Pages

30 May 2009

தனிமனிதனுக்கு..!




நாம் அனுதினமும் எதையாவது எழுதுகிறோம் , ஆடுகிறோம், பாடுகிறோம் , ஓடுகிறோம் , கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறோம் புது வீடு வாங்குகிறோம் , காதலிக்கிறோம் , அழகு படுத்திக்கொள்கிறோம் , நல்லவனாய் காட்டிக்கொள்கிறோம் , அறிவி ஜீவித்தனமாய் பேச முற்படுகிறோம் , அது உடைந்து போகும் போது சத்தமாய் கூச்சலிட்டு கோபமடைகிறோம்...

எதற்காக?

மற்றவர் கவனம் பெற. அனைவரும் நம்மை மட்டுமே கவனிக்க வேண்டும். நம்மைப் பற்றியே சிலாகிக்க வேண்டும் . சிறந்தவையென்றால் என்னுடையது , நல்லது எல்லாம் நான் செய்தது . நான் நான் நான்.. அது மட்டுமே அல்லாமல் வேறெதும் நம்மை இயங்க வைப்பதில்லை. இந்த கவனம் பெறுதல்தான் எத்தனை கடினமானது.

யோசித்துப்பாருங்கள் நீங்கள் பிறந்ததிலிருந்து அனுதினமும் உலகமே உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கழிப்பறைக்கு செல்வதிலிருந்து கலவியில் ஈடுபடுவது வரை கவனித்தால் அதுவும் காட்சிப்பதிவுகளாய் உங்கள் வாழ்க்கை முழுக்கவுமே ஒரு நேரடி ஓளிபரப்பாய் பல ஆயிரம் கேமராக்களை உங்களுக்குத்தெரியாமல் உங்களைச்சுற்றி அமைத்துக்கொண்டு ஒரு தொலைக்காட்சி ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தால் அது குறித்த அறிவே இல்லாது நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்க ஒருநாள் உங்களை சுற்றி இருக்கும் வானம் முதல் கடல் , காதலி , வீடு அனைத்துமே ஒரு ஸ்டுடியோ செட் நீங்கள் வாழ்வது ஒரு மெகா சீரியலில் என்றும் தெரிந்தால்? உங்கள் இறுதி முடிவு என்னவாயிருக்கும். அதை இத்தனை ஆண்டுகளாய் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் மனநிலை என்னவாய் இருக்கும்..

TRUMAN SHOW .. அதுதான் அந்த திரைப்படத்தின் பெயர்.

ஜிம் கேரியை நாம் எல்லோருக்குமே நிச்சயம் தெரிந்திருக்கும். தனது மாஸ்க் எனும் திரைப்படத்தால் உலக அளவில் புகழ் பெற்றவர். தனது கோமாளித்தனமான முகப்பாவங்களாலும் உடல் மொழியாலும் அசத்துகிற சிரிப்பு நடிகர் அவர். நமக்கெல்லாம் மிகப்பிடித்த ஒரு காமெடி நடிகர். ஆனால் அவரது இன்னொரு மிகப்பிரமாண்டமான நடிப்புத்திறனால் ட்ரூ மேன் என்னும் அந்த பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் ஜிம்கேரி.

ட்ரூமேன் அவன் பெயர். அன்றாடம் இயந்திரமாய் ஒரே மாதிரியான ஒரு அன்னியன் திரைப்பட அம்பியைப் போன்ற வாழ்க்கையை வாழ்கிறவன். அவனுக்கு ஒரு காதலி ஒரு நண்பன் ஒரு அலுவலகம் ஒரு அம்மா என ஒரு சிறிய உலகத்தில் வாழ்பவன். தனது தந்தையோடு சிறிய வயதில் போட்டில் செல்லும் போது அவர் கடலில் விழுந்து உயிர்விட அதைக்கண்டு தண்ணீரைக்கண்டாலே பயந்துவிடும் வியாதிக்கு ஆளாகியிருக்கிறான். இவன் உலகத்திலிருந்து விலகி உருவாக்கப்பட்ட ஒரு தீவில் வசிப்பவனாய் இருக்கிறான். வாழ்வில் ஒரு முறை கூட அவன் அந்த தீவை விட்டு வெளியுலகிற்கு சென்றதில்லை. காரணம் அந்த தண்ணீர் பயம்.

ஒரு கட்டத்தில் தனது தந்தை உயிரோடு செல்வதை அவன் சாலையில் காண நேரிடுகிறது. அதிர்ச்சியடைந்து அவரிடம் பேச ஆரம்பிக்கிறான். யாரோ சிலர் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்வதைக்காண்கிறான். தனது அம்மாவிடம் பேசுகிறான. அவள் அடித்துக்கூறுகிறாள். அவனுக்கு அவனது வாழ்க்கை குறித்தே கேள்வியெழுகிறது. ... அதன் பின் நடக்கும் சம்பவங்களும் தான் ஒரு டி.வி ஷோவில் ஒரு பாத்திரமாய் வாழ்ந்து வருவதையும் எப்படி கண்டுபிடிக்கிறான் அதை எப்படி எடுத்துக்கொண்டு முடிவில் என்ன செய்கிறான் என்பது மீதிக்கதை.

நாம் அனைவருமே ஏதோ ஒரு நாடகத்தின் ஏதோ ஒரு பாத்திரத்தில் யார் போதைக்கோ ஊருகாயகத்தான் இருக்க நேரிடுகிறது. அதை எப்போதும் நாம் அறிவதில்லை. இதோ இந்த விமர்சனம் நான் யாருக்காக எதற்காக எழுதுகிறேன் என எனக்கு தெரிந்து விட்டால் , நாளை முதல் எழுதுவதை நிறுத்திவட நேரிடலாம். நம்மை இயக்குவதே அந்த கேள்விதான். அந்த ஒரு கேள்வியை வைத்துக்கொண்டு மிக அருமையான ஒரு இரண்டு மணிநேர கதையை புனைந்த இயக்குனருக்கு சபாஷ்,

படம் முழுக்க இசைக்கப்படும் அந்த தீம் மியுசிக் கிளைமாக்ஸில் உச்சமடைவது , ஆண்டவனே தயவு செய்து எதையாவது செய்து அந்த குழந்தையை காப்பாற்றிவிடு என நம் மனங்களை மன்றாடச்செய்யும்.

இருத்தலியல் என்கிற ஒற்றை வார்த்தைக்கான பொருள் தேடி அலையும் ஒரு நதியின் பயணமாய் படம் ஜிம்கேரியின் இயல்பான நடிப்போடு பயணிக்கிறது.

1998ல் வெளியான இத்திரைப்படம் சைக்கலாஜிக்கல் சைன்ஸ் பிக்ஸன் வகையில் பிரிக்கப்படுகிறது. ரியாலிட்டி ஷோக்கள் குறித்தும் அதன் மீதான மக்களின் பேரார்வம் குறித்தும் ஆராய்ந்து செல்லும் இப்படம் அதன் கறுப்புப்பக்கங்களை பார்வையாளனுக்கு தெளிவாக்கிச்செல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தன்னை சுற்றியிருக்கும் குடும்பம் குட்டி குழந்தை என எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு சுதந்திரமாய் தனிமையில் எங்காவது சென்று விடத்துடிக்கும் எண்ணத்தில் கட்டாயம் இருப்பான். அப்படி ஒரு மனநிலையில் வெளிப்பாடாகவும் இத்திரைப்படத்தின் கதை அமைவதாக ஒரு சாரர் கருதுகின்றனர்.

சென்ற வாரத்தில் எங்கோ எதிலோ இப்படம் குறித்து இரண்டு வரி படித்ததிலிருந்து பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் பல நாட்களாய் இதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிந்தேன். இப்படத்தின் சிடிக்காக நேற்று பர்மா பஜாரின் ஒவ்வொரு கடையில் அலைந்து திரிந்து தேடிக்கண்டுபிடித்து இரவோடு இரவாக பார்த்ததும்தான் நிம்மதியாய் இருந்தது. அதிலும் அந்த ஓற்றை படகு கிளைமாக்ஸ் கண்களில் ஆனந்தக்கண்ணீர். கட்டாயம் பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க..

உண்மையாவே படத்திற்கு TRUMAN SHOW னு மிகச்சரியாகத்தான் பெயர்வைத்திருக்கின்றனர்.

29 May 2009

டெசி பாபா!



எங்கள் நண்பர் குழாமில் நான் மிகப்பெரிய அப்பாவி. கோகுல்தான் முதன்முதலில் இன்டர்நெட் குறித்து பேசத்துவங்கியவன். மாமா டவுன்ஹால் பக்கத்தில புதுசா ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வந்திருக்குடா அதுல செம சீன்ரா என்று உசுப்பேத்தி விட்டான்.

அப்போதெல்லாம் அன்றாடம் மாலை வேளைகளில் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தேவாரமும் திருவாசகமும் பாராயனம் இருக்கும் , நெற்றி நிறைய பட்டையும் வெள்ளை வேஷ்டியுமாய் பார்க்க பக்திப்பழமாய் காட்சி அளிப்பேன். எட்டு மணிக்குத்தான் முடியும். நானும் சந்துருவும் முதல் முதலாக அன்றைக்குத்தான் முடிவெடுத்தோம். டவுன்ஹால் அருகிலிருக்கும் அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் பார்த்து விடுவதென்று.

