Pages

30 October 2015

போவியா... போவியா...



பெங்களூருக்கு கடைசியாக எப்போது போனேன் என்று நினைவில்லை. ஆனால் சிலபல ஆண்டுகளாவது இருக்கும். இன்பசுற்றுலாவோ என்னவோ பையன்களோடு பஸ்ஸில் போனது நினைவில் இருக்கிறது. மொபைல் போன்கள் பிரபலமடைந்திருந்த நேரம்… மொபைல் வாங்க ஆக்சசரிஸ் வாங்கவென்று சிலமுறை. குறுகிய காதலொன்றின் நிமித்தமாக சிலமுறை. மிகசமீபத்தில் அலுவலக மீட்டிங்கிற்காக அதிகாலை ஃப்ளைட் பிடித்து அதிகாலையிலேயே இறங்கி ஒருமணிநேரத்தில் வேலையை முடித்து அடுத்த விமானத்தில் காலையிலேயே சென்னை வந்து சேர்ந்தேன். அதுவே கடைசி. ஆறேழு ஆண்டுகள் கடந்திருக்கும். ஃபேஸ்புக் வழியே அவ்வப்போது அந்த ஊர் ட்ராபிக்கில் தியேட்டரில் மாலில் ஆபீஸ்களில் மனிதர்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதுண்டு.

அந்த ஊர் குறித்த பிம்பம் என்பது என்றுமே குறும்பானதாகத்தான் இருந்திருக்கிறது. புதுப்புருஷன் போல் எப்போதும் பட்டும்படாமல் உரசிக்கொண்டேயிருக்கிற ஓசிஏசி குளிரும் வளவளப்பான கால்களோடும் கட்டைவிரலில் நடக்கும் ஏராளமான கவர்ச்சியை சுமந்துகொண்டு அலைகிற குட்டைப்பாவடை பெண்களுமாக பப்கள் என்னே… குளிர்ந்த நல்பீர்கள் என்னே… மால்கள் என்னே… மலிவு விலை எலக்ட்ரானிக் ஐட்டங்களும் எம்ஜிரோடும் ஆஹா… கப்பன் பாகும் லால்பாகும் அங்கே கட்டிக்கொண்டு கசமுசா பண்ணுகிற காதலர்களும் மரங்களும் பசுமையுமென பெங்களூரு குதூகலிப்பாக மட்டும்தான் நினைவிலிருக்கிறது. பெங்களூரு போய்வருவதே ஒரு ஸூகானுபவமாக மட்டுமே இருந்திருக்கிறது. செட்டில் ஆகணும்னா இந்த ஊர்லதான் ஆகணும் என அடிக்கடி நினைப்பதுண்டு.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் அங்கே முகாமிட்டிருந்தேன். மாரத்தானுக்காக. ஊருக்குள் ஓடி ஓடியே அளந்ததுபோக, சும்மாவும் நண்பர் ஒருவரோடு ஸ்கூட்டரில் சுற்றினேன் ஒரே ஒருநாள்தான். பள்ளிக்காலத்தில் முக்குக்கு முக்கு நின்று சைட் அடித்த பைங்கிளியொன்று திருமண வாழ்வில் சிக்கி சீரழிந்து போய் பிள்ளைகுட்டிகளோடு பார்க்க நேரிடும்போது உண்டாகுமே ஒரு இது… அதுதான். அப்படி இருந்தது!

மழைகாலத்திலும் அப்படியொரு பிசுபிசுக்க வைக்கிற கேவலமான வெயில். கொஞ்சம்கூட குளிர்ச்சியே இல்லை. வேர்வையும் புழுக்கமும் இம்சிக்க வந்திருப்பது பெங்களூர்தானா என்று விசாரித்து உறுதிசெய்துகொண்டேன். பசுமையை பார்க்குகளில் மட்டும் விட்டுவைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஹாரன் சத்தம். கொசகொசவென மக்களின் கூச்சல் காதை நிரப்புகிறது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் வரிசையில் நிற்கின்றன. நடந்தே போகக்கூடிய இடங்களுக்கெல்லாம் கூட காரில்தான் போகிறார்கள். அதில் பாதி பேருக்கு வண்டி ஓட்டவராது என்றார் நண்பர். (பெங்களூரில் மொத்தமிருக்கிற வாகனங்களின் எண்ணிக்கை 55லட்சம், அதில் 11லட்சம் கார்களாம்! ) சாலையில் இறங்கி நடந்தால் நிம்மதியாக நடக்கவும் கூட முடியாதபடி கும்பல் கும்பலாக மக்கள் அலை மோதுகிறார்கள். புகை தூசு… மூச்சுமுட்டுகிறது. (காற்றுமாசுபாட்டில் பெங்களூருக்கு இரண்டாமிடம்!) இந்த கொடூரங்களுக்கு மத்தியில் மெட்ரோ ரயில் வேலைகள் வேறு டொக்கொ டொக்கென்று டொக்குகிறார்கள். காசுள்ள ஐடிகாரர்களுக்கு மட்டும் வால்வோ பஸ் விட்டிருக்கிறார்கள் போல!

ஊரில் மூலைக்கு மூலை பார்களை திறந்து வைத்திருக்கிறார்கள். பெண்கள் குடிப்பதைப்பற்றி சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் தவறொன்றுமில்லைதான். ஆனால் எங்குபார்த்தாலும் நவநாகரீக அந்நிய வடநாட்டு முகங்கள். உள்ளூர் மனிதர்களையெல்லாம் மொத்தமாக ஒழித்துவிட்டது போலிருந்தது. எங்குபார்த்தாலும் நிறுவனங்கள், சோர்ந்த முகத்துடன் பணியாளர்கள், டாப்டூ பாட்டம் ப்ராண்டட் மனிதர்கள். இது முழுக்கவும் வணிகமயமாக்கப்பட்ட வேறொரு ஊராகத்தெரிந்தது.

இந்த மாற்றம் ஐடி வெடிக்கு பின்னால் உருவாயிருக்கலாம். அந்நியர்களின் வரத்து எல்லைமீறி அதிகரித்ததால் உண்டான விளைவாகவும் இருக்கலாம். வெளியூரிலிருந்து இங்கே வந்து குடியேறிய பலரும் இங்கேயே சொந்தவீடு கார் என செட்டில் ஆகிவிட்டிருக்கிறார்கள் என்றார் நண்பர். குறைந்தபட்சம் ஒரு ஃப்ளாட்டாவது ஊருக்கு வெளியே வாங்கிபோட்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் இந்த ஊரின் மேல் அக்கறையில்லை. அதை மேலும் மேலும் சுரண்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அது வந்தேறிகளின் இயல்புதான். (இங்கே வந்தேறி என்கிற சொல் Immigrant என்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது) சென்னையில் அதை நிறையவே உணர்ந்திருக்கிறேன். சென்னை வந்தேறிகள் கூட தங்களுக்கு சோறுபோடுகிற இந்நகரத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையை எப்போதாவது வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெங்களூரு அவ்விஷயத்தில் சுத்தமாக ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளை விடவும் இப்போது லஞ்சமும் ஊழலும் ஊருக்குள் தலைவிரித்தாடுவதாக ஒருவர் புலம்பினார். கூடவே குற்றச்சம்பவங்களும் கணிசமாக...

வந்தேறிகளுக்கு எப்போதுமே தங்கள் சொந்த ஊர் அதன் பெருமை அதன் புகழ் இதில்தான் நாட்டமிருக்குமே தவிர பிழைக்கவந்து ஊர் குறித்த கவலையோ வருத்தமோ இருக்காது. காரணம், என்றைக்காவது ஒருநாள் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்கிற நம்பிக்கையின் தொடர்ச்சியாக இருக்கலாம். பிழைக்க வந்த ஊரின் சூழலை இன்னும் கூட கொஞ்சம் சுரண்டிக்கொள்வதிலோ அழிப்பதிலோ தயக்கமே இருப்பதில்லை. பெங்களூருவின் சுற்றுச்சூழல் அதன் எழிலெல்லாம் பாழாகிறதே என்று வருத்தப்பட்டு யாருமே தமிழில் எழுதி வாசித்த நினைவில்லை. ஆனால் ஊருக்குள் நிறைய தமிழ்தான் கேட்கிறது. வா.மணிகண்டன் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம் MAY BE. இனி பெங்களூரு என்கிற பெயர் கூட பழைய துள்ளலைத்தருமோ தெரியவில்லை ஆனால் இந்த ஊருக்கு சென்னையே தேவலாம் என்கிற எண்ணம் மட்டும் எஞ்சி இருக்கிறது. சென்னைக்கு திரும்பி அடுத்த நாளில் ‘தீபாவளி சீசன் ரங்கநாதன் தெரு’’விலிருந்து தப்பியோடி வந்த உணர்வை பெற்றேன். பெங்களூரு தன் வளர்ச்சிக்கு கொஞ்சம் அதிகமாகவே விலை கொடுத்திருக்கிறது.

***


06 October 2015

லடாக் மாரத்தான் 2015




உலகிலேயே உயரமான இடத்தில் நடக்கிற மாரத்தான் போட்டி, லடாக்கின் லேயில்! கடல் மட்டத்திலிருந்து பதினோறாயிரம் அடி உயரத்தில்…. உலகின் கூரை மேல் ஓடவேண்டும். மரங்கள் இல்லாத குளிர் பாலைவனம். உலக அளவில் நடக்கிற மிககடினமான மாரத்தான்களில் ஒன்றாக கருதப்படுவது. நம்முடைய அத்தனை நம்பிக்கைகளையும் சோதித்துப்பார்க்கிற போட்டி. எனவே இதுவரை ஓடியதிலேயே இதுதான் மிகவும் மோசமாக இருக்கப்போகிறது என்பது வீட்டிலிருந்து கிளம்பும்போதே தெரியும். என்றாலும், ஓடும்போதுதான் உயிர் கழண்டு ஓடுகிற அளவுக்கு இருக்குமென்பதை உணரமுடிந்தது!

லே யில் ஆக்ஸிஜன் அளவு சென்னையோடு ஒப்பிடும்போது இருபதிலிருந்து முப்பது சதவீதம் மட்டுமே! அதீத உயரமும், மரங்களற்ற நிலப்பரப்பும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. எங்கு பார்த்தாலும் முக்கோணப் பள்ளத்தாக்குகளும், நடுவில் பாயும் குளிர் ஆறுகளும், பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு என கலர்கலராக மலைகள். எந்த மலையிலும் மரங்களில்லை. இந்த ஊருக்குள் எப்படி ஓடினாலும் இரண்டு மலைகள் ஏறி இறங்கியே தீரவேண்டும் என்பது மட்டும் புரிந்தது! மலை தவறாமல் புத்தமடலாயங்கள் வைத்திருக்கிறார்கள். சென்னை சாலைகளில் ஓடிப்பழகிய எனக்கு மலையேற்ற ஓட்டமெல்லாம் (UPHILL RUNNING) ஸூத்தமாக பரிச்சயமில்லை. சென்னையில் அப்ஹில் ரன்னிங் என்றால் மேம்பால ரன்னிங்தான்! அதுகூட எப்போதாவதுதான்.

நான் ஓடியது 21 கி.மீ தூரமுள்ள அரைமரத்தான். பந்தய நாளுக்கு சில தினங்கள் முன்பே ஐந்து கி.மீ ஓடிப்பார்த்து மலையேறும் போது மூச்சிரைக்கிறது… இறங்கும்போது ஜாலியாக இருக்கிறது… மூக்கு கையெல்லாம் குளிரில் விரைத்து போகிறது என்பதையெல்லாம் கண்டுபிடித்து அதற்கேற்ப ஒரு ஸ்ட்ராடஜியை உருவாக்கி வைத்திருந்தேன்.

‘’புதுச்சூழலுக்கிணங்கல்!’’ ACCLIMATISATION. நமக்கு பழக்கமில்லாத வெப்பநிலை குளிர்நிலை வாயுநிலை உள்ள பகுதிகளுக்கு சென்று அங்கேயே சிலநாட்கள் தங்கி நம்முடைய உடலை அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்வது! அப்படி பண்ணினால்தான் ஜம்மு காஷ்மீர் மாதிரியான உயரமான இடங்களில் ஓடமுடியும். திடீரென்று ஒருநாள் வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் குதித்து அடுத்தநாளே ஓடி ஓடி தீவிரவாதிகளை கொல்வதெல்லாம் விஜயகாந்த் அர்ஜூனால்தான் முடியும்!

எனவே நான் போட்டிக்கு பத்து நாள் முன்பாகவே சென்று சேர்ந்தேன். தரைவழி செல்வதுதான் உடலுக்கு நன்மை பயக்குமென்பதால், சென்னையிலிருந்து ஜம்மு, அங்கிருந்து ஸ்ரீநகர், கார்கில் வழி லே வை அடைந்தேன் (இந்தப்பயணக்கதை தனி!) இதற்கே ஐந்து நாட்கள் பிடித்தது. எனக்கு முன்பே இந்தியாவின் மற்றபகுதிகளிலிருந்தும் கணிசமான ஆட்கள் குவிந்திருந்தனர். (நூறுபேருக்கு மேல்!) திட்டப்படி அங்கே சென்று தங்கி எட்டுநாளில் நான்கு நாட்கள் பயிற்சியாக ஓடுவது என்று முடிவெடுத்து… கடைசியில் பயிற்சியாக ஒருநாள்தான் ஓடமுடிந்தது. மற்ற நாளெல்லாம் நன்றாக ஊர்சுற்றினேன்! ராஃப்டிங், ட்ரெக்கிங், சளிபிடித்ததால் நிறைய மூக்கு சிந்திங் என கழிந்தது. திகில் படம் போல தினமும் சளியோடு ரத்தமெல்லாம் பார்க்க வேண்டியிருந்தது.

குளிரில் ஓடும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலாவது குளிர்! அக்குளிரால் மூக்கு மட்டும் விரைப்பாகி உணர்வற்று போய்விடுவது! ஓடும்போது மூக்குடன்தான் ஓடுகிறோமா இல்லை அது எங்காவது கழண்டு விழுந்துட்டுதா என்பதை தொட்டுதொட்டு பார்க்க வேண்டியிருந்தது. மூக்கு உறைந்துபோவதால் மூச்சுவிடுவதில் சிரமம். வாய்வழியாகத்தான்! ஓட ஓட உடலெல்லாம் வெதுவெதுப்பாக ஆனாலும் கைகள் மட்டும் குறிப்பாக உள்ளங்கைகள் குளிர் அப்படியே தங்கி வளர ஆரம்பித்துவிடுகிறது. இந்த இரண்டு சிக்கல்கள் அல்லாது மலையேறும் போது மூச்சிரைப்பது, வேகமெடுத்தால் தலைக்குள் பூச்சி பறப்பது மாதிரி சிக்கல்களும் இருந்தன!

கடந்த ஒருமாதமாக வெறுங்காலில் ஓடி பயிற்சிபெற்று வந்தேன்! ஆனால் கூரான கற்களின் அந்த தேசத்தில் வெறுங்காலில் ஓடினால் கற்கள் கால்வழி ஏறி மூளையை பதம்பார்க்கும் வாய்ப்பிருந்தது. ஊரில் இறங்கிய மூன்றாவது நாளிலேயே பாதங்களில் வெடிப்பு உண்டாகி அது பாளம்பாளமாக வெடித்து ரத்தம் கேட்க ஆரம்பித்தும்விட்டது.

அதிகாலை ஆறுமணிக்கு உறையவைக்கும் குளிரில் போட்டி தொடங்கிவிட்டது. உள்ளூர் ஸ்கூல் பையன்களுக்கு நடுவில் வெளிநாட்டு வெளியூர் ஆட்டக்காரர்களோடு இறங்கினேன். ஊருக்குள் ஆயிரக்கணக்கில் சுற்றிக்கொண்டிருந்த அழகழகான வெளிநாட்டு உள்நாட்டு மங்கையரில் ஒருவரையும் காணோம்! முழுக்க அவர்களுடைய மாமன்களும் மச்சான்களும் மட்டும்தான் வந்திருந்தனர். அதுவே பெரிய ஏமாற்றமாக இருந்தது.

மூக்கு உறைந்துவிடாமலிருக்க பெட்ரோலியம் ஜெல்லி ஒரு டப்பா போட்டு பூசிக்கொண்டேன். போட்டி தூரத்தின் முதல் பத்து கி.மீ முழுக்க முக்கி முக்கி முழுவீச்சில் ஓடாமல் பொறுமையாக காலுக்கு வலிக்காமல் நுரையீரலுக்கு நோகாமல் ஓடுவது! கடைசி பத்துகி.மீ காட்டுத்தனமாக ஓடி பந்தயதூரத்தை எப்போதும் கடக்கிற நேரத்தில் கடப்பது என்று ஸ்ட்ராடஜியை உருவாக்கியிருந்தேன்.

திட்டமிட்டபடி முதல் பத்து கி.மீ பொறுமையாக ஓட ஒரு மலைதான் ஏறி இறங்கவேண்டியிருந்தது. ஸ்பிட் டுக் என்கிற அந்த மலையின் மேல் ஒரு புத்த மடலாயம் வைத்திருக்கிறார்கள். அங்கே ஒரு உக்கிரமான காளிமாதா சிலை இருக்கிறது. காளியின் முகத்தை துணிபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துக்கள் நிறையபேர் ‘’காளி கா மந்திர்’’ என்றே கேட்டு வந்தடைகிறார்கள்! அடுத்த சில கி.மீ கிராமங்களின் கடினமாக மண்சாலைகளில்… கடைசி ஏழு கி.மீ ஓட சாலையில் இறங்கினோம். என்னுடைய ஒட்டுமொத்த ஆற்றலையும்திரட்டி ஓட முடிவெடுத்தேன்.

அது ஒரு செங்குத்தான சாலை… ஏறி ஏறி… ஏறிக்கொண்டு மட்டுமேதான் இருந்தது. வழியில் எதிர்படுகிறவர்களையெல்லாம் ‘’எல்லை கிதர் ஹே’’ என்று கேட்க எல்லோருமே ஊப்பர் ஊப்பர் என்றார்கள்! உங்க ஊர்ல ஊப்பர் மட்டுமேதானாடா என்று கேட்கத் தோன்றியது. பாதையும் மேலே ஏறிக்கொண்டே சென்றது. கடைசிவரை ஊப்பர்தான். அடேய் நீச்சேவே இல்லையாடா என்று உடல் கதறியது! கடைசி எட்டு கிலோமீட்டர்களை ஓடிக்கடப்பதற்குள் நுரையீரல் நூடூல்ஸாகியிருந்தது. நடக்கவும் கூட சிரமமாக இருந்தது. பத்தடி ஓடுவதும் பத்தடி நடப்பதுமாக…

பந்தய தொலைவை கடக்கும்போது இரண்டு மணிநேரமும் நாற்பத்திரண்டு நிமிடங்களும் ஆனது! சென்னையில் இதே தூரத்தை இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே முடிப்பேன்! ஓடி முடிக்கும்போது சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. லே வின் கொடுமைகளின் ஒன்று இது. அதிக குளிரிலும் சுட்டெரிக்கும் வெயில். ஆனால் ஒரு துளி கூட வேர்க்காது. உடலில் இருக்கிற நீரெல்லாம் வற்றி டீஹைட்ரேட் ஆனாலும் உணர முடியாது. தலைசுற்றல் வந்தபிறகுதான் தண்ணீரே குடிக்கத்தோன்றும்! சென்னையில் ஓடும்போது பைப்பை உடைத்துவிட்ட மாதிரி வேர்த்துக்கொட்டும். ஆனால் லேவில் ஓடும்போது உடலின் மர்மதேசமொன்றில் இரண்டுதுளிதான் வியர்த்தது.

