அவளருகில் அந்த ஆஜானு பாகுவான போலீஸ் விமலா. அருகில் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆண் போலீஸ் . அவன் முடிவை மாற்றிக்கொள்ள சிக்னலில் பச்சை விளக்கு பஸ் சிவாஜி சிலையை சுற்றியது.


*************************


nithya kuti ,
oru varam agiruchu unnoda pesi , enakku paithyam pidikudhuda , aenda enkitta pesa mattendra , plsma enna purinjikko , indha smskku nee reply pannati enna nee uyirodayae pakka mudiyadhu... nichayam sethiduven...
(வினோ நித்யாவுக்கு அனுப்ப டைப் செய்து அவளுக்கு அனுப்பாத ஒரு எஸ்எம்எஸ் அல்லது பல முறை அனுப்ப தனது டிராப்டில் வைத்திருக்கும் ஒரு எஸ்எம்எஸ்)


************************

25 December 2008

சென்னையில் அதிரடி சரவெடி பதிவர் சந்திப்பு

ஹாய் மச்சான்ஸ் மச்சிஸ்..

இந்த வாரம் சிங்கப்பூர்லருந்து நம்ம ஜோசப் பால்ராஜ் அண்ணன் வராரு, அடுத்த வாரம் இங்கிலீசு புத்தாண்டு வருது , அப்புறம் இரண்டு வாரம் கழிச்சு தமிழ்புத்தாண்டு வருது , பொங்கல் வருது ... இப்படி நிறைய வரதால , உடனே நம்ம மக்களையெல்லாம் சந்திக்கலாம்னு பலரும் விரும்புறதா தெரியுது .

அதனால இந்தவாரம் சனிக்கிழமை , சாயங்காலம் 5.00 மணிக்கு , தி.நகர் நடேசன் பார்க்ல ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யலாம்னு பதிவர்கள் பிரியப்படறாங்க.

மக்கள் அனைவரும் தவறாம இந்த கூட்டத்தில கலந்துகிட்டு , அங்கே வருகிற ஸ்ரீஸ்ரீ ஜோசப் பால்ராஜ் சுவாமிகள் ஆசிகளை பெறலாம்.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டமும் இருக்கும் ( ஆல்கஹால் நிச்சயம் இல்லை ! ) .

சென்ற முறை மெரினாவில் மழை வந்து ஆட்டத்தை கெடுத்தது போல இந்த முறை நிகழாது என வருணபகவானை வேண்டிக்கொள்வோம். இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முறை சிலபல மண்டபங்கள் தேடப்பட்டது , விழாக்காலமாதலால் ஒன்றும் சரியாக அமையவில்லை . அதனால் மழைவந்தாலும் சமாளிக்க முடிந்த நடேசன் பார்க்கை பாலபாரதி அண்ணன் தேர்வு செய்தார்.

வெறும் கொண்டாட்டம் மற்றும் சந்திப்பு தவிர்த்து , சில முக்கிய நாட்டுநடப்புகளும் விவாதிக்கப்படும் . மென்மையான விவாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் .

பல அதிரடி பதிவர்களும் அல்டிமேட் பதிவர்களும் கலந்துக்குவாங்கனு எதிர்பார்க்குறோம்..

மக்கள்ஸ் மறந்து விடாதீர்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள்..

சந்திப்பு நாள் - டிசம்பர் 27 -

இடம் - நடேசன் பார்க் , திநகர் , சென்னை.

நேரம் - மாலை 5.00

தலைமை - திரு.பாலபாரதி

பதிவர் சந்திப்பு பதிவர்களுக்கு மட்டுமல்ல , வாசகர்களுக்கும்தான் , அதனால் புதுப்பதிவர்களும் , வாசகர்களும் கூச்சப்படாம கலந்துக்கோங்க..

அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்...

மேலதிக விபரங்களுக்கு -

அதிஷா - 9884881824 அல்லது dhoniv@gmail.com

லக்கிலுக் - 9841354308 அல்லது luckylook32@gmail.com

முரளிக்கண்ணன் - 9444884964


வந்து சேருங்க மக்கா...

புத்தாண்டை வரவேற்கலாம்... ஜோசப் பால்ரோஜோட...

24 December 2008

லக்கிலுக்கின் பூப்புனித நீராட்டுவிழா!


கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடியில் இந்த ஒரு வாரகாலம் அவர்களது பல புதிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீடு நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் நேற்று நெருங்கிய நண்பரும் பிரபல எழுத்தாளராக இருக்கும் தோழர் யுவகிருஷ்ணாவின் முதல் புத்தகமான '' சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் '' நூல் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தை எழுத்தாளர் திரு.சோம.வள்ளியப்பன் வெளியிட பிரபல விளம்பர வல்லுனர் திரு.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

சோம.வள்ளியப்பன் இப்புத்தகத்தை வெளியிட்டு அது குறித்தும் பேசினார். திரு.சோ.வ அவர்கள் ஏற்கனவே துறைசார்ந்த பல நூல்கள் எழுதியவர். இந்நூலும் விளம்பரத்'துறை' சார்ந்த ஒன்றென்பதால் அதை அவர் வெளியிட்டது நூலிற்கு மிக பொருத்தமாக இருந்தது. அதேபோல அதைப்பெற்றுக்கொண்ட திரு.நாராயணன் அவர்களும் விளம்பரத்துறையில் பிரசித்திப்பெற்றவர்.

இந்நூல்குறித்து திரு.சோம.வ அவர்கள் பேசுகையில் , இவ்வகை புத்தகங்கள் வாசிப்பவருக்கு அலுப்பை தரவல்லது என்றும் ஆனால் இந்நூல் முதல்பக்கத்தில் உங்களை உள்ளே இழுத்து கடைசிபக்கத்தில் வெளியே இறக்கிவிடும் வகையை சார்ந்தது. மிகசுவாரசியமாக இருப்பதாகவும் , ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் அட போட வைக்கும் எழுத்து என்றும் பாராட்டிப்பேசினார். அதேபோல விளம்பரத்துறைசார்ந்த சில விடயங்களை இந்நூல் அணுகவில்லை என்றும் அதை தான் எதிர்ப்பார்த்ததாகவும் தெரிவித்தார்.

அதேபோல இந்நூலோடு மருதன் அவர்களின் மால்கம் எக்ஸ் என்னும் நூலும் வெளியிடப்பட்டது. அந்நூல்குறித்தும் தோழரின் புத்தகம் குறித்தும் கலந்துரையாடல் துவங்கியது . அங்கே விளம்பரத்துறை குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டது , எல்லா கேள்விகளுக்கும் தடாலடியாக இல்லாமல் நயமாகவும் நாசூக்காவும் பதிலளித்தார் புத்தக ஆசிரியர்.

இந்த நிகழ்வு குறித்து மேலும் முழுமையாக அறிந்துகொள்ள

ஹரன்பிரசன்னாவின் பதிவு

கேபிள்சங்கரின் பதிவு


அந்நிகழ்வில் பேசப்பட்ட எல்லா விடயங்களையும் அழகாக தொகுத்துத் தந்திருக்கிறார் .

***********************************

விழா குறித்த சில தேன்துளிகள் :

* எழுத்தாளர் யுவகிருஷ்ணா இணையத்தில் லக்கிலுக் என்று அறியப்படும் வயதான ஒரு இளம் பதிவர்.

*விழாவிற்கு பதிவர்கள் , பாலபாரதி , முரளிக்கண்ணன்,மரு.புருனோ,நர்சிம் (அவரது நண்பர்) ,அரவிந்தன், அக்னிபார்வை , ஒரு வாசகர் ( பெயர் நினைவில் இல்லை ) என பல மூத்தப்பதிவர்களும் கலந்துகொண்டனர், (ஜ்யோவ்ராம் சுந்தர் தனது வாழ்த்துக்களை அலைப்பேசியில் பகிர்ந்துகொண்டார் )

*லக்கிலுக் மொட்டைமாடி தரைமட்ட மேடை(?)யில் ஒரு பரபரப்போடேயே காணப்பட்டார். காலில் வெந்நீரை ஊற்றியது போல. முகம் மட்டும் சிரித்தது போலவே இருந்தது . (லக்கிலுக்கின் பேஸ்மென்ட் ஸ்டிராங் பில்டிங் வீக்கோ? படத்தை பார்த்தால் புரியும் !!! ' )

*அங்கே தரப்பட்ட சிப்ஸ் மற்றும் காபி நல்ல சுவை ஆனால் முழுமையாய் சாப்பிட இயலாமல் போனது . முதல் வரிசையில் அமர்ந்து கொண்டிருக்கையில் எதிரில் ஒருவர் மிக சீரியஸாக பேசும் போது உருளைகிழங்கு வத்தல் கொறிப்பது முறையாகாது (அதை அவரே குறிப்பிட்டார் )

*இடையில் யாரோ(?) இருவர் மேடையிலேயே லக்கிலுக்கிடம் ஆட்டோகிராப் வாங்கியது , லக்கிலுக்கையே வியப்புக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ( அந்த இருவருக்கும் விழா முடிந்து வெளியே வரும் போது லக்கிலுக்கு 50 ரூபாய் சன்மானம் கொடுத்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன )

*பல கேள்விகளுக்கும் லக்கிலுக் பதிலளித்து பேசினார். ஆனால் புள்ளிராஜா குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது மிக ஆர்வமாக இருந்தார் .

*புத்தகத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பல விடயங்களையும் கேள்விகளாய் எழுப்பி அது குறித்து கலந்துரையாடினர் . ஒரு கட்டத்தில் இது புத்தக அறிமுகவிழா கூட்டம் என்பதே மறக்கும் அளவுக்கு.

* இனிவரும் கூட்டங்களில் வெளியிடப்படும் புத்தகம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கலாம். (கேள்விகள் புத்தகம் சாரும் துறை அல்லது அதன் அடிப்படையிலானவையாகவே அமைந்துவிடுகிறது )

*பா.ராகவன் பேசும் போது மட்டும் மைக் தொந்தரவு செய்தது குறிப்பிடத்தக்கது . ( அவர் எழுதினால்தான் பிரச்சனை என்றால் பேசினாலும் பிரச்சனைதானோ )

*முஸ்லீம் பிரச்சனை ஒன்றும் , சிகப்பழகு களிம்பு பிரச்சனை ஒன்றும் கூட்டத்தை வேறு திசைக்கே கொண்டு சென்றது .

* இப்படி கூட்டம் எப்போதெல்லாம் வேறு திசைக்கு செல்கிறதோ அப்போதெல்லாம் பத்ரி மைக்கை பிடுங்கி மீண்டும் பழைய இடத்திற்கே கூட்டி வந்து விட்டது நல்ல வேடிக்கையாக இருந்தது . :-p


அதென்ன பூப்புனித நீராட்டுவிழா ?

ஒரு பதிவராகவே அறியப்பட்ட நம் தோழர் வளர்ந்து ஒரு எழுத்தாளராய் வயதுக்கு வந்திருக்கிறார் இல்லையா அதற்குத்தான் அப்படி ஒரு தலைப்பு..


லக்கிலுக்கின் இம்முதல் புத்தகம் அனைத்து பதிவர்கள் சார்பாகவும் வெற்றியடைய வாழ்த்துக்கள் . அவர் இது போல மென்மேலும் வளரவும் வாழ்த்துகிறோம்..


*****************************

******************************

23 December 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(4) - ஈவ்டீசிங்,மர்டர் மற்றும் ஒரு காதல்பி1 போலீஸ் ஸ்டேசன் தெரியாமல் கோவையில் யாருமே இருக்க முடியாது , மிக அரிய வழக்குகளையும் குற்றவாளிகளையும் சந்தித்த அக்காவல் நிலையம் இதுவரை அந்த மூவரைப்போல எந்த குற்றவாளியையும் கண்டதில்லை . பி1 காவல் நிலைய சரித்திரத்திலேயே அந்த மூவர் குறிப்பிடத்தக்கவர்கள் . அதில் ஒருவன் இன்று அப்போதைய காவல் நிலையத்தின் ஆய்வாளரின் ரெண்டு விட்ட மருமகன் .\


அந்த மூவரும் அக்காவல் நிலையம் குறித்த அறிவும் அதற்கான தேவையுமின்றிதான் இத்தனை காலம் இருந்தனர் . எப்போதாவது டிரெயினிங் ஸ்கூல் பிள்ளைகளை சைட்டடித்து விட்டு வரும்போது வழியில் பார்த்ததுண்டு .


விசும்பி விசும்பி விடாமல் அழுதுகொண்டிருந்தான் கார்த்தி . அவன் இதற்கு முன் இது போல் அழுததேயில்லை . கண்களில் கசிந்து கொண்டிருந்த கண்ணீர் மூக்கைத்தாண்டி உதட்டின் வழியே வழிந்து இறுதியில் உதட்டில் துவர்த்தது .


கடைசியாக அவன் ஆயா செத்தப்போது எவ்வளவோ அழ முயற்ச்சித்தும் அழ வராமல் மிகவும் துன்பப்பட்டிருக்கிறான் . மற்றவர்கள் அழும் போது கேனப்பயல் வினோ..... ' ஹமாரா ஆயா மர்கயா ' என்று நாயகன் பாணியில் திரும்ப திரும்ப சொல்லி அவனை சிரிக்க வைத்தது தேவையில்லாமல் ஞாயபகத்திற்கு வந்து தொலைக்க அழுகையிலும் சிரிப்பை அடக்க முடியவில்லை .


பக்கத்தில் ஆரஞ்சு நிற பூப்போட்ட ஜட்டி அதன் மத்தியில் மிக்கிமௌஸ் என அதை மறைத்தவாறு குந்தவைத்து முழங்காலோடு தனது இரண்டு கைகளையும் கட்டியபடி வினோ அமர்ந்திருந்தான் (ஆய் போவது போல) . அவன் அருகில் முஸ்தபா அவனும் அப்படியே அவன் பச்சை ஜட்டி மிக்கிமௌஸ் இல்லை .