இருவருமாக வெக்கு வெக்கு என முக்கி முக்கி பின் சென்டர் அருகில் சென்றதுமே பம்மி பம்மி உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய அண்ணன் ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தார். என்னப்பா வேணும் என்றவரிடம் அசட்டுத்தனமாய் சிரித்துவிட்டு ஒன்னுமில்லண்ணா சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தோம், வரோம் .. என்று பேக் அடித்து எஸ்ஸானோம். சே மிஸ்ஸாகிருச்சே.. என்னடா மாப்ளே... என்று சந்துரு மிகவும் வருத்தப்பட்டான்.

நான் மட்டும் என்ன இதற்காக வேண்டிக்கொண்டா அங்கு சென்றேன் அங்கு போனபின் என்ன கேட்கவேண்டும் என தெரிந்தால் கேட்டிருக்கமாட்டேனா? எனக்குமட்டும் என்ன ஆசையா சீன் பார்க்காமல் வர வேண்டும் என்று. எக்ஸ்க்யூஸ்மீ சார் ஒரு இரண்டு சீன் பார்க்கவேண்டும் அனுமதி கிடைக்குமா என்றா போய் கேட்க முடியும்.. பேசாமல் சந்துருவும் நானும் டிஸ்கஸ் பண்ணியபடியே அவரவர் வீட்டிற்கு கிளம்பினோம். மீண்டும் நண்பர் குழாம் மீண்டும் கோகுல் மச்சான் முந்தாநாள் சென்டர்ல ஒரு சீன் பார்த்தேன் பாரு சூப்பர்டா.. அதும் ஒரு பொண்ணு ஒரு பெப்ஸி கேனே......என்று அவன் பேச சுற்றியிருக்கும் பதினெட்டுப்பட்டி பிரண்ட்ஸ்க்கும் வாயில் ஜொள்ளு ஒழுகும்.

சந்துருவும் நானும் ஒரு சுபமுகூர்த்த நாளில் முடிவெடுத்தோம் தனிப்படையெடுப்பு எடுபடாது. இனி குழுப்படையெடுப்பு ஒன்றே குறி என. கோகுலிடம் சரண்டைந்தோம்.

''மாமா காசு வேணா தரோம் ஒருவாட்டி கூட்டிட்டு போடா.. '' என்று சந்துரு கெஞ்சினான்.

''டே அங்க யார் வேணா போலாம்டா.. இதுக்கேண்டா கெஞ்சற ஆனா எனக்கு ஒரு வில்ஸ் ஸ்பான்சர் பண்ணனும்'' என கன்டிசன் வைத்தான்.

சந்துருவோ '' வில்ஸ்னா ஒன்னு ஒன்னு இரண்டு என டே இரண்டேகால்ரூவாடா '' என்று என் காதைக்கடித்தான். '' நாம கட் ஆஃப் போட்டுப்போம் அவனுக்கு ஒன்னு வாங்கிக்குடுத்துருவோம்டா '' என்றேன்.

மூவருமாய் அந்த சென்டருக்கு இரண்டாம் முறை படையெடுத்தோம். அதே ஆஜானு பாகு ஆள். அதே இடம். எங்கள் இருவர் நெற்றியிலும் பட்டை , கழுத்தில் கொட்டை , வெள்ளை வேட்டி வாயில் கேவலமான அசட்டு சிரிப்பு.

கோகுல் உள்ளே நுழைந்ததும் பிரவுசிங் எனக் கேட்டான். சந்துரு நோட் பண்ணிக்கொண்டான். பிரவுசிங் பிரவுசிங் பிரவுசிங் மனப்பாடம் செய்து கொண்டான்.

நாலாவது கேபின் என்றார் ஆஜானுபாகுஅண்ணன்.

மூவருமாய் நடந்து அந்த நாலாவது கேபினை அடைந்தால் அது ஒரு நாலுக்கு நாலு கேபின். அதில் பாதியை கம்யூட்டர் அடைத்துக்கொண்டிருந்தது. மீதியை ஒரு குட்டி நாற்காலியும் அதனருகில் பெரிய நாற்காலியும் அடைத்துக்கொண்டிருந்தது. கோகுல் பெரியதில். நான் சின்னதில். சந்துரு நிற்கக்கூட இடமில்லை.

''டேய் நீ வேணா வெளிய நில்லேன்.. '' என்றேன்

சந்துரு முறைத்தபடி வெளியவாடா வச்சுக்கிறேன் என்பது போல வெளியேறினான்.

கோகுல் கணினி திரையில் நீலநிற ஈ எனும் ஆங்கில எழுத்தை அழுத்தினான். திரை முழுக்க வெள்ளையாகிப்போனது. உச்சியிலிருந்த இடத்தில் மௌசால் அமுக்கி கிளிக்கி டபிள்யூ டபிளயூ டபிள்யூ புள்ளி டி ஈ எஸ் ஐ பி ஏ பி ஏ புள்ளி சி ஓ எம் என அழுத்தினான் பிறகு கீபோர்டில் என்டர் என்ற பட்டனை டொக் என அழுத்த..

வெகு நேரமாக வெள்ளையாகவே இருந்தது அந்த வெள்ளைத்திரை. கீழே நீலநிறத்தில் ஒரு நிரப்பி ஓடிக்கொண்டிருந்தது. ''மச்சான் இது புல் ஆனாதான்டா ஓப்பன் ஆகும்'' என்றான்.

விபூதி நெற்றியிலிருந்து வியர்வையில் களைந்து வழிந்து கொண்டிருந்தது.

அந்த நீலம் முழுமையடையும் நேரம் பார்த்து புசுக் கரண்ட் போய் விட்டது.

வெளியே வந்தவன் ஆ.பா அண்ணனிடம் எவ்ளோண்ணா.. என்றான்.

இருபது ரூபாய் என்றார்.

சந்துரு வெறுப்போடு பாக்கெட்டில் இருந்து இருபதைக்கொடுத்தான்.

மூவரும் இரண்டு வில்ஸை பற்றவைத்துக்கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தோம்.

''மச்சான் கரண்ட் போயிருச்சுடா ஒன்னுமே பாக்கலைடா.. '' என்றேன் சந்துருவிடம்.

''டேய் இவ்ளோ நேரம் இருந்துட்டும் ஓன்னும் பாக்கலைனா யார்டா நம்புவா..''

''மச்சி பிராமிஸாடா.. படிப்பு பிராமிஸ் ''

***********


மற்றொரு நாள் வேதபாடசாலை முடிந்த நேரம். சந்துரு என்னிடம் இன்றைக்காவது போகலாமா என்றான். சரி வா என்று முடிவாகி கிளம்பினோம்.

உள்ளே நுழைந்ததும் இன்று ஆ.பா அண்ணனை காணவில்லை. ஒரு அழகிய பெண்தான் இருந்தாள். அவளும் எங்களுக்கு அக்காளைப்போலிருந்தாள். என்ன என்பதை பார்த்தாள். எங்களது கோலத்தைப் பார்த்து பிச்சை எடுக்க வந்ததாகவோ அல்லது கோவிலுக்கு நிதி கேட்டு வந்ததாகவோ நினைத்திருக்க வேண்டும்.

சந்துரு ஆர்வமாய் மனப்பாடம் பண்ணி வைத்திருந்த அந்த பிரவுசிங் எனும் வார்த்தையை முதலில் உதிர்த்தான்.

அவள் மூனாவது கேபின் என்றாள். எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. மூன்று என் ராசி எண்.

நான் பெரிய சேரில் அவன் சிறியதில். நீலநிற ஈ யை கிளிக்கினேன். வெள்ளைத்திரை வந்தது. டபிளயூ டபிள்யூ டபிள்யூ டாட் டெசிபாபா டாட் காம் என டைப்பினேன். சிறிய நேர இடைவெளிக்குப்பின் கண் முன்னே கவர்ச்சித்திருவிழா. ஆனால் எல்லாமே சிறிய சிறிய படங்களாய் இருந்தது.

சந்துரு அந்த படத்தை அமுக்கி பார்க்க ச்சொன்னான். அமுக்கினேன்.. படபடவென பட்டாசு வெடித்ததுபோல நிர்வாணப்பெண்கள் பெட்டி பெட்டியாய் நூற்றுக்கணக்கில் வெள்ளைத்திரை மறைய மறைய மறைக்க முடியாத அளவுக்கு , ஒன்றொன்றாய் பார்க்ககூட அவகாசமில்லை அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தது.

கணினி வேறு கீ கீ என கத்திகொண்டே இருந்தது. அதற்குள் ஒரு மணி நேரமும் முடிந்திருந்தது. அந்த பெண் கேபின் அருகில் வந்து முடிச்சிக்கிறீங்களா என்றாள். நானும் சரியென்று எழுந்தேன் சந்துரு கையைப்பிடித்து இழுத்தான். டேய் இதெல்லாம் எப்படிடா நிறுத்தறது என்றான்.

? அதுதான் தெரியாதே.. அதை சொல்லித்தரலையேடா அந்த பாதகன். ஆஹா மாட்டிகிட்டோம்டா.. அதற்குள் நான் பாக்கெட்டில் இருந்து 50 ரூபாயை கொடுத்திருந்தேன்.

