Pages

31 December 2013

ஒரு பரபரப்பான ஆண்டின் முடிவில்...
ஒரு பரபரப்பான ஆண்டு முடிந்துவிட்டது. நிறைய சிரமங்கள் இடர்கள், அப் அன் டவுன்ஸ், இன்ப துன்பங்கள் லிட்டர் கணக்கில் கண்ணீரும் ஏக்கர் கணக்கில் புன்னகையும் என ‘’2013’’ ஆண்டு முடிந்துவிட்டது. இதுவரை எந்த ஆண்டும் இந்த அளவுக்கு ஜாலியாக, உருப்படியாக , பரபரப்பாக இருந்ததேயில்லை. அதனாலேயே ஐ லவ் திஸ் 2013! அதுக்குள்ள முடிஞ்சிட்டியே புள்ள…

நினைத்தை எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒன்றிரண்டையாவது உருப்படியாக செய்திருக்கிறோம் என்கிற உற்சாகத்தோடும் ஏகப்பட்ட புத்தம் புதிய நண்பர்களோடும் அதைவிட புதிதான நம்பிக்கையோடும் 2014ற்குள் நுழைகிறேன்.

சென்ற ஆண்டின் இறுதியில் நிறையவே லட்சியங்கள் வைத்திருந்தேன். நிறைய நூல்கள் வாசிப்பது, கொரிய மொழி கற்றுக்கொள்வது, நீச்சல் பயிற்சிக்கு செல்வது, சிகரட்டை கைவிடுவது என அது சரவணபவன் மெனுகார்டு போல நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகும். காசாபணமா ரெசல்யூசன்தானே! ஆனால் ஆச்சர்யமாக அந்த பட்டியலில் சிலவற்றை செய்து முடித்த திருப்தி இப்போது மனது முழுக்க நிறைந்துள்ளது.

இந்த ஆண்டில் ஸ்கூபா டைவிங் செய்ததுதான் டாப் அச்சீவ்மென்ட் (எனக்கு நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது!). கடலுக்கடியில் சில அடிகள் சென்றுதிரும்பிய அந்த திக் திக் நிமிடங்கள் மறக்கவே முடியாது. அதை நிச்சயம் மிகமுக்கியமான ஒரு சாதனையாக நினைக்கிறேன். அந்த ஸ்கூபா டைவிங் அனுபவம் குறித்த கட்டுரை என்னுடைய படத்தோடு புதியதலைமுறை இதழில் பிரசுரமானது இன்ப அதிர்ச்சி!

தமிழ் பத்திரிகைகளில் இதுபோலொரு அனுபவக் கட்டுரை வெளியாவது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன்..அவ்வகையில் அடியேனுக்கு லிட்டில் பிட் ஆஃப் பெருமைதான். அதோடு புதியதலைமுறை இதழுக்காக குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளையும் பலரையும் கவர்ந்த கவர்ஸ்டோரிகளையும் எழுதினேன்.

ஸ்கூபா டைவிங் கொடுத்த உற்சாகத்தில் நீச்சல் கற்றுக்கொண்டேன். தனியாகவும் நண்பர்களோடும் நிறையவே ஊர் சுற்றினேன். குறிப்பாக பூவுலகின் நண்பர்களோடு பாபாநாசம் சுற்றியதும் தோழி ஒரு ஞாயிற்றுக்கிழமை தோழி ப்ரியாதம்பியோடு இலக்கே இல்லாமல் 300கிலோமீட்டர் ஊர்சுற்றியதும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. கெயில் (GAIL) பிரச்சனை தொடர்பாக ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கிராமம் கிராமமாக செய்தி சேகரிக்க நண்பர் கணேஷோடு பைக்கில் பல நூறு கிலோமீட்டர்கள் சுற்றியது ஒரு ஆச்சர்ய அனுபவம்.

நம்முடைய அதிஷாஆன்லைன் வலைப்பூவில் நிறைய எழுத நினைத்திருந்தேன். அதிகமாக எழுத எழுத பயிற்சிதானே! அதுமட்டுமின்றி ‘’மக்கள் நம்மள பத்தி என்ன நினைப்பாங்களோ’’ என்றெல்லாம் எந்த மனத்தடையையும் வைத்துக்கொள்ளாமல் விரும்பியதையெல்லாம் எழுதவும் முடிவெடுத்தேன். சென்ற ஆண்டுகளில் வதையாக மாறிப்போன எழுத்து மீண்டும் மகிழ்ச்சி தருவதாக மாறியது. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட், கோலிவுட் என எல்லா திரைப்படங்களையும் வெறித்தனமாக பார்ப்பது இந்த ஆண்டும் தொடர்ந்தது.
இந்த ஆண்டு மட்டுமே நூறு கட்டுரைகள் இணையதளத்தில் எழுதுவது என டார்கெட் வைத்திருந்தாலும் 99தான் எழுதமுடிந்தது என்பதில் கொஞ்சம் வருத்தம்தான். (இதுதான் 99வது பதிவு!).

ஃபேஸ்புக்கில் வாசிப்பவர்களுக்காக நிறையவே குட்டி குட்டியாக எழுதியிருக்கிறேன். ட்விட்டரிலும் அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தேன். நிறைய புதிய நண்பர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக கிடைத்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் விளையாட்டாக பகிர்ந்து கொண்ட ‘’ஷேரிங் பெருமாள்’’ யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு லட்சம் சொச்சம் பேரால் ஷேர் செய்யப்பட்டு… ஆனந்த விகடனில் செய்தியானார்! அதிலும் லிட்டில் பிட் ஆஃப் பெருமை சேர்ந்துகொள்கிறது.

ஆண்டின் இரண்டாம்பாதியில் மிகவும் பொறுமையாக 30 பக்கம் நீளும் ‘’குறுநாவல்’’ ஒன்றை எழுதி முடித்தேன். அதை என்ன செய்வதென்று இதுவரை தெரியவில்லை. MAY BE அடுத்த ஆண்டு என்னுடைய இணையதளத்திலேயே போட்டுவிடுவேனாயிருக்கும். புத்தகம் போடும் ஆசையோ ஆர்வமோ இத்யாதிகளோ இந்த ஆண்டும் வரவில்லை. எப்போதுமே வராதுதான் போல..

குழந்தைகளை சந்தித்த போதெல்லாம் அவர்களுக்கு கதைகள் சொல்லும் புதுப்பழக்கமும் இந்த ஆண்டு தொற்றிக்கொண்டது. அப்படி சொன்ன ஒரு குழந்தைகள் கதைதான் ‘’புக்கு பூச்சி’’. அடுத்த ஆண்டு பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு கதை சொல்ல நினைத்திருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால்!

நண்பர்களும் உறவினர்களும் காதலிகளும் தோழிகளும் குட்டீஸ்களும் நலம்விரும்பிகளும் வாசகநண்பர்களும் தொடர்ந்து வற்புறுத்தி வந்தாலும், புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது மட்டும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

கடந்த ஆண்டுகளில் அதாவது கடந்த 15ஆண்டுகளாக, நம்முடைய வரலாற்றில் இதற்கு முன்பு முப்பது முறைகள் சிகரட்டை கைவிட்டு பின் இரண்டுநாட்கள் கூட தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் ஆரம்பித்து.. படுதோல்வியடைந்திருக்கிறோம் இல்லையா... அதனால் இந்த ஆண்டு எப்படியாவது மிகச்சரியாக திட்டமிட்டு சிகரட்டோடு போராடி அதை வென்றுவிட முடிவெடித்தேன். ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

புகை பிடிக்கும் வெறி அவ்வப்போது ஒரு சாத்தானைப்போலத்தோன்றும்… அந்த பத்து நிமிடத்தை கடப்பதுதான் சவாலே.., முதல் மூன்று மாதங்களும் ஒவ்வொரு நொடியும் நத்தை வேகத்தில் நகர்கின்றன. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. யாரிடமும் மகிழ்ச்சியாக உரையாட முடியவில்லை. சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் வெடுக் வெடுக் என கோபம் வந்து சண்டையிடவும் தொடங்கிவிட்டேன். வீட்டில் எல்லோரிடமும் சண்டை. அலுவலகத்தில் சண்டை. நண்பர்களிடமும் சண்டை.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மகா மட்டமாக எதிர்வினையாற்றினேன்! நிறையவே இழந்தேன். அதில் முக்கியமானது என்னுடைய நட்புவட்டாரம்!

அந்த நேரத்தில் மிகமிக நெருக்கமான நண்பர்களோடு நானாகவே தேவையில்லாமல் சண்டையிட்டு விலகினேன். இப்போது நினைத்தால் ஷேம் ஷேம் பப்பிஷேமாக இருக்கிறது. எதற்காக சண்டையிட்டு இப்போது அவர்களிடமிருந்து பேசாமல் விலகியிருக்கிறேன் என்பதும் கூட மறந்துவிட்டதுதான் அடிபொலி காமெடி. (சாரி ஃபிரண்ட்ஸ் நான் தப்பா நடந்திருந்தா!)

‘’ஹாய் ஹலோவும் கூட சாத்தியமற்றதாக அந்த உறவுகள் விலகும் என்று கனவிலும் நினைத்ததில்லை! நட்பும் நம்பிக்கையும் கசக்காத காகிதம் போன்றதுதான் போல.. ஒருமுறை கசக்கிவிட்டால் பழையபடி ஆக சாத்தியமற்றதோ என்னவோ? எல்லாம் நன்மைக்கே!’’

முழுக்க தனிமையும் வேதனையும் ஆக்கிரமித்திருந்த அந்த நாட்களில் என்னை ஆசுவாசப்படுத்தியதில் சில நண்பர்களுக்கு மிகமுக்கிய பங்கிருக்கிறது. கிங்விஸ்வா, குமரகுருபரன், தோழி ப்ரியாதம்பி, கவிஞர் சே.ப்ருந்தா, எழுத்தாளர் பாஸ்கர்சக்தி, அந்திமழை ஆசிரியர் அசோகன் மற்றும் தோழி கவின்மலர். இவர்கள் தங்களுடைய மாலை நேரங்களை எனக்காக ஒதுக்கினர். அடியேன் அவர்களோடு உரையாடவும் அழவும் சிரிக்கவும் நிறையவே பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இவர்கள் மட்டும் இல்லையென்றால் அனேகமாக ஏதாவது ரயில் நிலையத்தில் எசகு பிசகாக ஏதாவது நடந்திருக்கலாம். அதிஷா… அ…. தி… ஷா என துண்டு துண்டாக கிடைத்திருக்கலாம்!

தற்கொலை எண்ணத்தோடு திரிபவனுக்கு தேவையானதெல்லாம் புலம்ப ஒரு ஆள்! அது மட்டும் கிடைத்தாலே நாட்டில் யாருமே தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். எனக்கு கிடைத்த நண்பர்கள் நல்ல திறமைசாலிகள்! காதில் ரத்தம் வழியும்போதும்.. புன்னகையோடு ம்ம் கொட்டிக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யமுடியாமல் புகையோடு போராடிக்கொண்டிருந்த நாட்களில் ஆசிரியர் மாலன் நிறைய உதவிகளை செய்தார். ஒருமுறை அவரிடமே கூட கோபமாக பேசிவிட்டு பின் வருந்தினேன். ஆனால் அவர் என்னுடைய நிலையை புரிந்துகொண்டு நான் இதிலிருந்து மீள நிறைய உதவினார். நான் பழைய நிலைக்கு திரும்ப போதிய அவகாசத்தை அளித்தார். வேலைகளில் தவறுகள் செய்யும்போதும் தட்டிக்கொடுத்து கடந்தார். இந்த நேரத்தில் அவரை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். அலுவலகத்தின் மற்ற நண்பர்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் கூட மிகுந்த நன்றிக்குரியது.

