Pages

28 June 2010

களவாணிரொம்ப சீரியஸான கதை. எந்த நேரத்துல எவனுக்கு குத்து விழும். எவனப்போட்டு வெட்டுவாய்ங்க , கிளைமாக்ஸுல யாரு சாவாய்ங்கனு பயந்துகிட்டே படம் பார்த்தா.. பயபுள்ளைங்க கடைசிவரைக்கும் சீரியஸான கதைய சிரிக்க சிரிக்க குடுத்துருக்காய்ங்க!

களவாணி. பருத்தி வீரன் மாதிரி படம் முழுக்க ஒரே லந்துதான். அதுவும் லந்துனா லந்து மச லந்து. பட்டுக்கோட்ட,அரசனூர்,ராணி மங்கலம்னு புது இடம்.. களவாணிப்பயலா திரியற ஹீரோ , ஸ்கூல் படிக்கற ஹீரோயின் , கிரிக்கெட் போட்டில குழந்தைங்க தொடங்கி , பார்ல தண்ணி அடிக்கறவன் வரைக்கும் வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் கிடக்கற இரண்டு கிராமத்து ஜனங்க , லவ்வர்ஸு ரெண்டுபேருக்கும் அதனால சிக்கலு.. நடுவுல ஹீரோவோட சில்வண்டித்தனமான வேலையால லவ்வுக்கு பாதிப்பு, அதை சரி பண்ணி , ஊர சரி பண்ணி , எப்படி லவ்வுல ஜெயிக்காருன்றது மீதி ஸ்டோரி..

படம் மொத சீன் ஆரம்பிச்சா சும்மா பத்தவச்ச சரவெடி மாதிரி கிளைமாக்ஸ் வரைக்கும் படபடபடனு வெடிச்சிகிட்டே போகுது.. நடுவுல வர பாட்டுங்க மொக்கையா இருந்தாலும் பெரிய டேமேஜ் இல்ல! ஏன்னாப் பாருங்க ஒவ்வொருக்கா பாட்டு வரப்பவும் ஹீரோயின அம்புட்டு அழகா காட்டுதாய்ங்க .. கண்ணுலயே நிக்கு.. பாக்க பாக்க நமக்கும் அப்படியே பத்திக்குது. ரொம்ப இயல்பா நடிச்சிருக்கு அந்த பொண்ணு. பேரு நினவில்ல. ஆனாலும் படத்துல மொத மார்க்கு அந்த பாப்பாவுக்குதேன்.

பசங்க படத்துல நடிச்ச நம்ம மீனாட்சி.. அல்லது விமல்தான் ஹீரோ. பரட்ட தலையும் வெள்ளையும் சொள்ளையுமா தெனாவட்டா திரிஞ்சுகிட்டு , போக வர பொடிப்பிள்ளைக கிட்ட கல்யாணம் கட்டிகிறேனு சொல்லுனு மிதப்பா திரியறது.. பட்டைய லேப்புறாய்ங்க! அதுவும் கிளைமாக்ஸுல மவனே என் மச்சான் மேல எவனாச்சும் கைய வச்சீங்கனு சீர்றப்ப தியேட்டரே அதகளமாகுது..

ஹீரோ ஹீரோயினுக்குப்பறம் கஞ்சாகறுப்புதேன் படம் முழுக்க.. ரொம்ப நாளைக்கப்பறம் கஞ்சாகறுப்பு காமெடி சரியா வொர்க்அவுட் ஆகிருக்கு.. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகுது... அது போக வில்லனா வர புதுமுகம்.. ஹீரோவுக்கு அம்மாவ வர சரண்யா , அந்த தங்கச்சிப்பாப்பானு அப்பாவ வர இளவரசுனு எல்லா கேரக்டருமே உசுரோட அப்படியே மனசுக்குள்ளயே சுத்திக்கிட்டு கிடக்குறாய்ங்க!

ஹீரோயினுக்கு பெரியப்பாவ வர அந்த பெரியவரு நிஜமாவே கிராமத்து காரர்தான் போலருக்கு!

இன்டர்வெல்ல ஒரு சேஸிங் , கிளைமாக்ஸுல ஒரு சேஸிங் , இரண்டுலயும் ஹீரோ ஒரு பொண்ண தூக்கிட்டுப்போறாரு.. நாடோடிகள் மாதிரியே இருந்தாலும்.. இது காமெடி சேஸிங், செம! படத்தோட மியூசிக்கு ரொம்ப சுமாரா இருந்தாலும் பிண்ணனில பட்டைய கெளப்புறாப்ல இசையமைப்பாளரு. பாட்டையும் சூதானமா போட்டிருந்தா நல்லாருந்திருக்கும். படத்தோட லொக்கேசன்லாம் ரொம்ப புதுசு. லேட்டஸ்டு கிராமத்த கண்ணுமுன்ன நிறுத்திருக்காய்ங்க! கிராமத்துல டிவி இருக்கு, துபாய் போய்ட்டு வந்து வீடுக்கட்டுற ஆளுங்க , கார் இருக்கு,யமஹால சுத்திகிட்டு பீரடிக்கிற இளந்தாரிங்க இருக்காய்ங்க, இதுமாதிரி கிராமத்தயும் கிராமத்தானையும்தான் எங்கூருப்பக்கம் நான்கூட பார்த்துருக்கேன். டைரக்டருக்கு ஒரு சபாஷு!

படத்துல ஒரு சீன்ல வெட்டுக்குத்து நடக்கு! அப்பக்கூட ரொம்ப சீரியஸா இல்லாம ஒரு துளி ரத்தம்தான் சட்டைல ஊர்றாப்ல காட்டுறாய்ங்க, நல்ல ஐடியா. படத்துல பெரிசா ஆபாச வசனம் , குத்துப்பாட்டு, சண்டை எதுவுமே இல்லாம சும்மா விறுவிறு சுர்ர்ர்ருனு ஒரு படம் குடுக்க முடியும்னு நிரூபிச்ச டைரக்டருக்கே இன்னொரு சபாஷு. புத்திசாலித்தனமா பல காட்சிகள அமைச்சதுக்கும் அவர பாராட்டியே ஆகணும்.

மனசுக்கு இதமா சிரிச்சுகிட்டே சந்தோசமா இந்த களவாணிப்பயல கட்டாயம் குடும்பத்தோட பாக்கலாம்னாலும்.. படத்துல வர ஸ்கூல் பாப்பா காதல்தான் கொஞ்சம் இடிக்கு! தயவு பண்ணி பத்தாம்ப்பு படிக்கற பிள்ளைக லவ் பண்றாப்ல படம் எடுக்காதீங்க. பாவம் நம்மூரு பிள்ளைக இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கு..

மத்தபடி களவாணிய , திருட்டு டிவிடில களவாணித்தனமா பாக்காம தியேட்டர்ல பாருங்கப்பு! படம் நெசமாவே நல்லாருக்கு.

24 June 2010

வெள்ளிங்கிரி - 3புழு,பூச்சி,அட்டை,டைனோசர் கொசு ஒன்றுவிடாமல் கடிக்க வாய்ப்பிருக்கிற மலை வெள்ளிங்கிரி. அதனால் இரவில் மலையேறுபவர்கள் டார்ச் லைட்டை கையில் பிடித்தபடி ஏறுவார்கள். நகரங்களிலிருந்து வரும் எங்களைப்போன்றவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்கிற இருமாப்பு! ஆணவம்! அதனால் இருட்டிலேயே அநாயாசமாக நடப்போம். கையில் கம்பு கூட வைத்துக்கொள்வதில்லை. கம்பு வைத்துக்கொள்ள ஆசை பட்டாலும் காசிருக்காது. அதனால் மலையேறும் போதே யாருக்காவது கம்பு தேவைப்பட்டால் மரங்களிலிருந்து வாகான ஒரு கிளையை உடைத்துக்கொள்வோம்.

மரத்தில் கம்பு உடைப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. பச்சை மரத்திலிருக்கும் கிளை அவ்வளவு சுலபமாக உடைந்து கையோடு குபுக் என வந்துவிடாது. மலையேறும் போது அரிவாள் கத்தியெல்லாம் வைத்துக்கொள்ளவும் முடியாது. வைத்துக்கொண்டாலும் தவறில்லை. நாங்கள் கையால்தான் உடைப்போம். அதனால் பொறுமையாக ஒரளவு வெளிச்சமான பகுதியில் எங்கு வளைத்தால் உடையுமோ அங்கே உடைக்க வேண்டும். அல்லது கிளையை லேசாக அதன் அடிமட்டத்தில் உடைத்து , அதன் கீழ் முனையைப் பிடித்து நாலு சுழற்று சுழற்றினாலும் கிளை கையோடு வந்துவிடும்.