மாமா வாடா ஓடிரலாம். எவனாவது பார்த்தா சாவடிதான். அதும் அந்த பொண்ணு பார்த்தா நான் தூக்குல தொங்கி செத்துருவேன். என்று கிசு கிசுக்க இருவரும். அவசர அவசரமாக சென்டரை விட்டு வெளியேறி ரோட்டை கிராஸ் செய்து வீட்டை நோக்கி ஓடினோம். கொஞ்ச தூரம் போய் பின்னால் பார்த்தால் நல்ல வேளை யாரும் துரத்த வில்லை.

அதற்கு பின் சில வாரங்கள் சென்டர் பக்கம் கூட இருவரும் போகவில்லை.

ஒரு நாள் கோவிலில் நானும் சந்துருவும் பூஜை டியுட்டியில் இருந்த தினமது. அந்த பெண்ணும் ஆ.பா அண்ணனும் என்னிடம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றார். என் முகத்தைப்பார்த்ததும் தெரிந்து கொண்டவராய் ''சாமி நீங்க நம்ம கடைக்கு வந்திருக்கீங்கல்ல'' என்றார்.

''ஹிஹி '' அதே அசட்டு சிரிப்பு , பக்கத்தில் முருகன் சன்னதியில் சந்துருவுக்கு டியூட்டி.

நான் அர்ச்சனை சாமிக்கு செய்தாலும் கண் என்னவோ அந்தல இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்தது. அந்த பெண் ஆ.பா அண்ணனிடம் ஏதோ கீழே குனிய அழைத்து காதில் கிசுகிசுக்க அவர் என்னைப்பார்த்து முறைத்தார்.

நான் கைகள் நடுங்கியபடி அவரது அர்ச்சனை பொருட்கள் கூடையை திருப்பித்தர , அவர்
''என்ன சாமி அன்னைக்கு மீதி பணம் வாங்காம போயிட்டீங்களாம்.. இந்தாங்க '' என்றபடி பாக்கட்டில் இருந்து 30 ரூபாயை எடுத்துத்தர..

நிம்மதியாய் அடுத்த அர்ச்சனையை கன்டினியூ செய்தேன்.

அந்த பெண் வெகு தூரம் போய் என்னைப்பார்த்து விரலால் கொன்னுடுவேன் படவா என்பது போல் சைகை செய்தபடி சென்றாள். வேர்க்க வைக்கும் சிரிப்பு.


*******************

28 May 2009

வா........ரம்........மா.........தம் ...




அப்பாடா ஒரு வழியாய் ராஜபக்சே போர் நிறுத்தம் அறிவித்து விட்டான். இனிமேல் யாரும் தமிழகத்தில் உண்ணாவிரதம் இருக்கிறேன் என கபட நாடகம் ஆடமுடியாது. நான் இராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தருவேன் என உட்டாலக்கடியாய் அறிக்கை விட முடியாது. ரத்தம் கொதிக்க மைக்கதிர பேச முடியாது. இனி கலைஞர் சென்டிமென்ட் அறிக்கைகளை சினிமாவிற்கு உபயோகிக்கலாம் ( பாச எலிகள் , புண்ணின் பூனைகள் , etc etc ) . ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுக்கலாம். வைகோ ராமு திருமா போன்றோர் கூட்டணிகள் மாறுவது எப்படி என ஒரு புத்தகம் எழுதலாம். தமிழக அரசியல் வாதிகளே எப்படியோ போரை நிறுத்திட்டீங்க வாழ்த்துக்கள். (தூ.....).

அப்பாடா ஒரு வழியா ஐபிஎல் முடிந்துவிட்டது. இம்முறை எதிர்பார்த்ததைப்போலவே ஒரு அன்டர்டாக்(UNDERDOG) அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிவிட்டது.இனி அவரவர் வேலையை ஒழுங்காக பார்க்கலாம். மற்றபடி இந்த மூன்று மணிநேர முழு மசாலா கிரிக்கெட் ஆட்டம் பற்றி பெரியதாய் சொல்ல ஏதுமில்லை. நிறைய கவர்ச்சி ,அதிரடி ஆக்சன் , மகா மட்டமான சென்டிமென்ட் , குத்தாட்டம் , ஜட்டி தெரிய ஆடும் , சாரி , ஜட்டியோடு ஆடும் இளம் பெண்கள் இதற்கு மேல் ஒரு மசாலா படத்திற்கு என்ன வேண்டும்.ஒரு மசாலா திருவிழாவையே நடத்திக்காட்டியிருக்கிறார் லலித் மோடி . பந்து பேட் ஸ்டம்ப் மட்டுமே விளையாடிய கிரிக்கெட்டில் பணம் பாலியல் பவர் என அனைத்தையும் ஆட வைத்த பெருமையும் அவரையே சாரும். தென்னாப்பிரிக்காவில் நடத்தினாலும் இந்தியன் பிரிமீயர் லீக் என்னும் பெயரை மற்றும் மாற்றாத லலித் மோடிக்கு என் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒரு வழியா தேர்தல் முடிந்து சீட்டு பேரம் முடிந்து இப்போது இலாகா பேரம் தீவிரமடைந்து இருக்கிறது (இதை எழுதி முடிக்கும் போது அதுவும் முடிந்திருக்கலாம் ) . கலைஞரும் டெல்லி வரை சென்று போராடி வெறுத்துப்போய் ரிப்பீட்டடித்து பல டகால்ட்டி வேலைகள் செய்து ஒரு வழியாய் தனது பேரத்தை கச்சிதமாய் முடித்துவிட்டார். இறுதி வரை போராடி கத்தியின்றி ரத்தமின்றி வெற்றிபெற்று தனது ஒரே குடும்பமான திமுகவின் செல்வங்களுக்கு பெற்றுத்தந்த பதவிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவிலேயே தமிழகத்திற்குதான் அதிக பதவிகளாம் கலைஞருக்கு வாழ்த்துக்கள். (இனி தமிழகம்தான் நம்பர் ஓன். )

அப்பாடா ஒரு வழியா முடிவு அறிவிச்சிட்டாங்க. ஆமாங்க ஜெயாடிவியில் நான் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி லிட்டில் சூப்பர் ஸ்டார்ஸ். அதில் வரும் குட்டீஸ் அனைவருமே கலக்கல் பேர்வழிகள். அவர்களது இயல்பான பாட்டும் டேன்ஸும் சூப்பர் என்றால் அவர்களது உடல்மொழி பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கும்.என்ன எலிமினேசன் ஒன்றுதான் மனச்சங்கடத்தை உண்டாக்குகிற ஒரே நிகழ்வு. மற்ற தொ.கா.களில் வரும் வலிந்து திணித்த குழந்தைகள் நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் போது இது தனித்தே தெரிகிறது. அந்த நிகழ்ச்சி கடந்த வாரத்தில் முடிந்தது. நிகழ்ச்சியின் மிக முக்கியமானவர்கள் நடுவர்கள் ராகவ் மற்றும் பிரித்வி அப்புறம் மிர்ச்சி பாலாஜி ( இப்போ பிக் பாலாஜி?) அவர்கள் குழந்தைகளிடம் மிக மென்மையாக நடந்து கொள்ளும் முறை அழகு ( மற்ற தொலைக்காட்சிகள் போல அவர்களை அழவைத்து காசு பார்ப்பதெல்லாம் இல்லை ) . அவர்களுக்கும் வெற்றிப்பெற்ற குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒரு வழியா சாருவும் ஜெமோவும் ராசி ஆகிட்டாங்க. இனி உலகம் அழிஞ்சுரும். சாருநிவேதிதா இரண்டொரு நாட்களுக்கு முன் '' வன்முறையின் தோல்வி'' என்றொரு பதிவிட்டிருந்தார். அந்த கட்டுரை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கக்கூடும். அந்த கட்டுரையை படித்து நான் பயந்தே போய்விட்டேன் சாரு சரக்கடித்துவிட்டு எழுதுவார் என்பது தெரியும் அந்த கட்டுரை ஒருவேளை அடிக்காமல் எழுதிவிட்டாரோ என எண்ண வைத்தது. பயங்கரமான காந்தியவாதியைப்போல் எழுதப்பட்ட அந்த கட்டுரையை படித்தால் , விட்டால் தலையில் குல்லாவோடு ராகுல் காந்தியின் யூத் காங்கிரஸில் இணைந்து விடுவார் போல இருந்து. நல்ல வேளை . காங்கிரஸ் புழைச்சது காந்தியோட புண்ணியம். நல்ல வேளை சாரு மீண்டும் சரக்கடித்து ஃபார்முக்கு வந்திருக்க கூடும். எழுத்துலகில் அவரது பரம எதிரியாக அறியப்படும் ஜெயமோகன் அந்த கட்டுரையை பாராட்டி தனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரை ( சாருவுக்கு ஒரு கடிதம் ) எழுதி இருக்கிறார். தன் கருத்தை அப்படியே சாருவும் எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள். ( ஸ்ஸ்ப்பா எழுத்துலயும் பிக்ஸிங்கா... முடியல )

அப்பாடா ஒரு வழியா இன்னொரு கதைப்போட்டி வந்திருச்சு. பைத்தியக்காரன் என்று பதிவுலகில் அறியப்படும் என் பாசமிகு அண்ணன் சிவராமன் அவர்களும் மை ஆல்டைம் செல்லம் அண்ணன் பாலபாரதியும் மேலும் சில பதிவர்களும் இணைந்து உரையாடல் என்னும் சிறுகதைப்போட்டி ஏற்பாடு செய்திருக்கின்றனர். அனைத்து பதிவர்களும் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பெற வேண்டும். மேலும் விபரங்களுக்கு இடதுபுறத்தில் இருக்கும் கையில் பேனாவுடன் இருக்கும் ஜூஜூ பொம்மையை கிளிக்குங்கள். போட்டியை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒரு வழியா லக்கிலுக் ஒரு வயோதிகர் என்பது வாலிப பதிவர்களுக்கு இப்போதாவது தெரிந்ததே என்பதில் பெரும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. தண்ணிக்குள்ள காத்துவிட்டா வெளிய ஒரு நாள் வந்துதான ஆகணும். மற்றபடி குட்டிப்பாப்பாவுக்கும் அவங்க பேரன்ட்ஸ்க்கும் வாழ்த்துக்கள்.