மாம்பலம் ரயில்நிலையத்தில் தற்கொலைசெய்துகொள்ள காத்திருந்த சில நிமிடங்களுக்கு முன்னால் போனில் அழைத்து என்னை மீட்ட நண்பன் ‘கென்’ நிச்சயம் என்னளவில் மகத்தானவன்! கடவுளுக்கு ஒப்பானவன். அவனை சாகும்வரை மறக்கமாட்டேன்.

புகைப்பழக்கத்திலிருந்து மீண்ட ஒவ்வொரு நாளையும் ஒரு சாதனையைப்போல கொண்டாடினேன். என்னைப்பார்த்து ஊக்கம்பெற்று ஐந்து நண்பர்கள் புகைப்பழக்கத்தை வெற்றிகரமாக கைவிட்டிருக்கிறார்கள். இவனே விட்டுட்டான் நம்மால முடியாதா என்கிற எண்ணத்தை அவர்கள் மனதில் விதைத்திருப்பேனோ என்னவோ!

இதைவிட என்ன மகிழ்ச்சி இருக்க முடியும். நிறைய நண்பர்கள் இப்பழக்கத்திலிருந்து மீள உதவியிருக்கிறேன். புகைப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காக என்னென்னவோ செய்திருக்கிறேன். அதையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதலாம். நேரம்கிடைக்கும்போது எழுதி ஈ-நூலாக இணையத்தில் இலவசமாக விநியோகிக்க நினைத்திருக்கிறேன்.

புகைப்பிடிப்பதை கைவிட்டு 9மாதங்களை நிறைவு செய்துவிட்டேன். இப்போது அப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டேன்! திரும்பிப்பார்த்தால் நிறையவே இழந்திருந்தாலும் புகைப்பழக்கத்திலிருந்து முழுதாக வெளிவந்துவிட்டேன் என்பதை உணரமுடிகிறது. தோள் கொடுத்த அத்தனை தோழர்களுக்கும் நன்றி.

***

அர்ஜூன் (வேதாளம்) மற்றும் லதாமகன் என்கிற இரண்டு இளைஞர்கள் அல்லது முதிர்ச்சியான பெரிய பையன்கள் சென்ற ஆண்டின் துவக்கத்தில் என்னை வெகுவாக பாதித்தனர். இவர்கள் இருவருமே எக்கச்சக்கமாக வாசிக்கிறவர்கள். எழுத்தில் நிறையவே சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தோடு இருக்கிறவர்கள். பரபரவென நிறையவே கற்றுக்கொள்கிறவர்கள்.

ட்விட்டரில் வேதாளம் என்கிற பெயரில் புகழ்பெற்றவர் அர்ஜூன். குட்டிப்பையன்தான் என்றாலும் அவர் சென்ற ஆண்டு இறுதியில் தான் வாசித்த புத்தகங்கள் என ஒரு பட்டியலை போட்டிருந்தார். அடேங்கப்பா இன்னமும் அது ஆச்சர்யப்படுத்துகிறது. லதாமகன் தொடர்ந்து தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நிறைய எழுதுவார்… கவிஞராகவே இருந்தாலும் உரைநடையில் கூட அவருடைய எழுத்து நாளுக்கு நாள் மெருகேருவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். வெறித்தனமாக கற்பதை இவர்களிடம் கற்றுக்கொண்டேன்.

உண்மையில் இந்த பையன்கள் படிப்பதில் பாதிகூட நாம் வாசிப்பதில்லையே என்கிற தாழ்வுமனப்பான்மைதான் முதலில் உருவானது. இவர்களை விட அதிகமாக வாசிக்க வேண்டும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வேகம். போட்டிதான்.. நிறைய பொறாமைதான்.. ஆனாலும் நிறைய வாசிப்பது ஆரோக்கியமானதுதானே!

ஆண்டின் துவக்கத்தில் இந்த ஆண்டு 52 புத்தகங்களாவது வாசிக்கவேண்டும். வாரம் ஒரு புத்தகம் பற்றிய சிறிய அறிமுகத்தையாவது நம்முடைய இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்கிற திட்டமும் இருந்தது. இதற்காக தினமும் நேரம் ஒதுக்கி நிறையவே வாசிக்கத்துவங்கினேன். ஆரம்பத்தில் நேரமின்மை சோம்பேறித்தனம் மாதிரி பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பையன்களை முந்தவேண்டும் என்கிற எண்ணம் எல்லா இடர்களையும் தூக்கிப்போட்டு மிதித்துக்கொண்டு ஓடியது.

இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை சின்னதும் பெரியதுமாக நிறைய புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். என்னுடைய லைஃப் டைமில் இத்தனை புத்தகங்களை ஒரே ஆண்டில் வாசிப்பது இதுதான் முதல்முறை! வெறித்தனமாக இதற்காக நேரம் ஒதுக்கி நிறைய வாசிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வாசித்திருக்கிறேன்.

பல மாலைகளை டிஸ்கவரி புக்பேலசிலும் அகநாழிகை புத்தக கடையிலும் கடத்தியிருக்கிறேன். சில மாதங்கள் நாள்தவறாமல் கூட டிஸ்கவரி புக்பேலஸுக்கு சென்றதுண்டு! வேடியப்பனும் அண்ணன் அகநாழிகை வாசுவும் நிறைய நூல்களை பரிந்துரைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

ஆனால் படித்த எல்லா நூலுக்கும் அறிமுகம் எழுதுவது சாத்தியமாக இல்லை. நேரம் ஒரு காரணம். இன்னொன்று எல்லா நூலும் நல்ல நூல் அல்ல.. நிறைய மொக்கைகளும் உண்டு. அதனால் முடிந்தவரை நல்ல நூல்களுக்கு அறிமுகம் செய்திருக்கேன். 52 எழுத நினைத்து கடைசியில் எழுதியதுல 25 புத்தக அறிமுகங்கள்! அதில் தமிழில் ஒரு டான் ப்ரவுன் என்கிற ‘6174’ என்கிற நூல் அறிமுகம் பெரிய வரவேற்பை பெற்றது.

பெருமைக்காகவேணும் நிறைய வாசிப்பதிலும், வாசித்ததை பற்றி பீத்திக்கொள்வதிலும் சமகாலத்தில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ‘’இப்போதெல்லாம் யார் சார் புக்கு படிக்கிறா’’ அடுத்த ஆண்டும் அதே மிஷன் 52 புக்ஸ் தொடர்கிறது… பார்ப்போம் எத்தனை முடிகிறதென்று! வாரம் ஒரு புத்தகத்துக்காவது அறிமுகம் எழுதிவிட பிரார்த்திக்கவும்.


********

நண்பர்கள் லதாமகன், அர்ஜூன், கருப்பையா, முத்தலிப், தங்கை சோனியா அருண்குமார், அதிஷா ரசிகர்மன்ற தளபதிகள் புதியபரிதி, லூசிபர், இணைய பிரபலங்கள் அராத்து, டிமிட்ரி, ராஜன்,தோட்டா. ப்ரியமான தோழிகள் கார்கி மனோகரன், நிலவுமொழி, ஊருக்கெல்லாம் காதல் சொல்லித்தரும் லவ்குரு ராஜா, ரேடியா கண்மணி, மைடியர் அக்கா பரமேஸ்வரி திருநாவுக்கரசு, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணகுமார், நான் எதை எழுதினாலும் படிக்காமல் கூட லைக் கமென்ட் போட்ட நண்பர் நாகராஜசோழன், குழந்தைகளுக்காகவே எழுதும் உமாநாத்விழியன், விஷ்ணுபுரம் சரவணம் மற்றும் பசங்களையே பிடிக்காத மதன் செந்தில், என இன்னும் நிறைய நிறைய நண்பர்களை (பெயர் விட்டிருந்தால் மன்னிச்சிக்கோங்கப்பா புண்ணியவான்ஸ்களா!) இந்த ஆண்டு கொடுத்திருக்கிறது! அதற்காகவே 2013க்கு ஸ்பெஷல் நன்றி.

*****

கொரிய மொழி கற்றுக்கொள்ளும் திட்டம் நிதி நெருக்கடிகளால் தள்ளிப்போயிருக்கிறது. புதிதாக ஒரு லேப்டாப் வாங்குவதும் அதே நெருக்கடியால் தள்ளிப்போய்விட்டது. தமிழ் இலக்கணம் பயில்வது, மாராத்தான் ஓடுவது, QUIT SMOKING பற்றிய ஒரு மின்னூலை எழுதி வெளியிடுவது, நூறு புத்தகங்களாவது படித்து முடிப்பது, முடிந்தவரை நிறையவே ஊர் சுற்றுவது, நண்பர்களோடு சண்டை போடாமலிருப்பது, கோவா திரைப்பட விழாவில் கலந்துகொள்வது, புனேவில் திரைப்பட ரசனை தொடர்பான பயிற்சிக்கு செல்வது, ஸ்கை டைவிங், சர்ஃபிங் கற்பது, அராத்துவுடன் இமயமலையில் பைக் ஓட்டுவது என சில சூப்பர் டூப்பர் திட்டங்களும் 2014க்காக க்யூகட்டி நிற்கிறது. அனைத்தையுமே உருப்படியாக செய்துமுடிக்க வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஆல் ஈஸ் வெல்!

வீடுவாங்கணும் கார்வாங்கணும் பங்களா வாங்கணும் நிலம் வாங்கணும் நாலு காசு சேக்கணும், வாழ்க்கைல உருப்படணும் என்பதுமாதிரியான லட்சியங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் இல்லை என்பது வருத்தமானது.

***

எல்லாவற்றிற்கும் மேல் நான் எதை எழுதினாலும் நேரம் ஒதுக்கி படித்துவிட்டு பொய்காச்சும் சூப்பர் ஆஹா ஓஹோ நல்லாருக்கு ப்ரோ என்று கமென்ட்டும் லைக்கும் ரிட்வீட்டும் போட்ட எனதருமை நண்பர்களுக்கு நன்றி. யூ பீப்பிள்ஸ் மேட் மை லைஃப் ப்யூட்டிஃபுல். உங்களால்தான் நான் உற்சாகமாக வாழ்கிறேன். எழுதுகிறேன். வாசிக்கிறேன். பறக்கிறேன். என்னுடைய சிறகுகள் நண்பர்களாகிய நீங்கள்தான்.

உங்க எல்லோருக்கும் தாங்க்ஸ் அன் ஹேப்பி நியூ இயர் அன் ச்சியர்ஸ்!
30 December 2013

எழுதியதில் பிடித்தது - 2013


ஆளாளுக்கு ஏதேதோ டாப்டென் போடுகிறார்கள் நம் பங்குக்கு எதாவது டாப் டென் போடலாமே என்று யோசித்த போது... இந்த ஆண்டு முழுக்க எழுதிய ஆல்மோஸ்ட் நூறு கட்டுரைகளில் (98) சிறந்ததை மட்டும் தொகுத்து போட்டால் என்ன என்று தோன்றியது.

அதுமட்டுமின்றி நண்பர்கள் பலரும் நம் இணையதளத்தில் வெளியான சில முக்கியமான கட்டுரைகளை தவறவிட்டிருக்கலாம். சிலருக்கு எனக்கு ஓர் இணையதளம் இருப்பதே கூட தெரியாமலிருக்கலாம். அவர்களுக்கு இந்த சுட்டிகள் பிரயோஜனமாக இருக்க கூடும்.