கார்த்தி மட்டும் அழுதுகொண்டிருக்க , வினோ முஸ்தபாவின் காலை நோண்டி கார்த்தி அழுவதை சுட்டிக்காட்டினான் , முஸ்தபாவிற்கு சிரிப்பை அடக்கமுடியாமல் வாயை கைகளால் பொத்திக்கொண்டு முகத்தை தனது தொடைகளுக்குள் மறைத்து வைத்து சிரிக்கத்தொடங்கினான் .


கால்களுக்கு நடுவில் மறைந்திருந்த முஸ்தபாவின் விக்கிவிக்கி சிரிக்கும் தாடையில் லத்தி ஒன்று நுழைந்தது ,


'' சார் இவனா! '' , கறுத்த குண்டு போலீஸ் , முறைத்தபடி இன்னொரு போலீஸிடம் .


''இல்ல சார் , மூணாவது இருக்கான் பாருங்க அவன் '' கார்த்தியை காட்டினார் ,


''ஏன்டா பொட்டை மாதிரி அழற , அறிவுகெட்டவனே , ஆம்பளைதான நீ ? '' 16 வயது கார்த்தியை மிரட்டினார் 40 வயது கறுத்த குண்டு போலீஸ் ( சிரிப்பு போலீஸ் போல இருந்ததால் மீண்டும் வினோவிற்கு சிரிப்பு ) . (பொட்ட என்கிற சொல் கார்த்தியை கோபமூட்டியிருக்க வேண்டும் .


''சார் எங்கப்பாக்கு தெரிஞ்சா.....ம்...ம்......ம் என்ன வீட்டுள்ளயே சேத்த மாட்டாருங்... சார் , நான் ஒன்னும் பண்ணல சார் ,ம்.......ம்.......ம்.......ம் இவனுங்கதான் சார் '' , தேம்பி தேம்பி அழுதபடியே கூறினான் .


கார்த்தியின் பிருஷ்டத்தில் ''பளீர்'' , ஒரு அடி , இடி போல விழுந்தது .


''ஏன்டா நீயெல்லாம் ஒரு பிரெண்டா , இவ்ளோ ஈஸியா சரண்டர் ஆகிட்ட , பாரு அவனுங்கள , கல்லு மாதிரி இருக்காணுங்க , ஸ்கூல் படிக்கும் போதே ஈவ்டீசிங் , மர்டரு ... அசிங்கமா இல்ல''


''சார் , வலிக்குது சார் , அடிக்காதீங்க சார் , சார் இதெல்லாம் கொலையா...... , இதுக்குப் போயி இப்படி அடிக்கிறீங்களே .. ''


''அடத்தூ செத்த பாம்புடா நீ '' காரி துப்பிவிட்டு போனார் கறுத்த போலீஸ் . போகும் போது வினோவிற்கும் முஸ்தபாவிற்கும் பிருஷ்டத்தில் ஒன்று தர மறக்கவில்லை . பளீர் பளீர்... கார்த்தி முகத்தில் வெற்றிசிரிப்பில் பற்களும் பளீர் பளீர்...


மூன்று நாட்கள் முன்பு வரை அவர்களுக்கு தெரியாது இப்படி ஒன்று நடக்கப்போகிறதென்று . எல்லோரையும் போல (அதாவது 16 வயது காளைகளைப் போல ) தெருவோர திட்டோ திண்ணையோ அல்லது சலூன் வாசலோ எதிலோ ஒன்றில் அமர்ந்து கொண்டு போகும் வரும் மக்களை கலாய்த்தவாறு கும்மியுடன் கும்மாளமாகத்தான் குஜாலாகத்தான் இருந்தனர் .


மாலைவேளையில் 7 மணிக்கு நண்பர்கள் ஸ்டார் சலூன் வாசலில் கூடுவது வழக்கம் . அப்போதுதான் டியூசன் முடித்து அவ்வழியே வரும் அழகிகளையும் அழகியாகப்போகிறவர்களையும் ஸைட் அடிக்க வசதி .கார்த்திக்கு தினமும் 7 மணி ஆகிவிட்டால் தம்மடித்தாக வேண்டும் இல்லையேல் கை நடுக்கமே வந்து விடும் , அதும் கிங்ஸ்தான் ! . இரண்டேமுக்கால் ரூபாய் கிங்ஸ் வாங்க ஒரு ரூபாயோடு தினமும் வந்துவிடுவான் . என்றுமில்லாமல் அவன் அன்றைக்கு 6.45க்கே வந்துவிட்டான் . கோபத்தோடிருந்தான் . சலூன் கடைக்குள் நுழைந்து முடியை கோதிவிட்டுக்கொண்டான் . வினோ வந்தான் .


'' மச்சி , கிளம்புடா தம்மடிக்க போலாம் ''


''மச்சி என்னடா ஆச்சி ஏன் ஒரு மாதிரி இருக்க ''


''நீ வரியா இல்லியா இல்லாட்டி நானே போறேன் ''


''கார்த்தி இருடா, முஸ்தபா வந்துருவான் '' சொல்லிக்கொண்டிருக்க அவனும் தனது பிஎஸ்ஏ பச்சை சைக்கிளில் சைக்கிளில் வந்துவிட்டான் .


கர்னாடிக் தியேட்டருக்கு பின்னால் இருக்கும் முட்டுச்சந்தில் மூவரும் குழுமினர் .


''மச்சி இந்தா 5 ரூபா, என்கிட்ட அவ்ளோதான் '' வினோ நீட்டினான் .


''கார்த்தி நீடா '' என்றதும் 1 ரூபாவை எடுத்து நீட்டினான் . வினோ முறைத்தான் .


இரண்டு கிங்ஸ் மட்டும் வாங்கிக்கொண்டு வினோ பற்றவைத்தான் ஒரு கிங்ஸை.


இன்னொன்றை முஸ்தபா .


கார்த்தி வினோவை முறைத்தபடியே இருந்தான் .


''அப்புறம் கார்த்தி என்னடா டென்சன் '' , கார்த்தி பேசாமல் அமர்ந்திருந்தான் .


''ஏன்டா லூசு அவன்தான் டென்சனா இருக்கான்ல அவன்கிட்ட சிகரெட்ட குடுரா '' ,. சிகரட்டை கொடுத்தான் வினோ .


''மச்சி , நம்ம தெருல ஒரு பொண்ணு பாக்க குஷ்பு மாதிரி போகுமே தெரியுமா ஒனக்கு ''


''யார்ரா ''


''அதான் நம்ம லதா வீட்டுக்கெதிர் வீடு , பேரு கூட ஜீலினு....''


''அடிங்க... அவ என் ஆளுடா '' வினோ அலறினான் .


''ச்சீ கருமம் எவனுக்குடா வேணும் உன் ஆளு ,பேரப்பாரு ஜீலி பப்பினு , நாய்க்கு வைக்கறமாதிரி ''


''அப்புறம் என்ன மேட்டர் , ''


''ஸ்கூல் பக்கம் நேத்து நம்ம கலாவுக்காக வெயிட் பண்ணிட்ருந்தேன் மச்சி , கலாகிட்ட கிப்ட்டும் லவ்லெட்டரும் குடுக்கலாம்னு போனா, அவ கூட இவளும் வந்திட்டிருந்தா , என்னை பார்த்ததும் திட்ட ஆரம்பிச்சிட்டா , என்ன பத்தி கலாகிட்ட தப்புதப்பா சொல்லி தந்திருப்பா போல, என் கலா என்னை எப்படி பாத்தா தெரியுமா..... ''


''ஏன்டா இதுக்குலாம் பீல் பண்ற விடுரா விடுரா நம்ம கலாதானடா எங்க போயிரப்போறா'' வினோ முகத்தை சிரிக்காதது போல வைத்துக்கொண்டு நக்கலடித்தான் .


'' இத்தனை நாள் என்னை ஹீரோ மாதிரி பாக்கறவ இன்னைக்கு பபூன் மாதிரி பாக்கறாடா அதுக்கு அவதாண்டா காரணம் , மஞ்சுதான் சொன்னா , இப்போலாம் ஜீலியும் கலாவும் ரொம்ப குளோஸ் ஆகிட்டாங்களாம் , மஞ்சுகிட்ட கூட கலா சரி பேசறதில்லையாம் ''


''அவளுக்கு என்னடா உன் மேல பொச்சுகாப்பு ''


''தெரில மச்சி ''


''அப்புறம் ஏன்டா உன் லைன்ல கிராஸ் பண்றா? ''


''அவளுக்கு ஆப்படிச்சாதான் சரியாவுன்டா...!!''


''ஆமா இவரு பெரிய ஆசாரி ஆப்படிக்க கெளம்பிட்டாரு... மூடிட்டு வேற பிகர பார்ராங்கன்னா .அதான் மஞ்சுகிட்டதான் பேசறல்ல அவளுக்கு குடுத்துற வேண்டியதுதான அந்த லெட்டர ''


வெறியோடு இருவரையும் முறைத்தான் கார்த்தி . அவனவன் வலி அவனவனுக்குதான் தெரியுமாம் . மூவரும் தம்மடித்து முடித்து கிளம்பினர் . போகும் போது ஐம்பது காசு அஜந்தா பாக்கு வாங்கி வாயில் போட மறக்கவில்லை , ஒரு பாக்கில் மூன்று பாகமாய் . தம்மடித்த வாயை ஒருவர் முகத்தில் மற்றவர் ஊதி வாசனை போய்விட்டதா என சரிபார்த்த பின் வீட்டிற்க்கு கிளம்பினர் .


அடுத்த நாள் காலை வேளை , சனிக்கிழமையாதலால் பள்ளி விடுமுறை , 8 மணிக்கே சலூன் வாசலில் வந்து அமர்ந்து கொண்டான் வினோ , மற்றவரும் பின்னாலேயே .


ஜீலி தனது நாய் சின்ட்ரல்லாவை அழைத்துக்கொண்டு வாக்கிங் போய் திரும்பிக்கொண்டிருந்தாள் , ஜீலிக்கு 15 வயதுதான் , வயதுக்கு மீறிய வளர்ச்சி . அவளது நாய் ஏதோ வகையை சேர்ந்தது , பாட்ஷா படத்தில் வருமே அதை விட பெரியது . இவள் அந்த நாயோடு காலை வேளைகளில் வாக்கிங் போகும் போது அந்த நாயைக்கூட பார்க்காமல் இவளைத்தான் பார்ப்பார்கள் , எது பெரியதோ அதைத்தானே நம் விந்தையான மனித உள்ளம் முதலில் காணும் .


சிலுப்பி சிலுப்பி நாயும் அவளும் நடந்து வர , அவளது டைட் டிஷர்ட்டும் , மிக டைட்டான பேண்ட்டும் வினோவை ஏதோ செய்திருக்க வேண்டும் , அவள் அவர்களை கடக்கையில் எந்த எழவெடுத்த புயல் அவனை அடித்ததோ வினோ பாட ஆரம்பித்தான்......


'' ஏரு பெருசா.....! இந்த ஊரு பெருசா......! சொல்லடி நெல்லு பெருசா....! பயக பல்லு பெருசா......! '' .


கடுப்பானாள் ஜீலி..
''ஷிட்! ...... சின்ட்டு அட்டாக் '' என்று கையில் இருந்த நாயை கழண்டு ஓட விட்டாள் .


அது கார்த்தியின் மேல் பாய, மூவரும் பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடினர் . கரிம் பாய் கடை தாண்டி மூன்றாவது சந்து ஒரு முட்டுச்சந்து அது தெரிந்தும் அவசரத்தில் அங்கே ஓடினர் . முஸ்தபாவிற்கு நாய்கள் என்றாலே ஆகாது . நாய்கள் மார்கழி மாதத்தில் குஜாலாக இருக்கும் போது எத்தனை முறை கல் எரிந்து கலைத்திருக்கிறான் தெரியுமா? அவனது பால்யத்தில் ஏதோ ஒரு தெருநாய் இவன் டியூசன் போய்விட்டு வரும்போதெல்லாம் துரத்துமாம் , கடித்ததில்லை , துரத்தியதற்கே இத்தனை கோபம் .


முட்டுசந்தில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தவன் அங்கிருந்த செங்கல்லை எடுத்துக்கொண்டு நாயை நோக்கி ஓடினான் , அதற்குள் நாய் இவன் மேல் பாய இவன் நகர்ந்து விட்டான் . சின்ட்ரல்லா( அந்த நாயின் பெயர் சின்ட்ரல்லா ) நேராக முஸ்தபா பின்னால் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டது, அது ஒரு குறுகலான சாக்கடை , அந்த நாயால் வெளியே வர இயலவில்லை . வெளிவரும் முயற்சியில் அதன் தலை ஒருபக்கமும் அதன் உடல் ஒரு பக்கமுமாக கோணல் மாணலாக மாட்டிக்கொண்டது .


இவ் இவ் இவ் இவ்...கிவ் கிவ் கிவ் கிவ் என்று முனகியது , அந்த நாயைவிட நல்ல நாய் நம்ம கார்த்தி அதை வெளியே எடுக்க எத்தனித்தான் .


வினோ அவனை தடுத்து ஆப்படிக்க நேரம் வந்துவிட்டது என்றான் . முஸ்தபா மெல்லிதாக புன்னகைத்தான் , கார்த்தி தெலுங்கு பட வில்லனைப்போல முஹ்ஹாஹாஹாஹா என்று உலகம் அதிர சிரித்தான் .... முஸ்தபா கையிலிருந்த செங்கல்லுக்கு வேலை வந்துவிட்டது .
இவ்இவ்இவ்இவ்... முனகல் அவ்அவ்அவ்அவ் ஆகி ஆஆஆஆஆவ் ஆகி ங்ங்ங்ங்ங் என குறைந்தது . கார்த்தி கடைசியாக ஒரு பெரிய குழவி கல் போன்ற ஒன்றை தூக்கி வந்து அதன் மண்டையில்............. இப்போது ங்ஙங்ங் கூட இல்லை . ஸ்ஸ் தான் .