அப்பாடா ஒருவழியா ஒரு மாசமா வறுத்து எடுத்துட்டு இருந்த கத்திரி வெயில் இன்றைக்கு முடியுது. ஒரு மாதமாய் மூன்று முறை லூஸ் மோசன் (மோகன் இல்லை ) , டிஹைட்ரேசன் , காய்ச்சல் , தலைவலி என பலபல வியாதிகளை சீரிய இடைவெளியில் கொடுத்து உயிரை பறித்து விடுமளவுக்கு கொடுமைப்படுத்திய கத்திரி வெயிலுக்கு வாழ்த்துக்கள். ( வெயிலுக்கே வாழ்த்து சொல்லி ஐஸ் வைப்போம்ல )

அடுத்த மாதம் ( ஜீன் )- 11 ஆம் தேதி கோவையில் ??????? என்ன?

காத்திருங்கள்.

***************

தலைப்பு உதவி - ரமேஷ் வைத்யா

27 May 2009

ஜுனியர் லக்கிலுக்கினி - லக்கிலுக்குவிற்கு வாழ்த்துக்கள்


இன்று காலை 11.30க்கு தோழருக்கு ஜுனியர் பிறந்திருக்கிறார். பெண் குழந்தை. தாயும் சேயும் நலம் என இப்போதுதான் போனில் அழைத்துக்கூறினார். அளவில்லா மகிழ்ச்சியில் இருக்கும் அவருக்கு அனைத்து பதிவர்கள் எழுத்தாளர்கள் சார்பாக மனம்கனிந்த வாழ்த்துக்கள்.


25 May 2009

என்ன கோராமை இது? :-(

இதை சொல்லவே வெட்கமாகவும், வேதனையாகவும், அருவருப்பாகவும் தானிருக்கிறது. தோழர் ஒருவரோடு கடற்கரைக்கு சென்றிருந்தேன்.

அங்கே கொடுக்கப்பட்ட துண்டுச்சீட்டு கீழே. இந்த துண்டுச்சீட்டை ஒவ்வொருவருக்கும் வினியோகித்தவர் தான் அந்த கட்சியின் தலைவரும் கூட. கடற்கரை காற்றுவாங்கல் முடித்து திரும்பும்போது நான்கைந்து கைனடிக் ஹோண்டா பேய்கள் துரத்தி, துரத்தி எங்களை சைட் அடித்தது மட்டுமே ஆறுதலான ஒரு விஷயம்.

15 May 2009

வந்துட்டானுங்க ஆட்டிகிட்டு த்தூ.. ஓட்டுமட்டும் கேட்டுகிட்டு!




எலவச மின்சாரம் மின்னும்
வீடு வந்து சேரல

வட்டியில்லா க்கடனும் - காடு
வந்தது போல் காணல

ஓயாம உழச்சாலும் - காசு
வீடு வந்து சேரல

கையெல்லாம் காய்ச்சாலும்
கஞ்சி காச்ச முடியல

விவசாயம் பண்ணி பொழைச்ச
மக்க! -

வயிறெல்லாம் பசியோட
வத்திப்போய்தான்
கிடக்க

தண்ணியில்லா வயக்காடு
காஞ்சுபோய்தான்
இருக்க

வந்துட்டானுங்க ஆட்டிட்டு
த்தூ

ஓட்டு மட்டும் கேட்டுகிட்டு


யாருக்காக காத்திருக்கேன்
பாதையத்தான் பாத்திருக்கேன்

வருமுன்னு நினச்சதொண்ணும்
வீடு வந்து சேரலியே!

உலகத்துக்கே விடிஞ்சாலும்
சூரியன்தான் உதிச்சாலும்

எலை தழைங்க துளிச்சாலும்
தாமரக்கை பூத்தாலும்

என்சோட்டு சாதி சனம்
வாழ்க்க மட்டும் விடியலியே

சாவு கூட வெரசா வந்து
என் காலத்தையும் முடிக்கலியே!


*******

நண்பர் சஞ்சய் ஒரு படத்தை தன் பதிவிலிட்டு அதற்கேற்ற கவிதை எழுதச்சொல்லி கேட்டிருந்தார். அந்த படமும் அதற்காக எழுதியதும்தான் மேலே . அனுஜன்யா கவிதை மாதிரி இருப்பதாகவும் சொல்லி இருந்ததால் நமது வலைப்பூவில் சஞ்சய் அனுமதியின்றி போட்டுவிட்டேன். குமுதம் போல அவரும் என் மீது வழக்கு தொடராமல் இருக்க அழகிரிஆண்டவரை வேண்டுகிறேன்.

*******

14 May 2009

மே-10- Dr.ருத்ரன் மற்றும் Dr.ஷாலினி உடனான கலந்துரையாடல் ஒலி வடிவில்..

ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.


இதன் அடுத்த பகுதி அவர்கள் பேசிமுடித்தபின் கலந்து கொண்டவர்களுடனான கேள்வி-பதில் உரையாடல்.

இந்த சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.



**********

இந்த உரையாடலை ரெக்காடிங் செய்ய உதவியதோடு மட்டுமல்லாது வலையில் பதிவேற்றிய நண்பர் பத்ரி அவர்களுக்கு நன்றிகள்.

**********



12 May 2009

சும்மா டைம் பாஸ் மச்சி!! ( 2 )






1.மழை பெய்யும் இரவில்

நாயகனும் நாயகியும் தனிமையில் அடாத மழை விடாது பெய்ய இருவரும் தொப்பலாய் நனைந்து ஒருவரை ஒருவர் ஏக்கமாய் பார்த்தனர். வாசகன் ஆர்வமாய் மேலும் வாசித்தான். பின் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.


2.இதழில் கதை எழுதும் நேரமிது

இதுதான் முதல்முறை. கைபடாத இதழை விரலால் தடவி , முகர்ந்து பார்த்து ஆசையோடு அதன் அருகில் போய் தன் பெயரை படித்தான் , அ...தி...ஷா அவன் எழுதிய கதையின் மேல் பெயர் வந்திருந்தது ஆனந்த விகடனில்.


3.அப்படினா நான்?

செல்லம் ஏன்டி நேத்து போன் பண்ணல! இல்லடா என் போன் ராஜ் வீட்டிலயே வச்சிட்டு வந்துட்டேன். அப்புறம் வசந்த் எடுத்துட்டு வந்து குடுத்தான். ஓஓ! ஆமா ராஜ் வசந்த்லாம் யாரு? . ராஜ் என்னோட புருஷன். அப்போ வசந்த் . அவன் என்னோட இன்னொரு புருஷன்.


4.எப்போதும் போல

எப்போதும் போல் பூத்துக்கு சென்றான் , பெயரை பதிந்தான், வாக்களித்தான் . வீட்டிற்கு வந்தான். எப்போதும் போல வீட்டில் இலவச டிவி இருந்தது. எப்போதும் போல கலைஞர்டிவியில் இன்றும் சிறப்புத்திரைப்படம். எப்போதும் போல கரண்ட் இல்லை.


5.காதுல பூ

காலை உணவு முடிந்ததும் உண்ணாவிரதம் துவங்கியது . மக்கள் கொந்தளித்தனர். கொழுத்தும் வெயிலில் கூச்சலிட்டனர். மதியம் 12.30க்கு முடிந்தது. மக்கள் கலைந்து சென்றனர்.

6.என் ஓட்டு

சார் ஓட்டுப்போடணும் .உங்க பேரு . வரதராஜன். எத்தன வாட்டி போடுவீங்க. என்னது என் ஓட்ட போட்டுட்டாங்களா! ஓகே அப்படினா என் பேரு சுந்தர்ராஜன்.


7.ரிசசன்

யோவ் வாட்ச்மேன் ! நான் இந்த கம்பெனி வைஸ் பிரசிடென்ட்யா என்னை உள்ள வுடுய்யா! எதா இருந்தாலும் முதலாளிகிட்ட போன்ல பேசிப்பீங்களாம்.


8.புதுசா புதுசா ஒரு சாட்டிங் ( CHATTING )

hi - hi - hw r u - fine u? - fine asl pls - wat asl - age sex location - 25 male chennai u asl? - same here - oh - ok bye - why bye - dei moodittu poda.. _________ . - thank u bye - seruppala adi the...payya - avvvv adhaan bye sollittenla payyana porandhadhu oru kuthama...


9.சுண்டல் தின்று!

சார் சுண்டல் சாப்பிட்டிட்டே கன்டிணியூ பண்ணுவோமா !

டே சின்னப்பையா இங்க வா எவ்ளோ !

மூணு குடு!..

நண்பர்களே குழந்தைதொழிலார்களை காப்பதற்காக கூடியிக்கக்கூடிய நாம ... என்று சுண்டலை கொறித்தபடிப் பேச துவங்கினார்.