இந்த நான் எழுதியதில் இது எனக்கு பிடித்த கட்டுரைகளின் தொகுப்புதான். முதலில் டாப்டென் என்றுதான் யோசித்தேன். ஆனால் இந்த ஆண்டு வெவ்வேறு விதமான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் என்பதை சுட்டிகள் தேடும்போது தெரிந்துகொண்டேன். உணவு,புத்தகம்,ஊர்புராணம்,சினிமா,சிறுவர் கதை, சிறுகதை,நகைச்சுவை என நிறையவே எழுதியிருக்கிறேன்.

அதனால் அவற்றில் நன்றாக இருந்ததாக நினைத்ததை மட்டும் பொறுக்கி போட்டிருக்கிறேன்.

நேரம் கிடைக்கும்போது பொறுமையாக வாசித்துவிட்டு கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்!

******

புக்கு பூச்சி - http://www.athishaonline.com/2013/12/blog-post_20.html

தனிமையின் நண்பர்கள் - http://www.athishaonline.com/2013/11/blog-post.html

டிவி புகழ் மனுஷ்யபுத்திரன் - http://www.athishaonline.com/2013/01/blog-post_24.html

தமிழில் ஒரு டான் ப்ரவுன் - http://www.athishaonline.com/2013/10/blog-post_28.html

ஒநாயும் ஆட்டுக்குட்டியும் - http://www.athishaonline.com/2013/09/blog-post_30.html

மாஃபியாசோ ஆக்சன் சமோசா - http://www.athishaonline.com/2013/02/blog-post_23.html

வெட்டியும் விரலும் - http://www.athishaonline.com/2013/09/blog-post_25.html

கால்சென்டர்களில் கலையும் கனவுகள் - http://www.athishaonline.com/2013/08/blog-post.html

ஓர் ஆழ்கடல் அனுபவம் - http://www.athishaonline.com/2013/07/blog-post.html

வராது வந்த வாசகன் - http://www.athishaonline.com/2013/06/blog-post_23.html

வானம் ஏறி வைகுண்டம் போனவன் - http://www.athishaonline.com/2013/05/blog-post_10.html

பொம்மை எப்படி சாகும் - http://www.athishaonline.com/2013/03/blog-post_16.html

இலிப்பூச்சி - http://www.athishaonline.com/2013/08/blog-post_21.html

நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் - http://www.athishaonline.com/2013/11/blog-post_4.html

முறிக்கப்படும் நம் முதுகெலும்பு - http://www.athishaonline.com/2013/02/blog-post_26.html

பாவம் சார் உங்க வொய்ப்பூ! - http://www.athishaonline.com/2013/04/blog-post_23.html

காலம் விழுங்கிய நெருப்பு - http://www.athishaonline.com/2013/10/blog-post_22.html

27 December 2013

பாலுமகேந்திராவின் தலைமுறைகள்
சமீபத்தில் இவ்வளவு எளிமையான ஒரு தமிழ் படத்தை பார்த்த நினைவில்லை. தமிழ்சினிமாவில் எப்போதாவது அரிதாக மேற்கொள்ளப்படும் ‘’மாற்று சினிமா’’ முயற்சிகளில் ஒன்றாகவே ‘தலைமுறைகள்’ திரைப்படத்தையும் குறிப்பிடலாம். நிறையவே சின்னதும் பெரியதுமாக ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் மாற்றுசினிமா முயற்சி என்கிற அளவில் இப்படம் நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான்.

உதயம் காம்ப்ளக்ஸின் மிகச்சிறிய திரையரங்கமான மினி உதயத்தில்தான் படம் பார்த்தேன். ஒருநாளைக்கு ஒரு காட்சிதான் அதுவும் காலைகாட்சி மட்டும்தான்! நான் சென்றபோது தியேட்டர் ஆல்மோஸ்ட் காலியாகத்தான் இருந்தது. நேரம் செல்ல செல்ல நிறையபேர் நிறைந்தனர். அது ஒரு விடுமுறை நாள் என்பதால் பிரியாணிக்கும் என்றென்றும் புன்னகைக்கும் டிக்கட் கிடைக்காமல் திட்டிக்கொண்டே சீட்டுகளில் அமர்ந்தனர். நிறைய காதலர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்று நினைத்து வந்து ஏமாந்து போனதை பார்க்க முடிந்தது.

யாருக்கும் படம் பார்க்கிற ஆர்வமேயில்லை. இவ்ளோ தூரம் வந்துட்டோம் எதையாவது கருமாந்திரத்தை பார்த்துட்டு போவோம் என்கிற மனநிலையோடுதான் அமர்ந்திருந்தனர். சிலர் அதை உரக்கவே தங்களுடைய மனைவிகளிடமும் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தனர். டைட்டில் ஓடத்துவங்க பின்னணியில் ஒரு பாட்டு ஓலிக்க.. அப்போதே அடங்கோ என திட்டத்துவங்கிவிட்டிருந்தது பார்வையாளர் படை. ஆனால் படம் செல்ல செல்ல எல்லோருமே ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டது ஆச்சர்யம்தான்! உதயம் தியேட்டர் பார்வையாளர்கள் மோசமானவர்கள்.. படம் கொஞ்சம் போர் அடித்தாலும் ஓத்தா ஒம்மா என்று வசை பாடிவிடுபவர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

இயல்பான அலட்டலில்லாத நகைச்சுவை காட்சிகள் படம் முழுக்க. எந்த இடத்திலும் ‘’இது காமெடி சீன் எல்லாரும் சிரிங்க’’ என்கிற கோணங்கித்தனங்களெல்லாம் இல்லவே இல்லை. போலவே சீரியஸ் காட்சிகளும் இது சோக சீன் என்பதை அறிவிக்கிற அச்சுபிச்சு டொட்டொடொட்டடோய்ங் இசை கூட இல்லை. அதுவும் இயல்பாக கடந்து போகிறது.

மூன்று முறையும் ஆண்குழந்தையே பெற்று நான்காவது அட்டெம்ப்ட் கர்ப்பமாகி பிள்ளை பெற்று வீடுதிரும்புகிற மகளை ஆசிர்வதிக்கிறார் தந்தை. ‘’என்னம்மா இந்த முறையும் ஆம்பளை பிள்ளையா’’ என்று கேட்க.. அந்த பெண் ‘’இல்லைப்பா பொண்ணு’’ என்று சொன்னதும் பெருமிதமாக அவளை தூக்கி ‘’நீ ஜெயிச்சுட்ட’’ என்று அந்த பெரியவர் சொல்லும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது! தன் அம்மாவிடம் போய் ‘’அம்மா இதுல பால் வருமாமா’’ என்று மார்பை காட்டிக் கேட்கிற சிறுவனிடம் ஆமாப்பா வந்துட்டுருந்துச்சு என்கிறாள் அம்மா. ‘’ஏன் இப்போ வரலை’’ என்று ஏக்கமாக கேட்பவனிடம்.. ‘’நீ எல்லாத்தையும் குடிச்சிட்ட’’ என்று சொன்னதும் அப்படியே ஓடிப்போய் அவளை கட்டி அணைத்து முத்தமிட்டுவிட்டு ஓடுகிறான். அந்த அம்மா அப்படியே சலனமின்றி அமர்ந்திருக்க காட்சி முடிகிறது!

கிளைமாக்ஸில் தாத்தா இன்றி அந்த பையன் மட்டும் நடந்துபோகிற அந்த ஒரே ஒரு ஷாட் போதும்.. பாலுமகேந்திராவின் திறமையை சொல்ல! (ஆனால் அதற்கு பிறகு வருகிற மொக்கை காட்சிகள் படத்தை கிமு காலத்துக்கே இழுத்துச்செல்கிற முட்டாள்த்தனம்.. தயாரிப்பாளர் சசிகுமாருக்காக செய்துகொண்ட சமரசமாக கூட இருக்கலாம்.. எரிச்சல்)
படத்தில் கதையெல்லாம் இல்லை. சில நல்ல காட்சிகள் அல்லது தருணங்களின் தொகுப்பாக இப்படம் இருக்கிறது என்று சொல்லலாம்.

மூன்று வெவ்வேறு தலைமுறை மனிதர்களின் சமகால சிக்கல்களின் தொகுப்பு என்று இப்படத்தை பற்றிச் சொல்லலாம்.
ஆங்கிலமும் அந்நிய நாகரீகமும் வலிந்து திணிக்கப்பட்ட அல்லது ஊட்டப்பட்ட இன்றைய தலைமுறை சிறுவன், சாதி மத வெறி அல்லது பற்றுமிக்க எப்போதும் எதிலும் தூய்மை பேணுவதாக காட்டிக்கொள்கிற தாத்தா, கிராமமா நகரமா, பணமா பாசமா.. என்கிற ஊடாட்ட மனநிலையில் தவிக்கும் சிறுவனின் தந்தை… என இந்த மூன்று பாத்திரங்களும் ஒரு கிராமத்தில் சந்தித்து தங்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை மட்டும் மற்றவருக்கு கடத்துகின்றன. அங்கே இயல்பாக உண்டாகிற மகிழ்ச்சி நமக்குள்ளும் உருவாகிறது. அவ்ளோதான் தலைமுறைகள்!

பாலுமகேந்திரா தன் இளமையிலேயே நடிக்க ஆரம்பித்திருக்கலாம். அவருடைய அந்த நடையும், வாய்ஸும், கண்களும்.. சிம்ப்ளி வாவ்! அதுபோலவே வினோதினியின் பாத்திரமும் அவருடைய இயல்பான நடிப்பும் அருமை. ஆரம்ப காட்சிகளில் WWF யூக்காசூனா மாதிரி இருக்கிற அந்த சிறுவன் எரிச்சலூட்டினாலும் போகப்போக பிடித்துப்போகிறது. படத்திற்கு இசை இளையராஜா என்பதே தமிழ்ஸ்டூடியோ அருண் சொல்லித்தான் தெரிந்தது. பையன் முதன்முதலாக வீட்டுக்குள் நுழைந்து தாத்தாவை தேடும் காட்சியில் மட்டும் லேசாக ராஜாசார் எட்டிப்பார்க்கிறார். மற்றபடி நடுவுல நிறையவே அவரை காணோம்!

இதே படம் கொரிய மொழியிலோ ஈரானிய மொழியிலோ பிரெஞ்சிலோ வெளியாகியிருந்தால் சப்டைட்டிலோடு பார்த்துவிட்டு உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்களோ என்னவோ… தங்கமீன்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களுக்கு இருந்த பரபரப்பில் பத்து சதவீதம் கூட இப்படத்துக்கு இணையத்தில் பார்க்க முடியவில்லை. அனேகமாக இந்த விமர்சனத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது இப்படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்காது. திருட்டு டிவிடி கிடைத்தால் வாங்கிப்பாருங்கள். இந்த எளிய படம் என்னைப்போலவே உங்களுக்கும் பிடிக்கலாம்.

இலக்கிய மேடையில் ஒரு குட்டி எலி!
நக்கீரன் கோபால், திருமாவளவன், எழுத்தாளர் இமையம், எஸ்ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், பாரதிகிருஷ்ணகுமார், புதியதலைமுறை டிவியின் குணசேகரன், லவ்குரு என எல்லோருமே அவரவர் துறைகளில் ஸ்பெஷல் ஆளுமைகள். அடியேனோ சாதா ஆளுமையாகக்கூட ஆகிடாத சாதா ஆள். சொல்லப்போனால் இன்னும் முழுசாக ஒரே ஒரு நூல் கூட எழுதியதில்லை. அந்த மேடையில் ஒரு குட்டி எலியைப்போலவே பப்பிஷேம் மேலிட அமர்ந்திருந்தேன்.