ஒருவழியாக ஓடிமுடித்து ஓய்ந்து போய் வந்து உட்கார்ந்தேன். மனதிற்குள் மிகப்பெரிய விஷயத்தை சாதித்துவிட்ட திருப்தி. சும்மாவா எல்லோருக்கும் ஓட்டம் ஸ்டார்ட்டிங் பாய்ன்டில் தொடங்கினால் எனக்கு சென்னையிலேயே தொடங்கிவிட்டது. லீவ் போட்டு, பணம் புரட்டி, கடைசி நேரத்தில் மொத்த திட்டத்தையும் கைவிட வேண்டிய நிலைமைகளை சமாளித்து, தன்னந்தனியாக இவ்வளவு தொலைவு கிளம்பி, வந்து சேர்ந்து ஓடிமுடித்திருந்தேன்! உள்ளுக்குள் நெருக்குகிற உணர்வுகள் திரண்டு ஒரு சின்ன அழுகை கண்ணுக்குள் முட்டிக்கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு பெரியவர் என்னைவிட வயதில் மூத்தவர் அவரும் ஓடிமுடித்து வந்தமர்ந்தார். மிகுந்த உற்சாகமாக இருந்தார். கையில் ஜூஸ் டப்பாவை உறிஞ்சிக்கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தேன். ஊர் பேர் விலாசமெல்லாம் விசாரித்துவிட்டு ‘’எவ்ளோ டைமிங்’’ என்றேன், எட்டுமணிநேரம் என்றார்! ‘ஓ ஃபுல்லா’’ என்றேன். பொதுவாக 42கிமீ நீளமுள்ள முழுமாராத்தான் போட்டிகளில் வயதானவர்கள் ஏழு எட்டு மணிநேரமெல்லாம் நடந்தே முடிப்பதுண்டு. ஆனால் அவரோ முகத்தில் புன்னகையோடு இல்லப்பா ‘’கார்டூங்லா’’ என்றார்.

‘’கார்டூங்லா சேலஞ்ச்’’ உலக அளவில் நடக்கிற அல்ட்ரா மாரத்தான்களில் ஆபத்தானதும் சிரமமானதுமாக கருதப்படுவது. உலகின் மிக உயரமான Motorable road களில் ஒன்றான கார்டூங்லா என்கிற மலையுச்சி கிராமத்திலிருந்து லே வரை ஓடிவரவேண்டும். 18ஆயிரம் அடி உயரத்தில்… நடக்கிற இந்த மாரத்தானில் மொத்தமே ஐம்பது அறுபதுபேர்தான் உலக அளவிலிருந்து கலந்துகொள்ளுவார்கள்! அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர்தான் அந்த டெல்லிவாலா பெரியவர்! அவர் என்னிடம் நீங்க எவ்ளோ தூரம் என்றார். நான் ஹாஃப் என்று ஷேம் ஷேமாக மென்று முழுங்கினேன். டைமிங் கேட்டார். ஊக்கப்படுத்தினார். அவருடைய முகத்தில் அத்தனை உற்சாகம். ‘’என்னுடை பேரன்கிட்ட சவால் விட்டுட்டு வந்தேன்…’’ என்றார்.

மாரத்தான்கள் உங்களை ஓயவே விடாது. ஓடுகிற ஒவ்வொருவருக்குமான எல்லை ஒரு புதிய ஆரம்பத்தை கண்டடைவதாகவே இருக்கும். ஒருமுறை ஓட ஆரம்பித்துவிட்டால் உங்களுடைய எல்லை என்பது அடுத்த சவாலாகத்தான் இருக்கும். அது விரிவடைந்துகொண்டேதான் செல்லும். பத்து கிலோமீட்டர் ஓடியவர் அடுத்தமுறை 21போக முடிவெடுப்பார். 21 என்றால் 42… அப்படியே அல்ட்ரா.. சைக்ளிங், அயர்ன்மேன்… என்று எல்லைகள் விரியுமே தவிர அப்படா முடிச்சிட்டோம் அவ்ளோதான் என்று உட்காரவிடாது. டெல்லிதாத்தா எனக்கான சவாலை தந்துவிட்டு சென்றார். அடுத்த ஆண்டு கடுமையான கார்டூங்லா பண்ணவேண்டும், அதுவும் எட்டுமணிநேரத்திற்குள்… என நினைத்துக்கொண்டேன். அதெல்லாம் அடுத்த செப்டம்பரில். இப்போதைக்கு டிசம்பரில் நடக்கிற சென்னை மாரத்தானில் FULL MARATHON 42K ஓடவேண்டும்.


01 August 2015

உள்ளத்தில் நல்ல உள்ளம்...




எம்எஸ்விக்கு இதைவிட சிறப்பாக அஞ்சலி செலுத்த முடியாது என்கிற வகையில் அட்டகாசமான ஒரு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எழுத்தாளர் ஞாநி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி இது.கங்கை அமரன் எம்எஸ்வி குறித்த தன்னுடைய பால்யகால நினைவுகளை பேசி பாடல்களை பாடி அசத்தினார். எம்எஸ்வி தன்னுடைய பல சூப்பர் ஹிட் பாடல்களையெல்லாம் வெறும் 5மணிநேரத்தில் போட்டது என்று குறிப்பிட்டார்!

ரிகார்டிங் தியேட்டரில் சிங்கம்போல் கர்ஜித்தபடி பவனி வரும் எம்எஸ்வி வெளியே வந்துவிட்டால் பூனைபோல எல்லோரிடமும் அத்தனை பாசமாக பழகுவாராம். சாகும் தருவாயிலிருந்த எம்எஸ்வியை கங்கை அமரன் சந்தித்து அவருக்கு அவருடைய பாடல்களையே பாடிக்காட்டியதையும், அதைகேட்டு எம்எஸ்வி கண்கலங்கியதையும்.. உடனே ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா’’ என்று இவர் பாடியதையும் சொன்னது இப்போது வரையிலுமே உலுக்கி எடுக்கிறது.

நம்முடைய குழந்தைகளுக்கு எம்எஸ்வியின் பாடல்களை அறிமுகப்படுத்த வேண்டிய கடமையையும் எம்எஸ்வி ஏன் ஒரு மாமேதை என்பதையெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு பாடல்களை பாடியும் குறிப்பிட்டும் சொன்னார். இளையராஜாவின் பல பாடல்கள் எம்எஸ்வியின் பாடல்களின் தாக்கத்தில் உருவானவை என்பதையும் உதாரணங்களோடு விளக்கினார். உச்சமாக எலந்தப்பழம் பாடலில் இருக்கிற சோகத்தையும் வெளிப்படுத்தி காட்டினார். எம்எஸ்வி தன்னுடை முதல்படத்திற்கு இசையமைக்கும்போது வயது வெறும் 21தானாம். அந்தகாலத்து அநிருத் போல என்று நினைத்துசிரித்துக்கொண்டேன். ஆனால் அவர் சாகும்வரைக்கும் அநிருத்தாகவே இருந்திருக்கிறார்!

கங்கை அமரன் ஒரு தமிழிசை கூகிளாக இருக்க வேண்டும். எப்போதோ வந்த ஒரு படத்தின் பெயரை சொல்லி அப்படத்தின் அத்தனை பாடல்களை வரிசையாக சொல்லி வரிகளையும் கூட குறிப்பிட்டு சொல்கிறார்! பார்வையாளர்கள் சில பாடல்களை பாடசொல்லி கேட்க அதையும் உற்சாகமாக பாடுகிறார். கங்கை அமரனின் பலமும் பலவீனமும் இந்த எளிமையாகத்தானிருக்க வேண்டும்.

எழுத்தாளர் வே.மதிமாறன் மிகவும் கடுமையான சிடுமூஞ்சி அரசியல் விமர்சகர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று அவர் எம்எஸ்வி குறித்தும் அவருடைய பாடல்களை குறித்தும் அத்தனை ரசனையோடும் நகைச்சுவையோடும் பேசினார். பாடல்களை அழகாக பாடவும் செய்கிறார். சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த பேச்சு இது.

இசைஞானியின் நிகழ்ச்சிக்கு ஏழைகளால் போக முடியாதபடிக்கு நிறைய நுழைவுக்கட்டணம் வைத்துவிட்டதால் அதில் கலந்துகொள்ள முடியாத சோகம், எழுத்தாளர் ஞாநியின் இந்த இலவச நிகழ்ச்சியில் தீர்ந்தது. இசைஞானி குறித்த ஞாநியின் பதிவுக்கு கங்கை அமரன் மிகுந்த பொறுப்புணர்வோடும் நாகரீகத்தோடு பதில் தந்தார். ''இசைஞானியின் நிகழ்ச்சியை தொடர்ந்து எம்எஸ்வி பெயரில் ஒரு அறக்கட்டளை துவக்கப்பட்டு அதன் வழி நலிந்த திரையிசைகலைஞர்களுக்கு உதவப்படும்'' என்றார். அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவன் நானே என்று ஞாநியும் சொன்னார். நிகழ்ச்சியில் எம்எஸ்வி எந்த அளவுக்கு புகழப்பட்டாரோ அதேஅளவில் இளையராஜாவும் பேசப்பட்டார். அவருடைய பாடல்களை பற்றியும் அதன் பெருமைகளையும் கூட பேச்சாளர்கள் குறிப்பிட்டுப்பேசினர்.

நிகழ்ச்சியில் எம்எஸ்வியின் சிறந்த பாடல்கள் சில திரையிடப்பட்டன. எத்தனையோ தேடவை கேட்ட பாடல்கள்தான் என்றாலும் நேற்று பெரிய திரையில் சரவ்ன்ட் சவுண்டில் கேட்டபோது உலுக்கி எடுத்தது! அதிலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்…’’ மற்றும் மயக்கமா கலக்கமாவும் திரையிடப்பட்டபோது அரங்கத்தில் பாதி அழுதுகொண்டிருந்தது! எத்தனை பேரை எத்தனை சந்தர்ப்பங்களில் ஆற்றுப்படுத்திய பாடல்கள் இவை.

திரையிடப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை எட்டு அல்லது பத்து இருக்கலாம். அதில் பாதி எம்ஜிஆருடையது. மீதி நான்கு பாடல்கள் சௌகார் ஜானகி நடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாநி எம்எஸ்விக்கு மட்டுமல்ல சௌகார் ஜானகிக்கும் ரசிகராயிருக்க கூடுமோ என்கிற ஐயத்தோடு கிளம்பினோம், நேற்றைய மாலைப்பொழுதினை அர்த்தமுள்ளதாக மாற்றிய அவருக்கு நன்றி.

20 July 2015

சென்னை மெட்ரோவில்...




ஹாலிவுட் படமா அல்லது ஹார்பிக் விளம்பரமா என ஐயுறும் வகையில் அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் புதிய மெட்ரோ ரயில் நிலையத்தை! தரையை பார்த்து தலைவாரலாம், வாரிய தலையை சரிபார்க்கலாம்! காணுமிடமெல்லாம் வடநாட்டு முரட்டு செக்யூரிட்டிகள். எங்கு நோக்கினும் அழகழகான இளம் பிஞ்சு மகளிர் சிப்பந்திகள், அமெரிக்கா போவதற்கு கூட இவ்வளவு சோதனைகள் இருக்குமா தெரியவில்லை, ஆனால் எத்தனை படிகள் எத்தனை தடைகள் எத்தனை கேள்விகளை தாண்ட வேண்டியிருக்கிறது, அரும்பாக்கம் போகிறோமா அண்டார்டிகாவுக்கான சாகசப்பயணமா என்கிற சந்தேகம் எழுந்தபடியேயிருந்தது!

பத்து படிகளுக்கும் கூட எஸ்கலேட்டர் வசதி. ஒற்றை மாடிக்கே லிஃப்ட் வசதி! டிக்கட் எடுக்க தானியங்கி இயந்திரம், மிச்சக்காசை புத்தம் புது பத்துரூபாய் காயின்களாகவே அள்ளித்தருகிறது. எங்கு பார்த்தாலும் எதையாவது எழுதி எழுதி வைக்கப்பட்டிருக்கும் போர்டுகள்! தமிழ், இங்கிலீஸ் இந்தி என மும்மொழி கொள்கை! ஆனால் இன்னமுமே பயணிகள் யாரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டதாய் தெரியவில்லை. நான்கு கிலோமீட்டர் ரயில் பயணத்திற்கு இரண்டுகீலோமீட்டர் நடக்கவும் சுற்றவும் படியேறவும் இறங்கவும் என சிந்துபாத் பயணமாக இருப்பதால் அப்படி இருக்கலாம். கூடவே எக்கச்சக்கமான டிக்கட் விலையும். ஒரு வேளை சென்னை முழுக்க எல்லா பாதைகளும் தயாராகி இணைக்கப்பட்டுவிட்டால் இனிக்குமோ என்னமோ! ஆனால் இப்போதைக்கு இது பொருட்காட்சி ராட்டின சாதனம் போல் குடும்பங்கள் கொண்டாடும் மூன்றாவது வாரம்!

கவனித்ததில் இந்த ரயில்களில் ஒரு ஏழையைக்கூட பார்க்க முடியவில்லை. அங்கு மட்டுமல்ல ரயில்நிலையம் இருக்கிற ஏரியாவிலும் கூட! மிக நன்றாக சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்!. டிக்கட் விலை நிர்ணயம் தொடங்கி இந்த தானியங்கி ப்ளாப்ளாக்கள் வரை எல்லாமே படித்த நடுத்தரவர்க்கத்தினருக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. ஆனால் பார்க்கிங்கில் சைக்கிள்களுக்கு ஃப்ரீ என்று போட்டிருந்தார்கள், சைக்கிள்கள் எதையும் காணவில்லை! உள்ளே அனுமதிப்பார்களா என்கிற தயக்கம் காரணமாக இருக்கலாம். இன்னுமே கூட சென்னையின் படித்த லோயர் நடுத்தரவர்க்கத்திற்கு இதுமாதிரி சுத்தபத்தமான ஆச்சாரமான இடமென்றால் தயக்கங்கள் தாறுமாறாக இருப்பதை கவனித்திருக்கிறேன்.

எல்லோர் கையிலும் தவறாமல் செல்போன் மினுக்குகிறது. உலகிலேயே அதிக செல்ஃபிகள் எடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் இதுதான் என்கிற சாதனை விரைவில் நிகழ்த்தப்படலாம். நின்றுகொண்டு உட்கார்ந்து கொண்டு, கம்பியை பிடித்துக்கொண்டு பிடிக்காமல், சேர்ந்து பிரிந்து, கதவுக்கு பக்கத்தில் ஜன்னல் ஓரம், உட்கார்ந்து என இஷ்டம்போல் படமெடுக்க முடிகிறது. நம்மை தடுக்கவோ தட்டிக்கேட்கவோ ஈ காக்கா கூட இல்லை!

தானியங்கி கதவு என்பதால் புட்போர் அடிக்க முடியாது. உள்ளே சைட் அடிக்கவோ ஈவ்டீசிங் பண்ணவோ எச்சில் துப்பவோ தம்மடிக்கவோ முடியாதபடி ஏகப்பட்ட கெடுபிடிகள் போதாகுறைக்கு எங்கு பார்த்தாலும் கேமராக்கள் கண்ணடிக்கின்றன. இதெல்லாம் இல்லாமல் என்ன ரயில் பயணமோ… என்று சலிப்பாகவே இருக்கிறது.
கோச்சுகளின் உள்ளே ஒரு பெண்ணின் இனிமையான குரல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. மகளிருக்கு இடம்கொடுங்கள், ஹெட்போனில் பாட்டு கேளுங்கள், இடதுபக்க கதவு திறக்கப்போகிறது, கோயம்பேடு வந்துவிட்டது என சொல்லிக்கொண்டே வருகிறது! பொதுவாக கரகரப்பான ஆன்டிகள் குரலையே கேட்டுப்பழகிய நமக்கு ஜிலுஜிலுவென ஹஸ்கி வாய்ஸில் பேசும் இக்குரல் மயக்குகிறது! பயணிகளை மகிழ்விக்க அழகு குறிப்பு, வீட்டு மருத்துவம், ஜோதிடம் என சுவராஸ்யமான செய்திகள் கூட சொல்லலாம்!

இந்த ரயிலிலிருந்து சென்னையை பார்க்க வெறுப்பாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பில்டிங் பில்டிங்காக பத்தவைக்காத பட்டாசு மாதிரி மொக்கையாக… ஆனால் இரவில் பார்க்கும்போது ஜாலியாக ஒளிமயமாக இன்பம் தரும்வகையில் தீபாவளி போல் இருக்கிறது.

ஒருவட்டமான சாப்பாட்டு டோக்கன் போல் ஒன்றைத் தருகிறார்கள், அதுதான் டிக்கட்டாம்!! அதை தேய்த்தால்தான் ரயில் நிலையத்தின் உள்ளே செல்லகதவு திறக்கிறது. ரிட்டர்ன் வரும்போது அதை மீண்டும் உண்டியலில் போட்டால்தான் வெளியேற முடியும்! (ஏற்றிவிட வருபவர்கள் ரயில் நிலையத்தில் உள்ளே செல்ல முடியாது, ப்ளாட்பார்ம் டிக்கட்டெல்லாம் இல்லை). டிக்கட் இல்லாமல் பயணிப்பவர்ளை பிடிக்க இந்த டோக்கன் ஐடியாவை பிடித்திருக்கிறார்கள். டிக்கட் இல்லாமல் பயணித்தால் உள்ளேயே மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்! வடபழனிக்கு டிக்கட் வாங்கிவிட்டு கோயம்பேடு வரைக்கும் பயணித்தும் ஏமாற்ற முடியாது!

ஆனால் அதெல்லாம் நம்முடைய சென்னை பாய்ஸிடம் செல்லாது! எங்களோடு பயணித்த கல்லூரி மாணவர்கள் சிலர், பத்துபேருக்கு ஐந்துடிக்கட் மட்டும் எடுத்துக்கொண்டு இன்பமாக பயணித்து அசத்தினார்கள்! காய்ன் தேய்க்கும் இடத்தில் இரண்டுபேர் சேர்ந்தாற்போல ஒட்டிக்கொண்டும் கட்டிக்கொண்டும் நின்றுகொள்ள வேண்டும். தேய்த்ததும் அந்த சிறிய கதவு திறக்கும்போது இருவரும் எதிர்புறம் அப்படியே ஓடிவிடவேண்டும். திரும்பும்போதும் இதே கட்டிப்புடி டெக்னிக்தான்! இதை செய்து முடித்து வெளியே வந்து கெத்துடா என்று சொல்லிக்கொண்டிருந்தனர்! செக்யூரிட்டி இருந்திருந்தால் கதை வேறுமாதிரி இருந்திருக்கும்! ஆனாலும் அவர்களுடைய முயற்சி மேற்கோள் காட்டப்படவேண்டியது. நிச்சயம் இது ஒரு முயற்சி செய்து பார்க்கவல்ல நல்ல ஐடியாதான். ஒருமுறை முயற்சி செய்ய வேண்டும்… காதலியோடு!

