Pages

31 May 2013

சாத்தானே அப்பாலே போ!






தூங்கிக்கொண்டிருக்கிற குழந்தைகள் எந்த சப்தமும் இல்லாமல் அப்படியே செத்துப்போகின்றன. இறந்த குழந்தைகளை பரிசோதித்துப்பார்த்த போது அவை இறந்ததற்கான காரணத்தை யாராலுமே கண்டறிய முடியவில்லை. அக்குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாகவே இருந்தன.

2006 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ கழகம் ஒரு ஆய்வறிக்கையை இதுகுறித்து வெளியிட்டது.

இப்படிப்பட்ட திடீர் மரணங்களை SIDS என்று அந்த அறிக்கை அறிவித்தது. அதாவது SUDDEN INFANT DEATH SYNDROME. இந்த சிட்ஸால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்துபோகிறார்கள்.

இன்றுவரை இதற்கான காரணியை தேடி பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. இப்போது இதற்கான முதல்காரணமாக மருத்துவர்கள் கருதுவது என்ன தெரியுமா? நம்முடைய புகைப்பிடிக்கும் பழக்கம்! PASSIVE SMOKING ன் பின்விளைவுகளில் ஒன்றுதான் இந்த சிட்ஸ்! அதற்காகவே நாம் நம்முடைய குழந்தைகளை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இதுமட்டுமல்ல நாம் புகைபிடிப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு இன்னும்கூட நிறைய பிரச்சனைகள் வருகின்றன. அதில் மிகமுக்கியமானது ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான சுவாசக்கோளாறுகள். நுரையீரலில் தொற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் யாரோ புகைபிடிப்பதால் சுவாசக்கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர். தங்களுடைய வாழ்நாள் முழுக்க நிம்மதியாக மூச்சுகூட விடமுடியாமல் தவிக்கின்றனர்.

இவை தவிர ஒவ்வாமை நோயாலும், மூளைவளர்ச்சியின்மை, கற்றல் குறைபாடு, கேட்கும்திறனில் குறைபாடு என இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

அதெல்லாம் ரொம்ப அபூர்வமாதாங்க நடக்கும்? உங்க கிட்ட ஆதாரம் இருக்கா? நான் ஒருத்தன் புகைபிடிக்கறதால இப்படிலாம் நடந்துடுமா? இல்ல நான் ஒருத்தன் புகைபிடிக்கறl விட்டுட்டா எல்லாமே மாறிடுமா? என்கிற கேள்விகள் புகைபிடிக்கிற அப்பழக்கத்திற்கு அடிமையான எல்லாருக்குமே எழலாம்! (இதுவும் கூட நாம் கேட்கிற நம்முடைய மூளை உருவாக்கும் கேள்வி கிடையாது.. நம்முடைய ADDICTION கேட்கிற கேள்வி என்கிறார்கள் விஞ்ஞானிகள்!)

எந்த ஒரு மாற்றமும் தனிமனிதனிடமிருந்தே துவங்க வேண்டும். லட்சம் பேர் புகைபிடிப்பதால் ஒரே ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் ஒரே ஒரு குழந்தைக்கு நுரையீரல் பழுதடைந்தாலும் கூட பாதிப்புதானே! அந்தக்குழந்தை நம்வீட்டு குழந்தையாகவும் இருக்கலாம். அது சிட்ஸ் பாதிப்பினால் துர்மரணம் அடைய நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு?

கர்ப்பிணி பெண்கள் இந்த PASSIVE SMOKING ஆல் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா? கருவில் இருக்கிற குழந்தை எடை குறைவான , உடல்குறைபாடோடு , சுவாசக்கோளாறுகளோடு பிறக்க நேரிடும் என்கிற சமீபத்திய ஆய்வு. பிறக்காத குழந்தையின் உடலிலும் நஞ்சை கலக்கவல்லது இந்த புகைப்பழக்கம்.

நர்சரி பள்ளிகளுக்கு அருகேயும் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும் குழந்தைகளை வைத்துக்கொண்டு புகைபிடிப்பவரையும் கண்டால் தயவுசெய்து இதுகுறித்து சொல்லுங்கள்.

நீங்க புகைபிடிப்பவராக இருந்தால் மாற்றம் உங்களிடமிருந்து தொடங்கட்டும். உங்களுடைய உடல்நிலையை பற்றி உங்களுக்கே கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் நம் குழந்தைகளைப்பற்றி நாம் கவலைப்பட்டேயாகவேண்டும். அடுத்த முறை புகைக்கும்போது உங்கள் குழந்தைகளை ஒருமுறை நினைவில் கொள்ளுங்கள். அதுபோதும்.

30 May 2013

பாபநாசத்தில் மூன்றுநாட்கள் - ஒரு டைரிகுறிப்பு





நீண்டவரிசை. எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் பத்திருபது ஆட்கள், எல்லோரும் சீராக வரிசையில் செல்கின்றனர். வனப்பகுதிகளுக்கு நடுவில் இருக்கிற யாரோ பண்ணையாரின் மாந்தோப்பினை கடந்து ட்ரெக்கிங் சென்றுகொண்டிருந்தோம். மாமரங்களில் மாங்காய்கள் காய்த்து தொங்கினாலும் யாருக்கும் பறிக்கும் எண்ணமில்லை. எனக்கு ஒவ்வொரு மாங்காய்களை கடக்கும்போதும் ஒரு யுகத்தையே கடப்பதாக எதையோ விட்டுச்செல்வதாக ஒரு உணர்வு.

ஓடிப்போய் ஒரு மாங்காயை ஆர்வமாக பறிக்கிறேன். பறித்ததும் கடித்து ருசிக்கவும் தொடங்கிவிடுகிறேன். ப்ப்ப்ப்பா என்னா ஒரு சுவை. புளிப்பும் இனிப்புமாக இப்படி ஒருமாங்காயை இதற்குமுன்பு ருசித்ததேயில்லை. மாங்காயை பற்றி வரிசையில் எனக்கு முன்னால் செல்கிற கவின்மலரிடம் கூறுகிறேன். அவரும் அப்படியா அதிஷா.. எங்கே குடுங்க.. ஆர்வமாக என்னிடமிருந்து வாங்கி கடித்துப்பார்க்கிறார்.. அட ஆமாம்ப்பா செம டேஸ்ட்டு! கவின்மலரிடமிருந்து மாங்காய் சத்யாவுக்கு கை மாறுகிறது.. சத்யாவிடமிருந்து லாவ்ஸிடம் செல்கிறது.. லவ்ஸிடமிருந்து.. இன்னும் இன்னும் பலரிடம் மாறி மாறி அந்த மாங்காய் பயணிக்கிறது. யாருக்குமே அது எச்சில் மாங்காய் என்கிற தயக்கமோ அது திருடப்பட்ட மாங்காய் என்கிற பயமோயில்லை.

பால்யத்தில் நாம் எல்லோருமே செய்ததுதான் ஆனால் இப்போதெல்லாம் அப்படிச்செய்ய ஏதோ தடுத்துவிடுகிறது. ஆனால் பாபநாசத்திற்கு அருகேயிருக்கிற கரையார் வனப்பகுதியில் நடைபோட்ட எங்களுக்கு அந்த தயக்கமே இருக்கவில்லை. ஒவ்வொரு நொடியிலும் பால்யத்தை மீட்டெடுக்கவும் நண்பர்களோடு பாலினபேதமின்றி குதூகலிக்கவும் முடிந்தது.

அழுக்கு சட்டையுடன் திரிந்து, ஆற்றங்கரையிலும் அருவியிலும் விளையாடி, இயற்கையான உணவுகளை உண்டு, அறிமுகமில்லாத புதிய நண்பர்களோடு புத்தம் புதிதாக நட்பு பாராட்டி.. பாபநாசத்தில் முப்பதுபேர் மூன்றுநாட்களில் நிச்சயமாக குட்டி குழந்தைகளாகத்தான் திரிந்தோம்.

பாபநாசத்திலிருந்து திரும்பி வந்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. வெறும் முன்றுநாட்கள்தான் அங்கே தங்கியிருந்தோம். ஆனால் அது முன்னூறு ஆண்டுகளானாலும் மறக்க முடியாத தருணங்களையும் நினைவுகளையும் கொடுத்திருக்கிறது. புத்தம்புதிதான உறவுகளையும் நண்பர்களையும் பரிசளித்திருக்கிறது. முதலில் இப்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பூவுலகின் நண்பர்களுக்கு நன்றி!

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் பாபநாசத்தில் ஒரு பயிற்சிபட்டறைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுசூழல் இதழியல் தொடர்பான பயிற்சி பட்டறை அது. இதில் சுற்றுசூழல் குறித்த விஷயங்களை எப்படி எழுதவேண்டும் என்பதில் தொடங்கி சூழலியல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் பல அறிஞர்களும் சான்றோர்களும் ஆன்றோர்களும் விரிவாக பேசினர். ஆனால் அது ‘’ஒரு மாதிரி பள்ளிவகுப்புகளை’’ நினைவூட்டியது என்பதால் பெரும்பாலான வகுப்புகளில் நன்றாக உறங்கினேன் என்பதே உண்மை. நமக்கும் க்ளாஸ் ரூமுக்கும் அவ்ளோ பொருத்தம்!

மூன்று நாட்களும் நல்ல ஆர்கானிக் பொருட்களால் செய்யப்பட்ட இயற்கை உணவுகள் பறிமாறப்பட்டன. இயற்கை உணவுகளுக்காகத்தான் நான் இதில் கலந்துகொண்டதே! வரகரிசி பொங்கல் தொடங்கி தூயமல்லி சோறு, வெள்ளை குழம்பு,பதநீர், கருப்பட்டி காபி, குதிரைவாலி பிஸ்கட், சிறுதானிய நூடுல்ஸ், சோளதோசை, தினைமாவு கொழுக்கட்டை, உளுந்தஞ்சோறு, நாட்டுக்கோழி கழி குழம்பு, மாட்டுக்கறி வறுவல்.. இன்னும் இன்னும்... உணவுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் மைக்கேலுக்கு நன்றி. (ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் மூன்றுநாட்கள் இவ்வளவு சிறப்பான உணவு எப்படிதான் அமைப்பாளர்களுக்கு கட்டுபடியானதோ அந்த பாபநாசம் சிவனுக்கே வெளிச்சம்!) மூன்றுநாட்களும் வயிறு ஒருபக்கம் இப்படி நிறைய இன்னொரு பக்கம் இயற்கை எழிலான பொதிகைமலை சூழல் மனசை நிரப்பியது.