நீங்கள் கம்பு உடைக்க மரத்தை உலுக்கும்போது தேனீக்கள் கூட்டை கலைத்துவிடும் அபாயம் உண்டு. அல்லது வவ்வால்கள் கூட்டமாய் படையெடுத்து உங்கள் மீது தாறுமாறாக மோதிவிட நேரிடலாம். பூச்சிகள் அல்லது அட்டைகள் சட்டையில் அமர்ந்து கொள்ளலாம். நிற்குமிடத்திற்கு கீழேயிருக்கும் ராட்சத எறும்புகள் காலில் ஏறி விடவும் வாய்ப்புள்ளது. அதனால் பொறுமை மிக முக்கியம். நண்பர்கள் சீக்கிரன்டா போலான்டா என்று உங்களை உசுப்பேற்றுவார்கள். அவசரமில்லாமல் எருமை போல் இருப்பதே நல்லது. உங்களுக்கு அத்தனை லாவகமோ திறமையோ இல்லையென்று நினைத்தால் பத்து ரூபாய்க்கு மலையடிவாரத்திலேயே நல்ல வழுவழு கம்புகள் அடிபாகம் மழுங்கடித்து தரப்படும், அதை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும் காசு கொடுத்து கம்பு வாங்குவதை விடவும் கையால் ஒடிப்பதில்தான் கிக் அதிகம்.

முதல் மலையிலிருக்கும் சோடாக்கடையில் மற்றவர்கள் தம்மடிக்க, நானும் கமலும் இரண்டாவது மலை ஏறத்தொடங்கிவிட்டோம். கையில் டார்ச் இல்லை. கும்மிருட்டு. முதல்மலை ஓரளவு வெளிச்சமாக இருந்தாலும் , இரண்டாவது மலையில் மரங்களின் அடர்த்தி தாறுமாறாக இருக்கும். பாதையும் கூட மண் பாதைதான். பார்த்துப் பார்த்து அடிஅடியாய் இடித்தபடி இருவர் மட்டும் கையில் சிகரட்டோடு நடக்கத்தொடங்கினோம். ஓரிடத்தில் கமல் மாம்ஸ் நில்லு என்றான்.

‘என்னடா?’

‘இருடா , ஏதோ சத்தம் கேட்குது’

எனக்கு அடிவயிற்றில் உருளை உருளத்தொடங்கிவிட்டது. எனக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை. ஆனால் அவனோ ஏதோ உருமுவது மாதிரி இருக்கு என்றான். இப்போது எனக்கும் கூட ஏதோ உருமுவது மாதிரிதான் இருந்தது. உருமாத மாதிரியும் இருந்தது. சப்தம் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும் பயம் உறுதியாக இருந்தது. முன்னால் ஒரு அடி எடுத்துவைக்கவும் தைரியமில்லை. பின்னால் நடக்கவும் பயம். கமல் அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். என்ன நினைத்தானோ திபுதிபுவென பின்னோக்கி ஓடத்தொடங்கினான்.. நானும்.. திபுதிபுதிபுதிபு..

ஒடத்தொடங்கிய கால்கள் சோடாக்கடைக்கு அருகிலிருக்கும் வெள்ளைப்பிள்ளையார் காலடியில்தான் நின்றது. வெள்ளைப்பிள்ளையார் எப்போதும் போல விபூதி கொட்டி வெள்ளையாக காட்சியளித்தார். முதல் மலை ஏறுபவர்கள் ஏறிமுடித்ததும் வெள்ளை பிள்ளையார் கோவிலில் கையளவு விபூதி வாங்கி நெற்றியில் , உடலில் பூசிக்கொண்டு நடக்க வேண்டும் என்பார் மாமா. அதற்கு அறிவியல் ரீதியான காரணமும் சொல்லுவார். விபூதியை உடலில் பூசிக்கொண்டால் பூச்சிகள் நம்மை கடிக்காதாம்.. எனக்கு பல முறை கடித்திருக்கிறது. அந்த விபூதி சித்தனாதன் விபூதி போல மாவு மாதிரி இருக்கும். சாம்பல் குறைவாகவும் சுண்ணாம்பு அதிகமாகவும் கலந்ததாக இருக்கலாம். யாரும் நாங்கள் சொன்னதை நம்பவில்லை. ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அதுவும் இரவில் எந்த விலங்கும் பாதைக்கு அருகில் கூட வராதாம்.

அடர்த்தியான காடுகள் அடங்கியது முதல் மலை. ஏறத்துவங்கும்போதே வியர்வையில் வெளியாடை உள்ளாடையெல்லாம் நனைந்து போகும். ஏனோ கடுமையான வெப்பத்தை உணர முடியும். படிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு செட்டு படிகளும் யாராவது கவுண்டர்கள்,செட்டியார்கள்,பிள்ளைமார்,நாயக்கர்கள் உபயத்தில் என்று ஏதாவது ஒரு படியில் கல்வெட்டியிருப்பார்கள். ராஜகவுண்டர்,சின்னய்யா கவுண்டர்,முத்துராமகவண்டர்,சொக்கலிங்க செட்டியார் என சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளும் காணப்படும்.. இந்த பெயர்களுக்குப் பின்னால் பெருங்கதைகள் பல உண்டு.. அது பின்னால்...

வெள்ளிங்கிரி மலையில் பெண்கள் ஏறக்கூடாது என்பது ஐதீகமாம். என்ன கருமாந்திரமோ.. எனக்குத்தெரிந்த அம்மாக்களும்,பாட்டிகளும் மட்டும் பகல் நேரத்தில் முதல் மலை மாத்திரம் ஏறுவார்கள் , பிள்ளையார் கோவிலில் பூஜை முடித்துவிட்டு திரும்பி விடுவர். அடிவாரத்திற்கு வந்தபின் உடன் வந்திருக்கும் பெண்களிடம் முதல் மலை ஏறின கதையை நாள்முழுக்க சொல்லிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

வெள்ளிங்கிரி மலையில் மட்டுமல்ல , அடிவாரத்தை ஒட்டியும் பல நூறு ஏக்கர்களுக்கு அடர்த்தி மிக அதிகமான காடுகள்தான். கொஞ்சமும் கேப் விடமால் நாலாபக்கமும் பசுமை. சுற்றிச்சுற்றி மூலிகைகள். எங்கும் சின்னசின்ன காட்டுவிலங்குகள். முதலில் அங்கே இயேசு வந்தார் , பாதி காடு காலி! பின் சிவபெருமான் வந்தார் மீதி காடும் காலி!

- தொடரும்

முந்தைய இரண்டு பாகங்கள்

பாகம் - 1

பாகம் - 2


படம் உதவி -  karthicks.net

19 June 2010

ராவணன் - டன்டன் டன்டணக்கா
பக்பக்பக்பக்பக்... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... கொக் கொக் கொக் கொக்.. டன்டன்டன்டனக்கா.. டிஷும் டிஷும்.. டுப்டுப்டுப்டுப்.. பட்பட்ப்ட்பட்.. ஆஆஆஆஆ.. ஓஓஓ... இப்படியாக ராவணன் படத்தின் ஒரு காட்சியில் அபாரமாக வசனம் பேசுகிறார் விக்ரம்.

படத்தின் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு முறை காட்டுத்தனமாக யாராவது உயிரைக்கொடுத்து கத்துகிறார்கள். நமக்கு தலைவலிக்க தொடங்குகிற அமானுஷ்யபுள்ளியே அதுதான். ஐஸ்வர்யா கத்துவார், விக்ரம் கத்துவார் , ப்ரிதிவிராஜ் கத்துவார்.. பிரபு,கார்த்திக்,ப்ரியாமணி அனைவரும் அவரவர் பங்குக்கு காட்டுக்கத்தல் கத்துகிறார்கள். யாரும் கத்தாத போதெல்லாம் குண்டு வெடிக்கிறது அல்லது துப்பாக்கி. ஒலி – ரசூல் பூக்குட்டி... ஓவர்டைம் வேலை பார்த்திருப்பார் போல.. படம் முடியும் போது தலையெல்லாம் பாரமாய்..

அதிகம் மெனக்கெட்டு சமைப்பது சில நேரங்களில் நாசாமாகி வாயில் வைக்கமுடியாத அளவுக்கு , அல்லது காரித்துப்பிவிடுகிற அளவுக்கு சுவையில்லாமல் போய்விடும். ராவணன் படமும் அந்த ரகம்தான். பல ஆண்டுகளாக காடு மலை மேடெல்லாம் அலைந்து , இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்திருக்கலாம். ஏதேதோ செய்திருக்கிறார்கள் ராவணனிலும்! மணிரத்னத்தின் செப்படி வித்தைகளை டிரைலரில் ரசிக்க முடிந்த அளவுக்குக் கூட திரையில் ரசிக்க முடியவில்லை.