24 June 2015

கன்னட சினிமா கண்டன்டே...



தமிழ்நாட்டில் கன்னடப்படங்கள் பார்க்கிற தமிழர்கள் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து இருநூற்றி ஒன்றாக இருக்கலாம். அதிகம் போனால் இருநூற்றி இருபத்தி ஒன்றாக இருக்கலாம். எப்போதாவது ரீசசன் காலத்தில் சென்னையில் சில திரையரங்குங்களில் கன்னடப்படங்கள் திரையிடப்படுவதுண்டு. டோலிவுட்டும் மல்லுவுட்டும் இங்கே கோலோச்சுகிற அளவிற்கு சான்டல்வுட்டிற்கு வரவேற்பில்லை. கன்னட ஹீரோயின்களோ அதன் மொழியோ இதற்கு காரணமாக இருக்கலாம். அது எளிதில் காணக்கிடைப்பதில்லை என்பதும் காரணமாயிருக்கலாம்.

கடைசியாக மாயாஜாலிலும் சத்யத்திலும் தியேட்டரில் கன்னடபடங்கள் எப்போதாவது வெளியாகும். பார்க்க நினைத்து பார்க்க முடியாமல் போகும். முன்பு சாய்குமார் நடித்த சில கன்னடப்படங்கள் தமிழ் டப்பிங்கில் வெளியாகும். எல்லா படங்களிலும் அவர் போலீஸாக நடித்திருப்பார். கெட்டவார்த்தைகளை மானாவாரியாக வாரியிரைப்பார். கன்னட பக்திப்படங்கள் கூட அடிக்கடி டப்பிங் ஆவதுண்டு. ஆனால் அவை தெலுங்கா கன்னடமா என்று குழப்பத்தோடுதான் காட்சி தரும். எஸ்பிபி, நெப்போலியன் நடித்த சாய்பாபா படம் கூட உண்டு. அதுவும் நேரடி கன்னடம்தான்.

சில வாரங்களுக்கு முன்பு கூட முரட்டுக்கைதி என்கிற படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதாக தினத்தந்தியில் போட்டிருந்தார்கள். அதற்கு முன்பு தண்டுபால்யா என்கிற படத்தை கரிமேடு என்கிற பெயரில் தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டார்கள். முன்பு ராஜிவ் கொலைவழக்கு பின்னணியில் ஒற்றைக்கண் சிவராசன், தாணுவின் கதையை சயனைட் என்று எடுத்த போதும் அது தமிழில் வெளியான நினைவு. அவ்வளவுதான் நமக்கும் சான்டல்வுட்டுக்குமான நெருக்கம். மணிரத்னம், பாலுமகேந்திரா, கமலஹாசன் என சிலர் முன்னொரு காலத்திலே அங்கே போய்வந்தாலும், இப்போதைக்கு நமக்கு 'சுதீப்' வில்லன் நடிகர்தான்.

இவை தவிர்த்து திரைப்படவிழாக்களில் திரையிடப்படும், தூர்தர்ஷனில் சப்டைட்டிலோடு போடப்படும் கறுப்புவெள்ளை கிரிஷ் கர்னாட், காசரவல்லி வகையறா படங்கள் அறிவார்ந்த சமூகத்திற்கு நெருக்கம். உபேந்திரா, சுதீப், வீரப்பன் கடத்தியதால் ராஜ்குமார், அவருடைய மகன் சிவராஜ்குமார், விஷ்ணுவர்தன் என நமக்குத்தெரிந்த கன்னட உலகம் ரொம்பவே சின்னது. அங்கே என்ன நடக்கிறது என்ன படம் எடுக்கிறார்கள் என்பதெல்லாம் ஏதோ நீலமலை ரகசியம் போலவேதான் இப்போதும் இன்டர்நெட் எராவிலும் இருக்கிறது. தமிழில் வெளியான பலபடங்களும் அங்கே கன்னாபின்னாவென்று ரீமேக் செய்யப்படுகிறது.

கன்னட லேடி சூப்பர்ஸ்டார் மாலாஸ்ரீ சென்னையை சேர்ந்தவர்தான் ஆனால் அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டோம். விஜயசாந்தியைவிடவும் அதிக புகழ்மிக்க அதிரடி நடிகை. காமெடிடைம் பண்ணிக்கொண்டிருந்த கணேஷ் ''முங்காரு மலே'' என்கிற திரைப்படத்தின் வெற்றியால் இன்று உச்சம் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் கதைகூட நமக்கு தெரியாது. எப்போதாவது தினகரன் வெள்ளிமலரில் இரண்டுபக்கத்தில் கன்னட சினிமா பற்றி கட்டுரைகள் எழுதுவதுண்டு. அதைத்தாண்டி தமிழ் ஊடகங்களில் கன்னட சினிமா உலகம் குறித்த கட்டுரைகளை வாசித்த நினைவில்லை. ஆனால் அங்கே புதிய அலை இயக்குனர்களின் வரவும் புதிய முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. லூசியாவைப்போ நிறைய புதுமுக இயக்குனர்களின் கதையம்சமுள்ள கமர்ஷியல் படங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

வெவ்வேறுவிதமான மாற்றுமுயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. புதிய இளைஞர்கள், வித்தியாசமான களங்கள், இதுவரை எடுத்துக்கொள்ளாத பின்னணி, படமாக்கலில் தரம் என்று இளைஞர்கள்தான் அங்கே டாப் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 2014ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கன்னடப்படங்களில் பாதி பெரிய நடிகர்கள் இல்லாத புதிய இயக்குனர்கள் இயக்கிய புதுமுகங்களின் படங்களே.

‘’உளிடவரு கண்டன்டே!’’ (ULIDAVARU KANTANTE). சென்ற ஆண்டு துவக்கத்தில் வெளியான கன்னடப்படம். 2014ன் எல்லா டாப்டென் கன்னடப்பட பட்டியல்களிலும் இடம்பிடித்திருந்த ஹிட் இது!

இப்படத்தின் இயக்குனர் ரக்சித் ஷெட்டியை கர்நாடகாவில் கொண்டாடி கொலுவைத்திருக்கிறார்கள். தமிழில் வெளியான ஆரண்யகாண்டம் மாதிரியான வித்தியாசமான கலாபூர்வமான கமர்ஷியல் படம் இது. அதனாலேயே சான்டல்வுட்டில் தோல்வியடைந்தாலும் விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவை பெற்றது. ட்ரைலரை பார்த்துவிட்டு படம் வெளியான சமயத்தில் இப்படத்தினைக் காண பெங்களூருவுக்கு பஸ் ஏறிவிடவும் முடிவெடுத்திருந்தேன். ஆனால் பெங்களூருவில் இப்படம் சப்டைட்டிலோடு திரையிடப்படவில்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது. தெலுங்கும் மலையாளமும் காட்டுகிற ஸ்னேகத்தில் பத்துசதவீதம் கூட கன்னடம் காட்டுவதில்லை.

படத்தின் திருட்டு விசிடி கிடைக்குமா என சல்லடைபோட்டு தேடினேன். சகல எழுத்தாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் திரைப்பட ஆளுமைகளுக்கும் சிடி விற்கிற பார்சன் மேனர் பஷிரிடமும் இப்படத்தின் குறுந்தகடு கிடைக்கவில்லை. பஷிரிடம் கிடைக்காத குறுந்தகடு தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இன்டுஇடுக்கிலும் கிடைக்காது. இப்படி எங்குமே அப்படம் காணக்கிடைக்காத நாளில் அப்படத்தை நண்பர் ஒருவர் எங்கோ இணையத்தில் தரவிறக்கி கொண்டு வந்து தந்தார், வித் சப்டைட்டில். ஆர்வத்தோடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். நிச்சயமாக கன்னட ‘’ஆரண்யகாண்டம்’’தான் இது.

ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர் யார் என்கிற விசாரணையில் வெவ்வேறு நபர்களால் சொல்லப்படும் ஐந்து கதைகள், ரஷமோன் பாணியில் கதை வெவ்வேறு பார்வைகளில் அந்தந்த கதாபாத்திரங்களால் சொல்லப்படுகிறது. ‘’உளிடவரு கண்டன்டே’’ என்றால் AS SEEN BY THE REST என்று அர்த்தம். ஐந்து கதைகளும் வெவ்வேறு விதமான குணங்களில் நிறங்களில் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தப்பட்டு படைக்கப்பட்டிருக்கின்றன. மால்பே என்கிற எழில்மிகு கடற்கரை கிராமம்தான் பின்னணி. அங்குள்ள எளிய மனிதர்களையும் அதன் சடங்குகளையும் இசையையும் வாசனை மாறாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாத்திரத்தேர்வும் என எல்லாவகையிலும் சர்வதேசத்தரம்.

இன்னும்கூட நிறைய ஜிலேபி சுற்றி படத்தை புகழலாம். போதும். மீதியை இணையத்தில் தரவிறக்கி காண்க. நல்ல அச்சு உபதலைப்புகளுடன் கிடைக்கிறது. எண்ணற்ற உலகப்படங்களினால் உந்தப்பட்டு அதே பாணியில் இப்படத்தை எடுத்திருப்பார் போல இயக்குனர். ஏகப்பட்ட உலகப்பட முன்மாதிரிகளை பார்க்க முடிந்தது. ஒரு பகுதி மொத்தமும் ‘’சின்சிட்டி’’ படத்தின் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் வசனங்களும் பல காட்சிகளும் க்வான்டின் டாரன்டினோவின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பதை டாரன்டினோ ரசிகர்களால் எளிதில் உணரமுடியும். படத்தின் க்ளைமாக்ஸ் மொத்தமும் ஒரு பாடலில் வைத்திருந்ததும் பிடித்திருந்தது.

இப்படத்தின் திரைக்கதை பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம் படத்தின் கதை அத்தனை சிக்கலானது. இதற்கு திரைக்கதை பண்ணுவது எளிதான காரியம் இல்லை. நேர்கோட்டில் அமையாத கதை சொல்லல் வேறு! இந்த முறுக்குப்புழிகிற திரைக்கதையை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் கொடுத்ததற்காகவே படம் நிறைய விருதுகளையும் வென்றிருக்கிறது. படத்தின் திரைக்கதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அப்படத்தின் அலுவல் இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி வாசித்துப்பார்க்கலாம். காட்சிகளை இன்னும் நன்றாக உள்வாங்கிக்கொள்ள உதவும். முடிந்தால் யுடீயுபில் படத்தின் ட்ரைலரை ஒருமுறை பார்க்கவும். அதற்குபிறகு எப்படியாவது தேடிப்பிடித்து இப்படத்தை பார்த்துவிடுவீர்கள்.

இவ்வளவு நல்ல படத்தில் நாயகன் மட்டும் திருஷ்டிபோல இருந்தார். ஓவர் ஆக்டிங் என்றும் கூட சொல்லலாம். அலட்டிக்கொள்ளாமல் நடிக்க முயற்சி செய்து ரொம்பவே அலட்டியிருப்பார். இந்த நல்ல படத்திற்கு ஏன் இப்படி ஒரு மொக்கை நடிகரை நாயகனாக பயன்படுத்தினார்கள் என்று விக்கிப்பீடியாவில் போய்த்தேடினால் அந்தாள்தான் படத்தின் இயக்குனர்! ரக்சித் செட்டி. அதனால்தான் கொஞ்சம் ஓவராக பண்ணியிருக்கிறார். அந்த இயக்குனரின் முந்தைய படங்கள் ஏதாவது தேறுமா என்று இணையத்தை துலாவினால் இதுதான் அவர் இயக்கிய முதல்படம்.

இதற்குமுன்பு அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த ‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. ‘’லூசியா’’ படம் வெளியான அதே சமயத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட ரொமான்டிக் திரைப்படம் இது. இதில் ரக்சித் ஷெட்டிதான் ஹீரோ. இயக்குனர் வேறு ஆள்.

‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ குறித்து தேடிப்படிக்க ஆரம்பித்தால் அப்படம் உளிடவரு கண்டன்டேவை போலவே இன்னும் சுவராஸ்யமான படமாக இருந்தது. மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முழுக்க புதுமுகங்கள் மட்டுமே கொண்டது.
பாக்ஸ் ஆபீஸில் பல ரெகார்டுகளை தகர்த்திருக்கிறது. இப்படத்தையும் தேடத்துவங்கினேன். கடைசியில் அந்த ‘’நண்பர் ஒருவர்’’தான் அதையும் தன்னுடைய ரகசிய இணையதளத்தின் வழி தரவிறக்கிக் கொடுத்தார். இப்படத்திற்கு சரியான சப்டைட்டில் கிடைக்கவில்லை. கிடைத்த சப்டைட்டிலில் ஆங்காங்கே மொழிபெயர்ப்பு மோசமாக இருந்தது. யாரோ ஆங்கிலம் தெரியாதவர் பண்ணின வேலைபோல. இருந்தும் படத்தை பார்த்தேன். அழகழகான வசனங்கள்தான் படத்தின் பலமே. கூர்ந்து கவனித்தால், அல்லது ரீவைன்ட் பண்ணி மீண்டும் மீண்டும் கேட்டால் வசனம் நன்றாகவே புரிந்தது.

மிகச்சில இடங்கள் தவிர்த்து. ஒரு நிமிடம் கூட அலுப்புதட்டாமல் செல்லுகிற மென்மையான காதல்கதை. இப்படியெல்லாம் தமிழில் காதல்கதைகள் எடுக்கப்படுவதேயில்லை. ROMCOM வகையறா படங்களை தமிழ்சினிமாவில் வழக்கொழிந்துவிட்டன. குட்டி குட்டியாக க்யூட்டான விஷயங்களின் கோர்வையாக புன்னகைக்க வைக்கும் காட்சிகள். எல்லாவற்றையுமே கேலியுடன் சித்தரிக்கும் ஒரு சிறுபிள்ளைத்தனம். வசனங்களில் யதார்த்தமாக தொனிக்கும் கவித்துவம். மௌனராகம் ரேவதி-கார்த்திக் மாதிரியான நாயக-நாயகியின் பாத்திரப்படைப்பு! என எல்லாமே ஈர்த்தது. இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காத இரண்டு மணிநேர சுவாரஸ்யம் இத்திரைப்படம். படத்தின் இயக்குனர் சுனி ரீமேக் உரிமையை தமிழில் யாருக்கும் தந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.

இப்படி வரிசையாக லூசியா, உளிடவரு கண்டன்டே, சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி என மூன்று கன்னடப்படங்கள் அடுத்தடுத்து பார்த்ததுமே மனதுக்குள் இயல்பாகவே தோன்றுமில்லையா? அடடா கன்னட சினிமாலயும் நிறைய நல்லபடங்கள் இருக்குதான் போலய்யா நாமதான் பாக்குறதில்ல என்று நினைத்து மேலும் தேடியதில் சென்ற ஆண்டு வெளியான கன்னடப்படங்களில் மெகாஹிட் ‘’உக்ரம்’’ தான் என்பது தெரிந்தது.

படம் குறித்து இணையத்தில் எல்லோருமே பாராட்டி தள்ளியிருந்தனர். படத்தின் ட்ரைலர் பார்த்தால் அதுவும் பேருக்கேற்றபடி உக்கிரமாகவே இருந்தது. இசையும் அந்த கலரும் மிரட்டியது. படத்திற்கு கேமரா மேன் ‘’பர்ஃபீ, ராசலீலா மாதிரி பெரிய பாலிவுட் படங்களுக்கு பண்ணின ரவி வர்மன்!

இப்படம் கன்னட சினிமாவின் பெருமை. ஹாலிவுட்டுக்கு கன்னடசினிமாவின் சவால் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் படிக்க கிடைத்தது. படத்திற்கான ரீமேக் உரிமைக்காக தமிழின் முன்னணி நாயகர்கள் போட்டிபோடுகிறார்கள். விஜய்கூட ரேஸில் இருக்கிறார். தெலுங்கில் பிரபாஸும், இந்தியில் சல்மானும் கூட ரீமேக் பண்ணப்போகிறார்கள் என்கிற தகவல்களும் எதிர்பார்ப்பை கூட்டின. இத்தனைக்கு இந்த படத்தில் நடித்த ஸ்ரீமுரளி ஒரு சாதாரண நடிகர்தான். ஆனால் ஒரேபடத்தில் அவர் மாஸ் ஹீரோவாகியிருக்கிறார். ஒரு கடத்தில் கைகள் நடுங்க எச்சில் விழுங்க... இதயம் படபடக்க இதுக்கு மேல தாங்கமுடியாதுடா பாத்தே ஆகணும்டா என்று உடனே இணையத்தில் தேடி அதை தரவிரக்கினேன். உபதலைப்புகளுடன் நல்ல எச்டி அச்சு கிடைத்தது.

பார்க்க ஆரம்பித்தால் காட்சி ஒன்றிலிருந்தே படம் பரபரவென பற்றி எரிகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவருகிறாள் நாயகி. அவள் இந்தியாவில் காலை வைத்ததும் போட்டுத்தள்ள காத்திருக்கும் நாயகியின் அப்பாவின் எதிரிகள். அப்பாவுக்கு தெரியாமல் நாயகி வந்துவிட அவளை காப்பாற்ற சாதாரண மெக்கானிக்கான நாயகனின் உதவியை நாடுகிறார்கள். வில்லன்களிடமிருந்து நாயகியை காப்பாற்றி தந்திரமாக தப்பிச்செல்ல, ட்ரான்ஸ்போட்டர் மாதிரி காட்டுத்தீ போல் கிளம்பியது படம். நிமிர்ந்து உட்கார்ந்தால் அப்படியே போய்கிட்டிருந்த படம்... ஹீரோ ஒரு சாதாரண மெக்கானிக்காக தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் தன் அம்மாவோடு வாழ்கிறான் என்பது தெரியவர... ஆனால் அவனுக்கு ‘’இன்னொரு பேர் இருக்கு, அவன் கோலார்ல யார் தெரியுமா’’ என்று ஃப்ளாஷ்பேக் போகும்போது அட நன்னாரிகளா பாட்ஷாடா இது என்று தோன்றி.. பிறகு அது மதுர, வேட்டைக்காரன், பகவதி என்று பயணித்து கஜேந்திராவின் சாயல்களுடன் கடைசியில் ஹீரோ ஜெயித்து… முடியல!

உக்ரம் பார்த்து இப்போது நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு கன்னடப்படங்கள் எதுவுமே பார்க்கவில்லை. பார்க்கும் ஆவலுமில்லை. லூசியா இயக்குனரின் அடுத்த படம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான் போல. அடுத்தபடத்திற்கு C10H14N2 என்று தலைப்பு வைத்திருக்கிறார், இது நிகோடினின் கெமிக்கல் நேம்! ஆர்வம் மேலோங்க காத்திருக்கிறேன்.

(தமிழ் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை)

17 June 2015

சிக்னலில் ஒரு போராளி



நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த சீசனின் முதல் மழை. அதற்குள்ளாகவே வெள்ளத்தில் சிக்கியதுபோல போக்குவரத்து நெரிசல். சாலையெங்கும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நடுரோட்டில் ஆறுபோல் ஓடுகிறது. இதுமாதிரி டிராபிக்கில் மாட்டிக்கொள்வதில் இருக்கிற பெரிய சிக்கல் ரொம்ப போர் அடிக்கும். அந்த நேரத்தில் சைட் அடிப்பதுதான் வழக்கம். நேற்று மழை என்பதாலோ என்னவோ அதற்கு வாய்ப்பேயில்லாத வகையில் ஒரே ஜென்ட்ஸ் மயம். அதனால் வருத்தப்பட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன்.