10. காதல் கக்கூஸ்

மாமா காதல்ங்கறது கக்கூஸ் போற மாதிரிடா நாம என்ன திங்கறமோ அதுமாதிரிதான் நமக்கு ஆயும் போகும். அது மாதிரிதான் காதலியும் நாம எப்படி செலக்ட் பண்றமோ அப்படித்தான் வாழ்க்கையும் இருக்கும்!. மாமா அவளோட சேராதனு சொன்னேன் கேட்டியா இப்போ புரியுது ஏன் நீ பாத்ரூம் போன மட்டும் ஊரே நாறுதுனு.



11.ஆமா இதெல்லாம் என்ன ஏன் இந்த கொலை வெறி!

சும்மா டைம்பாஸ் மச்சி!



மக்களே நாளைக்கு எலெக்சன் அதனால அனைவரும் இரட்டைஇலை சின்னத்திலும் மாம்பழ சின்னத்திலும் இன்ன பிறச்சின்னங்களிலும் வாக்களித்து அஇஅதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிரபல திமுக பதிவர் அதிமுக வெற்றிப்பெற்றால் எனக்கு டிரீட் தருவதாக வாக்களித்துள்ளார் என்பதையும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.


*************

07 May 2009

இந்த காலத்து பசங்க இருக்காங்களே!






ஹரிணி சொன்ன குட்டிக்கதை -

போன மாதம் ஊருக்குச் சென்றிருந்தேன். கோயம்பத்தூருக்குத்தான். கோவை வெகுவாக மாறியிருந்தது. ஆறு மாதங்களுக்குள்ளாகவே பல மாற்றங்கள். பல இடங்களில் இருந்த மரங்கள் காணவில்லை. புதிது புதிதாக கலர்கலராய் பேருந்துகள். புதிதாய் இருக்கிறது.

ஹரிணிக்குட்டி கூட வளர்ந்திருக்கிறாள். ஹரிணிக்குட்டி யாரென்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் என் செல்லக்குட்டி! கன்னுக்குட்டி!. என் தங்கையின் முதல் மகள். வயது 3. இந்த வருடம் முதலாம்ஆண்டு எல்.கே.ஜியில் சேர்ந்து படிக்க இருக்கிறாள். மனதிற்குள் எப்போதும் அவளது நினைவுகளோடும் மாமா எப்ப ஊருக்கு வருவீங்க என்கிற தொலைப்பேசிக்குரலோடும் பல நாட்களாய் பிரிந்திருக்கிறேன்.

நான் வீட்டுக்குள் நுழைந்ததுமே வாரியணைத்து கொண்டு மாமா என்று என் கன்னத்தில் முத்தமிட்டதும் ஏனோ கண்களின் ஓரம் ஈரம் :-) . குழந்தைகளின் அன்பே அலாதியானது. அவர்களுக்கு நம்மை பிடித்துவிட்டால் ஒரு விநாடி கூட நம்மை விடமாட்டார்கள். ஹரிணியும் அப்படித்தான். தனது டோரா புத்தகத்தையும் விளையாட்டுப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு விளையாட அழைக்கிறாள். சாப்பிடும் போது மாமா நான் எப்படி சாப்பிடறேன் பாரேன் என என்னை அழைத்து காண்பிக்கிறாள்.

இரவானது அவள் அம்மாவிடம் நான் மாமாவோடதான் தூங்குவேன் என சொல்லிவிட்டு வந்து என்னோடு படுத்துக்கொண்டாள். மாமா ஒரு கதை சொல்லுங்க என்றாள். நானும் ஆர்வத்தோடு ஒரு ஊர்ல ஒரு பாட்டி என்று ஆரம்பித்தேன. மாமா அந்த கதை எனக்கே தெரியும்........ காக்கா வந்து வடை தூக்கிட்டு போயிருமே அதானே..உவ்வே என்றாள். அவள் அதற்கு அடுத்து எழுப்பிய கேள்விகளால் அதிர்ந்துதான் போனேன். ஏன் மாமா பாட்டி பகல்ல வடை சுடறா பகல்ல யாராவது வடை திம்பாங்களா , அப்புறம் ஏன் வடைய சுட்டா தட்டு வச்சு மூடி வைக்கணும்ல என்றாள். பதிலில்லை என்னிடம்.

மாமா வேற கதை சொல்லேன் என்றாள். பிளாகில்தான் பல இன்ப துனபக்கதைகளை இன்பினிட்டியாய் எழுதுகிறோமே நாமாக ஒரு கதை சொல்வோம் என பாப்பா ஒரு ஊர்ல ஒரு பெரிய யானை இருந்துச்சாம் என்று ஆரம்பித்தேன். மறுபடியும் மாமா அந்த கதை எனக்கே தெரியும் நான் சொல்றேன் எனத்தொடர்ந்தாள்.

'' ஒரு ஊர்ல ஒரு யானை இருந்துச்சாம். அது ரோட்டில வந்துட்டு இருந்துச்சாம். நம்ம சிவாசினி பாப்பா ( அவளது தங்கை! வயது 1.5 ) ஸ்கூலுக்கு போயிட்டு இருந்தாளாம். அப்போ அந்த யானை சிவாசினி பாப்பாவோட கைல இருந்த வாழைப்பழத்த புடுங்கி தின்னுருச்சாம். அப்புறம் அவளோட பிஸ்கட்டு முறுக்கு சாக்லேட் எல்லாத்தையும் புடுங்கிருச்சாம். அப்போ சிவா பாப்பா என்கிட்ட வந்து அழுதாளாம் அக்கா அந்த யானை என் சாக்லேட்ட புடுங்கிருச்சுனு உடனே நான் போயி அந்த யானைகிட்ட யான யான அந்த சாக்லேட்டு பிஸ்கட்லாம் திருப்பி குடு இல்லாட்டி அடிப்பேனு.. அந்த யானை முடியாது போ னு சொல்லிச்சாம். எனக்கு கோபம் வந்து அந்த யானைய புடுச்சு தூக்கி அடி அடினு அடிச்சு வால புடிச்சு இழுத்து சுத்தி சுத்தி அடிச்சதும் அந்த யானை அழுஅழுனு அழுதுட்டே அடிக்காதீங்க அடிக்காதீங்கனு சாக்லேட்டு பிஸ்கட்லாம் திருப்பி குடுத்துருச்சாம். நான் அத சிவா பாப்பா கிட்ட குடுத்துட்டனாம் ''

எனக்கு பாதி கதையிலேயே தலை கிர்ரென இருந்தது. மீதி கதை முடிப்பதற்குள் மயக்கமே வந்து விட்டது. இன்னும் ஸ்கூலுக்கே போகாத குழந்தைக்கு எப்படி தெரிந்தது இத்தனை விசயம். யார் சொல்லி கொடுப்பது. அவள் அம்மாவிடமே கேட்டேன். என் தங்கையோ அவள் இப்படித்தான் வினோ எப்பவும் புதுசு புதுசா கதை சொல்றா என்கிறாள்.

நினைத்து கொண்டேன் இந்த காலத்து குழந்தைங்க இருக்காங்களே ஊரையே வித்திடும் என்று. ஒவ்வொரு தலைமுறையும் புதிதாய் உருவாகும் போதும் இதையே கூறும் பலரையும் பார்த்திருகிறேன். என் அம்மாவை அவரது பாட்டி அப்படித்தான் சொல்லுவாராம் , என பாட்டி என் தங்கையை அப்படி சொல்வதை பார்த்திருக்கிறேன். இதோ இப்போது நான் .

****************

ஒரு மிக முக்கிய அறிவிப்பு -

இந்த வாரம் சென்னை பதிவர்கள் பலர் ஒன்னா சேந்து ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணிருக்காங்க. குழந்தைகள்கிட்ட பாலியல் , அதாவது செக்ஸ் பத்தி பெற்றோர்கள் எப்படி பேசறது , அவங்ககிட்ட முறையா அது குறித்த விழிப்புணர்வ எப்படி ஏற்படுத்தறதுனும் குழந்தைகள் மனநிலை குறித்த உங்க கேள்விகளுக்கும் பதில் சொல்ல டாக்டர்.ஷாலினியும் , டாக்டர்.ருத்ரனும் ஒத்துகிட்டு இருக்காங்க.

அதனால வர மே 10 ஆம் தேதி அதாவது இந்த வாரம் ஞாயித்துகிழம சாயங்காலம் நம்ம கிழக்குப்பதிப்பகத்தோட மொட்டை மாடில அனைவருக்குமான கூட்டம் ஒன்னு ஏற்பாடு பண்ணிருக்காங்க. கவனிக்கவும் இது அனைவருக்குமான கூட்டம் இதுல பதிவர்கள்தான் கலந்துக்கணும் பதிவு படிக்கறவங்கதான் கலந்துக்கணும்னுலாம் ஏதும் விதிமுறை கிடையாது.

இதுல யார்வேணா கலந்துக்கலாம் சரிங்களா. உங்க பக்கத்து வீட்டு அங்கிள்லருந்து உங்களோட பெற்றோர் கூட கலந்துக்கலாம்.உங்களுக்கு கல்யாணம் ஆகாட்டி கூட இனிமே ஆகினா குழந்தை பிறக்கும்ல அதனால நீங்களும் கட்டாயம் கலந்துக்கணும்.