டினோசருக்கெல்லாம் அடிசறுக்கும் காலத்தில் மணிரத்னம் மீடியாக்களால், இந்தியாவின் அதிகபட்ச டாப் படைப்பாளியாக சித்தரிக்கப்பட்ட டைனோசர் பொம்மைதான். இந்த முறை அடி பலம். உலக சினிமாக்காரர்களெல்லாம் கதைகதை என்று ஊரெல்லாம் திரிஞ்சா.. மணிசாருக்கு கதை பிடிப்பது மிகமிக ஈஸி. வால்மீகி , வியாசரெல்லாம் எதற்கு கதை எழுதினார்களோ இல்லையோ மணிசார் சரியாக அதை பயன்படுத்தி வருகிறார். அடுத்து சிலப்பதிகாரத்தை அபிஷேக் ஐஸ்வர்யாராய் காம்பினேஷனில் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்குள் ஐஸுக்கு வயசு 50தை தாண்டிவிடும். இந்த படத்திலேயே முதிர்ச்சி தெரிகிறது. குளோசப்பில் பார்க்க 50களின் தமிழ் ஹீரோயின்களை நினைவூட்டி பயமுறுத்துகிறார்.

விக்ரம் , கந்தசாமி சூட்டிங்கிலிருந்து அப்படியே வந்திருப்பார் போல, அந்த படத்திற்காக கையில் போட்டுக்கொண்டு சூரிய டாட்டூவை கூட அழிக்கவில்லை. படம் முழுக்க மேலே சொன்ன அந்த வசனத்தை சொல்லி சொல்லி சாவடிக்கிறார். படம் முழுக்க கலர் கலராக முகத்தில் எதையாவது அப்பிக்கொண்டே அலைகிறார். இலக்கியவாதிகள் அல்லது உலகசினிமா ஆர்வலர்கள் அதற்கு ஏதாவது குறியீடுகள் வைத்திருக்கலாம். நமக்கு எரிச்சல் மட்டுமே.

அடைத்துக்கொண்ட வாஷ்பேசின் போல முதல் காட்சியிலிருந்து கதை நகரவேயில்லை. இடைவேளை கூட எந்த சலனமும் இல்லாமல் வந்து போகிறது. நடுவில் வரும் ப்ரியாமணி பிளாஷ்பேக் இதுவரை தமிழ்சினிமா உலகம் எங்கும் கண்டிராதது. கார்த்திக் காரணமேயில்லாமல் மரங்களின் மேல் தாவுவதும் , அவர் அனுமான் என்பதால் படம் முழுக்க மங்கி தொப்பி போட்டுக்கொண்டு வருவதும் , சகிக்கவில்லை. பிரபு கும்பகர்ணனாம், அதற்காக அவரை எப்போதும் சாப்பிடுவது அல்லது சாப்பாடு தருவது மாதிரியான காட்சிகள் அமைத்திருப்பது டூமச்.

படம் முழுக்க உலக சினிமா பாதிப்பு. கொரிய படங்களைப்போல பிண்ணனியில் ஸ்லோ மோசனில் இசை ஒலிக்க , பாத்திரங்கள் பொறுமையாக திரும்பி , வசனம் பேசுவதற்குள்....எரிச்சலாக இருக்கிறது. படம் முழுக்க விக்ரம் போர்வையை போர்த்திக்கொண்டு போஸ் கொடுக்கிறார். கடைசியாக பில்லாவில் அஜித் இப்படி படம் முழுக்க நடப்பதும் போஸ் கொடுப்பதுமாக நடித்த்தாக நினைவு.

ஈரம் சொட்ட சொட்ட கேமரா படம் பிடித்திருக்கிறது. நீர்வீழ்ச்சிகள் , மலைகள், காடுகள், இருட்டு எல்லாமே அழகுதான். அதிலும் இசைக்காரர் ரஹ்மான் நன்றாகவே இசையமைத்திருந்தாலும்.. பாகவதர் படம் போல ஐந்து நிமிடத்திற்கு ஏதோ பாட்டுபடுவது போலவே இருக்கிறது. ஜெயாடிவியில் எல்லா திரைப்படங்களையும் பிரித்து மேயும் சுஹாசினி இந்த படத்திற்கு வசனம். ஏலே வாலே போலே என்றால் திருநெல்வேலி பாஷையாம். மணிரத்னம் படங்கள்னாலே வசனம் பாதி கேட்காது மீதி புரியாது.. இதில் இன்னும் சுத்தம் , அதிலும் கண்ணைக்கட்டி ஐஸ்வர்யாராயை கட்டிப்போட்டுவைத்திருக்கும் போது அவர் பாரதியார் பாட்டு பாடுவதும், அதன் மீதியை காட்டுவாசி விக்ரம் பாடுவதும் அட அட அட!

அற்புதமான மேக்கிங் , ஹாலிவுட் தரம் , ஒலி ஒளி , இசை என நிறைய பிளஸ்கள. ஆனால் மைக்ரோஸ்கோப்பில் படிக்க முடிகிற கதை, எரிச்சலூட்டும் வசனங்கள் , கொஞ்சமும் வேகமில்லாத கருவாட்டு திரைக்கதை, நாடகத்தனமான காட்சி அமைப்புகள் மொத்தபடமும் ஒட்டு மொத்தமாய் ஆயிரம் பாட்டில் அமிர்தாஞ்சன் போட்டாலும் தீராத மெகா தலைவலியை மட்டுமே நமக்கு பரிசளிக்கிறது.

கிளைமாக்ஸில் சோகமாக அழுதபடி ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் பக்...பக்...பக் என்று கந்தசாமி போல மிமிக்ரி பண்ண.. கண்ணீர் வடிய விக்ரமும் பக்...பக்...பக்..

18 June 2010

சமகால டிவி நிகழ்ச்சிகள்திருமணத்திற்கு முன் அம்மா மட்டும்தான் என் ரிமோட்டுக்கான சமகால எதிரி, இப்போது இன்னொரு ஆளையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இருமுனை தாக்குதலையும் சமாளித்து எப்போதாவது கிடைக்கும் டிவியில் பார்ப்பது டிஸ்கவரி சேனல். டிஸ்கவரியில் தமிழில் டப்பிங் ஒளிபரப்பு தொடங்கியதிலிருந்து எப்போது டிவி கிடைத்தாலும் கை தானாக 50ஆம் எண்ணை அமுக்கி விடுகிறது. டிஸ்கரியில் நான் பார்க்கும் போதெல்லாம் யாராவது காட்டில் தனியாக அலைவதும், அதிலிருந்து தப்பிப்பதும் , பூச்சி புழுக்களை தின்பதும் , என... சர்வைவர் மேன் மாதிரியான நிகழ்ச்சிகளே ஆக்கிரமித்திருக்கும். அதை பற்றி பூச்சி தின்றவனின் டப்பிங் தமிழில் சொல்வதென்றால்.. ஆஹா அற்புதம், இதுமாதிரி இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்ல! மற்ற படி டிஸ்கவரியில் இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் லைஃப் நிகழ்ச்சியும் பிரமிக்க வைக்கிறது. வாய்ப்புக்கிடைத்தால் அனைவரும் குடும்பத்தோடு காணவேண்டிய குடும்ப நிகழ்ச்சி லைஃப்! தினமும் இரவு 8 மணிக்கு உங்கள் டிஸ்கவரி சேனலில் தமிழில்.

தமிழில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான சேனல்களில் டிஸ்னி சேனல் ஏற்கனவே பவர் ரேஞ்சர்களை பல வித கலர்களில் காட்டிக் கொல்கின்றன. நிக்லோடியனும் தமிழில் குதித்திருக்கிறது. குழந்தைகளுக்கு பிடிக்காத கார்ட்டூனாய் தேர்ந்தெடுத்து ஒளிபரப்புகிறார்கள். வாமிட் வருகிறது. சுட்டி டிவியில் டோரா புஜ்ஜி , சிந்துபாத் மற்றும் அரேபிய கதைகள் தவிர்த்து வேறேதும் சுவாரஸ்யமில்லை. புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் சித்திரம் தொலைக்காட்சியில் கிங்காங்,ஹூமேன் இரண்டும் பார்க்கலாம் ரகம். திருக்குறள் கதைகள் என்றும் ஒரு கார்ட்டூன் படம் சித்திரம் தொ.காவில் தினமும் காலை 7.30க்கு ஒளிபரப்பாகிறது. வசனங்கள் அந்தக்காலத்து சிறுவர் மலர்,அம்புலிமாமா,பூந்தளிர் டைப்! தொடங்கியதிலுருந்து மிஸ்ஸாகாமல் தினமும் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி இதுதான். டோன்ட் மிஸ் இட்!