வீதி வீதியாக நாயை தேடிக்கொண்டு ஜீலி கடைசியாக கரீம்பாய் கடையில் விசாரித்தாள் . அவர் மூன்றாவது வீதிபக்கம்தான் போனார்கள் என்று சொல்ல மூன்றாவது வீதியில் அந்த மூவர் இல்லை . சாக்கடையில் நாயின் பிணம் . கதறி அழுதாள் ஜீலி . அவள் அந்த சாக்கடையில் விட்ட கண்ணீரால் அந்த சாக்கடை மட்டுமல்ல அந்த ஊர் பாதாளசாக்கடையே அன்று சுத்தம் ஆகியிருக்க வேண்டும் . வெறி கொண்டாள் .பழி என்றாள் . இறந்து போன நாயின் உடலை அடக்கம் செய்தனர் அவள் வீட்டினர் . கண்கள் சிவக்க , நரம்புகள் புடைக்க நாயின் ஸாரி சின்ட்ரல்லாவின் சமாதியில் அந்த மூவரை அழித்தே தீருவேன் என சபதமெடுத்தாள் .


பிறகென்ன அவள் சித்தப்பா அந்த ஊர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர், அந்த மூவருக்கு பிடிவாரண்ட் . மூவரும் மாட்டிக்கொண்டனர் . நாயை அடித்ததற்க்காக உள்ளே வைத்து அடிக்க முடியுமா . ஜீலியை ஈவ்டீசிங் செய்ததாக எப்.ஐ.ஆர் .


காலையிலேயே பிடித்துக்கொண்டு வந்துவிட்டனர் . அந்த காவல் நிலையத்தின் அனைத்து காவலர்களும் அந்த மூவரையும் நன்கு என்ஜாய் பண்ணி அடித்தனர் . மதிய வேளையில் ஜீலியும் அவளது தந்தையும் வந்து பார்த்து விட்டுச்சென்றனர் . வினோவுக்கு அவமானமாக போய்விட்டது ஆயிரம்தான் இருந்தாலும் வருங்கால மாமனார் முன்னால் ஜட்டியோடு அமர வேண்டியதாகிவிட்டதே என்று . டீ கொடுப்பவன் கூட அடித்திருக்கலாம் .


இரவு ஒன்பது மணிக்கு மூவரது பெற்றோரும் வந்தனர் . முப்பதாயிரம் கொடுத்து பிள்ளைகளை மீட்டனர் . லஞ்சமில்லை , ஜீலியின் தந்தை இறந்து போன நாய்க்காக கேட்ட நஷ்ட ஈடு . அந்த நாயின் விலை முப்பதாயிரமாம். ஒரு வாரம் ஆய் கூட போக இயலாமல் அவதிப்பட்டனர் மூவரும் .. அடி முழுக்க அங்கேயே விழுந்திருந்தது . சம்பவம் முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் அதே சலூன் கடை அதே மூவர் . அதே காலை வேளை எட்டு மணி , ஜீலி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தாள் . வினோ அவளிடம் அருகில் சென்று ,


''ஹாய் , ஜீலி ''


''ம்ம் என்ன?''


''ஸாரிப்பா , கோபத்தில அப்படி பண்ணிட்டோம் ''


''இட்ஸ் ஓகே, ''


''ப்ளீஸ் நீ என்ன மன்னிச்சிட்டேனு சொல்லு ''


''சரிடா மன்னிச்சிட்டேன் போடா ''


''உன்னால ஒரு வாரமா சரியா உக்கார கூட முடியல தெரியுமா , எப்படி அடிச்சாங்க தெரியுமா . அதை உங்கிட்ட காட்டக்கூட முடியாதுப்பா ''


அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது .


''.............''


''என்ன ஜீலி சிரிக்கற ''


''இல்ல , ம்ம்ம்........................................................ ஒன்னுமில்ல , ஹாஹா''


''சரி விடு , பாய் ''


''ஏய் வினோ, அதான உன் பேரு , ஈவ்னிங் வீட்டுக்கு வரியா , கேரம்ஸ் விளையாடலாம் , நீதான் கேரம்ஸ் ஸ்டேட் லெவல் சாம்பியனாமே , ஸ்கூல்ல ஒன் சிஸ்டர் சொன்னா , அடுத்த வாரம் டூர்ணமென்ட் ஸ்கூல்ல அதான் ''


''.................... '' மௌனமாக இருந்தான் , ஆனால் மனசுக்குள் ஆயிரம் வாலா வெடித்து சிதறியது , ராக்கெட்டுக்கள் பறந்தன , மனது படபடக்க ஆரம்பித்தது . குறுகுறுப்பாக இருந்தது . இப்போதே அவளை காதலிலத்து விட்டதாய் உணர்ந்தான் . அவள் உதடுகளில் முத்தமிட்டதை மகிழ்ந்தான் .


'' 7 மணிக்கு வந்திடுரீயா.. அப்பாட்ட சொல்லிடறேன் ''


''ஓகே....................................... ஓகே....................'' என்றபடியே ரிவர்ஸில் நடந்து கார்த்தி அருகில் அமர்ந்து கொண்டு அவள் செல்லும் அழகையே பார்த்துக்கொண்டிருந்தான் .
கண்களால் காறித்துப்ப முடியுமா...????


முதன்முறையாக அன்றுதான் வினோ அதைப்பார்த்தான் . கார்த்தி,முஸ்தபா மூலமாக ... இவன் ஈ என்று கேனத்தானமாக சிரித்தான் .


கார்த்தியும் , முஸ்தபாவும் அதற்குப்பின் அவனிடம் பேசுவதில்லை . முஸ்தபாதான் கார்த்தியின் கிங்ஸிற்கு ஒன்னேமுக்கால் ரூபாய் தர வேண்டியிருந்தது .


மாலை வேளைகளில் வினோ மட்டும் ஜீலிக்கு கேரம் , காதல் , முத்தம் , இத்யாதி இத்யாதி இன்பங்கள் குறித்து சொல்லிக்கொடுத்தான் .
*************************
இந்தக் கதை ஏற்கனவே மோகன்கந்தசாமி அவர்களின் வலைப்பூவில் வெளியானது அந்த பதிவிற்கான இணைப்பு இங்கே... http://mohankandasami.blogspot.com/2008/12/75_18.html
**************************

19 December 2008

திண்டுக்கல் சாரதி - சன்-டிவி வாழ்க !


'' மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் '' என்று ஒரு பாடல் இருக்கிறது. அந்த மனைவி அழகானவளாய் , நம்மை விரும்புபவளாய் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் வாழ்க்கை படு ஜாலிதான் . நாளெல்லாம் திபாவளிதான். திருமணமான திருமணமாகப்போகும் ஒவ்வொருவனும் எதிர்பார்க்கும் ஒன்றுதானே அது . அப்படி நாம் நினைத்ததை விட மிகச்சிறந்த மனைவி நமக்கு அமையும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் எல்லாருக்கும் இருந்துவிடுவதில்லை .

தன் தகுதி இவ்வளவுதான் என்று நமக்கு நாமே ஒரு வரையறை வைத்துக்கொள்வது. அதைவிட சிறந்த மனைவி நமக்கு அமைந்து விடுகிறாள் . அப்போது ஏற்படும் மன உளைச்சலும் அந்த பொக்கிஷத்தை அடுத்தவன் பறித்துவிடுவானோ என்னும் மனதோடு அலையும் ஒருவனின் வாழ்க்கைப்பயணம் '' திண்டுக்கல் சாரதி '' திரைப்படம் .

கறுப்பு பையனுக்கு சிகப்பு மனைவி . அவளது வருகையால் அவனுக்குள் விழையும் மாற்றங்கள் . அவனது குடும்பத்துக்குள் பிரச்சனைகள் . மனைவி மேல் சந்தேகம் . அதனால் மன உளைச்சல் . பைத்தியம் பிடிக்கிறது . மனைவி தந்தை வீட்டில் . குணமாகிறான் . சேரவிட மறுக்கிறார் தந்தை . சேர்ந்தனரா? பிரிந்தனரா? இவ்வளவுதான் கதை . ஆனால் அதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழுத்தமான திரைக்கதை அட! போடவைக்கிறது .

கருணாஸ் படம் முழுக்க வியாபித்திருக்கிறார் . இயலாமையையும் தாழ்வு மனப்பான்மையையும் , ஒரு மிடில்கிளாஸ் அப்பாவியாய் இவரை விட வேறு யாரும் தமிழில் இந்த பாத்திரத்தை சிறப்பாக செய்து விட இயலாது. முதல்பாதியில் காமெடி இரண்டாம் பாதியில் அளவான ஆனால் சிறப்பான நடிப்பு . கிளைமாக்ஸில் பைத்தியமாகி அவரது நடிப்புக்கு தாய்க்குலங்கள் நிச்சயம் அழுதாலும் சொல்வதற்கில்லை. வித்யாசமான உடல்மொழியும் அதற்க்கேற்ற வசன உச்சரிப்பும் அசத்தல். படத்தின் ஆரம்பத்தில் அது தேவையில்லாததைப்போல தோன்றினாலும் படத்தின் நகர்தலில் அது அப்பாத்திரத்தின் தன்மையை விளக்க உதவுகிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருது வழங்கினால் கருணாஸின் இயல்பான நடிப்புக்காக அவருக்குத்தரலாம். குசேலன் படத்தில் இவரை நடிக்க வைத்திருந்தால் ரஜினியாவது தனது இமேஜைக்காப்பாற்றியிருக்கலாமோ? . படத்தில் நடனம் அருமையாய் ஆடுகிறார் , அவர் ஒரு நல்ல பாடகர் என்பது முன்பே தெரியும் ஆனால் நடனம் அசத்தலாய் வருகிறது (முண்ணனி நடிகர்கள் ஜாக்கிரதை )

படத்தின் நாயகி கார்த்திகா , குடும்பப்பாங்கான முகம் , உடல் , அழகான கண்கள் , மிதமான நடிப்பு . தமிழ்க்கதாநாயகிகளைவிட ஒரு பங்கு அதிகமாகவே நடித்திருக்கிறார். கருணாஸின் அம்மாவாக சரண்யா . எப்போதும் போல மகனை உசுப்பேத்திவிட்டு பழிவாங்கச் சொல்லும் தாயாக இல்லாமல் இயல்பான நடிப்பில் தன் மகனை பிரித்துவிடுவாளோ புதுமனைவி என்கிற ஆதங்கத்தோடு சண்டை போடும் தாயாக வித்யாசம் காட்டியிருக்கிறார். படத்தின் இன்னும் பல பாத்திரங்கள் அளவோடு நடித்து மனதில் பதிகின்றனர்.

படத்தின் இசை தீனா , திண்டுக்கல்லு பாடல் மனதில் படம் முடிந்து வந்தபின்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது , மற்ற பாடல்கள் சுமார் ரகம். பிண்ணனி இசை எரிச்சல் இல்லை . காமராவும் எளிமை .

படத்தின் இயக்குனர் குறைந்த பட்ஜெட்டில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். படம் முழுக்க திண்டுக்கல்லிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது . தனது முதல் படத்திலேயே படத்தின் கதையை மட்டும் நம்பி அதற்கேற்ற கருணாஸைப் போன்ற ஒருவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்த வீரம் இங்கிருக்கும் எந்த பிரபல இயக்குனருக்கும் வருவதில்லை. சபாஷ் . இயக்குனர் இதற்கு முன்னால் மெகா சீரியல் எடுத்தவரோ என்று சமயங்களில் தோன்றுவது பெரிய குறை . பல இடங்களில் தேவையில்லாத நாடகத்தனம் எரிச்சலூட்டுகிறது . பாடல்கள் படமாக்கிய விதம் நன்றாக இருந்தாலும் ஏனோ அதிலும் அதே பிரச்சனை. படத்தில் பல பாடல்கள் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு கவர்ச்சிப்பாடல் வேறு சகிக்கலை.

படத்தில் பல காட்சிகளும் சன்பிக்ஸர்ஸ் வாங்கியபின் சேர்க்கப்பட்டுள்ளது . படம் முடிந்த பின் போடப்படும் பாடல் காட்சிகளுக்கு யாரும் நின்று இதுவரை பார்த்ததில்லை . இப்படம் முடிந்ததும் போடப்படும் அந்த திண்டுக்கல் பாடலுக்கு தியேட்டரில் கூட்டம் அப்படியே அமர்ந்திருக்கிறது . அதே போல நிறைய நகைச்சுவைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது . அவை படத்தின் சுவையைக்கூட்டுகிறது . ஒரு ஆர்ட்பிலிமைக்கூட நல்ல முறையில் மாற்றியமைத்து நல்ல மசாலாவாக ( அப்படத்தின் சாரம் கெடாமல் )மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க இயலும் எனவும் சன்டிவி நிரூபித்திருக்கிறது . (அதற்காக நல்ல படங்களை வாங்கி நாறடிக்காமல் இருக்க வேண்டுமே பாடிகாட் முனீஸ்வரா!!)
சன்னுக்கும் பேரனுக்கும் ஒரு நன்றி.

படம் முடிந்து வெளியே வரும் போது மனதுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறப்பது புது உணர்வு. தன்னைத் தானே மற்றவருடன் மதிப்பீடு செய்வதைவிட கேவலமான ஒன்று உலகில் இல்லை என்று ஒஷோ சொல்வார். ஓப்பீடே சந்தேகத்தின் வேர் . சந்தேகமே இல்லறத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் . இல்லறத்தோல்வி ஒருவனை என்னபாடு படுத்தும் . இப்படமும் அதைத்தான் சொல்கிறது .