ஆனா ஒன்னு நீங்களோ இல்ல உங்க பிரண்டோ இல்ல பக்கத்துவீட்டுக்காரங்களோ யாரு கலந்துகிட்டாலும் தயவு பண்ணி முன்னாடியே உங்க வருகைய போன்லயோ இல்ல மெயில்லயோ சொல்லிட்டீங்கண்ணா முன்னேற்பாடுகள் பண்ண வசதியா இருக்கும்னு மக்கள் பீல் பண்றாங்க . சேர் , டீ , இடம்லாம் அரேஞ்ச் பண்ணனும் இல்ல. இந்த கூட்டத்தில கலந்துக்க பீஸ்லாம் ஒன்னும் இல்ல அனைவருக்கும் இலவசம். கூட்டம் முடிந்து தேநீர் விருந்திற்கும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.

சரியா ஒரு பேப்பர் பென்சில் எடுத்து நேரம் இடம்லாம் நோட் பண்ணிக்கோங்க



இடம் : கிழக்குப் பதிப்பக மொட்டைமாடி,
எல்டாம்ஸ் ரோடு,சென்னை.

நாள் : 10/மே/2009.

நேரம் : மாலை 4:30 - 7.00.


உங்கள் வருகைய சொல்லவும் - வழி தெரியாம முழிச்சாலும்

கீழ இருக்கற நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க

அதிஷா - 9884881824

லக்கிலுக் - 9841354308

நர்சிம் -9940666868

முரளிக்கண்ணன் -9444884964

கேபிள் சங்கர் - 9840332666



மெயில் அனுப்ப மறந்துடாதீங்க! : weshoulddosomething@googlemail.com



****

வர்ட்டா!

06 May 2009

அண்டார்டிகாவில் அதிமுக!







அண்டார்டிகாவில் அதிமுக.!

இன்று அண்டார்டிகாவில் நல்ல குளிர். தாங்கமுடியவில்லை. மூன்று சுவட்டர்கள் போட்டாலும் குளிரடிக்கிறது. இந்த அடாத குளிரிலும் விடாது உங்களுக்காக பதிவு போட்டால்தான் கொஞ்சூண்டு உடலின் சில பாகங்களாவது சூடாகிறது. பதிவுதான் தமிழ்மணத்தில் சூடாவதில்லை அட்லீஸ்ட் உடலாவது சூடாகிறதே.

அதிலும் அரசியல் பதிவுகள் போட்டால் பின்னூட்டங்களால் நம்மை எரித்து விடுகிறார்கள். பின்னூட்டத்தில் நம்மை எவ்வளவு காய்ச்சினாலும் நமக்கு ஜாலிதான். அண்டார்டிகா குளிருக்கு இதமாய் இருக்குமல்லவா!

இங்கே அண்டார்டிகாவில் டீக்கடை வைத்திருக்கும் நாயர் சேட்டாவிடம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். மனிதர் மிக கோபமாகப் பேசினார். இந்த முறை அண்டார்டிகாவில் திமுக மட்டுமே போட்டியிடுவதால் தான் 49 ஓ போடப்போவதாக தெரிவித்தார். தமாசாக இருந்தது அண்டார்டிகாவில் 49ஓ கிடையாதே.

ஈழத்தாய்! எங்கள் தெய்வத்தாயாம் தங்கமங்கை அம்மா அவர்கள் சென்றவாரம் பல நூறு வீடியோக்களைப்பார்த்து முடிவெடுத்துவிட்டார்கள். தனி ஈழம்தான் ஈழத்தமிழரின் பிரச்சனைக்கு ஒரே தீர்வென்று. அதற்காக சந்திரமண்டலத்தில் வாழும் தமிழர் பேரவையினர் தங்களது ஆதரவை தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சல் குறித்தும் செவ்வாய் கிரகத்தில் வாழும் தமிழ் அமைப்பு அனுப்பிய ஃபாக்ஸ் செய்தியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுதவிர அவர் கூறிய அறிக்கையின் படி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி சிங்கள இராணுவத்தை தோற்கடித்து ஈழத்தமிழருக்கு அவர்களது சொந்த மண்ணை மீட்டுத்தரவும் இருப்பதாய் வாக்களித்துள்ளார். சும்மா அதிருதில்ல. அம்மானா சும்மாவா.

அதே போல் அண்டார்டிகா குளிரில் வாடும் ஏழை எளியோர் குறித்து ஸ்ரீலஸ்ரீ அட.. நடிகை இல்லைங்க சாமியார் ஒருத்தர் வீடியோ போட்டு காட்டிவிட்டதால் .. மனம் வெதும்பி உள்ளம் ததும்பி ஒவ்வொரு வீட்டிற்கும் ராஜஸ்தான் பாலைவனத்தில் இருந்து தருவித்த இரண்டு லாரி மண்ணும் , காஞ்சு போன பன்னும் வழங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

திமுகவினரும் அவரது தலைவர்களும் பதிவுலகிலும் சரி நிஜஉலகிலும் சரி ஆடும் நாடகங்கள் கண்டு அதிலும் ( வெறும் நாடகங்கள் அல்ல ஸ்பெசல் கபடநாடகங்கள் - தமிழர் ஸ்பெசல் ) நம் உலகத்தமிழர் மட்டுமல்லாது செவ்வாய்,புதன்,நெப்டியூன், வீனஸ் கிரகத்தில் வாழும் தமிழர்களும் கொதித்து போயிருக்கின்றனர். வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் இது பலமாக எதிரொலிக்குமென்று போன வாரம் காஸ்பர் கிரகத்தில் ( மூன்று பால்வெளி மண்டலங்களுக்கு வெளியே இருக்கும் தனிக்கிரகம்) வாழும் அண்ணன் அறிவுடைநம்பி அவர்கள் தன் நீண்ட நெடிய மின்னஞ்சல் செய்தியில் ஒரு ஓரமாக குறிப்பிட்டிருந்தார். அதைகண்டு கண்கள் பனித்தன இதயம் இனித்தது..

மேலும் தனது காஸ்பர் கிரகத்தில் பாமக சார்பாக திரு.பாம்படிச்சான் பட்டி பழனிச்சாமி போட்டியிடுவதாகவும் அவருக்காக மாம்பழச்சின்னத்தில் தனது வாக்கை பதிய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பாமக மாதிரி ஒரு தன்மானமே பெரியது என நினைக்கும் சோற்றில் உப்பை போட்டு சாப்பிடாமல் உப்பையே சோறாக சாப்பிடும் உத்தமதமிழ்கட்சி அல்லவா அது.

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. திமுக இந்த தேர்தலில் அடைய இருக்கும் படுதோல்வியை நினைத்து. திமுக தோற்று விடும் அம்மாவின் ஆட்சி மலரும் மலர் காயாகும் காய் பழமாகும் பழத்திலிருந்து கொட்டை வரும்.. அதற்கு பின் தமிழன் வாழ்க்கைமுறையே மாறிவிடும். ஜெயா டிவியில் புதிய திரைப்படங்கள் பார்த்து மகிழலாம்.

ஒரு விளம்பர இடைவேளை...

ராகுல் ஓட்டுப்போட்டுட்டு வந்திடு.. அரைடிராயரை ஏற்றிவிட்டுக்கொண்டு ராகுல் ஓடுகிறான்.

சோனியாம்மா திடீரென கவலையாகிறாள்..

ஐய்யயோ என் மகன் ராகுல்கிட்ட எந்த கட்சிக்கு ஓட்டுப்போடறதுனு சொல்லலியே

யாருக்கு ஓட்டுப்போடுவானோ

கண்ட கண்ட கட்சிக்கும் ஓட்டுப்போட்டுட்டானா?

லஞ்சம் பெருகிடும்

ஊழல் மலிஞ்சிடும்

ஐயோ இந்தியாவே நாசமா போயிடுமே..!

பூத்துக்கு சென்று பார்க்கிறாள் அங்கே ராகுல் இல்லை. அருகில் இருக்கும் டாஸ்மாக்கில் பார்க்கிறாள் அங்கே ராகுல் சரக்கடித்துக்கொண்டிருக்கிறான்,

தன் அம்மாவை பார்த்ததும் '' அம்மா '' என்று அருகில் இருக்கும் சரக்கில் முக்கி அடிக்க வைத்திருக்கும் இலையை காட்டுகிறான். அது இரட்டை இலை.

குரல் - ஆம் சோனியாவும் ராகுலும் ஆதரிக்கும் கட்சி அதிமுக சாரி ஆஇ அதிமுக

ஹமாம்னா நேர்மை அம்மானாலும் நேர்மை.. நேர்மையான ஆட்சிக்கு வித்திட மைனாரிட்டி திமுக ஆட்சி கவிழ்ந்திட தமிழ் ஈழம் அமைந்திட ... இரட்டை இலையில் அம்மாவின் ஆட்சிப்பூ மலர்ந்திட ...

இரட்டை இலை மறவாதீர் நமது சின்னம் இரட்டை இலை..


*************


பேக் டூ தி பதிவு...

மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே திமுகவின் கொட்டம் அடங்கும். திமுகவின் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. அதிலும் பதிவுலகில் அநியாயம். காசு கொடுத்து பதிவு எழுத வைப்பதாகவும் அதிமுக தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதனால் நானும் இம்முறை அதிமுகவிற்கே எனது பொன்னான வாக்குகளை இட்டு திமுகவை படுதோல்வியடைய செய்யலாம் என்றிருந்தேன்.