கனவுபோலத்தான் இருக்கிறது. இவர்களில் சிலரை இவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்பாவது கிடைக்குமா என்று அவ்வப்போது நினைப்பதுண்டு! அதனால் முதல் பத்தியிலேயே மனுஷ்யபுத்திரனுக்கு ஒரு நன்றியை சொல்லிவிடுவோம். இடம் – சென்னை புக் பாய்ண்ட், நிகழ்வு – மனுஷ்யபுத்திரனின் மூன்று நூல் வெளியீட்டரங்கு.

‘’இந்த புக் ஃபேருக்கு உங்க கவிதை தொகுப்பு ஒன்னுகூட வரலையா.. மனசுக்கு கஷ்டமாருக்கு சார்’’ என சாட்டிங்கில் நான் கேட்ட ஒரே ஒரு கேள்விக்காக மனுஷ்யபுத்திரன் என்னையும் அந்த மேடையில் அமரவைத்து பேசவைப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதுமாதிரி சமயங்களில்தான் மனுஷ்யபுத்திரன் நல்லவரா கெட்டவரா என்கிற சந்தேகம் மைல்டாக மனதுக்குள் பூக்கும்! ஏன் என்றால் அந்த மேடையில் அமர்ந்திருந்தது பரிசா? தண்டனையா? என்றே இன்னும் விளங்கவில்லை!

மேடையில் அமர்ந்திருந்த அந்த மூன்று மணிநேரமும் நரகவேதனையாக இருந்தது. தலைக்கு மேலிருந்த ஏசி வேறு மொட்டைத்தலையில் குளிர் தெளிக்க… ஏற்கனவே பதட்டத்திலும் பயத்திலும் நடுங்கிக்கொண்டிருந்த உடல், குளிரில் ரொம்பவும் விரைத்து உச்சா வேறு முட்டிகொண்டிருக்க.. எழுந்து செல்லவும் தயக்கம் அதிகரிக்க… கஷ்டப்பட்டு அனைத்தையும் அடக்கிக்கொண்டு... நானும் எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது!

நல்ல வேளையாக மனுஷ்யபுத்திரன் அருகில் இருந்ததால் அவரிடம் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தபடியும் மேடைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த அழகான காந்தக்கண்ணழகியை சைட் அடித்தபடியும் நேரத்தை கடத்திக்கொண்டிருந்தேன்.

மேடையில் பேசுவதில் உள்ள தயக்கமும் அச்சமும் படபடப்பும் பயமும் இன்னமும் என்னைவிட்டு விலகிவிடவில்லை. முன்பு சில மேடைகளில் மிகுந்த மெனக்கெடலுடன் நிறைய தயாரித்துக்கொண்டு போய் வதவதவென்று நிறைய உளறிக்கொட்டியிருக்கிறேன் என்பதால் இம்முறை எதையும் தயாரிக்காமல் மனதுக்குள்ளாகவே இரண்டுநாட்கள் என்ன பேசுவதென்பதை உருப்போட்டபடியிருந்தேன்.

என்ன பேசலாம் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றிலிருந்து பேச்சை துவங்கினால் கைத்தட்டை அள்ளிடலாமே.. வேண்டாம்.. நமக்கு கவிதையும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது.. அவருடைய கட்டுரைகளிலிருந்து மேற்கோள்களை… அதுவும் வேண்டாம். கடைசியாக ஒரு சம்பவத்தை முன்வைத்து பேசலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை டூ பாண்டிச்சேரி போகும் வழியில் இருக்கிற கடலூர் என்கிற கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். சாதிவெறி தாண்டவமாடும் சிறிய கிராமம் அது. தொடர்ந்து தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிற இடம். நான் போயிருந்த போது கூட யாரோ தலித்பையன் வன்னியர் பெண் ஒருத்தியிடம் பேசிவிட்டான் என்று பெரிய பிரச்சனை. தலித் மக்கள் வாழும் பகுதியில் இருந்த டீக்கடை ஒன்றில் அமர்ந்து சில இளைஞர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது பேச்சு எங்கெங்கோ சுற்றி இளவரசன் மரணம் குறித்து போனபோது.. அந்த பையன்கள் மிகவும் வருத்தமாக பேசினார்கள்.

ஊடகங்கள் எப்படி இப்பிரச்சனையை அணுகின என்றும் தங்களுக்கு ஆதரவாக ஒரு குரல்கூட ஒலிக்கவில்லை என்றும் மிகுந்த மனவேதனையோடு பேசினர்.

அந்த சமயத்தில் ஒரு இளைஞர் அந்த பையனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயதுதான் இருக்கும்.. ‘’மனுஷ்யபுத்திரன் ஒருத்தர்தான்ங்க.. இந்த பிரச்சனைல எங்களுக்காக பேசினார்.. நக்கீரன்ல அவரோட கட்டுரையை படிச்சப்ப ரொம்ப ஆறுதலா இருந்தது’’ என்றும் சொன்னான்,. ‘’தம்பி அவரு ஒரு கவிஞர் உங்களுக்கு தெரியுமா’’ என்றேன். ‘’அதெல்லாம் தெரியலைங்க அவரோட கட்டுரை படிக்கும்போது அவ்ளோ ஆறுதலா அனுசரணையா இருக்கும்ங்க’’ என்றான். எனக்கு நிஜமாகவே ஆச்சர்யமாக இருந்தது.

மனுஷ்யபுத்திரனை ஃபேஸ்புக்கில் நிறையவே கிண்டல் செய்தாலும் அவருடைய இந்த ரீச் மறுக்க முடியாதது. அவருடைய குரல் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட எளிய மக்களுக்காக ஒலிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட தருணம் அது. அதையே மேடையில் பேச தீர்மனித்தேன். அதை எப்படியெல்லாம் பேசலாம் என மனதுக்குள் ஒத்திகை பார்த்தும் கொண்டேன். அதோடு இன்னும் சில விஷயங்களையும் பேச யோசித்து வைத்திருந்தேன்.

மேலே எழுதியதைப்போல என்னால் பேச முடியவில்லை என்றாலும் எழுத்தில் சொல்ல நினைத்ததை ஒரளவேனும் பேச்சில் கடத்தியிருப்பேன் என்றே நினைக்கிறேன். சிலர் கைதட்டினார்கள். மிகுந்த பதட்டத்தோடு பேசியதில் நிறைய சொல்லாமல் விட்டுட்டோமோ என்றும்கூட பேசிமுடித்து அமர்ந்தபின் தோன்றியது. போகட்டும். நண்பர்கள் சிலர் ‘’முந்தைய மேடைகளோடு ஒப்பிடும்போது நல்ல இம்ப்ரூவ்மென்ட்’’ என்றனர். அதுவே மகிழ்ச்சியாக இருந்தது. நக்கீரன் கோபால் அண்ணாச்சியும், புதியதலைமுறை குணசேகரனும் நல்லா பேசினப்பா இயல்பா இருந்தது என்று வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி இரட்டிப்பானது.

மனுஷ்யபுத்திரன் மாதிரி மகத்தான இலக்கிய ஆளுமையின் புத்தக வெளியீட்டிலேயே கலந்துகொண்டுவிட்டபடியால் நமக்கு இப்போது எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்துவிட்டது என்பதால், ‘’இங்கு நல்ல முறையில் அனைத்துவகை புத்தகங்களும் குறைந்தசெலவில் வெளியிட்டுத்தரப்படும்’’ என்று போர்டு வைத்துவிட தீர்மானித்திருக்கிறேன்.

யாரோ அராத்தாம் அவர் புத்தகத்தை வெளியிடணுமாம்…. சிஎம் ஆலயே முடிலயாம் என்னை முடிச்சி தர சொல்றாரு.. நான் ரொம்ப்ப்ப பிஸி…

20 December 2013

புக்கு பூச்சி
ஒரு ஊர்ல ஒரு புக்கு பூச்சி இருந்துச்சு. அந்த புக்கு பூச்சிக்கு ஒரே ஒரு கண்ணுதான், ஆனா வாய் மட்டும் நாலு இருக்கும். அப்புறம் அதுக்கு ஆறு காலு, எட்டு கை… பெரிய தொந்தியும் இருக்கும்.

அது நிறைய புக்கு படிக்கும். அது நிறைய படிச்சிதுன்னா அதுக்கு நிறைய பசிக்கும். அப்போ அது அந்த புக்கையே சாப்ட்ரும். அதனாலதான் அதுக்கு பேர் புக்கு பூச்சினு வந்துச்சு.

முதல்ல அந்த புக்கு பூச்சி ரொம்ப குட்டியாதான் இருந்துச்சு. அது நிறைய புக்குங்களை சாப்ட்டு சாப்ட்டு வயிறு நல்லா பெரிசா வளர்ந்துடுச்சு. அதனால தொந்தியை வச்சுகிட்டு டிங்கு டிங்குனு ஆட்டிகிட்டே நடக்கும்.

யாருமே இல்லாத வீட்டுக்குள்ள போயி முதல்ல புக்கு இருக்கானு தேடி பாக்கும். அப்புறம் கிடைச்ச புக்கையெல்லாம் எடுத்து படிக்கும். படிக்க படிக்க பசிக்கும்ல பூச்சிக்கு.. உடனே அது அந்த புக்கை அப்படியே பிச்சு பிச்சு மெதுவா சாப்ட்ரும்.

இப்படியே வூர்ல இருக்குற எல்லா வீட்டுலயும் நைட்டான போயி எல்லா புக்கையும் சாப்ட்டு முடிச்சிடுச்சு. ஸ்கூல் பாப்பாங்களோட ஏபிசிடி புக்குலாம் கூட சாப்ட்ருச்சு.

பாப்பாவையெல்லாம் அவங்க மிஸ் ஏன் புக்கு எடுத்துட்டு வரலனு நல்லா திட்னாங்க. அதனால அவங்க பேரன்ட்ஸ்லாம் சேர்ந்து புக்கு பூச்சிய குச்சி வச்சி அடிச்சு தொரத்தி விட்டுட்டாங்க.. பாவம் புக்கு பூச்சி அழுதுகிட்டே ரொம்ப தூரம் போய்டுச்சு..

அப்போ அதுக்கு திடீர்னு பசிச்சிச்சு. ஆனா அங்கே புக்கே இல்ல. அப்போ அங்கே ஒரு வீடு இருந்துச்சு. அந்த வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருந்துச்சு. அந்த குட்டிப்பாப்பா வாசல்ல உக்காந்து அவளோட புக்ல ஏ ஃபார் ஆப்பிள்னு படிச்சிட்டிருந்தா.. அப்போ அந்த பக்கமா புக்கு பூச்சி பசியோட வந்துச்சு.

அது பாப்பாகிட்ட வந்து பாப்பா பாப்பா எனக்கு ரொம்ப பசிக்குது உன் புக்கு குடேனு கேட்டுச்சு. அப்போ பாப்பா சொல்லுச்சு நான் குடுக்க மாட்டேன் நீ தின்னுடுவே அப்புறம் மிஸ் என்னை அடிப்பாங்கனு. அப்போ அந்த புக்கு பூச்சி அழுதுச்சு. எனக்கு ரொம்ப பசிக்குதே எனக்கு யாருமே புக்கு குடுக்க மாட்டேங்குறாங்களேனுச்சு.

பாப்பாவுக்கு பாவமா இருந்துச்சு. சரி இருனு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயி பாப்பாவோட அம்மாகிட்ட இரண்டு இட்லி கேட்டுச்சு. அம்மாவுக்கு குடுத்தா. அதை வாங்கிட்டு வந்து புக்கு பூச்சிகிட்ட ‘’இந்த இதை சாப்டுனு’’ சொல்லுச்சு பாப்பா.