கதையில் ஆங்காங்கே கொஞ்சம் மிகையிருந்தாலும் படம் முழுக்க பொங்கி வழியும் நகையில் அவை பகையாய் இல்லை .

குடும்பத்தோடு கட்டாயம் அனைவரும் ரசிக்கலாம்... உங்களுக்கு தேவையானது நிச்சயம் படத்தில் இருக்கும் .

திண்டுக்கல் சாரதி - தன்னம்பிக்கை டானிக்.. இனிப்பாய் சுவையாய்... தமிழ்சினிமாவுக்கும் , படம் பார்க்கும் அனைவருக்கும்...

ஜே.கே.ரித்திஷைப் போல நீங்களும் பிரபலமாக வேண்டுமா?
ரித்திஷ்னாலே டெரருடா! - அவர்

தமிழ்நாட்டுக்கே பவருடா!அவர் அள்ளித்தரும் திருமல..

கண்ணால் பாத்தா எரிமல - ஒரு

சண்டனு வந்துபுட்டா .....

டண்ட்டாக்கு டண்ட்டாக்கு டண்ட்டாக்கு...

அவருதான்டா

தருதல..தருதல தருதல தருதல...- நான் எழுதினதுதான்.இப்பூவுலகில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒரு நாள் பிரபலமாகிட வேண்டும் என்கிற அவலும் ஆசையும் நிச்சயம் இருக்கும் . எனக்கும் உங்களுக்கும் ஏன் இவ்வலையுலகில் வலம் வரும் சகலருக்கும் இருக்கும் . ஆனால் இன்றைய சினிமா நட்சத்திரங்களில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்ட ஒரு நல்ல நடிகர்,மாமனிதர் , மாமாமனிதர் , தொழிலதிபர் , வாழும் பாரி,ஓரி,காரி,பூரி, இப்படி பல அடைமொழிகளையும் தனக்குத்தானே சூட்டிக்கொண்டு திரையுலகில் யாரும் எட்டாத இடத்தை பிடித்த அண்ணன் ரித்திஷ்குமார் அவர்களைப்போல ஆகவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவும் லட்சியமும் ஆகும்.

ரித்திஷ்குமார் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த மனிதர் , அவரை பின்பற்றி இன்றைய தமிழக இளைஞர்களும் கண்களில் கண்ணாடியும் கலர்கலராய் ஜீன்சும் அணிந்துகொண்டு நம் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும் சேவை செய்ய எண்ணி அவரைப்போல ஆகவிழையும் காட்சிகளை இன்றைய தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த ரங்கநாதன் தெரு , பர்மா பஜார் போன்ற பகுதிகளில் காணலாம் .

ஊர்க்குருவி பருந்தாகுமா இல்லை ஓட்டகம்தான் படி ஏறுமா அது போல யாராலும் அவ்வளவு சுலபமாய் அண்ணன் ரித்திஷ்குமார் அவர்கள் எட்டிய தூரத்தை எட்ட இயலாது . அதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது . அவை மிகவும் சிக்கலான முறைகள் . மிகுந்த கவனிப்போடும் கையில் குறையாத காசோடும் கண்களில் முட்டையும் கலர்கலராய் சட்டையுமாய் உழைக்கவேண்டும் .

வழிமுறைகள் என்னவென்று பார்ப்போம் :1.முதலில் உடனடியாக ஏதாவது ஒரு உப்புமா கட்சியிலாவது சேர்ந்து கொண்டு அதில் உறுப்பினர் ஆகி விடுங்கள் .

2.மறந்துவிட்டேன் அதறகு முன் எங்காவது டீக்கடையில் கிளாஸ் கழுவவும் .

3.பிறகு எவனாவது இளிச்சவாயனுக்கு பினாமியாக இருக்கவும்

4.அந்த இனா வாயன் எங்காவது தலைமறைவாக இருக்கையில் அந்த சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளவும் .

5.உடனடியாக ஒரு படம் துவங்கவும் . அதில் கௌரவ வேடத்தில் நடித்து வெள்ளோட்டம் பார்க்கவும் .

6.இப்போது உங்களுக்கே உங்கள் யோக்கியதை தெரிந்திருக்கும் .ஸாரி உங்களுக்கே உங்கள் அழகு தெரிந்துவிடும்

7.மிக பிரபலமான படப்பெயரில் ஒருபிரபல ஆங்கில படத்தின் கதையை அப்படியே சுட்டு புதிய படத்தை தொடங்கவும்...........

8.முதலில் ஜேகேஆர் போல ஆக உங்கள் முகத்தை எப்போதும் பைல்ஸ் வந்த குரங்கைப்போல வைத்துக்கொள்ள வேண்டும் . ( பல் தெரியாமல் சிரிக்கணும் )

9.ஜிகினா வைத்த சட்டைகளையும் ஆரஞ்சு , மஞ்சள் , ரோஜா நிற பேண்ட்களையும் உபயோகிக்கவும்

10.அடிக்கடி மீடியாக்களில் நம் பெயர் வருவது போல எதாவது குரங்கு சேட்டைகளை செய்ய வேண்டும்

11.ஊரில் இருக்கும் ஆட்டோ , பைக்கு, சைக்கிள் , கைவண்டி , குழந்தைகள் நடைவண்டி என பாரபட்சமின்றி எல்லாவற்றிலும் உங்கள் பெயர் அல்லது உங்களது லேட்டஸ்ட் பட விளம்பரம் என உங்கள் சம்பந்தப்பட எந்த கருமத்தையாவது மாதம் 2000 ரூபாய் என பேசி அளித்து விடவும்

12.பத்திரிகையாளர்கள் உங்களை அசிங்கமாக திட்டினால் அதை துடைத்து போட்டுவிட்டு சிரித்தமாதிரி ஒரு படத்திற்கு போஸ் மட்டும் கொடுத்துவிட்டு எஸ் ஆகி விடவும் . பதில் சொல்லாதீர்கள் . அது மாபெரும் காமெடி ஆக்கப்படலாம்.

13.ஆளுங்கட்சிக்கு நிறைய நிதி கொடுக்கவும் , உங்கள் விழாக்களுக்கு அவர்களை அழைத்து சீன் போட உதவும் .

14.உங்கள் ஏரியாவில் நடக்கும் காதுகுத்து , மூக்கு குத்து , பூப்புனித நீராட்டுவிழா என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் .


15.அந்த நிகழ்ச்சி நடத்துபவரிடம் முன்னாலேயே காசு குடுத்து உங்கள் படத்தை பெரிதாக போட்டு சூறாவளி ஸ்டார் , அதிரிபுதிரி அண்ணன் இது போன்ற அடைமொழியோடு போஸ்டர் அடித்து கொள்ளவும்


16.நிறைய ஏழைகளுக்கு உதவி செய்யவில்லையென்றாலும் ஏழைகளோடு நின்று போட்டோ எடுத்து கொள்ளவும்


17.இது தவிர சினிமாவில் நடிக்கும் போது சில விடயங்களை பின்பற்ற வேண்டும்


அ.காதல் காட்சிகளில் விளக்கெண்ணய் குடித்தமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவும்


ஆ.ஆக்சன் காட்சிகளில் இஞ்சிதின்ன டோமர் மாதிரி இருப்பது நல்லது

இ.செண்டிமென்ட் காட்சிகளில் காலைவேளையில் எவ்வளவு முக்கியும் வரவில்லையெனில் எப்படி இருப்பீர்கள் அப்படி ஒரு முகபாவம் அவசியம்


4.வீரவசனம் பேசும்போது முகத்தை உராங்குட்டன் என்னும் விலங்கைபோலிருப்பது உசிதம் (உராங்குட்டனை பார்த்ததில்லையே மேலே படத்தில் பார்க்கவும் )


இதுபோல 45மண்டலங்கள் விடாது செய்து வர எல்லாம் வல்ல இலச்சிமலை ஆத்தா புண்ணியத்தில் நீங்களும் ரித்திஷ்தான்,
PIN குறிப்பு அல்லது எச்சரிக்கை :*இது போன்ற முயற்சியால் விழையும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல ,

*இம்முயற்சியில் உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களுக்கும் பல பேராபத்துகள் நிகழலாம் அதனால் ஜாக்கிரதையாக இருக்கவும்.*இது தவிர நீங்கள் முழுமையான ரித்திஷ்குமார் ஆன பின் குழந்தைகளிடம் தயவு செய்து போய்விடாதீர்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளே சீதபேதி,வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வரலாம்.*அதே போல் ஆடு,மாடுகள் இருக்கும் பகுதிகளுக்கும் செல்லவேண்டாம் . அவைகளின் சாவுக்கு நீங்கள் காரணமாயிருப்பதை கம்பேனி விரும்பாது.(பாவம் அனிமல்ஸ் )ஜே.கே.ரித்திஷ் நாமம் வாழ்க ...... அகிலமெல்லாம் அவர் புகழ் வளர்க...... உங்களுக்குள் இருக்கும் ரித்திஷை வெளிக்கொணருங்கள்.. நீங்களும் பீரோதான் சாரி ஹீரோதான்.. ;-)


இப்பதிவு முழுக்க முழுக்க சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு எழுதியது . நீங்கள் இதை படிக்கும்போது சிரித்திருந்தால், மன்னிக்கவும் அது என் தவறல்ல .

* இப்பதிவு ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர்சங்கத்தில் வெளியானது . இங்கே மீண்டும் ஒரு முறை மீள் பதிவு செய்யப்படுகிறது .


*****************************
இப்போதைக்கு இவ்ளோதான்பா!!.. :-)
17 December 2008

ஞாநியின் அஜாலும் குஜாலும்....!


( ஞாநி வரைந்த ஓவியம் )

அஜால் குஜால் தெரியும்.... அடிதடியோடு குலாவுதல் என்றால் என்னவென்று தெரியுமா? .


அது இன்னாங்கடா அடிதடியோடு குலவுதலென்று கேட்பவர்கள் நேற்று கிழக்கு பதிப்பகத்தில் நடந்த மொட்டைமாடிக்கூட்டத்திற்கு வந்திருந்தால் புரிந்திருக்கும் . சமீபகாலமாக அடிதடியோடு குலவுதல் போன்ற காரியங்களுக்கு பத்ரி தனது மொட்டைமாடியை நம்மை போன்ற வெகுஜன வாசகர்களுக்கு தாரைவார்த்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன் சாருநிவேதிதாவை ஒரு மொட்டைமாடிப் பொதுக்கூட்டத்துக்கு அழைத்திருந்தார் . அவரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு வலைப்பதிவர்களின் டுபுரித்தனத்தை கட்டுடைத்து சர்ச்சையை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே . அதன்பிறகு அந்த பிரச்சனையில் வலையுலகம் பற்றியெறியவில்லை என்றாலும் சாரு சில காலத்திற்காவது தமிழ்மண சூடான இடுகைகளில் இடம்பிடித்திருந்தார் . ( இப்போதும் பிடிக்கிறார் அது வேறு கதா ) .


நேற்று கிழக்குப்பதிப்பகத்தில் நடந்த மொட்டைமாடிக்கூட்டத்தில் சர்ச்சைநாயகர் ஊருக்கே ஓ போடும் மூத்தபத்திரிக்கையாளர் ஞாநி கலந்துகொண்டார் . இக்கூட்டம் மும்பை கலவரம் குறித்த ஞாநியின் கருத்துக்களை அறியும் வண்ணம் ஏற்பாடாகியிருந்தது.
ஞாநி கூட்டத்தின் ஆரம்பத்திலேயே மும்பை கலவரம் குறித்து தான் தனது ஓ பக்கங்கள் மற்றும் தனது ஆங்கில இணையப்பக்கத்திலும் எழுதியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் . அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்றும் கூறினார். இருந்தாலும் டிவி ஊடகங்களின் பொறுப்பினைமை குறித்தும் பேசினார் . இது தவிர பல ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளாத ஆனால் மிக முக்கியமான சில விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மும்பை கலவரத்தின் போது சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு தாக்குதல் நடத்தியபோது , அவர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த கேட்டின் வழியே உள்ளே நுழையும் மெட்ரோ ரயில் பயணிகளை ரயில்நிலைய அறிவிப்பாளர் சாதுரியமாக அந்த வழி அடைக்கப்பட்டதாக கூறி திருப்பி விட்டதால் பெருமளவு சாவு தடுக்கப்பட்டது . இதன்மூலாம் தீவிரவாதிகள் தாக்குதல் என்று கூறி தேவையில்லாத பரபரப்பை தவிர்த்தார் . அதைக்குறித்து எந்த தொ.கா ஊடகமும் பேசவில்லை என்றும் கூறினார் . அதற்கான காரணமாக ஊடகங்களின் பார்வையாளர் யார் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகவும் தெரிவித்தார் .


இதைத்தவிர கடைசியாக மாட்டிக்கொண்ட தீவிரவாதியை பிடித்தபோது , கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் தன் மார்பால் தீவிரவாதியின் கையிலிருந்து துப்பாக்கியை பிடித்துக்கொண்டு தனது இன்னுயிரை நீத்த ஒரு சப்இன்ஸ்பெக்டர் குறித்தும் கூறினார் . தாஜ் மற்றும் டாடா ஹோட்டல்கள் குறித்த விபரங்கள் போலீஸைவிட தீவிரவாதிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததே , சில கமாண்டோ மற்றும் போலீஸ்காரர்கள் இறந்துபோக காரணமாயிருந்தது என்றும் தெரிவித்தார்.