சென்னை ஸ்பெசல் நியூஸ் தொ.காவான என்டிடிவி ஹிந்துவில் மொக்கையான நியூஸுக்கு நடுவில் ஹேன்ட் அப் என்னும் நிகழ்ச்சி ஓரளவு ரசிக்கும் படி இருக்கிறது. திரையுல பிரபலங்களை பேட்டிகாண்கிறேன் பேர்வழியென்று அவர்கள் டவுசரை அவிழ்த்து ஓடவிடுகிறார்கள். இது கண்ட கண்ட நேரங்களில் ஒளிபரப்பாகும்.

பாலிமர் தொலைகாட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து விடாமல் ‘விரைவில்’ விளம்பரம் போட்டுக்கொண்டிருந்த்து தமிழகத்தின் சாம்பியன்ஸ் என்னும் புரோகிராமுக்கு!. அமெரிக்கன் ஐடல்,இந்திய ஐடல் தண்டையார்பேட்டை ஐடல் முதலான நிகழ்ச்சிகளின் லோக்கல் மேக்கிங். அதுவும் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தொடங்கியிருக்கிறது. இது மற்றும் ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய் ஆதிராஜும் , டிரம்ஸ் சிவமணியும், சுதா சந்திரனும் முயற்சி செய்வதை பார்க்க நல்ல வேடிக்கையாக இருக்கிறது. பாட்டு பாடியும் நடனமாடியும் கொல்லும் மற்ற ரியாலிட்டி ஷோக்களை விடவும் நல்ல வெரைட்டியான பல திறமைகளை காண ஏற்ற நிகழ்ச்சி. ஜட்ஜுகள், சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜுகளைப்போல அலட்டிக்கொண்டாலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகிறவர்களில் சிலர் மிரள வைக்கிறார்கள். ஆனால் வாரத்திற்கு நான்கு பர்ஃபார்மென்ஸுதானாம்.. இன்னும் இரண்டு சேர்க்கலாம். எனக்குத்தெரிந்து எங்கள் வீட்டில் அனைவரும் மனமொத்து காணும் நிகழ்ச்சி இது ஒன்றுதான்! இது ஞாயிறு தோறும் இரவு எட்டு மணிக்கு உங்கள் பாலிமர் தொலைக்காட்சியில் மட்டுமே!

சூப்பர் சிங்கர் போட்டிகள் விஜய்டிவியில் முடிவுக்கு வந்துவிட்டது. பலரும் நினைத்தது போலவே அல்கா அஜித் என்னும் குட்டிப்பெண் இந்த முறை பட்டம் வென்றார். அவர் 11 மொழிகளில் பாடக்கூடிய திறமை கொண்டவராம். லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளாராம். சின்ன வயதிலேயே அசாத்திய திறமை கொண்ட அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள். பக்கத்துவீட்டு மாமி எப்போதும் அந்த பாப்பா குறித்து குறிப்பிடும் போது அந்த அல்கா எவ்ளோ நன்னா பாட்றா பார்த்தியா, அவதான் கெலிக்க போறா என்று சிலாகிப்பார். அல்கா வென்றதில் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் தெருவுக்கு தெரு போஸ்டர் அடித்து குழந்தைகளை ஓட்டுப்பிச்சை எடுக்க வைத்த கொடுமைகளை தடுத்திருக்கலாம். எரிச்சலாக இருந்தது. அடுத்ததாக விஜய்டிவியில் பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் தொடங்க இருக்கிறது.. விஜய் டிவியில் நீயா நானா , கதையல்ல நிஜம் முதலான நிகழ்ச்சிகள் வரவர போரடிக்கிறது. ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் பற்றி சொல்லவேண்டுமானால் கர்ண கொடூர திராபை! ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் டப்பிங் திரைப்படங்கள் நிச்சயம் பார்க்கலாம்.

ஜூ தமிழில் விரும்பிப்பார்ப்பது இரவு ஒன்பதிலிருந்து பத்து வரைக்கும் ஒளிபரப்பாகும் ஜு தெலுங்கில் ஒளிபரப்பாகும் நடன போட்டியின் மறுஒளிபரப்பு. மானாட மயிலாடவைப் போல் இல்லாமல் குரங்கு சேட்டைகள் இல்லாத நாகரீகமான நடனத்திற்கு கியாரண்டி. சமயங்களில் உடைகள் கொஞ்சம் ஆபாசமாக ஆணாதிக்க வாதிகளுக்கு தெரியலாம்! சில போட்டியாளர்கள் மெய்சிலிர்க்க வைப்பார்கள் , அதற்கு கியாரண்டி. மற்றபடி ஜு தமிழில் ஒளிபரப்பாகும் சுதாங்கனின் நாயகன் தொடரை விரும்பிப்பார்ப்பேன். எம்.ஜி.ஆரின் வரலாற்றை சொல்லும் நிகழ்ச்சி அது. நடுவில் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் பேட்டி கூடுதல் போனஸ். அதைப்போலவே சுதாங்கனின் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒளிபரப்பாகும் பிரபலங்களுடனான பேட்டியும் நல்ல நிகழ்ச்சி. கடந்த இரண்டு வாரங்களில் எஸ்.வி.சேகர் மற்றும் குஷ்புவுடனான பேட்டிகள் கவர்ந்தன. அதே போல அனைத்து பிட்டுப்படங்களுக்குமான ஹோல்சேல் உரிமம் ஜீயிடம்தான் உள்ளதாக கருதுகிறேன். வேலுபிராபகரனின் காதல்கதை, இளமனசு,பத்துபத்து,சுட்டபழம்,காந்தர்வகன்னி,கருநாகம் லொட்டு லொசுக்கு என அண்மையில் வெளியான அனைத்து படங்களும் அவ்வப்போது பிட்டுகள் நீக்கப்பட்டு மொக்கையாக திரையிட்டப்படுகிறது.

கேப்டன் டிவி என்றொரு டிவி இருக்கிறது. அதிலும் சில நிகழ்ச்சிகள் கவர்கின்றன. குறிப்பாக ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் கேக்ஸ் மாதிரியான கேன்டிட் கேமரா ஒன்று ஒளிபரப்பாகிறது. சுவாரஸ்யம். அதைத்தவிர்த்து தாய்லாந்து,கேரளா,கர்நாடகா முதலான பல மாநில நாட்டு உலக சினிமாக்களையும் தமிழில் டப் செய்து போடுகிறார்கள். உலக சினிமா ஆர்வலர்கள் ப்ளீஸ் நோட். ரோகிணி அடிக்கடி வந்து உலக சினிமா பற்றிய நிகழ்ச்சி விரைவில் வரவிருப்பதாக குறிப்பிடுகிறார் எப்போதென்று தெரியவில்லை. ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனா மாதிரியான படங்களும் ஒளிபரப்பப்படுகிறதாம். பார்க்க வேண்டும்.

வசந்த் தொலைகாட்சியில் தினமும் காலைவேளையில் ஒளிபரப்பாகும் பழைய பாடல் நிகழ்ச்சி நடுவில் பேசுபவரை மறந்துவிட்டு கண்டுரசிக்க ஏற்ற ஒன்று. சனிக்கிழமை இரவு 12மணிக்கு ஒளிபரப்பாகும் பிட்டுப்படத்தை பார்க்க வேண்டாம். பிட் வரும் போதெல்லாம் வசந்த் அன் கோ விளம்பரம் போட்டு பயமுறுத்துகின்றனர். நமக்கு ஆண்மைகுறைவோ என்கிற சந்தேகம் எழ வாய்ப்புண்டு. மெகாவிலும் காலையில் எந்த விளம்பர இடைவேளையில்லாமல் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகிறது. காணலாம்.

சன்னுக்கு போட்டியாக வரும் என்று அந்த காலத்தில் நினைத்த ராஜ்டிவியில் எந்த நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை. அது எந்த சேனல் எண்ணில் இருக்கிறது என்பது கூடத்தெரியவில்லை. ராஜ்டிஜிட்டல் பிளஸில் 80களில் வெளியான மொக்கைப்படங்கள் அவ்வப்போது ஒளிபரப்பாகும் , வரலாறு தெரிந்து கொள்ள காணலாம். கலைஞரில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி ஏற்கனவே ஒரளவு பலராலும் பார்க்கபடுகிறது. நான் அவ்வப்போது பார்க்கிறேன். மக்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் புதிய கோணங்கிகள் , 10நிமிடப்படங்கள் , ஞாயிறு ரஷ்யப்படங்கள் பார்க்கலாம்.