அதுக்கு புக்கு பூச்சி சொல்லுச்சாம் எனக்கு இட்லிலாம் வேண்டாம் எனக்கு புக்குதான் வேணும்னு.

அதுக்கு பாப்பா சொல்லுச்சு ‘’நான்கூட இட்லி வேணானுதான் சொல்லுவேன்.. ஆனா அம்மா என்னை மடில உக்காத்தி வச்சி கொஞ்சி கொஞ்சி ஊட்டி விடுவா நான் ஷாப்ட்ருவேன், நீயும் இந்த இட்லிய உங்க அம்மாகிட்ட குடு அவங்க ஊட்டி விடுவாங்கனு பாப்பா சொன்னா..
அப்போ புக்கு பூச்சி அழுதுச்சாம். எனக்கு அம்மாவே இல்லைனு சொல்லுச்சாம். உடனே பாப்பாவும் அழுதுட்டாளாம். பாப்பா யோசிச்சாளாம். என்ன பண்ணலாம்…?

புக்கு பூச்சிய தூக்கி அவ மடிலயே வச்சுகிட்டு இட்லிய பிச்சு பிச்சு புக்கு சக்கர தொட்டு பூச்சிக்கு ஊட்டிவிட ஆரம்பிச்சாளாம்.. அது வேண்டாம் வேண்டாம்னுச்சாம்.. ஆனாலும் பாப்பா ‘’ஏய் புக்கு பூச்சி அடம்புடிக்காத உன்னை பூச்சாண்டிக்கு புடிச்சு குடுத்துடுவேனு’’ மிரட்டி மிரட்டி ஊட்டி விட்டாளாம்.

புக்கு பூச்சி மொத மொத இட்லி சாப்டுச்சாம். அது ரொம்ப டேஸ்டா இருந்துச்சாம். புக்கு பூச்சி ம்ம் நல்லாருக்குனு சிர்ச்சிச்சாம். அதுக்கு இட்லினா ரொம்ப பிடிச்சிடுச்சாம். இப்போ பசியெல்லாம் போய்டுச்சாம்.

அது பாப்பாவுக்கு ‘’ரொம்ப நன்றி பாப்பா’’னு சொல்லிட்டு கிளம்பிடுச்சாம்.. அதுக்கப்பறம் புக்கு பூச்சி நிறைய புக்கெல்லாம் படிக்கும் ஆனா சாப்டாது. ஏபிசிடிலாம் ஆஆஈஈலாம் படிக்கும். அப்போ அதுக்கு பசிக்கும்ல .. ஆனா புக்கு சாப்டாது. நேரா பாப்பாகிட்ட வரும், பாப்பா இட்லி குடுப்பா சாப்டும்.

புக்கு சாப்டறத விட்டுட்டு இட்லி சாப்ட ஆரம்பிச்சதால அதை எல்லாரும் இட்லிபூச்சினு இட்லிபூச்சினு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாரும் அதுக்கு தினமும் இட்லி குடுத்தாங்க. அது நிறைய இட்லி சாப்ட்டுட்டு புக்கெல்லாம் படிச்சிட்டு ஜாலியா இருந்துச்சு.

**

எழுத்தாளர் பாஸ்கர்சக்தியின் இரண்டுவயது குட்டிப்பாப்பா கயல்விழிக்காக சொன்ன குட்டிக்கதை. அவளுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது என்பதில் அடியேனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதைவிட என்ன வேணும்! இந்த ஆண்டு ஒரு குழந்தைகள் கதையாவது எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கயல் பாப்பாவுக்கு நன்றி.

17 December 2013

மாமிகள் இருவர்

பொதிகை தொலைகாட்சியில் ஏதோ நிகழ்ச்சி. இரண்டு மாமிகள் ஒரு டேபிளுக்கு முன்னால், விலையுயர்ந்த பட்டுப்புடவை கழுத்து நிறைய நகைகளோடு பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னால் மிக்ஸி, வடைசட்டி, அடுப்பு, காய்கறிகள் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு மாமி சமைப்பவர் என்பதை அவர் கையிலிருந்த நீண்ட கரண்டியே உணர்த்துவதாக இருந்தது. இன்னொரு மாமி நிறைய மேக்அப் போட்டுக்கொண்டு பக்கத்தில் நின்றபடி அடுப்பு சட்டியை எட்டிபார்த்தபடி பேசிக்கொண்டேயிருப்பதை வைத்து அவர்தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை புரிந்துகொள்ளவும் முடிந்தது. பொதிகை தொலைகாட்சியும் ஏர்இந்தியா போலவே வயதான தாத்தா பாட்டிகளின் சொர்க்கமாக திகழ்வது ஆச்சர்யமானதுதான்.

பொதிகை தொலைகாட்சியில் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தால் யார் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது!

இரண்டு மாமிகளும் நிறைய பழங்களை அடுக்கி வைத்து ஏதோ செய்துகொண்டிருந்ததை பார்க்கவும் எனக்கு ஆர்வமாகி தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். வீட்டிலேயே ஃப்ரூட் சாலட் செய்து சாப்பிட எனக்கு எப்போதும் பிடிக்கும். இணையத்தில் விதவிதமான ஃப்ரூட் சாலட் ரெசிப்பிகள் பார்த்து அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது செய்து பார்ப்பதுண்டு.

பெரிய மாமி ஒரு அன்னாசி பழத்தை எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு கப்பில் எடுத்து வைத்துக்கொண்டார். அருகிலிருந்து டிவிமாமி ஓ இதை அரைச்சு இப்படி வச்சிக்கணுமா என்றார்.

பிறகு ஒருவாழைபழத்தை எடுத்து அதையும் துண்டுதுண்டுகளாக நறுக்கி அதையும் ஒரு கப்பில் வைத்துக்கொண்டார்.மீண்டும் அதே மாமி அதே வசனம். ஓ இதை அரைச்சு இப்படி வச்சிக்கணுமா?

ஏதோ ஃப்ரூட் சாலட் அல்வா மாதிரி ஏதோ செய்யப்போகிறார் என்று யூகித்தேன். ஆனால் அடுத்து ஒரு வெள்ளரிக்காயை எடுத்து அதையும்... துண்டுதுண்டாக நறுக்கி.. அதற்கு பிறகு தக்காளி... அதற்கு பிறகு பப்பாளி.. மாம்பழம்... இப்படியே பத்துக்கும் அதிகமான பழங்கள்.. பிறகு பீட்ருட்,கேரட்,வெள்ளரி என காய்கறிகள். பிறகு ஊறவைத்த பாசிப்பயறு அதையும் அரைத்து ஒருகப். நடுநடுவே...ஓ இதை அரைச்சுட்டு இப்படி வச்சிக்கணுமாக்களும் தொடர்ந்தது.

அந்த மாமி பழங்களை தருவதும் இந்த மாமி வெட்டிப்போடுவதுமாக கப்புகள் ஒருபக்கம் நிறைந்து கொண்டிருந்தன... அடுப்பில் ரொம்ப நேரமாக கொதித்துக்கொண்டிருந்த என்னமோவை எடுத்து கீழே வைத்தனர். அதில் என்ன இருக்கும்.. ஒருவேளை அதுதான் இந்த சமையலில் சீக்ரெட் வெப்பனோ என்றெல்லாம் நினைத்தேன்.

''இப்ப பாருங்க தண்ணீ நல்லா சூடாகிடுச்சு'' என்றார் மாமி! அதற்கு ஆமாம் என்று எட்டிப்பார்த்து பதில் சொன்னார் டிவிமாமி.

அந்த தண்ணீரில் நன்னாரி வேர்களை தூக்கிப்போட்டு அந்த நீரை ஊறவைத்து வடிக்கட்டி வைத்துக்கொண்டு, அதை எல்லா கப்பிலும் கொஞ்சகொஞ்சம் ஊற்றினார் மாமி. வாசனைக்காக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

இப்போது தக்காளி ஜூஸை எடுத்து வெள்ளரியில் கலக்க ஆரம்பித்தார். அதுபோல வாழைப்பழ கலவையை பப்பாளியிலும், இப்படியாக ஒவ்வொரு ஜூஸையும் இன்னொன்றோடு கலக்கவும் தொடங்கினார்.

எல்லா கலவைகளையும் கலக்கி முடித்தபிறகு,... பத்துப்ளஸ் கப்புகள் இப்போது பாதியாக குறைந்திருந்தன. உப்பு இல்லை... சக்கரை இல்லை.. ஏதோ இயற்கை உணவு போல.. என்று நினைத்தேன்.

''இந்த கலவைகளை அடுத்து என்ன பண்ணனும்'' என்று நம் மனதில் எழுந்த அதே கேள்வியையே அந்த டிவிமாமியும் கேட்டார்.

''இதோ இந்த வாழைப்பழ பேக்கை திங்கள் கிழமை, பப்பாளிபேக்கை செவ்வாய்க்கிழமை.. இந்த பீட்ரூட் பேக்கை புதன்கிழமைனு ஏழு நாள் ஏழு பேக் யூஸ் பண்ணினா முகம் நல்லா ஜம்முனு ஜொலிக்கும்.. முகத்துல இருக்கிற பிம்பிள்ஸ், கறும்புள்ளிகள், முகசுறுக்கம் எல்லாம் மறைஞ்சி பளிச்னு ஆகிடுவீங்க'' என்றார் பெரிய மாமி. ஓ... இதை எப்படி பயன்படுத்தணும் என்று தொடர்ந்து டிவிமாமி கேட்க..

''ரொம்ப சுலபம் நம்ம நன்னாரி தண்ணியை முகத்தில் தேய்த்து கழுவிட்டு.. இந்த பழக்கலவைகளை ஃபேஸ்ல அப்ளை பண்ணிட்டு கழுவினா ரொம்ப அழகா ஆகிடுவீங்க'' என்றார் பெரிய மாமி.

இதுவரைக்கும் எனக்கு கோபம் கொஞ்சமாகத்தான் வந்திருந்தது. ஆனால் டிவிமாமி அதற்கு பிறகு கேட்டதுதான் ''ஓ இதுதான் உங்க அழகின் ரகசியமா?'' என்றார்.

அந்த அடக்கமான மாமியோ.. ''ஆமா.. எங்க ஆத்துக்காரர் எப்பயும் அப்படிதான் ஷோல்வார். ஆனா மனசை எப்பவும் சந்தோஷமா வச்சுண்டா இதெல்லாம் எதுமே தேவயில்லை'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

என்ன அவசரமோ என்னமோ திடீரென வேறெதோ ஒளிபரப்பு மாறுவதாக அறிவிப்பு வந்தது. ரொம்ப வயசான ஆனால் நிறைய மேக்கப்போடு சில மலையாள மாமிகள் அந்தக்கால அட்டைபெட்டி ஸ்டுடீயோவில் நின்று ஏதோ பாரம்பரிய நடனம் ஆட ஆரம்பித்துவிட்டிருந்தனர். பொதிகை சேனல் மாறவேயில்லை.