கொஞ்சம் தள்ளி ஒரு பளபள ஸ்கார்ப்பியோ நின்றுகொண்டிருந்தது. இவ்வளவு வெள்ளையான ஒரு ஸ்கார்ப்பியோவை இதுவரை கண்டதேயில்லை. இந்திரலோகத்து புரவிகளின் நவீன வடிவம்போலிருந்தது என்றும் எழுதலாம். கார் ட்ரைவர்களின் முதலாளி விசுவாசமும் நேசமும் காரின் சுத்தத்தில் வெளிப்படுவதுண்டு. இந்தக்கார் ஓனர் நிச்சயம் பாக்கியசாலிதான் என்று நினைத்தபடி பைக் ஆஃப் ஆகிவிடுமோ என்று குறுங்ங்ங் குறுங்ங்ங் என்று முறுக்கிக்கொண்டிருந்தேன். வண்டிகள் பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தன.

அந்த பளிச் பளிச் ஸ்கார்ப்பியோ எனக்கு முன்னால் நகர அதன் பின் பக்க கண்ணாடியில் எழுதியிருந்த வாசகங்கள் ஆச்சர்யத்தை அளித்தன. ப்ரஸ், அட்வகேட், டாக்டர், போலீஸ், கவர்மென்ட், ஈபி, ரேசன் என்றெல்லாம் எழுதிய எத்தனையோ வாகனங்களை பார்த்திருந்தாலும் இது புதுசு! ‘’தமிழினப்போராளி’’ என்று ஷோலே பட ஃபான்டில் அதிரடியாக சினிமா டைட்டில் போல் எழுதியிருந்தது. இப்படி ஒரு டைட்டிலோடு ஒரு மனிதர் சென்னைக்குள் சுற்றுகிறார் இது தெரியாமல் நானெல்லாம் இத்தனை காலமாக வண்டி ஓட்டுகிறேன் என்று நொந்துகொண்டேன்.

ஆனால் இப்படி போட்டுக்கொள்வதால் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட படி ‘’ப்ரஸ் அட்வகேட் போலீஸ்’’ என்றெல்லாம் போட்டிருந்தால் ட்ராபிக் போலீஸ்காரர்கள் பிடித்தால் கூட கட்டிங் கொடுக்காமல் தப்பிக்கலாம். ஆனால் இந்த போராளிபட்டத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்களாயிருக்கும் என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். என்னென்னவோ சிந்தனைகள். ஃபேஸ்புக்கில் டிராபிக் ராமசாமி படத்தைப்போட்டு ‘’ஒரு போராளியை அரசியல்வாதியாக்கிட்டீங்களேடா’’ என்று நண்பர் எழுதியிருந்தார். அதெல்லாம் நினைவுக்கு வந்தது.

ஸ்கார்ப்பியோ நகர்ந்துகொண்டிருந்தது. நான் பின்னாலேயே சென்றுகொண்டிருந்தேன். அந்த தமிழினப்போராளி என்கிற வார்த்தையை சுற்றி தன்னுடைய குடும்பத்தினர் பெயர்களை எழுதி வைத்திருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் போல, இரண்டு பேர்களிலும் தலா ஒரு ஸ்ரீ இருந்தது (திவ்யாஸ்ரீ ராஜஸ்ரீ.. அதுமாதிரி. ஏதோ , பெயர் நினைவில்லை) அவருடைய பெயரும் அதே ரகமாகவே சமஸ்கிருதமாகவே இருந்தது. தமிழினிப்போராளிகள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்ப்பா என்று நினைத்துக்கொண்டே அந்த வண்டிக்கு பின்னால் சென்றுகொண்டிருந்தேன். கோடம்பாக்கம் டூ எம்எம்டிஏ சாலை (பெரியார் பாதைதானா?) மிகவும் குறுகலானது. மனதுக்குள் இந்த வெண்புரவி போராளி எந்த கட்சியாருப்பாரு என்கிற கேள்வி உதித்தது. வண்டி முன்னே செல்ல அது வளரத்தொடங்கியது.

முதலில் மனதில் வந்தது நாம் தமிழர்தான். இதுமாதிரி காமெடிகளுக்கு பேர் போன தொண்டர்கள் கூட்டம் நிறைந்த கட்சி உலகிலேயே அதுமட்டும்தான். ஒருவேளை இது அண்ணன் சீமானுடைய வண்டிதானாவென உள்ளே எட்டிப் பார்க்க முயன்றேன் இருட்டாக இருந்ததால் தெரியவில்லை. அடுத்து விடுதலை சிறுத்தைகள் , அவர்களும் கூட இதுமாதிரியெல்லாம் போஸ்டர்களில் போட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். ஒருவேளை தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியாக இருக்குமோ என்கிற எண்ணம்வேறு.

இரண்டுநாட்களாக அவர்தான் ஃபுல்பார்மில் இருப்பது.நெல்சன்மாணிக்கம் ரோட்டில் இருக்கிற ஷோபன்பாபு சிலையை அகற்றவேண்டும் என்று இரண்டுநாட்களுக்கு முன் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறார்! ஷோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் முன்பு காதல் இருந்ததால்தான் அந்த சிலை அனுமதிக்கப்பட்டிருக்கிறது அதனால் அதை நீக்கவேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களோ ஆதரவாளர்களோ ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததை சமீபத்தில் பார்க்கமுடிந்தது. மிகவும் மோசமான வார்த்தைகளை கொட்டி திட்டியிருந்தனர். (நெல்.மாணிக். சாலையில் இருக்கிற ஷோபன்பாபுவின் சிலை அவருடைய சொந்தநிலத்தில் வைக்கப்பட்ட பர்சனல் சிலை. ) இணையத்தில் இதுமாதிரியான வசைகள் கலைஞருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கட்சிக்கும்தான் எந்நேரமும் கிடைப்பதுண்டு! முதன்முதலாக…

அடுத்து பால்கனகராஜின் தமிழ்மாநிலகட்சி! கட்சிபெயரே அப்படி இருப்பதால் அதுவும் தோன்றியது. இப்படி அடுத்தடுத்து பல குழப்பங்கள். காருக்குள் இருப்பவர் எந்த கட்சி என்று எப்படி கண்டுபிடிப்பது என்று மூளையை போட்டு திருகினேன். காருக்கு முன்னால் நிச்சயம் கட்சிக்கொடி இருக்குமில்ல.. என்று ஓவர் டேக் செய்ய முயன்றேன். குறுகலான சாலையின் டிராபிக்கில் முடியவேயில்லை. அதற்குள் எம்எம்டிஏ சிக்னலில் கார் வேறு பாதையில் திரும்பி சென்றுவிட்டது. திரும்பும்போது கொடி லேசாக தெரிந்தது கொடியில் மஞ்சளும் சிகப்பும் இருப்பது குத்துமதிப்பாக தெரிந்தது. ஆனால் நிச்சயமாக தேமுதிக கிடையாது.

யாராயிருந்தால் என்ன தமிழை வாழவைக்கும் இப்போராளிகளால்தான் நாமெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் அதனால் அவர்களுக்கு நன்றி.

12 June 2015

8 points - காக்கா முட்டை




#குழந்தைகளை பற்றிய உலகப்படங்களுக்கு ஒர் அடிப்படையான இலக்கணம் இருக்கிறது. அடையமுடியாத ஒன்றுக்காக ஏங்கும் பரம ஏழைக் குழந்தைகள் இருக்க வேண்டும். சகோதர சகோதரிகளாக இருப்பது உத்தமம். அவர்களுக்கு கட்டாயம் க்யூட்டான பாட்டியோ தாத்தாவோ இருக்கவேண்டும். அப்பாவும் அம்மாவும் எந்நேரமும் தங்களுடைய வருமானக்கவலைகளில் இருக்கவேண்டும். அவர்கள் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்ட குடும்பமாக இருந்தாலும் அங்கே மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் ஆசைப்பட்டதை அடைய காசு சேர்ப்பதும், அந்த காசு ஏதோ ஒருவகையில் காணாமல் தொலைந்து திருடு போவதும் நடக்கும். பணக்காரர்கள் தங்களுடைய பேராசைக்காக குழந்தைகளை ஏமாற்றுவார்கள். சில சிக்கல்களுக்கு பிறகு கடைசியில் அந்த குழந்தைகளுக்கு ஆசைப்பட்டது கிடைக்கும்போது த்தூ இவ்ளோதானா பிச்சாத்து என்று அதை புறக்கணிக்க வேண்டும். இதற்கு சில்ரன் ஆஃப் ஹெவன், வே ஹோம், சார்லி அன் சாக்லேட் ஃபேக்டரி, ஸ்லம்டாக் மில்லியனர், அபயம் தொடங்கி எண்ணற்ற உதாரணங்களை காட்டலாம்! தமிழிலேயே நிறைய குறும்படங்களும் எடுக்கப்பட்டிருக்கிறது. பண்ணையாரும் பத்மினியும் இயக்குனர் அருண்குமாரின் ‘’5ரூப்பீஸ்’’ நல்ல உதாரணம். காக்கா முட்டை அந்த இலக்கணத்தில் கச்சிதமாக அமர்கிறது. ஆனால் இது அப்படங்களின் காப்பியல்ல, தாக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

#சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான மெரீனா படத்தோடு காக்காமுட்டையை ஒப்பிடலாம். இரண்டுமே விளிம்பு நிலை குழந்தைகளின் வாழ்வை ஆவணமாக்கும் திரைப்படங்கள். இரண்டு படங்களுமே தமிழ்சினிமாவின் மிகச்சில வணிக சமரசங்களுக்கும் உட்பட்டு எடுக்கப்பட்டவை. ஆனால் காக்காமுட்டையை மெரீனாவை விடவும் பலவிஷயங்களில் மிகச்சிறந்த படமாக கருதலாம். குறிப்பாக படத்தின் திரைக்கதையும் அதன் நோக்கமும்! மெரீனாவின் திரைக்கதை எந்த நோக்கங்களும் இல்லாமல் ஆவணப்படம் போல இஷ்டம்போல் அலைபாயும். கடைசியில் அய்யயோ கருத்து சொல்ல வேண்டுமே என்கிற மெனக்கெடல் அப்பட்டமாக தெரியும். இப்படத்தில் அப்படிப்பட்ட மெனக்கெடல்களில்லை இயல்பாகவே படம் சொல்ல விரும்புகிற கருத்து அல்லது கருத்துகள் தானாகவே மலர்ந்தபடியிருக்கிறது! படம்பார்ப்பவர் அவரவர் பொதுஅறிவுக்கேற்ற படி கருத்துகளை புரிந்துகொள்கின்றனர்.

#காக்காமுட்டையின் இந்த வெற்றி தமிழ்சினிமாவில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். மாற்று முயற்சிகள் மங்கிவிட்ட தமிழ்ச்சூழலில் மலையாளத்தின் மாற்றுபாவனைப்படங்களை ரீமேக் செய்துகொண்டு திருப்தியடைந்துகொண்டிருக்கிற காலகட்டத்தில் காக்கா முட்டை புதிய வாசல்களை திறந்துவைத்திருக்கிறது. பெரிய ஹீரோ இல்லாமல், காதல் இல்லாமல் கொஞ்சமாக கமர்ஷியல் அம்சங்களுக்காக வளைந்துகொடுத்தால் நிச்சயமாக வசூலை வாரிக்குவிக்கலாம் என்று இப்படம் தயாரிப்பாளர்களுக்கு நிரூபித்திருக்கிறது. இந்த ட்ரெண்டில் இன்னும் பத்து அல்லது இருபது படங்கள் வரலாம் அதில் இன்னும் இரண்டு இதே அளவில் ஜெயித்தாலும் இந்த ட்ரெண்ட் சூடுபிடிக்கும்! படம் கோடை விடுமுறையில் வெளியாகியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்படி ஒருமுயற்சிக்கு பணம் போட்ட நட்சத்திர தயாரிப்பாளர்கள் தொடர்ந்து இதுபோல நிறையபடங்களெடுக்க வேண்டும்.

#படத்தில் ஏகப்பட்ட அரசியல் இருக்கிறது உணவு அரசியல், உலகமயமாக்கலுக்கு எதிரான அரசியல்,கம்யூனிசம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் லொட்டு லொசுக்கு என்று நிறையபேர் சொன்னாலும் படத்தில் என் கண்களுக்கு எந்த அரசியலும் தெரியவில்லை. இதுமாதிரியான ஃபீல் குட் படங்களுக்கு அது தேவையுமில்லை. குழந்தைகளின் ஆசையும் அகவுலகமும் சிறப்பாக வந்திருக்கிறது. அப்பையன்களுடைய வயதுக்கேற்ற காட்சிகள் அமைந்திருக்கிறது. அதை நன்றாக காட்சி படுத்தியிருக்கிறார் இயக்குனர். சமூகத்தின் மீதான விமர்சனங்களாக சில வசனங்கள் வருகிறது. அவ்வளவுதான். நண்பர் ஒருவர் இப்படத்தின் ப்ரிவியூ பார்த்துவிட்டு மிகுந்த உற்சாகமாகி சார் படத்துல தோசைய காட்டும்போது ஈ மொய்க்குது, குடிசைல ஈ மொய்க்குது, பீட்சாவ காட்டும்போதும் ஈ மொய்க்குது இது என்ன குறியீடு சார் என்று ஏதோ கேட்டிருப்பார் போல இயக்குனர் அதெல்லாம் ஒன்னுமில்லைங்க நிஜமாவே ஈ மொச்சிருக்கு போல என்றிருக்கிறார்.

#சிம்பு சிம்புவாகவே இப்படத்தில் வருகிறார். அதுவும் தப்பான முன்னுதாரணமாக. அவரால்தான் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். இறுதியில் அவர் சிம்பிளாக ‘’ஓ அப்படியா சாரி’’ என்கிறார். இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க சிம்பு எப்படி அதற்கு சம்மதித்தார் என்பது தெரியவில்லை. ரஜினி கூட ரஜினியாகவே திரையில் தோன்றினாலும் நல்லவராக ஏழைகளுக்கு உதவுபவராக இரக்க குணம் கொண்டவராகத்தான் தோன்றுவார் (அன்புள்ள ர.கா, குசேலன்). தனுஷ் தயாரித்த படம்தானே இது. இதில் தனுஷே கூட அந்த பாத்திரத்தில் நடித்திருக்கலாம். ஏனோ சிம்புவை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்படி ஒரு கேரக்டரில் நடிக்க முன்வந்த சிம்பு நிச்சயம் பாராட்டுகளுக்குரியவர்.

#சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோமல்லூரியை புத்தக கண்காட்சியில் கவிதை தொகுப்புகளுடன் பார்த்திருக்கிறேன். இரண்டு ஸ்டால் எடுத்து அவருடைய புகைப்படத்தை பெரிதாக வைத்து பேனர் வைத்து அவர் எழுதிய கவித்துவ நூல்களை மட்டும் அடுக்கி வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஆனால் கும்கிக்கு பிறகு மனிதருக்கு நல்ல ஏறுமுகம். காக்கா முட்டை படத்தில் மிகவும் கவர்ந்த பாத்திரங்களில் பழரசத்திற்கு முதல் ரேங்க் கொடுக்கலாம்! அவருடைய அந்த வெள்ளந்தியான புன்னகை மிகவும் பிடித்திருந்தது. மல்லூரி மட்டுமல்ல படத்தில் வருகிற ஒவ்வொரு பாத்திரமும் மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பின்னணி நன்றாக தயாரிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. பாட்டி, காய்லாங்கடை பெண், எம்எல்ஏ, திருடர்கள் என எல்லாருமே அவ்வளவு யதார்த்தம். அதே சமயம் படம் முழுக்க காட்டப்படும் அந்த சேரியும் அதன் மனிதர்களும் ஒரு செட் ப்ராபர்ட்டி போலவேதான் இயங்குகிறார்கள். வடசென்னை பின்னணியை காட்சிப்படுத்திய மெட்ராஸ் திரைப்படம் இந்த விஷயத்தில் அவ்வளவு டீடெயிலிங் பண்ணியிருப்பார்கள். படம் முழுக்க அந்த ஊரும் மக்களும் ஒட்டுமொத்த வடசென்னையும் இயங்கிக்கொண்டிருக்கும்.

#தமிழ்நாட்டில் இன்று இருபது வயதை தாண்டியவர்களில் முக்கால்வாசி பேர் தங்களுடைய பால்யத்தில் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் காக்காமுட்டை பையன்களாக ஒருமுறையாவது இருந்திருப்பார்கள். ஏதாவது ஒன்றுக்காக ஏங்கி ஏங்கி செத்திருப்பார்கள். அதை ஆல்மோஸ்ட் நெருங்கின நாளில் அவர்களுக்கான அக்கதவுகள் திறக்கபடாமலிருந்திருக்கும்! படம் குறித்து நெகிழ்ச்சியோடு பேசுகிற பலரிடமும் அதை உணரமுடிந்தது. உலக மயமாக்கலுக்கு பிறகு மிடில் கிளாஸ் ஆனவர்கள்தானே தமிழ்நாட்டில் ஒன்தேர்ட்.

#காக்காமுட்டை படம் பார்த்தவர்களில் 90சதவீதம் பேர் காக்கா முட்டையை ருசித்திருக்கமாட்டார்கள் காக்கா முட்டையை மரம் ஏறி எடுப்பது அவ்வளவு சுலபமும் இல்லை. ரிஸ்க் எடுத்து சாப்பிடுகிற அளவுக்கு அது அத்தனை சுவையாகவும் இருக்காது. கொஞ்சம் சன்னமான கசப்பும் கொழகொழப்புமாக மோசமான வாசனையோடு இருக்கும். ஒரே ஒருமுறை சிறுவனாக இருக்கும்போது பச்சையாக குடித்திருக்கிறேன். காக்காமுட்டையை சாப்பிட்டுவிட்டு அந்த ஓட்டை கொண்டுபோய் புதைத்துவிட்டால் தாய்காக்கா நம்மை பழிவாங்க துரத்தாது என்று மூடநம்பிக்கையும் உண்டு.

09 June 2015

பீட்சா




அலுவலகத்திற்கு அருகில் ஒரு பீட்சா கடை உண்டு. அடிக்கடி செல்கிற இடம்தான். வெயில் தாளமுடியாத நேரங்களில் அங்கே ஒதுங்கலாம். நண்பர்களை சந்திக்க ஏற்ற இடம். மணிக்கணக்கில் எதையும் சாப்பிடாமலும் கூட நாள்முழுக்க ஏசியை அருந்தியபடி அமர்ந்திருக்கலாம். கடைக்காரர்கள் யாருமே என்னிடம் எப்போதும் எதையும் ஆர்டரென்று கேட்டதில்லை. காபீடே,பீட்சா,கேஎஃப்சி மாதிரி கடைகள் நம்முடைய மனசாட்சியை முதலீடாகக் கொண்டு இயங்குவதாக எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. பல நேரங்களில் மனசாட்சிக்கு அஞ்சியே ஒரு சாதாரண மலிவு விலை பீட்சாவையாவது வாங்கிதின்ன நேரிடும்.