பொதிகையில் செம்மொழி மாநாட்டையொட்டி சில நல்ல உரையாடல்கள் ஒளிபரப்பாகிறது. பார்க்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கிற அளவுக்கு பொறுமையும் அறிவும் இல்லை. இது தவிர வேற்று மொழி சேனல்களைப்பற்றி எழுத ஆரம்பித்தால் சமகால உலக டிவிகள் என்று ஒரு புத்தகம் எழுத வேண்டியதாயிருக்கும்.

இப்படி ஒரு நாளில் இத்தனை நிகழ்ச்சிகளையும் தொலைகாட்சிகளையும் வேலை வெட்டியில்லாமல் பொறுமையாக உட்கார்ந்து பார்க்கும் ஆவலும் வேட்கையும் எனக்கு எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனோ ரிமோட்டினை ஆக்கிரமித்துக்கொண்டு எப்போதும் சன்டிவியில் டீலா நோடீலோ,தங்கம்,செல்வி,ஹனிமூன் எக்ஸ்பிரஸ்,அசத்தப்போவது யாரு, என பார்த்துக்கொண்டும், இரவு 11 மணிக்கு கூட சன்மியூசிக்கில் நல்லநல்ல பழைய பாடல்களைக் கேட்டுக்கொண்டும் , சன்னோடு சன்னாக மக்கிப்போய் வாழ்கிற குடும்பத்தில் சன்னாக பிறந்து விட்டதால், நானும்அதையே பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. நம்ம நாட்டிலே...

17 June 2010

பச்சை என்கிற காத்து நடத்தும் குறும்பட போட்டி

அ திரை என்னும் திரைப்பட நிறுவனம் உலக தமிழ் குறும்பட போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம். பதிவர்கள் பலரும் வாசகர்களும் குறும்படங்கள் இயக்குபவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் , என்பதால் விபரங்கள் இங்கே.. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் இந்த விபரத்தை கொண்டு சேர்க்கலாம்.. விண்ணப்பிக்க கடைசிநாள் 20.6.10. படத்தின் மீதுசொடுக்கி விபரம் அறியலாம்


13 June 2010

கராத்தே கிட்அசராம அடிப்பதுதான் ஜாக்கிசான் ஸ்டைல். கராத்தே கிட் படத்தில் அசராமல் நடித்திருக்கிறார் ஜாக்கி! கடைசியாக வெளியான போலீஸ் ஸ்டோரியிலேயே அழுது புரண்டிருந்தாலும்.. கராத்தே கிட்டில் அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். அமைதியான சீனர்களுக்கேயான கிழட்டு நடை! புன்னைகையில்லாத அமைதியான முகபாவம்.. இத்தனைவருடமாக ஜாக்கியை ஹாலிவுட்டும் சீனர்களும் விரட்டி விரட்டி சண்டையே போட வைத்துவிட்டனர். இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைதான் அதுவும் மிகமிக மிருதுவான வன்முறையில்லாத சண்டை!

ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். (அங்கேயும் வாரிசுகள் தொல்லைதானா!.. தந்தை மகனுக்காற்றும் உதவி!) சின்ன பையன்தான் ஆனால் சிறுத்தைக்குட்டி!. அம்மாவிடம் நாம ஊருக்கே போயிரலாம்மா! என்று அழும் போதும்.. கிளைமாக்ஸில் உடைந்த காலோடு சண்டையிடும் போதும் உழைப்பு தெரிகிறது. படத்தின் நாயகனின் அம்மாவாக வரும் தாராஜி ஹன்சன். சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கவர்கிறார்.

படம் முழுக்க சீனாவிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும் , கம்யூனிச சீனாவிற்கு எதிராக எடுக்கப்பட்டதோ என்று நினைக்கவைக்கிறது படம் சொல்லும் செய்தி மற்றும் அதன் அரசியல்! பழமைவாதியான ஜாக்கி குங்பூ எனும் ஆயுதத்தை சமாதானத்திற்கான கலையாகவும், தற்கால குருவான வில்லன் குங்பூ எதிரிகளை சாகும்வரை அழிக்கவும் பயன்படுத்துவாக சித்தரிக்கப்படுகிறது. சீனர்களை அமெரிக்க நாட்டின் கருப்பின சிறுவன் தோற்கடிக்கிறான்! இப்படி படம் முழுக்க நிறைய சின்ன சின்ன அரசியல் இருந்தாலும்.. படத்தை தயாரித்திருப்பது ஒரு அமெரிக்க நாட்டின் பிரஜை! அதனால் அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது! படம் முழுக்க முழுக்க ஒரு மாதிரி அழுக்காகவே எடுக்கப்பட்டுள்ளதும் சீன நகரங்களை நெருக்கடியாகவும் சீனர்களை வெறிபிடித்தவர்களாகவும் காட்டுவது நெருடல்.

குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும்.. படம் முழுக்க வன்முறை நிறைந்திருக்கிறது. தியேட்டரில் நிறைய குட்டீஸ்களைக் காண முடிந்தது. என்ன செய்ய? வேறு வழியில்லை, நம்மூர் சுறாக்களுக்கும் சிங்கத்துக்கும் குட்டிப்பிசாசுகளுக்கும் இந்த வன்முறைகள் குறைவுதான். சொல்லப்போனால் குழந்தைகள் மனதில் தைரியத்தை விதைக்கலாம். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் , குங்பூ பயிற்சிக்காக ஜாக்கி அந்த சிறுவனை அழைத்துச் செல்லும் மலைகள் நிறைய புத்தக்கோயில்களும் பிரமிப்பு!

பயிற்சிக்காக ஆர்வத்தோடு வருகிற சிறுவனை விடாமல் அவனுடைய சட்டையை கழட்டி மாட்ட செய்வது.. அதைப்பற்றி தியேட்டரிலேயே பாருங்கள்.. ஒரு குட்டி ஜென் கதை பார்த்த திருப்தியை அளிக்கிறது கராத்தேகிட் திரைப்படம்! படம் பார்த்து முடிக்கும் போது குஷியான மூட் மனதிற்குள் நிரம்பி விடுகிறது. ஜாக்கிசானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஜேடன் ஸ்மித் அந்த குறையை தன்னுடைய அபாரமான நடிப்பால் போக்குகிறார்.

படத்தில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று டப்பிங்! சிம்பிள் மற்றும் பளிச் வசனங்கள். சில வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. முடிந்தவரைக்கும் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது உசிதம்!

1984களில் வெளியான கராத்தே கிட் என்னும் படத்தின் ரீமேக் இது. இந்த படத்தை வில் ஸ்மித் தயாரித்துள்ளார். ஜாலியாக இரண்டு மணிநேரம் பார்க்க கூடிய நல்ல விறுவிறு சுருசுரு குங்பூ படம்.

***********

09 June 2010

மிச்சமிருக்கிறது கண்ணீரும் நம்பிக்கையும்!1984ஆம் ஆண்டு டிசம்பர் 2-3. போபாலின் மக்கள் அதிகம் வாழும் பகுதியிலிருந்தது அந்தத் தொழிற்சாலை. யூனியன் கார்பைட் என்னும் அமெரிக்க நிறுவனத்தின் தொழிற்சாலை அது. திடீரென அதிலிருந்து 40டன் அளவிற்கு மித்தைல் ஐசோ சைனைட் என்னும் ஆபத்தான வாயு வெளியேறியது. இந்த விஷவாயுக் கசிவு 15134 பேரைக் கொன்றது. 5.75 லட்சம் பேர் அதனால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து இன்னும் அதே மண்ணில் வாழ்ந்தும் வருகின்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இப்போதும் அங்கே 400டன் அளவிலான கொடிய வேதிப்பொருட்கள் போபாலில் எஞ்சி இருக்கிறது. நிலத்தையும் நிலத்தடிநீரையும் கூட பாழாக்கி வருகின்றது. நம் செய்வதற்கொன்றுமில்லை. நல்ல வேளையாக எழுதிய நானும் படிக்கும் நீங்களும் அங்கே வாழவில்லை. ஆனால் அது மாதிரியான சூழலில் நீங்களும் நானும் வாழும் நாள் தூரத்தில் இல்லை.. சென்னைக்கு மிக அருகில்தான் இருக்கிறது.

உலகை உலுக்கிய போபால் விஷ வாயு சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஒரு வழியாக சிபிஐ கோர்ட்டு உள்ளிட்ட மயிறு மற்றும் மேலும் பல மாங்கொட்டைகளின் மூலமும், வாக்குறுதிகளின் அரசியல்வாதிகளினாலும் தமக்கு நீதி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்த பல லட்சம் இந்தியர்களின் முகத்தில் மீண்டும் ஒருமுறை கரிபூசியிருக்கிறது , காரி உமிழ்ந்திருக்கிறது இந்திய நீதித்துறை. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் ஏழு இந்திய அதிகாரிகளுக்கு (முன்னாள்) இரண்டு ஆண்டு ஜெயிலும் ஒரு லட்சரூபாய் தண்டனையும். அதுவும் உடனடியாக பெயிலும்.