13 December 2013

இட்லிதோசை,அலுமினியதிருவோடு மற்றும் சில சிரித்த முகங்கொண்ட நல்லவர்கள்!
வடபழனி விஜயா பாரம் மாலில் ஏனோ இன்னும் ஐமேக்ஸ் தியேட்டரை திறக்காமல் இருக்கிறார்கள். அதனாலேயே கூட அதிக கூட்டமில்லை. ஒரு மழைநீர் பூத்தூவும் மாலைநேரம் நானும் நண்பர் குஜிலிகும்பானும் அங்கே வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தோம். இந்த மால்களில் சுற்றுவது ஒரு தனிக்கலை. மிகுந்த மனக்கட்டுப்பாடு அவசியம். எங்கு பார்த்தாலும் கச்சிதமான உடை அணிந்த அழகான இளம் பெண்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் நமக்காகவே காத்திருப்பது போலவும் நமக்கு தோன்றும். அருகில் வந்து ‘’ஐ லவ் யூ சொல்லுங்க என் அன்பே…,’’ ‘’இறுக்கி அணச்சி ஓர் உம்மா தர்ர்ர்ரு’’ என்றெல்லாம் அழைப்பதைப்போலவும் இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடக்கூடாது. இந்த மகளிரை நோக்கி ஒற்றை பார்வை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாலும் கூட புரட்டி புரட்டி போட்டு கும்மிவிடுவார்கள் செக்யூரிட்டிகள்.

எனவே கடைகண்ணிகளை பார்த்தபடி சுற்றலாம். அப்படியே கடைகடையாக சுற்றினாலும் எதையும் வாங்கிவிடக்கூடாது என்கிற வைராக்கியம் கட்டாயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அப்படி என்னதான் வைராக்கியமாக இருந்தாலும் எல்லா மனிதனுக்கும் இருக்கிற ப்ரேக்கிங் பாய்ன்ட் போல எங்காவது ஓரிடத்தில் சறுக்கி ஒட்டுமொத்தமாக ஒரே ஒருபொருளை பிரமாண்ட தொகைக்கு வாங்கி பர்சை காலியாக்கிவிட்டுதான் வீடு திரும்புவோம். யாருமே இந்த மால்களில் தப்பமுடியாது.

எனவே மிகுந்த மனக்கட்டுப்பாட்டுடன் மாடிமாடியாக திரிந்தோம். ஓசான் என்று ஒரு பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட் கடை ஒன்று வைத்திருக்கிறார்கள். அன்னிய நாட்டு அண்ணாச்சிகடை. அங்கே எல்லா பொருளும் சல்லிசு விலையில் கிடைக்கிறது. மீன்,கறியெல்லாம் கூட உண்டு. மாட்டிறைச்சி கூட விற்கிறார்கள். பன்றியிறைச்சி மட்டும் ஏனோ இல்லை. சாசேஜ் தொடங்கி கைமா வரை உண்டு. வகைவகையான மீன்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த மத்தி (OIL SARDINE) இல்லை. அங்கே எதாவது வாங்கலாம் என்று யோசித்து யோசித்து.. அப்படியே வெளியே வந்துவிட்டோம்.

சாம்சங்,சோனி,யுனிவர்சல்,லூயிபிலிப்பி,லெவிஸ் என கடையெல்லாம் போய் சுற்றிப்பார்த்துவிட்டு, மொபைல் கடை ஒன்றில் வைத்திருந்த உயர் ரக ஐபேட் போனில் கொஞ்சநேரம் கேம் விளையாடினோம். ஐபேடில் LIE DETECTOR என்றொரு APP இருக்கிறது. அதில் நம்முடைய கையை வைத்து எதாவது சொன்னால் அது உண்மையா பொய்யா என்று சொல்கிறது. நான் கைவைத்துப்பார்த்தேன் ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை இருந்தும் பொய் என்றது! டூபாக்கூர் ஆப் போல. ஐபேடின் முன்பக்க கேமராவில் நானும் குஜிலியும் சேர்ந்து ஈஷிக்கொண்டு நிற்பதைப்போல ஒரு படம் பிடித்தோம். செக்யூரிட்டி முறைக்க ஆரம்பிக்கிற நொடியில் அங்கிருந்து கிளம்பினோம்.

தோழர் குஜிலிக்கு அலைந்து திரிந்ததில் தொண்டை வரண்டு தாகம் எடுக்க, ஒருவாய் காப்பி தண்ணி குடிக்கலாம் என கடை தேடினோம். இரண்டாவது மாடியோ மூன்றாவது மாடியோ அதில் இருந்த ‘’ஐடி’’ என்கிற தென்னிந்திய உணவுகள் விற்கிற சிறிய உணவம் இருந்தது. இந்தக்கடையை முன்பே சத்யம் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.

நல்ல சுத்தமான சிறிய உணவகம். பெரிய எல்சிடி ஸ்கீரின் டிஸ்ப்ளே வைத்து அதில் பெரிய சைஸில் இட்லி வடை போண்டாவையெல்லாம் மிக தத்ரூபமாக படம் பிடித்து காட்சிகளாக ஓட்டிக்கொண்டிருந்தார்கள். முன்னபின்ன இட்லி வடையே பார்க்காதது போல கண்ணாடியின் ஊடாக அதை போவோர் வருவோரெல்லாம் பொறுமையாக பார்த்துச்செல்கிறார்கள்.

இந்த வீடியோவில் சாம்பார் மேல் மிதக்கும் கொத்தமல்லியை இவ்வளவு அழகாக பார்த்ததேயில்லை. வடையின் மேலும் அதே கொத்தமல்லி. இட்லி மேலும் அதே கொத்தமல்லி… பின்னணியில் ரம்மியமான ஏதோ சாமியார் இசை. உன்னிப்பாக கவனித்ததில் அது ஈஷா தியான யோக மைய பாடல்களை போலவே இருந்தது.

குஜிலிதான் அந்த இரண்டு பக்க மெனுகார்டை ரொம்ப நேரமாக புரட்டி புரட்டி வாசித்துக்கொண்டிருந்தார். (அவர் ஒரு நல்ல தேர்ந்த எழுத்தாளர் மட்டுமல்ல வாசகரும் கூட!). ஒரு கால்மணிநேரம் வாசித்தவர் மெனுவை என்னிடம் நீட்டி, ‘’ப்ரோ இதுல எதுவேணுமோ ஆர்டர் பண்ணிக்கோங்க’’ என்றார். அப்போதே புரிந்தது அந்த மெனு முழுக்க ஆபத்து இருக்கிறது என்பதை… அதற்கேற்ப ஒரு தோசை விலை 110 ரூபாயாம்! ஒரு மசாலா தோசை 150ரூபாய். காஃபி 50 ரூபாய். வடை 60ரூபாய். இடியாப்பம் மட்டும் 30 ரூபாய் என்று போட்டிருந்தது.

ஒரு வடையும் இடியாப்பமும் இரண்டு காபியும் மட்டும் ஆர்டர் செய்தோம். ஒலித்துக்கொண்டிருந்த அந்த சாமியார் பாடல் நினைவுக்கு வர, வெயிட்டரை அழைத்து இந்த கடை ‘’ஈஷா தியான யோக மையத்தோடதா.. IDனா அதான் அர்த்தமா’’ என்றார் குஜிலி. ‘’இல்லங்க ஐடினா இட்லி தோசை’’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார் வெயிட்டர். எங்களுக்கு முன்னால் ஒரு அலுமினிய தட்டு வைக்கப்பட்டிருந்தது.

ஊரில் வீட்டு வாசலில் இப்படி ஒரு அகலமான தட்டு வைத்திருப்போம். மிஞ்சிப்போன உணவினை அதில் கொட்டிவைத்துவிட்டால் நாய்கள் வந்து தின்றுவிட்டுப்போகும். அங்கும் இங்கும் சிதறாமல் இருக்க அதன் முனைகளை விரித்துவிட்டிருப்போம். அது போன்ற தட்டினை சத்துணவுதிட்டத்தில் மதிய சோறு சாப்பிடும்போது கூட பார்க்க முடியும். பல ஆண்டுகளுக்கு பிறகு அப்படி ஒரு அலுமினிய தட்டினை மீண்டும் பார்த்தேன். ஆனால் இது கொஞ்சம் கெட்டியானது. இதற்குமேல் சூடான தட்டை வைத்து சாப்பிட்டால் சூடு குறையாது போலருக்கே நல்ல ஏற்பாடு என்றார் குஜிலி.

கையில் ஒரு கரண்டி, கரண்டியில் ஒரு வடை. அப்படியே சட்டியிலிருந்து எண்ணெய் ஒழுக தூக்கிக்கொண்டு கிச்சனிலிருந்து ஓடிவந்தார் வெயிட்டர். எக்ஸ்க்யூஸ்மீ சார் என்று சொல்லிவிட்டு அப்படியே தூக்கி அந்த அலுமினிய தகரத்தில் போட்டுவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் புகுந்துவிட்டார். குஜிலிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஓடிப்போன்வர் ஓரிருவிநாடியில் நான்கு சின்ன கிண்ணிகளுடன் வந்தார். சின்ன வடைக்கு சைட் டிஷ்ஷாம்!

‘’ஏன்ங்க தட்டுலாம் கிடையாதா’’ என்றவரிடம். ‘’சாரி சார்.. தி ஈஸ் தி ப்ளேட்’’ என்றான் அந்த சப்பைமூக்கு நார்த்ஈஸ்ட் பையன். அதில் வைத்து சாப்பிடுவது பேப்பர் வாழை இலையில் சாப்பிடுவதை விடவும் மோசமான உணர்வை தருவதாக அவருக்கு இருந்திருக்கும் என்பதை அவருடைய விதவிதமான ஜியாமண்ட்ரிகளில் போகிற முகமே சொன்னது. கொஞ்சநேரத்தில் ஒரே ஒரு சின்ன இடியாப்பத்தை.. எடுத்துக்கொண்டு ஓடிவந்தார் வெயிட்டர். ‘’எக்ஸ்க்யூஸ்மீ..’’ தூக்கிப்போட்டுவிட்டு ஓடினார்.

அவரை அழைத்து ‘’சைட் டிஷ்..’’ என்றேன். ‘’அதை நீங்கதான் வாங்கணும்’’ என்றார். இந்த அரைகிராம் இடியாப்பத்துக்கு சைட் டிஷ் வேற காசுகுடுத்து வாங்கணுமா.. சரி என்ன இருக்கு..’’தேங்காப்பால், வடகறி, வெஜிடபிள் ஸ்டா’’ என அடுக்க.. வடகறி கொடுக்கச்சொன்னேன். ஒரு சின்னக்கப்பில் வடகறி வந்தது.

‘’இது என்னங்க வடை மாதிரியே இல்ல.. இதுக்கு நாலு சட்னி வேற கேடு..’’ என்று திட்டிக்கொண்டே சாப்பிட்டார் குஜிலி. ஆனால் அது பார்க்க வடைபோலவேதான் இருந்தது.

நான் இடியாப்பத்தை ஒரே வாயில் கொஞ்சம் வடகறி முக்கித் தின்றேன். ஒருவாய்க்குள் அடங்கி முடிந்தது. காப்பி வந்தது. காப்பி சுத்தமாக சூடே இல்லை. என்னங்க சூடே இல்லை எனக் கேட்டதும் முகங்கோணாமல் வேறு காபி சூடாக கொடுத்தார்கள். அதுவும் வாயில் வைக்க விளங்கிவில்லை. சாப்பிட்டு முடித்தது மூக்கு சொறிந்தது போல இருந்தது. பில்லு மட்டும் 200ரூபாயும் சில்லரையும் வந்தது. வேண்டாவெறுப்பாக அனிச்சையாக பத்துரூபாய் டிப்ஸும் வைத்துவிட்டு கிளம்பினோம். கிளம்பும்போது குஜிலி சொன்னார் ‘’ப்ரோ அந்த அலுமினிய த(க)ட்டை இந்த ஆங்கிள்லப்பாருங்க .. திருவோடு மாதிரியே இல்ல’’ என்றார். அப்படிதான் இருந்தது.