அகஸ்தியர் மலை அருவியில் ஆட்டம், காடுகளுக்குள் ட்ரெக்கிங், மூலிகைப்பண்ணை விசிட், தாமிரபரணி ஆற்றில் குளியல், காணிப்பழங்குடியினரோடு ஓர் இரவு தங்கியிருந்தது என எல்லாமே அற்புதம்தான். இரவு 12மணிக்கு எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்,கவின்மலர்,வழக்கறிஞர் சுந்தர்ராஜன்,சுகிதா,வெற்றிசெல்வன், ராஜாராமன் என ஒரு குழுவாக தாமிரபரணி ஆற்றில் குளித்தது த்ரில் அனுபவம். காணிப்பழங்குடியினரின் கொக்கரா இசை நிகழ்ச்சியும் அந்தமக்களோடு பேசியவையும் மறக்க முடியாதது.

காணிப்பழங்குடியினரை பற்றியும் அவர்களுடைய வாழ்க்கை முறையை பற்றியும் நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. அதைப்பற்றி இன்னும்கூட நிறைய ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகமே எழுதலாம். ஆச்சர்யமனிதர்கள். தேன் எடுப்பதுதான் இவர்களுக்கு தொழில். அதுகுறித்து பேசும்போது.. தேன்கூட்டை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்று ஒருவர் விளக்கினார். தேனீ ஒரு பூவில் அமர்ந்தால் அது அடுத்து இன்னொரு பூவுக்குத்தான் செல்லுமாம். ஆனால் அதே தேனீ நீரில் அமர்ந்தால் நேராக தன் கூட்டுக்குத்தான் செல்லுமாம்.. நீரில் அமரும் தேனீயை பின்தொடர்ந்தால் அந்த கூட்டை எளிதாக கண்டுபிடித்துவிடமுடியுமாம்! இங்கே எடுக்கப்படுகிற தேன் ஒருலிட்டர் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்!

மூன்றுநாட்கள் அசௌகரியமாக அசுத்தமாக மொட்டைமாடியில் உறங்கி அழுக்காக கால்வலியோடு காடுகளுக்குள் திரிந்து மண்ணில் உறங்கி,
அருவியில் குளித்து, நம்முடைய சுற்றுசூழலை காக்கிற உண்மையான பழங்குடி மனிதர்களை சந்தித்து அளவளாவி... சூழலியலை புரிந்துகொள்ள அதைபற்றி எழுத முதலில் செய்ய வேண்டியது இதுதான், இயற்கையின் சுவையை உணர்தல். மூன்றுநாட்களும் பட்டறைக்கு வந்திருந்த அனைவருமே அதை உணர்ந்திருப்பார்கள் என்பது உறுதி.

மூன்று நாட்கள் எல்லாம் முடிந்து மீண்டும் கான்கிரீட் காடுகளுக்கு கிளம்ப ஆயத்தமான எல்லோரிடமும் இருந்த ஒரே கேள்வி.. அடுத்து எப்பசார் இதுமாதிரி மீட்டிங் வைப்பீங்க என்பதுதான்!


(படம் - நண்பர் ஆறுமுகவேல்)

29 May 2013

மடிசார்மாமிக்கு வந்த சோதனை!





மீண்டும் கருத்து சுதந்திரத்தின் சிறிய கழுத்து மிகக்கொடூரமான வகையில் சட்டத்தின் இரும்புக்கைகளால் நெறிக்கப்பட்டிருக்கிறது. குரல்வளையை கடித்து துப்பியிருக்கிறது. நீதியின் பெயரால் ஒரு அக்கிரமம் அரங்கேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உலக நாயகனுக்கு நிகழ்ந்தது இப்போது இன்னொரு உள்ளூர் நாயகனுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆமாம் விஸ்வரூபம் படத்தைப்போலவே இன்னொரு திரைப்படத்துக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக நாயகனுக்கு குரல்கொடுத்த யாருமே இந்த உள்ளூர் நாயகனுக்காக குரல் கொடுக்கவில்லை. ஏன் ஏன் ஏன்? ஏனென்றால் இது பிட்டுப்படம்! பிட்டுப்படம் என்றாலே நம் சமூகத்தினருக்கு மிகப்பெரிய இளக்காரமாகிவிடுகிறது.ச்சே என்னமாதிரியான தமிழ்சமூகத்தில் நாம் வாழ்கிறோம்.

மதனமாமா மடிசார்மாமி என்கிற கஜகஜா படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளிவந்தது. அப்போதே, வெறும் படத்தின் பெயரை பார்த்தே அடியேனைப்போலவே சகல பிட்டுபட ரசிகர்களும் உணர்வெழுச்சியை பெற்றனர். படத்தில் பிட்டுகள் குறைவுதான் என்பதை படத்தின் ஸ்டில்களே பறைசாற்றினாலும் படத்தின் தலைப்பே துள்ளலாக அமைந்திருந்தது.

யார் கண்பட்டதோ மதனமாமாவை சென்சார் போர்டினர் ரசிக்கவில்லை. போர்டில் ஆண்களாக இருந்திருப்பார்கள் போல அதனால் மடிசார்மாமியை மட்டும்.. அதாவது மதனமாமாவை நீக்கிவிட்டு மடிசார்மாமியை மட்டும் போட்டுக்கொள்ள வற்புறுத்தினர். மதனமாமா இல்லாமல் மடிசார்மாமி என்னசெய்ய முடியும்! இருந்தாலும் படத்தின் இயக்குனர் பொறுத்துக்கொண்டு படத்தின் தலைப்பை மடிசார் மாமியாக மாற்றியமைத்தார்!

மதனமாமா இல்லாவிட்டால் மடிசார்மாமிக்குதானே பிரச்சனை.. நமக்கென்ன பிரச்சனை. அதனால் மடிசார்மாமியே கூட போதும் என்று நினைத்து படத்தின் ரிலீஸூக்காக கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் பாருங்கள் யாரோ பிராமணர் சங்கமாம்.. மடிசார் மாமி என்கிற பெயர் அவர்களுடைய ‘சோகால்டு’ சாதியை இழிவுபடுத்திவிட்டதாக கூறி படத்துக்கு தடைவிதிக்க கோரியது.

ஏனய்யா மடிசார் மாமி என்கிற தலைப்பு எந்த விதத்தில் பிரமாணர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது...? அட்லீஸ்ட் ஒரு மைலாப்பூர் மாமி என்றோ மதகஜமாமி என்றோ மல்கோவா மாமி அல்லது மாம்பலம் மாமி என்றுகூட தலைப்பு வைத்திருந்தாலும் கூட ஏதோ கில்மா கதை தலைப்பு போல இருக்கிறது. அந்த தலைப்புகளில் நிறைய மேட்டர்கதைகள் வந்திருக்கிறது. ஆனால் மடிசார் மாமி என்கிற பெயர் மங்களகரமாகத்தானே இருக்கிறது. அந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு சீரியல்கூட வந்ததாக நினைக்கிறேன். அதுவுமில்லாமல் உலகம் முழுக்க மாமிகள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மடிசாரும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இல்லையென்று மறுக்கமுடியுமா? சொல்லப்போனால் உலகிலேயே மிகவும் மரியாதையான உடையென்றால் அது மடிசார்தான். பாருங்கள் பெயரிலேயே சார் இருக்கிறது. இதுபோல வேறு எந்த உடைக்காவது இருந்ததுண்டா!

அப்படியிருக்க இப்போது நீதிமன்றமோ இந்த தலைப்பை மாற்றிவிட்டுதான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்வது அராஜகமில்லையா? இது ஜனநாயக நாடுதானா என்கிற கேள்விகளை எழுப்பவில்லையா?

இதுபோதாதென்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அந்தக்காலத்தில் வெளியான தாய்சொல்லைதட்டாதே மணாளனே மங்கையின் பாக்கியம் கப்பலோட்டிய தமிழன் மாதிரியான நல்ல கருத்துள்ள படங்கள் இப்போதெல்லாம் வருவதில்லை என்று குறைபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஷகிலா கடைசியாக நடித்த மஞ்சுவயசுபதினாறு படத்தை பார்க்கவில்லை போல.. கடைசி காட்சியில் காமுகர்களை தன் கையாலேயே கத்தியால் குத்தி கொன்று சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருப்பார் ஷகிலா! ம்ம் நம்முடைய நீதிபதிகள் முன்னபின்ன பிட்டுப்படங்கள் பார்த்திருந்தால்தானே இதைப்பற்றிய நாலேட்ஜ் இருக்கும். போகட்டும்.

மடிசார் மாமி என்கிற தலைப்பு இப்போது மாற்றப்படுமா படம் வெளியாகுமா என்று தெரியவில்லை. படத்தின் தயாரிப்பாளரின் நிலையை நினைத்து வருந்துகிறேன். அவர்கூட படத்தை வெளியிட முடியாமல் போனால் அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ அமிஞ்சிகரைக்கோ போய்விடலாம். தன் வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வரலாம். இப்படியே போனால் பிட்டுப்படமெடுக்கிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் அழிந்துவரும் விலங்கினங்களின் பட்டியலில் இடம்பிடிக்க நேரிடும்.

மிகுந்த மனவேதனையாக இருந்தாலும்.. மாற்றுதலைப்பாக மன்மதமாமி, மாம்பலம் மாமி, மட்டன்மாமி, கசமுசா மாமி முதலான பெயர்களை படத்தின் இயக்குனர் பரிசீலிக்க வேண்டும். நல்ல பெயராக தேர்ந்தெடுத்து சீக்கிரமே படத்தை வெளியிட வேண்டும். அதுதான் பிட்டுப்பட ரசிகர்களின் ஒருமித்த கருத்து என்று சொன்னால் அது மிகையாகாது!

16 May 2013

சமரசம் உலாவும் இடமே...!




கடைசி பரீட்சையின் கடைசி கேள்வி... பாதி விடையை எழுதும்போதே மனசுக்குள் பந்துகள் குதிக்கத் தொடங்கிவிடும். பரீட்சை முடிந்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு போகமால் நேராக மைதானத்துக்கு போய் நாலு சிக்ஸர் விளாசினால்தான் மனசு அடங்கும்.
கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளத்தில் பேட்டும் பந்துமாகத்தான் நம்வீட்டு சிண்டு குண்டுகளை பார்க்க முடிகிறது. விடுமறை வந்துவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் போல பிஞ்சுபிளுவான்களுக்கு கைகளில் பேட்டும் பந்தும், மனசு நிறைய கிரிக்கெட்டும் அப்படியே பச்சக் என ஒட்டிக்கொண்டுவிடுகிறது.

நூறு டிகிரி உச்சி வெயிலோ பசியோ தாகமோ எதுவுமே இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. போடுகிற பந்துகளிலெல்லாம் விக்கெட் விழ வேண்டும். அடிக்கிற பந்தெல்லாம் சிக்ஸராக மாறவேண்டும்! ஏப்ரல் தொடங்கி மே கடைசிவரை அதுதான் கனவு... அதுமட்டும்தான்.