தமிழ்நாட்டின் மிக காஸ்ட்லியான ஏரியாக்களில் ஒன்று ஜிஎன் செட்டி ரோடு. அங்குதான் என் அலுவலகமும் இருக்கிறது. அதன் கடைக்கோடியில் அதாவது அண்ணா மேம்பாலத்திற்கு சற்றுமுன்பு ஒரு சேரி இருக்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிற சேரி இது. இந்தமுனையிலிருந்து நீளும் அவ்வீடுகள் அண்ணா அறிவாலயம் வரைக்கும் தொடர்ந்திருக்கும். பெரிய பணக்காரர்கள் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் இதுமாதிரியான சேரிகள் அமைந்திருப்பது என்ன மாதிரியான புவியியல் அரசியல் என்பது ஆராயப்படவேண்டியது. மைலாப்பூரிலும், அடையாறிலும், மாம்பலத்திலும் கூட இதுமாதிரியான சேரிகளை பார்த்திருக்கிறேன். பணக்காரர்களின் பங்களாக்களுக்கு மிக அண்மையில் இக்குடிசைகள் அமைந்திருக்கும்.

ஜிஎன் செட்டிரோடு குடிசைவாசிகள் மிகவும் மகிழ்ச்சிகரமானவர்கள். எந்நேரமும் குடியும் கும்மாளமும்தான். அவர்ளுடைய அழுக்குச்சட்டை குட்டிப்பையன்களுக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பள்ளிக்கு சென்றாலும் பல நேரங்களில் சாலையில்தான் சுதந்திரமாக திரிந்துகொண்டிருப்பார்கள். எதையாவது வாங்கித்தின்பதும், நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போடுவதும் வாடிக்கையாக கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அல்லது கையில் பெரிய பையோடு குப்பை பொறுக்கிக்கொண்டிருப்பார்கள். ஏன்டா ஸ்கூல் போகாம குப்பை பொறுக்கறீங்க என்று கேட்டால், முறைத்துவிட்டு உனக்கின்னா என்றுவிட்டு போய்விடுவார்கள்.

அந்தப்பையன்களை அடிக்கடி பீட்சா கடையில் பார்ப்பதுண்டு. வாசலிலேயே தயங்கி தயங்கி நிற்பார்கள். அவர்களுடைய தலைவன் வந்ததும் உள்ளே கம்பீரமாக நுழைவார்கள். அவர்களை கண்டால் அங்கேவேலைபார்க்கிற சிகப்புசட்டை தம்பிகளுக்கு உற்சாகமாகிவிடும். என்னங்கடா என்ன வோணும் என்று அந்த பையன்களும் அவர்களுடைய மொழிக்கு மாறிவிடுவான். அந்தப்பையன்கள் அண்ணா போனவாட்டி குடுத்தியே அது வேஸ்ட்டுனா வேற எதுனா காரமா குடுன்னா என்று கேட்பார்கள். அந்த தம்பிகளும் மேலே படங்களை காட்டி இது வாங்கிரீயா என்று படங்களை காட்டி இது மூன்னூறு ரூவாடா என்று விலை சொல்வார். பையன்கள் டே உன்ட்ட எவ்ளோ டே அவன்ட்ட வாங்குடா டே இவன் காசே கொண்டாரமாட்ரான்டா என்கிற குரல்களுக்கு மத்தியில் கசங்கிய தாள்களும் சில சில்லரைகாசுகளுமாக டேபிளில் விழும்.

அடுத்த சில நிமிடங்களில் ஆவிபறக்க சுடச்சுட பீட்சாவை கொண்டுவந்து கொடுப்பான் கடைக்காரத்தம்பி. கூடவே பாதி குடித்துபோட்ட பெப்ஸி கோக் பாட்டில்களும், கூடுதலாக ரொட்டித்துண்டுகளும் ஏதாவது தீனியும் சிக்கன் பீஸ் என இலவசமாகவே தருவான். பையன்கள் தாங்க்ஸ்னா என்று சலாம் வைத்துவிட்டு வெளியேற சிகப்பு சட்டை பையன்கள் பெருமிதமாக புன்னகைப்பதை காணக்கண்கோடி வேண்டும். பையன்கள் அதை வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியேறும்போது கடைக்குள் அமர்ந்திருக்கும் நம்மை பார்க்கும்போதுதான் கம்பீரம் என்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியவரும்.

ஆனால் அந்தப்பையன்கள் இதை எங்கே கொண்டுபோய் வைத்து சாப்பிடுவார்கள் என்கிற கேள்வி எப்போதும் எனக்கு தோன்றும். அந்தப்பையன்கள் கடைக்குள் உட்கார்ந்து பார்த்ததேயில்லை. காசுகொடுத்துதான் அவர்களும் பீட்சா வாங்குகிறார்கள். காத்திருப்பதாக இருந்தாலும் கூட கேட்டுக்கு வெளியேதான் காத்திருப்பார்கள். சிகப்பு சட்டை தம்பி கூப்பிட்டதும்தான் உள்ளே நுழையவேண்டும். அவன் அதை கொடுத்ததும் வெளியேறிவிட வேண்டும்.

சிகப்பு சட்டை தம்பியிடம் ஒருநாள் இதைப்பற்றி கேட்டேன். ‘’அவங்களும் காசுகுடுத்துதானப்பா சாப்பிடறாங்க உள்ளயே உட்கார வைக்கறதுதானே’’ என்றேன். அய்யோ பசங்க செம்ம சேட்டைங்க எதையாவது எடுத்து உடைச்சிருவாங்க டாப்பிங்ஸ்லாம் காலி பண்ணிடறாங்க க்ளீன் இல்ல என்றார். ‘’உங்க கடைக்கு வர முக்கால் வாசி சேட்டை பண்ற பையன்கள்தான் இவங்களுக்கு மட்டும் என்ன’’ என்றேன்.
‘’மேனேஜ்மென்ட்ல ஒப்புக்க மாட்டாங்க சார்’’ என்றான். அவனோடு இன்னும் கூட வாக்குவாதம் பண்ணினதில் கடைசியில் ‘’சார் மேனேஜர் ஒத்துகிட்டாலும் கஸ்டமர்ஸ் ஒத்துக்கமாட்டாங்க சார், ஹைஜீனிக் அது இதும்பாங்க’’ என்றார்.

அந்தப்பையன்களுக்கு வெளியில் நிற்கவைப்பதிலோ குடித்து வீசிய பாதி பெப்ஸி பாட்டில்களை வாங்கிக்கொள்வதிலோ எவ்வித தயக்கமோ அவமானமோ இருந்ததில்லை. அவர்களுக்கு அது பழக்கமானதாக இருக்கலாம். அந்தப்பையன்கள் திரும்ப திரும்ப அக்கடை வாசலில் தங்களுடைய பீட்சாவுக்காக காத்திருப்பதை பார்த்திருக்கிறேன். கல்வி அவர்களிடம் மாற்றத்தை உருவாக்கலாம். சுயமரியாதையை கற்றுத்தரலாம்.ஆனால் அவர்கள் வெளியே நின்றுகொண்டிருந்த ஒவ்வொருமுறையும் நான் அவர்களை உள்ளேயிருந்துதான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் நிறைய சௌகர்யங்கள் உண்டு.

25 May 2015

இளையராஜா எனும் BRAND





‘’வியாபார நோக்கில் தன்னுடைய பெயரை, புகைப்படத்தை’’ தன்னுடைய அனுமதியில்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று மீண்டும் அறிவித்துள்ளார் இளையராஜா. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார். இளையராஜாவின் இந்த அறிவிப்பை அடுத்து இணையத்தில் ஆளாளுக்கு அவரை போட்டு சுட்டு பொசுக்கி சுக்கா வறுவலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இளையராஜாவின் இந்த அறிவிப்பு நேர்மையானது. எந்த ஒரு படைப்பாளிக்கும் உரிய நியாயமான உரிமையையே இளையராஜா கோருகிறார்.

இளையராஜா யாரோ ரயிலில் பிச்சை எடுக்கிற ஒருவர் தன்னுடைய பாடலை பாடக்கூடாது என்று கூறவில்லை. தேனி பக்கம் இருக்கிற சிறிய டீக்கடையில் தன்னுடைய பாடலை ஓடவிடுவதை குற்றஞ்சொல்லவில்லை. பெரிய ஊடக நிறுவனங்களை ‘’என்னை வைத்து சம்பாதிப்பதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு செய்’’ என்கிறார்! அவ்வளவுதான். தன்னுடைய பெயரை இசையை பயன்படுத்தி கோடிக்கணக்கில் காசு சம்பாதிப்பவர்கள் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டு வியாபரம் செய்துகொள்ளட்டும் என்கிறார்.

இன்றைய தேதியில் 'இளையராஜா' என்பது வெறும் பெயரல்ல, அது ஒரு BRAND. தமிழகத்தின் பல கோடி மக்களிடையே நன்கு விற்கவல்ல ஒரு பிராண்ட். அவருடைய பெயரை பயன்படுத்தி விளம்பரதாரர்களை ஈர்க்க முடியும். கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அதனாலேயே பெப்ஸி, மைக்ரோ சாஃப்ட், ஆப்பிள் போல… அப்பெயரையும் புகைப்படத்தையும் யாரும் இஷ்டப்படி வியாபார நோக்கங்ளுக்காக பயன்படுத்த கூடாது என்கிறார் ராஜா. தன்னுடைய பெயரால் பரப்பப்படுகிற வியாபாரசந்தையை கட்டுபடுத்த விளைகிறார்! (கடந்த ஆண்டுகளில் அவர் இசையமைத்த படங்கள் தொடர் தோல்விகளைத் தழுவிய போதும் அவர் இசையமைத்த பழைய பாடல்களுக்கான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது)

நடிகர் ரஜினிகாந்த் இதை கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்துவருகிறார். அவருடைய படத்தை, குரலை, அவரைப்போன்ற உருவத்தை, பெயரை வியாபார நோக்கில் பயன்படுத்துவதாக இருந்தால் அவருடைய குடும்பத்தாரிடமிருந்து உரிய அனுமதி பெறவேண்டும். இல்லையென்றால் சட்டப்படி எப்படிப்பட்ட படைப்புக்கும் எப்படிப்பட்ட நிறுவனத்திற்கும் தடைதான்! மே ஹூன் ரஜினிகாந்த் என்கிற படத்திற்கு தடை வாங்கியதும் இவ்வகையில்தான். டண்டனக்கா பாடலுக்காக டிஆர் கோர்ட்டு படி ஏறியதும் இவ்வகையில்தான். அதைதான் இப்போது இளையராஜாவும் செய்திருக்கிறார்.

பக்திப்பாடல்கள், தனியான இசைத் தொகுப்புக்கள் இல்லாமல், திரைப்பாடல்களாக 4500 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ஆனால் அவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய அளவிற்குப் பொருளாதரப் பலன்கள் கிடைக்கவில்லை, ஒரு படைப்பின் மீது ஒரு படைப்பாளிக்கு உள்ள படைப்புரிமையை மதிக்காமல் பலரும் ஆற்றுத் தண்ணீரை அள்ளிக்கொள்வது போல அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் இலவசமாக அள்ளிச் சென்று கொண்டிருந்தனர். அதனால்தான் சில மாதங்களுக்கு முன்பு தான் இசையமைத்த பாடல்களை சில நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் ஒலிப்பதிவு செய்யவோ, (குறுந்தகடுகளாகவோ, இணையத்திலோ) வெளியிடவோ கூடாது என்று தடை பெற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

‘’எனக்கு கிடைக்கவேண்டிய ராயல்டி மட்டும் ஒழுங்காக கிடைத்திருந்தால் இந்நேரம் நான் பில்கேட்ஸ் ஆகியிருப்பேன்’’ என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் இளையராஜா. ‘’அகி ம்யூசிக், கிரி ட்ரேடிங், எகோ ரெகார்டிங், மற்றும் யூனிசிஸ்’’ உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தது இந்தக்கோபத்தில்தான். இதுவிஷயமாக இளையராஜாவின் வழக்குகளை கவனித்துவரும் வழக்கறிஞர் ஒருவரோடு பேசியபோது அவர் இவ்விவகாரத்தின் வேர்களை சொன்னார்,

‘’நான்கு ஆடியோ நிறுவனங்களும் பழைய ஒப்பந்தங்களை வைத்துக்கொண்டு இளையராஜாவின் எண்ணற்ற பாடல்களை பல்வேறு வழிகளில் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வந்தன. சட்டப்படி எல்லா ஒப்பந்தங்களும் ஐந்தாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும்படி தயாரிக்கப்பட்டவை, ஆனால் அந்த ஐந்தாண்டுகள் முடிந்தபின்னும் அந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்க படவில்லை. ஆனால் தொடர்ந்து அந்தப்பாடல்களையும் அதற்கான உரிமைகளையும் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளன, இசையமைப்பாளருக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ எவ்வித ராயல்டியும் தராமல் இருந்துள்ளன. இப்படங்களை தயாரித்த பல தயாரிப்பாளர்களும் இப்போது மிகவும் வறுமையான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ராயல்டி தொகையை பெற்றுத்தரவும், இளையராஜாவின் பாடல்களுக்கான உரிமைகளை மீட்கவுமே இவ்வழக்கு தொடரப்பட்டது. இனி குறிப்பிட்ட அந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து உரிமை பெறப்பட்ட பாடல்களின் வழி கிடைக்கும் ராயல்டி தொகை தயாரிப்பாளருக்கு முறையாக பகிர்ந்தளிக்கப்படும்’’ என்றார் .

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே பாடகர் ஜேசுதாஸ் தன்னுடைய பாடல்களுக்கான உரிமைகளை இதுபோல் பெற்றுள்ளார். மேடைகளில் இனி என்னுடைய பாடல்களை பாட என் அனுமதி வாங்க வேண்டும் என்று IPRS (INDIAN PERFORMING RIGHTS SOCIETY) வழி போராடினார். இவ்விவகாரம் அக்காலகட்டத்தில் கேரளாவில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

இந்தியத் திரைப்பட பாடகர்கள் சென்ற ஆண்டு ‘’பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு’’ என்கிற அமைப்பை உருவாக்கினர். வியாபார நோக்கத்திற்காக தங்களுடைய பாடல்கள் தொலைகாட்சி, வானொலிகளில் பயன்படுத்தப்படும்போது தங்களுக்கு அதற்கான ராயல்டியை தரவேண்டும் என்று போராடி உரிமைகளை மீட்டுள்ளனர். தற்போது ஊடகங்களை கண்காணித்து அதற்குரிய ராயல்டியை வசூலித்து உரிய பாடகருக்கு கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. பாடகர்களுக்கு இது போன்ற அமைப்பு உள்ளதைப் போல, திரைப்பட இசையமைப்பாளர்களுக்கு அமைப்புகள் ஏதுமில்லை. அவர்கள் பெரும்பாலும் திரைப்பட்த் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வழியாகவோ அல்லது தனியாகவோதான் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய இசையமைப்பாளர்கள் எல்லோருமே இந்த காப்பிரைட் விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கின்றனர். ஒப்பந்தம்போடும்போதே பல விஷயங்களை கவனித்து கையெழுத்துப்போடுகின்றனர். ஆனால் இளையராஜா இந்த விஷயத்தில் ரொம்ப லேட்! 2010ல்தான் அவருக்கு ஞானமே வந்தது. தனக்கான உரிமைகளைக் காத்துக் கொள்வது குறித்து யோசிக்கவே தொடங்கினார்.

2010ம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்கள் சிலரோடு சென்னைக் காவலதுறை ஆணையரைச் சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அதில் எகோ ரெகார்டிங் கம்பெனி என்ற நிறுவனத்திடமிருந்து தனது திரைப்படப் பாடல்களுக்கான ராயல்டித் தொகை வரவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். தனது பாடல்களுக்கும், அந்தப் பாடல்கள் இடம் பெற்றுள்ள படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் அந்த நிறுவனம் ராயல்டித் தொகை தர ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த்தாகவும், அந்த ஒப்பந்தம் 1990ல் முடிந்து விட்ட போதிலும் அந்த நிறுவனம் அந்தத் தொகைகளைத் தரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார், அந்த நிறுவனம் தன்னுடைய அனுமதி இன்றி வட இந்திய நிறுவனம் ஒன்றுக்கு பாடல்களுக்கான உரிமைகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

எகோ ரிகார்டிங் நிறுவனம் வட இந்திய நிறுவனத்திடம் ராஜாவின் பாடல்களுக்கான உரிமையை 25 கோடி ரூபாய்க்கு விற்கப் பேச்சு வார்த்தை நட்த்திக் கொண்டிருக்கிறது என்று வெளியான செய்தியின் அடிப்படையில் ராஜா இந்தப் புகாரைத் தெரிவித்திருந்தார். அந்த நிறுவனம் தனக்குத் தெரியாமல் ஏற்கனவே தன்னுடைய தெலுங்கப்பட பாடல்களுக்கான உரிமைகளையும் அயல்நாட்டிற்கான உரிமையையும் விற்றுவிட்ட்தாகவும், செல்போன் நிறுவன்ங்களுக்கு அழைப்பொலியாக விற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதே சமயத்தில் ராம்கோபால்வர்மா இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘’டிபார்ட்மென்ட்’’ல் அவரது ‘’ஆசைநூறுவகை’’ என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த்தை எதிர்த்து. உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து அப்பாடலுக்கு தடைவாங்கினார் இளையராஜா.

பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் ‘சுப்ரமணியபுரம்’ தொடங்கி வைத்த ட்ரெண்டில் பல படங்களிலும் அவருடைய பின்னணி இசையும் பாடல்களும் எவ்வித அனுமதியுமின்றி பயன்படுத்தப்பட்டன. கடந்த ஜனவரி வரைக்குமே இப்படி இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி உபயோகிப்பது தொடர்ந்து.கொண்டிருந்தது. அதற்கு பிறகே தன்னுடைய பாடல்கள் வெவ்வேறு புதிய ஊடகங்களில் குறிப்பாக மொபைல் போன் சார்ந்த விஷயங்களிலும் எஃப் எம்களிலும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்காணித்து கட்டுப்படுத்தவும் தொடங்கினார். 2012ல் வெளியான மிஸ் லவ்லி திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாயும்புலி படத்தின் டைட்டில் இசையும் அதே படத்தில் இன்னொரு பாடலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இம்முறை முறையாக அனுமதிபெற்று பயன்படுத்தினர்.

அதற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ‘’கப்பல்’’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஊரு விட்டு ஊரு வந்து என்ற பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி அப்பாடலை நீக்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றார் இளையராஜா. ஆனால் அங்கே தயாரிப்பாளர் தரப்பு ‘’நாங்கள் சம்பந்தப்பட்ட பாடலை வெளியிட்ட கேசட் நிறுவனத்திடம் (அகிமியூசிக்) அனுமதி வாங்கிவிட்டோம்’’ என்று கூற அப்பாடல் எத்தடையுமின்றி திரைப்படத்தில் இடம்பெற்றது.