என் போதாத நேரம் அகில அண்டார்டிகா அதிமுக தனது கடைசி கட்சி ஆபீஸையும் போன வாரம்தான் போதிய ஆளின்றி மூடியது.(கடைசியாக நான் ஒருவன் மட்டுமே உறுப்பினராக இருந்ததாய் ஞாபகம் ) அதனால் இம்முறை அஅஅதிமுக எங்களூரில் போட்டியிடாது என்றே தோன்றுகிறது. கவலையாக இருக்கிறது. என்னால் அதிமுகவிற்கு ஓட்டுப்போட முடியவில்லையே என்று. திமுகவும் ஒரு சுயேட்சையுமே போட்டியிடுகின்றனர். அந்த சுயேட்சை வேட்பாளரும் அடியேனாய் போய்விட்டேன்.

அதனால் நம் பதிவை படிக்கும் நூறு கோடி இந்தியர்களும் ஆறு கோடி தமிழர்களும் சிங்கப்பூர் மலேசியா மற்றும் பர்மா பாகிஸ்தான் நாடுகளில் வசிக்கும் பல கோடி தமிழர்களும் தங்களது தொகுதியில் யார் போட்டியிட்டாலும் உங்கள் வாக்குகளை அதிமுகவிற்கும் மீதி ஓட்டை எனக்கும் போட்டு அதிமுகவையும் என்னையும் வெற்றிபெற செய்யுங்கள். அதிமுகவின் சின்னம் ஞாபகம் இருக்கிறதா இரட்டை இலை இரட்டை இலை இரட்டை இலை. எனது சின்னம் மேலே இருக்கிறது அதே பந்துக்குள் இரண்டு ஓட்டை. அதிஷாவுக்கு பக்கத்தில் இருக்கிறது பாருங்கள் அதேதான்.

உதிக்கும் சூரியனையும் மறைக்கும் நம் இரட்டை இலை. மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர் அமெரிக்காவில் இருந்தாலும் ஆப்பிரிக்காவில் இருந்தாலும் மறவாமல் உங்கள் வாக்குக்களை தேர்தல் சாவடிக்கு வந்து வாக்களியுங்கள். தேர்தல் நாள் 13.05.2009.


*****************


ஆசிகள் - அபி அப்பா , செந்தழல் ரவி மற்றும் உடன்பிறப்பு

ஆக்கம் - அதிஷா

ஊக்கம் - லக்கிலுக் , சென்ஷி , மணிகண்டன் , தாமிரா , புதுகை அப்துல்லா மற்றும் அகில உலக பிரபஞ்ச அதிமுக சார்பு கும்மியடிப்போர் சங்கம்

வெளியீடு - அகில அண்டார்டிகா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அஅஅதிமுக


*********

பின் குறிப்பு - இந்தப்பதிவு முழுக்க முழுக்க கற்பனையே இது இறந்த உயிரோடிருக்கும் யாரையும் எந்த கட்சியையும் குறிப்பிடுவன அல்ல என்று நான் சொன்னால் அதை நம்ப நீங்கள் என்ன என்னைப்போல் அண்டார்டிகா குளிரில் குவாட்டர் அடித்துவிட்டு குச்சி ஐஸ் தின்று குஜாலாக குப்புற கிடக்கும் முட்டாளா!..

04 May 2009

நியூட்டனின் மூன்றாவது விதி?


நியூட்டனின் மூன்றாவது விதி...?

விதை விதைச்சவன் விதை அறுப்பான்..

திணை விதைச்சவன் திணை அறுப்பான்..

வினை விதைச்சவன் வினை அறுப்பான்..

நியூட்டனின் மூன்றாவது விதிக்கும் இந்த பழமொழிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாய் கருதுகிறேன். மூன்றாவது விதியை விளக்க மூன்றுவரி இருக்கிறதே போதாதா??


கதை?

கண்ணுக்குத் தெரியாத எதிரி. போனில் டார்ச்சர். செல்போன் சவால்கள் இன்ன பிற.....

தந்திரமாய் எதிரியின் பணம் புகழ் ஆள்பலம் அரசியல் பலம் அழிப்பது. காலக்கெடுவில் சாகடிப்பது.பிளாஸ்பேக்கில் அதற்கு ஒரு காரணம்.

தரணி,பேரரசு போன்றோரின் எல்லாத்திரைப்படக்கதைகளும் இதுதானே. தமிழ்சினிமாவின் சாபக்கேடான கதைக்களம். நியூட்டனின் மூன்றாவது விதியும் அதே விதிக்குள்தான் சிக்குண்டு கிடக்கிறது. ஆனால் புதுமையாய் எளிமையாய் வேகமாய் விவேகமாய் , தற்கால தமிழ்சினிமாவில் இருந்து விலகி பல நூறு ஆங்கிலப்படங்களின் தாக்கத்தோடு ஒரு தமிழ்சினிமா முயற்சி எனக்கொள்ளலாம்.

காதலியை கற்பழித்து கொன்ற ஒரு பணக்காரனை , பல மாதங்கள் திட்டமிட்டு முதல் பாராவில் சொன்னது போல பழிவாங்குகிறான் நாயகன். இதில் என்ன புதுமை என்றால் திட்டமிடலும் காதலும் படமல்ல.. பழிவாங்க அவன் எடுத்துக்கொள்ளும் இரண்டு மணிநேரம்.எங்கேயோ கேட்ட கதை போல் இருக்கிறதா கைதியின் டைரி? இருபத்திநாலு மணிநேரம்? நிறைய விடைகள் இருக்கிறது. எல்லாவற்றிலுமே காதலியை அல்லது மனைவியை கற்பழிப்பவனையே திட்டமிட்டு பழிவாங்குவதாய் அமைந்து விடுவது நகைமுரண்.

திரைக்கதை....... ?

அடேங்கப்பா என்ன ஒரு வேகம். படத்தின் ஒரு ஃபிரேமைக்கூட விட்டு விட இமைகள் தயங்கும். கில்லிக்கு பிறகு அப்படி ஒரு பேய் வேகப்படம். படம் ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு விநாடியும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. திரைக்கதை அமைத்தவர் மிகப்பெரிய அறிவாளியாக இருந்திருக்க வேண்டும். முதல் பாதியில் செம அடி வாங்கும் வில்லன் , இரண்டாம் பாதியில் நாயகனின் திட்டங்களை திறமையாக முறியடிப்பதும், நாயகன் தனது திட்டம் தவிடு பொடியானாலும் பீனிக்ஸ் போல் மீண்டெழுந்து திரும்ப திரும்ப வில்லனை நொருக்குவதும்.. அடேங்கப்பா.. எங்கிட்டுய்யா கத்துக்கிட்டீங்க. நீங்கல்லாம் கொலை பண்ண ஆரம்பிச்சா போலீஸ்காரனுக்கே பைத்தியம் புடிச்சிரும்.

எஸ்.ஜே.சூர்யா?

இருந்தாலும் இந்தாளுக்கு ரொம்ப நீளம்ங்க. அட நாக்குங்க. எத்தனை நல்ல நடிகர் இவர். மிகத்திறமையான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார். நடை உடை பாவனை என எல்லாவற்றிலும் புதிய சூர்யா. வெறிபிடித்து வில்லனை அழிக்க அலைவதாகட்டும், அப்பாவியாய் நாயகியை கைபிடிக்க அலைவதாகட்டும்.. எங்கே வைத்திருந்தாய் இத்தனை நாளாய் உனக்குள் இருந்த நடிகனை என கேட்க வைக்கிறது. ( கொடுமை என்னவென்றால் இந்த படம் இவருக்கு பெயர் வாங்கித்தந்துவிட்டால் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என அஜால் குஜாலுக்கே திரும்பி விடும் வாய்ப்புண்டு இவருக்கு ). இவரது குரல்தான் இவரது மிகப்பெரிய குறையாகவே கருதி வந்தேன். ஆனால் அந்த குரலாலேயே இந்த படத்தின் பலமாய் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

நாயகி?

படத்தின் நாயகிக்கு இருக்கு ஆனா இல்லை. நடிப்பு திறமைபத்தி சொன்னேன்.நாயகி உள்ளே போட்டிருக்கும் மார்பு பேடு(PAD) ஏழு முறை தெரிய ( அருகில் அமர்ந்து அதை எண்ணிய தோழருக்கு நன்றி ) ஏதேதோ காட்டியிருக்கிறார். மகாசப்பையான பிகர். மனம் ஒப்பவில்லை. ஏன்தான் தமிழன் ரசனை தெரியாமல் நாயகிகளை தேர்ந்தெடுக்கிறார்களோ!.மற்றபடி நாயகி குறித்து ''பெரிதாக'' சொல்ல ஒன்றுமில்லை.

வில்லன்...?

ராஜீவ்கிருஷ்ணா.. ஆஹா படத்தில் பார்த்தது. அதற்கு முன் ஏதோ ஒரு ரேவதி நாடகத்தில் பார்த்திருக்கிறேன். மிக நல்ல நடிகர். மரணபயத்தோடு பாதி படத்திலும் வில்லத்தனம் வழிந்தோடும் சிரித்த முகத்தோடு பாதி படத்திலும் பட்டையை கிளப்புகிறார். ஹீரோவாக வலம் வந்திருக்க வேண்டியவர் வில்லனாக ஒரு ரவுண்டு வருவார்.

இசை...?