கிழிந்து தொங்குகிறது இந்திய நீதித்துறையின் அவலட்சணமான முகம். இந்திய உயிரின் விலை மிகமிக மலிவானது என்பதை உலகிற்கே பறைசாற்றுகிறது நம் நீதிபதிகளின் தீர்ப்பு. முதலில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்க எதற்காக 25 ஆண்டுகள். இத்தனை ஆண்டுகளாக மயிரைப்புடுங்கி ஆறு பேர் குற்றவாளிகள் என்பதை கண்டறியவா? அவர்களுக்கு உடனடி பெயில் வழங்கவா? இப்படி ஒரு கொடூரமான மரணங்கள் நிகழக்காரணமாயிருந்த யுசிஐஎல் நிறுவனத்திற்கு ஐந்து லட்சம் அபாரதம் விதிக்கவா? கொடுக்கற நீதியும் காலம் கடந்து.. அதுவும் ஏனோதானோ என்றிருந்தால்.. என்னத்தைச் சொல்வது. எரிச்சல் மட்டுமே மிச்சமாயிருக்கிறது.

இத்தனை மரணங்களுக்கும் காரணமாயிருந்த நிறுவனத்தின் சிஇஓ வாரன் ஆண்டர்சன் என்னும் முக்கிய குற்றவாளி , அவன் மேல் இதுவரை ஒரு தூசோ துறும்போ படாமல் , 1984ல் ஒரே ஒருமுறை கைது செய்து அப்போது ரிலீஸாகி... பின் 1992ல் அவனுக்கு சிபிஏ பல சம்மன்கள் அனுப்ப அவனோ அதையெல்லாம் மறுத்து.. அவன் அமெரிக்காவுக்கு ராஜமரியாதையோடு தப்பியதாக செய்தி வந்து.. 2004ல் அமெரிக்காவிடம் ஆண்டர்சன் குற்றவாளி அவரை ஒப்படையுங்கள் எனக்கேட்டு , அவர்கள் இந்தியாவின் முகத்தில் காரித்துப்பி அதெல்லாம் முடியாது போங்கடா வெளக்கெண்ணைகளா என்று கூற.. இதோ கடைசிவரைக்கும் உல்லாசமாக இருக்கிறான் வாரன் ஆண்டர்சன். அவருக்கு இப்போது வயது 90.. இன்னும் சில ஆண்டுகளில் செத்துப்போய்விடுவார். அப்போதாவது அவருக்கு ஏதாவது மரணதண்டனையோ ஆயுள்தண்டனையோ சில ஆயிரம் டாலர்கள் விதிக்கட்டும் இந்திய நீதி.

நல்ல நீதி.. தனிநபரைத்தானே தப்பவிட்டது.. அந்த பன்னாட்டு நிறுவனத்தை பிடித்து உலுக்கி தேவையான நிவாரணத்தை பெற்றுத்தந்திருக்கலாமே? தந்திருக்கலாம்தான்.. இறந்து போனவன் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தானா? இறந்தவனெல்லாம் அன்னாடங்காச்சிகள். ஏழைகள். ஓட்டுமட்டுமே போடும் இந்திய குடிமகன்கள்.
1989ல் யூனியன் கார்பைடோடு இந்திய அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது அதாவது அந்த நிறுவனம் ஒரு தொகையை நிவாரணமாக கொடுத்துவிட்டால் எல்லா வழக்கும் வாபஸ்! அந்த நிறுவனம் கொடுத்த 43கோடி டாலர்களை வைத்து நிவாரணம் அளித்தால், இதில் இறந்து போனவர்களுக்கு ஆளு ஒரு லட்சம் கூட கொடுக்க முடியாது. ஆனாலும் நம்முடைய ஜனநாயக அரசு ஏற்றுக்கொண்டது. 1999ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டவ் கெமிக்கல்ஸ் வாங்கிக்கொண்டதோடு, இனி எங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று கைகழுவிக்கொண்டது. இப்போதும் அமெரிக்காவின் டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் இந்தியாவில் தன் கிளையைத் தொடங்க ஆயத்தமாகத்தான் இருக்கிறது. அதற்கு இந்திய அரசின் முழு உதவியும் இல்லாமலில்லை.

இதே குற்றத்தை அமெரிக்காவில் எவனாவது செய்துவிட்டு இப்படி சுதந்திரமாக நடமாட முடியுமா? எந்த நிறுவனமாக இயங்கிவிடத்தான் முடியுமா? செப்டம்பர் 11ல் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்காக போர் தொடுத்த நாடாச்சே! இப்படி ஒரு நீதி இந்தியாவில் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் எனக்குத்தெரிந்த பிரபல அரசியல் குற்றவாளிகள். இப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதெல்லாம் காலம் கடந்த நிவாரண உதவியல்ல..? அந்த தொகையை வாங்கி இனி அவர்களோ அவர்களுடைய குடும்பமோ மகிழ்ச்சியாக இருந்துவிடப்போவதுமில்லை. குற்றவாளிகளுக்க சரியான தண்டனை! நிச்சயம் அதை இந்திய நீதி கொடுக்கும் என்கிற நம்பிக்கை இன்னும்கூட அவர்களிடம் இருக்கிறது. இதோ உயர்நீதி மன்றத்திற்கு செல்கின்றனர் மீண்டும்!

நீதி புதைக்கப்பட்டது, நீதி மறுக்கப்பட்டது, நீதி தாமதமானது என்று இந்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி அறிக்கை விடுகிறார். சரிதான்! பச்சை வேட்டை என்ற பெயரில் பணக்கார நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அப்பாவி ஆதிவாசிகளை கொல்வதில் காட்டும் முனைப்பை , பன்னாட்டு நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை கைப்பற்றிக்கொடுப்பதில் காட்டும் முனைப்பை, பக்கத்து நாட்டில் நடக்கும் இன அழிப்புக்கு முதுகு சொரிந்துவிட்ட முனைப்பையும் காணும் போது நமக்கும் நீதியாவது தேசியமாவது மண்ணாங்கட்டியாவது என்று தோன்றுவதில் வியப்பில்லை..

இதோ தொடங்கிவிட்டது அறிக்கைப்போர். சிபிஐ மீது குற்றஞ்சாட்டுகிறது அரசு. அரசின் மீது அதே பழியைப்போடுகிறது சிபிஐ. வாயைப்பிழந்த படி நாமும் இதையெல்லாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டும். எப்படியோ மாறிமாறி குற்றஞ்சாட்டிக்கொண்டு அனைவருக்கும் அல்வா கொடுக்கும் வித்தையை உலகமே இந்தியாவிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்திய உயிருக்கே மரியாதை இல்லை.. இதில் ஈழ உயிருக்கு எங்கிருந்து மரியாதை வந்துவிடப்போகிறது. இதோ மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயரப்போகிறதாம்! நம்மை சிந்திக்கவிடாமல் பிரச்சனைகள் எப்போதும் போல தொடர்கின்றன..

08 June 2010

டிகிரி காப்பியுடன் ஒரு வாசிப்பனுபவம்!ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரிய சோம்பல்களைத் தவிர்த்து.. கடந்த ஞாயிறன்று இந்திரா பார்த்தசாரதி சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு சென்றுவிட்டு வந்தேன். ஒருவருக்கு ஒரு டிக்கட் என்னும் அடிப்படையில் தொகுப்பு மிகமிக மலிவு விலையில் (600ரூ புக் வெறும் 150 ) வழங்கப்பட்டது. நான் அங்கே செல்ல மிகமுக்கிய காரணமும் அதுதான். காலை 8.30க்கு விழா தொடங்கும் , டிபன் இலவசம் என்று கிழக்குப்பதிப்பகம் பத்ரி எழுதியிருந்தார். அதனால் அவசரமாக காலையில் பெய்த லேசான மழையையும் பொருட்படுத்தாமல் ஒரளவு வேகமாக காலையிலேயே புறப்பட்டுவிட்டேன்.