இதனால் மிகுந்த மனவருத்தங்களுக்கு ஆளான இளையராஜா இவ்விஷயங்களை கண்காணிக்கத்தொடங்கினார். நான்கு ஆடியோ நிறுவனங்கள் அவருடைய பாடல்களுக்கான உரிமைகளை வைத்துக்கொண்டு வெவ்வேறு ஊடகங்களுக்கும் வெவ்வேறு விதமாக அனுமதி கொடுத்து வந்ததை கண்டறிந்தார். கடந்த 2014 செப்டம்பரில் நான்கு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் தொடர்ந்து அத்துமீறல்கள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன.

அதற்கு பிறகு ஒரு நீண்ட போராட்ட்த்திற்குப் பிறகே நீதிமன்றத்தின் வழி தன்னுடைய உரிமைகளை பெற்றுள்ளார் இளையராஜா. இனி இளையராஜாவின் இசையை அவருடைய அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்தமுடியும். தன்னுடைய பாடல்களின் வழி கிடைக்கும் ராயல்டியில் தயாரிப்பாளர்,பாடலாசிரியர் மற்றும் பாடகருக்கும் உரிய பங்கினை கொடுக்கவிருப்பதாகவும் இளையராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இப்படி தனக்கான உரிமைகளை ஒரு படைப்பாளி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறுவதில் எவ்வித தவறுமில்லை. அவருக்கு வயதாகிவிட்டது, இனிமேல் அவருக்கு எதற்கு பணம் என்கிற விமர்சனம் அவர்மீது வைக்கப்படுகிறது. அவருக்கு வயதாகிவிட்டது என்பதால் அவருக்கு பணத்தின் தேவை இல்லை என்பதால் அவருடைய படைப்புகளை யார் வேண்டுமானாலும் இஷ்டப்படி எடுத்து எங்குவேண்டுமானாலும் போட்டு காசு சம்பாதித்துக்கொள்ளலாமா? வரைமுறை வேண்டாமா?

அனேகமாக அடுத்து இணையத்தில் எல்லை மீறும் காப்பிரைட் உரிமைகளுக்காக இளையராஜா போராடுவார் என்று எதிர்பார்க்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய சவாலாகவும் இருக்கலாம். அவர்மீதுள்ள அன்பின் காரணத்தை முன்னிட்டே அதன் பொருட்டே இங்கு அவருடைய படைப்புகள் இலவசமாக படையல் வைக்கப்படுகின்றன. டாரன்ட் காடுகளில் இளையரஜா இதுவரை இசையமைத்த 2700 பாடல்கள் மொத்த தொகுப்பு இலவசமாக தரவிறக்க கிடைக்கிறது. அப்படிப்பட்ட சூழலை அவரும் அவருடைய நீதி ஆலோசகர்களும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொருத்திந்துருந்தான் பார்க்கவேண்டும்.

இளையராஜாவின் அரசியலில் நமக்கு ஒப்புதல் இல்லாமலிருக்கலாம் (அவருக்கு ஏது அரசியல் என்று கேட்கக்கூடாது). அவருடைய பாடல்கள் நமக்கு பிடிக்காமலிருக்கலாம். அவற்றை விமர்சிக்கலாம். ஒரு படைப்பாளியாக இந்தத்தள்ளாத வயதிலும் தன் படைப்புகளுக்கான நியாயமான உரிமைகளுக்காக போராடும் போது அவர் பக்கமாகத்தான் நாம் நிற்கவேண்டும்.

22 May 2015

மக்கள் முதல்வருக்கு நன்றி




இன்று காலை தூங்கிக்கொண்டிருந்த போது டிவியில் ஏதோ சேனலில் வாசித்துக்கொண்டிருந்த செய்திகள் காதில் விழுந்தன. அச்செய்திகள் கேட்க கேட்க ஆச்சர்யமூட்டின. நான் கேட்பது நிஜத்திலா கனவிலா என்பது விளங்காமல் விழித்துப்பார்த்தேன் நிஜமாகவே டிவி ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பெண்மணி மும்முரமாக செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அந்த சேனலில் வாசிக்கப்பட்ட செய்தி இதுதான். (என் காதில் கேட்டவைகளின் தொகுப்பு)

‪#‎நேற்று‬ வெளியான பத்தாம்வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் சாதனைக்கு காரணம் கடந்த நான்காண்டுகளாக மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்கள் மேற்கொண்ட கல்விகொள்கைகளே என்று கூறி மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்களை மனதார வாழ்த்தினர். தேர்வில் வெற்றிபெற்ற பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய பிள்ளைகள் தேர்ச்சி பெற காரணமாக இருந்த மக்கள் முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎வெப்பசலனம்‬ காரணமாக அடுத்த நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் பரவலாக மழைபெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. கோடையிலும் குளுமை தரும் இம்மாமழைக்கு காரணமான மக்கள் முதல்வரின் முயற்சிகளை பொதுமக்கள் வாயார வாழ்த்தி பல்வேறு கோயில்களில் அர்ச்சனை அங்கபிரதட்சணம் முதலான வேண்டுதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வருணபகவான் தற்போது அனுப்பியிருக்கும் செய்தியில் மக்கள் முதல்வரின் தர்மம்தான் இம்மழைக்கு காரணம் என்று புகழ்ந்துள்ளார்.

‪#‎விலைவாசி‬ உயர்வு, பல்வேறு கட்டுமான பணிகளில் தேக்கம் முதலான அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை மடிப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது அக்கட்சியினர் போராட்டம் நடத்த இடம் தந்த மக்கள் முதல்வருக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎தங்கம்‬ விலை கிராமுக்கு நாற்பத்தைந்து ரூபாய் குறைந்துள்ளது. கடந்த நான்காண்டு ஆட்சியில் தன்னுடைய சீரிய கொள்கைகளால் மக்கள் முதல்வர் புரட்சி தலைவி அவர்கள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால்தான் இது சாத்தியமானது என்று பொருளாதார ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தங்கம் விலை குறைந்ததை அடுத்து மக்கள் முதல்வரை பாராட்டி வீதிகள் தோறும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.

#நேற்று சென்னை சேப்பாக்கம் அருகே நடந்த ஒரு மோதலில் அம்மாவின் உண்மை விசுவாசிகள் சிலர் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கி அவருடைய மண்டையிலிருந்த மசாலாவை சுரண்டி எடுத்தனர். மக்கள் முதல்வருடைய உண்மை விசுவாசிகளின் இந்நடவடிக்கையை உண்மையான பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர், பத்திரிகையாளர் சங்க தலைவரான திரு கும்பகோணம் கோவாலு இவ்விஷயத்தில் மக்கள் முதல்வரின் ஆணைக்காக காத்திருக்கிறோம் அவர் ஆணைவந்ததும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்து நீதியை நிலைநாட்டியுள்ளார்.

விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்…
சென்னை அமிர்தால படிக்கும்போதே பத்தாயிரம் வரைக்கும் சம்பளம், போன வருடம் நான் அங்க இருந்தேன் இப்போ நான் இங்க இருக்கேன் அதுக்கு காரணம் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள்தான் அவர்களுக்கு நன்றி!
செய்திகள் தொடர்கின்றன.

‪#‎நடந்துவரும்‬ ஐபிஎல் போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மக்கள் முதல்வர் புரட்சிதலைவி அவர்களை சிறைக்கு அனுப்பிய பாதகர்களின் அணியான பெங்களூரு அணியை தோற்கடிக்க அம்மாவின் ஆசிகளை வேண்டி அவர்களுடைய போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்திருந்த இந்திய அணி *(பீப்ப்ப்ப்)* மகேந்திர சிங் தோனி மக்கள் முதல்வரின் ஆசிகளை பெற்றுக்கொண்டு அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

‪#‎இன்று‬ மக்கள் முதல்வர் அவர்கள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணவிக்கிறார் என்பதற்காக சென்னையின் சாலைகளெங்கும் விதவிதமான பேனர்கள் அலங்கரிக்கின்றன. சுவர்களெங்கும் மக்கள் முதல்வரை வாழ்த்தும் போஸ்டர்கள் நிறைந்துள்ளன. இது சென்னையின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக பொதுமக்கள் நம்மிடம் தெரிவித்து போஸ்டர் ஒட்டி அம்மாவின் உண்மை விசுவாசிகளுக்கு நன்றி என்று தெரிவித்துக்கொண்டனர்.

‪#‎இவ்விழா‬ ஏற்பாடுகளை பார்வையிட்ட மக்களின் முதல்வர்
புரட்சிதலைவி இச்சாதனைகளுக்கு காரணமான மக்களின் முதல்வர் புரட்சிதலைவிக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்!
நன்றி வணக்கம்!

‪#‎முடியல‬-முழிச்சிகிட்டேன், எந்த சேனல்னு கவனிக்கலை.

18 May 2015

8 Points - புறம்போக்கு



#தமிழில் PRISON ESCAPE படங்களை தேடினால் மோகன்லால் நடித்த "சிறைச்சாலை" மட்டும்தான் கிடைக்கிறது. அதுகூட மலையாள வாசனை நிறைந்த படம். ஹாலிவுட்டில் ஜெயில் ஜானரில் நூற்றுக்கணக்கில் படங்கள் உண்டு. மரணதண்டனைக்கு எதிரான திரைப்படங்கள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ப்ச்…! நண்பர் ஒருவர் ‘’அரவாண்’’ என்றார். அது மக்களுக்கு தரப்பட்ட மரணதண்டனை இல்லையா... அதனால் நெக்ஸ்ட்டு தேடினேன். கமலஹாசனின் விருமாண்டி மட்டும்தான்! தமிழ்சினிமாவில் மரணதண்டனைக்கெதிரான நடவடிக்கை என்றால் கிளைமாக்ஸில் முக்கிய பாத்திரத்தைத் தூக்கில் போடப்போகும்போது சாட்சியோடு வந்து நிறுத்துங்க என்று தடுத்து நிறுத்துவதுதான்! (உதாரணம் – குருசிஷ்யன், ராஜாதிராஜா). அந்த வகையில் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை அது எடுத்துக்கொண்ட பின்னணியின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது. .

#தியேட்டரில் ஒரளவு கூட்டம்தான். சில வசனங்களுக்கு கைத்தட்டுகள் அள்ளுகிறது! படம் முடிந்து வெளியே வந்தபோது எனக்கு பின்னால் ஒரு அம்மையார் ‘’படம் ஒகேதான், சில வசனங்கள்தான் புரியல, ஆனா கிளைமாக்ஸ்தான் மொக்கையாருக்கு’’ என்றுவிட்டு சென்றார். படத்தின் பாராட்டத்தக்க அம்சமே அந்த கிளைமாக்ஸ்தான் என நினைத்துக்கொண்டிருந்தேன்.

#இப்படத்தை பாரக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த தூக்கிலிடுபவரின் நாட்குறிப்புகள் நூல் நினைவுக்கு வந்தது. உன்னதம் பதிப்பகம் வெளியீடு. மலையாளத்திலிருந்து தமிழில் இரா.முருகவேள். மரண தண்டனை குறித்த மிகமுக்கியமான ஒரு ஆவணம் இது. இந்நூலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றுகிற ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். 117பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றியவர் இவர்! தூக்கிலிடுபவனின் வலி, வேதனை, அன்றாட கடமைகள், சடங்குகள் என்று நூல்முழுக்க பல விஷயங்கள் நிரம்பியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த அந்த நூல் பொறம்போக்கு படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது. நிறைய வாசிக்கிற ஜனநாதன் நிச்சயம் இந்த நூலை வாசித்திருப்பார் என்று நினைக்கிறேன். படத்தில் வருகிற எமலிங்கம் (விஜயசேதுபதி) பாத்திரம் ஜனார்த்தனன் பிள்ளையைப் போலவேதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படமே அந்நூல் தந்த பாதிப்பில் உருவாகியிருக்கலாம்!

#படத்தின் ஆரம்பக்காட்சிகளில் எமலிங்கம் என்கிற அப்பாவியை கொல்ல நக்சல்பாரி கம்யூனிச இயக்கத்தினர் சிலர் தீர்மானிக்கிறார்கள். கையில் கூரான ஆயுதங்களுடன் எமலிங்கத்தை பின்தொடர்கிறார்கள். ஸ்கெட்ச்சு போடுகிறார்கள். அவனை கொன்றுவிட்டால் நக்சல் தலைவரை தூக்கில் போடமுடியாமல் போகுமாம! என்ன லாஜிக்கோ வெங்காயமோ. அந்த எமலிங்கத்தை கொல்ல கிடைக்கிற சந்தர்ப்பத்தில் கூட அம்மா சென்டிமென்ட் பார்த்து அவனை வேற இடத்துல வச்சு முடிச்சிடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். உலகிலேயே அம்மா சென்டிமென்ட் உள்ள போராளிகள் தமிழ்சினிமா போராளிகளாகதான் இருக்கவேண்டும். இப்படி எந்த பாவமும் பண்ணாத தூக்கிடுகிற ஒரு அப்பாவியை கொல்ல துடிக்கிற இந்த கோஷ்டி கானம் குழுவினரின் தலைவர் ஆர்யா படம் முழுக்க மரண தண்டணை ஏன் தவறானது என்று பக்கம் பக்கமாக கிளாஸ் எடுப்பது படத்தின் ஆகப்பெரிய முரண் நகைச்சுவை. ஆச்சர்யமூட்டும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற பெரும்பாலான மரண தண்டனை எதிர்ப்பு போராளிகளுக்கும் இப்படி ஒரு நிலைப்பாடு உண்டு. முருகன்,சாந்தனை தூக்கிலிடக்கூடாது என்று ஒருபக்கம் போராட்டம் நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் ராஜபக்சேவை தூக்கிலிட துடிப்பார்கள். அஜ்மல் கசாபை தூக்கில் போடும்போது அமைதியாகிவிடுவார்கள்!

#ஒரு பெண் போராளி காட்டப்படுகிறார். இளம் போராளி. மனிதவெடிகுண்டாக மாற தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் இயக்கத்திற்கே ஒப்புக்கொடுத்தவர். விரைவிலேயே வீரமரணம் அடைந்து தியாகியாகப்போகிறவர். அப்படிப்பட்டவரோ எந்நேரமும் வாய்நிறைய லிப்ஸ்டிக்கும், மார்புகள் பிதுங்கும் டிஷர்ட்டும் டைட்டான ஜீன்ஸும் வாயெல்லாம் லிப்ஸ்டிக்குமாக வாழ்வாங்கு வாழ்கிறார். அவருக்கு குயிலி என்று பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தற்கொலை போராளி இந்த குயிலி. அப்படிப்பட்ட பெயரை வக்கனையாக வைத்தவர் அந்த பாத்திரத்தையும் கொஞ்சம் வலிமையாக வடிவமைத்திருக்கலாம். ஆனால் அவரை எல்லாவிதமான சினிமாத்தனங்களோடுதான் அது காட்சிப்படுத்தப்படவேண்டுமா? அதிலும் போராளித்தலைவரோடு பனிமலையில் டான்ஸ் வேறு ஆடுகிறார்! தன்னுடைய முந்தைய படமான ஈயில் ஜனநாதன் ஒரு போராளியை காட்சிப்படுத்தியிருப்பார். பசுபதி நடித்த அந்த பாத்திரம் அச்சு அசலான நக்சல்பாரி போராளியாக வெளிப்பட்டிருக்கும், அப்படி இருந்த ஜனநாதன் பெரிய பட்ஜெட் என்பதால் ரிச்சான போராளிகளாக காட்டிவிட்டார் போல!

#விஜயசேதுபதியை ‘’இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’’ ஷூட்டிங்கிலிருந்து அப்படியே மேக்கப் கூட கலைக்காமல் அழைத்து வந்து நடிக்கவைத்திருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற இரண்டு நாயகர்களும் சாக்லேட் பையன்களாக இருந்தாலும் ஷாம் பல தெலுங்கு படங்களில் போலீஸாக நடித்து நடித்து நிஜபோலீஸைப்போலவே ஆகிவிட்டார். கடையியாக அவரை ''ரேஸ் குர்ரமில்'' ஐபிஎல் ஆபீசராக பார்த்த நினைவு. ஆர்யாவை பார்த்தால் போராளி போலவே இல்லை. அண்ணன் சீமானையாவது அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்! புரட்சிகரமாக இருந்திருக்கும்.

#தேவையில்லாத காட்சிகள், அலுப்பூட்டும் திரைகதை, லாஜிக் ஓட்டைகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும் நிறைய நல்ல தருணங்களும் உண்டுதான். குழந்தையை கற்பழித்தத்ற்காக ஆயுள்தண்டனை பெற்றவருக்கு பதினெட்டு ஆண்டுகள் கழித்து நிரபராதி என்று விடுதலை கொடுக்கிற அந்த காட்சியும் அவர் நான் வெளியே போகல என்று துடிக்கிற அந்தக்காட்சியும் சிறப்பானது. ஜெயிலில் ஷாம் செய்கிற சீர்திருத்தங்களும் அவர் சிறைத்துறை மீது வைக்கிற விமர்சனங்களும் அபாரமானவை.

#தமிழ் சினிமா இயக்குனர்கள் எல்லோருக்குமே பழிவாங்குவது அல்லது பலிகொடுப்பதுதான் பிடித்தமானது. அவ்வளவு அரசியல் ஆழ்ந்த அரசியல் அறிவுள்ள ‘’ரமணா விஜயகாந்த்’’ கூட கடைசியில் தன்னைத்தானே தூக்கிலிட்டுக்கொள்வதுதான் தமிழ்சினிமா பாணி! அப்படியொருசூழலில் இப்படம் ஒரு நல்வரவு. தைரியமாக மரண தண்டனை எதிர்ப்பை பேசியதற்காகவே ஜனநாதனின் இந்தப்படத்தை அதன் எல்லா குறைகளுடனும் சகித்துக்கொள்ளலாம். அக்குறைகளை தவிர்த்திருந்தால் காலத்திற்கும் மனதில் நிற்கவல்ல ஒரு நல்ல ஆக்கமாக வந்திருக்கும்.

14 May 2015

குலக்கல்வி திட்டம் 2015




2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய அளவிலான கணக்கீட்டின்படி இந்தியாவில் மட்டுமே நாற்பது லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (ஐந்து முதல் பதினான்கு வயதுவரை). இதில் ஒருலட்சத்து இருபதாயிரம் பேர் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்! தமிழ்நாட்டில் 70ஆயிரம்!

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் நம்மால் இன்னமும் இந்த எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இத்தனைக்கும் இந்தியாவில் குழந்தைத்தொழிலாளர் முறைக்கு முழுமையான தடை இருக்கிறது. இப்பயே இந்த லட்சணத்தில் இயங்கும் நம்முடைய அரசு எந்திரம், இப்போது அந்த தடையிலும் சில விஷயங்களை தளர்த்தி அதிர்ச்சி தந்திருக்கிறது.

விஷயம் இதுதான். கடந்த மே 13ஆம் தேதி ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

* பதினான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த தொழில்கள், விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

* குடும்பத்தின் குலத்தொழில்களில் (விவசாயம், மண்பாண்டம் செய்தல், மீன்பிடித்தல் முதலான) தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம், அதாவது பள்ளி நேரத்துக்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் பணியாற்றலாம்!

இவைதவிர்த்து தற்போதுள்ள சட்டத்தில் இருக்கிற தண்டனை மற்றும் அபராத அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன (அது வரவேற்கத்தக்க அம்சம்தான்!). இந்த சட்டதிருத்தம் பற்றித்தான் வட இந்திய ஊடகங்கள் இப்போது அதிக அளவில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்திருக்கிறது மோடியின் அரசு.

ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் படி எந்த குழந்தையையும் 14 வயதிற்குள் எப்படிப்பட்ட பணியிலும் அமர்த்தக்கூடாது என்கிற அறிவிப்பு உள்ளது. 2009ல் கல்வி உரிமை சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி 6 முதல் 14 வயது வரையுள்ள எல்லா குழந்தைகளும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பப்படவேண்டும். இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு இடைநிற்றலால் கல்வியை இழந்த எண்ணற்ற குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள இந்த திருத்தங்களால் ஏற்கனவே இருக்கிற குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டமும், கல்வி உரிமை சட்டமும் நீர்த்துப்போகும் அபாயம் உருவாகியுள்ளது. ஆபத்தில்லாத பணிகளில் இக்குழந்தைகளை பணியலமர்த்தலாம் என்கிற சட்டதிருத்தத்தால் அதிக ஆபத்தில்லாதவை என்று கருதப்படும் குழந்தைத்தொழிலாளர்கள் அதிகமும் ஈடுபடுத்தப்படும் தீப்பெட்டி, பட்டாசு தயாரிப்புத் தொழில், சேலத்தில் கொலுசுப் பட்டறை, பீடி சுற்றும் தொழில்களில் இக்குழந்தைகள் ஈடுபடுத்தப்பட நேருவதும் அடிப்படை கல்வி உரிமையும் பறிக்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இனி யாரும் குழந்தைகளை பணிக்கமர்த்தி இச்சட்டத்தின் உதவியோடு எனிதில் தப்பிக்கவும் இந்த திருத்தம் உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்களுடைய குழந்தைகள்தான் அதிகமும் தொழிலாளர்களாக தங்களுடைய குலத்தொழில்களை செய்கிறவர்களாக இருக்கிறார்கள் என்கிறது யுனிசெஃப். இப்போது வந்திருக்கிற இச்சட்டத்திருத்தம் யாருக்கு பாதகமாக இருக்கும் என்பதை சொல்லவும் தேவையில்லை.

இன்னொரு பக்கம் ஏற்கனவே ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதையே கட்டுபடுத்தும் கண்காணிக்கும் அமைப்போ விதிகளோ இல்லாத நிலையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் குழந்தைகளை பயன்படுத்தலாம் என்கிற அனுமதி என்னமாதிரியான பின்விளைவுகளை உருவாக்கும்?

போகட்டும். தன்னுடைய குலத்தொழிலை குழந்தைகளை செய்ய அனுமதிக்கிற கற்றுக்கொள்ள வைக்கிற இதே மாதிரியான ஒரு விஷயம் அறுபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது.

1953ல் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒரு திட்டத்தை அறிவித்தார். அதற்கு பெயர் குலக்கல்வி திட்டம். அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் குலத்தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதற்காக முன்வைக்கப்பட்ட காரணம் அப்போதைய கல்விச்சூழலில் சென்னையின் மாகாணத்தின் கல்வியறிவு 21சதவீதம்தான் என்பதும், அதனால் அப்போதிருந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி வழங்க இந்த புதிய திட்டம் அமல்படுத்தபடுகிறது என்றும் சொல்லப்பட்டது. இத்திட்டம் வெளிநான நாளில் இருந்தே மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்தது! அதற்கு காரணம் இது நேரடியாக வர்ணாசிரம கொள்கையை முன்னெடுப்பதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இத்திட்டம் கிராமங்களிலும் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் பட்டியல் சாதியில் பிறந்த குழந்தைகளுக்கும்தான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம் திராவிடர் இயக்கத்தினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.

பாஜக முன்வைத்திருக்கிற இந்த சட்டதிருத்த மசோதாவுக்கும் ராஜாஜி கொண்டுவரத்துடித்த குலக்கல்வி திட்டத்திற்கும் ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது! ஒரே ஒரு வித்தியாசம்தான் ராஜாஜியை எதிர்க்க அன்றைக்கு வலுவான ஒரு பெரியார் இருந்தார். இன்று அப்படி யாருமேயில்லை. குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பணியாற்றிய கைலேஷ் சத்யாத்ரிக்கு நோபல்பரிசு கொடுத்து ஓராண்டுகூட ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு விஷயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம்!

12 May 2015

குழந்தைகள் ஜாக்கிரதை!




Pedophile என்கிற சொல்லை கேள்விப்பட்டதுண்டா? இதுவரை தெரியாதென்றால் இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். அனைவரும் அறிந்துவைத்திருக்க வேண்டிய விஷயம் இது. Phedophilia என்கிற உளவியல் சிக்கலில் பாதிக்கப்பட்டவர்களை பீடோபைல் என்று அழைக்கிறார்கள். இந்த பீடோபைல்கள் ‘’குழந்தைகளின் மீது பாலியல் நாட்டம் கொண்டவர்கள்’’. தினமும் இவர்களை பற்றி எண்ணற்ற செய்திகளை நாம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் செய்கிறவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்.

பதினோறு வயதிற்கும் குறைவான சிறுவர் சிறுமியர் மீது பாலியல் நாட்டம் கொள்ளும் இந்த பீடோபைல்கள் தங்களுடைய வேட்கைக்காக அக்குழந்தைகளை வன்முறைக்கு ஆளாக்கவும் தயங்குவதில்லை. குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் பார்ப்பது அதைக்குறித்து வக்கிரமாக கற்பனைகள் செய்வது தங்களோடு பழகும் குழந்தைகளை அதற்கென பயன்படுத்த முயற்சி செய்வது தன்னைப்போன்ற பீடோபைல்களோடு அதுகுறித்து விவாதிப்பது என இவர்களுடைய வெறுக்கவைக்கும் நடவடிக்கைகள் பட்டியல் நீள்கிறது. இப்படிப்பட்ட மனிதர்கள் குறித்தும் CHILD SEX ABUSE குறித்தும் அடிக்கடி நிறையவே செய்தித்தாள்களில் படித்திருந்தாலும் இவர்கள் நம்மோடு இருந்தாலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் இவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு அனானிமஸாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். குழு அமைத்துக்கொண்டு இதுகுறித்த உரையாடலையும் அனுபவபகிர்தலையும் முன்னெடுக்கிறார்கள்!

சென்றவாரம் ட்விட்டரில் ஒரு நண்பர் ‘’சின்னப்பொண்ணு வெறியர்கள்’’ என்கிற ஃபேஸ்புக் பக்கத்திற்கான இணைப்பை பகிர்ந்துகொண்டு அதிர்ச்சி தெரிவித்திருந்தார். இந்த ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று பார்த்தால் சில கேடுகெட்ட அயோக்கியர்கள் பச்சிளங்குழந்தைகளின் படங்களை போட்டு அதில் அருவருக்கதக்க பாலியல் கமென்ட்களையும் சேர்த்திருந்தனர். இணையத்தில் இயங்குகிற இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு இணையதளத்தை பார்த்து கைகால் வெலவெலத்துப்போனது இதுதான் முதல் முறை! அந்த பக்கத்தை பார்த்தபிறகு அடுத்த அரைநாளும் மூளைக்குள் நரகவேதனையை உணர்ந்துகொண்டிருந்தேன். நம்மில் பலரும் இதுமாதிரியான மனிதர்களை நம்முடைய பால்யத்தில் கடந்திருப்போம். அந்த நினைவுகளின் மிச்சங்கள் கூட அந்நடுக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

அந்த பக்கத்தில் பகிரப்பட்டிருந்த அத்தனை படங்களும் நாமும் நம்முடைய நண்பர்களும் யதார்த்தமாக பகிர்ந்துகொண்ட நம்வீட்டு சின்னக்குழந்தைகளின் மிகச்சாதாரண படங்கள். இந்த பக்கத்தை நடத்தும் அட்மின் வரிசையாக நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளின் படங்களை பகிர்ந்துகொண்டு ஒவ்வொரு படத்திற்கு கீழும் ‘’இவளை என்ன செய்யலாம்’’ என்பது மாதிரி கேட்கிறான். அடுத்தடுத்த பின்னூட்டங்களில் வந்திருந்த கருத்துகளை இங்கே எழுதமுடியாது. அத்தனை வக்கிரமானது. இந்த அயோக்கியர்களின் கைகளில் ஒரு குழந்தைகிடைத்தால் என்னாகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இப்பக்கத்தில் பலரும் குழந்தைகளுடனான பாலியல் அனுபவங்களை ரத்தமும் சதையுமாக பகிர்ந்திருந்தனர். அதை வாசிக்கும்போது மயக்கமே வந்துவிட்டது. என்னால் அடுத்த சில மணிநேரங்களுக்கு எந்த வேலையிலும் ஈடுபடமுடியவில்லை. தலையை சுற்றிக்கொண்டு வர ஆரம்பித்துவிட்டது.

குழந்தைகளோடு உடலுறவில் ஈடுபடும்போது அவர்கள் வலியால் துடிப்பதை எப்படியெல்லாம் ரசித்தனர் என்பதையெல்லாம் வார்த்தைகளால் கொட்டி வைத்திருந்தனர். இதில் கமென்ட் செய்திருந்த ஒருவன் பள்ளியொன்றில் ஆசிரியராக பணியாற்றுபவன்! அப்பக்கத்தின் அடுத்தடுத்த படங்களையும் கருத்துகளையும் பார்க்க பார்க்க தாங்கமுடியாத வேதனையாக இருந்தது. இதில் உச்சபட்ச வேதனை தந்தது அப்பக்கத்திற்கு வந்திருந்த நான்காயிரம் லைக்குகள்! அத்தனை பேரும் தமிழர்கள்! (இப்பக்கம் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது, எந்த நிர்வாண படமும் இல்லை). அத்தனை பேரும் நம்மோடு தினமும் சமூகவலைதளங்களில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சி தரக்கூடியது. நான்காயிரம் என்கிற எண்ணிக்கைதான் இப்போதும் அதிர்ச்சியைத்தருவதாக இருக்கிறது. இத்தனை பேர் என்பதைத் தாண்டி இதை பார்க்கிற பதின்பருவ பையன்கள் கூட இதை முயற்சி செய்து பார்க்க நினைக்கலாம். அவர்களுடைய முதிர்ச்சியற்ற பாலியல் வேட்கைக்கு குழந்தைகள் எளிதான வேட்டையாகவும் கூட அமையும் ஆபத்து இதில் இருக்கிறது.

இந்த பக்கத்தை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் உடனடியாக ஃபேஸ்புக்கில் அப்பக்கத்தை பகிர்ந்துகொண்டு நண்பர்களை இதுகுறித்து ஃபேஸ்புக்கில் புகார் செய்து பக்கத்தை நீக்குமாறு வலியுறுத்தினேன். பல நண்பர்களை போனிலும் உள்பெட்டி செய்தியிலும் தொடர்புகொண்டு இப்பக்கம் குறித்து நண்பர்களிடம் சொல்லி புகாரளிக்க கூறினேன். நண்பர்கள் சிலரிடம் பேசி சைபர் கிரைமை அணுகுவது குறித்தும் ஆலோசித்துக்கொண்டிருந்தேன். ஆயிரக்கணக்கான நண்பர்கள் அபக்கம் குறித்து பகிர்ந்துகொண்டு ஃபேஸ்புக்கில் புகார் அளித்தனர். நண்பர் ஒருவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். சைபர்கிரைம் உடனடியாக ஃபேஸ்புக் நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு அப்பக்கத்தை நீக்கியது. அதோடு அப்பக்கத்தை நிர்வகித்தவரையும் பிடித்து தண்டிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தது.

இப்படி அப்பக்கத்தை புகார்கொடுக்க சொல்லி பகிர்ந்துகொண்டபோது அதன் லைக்குகள் எண்ணிக்கை 3800 சில்லரைதான், ஆனால் நான் பகிர்ந்துகொண்ட பிறகு அதன் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து நான்காயிரத்தை எட்டியது இன்னும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. சில பெண் தோழிகள் என்னை தொடர்புகொண்டு இதையெல்லாம் ஏன் பகிரங்கமா இப்படி பகிர்ந்துகொள்ளணும் அது அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பார்வைக்கு போனால் மிகவும்வருத்தமாக இருக்காதா, இது அவர்களுக்கும் விளம்ரமாக ஆகிவிடாதா என்றனர். ஆனால் இதுமாதிரி கயவர்களை கண்டுங்காணாமல் போனாலோ அல்லது மர்மமாக எதிர்நடவடிக்கைகளில் இறங்கினாலோ எந்தவித பிரயோஜனமும் இருக்காது என்பதனால்தான் அதனை நேரடியாக பகிர்ந்துகொள்ள வேண்டியதாயிருந்தது! அப்படி பகிர்ந்துகொண்டதால்தான் இன்று அப்பக்கம் குறித்துப்பரவலான ஊடக வெளிச்சம் கிடைத்தது.

இதோ இன்று அப்பக்கத்தை நிர்வகிக்கொண்டிருந்த யாதவா மணிகண்டா என்கிறவனை திருப்பதியில் கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது சைபர் கிரைம் காவல்துறை! அனேகமாக அவனுடைய குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. இவன் மட்டுமல்ல இன்னும் அப்பக்கத்தில் கமென்ட் போட்டவன், லைக் போட்டவன் என பலரையும் காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இது நிச்சயம் சமூகவலைதள வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கும். சைபர் கிரைமின் இந்த உடனடி நடவடிக்கைகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். இவ்வளவு விரைந்து அப்பக்கத்தை மூடியதும், அதற்குரியவரை கைது செய்திருப்பதும் இணையவாசிகளின் போற்றுதலுக்குரியது. அதற்காகவே அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். இவ்விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் போட்டதுமே பதறிப்போய் உடனுக்குடன் பகிர்ந்துகொண்டு விஷயத்தை காவல்துறை வரைக்குமே கொண்டு சென்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

சைபர் கிரைம் என்பதே ஏதோ தனிநபர் பிரச்சனைகளை தீர்த்துவைக்கிற ஆலமரத்தடி பஞ்சாயத்துகளைப் போலவேதான் இணையத்தில் நமக்கு
நன்குபரிச்சயமான சிலர் முன்பு அதை நாடியதும், சில பர்சனல் பழிவாங்கல்களுக்காக அது பயன்படுத்தப்பட்டதும் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சைபர் கிரைம் மாதிரியான அமைப்பினை மக்களாகிய நாம்தான் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையான குற்றங்களென்றால் நிச்சயம் அவர்களிடமிருந்து நல்லவிதமான எதிர்வினை உண்டு என்பதை இந்த பீடோபைல் விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.

***

இன்று ஃபேஸ்புக்கை பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமும் பயன்படுத்துகிறார்கள். எல்லாமே பதினோறு வயதிற்கும் குறைவான குட்டீஸ்கள். இதுமாதிரியான பீடோபைல்கள் அவர்களை எளிதில் நெருங்க முடியும். அதனால் நம் குழந்தைகளின் சோஸியல் மீடியா ஆக்டிவிட்டிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், அங்கே இருக்கிற இதுமாதிரியான கேடுகெட்ட அயோக்கியர்களை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாமும் தெரிந்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

*உங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பொதுவில் பகிர்ந்துகொள்ளாதீர்கள். குறிப்பாக குழந்தைகளாகவே இருந்தாலும் உடையில்லா புகைப்படங்கள் வேண்டவே வேண்டாம்.

*2007ல் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் குழந்தைகளின் மீது பாலியல் வன்முறையை நிகழ்த்துபவர்களில் 50சதவீதம் பேர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதனால் வெளி ஆட்களை விட நமக்கு நெருக்கமானவர்களால்தான் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.

*இணையத்தில் உங்கள் குழந்தைகளின் பள்ளி, வசிப்பிடம் மாதிரியான விஷயங்களை தயவு செய்து பகிர்ந்துகொள்ளாதீர்கள். குழந்தைகளை நெருங்க நாமே வாய்ப்புகளை வழங்கக்கூடாது.

*குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினால் அவர்களிடம் வசிப்பிடங்களை TAG செய்வது கூடாது என்பதையும் STRANGERS இடம் பேசுவதில் இருக்கிற ஆபத்தையும் நேரடியாக உட்கார்ந்து விளக்கவும்.

*இவை தவிர இதுமாதிரியான இணைய குழுக்கள், பக்கங்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கவும்.

சமூகவலைதளங்கள் என்பது நம்முடைய சமூகத்தின் பிரதிபலிப்பே, அதனால் சமூக வலைதளங்களில் மட்டுமல்ல இந்தக்கயவர்கள் நமக்கு மிக அருகிலேயே இருக்கலாம். அதனால் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதும், குட்-டச் பேட் டச் எது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது! காரணம் அவர்கள் நமக்கு மிக அருகில் இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கில்!

20 April 2015

8 Points - ஓ காதல் கண்மணி



1 - மணிரத்னத்தின் ‘’தாலி’’ ட்ரையாலஜியில் இது கடைசி படம் போல! அவ்வரிசையில் முதல் படம் மௌனராகம், தாலிகட்டிக்கொண்டு ஒரே வீட்டில் பிரிந்து வாழ்பவர்களின் கதை. அடுத்து அலைபாயுதே தாலிகட்டிக்கொண்டு தனித்தனி வீட்டில் வாழ்பவர்களின் கதை. ஓகா கண்மணி தாலிகட்டிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்பவர்களின் கதை! மற்ற படங்களை போலவே இதிலும் கடைசியில் இருவரும் ஹேப்பி எவர் ஆப்டராக வாழவே செய்கிறார்கள். இப்படத்திலும் கடைசியில் தாலியே வெல்கிறது.

2 - படம் ஓடும் போது யாருமே கைத்தட்டவில்லை. ஆனால் திடீர் திடீர் என்று ஊ….. ஏ…. ஓ…. என்று விதவிதமாக கத்திக்கொண்டேயிருந்தார்கள். நமக்கோ அச்சத்தில் நெஞ்சை கவ்வுகிறது. இந்த கூச்சலுக்கான காரணங்களையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் படத்தில் அப்படி கத்தி கூப்பாடு போடுகிற அளவுக்கு காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் முப்பான் முருகன் வழிவந்த தமிழர்கள் கத்தி ஆர்பரிக்கிற லிப்டூலிப் முத்தக்காட்சி கூட இல்லாத சுத்தமான மயிலாப்பூர் மாமிமெஸ் படம் இது. ஆனால் வெளியே இணையத்தில் இது கலச்சாரத்திற்கு எதிரானது, ஆபாசம் அது இது என்று ஏதோ செக்ஸு பட ரேஞ்சில் பில்டப் மட்டும் ஓவராக இருக்கிறது. நவநாகரீக இளைஞிகள் படத்தில் ஒன்றுமே இல்லையென்றாலும் விடாமல் ‘’உற்சாகமாக’’ கத்திக்கொண்டேயிருக்கிறார்கள்.