‘’உப்பு போட்ட டூத்பேஸ்ட்ல பல்லுவெலக்குறவன் எவனும் இந்த கடைக்கு ஒருக்கா வந்தா மறுக்கா நிச்சயமா வரமாட்டான் ப்ரோ’’ என்றார் குஜிலி. அவருடைய அந்த குரல் அந்த மால் முழுக்க எதிரொலித்து அப்படி காற்றில் கரைந்தது. நாங்கள் கடையிலிருந்து வெளியேற எங்களைப்போலவே சிரித்த முகத்தோடு இரண்டுபேர் உள்ளே நுழைந்தார்கள்.

10 December 2013

அடிங்க.. ஆனா கேப் விட்டு அடிங்க!
சமகால தமிழ்சினிமாவின் அத்தனை ஓவர் ஆக்டிங் நடிகர்களையும் ஒன்றாக திரட்டி ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும். சமீபத்தில் பார்த்த ஒரு படத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தது. பத்து ரூபாய் கொடுத்தால் பத்து கோடி ரூபாய்க்கு நடிப்பவர்ள் சங்கதலைவரான ராஜேஷ் கூட இப்படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் எப்போதும் யாராவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கேப்பே கிடையாது. அதிலும் பிரதான பாத்திரம் ஒன்று குஞ்சு,பிஞ்சு என இரட்டை அர்த்த வசனங்களை வேறு போகிற போக்கில் உதிர்த்தபடி அலைகிறார். இந்த லட்சணத்தில் இது குடும்பப்படமாம்! படத்தின் இயக்குனர் இயல்பிலேயே நிறையவே பேசக்கூடியவர், அதனால் படத்தின் நூத்திசொச்சம் பேரும் அவரைப்போலவே பேசிப்பேசி...

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் எப்படியாவது தன்னோடு நடிக்கும் நடிகரை விட அதிகமாக நடித்துவிட வேண்டும் என்கிற வெறியோ என்னவோ? ஒவ்வொரு பாத்திரமும் முந்தைய பாத்திரம் வசனம் பேசி முடிப்பதற்கு முன்பே பறக்காவெட்டிபோல வசனம் பேசுவதை சகிக்க முடியவில்லை. இரண்டுபேர் உரையாடும் போது இருக்கிற இயல்பான அந்த இரண்டு நொடி கேப் கூட இல்லாமல் இரண்டேகால் மணிநேரம் வளவளவளவென.. காதுக்குள் கொய்ங்ங்ங்..

படத்தில் ஒரு டீக்கடை காட்சி வருகிறது. அதில் மொத்தமாகவே நான்கு பேர்தான் இருக்கிறார்கள். ஆனால் படம் பார்க்கும் நம்முடைய காதில் நாலாயிரம் பேர் பேசுவதன் கொடூரத்தை உணரமுடிகிறது.

படம் தொடங்கி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் தலா ஒரு பாத்திரம் புதிதாக அறிமுகமாகிறது. அது இன்டர்வெல் முடியும் வரைக்கும் கூட நீள்வது... செம கடுப்பாக்குகிறது. முதல்பாதியில் அறிமுகமான எல்லா ஓவர் ஆக்டிங் நடிகர்களுக்கும் இரண்டாம்பாதியில் தலா ஐந்து நிமிடங்கள் வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர். அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸூக்கும் சேர்த்து செம நடிப்பு நடிக்கிறார்கள்!

படத்தின் நாயகனிடம் நடிப்பும், நாயகிக்கு இடுப்பும்.. இருக்கு ஆனா இல்லை. படத்தில் மனோபாலா மட்டும் ஏனோ நடிக்காமல் போனது வருத்தம் தந்தது. ஏன் என்றால் அவர் மட்டும்தான் படத்தில் மிஸ்ஸிங். பஸ்ஸை தவறவிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்,

படம் முழுக்க ஏகப்பட்ட ரிப்பீடட் ஷாட்டுகள், ஏனோதானா என்று போட்டு தாளித்திருக்கிற பிண்ணனி இசை. படத்தின் ஒரு இடத்தில் 'AMELIE' படத்தின் இசையைக்கூட சுட்டுப்போட்டிருக்கிறார் வித்தியாசமான அந்த இசையமைப்பாளர். சில இடங்களில் ஷகிலா பட இசையைக்கூட உபயோகித்திருந்ததை பார்க்கும் போது... பசுமையான இடங்களைக்கூட காஞ்சுபோன கட்டாந்தரையாக காட்டுகிற உத்தியெல்லாம்.. அடப்போங்கப்பா.

கஷ்டபட்டு ஒரு பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் சீட்டு பிடித்து ஓர் உற்சாக பயணத்துக்கு தயாராகி குஷியாக இருக்கும்போது... பத்துமீட்டர் வண்டி நகர்ந்த பின் நமக்கு பக்கத்து சீட்டு நண்பர் அப்படியே உவ்வேக் என வாந்தியெடுக்க ஆரம்பித்தால் எப்படி இருக்கும்.. அப்படி இருந்தது.

05 December 2013

நூல்கள் நூறு - எழுத்தாளர் பாராவின் பட்டியல்

இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது 7ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் பா.ராகவன் தொகுத்த இந்த சிறிய பட்டியலை யாரோ முன்னாள் வலைப்பதிவர் ஒருவர் தன் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஒவ்வொருவரும் இப்புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும் என்கிற ஒரு குட்டி அறிமுகத்தோடு இப்பட்டியலை மிக மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் பாரா. இது டாப்டென் பட்டியலாக இல்லாமல் முன்னும்பின்னுமாக தொகுக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சி சமயத்தில் பலருக்கும் பயன்படும்.

(அடுத்த ஆண்டு முழுக்க வேறெதையும் படிக்காமல் இந்த பட்டியலில் இருக்கிற புத்தகங்களில் பாதியை மட்டுமாவது முழுமையாக படித்துவிட நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.)

வாசிப்பதை சுவாசமாக கொண்ட எழுத்தாளர் பாரா 2006க்கு பிறகு வாசித்த நூல்களில் டாப் 100ஐயும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் இல்லையா? இந்த எளிய வாசகனின் கோரிக்கையை ஏற்று.. மனதுவைக்கவேண்டுகிறோம்.


***

1. பெரியாழ்வார் பாசுரங்கள் – எளிமைக்காகப் பிடித்தது.

2. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர் – வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3. பைபிளின் பழையஏற்பாடு – மொழி அழகுக்காக.

4. புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர் – பவுத்தம் பற்றிய விரிவான – அதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதி – பாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6. அம்மா வந்தாள் – ஜானகிராமன் – காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7. ஜேஜே: சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி – பிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8. சிந்தாநதி – லாசரா – இதற்கும் காரணம் கிடையாது.

9. கல்லுக்குள் ஈரம் – ர.சு.நல்லபெருமாள் – பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10. அரசூர்வம்சம் – இரா. முருகன் – கட்டுமான நேர்த்திக்காக.

11. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12. கார்ல்மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா – ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13. ரப்பர் – ஜெயமோகன் – நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14. மதினிமார்கள் கதை – கோணங்கி – கதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15. ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் – குட்டிக்கதைகளுக்காக.

16. ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் – ஜெயகாந்தன் – நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17. ஆ. மாதவன் கதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18. வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19. வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதி – எல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20. புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதி – மொழிநடை சிறப்புக்காக.

21. பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22. வேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி – தமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23. சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதி – பெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன் – நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25. நெடுங்குருதி – எஸ். ராமகிருஷ்ணன் – ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார் – ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27. பயணியின் சங்கீதம் – சுகுமாரன் – கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகரன் – மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29. அரவிந்தரின் சுயசரிதம் – காரணமில்லை. சிறப்பான நூல்.

30. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே.செட்டியார் – பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things – அருந்ததிராய் – சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children – சல்மான் ருஷ்டி – அதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh – சல்மான் ருஷ்டி – பால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி – அருமையான சிறுகதைகள்.

36. நிலா நிழல் – சுஜாதா – நேர்த்தியான நெடுங்கதை.

37. பொன்னியின் செல்வன் – குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – மிகச்சிறந்த தமிழ்நாவல்

39. ஒற்றன் – கட்டுமான நேர்த்திக்காக.

40. இன்று – அசோகமித்திரன் – நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் – உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42. வாடிவாசல் – சி.சு.செல்லப்பா – பிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43. குட்டியாப்பா – நாகூர் ரூமி – ஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44. அவன் ஆனது – சா. கந்தசாமி – சிறப்பான நாவல்.

45. பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு – கொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் – ஆர். வெங்கடேஷ் – மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையான – ரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47. கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதி – சிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48. புத்தம்வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – நேர்த்தியான குறுநாவல்

49. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர் – மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன் – சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51. வ.ஊ.சி நூல் திரட்டு – காரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52. நல்ல நிலம் – பாவை சந்திரன் – நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53. நாச்சியார் திருமொழி – இதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54. இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா – புனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55. வனவாசம் – கண்ணதாசன் – வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56. நுண்வெளிக் கிரணங்கள் – சு. வேணுகோபால் – சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57. திலகரின் கீதைப் பேருரைகள்

58. சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள் – பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59. பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினை – அம்பேத்கர் – தீர்க்கதரிசனங்களுக்காக.

60. காமராஜரை சந்தித்தேன் – சோ – நேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East – பேனசிர் புட்டோ – துணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward – திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63. அர்த்தசாஸ்திரம் – சாணக்கியர் – தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64. மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – முற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65. பிரும்ம ரகசியம் – ர.சு.நல்லபெருமாள் – இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan – குஷ்வந்த்சிங் – எளிய ஆங்கிலத்துக்காக.

67. திருக்குறள் – அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68. மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69. எட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் – மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70. பொழுதுக்கால் மின்னல் – கா.சு.வேலாயுதன் – கோவை மண்ணின் வாசனைக்காக.

71. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா – சுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements – அருண்ஷோரி – அருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ – பிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் – ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75. வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள் – கௌதம சித்தார்த்தன் – சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76. ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதி – மிகவும் அழகான படைப்பு.

77. ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடு – நேர்த்தியான மொழிக்காக.

78. பாரதியார் வரலாறு – சீனி. விசுவநாதன் – நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79. பொன்னியின் புதல்வர் – சுந்தா – கல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80. சிறகுகள் முறியும் – அம்பை – பெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வே.சிவகுமார் – எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82. தேர் – இரா. முருகன் – மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83. ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு – ஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84. இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – ப. சிவனடி – விரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே – அபூர்வமான பல தகவல்களுக்காக.

86. ஆதவன் சிறுகதைகள் (இ.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406 சதுர அடிகள் – அழகிய சிங்கர் – சொற்சிக்கனத்துக்காக.

88. பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர் – அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி – மிக அபூர்வமான நூல் என்பதால்.

90. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ.பத்மநாபன்

91. Made in Japan – அகியோ மொரிடா

92. Worshiping False Gods – அருண்ஷோரி – அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93. விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள் – வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – எச்.வி. சேஷாத்ரி – சிறப்பான சரித்திர நூல்.

95. காந்தி – லூயி ஃபிஷர் – நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96. பாரதியார் கட்டுரைகள் – மொழி அழகுக்காக.