தமிழ்நாட்டில் வேறெந்த விளையாட்டும் இத்தனை பேரால் இவ்வளவு சிரத்தையாக விளையாடப்படுமா என்பது ஆராய்ச்சி செய்யப்படவேண்டியது. விடுமுறை என்றாலே பையன்களுக்கு கிரிக்கெட் மட்டும்தான். இப்போதெல்லாம் பெண் குழந்தைகளும் சாலைகளில் அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் கிரிக்கெட் ஆடத்தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் மைதானங்களில் ‘பிட்ச்’ பிடிக்க சின்ன பாப்பாக்களும் போட்டி போடலாம்! பெண்பிள்ளைகள் கேட்டால் பையன்கள் மகிழ்ச்சியாக விட்டுக்கொடுப்பார்கள் என்பது வேறு கதை.. வேறு சப்ஜெக்ட்!

‘கல்லி கிரிக்கெட்’ அல்லது ‘ஸ்ட்ரீட் கிரிக்கெட்’! கிரிக்கெட்டுக்கேயுரிய சகல விதிகளையும் உடைத்தெறிந்து ‘’விளையாடுகிற இடத்துக்கும்,ஆடுகிற வீரர்கள் எண்ணிக்கைக்கும் பண வசதிக்கேற்ற உபகரணங்களுக்கும்’’ ஏற்ப விதிமுறைகளை தங்கள் இஷ்டப்படி வகுத்துக்கொண்டு ஆடுகிற இந்த கல்லிகிரிக்கெட்தான் இன்று நம்பையன்களுக்கு இருக்கிற ஒரே வெளிப்புற விளையாட்டு வாய்ப்பு!
நம் இஷ்டப்படி ரூல்ஸை மாற்றிக்கொள்ள முடியும் என்கிற சுதந்திரம்தான் இத்தனை பேர் இன்று எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் ஆட காரணமோ என்னவோ?

இதில் ஆடுகிற அத்தனை பேரும் ஆல்ரவுண்டர்கள்தான். ஸ்பெஷலிஸ்ட்பேட்ஸ்மேன்,ஸ்பின்னர்,வேகப்பந்துவீச்சாளர்,மிடில்ஆர்டர் பேட்ஸ்மேன் என எந்த பாகுபாடும் கிடையாது. அதே போல நன்றாக படிக்கிற பையன், பணக்கார பையன், தடியானவன் என்கிற பேதமும் இல்லை. சாதிமத பேதமின்றி சகலரும் குவிந்து திறமைக்கு மதிப்புக்கொடுத்து ஆடும் ஆட்டம்தான் இந்த கல்லிகிரிக்கெட்!

கல்லி கிரிக்கெட் ஆட உங்களுக்கு பத்துக்கு பத்து அறைகூட போதுமானதுதான். சாலைகளில் சந்துகளில் ஆடலாம். தோட்டத்தில் பூங்காவில் பார்க்கிங்கில் க்ளாஸ்ரூமில் என எங்கும் விளையாட முடியும். தேவையானது பேட்டுபோல ஒரு பொருளும் பந்துபோல உருளையான ஒன்றும்தான். பேட் இல்லையா காலண்டர் அட்டைகூட பேட்டாகும். பால் இல்லையா கிழித்துப்போட்ட காகிதங்கள் சுருட்டப்பட்டு பந்தாகும். உபகரணம் எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

சாலையில் செல்லும்போது பையன்கள் கிரிக்கெட் ஆடும் மைதானத்தை பாருங்கள். ஒரு சிறிய மைதானத்தில் ஆயிரக்கணக்கான பேர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கலாம். இந்த ஆயிரம் பேரும் எப்படி தங்களுடைய பந்தினை தங்களுடைய அணியை எதிரணியை சரியாக கவனித்து ஆடுகிறார்கள் என்பதை சிபிஐயால் கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும் காலை தொடங்கி அந்தி சாயும்வரை ஆட்டம் தொடரும்.

மைதானத்தில் ‘பிட்ச்’ பிடிப்பதுதான் பெரிய வேலை. இதற்காகவே அணியில் குட்டிப் பையன்களை நேர்ந்து விட்டிருப்பார்கள். பாவம் அந்த பொடிசு காலை ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்து போய் மைதானத்தில் தங்களுக்கான பிட்ச்சில் ஒரு குச்சியை நட்டுவைத்துக்கொண்டு மற்ற நண்பர்கள் வரும்வரை கன்னத்தில் கைவைத்து காத்திருக்கும். காத்திருந்து பிட்ச்சை கொடுத்தால் அவனுக்கு பேட்டிங் செய்யவோ பந்துவீசவோ ஒன்றிரண்டு ஓவர்கள் வாய்ப்புத்தரப்படும்.

கேப்பில் வேறு யாராவது குச்சியை பிடுங்கிப்போட்டுவிட்டு பிட்ச்சில் விளையாட தொடங்கினால் அடிதடி ரகளைதான். குட்டிப்பையனுக்கும் செம மாத்துதான். சில நேரங்களில் ஒரே குழு வாராவாரம் விளையாடி ஒரு பிட்ச்சை தங்களுக்கே பட்டா போட்டு வைத்துக்கொள்வதுண்டு. மீறி நீங்கள் ஆடும் பட்சத்தில் ‘’ஹலோ இது நாங்க ரெகுலரா ஆடற இடம்.. எங்க ஏரியா உள்ளவராத.. கிளம்புங்க காத்துவரட்டும்’’ என வம்புபண்ணி விரட்டியடிப்பார்கள். சிலசமயம் மைதானத்துக்கு லேட்டாக போக நேர்ந்தால் உங்களுக்கு பிட்ச் கிடைக்காது. அப்படிப்பட்ட நேரங்களில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணிகளிடம் போய் ‘’பாஸ் மேட்ச் போட்டுக்கலாமா’’ என்று கேட்பதை தவிர வேறுவழியில்லை.

நீங்கள் போய் கேட்டவுடன் உடனே யாரும் விளையாட ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பல கமிட்மென்ட்ஸ் இருக்கலாம். அல்லது உங்களுடைய அணியை டொக்கு அணியாக நினைக்கலாம். அல்லது ஆடி களைத்துப்போய் ரெஸ்ட் எடுக்கலாம். மனம் தளராமல் பத்து பதினைந்து அணிகளிடம் பேசினால் அல்லது கெஞ்சினால் ஒன்றாவது க்ளிக் ஆகும். பிட்ச் பிடிக்காமலேயே மேட்ச் ஆட வழிபிறக்கும். மேட்ச் ஆட அணி கிடைத்துவிட்டால் அத்தோடு முடிந்துவிடாது..

மைதானத்துக்குள்ளேயே எங்கிருந்து எதுவரை பவுண்ட்ரி. விக்கெட்டுக்கு பின்னால் ரன் இருக்கிறதா? வைட் மற்றும் நோபாலுக்கு ரன் உண்டா இல்லையா? போன்ற விதிமுறைகளை இரு அணி கேப்டன்களும் கூடிப்பேசி முடிவெடுப்பார்கள். எந்த ரூல்ஸ் இருந்தாலும் எல்பிடபிள்யூ மட்டும் இருக்கவே இருக்காது என்பது கல்லிகிரிக்கெட்டின் எழுதப்படாத நிரந்தரவிதி. இது காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பின்பற்றப்படுகிறது.

சிலசமயம் பவுண்டரி பிரிப்பதில் சிக்கலாகிவிடுவதும் உண்டு. சிக்ஸ்ர் அடித்துவிடுவார் உங்கள் அணியில் ஒருவர். உடனே எதிர் அணி கேப்டன் நாங்க சொன்னது அந்த புதரை தாண்டி அடிச்சாதான் சிக்ஸர் அதனால ஃபோர்தான் என வாக்குவாதம் பண்ணுவார்.. அடம்பிடிப்பார். அதுவும் பிறகு அடிதடியில்தான் முடியும். அதனால் எது பேசினாலும் முன்பே சரியாக கறாராக பேசிவிடவேண்டும். ஒன்றிரண்டு ரன்கள் ஆட்டத்தையே மாற்றிவிடும். ஸ்கோர் குறித்துவைப்பது பேட்டிங் அணிதான் என்பதால் எதிரணி அசந்த நேரம் ஒன்றிரண்டு ரன்களை கூட்டிவிடுவதும்.. அதை எதிரணியில் யாராவது கண்டுபிடித்து சண்டைபோடுவதும் வாடிக்கை.

மைதானங்களில் அதிகாலை ஆறு மணியிலிருந்து 8 மணிவரை கூட்டம் குறைவாக இருக்கும். புத்திசாலிகள் அந்த நேரத்தில் விளையாடி முடித்துவிட்டு ரெஸ்ட் எடுக்க வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். எட்டுமணிக்கு மேல் மைதானத்துக்கு வந்தால் விளையாடி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

கும்பலுக்கு நடுவே ஃபீல்டிங் செய்கிறவர் பாடுதான் பெரும்பாடு! சமயங்களில் யாரோ அடித்த பந்தை கேட்ச் பிடித்துக்கொண்டு.. ‘’ஹே... ஹவ்வ்ஜாட்’’ என்று கத்திக்கொண்டே ஓடுவார். ஆனால் கேட்சைப்பிடிக்க வேண்டிய ஆளோ அவருடைய அணியிடம் செம மாத்து வாங்குவார். நீங்கள் பேட்டிங் செய்யும்போது பிட்ச் மாறி வேறு பிட்ச்சில் வேறு அணிக்காக பேட்டிங் செய்ய நேரிடும்! அதனால் ஜாக்கிரதையாக ஆடவேண்டியிருக்கும்.

சரி அம்பயருக்கு என்ன செய்றதாம்.. எந்த அணி பேட்டிங் செய்கிறதோ அந்த அணியில் ஒருவர்தான் அம்பரயாக இருப்பார். அவர் ‘நேர்மை’யாக நடக்க ரொம்பவே மெனக்கெடுவார். அதாவது லெக்சைடில் பந்து போனாலே வைட்தான். அது ஸ்டம்புக்கு மேலே சென்றாலும் வைட்தான். ஆஃப் சைடில் பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் விலகினாலும் வைட்தான். என்னதான் பவுலர் சண்டைபோட்டாலும் கடுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கையை கட்டிக்கொண்டு ஸ்ட்ரிக்டான ஆபீசர் போலவே நிற்பார்.

ரன் அவுட்டில்தான் எல்லா குல்மால்களும் நடக்கும். என்ன இருந்தாலும் பேட்ஸ்மேன் நம்ம கட்சியாச்சே.. அதனால் பாதி பிட்ச்சில் ரன் அவுட் ஆனாலும் அவுட் கொடுக்காமல் கடுக்காய் கொடுப்பார். இதுபோன்ற நேரங்களில் பவுலிங் அணி கடுப்பாகி அம்பயரை போட்டு புரட்டி எடுப்பது சகஜம்!