3 - படத்தில் பிரகாஷ்ராஜ் கதையை மட்டுமே தனியாக படமாக எடுத்து ஹாலிவுட்டுக்கு அனுப்பியிருந்தால் ஆஸ்கார் விருது பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆஸ்கருக்கும் அல்சைமர் மாதிரியான வினோத வியாதியஸ்தர்களின் காதல்,உறவு தொடர்பான படங்கள் என்றால் விருதை அப்படியே தூக்கி கொடுத்துவிடுகிற வழக்கமுண்டு. லீலாதாம்சனின் வசனங்களும் அவருடைய நடிப்பும் சிறப்பாக இருந்தது. அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் இதுமாதிரியான ஒரு பாத்திரம் வரும் (நாயகி ஜமுனாவின் அம்மா) அது எந்நேரமும் இப்படி அடிக்கடி மறந்து மறந்து போய் எதேதோ நடுநடுவே பேசிக்கொண்டிருக்கும்.

4 - கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு கட்டிப்பிடித்த படி பேசுவது, பழைய பாணி கட்டடங்களில் மரகட்டிலில் மேற்படி சமாச்சாரங்கள் பண்ணுவது, பைக்கில் கூலர்ஸ் போட்டுக்கொண்டு காதலியோடு வளைந்து வளைந்து வண்டி ஓட்டுவது, கடற்கரையையொட்டி கத்திக்கொண்டே ஜீப்பில் செல்வது என மணிரத்னம் தன் முந்தைய படங்களிலிருந்தே நிறைய ரொமான்டிக் ஐடியாக்களை பிடித்திருக்கிறார். அட நாயகனும் நாயகியும் ஒரு லாட்ஜில் தங்கினாலும் அங்கேயும் மரக்கட்டில்தான் போட்டிருக்கிறார்கள் என்பதும், நாயகியின் ஹாஸ்டலிலும் மரகட்டில்தான் என்பதும் வாட் ஏ கோ இன்ஸிடன்ஸ்!! படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் பத்துநாட்கள் ஜாலியாக சந்தோஷமாக இருக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள், அடுத்த பத்து நிமிடங்களுக்கு ய்யய்யா யிய்யய்யா உய்யயா கொய்யா என ரோடுகளில் கத்திக்கொண்டே அலைகிறார்கள். சந்தோஷமா இருக்காய்ங்களாம்!

5 - திரையரங்கில் எங்கெங்கு காணினும் இளம்பெண்கள். கூட்டம் கூட்டமாக கும்பல் கும்பலாக குவிந்திருந்தார்கள், எங்கு பார்த்தாலும் லட்டுலட்டாக குமரிகள் கூட்டம். எல்லோருமே பள்ளி-கல்லூரி மாணவிகள்தான். தாராளமாக படத்தின் போஸ்டர்களில் ‘’தாய்மார்களின் பேராதரவுடன்’’ என்று போட்டுக்கொள்ளலாம்! துல்கர் சல்மான் பெயர் போடும் போதும் அவரை காட்டும்போதும் பெண்கள் அலறி குலுங்கி துடியாய் துடிக்கிறார்கள். அவரும் வாங்கின காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் சட்டையில்லாமல் வருகிறார், பேண்ட் இல்லாமல் வருகிறார், ஜட்டியோடு வருகிறார்… அதையெல்லாம் காண சகிக்காமல் கண்ணை பொத்தின்ட்டேன்! ஆபாசம். அலைபாயுதே காலத்தில் மாதவனுக்குதான் கடைசியாக இப்படி பிள்ளைகள் துடித்தது. அதற்குபிறகு மீண்டும் துடிதுடிக்கவைக்க மணிசார்தான் இன்னொரு படமெடுக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் காலத்தின் கோலம். துல்கருக்கு அப்படியே மலையாள நடிகர் ப்ருதிவிராஜ் குரல்.

6 - ஒரு இளம் மங்கையோடு லிவிங்டுகெதரில் இருக்கப்போகிறேன் என்று ஹவுஸ் ஓனரிடம் வந்து சொல்கிறான் நாயகன். ஹவுஸ்ஓனர் ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆள், கெடுபிடி பேர்வழி, ஆச்சாரமான அனுஷ்டாங்கமானவர். அப்படிப்பட்டவர் லிவிங்டுகெதர் என்றால் எப்படி ஒப்புக்கொள்வார்? ஹவுஸ்ஓனர் அதெல்லாம் முடியாது இடத்தை காலிபண்ணுங்கோ என்று திட்டுகிறார், அந்த நேரத்தில் நாயகி பாட ஆரம்பிக்கிறார், ஒரே கர்நாடிக் சங்கீதம்… சசரிரீகமபத நிஸ சரிக சரிக ரிகம ரிகம என்று அவர் பாட ஹவுஸ்ஓனர் அப்படியே மெர்சலாகி லிவிங்டூகெதருக்கு ஒப்புக்கொள்கிறார்! கர்நாடிக் சங்கீதம்தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அக்காட்சி நமக்கு விளக்குகிறது. அந்த நொடியில் ''நீங்க வெறும் கணபதியா இல்ல, வடிவேலு அக்காவை பிக்கப் பண்ணின பேக்கரி ஓனர் கணபதி ஐயரா என்கிற கேள்வி படம் பார்க்கிற சராசரி ரசிகனின் மனதில் எழுவதை தவிர்க்க முடியாது.

7 - படத்தின் தொடக்கத்தில், பெயர் கூட சரியாக தெரியாத ஒருவனுடன் லாட்ஜில் ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு, தன்னந்தனியாக குடும்பத்தை விட்டு வாழ்கிற தைரியமான பெண்ணாக காட்டப்படுகிறார் நாயகி. ஆனால் படம் செல்ல செல்ல அப்படியே மொக்கையாகி க்ளைமாக்ஸ் நெருங்கும் போது காதலனின் காலில் விழுந்து ‘’ப்ராணநாதா என்னை கைவிடாதீரும்’’ என்று கலங்கி கண்ணீர் வடிக்கிறார். என்னை நல்லா பாத்துப்பீயா பாத்துப்பீயா என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். கடைசியில் நாயகனும் நாயகியும் ‘’வயசான காலத்தில் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்க கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்’’ என்று கண்டுபிடிக்கிறார்கள். அந்த கருமத்தை ‘’ஏன் லிவிங் டூ கெதரிலேயே செய்ய முடியாதா’’ என்கிற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை!

8 - லிவிங் டூ கெதர் என்பது கமிட்மென்ட் இல்லாமல் நேரம்காலம் பார்க்காமல் காசு கொடுக்காமல் செய்யக்கூடிய கஜகஜா என்று ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார் மணிசார். அதில் இருக்கிற எந்தவித உட்குழப்பங்களையும், பாசநேசங்களையும், உறவுச்சிக்கல்களையும் பற்றி ஒன்னாரூபா அளவுக்கும்கூட படத்தில் பேசவில்லை. கமிட்மென்ட் இல்லாமல் மேட்டர் பண்ணிக்கொண்டே இருக்கிற இருவருக்கும் எப்போது காதல் வந்தது எப்படி வந்தது என்பதுவும் அது எப்போது தங்களுடைய கொள்கைகளை கைவிட்டு கல்யாணம்வரைக்கும் சிந்திக்க வைத்தது என்பதையும் வலுவாக காட்டியிருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு க்ளைமாக்ஸில் ஞானதோயம் வந்து இந்துதர்மத்தையும் இந்திய பண்பாட்டையும் காக்கும் வகையில் எந்த கஜகஜாவாக இருந்தாலும் தாலி கட்டிட்டு பண்ணட்டும் என்று மேரேஜ் செய்வித்து நமக்கு நன்னெறியையும் போதிக்கிறார்!

15 April 2015

நெட் நியூட்ராலிட்டி - For dummies




நெட்நியூட்ராலிட்டி விவகாரத்தில் ஃப்ளிப்கார்ட் காரன் அடித்திருக்கிற பல்டிக்கு பேர்தான் அந்தர்பல்டி! ஓர் ‘’உலக நடிப்புடா சாமீ’’ மோமன்ட். ப்ளிப்கார்ட் காரன் சொவர் ஏறி குதிச்சு எகிறியடிச்சு ஒடியதை அடுத்து இன்றைக்கு ஏர்டெல்லின் பங்குகள் ஒன்று புள்ளி ஏழோ எட்டோ சதவீதம் சரிந்துவிட்டது. அப்படி ஓர் ஓட்டம்! மவுஸ் புரட்சியாளர்களின் பவர் இன்னுமே கூட ஏர்டெல்லுக்கு புரியவில்லைதான் போல.. ஏர்டெல் இன்னமும் தன்னுடைய ‘’ஏர்டெல் ஜீரோ’’ திட்டம் அற்புதமானது அருமையானது… வின்-வின் சூழலை வழங்கவல்லது என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.

நெட் ந்யூட்ராலிட்டி என்கிற சொற்களை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்புவரை பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாது. ஆனால் எழுத்தாளர் சாரு அடிக்கடி சிலாகிக்கும் சிலேயில் 2010லேயே இதற்காக போராடி அதற்காக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். அமெரிக்கர்கள் கூட இதில் தாமதம்தான் சென்ற ஆண்டுதான் அங்கே போராட்டங்கள் தொடங்கி மிகசமீபத்தில்தான் ஒரளவு சுமூகமான முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது, இந்த பாரபட்சமற்ற இணையத்திற்கான போர்!

இன்று மொபைலிலும் டேப்களிலும் கணினியிலும் விதவிதமான இணையதளங்களையும் சமூகவலைதளங்களையும் பயன்படுத்தி விருப்பப்படி உலவுகிறோம். இணைய சேவை வழங்கும் (ISP) தொலைதொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணையதளங்களை பார்க்க மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எந்த ஒரு இணையதளத்திற்கும் தனியாக அதிக வேகமோ அல்லது குறைந்த வேகமோ வழங்குவதில்லை. சிறப்பு சலுகைகள் கிடையாது. இணையத்தில் எல்லாமே பாகுபாடின்றி ஒரே வேகத்தில் ஒரே கட்டணத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த இணையதளத்தையும் பார்ப்பதையோ உலவுவதையோ கட்டுபடுத்துவதுமில்லை. இதுதான் நெட் நியூட்ராலிட்டி.

நெட் நியூட்ராலிட்டி இல்லாமல் போனால், பகாசுர டெலிகாம் கம்பெனிகள் ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனியாக துட்டு வசூலிக்கும். வாட்ஸ் அப் மட்டும் அதிக வேகத்தில் இயங்க கூடுதலாக பத்து ரூபாய், ஜிமெயிலின் வேகத்தை அதிகரிக்க முப்பது ரூபாய் என்பது மாதிரி. யூடியூபில் எச்டி வீடியோ பார்க்க வேண்டுமா அதற்கு தனிக்கட்டணம். ப்ளிப்கார்ட்டில் ஆபர் போட்டால் முதல் ஆளாக முந்திக்கொண்டு புக் பண்ணவேண்டுமா அந்த இணையதளத்திற்கு மட்டும் சலுகைவிலையில் சூப்பர் ஸ்பீடு! வாட்ஸ் அப் காலிங்கிற்கு தனிக்கட்டணம். வைபருக்கு தனிக்கட்டணம்! மாதாமாதம் போஸ்ட் பெய்ட் கனெக்ஷன் வைத்திருப்பவர்களெல்லாம் இஷ்டப்படி சுருட்டலாம்.

விழாநாட்களில் நம்முடைய சிறப்பு சலுகைகளை ரத்து செய்துவிட்டு குறுஞ்செய்தி அனுப்ப காசு பிடுங்குகிற அதே பாணி. டிடிஎச்சில் குறிப்பிட்ட சானல்களுக்கு மட்டும் தனிக்கட்டணம் வசூலிக்கிற அதே டெக்னிக். இதை இணையம் வரைக்கும் நீட்டிக்கத்தான் திட்டமிடுகின்றன.
அப்படி ஒன்று நடந்துவிட்டால் அதற்கு பிறகு இணையம் எப்போதும் இலவசமாகவும் பாரபட்சமின்றியும் இருக்காது! நாம் பயன்படுத்துகிற முறையும் அதற்காக செலவழிக்கிற தொகையும் முற்றிலும் வேறமாதிரி ஆகிவிடும். அதனால்தான் இந்தியா முழுக்க இணையவாசிகள் நெட்நியூட்ராலிட்டியை பாதுகாக்க கோரி விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏர்டெல் நிறுவனம் சென்ற வாரத்தில் கொண்டு வந்த ஏர்டெல் ஜீரோ என்கிற புதிய ப்ளானை வெளியிட்டரது. கொதித்தெழுந்தது இணைய சமூகம். இந்த ஏர்டெல் ஜீரோ திட்டத்தில், மிகச்சில தனியார் நிறுவனங்களின் ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏர்டெல் வசூலித்துக்கொள்ளும்! இதனால் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும்! டேட்டா மிச்சமாகும்.

இத்திட்டத்தில் முதலில் இணைந்தது ப்ளிப்கார்ட் காரன். ப்ளிப்கார்ட் இணையதளத்தை அல்லது குறுஞ்செயலியை (APP) நீங்கள் உங்களுடைய மொபைலில் பயன்படுத்தும்போது அதற்காக பணம் தர வேண்டாம். அந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேட்டா எல்லாமே ப்ரீதான்! இலவசம் என்றதும் ஒரே குஷியாகி இதுக்கு ஏன் எதிர்ப்பு என்று நினைக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்பு வோடஃபோன் மற்றும் ரிலையன்ஸ் கூட தங்களுடைய இணைப்பு உள்ளவர்கள் ஃபேஸ்புக் தளத்தை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிந்திருந்தன. இப்போதும் அது செயல்பாட்டில் இருக்கிறதா தெரியவில்லை. உலகில் இலவசமாக ஒன்றை எந்த இழிச்சவாய நிறுவனமும் வாடிக்கையாளருக்கு தூக்கிக்கொடுப்பதில்லை. இப்படிப்பட்ட அறிவுப்புகளுக்கு பின்னால் சூழ்ச்சியும் சூதும் நிச்சயமிருக்கும். இதில் என்ன சூது? இப்படி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லுகிற இணையதளங்களை முற்றிலும் இலவசமாக பயன்படுத்தமுடியாது. அதில் உள்ள எழுத்துவடிவ விஷயங்களுக்கும் மட்டும்தான் இலவசம். படங்கள் பகிர, வீடியோ பார்க்கவெல்லாம் தனியாக காசு கொடுக்க வேண்டும் என்று ஸ்டார் போடுவார்கள்! வோடபோனின் இலவச ஃபேஸ்புக் அப்படியொரு ஆபர்தான்.

அதாவது இட்லி ஃப்ரீ ஆனால் சட்னிக்கு தனியாக சாம்பாருக்கு தனியாக பொடிக்குதனியாக காசு கொடுக்க வேண்டியிருக்கும். ஏர்டெல் ஜீரோ அப்படிப்பட்ட ஒரு நடைமுறைக்கான முதல் படி. முதலில் இலவசத்தை கொடுத்து பிறகு நாம் அதிகம் பயன்படுத்தும் தளங்களுக்கு தனிக்கட்டணம் விதிப்பது. அதனால்தான் ஆளாளுக்கு கொதிக்கிறார்கள்.

ஏர்டெல் நிறுவனத்தின் சென்ற ஆண்டின் (2014) ஒட்டுமொத்த வருவாயில் 5.5% எஸ்எம்எஸ் சேவை வழியாக கிடைத்தது. ஆனால் இந்த அளவு அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 8% குறைவு! 12.4 சதவீதமாக இருந்த வருவாய் ஒரே வருடத்தில் குறைந்து 5சதவீதமானதற்கு காரணம் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கின் வரவு. விழாக்காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளையடித்துக்கொண்டிருந்த டெலிகாம் கம்பெனிகளுக்கு இது சூப்பர் ஆப்பாக அமைந்தது.

இதற்கு பிறகு அதிகரிக்கும் VOIP தொழில்நுட்பம், ஏர்டெல், டாடா முதலான நிறுவனங்களை ரொம்பவும் எரிச்சலூட்டின. சும்மா இருப்பார்களா? தொலைதொடர்பு துறையை கட்டுப்படுத்தும் ட்ராயிடம் ஸ்கைப், லைன் முதலான சேவைகளின் வழி தொலை பேசுவதை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுடைய அழைப்புகளை கண்காணிக்க வேண்டும், எங்களுக்கு இருக்கிற விதிமுறைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தன.

‘’கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாயில் 42சதவீதத்தையும், செல்போன் அழைப்புகள் மூலம் கிடைத்த வருவாயில் 19சதவீதத்தையும் இழந்துள்ளன, இதை இப்படியே விட்டால் இந்த OTT தளங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் 24ஆயிரம் கோடிகளை நம்முடைய தொலைதொடர்பு நிறுவனங்கள் இழக்க வேண்டியிருக்கும்’’ என்று கோபமாக பேசியிருக்கிறார் ராஜன் மேத்யூஸ். இவர் யார் தெரியுமா? செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷனின் (COAI) இயக்குனர். (OTT தளங்கள் என்பவை over the top players , ஸ்கைப் , வாட்ஸ் அப், வைபர் மாதிரியானவை)

இப்படிப்பட்ட நிலையில் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்ட ஜீவிவதத்தில் இருக்கும் இந்த டெலிகாம் கம்பெனிகள் என்ன செய்யும். அதனால்தான் கோடீஸ்வர வாடிக்களையாளர்களின் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை லவட்ட பார்க்கின்றன. இப்போது வாட்ஸ்அப் காலிங்கும் வந்துவிட்ட நிலையில் டெலிகாம் கம்பெனிகள் எப்படியாவது நெட்நியூட்ராலிட்டியை காலி பண்ணிவிட துடிக்கின்றன.

இதை தடுக்க என்ன செய்யவேண்டும்?

இவ்விவகாரம் டெலிகாம் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ட்ராய் (TRAI) வரைக்குமே போய்விட்டது. ட்ராய் இப்போது இவ்விஷயத்தில் மக்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது. இதற்காக இருபது கேள்விகள் அடங்கிய ஒரு ரிப்போர்ட்டை தந்திருக்கிறது. அதை படித்து பார்த்து உங்கள் கருத்துகளை ட்ராயிக்கு தெரிவித்து நெட்நியூட்ராலிட்டியை கட்டிக்காக்கலாம். இதற்கு கடைசி நாள் ஏப்ரல் 24. அதற்குள்ளாக கொடுத்தால்தான் ஏதாவது செய்ய முடியும்.

இணையவாசிகள் சோம்பேறிகள் என்பது தெரிந்த சகசோம்பேறி ஒருவர் ட்ராயிக்கு லெட்டர் போடவே தனியாக ஒரு இணைய தளத்தை நடத்துகிறார். 20 கேள்விகளை நூறுபக்கத்துக்கு கொடுத்தால் யாரால் படிக்க முடியும் எப்படி பதில் போட முடியும். அதனால் http://www.savetheinternet.in என்கிற இந்த தளத்திற்கு சென்று ஒரு பட்டனை தட்டினால் ட்ராய்க்கு என்ன பதில் அனுப்பவேண்டுமோ அதை மொத்தமாக டைப் செய்து வைத்திருக்கிறார்கள். அதை படித்து பார்த்தோ பார்க்காமலோ காப்பி பேஸ்ட் பண்ணி ட்ராயின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான். 

இதுவரை மூன்று லட்சம் பேருக்கு மேல் ட்ராய்க்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறார்கள். நீங்களும் போடுங்கள். 

விபரம் பத்தாதவர்கள் மேலும் தெரிந்துகொள்ள http://www.netneutrality.in/