பேச்சு மும்பை கலவரங்களில் இருந்து மெதுவாக தீவிரவாதம் குறித்த விவாதத்திற்கு நகர்ந்தது . கூட்டத்திலிருந்த ஒருவர் முஸ்லீம் தீவிரவாதம் குறித்து கேள்வியெழுப்பியபோது , ஞாநி இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதம் காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் பரவ முக்கிய காரணம் இந்துக்களின் தீவிரவாதமும் அடக்குமுறையுமே ஆகும் . அது பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னேதான் ஆரம்பித்தது . அதற்கு முன் இந்தியாவில் எங்குமே அல் என்னும் முன்பெயருடன் (அல்உம்மா போல ) எந்த அமைப்பும் இருந்ததில்லை என்றும் கூறினார் . ஒரு இந்துத்துவா நண்பர் மிக ஆவேசமாக இதை மறுத்தார் . டோண்டுவும் இதை மறுத்தார் . காஷ்மீர் தீவிரவாதமே இதற்கு காரணமென்றும் கருத்து தெரிவித்தனர் அவர்கள் இருவரும் .


ஞாநி இதற்கு பதிலளிக்கையில் காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் முழுக்க முஸ்லீம் அமைப்புகள் அல்ல என்றும் அவர்கள் குண்டு வைத்தால் கூட தங்கள் மாநிலத்திற்குள்ளேயே வைத்துகொள்வார்கள் என்றும் கூறினார் . பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்மராவ்தானே ஆட்சியில் இருந்தார் நீங்கள் ஏன் அவரை குறை சொல்வதில்லை என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு ஞாநி அவர்தான் இறந்துவிட்டாரே அதனால் கேட்பதில்லை என ஒரே போடாக போட்டார் .


இந்துத்துவா நண்பர் ஞாநியை நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் வாக்களிப்பேன் என்றும் கூறியதாக குற்றம்சாட்டினார் . ஞாநி இதற்கு அந்த கூட்டம் சென்றவருடம் நடந்தது . அது இந்திய தேர்தல்கள் குறித்த ஒரு கூட்டம். திருவல்லிக்கேணியில் இன்னார் (பெயர் ஞாயபகம் இல்லை ) கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியது . அதுவும் நான் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களிக்க நினைத்தாலும் தான் ஓட்டளிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைக்கும் திமுகவோ அல்லது அதிமுக உறுப்பினருக்கே ஓட்டளிக்க நேர்கிறது என்றுதான் பேசியதாக கூறினார் . அது போல தான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்றும் தான் ஒரு மனிதன் அவ்வளவே , கம்யூனிஸ்ட்கள் குறித்து அவர் தனது கட்டுரைகளில் நிறைய முறை விமர்சித்து எழுதியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.


கூட்டத்தில் ஒருவர் நீங்கள் ஏன் ஏழைபிராமணர்கள் குறித்து எழுதுவதில்லை என ஒரு கேள்வியை எழுப்பினார் . அதற்கு பதிலளிக்கையில் தான் ஏழை பிராமணர்கள் குறித்து 1978-79 வாக்கில் முதன்முறையாக பிராமணர்கள் சங்கம் துவக்கப்பட்டது . அப்போது அதுகுறித்து எழுதுகையில் இச்சங்கம் எந்த பிராமணருக்காக போராட இருப்பதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தான் கேள்விகேட்டு எழுதியிருந்தமையை தெரிவித்தார் . அது நிச்சயம் இன்றளவும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்விதான் . தான் ஜாதி என்று பாராமல் எல்லா ஏழைமக்களுக்காவுமே எழுதுகிறேன் என்றும் தெரிவித்தார் .


உங்களை ஒரு பார்ப்பனனாக சில சமயம் மீடியாக்களில் சித்தரிக்கிறார்களே என்று ஒருவர் கேட்டபோது , தான் தற்சமயம் எந்த சாதியையும் மதத்தையும் பின்பற்றுவதில்லை என்றும் தனது எல்லா சான்றிதழ்களிலும் நோ காஸ்ட் மற்றும் நோ ரிலிஜியன் என்றே உள்ளது எனக்கூறினார் . தனது மகனது பள்ளிக்காலத்திலேயே அவனது டி.சியிலும் தான் அவ்வாரு செய்துவிட்டதாகவும் அதற்கான வழிமுறைகளுக்கு இந்திய அரசியல்சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவித்தார் . அதனால் தான் எந்த சார்பும் அற்றவன் என்றும் தெரிவித்தார் .


இதுதவிர அவரது ஒற்றைரீல் இயக்கத்தின் பிரச்சனைகள் , தீம்தரிகிடவின் தோற்றமும் மறைவும் , ஓ பக்கங்களை ஆவியில் இருந்து குமுதத்தில் எழுத துவங்கியது , இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான இவரது பிரச்சனை என இன்னும் பல இதுபோன்ற அதிரடியான கேள்விகளால் அவரை தாக்கினாலும் சளைக்காமல் கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் விடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் கணீர் கணீரென பேசிக்கொண்டிருந்தார் (மிக நல்ல குரல் ). அவரது ஞாயபகசக்தியும் ஸ்டாமினாவும் வியக்கவைத்தது . பல அரிய தகவல்களையும் தனது விரல்நுனியில் வைத்திருந்து உடனுக்குடன் தெரிவித்தது வியக்கவைத்தது .


அவரை கோபமூட்டும் கேள்விகள் எழுப்பினாலும் சிரித்த முகத்துடனேயே எல்லா கேள்விகளுக்கும் சுவையாக பதிலளித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கேள்விகளை டோண்டு ஒருவரே கேட்டதால் பலருக்கும் கேள்வி கேட்க நேரமில்லாமல் போனது . டோண்டு அடுத்த முறையாவது அளவான கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் . மற்ற பார்வையாளர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம் இல்லையா . டோண்டு தவிர , லக்கிலுக் , அக்னிப்பார்வை , ஹரன்பிரன்னா போன்ற சில தெரிந்த முகங்களும் சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பீதியை கிளப்பினர் .


பக்கத்தில் அமர்ந்திருந்த ஜிகினா சட்டை நண்பர் திமுக குறித்து ஞாநி ஏதாவது குறை சொல்வார் அவரை ஒரு பிடிபிடித்துவிடாலமென கழுகு போல காத்திருந்தார் . கடைசிவரை திமுக குறித்தும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசாமல் பக்கத்து சீட்டு நண்பரை கடுப்படித்தார் . இருந்தும் அவரையும் மீறி இடையில் சன்டிவியின் செய்திகள் பல்டி குறித்து ஒரு குட்டுவைத்தது , சந்து கேப்பில் சைக்கிள் ஓட்டியது போலிருந்தது .


கொஞ்சம் மீறியிருந்தாலும் அடிதடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ள சிக்கலான பிரச்சனைகள் குறித்து , அதுபோன்ற அஜால்குஜால்கள் எதும் நடக்காமல் மிக பொறுப்பாக பதிலளித்த ஞாநிக்கும் இக்கூட்டத்திற்கு இடம் மற்றும் ஏற்பாடுகள் செய்துகொடுத்த பத்ரிக்கும் நன்றிகள் பல. ...


வரும் நாட்களில் கிழக்குப்பதிப்பகத்தில் இது போல நிறைய கூட்டங்கள் ஏற்பாடு செய்தால் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும் .
இக்கூட்டத்தின் முழு ஓலிப்பதிவு இங்கே

14 December 2008

பாரு நிபேதிதாவின் பீட்டர் பிலிமும் - பீரோ சிகிரி போஸ்டரும்....மதிப்புக்குரிய பார்களின் தலிவர் பாருநிபேதிதாவுக்கு.........

வணக்கம்பா...!

சமீபகாலமா ஓங்க கடையாண்ட வந்து குட்டி குட்டி அதான்பா சுமால் சுமால் சரக்குலாம் அச்சு செம மெர்சலாகி போயினிர்ந்தேன்பா.. இன்னா சரக்கு.. இன்னா சைட் டிஷ் , கலக்கல்பா.... ஓன் பார்ல சரக்கட்ச்சாலே போத எறங்க ஒரு மாசம் ஆவுதுபா.. இன்னா மந்தரம் போட்டு வச்சினிக்கிற ஒன் சரக்குல.. சோக்காகீதுபா ஒன் சரக்கு.. இன்னாச்சு இப்பலாம் பாலிட்டிக்ஸ் சரக்குலாம் வர்த்தில்ல ஒங்க கடையாண்ட... இன்னா மேட்டரு...

இப்போ இன்னாத்துக்குடா டோமரு எனிக்கு லெட்டர் எழுதறனு நீ கொஸ்டீன் பண்றது , நமக்கு பிரிது.. தெனமும் நான் ஒங்க கடைலதான் சரக்கடிக்கறது , அது இன்னா மட்டமான சரக்காருந்தாலும் ஓசத்தி சரக்காருந்தாலும் கண்ணமூடிக்கினு (இல்லாங்காட்டி தொறந்துகீனு ) கப்புனு அச்சுருவேன்பா..

இத்தினிக்கும் அது எவ்ளோ கலீஜாருந்தாலும் கப்புனு அடிச்சா குப்புனு ஏறிரும் தலீவா.. இத்தினிக்கு செல டாமாக்கோலி பசங்கோ இன்னாடா நீ அவன் கடிலயா சரக்கடிக்கற அது கலீஜீடானுலாம் பிலிம் காட்டுங்கோ ....... நாமளே கலீஜீதான.. நமக்கு மேல ஒரு கலீஜா..

ரெண்டு நா முன்னால ஒன் கடையாண்ட சரக்கடிக்கலான் வந்தா ஒரு போஸ்டரு.. இன்னாடா போட்டுனுக்கீதுனு பாத்தா அது இன்னாமோ இங்கிலீபீசுல பீட்டரா இந்துச்சு . நாமதான் மெர்சல் மன்னானாச்சே நம்ம ஏரியா புலவராண்ட குத்து இது இன்னாடா மாமா பச்சு சொல்லுனு சொன்னேன்.. அவன் அத்த பச்சுட்டு மாமா இது பாரின் போஸ்டரு பாரின்னா பாரின் கடியாது பாரின் மாதிரி . இதுலலாம் பாருவோட லேட்டஸ்ட் சரக்குபத்தி போட்டினுருக்கானுங்கோனு சொன்னான்..

நமக்குதான் குறுக்குபுத்தியாச்சே , அது இன்னாடா பாரின் மேட்டருனு கேட்டா.. அவரு முன்னால காச்சின அந்த '' பீரோ சிகிரி '' சரக்கு செமயா இக்கீது அட்ச்சா போதை இன்னா பண்ணாலும் இறங்காது , குஜாலாக்கீது , டவுசர கயட்டுதுனுலாம் போட்டிருக்குனு பேஜார் பண்ணான் நம்ம மாமா... அப்பால அந்த சரக்கு இன்னாமோ பெரிய பாரின் சரக்குலாம் விட ஷோக்காக்கீதாம் , மத்த சரக்கு மேரிலாம் இல்லாம லேட்டஸ்ட்டாகீதாம் , யாருமே இத்த மாரி சரக்கு காய்ச்சினதே இல்லாயமே.. ஸ்ஸ்ஸ்ப்பா இன்னா இன்னாவோ சொன்னான் நாமதான் முட்டாகு... கு..... குரங்காச்சே.. மெர்சலாய்ட்டன்பா..

(படத்து மேல கிளிக்கி நீங்களும் அந்த போஸ்டர பாத்து டரியல் ஆவுங்கோ... )


படத்து மேல கிளிக்கி அது இன்னா மேட்டருனு பட்ச்சீங்களா.. பட்ச்சா மட்டும் மேல படிங்க அல்லாங்காட்டி அப்படியே ஜகா வாங்கிக்கோங்கோ...

அப்பால அவனாண்டேயே கேட்டேன் இன்னா மாமா இதுல ஸ்பெச்சலுனு .. அவன் சொன்னான் மாமா அது பாரின்லயே பெரிய பார்.. அதுலலாம் நம்மளாட்டாம் லோக்கல் டுபுரி பசங்க பேர்லாம் வராது, அதும் நம்ம சரக்குப்பத்திலாம் வரதுக்கு ரொம்ப பிரச்சனைலாம் கீது .. அதும் தமிழ்நாட்டு சரக்குலாம் ஒரு நாயும் சீண்டாது... இப்போதான் மொத மொத இந்த மேரி நம்ம தமிழ் ஆளுங்கோ சரக்கும் வந்துக்கீதுனு வெளக்கி சொன்னான்..

அதுமில்லாம ஒலக சாராயத்த ஒன்னா குச்சு பல ஆயிரம் வாட்டி வாந்தி எத்திருந்தாதான் மாமா அப்படிலாம் பாராட்டி பர்சு குத்து கவுரதிப்பாங்கோன்னான்.. அது இன்னாங்கடா ஒலகசாராயம் . நமக்கு தெர்ஞ்ச ஒலக சாரயமே பாரு கடைல அடிச்சினிக்கறதுதான்...

அவன் பாட்டுக்கு இன்னா இன்னாவோ சொல்லினே போறான்.. அந்த சரக்கு அப்டி இப்டி ஆ ஊ னு இன்னா இன்னாவோ சொன்னான்.. அவன் சொல்ல சொல்ல

எனக்கு செம காண்டாயிருச்சு .. இன்னாடாது சரி பாரின் காரன் , அதான் குத்துட்டானே அத்த வச்சுகினு பாத்துக்க வேண்டியதுதான் அல்லாங்காட்டி அத்த பிரேம் போட்டுக்கினு வீட்ல மாட்டிக்கினு பாத்துக்கினே இருக்க வேண்டியத்தானே.. அது இன்னாத்துக்கு போஸ்டர் அட்சு ஒட்டணும்... அப்பால அப்படி இன்னா இது பெரிய கிப்ட்டு.. அதும் அவன் மெய்யாலிமே பாரின் காரன் கடியாது, லோக்கல் பாரின்தான்..