இந்த ஆட்டங்கள் பத்து அல்லது பதினைந்து ஓவர் போட்டிகளாகவே நடக்கும். இங்கிலீஸ்காரன் டி20 போட்டிகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே அதைவிட சிறிய டி10 போட்டிகளை கண்டுபிடிச்சது நாமதான்! பத்து அல்லது பதினைந்து ஓவர்தான் மொத்த ஆட்டமுமே என்பதால் எந்த பேட்ஸ்மேனும் முழுசாக விளையாட முடியாது ஒரு ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று ஓவர்தான் பேட்டிங் தரப்படும். அதற்குமேல் நன்றாகவே ஆடினாலும் அவராகவே ரிட்டயர்ட் ஹர்ட் ஆகிவிடுவார். அதனால் கிடைக்கிற பத்து பந்துகளையும் சிக்ஸரடிக்கவே மனசு சிறகடிக்கும்.

இப்படி மைதான அழிச்சாட்டியம் ஒருப்பக்கம் என்றால் இன்னொரு பக்கம் உபகரண குத்தாட்டம். ஒரே ஒரு பேட் ஒரு டென்னிஸ் பந்தோடு பத்துபேர் கொண்ட அணி மைதானத்துக்கு கிளம்பிவிடும். மேட்ச் ஆடலாமா பாஸ் என ஸ்டம்ப்ஸ் வைத்திருக்கும் அணிக்கு கொக்கிப்போடும். எந்த அணியும் கிடைக்காவிட்டால்.. மூன்று குச்சிகளை நட்டு கிரிக்கெட் ஆடத்தொடங்கிவிடுவார்கள். குச்சிகள் கிடைக்கவில்லையா? மூன்று செறுப்புகளை வரிசையாக வைத்து அதன் வழியாக பந்துசென்றால் அவுட்! அதுவும் வேலைக்கு ஆகலையா? சைக்கிள் இருந்தால் அதன் டயரை பக்கவாட்டில் நிறுத்திவைத்துவிட்டால் அதுகூட ஸ்டம்ப்தான்! எதுவுமே கிடைக்கலையா? துடைப்பை கட்டை, குப்பைத்தொட்டி, சுவரில் போடு மூன்று கோடு என எதுவும் ஸ்டம்பாகும்.

ஒரு பேட்தானே இருக்கு.. ரன்னருக்கு? அவருக்கு குச்சியோ கம்போ அல்லது வெறுங்கையோ பரிசளிக்கப்படும்! ரன் எடுத்தபின் பேட் கைமாறும்! டென்னிஸ் பந்துகள்தான் விளையாட பயன்படும். டென்னிஸ் பந்தை அப்படியே பயன்படுத்தினால் அதன்மேலிருக்கும் பஞ்சு பந்து பவுன்ஸ் ஆவதை தடுக்குமாம். அதனால் பந்தை பற்றவைத்து பஞ்சை பொசுக்கி விளையாடுகிறார்கள். தீயா வேலை செய்றதுனா இதுதான்போல! வெவ்வேறு நிறுவனங்கள் பந்துகள் தயாரித்தாலும் ஒவ்வொரு அணியும் தங்களுக்கென்று பிராண்ட் வைத்து அந்த கம்பெனி பந்துகளையே உபயோகிக்கின்றனர்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியிலும் பதினோறு வீரர்கள் கட்டாயம். ஆனால் கல்லியில் நான்கு பேர்கூட ஒருஅணியில் ஆடலாம். அதற்கேற்ப ரூல்ஸ் மாறும்.

அதுமாதிரி நேரங்களில் ஆஃப் சைட் அல்லது லெக்சைட் மட்டும்தான் ரன்கள் கணக்கெடுக்கப்படும். ஸ்டம்புக்கு பின்னால் ரன்கள் கிடையாது. மூன்றுபேர்தான் அணிகளில் இருக்கிறார்கள் என்றால் ஒன்பிட்ச் கேட்ச் கூட உண்டு. அதே போல குறிப்பிட்ட இடத்தில் அடித்தால் 1ஜி 2ஜி 3ஜி என ரன்கள் கொடுக்கப்படும். இது ஊழல் கணக்கில்ல.. ரன்கணக்கு. ஜி என்றால் கிராண்டட் என்று அர்த்தம். சாலையில் கிரிக்கெட் ஆடும்போது சாக்கடைக்குள்ளோ அல்லது குறிப்பிட்ட சில வீடுகளுக்குள்ளோ பந்து போய்விட்டால் இப்படி தூரத்துக்கேற்ப ரன் வழங்கப்படும். ஓவர் உற்சாகத்தில் எதிர்வீட்டு கண்ணாடிகளை உடைத்துவிட்டால் அவுட்! பந்து சாக்கடைக்குள் விழுந்துவிட்டால்.. அடித்தவரேதான் போய் எடுத்துக்கொண்டு போய் வீட்டில் வைத்து கழுவித்தரவேண்டும்.

மேலே சொன்னதையெல்லாம் வெறும் குட்டிப்பையன்கள்தான் பண்ணுவாங்க என தப்புக்கணக்கு போடவேண்டாம். உடனே அருகிலிருக்கிற மைதானத்துக்கு விசிட் அடிங்க.. 6 வயது சுள்ளான் முதல் 60 வயது தாத்தாவரைக்கும் கிரிக்கெட் ரூல்ஸை உடைத்துப்போட்டு கல்லி கிரிக்கெட்டில் சொல்லி அடிப்பதை காணலாம்.

40 வயதாகும் கம்பெனி மானேஜர் நான்கு ரன்னுக்காக ‘’டே போங்கடா நான் ஆட்டத்துக்கு வரல.. என் பேட்டை குடுடா, நான் வீட்டுக்கு போறேன்” என அடம் பிடித்து சண்டை போடுவதை பார்த்து ரசிக்கலாம். முதல் பந்திலேயே அவுட்டாகி ‘’இல்ல இது ட்ரயல்ஸுடா.. நீ முதல்லயே ஆல்ட்ரைல்ஸ் பஸ்ட்டு பால்னு சொல்லிட்டு போட்ருக்கணும்’’ என லந்து பண்ணுவதை பார்த்து சிரிக்கலாம்! கல்லி கிரிக்கெட் ஆடுகிற இடங்கள் வெறும் மைதானங்கள் அல்ல.. ஆனந்தம் ஆடும் களம்! உங்களுக்கு கிரிக்கெட்டே தெரியாட்டாலும் ஒருக்கா உங்க வாண்டுகளோட விளையாடிப்பாருங்க..விடமாட்டீங்க!

(நன்றி - புதிய தலைமுறை)

14 May 2013

முடியலங் மணி!




எம்ஆர் ராதாவின் ரத்தகண்ணீருக்குப் பிறகு வில்லனுக்காகவே ஹிட்டான படமென்றால் அது அமைதிப்படையாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டு திராவிட அரசியல் வரலாறை இதைவிடவும் பகடி பண்ணின ஒரு தமிழ்த்திரைப்படம் வேறெதுவும் இருக்கவே முடியாது. அப்படியொரு கிளாசிக் படத்திற்கு இரண்டாம் பாகம் எடுப்பதென்பது சப்பாத்திக்கல்லில் இட்லி சுடுவதுபோன்று கடுமையான சவால்கள் நிறைந்த வேலையாகத்தான் இருக்கும்.

ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும், திரைக்கதையையும் பாத்திரத்தேர்வையும் பார்த்து பார்த்து முந்தைய படத்துக்கு மரியாதை பண்ணுகிற வகையில் உருவாக்க வேண்டாமா? ஆனால் நாகராஜசோழன் எம்.ஏ எம்எல்ஏ படமோ கொஞ்சமும் பொறுப்பில்லாமல், மூன்றாந்தர பிட்டுப்படங்களின் தரத்தில்தான் வெளியாகியிருக்கிறது.

சிலபடங்களை சிலர் எடுக்காமல் இருப்பதுதான் அவர்களுக்கும், அவர்களுடைய மரியாதைகளுக்கும் நல்லது என்றும் நினைக்க வைக்கிறது. ‘அவதார்’ படத்தை அமைதிப்படை சத்யராஜையும், செந்தமிழன் சீமானையும் வைத்து மணிவண்ணன் இயக்கினால் எப்படி இருக்கும்? அதுதான் நாகராஜாசோழன் எம்ஏ எம்எல்ஏ.

அரசியலில் இருந்து ஒய்வுபெற்று வீட்டில் சும்மா இருக்கிறார் நாகராஜசோழன்.. மணிவண்ணன் அமைதிப்படை பார்ட் 2 எடுக்கிறார் என்பதை அறிந்து.. மீண்டும் அரசியலுக்குள் பிரவேசம் செய்கிறார். முதலமைச்சரின் ஊழல் ரகசியங்களை வைத்து மிரட்டி டைரக்டாக நான்கு நிமிடத்தில் ஈஸியாக துணை முதல்வராகவும் ஆகிவிடுகிறார். அதற்குபிறகு இங்கிலீஸ்கார பாரினர்ஸோடு சேர்ந்து ஒரு காட்டை அழித்து ரோடு போட.. நிஜமாகவே ரோடுதான் போடுவதாக திட்டம்போடுகிறார்.. ஆனால் காட்டை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள் மக்கள்.
அவர்களை ஏமாற்றி எப்படி நாகராஜசோழன் ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. படிக்கும்போது சுமாராகவாவது இருக்கிற இந்தக் கதையை.. ஆப்பத்தை பங்குபோட்ட குரங்குபோல சீமானுக்கு கொஞ்சம், சத்யராஜூக்கு கொஞ்சம், தனக்கே கொஞ்சம், தன் மகன் ரகுவண்ணனுக்கு கொஞ்சம் என பிச்சு பிச்சு கொத்துக்கறி போட்டு கொதறியிருக்கிறார் மணிவண்ணன்!

அமைதிப்படையில் இயல்பான நடிப்பில், வில்லத்தனத்தில் அசத்திய அதே சத்யராஜ்தான்.. ஆனால் இந்தபடத்தில் ஏனோ வில்லத்தனம் காட்டவும் நாகராஜசோழனாக மாறவுமே, ரொம்ம்ம்ம்ப மெனெக்கெடுகிறார். வயதாகிவிட்டதால் முன்பிருந்த கம்பீரமும், அசால்ட்டுதனமும் சுத்தமாக மிஸ்ஸிங். ஆணிவேரே ஆடிப்போய் ஆடிகாரில் போய்விட்டதால், மீதி படத்தை சீமான்தான் காப்பாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள்.

பிரபாகரனின் தம்பியாக நமக்குநாமே திட்டத்தின் கீழ் உலகிற்கு அறிவித்துக்கொண்ட தம்பி சீமான்.. இந்த படத்தில் சாதாரண இட்லிக்கடை அக்காவுக்கு தம்பியாக நடித்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டவேண்டும். அதுவும் கிழவிகளுக்கு பயந்து சுவர் ஏறி குதித்து ஓடுவதுபோல காமெடி காட்சிகளிலெல்லாம் நடித்திருப்பது வியக்க வைக்கிறது. காமெடிக் காட்சியில் கூட திடீரென பொங்கி எழுந்து.. ‘’அடேய் ராஜபக்சே.. கொடுங்கோலனே கொலைகாரப்பாவி.. தில்லிருந்தால் திநகர்பக்கம் வாடா’’ என்று அறைகூவல் விடுத்துவிடுவாரோ என்கிற அச்சமும் பயமுமாகத்தான் படம் பார்க்க வேண்டியிருந்தது.