வினய். பாடல்கள் மகா குப்பையாக இருக்கிறது. பிண்ணனி இசையில் பிரமிக்க வைக்கிறார். ஆங்கிலப்படங்களுக்கு இணையான பிண்ணனி அமைத்தமைக்கு ஒரு ஷொட்டு.. கேவலாமன பாடல்களை போட்டதற்கு ஒரு குட்டு.

மற்றவை..?

எடிட்டிங்கும் கேமராவும் படத்தின் மற்ற நாயகர்கள். அற்புதமாக தமக்கிட்ட பணியை அதிஅற்புதமாய் செய்திருக்கிறார்கள்.

இயக்கம்..?

இயக்கம் தாய்முத்துசெல்வன். அட்டபாசுக் கதைக்கு அருமையாய் திரைக்கதை அமைத்து படமாக்கியமைக்கு பாராட்டுக்கள்.

மைனஸ்..!

படத்தின் மிகப்பெரிய மைனஸ் எழவெடுத்த பாடல்கள். படத்தின் வேகத்தையே குறைத்துவிடுகிறது. தம்மடிக்க கூட வெளியே போக இயலவில்லை. காட்சிகளை இழக்கவேண்டி வருமே என்கிற தயக்கம். பாடல்கள் இல்லாமல் படமெடுத்து தொலைத்தால்தான் என்ன! இத்தனை நல்லபடத்தின் வேகத்தையே குறைத்துத் தொலைக்கிறார்கள்.

பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் மற்றபடி படம் நன்றாகவே வந்திருக்கிறது.

*********

பிளஸ்..?

பாடல்கள் தவிர்த்து மத்த எல்லாமே எல்லாமே எல்லாமே..

நியூட்டனின் மூன்றாவது விதிப்படி சொல்லணும்னா... திரு.தாய்முத்துச்செல்வன் ஒரு நல்ல திரைப்படத்தை தந்திருக்கிறார். நிச்சயம் அதற்கேற்ற நல்ல எதிர்வினை அவர் எதிர்பார்த்ததிற்கும் மேல் இருக்கும் கிடைக்கும்.

03 May 2009

சாமி நீங்க என்ன லூசா!








ஒரு நாள் குரு எப்போதும் போல சிஷ்யனை அழைத்தார். குருன்னாலே டெரர் ஆச்சே. அதும் நம்ம குரு அகிலாண்ட நாயகன் அன்னபோஸ்ட் எம்.பி...

சிஷ்யனை அழைத்து எப்போதும் போல எவரெஸ்ட் சிகரத்தின் மேல் தான் ஒரு மடம் அமைக்க இருப்பதாகவும் அங்கே சென்று ஒரு எஸ்டிமேட் போட்டுக்கொண்டு வரவும் சொன்னார்.

சிஷ்யனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''சாமி நீங்க என்ன லூசா? '' என்றான்

''டே சிஷ்யா ஒன்னியும் டென்சனாவத...! இப்ப இன்னாத்துக்கு பயப்படறே.. ராஜா நீ அங்க போக சொல்ல உனக்கு இன்னா ஆபத்து வந்தாலும்.. ஆண்டவா காப்பாத்துனு மட்டும் சொல்லு , வேற எதுவும் தப்பிதவறி கூட சொல்லிறாத.. உனக்கு ஒன்னியும் நடக்காது.. ஓகேவா''

''ஓகேபா'' என்று அங்கிருந்து எவரெஸ்ட்டை நோக்கி கிளம்பினான். மாங்கு மாங்குனு உச்சிக்கு பக்கத்தில போயிட்டிருந்தான்.

டபக்குனு ஏறும் போது கால் ஸ்லிப்பாகி கீழே விழ ஆரம்பித்தான்.. உடனே ஆண்டவா காப்பாத்து என கத்தினான்.. அவனை வானத்திலிருந்து ஒரு கை வந்து பற்றிக்கொண்டது.

ஸ்ப்பாடா பொழச்சிட்டோம் என்று அமைதியானவனாய் ''தேங்க்ஸ்பா கடவுளே'' என்றான். சட்டென கைகள் அவனை விட்டது பொதக்கடீரென அதல பாதாளத்தில் விழுந்தான்.


*****************

மலையிலிருந்து விழுந்தாலும் குருவின் ஞானதிருஷ்டியால் எப்படியோ உயிர்பிழைத்தான் சிஷ்யன்.

ஒரு நாள் அவனும் மற்ற இரண்டு சீடர்களும் நமது குருவும் தியானத்தில் இருந்தனர்.

அப்போது கோயிலில் கட்டிவைத்திருந்த கொடி வேகமாய் பறந்தது.

அதை கவனித்த முதல் சீடன் சொன்னான '' கொடியாடுது''

இரண்டாவது சீடன் கொஞ்சம் அறிவுள்ளவன் , அவன் ''காற்றாடுது'' என்றான்

நம்மாளுக்கு எப்போதுமே கொஞ்சம் எல்லாரையும் விடவும் அறிவு அதிகம் உடனே '' நம் மனம்தான் ஆடுது '' என்றான்...

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த குரு மெர்சலாகி '' த்தா! ஒன்னியும் ஆடல.. உங்க வாய்தான் ஆடுது.. அல்லாரும் மூடினு தியானம் பண்ணுங்கடா '' என்றார்.

****************

ஆஸ்ரமத்தில் மற்றொரு நாளில்...

''மாமா ஆஸ்ரமத்தில் ஜாலியா பேசிகிட்டே தியானம் பண்ண முடியாது நாம ஆத்துக்கு அந்தாண்ட போய் தியானம் பண்ணுவோம்டா'' என்றான் நம்ம சிஷ்யன்.

''ஓகே மச்சி'' என்று ஆமோதித்தான் பிரண்டு சிஷ்யன்.

இருவரும் அக்கரைக்கு போனதும் கரையில் அமர்ந்து தியானத்தை துவங்கினர். அக்கரையில் ஏற்கனவே இருந்த குருநாதர் இவர்களை கண்காணிக்கலாம் என முடிவெடுத்து மரத்துக்கு பின்னால் மறைந்து நின்றார்.

தியானம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்டு சிஷ்யன் ''மச்சான் நான் என்னோட பெட்டிய பூட்டாம வந்துட்டேன்டா , இரு மச்சி பூட்டிட்டு வந்துடறேன்'' என்று ஆற்று நீரின் மீது அட்டகாசமாக நடந்து அந்த பக்கம் போய் திரும்பி அதுபோலவே ஆற்றின் மேல் நடந்து வந்தான்.

மறைந்து பார்க்கும் குருவிற்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இதையெல்லாம் நாம் சொல்லித்தரவே இல்லையே என்று அவருக்கு ஓரே குழப்பம். ஏனென்றால் அதெல்லாம் அவருக்கே தெரியாது.

மீண்டும் தியானம் தொடர்ந்தது. இந்த முறை நம்ம சிஷ்யன் '' மச்சான்.......மச்சான்..''

''என்னடா.. இப்பதான் ஆரம்பிச்சேன். அதுக்குள்ள''

''இல்லடா நான் ஜட்டி போடாம வந்துட்டேன் ,போய் ஜட்டி போட்டுட்டு வந்துடறேன்டா''

''போய் தொலைடா''

நம்ம ஆளும் அதே போல ஆற்றின் மேல் அநாயசமா நடந்து போய் திரும்பி வந்தான்.

குருவுக்கு கோபமே வந்துவிட்டது. இந்த சில்லரை பசங்கனாலயே முடியுதுனா என்னால முடியாதா .. என்று ஒடி போய் ஆற்றில் நடக்க முயன்றார். தொபுக் என மூழ்கிப்போனார்.

இதை சிஷயர்கள் பார்த்துவிட்டனர். நம்மாளு சிரிப்பு வந்து அடக்கிக்கொண்டிருந்தான்.

குருவுக்கு அவமானமாய் போய்விட்டது. இருந்தாலும் விடாமுயற்சியோடு மீண்டும் கரைக்கு வந்து மீண்டும் ஆற்றில் நடக்க முயன்றார். இம்முறையும் தோல்வி.

மூன்றாம் முறை, நான்காம் முறை.. நாற்பதாவது முறை என ஒரு முறை கூட அவரால் நடக்கவே முடியவில்லை.

இருட்டிவிட்டதால் சிஷ்யர்கள் இருவரும் அவர் கண் முன்னாலேயே ஆற்றின் மீது நடந்து அந்த பக்கம் சென்றனர்.

குருவுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. இன்னும் ஒரு முறை என மீண்டும் மீண்டும் இரவெல்லாம் முயன்று கொண்டிருந்தார். கரைக்கு வருவார். உள்ளே நடப்பார். மூழ்குவார். குளிரில் உடலெல்லாம் நடுங்கியது.

அருகருகே படுத்திருந்த அந்த சிஷ்யர்கள் பேசிக்கொண்டனர்.

''மச்சான் பாவம்டா நம்ம குரு'' என்றான் நம்மாளு .

''நீ வேறடா இன்னா மாதிரி டார்ச்சர் குடுக்கறான் அந்தாளு... அனுபவிக்கட்டும் ''

''வேண்டாம் டா நாம போய் சொல்லிரலாம் ஆத்துக்கு நடுவுல எங்கலாம் கல்லு போட்டு வச்சிருக்கோம்னு .. பாவம்டா சாமி சரியான லூசு நாளைக்கு செத்தாலும் செத்துரும்...'' .

**************