நம்மூர்ல ஓங்களவுட பேஜார எழுதற பயஜோகன் , டரியல்பித்திரன் மாதிரி எத்தினி ஆளுங்கோ இருக்க சொல்லோ அவுங்கள்ளாம் பண்ணாதது இன்னா இந்தாளு பண்ணிச்சுனு இப்போ அந்த பாரின்காரன் பத்திரிகைல நியூஸ் குத்துகீறான்.. அதுக்கு இன்னாத்துக்கு இந்த வெளம்பரம்...

இதெல்லாம் விட நேத்து நம்ம புள்ளியாண்டான் ஜட்டிமுக்கு கடையாண்ட போனா அவன் இன்னாத்துக்கு பாருவோட போஸ்டரு ஒட்டிகினும் ஜிங்குச்சா போட்டுக்கினும் காட்டிகினிம்க்கீதுபா... அதுக்கு இன்னாவோ ஆனா ஊனா சாருவ பத்தி '' பாரா பாரா வா '' எய்தி தள்ளுதுபா...

அப்பிடி இன்னாதான் நீங்க பண்ணிட்டீங்கோ... அதுக்கு இந்த பாரின் காரன் இன்னாத்துக்கு ஒங்களுக்கு பர்சு குத்தான்..

நான் கூடிதான் பீரோ சிகிரி அச்சிகீறேன்.. ஆனா நமக்கு ஒன்னும் அப்பிடி ஏறலபா... இன்னா நல்ல கலீஜீ சரக்கு அவ்ளோதான்.. அதுக்கொசம் இத்தினி ஸ்டாருங்கோ இருக்கற ஏர்யால ஒங்க சரக்குக்கு கிப்ட்டு குடுக்கலாம்...

பயஜோகன்லாம் இன்னா மேரி சாராயம் காச்சிகினுகீது தெர்மா.. அதும் பானை பானையா.. ஒன்னாட்டம் இன்னா ஒரு சொம்புலயா காச்சிது .. ( பானை பானையா காச்சினாலும் குச்சா பேதி போவுது அது வேற இஸ்டோரி அத்த வுடு , அது இந்த லெட்டருக்கு அவ்சியமில்லாத்தது... )

இருந்தாலும் பாரு பாஸ்......... ஒங்களோட ஒரு சொம்பு '' பீரோ சிகிரி '' கதைக்குலாம் இவ்ளோ வெளம்பரம் ஆவாது ... ரொம்ப ஓவரூ... இன்னாமோ ஊருல ஆருமே பண்ணாத மேரி பேசினிக்கிறதுலாம் இன்னாவோ சரில..

இன்னாதிது லெட்ரு இவ்ளோ தம்த்தூண்டா போச்சினு பாக்காதீங்கோ.. எறும்பு தம்தூண்டுதான் ஆனா அது கண்டி ஆனை காதுள்ள பூட்ச்சி அவ்ளோதான்.. டகுளாயிடும் ஆங்..

இதுக்கு மேல இன்னா சொல்றது ... அவ்ளோதான்...

ஒட்டம்ப பாத்துக்கோ நைனா...
இப்போதிக்கு ஜீட்டிக்கொள்வது..

நானேதான்...

தி ஷேம் ஓல்டு லகுட பாண்டிதான்பா...

வர்ட்டா பாஸு...

உயிரை வாங்கிய ஒரு புத்தகம்..!!

நாம் சில புத்தகங்களை எப்போதும் படித்துவிடாமல் இருப்பது நல்லது . ஏன்டா இந்த புத்தகத்தை படித்தோம் என எப்போதாவது தோன்றியதுண்டா . அந்நூலின் ஒவ்வொரு வரியும் நமது தின வாழ்வின் வேலைகளில் குறுக்கிட்டு எல்லா நிலைகளிலும் பாதித்ததுண்டா. அப்படி ஒரு வாசிப்பனுபவம் பெரும்பாலும் நமக்கு கிடைத்து விடாது . அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் புத்தகங்கள் மிகக்குறைவே . ஒரு நாவலைப்படித்து முடித்ததும் அந்நாவலின் பாத்திரங்கள் பல காலத்திற்கும் நம்மை மனதை விட்டு அகலாமல் , அப்பாத்திரங்கள் நம் மனதின் ஏதோ ஒரு மூலையில் அகலாத ஒரு தாக்குதலை ஏற்படுத்துமானால் அதுவே அந்நாவலின் மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

மலையாள எழுத்துலகின் சி.வி.பாலகிருஷ்ணன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு மிகச்சிறந்த நாவல் ''ஆயுசிண்டே புத்தகம் '' . அதனுடைய மொழிபெயர்ப்பு இத்துணை ஆண்டுகளுக்கு பின் தமிழில் கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் வெளியாகியுள்ளது. அதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளவர் வை.கிருஷ்ணமூர்த்தி .

கேரளாவின் பெரும்பாலான கிராமங்களின் வாழ்வினையும் , அக்கிராமங்களில் வாழும் கிறித்தவர்களின் வாழ்க்கைமுறைகள் குறித்தும் தனது கூரிய எழுத்துக்காளால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் பாலகிருஷ்ணன் . நாவலின் சாரத்தை ஒற்றை பாராவில் விவரிக்க இயலாத வகையில் அத்தனை பாத்திரங்கள் , அத்தனை பாத்திரங்களுக்கும் ஒவ்வொரு வியாக்கியானங்கள் , அவைகளின் பார்வையில் விரிகின்ற ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சம்பவமும் அதனால் விளைகின்ற சிக்கல்களும் என இக்கதை பல எல்லைகளை தாண்டிச்செல்கிறது.

இந்நாவலில் நாம் தினம் காணும் பல பாத்திரங்களையும் உங்களையும் கூட பார்க்கலாம் . நாவல் முழுவதும் உருண்டோடும் தனிமையும் , குற்றங்களும் , குடும்பங்களும் , மனத்தாங்கலில் தங்களுக்கு தாங்கே தந்துவிடும் தண்டனைகளும் இந்நாவலை மலையாள எழுத்தலகின் தன்னிகரில்லாத தனித்த ஒன்றாக மாற்றிவிடுகிறது . கதைசொல்லலில் அங்காங்கே சிதறிக்கிடைக்கும் பைபிள் கூற்றுகளும் (அல்லது வாசகங்களும் ) அதனை ஒத்த காட்சிகளும் , ஆசிரியரின் உழைப்பை எடுத்துக்கூறுவதாக இருக்கிறது .

(சி.வி.பாலகிருஷ்ணன் )

இந்நூலின் ஆசிரியர் ஒரு பேட்டியில் இந்நாவலுக்காக தான் காசர்கோட்டில் (ஒரு கேரள சிறுநகரம் ) மூன்றாண்டுகளுக்கு மேலாக உழைத்ததாக கூறியிருந்தார் . அவ்வுழைப்பு இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணலாம் . ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒரு காட்சியின் முடிவைப்போல அல்லது ஒரு சிறுகதையின் முடிவைப்போல முடித்திருப்பது இன்னும் நேர்த்தி . இக்கதையின் ஆசிரியர் இரண்டு திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்தவராம் . திரைப்படத்துறை குறித்த இவரது சினிமாயுடே இடங்கள் என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவராம் . அது அவரது கதை சொல்லும் பாணியிலேயே நிரூபணமாகிறது . ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு காட்சியின் கதை சொல்லலைப்போல விரிவது அதற்கு சாட்சி .

அந்நாவலின் முக்கிய பாத்திரங்களான யோகான்னாவும்,ராஹேலும்,அன்னியும்,தோமாவும் இந்த கதையை படித்து முடித்த பின்னும் பல வருடங்கள் நம்மோடு வாழ்வதை ஆசிரியரின் எழுத்துக்கள் சாத்தியமாக்கியிருக்கிறது . அதேபோல கதைக்களமும் காசர்கோட்டை சுற்றியிருக்கும் ஏதோ ஒரு கிராமத்தில் நாமும் பல ஆண்டுகள் வாழ்ந்ததை போன்ற ஒரு மனநிலைக்கு ஆட்படுத்துகிறார். அவ்வாழ்க்கை முறையின் ஒவ்வொரு அணுவையும் ரசிக்கலாம் இந்நாவலில். அது அடுப்படி மீன்சோறாகட்டும் அல்லது பைபிள்க்கற்றுத்தரும் பாடசாலை ஆகட்டும் .

இத்தனை மிகச்சிறந்த நாவலை ஏனோ என்னால் ஒரே மூச்சில் படித்துவிட இயலவில்லை . ஒரு வாரமானது படித்து முடிக்க . இத்தனைக்கும் இந்நாவல் வெறும் 222 பக்கங்கள் கொண்ட புத்தகமே . அதற்கான காரணம் மொழிபெயர்ப்பின் கோளாறாகவும் இருக்கலாம் . ஒரு மலையாள டப்பிங் திரைப்படம் பார்க்கின்ற ஒரு உணர்வாகவும் இருந்திருக்கலாம் . மொழிபெயர்ப்பு சமயங்களில் சுவிசேசக்கூட்டங்களில் தரப்படும் துண்டுச்சீட்டுக்களை படிக்கையில் வரும் உணர்வை நாவல் முழுதுமே தருவது வருத்தமளிக்கிறது . மொழிபெயர்ப்பாளர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்நாவலின் சாரம் குன்றாமல் அதன் இயல்பான சுவாரஸ்யத்தோடு கொடுத்திருக்க இயலும் . ஆனால் இந்நாவல் ஏனோ அதனாலேயே ஆசுவாசத்தை தருகிறது . என்னதான் ஒரு மிகச்சிறந்த நாவலைப்படித்தாலும் அது சுவாரஸ்யமில்லாமல் ஆசுவாசமாய் இருந்தால் அது நல்ல வாசிப்பனுபவத்தை தந்திடாது . இந்நூலும் இப்படி ஒரு தகுதியைப் பெற்றுவிடும் அபாயத்தோடே இருக்கிறது .

உங்களைச்சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நீங்கள் தனிமையை உணர்ந்தவரா?

கட்டயாம் உங்களுக்கு இப்புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தரவல்லது .*****************************************************


நூலின் பெயர் - உயிர்ப் புத்தகம்


ஆசிரியர் - ஸி.வி.பாலகிருஷ்ணன் தமிழில் ; வை.கிருஷ்ணமூர்த்தி


விலை - ரூ.120/-


பக்கங்கள் - 224 ( 2 பக்கங்கள் குறிப்புகளுக்காக )


வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.


தொலைபேசி : 044-42009601/03/04


தொலைநகல்(ஃபேக்ஸ்) : 044-43009701


இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே போகலாம் - http://nhm.in/printedbook/648/Uyir%20Puththagam
***************************
இப்போதைக்கு இவ்ளோதான்பா....! ;-)

12 December 2008

தமிழிஷ் ஓனர் யார்ணு தெரியணுமா.....!


இங்கிலாந்தின் ஒரு பிரபல பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் , பெண்களை விட ஆண்களே காதலிக்கும் போது அதிகமாக தாங்கள் படிக்கும் புத்தகங்கள் குறித்து பொய் சொல்கிறார்கள் என்று கண்டறிந்துள்ளனர்.

பொதுவாகவே காதலிக்கையில் எதிர்பாலினத்தவரிடம் தான் ஒரு அறிவிற்சிறந்தவன்/ள் என்று காட்டிக்கொள்ள விரும்புவர். அதற்காக தான் படித்த புத்தகங்கள் குறித்து பேசும்போது பெண்களை விட ஆண்கள் இருமடங்கு அதிகமாக இது குறித்து பொய்பேசுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது .
இது தவிர 26 சதவீத பெண்கள் தன் காதலனுக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்கள் 3 சதவீதமே.

இனிமே யார்னா உங்ககிட்ட வந்து பூக்கோ,நீட்சேனுலாம் லந்துவிட்டா நம்பாதீங்கோ லேடீஸ்.... அவர்கள் சாருநிவேதிதா மட்டும் படிப்பவராக இருக்ககூடும் ஜாக்கிரதை பெண்கள்ஸ்...


*******************

சரத்குமார் என்பவர் நடத்திவரும் ச.ம.க என்னும் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை அவரது கட்சியின் அடுத்த நெல்லை மாநாட்டில் தெரிவிக்க உள்ளாராம் . அதற்கு முன் குடும்ப அரசியலில் சிறிதும் நாட்டாமில்லாத தன் கட்சியில் தனது மனைவி ராதிகாவுக்கு முக்கிய பதவி தரவேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விரும்புவதாக தெரிவித்தார்.

இதுதாண்டா கட்சி !!

*********************

வலையுலக சூப்பர் பதிவர் சமீபகாலமாக தனது வலைப்பூவில் நிறைய மீள்பதிவுகளாய் போடுவதன் மர்மம் ஒரு இளம் பெண்ணாம் . அந்த பெண்ணுடன் சாட்டிங்கில் அடிக்கும் மொக்கை அரட்டைக்கே அவரது டவுசர் கழண்டு தாவூ தீருகிறதாம் . அதனால் பதிவுகள் போட நேரமின்றி தவிப்பதாக தோழமை வட்டாரம் ஒன்று தெரிவித்தது .

பல்லிருப்பவன் பர்பி சாப்பிடுகிறான்... கண் மட்டும் இருப்பவன் பாக்கதானே முடியும்....


********************

டோண்டுராகவனுக்கும் பெயரிலிக்கும் நடந்த சண்டையில் தெரியாமல் பெயரிலியின் பதிவுபக்கமாய் போய்விட்டேன். இரண்டுநாளாக கடுமையான பேதி . இத்தனைக்கு அந்த பதிவை நான் படித்ததே பாதி . முழுமையாய் படித்திருந்தால் பேக்கு பஞ்சாராகியிருக்கும்.