அழகழகான லட்டுமாதிரி லேடீஸ் வாழும் காட்டை அழிக்க நினைக்கிற அரசியல்வாதியின் திட்டங்களை உடைக்க நினைக்கிறார் சீமான். நடுவில் அந்த லேடீஸோடு ஜாலி நடனம் வேறு ஆடுகிறார்.. ஜிம்பாலே ஜிம்பாலே ஜிம்பல ஜிம்பா..

மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா சீமான். ஊரிலிருந்து காட்டுக்கு கிளம்பி போய்.. காட்டில் வாழும் ஆதிவாசிகளை உசுப்பிவிடுகிறார். வில் அம்பெல்லாம் வைத்து சண்டையிட தூண்டுகிறார். (அவதார் படத்தில் வருவது போலவே!)

சீமானை நம்பி ஆதிவாசிகள் வில் அம்பு வைத்து சண்டைபோட்டு செம அடி வாங்கி ஊரை காலிபண்ணிக்கொண்டு போக நேர்கிறது. அருவிக்கு பக்கத்தில் வெட்டியாக அமர்ந்து வாழைப்பழம் சாப்பிடும் சீமானிடம் விஷயத்தை சொல்கிறார் ஒரு அல்லக்கை! சீமான் அப்படியே ஷாக் ஆகி.. ‘’நாம் இப்போ தோத்துட்டாலும் நிச்சயமா இன்னொருக்கா ஜெயிப்போம்.. இப்போதைக்கு தலைமறைவாகிவிடுவோம்’’னு சொல்லிட்டு பக்கத்தில் இருக்கிற அருவியில் குதித்து தலைமறைவாகிவிடுகிறார். அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியாமல் மக்கள் ஃபீல் பண்ண அவருடைய கதை அதோடு முடிகிறது. ப்ப்ப்ப்பா.. டேய் ரீல் அந்துபோய் நாலு வருஷம் ஆச்சுடா என்று பின் சீட்டிலிருந்து ஒரு தாத்தா கதறுவதைக் கேட்க முடிந்தது. ஈழத்தமிழர்களை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியெல்லாம் காமெடி பண்ணி கதறவிடுவார்களோ தெரியவில்லை.

மணிவண்ணன் என்ன நினைத்தாரோ, தன் மகனையும் சத்யராஜ், சீமானோடு பெரிய ஆளாக்கிவிட வேண்டியதுதான் என நினைத்து மகனுக்கும் ஒரு கதை பண்ணியிருக்கிறார். அவருக்கோ நடிப்பு என்பது கிலோவா, லிட்டரா எந்தக் கடையில் கிடைக்கும் என்கிற அளவில் வருவது வரவேற்கத்தக்கது. அவர்தான் நாகராஜசோழனின் மகனாம். அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். நல்ல வேளையாக டூயட்டெல்லாம் வைக்கவில்லை. அந்த கொடுமையை வேறு பத்துரூபாய் கொடுத்த பாவத்துக்கு சகித்துக்கொள்ள வேண்டியதாயிருந்திருக்கும். மயிரிழையில் உயிர்தப்பியது மணிவண்ணன் புண்ணியம்.

இப்படியாக ஆளாளுக்கு நம்மைப்போட்டு படாய் படுத்த.. படத்தில் ஹீரோயின்களாக வருகிற இரண்டு பாட்டிம்மாக்களில் யார் மெயின் ஹீரோயின் என்பதை கண்டுபிடிப்பதற்குள் படமே முடிந்துவிடுகிறது. பாட்டிம்மாவில் ஒன்று தொப்புள் தெரிய நடனமாடுவதெல்லாம், கொடுமைகளின் உச்சக்கட்டம்.

படம் பேசுகிற அரசியல் பற்றியெல்லாம் பேசுகிற அளவுக்கு ஒன்றுமேயில்லை. சீமானும், வைகோவும், தமிழருவி மணியனும் பேசுகிற அதே அம்மாவுக்கு வலிக்காத முனைமழுங்கிய அரசியல்தான். கொஞ்சம் ஜாலியான காமெடி வசனங்கள் மூலமாக மொக்கைமுலாம் பூசிகொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் மணிவண்ணனுக்கு ரொம்பவே வயசாகிவிட்டது. உடல் நிலை ரொம்பவே மோசமாகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. அவரால் சரியாக நடக்க முடியவில்லை. வசனங்களை முந்தைய மாடுலேஷனில் இயல்பாக பேசமுடியவில்லை. உடல்நல குன்றி, இப்படியொரு படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாமோ என்று நினைக்கவைத்துவிடுகிறார். பல காட்சிகளையும் உதவி இயக்குனர்களை வைத்தே சமாளித்திருப்பார் போல.. படத்தின் ஒரே ஆறுதல் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிற சில வசனங்களும், மணிவண்ணன்-சத்யராஜ் ஜோடி தோன்றி அலப்பறை பண்ணுகிற சில காட்சிகளும்தான்!

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அமைதிப்படை’ படத்தின் தரத்திற்கு மிக அருகில் கூட இந்தப்படம் வரவில்லை. முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சியையும் ஏனோதானோ என்று படமாக்கியிருப்பதும்.. பழைய பெருமையை வைத்தே துட்டுபார்த்துவிடலாம் என்று நினைத்து படமெடுத்திருப்பதும், அப்பட்டமாகத் தெரிகிறது.

செந்தமிழன், புரட்சி தமிழன், இனமான இயக்குனர் என்றெல்லாம் போட்டு படத்தை தொடங்கும்போதே உஷாராகி ஜன்னல் வழியாக குதித்து தப்பித்திருக்க வேண்டும். ம்ம் இனி என்ன சொல்லி என்ன பிரயோஜனம். இந்த கெரகத்த எடுத்தத்துக்கு பழைய அமைதிப்படையவே டிடிஎஸ் பண்ணி இன்னொருக்கா விட்ருக்கலாங் மணி!

10 May 2013

வானம் ஏறி வைகுண்டம் போனவன்!




முடியாது. உங்களால் இதை நிச்சயமாக செய்யமுடியாது. ஏன் இந்தியாவிலேயே யாராலும் முயற்சி செய்ய கூட இயலாது. பிரபல அமெரிக்க நடிகர் அலெக்ஸ் டோரஸ் செய்திருப்பது அப்படியொரு சாதனை.

வானத்திலிருந்து குதித்து பண்ணுகிற சாகசம்தான் ஸ்கைடைவிங். ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கூட அடிக்கடி ஸ்கைடைவிங்கில் சண்டையெல்லாம் போடுவார். கடைசியாக ஜாக்கிசான் தன்னுடைய சிஇசட்12 படத்தில் இந்த யுக்தியில் ஒரு சண்டைக்காட்சியை உருவாக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுபோல ஸ்கைடைவிங் சண்டைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ ஒரு கமல் படத்தில் பாராசூட்டில் பறந்தபடி கிஸ்ஸடிப்பதாக காட்சியிருந்ததாக நினைவு. போகட்டும். இந்த ஸ்கைடைவிங் பற்றி இப்போது என்ன வந்தது? பொறுங்கள். அதற்குமுன்பு அலெக்ஸ் டாரஸ் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

வானத்தில் பறந்தபடி செய்கிற இந்த சாகசத்தில் ஆர்வம் கொண்டவர் அலெக்ஸ் டாரஸ். அதை இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுத்தும் வருகிறார். அதோடு பகுதிநேரமாக பிட்டுப்படங்களில் அதாவது போர்னோ படங்களிலும் நாயகனாக நடித்து புகழ்பெற்றவர். இவருடைய ப்ளூ பிலிம்ங்கள் மிகவும் சிறந்ததாக போற்றப்படுபவை. இவருடைய அபார நடிப்புக்கு பல விருதுகளும் வாங்கியிருக்கிறார் (என்னென்ன விருதுகள் என்கிற தகவல்கள் இணையத்தில் கிடைக்கவில்லை). அலெக்ஸின் திறமையை காணவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வீடியோ கடைகளில் க்யூவில் நிற்குமாம்.

மற்ற கில்மா பட நடிகர்களிடம் இல்லாதது அப்படி என்ன அலெக்ஸிடம் பெரிசாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். எதையும் வித்யாசமாக செய்து பார்க்கிற யுக்தி. அதுதான் அவருக்கு கில்மா பட ரசிகர்கள் மத்தியில் பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

இவர் 2011 ஆம் ஆண்டு ஒரு காரியம் செய்தார். எங்கெங்கோ கில்மா பண்ணுவதுபோல படமெடுத்து விட்டோம்.. வானத்தில் பறந்தபடி ஒரு படமெடுத்தால் என்ன ? யோசனையை கேட்டதும் எந்த கில்மாபட நாயகிகள் காலில் எதையோ ஊற்றியதுபோல அஞ்சி ஓடினர். அவர் மனந்தளரவில்லை. கடைசியில் ஸ்கைடைவிங் கம்பெனியின் ரிசப்ஷனிஸ்ட் பெண்ணை மயக்கி மசியவைத்தார்.

பிட்டுப்படம் எடுக்க ஒரு கேமராவும் ஒரு ஆணும் பெண்ணும்போதுமே...இந்த கான்செப்ட்டுக்கு கூடுதலாக ஒரு விமானமும் பைலட்டும்தான் தேவை. அவரே கேமராமேன் அவரே இயக்குனர் என்று முடிவானது.

ஒரு பைலட்டையும் அழைத்துக்கொண்டு ஒரு நல்ல நாளில் வானம் ஏறி ஏறிவிட்டார். பறக்கும்போதே தொடங்கும் ஃபோர் ப்ளே விமானம் பல ஆயிரம் அடி வானத்திற்கு செல்ல செல்ல உணர்ச்சி பெருக்கை அடைகிறது. இருவரும் இணைய.. ஒன்றாக குதிக்கிறார்கள். சில நிமிடங்கள் வானத்தில் மிதந்தபடி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

உச்சக்கட்டம் நெருங்க நெருங்க.. அந்தப்பெண் துடிக்க துடிக்க.. பாராசூட்டை திறந்துவிடுகிறார் அலெக்ஸ். படம் பார்க்கும் யாரையும் சீட்டு நுனிக்கே அழைத்து வரும் காட்சி இது. பாராசூட் கீழே இழுத்துவர இருவரும்.. மேட்டர் முடிந்து சோர்வடைந்து தரையிறங்க படம் முடிகிறது.