விழாவிற்காக மாமாக்களும் மாமிகளும் பெருமளவில் குவிந்திருந்தனர். மியூசிக் அகாடமியில் மார்கழி இசைவிழாவுக்குள் நுழைந்தது போன்றிருந்தது. அரக்க பரக்க உள்ளே சென்று தேடினேன். யாரும் நாதஸ்வரமோ தவிலோ தம்புராவோ வாசிக்கவில்லை. ஆனால் மேடையில் வரிசையாக பல சேர்கள் இருந்தது. கூட்டம் தொடங்கவில்லை. அரங்கத்தில் யாருமில்லை. மேடையிலிருந்த சேர்களை வைத்து 11 மணிவரைக்கும் பலரது ததரீனாக்களை அனுபவிக்க வேண்டும் என்பதுமட்டும் புரிந்தது. நகர்ந்தேன். நரைத்த தலை மாமா ஒருவர் சாப்பாடு மேலே என்றார்.

காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. எல்லாமே நான் வெறுக்கும் வெஜ் சமாச்சாரங்கள். ஒரே இட்லி பொங்கல் கேசரி டிகிரி காப்பி என! ஒவ்வாதவைகள் நிரம்பி இருந்தன. இருந்தாலும் ருசி அறியாத பசியால் கொஞ்சூண்டு தின்றேன். இபாவின் எழுத்துகளை இதற்கு முன் நான் படித்ததில்லை. வாய்ப்புக்கிடைக்கவில்லை. இது மாதிரி மலிவு விலையில் கிடைக்கிறதென்றால் விடமுடியுமா? மலிவு விலை குறித்து அறிந்த வெளியூர் நண்பர்கள் எனக்கொன்னு எனக்கொன்னு என முண்டியடித்துக்கொண்டு போனிலும் மின்னஞ்சலிலும் சாட்டிலும் என்னிடம் ரிசர்வ் செய்து வைத்திருந்தனர். அதனால் முன்னேற்பாடாக கொஞ்சம் பணம் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் ஒருவருக்கு ஒரு புத்தகம்தான் என்று கராராக சொல்லிவிட்டனர். எனக்கு மட்டும் ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சினிமா நடிகர் சிவக்குமார் வந்திருந்தார். அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச்சொல்லி மனைவி கொடுத்தனுப்பிய நோட்டை வீட்டிலேயே மறந்துவிட்டு வந்திருந்தேன். அதனால் சிவகுமாரைப் பார்க்கும் போதெல்லாம் மனைவியின் கோபமுகம் மனக்கண்ணில் வந்து வந்து போனது. இபாவின் கதையொன்றை சினிமாவாக மாற்றிய போது அதில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின் அவருடைய கம்பராமாயண பிரசங்கம் குறித்து சிலாகித்து அவரே பேசினார். நான் எதேச்சையாக கடந்த இரண்டு வாரங்களாக அண்ணாவின் கம்பரசம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இபா வின் சிறுகதைகள் சில மேடையில் மிக அருமையாக கூறப்பட்டது. சுஜாதா விஜயராகவன் என்பவர் நாயகன் என்னும் இபாவின் கதையை மிகமிக அருமையாக உரைத்தார். வீட்டிற்குப்போய் கதையை படித்தேன்.. படிப்பதைக்காட்டிலும் அவர் கூறிய விதம் இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. அதே போல திருப்பூர் கிருஷ்ணன் பசிபதிபாசம் என்னும் கதையை கூறினார். நல்ல வாய்ஸ் மாடுலேசன். மைலாப்பூரின் ஏதாவது ஒரு பிராமணாள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டது போல் இருந்தது. நல்ல குரல் , ஏற்ற இறக்கம். சிறந்த கதை சொல்லி. ஆடியோ புத்தகமாக பேச சிறந்த ஆள்!

அனைவரும் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு புத்தகத்தை வாங்கினர். பின் இபராவிடம் கையொப்பமும் சேர்த்து. எனக்கு ஒரு தொகுப்பும் இபாவிடம் கையொப்பமும் கிடைத்தது. இறுதியில் மீண்டும் பளபள டவராவில் சுடச்சுட காபி தரப்பட்டது. சர்க்கரை இல்லை. அல்லது கம்மி! வலைப்பதிவர்கள் சிலர் வந்திருந்தனர். இபாவின் சிறுகதைகளை மொத்தமாக படிக்க ஆர்வமாக இருந்தது. வீட்டிற்கு வந்து ஒரே மூச்சில் 20 சிறுகதைகளை படித்து முடித்தேன். அவருடைய சிறுகதைகள் மற்றும் இந்த தொகுப்பு குறித்த விமர்சனம் தனியாக.. கூட்டத்தின் முடிவில் சிலருக்கான இலக்கியத்தை பிரத்யேகமாக படைக்கவும் சிலர் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இபா மிகச்சிறந்த எழுத்தாளராக இருந்தால் ஏன் அவருடைய புத்தகத்தை மலிவுவிலையில் வாங்கவேண்டும்..? சிறந்த எழுத்தாளனாக மதிக்கும் ஒருவருடைய புத்தகத்தைக்கூட மலிவு விலையில்தான் வாங்க வேண்டுமா? ஏழைகள் மலிவுவிலையில் வாங்கிப்படிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலும் காரிலேயே வந்திருந்தனர்.

என் வலைப்பதிவையும் மதித்து படிக்கும் ஒரு சிலரை அந்தக் கூட்டத்திலும் சந்திக்க முடிந்தது.ஏதோ மனவருத்ததுடன் நீங்கதான் அதிஷாவா என்றனர் என்ன பிரச்சனையோ!

05 June 2010

வெள்ளிங்கிரி - 2


காந்திபுரம் பஸ் ஸ்டான்டிலிருந்து பூண்டிக்கு பேருந்து. அங்கேயிருந்து மட்டும்தான் பஸ். அல்லது பேரூரிலிருந்தும்.. ஆனால் பஸ் காந்திரபுரத்திலிருந்துதான் கிளம்பி வரும். கூட்டம் நிரம்பி வழியும்.

கோடை விடுமுறைக்காலங்களில் தொடர்ச்சியாக சிறப்பு பேருந்துகள் இயங்கும். பஸ்ஸில் வெள்ளிங்கிரி என்று எழுதப்பட்டிருக்காது. பூண்டி திருவிழா சிறப்புப் பேருந்து என்றே எழுதப்பட்டிருக்கும். இரவுகளில் பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் மலையேறி மாவீரர்கள் கையில் கம்போடு முதுகில் ஸ்டைலான பேக்பேக் போட்டுக்கொண்டு இடித்துக்கொண்டும் உரசிக்கொண்டும் நிற்பார்கள். எரிச்சலூட்டும். கம்பு இடிக்கும். ஷு போட்டவர்களாக இருந்தால் , செறுப்பில்லாத எங்கள் கால்கள் பஞ்சர்தான். பகலில் செல்வது உடலுக்கு நல்லது. அதிக கூட்டமிருக்காது, இருந்தாலும் பெண்கள்தான்!. இருப்பதிலேயே டப்பாவான வண்டிகளைத்தான் போக்குவரத்துக்கழகங்கள் வெள்ளிங்கிரிக்கு அனுமதிப்பார்கள் போல.. லொடபொட லொடபொட என்று பொறுமையாகத்தான் வண்டிகள் நகரும்.

ஒருமுறை பூண்டிக்கு மிகமிக அருகில் பஸ் தடாலடியாக நின்றுபோனது. இளவட்டங்கள் ஆய்ஊய் என சத்தமிட என்னடா பிரச்சனை என்று ஜன்னல் வழியாக தலைநீட்டினேன். ஒரு பெரிய யானை ஒரு சின்ன யானை மீடியம் யானை என நாலைந்து யானைகள் சாலையை கடந்து காட்டுக்குள் செல்கிறது. எல்லாரும் சத்தம் போடாதீங்க என்று சத்தமாக கத்தினார் கடைசி சேரில் அமர்ந்திருந்த கண்டக்டர் என்கிற நடத்துனர். ஆனாலும் ஒரு யானை மட்டும் வரிசையிலிருந்து பிரிந்து எங்கள் பஸ்ஸை பார்த்து முறைத்தது. உடனே சிலர் விசிலடித்து ஓய் ஏய் என்று சவுண்டுவிட எங்களுக்கு உடலெல்லாம் நடுக்கம். பஸ்ஸே நடுங்கியது. கவிழ்த்துப்போட்டுவிடுமோ என்கிற அச்சம். இறங்கி ஓடவும் முடியாது , நடுவில் நங்கென்று கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டிருந்தேன். யானைக்கு அன்று பஸ்ஸை கவிழ்க்கும் மூடில்லை போல திரும்பி தன் க்யூவில் ஒட்டிக்கொண்டது. அப்போதெல்லாம் செல்போன்களோ கேமராவோ கிடையாது , அதை வீடியோவாக எடுத்திருந்தால் டிஸ்கவரிக்கோ நேஷனல் ஜியாகரபிக்கோ விற்று நல்ல ரேட்டுக்கு விற்றிருக்கலாம். அப்போதெல்லாம் எங்கள் ஊரில் ரேடியாதான்.