நம்மூரில் டாக்டர்கள் எழுதுவது யாருக்குமே புரியாது , ஆனால் மெடிக்கல் ஷாப் மச்சான்களுக்கு மட்டும் சரியாக புரியும் . பெயிரிலியின் பதிவுகள் கூட புரியவேண்டியவர்களுக்கு மட்டும் புரிகிறது போலும் .

அவரது பதிவில் உண்மைத்தமிழன் அண்ணன் போட்ட பின்னூட்டம் கூட புரியவில்லை . ஒரு வேளை அந்த வலைப்பூவில் நுழைந்தால் எல்லாமே மணக்கும் போலும் .

கடைக்கு போனாளாம் ஆட்டி - வெயிலுக்கு இதம்னா ஊட்டி - பீ ய வழிச்சாதான் துன்றதுக்கு போட்டி... தெரிஞ்சுக்கங்கடே...


************************

பிரபல வலையுலக கவிஞர் ஒருவர் விரைவில் அரபுநாடுகளில் செட்டில் ஆக இருக்கிறாராம் . தன் பெயர் சொல்லவிரும்பாத அந்த இரண்டெழுத்து கவிஞருக்கு வாழ்த்துக்கள் . (அவரு சாருவுக்கு மிக நெருக்கமானவராமே.......... ந மக்கென்ன்ன!!! )
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் அவருக்கு வாழ்த்துக்கள்...


அது போல பிரபல சினிமா ஸ்பெஷல் முரளிக்கண்ணன் அவர்களுக்கு இரண்டாவது ஆண்மகவு பிறந்திருக்கிறது . அவருக்கு வாழ்த்துக்கள் .

***********************
தமிழிஷ் தளம் தமிழ் விரோதத்தளமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் , தமிழிஷ்ல் ஷ் இருக்கிறதாம் . என்ன கொடுமை பதிவுலகமே இது . அதற்காக அதனை புறக்கணிக்க வேண்டுமாம் .

தமிழ்ப்படங்களுக்கு தமிழ்ப்பெயரென்று ஒரு சட்டம் இருக்கிறதே அதை விட லூசுத்தனமாக இருக்குதுயா இவர்கள் பேச்சு . போங்க போங்க புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கய்யா...

சரி தலைப்புக்கு வருவோம்...
தமிழிஷ் ஓனர் யாருனு தெரியணுமா !!!


பார்ரா.. அது எம்புட்டு பெரிய ரகசியம்...

சரி ஒரு புதிர் சொல்றேன் கண்டுபிடிச்சுக்கோங்க


அவரும் ஒரு பதிவர்தான் , ஆனா மொக்கையில்லை ,


இவரும் உடன்பிறப்புதான் ஆனா லக்கி இல்லை.


அவர் பதிவும் தமிழ்மணத்தில் வருது...


வெளிநாட்டு பதிவர் இல்ல...


அப்புறம் நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்கப்பா...!!


**************************

படத்தில் ஆயிஷா - அதிஷாவுக்கும் ஆயிஷாவுக்கும் ஒரு தொடர்புமில்லை...


இப்போதைக்கு இவ்ளோதான்பா..... ;-)

11 December 2008

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(3) - ஆபாசப்பெயர்கள்

ஆபாசப்பெயர்கள்:-அலை ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் மெரினா பீச் , அதன் பீச்சாங்கை பக்கமாகஇருக்கும் குப்பத்துக்கு அருகில் இருந்த ஒரு படகுக்கு பின்னால் மறைவாக இருவர். அவன் கையில் மணல் , அவள் கையிலும் மணல் , மணலோடு உதிர்ந்த சில வார்த்தைகள்.

''வினோ நீ என்ன எவ்ளோ லவ் பண்ற? ''

''இன்ஃபினிட்டி அளவு ''

''உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்?''

''இன்ஃபினிட்டி அளவு''

''எனக்காக என்னவேணா செய்வியா!!?''

''கட்டாயம் என்னவேணா செஞ்சுகிட்டே இருப்பேன் , உன்னை......சாரி உனக்கு செய்யாம வேற யாருக்குடா செய்யப்போறேன் ''

''ச்சீ லூசு!! நான் சீரியஸா கேக்கறேன் ''

''நானும் சீரியஸாதான் சொன்னேன்டி ''

''சொல்லுடா!! என்ன வேணா செய்வியா? ''

''ம்ம் செய்றேன் சாகமட்டும் சொல்லாத!! ப்ளீஸ் நான் வீட்டுக்கு ஒரே பையன்''

''நீ இனிமே மோனிகிட்ட பேசாத !''

''ஏன்டி அவ என்னோட பெஸ்ட் பிரண்டுமா!!''

''அவ நோட்டுல இன்னைக்குத்தான் பார்த்தேன் MONIV MONIV னு ஆயிரம் வாட்டி எழுதிருந்தா!!''

''அதென்ன MONIV !! அதுக்கு நான் ஏன் பேசக்கூடாது''

''ம்ம் MONIV இத ரிவர்ஸ்ல படிடா! ''

''VINOM , ஐ...................அட இதப்பார்ரா.. இப்படி படிச்சா மோனி அப்படிக்கா படிச்சா வினோ இன்னா கிரியேட்டிவிட்டி ரியலி வி சுட் அப்ரிசியேட் திஸ்மா, "

''டேய் ப்ளீஸ் , அதப்பாரு எவ்ளோ ஆபாசமா இருக்கு... உன்னை மட்டுமில்ல உன் பேரக்கூட யாரோடயும் சேத்துவச்சு பாக்கமாட்டேன்டா .. அவ உன்னை லவ்பண்றானு நினைக்கிறேன் அவகிட்ட பேசாதடா ப்ளீஸ்!! ''


''என்னடா செல்லம்மா இப்படி சொல்லிட்ட.. எவ்ளவோ பண்றோம் இதபண்ணமாட்டமா.. என்ன ஃபிகருக்காக பிரண்ட கட் பண்றமேனு நினைச்சாத்தான் கஷ்டமாருக்கு , பரவால்லவிடு உனக்காகத்தானே ''

சோனியாவுக்கு பெருமிதமாக இருந்ததிருக்கவேண்டும்.


********************************அலை ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் திருவான்மியூர் பீச் , அதன் மண்டிக்கிடக்கும் மறைவான புதர் பக்கமாக இருவர். ஒருவன் கையில் அவள் , ஒருத்தி கையில் அவன் கை , அங்கே சிதறியதில் பொறுக்கிய சில வார்த்தைகள்.

''வினோ நீ என்ன எவ்ளோ லவ் பண்ற ''

''நிறைய நிறைய ''

''உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்''

''நிறைய நிறைய''
''நிறைய நிறையனா எவ்ளோ ''
''ம்ம்ம்ம் இவ்ளோ ''
''ச்சீ ராஸ்கல் அங்கல்லாம் தொடாத ''
''ஓஓ அங்க வேணாமா.. ஓகே ஓகே புரியுது புரியுது.. இங்கயா இங்கயா இங்கயா ''
''சும்மா இருடா.. நாயி !! எனக்காக என்னவேணா செய்வியா!!''
''கட்டாயம் என்னவேணா செஞ்சுகிட்டே இருப்பேன் , உன்னை......சாரி உனக்கு செய்யாம வேற யாருக்குடா செய்யப்போறேன் ''
''ச்சீ பைத்தியம் !! நான் சீரியஸா கேக்கறேன் ''

''நானும் சீரியஸாதான் சொன்னேன்டி ''

''சொல்லுடா!! என்ன வேணா செய்வியா ''

''ம்ம் செய்றேன் சாகமட்டும் சொல்லாத!! ப்ளீஸ் நான் வீட்டுக்கு ஒரே பையன்''

''நீ இனிமே சோனிகிட்ட பேசாத ''

''டேய் அவ என்னோட பெஸ்ட் பிரண்டுடா ''

''அவ ஸ்கூட்டில இன்னைக்குத்தான் பார்த்தேன் SONIV LOVE னு பெரிசா எழுதிருந்தா!!''

''அதென்ன SONIV !! அதுக்கு நான் ஏன் பேசக்கூடாது''

''ம்ம் SONIV இத ரிவர்ஸ்ல படிடா! ''

''VINOS , ஐ...........அட இதப்பார்ரா.. இப்படி படிச்சா சோனி அப்படிக்கா படிச்சா வினோ இன்னா கிரியேட்டிவிட்டி ரியலி வி சுட் அப்ரிசியேட் திஸ் எபர்ட்மா, "

''டேய் ப்ளீஸ் , அதுப்பாரு எவ்ளோ ஆபாசமா இருக்கு...சிரிக்கிரியே...... உன்னை மட்டுமில்ல உன் பேரக்கூட யாரோடயும் சேத்துவச்சு பாக்கமாட்டேன்டா .. அவ உன்னை லவ்பண்றானு நினைக்கிறேன் அவகிட்ட பேசாதடா ப்ளீஸ்!! ''

''என்னடா செல்லம்மா இப்படி சொல்லிட்ட.. எவ்ளவோ பண்றோம் இதபண்ணமாட்டமா.. என்ன ஃபிகருக்காக பிரண்ட கட் பண்றமேனு நினைச்சாத்தான் கஷ்டமாருக்கு , பரவால்ல விடு , உனக்குத்தான ''

''ச்சீ சும்மா இருடா ... ''

மோனிகாவுக்கு உலகிலேயே தான்தான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரி என்ற நினைப்பு , வினோவின் உதட்டிலிட்ட முத்தத்தின் அழுத்தத்தில் தெரிந்திருக்கும்.

*******************************


*******************************

தொடரும் இன்பம்...

10 December 2008

புலியும் இனிப்பும் - தேநீரும் சைக்கிளும்


சைக்கிள் பாடம் :ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் .

ஐவரையும் நோக்கி '' நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார்.

'' அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா '' முதலாமவன் பதிலளித்தான்.

அவனைத்தட்டிகொடுத்து ''நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் '' என்றார் குரு.

இரண்டாவது சீடனோ '' நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ''

அவனை அருகில் அழைத்து '' உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் '' என்றார்.

மூன்றாவது சீடன் '' ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ''

குரு தன் கண்கள் விரிய '' அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது'' என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.

நான்காவது சீடன் '' நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா '' என்றான்

குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி '' நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா '' என்றார்.

ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் '' என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா! '' என்றான் .

குரு அவன் காலில் விழுந்து '' ஐயா, என்னை மன்னியுங்கள் , நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் '' என்றார்.

(CYCLE என்னும் ஜென் கதையிலிருந்து )


*****************************


ஞான சூன்யம் :

அந்த ஊரின் மிக உயரிய பல்கலைகழகத்தின் பேராசிரியர் அவர். ஊரின் ஜென்குரு ஒருவரை சந்தித்தார். பேராசிரியர் ஞானம் குறித்து பேசத் துவங்கினார். நிறைய விடயங்கள் ஞானம் மற்றும் முக்தி குறித்து விளக்கலானார். குருவோ அமைதியாக காலியாக இருந்த பேராசிரியரின் தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்ப ஆரம்பித்தார். அவர் தேநீரை ஊற்ற ஊற்ற பேராசிரியர் விடாது பேசியபடி இருந்தார். குருவோ முழுவதுமாக நிரம்பிய கோப்பையில் மேலும் மேலும் ஊற்றிக்கொண்டே இருந்தார் . அதைப் பார்த்துக்கொண்டிருந்த பேராசியரோ பொறுமையிழந்து '' சாமி என்ன செயறீங்க , அந்த கோப்பை ரொம்பிருச்சு , இதுக்கு மேல ஊத்தாதீங்க '' என்றார் .

குருவோ புன்னகைத்தபடி '' நீ இந்த கோப்பையை போன்றவன் ''

''உன் கோப்பையை நீ காலியாக்காமல் அதில் எப்படி ஞானத்தை நிரப்புவது ''

(empty your cup என்னும் ஜென் கதையிலிருந்து )


*************************


ஒருவன் காட்டுப்பாதையில் தனியே நடந்துகொண்டிருந்தான். ஒரு புலி அவனை விரட்டத் துவங்கியது. இவன் அதனிடமிருந்து தப்பித்து ஓடினான். ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து அதிலிருந்து தப்பிக்க ஒரு மரத்தின் கிளையை பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தான் . மரத்தின் கீழே புலி அவன் விழ காத்திருந்தது .

அதற்குள் ஒரு வெள்ளை மற்றும் கருப்பு எலி அந்த கிளையை சிறிது சிறிதாக கொறிக்கத் துவங்கின. முக்கால்வாசி கிளையை கடித்துவிட்டன. இன்னும் கொஞ்சம் கடித்தால் கிளை முறிந்து விடும். அங்கே அருகில் ஒரு கொய்யா மரம் அதில் ஒரு கனிந்த கொய்யா , அவன் தன் ஒரு கையை கிளையிலும் மறுகையை பழத்திலும் வைத்து அதை பறித்தான் . தின்னத்துவங்கினான் .

'' ஆஹா ! என்ன சுவையான கொய்யா , என்னே இனிப்பு ''
( Fleeing the tiger என்னும் ஜென் கதையிலிருந்து )


**********************

08 December 2008

கடலை....கன்னியம்...கட்டுப்பாடு...!!
கடல்

கடலலை

வெளியில் கடலை


கடலலைக்கு இல்லை வேலி

கடலை போடாட்டி உன் வாழ்க்கை (கா)போலி......

- நான் எழுதினதுதான்.நேற்று முப்பாத்தம்மன் கோவிலில் அம்மன் தரிசனம் செய்து , தியானத்தில் ஞானத்தின் பாதையில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே என் மனம் சென்று கொண்டிருந்த போது , திடீரென எனக்கு மிக அருகில் ஒரு ஒலி

''ரெண்டுலதான் ஒன்னத் தொட வரீயா ..........தெனம் ரெண்டுலதான் ஒன்னத்தொட வரிய்யா '' என்று ஒரு கிரகச்சாரமான பாடல் ஒலித்தது , திரும்பி பார்த்தால் ரம்யமான அழகுடன் , சிக் கென இறுக்கமாக நச் என்று கின் எனும் உடலுடன் என் தவம் கலைத்த மேனகை . அவளது மொபைலில்தான் அந்த அழைப்பிசை .