என்ன ஒரு ஏடாகூடமான சிந்தனை. படம் பார்க்கும் நமக்கு உடலெல்லாம் பதறுகிறது. ஆனால் இதை மிக எளிதாக செய்துகாட்டி அசத்தியிருக்கிறார் அலெக்ஸ். உடன் நடித்த பெண்ணுக்குதான் நடிப்பே வரவில்லை. மற்றபடி கேமரா எடிட்டிங் பின்னணி இசை என அனைத்தும் மிக அருமை.

இந்த படத்தை எடுத்து தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்திருந்தார் அலெக்ஸ். இதை அறிந்த ஸ்கைடைவிங் நிறுவனம் அலெக்ஸை மட்டும் வேலையிலிருந்து விரட்டியது. ஆனால்படத்தில் நடித்த பெண்ணை ஒன்றும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு பிறகுதான் அலெக்ஸின் வாழ்க்கையே மாறியது. இன்று முழுநேர போர்னோ ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.அயராத உழைப்பு உயர்வைத்தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்து நிற்கிறது அவருடைய நெஞ்சு.

வானத்தில் பண்ணிய கஜகஜாவுக்காக அவர் மீது வழக்கு தொடர எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ள பட்டன. ஆனால் அமெரிக்க சட்டங்கள் அதை அனுமதிக்கவில்லை. வயதுவந்த இருவர் எங்குவேண்டுமானாலும் உடலுறவு கொள்வதை அரசு அனுமதிக்கிறது. அவர்கள் நிர்வாணமாக பொது இடத்தில் இருந்ததை யாராவது பார்த்திருந்தால்தான் ஏதாவது தண்டனை கொடுக்கமுடியும் என சாட்சிகளை தேடினர். ஆனால் அம்மணமாக தரையிறங்கிய அலெக்ஸை யாருமே பார்க்கவில்லை என்பதுதான் வேடிக்கை.

அமெரிக்க ஊடகங்களின் மகாராஜா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஹோவர்ட் ஸ்டெர்ன் என்பவரின் கவனத்தை கவரவே, தான் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டதாக பிறகு அலெக்ஸ் தெரிவித்திருந்தார்.

ஆண்டுதோறும் ஏதாவது சேட்டை யை அரங்கேற்றி ரசிக கண்மணிகளுக்கு தொடர்ந்து விருந்து படைத்து வருகிறார் அலெக்ஸ். சென்ற ஆண்டுகூட லின்ட்சே லோகனோடு உடலுறவு கொண்டதாக பரபரப்பை கிளப்பினார். இந்த ஆண்டு இதுவரை எதையும் செய்யவில்லை. இனி எதாவது செய்தால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது மட்டும் உறுதி! அலெக்ஸின் அடுத்த ஸ்டன்டுக்காக அமெரிக்காவே காத்திருக்கிறது. நாமும் காத்திருப்போம்.

08 May 2013

சின்ன புன்னகை என்ன செய்யும்?





கமலா தியேட்டரை ஒட்டி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஹோட்டல் ஒன்று இருக்கிறது. சென்றவாரத்தில் ஒருநாள் நண்பரோடு சென்றிருந்தேன். என்ன சாப்பிடலாம் என்று அப்படியே ஷோக்கேஸ்களில் அடுக்கி வைத்திருந்த லட்டு ஜிலேபி மைசூர்பாக்களை நோட்டம் விட்டபடி வந்துகொண்டேயிருந்தேன்...

திடீரென்று யாரோ என் தோளைத்தொட்டு.. ‘’ஹாய் சூப்பர்மேன்’’ என்று தட்டியதும் அதிர்ந்துபோய் திரும்பி பார்த்தால்.. ஒரு முதியவர். நெற்றியில் பட்டை. முகமெல்லாம் புன்னகை. ‘யார்ரா இது நம்ம ஃபேஸ்புக் பிரண்டா இருப்பாரோ?’ என நினைத்தபடி திரும்பி புன்னகைத்து வணக்கம் வைத்தேன்.

‘’வணக்கம் சார்’’ என்றார். மாறாத புன்னகை.

‘’சார் நீங்க?’’

‘’நான் இங்கே வேலை பார்க்கிறேன். உங்க டீசர்ட்டில் இருந்த சூப்பர் மேன் ரொம்ப ஜோரா இருந்தார். அதான் அவருக்கு ஒரு ஹாய் சொன்னேன், அப்படியே உங்களுக்கும், என் பேத்திக்கு சூப்பர்மேன்னா ரொம்ப இஷ்டம்’’ என்று மெல்லியதாக சிரித்தார். லூசா இருப்பாரோ என்கிற எண்ணம்தான் எனக்கு முதலில் தோன்றியது. அதனால் அவரை தவிர்த்துவிட்டு நானும் நண்பரும் மீண்டும் லட்டு ஜாங்கிரியில் கண்களை செலுத்தினோம்.

ஆனால் அவரோ.. ‘’வாங்க சார்.. வந்து உட்காருங்க’’ என்று எனக்கும் நண்பருக்கும் ஹோட்டலுக்குள் நல்ல ஒரு இடத்தை காண்பித்தார்.

‘’என்ன சாப்பிடறீங்க’’ அதே புன்னகை.

‘’ஆக்சுவலி நாங்க ஒரு காபிதான் குடிக்க வந்தோம்.. சும்மா என்னென்ன ஸ்வீட்ஸ் இருக்குனு வேடிக்கைதான் பார்த்துகிட்டிருந்தோம்...’’

‘’நீங்க எதுவுமே சாப்பிடாட்டியும் பரவால்ல.. ஒரு அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டு கூட போகலாம். தண்ணீர் வேணுமா’’ என்றார்.

‘’இல்ல இல்ல ஒரு காபி... ஒன் பை டூ குடுங்க’’ என்றேன்.
அதை அவரே எடுத்துவந்து கொடுத்தார். அதே புன்சிரிப்பு. காபியை குடித்து முடித்ததும் பில் வந்தது. நண்பர் பில் தொகையை பார்த்துவிட்டு அதனோடு கூடவே ஒரு பத்துரூபாயை சேர்த்துக்கொடுத்தார்.

அந்த பெரியவர் பில்லுக்கான தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த பத்துரூபாயை நண்பரிடமே நீட்டினார். ‘’இல்லைங்க வச்சிக்கோங்க.. நாங்க எப்பவும் கொடுக்கறதுதான்’’ என்று பத்துரூபாயை முதியவரிடமே கொடுத்தார் நண்பர்.

‘’மத்தவங்களுக்கு கொடுக்கறதை நான் தப்புனு சொல்லலை. ப்ரியப்பட்டு நீங்க கொடுக்கறதை நிச்சயமா நான் பாராட்டுவேன். ஆனா எனக்கு வேண்டாங்க.. இந்த கடைக்கு வர வாடிக்கையாளர்கள் எல்லோருமே எனக்கு நண்பர்கள் மாதிரி. உங்க நண்பர் உங்க கிட்ட அன்பு காட்டினா இப்படிதான் டிப்ஸ் கொடுப்பீங்களா.. அதெல்லாம் வேண்டாங்க. இங்க எங்க கடைல அஞ்சு நிமிஷம் மகிழ்ச்சியா இருந்தீங்கன்னா அதுவே போதும்’’ என்றார். அதே தெய்வீக சிரிப்பு.

நிஜமாவே புல்லரிச்சிடிச்சு! இப்படி கூடவா மனுஷங்க இருப்பாங்க என்று நினைத்துக்கொண்டோம். இனி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்றாலே மைசூர்பாவுக்கு பதிலாக இந்த முதியவர்தான் நினைவுக்கு வருவாரோ என்னவோ. கமலா தியேட்டர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பக்கமாக போனால் இந்த முதியவருக்காகவேணும் ஒருமுறை விசிட் அடித்துவிடுங்கள். அவருடைய புன்னகையை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது.

06 May 2013

அயாளும் ஞானும் தம்மில்...




மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் லால்ஜோஸ். அவருடைய இயக்கத்தில் ப்ருதிவிராஜ் பிரதாப் போத்தன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாட படம் அயாளும் ஞானும் தம்மில். தன்னை சுற்றியிருக்கிறவர்களை நேசிக்கிற, அவர்களுக்காக உருகி உழைக்கிற, எதையும் இழக்க தயாராயிருக்கிற எளிமையான மனிதர்களின் கதையை அழகாக கோர்த்து படமாக்கியிருப்பார் லால்ஜோஸ்.

நாம் செய்கிற தொழில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது யாருக்காக செய்யப்படுகிறது. அதன் நோக்கம் என்ன? என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே நம்மால் அதை உளத்தூய்மையோடு செய்ய முடியும். மனிதர்களுக்கு செய்கிற சேவையை காட்டிலும் மகத்தான ஒன்றை இறைவனுக்கும்கூட நம்மால் செய்துவிட முடியாது என்பதை ஆணித்தரமாக நம் நெஞ்சில் பதிய வைக்கிற அற்புதம் இப்படத்தை காணுகிற ஒவ்வொருவருக்கும் நிகழும்.

பொறுப்பில்லாமல் வாழ்க்கை குறித்த பெரிய நோக்கமோ அக்கறையோ இல்லாத இளம் மருத்துவர் பிருத்விராஜ். மூனார் அருகில் இருக்கிற ஒரு சிறிய கிராமத்து மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகிறது. அங்கே அவர் முதிர்ந்த மருத்துவரான பிரதாப் போத்தனை சந்திக்கிறார். பிரதாப் போத்தன் அந்த இளைஞனின் வாழ்க்கையையே மடைமாற்றுகிறார். அவனுடைய நோக்கங்கள் மாறுகின்றன. நாம் செய்கிற தொழிலை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை உணருகிறான். காதல் தோல்வியை சந்திக்கிறான்.. தோல்வியின் வலியை தன்னுடைய தொழிலில் பிரதிபலிக்கிறான். அது அவனுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டுபண்ணுகிறது. பிரதாப் போத்தன் சொல்கிற ஒரு பொய்யினால் தப்பிக்கிறான். பிரதாப்போத்தன் மருத்துவத்தின் மகத்துவத்தை அவனுக்கு உணர்த்துகிறார்.

ஒரு மருத்துவன் கடவுளுக்கு நிகரானவன் என்பதை உணர்கிறான். ஒரு நோயாளியை காப்பாற்ற எதையும் செய்யத்தயங்காத ஒரு மருத்துவனாக மாறுகிறான். அதுவே அவனுக்கு பின்னாளில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டுபண்ணுகிறது. அதிலிருந்து பிருத்விராஜ் எப்படி மீண்டு வருகிறார் என்பதை மிக எளிமையாக ஆர்பாட்டமின்றி சொல்லியிருக்கிறார் லால்ஜோஸ்.