எத்தனை பேருந்துகள் போனாலும் நாங்கள் சைக்கிளில்தான் செல்வோம். பஸ்ஸுக்கு காசிருக்காது. போகவர கைசெலவுக்கே அவனவன் மூஞ்சியை முகத்தையும் காட்டுவனுங்க! 50 காசிருந்தால் காற்றடித்துக்கொண்டு அப்பா அண்ணன் மாமா மச்சான் சைக்கிள்களை ஒரு நாள் லவட்டிக்கொண்டு கிளம்புவோம். இரட்டையாக செல்ல முடியாது. அதனால் ஆளுக்கொரு சைக்கிள். மூச்சு வாங்கும் போதெல்லாம் பேரூரிலும் போகும் வழியில் எங்காவது பெட்டிக்கடைகளை கண்டால் நிறுத்தி புகைப்போம். கட் ஆஃப்! நான்கு பேருக்கு ஒரு சிகரட். புகைப்பிடித்தால் சைக்கிள் ஓட்ட முடியாது, ஓடமுடியாது மூச்சிறைக்கும் என்று சொல்லுவார்கள் , அப்போது அப்படி எதுவும் இறைக்கவில்லை. இப்போதெல்லாம் பைக் ஓட்டினாலே மூச்சிறைக்கிறது. (மக்கள் நலனுக்காக – புகைபிடிப்பது உடல்நலனுக்கு கேடு)

சிறுவாணி ரோட்டில் சைக்கிள் ஓட்டுவதே அலாதியானது. இரண்டு பக்கமும் வயல்கள் , தூரத்தில் நம்மோடு பின்சீட்டிலும் முன்னாலும் பயணிக்கும் பெரிய மலைகள் , மலைகளுக்கு மேல் நகரும் மேகம்.. அதை மிஸ்ட் என்று கோவைக்காரர்கள் சொல்வதுண்டு. மிஸ்ட் எங்களுக்கெல்லாம் பெரிய மிஸ்டிரிதான். மிஸ்ட் குறித்து நிறைய கதைகள் சொல்வதுண்டு. வெள்ளிங்கிரியின் ஏழாவது மலை மேல் தங்கும் போது பாறைகளுக்கு நடுவில் இருப்பதுதான் பாதுகாப்பாம். பாறைகளின் மேல் சுற்றினால் பரலோகம்தான். மிஸ்ட் என்னும் மேக கூட்டம் அப்படியே நகர்ந்து வரும்போது நடுவில் நாமிருந்தால் விரைத்து செத்துவிடுவோமாம். அதுபோல ஏழாவது மலையேறி காலையில் சூரிய உதயம் பார்க்க காத்திருந்து , மிஸ்ட் அடித்து மரணித்தவர்கள் நிறையபேராம்.. கோவையில் யாரைக்கேட்டாலும் இந்த மிஸ்ட்(ரி) கதைகள் சொல்வதுண்டு. எங்களுக்கு அதில் நம்பிக்கை இருந்ததில்லை. நம்பவும் பிடிக்கவில்லை எங்களுக்கு அந்த மிஸ்டை பார்க்கும் ஆர்வமும் குறையிவில்லை. தூரத்தில் மலைமேல் தெரியும் மிஸ்டை பார்த்தபடியே சைக்கிளை மிதிப்போம்!

02 June 2010

இசைராஜாவிற்கு பிறந்தநாள்இரவு பதினோறு மணிக்கு மேல் , சில்லுனு காத்து வீச , தன்னந்தனியாக பைக்கில் விபத்து நேர்ந்துவிடாத வேகத்தில் வண்டி ஓட்டியபடி , காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு ‘செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே!’ , அதைத்தொடர்ந்து ‘இதழில் கதை எழுதும் நேரமிது.. இன்பங்கள் அழைக்குது’ , அதைத்தொடர்ந்து ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் கண்ணோ.. ராஜ சுகம் தேடிவர தூதுவிடும்..’ , பொசுக்கென வீடு வந்துவிடும். வேலை முடிந்து அவ்வளவு தாமதமாக வீட்டிற்குச் சென்றாலும் , ஏன்டா இவ்ளோ சீக்கிரம் வீடு வந்துச்சு , ச்சே இன்னும் மூணு பாட்டு கேட்ருக்கலாமோ என்று பலநாள் என்னை ஏங்கவைத்தவர் இளையராஜா.

எனக்கு சில வருடங்கள் முன்புவரை இளையராஜாவை வெறும் மொக்கை இசைமையப்பளராகவும் , வெறும் டப்பாங்குத்து , கிராமத்துப்பாட்டுக்காரன் என்கிற அளவில்தான் பரிச்சயம். என் இசை அறிவு சூன்யம். ஏ.ஆர்.ரஹ்மானே என்னுடைய ஆதர்சனம். எப்போதும் பூங்காற்றிலே உன் சுவாசத்தில், மூழ்கி கிடப்பேன். ரஹ்மானின் துள்ளலில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்று தலைசுழல ஆடிக்கொண்டிருப்பேன். இளையராஜா ரசிகர்களிடமும் சண்டையிட்டிருக்கிறேன். என்னையா பெரிய புடலங்கா இளையராஜா அவரால ரஹ்மான் மாதிரி பாலிவுட்டுல கலக்க முடிஞ்சுதா? உலக இசைனா தெரியுமா.. எப்ப பார்த்தாலும் டன்டனக்க டனக்குனக்கா தானே! என்று ஏளனம் பேசியிருக்கிறேன். உண்மையில் இளையராஜா விவாதப்பொருளல்ல உணர்வு என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதை உணர இயலாத வயதும் காரணமாய் இருந்திருக்கலாம்.

உணர்வுகள் கோர்க்கும் அவருடைய இசையை உணரும் தருணம் , என் காதலியிடமிருந்தே தொடங்கியது. என் காதலியுடனான ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவரிடம் ஒரு இசை இருந்தது. அவருடைய இசையில் என் காதலுக்கான தருணங்கள் நிரம்பிக்கிடந்தன. என்ன சத்தம் இந்த நேரம்.. எந்த நேரத்திலும் மனதோடு அப்பிக்கொண்ட இசை அது. இப்போதும் மௌனராகத்தின் பீஜிஎம் என்னுள் கலந்து விட்டிருக்கிறது. துள்ளல் இசைக்கும் அந்த படத்திலேயே இன்னொரு பீஜிஎம் வைத்திருப்பார். அவள் கோபப்பட்டு கன்னம் சிவந்த போது உண்டாகும் அழகை இளையராஜாவின் பாடல்களில் மீட்டெடுத்தேன். அவளுடைய செல்ல சீண்டல்களும் , முத்தகங்களும் எல்லாமே புதைந்திருந்தது அந்த இசையில். உதாரணம் அழகிய கண்ணே உறவுகள் நீயே!

இதோ திருமணமாகிவிட்டது.. இப்போதும் மெட்டிஒலி காற்றோடு என்னை நெஞ்சை தாலாட்டுகிறது!. மண்ணோடு கலந்த என் இசையாக ராஜாவின் இசையை பார்க்கிறேன். இன்றும் என்னுள் இறங்கி ஏதேதோ செய்து கொண்டிருக்கும் அந்த இசை எப்படி என்னை ஆக்கிரமித்த்தென்று என்னால் சொல்லிவிட முடியாது! அது எங்கு தொடங்கியதாக இருந்தாலும்.. ஆக்கிரமிப்பு முழுமையானது.

இளையராஜாவை விமர்சிப்பவர்கள் என்ன காரணங்களைச் சொன்னாலும் அவருடைய இசையையோ அவருடைய திறமையையோ யாராலும் விமர்சிக்க முடியாது! எத்தனை ஆயிரம் பாடல்கள்.. எத்தனை மெட்டுக்கள்.. ராஜாவைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டேன் போதும்.

ரஹ்மானிடமிருந்து என்னை பிரித்த நாட்களில் ஓவர்நைட்டில் இளையராஜா என்னை ஆக்கிரமித்துவிடவில்லை. கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோ பாய்சனைப்போல என் உடலெங்கும் பரவி இதோ இப்போது என் முழுக்க ராஜாவின் இசை எப்போதும் , அழும் போதும் சிரிக்கும் போதும்..

இன்று இசைராஜாவிற்கு எத்தனை வயதென்று தெரியவில்லை. இன்று பிறந்தநாளாம்! வணங்குகிறேன்.

நிறைய பாடல்கள் பிடித்தாலும், எனக்கு நிறைய பிடித்த அவருடைய ஒரு  இசைமாதிரி ஒன்று!