97. கோவேறுக் கழுதைகள் – இமையம் – அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98. எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள் – தொகுப்பு: திலகவதி – நோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99. வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதி – சுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி – விறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

02 December 2013

வெள்ளையானை
அது 2009ம் ஆண்டின் துவக்கம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயம். கொத்து கொத்தாக மக்கள் இறந்துபோவது குறித்த செய்திகளும் படங்களும் இணையமெங்கும் வியாபித்திருந்தது. ரத்தந்தோய்ந்த அப்படங்களை பார்க்கும்போது மனது கிடந்து பதறும். நிர்வாணமாக கொல்லப்படும் பெண்களின் இளைஞர்களின் வீடியோக்களை பார்க்கும்போது கண்களில் நீர் கசியும். குழந்தைகள் பெண்கள் வயோதிகர்கள் என தினம் தினம் செத்துப்போன மக்களின் எண்ணிக்கையை கிரிக்கெட் ஸ்கோர் போல ஊடகங்கள் அறிவித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை.

அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தவிக்கும். ஒவ்வொரு முறையும் பதட்டமாகி பின் உடல் வெலவெலத்து என்ன செய்தவதென்று யோசித்து எதை எதையோ செய்து இறுதியில் எதுவுமே செய்யாமல் அமைதியாகும்.

நம்மால் என்ன செய்துவிட முடியும் என்கிற மோசமான கையறுநிலையின் உச்சத்தை அந்நாட்களில் நம்மில் பலரும் எட்டியிருக்கலாம். மிஞ்சிமிஞ்சிப்போனால் கலைஞரையும் ராஜபக்சேவையும் திட்டி நாலைந்து கட்டுரைகள் ஸ்டேடஸ்கள் ட்விட்டுகள் எழுதி இணையத்தில் போட்டு மனதை தேற்றிக்கொள்ளலாம். இன்றுவரைக்குமே நாம் அதையேதான் தொடர்கிறோம். அந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் சென்னையில் நடந்த அநேக போராட்டங்களில், ஊர்வலங்களில் கலந்துகொண்ட சமவயது இளைஞர்கள் மத்தியில் இதே உணர்வை உணர்ந்திருக்கிறேன். அந்த ஊர்வலங்களில் கருணாநிதி ஒழிக என வெறித்தனமாக கோஷம்போட்ட திமுக அனுதாபிகளைக்கூட பார்த்திருக்கிறேன். இந்த மனநிலையின் உச்சம் தொட்ட சிலர் தன்னையே மாய்த்துக்கொண்டதையும் கடந்திருக்கிறோம்.

இந்த கையறு நிலையை எதிர்கொள்ளும் ஒருவனுடைய மனவோட்டங்களும் அந்த இக்கட்டான காலகட்டத்தினை கடக்கிற தருணங்களும், அந்தரங்கமான உரையாடல்களுமாக நீள்கிறது ஜெயமோகனின் ‘’வெள்ளையானை’’ நாவல். இதனாலேயே இப்படிப்பட்ட கையறுநிலையை அடிக்கடி கடக்கிற நமக்கு இந்நாவல் மிக நெருக்கமான ஒன்றாகிவிடுகிறது.

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாக கொண்டுவரப்படும் ஐஸ்கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தபடுகிறது. அல்லது மிகசிறுபான்மை ஆங்கிலேயர்களால் அடக்கி ஆளப்பட்ட இந்தியா எனும் மாபெரும் தேசம் மிகச்சிறிய ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டதையும் கூட யானையும் பாகனுமாக உருவகிக்கலாம். (வெள்ளையர்களின் யானை!) நாவலில் வருகிற ஏய்டனுக்கும் கூட இதே சந்தேகம் வருகிறது.. இவ்வளவு பெரிய யானை ஏன் இந்த சின்ன பாகனுக்கு அடிமையாய் இருக்கிறது?

1878ஆம் ஆண்டு சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த ஒரு வேலைநிறுத்தம்தான் நாவலின் களம். 300 தலித் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த எதிர்ப்பொலி. தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும் அவனுடைய மனைவியும் அமெரிக்க நிறுவனம் அமர்த்திய இந்திய ஆதிக்கசாதி கங்காணிகளால் கொல்லப்பட அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கின்றனர் அப்பாவி தலித்துகள்.

அதுதான் இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்று குறிப்பிடுகிறார் நாவலின் ஆசிரியர். அந்த சம்பவம் குறித்து திருவிக தன் வாழ்க்கை வரலாற்றி எழுதியிருந்த இரண்டொரு வரிகள்தான் இவ்வளவு பெரிய நாவலை எழுதுவதற்கான துவக்கப்புள்ளியாகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லமாக இயங்கிவருகிற இந்த இடம் முன்பு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்கட்டிகளை சேமிக்கிற மற்றும் பின் நாடெங்கும் விநியோகிக்கிற கிடங்காக இருந்தது. மிக மோசமான சூழலில் உடல் நலக்குறைவோடு குறைந்த கூலிக்கு இங்கே பணியாற்றிய இரண்டு தலித் தொழிளார்கள் கங்காணிகளால் கொல்லப்பட அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து ஆங்கிலேய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஏய்டன். அவருடைய பார்வையிலேயே அக்காலகட்டமும் சூழலும் மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களுமாக நாவல் விரிவடைகிறது.

ஐஸ்ஹவுஸில் வேலை பார்க்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்க முனைகிறார் ஏய்டன். அவருக்கு ஓரளவு படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட தலித் இளைஞனான காத்தவராயன் உதவுகிறான். ஆதிக்க சாதியினரால் எப்படியெல்லாம் தலித்துகள் அடக்கப்படுகின்றனர் என்பதை அறிகிறான்.

அந்த காலத்தில் சதுப்பு நிலமாக கிடந்த புதுப்பேட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஏழை தலித் மக்கள் வாழ்ந்த குடியிறுப்புக்கு அழைத்துச்சென்று காட்டுகிறான் காத்தவராயன். அதே பகுதியில் ஏழைகளை புறக்கணித்துவிட்டு ஒரளவு வசதியாக வாழ்ந்த தலித்துகளை பற்றிய செய்தியும் இங்கே இடம்பெறுகிறது.
செங்கல்பட்டு பகுதியில் எங்கெங்கோ இருந்து பிழைப்பு தேடி சென்னையை நோக்கி வந்து பசியால் வாடி உடல்மெலிந்து சாகும் ஆயிரக்கணக்கான மக்களை பற்றியும் ஏய்டன் காத்தவராயன் மூலமாக தெரிந்துகொள்கிறான். அதை குறித்தெல்லாம் விளக்கமாக ஒரு அறிக்கையை தயார் செய்து அந்த காலக்கட்டத்தில் கவர்னராக இருந்த ட்யூக் ஆஃப் பக்கிங்ஹாமுக்கு அளிக்கிறான்.

அம்மக்களுக்கான நீதியை பெற்றுகொடுக்க முனையும் அவனுடைய போராட்டம் படுதோல்வியை சந்திக்கிறது. அதிகாரத்தின் முன் மண்டியிட்டு பெருந்தோல்வியை சந்திக்கிறான். மனமுடைந்து விபச்சார தொழிலில் ஈடுபடும் தன் காதலியான மரிஸாவிடம் சரணடைகிறான். நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான இடம் இதுவென்று தோன்றியது. அதிகாரத்தின் உச்சியில் இருக்கிற ஏய்டன், விபச்சாரத்தொழிலில் ஈடுபடுகிற மரிஸாவின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பை கோருகிறான்.. அவள் மறுக்க அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் பிழைத்துவிடுகிறான். அதற்கு பிறகு அவனும் அந்த அதிகாரத்தின் ஆற்றில் தன்னை கரைப்பதோடு நாவல் முடிகிறது.

இந்நாவலில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கவளம் சோற்றுக்காக ZOMBIE களைப்போல அலைகிற ஏழை மக்களை ஜெயமோகனின் எழுத்து கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு அத்தியாயம் முழுக்க ஏய்டனோடு நாமும் கூட செங்கல்பட்டில் ப்ரிட்டிஷ் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஏழைகளோடு செய்வதறியாது திரிகிறோம். அவர்களுக்கு ஒரு பருக்கை உணவை கூட கொடுக்க இயலாமல் தவித்தபடி பயணிக்கிறோம். படிக்கும்போதே பதற ஆரம்பித்துவிடுகிறது. அச்சு அசலாக அக்காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். ஏய்டனின் காலணிகளில் ஓட்டிக்கொண்டு அழிய மறுக்கிற அந்த ரத்தத்துளிகள் நம்முடைய உடலிலும் ஒட்டிக்கொள்கின்றன.

தாதுபஞ்சத்தால் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஏழ்மையை எப்படி தங்களுக்கு சாதகமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதிய ஆதிக்க சாதி வணிகர்களும் முதலாளிகளும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் நாவலில் விளக்கப்படுகிறது. குறிப்பாக கோமுட்டி செட்டிகள், நாயக்கர்கள், நாயுடு,ரெட்டி என இப்பட்டியல் நீள்கிறது. இந்த ஆதிக்க சாதியினரின் திட்டங்களை எப்படி இடைநிலை சாதியினர் செயல்படுத்திக்காட்டினர், அவர்களுடைய ஆதிக்கசாதி மானோபாவம் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் சில காட்சிகளில் விளக்குகிறார்.

அடிப்பட்டு கீழே கிடக்கிற தலித்தை தூக்க சொல்கிறான் ஏய்டன். ஆனால் இரும்பினைப்போல நிற்கிற காளமேகத்தின் சிப்பிபோன்ற கண்கள் அக்காலகட்டத்தில் நிலவிய கடுமையான சாதிவெறிக்கு சாட்சியாக நாவல்முழுக்க பரவியிருக்கின்றன. நாவலில் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத பாத்திரம் காத்தவராயனுடையது. அயோத்திதாச பண்டிதரின் சாயலில் உருவாக்கப்பட்ட அந்த பாத்திரம் பேசுகிற விஷயங்களும் சிந்திக்கிற நேர்த்தியும் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவராக இருப்பாரோ என்று எண்ண வைப்பவை. ஆனால் அவரோ நீலகிரி பக்கம் குருகுலக்கல்வி பயின்றவராகவே ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். ஆனால் அவருடைய பாத்திரம் ஆதிக்க சாதிக்கெதிராக தலித் மக்களிடையே முதன்முதலாக எழுகிற ஒற்றை குரலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நாவல் அயர்லாந்து நாட்டுக்காரனான ஏய்டனின் பார்வையிலும் மனவோட்டத்திலும் செல்வதால் ஏதோ மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிற உணர்வு உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. அதே சமயம் துல்லியமாக ஒரு வெளிநாட்டுக்காரனைப்போல சிந்திக்கவும் அவனுடைய மனவோட்டங்களை சித்தரிக்கவும் மிகப்பெரிய CRAFTMANSHIPம் திறமையும் வேண்டும். அது நீண்டகாலமாக தொடர்ந்து எழுதுவதன் மூலம் கண்டைகிற நேர்த்தி. அது ஒரு மிகச்சிலஇடங்கள் தவிர்த்து எல்லாமே கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. (காத்தவராயன் என்கிற பெயர் சைவசமயத்துடையதாச்சே என ஓரிடத்தில் கேட்கிறான் ஏய்டன்!) மற்றபடி மனநுட்பமும் மொழிநுட்பமும் மிகச்சரியாக இந்நாவல் முழுக்க வெளிப்படுகிறது.

நாவல் முழுக்க நிறைந்திருக்கிற அந்த கையறுநிலை வாசித்து முடிக்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நம் கண்முன்னே அரங்கேறுகிற மிகப்பெரிய பாதகச்செயல்களையும் எளிதாக எடுத்துக்கொள்கிற மனநிலைக்கு நாம் எப்படி வந்தடைந்தோம் , நம்மிடமிருநுத நீதியுணர்ச்சியை எங்கே தொலைத்தோம் என்கிற கேள்வியையும் எழுப்பவும் அது தவறுவதில்லை.