விக்ரமன் படங்களை ‘’லாலா’’ ரீரிகார்டிங்குகளுக்கும்.. ஸ்டீரியோடைப் மனிதர்களுக்கும் கிண்டல் செய்தாலும், அவருடைய படங்களில் தொடர்ந்து பாஸிட்டிவ் மனிதர்களை காட்டிக்கொண்டேயிருப்பார். சூழ்நிலைகளால் தவறு செய்கிறவர்களாகவே அவருடைய பாத்திரங்களை படைத்திருப்பார். அன்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்ட மனிதர்களே அவருடைய படத்தின் நாயகர்களாக இருப்பதை பார்த்திருக்கலாம். படம் பார்த்து முடிக்கும்போது நமக்குள்ளும் அந்த பாசிட்டிவ் சரக்கை ஒரு மில்லியாவது ஏற்றியிருப்பார்.

அயாளும் ஞானும் தம்மில் படத்தின் இயக்குனர் லால்ஜோஸின் படங்களிலும் இந்த தன்மையை உணர்ந்திருக்கிறேன். அவருடைய முந்தைய படமான டைமன்ட் நெக்லஸ் முழுக்க இதுமாதிரியான பாத்திரங்களால் நிறைத்திருப்பார். (டைமன்ட் நெக்லஸில் வருகிற சீனிவாசனின் கதாபாத்திரத்தை படம்பார்த்த யாருமே மறக்க முடியாது)

அன்பும் பாசமும் நிறைந்த அற்புதமான மனிதர்கள், வீழும்போதெல்லாம் நம்மை சுமக்க காத்திருக்கும் நண்பர்கள், நமக்காக எதையும் இழக்க துடிக்கிற உறவுகள் என பலவிதமான பாசிட்டிவ் மனிதர்களை காட்சிப்படுத்துவதில் வல்லவர் லால்ஜோஸ். அ.ஞா.தம்மில் படத்திலும் கூட அதுபோல எண்ணற்ற கதாபாத்திரங்கள்.

கலாபவன் மணி மிகமுக்கியமான ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் வில்லன். ஆனால் அவருடைய மகளுக்கு மூச்சுத்திணறல் என மருத்துவமனைக்கு ஓடும் காட்சியிலும் ‘’நான் பாவம் பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடு என் மகளை காப்பாற்று’’ என்று கதறும்போது... அவர்மீதும் நமக்கு அன்பு துளிர்க்கவே செய்கிறது. அதுதான் லால்ஜோஸின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நமக்குள்ளே செய்கிற எளிமையான மேஜிக்.

அயாளும் ஞானும் தம்மில் படத்தில் வருகிற பிரதாப் போத்தனுக்கு நோயாளிகள் அனைவரையும் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் பாவிக்கிறார். படம் முழுக்க அதை பறைசாற்றுவதைப்போலவே குடிநோயாளியான சலீம் குமாரின் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். நம்முடைய தொழில் எதுவாக இருந்தாலும் நாம் யாருக்காக அக்காரியத்தை செய்கிறோமோ அவர்கள் மீது துளி அக்கறையும் அன்பும் இருந்தாலே நம்முடைய வேலை தெய்வீகநிலையை அடைந்துவிடும் என்பதை படம்பார்க்கிற எல்லோருமே உணர்வார்கள்.

படத்தின் நாயகன் ப்ருத்விராஜ்தான் என்று சொல்லப்பட்டாலும், படம் முழுக்க வேறு பல நல்ல கதாபாத்திரங்கள் இடம்பிடித்திருந்தாலும், பிரதாப் போத்தன்தான், அவர் மட்டும்தான் மனது முழுக்க நிறைந்திருக்கிறார். மிக அழகான ஒரு பாத்திரம்.

இதுமாதிரி நமக்கு ஒரு குரு.. அல்லது தந்தை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஏங்க வைக்கிற ஒரு பாத்திரம். தன்னுடைய அபாரமான நடிப்பினால் அதற்கு உயிரூட்டியிருப்பார் பிரதாப் போத்தன். (தமிழ்சினிமாவில் அவரை ஏனோ அரை லூசாகாவே பார்த்து காட்டி அழித்துவிட்டார்கள்)

மிகவும் நீண்ட ஒரு கதையை அல்லது வாழ்க்கையை முடிந்தவரை க்ரிஸ்ப்பாக கொடுத்திருப்பது சிறப்பு. படத்தின் கதை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமாக மாறி மாறி பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது அருமை. ஒருவேளை நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால் அழுதுவடிகிற டாகுமென்ட்ரியைப்போல இருந்திருக்க கூடும்.

இன்று முழுக்க முழுக்க வணிகமயாகிவிட்ட மருத்துசூழலில் நம் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. அதோடு இன்று எல்லாவகை பணிகளிலுமே குறைந்துவருகிற அர்ப்பணிப்பும் அன்பும் சிநேகமும் அதற்கான தேவையும் என்ன என்பதை வலியுறுத்துகிற இப்படத்தை அனைவருமே கட்டாயம் பார்க்க வேண்டும்.

முடியல பாஸ் முடியல...




இந்த காதலிகள் இருக்கிறார்களே காதலிகள். அவர்களுக்கு எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும். நேரங்காலமே கிடையாது. பின்னணியில் 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னுமிருக்கா'' என்கிற பாடல் ஓட விடிய விடிய பேச வேண்டும் என எப்போதும் எதிர்பார்க்கிறார்கள்.

காதலிகளுக்கு காதலன்கள்தான் எஃப்எம் ரேடியோ, டிடிஎச் தொலைகாட்சி, நூலகம், நியூஸ்சேனல் என சகலமும்... (இவைதவிர வேறு வேலைகளும் இருக்கிறது.)

காதலிக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம்தான். தினமும் ஒரு இரண்டு மணிநேரம் பேசுவதில் என்ன வந்துவிடப்போகிறது என காதலிக்காதவர்கள் நினைக்கலாம். அது அவ்வளவு சுலபமில்லை பாஸ்! அந்த இரண்டரை மணிநேரம் எப்படி இருக்கும் தெரியுமா. உரையாடல் என்பது இரண்டு பக்கமும் நிகழவேண்டியது. ஆனால் நம்மூரில் அப்படி கிடையாது.

காதலிகள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல 'அப்புறம்' 'சொல்லு' 'வேற என்னடா' என்பதைத்தவிர வேறு எதையுமே பேசுவதில்லை. அவர்களுக்கு நாம் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இவர்களாக எதையுமே பேசுவது கிடையாது.

நாமேதான் தினமும் புதுசு புதுசாக தினுசு தினுசாக பேசுவதற்கு டாபிக் பிடிக்க வேண்டியிருக்கிறது. அதுவும் நல்ல சுவாரஸ்யமான டாபிக்காக இருக்க வேண்டியது அவசியம். போர் அடிக்கிற மேட்டராக இருந்தால் ''வேற எதுனா பேசுப்பா'' என்று கொஞ்சல் பட்டனை அமுக்கி சேனலை மாற்றிவிடுவார்கள்.

இதற்காக ஒவ்வொருநாளும் ஒபாமா தொடங்கி உலக நாட்டு நடப்புகள் அனைத்தையும் கரைத்து குடிக்க வேண்டியிருக்கிறது. இதில் கிரிக்கெட்,அரசியல் அறவே கூடாது, மற்ற பெண்களை பற்றி புகழ்ந்து பேசிவிடக்கூடாது. வேண்டுமானால் அவர்களை திட்டலாம்.

சினிமா வுக்கு அனுமதியுண்டு, அதுவும் கிசுகிசு மாதிரியானவைதான். உலக சினமாவெல்லாம் பேசினால் ப்யூஸை புடுங்கிவிடுவார்கள். இவை தவிர மெகாசீரியல், அழகுசாதனப்பொருட்கள், எதிர்கால வாழ்க்கை, நாம் வாங்கின மொக்கைகள் என பேசலாம்.

எது பேசுவதாக இருந்தாலும் அதை நன்றாக ப்ரீப்பேர் செய்து பேச வேண்டியிருக்கிறது. கொஞ்சம் போரடித்தாலும்

'வரவர என்கிட்ட பேச உனக்கு இஷ்டமேயில்ல.. என்ன உனக்கு பிடிக்காம போயிடுச்சு.. லவ் பண்றதுக்கு முன்னால எவ்ளோ நேரம் பேசுவ.. இப்பல்லாம் அவசர அவசரமா கடனுக்கு எதயாவது பேசிட்டு போனை வச்சிடற... இனிமே எங்கிட்ட பேசாத ''

என்று அலம்பல் பண்ணி போனை கட் பண்ணி நம்மை குற்றவாளியாக்கி தூக்கில் ஏற்றி கொடுமை படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த உரையாடல் கண்டத்தை தாண்டமுடியாத தண்டங்கள்தான் காதலில் தோல்வியடைந்து டாஸ்மாக்கில் வரபோகிறவர்களிடமெல்லாம் பேசி பேசி குடிக்க வருகிற மற்ற குடிநோயாளிகளுக்கு டார்ச்சர் கொடுப்பவர்களாக வளர்கிறார்கள்.

ஆனால் நல்ல காதலன்கள் தினமும் கஷ்டப்பட்டு டாபிக் பிடித்து பேசி காதலியின் கைத்தட்டல்களை வாங்கி 'கொண்டகாதலி'ல் வெற்றி பெறுகிறார்கள். உண்மையில் காதலில் வெற்றி பெறுகிற ஒவ்வொரு காதலனும் பத்து கோபிநாத், நான்கு தென்கச்சி சுவாமிநாதன், இருபத்தைந்து சுகிசிவங்களுக்கு சமமானவர்கள்.. அவர்களை போற்றுவோம்!

04 May 2013

'சினிமா' டவுசர் கழண்டுச்சே...!




சில அனுபவசாலிகள்.. நாம் எதையாவது செய்தால்.. அச்சச்சோ இப்படி பண்ணப்பிடாது.. இது தப்பூ.. அப்படி பண்ணப்பிடாது அது குப்பூ என தடுத்துக்கொண்டேயிருப்பதை தங்களுடைய தலையாய கடமையாக செய்துவருவதை காணலாம். கேட்டால் அதெல்லாம் எங்க அனுபவத்துல கத்துக்கிட்ட பாடம் தம்ப்பீ.. அத அப்படி பண்ணக்கூடாது தம்பி.. நடுவுல மானே தேனே கட்டாயம் போட்டுக்கணும்? அதை மட்டும் செஞ்சிடாதப்பா.. அப்படி செஞ்சாலும் பாதுகாப்பா செய்யணும் காண்டம் போட்டுக்கணும்? என நம் கையை பிடித்துக்கொண்டு கரகாட்டகாரன் கனகாவின் ஃபாதர் போல அக்கிரமம் பண்ணுவதை அடிக்கடி சந்தித்திருக்கலாம்.