அப்படியெல்லாம் இல்ல ஒரு அபச்சாரமான யுவதி , அவள் மேல் கடும் கோபம் வந்தது , நான் முனிவர் அல்ல , இருந்திருந்தால் அவளை சிம் கார்டாக சாபமிட்டிருப்பேன் . மொபைலை எடுத்து பேச ஆரம்பித்து விட்டாள் . நான் மீண்டும் அம்மன் தரிசனத்தை தொடர்ந்தேன் . அரை மணிநேரமாய் கோவிலை ஒரு 200 முறை சுற்றி சுற்றி பேசிக்கொண்டே இருந்தாள் , எனக்கு ஒட்டுக்கேட்கும் பழக்கம் சிறுவயது முதலே அதிகம் ( அரசாங்கமே ஒட்டுக் கேட்கிறது நான் கேட்டால் தவறா ? ) .

அவளது பாய்பிரெண்ட் போல அந்தப்பக்கம் , மகாமொக்கையாக(என் பதிவுகளை விட ) எங்க வீட்டில் தக்காளி குழம்பு , அம்மா வாங்கி வந்த உருளையில் புழு , பாத்ரூம் போகும் போது தண்ணீர் வரவில்லை என மிக சுவாரஸ்யமாய்(?) பேசிக்கொண்டிருந்தாள் . வெறுப்பாக இருந்தது . பின்தான் புரிந்தது அவள் கடலைகன்னி என்று . காசு கொடுத்தாலும் கடவுளை சுற்றாத இக்கன்னிகள் , இன்று கடலையால் கோவிலையே இருநூறு முறை சுற்றுகிறார்கள் என்றால் அதன் வலிமையை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் .


கடலை வறுத்தல் அல்லது கடலை போடுதல் என்
னும் சொலவடை கடந்த பத்தாண்டுகளாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் ஒரு வாக்கியம் . இதைக்குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு . இக்கடலை எல்லார்க்கும் மிகப்பிடித்தமானதும் சுவையானதுமானது. இது இளைஞர் ,மத்ய வயதினர் , வயதானவர் , பேச்சிலர் , திருமணமானவர் என்று பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான கடவுளைப் போன்றது .

இது குறித்த அறிந்திடாத மற்றும் நம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட கடலை போட இயலாத இளைஞர்களுக்கும் அதன் பொருள் விளக்கம் தரும் முயற்சியே இப்பதிவு .
கடலை என்பது எந்த வித கருத்தோ அல்லது பொருளோ காரியமோ இன்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பேச்சை அடைக்காமல் நமது மனதுக்கு தோன்றியதை இஷ்டம் போல் அள்ளி விடுவதே கடலை ஆகும் .இக்கடலையாகப்பட்டது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்து செய்வது .இதை ஒரு ஆணும் ஆணுமோ பெண்ணும் பெண்ணுமோ சேர்ந்து கட்டாயம் செய்ய இயலாது . அதற்கு இச்சமூகம் வெட்டி அரட்டை என்று பெயர்வைத்திருக்கிறது .

கடலைகளில் பல வகைகள் உண்டு. உதாரணமாக நிலக்கடலை,பொட்டுக்கடலை ,காரக்கடலை, சுரேஷ் கடலை* etc etc... இப்படி பல பெயர்கள் இருந்தாலும் இக்கடலைகள் வேலை வெட்டி இல்லாமல் அம்மாஞ்சி போல வீட்டிலோ பார்க்கிலோ அல்லது பஸ் ஸ்டான்டிலோ அமர்ந்து கொண்டு முற்றத்தையும் வானத்தையும் பார்க்கும் பலருக்கு ஒரு சும்மா டைம் பாஸ் மச்சியாக இருக்கிறது .

அது போலவே கடலைவருப்பதிலும் பல வகைகள் உண்டு

1.எஸ்எம்எஸ் கடலை


2.மின்னஞ்சல் கடலை


3.சாட்டிங் கடலை


4.தொலைப்பேசிக்கடலை


5.மொபைல்க் கடலை


6.நேரில் கடலை


இப்படி கடலைகள் பல வகைகள் இருந்தாலும் ,அவற்றின் கொள்கை ஒன்றுதான் ,அது எல்லையில்லா இன்பம் .

கடலைப்போடுவது கூட முன் சொன்ன நிலக்கடலை வகையறாக்களை போல வேலை வெட்டியின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் பார்க்கிலும் பீச்சிலும் என எங்கும் வெட்டித்தனமாக இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் . ஆனால் இது சாதாரண வேர்க்கடலை போல சும்மா டைம் பாஸ் மச்சி என்று மட்டும் நினைத்து விட இயலாது .

கடலை போடுதல் சமயங்களில் காதலையும் , கல்யாணத்தையும் , பல கள்ளக்காதல்களையும் தீர்மானிக்கின்றன . கடலைபோட்டே காரியம் சாதிக்கும் இளைஞர்கூட்டமல்லாவா நம்முடையது . இங்கே யாம் காரியம் என்று எதை குறிப்பிடுகிறோம் என்பது காரியம் சாதித்த இளசுகளுக்கும் பெருசுகளுக்கும் புரிந்திருக்கும் .

கடலை போடுதல் கான்பிடன்டை அதிகரிக்கும் என்று சித்தர் பாடல்கள் எதுவும் கிடையாது.

ஆனால் அதுதான் உண்மை . நாம் எத்தனை அதிகமாக நமக்கினியவர்களிடம் கடலை போடுகிறோமோ அத்தனை வேகமாக நமது நம்பிக்கை வளரும் .

கடலை போடுவதில் பல முறைகள் உண்டு . அதற்கு முன் நீங்கள் திருமணமானவரா அல்லது ஆகாதவரா என்பது மிக முக்கியம் . பொதுவாகவே திருமணமாகாத கன்னிபையன்கள் வயது வித்யாசமின்றி அனைவரிடமும் கடலை போட்டு மகிழ்வர் . ஆனால் திருமணமானவர்களோ வயது வித்யாசமின்றி கடலை போட்டாலும் சில வரைமுறைகளோடு அதை செய்வர் . அது என்ன வரைமுறைகளென்றால் நாம் பேசும் பெண்மணி நல்ல நாட்டுக்கட்டையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதும் அப்பெண்ணின் வாழ்க்கைமுறை பிற்காலத்தில் அப்பெண்ணுடனான தொடர்பால் நமது இல்லற வாழ்வில் துன்பம் நேருமா என்பதை பற்றியெல்லாம் சிந்தித்து பின்னாலே கடலை போடுவதா வேண்டாமா என்று முடிவெடுக்கும் .
திருமணமானவர்கள் மிக ஜாக்கிரதையாக கடலை போடுவது நலம் .

எனக்குத்தெரிந்து ஒரு குடும்பஸ்தர் கிராமத்தில் அந்த ஊர் பால்காரம்மாவிடம் பால் வாங்கப் போய் தினமும் கடலை போட்டு போட்டு அது முற்றி வளர்ந்து விருட்சமாகி இப்போதெல்லாம் அவரே அந்த அம்மையாரின் வீட்டில் பால் கறக்க துவங்கி விட்டார் . அவர்கள் வீட்டில் மொத்தமாய் 10 பசு மாடுகள் . அதனால் திருமணமானவர்கள் ஜாக்கிரதை .

இன்னொரு நண்பர் ஒருவர் மாதத்திற்கு 10000 ரூபாய் வரை தனது மொபைலுக்கு பணம் கட்டுகிறார். எல்லாம் கடலை செயல் .

இவ்விடயத்தில் பெண்கள் மிக கெட்டிக்காரத்தனமாய் மாதந்தோறும் 20000 எஸ்எம்எஸ்கள் இலவசமாகத்தரும் மொபைல் சேவைகளை பயன்படுத்துகின்றனர் . அது தவிர மினிமம் பேலண்ஸ் மெயின்டயின் செய்து மிஸ்டுகால் மங்கைகளாகவும் திகழ்கிறார்கள் . இதனால் அவர்களுக்கு பொருளிழப்பு அதிகமில்லை . இதனால் இவர்களது கடலை குறைந்த செலவில் முடிந்து விடுகிறது .

நேரில் கடலை போட அசாத்திய திறமை வேண்டும் . போனிலோ அல்லது மெசேஜ் அல்லது சாட்டிங் என்றால் பிரச்சனை இல்லை , நாம் எதிராளியிடம் பேசுகையில் அடுத்து என்ன பேசலாம் என்று சிந்திக்க சில விநாடிகள் அவகாசம் இருக்கும். ஆனால் நேரிலோ அது கிடையாது , அதற்காக நீங்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டும் . அவை கடலை போட போடத் தானாகவே கைகூடும் . இல்லையென்றால் விடுங்கள் வேறு யாரும் சிக்காமலா போய்விடுவார்கள் .

இருந்தாலும் நமது சீரிய ஆராய்ச்சியின் விளைவாக அறிந்து கொண்ட சில குறிப்புகள் மட்டும் உங்களுக்காக .

சிறப்பாக கடலை போட சில வழிகள் :

1.நேரில் பேசும் போது கண்ணைப்பார்த்து பேசவும் . அதிகம் வழியாதீர்கள் . அல்லது கையில் கைக்குட்டை வைத்துக்கொள்ளவும் .

2.பெண்கள் சொல்லும் மொக்கை ஜோக்குக்களுக்கு பி.எஸ்.வீரப்பா போல சிரிக்கவும் . சாகும்வரை சிரிக்க முயலுங்கள் அவர் இனிமேல் உங்களிடம் ஜோக்கே சொல்ல மாட்டார்.

3.அடிக்கடி ஆக்சுவலி என்னும் வார்த்தையை சேர்க்கவும் (ஹீரோயிசத்திற்கு உதவும் ) . ஆக்சுவலி சேர்த்து பேசுகையில் உங்களை மெத்தபடித்த கணவான் என்று எண்ணக்கூடும் .

4.வாய் கூசாமல் கேட்பவரை குறித்து புகழ்ந்து பொய் பேசவும் . ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆகாது . அளந்து புகழுங்கள் . அழகாய் புகழுங்கள் .( உதவிக்கு நிறைய காதல் புத்தகங்கள் படித்து அறிவை வளர்க்கலாம் , ஆங்கிலபுத்தகஙள் என்றால் சிறப்பு )

5.பேசும் போது குரங்கு சேட்டைகளை தவிர்க்கவும் (காது குடைவது , மூக்கு நோண்டுவது போன்றவை )

6.அடிக்கடி உங்களை பற்றி பீத்திக்கொள்ளாதீர்கள் , அதை பூடகமாக செய்யவும் (அதாவது சுற்றி வளைத்து )

7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது . ( உ.தா - லைசன்ஸ் இன்றி போலீசிடம் மாட்டிக்கொண்டு 13 ரூபாய் கொடுத்து தப்பித்த வீரசாகசங்களை பேசவே கூடாது )

8.எந்த ஒரு கட்டத்திலும் ' அப்புறம் ' என்று கேட்டு விடாதீர்கள் , அது கடலையை உடனே நிறுத்திவிடும் .

இது அத்தனையும் பின்பற்றினால் நீங்களும் ஒரு தலைசிறந்த கடலைமன்னனாக புகழ்பெறலாம். பிறகு உங்களுக்கு அந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் எந்தநாளும் நேரம் காலம் இல்லாமல் கடலைபோட ஒருவர் உங்களுடனே கட்டாயம் இருப்பார் .

கடலை போட மிக முக்கியமானது , எதிர்பாலினத்தேர்வு (அதாவது நல்ல டுபுரி ) . அது அனைவருக்கும் வாய்க்காது . அதற்கு கடினமான உழைப்பும் நேர்மையும் வாய்மையும் நேரம் தவறாமையும் கொஞ்சூண்டு பர்சனாலிட்டியும் வேண்டும் . இவையெல்லாம் இருந்தும் உங்களுக்கு நல்ல ஃபிகர் அமையவில்லையென்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு நல்ல கோவிலில் வாரமிருமுறை என 108 வாரம் முருகப்பெருமானுக்கு நெய்விளக்கு போட்டு பூஜை செய்யவும் நல்ல பலன் கிட்டும் . (நான் கோவிலுக்கு போனதன் காரணம் இப்போது புரிந்திருக்கும் .) . நெய்விளக்கு கிடைக்கவில்லையென்றால் எழுமிச்சைவிளக்கு உசிதம் .


ஒரு சுய விளம்பரம் :

என்னிடம் கடலை போட்டு அறிவை வளர்க்க விரும்பும் வாசகர்கள் ( பெண்கள் மட்டும் )
என் மின்னஞ்சல் முகவரிக்கு , உடனே ஒரு மின்னஞ்சலை தட்டிவிடவும். முதலில் வருபவர்க்கே முன்னுரிமை அளிக்கப்படும் .


இச்சலுகை குறைந்த காலத்திற்கு மட்டுமே .

CONDITIONS APPLY .


ஒரு பிற்சேர்க்கை :


*சுரேஷ் கடலை என்பது ஒருவகை கடலை , அது வெளியில் கருப்பு நிறத்தில் சொறசொறப்பாகவும் , உள்ளே மஞ்சளாக வழுவழுப்பாகவும் தோற்றமளிக்கும் . அதன் கருத்த தோல் உவர்ப்பாக இருக்கும் . அதனை கோவையில் சுரேஷ் கடலை என்று அழைப்பர் . அதற்கு பிற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை . அதை தெரிந்து கொண்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை . ஏனென்றால் எனக்கு அக்கடலை சுத்தமாய் பிடிக்காது .###########################