எந்த ஒரு கலைஞனுக்கும் கட்டாயம் இருக்கவே இருக்க கூடாதது இதுமாதிரியான கைய புடிச்சி இழுத்தியா தொடர்புகள்தான்! க்ரியேட்டிவிட்டிக்கு முதல்தேவை கட்டற்ற சுதந்திரம்தான்.ஆனால் அன்பார்சுனேட்லி அன் யுனிவர்ஸல் ஒபீடியென்ட்லி பாவப்பட்ட கோடம்பாக்கத்து உதவி இயக்குனர்களுக்கு அந்த பாக்கியமே கிடையாது.

சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் இதுபோன்ற ஆயிரம் பெரிசுகளை தாண்டித்தான் வரவேண்டியிருக்கும். அப்படி வருவதற்குள் அவனுடைய சகல புதுமையான திறமைகளும், சிந்தனைகளும் மங்கிப்போய் மட்டையாகி மண்ணாங்கட்டியாகத்தான் வெளியே வருவான். ஏதாவது மொக்கையான லவ் ஸ்டோரியை தமிழ்சினிமாவின் சகல க்ளிஷேகளுடன் எடுத்து ஃப்ளாப்பாகி ஊருக்கே கிளம்ப வேண்டியதாகிவிடும்!

நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலமாக வருகிற குறும்பட இயக்குனர்களுக்கு இந்தத் தொல்லையில்லை. சொல்லப்போனால் அவர்களை சுற்றியிருக்கிற பெரிசுகள்.. ஏன்டா இப்படி சினிமா கினிமானு வெட்டியா திரியற, ஏதாச்சும் உருப்படியா பண்றா என்பதை மட்டும்தான் அறிவுரையாக வழங்குவதை பார்த்திருக்கிறேன்.

அதிகம் போனால் கஷ்டப்பட்டு உன்னை உங்கப்பாம்மா எப்படி படிக்க வச்சாங்க.. ஏன்டா இப்படி அவங்களை கஷ்டப்படுத்தற என்பதாக இருக்கலாம். ஆனால் யாரும் தப்பித்தவறியும் கூட இந்த இடத்துல காமெடி டிராக்.. இங்க ஒரு டூயட்டு.. ஃபைட்டு கட்டாயம்.. தர்மம் ஜெயிக்கணும் அதனால ஹீரோ சாகணும் மாதிரியான யோசனைகளை கொடுப்பதில்லை. அதுதான் இவர்களுக்கு பலமாக இருக்கிறது.

அந்த வகையில் காதலில் சொதப்புவது எப்படி தொடங்கி ‘பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ்.. இதோ இப்போது ‘சூதுகவ்வும்’ நலன் குமாரசாமி வரை.. குறும்பட இயக்குனர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி காலி பண்ண பழம்பெரிசுகள் இல்லை.

அவர்களாகவே நீந்தித்தான் கரையை அடைகிறார்கள். நிறைய உலகப்படங்களை பார்த்து நிறைய வாசித்து தங்களுக்குள் விவாதித்து சினிமாவை கற்றுக்கொள்கிறார்கள். தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்கிற நேர்மை இவர்களுக்கு இருக்கிறது. வாழ்க்கையிலிருந்து சினிமாவை படிக்கிறார்கள். சினிமாவுக்கென்று கதை வசனம் எழுதாமல்.. இயல்பாக தங்களுக்கு தெரிந்ததை எழுதுகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு தோல்வியை பற்றிய பயமே இல்லை!

அதனாலேயே என்னவோ இவர்களுடைய படங்களிலும், எந்த வித தயக்கமும் இல்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் கடைபிடித்துவந்த சகல இலக்கணங்களும், வரையறைகளையும் சுத்தியலால் உடைத்து நொறுக்கி குச்சியை விட்டு நோண்டி ஒரே ஜம்பில் மீறுகிறார்கள்.

‘மௌனராகம்’ மோகன் மாதிரி இருக்கிற நம்முடைய ஆர்தடக்ஸ் இயக்குனர்களுக்கு மத்தியில், அதே படத்தில் வருகிற துறு துறு கார்த்திக்கை போன்ற இந்த சுட்டிப்பையன்களின் வரவு தமிழ்சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அட்டக்கத்தியில் தொடங்கி, இதோ இன்று சூதுகவ்வும் வரை வந்தது எதுவுமே சோடைபோகவில்லை. மக்கள் அப்படியே அள்ளி கட்டிக்கொண்டு தலையில் வைத்துக்கொண்டாடுகிறார்கள்.

‘சூது கவ்வும்’ படம் ஓடுகிற உதயம் தியேட்டரில் மிகச்சரியாக ஒவ்வொரு மூன்று நிமிட இடைவெளியிலும், விசிலும், கைத்தட்டலும், சிரிப்பொலியும் பறக்கிறது. திரையரங்கமே அதிர்கிறது. ஹெலிகாப்டர் காட்சியில், முதல் கடத்தலில், நாயகனின் திட்டங்கள் சொதப்புகையில், சைக்கோ போலீஸ் டிக்கியில் சுட்டுக்கொள்ளும்போது, நாயகநண்பன் பிட்டுப்படத்தில் நடிக்கும்போது, டவுசர் கழண்டுச்சு மாமா என்று நாயகி சொல்லும்போது என ஒவ்வொரு முறையும் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள்.

ஒருபடத்தில் என்னவெல்லாம் இருக்குமோ, அதெல்லாம் இந்த படத்தில் இல்லை. ஒரு படத்தில் என்னவெல்லாம் இருக்க கூடாதோ, அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. ஒரு நாயகன் என்னவெல்லாம் செய்ய மாட்டானோ, அதையெல்லாம் செய்கிறான். ஒரு நாயகி என்னவெல்லாம் பேசக்கூடாதோ, காட்டக்கூடாதோ, அதையெல்லாம் அவள் செய்கிறாள்.

நல்லவர்கள் படம் முழுக்க தோற்க.. கெட்டவர்கள் ஜெயிக்கிறார்கள். (படத்தில் மொத்தமாகவே நாலைந்து நல்லவர்கள்தான்.. இல்லை இரண்டுபேர்.. ஒருத்தர்.. நியாபகமே இல்லை)

இது நிச்சயமாக மசாலா படம்தான். ஆனால் இதில் டூயட் இல்லை.. காதல் இல்லை.. காமெடி டிராக் இல்லை.. அதிர வைக்கும் சண்டைகாட்சி இல்லை. ஆனாலும் தியேட்டரில் படம் பார்த்த சகலரும் ஆந்திரா மெஸ்ஸில் டபுள் மீல்ஸ் சாப்பிட்ட த்ருப்தியோடு ஆவ்வ்வ்வ்வ்… என ஏப்பம் விட்டபடி தியேட்டரை விட்டு சென்றதை காண முடிந்தது. படம் பேஜாருப்பா என்கிற குரல்களை கேட்க முடிந்தது.

குறும்பட இயக்குனர் என்பதாலேயே, ஒவ்வொரு காட்சியையும், ஒரு குறும்படத்தை போலவே உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். ஒவ்வொரு காட்சியிலும், ஒரு GIMMICK ஒரு சஸ்பென்ஸ் மற்றும் ஒரு ட்விஸ்ட்! இதுதான் ஃபார்முலா.. தனக்குத் தெரிந்த இந்த ஃபார்முலாவை படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார் நலன்.

ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் இதுபோன்ற திரைக்கதை அமைப்பை பார்த்திருக்கலாம். அதற்கு ‘ரமணா’ நல்ல உதாரணம், ஒவ்வொரு காட்சியும் ஒரு குட்டி குறும்படத்தை போன்று அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மருத்துவமனை காட்சி.. பிணத்தோடு வருவது அதை அட்மிட் செய்வதில் தொடங்கி.. ஏழை குடும்பத்துக்கு பணம் வாங்கிக்கொடுப்பதில் முடிந்துவிடும்.

ஒரு கிம்மிக் ப்ளஸ், ஒரு சஸ்பென்ஸ், ஒரு ட்விஸ்ட்... ஒவ்வொரு காட்சியிலும் இந்த மூன்றும் சுவாரஸ்யமாக அமைந்துவிட்டால் படம் ஸ்யூர் ஹிட்! துப்பாக்கி திரைப்படம் இதற்கு நல்ல உதாரணம். இது நலன் குமாரசாமிக்கு நன்றாக கைவந்திருக்கிறது. முதல் கடத்தல் காட்சி இந்த வகையில் அமைந்திருந்தது. அதாவது ஒரு சில விதிமுறைகளோடு நடக்கிற கடத்தல்.. அதை எப்படி செய்யப்போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ். இறுதியில் கடத்திய பெண்ணுக்கே கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு செல்கிற ட்விஸ்ட். இப்படித்தான் மொத்தபடமும் கட்டமைக்கப்பட்டுள்ளது.அதோடு இயல்பான வசனங்கள் படத்தின் இன்னொரு பலம்.

திரைக்கதையில் குறிப்பிடதகுந்த அளவுக்கு லாஜிக் மீறல்கள், சில மொக்கையான காட்சிகள், திணிக்கப்பட்ட பாடல் ஒன்று என குறைகள் இருந்தாலும்.. புதுமுக இயக்குனரின் முதல் படம் என்பதால் தாராளமாக மன்னித்துவிடலாம். அதோடு காசுபணம்துட்டுமணிமணி பாடலும் கூட ஏதோ பெரிசு ஒன்றின் அட்வைஸால் சேர்க்கப்பட்டதாக இருக்கவேண்டும். படத்தோடு கொஞ்சமும் ஒட்டவில்லை. முதல் காட்சியில் ஒரு நியூஸ் பேப்பரில் படிக்கிற செய்திகள் மூலமாக படத்தில் நாம் சந்திக்கப்போகிற சகல பாத்திரங்களுக்கும் லீட் வைத்ததை மிகவும் ரசிக்க முடிந்தது.

விஜயசேதுபதியும் இசையமைப்பாளரும் இயக்குனருக்கு இரண்டு கைகளாக இருந்திருக்கிறார்கள். இந்த விஜயசேதுபதி எந்த கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகத்தான் திரையில் தெரிகிறார். உங்களுக்கு வயசென்ன பாஸ்?

இவருக்கு மட்டும் எப்படிதான் இதுமாதிரி லட்டு கேரக்டர்கள் வந்துமாட்டுகிறதோ? தொடர்ந்து நான்கு ஹிட்டுகள் கொடுத்துவிட்டபடியால், அடுத்து பேரரசு இயக்கத்தில் விஜயமங்கலம்னு ஏதாவது படத்தில் பஞ்ச் பேசி நடிக்காமலிருக்க பிராப்பிரஸ்த்தூ!

தமிழ்சினிமாவின் ஓட்டை டவுசரை கழட்டி தூர போட்டு விட்டு, புத்தம் புது ஜூன்ஸ் மாட்டி அழகு பார்க்கிற இளம் இயக்குனர்கள் படையில் இன்னொரு இளைஞர் நலன்குமாரசாமி.

(நன்றி - cinemobita.com)